அப்சரா: முதல் எழுத்து; முதல் நூல்; முதல் அடையாளம்.

மே 24-ஆம் தேதி அன்று, வல்லினம் இணைய இலக்கியக் குழு ஏற்பாடு செய்திருந்த, ‘முதல் எழுத்து’ நிகழ்ச்சியில் என்னுடைய முதல் நூலான ‘அப்சரா’ வெளியீடு கண்டது.

‘முதல்’ என்ற சொல்லுக்கே ஒரு தனி மந்திரம் இருக்கிறது. முதல் அடியில் இருக்கும் பதற்றம், முதல் வெற்றியில் இருக்கும் பரவசம், முதல் அனுபவத்தில் இருக்கும் ஆச்சரியம் என இவை அனைத்தும் வாழ்வில் ஒரே ஒரு முறை மட்டுமே கிடைக்கும். என் முதல் நூலின் வெளியீட்டு நாளும் ஒரு சாதாரண நிகழ்வாக இல்லாமல், மனதின் ஆழத்தில் பதிந்த முதல் அரிய அனுபவமாக இருந்தது. அந்த நாளின் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு உணர்வும் இன்றும் நினைவில் பசுமையாக இருக்கிறது.

விழா முடிந்து கை நிறைய பரிசுகளோடு லிப்ட்டில் ஏறினேன். பத்தாவது மாடிக்குச் செல்ல வேண்டும். ஆனால் கைகளில் அத்தனை பரிசுகள் இருந்ததால் எந்த விரலையும் நீட்டி லிப்ட்டில் விசையை அழுத்த முடியவில்லை.

அருகில் நின்றிருந்த ஒருவரிடம், “பத்தாவது மாடிக்குத் தட்டித் தர முடியுமா?” என்று கேட்டேன். என் கைகளில் நிரம்பியிருந்த பரிசுகளைப் பார்த்த அவர் உடனே உதவினார்.

“இன்று உங்களுக்குப் பிறந்த நாளா?” என்று புன்னகையுடன் கேட்டார்.

“இல்லை,” என்று நானும் அதே புன்னகையோடு பதிலளித்தேன்.

“அப்படியென்றால் ஏன் இவ்வளவு பரிசுகள்?”

“இது வேறொரு கொண்டாட்டம்,” என்றேன்.

சில நொடிகள் என்னைப் பார்த்துக்கொண்டிருந்த அவர், “உங்களைப் பார்க்கவே எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்த மகிழ்ச்சியான தருணம் உங்களிடம் எப்பொழுதும் நிலைக்கட்டும்,” என்றார்.

அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே லிப்ட் பத்தாவது மாடியை அடைந்து, சொர்க வாசல் போல கதவு திறந்தது. அன்று அப்படித்தான். வழக்கமான அத்தனை நிகழ்வுகளும் அசாதாரண இன்பத்தைக் கொடுத்தன. அவரிடம் நன்றி கூறி விடைப்பெற்றேன். ஆனால் அவரது வார்த்தைகள் மட்டும் மனதில் ஒலித்துக் கொண்டே இருந்தன. பரிசுகளையெல்லாம் சுமந்தபடி ஒரு வழியாக வீட்டுக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தேன். கைகளில் இருந்த பரிசுகளையும் நினைவுகளையும் மேசையின் மேல் வைத்துவிட்டு, வீட்டுக் கதவை மெல்ல சாத்தினேன்.

சில மணி நேரத்திற்கு முன்பு வரை நான் ஆரவாரமும் கொண்டாட்டமும் நிறைந்த ஒரு உலகத்தில் இருந்தேன். வாழ்த்துக்கள், கைதட்டல்கள், புகைப்படங்கள், உரையாடல்கள் என்று உற்சாகம் நிரம்பியிருந்த அந்தச் சூழலிலிருந்து வீட்டுக் கதவை மெல்ல மூடியதும் நான் சுமந்திருந்த மனநிலை மெதுவாக விலகிச் சென்றது. என் வீட்டிற்கே உரிய அமைதியும் ஏகாந்த நிலையும் என்னைப் வந்து பற்றிக்கொண்டன. நான் என்னுடைய இயல்பான நிலைக்குத் திரும்பினேன்.

ஒரு நீண்ட பயணம், ஒரு பெரிய முயற்சி அல்லது ஒரு இலக்கை அடைந்த பிறகு, மனம் ஒரு விசித்திரமான நிலையை அடைகிறது. அது வெறும் மகிழ்ச்சி அல்ல; ஓர் ஆழமான நிறைவான அமைதியை மனம் உணரும் தருணம். அந்த நிலையில் பெரிதாக எந்தச் சிந்தனையும் இருக்காது. அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்ற அவசரம் இருக்காது. கிடைத்ததைப் பற்றிய பெருமிதமும் இருக்காது. இழந்ததைப் பற்றிய கவலையும் இருக்காது. வெறுமே ஓர் ஆழமான நிறைவு மட்டுமே இருக்கும். பெரும்பாலும் மகிழ்ச்சியான உணர்வு சிரிப்பாகவோ, உற்சாகமாகவோ, கொண்டாட்டமாகவோ பிரதிபலிக்கும். ஆனால் சில நேரங்களில் மகிழ்ச்சியின் உச்சம் அமைதியாகவே வெளிப்படுகிறது. மனம் எதையும் தேடாமல், எதையும் நிரூபிக்காமல், ஒரு நிமிடம் தன்னோடு தானே முழுமையாக இருப்பதுதான் நிறைவான மகிழ்ச்சி என எப்பொழுதும் தோன்றும். அன்று இரவு நான் உணர்ந்ததும் அப்படிப்பட்ட ஓர் அமைதியைதான். என் வாழ்க்கை பயணத்தில், நான் பத்திரமாகச் சேமித்து வைத்துக்கொள்ள விரும்பிய ஒரு நாள்.

கை நிறைய கொண்டு வந்த பரிசுகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தேன். ஒவ்வொரு பரிசின் பின்னாலும் ஒரு முகம் இருந்தது. ஒரு வாழ்த்து இருந்தது. ஒரு அன்பு இருந்தது. அந்தப் பரிசுகளைத் தொட்டபோதெல்லாம், அவற்றைக் கொடுத்தவர்களின் புன்னகைகளும் வார்த்தைகளும் நினைவுக்கு வந்துகொண்டே இருந்தன. பரிசுகள் வைக்கப்பட்டிருந்த மேசைக்கு அருகிலிருந்த சுவரில் அம்மாவின் படம் தொங்கிக்கொண்டிருந்தது. எப்படிப்பட்ட இருளிலும் அம்மாவின் படத்திலிருந்து ஓர் ஒளி இடைவிடாமல் பிரகாசித்துக்கொண்டே இருக்கும். அம்மாவின் படத்திலிருந்து வரும் ஒளி கண்களைத் தாண்டி மனதிற்குள் சென்று பிரகாசிக்கும். அன்றும் பிரகாசித்தது.

***

முதல் முறையாக புத்தக வெளியீட்டு மேடையில் நிகழ்ச்சி தொகுப்பாளர் என்னை ‘எழுத்தாளர் கோகிலவாணி கிருஷ்ணமூர்த்தி’ என்று அறிவித்தார். நர்த்தகி, பாடகி, ஆசிரியர் எனும் வரிசையில், இன்றைக்கு ‘எழுத்தாளர்’ என அடையாளம் என் பெயர் முன் சேர்க்கப்பட்டிருந்தது. பத்மா சுப்ரமணியம் 108 நடன கரணங்களையொட்டி (108 கரணம்; பரதநாட்டியம் மற்றும் சிவதாண்டவத்தில் உடல் உறுப்புகளின் அசைவுகள்) பல கோயிகளுக்கும் பல நாடுகளுக்கும் சென்று ஆய்வு செய்ததுபோல, நானும் ஆசிய நாடுகளுக்கெல்லாம் சென்று, நடன கலைகளையொட்டி ஆய்வினைச் செய்து ஒரு புத்தகம் எழுதுவேன் என சிறுவயதில் அம்மாவிடம் சொல்லி சபதம் போட்டிருக்கிறேன்.

“அப்படி ஒரு புத்தகம் நீ எழுதிட்டா, நான் அந்தப் புத்தகத்தை எப்பொழுதும் என் தலையணைக்கடியில் பத்திரமாக வைத்து, தினமும் இரவில் மீண்டும் மீண்டும் படித்துவிட்டு, தூங்குவேன்,” என அம்மா சொன்னது நினைவில் உதித்தது. அந்த நினைவு, என் உடலைத் தளரச் செய்தது. தலையணைக்குப் பதிலாக என் புத்தகத்தை அவர் படத்திற்கு அடியில் வைத்தேன். இன்று அவ்வளவுதான் செய்ய முடிந்தது.

சிறுவயதிலிருந்து நம் மனத்தின் ஆழத்தில் விதைக்கப்படும் ஒவ்வொரு ஆசைக்கும் பிரபஞ்சம் ஒரு நேரம் நிர்ணயித்து வைத்திருக்கும். நாம் தயாராகும் அந்தச் சரியான தருணத்தில், அது அதனை நம் வாழ்க்கையில் பிரதிபலிக்கும். போன வருடம் செப்டம்பர் மாதம் என்று நினைக்கிறேன், பிரபஞ்சம் எனக்காக விதிக்கப்பட்ட நேரத்தை எழுத்தாளர் ம. நவீன் மூலம் நகர்த்தியது.

“வல்லினத்தில் நீ எழுதிய கட்டுரைகளையெல்லாம் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டால், மலேசியாவில் முக்கியமான புத்தகமாக இருக்கும். மலேசியாவில் கலைகளை மையமாகக் கொண்ட புத்தகம் மிகவும் குறைவு,” என்று எழுத்தாளர் ம. நவீன் சொல்லியிருந்தார்.

அவர் சொன்னதும் என்னால் சிரிப்பை அடக்க முடியாமல் வாயிலிருந்து பொத்துக்கொண்டு வெளியே வந்தது. வந்த சிரிப்பு, அடுத்த நொடியே பதற்றமாக மாறியது.

கல்லூரி நாட்களில் என் தமிழ்மொழியின் நிலையைப் பார்த்து விரிவுரையாளர்கள் கண்டித்துள்ளனர். தமிழ்மொழியில் சரளமான வாசிப்பும் தெளிவான பேச்சும் இல்லாத காரணத்தால் வந்த விளைவு அது. கல்லூரியில் எனக்குத் தமிழ் உச்சரிப்பு வராது என்பதைப் பலரும் அறிந்தே வைத்திருந்தனர்.

ஒருநாள் கல்லூரியில், சக நண்பன் ஒருவன் என்னைச் சதா கிண்டல் அடித்துக் கொண்டே இருந்தான். அவன் என்னைக் கண்டாலே சீண்டாமல் இருக்கமாட்டான். அவனின் தொல்லையைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், “உன்னை வந்து குத்தப் போற பாரு”, எனச் சொல்வதற்குப் பதிலாக, ‘கூத்தனா’ எனச் சொல்லிவிட்டேன். வகுப்பறையே சிரித்தது. இப்படித் தமிழைத் தப்பு தப்பா உச்சரிப்பதுதான் என் வேலை. அப்போது அவ்வளவுதான் தமிழ் வரும். பல கிண்டல்களுக்கும் பலரின் கேலிகளுக்கும் ஆளானவள்தான் நான். அன்றிலிருந்து, இன்னமும் என்னை என் கல்லூரி நண்பர்கள் ‘கூத்தனா’ என்றுதான் அழைப்பார்கள். என் பெயரே மறக்கும் அளவிற்கு அவர்களின் தொலைபேசியிலும் கூட, என்னை ‘கூத்தனா’ என்றுதான் சேமித்து வைத்திருந்தனர்.

கேலி என்பது சிலருக்கு வெறும் நகைச்சுவையாக இருக்கலாம். ஆனால் அதைத் தொடர்ந்து எதிர்கொள்ளும் ஒருவரின் மனதில் அது வேறொரு தாக்கத்தை ஏற்படுத்தும். நம்மைப் பற்றி ஒரு பிம்பத்தை உருவாக்கிக்கொள்வதில் மற்றவர்களின் கருத்துக்கு ஒரு பங்கு இருக்கிறது. ஒரு விஷயத்திற்காக மீண்டும் மீண்டும் கேலி செய்யப்படும்போது, ஒரு கட்டத்தில் அந்தக் குரல்கள் நம்முடைய சொந்தக் குரலாகவே மாற ஆரம்பித்துவிடும். மனதிற்குள் எழும் குரல் அதுவாகவே உருவாகத் தொடங்கும். அதுதான் கிண்டலின் மிக ஆழமான தாக்கம். அது ஒரு நொடியிலான அவமானத்தை மட்டும் உருவாக்குவதில்லை; சில நேரங்களில் தன்னம்பிக்கையையே மெதுவாக அரித்துக்கொண்டே போகும். மற்றவர்களின் சிரிப்பை விட, அதேச் சிரிப்பும் கேலியும் நமக்குள் உருவாக்கும்போது அதிக வலியைத் தரும். ஒரு கட்டத்தில், மற்றவர்கள் நம்மை முட்டாளாக நினைக்கிறார்களா என்பதைத் தாண்டி, நாமே நம்மை முட்டாளாக நினைக்க ஆரம்பித்துவிடுகிறோம். அங்கிருந்துதான் பயமும் தயக்கமும் உருவாகின்றன. அந்தப் பயமும் பதற்றமும்தான் என் கல்லூரி நாட்களை நரகமாக மாற்றியது.

தமிழ்மொழி என்றாலே எனக்கு எப்போதும் ஒரு பயமும் பதற்றமும் உண்டு. அந்தப் பயத்தோடே நான் எப்படித் தமிழில் எழுத ஆரம்பித்தேன் என்பது இன்னும் எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. பத்மா சுப்ரமணியம் போன்ற பல கலை அறிஞர்கள் நாட்டியத்தைப் பற்றி மிக முக்கியமான ஆய்வு நூல்களை எழுதியிருக்கிறார்கள். ஆனால் அந்த நூல்கள் பெரும்பாலும் நாட்டியம் பயில்பவர்களுக்கும் அதைப் பற்றி ஆராய்ச்சி செய்பவர்களுக்கும்தான் அதிகம் பயன்படும். நாட்டியம், சங்கீதம் போன்ற கலைகளைப் பற்றி அறிமுகமில்லாத ஒரு வாசகரிடம் எளிமையாகக் கொண்டு செல்லும் தமிழ் எழுத்துகள் மிகவும் குறைவாக இருந்தன. கலைகள், கலைஞர்களிடம் மட்டுமல்ல, எல்லோரிடமும் சென்று சேர வேண்டும். அவற்றின் அழகையும் ரசனையையும் எல்லோரும் அனுபவிக்க வேண்டும். அந்த எண்ணம்தான் என்னைத் தமிழில் எழுதத் தூண்டியது. அதோடு, வல்லினம் வழங்கிய எழுத்து மேடை தொடர்ந்து எழுதுவதற்கான தைரியத்தையும் வாய்ப்பையும் கொடுத்தது. அப்படித்தான் தமிழைச் சரியாகப் பேசவும் எழுதவும் இன்னும் தயங்கிக்கொண்டிருக்கும் நான், தமிழில் எழுத ஆரம்பித்தேன்.

நமக்கு நடந்த ஒரு அவமானத்தையோ அல்லது ஒரு தோல்வியையோ வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ள ஒரு சிறிய வெற்றி தேவைப்படுகிறது. ‘அப்சரா’ என்ற என்னுடைய முதல் நூல், அந்தத் துணிச்சலை எனக்குக் கொடுத்தது. அந்தக் கடினமான நாட்களில், எல்லோரும் போல கிண்டல் செய்யாமல், அந்த அவமானத்திலிருந்து என்னை வெளியே கொண்டுவர உதவியது மட்டுமில்லாமல் என் எழுத்துகளை முதலில் நம்பியவர் ம.நவீன். அந்த எழுத்துகளை ஒரு புத்தகமாக மாற்ற நினைத்தவரும் அவர்தான். அதுவரை எழுதிய பதினைந்து கட்டுரைகளில் பத்தைத் தேர்வு செய்து தொகுத்தார்.

***

“இந்தப் புத்தகம் முழுக்க முழுக்க கலைகளை மையமாகக் கொண்டிருக்க வேண்டும். புத்தக விமர்சனங்கள், திரைப்பட விமர்சனங்கள், சினிமா பற்றிய கட்டுரைகள், நேர்காணல்கள் என்று கலந்துவிடக் கூடாது. நாட்டியம், சங்கீதம், கலை, பண்பாடு, பாரம்பரியம் போன்றவற்றை மையமாகக் கொண்ட ஒரு தொகுப்பாக இது இருக்க வேண்டும்,” என்றார் நவீன்.

‘அப்சரா’ புத்தகத்தில் நாட்டியம், இசை, ஓவியம், பயணம், கலாச்சாரம் என பல்வேறு கலைகளைப் பேசப்பட்டாலும், அதன் மையத்தில் எப்போதும் கலைகளைப் பிரதிபலிக்கும் பண்பாடும் அதை முன்னெடுப்பவர்களின் ஆன்மாவும் இருக்க வேண்டும் என ம.நவீன் இந்தப் புத்தகத்தின் நோக்கத்தைச் சொல்லும் போது புரிந்தது. ஒரே நூலில் ஒவ்வொரு மணியைக் கோர்த்து மாலையாக தொடுப்பது போல, இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு கட்டுரையையும் இதன் அடிப்படையில் தான் நூலாக கோர்க்கப்பட்டது. அந்த நூல் வெளியீட்டில்தான் நான் எழுத்தாளர் என அழைக்கப்பட்டேன்.

கர்ணனுக்கு இருந்த கவசக் குண்டலம் போல நர்த்தகி, பாடகி, ஆசிரியர் என்ற இந்த அடையாளங்கள் உடம்பிலும் மனதிலும் ஆழமாகப் பதிந்து விட்டிருந்தன. ஆனால் ‘எழுத்தாளர்’ என்பது புதிதாக வந்து சேர்ந்த ஒரு ஓர் அடையாளம். ஒவ்வொருவரும் தன்னைப் பற்றி ஒரு சுய அடையாளத்தை (Identity) மனதில் உருவாக்கிக்கொள்வார்கள். பல வருடங்களாக நம்மை நாம் எந்த வடிவத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறோமோ அந்த வடிவத்தையே மனம் ஏற்றுக்கொள்கிறது. திடீரென்று ஒரு புதிய அடையாளம் நம்மோடு இணைக்கப்படும்போது, அதைப் பிறர் ஏற்றுக் கொள்வதை விட நாமே ஏற்றுக்கொள்வதற்கு அதிக காலம் தேவைப்படுகிறது. அது தன்னம்பிக்கை இல்லாமல் அல்ல. அந்த வார்த்தைக்குரிய மரியாதையும் பொறுப்பும் உணர்ந்ததினால்தான்.

ஒரு புத்தகத்தை எழுதுவது வேறு. ஒரு எழுத்தாளராக வாழ்வது வேறு என்பதை நான் அறிந்திருந்தேன். எழுத்தாளர் ம.நவீனைப் பார்க்கும் போதெல்லாம் அந்த வித்தியாசம் எனக்குப் புரியும். அவர் எழுதுவதற்காக மட்டும் வாழவில்லை; எழுத்தோடே வாழ்கிறார்.

நேபாளில், அன்னபூர்னா நடைப் பயணத்தின் போது அதை நான் மிக நெருக்கமாகப் பார்த்திருக்கிறேன். கடுமையான முதுகுவலி, தலைவலி, குளிர், வெயில், நீண்ட பயணம், களைப்பு என எதுவும் அவரை எழுதுவதிலிருந்து நிறுத்தவில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அன்று நடந்த பயண அனுபவங்களை உடனுக்குடன் பதிவு செய்து கொண்டிருந்தார். ஆறு மணி நேரம் நடைப் பயணத்திற்குப் பிறகு எல்லோரும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நேரத்திலும் அவர் எழுதிக்கொண்டிருந்தார். ஒரு புத்தகம் வெளிவருவதற்குப் பின்னால் எவ்வளவு உழைப்பும், எவ்வளவு ஒழுக்கமும், எவ்வளவு தியாகங்களும் இருக்கின்றன என்பதை அவரைப் பார்த்துதான் நான் உணர்ந்தேன்.

ஆனால் ‘அப்சரா’, அவ்வளவு பெரிய தியாகங்களுக்குப் பிறகு உருவான புத்தகம் அல்ல. எனக்குக் கிடைத்த கலை அனுபவங்களையும் மனதிலும் சிந்தனையிலும் ஒழிந்திருந்த நினைவுகளை மட்டுமே பிண்ணணினியாக வைத்து எழுதிய கட்டுரைகள் நிரம்பிய ஒரு நூல். எப்படி ம.நவீன் எழுத்தின் வழியாக வாழ்கிறாரோ, அதேபோல் நான் கலையின் வழியாக வாழ்கிறேன். ஒவ்வொரு முறையும் கண்ணாடியில் என்னைப் பார்க்கும்போது, பரதநாட்டிய ஆபரணங்களோடு இருக்கும் ஒரு நர்த்தகியாகத்தான் நான் என்னைப் பார்த்திருக்கிறேன். அதனால்தான் பல வருடங்களாக என் சமூக வலைத்தளப் ப்ரொஃபில் புகைப்படத்தை மாற்றியதில்லை. யாராவது என்னை அணுகும்போது, என்னை ஒரு நர்த்தகியாகத்தான் அடையாளம் காண வேண்டும் என்று விரும்புகிறேன். நாம் யார் என்பதை உலகத்திடம் தெளிவாகச் சொல்லிவிட்டால், நமக்குச் சொந்தமில்லாத பல அடையாளங்களைச் சுமக்க வேண்டிய அவசியம் நிகழாது.

எனக்கு நாட்டியத்தின் மூலமாகதான் சங்கீதம், வீணை, யோகா, மண்டலா எனப் பலக் கலைகள் என் வாழ்வில் வந்தது. என் வாழ்க்கைக்குள் வந்த பெரும்பாலான கலைகளின் கதவுகளைத் திறந்தது நாட்டியம்தான். நான் எந்தக் கலையையும் ஒரு நர்த்தகியின் கண்கள் வழிதான் பார்க்கிறேன். நான் எழுத்தாளராக இருந்து கலைகளை எழுதவில்லை. ஒரு நர்த்தகியாக இருந்துதான் எழுதுகிறேன். அதனால்தான் ‘எழுத்தாளர்’ என்ற அடையாளத்தை உடனே ஏற்றுக்கொள்வதில் எனக்குத் தயக்கம் இருந்தது. ஆனால் ஒரு விஷயம் நடக்க வேண்டும் என்று இருந்தால் அது நடந்தே தீரும். யாராலும் தடுக்க முடியாது. அப்படிதான் நான் இன்றைக்கு எழுத்தாளராக அடையாளமிடப்பட்டேன் என நினைக்கிறேன். இவ்வெண்ணம் எழுந்தபோது அம்மாவின் படத்தைப் பார்த்தேன்.

இரவின் கறுமை அடர்த்தியாகிக் கொண்டே இருந்தது. ஆனால், அம்மாவின் படத்தின் ஒளி மட்டும் கூடிக்கொண்டே போனது.

***

புத்தகத்தின் தொகுப்புப் பணிகளும், திருத்தங்களும் எல்லாம் முடிந்திருந்த நேரத்தில் ம.நவீன், “இந்தப் புத்தகத்தை யாருக்கு சமர்ப்பிக்கலாம், அம்மாவுக்குச் சமர்ப்பிக்கலாமா?” என்று கேட்டார்.

நான் செய்யும் ஒவ்வொன்றிலும் என் அம்மா நிறைந்திருக்கிறார். என் கலைகளில் மட்டுமல்ல, என் வாழ்க்கையின் பெரும்பாலான இடங்களிலும் என் அம்மாவின் பிரதிபலிப்பைதான் பார்க்க முடியும். நான் பேசும் விதத்தில், நான் சிந்திக்கும் முறையில், நான் எடுத்துக்கொள்ளும் முடிவுகளில் என எங்கோ ஒரு மூலையில் அவருடைய தாக்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஏனென்றால், நான் அவரிடமிருந்து பிறந்து வந்தவள் மட்டுமல்ல; அவரால் உருவாக்கப்பட்டவளும் கூட. அதனால் இந்தப் புத்தகத்தைத் தனியாக அம்மாவுக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை. நான் செய்யும் ஒவ்வொரு செயலுமே அவருக்கான சமர்ப்பணம்தான்.

அம்மா எப்போதும் முன்னிலைப்படுத்தியது கலையையும், கற்றலையும்தான். ஆக, நான் என்னுடைய முதல் புத்தகத்தை நான் சந்தித்த எல்லா குருமார்களுக்கும் சமர்ப்பிக்க வேண்டும் என்று எண்ணினேன். ஒரு கலைஞனின் மதிப்பு அவனுக்குக் கிடைக்கும் பாராட்டுகளில் இல்லை, அவன் கற்ற கலையை எவ்வளவு தூரம் வாழ்க்கையில் வாழ்கிறான் என்பதில்தான் இருக்கிறது என்று அம்மா அடிக்க சொல்லுவார். என்னுடைய வாழ்க்கையில் பல கலைகள் என் மனதிலும் ஆத்மாவிலும் விதைத்தவர்கள் என் குருமார்கள். ஆத்மா ஒன்றைத் தொட்டுவிட்டது என்றால், அதை நாம் கைவிட முடியாது; அதுவும் நம்மைக் கைவிடாது; மெதுவாக இரத்தத்தில் கலக்கும்; சுவாசமாக மாறும்; வாழ்வின் ஒரு பகுதியாகவே மாறிவிடும். இன்று இந்தப் புத்தகத்தில் இருக்கும் சிந்தனைகள், அனுபவங்கள், உணர்வுகள், எல்லாமும் என்னுடைய குருமார்களிடம் நான் யாசகம் செய்து தாழ்பணிந்து பெற்றவை. நான் எழுதியிருப்பது என் வார்த்தைகளாக இருக்கலாம். ஆனால் அந்த வார்த்தைகளுக்குள் வாழும் ஒளி, என் குருமார்களிடமிருந்து வந்தது. இந்தப் புத்தகம் அவர்களுடையது. என் அம்மா இருந்திருந்தால், அவரும் இதைத்தான் விரும்பியிருப்பார் என நினைத்துக் கொண்டிருக்கையில் அம்மாவின் படத்துடன் மாட்டியிருக்கும் மாலை ஆடியது.

***

நிகழ்ச்சியில் ஸ்சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி, எழுத்தாளர் சு. வேணுகோபால் ஆகியோர் ‘கீரவாணி’ கட்டுரையைப் பாராட்டிப் பேசினர். எனக்கு அது சில நினைவுகளை மனதினுள் இழுத்து வந்தது.

அம்மாவின் மறைவுக்குப் பிறகு, 2021-ஆம் ஆண்டு மீண்டும் ஒரு பெரிய இழப்புகளைச் சந்தித்தேன். அந்த ஆண்டு துயரமும், வெறுமையும், பதில் இல்லாத பல கேள்விகளும் நிறைந்திருந்தன. மனம், உடல், ஆத்மா என எல்லாமும் சக்தி இழந்திருந்தது. மருத்துவ ஆலோசனைக்குச் சென்றபோது, மருத்துவர் ஒரு எளிய அறிவுரையை ஒன்றை சொல்லியிருந்தார்.

‘மனதில் இருப்பதை ஒரு புத்தகத்தில் இறக்கிவையுங்கள். எழுதத் தொடங்கும்போது மனதின் பாரம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும்.’

அந்த அறிவுரையைப் பின்பற்றி நானும் ஒரு புத்தகத்தில் மனதில் எழும்பியதெல்லாம் எழுதினேன். ஆரம்பத்தில் அது வெறும் மனப் பாரத்தைக் குறைப்பதற்கான முயற்சியாகத்தான் இருந்தது. தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தேன். ஒருநாள் எல்லாவற்றையும் வாசிக்கும் போதுதான் ஓர் ஆச்சரியம் நிகழ்ந்தது. அந்தத் துயரத்தின் நடுவில் வேறொன்று மலர்ந்திருந்தது. அதுதான் கீரவாணி கட்டுரை.

கீரவாணி ராகம் முதலில் கருணையாக மனதிற்குள் நுழையும். ஆனால் அந்தக் கருணை வெளியேற மறுத்து நீண்ட நேரம் மனதுக்குள் தங்கிவிட்டால், அது சோகமாக மாறி கண்களின் ஓரத்தில் வந்து அமர்ந்துகொள்ளும். என் மனதிலிருந்த கீரவாணி அவ்வளவு எளிதாக வெளியேறவில்லை. ஆனால், கீரவாணி மனதில் கருணையை வளர்த்தது. அந்தக் கருணை, இழந்தவற்றின் வலியை மட்டுமல்ல, அவற்றை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தையும் காயப்படுத்தியவர்களை மன்னிக்கவும், விலகிச் சென்றவர்களை வாழ்த்தவும், திரும்பி வராதவற்றை விடுவிக்கவும் மனதை மெதுவாகப் பழக்கப்படுத்தியது.

நிகழ்வில் ஸ்சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி, கீரவாணி ஒரு கட்டுரை அல்ல, ஒரு சிறுகதைக்கு உரிய ஆழமும் உணர்ச்சியும் கொண்ட படைப்பு என்று தன் பேச்சில் குறிப்பிட்டார். குறிப்பாக, மனிதனின் தவிப்புகளையும் மன உணர்வுகளையும் கீரவாணி ராகத்தின் வழியாக வெளிப்படுத்திய விதம் அவரை மிகவும் கவர்ந்திருந்தது. எழுத்தாளர் சு. வேணுகோபாலும் கீரவாணி ராகத்தைக் கருணையின் இசை வடிவமாகக் குறிப்பிட்டு, மனித துயரங்களை மெதுவாக அணைத்து ஆற்றும் சக்தி அதற்கு இருப்பதாக விளக்கினார். இருவரும் கீரவாணியைப் பற்றிப் பேசியபோது, இன்று இலக்கியமாக வாசிக்கப்படும் அந்தக் கட்டுரை, உண்மையில் ஓர் உடைந்த மனம் தன்னைத் தானே தேற்றிக் கொள்ள முயன்றபோது உருவானது. என்னுடைய காயங்கள் ஆறாமல், இசையாகவும், எழுத்தாகவும், கலையாகவும் மாறியிருக்கிறது என நினைக்கும்போது வியப்பாக இருந்தது. என்னுடைய கவலையிலும் கலைகள்தான் நிரம்பியிருக்கிறதுன. அன்று இரவும் கருணையில் உருவான கீரவாணி கண்களின் ஓரத்தில் நிரம்பி வழிய ஆரம்பித்தது. அம்மாவைப் பார்க்கப் பார்க்க இன்னும் அதிகமாகவே வழிந்தது.

முதலில் இந்நூலுக்கு ‘கீரவாணி’ எனும் தலைப்பிட்டிருந்தாலும் பின்னர் நானே அதை ‘அப்சரா’ என மாற்றினேன். இந்திய புராணங்களில் அப்சராக்கள் என்பது வெறும் தேவலோக நடனக் கலைஞர்கள் மட்டுமல்ல. பலக் கலைகளின் அழகையும், அதன் ரசனையையும் உலகமெங்கும் பரப்பும் தூதுவர்களாகவும் அவர்கள் கருதப்படுகிறார்கள். நாட்டியம், இசை என்று ஒரு கலைக்கு மட்டும் கட்டுப்படாமல், பலக் கலைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே அவர்களின் முதன்மையான கடமையாக இருந்தது. அதேபோல, இந்தப் புத்தகமும் பல கலையையொட்டி இருப்பதால், கலைகளின் மீதான ரசனையையும், அவற்றின் அழகையும் வாசகர்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற விருப்பமும் அதற்குள் இருந்தது. அதனால்தான் கீரவாணியிலிருந்து அப்சராவாக அந்தப் புத்தகம் உருமாறியது.

ஒரு குழந்தையின் வளர்ச்சியைப் படிப்படியாகத் தான் பார்க்க முடியும். அந்த வளர்ச்சியைக் காண ஒவ்வொரு தாயும் தவம் இருப்பார்கள். அதேபோலத்தான் என்னுடைய முதல் புத்தகமும் படிப்படியாக வளர்ந்து, மெல்ல நகரும் என நினைத்திருந்தேன். ஆனால் புத்தக விழா அன்று ‘அப்சரா’, அவளின் அபாரமான ஆற்றலை வெளிப்படுத்தினாள்.

“அப்சராக்கள் எப்படி கலைகளைப் பரப்பினார்களோ, அதே போல் இந்தப் புத்தகமும் கலைகளைப் பரப்ப வேண்டும். இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு, வாழ்க்கையில் எங்காவது ஒரு நாட்டியத்தையோ, ஒரு இசையையோ, ஒரு ஓவியத்தையோ பார்த்து ஒரு நிமிடம் நின்று ரசித்தால், அதுவே இந்தப் புத்தகத்தின் வெற்றி,” என்று ஏற்புரையில் சொல்லியிருந்தேன். அப்படிச் சொல்லிவிட்டு வந்து அமர்ந்து சில நிமிடங்கள்கூட ஆகவில்லை.

ம.நவீன் திடீரென்று மேடையில் ஏறி ஒர் அறிவிப்பைப் பகிர்ந்தார். இந்தப் புத்தகத்தின் மூலம் கிடைக்கும் வருவாய், பழைய தமிழ் நூல்களை மின்னூல் வடிவில் கொண்டுவர தேவையான ஸ்கேனரை வாங்கும் பணிக்காகப் பயன்படுத்தப்படும் என்று அவர் அறிவித்தார். அந்த அறிவிப்பைக் கேட்ட நொடியில் என் உடம்பே சிலிர்த்தது. இதுவரை அப்சரா என்பவள் கலைகளைப் பரப்புபவள் என்ற நம்பிக்கையில் மட்டுமே இருந்தேன். ஆனால் அவள் எழுத்துக்கள் எல்லாம் மறைந்து மங்கி அழிந்து போகும் தருவாயில் இருக்கும் மலேசியாவின் பழைய எழுத்துக்கலையைக் காப்பாற்றும் பணியையும் தொடங்கியிருந்தாள். ஒரு புத்தகத்திற்கு நான் வைத்த பெயர், அந்தப் பெயருக்குள் நான் வைத்த நம்பிக்கை, இப்படி ஒரு வடிவத்தில் என் முன் உயிர்பெற்று நிற்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆச்சரியமாக இருந்தது.

நான் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன், அதுவும் தமிழில் எழுதியிருக்கிறேன் என்று தெரிந்ததிலிருந்து பலரிடம் தொடர்ந்து வினோதமான சில கேள்விகள் வந்துகொண்டே இருந்தன.

ம. நவீன் செய்த அறிவிப்புக்குப் பிறகு, அழிந்துகொண்டிருக்கும் ஒரு கலை மரபையும், மறைந்து கொண்டிருக்கும் எழுத்தையும் மீட்டெடுக்கும் ஒரு திட்டத்தில், அப்சரா என்னை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறாள் என்று உணரும்போதுதான் அனைத்து கேள்விகளுக்கான பதில் கிடைத்தது.

நிகழ்ச்சி முடிந்ததும், பெரும்பாலானவர்களின் கைகளில் அப்சரா தவழ்ந்தாள். அவள் ஏடுகளுக்கு நடுவில் தெய்வீகமாக ஆடிக் கொண்டிருக்கும் அதிர்வை என்னால் உணர முடிந்தது.

“இன்றைக்கு எல்லாரும் பாராட்டுறாங்க. நீங்க மட்டும் எப்போதும் ஒன்றும் சொல்ல மாட்டிங்க, நான் நல்லா ஆடுனேனா… ம்மா?” என நான் சிறுமியாக இருக்கும்போது அம்மாவிடம் கேட்டேன்.

“நீ ஆடும்போது நான் உன்னை என்னோட மகளாகப் பார்த்ததில்லை. அம்பாளைப் பற்றி ஆடும்போது அம்பாளாகத்தான் பார்க்கிறேன். சிவனைப் பற்றி ஆடும்போது சிவனாகத்தான் பார்க்கிறேன். என் மகள் ஆடுறாள்னு எனக்குத் தோணுவதில்லை. ஒரு கலை அரங்கேறுவதைத்தான் நான் பார்க்கிறேன்.” எனச் சொன்னார். சிறுவயதில் அந்த வார்த்தைகளின் ஆழம் எனக்குப் புரியவில்லை. ஆனால் இன்று நினைத்துப் பார்க்கும்போது, கலை மீது என் அம்மாவுக்கு எவ்வளவு உயர்வான பார்வை இருந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. தன்னுடைய மகளைக் கூட பார்க்காமல், கலையை ரசித்திருக்கிறார். ஆனால், ஒருமுறை கொஞ்ச நேரம் கழித்து அம்மா இன்னொரு விஷயத்தையும் சொன்னார். அது என் வாழ்க்கை முழுவதும் என்னோடு பயணித்துக் கொண்டிருக்கும் ஒரு சொல்.

“நீ ஆடும்போது நான் உன்னை என் மகளாகப் பார்க்கிறதில்ல. ஒரு கலையின் வடிவமாகத்தான் பார்க்கிறேன். ஆனால் நிகழ்ச்சி முடிந்து மங்கலம் ஒலிக்கும் போது எல்லோரும் கைத்தட்டுவாங்க. சிலர் எழுந்து நின்றுகூட கைத்தட்டிருக்காங்க. அப்போது அந்தக் கைத்தட்டலின் ஒலி என் மகளுக்கானது என உணரும் போது உடம்பையே சிலிர்க்க வைக்கும். நீ வளர்ந்த அந்தக் கருவறையே குளிர்ந்து போகும்.” என்று அம்மா சொன்னார்.

அந்த வார்த்தைகள் எப்பொழுதும் என் நினைவில் இருக்கும். இன்றும் எங்கேயாவது எனக்காக ஒரு கைத்தட்டல் ஒலித்தால், அதற்கு முன்னால் அம்மா சொன்னதுதான் நினைவில் ஒலிக்கும். அன்றைய புத்தக வெளியீட்டு விழாவிலும் கைத்தட்டல்கள் மண்டபத்தில் எதிரொலித்தபோது, அம்மாவைச் சென்றடைந்திருக்கும் என்று நான் நம்பினேன். என்னைப் பாராட்டி ஒலித்த அந்தக் கைத்தட்டல்கள், என்னை வளர்ந்த அந்தக் கருவறையை மீண்டும் ஒருமுறை குளிரவைத்திருக்கும் என்ற நம்பிக்கை என் மனதை நிறைத்தது. அதற்குச் சான்றாக அம்மா படத்தின் ஒளி பிரகாசித்தது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...