
கோயில்பிள்ளை எசாயாவிற்குத் திண்டுக்கல்லில் இருந்து ஆயர் கிளம்பிவிட்டதாக தகவல் வந்தது முதல் இருப்பு கொள்ளவில்லை. அவர்கள் சிற்றூருக்கு ஆறு வருடங்கள் கழித்து, புதுநன்மை மற்றும் உறுதிபூசுதல் சடங்குகளுக்காக ஆயர் வருகிறாரென்பதால், எல்லாம் சிறப்பாக இருக்க வேண்டுமென ஒன்றுக்கு மூன்று இல்லையில்லை, நான்கு முறை சரிபார்த்து சுற்றியிருந்தவர்களை எரிச்சல்படுத்திக் கொண்டிருந்தார்.
கோயில் உள்ளே ஐம்பத்தி மூன்று மணி செபம் சொல்லிக்கொண்டிருந்தனர். வழக்கமாக அவர்தான் செபத்தைச் சொல்லுவார். இன்று ரோஸரியிடம் விட்டுவிட்டு இவர் எல்லாவற்றையும் மேற்பார்வையிட்டபடி இருந்தார். வெளியே வந்தவர் அங்கு நின்றிருந்த சிறுவர்கள் குழுப்பக்கம் பார்த்து ஸ்பீக்கரில் ஒலித்துக்கொண்டிருந்த செபத்தின் சத்தத்தையும் மீறிக் கத்தினார்.
“திவ்வியத்து மகனே! நீ ரோட்டயே பாத்துட்டு நில்லு, காரு வாரது தெரிஞ்சா உடனே சத்தமா சொல்லிடு!” என அவனை ரோட்டைப் பார்த்தபடி நிற்கச் சொல்ல அவன் தலையாட்டிவிட்டு ஓடிச்சென்று ரோட்டை பார்த்தபடி நின்றான். அப்படியே வெளியே ஆரத்தி எடுக்கத் தயாராக நின்றிருந்த பெண்கள் பக்கம் திரும்பி “யம்மா ஆயர் வந்ததும் ஆரத்தி எடுக்க தேங்கா, கும்பாவுலாம் ரெடியா இருக்குல்ல!” எனக் கேட்டார். எல்லாம் தயாராக இருக்கிறது என அவர்கள் சொல்ல சரி எனத் தலையாட்டிவிட்டு சிறுவர்கள் நின்றிருந்த பக்கம் வந்தார்.
“பசங்களா, ஆயர் கார வுட்டு எறங்குன உடனேயும் கரெக்டா வேட்ட போட்ரணும். போடுற வெடியில ஆயர் வந்துட்டாருனு ஊருக்கே தெரியணும்டா!” எனச் சொல்ல, “எசாயா தாத்தா அதெல்லாம் கரெக்டா போட்ருவோம்” என பாக்கியத்தின் மகன் சொன்னான். “கடைசி நேரத்துல ஒக்குட்டு உட்ராதிங்கடா!” என மெதுவாக சொல்லியபடியே கோயில் ஓரத்திற்குச் சென்றவர், அங்குத் தப்பைக் காய்ச்சிக் கொண்டிருந்த தப்புக்காரர்களைப் பார்த்து, “என்ன இன்னமும் தப்பு காச்சிட்டு இருக்கிங்க! ஆயர் எப்ப வேணா வரலாம். திண்டுக்கல்லருந்து கிளம்பி அரைமணிநேரமாவுது. இந்நேரத்துக்கு வேடசந்தூர தாண்டிருப்பாரு”
“எல்லாம் ரெடிங்க. சாமி வந்தாங்கன்னா அடிச்சிருவோம்ங்க” என அவர்கள் சொல்ல நம்பிக்கையே இல்லாதவாறு ஆலயத்தின் உள்ளே சென்றார்.
பீடத்தின் உள்ளே சீடராக அமர்ந்திருந்த சிறுவனிடம் “கார் வெளியே வந்ததும் வேட்ட போட்றுவாய்ங்க. வேட்டுச் சத்தம் கேட்டவுடனே செபம் சொல்றவங்க சொல்லட்டும். நீ மைக்கு வயர மாத்தி பாட்ட போட்ரு” எனச் சொல்லவும் சரி எனத் தலையாட்டினான். மீண்டும் என்ன செய்வதெனப் புரியாமல் வெளியே நடந்தார். ரோட்டையே பார்த்துக்கொண்டிருந்த திவ்வியத்து மகனிடம், “காரு வருதா?” என கேட்க ‘இல்லை’ எனத் தலையாட்டினான். “சரி வந்தவுடனே சொல்லு!” என சற்று ஏமாற்றத்தோடு சொல்லிவிட்டு மீண்டும் உள்ளே நடந்தார்.
பீடத்தை நோக்கி வருவதைப் பார்த்ததும், “சாயா அடுத்த ட்ரிப் அதே சொல்லப் போறாருடா!” என பீடத்தில் உள்ள சிறுவர்கள் சிரித்தனர். ஆனால் உள்ளே வந்தவர் எதுவும் சொல்லாமல் அவராகவே தலையை ஆட்டிவிட்டு மீண்டும் வெளியே சென்றார். அறுபத்தைந்து வயதைத் தொட்ட சாயல் அன்று அவரது நடையில் தென்படவேயில்லை. நாலு எட்டு நடந்தாலே மூச்சிரைப்பவர் அன்று அவ்வளவு சுறுசுறுப்பாக இருந்தார். ஏனெனில் வருகின்ற திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் அந்தோணி குப்புசாமி எசாயாவின் பள்ளிக்கால சிநேகிதர். ஆயரின் சொந்த ஊர் மாரம்பாடி. அது பூத்தாம்பட்டியிலிருந்து இரண்டு மைல் தொலைவில் உள்ளது. இருவரும் வேடசந்தூரில் உள்ள அரசுப் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். கல்லூரிக்காலம் வரை வாடா போடா என தோள்மேல் கைபோட்டு சுற்றிக் கொண்டிருந்தவர், நண்பன் துறவறத்தை தேர்ந்தெடுத்து அங்கியணிந்த பிறகு சாமி என்று மட்டுமே அழைப்பார். ஆயரே பலமுறை சாமினு கூப்டாத என சொல்லியும் அவர் கேட்டதில்லை. அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்கி ஆயர் இந்த ஊருக்கு வருகிறார்.
வழக்கமாக இந்தப் புதுநன்மை மற்றும் உறுதிபூசுதல் சடங்கு நிகழ்ச்சி வேடசந்தூரில் உள்ள பிள்ளைகளுக்கு நடைபெறும் நாளில் அங்கேயே இந்த ஊர் பிள்ளைகளை வரச் சொல்லி நடக்கும். வேடசந்தூர் தான் பூத்தாம்பட்டிக்கு பங்கு. எனவே காலங்காலமாக அப்படி நடந்த சடங்கு எசாயா கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்த வருடம் பூத்தாம்பட்டி சிறுவர் சிறுமியருக்குப் பூத்தாம்பட்டியிலே வைத்துக் கொடுக்க ஒத்துக் கொண்டு வருகை புரிகிறார்.
உறுதிபூசுதல் மற்றும் புதுநன்மை எடுக்கும் சிறுவர், சிறுமியர்கள் வெள்ளையுடையணிந்தபடி அமர்ந்திருந்தனர். நேற்றே இதுவரையில் செய்த பாவங்களுக்குப் பாவமன்னிப்பு சடங்கும் எடுத்திருந்ததால் நிஜ தேவதைகளாக அமர்ந்திருந்ததாகவே எசாயா நினைத்துக் கொண்டார். அப்படியே அவர்கள் அத்தனை பேரும் இருக்கிறார்களா என மனதிற்குள் எண்ணிப் பார்த்தார். இருவர் குறைந்திருந்தது தெரிந்தது. தவறவிட்டுவிட்டோமா என மீண்டும் எண்ணினார். இருபது பேருக்கு பதில் பதினெட்டு பேர் தான் இருந்தனர். எண்ணிக்கையில் இரண்டு குறைந்தது அவருக்குப் பதட்டத்தை அளித்தது. அதில் அலோசியஸும் ஒருவன் என்பதை உணர்ந்துகொண்டார். வேகமாக அவர்களருகே சென்றார்.
“டேய் ரெண்டு பேர் குறைஞ்சிருக்கு. அலோசியும் இன்னொருத்தன் யாரோ காணாமாட்டம் இருக்கே! யார்ரா அது?” என கேட்க ஒருத்தன், “பிலிப்ஸ் தான் தாத்தா. ஒன்னுக்கடிக்க போயிருக்கான்; வந்துருவான்!” என்றான். “அப்ப அலோசி எங்கடா?” என கேட்க, “அவனை கூப்டோம் தாத்தா வரமாட்டேனு சொல்லிட்டியான்! சாத்தான் அப்பிடிதான் சொல்லும்னு அவன் அப்பாவே சொன்னாரு. அதான் நாங்க அவன கூப்புடாம வந்துட்டோம்” என்றனர்.
எசாயாவுக்கு இடி விழுந்தது மாதிரி இருந்தது. வேறு யாராவது இப்படி வராமல் இருந்தால் அவர் கவலைப்பட்டிருக்கமாட்டார். ஏனெனில் அலோசியஸ் அவரது சொந்த மகனை விட, பேரனை விட அவருக்கு விருப்பமானவன். இன்னும் சொல்லப்போனால் அலோசிக்காகத் தான் ஆயரை இந்த ஊருக்கே வரச் சொல்லியிருந்தார். அனைவர் முன்னிலையிலும் ஆயரிடம் அலோசியை அறிமுகப்படுத்தி, அலோசியின் பக்திக்கு முன்னால் தன்னுடைய பக்தியே ஒன்றுமில்லை என சொல்ல ஆசைப்பட்டார். அதை ஆயர் அந்தோணி குப்புசாமியே ஒப்புக்கொள்ளமாட்டார். சிறுவயது முதலே ஆயரும் எசாயாவும் இறைபக்தியாக இருந்தாலும், அந்தோணி குப்புசாமி துறவறத்தையே தேர்ந்தெடுத்திருந்தாலும், எசாயாவின் பக்திக்கு முன்னால் தன் பக்தி எதுவுமேயில்லை என்பதே அவரது நிலைப்பாடு. இந்த ஊரினுடைய நிலைப்பாடுமே அதுதான். அதனால்தானே அவரது உண்மையான பெயரான லூர்துசாமியைச் சொல்லி அழைக்காமல் பைபிளில் சொல்லப்படும் எசாயா பெயரே பட்டப்பெயராக மாறிப்போனது.
அந்த உண்மையான பெயரைப் பயன்படுத்துவது ஊரிலியே அலோசி மட்டும்தான். கோயில்பிள்ளை லூர்துசாமி தாத்தா கூட்டியாரச் சொன்னாங்க! லூர்துசாமி தாத்தா நாளைக்கு அன்பியத்துக்கு வர சொன்னாங்க! அதனாலும் அலோசியை அவருக்குப் பிடித்துப் போனது. அலோசியை எல்லார் முன்னிலையிலும் ஆயரையே பெருமையாக சொல்ல வைத்து கௌரவப்படுத்தி அவனைக் கேலி பேசிய அத்தனை வாய்களையும் அடைக்கவே புதுநன்மை மற்றும் உறுதிபூசுதல் நிகழ்வை ஊரிலே நடத்த வைத்திருக்கிறார். பங்கு சாமியாருக்கு கூட இதில் விருப்பமில்லை. எசாயா நேரடியாக ஆயரிடமே பேசி அவர் வருவதற்குச் சம்மதம் வாங்கியதால் மறுக்க வழியில்லாமல் ஒப்புக்கொண்டார். அதனால்தான் எல்லாம் சரியாக இருக்கவேண்டுமென பதட்டத்தில் இருந்தார்.
வெளியே வந்த எசாயா கோயிலருகில் இருந்த நாடகமேடையில் அமர்ந்தபடி அரட்டையடித்துக் கொண்டிருந்த நிக்கோலஸை கூப்பிட்டார். நிக்கோலஸ் கோயில் பக்கமே வரமாட்டான். அவனது திருமணத்திற்கு மூன்று ஓலை வாசிக்கும் வரை கண்டிப்பாக வர வேண்டுமென்பது பங்கு சாமியாரின் எச்சரிக்கை. வந்தால் தான் கோயிலில் திருமணம் நடக்கும் என சாமியார் கூறியிருப்பதால் வேண்டாவெறுப்பாக வந்து அமர்ந்திருப்பான். அவனைக் கூப்பிட்டதும், எழுந்து தன் வெள்ளை வேஷ்டியை மடித்து நாடகமேடையிலிருந்து குதித்தவன் எசாயாவை நோக்கி வந்து, “என்ன தாத்தா! இன்னும் பூசையே ஆரம்பிக்கலனு தான் இங்க உக்காந்துருந்தேன். சாமியாரு வந்தவுடனே கோயிலுக்குள்ள வந்துருவேன்” எனச் சொன்னான்.
“ம்ம்ம்..அதில்லடா! அலோசி எங்கடா போய்த் தொலஞ்சான்!” என பதட்டமாக கேட்க, “உள்ள தான் தாத்தா இருப்பான்! வேற எங்க இருப்பான்!” என சாதரணமாக சொன்னான். “ம்ம்ச்! உள்ள இல்லடா! பயலுககிட்ட கேட்டாக்க, கூப்படதுக்கு நான் வரலனு சொல்லிட்டான்னு சொல்றாய்ங்க. அவன் அப்பன், “சாத்தான் எப்படி இதுக்கெல்லாம் வரும்னு சொன்னானாம். அவனுக்காக தான்டா ஆயரே இங்க வர சொல்லிருக்கேன். இன்னைக்கு மட்டும் அவன் வராட்டி அவன் அப்பன் சொன்னது நிஜமாயிடும்டா. இவனும் இந்த நேரத்துல போய் இப்படி பண்றானே! நீ போய் எப்பிடியாவது அவனைக் கண்டுபிடிச்சு கூட்டியா! போ சீக்கிரம் கௌம்பு” என சொல்லி அவசரப்படுத்தினார். நிக்கோலஸ் சற்று தயங்க, “டேய் உன் விஷயத்த நான் பாத்துக்கறேன். நீ மொத அலோசியக் கூட்டியா!” என மீண்டும் அழுத்திச் சொல்ல சரி என தலையாட்டிவிட்டு அவனைத் தேடி புறப்பட்டான்.
அலோசியின் அப்பா அந்திரேயா அவர் தந்தை ஆரோக்கியசாமியின் இறுதிக்காலத்தில் பிறந்தார். அந்திரேயா பிறக்கும்போதே அவரது முதல் அண்ணனான அற்புதசாமியின் மகன் அடைக்கலத்திற்குப் பத்து வயது. அடைக்கலத்தின் மகன் தான் நிக்கோலஸ்.
அதனால் ஏழாவதே படிக்கும் அலோசியஸ், திருமணமாகப் போகும் நிக்கோலஸிற்கு சித்தப்பா முறை. அலோசி பிறந்ததும் அவனைத் தூக்கிய முதல் ஆள் அவனது மகன் நிக்கோலஸ் தான். அவனை முதன்முதலாக தூக்கியபடியே சித்தப்பா என முத்தம் கொடுத்தான். அன்று முதல் நிக்கோலஸ் அவனைச் சித்தப்பா என்றே அழைப்பான். நிக்கோலஸையும் அவனது பெற்றோரையும் தவிர மற்ற அனைவரும் அவன் தந்தையுட்பட அவனைச் சாத்தான், பூதம், லூசிபர் என்றே அழைப்பர். கோயில்பிள்ளை எசாயா மட்டும் விதிவிலக்கு. அவர் அலோசி என அழைப்பார்.
அவன் பிறந்த தேதியான 06-06-06 தான் அதற்கு மிக முக்கிய காரணம். அன்று மாலை திடீரென அலோசி அம்மா ஜோஸ்பினிற்கு வலி ஏற்பட்டு உடனே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றால், எட்டு மாதக் குழந்தையான அலோசியை வெளியே எடுத்தாக வேண்டும் என்கிற சூழல். இறைநம்பிக்கையில் ஊறிப்போன ஜோஸ்பின் இந்த தேதியில் பிறந்தால் அது சாத்தான். அவனை எடுக்கக்கூடாது என சண்டை போட்டாள். அந்திரேயாவும் முதலில் அதற்குச் சம்மதிக்கவில்லையென்றாலும், தாய் சேய் இருவர் உயிருக்கும் ஆபத்து எனக் கூறியதால் வேறு வழியில்லையென சம்மதித்தார். அலோசியஸ் சரியாக மாலை 06.06 க்கு பிறந்தான். அலோசியஸ் பிறந்த கொஞ்ச நேரத்தில் ஜோஸ்பின் மரித்துப் போனாள். அந்தச் சோகத்தில் அவன் தந்தை அந்திரேயா எம் பொண்டாட்டிய கொன்ன சாத்தான் இது! இது வேணாம் என குழந்தையைக் கையில் வாங்கவில்லை. ஜோஸ்பின் குடும்பமும் அந்தக் குழந்தையைக் கையில் வாங்க மனமில்லாமல் நின்றது. சிறுவன் நிக்கோலஸ் தான் அழுத குழந்தையைத் தன் கையில் ஏந்தி சித்தப்பா என்றான்.
அவனை நிக்கோலஸ் அம்மா தான் வளர்த்தாள். அந்திரேயோ ஜோஸ்பின் மறைவிற்குப் பிறகு குடிக்கு அடிமையாகிப் போனான். தன் மகனைப் பார்த்தாலே கழுத்தில் அணிந்திருந்த ஜெபமாலையில் உள்ள சிலுவையைத் தூக்கி “அப்பாலே போ சாத்தானே!” எனக் கத்துவார். பெரும்பாலும் அவன் நிக்கோலஸ் வீட்டிலேயே வளர்ந்தான். அனுதினமும் அவன் தான் ஒரு சாத்தான் இல்லை என நிரூபிக்க பிரயத்தனப்பட வேண்டியிருந்தது.
அவன் பொய்யே பேசாமல் வளர்ந்தான். அவன் வயதுப் பையன்களோடு கோலிக்குண்டோ, பம்பரமோ ஆடும்போது ஏமாற்றாமல் சரியாகச் சொல்வான். ஆனால் எதிரணியினரோ அவன் சாத்தான் அவன் எப்படி உண்மையைப் பேசுவான் எனக் கூறி ஒத்துக் கொள்ளமாட்டார்கள். அந்த வார்த்தையைச் சொன்னால் அவனுக்கு அவ்வளவு கோபம் வரும். அவனுக்குக் காமராஜர் போல நீண்ட கைகள். அவனது கைகள் முட்டியைத் தொடும். அந்த கையால் அவன் அடித்தால் ஒரு நாள் முழுதும் வலி இருக்கும். அடித்த கொஞ்ச நேரத்தில் நிக்கோலஸின் வீட்டு முன்னால் அடிவாங்கியவன் அம்மா வந்து பேயை வளத்துருக்கா பாரு எனச் சண்டையை ஆரம்பிப்பாள். நிக்கோலஸ் அம்மாவும் குடுமி போட்டுக்கொண்டு பதிலுக்குச் சண்டைக்கு போவாள். அந்தச் சண்டை அந்த வாரக் குழாயடியில் தண்ணீர் பிடிப்பது வரை எதிரொலிக்கும்.
ஒருவேளை இந்தச் சண்டை அந்திரேயாவின் காதுகளை எட்டினால், போதையில் வருபவர் அலோசியைத் தூக்கிப் போட்டு மிதிப்பார். நிக்கோலஸ் தான், சித்தப்பாவ அடிக்காத தாத்தா என ஓடிப்போய் தடுப்பான்.
“தாத்தான்னா செருப்பக் கழட்டியடிப்பேன்டா தாயோலி! உன் வயசு என்ன? அவன் வயசு என்ன? அவனைச் சித்தப்பானு கூப்புடுற” என அடிக்க கை ஓங்கினால் நிக்கோலஸ் அந்திரேயா கையைப் பிடித்து முறுக்கிவிடுவான். இது வாரவாரம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்.
அலோசி பேச்சுக்கிணங்க நிக்கோலஸ் தற்போது கை ஓங்குவதை நிறுத்திக் கொண்டான். ஃபால்ஸ் சீலிங் வேலை செய்யும் நிக்கோலஸ் வேலைக்குப் போகும் போது அலோசியைப் பள்ளியில் இறக்கிவிட்டு வாங்கித்திங்க காசு கொடுத்துவிட்டு செல்வான். ஒரு தந்தை ஸ்தானத்தில் இருந்தான் அவனது மகன் நிக்கோலஸ்.
நிக்கோலஸ் எது சொன்னாலும் கேட்கும் அலோசி ஒரு விஷயத்தில் மட்டும் நிக்கோலஸின் பேச்சை கேட்கமாட்டான். நிக்கோலஸிற்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. அலோசி தான் ஒரு சாத்தான் இல்லை என்பதை நிரூபிக்க பெரிய சாமியாராக ஆவேன் என சபதம் எடுத்தான். “உனக்கிருக்க பக்திக்கு நீ நம்ம ஆயர விட பெரிய ஆளா வருவ அலோசி!” என சொல்லும் கோயில்பிள்ளை லூர்துசாமி அப்படியே ஆயரும் அவரும் நண்பர்களாக இருந்த நாட்களைப் பற்றியும் சொல்லுவார்.
அது நிக்கோலஸிற்கு சிரிப்பாக இருக்கும். “நீ இப்பிடி சாமியாராவோ இல்ல ஆயராவோ ஆகி தான் நிரூபிக்கணும்னு அவசியம் இல்ல சித்தப்பா. யாருக்கும் கெட்டது செய்யாம… ம்ம்ஹூம்… கெட்டத நினைக்காம இருந்தாலே போதும்” என நிக்கோ சொன்னால், “அவன் பேச்சை கேக்காத அலோசி! கோயிலுக்கு வராத சாத்தான் அவன்!” என கோயில்பிள்ளை லூர்துசாமி சொல்லுவார். “பாத்தியா என்னைய பேய்னு சொல்லிட்டாங்க. இவங்க இப்படிதான் யாரயாவது சொல்லிகிட்டே இருப்பாங்க. நம்ம அத கண்டுக்காம போயிட்டே இருக்கணும்” என்பான். இப்படிப் பேசிச் சிரித்தபடி கோயிலைப் பூட்டிவிட்டு மூவரும் நடக்க ஆரம்பிப்பர்.
அடுத்தநாள் காலை 5 மணிக்கு ஜெபம் சொல்ல லூர்துசாமி கோயிலைத் திறக்கும் போது அலோசி கோயில் வாசலிலே நிற்பான். மாலை 6 மணிக்கு தினமும் சொல்லும் ஜெபத்திற்குச் சிறுவர்களில் அலோசி மட்டுமே வருவான். வேறு சிறுவர்கள் ட்யூசன், விளையாட்டு என்ற காரணங்களால் வரமாட்டார்கள். அலோசிக்கு அத்தனை ஜெபமும் அத்துப்படி. எசாயாவிற்கு அடுத்து எல்லா ஜெபமும் புத்தகம் பார்க்காமலே சொல்லும் நினைவாற்றல் அவனுக்கிருந்தது. எசாயா வராத நாளில் குட்டி எசாயா கோயிலைப் பார்த்துக் கொண்டான். மற்றவர்களோ சாத்தானே வேதம் ஓதுது என கேலியாகச் சொன்னனர். அந்திரேயாவும் அதை ஆமோதித்தார்.
படிப்பிலும் பக்தியிலும் கெட்டியான அலோசியை ஆறாவதிற்கு ஊரிலுள்ள பள்ளிக்குப் பதிலாக ஃபாதர் நடத்தும் பள்ளிக்கு ஃபாதரே வரச் சொன்னார். அவர் இருந்த வரை எந்தப் பிரச்சனையும் இல்லை. வேறொரு ஃபாதர் பங்கிற்கு மாற்றப்பட்ட பிறகுதான் பிரச்சனை ஆரம்பித்தது.
சனிக்கிழமை பள்ளி வைத்தால், “வாரத்தின் ஏழாவது நாள் பைபிள் படி நமக்கு ஓய்வுநாள் தானே! எதற்காக அன்று பள்ளி வைக்கிறீர்?” எனக் கேட்பான். அது நம் மதத்தின்படி ஏழாவது நாள் என்பது ஞாயிற்றுக்கிழமை என்பார் ஃபாதர். அது எப்படி பள்ளியில் முதல் நாளாய் இருக்கிற ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தில் ஏழாவது நாளாய் மாறும் என்பான். அவனைப் பார்த்தாலே அவருக்கு எரிச்சலாக இருந்தது.
பள்ளியில் அறிவியல் பாடம் எடுத்த டீச்சரே ஆலயத்தில் வீபிஎஸ் க்ளாஸ் எடுத்தார். “சூரியனால் தான் பகல் இரவு வருகிறது என பள்ளியில் சொன்னீர்கள். இப்போது பழைய ஏற்பாட்டில் கடவுள் ஔியைப் படைத்த பிறகே சூரியனைப் படைத்ததாக சொல்கிறீர்கள். இரண்டில் எது சரி!” என்றான். “இரண்டுமே சரி” என்றார். பள்ளியில் சூரியனால் வருவதே பகல் இரவு என்றும் ஆலயத்தில் அப்படியே நேரெதிராகவும் சொன்னார்.
ஃபாதரால் அவனது அறிவார்ந்த சிந்தனைக்கும் பக்திக்கும் இடையே உள்ள கேள்விகளுக்கு விளக்கம் கொடுக்க முடியவில்லை. அவனிடம் பேசுவதையே குறைத்தார். அலோசிக்கோ இரண்டுமே எதிரெதிர் முரணாகத் தோன்றியது. அவனது மகன் நிக்கோலஸிடம் கேட்டால் “பள்ளியை நம்பு! ஃபாதரை நம்பாதே!” என்றான்.
ஃபாதரோடு சண்டை போட்ட நாளும் விரைவாகவே வந்தது. ஒருநாள் ஃபாதர் இதற்கு முந்தைய ஊரில் பாவசங்கீர்த்தனம் செய்த ஒருவரது பாவத்தைப் பிரசங்கத்தில் நகைச்சுவைக்காகச் சொன்னார். அதைக் கேட்டு மக்கள் சிரித்தனர். ஆனால் பூசை முடிந்ததுமே “நீங்கள் எப்படி உங்களை நம்பி சொன்னதை வெளியே சொல்லலாம். நீங்கள் செய்தது பாவம்” எனக் கூறினான். அவன் சொன்னதைக் கேட்டு சுற்றியிருந்த அனைவரும் ஏன் எசாயா கூட ஆடிப்போய்விட்டார்.
உடனே சமாளிப்பதற்காக ஃபாதர் சிரித்தபடியே “அது சும்மா மக்களைச் சிரிக்க வைக்க சொன்னது அலோசி. நான் அப்படி செய்யமாட்டேன் என உனக்கு தெரியும்தானே” என்றார். “தெரியும்! ஆனாலும் நீங்கள் பொய் சொன்னது பாவம்தானே” என்றான்.
ஃபாதர் சிரித்தபடி, “ஏன் அலோசி, நீ பொய்யே சொல்லமாட்டியா?” எனக் கேட்டார். “நான் சொல்லவேமாட்டேன்” என்றான். “இதுவே பொய்” எனச் சொல்லி அங்கிருந்து கிளம்பிவிட்டார். அந்த வார்த்தை அலோசியைத் தூங்கவிடவில்லை. அவன் யோசித்துப் பார்த்தான். உண்மையில் அவன் பொய்யே சொன்னதில்லை. நேர்மையாகவே இருக்கிறான். ஃபாதர் அவன் பொய் சொல்லாமல் இருப்பதை நம்பாமல் போனதை விட, ஃபாதர் பொய் சொன்னது அவனுக்கு வருத்தமாக இருந்தது. அவனைப் போலவே பொய் சொல்லாத ஒரு ஆள் என்றால் அது கோயில்பிள்ளை லூர்துசாமி தாத்தா தான். தன் மகன் நிக்கோலஸ் சொல்கிற பொய்யில் ஊரையே விற்றுவிடுவான்.
அவன் பொய் சொல்வது மட்டுமில்லாது அலோசியையும் பொய் சொல்ல சொல்லுவான். “சித்தப்பா, எப்பயும் உண்மைய பேசுனா யாருக்குமே பிடிக்காது! ஏன் உன்னைய எந்த பசங்களும் ஆட்டைக்கு சேத்துக்க மாட்றாய்ங்கனு யோசிச்சிருக்கியா! அப்பப்ப விளையாட்டுல பசங்களுக்காக பொய் சொல்லணும். விட்டுக்கொடுக்கணும்… ஏமாத்தணும்… அப்பதான ஜாலியா இருக்கும். நீயும் அந்த எசாயா மாதிரி எப்ப பாத்தாலும் இது செய்யாத பாவம், இது சொல்லாத னு அட்வைஸ் பண்ணா அப்பறம் உன்னைய சாத்தான்னு தான் சொல்லுவாய்ங்க!” அவன் சொல்வதைப் பொறுமையாகக் கேட்ட அலோசி, நிக்கோலஸிடம், “ஆனா நீ ஒரு தடவ கூட என்னைய அப்படிச் சொன்னது இல்லைல! ஏன் நிக்கோ?” எனக் கேட்டான்.
“நான்தான் கடவுள்னு ஒருத்தர் இருக்கறதையே நம்பலயே. அப்பறம் எப்படி உன்னையை சாத்தான்னு நம்புவேன்” எனச் சிரித்தான். “கடவுள் இருக்காரு நிக்கோ. நீ சொன்னதையும் கேட்டுட்டு இருக்காரு. இத பாவக்கணக்குல எழுதுவாரு” என்றான். “இந்தா இப்படி பேசறத தான் நிப்பாட்ட சொன்னேன். நீ இப்படி பேசுனினாக்க எல்லாரும் அப்படி தான் பேசுவாங்க”
***
நிக்கோலஸ் பஸ் ஸ்டாப் பக்கம் சென்று அலோசியைத் தேடினான். அலோசியைப் பற்றி அங்கிருந்த கடைக்காரர்களிடம் விசாரிக்க அவன் இந்தப் பக்கம் வரவேயில்லை எனச் சொன்னனர். எசாயாவிடமிருந்து ஃபோன் வந்தது. “ஆள இன்னும் பாக்கல ஆனா சீக்கிரம் கண்டுபிடிச்சிருவேன்” என்றான். “ஆயர் வர்ற காரு பஞ்சராயிடுச்சாம். சரி பண்ணிட்டு இருக்காங்க. நீ சீக்கிரமா கண்டுபிடிச்சு கூட்டியா!” எனச் சொன்னார். “சரி…” என ஃபோனை வைத்தான். உடனே ஜென்சியிடமிருந்து ஃபோன் வந்தது. எடுத்ததுமே கோயிலுக்கு போய்ட்டியா என்றுதான் கேட்டாள். “அப்பயே போய்ட்டேன். இன்னைக்கு சித்தப்பாக்கு புதுநன்மையில. எங்க போனாருனு தெரியல. எசாயாதான் தேடி கூட்டிட்டு வர சொன்னாரு” என்றான்.
“என்னப்பா ஓலை எழுதி முடிக்குற வரை நீ வரணும்னு ஃபாதர் சொல்லிருக்காருல… ஏற்கனவே எங்கப்பா வேண்டா வெறுப்பா கல்யாணத்துக்கு ஒத்துகிட்டு இருக்காரு. இந்த நிலைமையில நீயும் இப்படி பண்ணுனா…” என பேசியவளை நிறுத்தி, “ஏய் அவங்க வரதுக்குள்ள கோயிலுக்கு போயிருவேன். சித்தப்பாவ ஊர்ல எப்படி பேசுறாங்கன்னு தெரியும்ல.”
“சரிப்பா சீக்கிரம் போயிடு” என ஜென்சி ஃபோனை வைத்தாள்.
அலோசி வீட்டிலும் இல்லை, ஊரைவிட்டு வெளியேயும் கிளம்பவில்லை. ஊருக்குள் தான் இருப்பான் என கிரிக்கெட் விளையாடும் இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
**
ஜென்சி நிக்கோலஸ் காதலிற்கு தூது போனது அலோசி தான். உலகிலேயே தன் மகனிற்காக லெட்டர் கொடுத்த, அதுவும் தான் படிக்கும் டீச்சரிடமே லெட்டர் கொடுத்தவன் அலோசியாகத் தானிருப்பான். அப்படி ஒரு காரியத்தைச் செய்யவேமாட்டேனென விடாப்பிடியாய் நின்றான் அலோசி.
“என்னடா கடவுள் நம்பிக்கையே இல்லாதவன், புதுசா கோயிலுக்கு போறான் அதுவும் நம்ம ஊரு கோயிலுக்கு போகாம வேடசந்தூர் போய் போறானே! ஏதோ தப்பாயிருக்கேனு நினைச்சேன்!”
“சித்தப்பா, அந்த டீச்சர் புள்ளைய ரொம்ப புடிச்சிருக்கு சித்தப்பா. நானும் அந்த புள்ளயும் பத்தாவது ஒன்னா தான் ட்யூசன் படிச்சோம். தெரிஞ்ச புள்ள தான். ஆனா அவங்கப்பன் என்னையவே வாட்ச் பண்ணிட்டு இருக்கான். இத குடுத்து பூத்தாம்பட்டி நிக்கோலஸ் கொடுக்க சொன்னான்னு சொல்லு! புடிக்காட்டி அப்பறம் அவ பக்கமே போமாட்டேன் சித்தப்பா! இங்க பாரு என் ஃபோன் நம்பர் மட்டுந்தான் இதுல இருக்கு. பிடிச்சா கால் பண்ணட்டும்… இல்லாட்டி அப்டியே விட்ரலாம். எனக்காக இத மட்டும் பண்ணு சித்தப்பா!” எனக் கெஞ்சியதால் லெட்டர் கொடுத்தான்.
ஜென்சி நிக்கோலஸிற்கு கால் செய்தாள். காதல் செய்தாள். பல எதிர்ப்பை மீறி கல்யாணமும் செய்யப் போகிறாள்.
***
புதுநன்மை எடுப்பதற்கு முந்தைய நாள் எல்லா சிறுவர் சிறுமியரும் ஃபாதரிடம் பாவமன்னிப்பு பெற்றார்கள். அலோசி பாவமன்னிப்பு வாங்கப் போகும் போது அவன் கோயிலில் ஜெபம் செய்த போது தூங்கியது, ஜெபத்திற்குத் தாமதமாக வந்தது என்பதைத் தாண்டி வேறு எதுவும் சொல்லவில்லை. கூண்டுக்கு அந்தப் பக்கம் அமர்ந்திருந்த ஃபாதர் அவனைப் பார்த்து, “வேற பாவமே நீ பண்ணலயா!” என்றார். “இல்லை ஃபாதர்” என்றான். ஏற்கனவே அவன் மேல் கோவத்திலிருந்த ஃபாதர், “அப்ப போய் இயேசு சிறுவத்தை தூக்கிப் போட்டுட்டு அங்க நின்னுக்க” என்றார். இதை அலோசி எதிர்பார்க்கவில்லை. அவனுக்குக் கண் கலங்கிவிட்டது. “என்னடா உலகத்துல பாவமே செஞ்சதில்லையா நீ? நல்லா யோசிச்சு சொல்றா!” என்றார்.
அழுதுகொண்டே யோசித்தவனுக்கு லெட்டர் கொடுத்தது நினைவுக்கு வந்தது. அதை ஃபாதரிடம் சொல்ல அவருக்குக் கோபம் தாங்கவில்லை. அதைக் கட்டுப்படுத்திக் கொண்டு மெல்ல அவனுக்கான பாவமன்னிப்பாக பத்து அருள் நிறை மரியே சொல்லச் சொன்னார். அதை உள்ளே அவன் சொல்லிக் கொண்டிருந்தான். வெளியே வந்த ஃபாதருக்கு கோபம் தீரவில்லை. அந்திரேயாவிற்கு ஃபோன் செய்து அவரை வரச் சொன்னார். வேடசந்தூர் கோயில்பிள்ளை பெர்னார்டுவின் மகள் தான் ஜென்சி. ஜென்சிக்கு அந்தப் பள்ளியில் வேலை கொடுத்ததற்குக் காரணமே அவள் பெர்னார்டுவின் மகள் என்பதால் தான். ஃபாதரும் ஜென்சியும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள். அதனாலே பெர்னார்டுக்கு மேலும் நெருக்கமானார் ஃபாதர். ஜென்சி காதல் விஷயம் தெரிந்ததும் பெர்னார்டு அளவு கோபப்பட்டவர் ஃபாதர். அவன் கோயிலுக்கே வரமாட்டான் என்பதும், அவன் வேறு சாதி என்பதும் இருவரது கோபத்திற்குக் காரணம். “பால்சீலிங் செய்றவனுக்கு எப்படி சாமி எம் பொண்ண கொடுக்கறது” என ஒரு நாள் பெர்னார்டு சாமியாரிடம் அழ அவரும் ஜென்சியிடம் “இது வேண்டாம்” எனச் சொல்லிப் பார்த்தார். ஜென்சி அசரவேயில்லை.
வேறு வழியில்லாது அவனுக்கே திருமணம் செய்ய ஒப்புக்கொண்டனர். ஜென்சியைத் திருமணம் செய்யும் வரை வாரந்தவறாது கோயிலுக்கு வரவேண்டும் என்பது ஃபாதரின் கட்டளை. அப்படிச் செய்தால் மட்டுமே மூன்று ஓலையும் வாசிப்பதாய் சொல்ல ஆறு மாதமாக சரியாக வந்து கொண்டிருக்கிறான் நிக்கோலஸ். அவனது சொந்தக்காரன் என்பது அலோசியஸ் மேல் ஃபாதருக்கு இருந்த கோபம். நிக்கோலஸ் மேல் காட்ட முடியாத கோவத்தை இப்படி இவனிடம் காட்டிக் கொண்டிருந்தார் ஃபாதர்.
தற்போது அலோசி தான் இதற்கு தூது போனவன் என தெரிந்ததும் அவன் மேல் பயங்கர வெறுப்பு உண்டானது. மற்ற பிள்ளைகள் பாவசங்கீர்த்தனம் எடுத்ததும் கிளம்பிவிட்டனர். அலோசியை மட்டும் காத்திருக்கச் சொன்னார். பெர்னாடுவிடமும் ஃபாதர் இதைப் பற்றிச் சொல்ல, கோவமாக வந்த பெர்னார்டு அவனைத் திட்டினார். “படிக்க தானடா வந்த டீச்சருக்கு லெட்டர் கொடுக்கவா வந்த! சாத்தானே! உங்க குடும்பத்துல எம் பொண்ண கொடுக்கப்போறேனே?” எனப் புலம்பினார்.
“சாத்தான்னு சொல்லாதிங்க சார்!” என பெர்னாடுவிடம் பேச, “பின்ன சாத்தான் தான்டா நீயி! உன் பிறந்த தேதி தெரியாதா எனக்கு! கடவுளே சொல்லிருக்காருடா நீதான்டா சாத்தான்” எனச் சொல்ல, வெளியே நின்றிருந்த ஃபாதரை முறைத்தான். நேராக ஃபாதரை நோக்கி சென்றவன், “ஃபாதர் உங்கள கடவுள் மாதிரி நம்பி தான சொன்னேன். அதை போய் இவருகிட்ட சொல்லிருக்கிங்க! இதுலாம் பாவம் ஃபாதர்” என்றான். “ பாவத்தை பத்தி எனக்கே சொல்லித் தரியா நீ சாத்தானே!” எனப் பளாரென அறைந்தார். அறைந்ததைப் பொருட்படுத்தாமல் அவரை முறைத்தான். “என்னடா முறைக்கிற! இந்த வயசுலே லெட்டர் கொடுக்கற நீ! சாத்தான்!”
“ஃபாதர் அப்படிச் சொல்லாதிங்க” என கைநீட்டி பேச, “ஃபாதரையே கைநீட்டி பேசறியா நீ?” என பெர்னார்டு அறைந்தார். பெர்னார்டை முறைத்துப் பார்த்தான். “இவன் பண்ண வேலைக்குப் புதுநன்மையே கொடுக்கக்கூடாது!” என பெர்னார்டு சொன்னார்.
அப்போது அந்திரேயா அங்கு வந்து சேர்ந்தார். பெர்னார்டு அடிப்பதைப் பார்த்து அந்திரேயா, “சாமி என்னாச்சு! என்ன பண்ணுச்சு இந்த சாத்தான்” எனக் கேட்டார். அதற்கு ஃபாதர், “உம் பையன படிக்க அனுப்புனா டீச்சருக்கு லெட்டர் கொடுத்துருக்கான். இதெல்லாம் உருப்புடுமா!” எனச் சொல்ல அந்திரேயா அடிக்க கை ஓங்கினார். போதையில் வலுவில்லாமல் போயிருந்த அந்திரேயாவின் கைகளை அலோசி தடுத்தான். கோபம் வந்த அந்திரேயா, “சாத்தானே! எதுக்கு பொறந்து தொலச்ச! இப்பிடி என் நிம்மதிய கெடுக்கவா!” எனச் சொல்லிக்கொண்டே தொடர்ந்து அடித்தார்.
அலோசியஸ் கதறி அழுதான். அந்திரேயாவைத் தள்ளிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டான். அதனைப் பார்த்த அங்கு நின்றிருந்த அனைவரும், “பெரிய மனுசன தள்ளிட்டு ஓடுறான் இது எங்க உருப்படப்போகுது!” எனப் பேசினர்.
***
கிரிக்கெட் விளையாடுமிடத்திலும் அலோசியைக் காணவில்லை. விளையாடிக் கொண்டிருந்த பையனிடம் அலோசி பற்றி கேட்க, கொலைகாரப் பாறையருகே பார்த்ததாக சொல்ல நிக்கோலஸ் கொலைகாரப் பாறையை நோக்கி நடந்தான்.
நிக்கோலஸ் நேற்று இரவு முதல் அவனிடம் பேசவில்லை. பாவசங்கீர்த்தனம் முடிந்து மாலை வீட்டிற்கு வந்தவன் அப்படியே படுத்து தூங்கிவிட்டான். சாப்பிட கூட எழவில்லை. காலை வெள்ளையுடை உடுத்தி கிளம்பியவன் கோயிலுக்கு தான் வந்திருப்பான் என நினைத்து தான் நிக்கோலஸ் வெளியே அமர்ந்திருந்தான்.
***
கொலைகாரப் பாறையை அடையும் சமயத்தில் எசாயாவின் ஃபோன் வந்தது. ஃபோன் ஒலித்த சமயத்திலேயே கோயிலருகில் வெடி வெடிக்கும் சத்தமும் பாட்டுச் சத்தமும் கேட்டது.
அவன் வேகமாக கொலைகாரப் பாறையை அடைந்தான். அலோசி வெள்ளை உடை உடுத்தியபடி அங்கு அமர்ந்து தண்ணீரில் கல்லைத்தூக்கி எறிந்து கொண்டிருந்தான். “சித்தப்பா! இங்க என்ன பண்ணிட்டிருக்க! உன்னைய அங்க காணோம்னு எசாயா பதறிட்டு இருக்காரு! வா போலாம்!” என அவன் அருகில் வந்தபோது தான் அலோசி அழுதுகொண்டிருப்பது தெரிந்தது.
அதைப் பார்த்ததும் பதறிப்போனவன், “சித்தப்பா அழுவுறிய?” எனச் சொல்லி அவனருகில் அமர்ந்தான். அவன் தோளில் சாய்ந்து கொண்டு அலோசி அழ ஆரம்பித்தான்.
“சித்தப்பா என்னாச்சு! பாட்டு போட்டாய்ங்க பாரு! ஆயர் வந்துட்டாரு! வா போலாம்!” எனச் சொல்ல, “நா வரல நிக்கோ” என அழுதான்.
“ஏன் என்னாச்சு! யாருனா எதுனா சொன்னாய்ங்களா!”
“பாவசங்கீர்த்தனம் எடுத்தப்ப, ஜென்சி டீச்சருக்கு லெட்டர் கொடுத்தத சொன்னேன். அத ஃபாதர் போய் பெர்னாடுகிட்ட சொல்லி, பெர்னார்டும் ஃபாதரும் சேந்து அடிச்சாங்க. நேத்து அப்பாவ வரச் சொல்லி, அந்தாளும் என்னைய அடிச்சாரு. அடிச்சாலும் பரவால்ல. மூனு பேரும் என்னைய சாத்தான் சாத்தான்னு சொன்னாய்ங்க நிக்கோ!”
நிக்கோலஸிற்கு வந்த கோவத்தில் உடல் நடுங்கத் தொடங்கியது. வேகமாக சென்று பெர்னார்டையும் ஃபாதரையும் அடிக்க வேண்டும் எனத் தோன்றியது. “நேத்தே சொல்றதில்லையா சித்தப்பா! இப்ப கூட ஒன்னுமில்ல, நீ வா இன்னைக்கு அவனுக ரெண்டு பேரையும் என்ன பண்றேன்னு பாரு!” என எழுந்தவன் அமர்ந்திருந்த அலோசியின் கையைப் பிடித்து வா என இழுத்தான்.
“நான் சாத்தானா நிக்கோ!” எனத் தேம்பி அழுதபடியே கேட்டான்.
அவன் அப்படிக் கேட்டதும் நிக்கோவிற்கும் அழுகை வந்துவிட்டது. “நீயில்ல சித்தப்பா சாத்தான், அவனுக தான் சாத்தான்,” என அலோசியை அணைத்தபடி கண்ணீரோடு சொன்னான். பின் தனது கண்ணீரையும் அலோசியின் கண்ணீரையும் துடைத்துவிட்டு, “நீ வா, அவங்க கண்ணு முன்னாடி புதுநன்மை வாங்கு! அது முடியவுட்டி நான் பாத்துக்கறேன் அவனுகள!”
“வேணாம் நிக்கோ! நான் வரல!”
அப்போது மைக்கில் பாடல் நிறுத்தப்பட்டு ஆயர் பேசுவது கேட்டது.
“அலோசியஸ், நான் ஆயர் பேசறேன்! லூர்துசாமி உன்னைப் பற்றி சொன்னார். நீ லூர்துசாமிய விட நல்ல பக்தியா இருப்பியாமே! சீக்கிரம் வா அலோசியஸ்! லூர்துசாமியை விட பக்தியான ஒருவனை நான் பார்த்தது இல்லை,” எனச் சொல்வது கேட்டது.
அலோசியும் நிக்கோவும் அதை ஆச்சரியமாகக் கேட்டனர். “பாரு சித்தப்பா, உனக்காகதான் எசாயா இவ்வளவும் பண்ணிருக்காரு. உங்கப்பா, உன் ஃப்ரண்ட்ஸ் அந்த ஃபாதரு எல்லாம் உன்னைய சாத்தான்னு சொன்னாய்ங்கன்னு அழுத! இங்க பாரு ஆயரே உன்னைய கூப்ட்றாரு. இப்ப போய் நீ புதுநன்மை எடு! எல்லார் மூஞ்சிலயும் கரியைப் பூசுன மாதிரி இருக்கும். வா சித்தப்பா!” என்றான்.
“இல்ல நிக்கோ! நான் வரல!”
“ஏன்!”
“இப்பலாம் எனக்கே கடவுள் இருக்காரான்னு சந்தேகமா இருக்கு நிக்கோ. அந்த சந்தேகத்த இவங்க கிட்ட ஸ்கூல்ல கேட்டா இவங்களால பதில் சொல்ல முடியல. ஏன்னா பைபிள்ள இருக்கதே நிறைய என் சயின்ஸ் புக்கோட தப்பா இருக்கு. ஸ்கூல்ல ஒரு மாதிரியும், சர்ச்ல ஒரு மாதிரியும் சொல்றாங்க. அதை கேட்டா சாத்தான்னு சொல்றாங்க. அதெல்லாம் தாண்டி நான் பக்தியா இருந்தது நான் சாத்தான் இல்லனு நிரூபிக்கத் தான். நேத்து தான் நான் புரிஞ்சுகிட்டேன். நான் என்ன பண்ணாலும் இவங்க என்னைய சாத்தான்னு தான் சொல்லப்போறாங்க! இவங்க சொல்லணுன்றதுக்காக நான் எதுக்கு பக்தியா இருக்கணும். கடவுளே இல்லன்னு நான் நம்புனாலே 6-6-6 ல பிறந்த நானும் சாத்தான் இல்ல தானே. இனிமே எனக்கு இது எதுவும் வேணாம் நிக்கோ.”
“சரி சித்தப்பா! இன்னைக்கு நீ போயி புதுநன்மை எடு! ஆயர்லாம் வந்துருக்காரு. உனக்காக இல்லாட்டியும் எசாயா தாத்தாவுக்காக!”
“நான் போனாலும் இவங்க அதான் சொல்லப் போறாங்க. எனக்கு நம்பிக்கை போயிருச்சு நிக்கோ. இங்க கடவுளும் இல்ல. நான் சாத்தானும் இல்லன்னு நான் நம்பறேன். நான் வரல நிக்கோ. நீ போ! அப்பறம் எனக்காக நீ இதைப் பத்தி கேக்காத! உன் கல்யாணத்துக்கு என்னால எந்தப் பிரச்சனையும் வேணாம். நீ போ நிக்கோ. உனக்கு ஓலை வாசிப்பாங்கல்ல!”
சோகத்தோடு சிரித்தபடி அவன் தலை முடியை வருடினான். “வா இங்க இருக்கதுக்கு வீட்ல இரு” எனச் சொல்லி அழைத்துக்கொண்டு போனான். அலோசியை வீட்டில் விட்டுவிட்டு கோயிலுக்குப் போனான்.
பூசை நடந்து கொண்டிருந்தது. எசாயா இவனைப் பார்த்ததும் ஓடி வந்து, “எங்க அலோசி?” எனக் கேட்டார். உண்மையைச் சொல்லலாமா பொய் சொல்லலாமா என யோசித்தவன் எப்படி இருந்தாலும் தெரியத்தான் போகிறது என உண்மையைச் சொன்னான். “அவன் வரமாட்டேனுட்டான் தாத்தா!” எசாயா கோபம் கலந்த அக்கறையோடு, “அவன் சொன்னான்னு விட்டுட்டு வந்துட்டியா! இன்னைக்கு அலோசி வராட்டி சாத்தான்னு சொல்லி அவன கடைசி வரை பேசுவாங்க! எப்படியாவது கூட்டிட்டு வா!” எனக் கேட்டார்.
“இல்ல தாத்தா, கடவுள் மேல நம்பிக்கையே போயிருச்சு! நான் வரமாட்டேன்னு சொல்லிட்டான்.”
எசாயா திட்டுவார் என எதிர்பார்த்தான். ஆனால் விரக்தியாகச் சொன்னார். “எதுலயும் ஆழத்துக்குப் போகக்கூடாது. அலோசி அடி வரை போக நினைச்சான். என்ன சொல்றது! கடவுள் இவனுங்க வாய எல்லாம் தாங்கறதுக்கு அவனுக்கு சக்தி கொடுக்கணும். வேற என்ன சொல்றது. சரி நீ போய் நில்லு. அந்த பெர்னார்டும் கூட வந்துருக்கான். வந்ததும் உன்னைய கேட்டான். நான் தான் அனுப்பிருக்கேன்னு சொல்லிருந்தேன்” எனச் சொல்லிவிட்டு உள்ளே சென்றார். அலோசி வரவில்லை என்பதை வைத்தே ஊர் மக்கள் பேசத் துவங்கினர். ‘அலோசி உள்ள இருக்க சாத்தான் வேலையக் காட்ட ஆரம்பிச்சுட்டான்’ பேசினர்.
அன்றைய தின இரவுச் செய்தியில், சீனாவில் புது வகையான வைரஸ் தொற்று பரவுவதாகவும் அதற்கு கோவிட் 19 என பெயரிட்டுள்ளதாகவும் மக்கள் அச்சப்படவேண்டாம் எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதாக செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் “இந்தா சாத்தான் வேலையக் காட்டிருச்சு!” எனச் சொல்லி அவனது அப்பா எக்காளமிட்டார்!
