காச்சர் கோச்சர்: நுட்பக்கலையின் உச்சம்

தற்கால கன்னட எழுத்தாளர்களில் விவேக் ஷன்பாக் குறிப்பிடத் தக்கவர். அவர் சிறுகதைகளை வாசித்த பின்னர் அவருடைய பிற நூல்களை வாசிக்க வேண்டுமென்ற உந்துதல் தன்னிச்சையாக எழுந்தது. அவற்றுள் ‘காச்சர் கோச்சர்’ என்ற குறுநாவலை மூன்று காரணங்களுக்காகத் தேடினேன். விவேக் ஷான்பாக் ஒரு மகத்தான கதைச் சொல்லி என்பதுதான் முதற் காரணம். வாசகனைச் சலிப்படையச் செய்யாத மந்திரப் புனைவைக் கைவசம் கொண்டவர்.

இரண்டாவது ‘காச்சர் கோச்சர்’ என்ற விசித்திரமான ஓசைகொண்ட சொற்றொடர். அது கன்னட மொழிச் சொற்றொடர் என்று நினைத்தது தப்பாகிவிட்டது. ஓர் உணர்ச்சிப் பிரவாத்தில் விட்டேத்தியாய் வெளிப்பட்ட ஓசை மட்டுமே அது! எந்தப் பொருளுமற்றது.

மிக முக்கியமான மூன்றாவது காரணம் இந்நாவல் பதினாறு மொழிகளில் மொழிபெயெர்க்கப்பட்ட சிறப்பைப் பெற்றிருப்பது. மிகப் பரவலான கவனம் பெற்ற இந்நாவல் சமீபத்தில் வந்த இந்திய நாவல்களில் சிறந்தது என்று பேசப்பட்டது.

இந்த முறை கண்டிப்பாய் சென்னை புத்தக கண்காட்சிக்குப் போக  வேண்டும் என்ற சங்கல்பம் நிறைவேறியதும் சென்னையை அடைந்த மறுநாள் அவ்விழாவுக்குக் கிளம்பிவிட்டேன். அது காலச்சுவடு பதிப்பகத்தார் கொண்டுவந்த மொழிபெயர்ப்பு நாவல். என் அபிமான மொழிபெயர்ப்பாளர் கே. நல்லதம்பி மொழிபெயர்த்திருந்தார்.

காலச்சுவடு அரங்கில் கண்ணன் இருந்தார். அவர் ஏற்கனவே சை. பீர்முகம்மது மூலம் எனக்குப் பழக்கம். நான் கெடா மாநில எழுத்தாளர் சங்கத் தலைவராக இருந்தபோது, சுங்கைப் பட்டாணியில் காலச்சுவடு பதிப்பக நூல்களைக் காட்சிக்கு வைத்து விற்றுக்கொடுத்தேன். 22 ஆண்டுகளுக்குப் பின்னர் நான் அவரை அடையாளங்கண்டுகொள்வது சிரமமாக இருக்கவில்லை. என்னை அவர் அடையாளம் காண மலேசிய நிகழ்ச்சிகளை நினைவுகூறவேண்டியிருந்தது. நல்லதம்பி மொழிபெயர்த்த நூல்களைக் கேட்டேன். அவரின் பணியாளர் ஏழெட்டு புத்தகங்களைக் கொண்டுவந்து போட்டுவிட்டார். ஆனால் ‘காச்சர் கோச்சார்’ என் மனதில் குச்சார் கச்சிர் (kucar kacir) என்ற  மலாய் மொழி சொல்லாகவே பதிவாகிவிட்டிருந்தது. அம்மொழியில் தினமும் புழங்கியதால் காச்சர் கோச்சர், குச்சார் கச்சிராக மறுபிறவி எடுத்துவிட்டிருந்தது.

நான் ”குச்சார் காச்சிர் வேண்டும்,” என்றேன்.

கண்ணன் உடனே சுதாரித்துக்கொண்டு ‘காச்சர் கோச்சர்’ என்றார். ஆமாம் அந்த நாவல்தான் என்றேன்.  ஆனால் குச்சார் கச்சிருக்கும் காச்சார் கோச்சர் சொற்பொருளுக்கும் மிக நெருங்கிய பொருள் இருந்தது தற்செயலே என்று நூலை வாசித்தபோது தெரிந்தது. அது ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மருவி வந்த சொல்லாக இருக்க வாய்ப்பில்லை என்றே நாவலின் அச்சொல் பிறந்த சம்பவத்தின் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது. 

‘காச்சர் கோச்சர்’ ஒரு குடும்ப உறவின் கதை. எல்லா முக்கிய கதைமாந்தர்களும் அக்குடும்பத்தின் உறுப்பினர்களே. இரண்டு  உபரி பாத்திரங்கள் வருகின்றன. கோபி ஹௌசில் பணிபுரியும் வின்சனும், சித்தப்பாவைத் தேடிவந்த அந்த அநாமதேயப் பெண்ணும் வருகிறார்கள். வின்சன் கதைசொல்லியின் நண்பன். கதையை நகர்த்திச்செல்ல ஒரு சிறிய பாத்திரமாக வருகிறார். ஆனால் அப்பெண்ணின் வருகைதான் கதையின் அடிவேரையே பிடுங்கி புரட்டிப்போடுகிறது.

ஒரு குடும்ப உறவு குறுநாவலாகத் தொடங்கி கடைசி பக்கத்தில் மர்ம நாவலாக மாறி வாசகனை மேற்கொண்டு நாவலைத் தொடர்வதற்கான படிமங்களை நிகழ்த்துகிறது ‘காச்சர் கோச்சர்’.

நாவலில் வரும் சித்தப்பா (வெங்கடாசலம்- நாவல் நெடுக்க சித்தப்பா என்றே கதை சொல்லியால் விளிக்கப்படுகிறார். சித்தப்பா என்ற சொல்லே அவரின் பாத்திரத் தன்மையை முழுமையடையச் செய்யும் முக்கியமான சொல்லாகிறது. அதனால்தான் ‘சித்தப்பா’) தொடக்கத்தில் முக்கியத்துவமற்ற பாத்திரமாகவே நாவலில் சிறு தீற்றலாகக் காட்டப்படுகிறார். அண்ணன் குடும்பத்தில் ஒண்டி வாழும் அவர் ஒரு திருமணமாகாத மனிதர். ஆனால் எல்லா உறுப்பினர்களும் மதித்துப் போற்றும் ஒரு நபராக, அக்குடும்பத்தின் தலைவராக இருக்கும் தந்தையின் (அண்ணனின்) ஸ்தானத்துக்கு எந்த வகையிலும் குறையாதவராக மதிக்கப்படுபவர். சித்தப்பா மீது நமக்கு நல்ல அபிப்பிராயம் பதிவாகும் அளவுக்கு ஓர் அப்பழுக்கற்ற, குடும்பத்தினரின் எல்லாருடைய மதிப்பையும் அன்பையும் சம்பாதித்தவராக இருக்கிறார். கதை நகர நகர அப்பாவைவிட அதிக மதிப்பைப் பெற்றவராகத் பரிணமிக்கிற அளவுக்குக் கதை ஆழம் அடைகிறது. நாவலின் மிக அத்தியாவசிய பாத்திரமாக வாசகன் மனதுக்குள் பதிவாகிவிடும் சித்தப்பா சன்னஞ் சன்னமான பிரத்தியேகமான இடத்தைப் பிடித்துவிடுகிறார். இப்போது குடும்பத்தில் அவர்தான் எல்லாமென்று ஆகிவிடுறது. தொடக்கத்தில் சித்தப்பா இருந்த முக்கியமற்ற இடத்துக்கு அப்பா இடம்பெயர, அப்பா இருந்த இடத்தைச் சித்தப்பா அடைந்துவிடுகிறார். இந்த மாற்றம் நிகழும் பரிணாமத்தை அவ்வளவு கலைநயத்தோடு நிகழ்த்துகிறார் நாவலாசிரியர். நாவலின் இடம்பெற்ற இந்தப் புனைவுத்தருணங்களை வாசகனால் உணரவே முடியாத அளவுக்கு மொழிநடையில் மென்மையைக் கையாள்கிறார்.

இப்போது சித்தப்பா இல்லாமல் குடும்பம் ஓர் அங்குலம்கூட நகர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுகிறது.

சித்தப்பா வலிந்து அண்ணனின் இடத்தைப் பிடித்துக்கொள்ளும் சாகசம் எங்கேயும் ஒலிக்கவில்லை. அந்த அதிகாரம் அவர் கைக்குவரும் மடைமாற்றம் குறித்து விவேக் ஷான்பாக்கின் எழுத்தில் எங்கேயும் கூச்சல் இல்லை. அப்பாவின் வேலை போன பிறகே சித்தப்பாவின் அடுத்தகட்ட உடனடி நடவடிக்கைகளால் தன் ஆளுமையை மெல்ல நிறுவிவிடுகிறார்.  ‘நாமே வணிகம் தொடங்கலாம். அதற்கான அனுபவத்தை அண்ணன் வேலை செய்த கம்பெனியில் பெற்றிருக்கிறார்’ என்று அறிவுறுத்தி, அதேபோன்ற ஒரு உற்பத்தி நிறுவனத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்திக் காட்டுகிறார் சித்தப்பா. குடும்பத்தின் பொருளாதார நிலையில் ஒரு பெரும் பாய்ச்சல் நிகழ்கிறது. நாவலின் ஆர்ப்பாட்டமில்லாத நகர்ச்சியில், சித்தப்பாவின் திறமை அவர் சாதாரண ஆள் இல்லை என்ற அபிப்பிராயத்துக்கு வாசகன் வந்துவிடுகிறான்.

அந்தக் குடும்பத்துக்கு அனிதா மருமகளாக வந்த பின்னரே சித்தப்பா என்ற அப்பழுக்கற்ற பாத்திரத்தின் மீதான புனித பிம்பம் உடையத் தொடங்குகிறது. அனிதா நாவலில் வில்லியாக வரவில்லை. அவள் ஒரு மருமகளின் கடமையிலிருந்து எங்கேயும் பிறழவில்லை. கணவனை ஒரு சுதந்திர மனிதனாக உருவாக்குவதிலும் சமூகத்தில் மதிப்புமிக்க ஆணாக உருவாக்குவதிலுமே அவர் கவனம் செலுத்துகிறார். கணவன், அதாவது கதைசொல்லி  சித்தப்பா நிறுவனத்தில் வேலை ஏதும் செய்யாமல் சம்பளம் பெறுவதில் அவளுக்கு உடன்பாடில்லை. கதைசொல்லிக்கு ஏன் வெட்டிக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் என்ற கேள்வி அனிதாவைப் போலவே வாசகனையும் குடைகிறது. அனிதாவுக்குச் சித்தப்பாவின் மீதான சந்தேகம் எழும் முதல் புள்ளி இங்கேதான் நிகழ்கிறது.

தன் பெற்றோர் வீட்டுக்குப் போன அனிதா குறிப்பிட்ட தேதியில் புகுந்த வீட்டுக்கு வந்து சேராத அச்சந்தர்ப்பத்தில் நமக்குச் சித்தப்பாவின் மீது பலத்த சந்தேகம் உருவாகிவிடுகிறது. அவர் மீதான இச்சந்தேகம் வர அதற்கு முன்னர் அவர் சொன்ன வார்த்தைகளை நாவலுக்குள் மிக நுணுக்கமாக பின்னியிருக்கிறார் விவேக். வாசகன் அது முக்கியமான வார்த்தை அல்ல என்று நிராகரித்துவிட்டு அடுத்த வாக்கியத்துக்குப் போய்விடும் அளவுக்கு அது போகிற போக்கில் சொல்லப்படுகிறது. நாவல் போகும் வேகத்தில் வாசிக்கும் ஆர்வத்தால் அச்சொற்களைக் கவனிக்காமல் கடந்து சென்றுவிடுகிறோம். அதனால்தான் சித்தப்பா மீது சந்தேகம் விழாமல் தட்டானைப் போல ஓசையிமில்லாமல் தாவிச்செல்கிறது நாவல். தொடக்கத்தில் அவரை ஒரு அப்பழுக்கற்ற பாத்திரமாக வரைந்து மெல்ல மெல்ல அவரை ஒரு எதிர் நாயகனாக  வடிவமைப்பதில் விவேக் கட்டி எழுப்பிய சித்திரம் பெரும் கலையாகப் பரிணமித்திருக்கிறது. நாவலின் ஜீவநாடியாக சித்தப்பாவே இருந்திருக்கிறார் என்பது கதை வளர்ந்து அது வந்தடையும் கடைசி கோட்டில் புரிபடும்போது ஷான்பாக்கின் அபாரமான புனைவுத் திறன் மலைக்க வைக்கிறது.

அனிதாவுக்குச் சித்தப்பா மீதான சந்தேகம் எழுவதற்கு ஒரு வலிமையான  சம்பவம் வைக்கப்படுகிறது நாவலில்.

ஒருநாள் வீடுவரை தேடிவந்த ஒரு பெண் வெங்கடாசலத்தின் (சித்தப்பா) பெயர் சொல்லி அவரைப் பார்க்க வேண்டும் என்று நிற்கிறாள். அவள் வந்தது தெரிந்த சித்தப்பா அறைக்குள்ளேயே பதுங்கிவிடுகிறார். சித்தப்பாவின் நற்பண்பின் மேல் உள்ள அசையாத நம்பிக்கையால், அக்குடும்பப் பெண்கள் அவளைத் தகாத வார்த்தைகளால் அவமானப் படுத்தி விரட்டிவிடுகிறார்கள். அவள் கொண்டுவந்த உணவை அவரிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டு தலைகுனிந்து, கண்ணீர் சிந்தியவாறு வந்தவழியே திரும்பிவிடுகிறாள். அனிதாவைத் தவிர, சித்தப்பாவின் நடத்தையின் மீது யாருக்கும் எந்தக் கேள்வியும் எழவில்லை. ஏனெனில் அவர்கள் சிறுவயதிலிருந்தே சித்தப்பாவை மதிப்புமிகு இடத்தில் வைத்துப் பார்த்தவர்கள். குடும்பத்தார் சித்தப்பா மீதுகொண்ட வலிமையான அபிப்பிராயம் ஒரு அநாமதேய பெண்ணின் வருகையால் சிறிதும் சிதைத்துவிடவில்லை. சித்தப்பா தொடங்கிய சொந்த நிறுவனத்தால் அக்குடும்பம் பொருளாதார பலம் பெற்றுவிடுவதால் அவர் மதிப்பு மேலும் உயர்ந்துவிடுவதும், ஒரு காரணம். அப்பெண்ணின் வருகைக்குப் பிறகும் அவளைப் பற்றிய பேச்சும் குடும்பத்தில் எழவில்லை. அது ஒரு பெரிதுபடுத்தப்படாத சம்பவமாகவே மறக்கப்பட்டுவிடுகிறது.

ஆனால், அங்கிருந்துதான் சித்தப்பாவின் நடவடிக்கைகளின் மீது  சந்தேகங்கள் அனிதாவை அரிக்கத் தொடங்குகிறது. சித்தப்பாவின் நடத்தையின் மீது அபார நம்பிக்கை உள்ள அக்குடும்பத்தினர் அதைப்  பெரிதாக பேசாதபோது அனிதா மட்டும் ஆற்றாமையுடன் அதனை விமர்சிக்கிறாள். அனிதாவின் விமர்சனம் குடும்ப சமநிலையைக் கலைத்துப் போடுகிறது. அனிதா சித்தப்பாவைத் தேடிவந்த பெண் அவமதிக்கப்பட்டதைக் கண்டிக்கிறார். அப்பெண்ணின் பக்கமிருந்த நியாயத்தைக் தட்டிக்கேட்கிறார். அக்குடும்பப் பெண்களுக்கும் அனிதாவுக்குமான நேரெதிர் முரண் வாசகனின் கவனத்தைக் கவர்ந்து தன்வசம் வைத்துக்கொள்கிறது நாவல்.

அனிதாவின் எதிர்க்கேள்விகளால் சித்தப்பா நிலைகுலையவில்லை. அமைதியாகத்தான் கடந்து செல்கிறார். அவர் எங்கேயும் எதுவும் பேசவில்லை. தான் குற்றமற்றவன் என்று நிரூபிக்க அலட்டிக்கொள்ளவுமில்லை. அவர் குடும்ப உறுப்பினர்கள் தொடக்க நாள்தொட்டே சித்தப்பாவின் மீது உருவாக்கி வைத்திருந்த அப்பழுக்கற்ற பிம்பம் அப்படியே கலையாமல் நிலைத்துவிடுகிறது. சித்தப்பாவைத் தேடிவந்து வாசலில் நின்ற அப்பெண்னின் நடவடிக்கையால் குடும்ப ஒற்றுமை ஒன்றும் சிதைத்துவிடவில்லை. முடிச்சுக்களால் சிக்குண்ட, ரகசிய மனங்களின் புற நடத்தையை வைத்து மேலோட்டமாக எடைபோட்டு நற்சான்றிதழ் வழங்குவது எவ்வளவு அபத்தமானது என்று நாவல் அடிக்கோடிட்டுச் சொல்கிறது.

சித்தப்பாவின் மனசாட்சி என்ன சொல்கிறது என்று எங்கேயும் வெளிச்சமிட்டுக் காட்டாமல் இருந்தது, காற்றழுத்தத்தால் கடல் அலை ஆர்ப்பரிப்பது போல கதையமைப்பின்  புதிர்த்தன்மையைக் வாசகனிடம் கூடுதலாக்கிவிடுவதற்கு உதவியிருக்கிறது. அது ஒரு தேர்ந்த உத்தி. நாவல் நெடுக்க இதுபோன்ற படிம உத்திகளால் நம்மை நாவலைவிட்டு விலகாமல் பிடித்துக்கொள்கிறார்.

இது தொடர்பாக கணவனோடு சண்டையிட்ட அனிதா, மறு கணத்தில்  பிறந்த வீட்டுக்குக் கிளம்பிவிடுகிறாள். சில காலம் அங்கே தங்கிவிட்டு மீண்டும் திரும்ப பேருந்து ஏறுகிறாள். ஆனால் திட்டமிட்டபடி அந்தக் குறிப்பிட்ட தேதியில் புகுந்த வீட்டை அவள் வந்து சேரவில்லை. அங்கேதான் சித்தப்பா மீது வாசகனுக்கு அணுவளவு சந்தேகம் எழுகிறது. சித்தப்பாதான் அனிதா இல்லாமலானதற்குக் காரணம் என்ற சாம்பல் திரை சந்தேகம் எழுகிறதே தவிர திட்டவட்டமாக அவர்தான் அதற்குக் காரணம் என்பதை வாசகன் முழுமுற்றாக நிராகரிப்பதற்குக் கதையின் நேர்த்தியான கட்டமைப்பு வகை செய்கிறது. சித்தப்பா மீது விழுந்த பழிகளால் ஏன் அவர் கள்ள மௌனம் சாதிக்கிறார், என்பதிலிருந்து அப்பழி பெரிதாக்கப்படுவிடக்கூடாது என்ற தந்திரத்தைக் கையாள்கிறார் என்றே வாசகன் நினைக்க வாய்ப்பும் உள்ளது. விவேக் கதைசொல்வதில் கைதேர்ந்தவர் என்பதை இந்தப் புள்ளியில்தான் அழுத்தமாகப் பதிவாகிறது. 

இந்தக் குறுநாவலில் ஒரு தரப்பு வாசகருக்குச் சித்தப்பா வில்லன் என்றும் இன்னொரு தரப்புக்குச் சித்தப்பா புனிதர் என்றும் முரண்பட்ட கருத்து உருவாக வாய்ப்புகள் உள்ளன. இந்தச் சித்திரமே கதையின் கலையமைதிக்குச் சிறந்த சான்று.

இக்குறுநாவலில் கதைசொல்லலின் ஊடுபாவாக வரும் நுணுக்கச் சித்தரிப்புகள்  நாவலின் அபாரமாக எழுதப்பட்டிருக்கின்றன.

அப்பா என்ற ஒற்றை நபரின் வருமானத்தையே நம்பி சிக்கனமான வாழ்க்கையை மேற்கொள்கிறது அக்குடும்பம். திடீரென்று அப்பாவுக்கு வேலை இல்லை என்றானதும் சித்தப்பாவின் விவேகமான ஆலோசனையின் பேரில் சொந்த நிறுவனம் தொடங்கி பெரிய அளவுக்குப் பொருளாதாரத்தில் தழைத்து முன்னேறிவிடுகிறது. இந்த மடைமாற்றம் நிகழ்வதை நாவலாசிரியரின் கதைகூறல் உத்தி அபாரமான வாசிப்பின்பத்தைக் கொடுக்கிறது.

அவர்கள் முன்னர் குடியிருந்த வீட்டைக் காலிசெய்யும்போது இப்படிக் காட்சிப்படுத்துகிறார்

‘பழைய வீட்டை நல்ல வெளிச்சத்தில் பார்த்தது அதை விட்டுவந்த அந்த நாளில்தான். அன்று வீட்டின் இரண்டு பக்கங்களின் கதவுகள் எல்லாம் திறந்திருந்ததால், என்றும் பார்க்காத அளவு வெளிச்சம் நிறைந்திருந்தது.  அன்று வீட்டின் மூலைமுடுக்குகளெல்லாம் திடீரென்று வெறுமையாகி அம்மணமானதுபோல எனக்குத் தெரிந்தது. அங்குமிங்கும் சேர்ந்திருந்த குப்பை காலி வீட்டில் ஒளிந்துகொள்ள இடமில்லாமல் கண்ணுக்குப் பட்டது. வீட்டின் முழுக்க வெளிச்சமிருந்தாலும், பொருட்களுடன் வீட்டின் உயிரே போய்விட்டதுபோல வீட்டறைகளெல்லாம் சிறிதானதுபோலத் தோன்றியது. சமையல் அறையில் பாத்திரங்களை அடுக்கிவைத்திருந்த அலமாரிக்குப் பின்னால் சின்னச் சின்ன எறும்புக்கூடுகள் தெரிந்தன,’ எனும்போது காட்சிமொழி அழகியல் தன்மையோடு வெளிப்படுகிறது.

நாவலின் இன்னொரு இடத்தில் சித்தப்பா வீட்டுக்குச் சமையல் கேஸ் வாங்கி வருகிறார். ஒரு வீட்டுக்கு முதன் முதன்முதலாக நவீன முறை சமையல் உபகரணங்கள் வரும்போது வீட்டிலுள்ளவர்கள் எவ்வளவு திகைப்படைவார்கள் என்பதை இந்த நுணுக்க விவரணை ஆதாரம்.  

‘அப்பப்பா, அந்த கேஸ் வந்த நாள் வீட்டில் என்ன கொண்டாட்டம்! அடுப்பையும் சிலிண்டரையும் கொண்டுவந்தவர்கள் சரசரவென்று அடுக்கி அடுப்பைப் பற்றவைத்துக் காட்டிவிட்டுச் போய்விட்டார்கள். அவர்கள் அதை சமையலறை நடுவிலேயே வைத்துவிட்டுப் போனார்கள். அதற்குத் தகுந்த இடம் எதுவென்று நாங்கள் அப்போதே முடிவு செய்திருந்தாலும், மறுபடியும் அதையே பேசினோம். அந்தக் காரணங்கள் இல்லாத பேச்சுக்கள் எல்லாம் மகிழ்ச்சியை இன்னும் அதிகமாக்கிக்கொள்வதற்காக. ஐந்து நிமிடத்தில் டீ செய்யலாம் என்பதை அம்மா பத்து முறை சொன்னார். நின்றுகொண்டு செய்தால் சமையல் ருசியாக இருக்காது என்று நையாண்டி செய்தார். ‘சீக்கிரம் ஆய்டும்னு அடிக்கடி டீ கேக்கவேண்டாம்,’ என்று கிண்டல் அடித்தார். கேஸ் சிலிண்டரை கவனமாகத் திறந்து மூடும் வழிகள் விவாதிக்கப்பட்டன. அதற்குள்ளாக அம்மா யார் யார் வீட்டில் எத்தனை நாள் வரும் என்ற விவரங்களைச் சேகரித்து வந்தார். சிலிண்டர் காலியான பிறகு தலைகீழாக வைத்தால் இரண்டு நாள் டீ போடுமளவுக்கு கேஸ் இருக்குமாம்.’ இந்த வாக்கியங்களில் கலை அபிநயத்தோடு நடனமிடுவதை உள்வாங்கும்போது அளவில்லா மகிழ்ச்சி உண்டாகிறது.

கதையில் ஒரு சிக்கல் உண்டாகப்போவதை அறிகுறியாக விவேக் ஒரு குறியீட்டைக் கையாள்கிறார். வீட்டு அடுக்களையில் திடீரென எறும்புகள் நடமாடுகின்றன. அவற்றை ஒழிக்க பல்வேறு முறைகளைக் கையாள்கிறார் குடும்பத் தலைவி. ஆனால் எறும்புகள் அசைந்துகொடுக்கவே இல்லை. என்ன நிவாரணம் மேற்கொண்டாலும் மீண்டும் மீண்டும் தோன்றி வீட்டுத் தலைவியின் நிம்மதியைக் குலைக்கிறது. அவள் நடு இரவில் எழுந்து எறும்பின் தொல்லையைக் கண்காணிக்கும் அளவுக்கு அவள் தன்னிலை இழப்பாதாகக் காட்டுகிறார் கதாசிரியர். இந்த எறும்புத் தொல்லையையும் அனிதாவின் வருகையையும் ஒப்புநோக்க வைப்பதாகக்கூட எடுத்துக்கொள்ளலாம்.

‘காச்சர் கோச்சர்’, குடும்ப உறவு நாவல் என்ற கட்டமைப்பிலிருந்து, மர்ம நாவலாக பரிணாமம் காணும் இடம், ரசனைமிக்கது. ஏனெனில் நாவல் முடியும் இடத்தில் சட்டென்று மாறி வேறு ஒரு தளத்தில் இயங்குவதற்கான அறிகுறிகளைக் காட்டும்போது, வாசகன் திகைப்படைகிறான். வாசகனேகூட நாவலின் தொடர்ச்சியைக் கற்பனையால் புனைந்துகொள்ளும் சூழலை உருவாக்கிவிடுகிறார் விவேக் ஷண்பாக்.

அனிதா அந்தப் பெண்ணுக்காகக் குரல் கொடுத்ததும், அக்குடும்ப உறுப்பினர் சித்தப்பாவைக் குற்றமற்றவராகக் கருதுவதும் அவரவர் பக்க நியாயங்களைப் பறைசாற்றுகிறது. இந்தக் கருத்து மோதல் கதைக்குள் ஒரு வேக கதியை  உண்டாக்கி சுவாரஸ்யப்படுத்துகிறது.

இந்த நாவலில் சொல்லப்படாத மறைபொருளாக இருப்பது, அந்தப் பெண்ணின் பிரசன்னத்துக்குப் பிறகான சித்தப்பாவின் இருப்பு! அந்த அநாமதேயப் பெண்ணின் குறுக்கீட்டுக்குப் பின்னர், எந்த அளவுக்கு வீழ்ந்துபோயிருப்பார் என்பதை வாசகனை அனுமானிக்க வைக்கிறார். சித்தப்பாவின் மீது அளப்பரிய மதிப்பைச் செலுத்திய குடும்ப உறுப்பினர்கள், தன் அந்தரங்கம் உடைபட்ட பின்னர் அவர்கள் தன் மீது கொண்ட உயர்ந்த அபிப்பிராயம் எந்த அளவுக்கு நொருங்கிப்போயிருக்கும் என்பதை விவேக் எதுவும் சொல்லாமலேயே வாசக மனதில் அழுத்தமான படிமமாக பதிவிட்டுவிடுகிறார்.  நாவல் முடிந்த பிறகும் தொடர்வதற்கான புதிய கதவைத் திறந்து காட்டுகிறது இந்த நுட்பம். இனி அவருடைய தத்தளிப்பு, தாழ்வெண்ணம், தனிமை இவைதான் அவருடைய இருப்பை நிர்ணயிக்கப்போகிறது என்று சொல்லாமலும் நழுவிக்கொண்டது அவருடைய படைப்பின் கூர்நோக்கைப் பறைசாற்றுகிறது.

அனிதா வீடு வந்து சேராமல் என்ன ஆனாள்? அவள் முற்றாகவே காணாமலானாளா? அவள் கொலைசெய்யப்படுவிட்டாளா? போன்ற எண்ணற்ற புதிர்களோடு நாவல் முற்றுப்புள்ளி வைத்துக்கொள்ளும்போது வாசகன் தத்தளிப்புக்குள்ளாகிறான்.

நாவலின் ஆன்மா எங்கேயும் பிறழ்வுறாமல் வாசகனின் நெஞ்சை அள்ளும் மிக நெருக்கமான மொழியால் பெயர்த்துள்ளார் கே. நல்லதம்பி. நேமிசந்த்ராவின்  யாத்வஷேம் நாவலைத் தமிழில் மொழிபெயெர்த்ததற்காக இவருக்கு சாகித்ய அக்காதமி விருது வழங்கப்பட்டுள்ளதை இத்தருணத்தில் நினைவுகூரத்தக்கது.

‘காச்சர் கோச்சர்’ என்ற சொல் தோன்றிய விதம் சற்று நகைச்சுவையானது.

ஒரு முறை அனிதா தன் தம்பியோடு பட்டம்விட்டுக்கொண்டிருக்கும்போது இரு பட்டங்களின் நூலும் சிக்கிக்கொள்கிறது.  எவ்வளவு முயன்றும் அச்சிக்கலைப் பிரித்தெடுக்க முடியவில்லை. அத்தருணத்தில்தான் தம்பி கடுப்பாகி ‘கச்சார் கோச்சர்’ என்ற புழக்கத்திலேயே இல்லாத சொல்லை விட்டேத்தியாய்ச் சொல்கிறான். அன்றிலிருந்தே அச்சொல் மிகச் சிக்கலான நேரங்களில் அனிதாவாலும் கதைசொல்லியாலும் பாவிக்கபபடுகிறது. நாவலில் இறுதியில், அனிதா வீடு வந்த சேராத அந்தச் சிக்கலான நேரத்தில் அச்சொல் கதைசொல்லியின் நினைவுக்கு வருகிறது. அப்படியென்றால் குச்சார் காச்சிர் (kucar kacir) என்ற மலாய் மொழி சொல் ‘காச்சார் கோச்சர்’ நாவலைக் கதைப்பொருளுக்கு மிகப் பொருந்தி வருகிறதுதானே? (மலாய் மொழி தெரிந்தவர்கள் மட்டுமே இதைப் புரிந்துகொள்ள முடியும்)

தன் குடும்பத்துக்காக உழைக்கும் தியாகியாகவே நாவலில் கட்டமைக்கப்பட்ட சித்தப்பா யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் குறுக்கிட்ட ஒரு பெண்ணின் வருகையால், அவரின் ஆளுமை மணல் வீடென சரிந்துவிடுகிறது. அந்தப் பெண் காரிருளில் மின்னலாகத் தோன்றி இடியையும் மழையையும் கொண்டு வந்துவிடுகிறாள் வாசக மனதுக்குள்ளும். மனிதர்கள் எல்லாத் தருணங்களிலும் நல்லவர்களாக இருந்துவிடுவது சாத்தியக் குறைவானது. எல்லாரிடமும் நல்லவையும் இருக்கும் அல்லவையும் இருக்கும். சித்தப்பா மட்டும் எப்படி விதிவிலக்காக இருந்துவிட முடியும். அந்த அனாமதேயப் பெண்ணைத் தன் குடும்ப உறுப்பினர் முன்னிலையிலேயே பார்க்கத் தைரியம் இல்லாதபோதே நமக்குள் புயல் வீசியதுபோல பலத்த குழப்பம் நுழைந்துவிடுகிறது. அவருடைய மறுபக்க அசிங்கம் புலனாகிவிடுகிறது. அவர் கட்டியெழுப்பிய  ஆளுமை சரிந்துவிட நாம் திகிலடைகிறோம். விவேக் ஷான் பேக் தன் புனைவாற்றலால் இதனை அத்துணை சாமர்த்தியமாகக்  கையாண்டிருக்கிறார்.

‘காச்சர் கோச்சர்’ புனிதர்கள் என்று மதிக்கப்படுபவர்கள் வாழ்க்கை நெடுக்க புனிதர்களாகவே நிலைத்துவிடுவது சாத்தியமே இல்லை. வாழ்க்கைச் சூழல் அவர்களின் திசையை நிர்ணயிக்கிறது. அதனை எதிர்நோக்கும் தருணங்களில்தான் அவர்கள் புனிதர்களா, பாவப்பட்டவர்களா என்பதைக் காட்டுகிறது. வாழ்க்கையில் வழுக்கி விழுந்தவர்களைச் சர்வ சாதாரணமாகக் கண்டிருக்கிறோம். எனவே, அந்தப் பாத்திரம் யதார்த்தத்தைவிட்டு விலகிவிடவில்லை.  

நம்மை வந்தடையும் நூற்றுக்கணக்கான புனைவுகளில் கலைநயத்தோடு படைக்கப்படுவன மட்டுமே படைப்புலகில் நின்று நிலைக்கின்றன. மற்றவற்றைக் காலம் காவுகொண்டுவிடும். கதை அநேகருக்குக் கிடைக்கும் ஆனால் அதற்குள் கலை வசமாவதுதான் பிரச்சனையாக இருக்கும். ‘காச்சர் கோச்சர்’, பஞ்சு காற்றில் தவழ்வது போன்ற அலட்டலற்ற மொழிநடை கொண்டது. அழகியலால், கதை கூறலின் விசையால், வாசக மனங்களை அலைக்கழிக்கவைக்கும் புதிர்களால், உள்நுட்பத்தால், சிறந்த நாவல் என்ற அந்தஸ்த்தைப் பெறுகிறது.   

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...