மீன் வால்

நனைந்த துணியைப் போலத்தான் மாலதியின் உடல் படுக்கையில் கிடந்தது. உடலில் எந்த அசைவும் இல்லை. கண்கள் மட்டும் மேற்கூரையைச் சுற்றிக் கொண்டிருந்தது. வாயில் சீறல் போன்ற மூச்சொலி எழுந்த வண்ணமிருந்தது. எவ்வளவு கெஞ்சியும் முடியாதென மட்டும் தலையை மெல்லிதாக அசைத்துக் கொண்டிருந்தார். அவருடைய உடலை மூடியிருந்த மூன்று அடுக்கு உடைகளைச் சங்கரி கழற்றவும் நான் வேறு பக்கமாகத் திரும்பிக்கொண்டேன். கடுங்குளிரில் உடனடியாக எங்குச் செல்வதெனத் தெரியவில்லை. அமிர்தாஞ்சனம் தைலத்தின் வாசம் எழுந்தபோது அக்குளிரில் இதமாக உணர்ந்தேன்.

உடலைக் கொஞ்சம் எக்கினாலே தொட்டுவிடுவதைப் போன்ற தாழ்வான கூரை கொண்டிருந்த அறையில் மொத்தமே நான்கு படுக்கைகள் ஒன்றையொன்று ஒட்டிப் போடப்பட்டிருந்தன. வெட்டிய பாறைக் கற்களை அடுக்கிக் கட்டப்பட்டிருந்த அறையின் மூலையில் மின்சாரக் கணப்படுப்பினால் கொஞ்சமாய் வெம்மை இருந்தது. ”ஒன்றும் சிக்கல் இல்லை” எனச் சிரித்துக்கொண்டே உள்ளே நுழைந்த பூபேந்திர், மாலதியின் வலச் சுட்டுவிரலில் பொருத்தப்பட்டிருந்த ஆக்சிமீட்டரில் எழுபது வரை தொட்டு விட்ட உயிர்வளி அளவைப் பார்த்துவிட்டு ”சரியாகிவிடும்” என்றான்.

பூபேந்திர் அன்னபூர்ணா மலையிலிருக்கும் சோம்ரோங் கிராமத்தைச் சேர்ந்தவன். அவனுடைய கிராமத்திலிருக்கும் நண்பர்களுடன் இணைந்து மலையேற்றப் பயணிகளுக்கான வழிகாட்டி நிறுவனத்தை நடத்துகிறான்.  முதல் இரண்டு நாட்களுக்கு மாலதியின் மொத்த உடமைகள் தாங்கிய பெரிய பையைச் சுமந்து வந்தவன் நேற்று மாலை தொடங்கி அவரது தோள்பையையும் சேர்த்து சுமக்கத் தொடங்கியிருந்தான்.

அவ்வதிகாலையில் மாலதியை அவன் சுமந்து வந்த கோலம் அச்சமூட்டுவதாய் இருந்தது. சாக்குப்பையொன்றில் கால்களை நுழைப்பதற்குத் தோதாகத் துளையிட்டுப் பின்பக்கமாய் முடிச்சிட்டு முதுகோடு சேர்த்தணைத்துத்தான் மாலதியை உச்சிக்கு அழைத்து வந்தான். அவன் வந்த கோலத்தைப் பார்த்தவுடனே எல்லாரும் டீ ஹவுசிலிருந்து ஓடிச் சென்று மாலதியைத் தூக்கி அறைக்குள் அழைத்துக் கொண்டு வந்தார்கள்.

பூபேந்திரும் மகேஷும் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டார்கள். பின்னர், என்னருகே வந்தார்கள். அது வரையில் “காலில் தைலம் தேய்ங்க… அந்த வெப்சைட்டுல அப்படித்தான் போட்டுருக்கு… ஆக்சிஜன் ரீடிங்ல்லாம் செக் பண்ணுங்க…. கொஞ்சமா சுடுதண்ணி கொடுத்துப் பாருங்க….” என ஆலோசனைகளைத் தந்து கொண்டிருந்த முன்னாள் வங்கி அதிகாரியான ஆண்டியப்பனின் பின்னால் நின்று கொண்டு நடப்பவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அவரை விலக்கி விட்டு என்னருகில் பூபேந்திரும் மகேஷும் வந்து நின்றார்கள். ஆண்டியப்பனும் என் பக்கமாகத் திரும்பி நின்றார்.

“பிரதர்… நீங்க அவங்ககிட்ட சொல்ல முடியுமா… நாங்க மெடிக் டீம சோம்ரோங் கேம்ப்ல ரெடி பண்ணிட்டோம்… அல்திதுயட் கொஞ்சம் எறங்குனாத்தான் நல்லது… இன்னும் ரெண்டு கேம்ப் எறங்கணும்… பூபேந்திர், நாளைக்கு காலைக்குள்ள அவுங்கள தூக்கிட்டுப் போயிரலாம்ன்னு சொல்றாரு…” என மகேஷ் என்னிடம் சொன்னார். நாங்கள் பேசுவதைக் கேட்பதற்காக ஆண்டியப்பன் அருகில் வந்து நின்று கொண்டார். என்னிடம் பேசுவதற்காக பூபேந்திர் வெளியே அழைத்துச் சென்றார். ‘’இல்ல புரோ… எனக்கு அவுங்கள இங்க வந்ததிலிருந்துதான் தெரியும்… நான் எப்படி சொல்வது,” எனக் கொஞ்சம் தயங்கினேன். ”இல்லை பிரதர்… அவுங்களுக்கு எமர்ஜென்சி காண்டெக்ட் கூட யாரு பேரும் இல்ல… ஹஸ்பண்ட் எல்லாம் விட்டு தனியா இருக்குறாங்க… வந்தவங்கள்ள உங்க கூட மட்டும்தான் அவுங்க அதிகமா பேசியிருக்காங்க… அதனாலத்தான் ஒங்கக்கிட்ட கேக்குறேன்” எனச் சொன்னார். அவரிடம் எப்படிப் பேசிச் சம்மதிக்க வைப்பதெனத் தெரியவில்லையென்றாலும் பேசிப்பார்க்கலாமென்ற முடிவுக்கு வந்தேன்.

பூபேந்திர் என்னிடம் “அவர் மச்சாபூச்சாரே மலையில் விழும் சூரிய உதயத்தைப் பார்க்கத்தான் ஆசைப்படுகிறார்… அதற்கு இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது. அவர் இருக்கும் நிலையில் ஒரு மணி நேர இடைவெளி என்பதுகூட கடும் விளைவுகளை உருவாக்கலாம். இப்பொழுது கூட மகேஷ் நீல நிற மருந்து கொடுத்திருக்கிறார்… நீங்கள் தான் எதாவது செய்ய வேண்டும்…” என உடைந்த ஆங்கிலமும் மலாயும் கலந்து சொல்லிக் கொண்டிருந்தான்.

எங்களுடனே வெளியே வந்து நின்ற ஆண்டியப்பனிடம் விமலாவும் கெளரியும் கத்திக் கொண்டிருந்தனர்.  “வயசு கூடன்னு மரியாத தர்ரோம் அங்கிள்… கெடுத்துக்காதீங்க… இதுக்காகத்தான் காசு கட்டி வந்துருக்கோம்… விடிய விடிய படம் எடுப்போம்…. நீங்க ஒங்க வேலய பாருங்க…” என எரிச்சலோடு கத்திக் கொண்டிருந்தார்கள். கெளரியும் விமலாவும்தான் குழுவிலே ஆக இளையவர்கள். வேலைக்குச் சேர்ந்தே சில மாதங்கள்தான் ஆகியிருக்கும் என்பதைப் பேச்சிலே ஊகிக்க முடிந்தது. ஆண்டியப்பன் “பனி ஒடம்புக்கு நல்லது இல்ல…. அதுக்குச் சொன்னது ஒரு குத்தமா… நல்லதுக்கே காலமில்லை போ…” என என் பக்கமாகச் சொல்லிச் சலித்துக் கொண்டார்.

நான் பட்டென அறைக்கு வெளியே தெரிந்த மச்சாபூச்சாரே மலையுச்சியைப் பார்த்தேன். இன்னும் பனிப்புகை மலையுச்சியை மூடித்தான் இருந்தது. நானும் வந்ததிலிருந்து அதன் வாலைப் பார்த்துவிட எண்ணியிருந்தேன். அதற்கு இன்னும் அருகில் செல்ல வேண்டும். உயிர்வளி குறைந்த மலை உச்சியில் ஒவ்வொரு அடியை எடுத்து வைப்பதற்கும் அதிகம் மெனக்கெட வேண்டும். குளிரும் வதைத்தது. எனவே பனி விலக காத்திருந்தேன். எங்களுடன் வந்த யாரும் அதில் ஆர்வம் காட்டவில்லை.  

நாங்கள் அங்குச் சூரியன் மறையும் நேரத்தில் வந்து சேர்ந்திருந்தோம். மீனின் வால் குறித்து பேச்சு எழுந்தபோது “நா கூகுள்ள பாத்திருக்கேன்… அப்படியே மச்ச அவதாரம் லா…” என ஆண்டியப்பன்தான் கைப்பேசியில் பனிக்குள் ஒளிரும் மஞ்சள் ஒளியின் பிரகாசத்தைக் காணொளி எடுத்துக் கொண்டே பேசினார்.

வானத்தில் நட்சத்திரங்கள் பிரகாசமாய் மின்னிக் கொண்டிருந்தன. வானம் சற்று கீழிறங்கியதைப் போல நட்சத்திரங்கள் தெளிவாகத் தெரிந்தன. நான் ஆண்டியப்பனிடம் பேசுவதைத் தவிர்ப்பதற்காக நேராக அறைக்குச் சென்று மாலதிக்கருகில் சென்று நின்று கொண்டேன். மாலதியின் கைகள் சற்று மேலுயர்ந்தது. அவர் கைகளைப் பற்றிக் கொண்டேன். சங்கரி மாலதியின் காதில் எதையோ சொன்னார். அவர் சொல்வதைக் கேட்டு மாலதி என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

மோஸித் தோட்டத்தில் விழுந்ததனால் வலது காலில் ஏற்பட்ட சிராய்ப்பு மறுபடியும் நினைவுக்கு வந்தது. காண்டுர்க் பகுதியில் நடந்து வரும் போதுதான், பூபேந்திர் மலாயில் “இந்தப் பகுதியில்தான் மோஸி தோட்டம் இருக்கிறது. உங்கள் ஊரின் கேமரன் மலையில் இருக்கிறதே… அதைப்போலத்தான்… ஆனால், அதைவிட அழகாக இருக்கும்…” எனச் சொல்லி மையப்பாதையிலிருந்து கிழக்காக ஒரு சிறிய பாதைக்கு அழைத்துச் சென்றான். வழியில் ராம் என்ற மலையேற்ற உதவியாளரின் பெயரைக் கொண்டு ஆண்டியப்பன் பாடிப்பாடி அவன் கற்றுக்கொண்டிருந்த ‘ராமையா வஸ்தாவையா… ராமையா வஸ்தாவையா’ பாடலைப் பாடினான். எனக்குப் பின்னாலே மாலதி வந்து கொண்டிருந்தார்.

“பார்த்து ராமையா… பக்கத்திலே அருவி நீர் வருகிறது பாருங்கள்” என்றான்

“என் பெயர் ராமையா இல்லை…” எனச் சொன்னதும்

“பியாசாலா…“ என சிரித்துக் கொண்டே மலையில் ஏறினான். கோலாலம்பூரில் ஒர் உணவகத்தில் இரண்டாண்டுகள் பணியாற்றியப் போது கொஞ்சம் மலாய் சொற்களைக் கற்றுக்கொண்டதாகச் சொன்னான். என்னைவிட இரண்டாண்டுகள் இளையவனுக்கு இரண்டு குழந்தைகள் என்பதே ஆச்சரியமாக இருந்தது. சிறுவனைப் போல துறுதுறுப்பாக மலையேறிக் கொண்டிருந்தான். இடையிடையே, இளைப்பாறும் போதெல்லாம் புளுடுத் ஒலிப்பெருக்கியில் இந்திப்பாடல்களை ஒலிக்கவிட்டு ஆடிக்கொண்டிருந்தான்.

ஒற்றையடிப்பாதையின் இருபக்கமும் நீர் இறங்கும் பாசியடர்ந்த தடம் தெரிந்தது. நடுவில் இருந்த கற்களில் கவனமாகக் கால் வைத்து ஏறிக்கொண்டிருந்தேன். நான் சுமந்திருந்த தோள்பையிலிருந்து தொங்கிய கயிற்றின் நுனியைத்தான் மாலதி பிடித்து ஏறிக் கொண்டிருந்தார். கீழிருந்து யாரோ இழுப்பதைப் போலிருக்க  இரண்டு மூன்று முறை திரும்பிப் பார்த்தேன்.

“நீங்க போங்க தம்பி… நான் ஒங்க வால புடிச்சுக்கிட்டே வந்துருவேன்…”  என்றார்.

“இங்க நில்லுங்கள்… பராஹி அம்மா இங்குத்தான் இருக்கிறது…” என வழியில் வலப்பக்கமாய் வண்ணக்கொடி தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட சிறிய கொட்டகையொன்றைப் பூபேந்திர் காட்டினான். அந்தச் சாமியைக் கையெடுத்துக் கும்பிடும் அவசரத்தில்தான் மாலதி என் தோள்பை பிடியைச் சற்று அழுத்தமாய் அசைத்திருக்க வேண்டும். அவரின் அசைவுக்குச் சமன் கொடுக்க முடியாமல் வலக்கால் சறுக்கி கீழே விழுந்ததைப் பூபேந்திர் பார்த்துச் சிரித்தான். எங்களுக்குப் பின்னால், இன்னொரு குழுவுடன் வந்து கொண்டிருந்த ஆண்டியப்பனின் குரல் கேட்கவும் பட்டென எதுவும் நடக்காததைப் போல எழுந்து நின்றேன்.

“அடி ஏதும் பட்டுச்சா…”  என மாலதி கேட்டார்.

“இல்லை…”  எனச் சொல்லிவிட்டு பராஹி அம்மன் கோவிலைப் பார்த்தேன். கோவிலுக்குள் சிலையோ பொருட்களோ எதுவுமில்லை.

“ஜூன் மாதம் மட்டும்தான் சாமிக்குக் கல் நாட்டிக் கும்பிடுவோம். மற்ற நாட்களில் எல்லாம் பராஹி அம்மன் காட்சி தரமாட்டாள்…” என பூபேந்திர் சிரித்துக் கொண்டே சொன்னான். கொட்டகைக்குப் பின்னால் தெரிந்த பெரிய அருவியைப் படம் எடுத்துக் கொண்டேன். அந்தச் சரிவிலிருந்து ஏறிச் சென்றதுமே வேர்கள், மரங்கள், பாறைகள் என எல்லாவற்றிலும் சிறிய வலையைப் போல படர்ந்திருந்த பாசிக்கொடிகள் தெரிந்தன. சுருள் சுருளாக நெய்யப்பட்ட வலைகளைப் போல மரம் முழுவதும் பாசிக்கொடிகள் தொங்கிக் கொண்டிருந்தன. அங்கிருந்த பாறையொன்றில் அமர்ந்து வலக்காலை மேலேற்றி காயம் ஏதும் பட்டிருக்கிறதா எனப் பார்த்துக் கொண்டேன். காலில் லேசாக நெறிக்கட்டியதைப் போல சிவந்திருந்தது.

“அதெல்லாம் ஒன்னும் காயம்பட்டிருக்காது தம்பி…” என மாலதி அருகில் வந்தார். மாலதி கால்களைத் தொட்டுப் பார்க்க அமர்ந்ததுமே சுருட்டியிருந்த காற்சட்டையைச் சரிய விட்டேன்.

டிக்டோக் செயலியில் பார்த்துதான் அன்னபூர்ணா மலைச்சரிவுக்குச் செல்லும் மலையேற்ற பயணத்துக்குப் பெயரைப் பதிவு செய்தேன். மலையேற்றத்துக்கு முந்தைய இறுதி இணையவழிச் சந்திப்பில்தான் நானும் மாலதியும் கெப்போங்கில் இருப்பதே தெரிய வந்தது. எங்கள் இருவரையும் ஒரே இடத்தில் காத்திருந்து வேனில் ஏறிக்கொள்ளுமாறு பயண ஒருங்கிணைப்பாளர் மகேஷ் சொன்னார். கெப்போங் பேரங்காடி முன்னால் காத்திருக்கத் தொடங்கியது முதலே மாலதி பேசத் தொடங்கினார். “நீங்க… மொஸ்கிட்டோ ரெப்பெல்லண்ட் எல்லாம் எடுத்து வச்சிடிங்களா… எங்கிட்ட ஒன்னு எக்ஸ்ட்ரா இருக்கு….  நான் ஒன்னு தாறேன்… நான் கொஞ்சம் கச்சான் எல்லாம் வறுத்து எடுத்து வச்சேன்… மலையேற நெறய எனர்ஜி தேவை… புரோட்டின் எல்லாம் ரொம்ப அவசியமா தேவைப்படும்…’’ என ஒவ்வொன்றாக நினைவுப்படுத்திக் கொண்டிருந்தார். எனக்குக் கொஞ்ச நேரத்திலே அவரின் தொணதொணப்பு சலிப்பை ஏற்படுத்தியது. எல்லாவற்றுக்கும் தலையாட்டிக் கொண்டிருந்தேன்.

“முதல் நாளே ஏழாயிரம் படி ஏறனும் தெரியும்தானே…” எனச் சொன்னதும் எனக்கு மலைப்பாக இருந்தது. மலையேறுவது வரையில் எதைப் பற்றியும் தெரிந்து கொள்ளக்கூடாதென இருந்த என்னுடைய விரதம் மாலதியின் வழித்தான் கொஞ்சம் கொஞ்சமாய்க் கலையத் தொடங்கியது.

வேலைக்குச் சேர்ந்தவுடன் தான் அலுவலக நண்பர்களுடன் வார இறுதி நாட்களில் மலையேற்றப் பயணங்களைச் செய்யத் தொடங்கினேன். புதிய வேலை கிடைத்து மாற்றலானதுமே மலையேற்றப் பயணங்களும் நின்றுபோயின. நானாகத் தனியாக அருகிலிருந்த சில மலைகளுக்கு ஏறிப் பார்த்தேன். ஆனால், மலையேறிக் கொண்டிருக்கும் போதே கார் நிறுத்திய இடம் பாதுகாப்பானதாக இருக்குமா என்றும் கீழிறங்கும் போது கால்கள் எப்படிச் சரிவு நிலங்களில் ஊன்றும் என்றும் சந்தேகங்கள் வலுவாக ஏற்படும். அதனாலே, மலையேற்றங்களை முழுமையாக நிறுத்திக் கொண்டேன்.

டிக்டோக்கில் மகேஷ் ஒருங்கிணைக்கும் மலையேற்றங்கள் குறித்து அறிந்தபோதுதான் பெரிய மலையேற்றப் பயணமொன்றை மேற்கொள்ள வேண்டுமென்ற எண்ணம் வந்தது.   ஆனாலும், பயணத்திட்டத்தை முழுமையாக அறிந்து கொள்ளக்கூடாதெனத்தான் முதலிரண்டு இணையச் சந்திப்புகளிலும் கலந்துகொள்ளவில்லை. ஆனால், வேனுக்குக் காத்திருந்த கொஞ்ச நேரத்திலே, முழு அன்னபூர்ணா மலைத்திட்டத்தைப் பற்றிச் சொல்லி மாலதி பீதியை உண்டாக்கியிருந்தார். அவர் சொல்லும் விளக்கங்களுக்கு இடையில் ‘’நீங்க எதுக்காக மலையேறுறிங்க?’’ எனக் கேள்வியைக் கேட்டேன்.

அந்தக் கேள்வி அவரைப் பரவசப்படுத்தியிருக்க வேண்டும். மலர்ந்த முகத்தோடு ரகசியமான குரலில் சொன்னார், “எதுக்காக தெரியுமா… அன்னபூர்ணா மலைச் சரிவோட பக்கத்துல இருக்குற மச்சாபூச்சாரே மலைய தரிசிக்கத்தான்…  அந்தப் பனிமலையோட உச்சத்துல இருக்குற பகுதி ஒரு மீனோட வால் மாதிரி இருக்கும்… அன்னபூர்ணா மலையிலிருந்துதான் அத தரிசிக்க முடியும்… சொல்லப்போனா, அன்னபூர்ணா தேவியும் சுவாமியுமா மலைகள் சமேதரராய் வீற்றிக்காங்க… நாம ரெண்டாவது நாள் தங்குற காண்டுர்க் கேம்ப்ல அத கொஞ்சம் பாத்துரலாம்… ஆனா, நாலாவது நாள் அன்னபூர்ணா சரிவு உச்சியிலத்தான் பக்கத்துல பாக்குறது மாதிரி முழுசா பாக்க முடியும். மச்சாபூச்சாரே மலையில ஏறுறதுக்கு யாருக்கும் அனுமதி இல்லை… அந்த மலைய சிவரூபமா நேபாள்காரங்க பாக்குறாங்க. இந்தியாவில கைலாயமாட்டம். இந்த மலையோட வீடியோவ டிக்டோக்ல பாத்ததுலிருந்து என் கனவுல மச்ச அவதாரமா வந்துகிட்டே இருக்கு… நீங்க சொன்னா நம்ப மாட்டீங்க… எங்க வீட்டுல வளக்குற கோய் மீனு கூட ஏதோ அந்த மலை சொரூபமாவே தெரிய ஆரம்பிச்சுருச்சு… அப்புறமாத்தான் மகேஷ் மூலமா அந்த மலைய தரிசிக்கிறதா முடிவு பண்ணேன்…’’ என்றார்.

போக்ராவிலே சிறு சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டப் போது மாலதி இல்லாத குழுவாகப் பார்த்து நின்று கொண்டேன். உடன் வந்திருந்தவர்கள் பெரும்பாலானோர், உடல் நலத்துடன் இருந்த முதியவர்களாகவே இருந்தனர். நான்கு கேம்ப்களில் இரவுகளையும் பகல்களையும் கழித்துத்தான் மேலேற வேண்டியிருந்தது. வழியில் அவரவரின் கால் வலிக்கும் முதுகு வலிக்கும் ஏற்றவாறு பயண வேகத்தைத் திட்டமிட்டுக் குழுக்களை மாற்றிக் கொண்டனர். நான் தொடக்கம் முதலே பூபேந்திருடன்தான் பயணித்து வந்தேன். இரண்டாவது நாள் மாலைப் பயணத்தில் மழையில் நனைந்து கொண்டே ஒரு காட்டுப்பாதையில் நின்று கொண்டிருந்தோம். அங்குத்தான் மாலதி நான் இணைந்திருந்த குழுவில் சேரும்படி ஆயிற்று.

“ரெண்டாவது மலை மேட்டுல பாத்திங்களா… ரெண்டு மலைக்கு நடுவுல… வால் மட்டும் மினுக்கமா இருந்துச்சு… நான் அப்படியே கையெடுத்துக் கும்பிட்டேன்… பூபேந்திர்கிட்ட சொன்னேன்… அவர்தான், காலையிலே சூரிய உதிக்கறதுக்கு முன்னால் எழுந்து பாத்து வணங்கணும்ன்னு சொன்னார். இங்க சூரியனோட முதல் வெளிச்சமே அது மேலத்தான் விழுமாம்… அதப் பாக்கணும்…’’ எனச் சொன்னார். என்னைப் பெயரிட்டு அழைத்துத்தான் மாலதி பேசிக்கொண்டிருந்தார். எப்படியும் ஐம்பது வயது நெருங்குவது போல இருந்தவரை என்ன சொல்லி அழைப்பது என்று தெரியாமல் ‘’நீங்க, வாங்க போங்க” என்றுத்தான் அழைத்துக் கொண்டிருந்தேன்.  

பாசிப்பாறையில் அமர்ந்திருந்த போது, ‘’கேதார்நாத் மலையேறி போகும் போது பாதி வழியில கால் வலி எடுத்துருச்சு… கோபுர தரிசனம் கோடிப்புண்ணியம்… இங்கேயே பாதி பாத்துட்டிங்க… இதுவே போதும்ன்னு கைடு சொன்னாரு… எனக்கு தொண்டைல்லாம் அடைச்சுப் போயிருச்சு… எனக்கு என் பிள்ளைங்க நெனப்பு வந்துருச்சு… அவுங்க எல்லாம் என் கூட இல்ல… எல்லாமே ஹஸ்பெண்டு கூடத்தான் வளர்ராங்க…’’ எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மாலதியின் கண்களில் கண்ணீர் திரண்டது.

‘’அவுங்க எல்லாம் நல்லா இருக்கணும்னுதான் எல்லா மலையும் ஏறி வறேன்… எல்லா பயணமும் தனியாத்தான் போறேன்… மலையேற முடியாதுன்னு தெரிஞ்ச ஒடனே எங்கேயோ ஒத்தையில நிக்குற மாறி இருந்துச்சு… புள்ளைங்க நெனப்பும் வந்துருச்சு… எல்லாத்துக்கும் இப்ப….” எனச் சொல்லிக் கொண்டே கைகளால் ஏதோ கணக்கீட்டுக் கொண்டிருந்தார்.

‘’ஹான்… கடைசி பிள்ளைக்கு பதினைஞ்சு… பதினெட்டு…இருபத்து ஒன்னு வயசு இருக்கும்.. அதுங்க நல்லா இருந்தா போதும்” எனச் சொல்லிக் கொண்டே கையை மேலே தூக்கிக் கும்பிட்டுக் கண்களில் வழிந்த நீரைத் துடைத்தார்.

‘’அதுங்களுக்காகத்தான் அப்பயும் மனசு கெடந்து அடிச்சுக்குச்சு… சரி… எப்படியோ மலையேறிறனும்ன்னு கடவுள மேல பாரத்த போட்டுட்டு கழுதை மேல மலைக்கு ஏறினேன். ரெண்டு பக்கத் தொடையும் காஞ்சிப் போயி கொப்புளமே வந்துருச்சு… ஒரு கட்டத்துக்கு மேல முடியல… கண் முழிச்சப்ப கடவுளவுட்டு ரொம்பவும் தள்ளி போயிட்டேன்னு தெரிஞ்சது…”   கண் கலங்கினார்.

மறுபடியும் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தப்போதுதான் மாலதிக்கும் எனக்குமான சூட்சுமமான போட்டி தொடங்கியது. டியுரெலி பகுதியை எட்டியதும் பனிக்காலத்தின் எச்சமாக அங்காங்கே தனித்தனித் தீவுகளாகப் பனிப்பாளங்கள் தெரிந்தன. இருபக்கமும் பனிப்பாளம் சூழ்ந்திருக்க நடுவே இருந்த பாறைகளின் கூர்முனைகளில் கால் வைத்து ஏறிக் கொண்டிருந்தோம். ஒவ்வொரு அடிக்குப் பின்னும் துரத்துவதைப் போல மாலதி கால்களை அருகருகே கொண்டு வந்தார். பனிப்பாளம் தாண்டி மரப்பாலத்தில் நடக்கும் போது இரண்டு மூன்று இடங்களில் அவர் பற்றியிருந்த இரும்புத்தடியின் கூர் நுனி காலணியில் பட்டது. அரை மணி நேர நடைக்கு ஒர் சிறிய இளைப்பாறல் எனப் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. அந்த இளைப்பாறலின் போது, தோள்பையில் கொண்டு வந்திருந்த உலர்பழங்கள், வறுத்த கச்சான்கள் என எதையாவது எனக்கும் சேர்த்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். மறுபடியும் பயணம் தொடங்கும் போது எனக்கருகே வந்து நின்று கொள்வார்.

ஒவ்வொரு இடைநிறுத்தலின் போதும் வழிகாட்டிகள் ஆக்சிமீட்டரில் விரல் நுழைத்து ஆக்சிஜன் அளவைச் சோதித்தனர் டியுரெலி டி ஹவுசிலிருந்து மலை ஏறும் போது, மாலதியின் ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதாக பூபேந்திர் சொன்னான். அவருக்கு மட்டும் அல்திதுயுட் மாத்திரயைக் கொடுத்தும் இன்னும் குறைந்தது. நான்கு அல்லது ஐந்து மணி நேரத்துக்கு அவரது உடல் மலையின் உயர் காற்றழுத்த அளவுக்குப் பழக வேண்டும் எனச் சொன்னான் பூபேந்திர் தானே அவரை அழைத்து வருவதாகச் சொன்னான். என்னை ஆண்டியப்பன் இருந்த குழுவுடன் அனுப்பி வைத்தான்.

எனக்குப் பின்னால் நூறடித் தொலைவிலே வந்து கொண்டிருந்த ஆண்டியப்பன் வழியில் தொடர்ந்து காணொளியில் பேசி பதிவு செய்து கொண்டிருந்தார். கடைசி சரிவிலிருந்து மேலேறும் போதே குளிரிலிருந்து தப்ப தலையோடு ஜாக்கெட்டால் மூடிக்கொண்டேன். கொஞ்ச நேரத்துக்கு உடலிலிருந்து சட்டை உரசும் சத்தம் தவிர வேறெதுவும் கேட்கவில்லை. கொஞ்ச நேரத்தில்தான் எங்களுக்கு வழிகாட்டி வந்த பிரகாஷுடன் பேசத் தொடங்கினேன். கடைசியாக, அன்னபூர்ணா மலைச்சரிவின் உச்சியில் வைக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகையைப் பார்த்ததுமே, என்னை விஞ்சி மேலேறச் சென்றார். நான் அவருக்கான பாதையை அமைத்துக் கொடுத்துவிட்டு வழியில் மச்சாபூச்சாரே உச்சியைத் தேடத்தொடங்கினேன். எங்களுடன் வந்த பிரகாஷ் தமங் தான் மச்சாபூச்சாரே மலைப்பிரியும் சரிவில் நடப்பட்டிருந்த மூங்கில் செடிகளைக் காட்டி “இங்குப் பனிப்புயல் ஏற்பட்டு ராட்சத பந்துகளாக பனிப்பொறுக்குகள் கீழே சரிந்து விழுவது மிகச் சாதாரணம். அப்படிச் சரிவு நடக்காமல் இருக்கத்தான் அங்காங்கே மூங்கில் மரம் நடப்பட்டிருக்கிறது’’ என்றான். அவன் சுட்டிக்காட்டிய இடத்தில் கூட தூசிப்படலம் போல பனிப்படலம் படர்ந்திருந்ததைக் காண முடிந்தது.

“ஹாஹா… நீங்கள் வருவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன் வரை நடக்கவே முடியாதப்படிக்கு முழங்காலளவு பனி இருந்தது. இப்பொழுதுதான் கொஞ்சம் கொஞ்சமாய் கரைகிறது. மச்சாபூச்சாரே மலையிலிருந்து இன்னும் பனிசரிந்து கொண்டிருக்கிறது…” என்றான்.

அதற்குள், ஆண்டியப்பன் ‘நமாஸ்தே அன்னபூர்ணா’ எனப் போடப்பட்டிருந்த பெயர்ப்பலகையைக் காட்டி ‘புதிய வானம்…புதிய பூமி’ பாடலைப் பாடிக் கொண்டிருந்தார். ‘’வாங்க தம்பி… ஒரு டான்ஸ் ஆடலாம்’’ என என் கைகளைக் கோர்த்துக் கொண்டு ஒரு சுற்று சுற்றினார். நான் நடந்து வந்த பாதையைப் பார்த்தேன். எங்கோ விரிந்து சென்ற வெளியில் மாலதி நடந்து வருவதற்கான சுவடே இல்லை. எங்கே பின்னால் தங்கிவிட்டார் என மட்டும் தெரிந்தது. நான் அப்போது மகிழ்ச்சியாக இருந்ததற்கு அதுவும் காரணம் எனத் தோன்றியது.

கொஞ்ச நேரத்தில், சரிவின் மேலிருந்த டீ ஹவுஸில் எங்களுக்கான வரவேற்பு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. வழக்கம் போல பருப்புத் துவையலுடன் கூடிய சோறுத்தான் தரப்பட்டது. நாங்களாக, கொண்டு வந்திருந்த மேகி நூடுல்ஸ் கப்பில் சுடுநீர் ஊற்றி ஆளுக்கு இரண்டு முட்டைகளைப் பெற்று அதில் உடைத்து ஊற்றி சாப்பிட்டோம். நடந்து வரும் போதே பிரகாஷுக்கும் எனக்கும் நெருக்கம் உருவாகியிருந்தது. அவனும் சிறிது ஆண்டுகள் மலேசியாவில் பாதுகாவலராகப் பணி புரிந்ததாகச் சொன்னான். அதனாலே, சில மலாய் சொற்களையும் பேசினான். சீனர்களைப் போல மஞ்சள் முகத்துடன் இருந்தான். ஒராண்டில் மூன்று மாதம் மட்டும்தான் மலையேறிகளுக்குத் துணையாக வரும் வேலை கிடைக்கும். மற்ற நாட்களில் வேலை ஏதுவும் இருக்காது என்றான். வெள்ளைக்காரப் பயணிகளிடம் பணி செய்து நன்கு ஆங்கிலமும் கற்றிருந்தான். அந்திச் சாயும் நேரத்தில் பனிமலை மஞ்சள் நிறக் குழம்பு பூசியது போல தெரிந்தது. அப்பொழுதும் மீனின் வாலைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். மாலதிக்கு முன்பே அதை பார்த்து படம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்ற உந்துதல் ஏற்பட்டிருந்தது.

“எனக்கு மச்சாபுச்சாரே மலையின் மீன் வால் பகுதி மட்டும் தெரியும் இடத்துக்கு அழைத்துச் செல்கிறாயா’’ என பிரகாஷிடம் கேட்டேன்.

“பிரதர், டி ஹவுஸுக்குப் பின்னால் சரிவில் கொஞ்சம் இறங்கி நடந்தால்… மலை தொடங்கும் சிறிய பள்ளத்திற்குச் செல்லலாம்… அங்கு மச்சாபூச்சாரே மலையின் வாலைப் பார்க்கலாம்…’’ என்றான். அவர்கள் அனைவரும் மிக நீண்ட தூரங்களையே அருகில் இருப்பதுபோலத்தான் பேசிக்கொள்வதால் இறங்கி நடக்க தயக்கமாக இருந்தது.

‘சரி’ என்று சொன்னதும் சரிவின் கீழிருந்த பகுதிக்கு அழைத்துச் சென்றான். உடலுடன் ஒட்டியிருந்த மூங்கில் சிம்புகளால் ஆன ஒட்டிய ஆடை, அதன் மேல் போர்த்தப்பட்டிருக்கும் காட்டன் துணி, கடைசியாக சிறிய ஜாக்கெட்டும் அதன் மீது போர்த்தப்பட்ட இன்னொரு ஜாக்கெட் என நான்கடுக்கு ஆடைகளை அணிந்து கையுறைகளையும் போட்டு தலையை நன்கு மூடியப்பின் தான் சென்றேன். ஒரு பதினைந்து நிமிட நடைத் தொலைவில் சிறிய குன்று போன்றிருந்த பகுதியை ஏறி இறங்கியதும் கெட்டியான பனிப்பரப்பு தெரிந்தது.

‘’இந்த இடத்தில் ஆண்டு முழுவதும் பனி இருக்கும்’’ என பிரகாஷ் சொன்னான்.

நான் தலையைப் போர்த்தியிருந்த தொப்பியை அகற்றிவிட்டு பனிப்பொறுக்குகளில் பொம்மை செய்வது போல படங்களை எடுக்கச் சொன்னேன். பனிப்பொறுக்குகளை அள்ளி அள்ளி பொம்மை எழுப்ப பனி மூடிய காய்ந்த புல்கள் தெரிந்தன. அவன் என்னைச் சில படங்கள் எடுத்தான். பனியில் படுத்திருப்பதைப் போல, கண்மூடி அமர்ந்திருப்பதைப் போல. இன்னும் சில போஸ்கள் செய்யச் சொல்லிப் படங்களை எடுத்தான். கடைசியாகத்தான், மலை நினைவுக்கு வந்தது. அதுவரையில் கண்களில் அணிந்திருந்த கறுப்புக் கண்ணாடியைக் கழற்றி மலையைப் பார்த்தேன். மாலை நேரத்து வானில் எஞ்சியிருந்த ஒளியை உள்வாங்கிக்கொண்ட வெண்பனியின் ஒளிவீச்சு கண்களைக் கூசச் செய்தது. மலையுச்சி மீது தெரிந்த இரண்டு கூம்பு முனை போன்ற பகுதியை எந்தவகையிலும் மீன் வாலாகக் கற்பனை செய்ய முடியவில்லை. பிரகாஷிடமே, ‘’இதில் மீன் வால் எங்கிருக்கிறது?” எனக் கேட்டேன். அவன் கைகளாலே கோடுகளைப் போல வரைந்து “இப்படிப் பார் ஒரு மீனின் அடிவால் நீட்டிக்கொண்டிருப்பது போல தெரியும்” எனச் சொன்னான். அவன் சொன்னதைப் போலவே கீழே குனிந்து பார்க்கவும் தெரிந்த இரண்டு கூர்முனைகளை மீனின் வால் நுனிகளாகக் காணலாமெனத் தோன்றியது. நான் பார்க்க முயன்ற சிறிது நேரத்திலே மலையின் உச்சியில் புகைப்படலம் குவிந்தது.  “பிரதர்… மேலே இருள் கவிந்து வருகிறது… நாம் டீ ஹவுசுக்குப் போகலாம்” என அழைத்தான்.

பாதிவழி நடந்ததும்தான் பனிப்பரப்பிலே தொப்பியைத் தவறவிட்டுவிட்டேன் என நினைவுக்கு வந்தது. பிரகாஷ் “ஹாஹா… அது மலையில் இருக்கும் கடவுளுக்கு” எனச் சொல்லிச் சிரித்தான். நானும் அவனும் டீ ஹவுசில் மேலேறி வரும் போதுதான் பூபேந்திர் மாலதியைத் தூக்கி மலையுச்சிக்கு மேலேறி வந்தான். முதுகில் மாட்டப்பட்டிருந்த நீர்ப்பையின் உறிஞ்சி மாலதியின் வாயிலிருந்தது. அரைவிழிப்பில் கைகள் கால்கள் எல்லாம் துவண்டு போயிருந்தவரை உடலோடு அணைத்தப்படித்தான் பூபேந்திர் தூக்கி வந்தான். நேராக, அறைக்கு அழைத்துச் சென்று படுக்க வைத்ததுமே பெண்கள் அறைக்குள் சென்று அவரின் ஆடைகளைக் களைந்து உடல் முழுவதும் தைலத்தைப் பூசிக் கொண்டிருந்தார்கள். நான் முதலில் உள்ளே நுழையவில்லை. கொஞ்ச நேரத்தில் வழிகாட்டிகளும் உடன் வந்தவர்களும் உள்நுழைவதும் வெளியேறுவதுமாகப் பரபரப்பாக இருந்ததனாலே வெளியிலிருந்து எட்டிப் பார்த்தேன்.

நான் மாலதியினருகில் அமர்ந்து கொண்டு, மாலதி எனச் சொல்லி அழைத்தேன். அதற்கு முன்னரே அவர் என்னைக் கவனித்திருக்க வேண்டும். ‘’ஆம்…” எனச் சொல்லிக் கைகளை அசைத்தார். ‘’இல்லை… நீங்க கீழே எறங்குங்க… இவ்வளவு தூரம் மேலேறி வந்ததே போதும்…’’ என்றேன். ஒன்றும் பேசாமல் படுத்திருந்தார். அவர் மெளனமாக இருப்பதைப் பார்த்து பூபேந்திரும் மலாயில் “இப்பொழுது கீழே இறங்கி உடல் நிலை சரியானதும்…. நாளைக்கு உங்களை மறுபடியும் இங்கு அழைத்து வருவேன்…” என என்னைப் பார்த்து கண்ணைச் சிமிட்டிக் கொண்டே சொன்னான். மாலதி வேண்டாம் என்பதைப் போலத்தான் தலையை மெதுவாக அசைத்துக் கொண்டிருந்தார். நான் அவருடைய கைகளைப் பற்றிக் கொண்டு சற்று அழுத்தமாகவே “அவரை மீன் வாலைப் பார்க்க அழைத்துச் செல்லுங்கள்…’’ எனப் பூபேந்திரிடம் சொன்னேன். மாலதி என் கைகளைச் சற்று அழுத்தமாகப் பற்றிக் கொண்டார்.

நான் ஏன் அப்போது அப்படிச் சொன்னேன் எனத் தெரியவில்லை. நான் சொன்னதைக் கேட்டவுடன் ”அது ஆபத்து” என பூபேந்திர் பதறினான்.

”எது நடந்தாலும் நான் பொறுப்பு” என்றபோது மாலதி மேலும் என் கையை நம்பிக்கையுடன் இறுக்கினார்.

அவன் ‘’ஒக்கேவா…ஒக்கேவா’’ என இரு முறை கேட்டான். நானே ‘’ஒக்கே’’ எனப் பெருவிரலை உயர்த்திச் சொன்னேன். உடலில் தைலத்தைப் பூசுவதற்காய் சங்கரி வரும் வரையில் என் கையை மாலதி அழுத்தமாய்ப் பற்றியிருந்தார். சங்கரி, மாலதியின் உடலில் மறுபடியும் தைலத்தை நன்கு பூசி ஆடைகளை எல்லாம் இறுக மூடினார். பூபேந்திர் பழையப்படி முதுகில் சாக்குப்பையை மாட்டிக்கொண்டான். முன்பக்கமாய் அதன் முடிச்சுகளை இறுக்கிவிட்டு நன்கு இழுத்துப் பார்த்துக் கொண்டான். அந்தச் சாக்குப்பையில் மாலதியை அமரவைத்து கைகளை முன்பக்கமாய் அணைத்துக் கொண்டான். மீண்டும் பதினைந்து நிமிட நடை. எனக்கும் மூச்சி வாங்கியது. சூரியன் உதிக்கும் நேரம்தான்.

சாக்குப்பையினுள் துவண்டிருந்த மாலதி எதனாலோ உந்தப்பட்டவராக தலையை நிமிர்த்திய மாலதி கைகளை நீட்டி மலையைக் காட்டினார். அவர் கண்களில் பரவசம். கைகளை எடுத்து வணங்கினார். பனி இன்னும் விலகவில்லை. மீன் வாலை இப்போது பார்க்க முடியாது என பூபேந்தர் கூறினான். இல்லை நாங்கள் பார்த்துவிட்டோம் என்றேன். மாலதி ஆம் எனத் தலையாட்டினாள்.

பூபேந்திர் எங்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே இந்தி பாடலொன்றை முணுமுணுத்துக் கொண்டே டி ஹவுசிலிருந்து கீழிறங்கத் தொடங்கினான். பூபேந்திர் தலையில் அணிந்திருந்த விளக்கொளி வெளிச்சத்தால் மலைச்சரிவு துலங்கி கொண்டிருந்தது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...