சுஜாதா சிறுகதைகள்: தமிழாசியா சந்திப்பு

மார்ச் மாத தமிழாசியாவின் சந்திப்பு அமர்வில் எழுத்தாளர் சுஜாதா அவர்களின் சிறுகதைகள் குறித்து பேசப்பட்டது. பொதுவாக, அவர் வணிக எழுத்தாளர், அவரது எழுத்துக்களில் எவ்விதமான ஆழமோ அடர்த்தியோ இருக்காது என்ற விமர்சனங்கள் நம் செவி கேட்டிருக்கும். நவீன எழுத்தாளர்களின் ஒட்டு மொத்த எண்ணம் அதுவாக இருக்கலாம். ஆம் அவர் வணிக எழுத்தாளர்தான். ஆனால், சில கதைகளில் அவர் மானுட விழுமியங்களைச் சென்று தொட்டு அதன் விளிம்பில் ஏறி நிற்கிறார். ஒரு திரைப்பட பாணியில், அந்த உச்சத்தைச் சொல்லி விட்டு செல்கிறார் என்பதே இந்தச் சந்திப்பின் மைய சிந்தனையாக இருந்தது.

முதல் சிறுகதை ‘நகரம்’. நகரத்திலிருக்கும் ஒரு பெரும் மருத்துவமனைக்கு வரும் பெண் வள்ளியம்மா. தன் மகள் பாப்பாத்தியைத் தூக்கி கொண்டு அங்கும் இங்கும் அலையும் காட்சி. பதற்றமும், பரபரப்பும் நிறைந்த ஒரு நகரத்தின் மைய புள்ளியில் இருக்கும் ஒரு மருத்துவமனைக்குள் அலைக்கழிக்கப்படும் இயல்பான, சாமானிய பெண்ணின் மிரட்சி தான் இக்கதை என்று கூறலாம். மக்கள் திரள் எனும் பெரு வெள்ளம். அதில் அடித்து செல்லப்படும் நாம், இந்தக் கால சுழற்சியின் சக்கரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் திருகாணி. அதை சொல்கிறது இக்கதை.

இக்கதையையொட்டி தமது பார்வையை முன்வைத்தார் சல்மா இக்கதை மனிதநேயத்தின் சாயலைக் காட்டுவதோடு பணம் உள்ளவர்களையும் அப்பணம் இல்லாதவர்களையும் எப்படி நகரம் நகர்த்தி வைக்கிறது என்பதையும் விளக்கினார். வள்ளியம்மா தன் நோயுற்ற மகளை மருத்துவமனையில் சேர்க்க அலைவதும் எதை எங்கே எப்படி செய்ய வேண்டும், இங்கிருக்கும் வழிமுறைகள் என்ன என்பதை அறியாததால் குழம்பி போய் இருக்க தான் முடிகிறது. அவர் மேல் பரிதாபப்படும் ஒரு டாக்டர் இருக்கையில் பணம் இருந்தால் மட்டுமே மகளை மருத்துவமனைக்குள் அனுமதிக்க முடியுமென்று சொல்லும் அங்கிருக்கும் வேறு சிலரும் ஒரே இடத்தில  இருப்பதை சல்மா அவர்கள் குறிப்பிட்டார்.

கிராமத்திலிருந்து வரும் வள்ளியம்மாவிடம் உண்மையில் டாக்டர் பரிதாபப்பட்டாரா என்ற சண்முகா அவர்களின் கேள்விக்குப் பதில் அளித்த பொழுது, இந்த கதையை வாசிக்கையில் ஒரு திரைப்படம் தான் ஞாபகம் வருகிறது என்று புஷ்பவள்ளி அவர்கள் கூறினார். அங்கும் இங்கும் அலைச்சலை ஏற்படுத்தி, ஒருவர் கருணை கொள்வதும், இன்னொருவர் லஞ்சம் கேட்பதும் தமிழ் திரைப்பட பாணி தான் என்று சொல்ல, அனைவரும் அதை ஆமோதித்தனர். ஏழைகளிடம் வருமானத்தைப் பற்றி டாக்டர் கேட்கிறார் என்பதை, பணம் பறிக்க தான் என்று பேச்சு எழ, அதை மறுத்து அதை ஏழைகளின் நலன் கருதி இலவச சிகிச்சைக்காகவே கேட்கப் படுகிறது என்று ம.நவீன் அவர்கள் விளக்கினார்.

அரவின், இக்கதையை மனிதாபிமான அடிப்படையில் பார்க்காமல், இரு வெவ்வேறு மொழிகள் இங்கே பேசப்படுவதாக சொன்னார். நகரம் பேசக்கூடிய மொழியில், விதிமுறைகளுகேற்ற வழிமுறைகள் உண்டு என்றும் கிராமத்தில் அது வேறு வகைபடும் என்றும் விளக்கினார்.

ஒரு கட்டமைப்புக்குள் இருக்கும் ஒரு அமைப்பு என்பது தான் நகர மைய கூடங்கள். மருத்துவமனையும் அதில் அடங்கும். அன்றைய காலங்களில் அரண்மனையையும் அதை சுற்றிய சேவகர்களும் எவ்வாறு ஒரு வெண்குடையின் கீழ் அமைகிறார்களோ அவ்வாறுதான் இதுவும் என்று ம. நவீன் அவர்கள் சொன்னார். போரென்று ஒரு நாட்டில் வந்தால், ஒரு போர் வீரன் எவ்வித தடையுமின்றி களம்பட போர் முனைக்கு செல்ல வேண்டும். அந்த அமைப்புக்கு அவன் தன்னை ஒப்புக் கொடுக்க வேண்டும். இவ்வித அமைப்பின் கோர படியில் சிக்குபவர்களுக்கு, கருணை கிடையாது. விதிமுறைகள் ஒருவருக்கும் தயை காட்டாது என்று ம. நவீன் சொல்லி முதல் கதையை நிறைவு செய்தார்.

அடுத்து, சண்முகா அவர்கள் சுஜாதாவின் ‘குதிரை’ என்ற கதையைப் பற்றி பேசினார்.

கிருஷ்ணசாமி என்பவரின் வாழ்க்கையில் நிகழ்ந்த இக்கதை அங்கத உணர்வைத் தந்தாக எனக் கூறி தமது பேச்சைத் தொடங்கினார். தான் இவ்வுலகில் யார், எனது அடையலாம் இங்கே என்ன என்பதுதான் கதை. நடந்து செல்லும் கிச்சாமியை ஒரு குதிரை கடித்து விடுகிறது. அது கடித்ததை வந்து வீட்டில் மனைவியிடம் பெரிய விஷயம் போல் பேசுகிறார். தனக்கு இப்படி நிகழ்ந்து விட்டது, என்னைப் பார் என்று அவர் மனைவியிடம் தொடர்ந்து சொல்வதும் அதை அவர் மனைவி கண்டு கொள்ளாமல் இருப்பதும், ஒரு வகை நிராகரிப்பே என்று சண்முகா சொன்னார். அவரது ஆளுமையற்ற ஒரு மனநிலை; அதாவது, மனைவி தன்னைக் குறைத்து பேசுவதை அறிந்தும் அதை பற்றி எதுவும் கேட்காமல் இருப்பதும் கடித்த குதிரையைகூட சட்டை ஏதும் செய்யாமல் வீட்டிற்கு வந்து குமுறுவதும் இந்த மனநிலையில் சுகம் காண்பவர்களின் குணம் தான் என்று சண்முகா அவர்கள் விளக்கினார்.

இவ்வகை மனிதர்கள் தங்கள் இயலாமையை மறைத்து தங்களது இருப்பை இங்கே தக்க வைத்து கொள்வதற்கு எதையாவது ஒன்றை வேண்டுமென்றே ஒரு பெரிய விஷயமாக்குவார்கள் என்று சொல்லி, இது ஒருவகை சாதி மனநிலையும் கூடத்தான், என்று ஒரு புதிய பார்வையை முன் வைத்தார். எந்தவிதமான உழைப்புமின்றி, வெறும் இலவசமாக தனக்கு எல்லாம் கிடைத்து விட வேண்டுமென்ற அகப் போக்கை முன்னிறுத்தி, தனக்கென ஒரு மதிப்பும் மரியாதையையும் அடைந்து, புளங்காகிதம் அடைந்து கொள்வர் என்றும் கூறினார்.

சுஜாதாவின் மிகப்பெரும்பாலான கதைகள் வெறும் வணிக நோக்கத்திற்காக எழுதப்பட்டதை, இக்கதையிலும் பார்க்க முடிகிறது என்று அரவின் குமார் அவர்கள் சொன்னார். அடையாள தேடல் கொண்ட அவருக்கு அது திண்டாடமாகவே அமைகிறது. கிச்சாமி மட்டுமல்ல, மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் இந்த அகத்தேடல் கொண்ட ஆளுமை நிமிர்வு தேவைப்படுகிறது. எப்படி ஆயிரக்கணக்கான எறும்புகளில் ஒவ்வொரு எறும்புக்கும் தனக்கென ஒரு அடையாளத்தைத் தேடி தன் வாழ்நாளைத் தொடர்கிறதோ, அந்தப் புள்ளியில் சென்று இக்கதை முடிவது தான் இதன் அழகு என்று ம. நவீன் அவர்கள் விளக்கினார்.

அடுத்த கதை ‘பிலிமோத்சவ்’. இதை அபிராமி அவர்கள் விளக்கி பேசும் பொழுது, இக்கதை பெண்களின் மேல் வைக்கபடும் ஒரு வகை வன்மம் என்றே முன்வைத்தார். திரைப்படங்களில் காட்டப்படும் ஆபாச படக் காட்சிகள், அதை விரும்பி பார்க்கும் இருவர். பெண்களை வெறும் போக பொருட்களாக மட்டுமே பார்க்கும் ஆண்கள்; இது பெண்கள் மீது நிகழ்த்தப்படும் ஒருவகை வன்முறை என்றே கொள்ளபடுகிறது என்று அபிராமி சொன்னார்.

வெறும் காமத்தைக் கற்பனையில் மட்டுமே ரசித்து வாழும் ஒருவனுக்குச் சில உடற் சுகங்கள் நிகழாமல் போகவே, அவன் அதை எவ்வாறு தன்னுளேயே நிகழ்த்திக் கொள்கிறான் என்ற போக்கில் கதை நகர்வதாக விளக்கினர். கதை இறுதியில், அவனைத் தேடி வரும் ஒரு விலைமாது புரோக்கர் தன்னிடம், இத்தனை விதமான பெண்கள் இருக்கிறார்கள் என்று சொல்லியும், அவன் அதை ஏற்காமல் உதறி செல்வது ஏன்? காமத்திலே மூழ்காத தனக்கு, அதை சரிவர நிகழ்த்த முடியாது, என்ற  பயம் தான் என்று அபிராமி அவர்கள் சொன்னார். தன்னை அந்தப் பெண்கள் நிராகரித்தால் ஒரு சொல் இகழ்ந்துரைத்தால் தன் ஆண்மை அழகற்றதாகி விடும் என்ற தயக்கத்தினால், அவன் அதை ஏற்காமல் செல்கிறான்.

பெண்கள் மீது, நிகழ்த்தப்படும் வன்முறை இக்கதையில் என்ன என்று ம. நவீன் கேள்வியை முன்வைக்கவே, அதை வன்முறை என்று சொல்வதை விட, ஒரு கதை நகர்த்தலுக்குப் பெண்ணின் மீது ஏற்றி வைக்கப்படும் காமம் சார்ந்த பிம்பங்கள் பெரும்பாலான கதைகளிலும் திரைப்படங்களிலும் வருகின்றன என்று அபிராமி சொன்னார்.

அரவின் பேசும் பொழுது, கதையின் நாயகன், வாழ்வதே, தன் தாயுடனும், தன் ஐந்து தங்கைகளுடனும் தான். பெண்களை மிக அருகாமையிலிருந்து அறிந்தவன் அவன். அப்படியிருக்க, அவன் பெண்களை வெறும் காமம் சார்ந்து பார்ப்பான் என்பது முரண் படுகிறது என்று சொல்லி, ஒரு வேலை தனக்கு தானே, அவன் ஏற்படுத்திக் கொண்ட பிம்பங்கள் தான் இவை யாவும் என்று விளக்கினார்.

‘ஓர் உத்தம தினம்’ என்ற கதையை, சிவரஞ்சினி விளக்கி பேசினார். தன் பிறந்தநாளன்று, அளவேயில்லாத  மகிழ்ச்சிகளைச் சந்திக்கும் ஒரு பெண்ணின் கதை. அன்றாடம், மிக இயல்பாக பார்க்கும் அனைத்திலும் அவள் மகிழ்வைக் காண்கிறாள். தான் தாயாக போகும் உணர்வை அடைகிறாள். இன்னும் இன்னும் என மகிழ்ச்சியை மட்டுமே ஒரு பெண் அடைவதை கதை விளக்குவதாக சிவரஞ்சினி அவர்கள் பேசினார். கதையின் இறுதியில், அவளுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. அந்த  வரியில் கதை நிறைவு பெற்று விடும். அதன் காரணத்தை அனைவரும் விவாதிக்க, அது வாசகர் இடைவெளியாய் ஆனது.

மிக இயல்பாய் பார்க்கும் ஒவ்வொன்றிலும், ஒரு சந்தோஷத்தை ஏற்படுத்தி கொள்ள காரணம் என்ன? அது ஒரு வகையில், நாம் அன்றாடம் பார்க்கும் அற்பமான விஷயமாக இருக்கலாம். அதில் என்ன மகிழ்ச்சி? அப்படி ஏன் மகிழ்ச்சியை அற்பத்தில் கண்டறிய வேண்டும் என்று நமக்குள் கேள்வி எழ வேண்டுமென்று ம. நவீன் சொன்னார். அது அவளே, அவளுக்கு வலுகட்டாயமாக கட்டமைத்துக் கொள்ளும் சந்தோஷங்கள். நான் மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன் என்று புறவுலகிற்கான பாவனைகள் மட்டுமே. தனது பிறந்தநாளன்று, கணவன் பக்கத்தில் இல்லாமல், அவர்களது திருமண நாளின் பதிவு படத்தைத் திரும்ப திரும்ப பார்க்கும் அவளின் மன துன்பம் தான் கதையில் வரும் அனைத்து மகிழ்ச்சிகளுக்கும் அடிநாதம் என்று அவர் விளக்கினார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...