
மலேசியாவில் தமிழர்கள் வேர்கொண்ட வாழ்வைப் பல்வேறு படைப்பாளிகள் தங்கள் புனைகதைகள் வழி வெளிப்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு தோட்ட வாழ்விலும் பெரும் வாழ்க்கைப் போராட்டம் இருந்திருக்கிறது. எழுதப்படாதுபோன மக்கள் வரலாறு எத்தனையோ. அந்நிய பூமியில் தமிழர்கள் எதிர்கொண்ட நெருக்கடியைத் தோட்ட வாழ்வின் சிதையை ஒரு நூற்றாண்டு பின்புலத்தில் வைத்து ‘பேய்ச்சி’ நாவல் பேசுகிறது. மற்ற நாவல்களின் கதை சொல் முறையிலிருந்து விலகி, மலேசியா வந்த வரலாற்றை, அவர்கள் பட்ட பாடுகளை, அடைந்த அவமானங்களை மட்டுமே சொல்லவேண்டும் என்ற நோக்கமில்லாமல், தமிழர்கள் வேர்கொண்ட அம்மண்ணின் அம்சங்களோடும், தமிழர்கள் கொண்ட பண்பாட்டு அடையாளங்களோடும் பின்னிப்பிணைந்த ஒரு வாழ்முறையிலிருந்து சொல்கிறார் எழுத்தாளர். அந்த வாழ்முறையிலே வரலாற்றின் தடங்கள் பதிந்திருக்கின்றன. புலம்பெயர்ந்தோரின் வலிகள் இருக்கின்றன. ஏழைத்தமிழன், பணக்காரத்தமிழன், கீழ்குச்சிலயம், சாதிய முரண்பாடுகள், பெர்மிட் பிரச்சனைகள், அரசியல் தாக்கங்கள், சீனர்களின் பொருளியல் எழுச்சி, கம்யூனிச இயக்கங்கள் குறித்த எதிர்மறை எண்ணங்கள், அவர்களின் தாக்குதல்கள், செம்பனை வரவினால் ரப்பர் தோட்டங்கள் சிதைவுறுகிற காட்சிகள், இந்தோனேசியர்களின் வருகை, சீனர்களின் குடியேற்றம், தமிழர்களின் கம்பங்கள், தோட்ட லயங்கள் கைவிடப்பட்டு புலம்பெயர்கின்ற அவலங்கள் என மலேசியாவிற்கே உரிய பிரச்சனைகள் தமிழர்களை நெருக்கடிக்குள்ளாக்கி சிதறடிக்கிற கோலத்தை இந்த நாவல் வாழ்முறையிலிருந்து தன் போக்கில் வெளிப்படுத்துகிறது.
தமிழகத்தின் தென்மாவட்டமான கோவில்பட்டி பகுதியிலிருந்து வந்த கொப்பேரன் கொடிவழியும் வடார்க்காடு மாவட்டத்திலிருந்து வந்த ஓலம்மாவின் கொடிவழியும் லுனாஸ் பகுதி மலேசியத் தோட்டத் தமிழர்களுடன் வந்து இணைகிறது. இந்தப் புள்ளியோடு இணைந்து கிளைவிரித்துக்கொண்ட தமிழர்கள் வாழ்வைச் சொல்கிறது நாவல்.
ஒருவகையில் இது ஓலம்மாவின் முழுமையான வாழ்க்கைச் சித்திரம். அவளது பரப்பிலிருந்து அந்தத் தோட்டக்காட்டு மனிதர்கள் பின்னியிருக்கிறார்கள். நிலங்கள் சீன முதலாளிகளிடமும் மலாய் முதலாளிகளிடமும் கைமாறும்போது சாகுபடி முறைகளும் மாறுகின்றன. கூலித்தொழிலாளிகளான தமிழர்களின் நிலை நெருக்கடிக்குள்ளாகிறது. மற்றொரு பக்கம் குடி கலாச்சாரம் அவர்களை வீழ்த்துகிறது. இந்த இரண்டின் உட்சபட்ச நெருக்கடியைத்தான் இந்நாவல் பேசுகிறது.
எங்குச் சென்றாலும் மண் என்பது தமிழர்களின் வாழ்வில் ரத்தமும் சதையுமான உறவாக மாறிப்போகிறது. அங்கும் காளியம்மன், மாரியம்மன், பேச்சியம்மன், முனியாண்டி தெய்வங்கள் முளைத்தெழுந்து அவர்களை மண்ணோடு பிணைத்துவிடுகிறது. தங்களைப் பெரியாரியவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் எளியவர்களும் இந்தப் பண்பாடு ஆகிரிதியில் சின்னச்சின்ன புள்ளிகளாக அடங்கித்தான் போகிறார்கள். பேய்ச்சி தன்னைக் கொடூரமாக வெளிப்படுத்திக்கொள்ளும் படிமத்தை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பெண்கள் திடுக்கென வெளிப்படுத்துகிறார்கள். மலேசிய தோட்டக்காட்டுப் பெண்களிடமும் இந்தக் குணம் வெளிப்படுகிறது. அதனுடைய தொடர்ச்சி இன்னொரு இடத்தில் இன்னொரு சந்தர்ப்பத்தில் இன்னொரு விதத்தில் வெளிப்படும் என்பதைத் தொட்டுக்காட்டுகிறது.
வாழ்விலே உறைந்துகிடக்கும் இந்த மாயத்தன்மை நாவலில் முக்கிய அம்சமாக அமைகிறது. எனவே மாயக்காட்சிகளுக்கு உகந்த மொழியும் அங்கங்கே மாயக் கோலத்துடன் வெளிப்படுகிறது. மலேசிய நாகத்தைப் பேச்சியின் வடிவமாகப் பார்க்கும் ராமசாமி முனியாண்டியின் கை ஒடிந்ததால் பழிவாங்கியதாகக் கூறும் கிழவி, தைப்பூசத்திற்குப் போகாதவர்களுக்குத்தான் சாவு வந்திருக்கிறது என்கிற தண்டல், என இப்படியான நம்பிக்கை சார்ந்த பேச்சுக்கு மறுபக்கத்து வேறொரு யதார்த்த உண்மையும் காட்டப்படுகிறது. நாட்டார் தெய்வத்தை நம்பும் மலேசிய தமிழர்களின் கண்களிலிருந்தும் மனதிலிருந்தும் இந்நாவலை நவீன் எழுதியிருக்கிறார். பகுத்தறிவு பார்வையிலிருந்து ஒருவேளை எழுதியிருந்தால் அந்த மண்மீதான நேசத்தை உருவாக்க முடியாமல் போய்விடும். இதுதான் எழுத்தாளனின் தேர்வு என்பது. படைப்புக்கலை என்பது அறிவார்த்தத்திலிருந்து வேறுபட்டதாக நிற்கும் என்பதும் இதனால்தான். அறிவைவிட உணர்வுதான் படைப்பை வடிவமைக்கிறது. பகுத்தறிவுப் பார்வை நாவலில் ஒரு கிளையாக ஊடாடலாம். வலுவான எதிர்வினையை அது வைத்துக்கொண்டே இருக்கலாம். ஆனால் படைப்பு என்பது பண்பாட்டின் முழுவடிவம். அந்த வடிவத்திற்குள் அனைத்து தத்துவ விசாரங்களும் அமையலாம். படைப்பு எப்போதும் மானிட வாழ்வைப் பேசுகிறது என்பதுதான் அதன் ஆதார சுருதி.’பேய்ச்சி’ அப்படித்தான் அமைந்திருக்கிறது.
இந்த நாவலில் முதன்மையாக மனிதர்கள் தங்கள் ஆசாபாசங்களைத்தான் வெளிப்படுத்திக்கொள்கிறார்கள். முனியம்மா – ஓலம்மா சண்டையில் அவர்கள் வெளிப்படுத்திக்கொள்ளும் ஆக்ரோசத்தை இந்த இடத்தில் நினைத்துப் பார்க்கலாம். மறைந்திருக்கும் அன்பும், கசப்பின் ஆங்காரமும் மோதிக்கொள்வதைக் காணலாம். அதேபோல தோக்குரு காட்டும் வெளிச்சம் நிறைந்த வழித்தடங்கள் நல்ல பரிமாணத்தைக் கொண்டிருக்கின்றன. ஊருக்குத் தெரியாமல் சாராயம் அருந்திவந்த வாத்தியார், தனக்குக் கண் தெரியாமல் போனதும் கௌரவத்தை நினைத்து இருட்டில் வீட்டிலேயே ஒடுங்கி சாவை ஏற்கும் இடம் வலுவாக வந்திருக்கிறது.
விஷச்சாராய சாவும், செம்பனையின் வரவும் அவர்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போடுகின்றன. 1981, 1999 இந்த இரண்டு ஆண்டுகளில் கதை நிகழ்கிறது. மையமான இந்த இரண்டு ஆண்டுகளில் தமிழர்களின் நூற்றாண்டு கால அழுத்தங்கள், கொடுமைகள், அரசியல் வஞ்சனைகள், குடியுரிமைப் பிரச்சனைகள், துரைமார்களின் பாலியல் சுரண்டல்கள், தண்டல்களின் அடாவடித்தனங்கள், சீனர்களின் வியாபார வளர்ச்சிகள், கள்ளுக்குத் தடை விதித்து சாராயத்தை ஊக்கிவித்த அரசின் நடவடிக்கைகள், கொரிலாக்களின் தாக்குதல்கள், பெரியாரியத்தின் வரவு, சயாம் ரயில் பணி என எத்தனையோ வரலாற்றுத் தழும்புகள். சிறுசிறு புள்ளிகளாக நாவலெங்கும் படிந்திருக்கின்றன. வரலாற்றின் மெல்லியப்பனித்திரை நாவலில் போர்த்தப்பட்டிருக்கிறது. சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி அவர்களின் நினைவுகளில் லேசாக தலைகாட்டிவிட்டு இன்றைய வாழ்க்கை ஓட்டத்தில் மறைகின்றன. நாவல் நிகழ்காலத்தின் சமூக கணபரிமாணங்களோடு இயங்குகிறது. நெருக்கடியான நிகழ்காலம் பின்பு வரலாற்றின் ஒரு அரசியல் பின்னலான சமூகமாகக் காட்டப்படப் போகிறது என்ற அறிதல் இல்லாமல் எதிர்காலம் என்பது என்னவாக இருக்கும் என்பது தெரியாமல் ஒரு இயல்பான வாழ்க்கையை எதிர்கொள்கின்றனர். பிரச்சனைக்குரிய சம்பவங்களும் நிகழ்கின்றன.
மலேசிய அரசியல் சூழல்தரும் எல்லா நெருக்கடிகளையும் ஏற்று வாழத்தலைப்படுகின்றனர். எல்லா சிடுக்குகளை ஏற்றுக்கொண்டபடியே தமிழர்கள் இது நம் பூமி என்று மெல்ல அதனுடன் ஒன்றிப்போகின்றனர். மண்ணோடு ஒன்றிப்போன அவ்விடத்தை விட்டும் காலம் தமிழர்களைச் சிதறடிக்கிறது. சிதறடித்தப்பின்னும் தம் நம்பிக்கையின் கீற்றுகள் அங்கே புதைந்திருப்பதாக நம்புகின்றனர். தாம் வாழ்ந்த மண் தமிழர் இல்லாது வெறுமை கொண்ட கோலத்தை இந்நாவல் உக்கிரத்தோடு காட்டுகிறது. தங்களின் பூர்வீகத்தை நினைவுபடுத்திக் கொள்ள பேச்சி மட்டும் அங்கே இருக்கிறாள். பேய்ச்சிகளாக வாழ்ந்த பெண்கள் இல்லாது போகின்றனர். துரத்தியடிக்கப்பட்ட வெறுமை எளிய தோட்டத் தமிழர்களின் மாபெரும் வீழ்ச்சியைத் ததும்பத்ததும்ப நாவல் கையகப்படுத்தியிருக்கிறது. அழிந்தபோன தமிழர் வாழ்வை, கைவிட்டுப்போன நிலத்தை, கைவிடப்பட்ட தெய்வத்தை, அவர்களது ஆசாபாசங்களை ‘பேய்ச்சி’ நாவல் மீட்டுருவாக்கம் செய்து உயிர்ப்புள்ளதாக ஆக்கியிருக்கிறது. லுனாஸ் தோட்டக்காட்டின் மேல் கவிந்திருக்கும் எளிய தமிழர்களின் மாபெரும் சோகத்தை இவ்விதமாக தர்சிக்க வைத்ததில் வெற்றியடைந்திருக்கிறது. தமிழர்களின் பெருமூச்சை இவ்விதம் நாவல் தேக்கி வைத்திருக்கிறது. நாவல் தரும் அனுபவம் இது.
2
கித்தா காட்டின் அழிவும் செம்பனையின் வரவும், காட்டின் அழிவும், தமிழர்களின் கம்பங்கள், தோட்டத்து லயங்கள், அழியும் சித்திரங்களும், கம்பத்து இடங்களை வாங்கிய சீனனின் நெருக்கடியும், அவர்களுக்குக் கைக்கூலிகளாக வரும் தமிழ் ரவுடிகளும், சக்தி இழந்து போன பூனியான் காடும் எல்லாம் பெருகி சுமையாகி வெறுமையும் தனிமையும் கொடூரமாக ஓலம்மாவின் மீது காலம் கவிழ்க்கிறது. அவளுக்கு நம்பிக்கை அளித்து வந்த பேரன் கைவிட்டுப் போகும்படி முனியம்மாவால் நேர்கிறது. ஆறுதல் அளிக்கக்கூடிய ராமசாமி குற்றவுணர்ச்சியின் கொதிப்பில் தற்கொலை செய்து மறைகிறார். எட்டுத்திக்கும் ஓலம்மாவை வாழவிடாதபடி வன்மங்கள் படை கொண்டு தாக்கும் தருணத்தில்தான் ஆவேசம் கொள்கிறாள். ஒரு கையறுநிலை. தான் நேசித்து நேசித்து வளர்த்த கோழிகளை ஆர்ச்சாக்களை, கருப்பனை நெருப்பிட்டும், தரையில் சுழற்றி அடித்தும், விரட்டி வெட்டியும் ஆவேசம் கொண்டு தன்னையும் துண்டித்துக் கொள்கிறாள்.
ஓலம்மாவின் இந்த ஆவேசங்கொண்ட அழிவு சக்தியைத்தான் பேய்ச்சியின் தொன்ம வடிவங்களில் சிலையாக, கதையாகச் சொல்லி வருகிறோம். அந்த பேச்சியின் தொன்மவடிவம் நிஜத்தில் ஓலம்மா வடிவில் வெளிப்படுகிறாள். இந்த ஆவேசம் சாத்தியமா என்ற ஒரு கேள்வி எழுந்ததும் நல்லதங்காளின் செயல் உடனே நினைவிற்கு வருகிறது. ஆறு குழந்தைகளைப் பாழுங்கிணற்றில் தூக்கி எறிந்தது ஒரு ஆவேசநிலைதான். அது வறுமை தந்த ஆவேசநிலை. இந்த பேய்ச்சி வடிவம் வாழ்வின் நெருக்கடியிலிருந்து உருவாகிறது என்பதில் குறியீடுதான் ஓலம்மா.
ஒரு தொன்மம் இந்நாவலில் நவீனத்தன்மையோடு வெளிப்படுகிறது. தமிழ்ப் பண்பாட்டிலிருந்து உருவாகி வந்த தொன்மம். அவர்கள் காலடி வைக்கும் இடத்திலெல்லாம் ஏதோ வடிவில் வெடிக்கிறது. அந்நிய மண்ணில் வாழ்ந்து வாழ்ந்து, மடிந்து மடிந்து தன் நிலமாகி, தமிழரின் தொன்மத்தால் பிணைக்கப்பட்டு, நிலத்தைத் தன் உயிரென நேசிக்கிற தமிழரின் பண்பாட்டு எண்ணங்கள் வேர்விட்டு ஆழ ஊன்றிய தமிழரின் புதிய மண்ணாக மாறிப்போகிறது. சீனர்கள் வாழ்ந்த இடத்தை மிகமிக இலகுவாக தூக்கி எறிந்துவிட்டு, அதைவிட வசதியான இடத்தை நோக்கி மகிழ்ச்சியோடு புலம்பெயர முடிகிறது. அதற்கு அவர்கள் ரத்தத்தில் ஊறிய வணிகமனமாகக்கூட இருக்கலாம். தமிழ்க்குடிகள் நேரெதிரான மனோபாவம் கொண்டவர்களாக இருக்கின்றனர். அதற்குக்காரணம் தமிழர் பண்பாடும் தொன்மங்களும் அப்பூமியில் காலூன்றி விடுவதால்தான். தமிழர்களின் வாழ்வே மண்ணோடு பிணைக்கப்பட்டிருப்பதால்தான். நிலம் தமிழர்களுக்குத் தெய்வமாகி விடும் நிலையும் இதனால்தான். அதை இழக்கும்போது அவர்களுக்குள் புதைந்துகிடக்கும் ஆவேச வடிவங்களும் வெளிப்படுகின்றன. பெரியாரின் கொள்கையைக் கறாராக கடைபிடிக்கும் கொள்கைவாதியால் ஓலம்மாவின் மன உலகை உருவாக்க முடியாது. கடவுள் மறுப்பாளன் புனைவின் சாத்தியங்களையும் மானிட உள்ளங்களையும் உள்நுழைந்து காண முற்படுபவனாலேயே இயலும்.
மணியம், மணியத்தின் சிஷ்யர்கள் பெரியாரின் கொள்கையை ஏற்றவர்களாக வருகிறார்கள். அது ஒரு லேபிள்தானே தவிர பெரியாரின் கொள்கையை ஆழமாக அறிந்து பற்றிய செயல்பாட்டாளர்கள் அல்ல. தங்கள் பிறப்பு சார்ந்து சுயமரியாதையுடன் வாழ முனைகிற இடத்தில் ஒரு ஊக்கியாக இருக்கிறது. மற்றபடி தமிழர் தோட்ட வாழ்வில் மக்களின் நம்பிக்கைகளை ஏற்றவர்களாகத்தான் அவர்களும் இருக்க முடிகிறது. அது ஒரு வகையான பிணைப்பு. ஒரு வகையான இனப்பாதுகாப்பு. கூடி வாழுமிடத்தில் ஒருவகையான அடையாளம். தைப்பூசம் போன்ற விழாகூட தங்கள் தனித்துவ அடையாளங்களைப் பேணும் ஒன்று என்பதை விரும்பக்கூடிய பெரியாரியர்களாக இருக்கின்றார்கள். எனவே மணியம் வீரார்ந்த மனம் படைத்தவன். தன் சாதிய அடையாளத்திலிருந்து வெளியேற நினைப்பவன். மற்றபடி அம்மக்களின் நம்பிக்கைகளை மறைமுகமாக ஏற்றவனும்கூட. ஆசாபாசங்கள் நிரம்பிய சாதாரண மனிதனும்கூட. அப்படித்தான் மணியன் படைக்கப்பட்டிருக்கிறார். கருப்புசட்டை அணிந்து கொண்டு மனைவியைத் தன் குலதெய்வ கோயிலுக்குப் பொங்கல் வைக்க அனுப்புவதுபோலத்தான். பூசாரி சாம்பைப் பற்றிய குமரனின் மனவோட்டங்களும் பூசாரியின் எளிய வெளிப்பாடுகளும் நம் பார்வைக் கோணங்களைப் பரிசீலனை செய்ய வைக்கின்றன.
3
எழுத்தாளன் புனைவுப் பாத்திரங்களில் தன்னை முற்றாக இழந்து அப்புனைவினுள் இரண்டற கலந்தவிடுகிறபோதுதான் அப்புனைவு மாந்தர்களின் எண்ணங்கள் நடையில் பல்வேறு கோலங்கள் கொண்டு வெளிப்படுகின்றன. இந்த உள்முகப்பாய்ச்சல் இந்த நாவலின் புனைவு வெளிக்குள் அசலாகவும் (பம்மாத்து இல்லாத நடையில்) அந்தந்த மாந்தர்களின் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்பவும் வெளிப்படுகின்றன. நடையை எழுத்தாளன் தீர்மானிப்பதைவிட புனைவு மாந்தர்களின் சுழல் தீர்மானிப்பது ஒரு தனித்த படைப்புக்கலை. அது ‘பேய்ச்சி’ நாவலில் அழகாகக் கூடிவந்திருக்கிறது.
கழுகுமலையில் பேச்சியின் கோலத்தைக்கண்டு மிரட்சியுடன் திரும்புகிறார். “தீக்கொழுந்து போல இரு கண்கள் முதலில் பின் தொடர்ந்து வருவதுபோலவும் பின்னர் அவை முதுகுடன் ஒட்டிக்கொண்டது போலவும் உஷ்ணம் பரவியது. கொஞ்ச நேரத்தில் அவரை அந்தக் கண்களே தள்ளிக்கொண்டு செல்வதாகத் தோன்றவும்தான் இறங்குவது சரியான வழித்தடமா எனச் சந்தேகம் எழுந்தது” என்பதாக நடை உருவாகிறது.
கற்பனையாக உருவாக்கிக் கொள்ளும் நிகழ்விற்குள் மனம் கொள்ளும் விந்தையான எண்ணங்களை எழுதும்போதும் புதுமையான நடை உருவாகிறது. கொப்பேரன் காய்ச்சலில் கிடக்கிறான். “உடலை வியர்க்க வைக்க அம்மா எதையோ தடிமனாகப் போர்த்தியிருந்தாள். அதை நீக்க முற்பட்டான். மேகம்போல புகைபோல எவ்வளவு துழாவினாலும் வழிவிட்டதே தவிர விலகவில்லை,” கொப்பேரனுக்குள் உருவான காட்சியைக் காட்டுகிறார்.
ஒரு படைப்பை நிஜமாக்குவது அந்தந்த நேர மனவெழுச்சியின் கொழுந்துகள் எழுந்து வீசுவதை எழுத்தில் படியவைப்பதுதான். அதை எழுதத் தெரிந்தவன் கலைஞனாகிறான். இந்த மனமொழி கூடிவராத ஆக்கங்கள் எத்தனை பெரிய புரட்சியைப் பற்றிப் பேசினாலும் அது படைப்பு என்ற கோட்டிற்கு அப்பால் இருப்பதாகவே கொள்கிறேன். அது கதையாக எழுதப்பட்ட செய்தியாக இருக்குமேயொழிய படைப்பாக இருக்காது. வாசகனைப் பாதிக்கும் சக்தியை இழந்த நடை எந்தச் சலனத்தையும் உண்டாக்காது.
அச்சம் கொண்ட மனத்தின் தத்தளிப்பான எண்ணங்கள் மொழியில் அப்படியே உருக்கொண்டு விடுகிறது. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று சொல்வோமே அப்படியொரு மனநிலையில் கொப்பேரன் இருப்பதை – ஒரு குழந்தையை முன்வைத்து ஏற்படும் அவரது ஆசை – பயம் – இழப்பு – சந்தேகம் – வெல்வதற்காக தவிக்கின்ற தவிப்பு எல்லாம் கலந்த அவரது மனநிலையைச் சாகசத்தோடு கொண்டு வந்திருக்கிறார். ரத்தமும் சதையுமான பகுதி என்பது இதுதான். இது ஒவ்வொரு மாந்தரின் மன உலகிலிருந்து எழுந்து படிகிறது. இந்நாவலின் வெற்றிக்கு இதுவே முதன்மையான காரணமாக அமைகிறது.
“ஒரு வேளை தன் கையாலேயே இந்தக் குழந்தையைச் சாகடிக்க உருவாக்கப்பட்ட நாடகத்தில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறோமோ என்ற எண்ணம் எழுந்தபோது குழந்தையை இறுக அணைத்துக் கொண்டார்” என்று அவரது தவிப்பை எழுதுகிறார்.
நடையில் முதிர்ந்து கனிந்த எண்ணம் வெளிப்படுகிறது. வெற்று ஜாலங்கள் எங்கும் இல்லை. மிகையில்லாது அளவானவிதத்தில் புற உலகைக் காட்சிப்படுத்துகிற இடங்களிலும் மனித உள்ளத்தின் அக்கணநேர எண்ண வெளிப்பாடுகளைப் புறக்காட்சியின் தோற்றங்களை, கற்பனைகளை, ஒப்புமைகளை வழவழவென்று எழுதாமல் தெளிப்புக்களாக இரண்டு மூன்று வரிகளில் சுழற்றி எழுதிவிட்டு அடுத்த விசயத்திற்கு வெகு சகஜமாக நகர்ந்துவிடுகிறார்.
மற்றொரு இடம், நம்பிக்கைக்கும் அறிவார்த்தமான இடத்திற்கும் மாறிமாறி நகரும்போது மொழியும் அதற்குகந்த விதத்தில் ஒருவித சாகத்தோடு மாறுகிறது. கற்பனைக்கும் நிஜத்திற்குமான இடத்திலும் அப்படியே.
பூனியான் வாழும் காட்டுப்பகுதியில் இருவர் இறந்துகிடப்பதைப் பார்க்கின்றனர். ‘காடு தப்பியோடுபவன் விரும்பும் பாதையை உருவாக்கும் சுதந்திரத்தைக் கொடுப்பதில்லை,’ என்று எழுதிய அவதானிப்பு அடுத்து விலங்கைப் பற்றிச் சொல்லும்போது ‘விலங்குகள் காட்டின் பூகோள வரைபடத்தைத் தங்களுக்கு ஏற்ப மாற்றி மாற்றி அமைக்கின்றன. ஒரு தீராத விளையாட்டுப் போல அதை தங்கள் வாழ்நாள் கடன் போல செய்கின்றன’ என்கின்றவரி எங்கிருந்து வருகிறதென்றால் மனிதனால் உடனடியாக உருவாக்க முடியாத பாதையை எழுதிய இடத்தில் விலங்குகளால் உருவாக்க முடிகிறது என்ற காட்சி மறுபக்க அவதானிப்பைத் தற்செயலாக எழுத வைத்து விடுகிறது.
மனதை எழுதுவதைப் போலவே நுட்பமான தகவல்கள் கொண்ட படைப்பு வாசகனுக்கு மிக நெருக்கமான நம்பகத்தன்மையுள்ள உலகத்தின் உள்ளே அழைத்துக்கொள்கிறது. பின் அந்த உலகின் பிரமாண்டத்துள் அவனும் ஒரு மாயமாந்தன்போல கூடவே பயணித்து அதுகாட்டும் வாழ்வின் துன்பதுயரங்களை, அனுபவச்சாரங்களை, விருப்பங்களை உணர்ந்து ஒரு பேரனுபவத்தோடு வெளியேறுகிறான். அது இந்த நாவலில் கூடி வந்திருக்கிறது. பல நாவல்கள் வாசகனைத் தன்னுள் அழைத்து இணைத்துக் கொள்வதில்லை. காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட செய்திகளை வாசிப்பது போல வெளியே நிறுத்திவிடுகிறது. ஒரு படைப்பு வாசகனைத் தன்னுள் தழுவிக்கொண்டு பயணிப்பது என்பது நுண்தகவல்களின் செழுமையால்தான்.
நாயின் இயல்பை, ‘மூர்க்கமாக குரைக்கவே செய்தன. அமைதியாக இருந்தால் தன் மூக்கின் ஈரத்தை அவர் கால்விரல்களில் பதித்து அவரை ஏற்றுக் கொள்வதாக உத்தரவாதம் கொடுத்தன’, ‘என்னையப்புடி பார்ப்போம் என்று காடு தொடங்கும் எல்லைவரை சென்றுவிட்டது – கருப்பன்’ என்றும், ‘காளியாத்தாவா? அப்டினா அந்த சாமி யேந்தா உஸ்ஸு வர வைக்கல. நான் ரொம்ப அழுதேன்ல’ என்று குழந்தையின் எண்ணத்தையும் எழுதிவிட முடிகிறது.
இந்த நுண்தகவல்கள் நாவலில் பேசப்படும் மையமான பிரச்சனைகளுக்கு எந்தவிதத்திலும் மதிப்பற்று இருக்கலாம். ஆனால் வாழ்க்கையின் அசைவு என்பதே இந்த நுண்தகவல்களால்தான். வாழ்க்கையிலிருந்துதான் பிரச்சனையே தவிர பிரச்சனைக்காக வாழ்க்கை என்பது இல்லை. எனவேதான் வாழ்வின் இயக்கத்தை இயக்கும் நுட்பமான சக்தியாக இந்த நுண்தகவல்கள் இருக்கின்றன. நுண்தகவல்கள் இல்லாத நாவலை ஒரு இயக்கமற்ற கதையை, பிரச்சனையைச் சொல்லும் தொகுப்பாகக் கொள்கிறேன். நம் வாழ்வில் இயல்பாக எங்கெங்கோ புழங்கிய நுண்செயல்கள் படைப்பாளியின் மனதில் நுண் தகவல்களாக புனைவு செயல்பாட்டில் பொருத்தமான இடத்தில் பொருத்தமான தகவல்களாக படிந்து புனைவை நிஜமாக்குகின்றன.
பூனியான் கம்பம் என்ற புனைவு தோட்ட மக்களின் நம்பிக்கை சார்ந்த உலகிலிருந்து மிக வலுவாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அது பற்றிய தனித்த கதையாடலோடு, விசச்சாராயம் அருந்தி இறந்தவர்களை அதன் சக்தியோடு சம்பந்தப்படுத்திக் கொள்ளும் இடம் மிக அசலாக உருவாகியுள்ளது. அதேபோல தைப்பூச விழாவும், அதன் நம்பிக்கை மீதும், அதன் படிமம் நீங்கிய உண்மையின் மீதும் மனிதர்கள் மனம் கொள்ளும் ஈடுபாட்டை மிக சாகசமாக எழுதிக்காட்டியுள்ளார்.
ஒரு படைப்பாளி தனிப்பட்ட கொள்கையின் மீது விருப்பம் கொண்டிருக்கலாம். சில கொள்கையின் மீது கடுமையான விமர்சனம் கொண்டிருக்கலாம். மார்க்சியத்தையோ, பெரியாரியத்தையோ, பக்தி மார்க்கத்தையோ, காந்தியத்தையோ, சமூக வளர்ச்சி கருதி ஏற்றிருக்கலாம். படைப்பு என்று வரும்போது மக்கள் கூட்டத்தில் ஒருவனாக நின்று அவர்களது எண்ணங்களை, நம்பிக்கைகளை, நம்பிக்கை பொய்த்துப் போவதை, ஏமாற்றத்தை, வெற்றிகளை, விநோதத்தை எந்தப் பக்கமும் சாயாத வரலாற்றின் தடத்தை எழுதத் தெரிந்தவனாக இருக்க வேண்டும். இந்தப் பார்வை ‘பேய்ச்சி’ நாவலில் சிறப்பாகத் தொழில்பட்டிருக்கிறது. தனிப்பட்ட முறையில் நவீனுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என்று நினைக்கிறேன். படைப்பாளியாக அவர் மாந்தர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிப்பவராக மாறிவிடுகிறார்.
ஒரு படைப்பு கலைப்படைப்பாக மாறும் மாயாஜாலம் மிக முக்கியமானது. மிகப்பெரிய அளவில் வாழ்க்கையை விசாரணைக்கு உட்படுத்துவதால் மட்டும் படைப்பு முக்கியத்துவம் பெறுவதில்லை. படைப்பில் கூடிவந்த அவதானிப்பு, நுண்தகவல்கள், மனோலயம், கற்பனை, பார்வை, கவித்துவம், இன்னபிற அம்சங்கள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று கலந்துதான் கலைப்படைப்பாகிறது. படைப்பாளிக்குக் கைவரப்பெற்ற அழகான நடைக்கும் இதில் பங்குண்டு. இந்த வகையில் ‘பேய்ச்சி’ மலேசிய நாவல் வரலாற்றில் ஒரு கலைப்படைப்பாக நமக்குக் கிடைத்திருக்கிறது.
