
கிணற்றடிக்கு அருகே தாறுமாறாக வளர்ந்திருந்த தோட்டத்துக்குள் எப்படியாவது ஓடி ஒளித்திட வேண்டும் என்ற பரபரப்பில் பாம்பு வளைந்து, நெளிந்து ஓடியது. மறையும் பாம்பைத் துரத்திக் கொண்டு வேகமாக ஓடி வந்த சிறுவன் புதைந்திருந்த எலும்பில் இடறித் தடக்கினான். அவனுக்கு வந்த முதல் நினைப்பு ‘அக்காட்டச் சொல்ல வேணும்,’ என்பதுதான். அக்காவுக்கு எல்லா விடயமும் அவனை விட நன்றாகத் தெரியும். தனக்குத் தெரிந்ததையெல்லாம் அவனுக்குச் சொல்லிக் கொடுக்கும் நல்ல மனது அவளுக்கு. எந்த விடயத்தை எப்போது யாருக்குச் சொல்ல வேண்டும் அல்லது எப்போது யாரிடமும் சொல்லாமல் மறைக்க வேண்டும் என்பதெல்லாம் அவளுக்குத்தான் தெரியும். உலக நடப்பின் அமைப்புமுறையை அவன் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொள்கிறான் சொல்வழிதான், சிலவேளைகளில் மீறப்பட வேண்டிய, சிலவேளைகளில் உதாசீனம் செய்யப்பட வேண்டிய, ஆனால் எப்போதும் ஒரு கொசு வலை மாதிரி இன்னுமொரு இனந்தெரியாத இரகசிய அமைப்புமுறையிலிருந்து பாதுகாப்பதற்காகத உள்ள ஒரு அமைப்புமுறையாகத் தான் அவை உள்ளன.
அக்காவுக்குச் சொல்லலாம். அதுவும் ஒரு விதமான சொல்வழிகளின் அமைப்புமுறைதான். அல்லது ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல் இடப்பக்கம் அடிவைத்துத் தொடர்ந்து ஓடியிருக்கலாம். அது இன்னுமொரு அமைப்புமுறை. நிலத்திலிருந்து எட்டிப் பார்த்த அந்தக் கோடு, மரக்கொப்புமில்லை, கல்லுமில்லை, மண்வெட்டிக் காம்புமில்லை. அதற்கு மேல் மண்ணைத் தள்ளி மறைத்துவிட்டு, அவன் அன்றுதான் தானே இயற்றிய பாம்புப் பாட்டைப் பாடிக்கொண்டு பாம்புக்குப் பின்னால் தொடர்ந்து ஓடியிருக்கலாம். ஆனால் அவன் தாமதித்த அந்த ஒரு கணத்தில் பாம்பு மூலையில் திரும்பி ஓடி மறைந்துவிட்டது. கீழே குனிந்து பார்த்தான். காற்பெருவிரலில் இடறிய, மறைக்க முடியாத, எலும்பை அவனுக்கு இனங்கண்டுகொள்ள முடிந்தது. தன்னுடைய தலையைப் பாதுகாத்திருக்கும் அதே வகையான எலும்புதான். மீன் முள்ளிலிருந்து நாய் எலும்பு வரை அவன் பலவிதமான எலும்புகளைக் கண்டிருக்கிறான். இதுவரை மனித எலும்புகளைக் கண்டது கிடையாது. ஆனாலும் இது நிச்சயமாக ஒரு மண்டையோடு என்று அவனுக்குத் தெரிந்தது. அவனது குடும்பத்துக்குத் திரும்பக் கிடைத்த வீட்டுக் காணியின் கிணற்றடி எல்லையில் இருந்த மண்டையோடு.
இந்த வீட்டுக்குச் சமீபத்தில் தான் மீண்டும் வந்திருந்தார்கள். அந்த இடைக் காலப் பகுதியில் இயக்கத்தினராலும் பின்னர் இராணுவத்தாலும் ஆக்கிரமிக்கப்பட்ட இந்த வீடு சிறு வயதாக இருந்த அவனுக்குப் பரிச்சயமாக இருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் வருங்காலத்தில் என்றோ ஒரு நாள் இதைப் பராமரிக்கும் பொறுப்பு அவன் தலையில் தான் வந்து விழும். அவர்கள் இடம்பெயர்ந்திருந்து இந்த வீட்டில் இல்லாத காலத்தில், ஏதோ ஒரு தருணத்தில் வீட்டில் இந்தத் தோட்டக்காரன் இருந்திருக்கலாம். பெருவிரலால் நிலத்தைக் கொஞ்சம் தோண்ட, மண்டையோடு தன் இரகசியங்களை இன்னும் கொஞ்சம் வெளிப்படுத்தியது. தாடையெலும்பு வெளியே வரும் தருணத்தில் கிணற்றிலிருந்து ஒரு வாளி தண்ணீர் அள்ளி அக்காவிடம் கொடுத்துவிட்டு அம்மா அவனை உரக்கக் கத்தி அழைத்தாள். அவன் தோட்டத்தில் விளையாடுவது வழக்கமான விடயம் என்பதால் அதைப்பற்றி அவர்கள் அலட்டிக் கொள்ளவில்லை. தரையிலிருந்து எழும்பும் போது அக்காவின் கண்களைப் பார்த்துச் சமிக்ஞை செய்ய முனைந்தான். அவனின் கேள்விக்குறியை அக்கா கண்டு கொள்ளவேயில்லை.
தாயும் மகளும் கிணற்றடிப் பாதையால் அவனைத் தாண்டிப் போகையில் அம்மா அவனைப் பார்த்து, “கூட வா!” என்றாள். அக்கா அவனை நோக்கிக் கையை நீட்டினாள். மண்டையோட்டைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் அவர்களுடன் சேர்ந்து நடந்தான். என்ன செய்யலாம் என்று அக்காவிடம் கேட்க விருப்பம் தான் ஆனாலும் அவன் கண்டுபிடித்ததை அம்மாவிடம் சொல்வதற்கு அவன் இன்னும் ஆயத்தமாக இருக்கவில்லை. இந்தக் கணம்தான் அவன் தன் அம்மாவுக்கு முதல் முறையாகப் பொய் சொன்ன கணம் என்பதைப் பலவருடங்களுக்குப் பிறகு அவன் உணர்ந்து கொள்வான். இதற்கு முன் அவன் சொன்ன பொய்கள் சிறுபிள்ளைத்தனமாகச் சில்லறை விவகாரங்களை ஒளித்து மறைக்கச் சொன்ன பொய்கள், பானையிலிருந்த சோறு காணாமற் போனதைப் பற்றியோ அல்லது அகப்பைக் காம்பு எப்படிச் சமையலறையிலிருந்து விடுவிக்கப்பட்டுத் துடுப்பாட்ட விளையாட்டுக்குப் போய்ச் சேர்ந்ததைப் பற்றியோ சொன்ன சின்னச்சின்னப் பொய்கள். ஆனால் நல்லெண்ணத்தோடு சொல்லப்பட்ட இந்தப் பொய் வித்தியாசமானது.
அன்றிரவு சோறும் மரக்கறியும் சாப்பிடும்போது அக்காவும் அம்மாவும் கோழி இறைச்சி சாப்பிடுவது பற்றி பேசிக் கொண்டார்கள். அக்காவுக்கு அவனை விட ஏழு வயது அதிகம். கோழி எலும்பிலிருந்து மச்சையை உறிஞ்சுவது தனக்கு எவ்வளவு விருப்பம் என்று சொல்லிக் கொண்டிருந்தாள். எலும்புகளை விவரிக்க வித்தியாசமான சொற்கள் உள்ளன. மீன் சாப்பிடும் போது, “முள்ளு தொண்டையில குத்திப் போடும், கவனம்!” என்று அம்மா எச்சரித்த ஞாபகம் வந்தது. கொஞ்சம் யோசித்துப் பார்த்து விட்டு மனிதர்களின் தலையிலுள்ள எலும்புக்கு ஏதாவது விசேடமான சொல் இருக்கிறதா என்று கேட்டான்.
அக்கா அவனை விசித்திரமாகப் பார்த்தாள். “மனிசத் தலையா?”
தன்னுடைய தலையை விரலால் தட்டிக் காட்டினான்.
“டாக்குத்தரா வரப் போறியோ?” அம்மா சிரித்தபடி கேட்டாள்.
அவனுக்கு அதற்கு முன் அப்படிப் பட்ட சிந்தனையே தோன்றியிருக்கவில்லை. ஆனாலும் ஒரு சிறு புன்னகையோடு, “ஒம்!” என்று அவன் சொல்ல அம்மாவுக்கு வாயெல்லாம் பல்லானது. “டாக்குத்தரா வரலாம் தான்,” என்று அவன் திருப்பிச் சொல்ல அம்மாவின் சிரிப்பு மங்கத் தொடங்கியது. மூடும் கதவு போல் அவளது வாய் இறுகும் தருணத்தில் தன் எதிர்காலத்தைப் பற்றி அவளுக்கு என்னவோ தெரியும் என்பதை அவன் கண்டு கொண்டான்.
அடுத்த நாள் அவர்கள் கிணற்றடிக்குத் திரும்பும் போது ஒரு தெருநாய் அந்த மண்டையோட்டை நக்கிக் கொண்டிருந்ததைக் கண்டதும் அவன் நாயைத் துரத்தினான். நாய் நக்கியதில் மண்டையோட்டின் தட்டையான, உடைந்த மேற்பகுதி பளபளவென்று மின்னி மெருகூட்டியது. அவன் மீண்டும் நிலத்தைக் கிண்ட ஆரம்பித்தான்: தாடையெலும்பு, கழுத்தெலும்பு, கொஞ்சம் வெள்ளம் வந்தபிறகு தண்ணீருக்கு மேலே தயங்கித் தயங்கி எட்டிப் பார்க்கும் மரக்கிளைகள் மாதிரி மண்ணுக்கு மேலே மிதந்திருந்தன விரல்கள். தன் விரல்களை அந்த விரல்களின் பக்கத்தில் வைத்து அளவு பார்த்தான். கிட்டத்தட்ட ஒரே அளவு. ஒரு சிறுபிள்ளை தான். அவன் வயது இருக்குமோ?
அக்கா அழைத்தது அவன் காதில் விழாததால் அவள் அருகே வந்ததை அவன் கவனிக்கவில்லை. “என்ன செய்யிறாய்?” என்று அவள் கேட்க அவன் திடுக்கிட்டுச் சரேலென எழும்பி மண்டையோட்டை மறைத்தபடி நின்றான். அக்கா அவன் கையைப் பிடித்து இழுத்தபடி, “இங்கால வா!” என்று உத்தரவிட்டாள். அவன் மறைத்தது என்னவென்று கண்டதும் அவள் அதிர்ந்து போனாள். ஆச்சரியத்தில் காற்றை உள்ளெடுத்து விட்ட நீண்ட மூச்சில் “அய்யோ” என்று இழுத்தாள். “இங்கால வா தம்பி. அதை நீ தொட்டால் அம்மாக்குக் கோவம் வரும். இங்கால வந்திடு! எப்ப இதைக் கண்டு பிடிச்சாய்?”
ஏதோ தானே அந்த எலும்புக் கூட்டை அங்கே புதைத்த குற்றவாளி மாதிரி அவன் எல்லா உண்மையையும் அக்காவிடம் அவிழ்த்து விட்டு “அம்மாவுக்குச் சொல்லுவமா?” என்று கேட்டான்.
யாராவது காயப்பட்டால் உடனே அம்மாவிடம் சொல்ல வேண்டும் என்று அவனுக்கு நன்றாகவே தெரிந்திருக்க வேண்டும் என்பதை அவன் இப்போது இவ்வளவு காலத்துக்குப் பிறகு உணர்கிறான். அப்போதே உணர்ந்திருக்க வேண்டும், ஆனால் அக்காவின் முகத்தில் ஒரு நிச்சயமற்ற அச்சம் படர்வதைக் கண்டான். பக்கத்தில் விழுந்து கிடந்த ஒரு தென்னோலை மட்டையை அக்கா எடுத்து மண்டையோட்டுக்கு மேல் கவனமாக வைத்தாள். தென்னங் கீற்றுகளை நெற்றிக்கு மேலே லாவகமாக விழும் கூந்தல் போல போர்த்திப் படர விட்டாள்.
அன்றிரவு, வெந்து கொண்டிருந்த அவர்களது அறையில் இருவரும் தத்தம் படுக்கைகளில் நித்திரை வராமல் புரண்டு கொண்டிருந்தார்கள். “அம்மாவுக்குச் சொல்லுவமே?” என்று மீண்டும் கேட்டான். அதற்குப் பதில் “இல்லை” என்று அவனுக்குத் தெரியும். ஏன் என்று புரியவேண்டிய குறுகுறுப்பு அவனைத் துளைத்தது. அது புரியும் பக்குவம் இல்லாத வயது தனக்கு என ஊகித்தான். சிலவேளை அது அவர்களது உறவினர் யாராவதாக இருக்கலாமோ? அல்லது யாராவது ஆமிக்காரனோ? அல்லது இயக்கத்துப் போராளியோ? அல்லது ஆமியோ இயக்கமோ அந்த உடம்பை இங்கே கொண்டு வந்து புதைத்திருப்பார்களோ? வேறு எந்தெந்த சாத்தியக் கூறுகள் இருக்கலாம் என்று அவனுக்குத் தெரியவில்லை. அக்காவிடம் கேட்கலாம் என்று அவன் நினைத்தபோது அவள் மற்றப் பக்கம் திரும்பிச் சுவரைப் பார்த்தபடி ஒருக்களித்துப் படுத்தாள். சிறுவன் தன்னிடமிருந்த கைவிளக்கை அவள் பக்கம் திருப்பி அவள் தலைக்கு மேலே சுவரில் கோலம் போட்டான்.
“நிப்பாட்டு!” என்றாள் அக்கா. “ஏன்?” என்று இவன் கேட்டபோது அவள் பதில் சொல்லவில்லை.
அடுத்த நாள், அம்மாவிடம் சொல்லி முடிவெடுத்தான். ஆனால் அக்காவோ தனியாகக் கிணற்றடிக்கு போவதென்ற முடிவை எடுத்து விட்டு, அம்மாவை அண்டை வீட்டுக் கிழவியைப் பார்க்கவென்று தாராள மனதுடன் அனுப்பி விட்டாள். தானும் கிணற்றடிக்குப் போகலாம் என்று யோசித்த அவனுக்கு முதலே அக்கா போய்ச் சேர்ந்து விட்டாள். அவள் அவனை விட உயரம் கூடியவள். காலை எட்டி வைத்து நடந்து அவனுக்கு முதலே அந்த இடத்துக்குப் போய்ச் சேர்ந்து விட்டாள். அவனைக் கண்டதும் முகத்தைக் கடுமையாக்கிக் கொண்டு, “போ!” என்று உத்தரவிட்டாள். அவள் தரையில் முழங்காலிட்டு இருந்தபோது கறுப்புப் புழுதி அவள் பாவாடையெங்கும் பரவியது. அவன் அசையாமல் அவளுக்குப் பக்கத்திலேயே நின்றான். அவனை விடப் பலங்கூடிய பெரியவள் அவள். மண்ணைக் கிண்டும் போது மண்டையோட்டில் அப்பிக் கிடந்த அழுக்குக் கறையைக் காற்று அவள் முகத்தில் வாரியடிக்க, அவள் சலித்துக் கொண்டாள். ஏன் அவள் தன்னுடைய கண்டுபிடிப்பைக் களவெடுக்கிறாள்? சிறுவனுக்குப் புரியவில்லை. ஏற்கெனவே கழுத்தெலும்பு வரைக்கும் வந்து விட்டாள். கொஞ்சம் கொஞ்சமாகத் தோள், முழங்கை, என்று தெரிய ஆரம்பித்தன. நிலத்திலிருந்து முளைத்த செடி போல் விலாக்கூடு தள்ளிக் கோண்டு மேலெழுந்தது.
“என்னக்கா செய்யிறாய்!” என்று ஆற்றாமையால் கத்தினான்.
முகத்தில் ஒரு பயங்கரமான உறுதிப்பாடு மின்ன “இதை இங்கையிருந்து கொண்டு போக வேணும்,” என்றாள். “இதை ஆராவது கண்டால் எங்களுக்கு என்ன நடக்கும் எண்டு உனக்குத் தெரியுமே? திரும்பவும் எங்கட வீட்டை எடுத்திடுவினம்.”
“யார்?”
அவள் பதிலெதுவும் சொல்லவில்லை.
அவர்கள் ஒன்றும் பேசாமலே வீடு திரும்பினார்கள். அவர்கள் அந்த வீட்டுக்குத் திரும்பக் குடிவந்த போது, அது அக்காவுக்கும் அம்மாவுக்கும் பரிச்சயமான வீடென்றாலும் அவனுக்கு அது ஒரு புதிய வீடாகத் தான் இருந்தது. ஒரு ஆமிக்காரன் வீட்டுக்கு வந்து உதவி ஏதாவது தேவையா என்று கேட்டான். தேவையில்லை என்று சொல்லி அம்மா அவனை வழியனுப்பிவிட்டு அவன் போன பிறகு, “வந்திட்டாங்கள்!” என்று சீறினாள்.
ஆமிக்காரன் சிறுவனைப் பார்த்துச் சிரித்தபோது அவனது மெலிந்த தோளில் துப்பாக்கி தொங்குவது தெரிந்தாலும் சிறுவனும் தானாகவே பதிலுக்குச் சிரித்தான். “ஆமிக்காரங்களைப் பாத்துச் சிரியாத,” என்று அக்கா கண்டித்தாள். பிறகு ஒரு கணம் யோசித்துவிட்டு, “சிரிக்கலாம், ஆனால் அளவோட சிரி,” என்றாள். கொஞ்சம் குழம்பிப் போய், ‘எது சரி?’ என்று சிறுவன் யோசித்தான். “அவங்களுக்கு என்ன வேணுமாம்?” என்று கேட்டான். “தெரியாது. நீயோ நானோ அம்மாவோ அல்லது இந்த வீடோ, எதுவாவும் இருக்கலாம். எங்களுக்குத் தெரியாது. என்ன செய்வினமெண்டு பொறுத்திருந்து தான் பாக்க வேணும்.”
“ஆராவது இதைக் கண்டால் என்ன நடக்கும்?” எலும்புகளைப் பார்த்தபடி அவன் திரும்பக் கேட்டான்
“எனக்குத் தெரியாது,” என்ற அக்கா சிறுவனின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். “ஆமிக்காரங்கள் இங்க வரலாம். இதைக் கிண்டக்கூடும். இயக்கம்தான் செய்தது எண்டு அவங்கள் சொல்லக் கூடும். விசாரணை செய்ய வேணுமெண்டு சொல்லி எங்களை வீட்டை விட்டுத் திரும்ப எழும்பச் சொல்லலாம்.”
“இது… இது எங்களுக்குத் தெரிஞ்ச ஆற்றையாவது எலும்புகளா இருக்குமோ?” என்று கேட்டான்.
“இருக்கலாம்,” வெடுக்கென்று பதில் சொன்னாள் அக்கா, “நீ வேற எங்கயாவது போய் விளையாடிறியா?”
அவன் சொல்வழி கேட்காமல் அவளைச் சுற்றி வந்து மற்றப் பக்கத்தில் இருந்தபடி தானும் கிண்டத் தொடங்கினான்.
“எங்க கொண்டு போகப் போறம்?”
சேறு அப்பியிருந்த தன் கையை மெதுவாக அவன் தோளின் மேல் வைத்தான். இருவரும் கிண்டுவதை நிறுத்தி ஒரு கணம் சேற்றில் உறைந்து நின்றார்கள். “எரிச்சிடலாம்,” என்று மெல்லிய குரலில் சொன்னாள். அவன் அவளைத் திரும்பிப் பார்த்த போது அவளது கண்கள் பனித்திருந்தன. ‘அப்பான்ர நினைவு வந்திட்டுதோ? பாடை எரிஞ்ச ஞாபகம் வந்ததோ?’ என்று நினைத்தான். அவனுக்கு அப்பாவின் நினைவு எதுவுமேயில்லை. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் அம்மா தான். அவன் என்றும் பின்பற்றும் ஒரேயொரு சட்டம் அம்மாவின் சொல்வழி மட்டும்தான்.
“அம்மாட்டச் சொல்ல மாட்டியோ?” என்றான். அக்கா இப்போது விக்கிவிக்கி அழத் தொடங்கி விட்டாள். ஆனால் கிண்டுவதை நிறுத்தவில்லை. அந்த உடலின் சிறு கைகால்கள் அவனுடையதைப் போலவே இருந்தன. அதை மூடுவதற்கு உபயோகப் படுத்திய தென்னோலையைச் சற்றுத் தள்ளி, அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிறு குச்சிகளுக்கு மேலே தூக்கி வைத்தாள். பழைய செய்தித்தாள் ஒன்றைச் சுருட்டி உள்ளே அடியில் தள்ளினாள். ஒரு நெருப்பின் ஆரம்பத்தை அவன் உணர்ந்தான்.
இறுதியில் அக்கா வாயைத் திறந்து, “அவவுக்குத் தெரியும்,” என்றாள். “அவவுக்கு நான் சொன்னேன். நீ வீட்டுக்குள்ள போ. அவதான் என்னை அதை எரிக்கச் சொல்லிச் சொன்னவ.”
‘Gardening’, The Berlin Journal, Fall 2017
ஆங்கிலமூலம்: வி.வி.கணேஷானந்தன்.
தமிழில்: எழுத்துக்கினியவன், அனுஜாபிரகாஷ்
