
மஞ்சள் நீர்
ராமுவும் அவர் மனைவி ராணியும் காட்டை ஒட்டிய ஊரில் வசித்து வந்தனர். எழை குடும்பம். காட்டுக் கோழி, முயல்கள், காட்டுப் பன்றிகள் போன்றவையே அவர்களின் அன்றாட உணவு வகைகள். அதற்காக ராமு காலையிலேயே காட்டுக்குள் கத்தி, கோடரியோடு சேர்த்து குடிக்க தண்ணீரும் கொண்டு செல்வார். வீடு வர எவ்வளவு நேரமாகும் என அவருக்கே தெரியாது. சில நேரம் காட்டுக்குள் வழித் தெரியாமல் சிக்கிக் கொண்டுள்ளார். மறுநாள் வீடு திரும்பும் ராமுவைப் பார்த்ததுமே ஓடிச்சென்று கட்டியனைத்து கொள்வாள் அவர் மனைவி ராணி.
ஐந்து குடிசை வீடுகள் மட்டும் அந்தக் காட்டையொட்டிய பகுதியில் இருந்தன. அரை கிலோமீட்டர் இடைவெளியில் வாழ்ந்த அந்தக் குடிசைவாசிகள் ஒவ்வொருவருக்கும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் முகம் கூட நினைவிருக்காது. அந்த அளவிலே அவர்கள் ஒருவரையொருவர் அறிந்திருப்பது குறைவு.
ராமு வழக்கம் போல அன்றும் வேட்டைக்குக் கிளம்பினார். காடுமேடுகளில் மதியம் வரை அலைந்து திரிந்தவருக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. மாலை நெருங்கும் வேலையில் மரத்தடியில் களைத்து விட்டு அமர்ந்திருந்தவரின் கண்களில் காட்டுச் சேவல் ஒன்று பட்டது. கோடாலியை அதன் கால்களை நோக்கி வீசினார். காலுடைந்த சேவல் கீழே தரையில் துடிதுடித்தது. அதனைப் பிடித்து மகிழ்ச்சியோடு வீடு திரும்பினார். ராமுவின் கைகளில் சேவலையும் பார்த்த மனைவி ராணிக்கு இரட்டை மகிழ்ச்சி.
என்றுமில்லாமல் அன்று சமைக்கும் போது ராணி இனம் புரியாத மகிழ்ச்சியில் இருந்தாள். எனவே அவளின் கமகமக்கும் சமயலின் மணம் காடு முழுவதுமாகப் பரவியது. அடுப்பங்கரையிலேயே மணக்கும் சேவல் கறியை மூடி வைத்து விட்டு ராணி குளிக்கச் சென்றாள். அவளைத் தொடர்ந்து ராமுவும் குளித்து விட்டு உணவைச் சுவைக்க தரையில் அமர்ந்தார். ராணி சேவல் கறியை எடுக்க அடுப்பங்கரைக்குச் சென்றாள்.
குரங்குக் கைகள் போன்ற ரோமங்களுடன் நடு நடுவே இரத்தம் பிசுபிசுக்கும் தோல்களும் கொண்டிருந்த அருவருப்பான கைகள் இரண்டு, அடுப்பங்கரையின் ஜன்னல் கம்பிகளின் இடையே சேவல் கறிப் பானையை நோக்கி நீள்வதைப் பார்த்து அதிர்ந்தாள். அந்த அகோரமான கைகளைப் பார்த்த ராணி அடுப்பங்கரையிலிருந்து அலறியடித்து கொண்டு ராமுவை நோக்கி ஓடினாள். ராமுவும் அடுபங்கரையில் மனைவி அலறியதைக் கேட்டதும் ஓடிச் சென்றார். அவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அருகிலிருந்த வெட்டுக் கத்தியை எடுத்தார். நீண்ட கைகளில் ஒன்றைப் பிடித்து இழுத்து வெட்டுக் கத்தியால் ஓங்கி வெட்டினார். வெட்டிய கையை மஞ்சள் நிற துணி ஒன்றில் சுருட்டி வைத்தார். ஒரு கை துண்டிக்கப்பட்டதும் இன்னொரு கையை அந்த உருவம் மீட்டுக் கொண்டு ஓடிவிட்டது.
கமகமக்கும் சேவல் கறியை ருசிப் பார்க்க ராமுவுக்கு மனம் வரவில்லை. கொஞ்சம் நேரம் கழித்து உண்பதாக சொல்லிவிட்டு வீட்டுக்கு வெளியேயுள்ள திண்ணையில் போய் அமர்ந்து காட்டை நோக்கிப் பார்த்தார். ‘மனிதன், மிருகம், போன்று அதுவும் ஒர் உயிரினம் தானே? எதற்கு அதன் கையை வெட்டினேன்…?’ ராமுவின் மனதில் குற்றவுணர்வே மிஞ்சியது. ராணியும் வெளியே வந்து அவர் பக்கத்தில் அமர்ந்தாள். தன்னால் ராணியும் உண்ணாமல் இருக்கிறாள் என்பதால், “சரி இலையைப் போடு. நான் கைகால் கழுவி விட்டு வருகிறேன்” என்றார். ராணி மகிழ்ச்சியோடு உள்ளே ஓடிச் சென்றாள். ஆசையோடு சேவல் கறியைப் பரிமாற தரையில் வாழை இலையை விரித்து வைத்தாள்.
ராமுவும் வந்து அமர்ந்தார். ஒரு வாய் சோற்றை வாயருகே கொண்டு சென்ற போது அலறல் சத்தம் ஒன்று வீட்டையே அதிரச் செய்தது. ராணி பயத்தில் நடுங்கினாள். ராமு தன் பயத்தைக் காட்டிக் கொள்ளாமல் எழுந்துச் சென்று வாசல் கதவையும், ஜன்னல் கதவையும் அடைத்தார். கதவருகே இருந்து சத்தம் வருவதைக் கண்டு கொண்டார். அருகே சென்று உள்ளிருந்தே “உனக்கு என்ன வேண்டும். என்னதான் பிரச்சனை? ஏன் எங்களை இவ்வாறு தொந்தரவு செய்கிறாய்…” என்று கடும் சினத்துடன் கேட்டார்.

“தயவு செய்து என் கையைக் கொடுத்து விடு. இனி உன் வீட்டுப் பக்கமே நான் வர மாட்டேன்,” என அந்த அகோர உருவம் கெஞ்சியது.
“இனி என் வீட்டுப் பக்கமே வரமாட்டேன் என்று உன் அம்மா மேல் சத்தியம் செய்…” ராமு கறாராகச் சொன்னார்.
“என் அம்மா மேல் சத்தியமாக நான் இனி உன்னை எந்தத் தொந்தரவும் செய்ய மாட்டேன்…” என்று பயந்தக் குரலில் அந்த உருவம் சொன்னது.
மனமிறங்கிய ராமு, அந்த உருவத்தின் கையைச் சுருட்டி வைத்திருந்த மஞ்சள் துணியை எடுத்து வந்தார். அவர் வாசல் கதவைத் திறப்பதில் ராணிக்கு உடன்பாடில்லாமல் தடுத்தாள். அவளைத் தள்ளி விட்டு வாசல் கதவை ராமு வேகமாகத் திறந்தார். வெளியே யாருமில்லை. “இந்தா உன் கை. எடுத்து கொண்டு ஓடி விடு…” என்று கத்தியப்படி வான் நோக்கி வீசி எறிந்தார். அலறல் சத்தம் நின்றது. மஞ்சள் நிறத் துணி ஒன்று காற்றில் மேலிருந்து பறந்து வந்து அவர் பாதத்தில் விழுந்தது. ராமு அதை எடுத்து பார்த்தார். ரத்தத்தில் நன்றி என்று எழுதப்பட்டிருந்தது. அதை எடுத்து கொண்டு உள்ளே வந்தவர் ராணியிடம் காட்டினார். அலறல் சத்தம் நின்றதில் ராணி மகிழ்ந்தாள். அந்த மஞ்சள் நிற துணியைப் பத்திரப்படுத்தி வைக்க சொல்லி விட்டு, உணவையும் பரிமாறச் சொன்னார்.
அன்றிலிருந்து ராமு வேட்டைக்குச் சென்று திரும்பும் போதெல்லாம் ராணி தயார் செய்திருக்கும் மஞ்சள் நீரில் கைகால்களையும், முகத்தையும் கழுவி விட்டுதான் வீட்டினுள்ளே நுழைவார்.
சுடலைமாடன் புத்தனாகியக் கதை
சுடலைமாடன் சிலை ஒன்றை வாங்கி வந்த ஊர் தலைவர் நடு காட்டில் நிறுத்தி வைத்தார். அவரைத் தொடர்ந்து பக்தியோடு அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் கூரை அமைத்தார்கள். பெரிய வாழையிலையில் படையல் வைத்தார்கள். ஊரை விட்டு வந்த எங்களுக்கு ஒரே நம்பிக்கை நீங்கள் தான் என அனைவரும் வழிப்படத் தொடங்கிவிட்டார்கள்.
அந்தக் காலகட்டத்தில் ஊரில் பல பெண்களுக்குப் பேய் பிடித்து ஆட்டியது. எல்லோரும் சுடலைமாடனிடம் வந்து விபூதி பூசிக்கொண்டு போனதும் குணமாகிவிடுவார்கள். ஆனாலும் இந்தப் பேய்களின் ஆட்டத்தினால் பலர் தங்கள் வேலை பாதிப்பதாகவே கருதி, ஒரு நிரந்தர தீர்வைத் தேடினர். அழைத்தே கேட்டு விடுவோம். மக்கள் கூடி, ஒருவரின் மேல் சுடலைமாடனை இறக்கி குறி கேட்க தயாராகினர். சுடலைமாடன் கோபக்காரன். அந்தக் கோபம் தான் நம் ஊர் பெண்களின் காவலுக்குத் தேவை. யாரை முன் நிறுத்தி சுடலைமாடனை இறக்கினார்களோ, அவர் மேல் சுடலைச் சாமி இறங்கவில்லை. உருமி, உடுக்கையை எவ்வளவு வேகமாக இசைத்தும் சுடலை இறங்க இல்லை. அசந்து போயிருந்தவர்கள் உருமியின் அழுத்தத்தை மெது மெதுவாக குறைத்தனர்.
மக்களோடு மக்களாக நின்றிருந்த இராமசாமி மேல் சுடலை வந்து இறங்கினார். அவர் போட்ட சத்தத்தில் காடு அதிர்ந்தது. அனைவரும் கைக்கூப்பி வணங்கினர். ‘எங்களை நீதான் அய்யா காப்பாத்தனும்’ எனக் கெஞ்சினார்கள். இறங்கியவுடனே “எங்கடா என் அரிவாள்…” எனக் கேட்டார். பெரிய வெட்டுக் கத்தியை இருவர் கொண்டுவந்து நின்றார்கள். சுடலைச் சாமி அதன் மேல் ஏறி நின்றார். “என்னை நம்பி வந்தவங்களை நான் கைவிட மாட்டேன். நான் வாக்கு கொடுக்கிறேன். இந்த ஊரையும் மக்களையும் காப்பது என்னோட கடமை. ஆனா நீங்களும் எனக்கு ஒரு வாக்கு கொடுக்கனும்…” என்றார் காட்டமாக.
பூசாரி “நாங்க வாக்கு கொடுக்கிறோம் சாமி…” என்றார். “நாளையிருந்து ஊர் காவலுக்கு நான் போவேன். ராத்திரி ஒன்பது மணிக்கு எல்லோரும் வீட்டுக்குள்ள போயிடனும். யாரும் வெளியே வரக்கூடாது. என் சலங்கைசத்தம் கேட்டவுடனேயே எல்லோரும் வீட்டுக்குள்ள போயிடனும்…” என்றார். எல்லோரும் கைக்கூப்பி வணங்கி வாக்கு கொடுத்தார்கள். சற்றுத் தொலைவில் நின்றிருந்த நாகம்மாளின் காதில், “நல்லா வேண்டிக்கடி. சக்தியுள்ள சாமியாம். புள்ள வரம் கூட கொடுக்குமாம்…” என்றாள். நாகம்மாளும் கண்களை மூடி நன்றாக வேண்டிக் கொண்டாள். ஊர் மக்கள் கலைந்து சென்றனர்.
முதல் நாள் இரவு சலங்கை சத்தம் கேட்டதும் எல்லோரும் வீட்டுக்குள் ஓடி கதவைச் சாத்தினர். சலங்கை சத்தம் ஒவ்வொரு வீட்டின் முன்பு கேட்கும் போது கை எடுத்து உள்ளிருந்தே குடும்பத்தோடு வணங்கி நிற்பார்கள். ஒவ்வொரு வீட்டின் முன்பும் சலங்கை ஒலி வேகமாக கேட்கும் போது கைகளை மேலே உயர்த்தி கும்பிட்டு வணங்குவர். சுடலைமாடன் ஊர் காவலுக்குச் சென்ற நாளிலிருந்து யாருக்கும் பேய் பிடித்தாட்டுவதில்லை. அனைவரின் பக்தியும் கூடியது. ஆனாலும், சுடலைமாடன் காவலுக்குச் செல்லும் போது யாரும் வெளியாவதற்குப் பயந்து வீட்டிலே இருந்தப் படியாக வணங்கி வந்தனர்.
ஐந்தாண்டுகள் திருமணமாகியும் குழந்தைப்பேறு இல்லாமல் தவித்தவள் நாகம்மாள். ஊர் மக்களின் பேச்சுகளையே தாங்காதவள், மாமியாரின் இழிச் சொல் அதிமாகவே தாக்கியது. கணவனுக்கு வேறொரு பெண்ணைக் கட்டி வைப்பதாக பேச்சு அடிப்பட்டது. அவளின் காதுக்கும் எட்டியது. மன வேதனையில் தற்கொலைக்குத் தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாக தயார் படுத்தினாள்.
ஆங்காரமாக சுடலைமாடன் ஊர் காவலுக்குப் புறப்பட்டார். சலங்கை சத்தம் கேட்டது; அனைவரும் வீட்டினுள் சென்று கதவைச் சாத்தினர். நாகம்மாளின் வீட்டில் யாருமில்லை. கணவனும் மாமியாரும் பக்கத்து ஊருக்குச் சென்றிருக்கிறார்கள். அவளின் கணவனுக்கு மறுமணம் செய்ய பெண் பார்க்க சென்றிருப்பதாக இவளின் தோழிகள் சொன்னார்கள். இந்த இரவோடு தன் வாழ்க்கையை முடித்துகொள்ள திட்டம் போட்டாள் நாகம்மாள். பயந்த சுபாவம் கொண்ட நாகம்மாளுக்குத் தற்கொலைச் செய்வதும் பயமாகவே இருந்தது.
சலங்கை சத்தத்தை வைத்து சுடலைமாடன் தன் வீட்டை நெருங்கி விட்டார் என்பதைக் கணித்தாள். வீட்டின் கதவைத் திறந்தாள். தலைப்பாகைக் கட்டி, பெரிய அரிவாள் கத்தியைத் தோளில் சாய்த்து ஆங்காரமாக இருந்த உருவத்தைப் பார்த்தாள். அருகில் சென்று காலில் விழுந்தாள். “நீயே என்னையே வெட்டி கொன்னுடு. என்னால தாங்க முடியல அய்யா. மாமியாரும் புருஷனும் மாத்தி மாத்தி போட்டு அடிக்கிறாங்க. மிதிக்கிறாங்க. எனக்கு வாழவே பிடிக்கல…” சுடலைமாடன் நாகம்மாளைத் தூக்கினார். நெற்றியில் விபூதி பூசினார்.

“உனக்குக் குழந்தை உண்டாகும் பாலகி. வீட்டுக்குள் போ…” என்று சாந்தமான குரலில் சொன்னார். ஆங்காரமான சாமியின் முகம் சாந்தமாக தன்னிடம் மாறிப்போய் பேசிய ஆச்சரியத்தில் நாகம்மாள் வணங்கி விட்டு வீட்டுக்குள் சென்றாள்.
மறுநாள் காலையிலிருந்து சாந்தமான நாகம்மாள் ஆங்காரமாக மாறிவிட்டிருந்தாள். மாமியாரின் வாயை ஒரே பார்வையில் அடக்கினாள். கணவனும் அவளைப் பார்த்து பயம் கொள்ள தொடங்கினான். அவனின் மறுமணம் நின்றுப் போனது. நாகம்மாளே தடுத்து நிறுத்தினாள். இரண்டு மாதம் கழித்து அவள் கர்ப்பமானாள். கணவனும் மாமியாரும் அவளைத் தலைமேல் வைத்து தாங்கத் தொடங்கினார்கள். அதெல்லாம் நாகம்மாளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. சுடலைமாடன் தன் ஆங்காரத்தை அவளிடம் கொடுத்து விட்டு, தன் சாந்தக் குணத்தை எடுத்து சென்று விட்டார். வரும் போது தோளில் கம்பீரமாக அரிவாளைச் சாய்த்து கொண்டு வந்தவர். அவளிடம் வாக்கு கொடுத்து சென்ற போது அரிவாளைக் கீழ் நோக்கியப் படியே பிடித்திருந்தார்.
அது எவ்வாறு சாத்தியம் என்று நினைக்கும் போது சுடலைமாடனின் மீது பக்தி கூடித் தன்னை அறியாமல் நின்ற இடத்திலேயே கண்களை மூடி கை எடுத்து வணங்கினாள். மனத்தில் புத்தனைப் போன்று சாந்தமான சுடலைமாடன் தெரிந்தார். இந்தச் சாந்தக் குணம் தன்னுடையது. சாமிக்கூட ஒன்றைக் கொடுத்து ஒன்றைப் பெற்று விட்டு தான் செல்லுமோ என்பதை நினைப்பதில் அவள் அடையும் மகிழ்ச்சி அவள் கர்ப்பமான மகிழ்ச்சியை மிஞ்சி விட்டது.
தேவ கன்னி
மலைப் பகுதியையொட்டிய கிராமத்தில் வாழ்ந்து வந்த பாட்டியொருத்தி, தாய் தந்தையைப் சிறுவயதிலேயே பறிகொடுத்திருந்த பேரனைத் தன் பொறுப்பில் பார்த்து கொண்டிருந்தாள். தாய் தந்தையில்லாதக் குறையை அவள் பேரன் மறக்க வேண்டும் என்பதற்காகவே தினமும் இரவில் அவனுக்கு கதைச் சொல்லத் தொடங்கினாள். அப்படியொரு இரவு, உண்மைக் கதை என்று கதையொன்றைச் சொல்லத் தொடங்கினாள்.
‘வழக்கமாக பாட்டி கதைகளின் உண்மைத் தன்மைக் குறித்து எதுவுமே சொல்ல மாட்டாளே. இன்று என்ன புதுசாக உண்மைக் கதை என்றெல்லாம் இழுக்கிறாளே பாட்டி….’ மனதிற்குள் சொல்லி கொண்டவனுக்கு என்றைக்கும் இல்லாத ஆர்வம்.
வீட்டின் முன்பே அமைந்திருக்கும் இந்த மலையில் ஏறி இறங்கினால், பெரிய மரமொன்று தென்படும். அதன் அருகே சென்று பார்த்தால் அழகான ஆறு ஒன்று ஓடும். அந்த ஆற்றில் தேவலோக கன்னிகள் வந்து குளித்து விட்டு செல்வார்கள். இந்தக் கதையைக் கேட்டவுடன் பேரனுக்கு அங்குச் செல்ல ஆர்வம் அவனோடு சேர்ந்தே வளர்ந்தது. ஆனாலும் பாட்டி அவ்வப்போது அங்குச் செல்வதைத் தடுக்க பல கதைளும் கட்டுவார். உன்னைத் தேவதைகள் பார்த்து விட்டால், கல்லாகி போய் விடுவாய். இந்தப் பாட்டியையும் விட்டு போய் விடுவாய் என்பாள்.
பேரன் விடலைப் பருவத்தை அடைந்தான். அவனோடு தேவதைகள் குளிப்பதைப் பார்க்கும் ஆசையும் வளர்ந்து கொண்டே வந்தது. ஆனாலும் அந்த ஆசை அவனில் எங்கோ ஒரு மூலையில் தூங்கிக் கொண்டிருந்தது. அவனும் தினமும் காட்டுக்குள் போனான். விறகு வெட்டி வந்து எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்தான். வீட்டைச் சுற்றிலும் காய்கறி வகைகளைப் பயிர் செய்து எல்லோருக்கும் இலவசமாகக் கொடுத்தான். அவனுள்ளே கர்வம் ஒன்று பிறந்து விட்டது. அவன் பாட்டியிடம் அனுமதி கேட்ட காலம் மாறி, பாட்டி அவனின் பேச்சைக் கேட்கும் காலம் வந்து விட்டது. அந்தக் காலகட்டத்தில் பாட்டியும் இறந்து விட்டாள்.
அருகிலுள்ளப் காட்டு பகுதிகளில் விறகுகள் தீர்ந்து போய் விட்டதால், விறகு வெட்ட காட்டுக்குள்ளே போனவன் மலையில் ஏறினான். மலைக்குப் பின்னால் தோன்றும் உலகமும் பாட்டி சொன்ன பெரிய மரமும் அதனருகே ஓடும் ஆறும், அதில் குளிக்கும் தேவக் கன்னிகளும் நினைவுகளில் தோன்றின. சிறு வயதிலேயே, அந்த ஆற்றில் குளிக்கும் தேவ கன்னிகளை மனத் திரையில் பலமுறை கண்டிருக்கிறான். வெகு தூரம் சென்றும் பாட்டி கதையில் குறிப்பிட்ட ஆறும், அதில் குளிக்க வரும் தேவ கன்னிகளும் அவன் கண்ணில் படவில்லை. ஏமாற்றத்தோடு அன்று வெட்டி சேகரித்த விறகுகளைத் தோளில் சுமந்துக் கொண்டு புறப்பட்டான்.
மறுநாள் விறகு வெட்ட காலையிலேயே கிளம்பினான். காட்டில் வெகு தூரம் சென்று விட்டிருந்தான். இதுவரை கடக்காத எல்லையை அவனே அறியாமல் மனம் போனப் போக்கில் நடந்து கடந்தான். வெகு நேரம் நடந்திருந்தவன் பெரிய மரத்தடியில் அமர்ந்து இளைப்பாறினான். மனம் போன போக்கினால் மலையைக் கடந்து விட்ட பிரக்ஞையேயின்றி அமர்ந்திருந்தவனுக்குத் தாகம் எடுத்தது. தாகம் எடுத்தவனின் காதில் நீரோடும் ஒலி கேட்டது. எழுந்து அந்த நீரொலியை நோக்கி நடந்தான். நீரொலியோடு பெண்களின் சிரிப்பொலிகளும் கேட்டதால் சற்றே பின் வாங்கினான். மெது மெதுவாக மரத்திலிருந்து இன்னொரு மரத்துக்குத் தரையிலேலே தாவியது போல கடந்தான். மரத்திலிருந்து ஒளிந்து கொண்டு எட்டிப் பார்த்தான்.
இதுவரை அவன் பார்த்திராத அழகான ஆறு. அழகான சித்திர வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட பெண் உருவச்சிலை ஒன்று கூடாரம் எதுவுமின்றி திறந்த வெளியில் நின்றிருந்தது. ஏழு கன்னிகள் பிறந்த மேனியுடன் அந்த ஆற்றில் குளித்து கொண்டிருந்தனர். அருகேயுள்ள பாறையில் அவர்களின் உடைகள் குவியலாகக் கிடந்தன. பாட்டிச் சொன்ன கன்னிக் கதை உண்மைதான் என்பதை உணர்ந்தவன், சோதித்துப் பார்த்து விட துணிந்தான். பாறையில் குவியலாக கிடந்த உடைகளில் ஒன்றை எடுத்து கொண்டான். தன் சட்டைக்குள் மறைத்து வைத்து, அவ்விடத்தை விட்டு மெது மெதுவாக நடந்தான். தேவ கன்னிகளின் சிரிப்பொலிகள் அவன் காதுகளில் இசைத்தது குறைந்து கொண்டே போனது. அன்று அவன் நள்ளிரவிலேயே வீடு வந்து சேர்ந்தான். ஒரு பெட்டிக்குள் தேவ கன்னியின் மினுக்கும் உடையை மறைத்து வைத்தான். தேவ கன்னி தேடி வருமா என்ற கேள்வியோடு தூங்கி விட்டான்.

காலையில் தாமதமாக எழுந்தவன் விறகு வெட்ட விரைவாக கிளம்பினான். வீட்டின் கதவைத் திறந்தவுடன் தேவ கன்னி ஒன்று நிர்வாணமாக நின்றிருந்தது. அதன் கையைப் பிடித்து வீட்டினுள் இழுத்தான். அவன் இழுப்புக்குத் தேவ கன்னி ஒத்திசைந்தது. அவனின் ஆடையை அவளுக்கு அணிய கொடுத்தான். அவனே தேவ கன்னியைத் திருமணமும் செய்து குடும்பம் நடத்தவும் தொடங்கிவிட்டான்.
தேவ கன்னிக்கும் அவனைப் பிடித்து போய் அவனோடு அன்புடன் வாழ்ந்தாள். அவனுக்கு விதவிதமாக சமைத்து கொடுத்தாள். வீட்டு வேலைகளைச் செய்தாள். காலையில் அவனை வழி அனுப்பி வைத்தாள். மாலையிலேயே அவன் வருகைக்காக வாசலிலே காத்து கிடந்தாள். தேவ லோகத்தையும், அவள் தோழிகளையும் மறந்தே போயிருந்தாள்.
வழக்கமாக விறகு வெட்ட சென்றவன் தேவ கன்னியின் ஆடையை மறைத்து வைத்திருந்த பெட்டியை மூடாமல் சென்று விட்டான். தேவ கன்னி வீட்டைச் சுத்தம் செய்யும் போது திறந்து கிடக்கும் அந்தப் பெட்டியை மூடி வைக்க அருகே வந்தாள். அவளின் உடை மேலேயே மினுக்கிக் கொண்டிருந்தது. மகிழ்ச்சியுடன் எடுத்து கொண்டு அணிந்து கொள்கிறாள். வாசல் நோக்கி சென்றாள்.
விறகைச் சுமந்து கொண்டு ஆசையோடு தேவ கன்னியை அணைக்க வந்தான் இளைஞன். தேவ கன்னியை வீடு முழுக்க தேடினான். கத்திக் கதறினான். மூடியிருக்கும் இரும்பு பெட்டியைத் திறந்து பார்த்தவன் தேவ கன்னியின் ஆடை இல்லாததை அறிந்தான். பாட்டி சொன்னது நினைவுக்கு வந்தது. ஏமாற்றத்தோடு வீட்டு வாசலில் சென்று அமர்ந்து அழுதான்.
தாத்தா சுட்ட அப்பம்
அந்தக் காலத்தில் மரத்தடியில் அதிகாலையில் சுடச் சுட அப்பக் கடை ஒன்றை மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் நடத்தி வந்தார் தாத்தா தாண்டவராயன். உதவியாக பாட்டி துணையிருப்பார். தாத்தாவின் கைப்பக்குவத்தில் சுடச் சுடச் அப்பம், இட்லி எல்லாம் தயாராகும் முன்பே வேலைக்குச் செல்லும் கூட்டம் தள்ளிக் கொண்டு நிற்கும். அன்று அதிகமான கூட்டம் காரணமாக தாத்தா பரபரப்பாக இருந்தார். கூட்டம் குறைந்தும் தாத்தாவின் பரபரப்பும் குறையும். அன்று பரபரப்பு குறைந்த பின்னர் ‘இதோடு போதும்’ என்று தாத்தா பாட்டியைக் கிளம்ப சொல்ல வாயெடுத்தார்.
இன்னும் விடியாத அந்தக் காலைப்பொழுதில் உடல் முழுவதுமாக போர்வையைப் போர்த்தியிருந்த ஒர் ஆள் கடை முன் வந்து நின்றான். “தாண்டவராயா, எனக்கு ரெண்டு அப்பம் சுட்டு தா…” என்றான். தாத்தாவைப் பெயர் சொல்லி அழைத்ததால், தன் அப்பாவுக்குத் தெரிந்த ஆளாக இருக்கும். சரி என்று அப்பக்கல்லைச் சூடு காட்டினார். விசாரிக்கும் தொனியில் தலையை உயர்த்தி மெழுகுவர்த்தியை உயர்த்தினார். எரிந்து போயிருந்த முகம். இரத்த ஈரம் கூட காயாமல் இருந்தது. தாத்தா “அப்பக் கல் சூடாக கொஞ்சம் நேரமாகும்… பொறுங்கள்” என்று அப்பக்கல்லை நோக்கினார். கையிலிருந்த கரண்டியை அப்பக்கல் கீழுள்ள விறகு அடுப்பில் செறுகினார். சூடான கரண்டியின் அப்பத்தை எடுத்து வந்து வாழையிலையில் போட்டார். அப்பக் கரண்டியால் அருகிலிருந்த உருவத்தின் கையில் கோடு போட்ட மாதிரி வேகமாக இழுத்தார். அலறிக்கொண்டு ஓடினான் அந்த எரிந்த முகமுடையவன். “இது எவனோட ஆவின்னு தெரியலயே….” என்று மனதில் முனுமுனுத்துக் கொண்டார்.
ஒரு வாரம் சென்ற பிறகு, “தாண்டவராயா, பசிக்குது. ஒரு அப்பம் குடு. நான் போயிடறேன்.” எனும் குரல் கேட்டது. அதே உருவம். தாத்தா சுதாகரித்து கொண்டார். நீட்டிய கையில் தாத்தா போட்ட கோடு ரத்தம் காயாமல் இருந்தது. முகமூடி கொள்ளையர்களை மிரட்ட தாத்தா வெட்டு கத்தி ஒன்றை மேஜைக்கு கீழ் மறைத்து வைத்திருந்தார். அந்த வெட்டுக் கத்தியைக் கையில் எடுத்தார். இந்த முறை அந்த உருவத்தின் முழங்கையை வெட்டினார். அருகிலுள்ள சாக்கு பையில் அந்தக் கையைப் போட்டு இறுக்கிக் கட்டினார். “என் கையைக் கொடுத்துடு… என் கையைக் கொடுத்துடு…” எனக் கத்திக்கொண்டே அந்த உருவம் மரத்தின் மேல் ஏறிக்கொண்டது.

தாத்தாவின் காதில் கல்லடி வாங்கிய நாய் கத்தும் குரலின் தொனியில் அந்த உருவத்தின் அழுகைக் குரல் மட்டும் கேட்டுக் கொண்டே இருந்தது. “கொடுக்க முடியாது போடா. பொறம்போக்கு…” தாத்தா கறாராக சொல்லிவிட்டார். பின்னர் அப்பக் கல், கறிப்பானையை எல்லாம் மூட்டையில் கட்டிக் கொண்டு வீட்டுக்குக் கிளம்பிவிட்டார்.
வீட்டினுள் நுழைந்தார். பாட்டி தூங்கிக் கொண்டிருந்தார். உடல் நலம் சரியில்லாததால் இப்போதெல்லாம் பாட்டி அப்பம் சுட துணைக்கு வருவதில்லை. “என் கையைக் கொடுத்திடு… என் கையைக் கொடுத்திடு…” தாத்தா குரல் வந்த திசையை நோக்கினார். வீட்டைச் சுற்றி நடந்தப்படி, அந்த உருவம் கையைக் கேட்டது. தாத்தா, “சரி உன் கையை நான் கொடுக்கிறேன். ஆனா, நீ எனக்கு ஒண்ணு பண்ணனும். என் பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்லை. அதனால நீ என் வீட்டு வேலைக்காரனா இருக்கனும்…” அந்த உருவமும் ‘சரி’ என்று ஒத்துக் கொண்டது.
வீட்டைக் கூட்டிப் பெறுக்கியது. வாசலில் மாட்டுச் சாணத்தைத் தெளித்து, அதன் மேல் அழகான கோலம் போட்டது. துணிகளைச் சுத்தமாக துவைத்து பிழிந்து காயப்போட்டது. பாட்டிக்குப் பேண் பார்த்தது. தாண்டவராயன் தாத்தாவுக்குக் கால் கைப் பிடித்து விட்டது. தாத்தாவும் இலவசமாக கிடைத்த வேலைக்காரனை நினைத்து மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் ஒவ்வொரு நாளும் தன் கையை அந்த உருவம் கேட்கும். இன்று இரவு நீ வேலையை முடித்ததும் தருகிறேன் என்பார் தாத்தா. ஒவ்வொரு நாளும் ஒரே பதிலைத் தாத்தா சொல்லி அந்த உருவத்தைத் தக்கவைப்பார். மனமிறங்கி அதன் ஒரு கையைக் கொடுக்கும் பரிவு எண்ணம் தாத்தாவுக்கு வரும்போதெல்லாம், ‘கைக் கிடைத்ததும் அது ஓடி விடுமே! வீட்டு வேலையை யார் செய்வார்கள்,’ என்ற சுயநல எண்ணம் குறுக்கிட்டு தாத்தாவின் மனதை மாற்றிவிடும்.
சொந்த ஊர் திருவிழாவில் கலந்து கொள்ள தாத்தா தாண்டவராயன் கிளம்பினார். இந்த முறை பாட்டி உடல் நலக்குறைவால் திருவிழாவுக்குப் போகவில்லை. வீட்டை விட்டு கிளம்பும் முன், தாத்தா அந்தக் கையை மட்டும் அதனிடம் கொடுத்து விட்டாதே என்று கறாராக சொல்லி விட்டார். ஆனாலும் தாத்தாவுக்குப் பாட்டியின் இரக்கக் குணத்தில் நம்பிக்கை இல்லை. “நீ கையைக் கொடுத்தால். அது என்னைக் கொன்று விடும்” எனப் பொய் ஒன்றைச் சொல்லி பாட்டியிடம் பயம் காட்டி விட்டுச் சென்றார்.
வீட்டு வேலையை விரைவாக தன் ஒரு கையைக் கொண்டே முடித்து விட்ட அந்த உருவம் பாட்டிக்குப் பேண் பார்க்க அமர்ந்தது. பாட்டியிடம் கொஞ்சம் கொஞ்சமாக பேச்சு கொடுத்தது. தன் கையைக் கொடுத்து விடும் படி கெஞ்சத் தொடங்கியது. “நான் அப்பம் மட்டும் தானே கேட்டேன். உன் வீட்டுக்காரர்தான் என் கையில் சூடு வைத்தார். மீண்டும் வந்தபோது என் கையை வெட்டி விட்டார். தயவுசெய்து என் கையைக் கொடுத்து விடுங்கள்.”
பாட்டியும் மனமிறங்கினார். அலமாரியைத் திறந்து சிவப்பு நிற துணியால் சுற்றியிருந்த அதன் கையை வெளியே எடுத்தார். மகிழ்ச்சியுடன் அந்த உருவம் பெற்றுக் கொண்டது. பாட்டியின் காலில் விழுந்து வணங்கியது. வருகிறேன் என்று ஒரே ஓட்டத்தில் மறைந்து விட்டது. தாத்தா வந்து கேட்டால் என்ன பதில் சொல்வதென்று பாட்டி பொய் காரணம் ஒன்றைத் தயாரித்து வைத்தாள்.
தாத்தாவின் அப்பக் கடையின் மரத்தின் பின்னால் அந்த உருவம் ஒளிந்து கொண்டது. ‘நான் அப்பம் தானே கேட்டேன். அவன் எதற்கு என் கையில் சூடு போட்டான். என் கையை வெட்டி ஒளித்து வைத்தான்’ என நினைத்து நினைத்து அந்த உருவம் வெறியை ஏற்றிக்கொண்டது. இரவு கடைசிப் பேருந்து வந்து நின்றது. தாத்தா இறங்கி வந்தார். அவரைப் பின் தொடர்ந்த அந்த உருவம், பேருந்தின் அருகில் தாத்தாவைத் தள்ளி விட்டது. தாத்தா அந்தப் பேருந்தின் சக்கரத்தில் சுற்றி நசுங்கி பரிதாபமாக இறந்துப் போனார். அதைச் ரசித்து பார்த்த அந்த உருவம் சிரித்துக் கொண்டே இருட்டில் சென்று மறைந்தது.
முனியம்மா பாட்டியும் பசியோடு யாராவது கை நீட்டினால், அது மனிதனோ, மிருகமோ, பேயோ கொடுக்க முடியாவிட்டாலும் பாதகமில்லை. அவர்களை எந்தக் காரணத்திற்காகவும் வேதனைப் படுத்தாமல் வாழ்ந்தாள். பசியோடு கையேந்தியவனின் பாவம் பொல்லாதது என மற்றவர்களுக்கும் சொல்லி வந்தாள்.
குத்துக் கட்டை
கூலிமையொட்டியுள்ள ஒரு தோட்டத்தில் ராஜாராம் எனும் இளைஞன் வசித்து வந்தான். தினமும் அவர் மிதிவண்டியிலேயே வேலைக்குச் சென்று வருவான். இரவில் வேலை முடிந்துதான் வீடு திரும்புவார். இரவானாலும் கையோடு மறுநாள் சமையலுக்கான மளிகைப் பொருட்களை வாங்கிக் கொண்டுதான் வீடு வந்து சேர்வார். மீன் கறி சாப்பிடும் ஆசை வரும் சமயங்களில் சமையலுக்கான மீன்களையும் வாங்கி வருவார். மிதிவண்டியில் பின் பகுதியில் அமைந்திருக்கும் இரும்பு கம்பிகளின் மேல் பிளாஸ்டிக் பெட்டி ஒன்றைக் கட்டிக் கொண்டு அதனுள்ளே பைகளில் கட்டப்பட்ட மீன்களை வைத்திருப்பார்.
மீன்கள் வாங்கிக் கொண்டு வரும் சமயங்களில், குத்துக் கட்டைகளைக் கடக்கும் சாலை வழியில் மட்டும் தன் மிதிவண்டியை யாரோ பிடித்து இழுப்பது போல உணர்வார். அதிக பலத்தைக் கால்களில் கூட்டி, மூச்சு வாங்க மிதிப்பார். வியர்வைத் துளிகள் முகத்தைக் கழுவி விட்டிருக்கும். மீன் கறியின் மேலுள்ள ஆசையில் வீடு வந்தவரின் ஆசையில் மண் விழுந்து விடும். ஒவ்வொரு நாளும், குத்துக்கட்டை செம்மண் சாலையில் மிதிவண்டி கனம் கூடுவதும், மீன் கறியில் மண் விழுவதும் ராஜாராமுக்குத் தொடர் கதையானது.
அதைப் பற்றி அக்கம் பக்கத்து நண்பர்களிடம் கேட்டு பார்த்தார். அவர்கள் குத்துக் கட்டையைப் பற்றிச் சொன்ன கதை பயத்தை விட ராஜாராமுவின் கோபத்தையே கிளப்பி விட்டது. குத்துக் கட்டையில் ஆவிகள் தங்கியிருப்பதாகப் பயம் காட்டியவர்கள், இரவில் மீன் வாங்கி வர வேண்டாம் என்றும் எச்சரித்தார்கள். ராஜாராமுவின் கோபத்தை அவர்களின் எச்சரிக்கைத் தூண்டிவிட்டது.

மறுநாள், வேலை முடிந்ததும் வழக்கத்திற்கு மாறாகவே அதிகமாக மீன்களை வாங்கினார். மிதிவண்டியின் பின் பக்க இரும்பில் வழக்கம் போலவே கட்டிக் கொண்டாலும், ஏதோ வெறியுடன் மிதிவண்டியை மிதித்துக் கொண்டு செலுத்தினார். குத்துக் கட்டைச் சாலையை நெருங்கியதும் மிதிவண்டியில் கனம் கூடியதால் சற்று மூச்சு வாங்கினார். தன் ஒரு கையைப் பின் பக்கமாகக் கொண்டு சென்று தடவினார். மிதிவண்டி சாலையை விட்டு விலகி குத்துக் கட்டையின் வேர்களின் இடையே மோதியது. கீழே விழுந்த ராஜாராமின் நெஞ்சில் ஏதோ ஒர் உருவம் அமர்ந்து கொண்டு முகத்தில் பளார் பளாரென அறை விட்டது. ராஜாராமும் மல்லுக் கட்டி போராடினார். அவரின் முன் பல் உடைந்து பறந்ததைப் பார்த்தார். இம்மாதிரியான சமயத்தில் என்ன செய்ய வேண்டும் என அவர் தாத்தா சொன்னது தக்கச் சமயத்தில் நினைவுக்கு வந்தது.
மொத்த பலத்தையும் திரட்டிக் கொண்டு எழுந்து நின்றார். வாயில் எச்சிலோடு கலந்த ரத்தம் கொட்டியது. குத்துக் கட்டையின் அருகே ஓடினார். தன் கால் சட்டையைக் கழற்றினார். செம்மண் தரையில் சிறுநீர் கழித்தார். அந்தப் பகுதி மண்ணைக் கையில் எடுத்து உருட்டி தான் தாக்கப்பட்ட திசையை நோக்கி வீசினார். அடிவாங்கிய அரை மயக்கத்தில், ஏதோ உருவம் ஓடுவதை மட்டும் பார்த்தார். மிதிவண்டியைத் தூக்கினார். அருகே மீன்கள் கொட்டிக் கிடப்பதைப் பார்த்தார். பேய் வாய் வைத்த மீன் உடம்புக்கு விஷமாகி விடும் என்று அருகிலுள்ள மண்ணை எடுத்து மீன்களின் மேல் தூவி மறைத்தார். மிதிவண்டியை மிதிக்க பலமில்லாமல் தள்ளிக் கொண்டு தள்ளாடியப்படி சென்றார். அவ்வப்போது பேயோடு மல்லுக்கு நின்று சண்டை போட்ட தன் வீரத்தை நினைத்து சிரித்தார். உடைந்த முன் வரிசைப் பற்களிருந்தப் பகுதியில் இரத்தம் அதிகமாகவே கொட்டியது.
முன் வரிசையில் இல்லாத பற்களைப் பற்றி யார் கேட்டாலும் பேயோடு தான் போட்ட மல் யுத்தத்தைச் சொல்லி ராஜாராம் கர்வம் கொள்வார்.
