சங்கிலி

கால் முட்டிகள் இரண்டும் வலிக்கத் துவங்கியது. வலது முட்டியால் உடலைத் தாங்கிக் கொண்டு, இடதுகால் முட்டியைத் தளரச் செய்தேன். பின்னர் அந்தச் சலுகையை வலதுகால் முட்டிக்கும் கொடுத்தேன். மீண்டும் வலதுகாலைத் தரையில் ஊன்றி இடதுகாலைத் தூக்கும் பொழுது சற்றுத் தடுமாற என் கன்னத்தில் ஓங்கி அறைந்தான் சந்துரு.

“கைய மேல தூக்கி வச்சி ஒழுங்கா முட்டி போடுடீ!” என்று சீறினான்.

டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த என் மகள் ப்ரீத்தியின் பார்வை என் மீது படர்ந்திருந்தது. அவளுக்கு விபரம் தெரிந்த நாள் முதல் என் மீது அவளது கண்கள் பொழிந்த கருணைக்கு அளவே இல்லை.

கருணையோடு வழியும் கண்ணீருக்கு நான் எப்படியோ அடிமையாகிப் போனேன்.  அது எனக்காக வழியும் கண்ணீர். எனக்காகப் பூக்கும் கருணை அது. நாளடைவில் அந்தக் கண்ணீருக்காக ஆசைப்பட்டே நெடுநேரம் மண்டியிட்டு நின்றேன். எனக்காக இந்த உலகில் ஒரு உயர் மனம் கனியும் தருணத்திற்கு ஏங்கிய வண்ணம் அடிமையாகி இருந்தேன்.

சந்துருவைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டேன். காதல் திருமணங்கள் ஏதோ சமூக கட்டுகளை உடைக்கும் புரட்சி செயல்பாடு என்று எண்ணிய கூட்டத்தில் நானும் ஒருத்தி. மணம் முடிந்த அடுத்த நாளே ஆறுகளின் பிறப்பிடம் வெவ்வேறாக இருந்தாலும் சென்றடையும் கடல் ஒன்றுதான் என்று தெரிந்தது.

சாவுக்கு முன் அடிக்கும் மேளங்கள் போல ஆட்டமும் பாட்டமுமாக நேர்ந்து அடங்கிய திருமண நாளிற்குப் பிறகு, ‘நேரத்திற்கு எழவில்லை, சாம்பாரில் உப்பில்லை, இட்லி உப்பவே இல்லை, வீடு சுத்தமாக இல்லை, கக்கூசில் கறை, மாமனார் மாமியாரைத் தொழவில்லை,’ என ஒவ்வொரு நாளும் அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் மூட்டைகளுக்கு அடியே மூச்சுத்திணறிக் கொண்டிருந்தேன்.

இன்னொரு பக்கம் அவன் அம்மா என்ன செய்தாலும் அதில் ஒரு குறையைக் கண்டு வருவாள். இல்லையேல் உண்டாக்கி வந்து நிற்பாள். ஒரு கட்டத்தில் அவளை என்னால் திருப்தி படுத்தவே முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டேன். அவளது பீய்யை நான் வழித்து அள்ளினால் கூட வலக் கையில் அள்ளாமல் இடக் கையில் அள்ளினேன் என்று சண்டை வளர்ப்பாள் என்று எனக்குத் தோன்றியது.

சந்துருவிற்கு அமெரிக்காவில் பணி செய்யும் வீசா வந்தவுடன் என் ஆழத்துள் உயிர்ச்சுனை எட்டிப்பார்த்தது. ப்ரீத்திக்கு அப்பொழுது ஏழு வயது. சியேட்டில் வந்து இறங்கினேன். மலையும் மழையும் சார்ந்த இடம். பெரும்பாலான வீடுகள் சமவெளியில் அல்லாமல் மலைகள் மீது கட்டப்பட்டிருந்தன.

“அது தான் மவுண்ட் ரெய்னியர் எரிமலை,” என்று சந்துரு கைகாட்டிய திசையைப் பார்த்தேன். மிகப் பிரம்மாண்டமான பெரிய மலை பனியால் போர்த்தியிருந்தது. என் விழிகளுக்குள் அதை எடுத்து நிரப்ப முடியவில்லை.

“ரொம்பப் பக்கமா?” என்று கேட்டேன்.

“கார்ல போனா ரெண்டு மூணு மணி நேரத்துல போயிடலாம். இந்த மலைதான் இந்த ஊருக்கு மழையத் தருது.” என்றான் சந்துரு.

அவன் அதைச் சொன்ன அந்த நொடியே அம்மலை வானம் பார்த்துப் படுத்திருக்கும் பிரம்மாண்டமான ஒற்றை மார்பகமாகத் தோன்றியது. அதன் உச்சி பெரிய முலைக்காம்பு போன்ற தோற்றம் கொடுத்தது. பால் போல எத்தனை அருவிகளை அவள் சுரக்கக்கூடும் என்று எண்ணும்போது எனது உடலின் மயிர் கால்கள் சற்று எழுந்து நின்றன.

நீண்ட நேரம் மண்டியிட்டிருந்ததால் வலது காலின் பாதம் குளிர் தாங்காமல் மரத்துப் போக ஆரம்பித்தது. ஏனோ எனக்குக் கோரியின் முகம் நினைவுக்கு வந்தது. அவளை முதன் முதலில் சந்தித்தத் தருணம், மழை தரும் மண் மணம் போல என்னுள் படர்ந்து இருக்கின்றது.

அப்பொழுது காஸ்டகோவில் இருந்து வாங்கி வந்த வீட்டுச் சாமான்களைக் காரில் இருந்து எடுத்து வைத்துக் கொண்டிருந்தோம்.

“ஏய் சீக்கிரம் எடுத்துட்டு கார லாக் பண்ணிட்டு வா,” என்று கூறிவிட்டு சந்துரு வீட்டினுள் சென்றான்.

“ஹாய்…!” என்று பனிக் குளிர் போன்ற குரல் வந்து என்னைத் தொட்டது. நான் திரும்பிப் பார்த்தேன். ஒல்லியான தேகம் கொண்ட பெண் ஒருத்தி நின்றிருந்தாள். அவள் புன்னகைக்கும் பொழுது பனி அதன் அத்தனை பற்களையும் காட்டிச் சிரிப்பது போல இருந்தது.

“என் பெயர் கோரி, நான் உங்களுடைய அண்டைவீட்டுக்காரர். உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி” என்று அவளது வலக்கரம் நீட்டினாள். அவளது ஆங்கிலம் ஒரு கவிதைபோல இருந்தது.

நானும் நன்றி கூறி என்னை அறிமுகம் செய்து கொண்டு எனது வலக் கரத்தை இணைத்தேன். அப்பொழுது “அம்மா!” என்று ப்ரீத்தி அழைத்துக் கொண்டு வந்தாள்.

அவளைக் கண்டதும், “உங்கள் மகள் அழகாக இருக்கிறாள்,” என்று அவளுக்கும் கை கொடுத்தாள் கோரி.

அவளது மென்மையான குரலை மேலும் மென்மையாக்கி, “உங்கள் வீட்டு சமையலறையில் இருந்து அருமையான மணம் எங்கள் வீட்டிற்கு தினமும் வருகின்றது. எனக்கு இந்தியர்களின் சமையல் மிகவும் பிடிக்கும்,” என்று பாராட்டினாள்.

நான், “நன்றி,” என்றேன்.

பிறகு அவளது கைக்கடிகாரத்தைப் பார்த்தவள் தன் கண்களை விரித்து, “என் மகன் எனக்காகக் காத்திருப்பான், நான் உங்களை பிறகு சந்திக்கிறேன்,” என்று கூறி என்னை ஒரு முறை இறுக அணைத்துவிட்டுச் சென்றாள். அவள் தந்த அணைப்பு ‘நீ இப்புவியில் அந்நியம் இல்லை’ என்று எனக்குச் சொல்வது போல இருந்தது. மான் போல துள்ளி படிகளைக் கடந்தாள். பாய் கட் அவளது முகத்திற்குக் கச்சிதமாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.

கோரி என் மீது ஒட்டிச் சென்ற புன்னகையோடு வீட்டினுள் நுழைய, அதை வெறி கொண்ட பார்வையால் சுட்டுப் பொசுக்கினான் சந்துரு.

“என்ன ரொம்ப நேரமா சிரிச்சுப் பேசிட்டு இருந்த அவங்ககிட்ட?”

“பக்கத்துல இருக்கோம்னு இன்ட்ரொடுயூஸ் பண்ணக்கிட்டாங்க”

“ரொம்பப் பேச்சு வைக்காத அவங்ககிட்ட எல்லாம்.” என்று குரலை உயர்த்தினான்.

“இதுல என்ன இருக்கு? பேசுறது ஒரு குத்தமா?” என்று சற்று என் குரல் உயர அதனை சந்துருவால் தாளமுடியவில்லை.

கோபத்தில் அவனது காதுகள் இரண்டும் சிவந்தன. என் அருகில் வந்து என்னை ஓங்கி அறைந்தவன், “ஆமா… குத்தம்தான். இது என் வீடு. நான் சொல்றத தான் நீ கேட்டு நடக்கணும்.” என்று கத்திச் சென்றான்.

அவன் அப்படிச் சொன்னது அவமானமாக இருந்தது. ஒரே நிமிடத்தில் நான் நின்றிருந்த வீடு என்னைத் தூரத்துரத்தியதாக உணர்ந்தேன். அதன்பின் எந்நேரமும் இறுக்கமான மனநிலைமையுடனேயே இருந்தேன்.

மூடியே கிடக்கும் சியேட்டிலின் வானம் என் மீதும் படர்ந்திருப்பது போல உணர்ந்தேன். நாளடைவில் கண்ணீரும் சோகமுமே பழகிப் போனது. நான் கேட்க பயந்த செய்திகளைக் கூட யூ-ட்யூபில் தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தேன். ஆசிஃபாவின் மரணம் என்னைப் புரட்டிப் போட்டது. மூன்று நாட்கள் சாப்பிடாமல் இருந்தேன். மறைவாக இடம் கிடைத்தால் சில துர்நிகழ்வுகளை எல்லாம் நினைவில் இருந்து  மீட்டெடுத்து அழ ஆரம்பித்தேன். செரிக்காத உணவை மாடு படுத்தபடி அசைபோடுவதுபோல எப்போதும் என்னுடைய எண்ண அலைகளில் யாரேனும் மரணித்துக் கொண்டே இருந்தார்கள். பாலியல் வன்புணர்வால், வரதட்சனைக் கொடுமைகளால், தற்கொலைகளால், காதல் தோல்வியால், ஆணவக் கொலைகளால், சாதி வேறுபாட்டால் என எண்ணற்ற வகையில் மரணங்கள்.  ஏதோ இந்தப் பூமிப்பந்தே நானாகவும், இவை அனைத்தும் எனக்குள் நிகழந்தேறுவதும் போன்ற வலி. அப்படி ஒவ்வொரு நாளும் ஒரு சுத்தியல் என் இதயத்தை அறைய நான் அதை ஏற்றுக் கொள்ளும் தயார் நிலையிலேயே இருந்தேன். புலம்பி அழுவதில் பழகிப் போயிருந்தேன். தப்பியும் மகிழ்ச்சி அண்டிவிடாதபடி என்னை முழ்கடித்துக் கொண்டிருந்தேன்.

இப்படி நான் மற்றவர் துயரத்தை என் துயராக ஏற்று அழுது கொண்டிருக்க என் துயரைத் தனது துயராக எண்ணி என் மகள் என் முன்னே அமர்ந்து கண்ணீர் வடிப்பதை ஆறுதலாக எண்ணியிருந்தேன்.

ஆனால் அவள் வளர வளர எனக்காக வடியும் அவளது கண்ணீரின் சென்ட்டி மீட்டர் குறைந்து கொண்டே போனது.

ப்ரீத்திக்கு இப்பொழுது பதின்மூன்று வயது ஆகின்றது. நேற்றிரவு என்னிடம் கேட்டாள்,

“ஏம்மா இப்புடிப் பொறுத்துப் போற?” என்று. அன்றுதான் நான் சந்துருவிடம் ஐந்தாறு அறைகள் வாங்கியிருந்தேன்.

இதற்கு முன் அவள் பல வகையாக என்னிடம் இதே கேள்வியைக் கேட்டிருக்கிறாள். வகை வகையாக காரணங்கள் சொல்லியிருக்கிறேன்.

வேர் என்பேன், கலாச்சாரம் என்பேன், சமூகம் என்பேன், அம்மா அப்பாவின் கௌரவம் என்பேன்,  சாதி சனம் என்பேன். நேற்று அவளையே சுட்டிக் காட்டி “உனக்காக” என்றேன்.

அவளுக்கும் எனக்கும் இடையே வண்ணப் பலகை இருந்தது. பெயிண்டிங்கில் மூழ்கி இருந்தாள்.

“உனக்கு நல்ல அப்பாவாத்தானே இருக்காரு?” என்று கேட்டேன்.

தூரிகையில் வண்ணம் கலக்கியவாறு என்னைச் சற்று நிமிர்ந்து பார்த்தவள் மெல்லிய புன்னகையோடு,

“உனக்கு என்ன மா வேணும்?” என்று கேட்டாள்.  என்னால் பதில் கூறவே முடியவில்லை. ப்ரீத்தி வளரும் மண்ணும் கலாச்சாரமும் கல்வியும் அமெரிக்காவின் சம உணர்வுக் கொள்கையும் முற்றிலும் என்னுள் விதைக்கப்பட்ட சிந்தனைகளுக்கு மாற்றானது.

என் பதிலை எதிர்பார்த்து ஏமாந்தது அவள் விட்ட பெருமூச்சில் தெரிந்தது. பெயிண்ட் ப்ரஷ்ஸை நீரில் மூழ்கும் படி வைத்துவிட்டு விளக்கை அணைத்துவிட்டு என் அருகில் வந்து படுத்தாள்.

“நாளைக்கு என் ஸ்கூல்ல ஆர்ட் எக்ஷிபிஸன், மத்தியானம் வந்திடு மா.” என்று கூறி உறங்கிவிட்டாள்.

ப்ரீத்தி கேட்ட கேள்வியோடு நானும் உறங்கினேன். அதே கேள்வியைச் சுமந்து கொண்டு இன்று காலை எழுந்தேன். சந்துரு ஆபீசுக்குக் கிளம்பினான். ப்ரீத்தியும் பள்ளிக்குக் கிளம்பினாள்.  கைப்பேசி அலறியது. வழக்கம் போல் சந்துருவின் அம்மா அழைத்தாள். ஆன்மாவைக் கொல்லும் ஆயுதங்களை உற்பத்தி செய்யும் இயந்திரம் அவளது நாக்கு. வாய்ப்போர் ஆரம்பம் ஆனது. அவளுக்குள் எந்நேரமும் விழித்திருக்கும் மிருகம் என்னுள் ஆழத்தில் மௌனம் காத்தது. அது என்னுள் எழுந்த கனம் அவள் நிறைவுற்றாள். ‘இப்போ வா’ என்பது போல வழுவோடு என்னை அழைத்தாள். அவளுள் இருக்கும் மிருகம், தளரும் மிருகம் அல்ல. அவளது ஒவ்வொரு அணுவும் அந்த மிருகத்தால் கட்டமைக்கப்பட்டது. ஆனால் என் மிருகம் என் உடலையும் ஆன்மாவையும் சோர்வுக்குள்ளாக்க அயர்ச்சியில் கைப்பேசியைத் துண்டித்தேன்.

‘உனக்கு என்ன மா வேணும்?’ என்று ப்ரீத்தி கேட்ட கேள்வி செவியில் அறைந்தது. தலை சுற்றியது.  பிறகு என் உடலே சுற்றியது. வீடு இடிந்து என் மேல் விழக் காத்திருப்பது போல அச்சம் என்னை அழுத்தியது. ப்ரீத்தியின் கேள்வி என்னை விரட்டியது. வின்டர் கோட்டை மாட்டிக் கொண்டு கதவைத் திறந்தேன். ஜீரோ டிகிரி குளிர் என்னை வரவேற்றது.

சாலையில் இறங்கும் பொழுது ஒரு பெண்மணி ப்ளேக் ஐசில் வழுக்கிக் கீழே விழுந்தாள். நான் ஓடி அருகில் சென்று என் கையை நீட்டினேன். அமெரிக்கர்கள் அவ்வளவு எளிதாக ஓர் உதவியைப் பெற்றுக் கொள்பவர்கள் அல்ல.

“இட்ஸ் ஓகே.” என்று தானாக எழுந்து நின்று “எனிவே தாங்க்ஸ்,” என்று புன்னகையோடு நகர்ந்து சென்றாள்.

அவளுக்கு எதிர் திசையில் நான் நடக்க ஆரம்பித்தேன். ப்ளூ ஜேய் பறவை என் தலை மேல் பறந்து சென்று ஒரு மரத்தில் அமர்ந்தது. அதைத் தொடர்ந்து நானும் சென்றேன். அதன் கண்கள் எனக்குக் கோரியின் கண்களை நினைவு படுத்தியது. கனிவான கண்கள் கோரிக்கு.  ஒரு நாள் ஜன்னலின் வழியாக பார்த்துக் கொண்டிருந்தேன். வேலை முடிந்து வந்த கோரி தனது காரில் இருந்து இறங்கினாள். அவளுக்காக நான் சமைத்த உணவுப் பண்டங்களை எடுத்துக் கொண்டு வெளியே ஓடினேன்.

என்னைக் கண்டதும், “ஹாய்!” என்று ட்யூலிப் மலர் போல புன்னகைத்தாள்.

“உங்களுக்காக நான் இவற்றைச் சமைத்தேன்” என்றேன்.

அவளது உள்ளம் தெகிழ்ந்ததை அவளது கண்கள் காட்டிக் கொடுத்தது. தேங்கிய விழிகளோடு, “தேங்க்யூ” என்றாள்.

நெகிழ்வோடு என்னை அவளது வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள்.

என்னைப் பார்த்ததும் அவளது மகன் புன்னகையோடு வரவேற்றான்.

“நீ மிகவும் அன்பானவள்,” என்று கோரி தொடர்ந்து கூறிக் கொண்டே இருந்தாள்.

அமெரிக்கர்கள் பெரும்பாலும் காரமாக சாப்பிட மாட்டர்கள். தேங்காய் பால் சாதமும், கோழி மசாலாவும் காரம் இல்லாமல் செய்துள்ளதாகத் தெரிவித்தேன்.

நான் செய்த சின்ன செயலை முழு மனதோடு வரவேற்று உருகினாள். என் கண்முன்னேயே கோரியும் அவளது மகனும், உணவு நன்றாக இருக்கிறது என்று புகழ்ந்து கொண்டே சாப்பிட்டார்கள்.

உணவருந்திய பின் தட்டுகளை கோரியின் மகன் எடுத்துச் சென்று கழுவி வைத்தான்.

அப்பொழுது எங்கள் இடையே இருந்த மேசை மேல் கோரியின் மகனது கைப்பேசி அழைத்தது. ‘Dad Calling’ என்று திரை காட்டியது. கோரி கைப்பேசியை எடுத்து அவனிடம் நீட்டினாள்.

“உங்கள் கணவரா?” என்று கேட்டேன்.

“ஹோ… ஹ ஹ ஹ…” என்று சிரித்துவிட்டு “இல்லை.. நாங்கள் பிரிந்து விட்டோம்” என்றாள். எந்த சோக வயலின் இசையும் இல்லை அவள் அதைச் சொல்லும்போது. எனக்கு அது ஆச்சரியமாக இருந்தது. மேலும் கேள்வி கேட்க சங்கடமாக இருந்தது. ஆனால் கோரியே பதில் கூறினாள். அவர்கள் இருவரும் கருத்து வேறுபாட்டினால் ஒன்றாக வாழ முடியவில்லை என்றும் இருவரது உலகமும் வெவ்வேறு ஆகையால் சுமூகமாகப் பிரிந்துவிட்டதாகவும் மற்றபடி அவர்களது மகனிற்கு அவர் நல்ல தந்தை என்று கூறினாள்.

அவளது வீட்டின் கடிகாரம் ஆறு என்று காட்டியதும், ப்ரீத்தி பக்கத்து வீட்டில் விளையாடுவதாகவும், அழைத்து வர வேண்டும் என்றும் கூறி விடைபெற்றேன்.

சீக்கி அடிப்பது போல  சத்தம் எழுப்பியது ப்ளூ ஜேய். தனது நீலச் சிறகை விரித்துக் காற்றைக் கிழித்துக் கொண்டு கிளையை விட்டுப் பறந்தது. அக்கணம் என் ஆன்மா இரண்டாகப் பிரிந்தது போல உணர்ந்தேன். அவை ஒன்றுடன் ஒன்று முறுக்கி தங்கள் வாதங்களால் என்னைக் குழப்பமடையச் செய்தன.

பணிபுரிந்த இடத்தில்தான் முதல்முதலில் நான் சந்துருவைப் பார்த்தேன். உலகத்தின் அத்தனை நற்குணங்களும் அவனுள்தான் குடிகொண்டிருப்பது போன்ற முகம் அவனுக்கு.  உதவி என்று யார் கேட்டாலும் மறுக்காமல் செய்பவன். அவன் இருக்கும் இடத்தில் சிரிப்பிற்குப் பஞ்சமே இராது.  என் மீது அவனுக்கு எப்போதும் தனி அக்கரை உண்டு. அலுவலகத்தின் வேலை நெடுநேரம் நீடித்தால் என்னுடன் துணைக்கு இருந்து நான் தங்கும் விடுதியின் வாசல் வரை உடன்வந்து விட்டுச்செல்வான். என்னை ஒரு வாரம் பார்க்க முடியலில்லை என்றால் எனக்காக அவன் அழுத நாட்கள் எல்லாம் கூட உண்டு.

ஆனால் திருமணத்திற்குப் பிறகு தான் அவனுக்குக் கோபம் வரும் என்றே எனக்குத் தெரிய வந்தது.

‘எம் புள்ள கோவம் உனக்குத் தெரியாதே?’ என்று ஒவ்வொரு நாளும் காளை மாட்டின் வாலைக் கடித்து ஏவுவது போல சந்துருவை என் மீது ஏவி விட்டாள் அவனது அம்மா.

‘எம் புள்ள எம் புள்ள’ என்று வாரி வாரி அவனை இடுப்பிலேயே வைத்துக் கொண்டாள். அவனும் தொப்புள் கொடியை இன்னும் அறுக்கவே இல்லை என்பது போல தான் நடந்து கொண்டான்.

எத்தனை வகைவகையான வன்முறைகள். வார்த்தைகளால்… உடலால்… அவனது வீட்டார் முன் துயில் இழந்த த்ரௌபதியாய் சந்துரு என்னை நிறுத்திய தருணங்களில் எல்லாம் என் ஆன்மா சுக்கு நூறாக உடைந்தது. அவர்களது முன்னிலையில் என் உணர்வுகளை வெறி நாய் போலக் கடித்துவிட்டு, தனியே நானும் அவனும் எங்கள் அறையில் இருக்கும் பொழுது ‘சாரி’ என்ற ஒற்றை வார்த்தையால் கடித்த இடத்தில் நக்கிச் செல்வான்.

பனி படர்ந்து உறைந்திருந்த என் கன்னத்தில் எனது கண்கள் சூடாக நீரை வார்த்தது. சிந்தனை என்னை வெகுதூரம் கூட்டி வந்துவிட்டது. கண்ணீரைத் துடைத்துவிட்டுத் தொடர்ந்து நடந்தேன். மவுண்ட் ரெயினியர் காட்சி அளித்தது. அதனைப் பார்த்துக் கொண்டே நடந்தேன். ஒவ்வொரு வளைவு நெழிவுகளிலும் அது மறைந்து மறைந்து கண்ணாமூச்சி ஆடியது. நானும் விடாமல் துரத்திக் கொண்டே ஓட ஆரம்பித்தேன். ஆம் எனக்கு ஓடத் தெரியும். அக்கணம் நான் ஏதோ என்னுள் புதிதாக ஒரு புலனைக் கண்டடைந்தது போன்ற உணர்வு கொண்டேன். மலையைப் பார்த்துச் சொன்னேன், “ஏய் மவுண்ட் ரெயினியர்… ஐ எம் எ ஃபுட்பால் ப்ளேயர், சாரி சாக்கர் ப்ளேயர், உன்னய எப்படியும் கண்டு பிடிச்சுடுவேன்.” என்று ஓட ஆரம்பித்தேன்.

ஏதோ ஒரு குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்துவிட்டேன். அதனருகே ஒரு சிறிய காடு. காடு சிறியது, ஆனால் அங்கிருந்த மரங்களின் உச்சியில் இருக்கும் இலைகளுக்கு நான் ஒரு எறும்பு போல தெரிவேன். சியாட்டிலில் ஒவ்வொரு மரமும் ஒரு தனிக் காடு போலத்தான் விரிந்திருக்கும். காற்றில் அவை ஆடும் பொழுது தோகை விரித்து ஆடும் ஒரு பெரிய மாமயில் போல காட்சி அளிக்கும். என் தலைமேல் விரிந்திருந்த அந்தப் பச்சை போர்வையை அண்ணாந்து வாய் பிளந்த படி பார்த்து நின்றிருந்தேன். கழுத்தில் வலி பரவியது. ஒரு பெரிய மரத்தின் வேரில் அமர்ந்தேன். மண்ணுக்குள்ளே பெரிய மரமே பொதிந்திருப்பது போல தடிமனாக இருந்தது. உள்ளமும் உடலும் தளரவே, அதன் மேல் கால்களை நீட்டி ஆசுவாசமாகப் படுத்துக் கொண்டேன். பச்சை வண்ணத்தைக் கண்களால் குடிக்க ஆரம்பித்தேன். சுற்றிலும் நின்றிருந்த மரத்தின் பட்டைகளில் இருந்து ஒரு மென்மணம் கிளம்பி வந்து என்னைத் தழுவிக் கொண்டது. வெளி உலகைத் தவிர்த்த டெண்ட் கூடாரம் போல இருந்த அந்தக் காட்டில் ஒரு வித அமைதி நிலவியது. கண்களை மூடி அவ்வமைதிக்குச் செவி மடுத்தேன். வெடித்துப் பாளம் பாளமாக இருந்த என் ஆன்மாவின் இடுக்குகளில் எல்லாம் அவ்வமைதி நிரம்பிடக் கண்டேன். சட்டென ஒரு சிவப்புக் கட்டெறும்பு என்னைக் கடிக்க, “ஆ” என்று எழுந்தமர்ந்தேன்.

‘உனக்கு என்ன மா வேணும்?’ என்ற ப்ரீத்தியின் கேள்வி ஒலித்தது.

எழுந்து மீண்டும் ஓட ஆரம்பித்தேன். நான் ஓட ஓட அம்மரங்களின் கிளைகள் அசைந்து என்னை உற்சாகப்படுத்தின. காட்டை விட்டு வெளியேறியதும் மவுண்ட் ரெய்னியர் கண்ணில் பட, “நான் உன்னயக் கண்டு புடுச்சுட்டேன்!” என்று மூச்சு வாங்கக் கூறினேன்.

சுற்றும் முற்றும் பார்த்தேன். நெடுநேர ஓட்டம். என்ன, ஏது, இடம் என்று தெரியவில்லை. பாக்கெட்டை தொட்டுப் பார்த்தேன். கைப்பேசியை வீட்டிலேயே மறந்து வைத்து விட்டதை உணர்ந்தேன். சந்துருவின் அம்மாவோடு நடந்த சண்டையின் வெறுப்பில் விட்டுவிட்டு வந்திருந்தேன். கால் போன போக்கில் நடந்தேன். பேருந்து நிறுத்தம் ஒன்று தென்பட அங்கே இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தேன். பனியின் கூர்மை என் பாதங்களையும் கைவிரல்களையும் ஆயிரம் ஊசி கொண்டு தீண்டத் துவங்கியது. பேருந்து ஒன்று கண்ணில் பட்டது.

‘அய்யோ கையில் காசு இல்லை.’ என்று அப்பொழுது தான் உறைத்தது. எழுந்து ஓட எத்தனித்த பொழுது பேருந்து என்னருகில் வந்து நின்று கதவைத் திறந்தது.

பேருந்தின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்தது கோரி. வழக்கமான அவளது பனிச்சிரிப்பைத் தூவி, “ஹாய் ஹனி” என்றாள்.

என் முகம் மலர்ந்து, உவகையால் துள்ள, “கோரி! நான் இன்று உங்களை நினைத்துக் கொண்டேன். நீங்கள் பேருந்து ஓட்டுனரா?! அருமை!” என்றேன்.

உடனிருப்போரைப் பாராட்டி உற்சாகப்படுத்தும் சொற்களைப் ப்ரீத்தி எனக்குக் கற்றுக் கொடுத்திருந்தாள்.

“ஆம்” என்று சிரித்தவள், என்னைப் பேருந்தில் ஏறச் சொன்னாள்.

“நான் எனது பர்ஸ்ஸை எடுத்து வர மறந்துவிட்டேன்,’’ என்று தயங்கினேன்.

“பரவாயில்லை ஏறிக்கொள்.” என்றவள் அவளது பாக்கெட்டில் இருந்து இரண்டு டாலர்கள் ஐம்பது செண்ட்டை எடுத்து பணம் செலுத்தும் இயந்திரத்தில் போட்டாள்.

“மிக்க நன்றி. நாளை திருப்பித் தருகிறேன்,” என்றேன்.

“இருக்கட்டும். பரவாயில்லை,” என்றவள், அன்று நான் அவளுக்குச் சமைத்துக் கொடுத்த உணவை நினைவு கூர்ந்து, அவ்வன்பைத் திருப்பித் தர இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்துவதாகக் கூறினாள்.

நான் புன்னகையோடு, “நீங்கள் ஒரு பேருந்து ஓட்டுனர் என்று எனக்குத் தெரியாது!” என்றேன்.

‘ஹ ஹ ஹா’ என்று பேருந்து நிரம்பச் சிரித்தவள், “என் வயதை ஊகித்துச் சொல்” என்றாள்.

நான் சற்று யோசித்து, அவளது தலையில் இருந்தத் தங்க முடிகளைத் தோராயமாக எண்ணி, “நாற்பத்து ஐந்து?” என்றேன்.

மீண்டும் சிரிப்பைப் பறக்க விட்டு, “அறுபத்து ஐந்து!” என்றாள்.

என்னால் உண்மையில் அதிர்ச்சியை அடக்க முடியவில்லை.

“நான் நம்பமாட்டேன்! நீங்கள் விளையாடுகிறீர்கள்,” என்றேன்.

உடனே தனது செல்ஃபோனை எடுத்து அதன் வால்பேப்பரைக் காட்டி, அதில் இருந்த இரண்டு சின்னப் பிள்ளைகள் அவளது மகள் வழிப் பேரன் பேத்தி என்றாள். என்னால் நம்பவே முடியவில்லை. பொதுவாகவே அமெரிக்கர்கள் முடிந்த வரை பிறரைச் சார்ந்து இராமல் வாழ்பவர்கள். பேசிக் கொண்டே வந்தோம். அவளது மகன் பிட்சா கடைக்கு வேலைக்குப் போவதை உற்சாகமும் சிரிப்புமாகப் பகிர்ந்து கொண்டாள். கோரியின் அம்மாவைப் பற்றி பேச்சு இடம் பெயர்ந்தது. அவருக்கு எண்பத்தி ஒன்பது வயதாகிறது என்றும் தனியாக ஒரு வீட்டில் வசிப்பதாகவும் கூறி எனது ஆச்சரியத்தை மேலும் அதிகமாக்கினாள் கோரி.

அதோடு நான் கண்ட ஒரு காட்சி நினைவுக்கு வந்தது.

ஒரு நாள் பெரும் கூச்சல் சத்தம் கேட்டு ஜன்னலின்  திரை வழியாக வெளியே பார்த்தேன். வயதான பெண்மணி ஒருவர் தனது இடக்கையால் படிக்கட்டின் கைப்பிடியைப் பிடித்தபடி வலக்கையால் காற்றில் அபிநயம் பிடித்தவாறு கோரியைப் பார்த்து கத்திக் கொண்டிருந்தார். கோரி மறுவார்த்தை பேசாமல் அமைதியாக நின்றிருந்தார். அதனைச் சுட்டிக் காட்டி அவர் தான் உங்கள் அன்னையா என்று கேட்டேன்.

‘ஹ ஹ ஹ…’ என்று கனீர் சிரிப்பைப் பறக்க விட்டு, பிறகு தனது மென்மையான குரலுக்கு மாறி, “நீ அதைப் பார்த்தாயா?!” என்று கண்களை விரித்தபடி கேட்டாள்.

தர்ம சங்கடமான கேள்வியைக் கேட்டுவிட்டேனோ என்று பயந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்.

“இல்லை இல்லை…” என்று என்னை இலகுவாக்கியவள்,

‘தன் அம்மாவிற்கு தன் ஒரு கையை உதவிக்கு நீட்டி வந்த வம்பு என்றும். தனக்கு ஒன்றும் அப்படி வயதாகிவிடவில்லை உன் உதவி இன்னும் தேவைப்படவில்லை’ என்ற அவரின் சொற்பொழிவின் சாரத்தை மட்டும் எனக்கு இரண்டு வரியில் கூறி மீண்டும் சிரித்தாள்.

ப்ரீத்தியின் பள்ளி நிறுத்தம் வந்தது, “இதோ உன் மகளின் பள்ளி நிறுத்தம்” என்றாள்.

பள்ளியின் திசையை எனக்குக் கூறியவள் சட்டென கீழே இறங்கி வந்தாள். என்னை ஒரு முறை அணைத்துவிட்டு, “பிறகு சந்திப்போம்” என்று பேருந்தில் ஏறிப் புறப்பட்டாள்.

அவ்வணைப்பின் அர்த்தம் எனக்குப் புரியவில்லை. ஆனால் என் மனநிலைமைக்கு அது மிகவும் அவசியமாக இருந்தது. கோரியின் மீது எப்போதும் ஒரு மணம் வீசும். அது அன்பின் மணம். கனிந்த அவளது மனத்தின் மணம். தன்னம்பிக்கையின் மணம். சிறிது என் மீதும் ஒட்டிக் கொண்டது. அதை முகர்ந்தபடி பள்ளியை நோக்கி நடந்தேன்.

என்னைக் கண்டதும், “அம்மா!” என்று  ப்ரீத்தி ஓடி வந்து அணைத்துக் கொண்டு, “ம்… அம்மா நல்ல வாசனை வருது உம்மேல இருந்து!” என்றாள். கண்காட்சி நடக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றாள். எண்ணற்ற படைப்புகளின் நடுவே ப்ரீத்தியின் பெய்ண்டிங் இருந்தது. என் அப்பா நன்றாக வரையக் கூடியவர், அந்த ஜீன்தான் ப்ரீத்திக்கு என்று நினைத்துக் கொள்வேன். ஒரு பதினைந்து நிமிடங்கள் அவளது பெயிண்ட்டிங்கின் முன் நின்றிருப்பேன். தலை சுற்றுவது போல இருந்தது. நேரம் முடிந்ததும் ப்ரீத்தியும் நானும் வீடு நோக்கி நடந்தோம். கைகளைக் கோர்த்து என்னோடு நடைபோட்டாள். என்னால் பேச முடியவில்லை. அவளும் பேசவில்லை.

வீட்டினுள் நுழைந்து கதவை மூடியதுமே காட்டெருமை போல பாய்ந்து வந்தான் சந்துரு. அவனது வாலை அவனது அம்மா கடித்திருக்கக்கூடும் என்று நான் எதிர்பார்த்ததுதான். அவனைப் பிடித்து ஆட்டும் அந்த மிருகத்தை எப்படி அடக்குவது என்று எனக்குப் புலப்படவில்லை.  ஓங்கி என் கன்னத்தில் அறைந்து, “என்னடீ பேசின எங்கம்மா கிட்ட?” என்று கத்தினான்.

ப்ரீத்தி இலகுவாக எங்களைக் கடந்து உள்ளே சென்றாள்.

சந்துரு என் தலை மயிரைப் பற்றி என்னை இழுத்துச்செல்லும்போது ப்ரீத்தி சமையலறையில் அவளுக்குச் சாப்பாட்டை போட்டுக்கொண்டிருந்தாள்.

கோரி அவளது கணவனில் கண்ட நற்குணத்தை நான் சந்துருவில் காண முடியுமா என்று கேள்வி எழுந்தது. என் தலைமயிரைப் பற்றிக் கொண்டு அவன் செல்லும் பொழுது அவனது முகத்தைப் பார்த்தேன். அவன் சந்துருவே அல்ல. திருமணத்திற்கு முன் நான் நேசித்த சந்துருவே அல்ல.  அவன் மீது ஒட்டுண்ணியாகப் படர்ந்திருந்த அவனது அம்மாவின் உருவம் தான் எனக்குத் தெரிந்தது.

“முட்டி போடுடி நாய!” என்று என்னை மடித்து அவனது காலடியில் கிடத்தினான்.

விரல்களைச் சுண்டிக் கொண்டே, “தூக்கு…  கைய மேலத் தூக்கு” என்று பற்களைக் கடித்தான்.

நான் எனது கைகளை மேலே தூக்கினேன். ப்ரீத்தி என் எதிரே இருந்த டைனிங் டேபிளில் வந்தமர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள். அதை என்னால் தாங்கவே முடியவில்லை.

சந்துரு அவனது அம்மாவிற்கு வீடியோ கால் போட்டான்.

“அம்மா…  பாரு பாரு உன்னய எதுத்துப் பேசினா இல்ல, முட்டி போட்டு உக்கார வச்சிருக்கேன் பாரு” என்று காட்டினான்.

சாப்பிட்டுக் கொண்டே ப்ரீத்தி என்னைப் பார்த்தாள். அவள் கண்களில் எனக்கான அனுதாபமும் கண்ணீரும் துளி கூடக் காணவில்லை. அந்தக் கணம் அவளது பெயிண்டிங் என்னுள் விரிந்தது. முகம் இல்லாத தலைவிரிக் கோலம் பூண்ட பெண் உருவம், மண்டியிட்டு இருந்தது. மண்டி அமெரிக்காவில் பொதிந்திருக்க அவளது பாதங்கள் வேர் பிடித்து இந்திய மண்ணில் இருந்தன. அவளது உடலைச் சுற்றி வகை வகையான வண்ணச் சங்கிலிகள் கட்டப்பட்டிருந்தன. அனைத்து வண்ணக் கம்பிகளின் தொடக்கமும் முடிவும் அப்பெண்ணின் கையில் இருந்தது.

தோள்பட்டை வலி எடுத்தது. கால்களில் உணர்வில்லை. இமைகளை மூடிக் கொண்டேன். என்னுள் கோரியின் கண்களைக் கொண்ட ப்ளூ ஜேய் சிறகை விரிக்க, காட்டின் அமைதி என்னுள் ஊடுருவ, இன்று நான் சுவாசித்த அத்துணை மணங்களும் எனது உடலின் ரத்த அணுக்களை எல்லாம் ஒன்று திரட்டி என் கால்களை நோக்கிப் பாயச் செய்ய, மவுண்ட் ரெயினியர் மலையைப் போல கனமாக எழுந்து நின்றேன்.

“எந்திரிக்குறா பாரு” என்று அவனது அம்மாவின் குரல் கேட்டது.

சந்துரு என்னை நெருங்கிய கணம் நான் முழுமையாக எழுந்து நின்றிருந்தேன்.

“ஏய் முட்டி போடுடீ” என்று என்னைப் பிடித்து அழுத்தினான். அசைத்துப் பார்த்தான். அவனால் என்னை ஒரு இம்மி அளவு கூட நகர்த்த முடியவில்லை. அவனால் இயன்றவரை முயற்சித்து விட்டுத் தோற்றுப் போய் என்னை நிமிர்ந்து பார்த்தான். நான் இமைக்காமல் அவனது கண்களைப் பார்த்தேன்.

‘உனக்கு என்ன மா வேணும்?’ என்று ப்ரீத்தி கேட்ட கேள்வி அப்போது என் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பிலும் அறைந்தது. செவி மடல்களில் எல்லாம் அக்கேள்வி நிறைந்து அடைத்துக் கொண்டது.

எனக்கு அப்போது ஃபில்டர் காப்பி வேண்டும் போல தோன்றியது. சந்துருவை விட்டு நகர்ந்து சமையலறைக்கு இயல்பாக நடந்து சென்றேன். நான் என் நடையில் அத்தனை இலகுத்தன்மையை உணர்ந்ததில்லை. கொஞ்சம் முயன்றால் என்னால் ப்ளூ ஜேய் பறவை போல பறக்க முடியுமென தோன்றியது. 

சந்துருவின் அம்மா கைப்பேசியில் ஏதேதோ கத்திக்கொண்டிருந்தாள். சந்துரு அப்படியே அங்கேயே நின்றபடி என்னைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

காப்பியை கலக்கிக் கொண்டே சந்துருவைப் பார்த்தேன். அவன் என் கண்களை விட்டு அவனது பார்வையை அகற்றாமல் அலறிக் கொண்டிருந்த கைப்பேசியை எடுத்து வீடியோ காலை துண்டித்தான்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...