இது என் நான்காவது நாவல். நான் முதலில் வெளியிட்டிருக்க வேண்டிய நாவல் இதுதான். 2000இல் மன்னன் மாத இதழில் ‘பருவகாலப் பறவைகள்’ எனும் தொடரை எழுதியபோது மலேசிய இலக்கியச் சூழலில் சலசலப்பு ஏற்பட்டது.இடைநிலைப்பள்ளி மாணவர்களின் வாழ்வை அப்பட்டமாகச் சொன்ன தொடர்கதை அது. எனவே அவர்களின் மொழி அதில் வெளிபட்டது. அக்கினி சுகுமார் உள்ளிட்ட நான் மதிக்கும் எழுத்தாளர்கள் சிலர், இப்படி எழுதும் வயதில்லை உனக்கு எனக் கண்டித்தனர். சிலர் கூட்டாக அன்றைய எழுத்தாளர் சங்கத் தலைவர் ஆதி.குமணனுக்கு புகார் கடிதம் அனுப்பியதாகவும் கேள்விப்பட்டேன். நான் எதையும் பொருட்படுத்தவில்லை. இலக்கியச் சூழலில் விமர்சனங்களை வாரிக்கட்டிக்கொண்டபோது எனக்கு வயது பதினெட்டு.

ஆஸ்ட்ரோ நடத்திய நாவல் போட்டிக்கு இதே வாழ்வை மேலும் விரிவாக்கி 2004இல் நாவலாக எழுதினேன். அப்போது நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். சுஜாதாவையும் பாலகுமாரனையும் அதிகமாக வாசித்திருந்த காலமது. அப்போது நாவல் எழுதிய அனுபவம் புதுமையாக இருந்தது. நான் அறிந்த வாழ்வை எழுதத்தொடங்கி அறியாத ஓர் அனுபவத்தை நோக்கி எழுத்து என்னை அழைத்துச் சென்றது. முற்றிலும் புதிய நாவலாக அது உருமாறியது. ‘ஞானத்தின் வாசலிலே’ என அந்நாவலுக்குத் தலைப்பிட்டேன். இரண்டாவது பரிசும் கிடைத்தது. அந்த நாவல் போட்டியின் பரிசளிப்பு விழாவிற்குச் சிறப்பு வருகையளித்த பிரபஞ்சன், திலீப்குமார் ஆகியோர் வழியாக அந்நாவலின் பலவீனங்களையும் அறிந்துகொள்ள முடிந்தது. பின்னர் தொடர்ந்த தீவிர வாசிப்பில் அந்நாவலை நூலாக்கும் ஆர்வத்தை முழுமையாகக் கைவிட்டேன்.
நயனம் ஆசிரியர் ஆதி. இராஜகுமாரன் அந்நாவலை நயனம் இதழில் தொடராக பிரசுரிக்க ஆர்வம் கொண்டார். அவர் வழியாக அந்நாவல் நயனம் இதழில் தொடராக வெளிவந்தது. ஆனாலும் எனக்கு அது நாவலாக உருவாகவில்லை என்பதை என் தீவிர வாசிப்பின் வழியாகவே அறிந்துகொண்டேன். ஆனால் நாவலில் புதைந்திருந்த வாழ்வு என்னுள் உயிர்ப்புடன் இருந்தது.
நாவல் எனும் கலை குறித்து இன்று வாசித்தும் எழுதியும் அறிந்துகொண்டுள்ள சூழலில் மீண்டும் அதே வாழ்வு புனைவாகும் சாத்தியத்தை மீண்டும் அடைந்தேன். அதுதான் ‘லீகாட்’.
நாவலை இன்று முடித்தபோது ஒன்று தோன்றியது. எழுத்தாளன் எழுதிக்கொண்டே இருக்க வேண்டியதற்கு மிக முக்கியமான காரணம், அவன் அதில் இடைவெளி விடும்போது கடுமையான உளச்சிக்கலுக்கு உள்ளாகிறான் என்பதுதான். குறிப்பாக, நாவல் எழுதுகிறவனின் மனம் என்பது உயிர் பலி கேட்கும் யட்சியை வணங்குவது போலத்தான்.
எழுத்தாளன் நாவலில் அக ஆழங்களைச் சென்று தொடுகிறான். அதில் அவன் கண்டடையும் இருளும் ஒளியும் அவனது சமநிலையைக் குழைக்கிறது. அவன் ஒரு தற்காலிக உடல் ஏந்தி, அத்தனை பாத்திரங்களின் அலைக்களிப்பையும் அறிந்து மீளும்போது வாழ்வின் யதார்த்தம் குறித்த நடுக்கம் ஏற்படுகிறது. தொடர்ந்து எழுதும்போது அந்நடுக்கம் அகன்று வாழ்வு குறித்த தெளிவாக மாறுகிறது. அத்தெளிவு யட்சியை வாழ்நாளெல்லாம் அருள் புரியும் தெய்வமாக மாற்றுகிறது.
எழுதாமல் விடும்போதுதான் யட்சி பலி கேட்கத் தொடங்குகிறாள். அதன் விளைவாகவே எழுத்தாளன் நிஜ வாழ்வில் காணும் மனிதர்களின் ஆழங்களைச் சென்று தொட்டுப் பார்க்கிறான். அவர்கள் வாழ்வைத் தன் கனவுகளில் வாழ்ந்து பார்க்கிறான். சதா அவர்களின் உள்ளத்தை அளந்து பார்த்து அளந்து பார்த்து நொந்துச் சாகிறான். சக மனிதர்களை நோகடிப்பதால் தானும் நொந்து தன் ஆற்றல் முழுவதையும் இழக்கிறான்.
இறுதியில், புனைவின் வழியாக யட்சியைத் தெய்வமாக்க வேண்டியவன் தானே ஒரு பேயாக மாறி அர்த்தமற்ற வாழ்வை வாழ்ந்து முடிக்கிறான். நான் அவ்வாறு என்னை இருபத்து ஐந்து வருடமாகப் பின் தொடர்ந்த யட்சிக்கு நியாயம் செய்துள்ளதாகக் கருதுகிறேன். அவளை தெய்வமாக்கியுள்ளதில் மகிழ்கிறேன்.
31.5.2026
ஜூலை வெளிவரவுள்ள ம. நவீனின் ‘லீகாட்’ நாவல் முன்னுரை.
