தன்பாலினத்தவர்களின் அகச் சிக்கல்கள்

சமீபத்தில் என் உடல்நலப் பரிசோதனைக்கு என் நண்பர் டாக்டர் கேசவனைப் பார்க்கப்போயிருந்தேன். என் கையில் வைத்திருந்த ‘மோகனசாமி’ சிறுகதை நூலை வாங்கிப் பார்த்தவர் இது எதைப் பற்றி பேசுகிறது, என்று ஆர்வத்தோடு கேட்டார். அவர் ஒரு நல்ல வாசகர், மேடைப் பேச்சாளர். “ஓரினப்புணர்ச்சியாளர்கள் வாழ்வில் எதிர்நோக்கும் சிக்கலைப் புனைவுமொழியில் ஆழ அகலத்தோடு ஆராய்கிறது,” என்று சொன்னேன். அவர் என்னை வியப்போடு பார்த்து, “தமிழில் இது சார்ந்தெல்லாம் எழுதப்படுகிறாதா?” என்று கேட்டார். “ஒரு சில கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. இந்நூலில் தனித்துவமென்னவென்றால் இதனை எழுதியவரே தன்பாலின ஈர்ப்பாளர்தான்,” என்றேன். “எனவே இக்கதைகளில் அவருடைய நேரடி அனுபவப் பகிர்வு, உணர்வுப்பூர்வமாகவும்  நம்பகத்தன்மையுடனும் வலிமையுடனும் நிற்கிறது,” என்றேன். அவர் உடனே தயாஜியின் சிறுகதையைத் தவறாகப் புரிந்துகொண்டு போலியாகக் கொந்தளித்த சமூகத்தை நினைவுகூர்ந்துவிட்டு, இந்தச் சமூகம் ஏன் நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது என்று தெரியவில்லை என்று நொந்துகொண்டார். இங்கே அதனைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு, அது தொடர்பான கல்விப் பின்புலமோ, அதனை வலுப்படுத்தும் தர்க்க சிந்தனையோ வளரவில்லை என்பதில் இருவருமே ஒத்த கருத்துடையவர்களாக இருந்தோம். கல்வி மட்டுமல்ல பரந்த வாசிப்பு இருந்தாலே ஒழிய, இந்த வகை படைப்புகளை அவர்களால் புரிந்துகொள்ள இயலாது என்று பேசிக்கொண்டோம். சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகளை மலேசியாவின் வெகுசன வாசகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியைத் தரக்கூடியது என்பதில் இருவருமே புன்னகையோடு ஒத்துக்கொண்டோம்.

எனக்குள் வியப்பை ஊட்டிய ‘மோகனசாமி’ கதைகள் நூலை எழுதிய, வசுதேந்தரா கன்னடத்தின் பிரபலமான எழுத்தாளர். தானொரு தன்பாலின ஈர்ப்புள்ளவர் என்று விஷ்ணுபுர விழா மேடையில் அவர் தைரியமாகப் பிரகடனப்படுத்திக்கொண்டபோது எனக்குள் அதிர்ச்சி அலைகள் மோதின. என் அனுபவத்தில் தான் அவ்வகை பாலினத்தவர்  என்று தைரியத்தோடு சொன்ன முதல் மனிதரைச் சந்தித்ததில் உண்டான அதிர்ச்சிதான் அது. ஏனெனில் தானொரு ஓரினப்புணர்ச்சியாளன் என்று பிரகடனப்படுத்திக்கொள்ளும் ஒருவனைக் கேலிச்செய்து மகிழும் சமூகத்தின் முன்னிலையில், இவ்வாறு பிரகடனப்படுத்திக்கொள்வதற்கு ஓர் அசாத்தியத் துணிச்சல் வேண்டும்.

எழுத்தாளர் வசுதேந்திராவின் உடற் தோற்றத்தில்  அந்தச் சாயலையே என்னால் பார்க்க முடியவில்லை. ஒரு திடகாத்திரமான ஆணுக்குரிய உடல் தோற்றமும், குரலமைப்பும், நாணமற்ற மெய்ப்பாடும் அவரை நூறு விகிதம் ஆணாகவே காட்டியது. அதனால் அவரே தானொரு சமபாலின ஈர்ப்புள்ளவன் என்று சொன்னதை முதலில் என்னால் நம்ப முடியவில்லை. ஏனெனில் நான் சந்தித்த ஒரே பாலின ஈர்ப்புள்ளவர்களிடம் பெண் சாயல்களைக் கண்டிருக்கிறேன். அதனை அப்பாலினத்தவரின் மாறாத அடையாளமாகவே நான் வரித்துக்கொண்டதால், வசுதேந்திராவை என்னால் அந்த வகைமைக்குள் அடையாளம்காண மனம் இடங்கொடுக்கவில்லை. எனவே அவரைப் பற்றியும் அவ்வகை மனிதர்கள் பற்றியும் அறிந்துகொள்ள நான் வசுதேந்திராவின் நூல்களை வாங்கி வாசிக்க விரும்பினேன்.

கீழை நாடுகள் தன்பாலீர்ப்புள்ளவர்களைச் சமூகத்திடமிருந்து ஒதுக்கிவைத்தே பழகிவிட்டது. அவர்கள் தீண்டத் தகாதவர்களாக, அற்பப் புழுக்களாகவே தள்ளிவைத்துப் பார்க்கும் கீழ்மை உணர்வு அவர்கள் வாழும் சமூகத்திடம் நிலவுவதைப் பார்க்க முடியும். இந்த விஷயத்தில் அவர்கள் பெற்றோர்களும் குடும்பத்தாரும்கூட சேர்ந்துகொள்வார்கள். தன் கொடி உறவு என்று கூடப் பார்க்காமல் இந்தப் புறக்கணிப்பு நிகழ்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சக மனிதர்க்குக் கிடைக்கும் சமூக அந்தஸ்தோ, மரியாதையோ அவர்களுக்கு வாய்ப்பதில்லை. முற்றாக ஒதுக்கப்பட்டதனால்,  அவர்களுக்கு வாழ்வாதாரம் கிட்டாமல், கீழ்மையான வாழ்க்கையை வாழும் இழிநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இவர்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள அவர்கள் வாழ்க்கையை உள்ளது உள்ளபடி சித்தரிக்கும், நூல்களைத் தேடி வாசிக்க வேண்டுமென நினைத்தேன். அதிலும் தன்பாலின ஈர்ப்புகொண்ட எழுத்தாளர்கள் எழுதிய நூல்களே நமக்கு அவ்வகை மனிதர்களின் உண்மை தன்மையைத் துல்லிதமாகச் சொல்லும் என்பதால்,  கடந்த முறை சென்னை புத்தகக் கண்காட்சியில்  நல்லத்தம்பி தமிழில் மொழிபெயர்த்த, வசுதேந்தராவே எழுதிய ‘மோகனசாமி’ என்ற சிறுகதைத் தொகுப்பை வாங்கி வந்தேன்.

இத்தொகுப்பு ஓரினச் சேர்க்கையாளர்கள் எதிர்நோக்கும் வாழ்க்கைச் சிக்கலையும் இவர்களின் உடல் இச்சையை நிறைவு செய்ய முடியாத தவிப்பையும், சமூக நிராகரிப்பையும் முக்கியச் சரடாகக் கொண்டுள்ளது. பொதுவாகவே தமிழ்க் கதைப்பரப்பில் இந்தத் தனித்துவமான பாலினத்தவர்களின் வாழ்க்கையைத்  திறந்து காட்டுவது அபூர்வமாகவே நிகழ்ந்திருக்கிறது. படைப்பிலக்கியத்தில்கூட அவர்கள் ‘தீண்டத்தகாத’ மனிதர்களாக ஒதுக்கப்படுவது தெளிவாகத் தெரிகிறது.  வசுதேந்த்ராவின் விஷ்ணுபுர நிகழ்ச்சி உரையைக் கேட்டதிலிருந்து, அவர் கதைகளில் அவரையே ஒரு முக்கியப் பாத்திரமாகவே மனதிலிருத்தி வாசிக்கும்படியான படிமத்தை நிகழ்த்திவிடுகிறார். எவ்வகையிலும் அவரை விலக்கம் செய்ய இயலவில்லை.  

‘மோகனசாமி’ தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையும் அப்பாலின மனிதர்கள் எதிர்நோக்கும் பல்வேறு சிக்கல்களை விலாவாரியாக ஆராய்கிறது.

தனக்கான இணையைத் தேடிக்கொள்வதே தன்பால் ஈர்ப்புகொண்டவர்கள் எதிர்நோக்கும் மிக முக்கியச் சவால், மிகத் திடகாத்திரமான ஆண்தன்மையுடையவரைத் தேடிக் கண்டடைவதில் மிகப்பெரிய சிக்கலை எதிர்நோக்குவதே. அப்படியே தன் தேடலில் கிடைத்த ஓர் ஆணை விரும்பினாலும் தன் அபிலாசையை எப்படி அவரிடம் தெரிவிப்பது என்பது இன்னொரு பெரும் சவால். ‘மோகனாசாமி’ நூலில் ‘சைக்கிள் சவாரி’ சிறுகதையில் மோகனசாமி பயிலும் அதே பல்கலைக்கழகத்தில், சுமித் கோயல் என்ற ஒரு வடநாட்டு இளைஞன் வந்து சேர்கிறான். அவனின் கவர்ச்சித் தோற்றம் மோகனசாமியை, அவன் மீது மையல் கொள்ளவைக்கிறது. அவனிடம் தன் காதலைச் சொல்ல அவன் படும் சிரமம் தன்பாலீர்ப்பு மனிதர்களின் இக்கட்டை நன்றாகவே விவரிக்கிறது. இது, ஒரு சராசரி ஆண், தன் காதலைத் தான்  விரும்பும் பெண்ணிடம் சொல்வதுபோல ஒருபோதும் எளிமையானது அல்ல. ஓர் ஆணும் பெண்ணும் காதலிப்பதென்பது சமூக அரசியலின்படி அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அது பண்பாட்டுக்கு எதிரானதும் அல்ல. அவர்களின் காதல் திருமணம் வரை நீட்சி காண்பதும், பெரும்பாலும் நடக்கக்கூடிய ஒன்றே. ஆனால் ஓர் ஆண் இன்னொரு ஆணிடம் தன் காதலைச் சொல்வது கீழைச் சமூகத்தின் பண்பாட்டுக்கு, முற்றிலும் முரணான, அசூசையான செயலாக் கருதப்படுகிறது.  ஆண் பெண் உறவை மட்டுமே அங்கீகரித்துப் பழகிய மரபான பண்பாட்டையே இவ்வகை உறவு இழிநிலைக்குத் தள்ளும் கூடாத செயல் என்று சமூகம் கருதுகிறது. இவ்வாறான சூழலில் தன்பாலீர்ப்புகொண்ட ஓர் ஆண் எங்ஙனம் தன்னைக் கவர்ந்தவனிடம் தன் காதலைச் சொல்லிவிட முடியும்?

முதலில் சுமித் கோயலுக்கு பெண்தன்மை கொண்ட மோகனசாமியின்பால் கொஞ்சமாவது ஈர்ப்பு உண்டாகியிருக்க வேண்டும். தன் விருப்பத்தை உடல் சமிக்ஞையால்கூட அறவே வெளிப்படுத்தாதவனிடம் தன் தேவையைச் சொல்வது கேவலமானதல்லவா? ஒரு சந்தர்ப்பத்தில் சுமித் கோயலின் அறையில் மோகனசாமி ஓரிரவு கழிப்பதற்கான அரிய வாய்ப்பு கிடைக்கிறது. சுமித் கோயலை, மறுநாள் நடக்கப்போகும் சோதனைக்குத் தயாராக்க மோகனசாமி பாடம் சொல்லித் தந்து உதவுகிறான். இரவு வெகுநேரமாகிவிட்டதால் சுனித் தன் அறையிலேயே தங்கும்படி வற்புறுத்த, மோகனசாமியின் நீண்டநாள் ஏக்கம் நிறைவேறும் சமிக்ஞை காட்டிவிட்டதாக எண்ணுகிறார். தன்னைச் சோதனைக்குத் தயார் செய்ய உதவியதற்கான நன்றிக்கடனாக, சுமித் மிகுந்த பரவசத்தோடு மோகனசாமியோடு கட்டிப்புரள, அதனைச் சுமித்தின் பாலியல் உறவுக்கான முன்னேற்பாடாக  எடுத்துக்கொள்கிறான் மோகனசாமி. சுமித் நன்றாக உறங்கிவிட்ட நேரத்தில் அவன் உடல்மீது கொண்ட மையலால் மோகனசாமி அவனை உசுப்பேற்றுகிறான். மோகனசாமியின் நோக்கத்தைப் புரிந்துகொண்ட சுமித், அவ்வகைத் தொடுதலைக் கொஞ்சமும் எதிர்பார்க்காதவன், மலத்தை மிதித்துவிட்டபோல, அருவருப்படைந்து சட்டென்று துடித்தெழுந்து அவனிடமிருந்து உடனே விலகிக்கொண்டு அவனைக் கடுமையாகத் திட்டித் தீர்க்கிறான்.

மோகனசாமியிக்கு ஆண்மீது கொண்ட உடல் ஆசை எவ்வகையிலும் நிறைவேறாமல் போகிறது. இப்படிப் பல சமயம் உணர்ச்சிவசப்பட்டுத் தொல்லையில் சிக்கிக்கொள்கிறான். அது தன்பாலீர்ப்பு உறவாக இருந்தாலும் இருதரப்புக்கும் பரஸ்பர இணக்கம் இருக்க  வேண்டும். இல்லையென்றால் அது பாலியல் வன்முறையாகிவிடுகிறது.    

அடையாளச் சிக்கல்தான் மோகனசாமி எதிர்கொள்ளும் மையப் பிரச்சனை. மேலை நாடுகளில் தன்பாலினத்தவர் தங்களின் அடையாளத்தைக் காட்டிக்கொள்ளும் விதம் நுட்பமானது. அவர்கள் தலை முடியை பிங்க் நிறத்தில் நிறமிட்டுக் கொள்வார்கள். தாங்கள் உடையில் அல்லது, கொண்டுவரும் தண்ணீர்ப்புட்டி பிங்க் நிறத்தில் இருக்கும்படி பார்த்துக்கொள்வார்கள். இந்த அடையாளமே தன்பாலினத்தவர் என்ற சமிக்ஞையைக் காட்டிவிடும். எனவே பரஸ்பரமான தேவை கொண்டவர்களுக்கு, இணையர் கிடைப்பது எளிதாகிவிடுகிறது. தவறான நபரிடம் சிக்கிக் கேவலப்படும் நிலை தவிர்க்கப்பட்டுவிடுகிறது. பிங்க் நிறத்திலான சமிக்ஞையை மேலைச் சமூக மனிதர்களும் அறிந்தே வைத்திருக்கிறார்கள். அது பண்பாடாக அங்கே கருதப்படுகிறது. கல்வி கற்ற சமூகத்தின் அது பண்பாட்டுக்குள் ஏற்கப்பட்டு மரபாகிவிட்டும் இருக்கிறது. ஓர் ஆணும் இன்னொரு ஆணும் சட்டப்படி திருமணம் புரிந்துகொண்டு சேர்ந்து வாழும் அனுமதியும் அங்கே உண்டு.

இக்கதைத் தொகுப்பில் உள்ள முதல் கதையான ‘சிக்கலான முடிச்சு’ மோகனசாமிக்கும் கார்த்திக் என்ற அவனின் உற்ற நண்பனுக்குமான பரஸ்பர உறவு சொல்லப்படுகிறது. இருவரும் உடல் சார்ந்த அந்நியோன்யத்தைக் காட்டினாலும் ஒரு தருணத்தில் அதுவும் மோகனசாமிக்குப் பெரும் தோல்வியில் முடிகிறது.

எல்லாக் கதையிலுமே தன்பாலின ஈர்ப்புக்கொண்ட மோகனசாமியே மையப் பாத்திரமாக வார்க்கப்பட்டிருக்கிறான். தனித்துவம் மிகுந்த அப்பாத்திரத்தன்மை வாசகர்களிடம் அதிகமான பாதிப்பை உண்டாக்கி, பேசுபொருளாக்கப்பட வேண்டும் என்பது வசுந்தேந்திராவின் நோக்கமாக இருக்கலாம். கீழைச் சமூக பாண்பாட்டு அரசியலில் கெட்டிதட்டிப்போன, தன்பாலின ஈர்ப்பாளர்கள் உறவை அங்கீகரிக்காத போக்கை அவர் சுட்டிக்காட்ட முயல்கிறார் என்பதாகவும் எடுத்துக்கொள்ளலாம்

‘சிக்கலான முடிச்சு’ கதையில் கார்த்திக்கின் பெற்றோர் கார்த்திக்குக்குத் திருமண ஏற்பாடு செய்கிறார்கள். பெண் உடல் சுகத்தை முதன் முதலில் அனுபவிக்க நேர்ந்த கார்த்திக்  மோகனசாமியிடமிருந்து முற்றாக விலகிக்கொள்கிறான். கார்த்திக்கை உயிராக நேசித்த மோகனசாமிக்கு இந்த எதிர்ப்பாரா விலகல் பெரும் ஏமாற்றத்துக்குள்ளாக்குகிறது. ஒரு ஆண்மகனின் இச்சையைப் பகிர்ந்துகொள்ள ஒரு பெண்ணே உயிரியல் முறைப்படி பொருத்தமானவள் என்பதைக் கார்த்திக்கின் திருமணம் மோகனசாமிக்குக் கன்னத்தில் அறைந்து சொல்லிவிடுகிறது. தனக்கு ஒரு பெண்துணை கிடைக்குவரைக்குமான  தற்காலிகமான போகப்பொருளாகக் கார்த்திக் தன்னைப் பாவித்திருக்கிறான் என்று உணரும்போது மோகனசாமி அதீத ஏமாற்றத்துக்குள்ளாகிறான். தனக்கான துணை கிடைப்பது அபூர்வமாக நிகழும்போது, வந்த வாய்ப்பையும் ஒரு பெண் தட்டிப்பறிக்கிறாளே என்ற காழ்ப்பில் கொந்தளிக்கிறான் மோகனசாமி.

இதனைவிடவும் உக்கிரமாக ‘காசி வீரர்கள்’ கதையில் சொல்லப்பட்டிருக்கிறது. காசிவீரனின் அகன்ற மார்பும், தவளைபோல துள்ளி நிற்கும் கைகளின் தசைநாறும், தோள்வரை சுருண்டு தொங்கும் தலைமுடியும், மோகனசாமியைக் கிறுகிறுக்க வைக்கிறது. அந்த உடலை ஸ்பரிசித்து இன்புற வேண்டும் என்ற ஆசை, காசிவீரன் குளிக்கும்போது கொப்பளிக்கிறது. அவனைத் தானாக நெருங்கிப்போய் உடம்பைத் தேய்த்துவிடுகிறான் மோகனசாமி. மெல்ல மெல்ல அவன் கைகள் அவன் உடல் முழுதும் ஸ்பரிசித்து இன்புறுகிறது. மோகனசாமியின் கைகள் அவனின் ஆணுறுப்பைத் தொட முயலும்போது காசிவீரன் உடல் கூசி, கோபத்தில் பொங்கி அவனைத் தள்ளிவிடுகிறான். தன் தொடுதலைக் காசிவீரன் விரும்புகிறான் என்றே யூகித்திருந்தவனுக்கு, காசிவீரனின் விலகலும், நிராகரிப்பும், தான் வெகுவாக அவமதிக்கப்பட்டதாக உணர்கிறான். அந்த அவமதிப்பு தன்னை மாய்த்துக்கொள்ளும் அளவுக்குத் தள்ளிவிடுகிறது அவனை. தான் செய்தது வெட்கங்கெட்ட செயல் என்று வருந்துகிறான். ஆண் உடம்பை விரும்பும் தனது மன நெருக்கடிகளை யாராலும் புரிந்துகொள்ளமுடியவில்லையே என்று வருந்துகிறான். தன்னைத் துண்டுத் துண்டாக்கி பருந்து, கழுகுகளுக்குப் பகிர்ந்து உணவாகப் போட்டுவிடவேண்டும் என்று நினைத்துக் கதறுகிறான் மோகனசாமி. தன்னைப் போன்றவர்கள்  இழிபிறவிகள், இவ்வுலகில் பிறந்திருக்கவே கூடாத ஜென்மங்கள் என்று தன்னைத்தானே புறம்தள்ளும் அளவுக்கு, தங்களின் பிறப்பு கீழானதாக இருக்கிறதே என்று கருதுகிறான். தங்கள் வாழ்க்கை அசிங்கமானது, எவ்வகையிலும் மதிக்கத்தக்கதல்ல என்று தங்களைத் தாங்களே கீழ்மையாக மதிப்பிட்டுக்கொண்டு, தங்களைச் சுயமதிப்பிழந்தவன் பட்டியலில் சேர்த்துக்கொள்கிறான்.

தன்பாலின உறவைப்பற்றிய புரிதல் இச்சமூகத்துக்கு இல்லாததானாலும் சமூக அங்கீகாரம் எட்டாக் கனியாகவே இருக்கிறது. மோகனசாமி போன்றோர் எந்த அளவுக்குப் பாதிக்கப்படுகிறார்கள் என்று சமூகத்துக்குத் தெளிவை உண்டாக்கும் நோக்கத்தில் வசுதேந்த்ரா கதைகளை எழுதியிருக்கிறார். இவ்வாறான கதைகளை வாசிக்கும்போது அவரே கதைகளில் பாத்திரமாக இருந்து எழுப்பும் குரலாகவே நாம் எடுத்துக்கொள்கிறோம். சுய அனுபவசாளிகளன்றி வேறு எந்தப் புனைவாளனாலும், இதனைத் இத்துணைத் துல்லிதமான விவரணைகளோடு தெளிவுபட சொல்லிவிடமுடியாது.

‘சிக்கலான முடிச்சு’, ‘சைக்கிள் சவாரி’ என்ற இரண்டு கதைகளிலும் மோகனாசாமி தன்னை ஒருபாலின ஈர்ப்பாளனாக உணர்ந்தாலும் தன்னால் எந்த ஆடவனையும் கவர முடியாது என்ற முடிவை வந்தடைகிறான். எனவே எப்பாடுபட்டாவது தான் ஓர் ஆணாக, அதாவது தனக்கு வாய்த்த  உடலின் இயற்கை விசைக்கு எதிர்த்திசையில் பயணிக்கத் தன்னை ஆணாக மடைமாற்றம் செய்துகொள்ளும் முயற்சியில் பகீரதப் பிரயத்தனம் செய்ய முயற்சிக்கிறான். இது ஒரு பைத்தியக்காரத்தனம் என்று தெரிந்தும்,  உடல் வலியையும் ஒரு பொருட்டாகக் கருதாமல் ‘ஆண் வேடம்’ தரித்து பெரும் சிரமத்துக்கு உள்ளாகிறான். அவனால் தொடர்ந்து அவ்வாறான பாவனையை நிகழ்த்த முடியவில்லை! பின்னர் அது தன் இயல்பல்ல என்று உணர்ந்து சோர்வடைகிறான். அவனின் உள்ளுடல் இயக்கம் அவன் போடும் வேடத்தை முற்றாக மறுதலிக்கிறது. ஒருபாலின் ஈர்ப்பாளனாக இருப்பதே தனக்கு விதிக்கப்பட்டிருக்கிறது என்று உணர்கிறான். தன் உடல்தேவை நிறைவேறாமல் இருப்பதற்கு முக்கியக் காரணம் தன் சமூகம் அதனை அங்கீகரிக்க மறுப்பதால்தான் என்றே கருதுகிறான். சமூகத்தில் கெட்டிதட்டிப்போன கற்பிதமும், அதனைக் கண்டிப்பாக அனுமதிக்காத பண்பாட்டின் மீது, அவனால் கோபப்பட மட்டுமே முடிகிறது. ஒருபாலினக் கவர்ச்சியாளர்கள் தேவை  மறுக்கப்பட்ட சமூகத்தில் வாழ்வது சபிக்கப்பட்ட ஒன்று என்று முடிவுக்கு வருகிறான்.

ஆனால் மேலை நாட்டவருக்கு அது தடையே அல்ல என்பதை ‘சைக்கிள் சவாரி’ கதையில் சொல்லப்படுகிறது.

அக்கதையில் இரண்டு ஐரோப்பிய சுற்றுப்பயணிகள் இணைவதை மோகனசாமி கண்கொண்டு பார்க்க நேர்கிறது. இந்தக் காட்சி சொல்லவருவதை இப்படித் தொகுத்துக்கொள்ளலாம். ஐரோப்பிர்களுக்குத் தன்பாலினத்தவர் உறவு  2000 ஆண்டிலிருந்தே அரசு சட்டத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. 2013ஆம் ஆண்டில் இங்கிலாந்து தன்பாலினத்தவர் திருமணமே செய்கொண்டு வாழலாம் என்ற சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறது. அதற்கு அடுத்த ஆண்டே ஸ்காட்லாந்து அவர்களின் இணைவை அங்கீகரிக்கிறது. பிற மேலை நாடுகளும் இவர்களின் உறவை அங்கீகரிக்கிறது. அதனால் உடல் ஆசையைத் தீர்த்துக்கொள்ளும் இப்பிரிவினரின் செயலுக்கு அச்சமூகத்திடமிருந்து எந்தவித எதிர்ப்பும் கிளம்புவதில்லை. அது இயற்கைக்கு எதிரானதல்ல என்ற புரிதல் எப்போதோ வந்துவிட்டது அவர்களுக்கு. இந்தப் புரிதலை வந்தடைய கல்வி வாய்ப்பே அவர்களுக்கான விழிப்புணர்ச்சியை வழங்கியிருக்கிறது. ஆனால் கீழைத்தேசங்களின் நிலை முற்றிலும் அதற்கு முரணானது. சட்டம் அப்பிரிவினரின் உடல் சார்ந்த உறவை அங்கீகரிக்கவில்லை. மாறாக, இது பண்பாட்டுக்கும், சட்டத்துக்கும் எதிரானது என்று பிற்போக்கான சிந்தனையிலேயே ஊறிக்கிடக்கிறது. அதுமட்டுமின்றி ஓரின உறவுக்கு இங்கே கடுமையான தண்டனையை விதிக்கிறது. இது ஒரு மனித உரிமை மீறல். இந்த வகை உறவுக்கு, தண்டனைகள் விதிக்கப்படும்போது  அந்தரங்கமாகச் செயல்படுத்துவதில்கூட மனத்தடை இருந்துகொண்டே இருக்கும்.  

கீழைத் தேசத்தவர் மரபுப்படி, மோகனசாமி அதன்  பிரதிநிதியாகக் காட்டப்படுகிறான். அவனின் பாத்திரப்படைப்பினூடே அவர் எதிர்நோக்கும் இன்னல்களை, அவர்களைப் புரிந்துகொள்ளாமையால், அவர்களைப்பற்றிய சமூகம் கொண்டிருக்கும் கீழ்மையான அபிப்பிராயங்களைப் புனைவின் வழி அழுத்தமாகச் சொல்லிச் செல்கிறார். இவர் போன்ற படைப்புத்திறனுடையோர்கள் வழியேதான்  பிரச்சனையைப் பொதுப் பார்வைக்குக் கொண்டுவந்து மெல்ல மெல்ல சட்டத்தை ஊடுறுவச் செய்ய முடியும். இதனால் தன்பாலினத்தவர்களுக்கு மறுவாழ்வும் கிட்டும்.

‘காசி வீரர்கள்’ கதையில் தன்பாலினத்தவர் எதிர்நோக்கும் இன்னொரு சிக்கலும் விவரிக்கப்பட்டிருக்கிறது. காசிவீரன் உடலின் மீது தீராத ஆசை கொள்கிறான் மோகனசாமி. காசிவீரனின் உடல் மீது மையல் கொண்ட மோகனசாமி உணர்ச்சிவசப்பட்டு அவன் உடலை ஸ்பரிசித்துவிடுகிறான். ஒவ்வாமை காரணமாக அதனைச் சற்றும் எதிர்பார்க்காத காசிவீரன் மோகனசாமியை இழிவாகப் பேசிவிடுகிறான். மோகனசாமி தான் செய்த குற்றத்தை யாரிடமும் சொல்லி மானத்தை வாங்கிவிடவேண்டாம் என்று மன்றாடிக் கேட்டுக்கொள்கிறான். மோகனசாமியின் பயத்தைப் பணயமாக வைத்து அவனிடமிருந்து பணம் கறக்க முற்படுகிறான் காசிவீரன். கொஞ்சம்கூடத் தயக்கமோ வெட்கமோ இல்லாமல் மிரட்டி பணம் பறிக்கும் இழிசெயலை மீண்டும் மீண்டும் நிகழ்த்துகிறான் காசிவீரன். தன்பாலினத்தவரின் இந்தப் பலவீனத்தைச் சில ஆடவர்கள் தன் சுய லாபத்துக்குப் பயன்படுத்திகொள்ளும்போது அவர்கள் தங்கள் இயலாமையை எண்ணி வருந்துவதைத் தவிர வேறு வழியில்லாமல் தவிக்கிறார்கள். அதனை எதிர்த்துப் போரிடமுடியாத நிலைமைக்கு ஆளாகும் பேடித்தனத்தால் சிறுமையடைகிறார்கள். இது மாதிரியான மிரட்டலுக்கு ஆளாகும்போது  போலிசாரிடம் புகார் செய்யும் தைரியம்கூட வருவதில்லை இவர்களுக்கு. ஏனெனில் பாதுகாப்பு அளிப்பவர்களேகூட இவர்களைக் கேவலமாகக் கருதுவது சர்வ சாதாரணமாக நடக்கக்கூடிய ஒன்றுதானே!

வசுதேந்த்ரா கதைகளில் சித்தரிக்கப்படும் தன்பாலின ஈர்ப்பாளர்கள், விரும்பிய ஆண்களால் இரக்கமில்லாமல் நிராகரிக்கப்படுகிறார்கள். தன்பாலின விரும்பிகள் தங்கள் இச்சைக்கான துணையாக ஆண்மை மிகுந்தவர்களே தேவைப்படுகிறார்கள். துரதிஷ்டவசமாக அந்த ஆண்கள் இவர்களை அற்பப் பதர்களாக புறமொதுக்கிறார்கள். தன்பால் விரும்பிகளின் விரக தாபத்திற்கு யாரும் வசப்படுவதில்லை. அவர்களுக்கு ஏமாற்றமும் எரிச்சலுமே மிஞ்சுகிறது. அதனால் இவ்வகை மனிதர்கள் தனிமைக்கு ஆளாவதும் நடக்கத்தான் செய்கிறது. ஐரோப்பிய நாடுகளில் இவ்வின மனிதர்களுக்கான சட்டம் சாதகமாகவே இருக்க, கீழை நாடுகளில் இந்த வகை உறவு முற்றிலும் அபத்தமாகக் கருதப்படுகிறது. இவ்வகை மனிதர்கள் தன் பாலினத்தை வேண்டுமென்றே தேர்ந்தெடுத்துக்கொள்ளவில்லை. பால் அவர்களைத் தேர்ந்தெடுக்கிறது. எனவே குற்றம் அவர்கள்பால் இல்லை. இந்த மனிதர்களைப் புரிந்துகொள்ளாத சமூகத்தின் மீதே இருக்கிறது. சமூகம் மரபான பிடியிலிருந்து விடுபடுமாயின், இவர்களுக்குச் சாதகமான நீதி சட்டமாக்கப்பட வாய்ப்புண்டு.

தான் ஒரு தன்பாலினத்தவர் என்பதைத் தன்னைக் கவர்ந்த ஆண்களிடம் எப்படிச் சொல்வது என்ற சிக்கலை ‘உச்சி முனையில் முதல் முதலாக’ கதை விவரித்துக்கொண்டு போகிறது. கார்த்திக்கோடு அவனுக்கு உடல் ரீதியான பழக்கம் இருந்தாலும், மோகன் என்ற கட்டழகனைச் சந்திக்கும்போது அவனுக்குக் கூடுதாலான உடலாசைக் கொப்பளிக்கிறது. ஆனால் மோகனசாமியின் நெருக்கத்தை வெறுப்போடு நிராகரித்த பிற ஆண்களால் கேவலப்பட்டது மீள மீள நினைவுக்கு வர, மோகனை  நெருங்கவே அச்சமாக இருக்கிறது மோகனசாமிக்கு. ஆனால் அவன் புத்தி சொல்வதை, முறுக்கேறிக்கொண்டிருக்கும் அவன் உடல் கேட்பதாயில்லை.  தன்னை ‘ஆணாகக்’ காட்டிக்கொண்டு அவனோடு பழகுகிறான். இக்கட்டான சூழ்நிலைகளில் அந்தப் பொய்யையே திரும்பத் திரும்பச் சொல்லி அதனை நிலைநாட்டவேண்டிய கட்டாயம் உண்டாகிறது. ஒரு நெருக்கடியான சூழல் வரும்போது தான் சொன்னது உண்மையல்ல என்றும், தான் ஒரு தன்பாலீர்ப்பாளன் என்றும் உண்மையைக் கக்கிவிடுகிறான். பல தருணங்களில் தன் ஆசையை நிறைவேற்றுவதில் தோல்விகண்ட மோகனசாமி தான் ஓர் ஆண் என்றே வேடமிட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுவது மோகனசாமி போன்றவர்களுக்கு நேரும் துர்ரதிஷ்டம். தன் வாழ்க்கை நெடுக்க பிற ஆண்களிடம் தன் இச்சையைத் தெரியப்படுத்த முடியாத காரணத்தால், போலியான பிம்பத்தை ஏந்தி வாழ வேண்டிய கட்டாயம் நேரிடுகிறது. தவிப்பையும் அபிலாசைகளையும் தனக்குள்ளே புதைத்துக்கொண்டு துன்புற வேண்டிய நிலை இவர்களுக்கு நேர்வது பெரும் சோகம்.

‘பேசக்கூடாத பேச்சுகள் வதைக்கும்போது’ கதையில் மோகனசாமிக்குக் கல்யாணமே ஆகாது என்ற கவலையில் அவன் தந்தை ஒருநாள் இறந்துவிடுகிறார். அவன் தந்தைக்கு இறுதி கடன்கள் செய்யவந்த பட்டர் என்ற புரோகிதர் மோகனசாமிக்கு அறிமுகமாகிறார்.

மோகனசாமியின் பாலினத்தை அறிந்திருந்த பட்டர், தன் விதவை மகளுக்குப் பெயரளவில் கணவனாக இருக்கும்படி கெஞ்சுகிறார். இந்தக் கோரிக்கையில், ‘அதற்கப்பால் உன்னால் அவளுக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை’ என்ற சீண்டல் மறைமுகமாக அடங்கியுள்ளதாக அவனே நினைத்துக்கொள்கிறான். தன் பலவீனம் மோகனசாமியைப் புண்படுத்துகிறது. அதுமட்டுமின்றி தன் பாலினத்தையே கேலிசெய்யும் ஒரு உள்குத்தும் அதில் அடங்கியுள்ளதாகக் கருதுகிறான். அதனால் பட்டரின் கோரிக்கையை ஏற்பதில் அவனுக்கு உடன்பாடில்லை.  அவன் சுயாதீனம் அதற்கும் இடம் கொடுக்கவில்லை. சமபாலின ஈர்ப்பாளனாக, தனக்கு அவசியம் தேவைப்படுவது கிடைக்க வகையற்றுப் போனாலும், அவனைத் தேடிவரும் தேவையற்றவை அவனின் தன்மானத்துக்கு இழிவை உண்டாக்கிவிடுவதாக அவன் நினைக்கிறான்.

கடைசி கதை, கிளிமாஞ்சாரோ மலையை ஏறுவதைக் குறியீடாகக் காட்டி  தன்பாலினத்தவனாக, மோகனசாமி கடந்துவந்த தன்னந்தனிய வாழ்க்கையைச் கதாசிரியர் சொல்கிறார். இக்கதையின் ஓரிடத்தில்,  ‘அங்கே பெரும்கடலின் நட்ட நடுவே தான் நிற்பதைப்போல  வியந்தான் ’ என்று குறிப்பிடுகிறார். இந்த வாக்கியம் அவ்வகை மனிதர்களின் தனிமையின் தவிப்பைத் துன்பியலோடு சொல்ல வருகிறது. பாலின வேறுபாட்டைக் காரணங்காட்டி சமூகத்திலிருந்து அவர்களை ஒதுக்குவது எவ்வகையில் நியாயமாகும் என்று தர்க்கரீதியான வினாவை எழுப்பி, வாசகர்களின் மனசாட்சியைத் தட்டித் திறக்கிறது.

கிளிமாஞாரோ மலையேறும்போது அவனோடு ஒரு குழு முன்னாலேயும், இன்னொரு குழு பின்னாலேயும் தொடர, அவர் பெருவாரியான நேரம் இரு குழுவிலும் சேர விருப்பமற்று, தனியாக நடக்கவேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. இது திட்டமிட்ட செயலல்ல என்றாலும், தன்பாலினத்தவன்  தனியனாக விடப்படுபவன் என்ற சித்தாந்தத்தைச் சொல்ல விழைகிறது கதை. அவர்களின் சுகதுக்கங்களைப் பகிர்ந்துகொள்ளக்கூட துணை இல்லாமல் போவதே அவர்கள் வாழ்க்கையின் விதி என்றும் ‘கிளிமாஞ்சாரோ’ கதையினூடே சொல்லிவிடுகிறார்.

ஒரு குறிப்பிட்ட மனிதன் ஒரு சமூகத்துக்குத் தேவைப்படாவிட்டால், அவனை ஒரு பொருட்டாகவே அவர்கள் கருதுவதில்லை, என்ற கருத்தியலை இக்கதை முன்வைக்கிறது.

‘மோகனசாமி’ தொகுப்பு நூலின் கதைகளின் பின்னப்பட்டிருக்கும் சம்பவங்களின்வழி, தன்பாலினத்தவர் இப்படித்தான் இருப்பார்கள் என்ற படிமம் நமக்குத் தெளிவாக உருவாகிறது. ஒரு சமபாலின வர்க்கத்தினர் இன்னொரு தன்பாலினத்தவரைக் காதலிக்கும்போது, மோகனசாமிக்குப் பொறாமை உணர்வு மேலிடுவதைக் காட்டுகிறார். ‘நான்முகன்’ கதையில் ராமுகுருவும், சாந்தனுவும் இணைந்து இருப்பதை நேரடியாகப் பார்த்து அதிர்ச்சியடைகிறான் மோகனசாமி. அதனை  ஏற்கமுடியாது மனம் கொந்தளிக்கிறான். உடல் தேவை என்பது ஆதி இச்சை. அது ஆண் பெண் இருபாலினருக்கு மட்டுமே உரித்தானது என்பது தவறான சமூகக் கண்ணோட்டம். தன்பாலினத்தவருக்கும் இந்த ஆதி இச்சை, புலன்களைத் தூண்டும் என்ற நிதர்சனத்தை யதார்த்ததோடு முன்வைக்கும் கதைதான் ‘ நான்முகன்.’

‘மோகனசாமி’ தொகுப்பில் கதைகள் மிக வெளிப்படையான மொழியில் சொல்லப்பட்டிருக்கின்றன. கதைகளின் உள்ளீடே  சமூகத்தைப் போய்ச் சேரவேண்டிய கடப்பாட்டை வசுதேந்த்ரா கையாள்வது தெளிவாகத் தெரிகிறது. பண்பாட்டில் நிலைகொண்டுவிட்ட அந்தக் கருத்துருவாக்கத்தை உடைத்தெறிவது அவர் புனைவின் நோக்கமாக எடுத்துக்கொள்ள முடிகிறது.   காமத்தால் தகிக்கும் உடலை, இன்னொரு உடல்கொண்டுதானே நிரப்பிக்கொள்ள முடியும்.  காமத்தையும் துய்ப்பதுதானே உடல்களின் ஆதி வேட்கையாக இருக்கிறது. அத்தேவையை நிறைவு செய்ய இன்னொரு உடலைத் தவிர வெறெதனாலும் ஈடுசெய்ய முடியாது. அதாவது ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதனால்தான் மகிழ்ச்சியைக் கொண்டுவர முடியும். ஆனால் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு இன்னொரு மனிதனிடமிருந்து துன்பமே அதிகம் வாய்க்கிறது.  பாலியல் உரிமைகள் கிடைக்காத பட்சத்தில், உடலில் பற்றி எரியும் ஆதி இச்சையை, எதைக்கொண்டு சமன் செய்வது? வசுதேந்த்ரா இதனை வலியுறுத்தும் முகமாகவே அவ்வுணர்வை எல்லாக் கதைகளிலும் ஒலிக்கச் செய்கிறார்.

‘மோகனசாமி’ நூலில் உள்ள கதைகளை ஒரு வகையில் பிரச்சார வகைமைக்குள் சேர்க்கலாம். தொகுப்பில் உள்ள எல்லாக் கதைகளிலும் மோகனசாமியே  முதன்மைப் பாத்திரமாக்கப்பட்டிருக்கிறார். முதல் கதையிலேயே மோகனசாமி தன்பாலின ஈர்ப்புள்ளவன் என்பதைச் சொல்லிவிட்டவர், தொடர்ந்து எல்லாக் கதைகளிலும் அவரை மையப் பாத்திரமாக்கியதன் நோக்கம் நமக்குச் சட்டென்று புரிகிறது. அதாவது மோகனசாமியைத் தன்பாலின ஈர்ப்புகொண்ட சமூகத்தின் பிரதிநிதியாக்கி உலவவிட்டிருக்கிறார். அது மட்டுமின்றி மோகனசாமியைத் தன் கதைகளில் முன்னிறுத்தியதானது, பிரச்சாரம் செய்யவே என்று தோன்றுகின்றது. மோகனசாமியின் பாத்திரத்தில் ஊடுறுவும் சிக்கல்களை முன்வைத்து அவற்றை மேலெழச் செய்திருக்கிறார். இவ்வகை எழுத்து உத்தி பெரும்பாலும் புனைவின் கலையம்சக் குறைபாட்டைக் கொண்டுவருகிறது. அதற்கப்பால், தன்பாலின ஈர்ப்புகொண்டவர்கள் எதிர்நோக்கும் பிர்சனைகளை அழுத்தமாகச்  சொல்லச் சம்பவங்களை வழிந்து வைப்பதாகத் தெரிகிறது.   இதனால் பிரச்சார நெடி தூக்கலாக ஒலித்து, வாசகனைச் சலிப்படையச் செய்கிறது.  கலையைவிட கருத்துதான் முக்கியம் என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார் எழுத்தாளர். கருத்தின் வழியேதான் சமூகத்தின் கண்களைத் திறக்க முடியும் என்று அவர் நம்புவதாகத் தெரிகிறது. அதனால் கலை அம்சம் கீழே சரிந்துவிடுவதாகப் படுகிறது.

வசுதேந்த்ரா முன்வைக்கும் இக்கதைகளில் வரும் பாத்திரங்கள் அவர் வாழ்க்கையில் மிக நெருக்கமாகப் பழகியவர்கள் என்ற ஊகத்தை ஏற்படுத்துகிறது. அவர் சந்தித்துப் பின்னர் அவரோடு அந்நியோன்னியமானவர்களாக இருக்கலாம். அவர்களின் இயல்பை அறிந்து, புரிந்து பழகியவர்களையும் சித்தரித்திருக்கிறார். அதே வேளையில், பலர் மோகனசாமியோடு நெருங்கிப் பழகிய பின்னர், அவனின் உண்மை தன்மையை அறிந்து, அதிர்ச்சியுடனும் அருவருப்புடனும், விலகியவர்களும், கதை மாந்தர்களாக வருகிறார்கள். எனவே கதைகளில் கதைசொல்லிக்கு அந்நியமானவர்கள் என்று யாருமில்லை. மோகனசாமியின் ஒரு பாலின உறவைத் தேடிவருபவர்களும் இருக்கிறார்கள். அதே சமயத்தில் மோகனசாமியின் அல்ப குணத்தைக் கண்டு, கூசி விலகி ஓடுபவர்களும் வருகிறார்கள். இவ்வாறான பாத்திரங்களைக் கையகப்படுத்திப் புனைவுக்குள் கொண்டுவந்திருக்கிறார் கதாசிரியர். எனவே இவை நம்பகத்தன்மை பிறழாமல் நிற்கின்றன.

சமூகத்தால் இவ்வாறான புறக்கணிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை பரிதாபத்துக்குரியது. அவர்களே வேண்டுமென்றே பாவனை செய்வதில்லை. அப்படிப் பாவனை செய்து சமூகத்தின் எரிச்சலுக்கும், எள்ளலுக்கும் ஆளாக வேண்டிய அவசியமும் இல்லை. ஆண் பெண் பிறப்பைப்போலவே இந்தப் பாலினத்தின் பிறப்பும் இயற்கையானதுதான். இந்த யதார்த்தத்தைச் சமூகம் ஏற்க மறுப்பதற்ககுக் அது சார்ந்த அறியாமைதான் காரணமே ஒழிய அவர்கள்பால் எந்தத் தவறும் இல்லை.

.

சமூக அரசியலில் மிகச் சிறுபான்மையினரின் தேவையைப் பெரும்பாலும் எத்தரப்பும் அக்கறை செலுத்துவதில்லை. உள்ளபடியே தன்பாலின ஈர்ப்பாளர்கள் என்ற ஒரு பிரிவினர் சமூக கவனத்துக்கு வராதவர்கள். அந்த உலகத்தை வெளிப்படையாகவே திறந்து காட்டுகிறார் வசுதேந்த்ரா. சமூகம் கண்டுகொள்ள விரும்பாத இப்பிரிவினரைப் பற்றி பொதுப்பார்வைக்குக் கொண்டுவரும்போதுதான், அவர்கள் முற்றாக மறக்கப்பட்டவர்கள் என்ற உண்மை தெரிய வருகிறது. படைப்பின் வழி அவர்கள் பிரச்சனையைத் துல்லிதமாகப் பதிவு செய்யப்படும்போது, அது பரவலான கவனத்துக்குப் போகிறது. வசுதேந்த்ராவின் இந்த முன்மொழிதல், மாற்றங்களை உண்டாக்க  எல்லாச் சாத்தியங்களையும் நிறைவாகவே பெற்றிருக்கின்றது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...