வீட்டில் எவரும் இல்லை. மாசற்ற தனிமையை உணர வேண்டும் என்று உள்மனம் கோரியதால் மனைவியைக் குழந்தையுடன் கோவிலுக்குப் போகச் சொல்லியிருந்தேன். வாடகை ஆட்டோ ஒன்றில் அவர்களை அனுப்பிவிட்டு வீட்டிற்குள் வந்து மல்லாந்தபோதுதான் இவை அனைத்தும் அந்த நிழலின் திட்டமோ என்கிற சந்தேகம் மூண்டது. ஆனால் ஏனோ நான் அஞ்சவில்லை. பதற்றப்படவுமில்லை.
பாயின் விளிம்பில் என் உடம்பை ஒட்டி உரசியபடி வெள்ளச்சி படுத்திருந்தது. ஏதோ விதத்தில் இத்தனை காலமாக என்னை அந்த நிழலிடம் இருந்து விலக்கி வைத்திருந்தது இதுவே என்று சொன்னால் அது மிகையாகாது. கம்பிக்கொடியில் உலர்த்தப் போட்டிருக்கும் கரிய போர்வை காற்றில் சடசடத்துச் சுருண்டு பின் விரிந்து அலையென எழுவதைப் போலத்தான் அந்த நிழலின் அசைவுகள் இருக்கும். தொலைவில் அதனைக் கண்டதுமே உடம்பில் ஓடும் ரத்தம் அப்படியே உறைந்து நிற்பதைப்போல தசைகளில் ஒருவித விறைப்புத்தன்மை குடியேறி, எக்கணமும் என்னைச் சுற்றியே இருக்கும் மனைவியின் மீதும், உச்சக்குரல் அழுகையினால் தனது இருப்பைச் சதா உணர்த்திக்கொண்டே இருக்கும் ஒன்னரை வயது குழந்தையின் மீதும் அப்படியொரு ஒவ்வாமை கிளம்பும். அவர்கள் இந்த அறையில், எனது அருகாமையில் இருப்பதே ஒருவகை அத்துமீறலைப்போல் அவர்களின் மேல் ஆத்திரம் பொங்கும். ஆனால் இல்லத்தின் ஏதோ ஒரு மூலையில், அக்கணம் அவரை அமைதியாக படுத்திருக்கும் வெள்ளச்சி, திடீரென விசும்பியபடி அருகே வந்து என் கையை நக்கும்போது என்னுள் முறுக்கிக்கொண்டிருந்த அனைத்தும் நெகிழ்ந்து பிரபஞ்சத்தின் மீதே ஒருவித அன்பும், பற்றுதலும் பொங்கி வழியும்.
அன்பான, மிகுந்த கதகதப்புக் கூடிய ஒரு அரவணைப்பைபோல, ஆனால் அதே வேளையில் மிக நுணுக்கமான ஒரு வேதனையை உடம்பெங்கிலும் படரச்செய்யும் அந்த நிழலின் ஸ்பரிசத்தை முதன்முதலாக நான் உணர்ந்தபோது இந்த வீடும், இக்கட்டிடமும் எழுப்பப்பட்டிருக்கவில்லை. அப்போது இங்கே ஒரு குளமும், அதனைச் சுற்றிய சிறிய சோலை ஒன்றும் இருந்ததாக மளிகைக்கடை நாடார் அடிக்கடிச் சொல்வார். எழுபது வயதைக் கடந்துவிட்டிருந்த அவரது நினைவில் அப்போது அதிதுல்லியத்துடன் இருந்தது தனது கடைக்கான வரவு செலவு கணக்குகளும், இங்கே இருந்ததாகச் சொல்லப்படும் அந்தச் சோலையும்தான்.
மழை கொட்டித்தீர்த்த அம்மாவாசை இரவொன்றில் எதற்கென்றே தெரியாமல் ஆற்றில் குதித்து தனது உயிரை மாய்த்துக்கொண்ட அவரது உடலைக் கண்டு அவரது மனைவியும், ஊர்க்காரர்களும் அழுது, புலம்பி, பேசியதையெல்லாம் கேட்டபோது நாடார் நியாபக மறதிக்கு பெயர்போனவர் என்பது அப்பட்டமாகியது. இருந்தும் அந்த மனிதரின் மங்கலான நினைவைவிட்டு அந்தச் சோலை நழுவாமல் இருந்ததற்கும், அங்கே நிமிர்த்தப்பட்டிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில்தான் நான் வசிக்கிறேன் என்று முதல்முறையாக நான் சொல்லியிருந்தபோது சுருக்கங்கள் செறிந்திருக்கும் அவரது முகத்தில் தோன்றிய ஒருவித மாயத்தன்மை மிகுந்த புன்னகைக்கும் என்ன காரணம் என்பதை நான் அறிந்துகொண்டபோது ஆண்டுகள் பல கழிந்திருந்தன.
திருமணம் ஆவதற்குச் சில மாதங்கள் முன்புவரைக்கூட எந்தவித இலக்கும், திட்டமும் அற்றவனாகவே திரிந்துகொண்டிருந்தேன் நான். பாளையம்கோட்டை ரயில் நிலையத்தில், திருச்செந்தூர் செல்லும் ரயிலில் மட்டும் அன்றொருநாள் ஏறாமல் இருந்திருந்தால் நாடார் குறித்த மர்மத்திற்கான விடையையும், என் மனைவியையும் நான் அடைந்திருக்க முடியாது.
அன்று என் கையில் சுத்தமாக பணம் இருக்கவில்லை. அதற்கு முந்தைய நாள்தான் வட்டிக்காரன் என்னைச் சந்தையில் வைத்து அடித்துப் புரட்டி குப்பையோடு குப்பையாக கிடத்திவிட்டுச் சென்றிருந்தான். அந்தச் சந்தையைக் கடந்தும், ஊடுருவியும் நான் ஆயிரம் தடவைக்கும் மேலாகச் சென்றிருப்பேன். எப்போதும் பரபரப்பாக காணப்படும் அந்தச் சந்தைப் பகுதியில் உலவும் அனைவரும் முகமற்றவர்கள் என்றே எனக்குத் தோன்றும். உச்சகட்ட பதற்றத்துடன் அவசரகதியில் மக்கள் நடமாடும்போது அவர்கள் அனைவரது முகமும் ஒரே சாயல் பெற்றுவிடுவதை நான் பலமுறை கவனித்திருக்கிறேன். அறிந்த முகம் தென்பட்டால் கூட இரண்டடி முன் சென்றபிறகு என்னுள் அது கொஞ்சம் கொஞ்சமாக அறியாத, மிகவும் பொதுவான ஒரு முகவெட்டாக உருத்திரிந்து போவதை உணர்ந்திருக்கிறேன்.
ஆனால் கிழிபட்ட சட்டையுடன், இதழோரத்தில் ரத்தம் கசிய, கைவிரல்கள் கட்டுப்பாடின்றி கிடுகிடுத்துக் கொண்டிருக்க அந்தச் சந்தை வளாகத்தில் நான் நின்றுகொண்டிருந்தபோது என்னைச் சுற்றிலும் இருந்த திரள் அப்படியே ஸ்தம்பித்திருந்தது. அப்போது அங்கே இருந்த நூற்றுக்கணக்கான முகங்களையும் என்னால் தனித்தனியாக அடையாளம் காண முடிந்தது. செய்வதறியாமல் கண்கள் இரண்டையும் இறுக்கமாக மூடிக்கொண்டேன். பின்னர் தலையை உயர்த்தி வான்பரப்பை வெறித்தபோது அந்த நிழற்போர்வை வலசைப் பறவைகளின் கூட்டத்தைப்போல் என்னைக் கடந்து சென்று, பின்னர் கழுகுக் கூட்டத்தைப்போல என்னை வட்டமிடத் துவங்குவதைக் கண்டேன்.
அப்போது வெள்ளச்சிப் பிறந்திருக்க வாய்ப்பில்லை. அன்று அந்தக் குப்பைத்தொட்டியின் அருகே பற்களைக் காட்டிச் சீரியபடி நின்றுகொண்டிருந்த, பின்னர் ஓர் இரவில் என்னிடம் அடிவாங்கி செத்துப்போன அந்தச் சொறிபிடித்த நாயின் வயிற்றினுள் அது ஓர் அணுவாக இருந்திருக்கலாம். அதனைக் கொன்றதற்கு ஒருசில நாட்கள் கழித்து அதே இடத்தில், செத்துப்போன ஐந்தாறு குட்டிகளுடன் உயிருடன் இருந்த ஒற்றை வெள்ளைக் குட்டியை எடுத்துவந்து வீட்டில் வைத்ததற்கு மறுநாள் தான் என் வாழ்க்கையை மாற்றிய அந்தப் பயணம் நிகழ்ந்தது.
அன்று எதற்காக அந்த ரயிலில் ஏறினேன் என்கிற வினாவுக்கு என்னிடம் தெளிவான பதில் இல்லை. ஊளையிட்டபடியும், கருகருவென புகையை உமிழ்ந்தபடியும் அந்த வண்டி நடைமேடையினுள் நுழைந்தபோது என் மனம் வேண்டியதெல்லாம் ஒரு சாகசத்தைத்தான். ஏதோ ஒன்றைச் செய்ய வேண்டும். எதோ ஒன்று நிகழ வேண்டும். காசும், நுழைவுசீட்டும் இல்லாமல் ரயில் ஏறியதற்காக தண்டிக்கப்பட்டாலோ, அல்லது என் உடல் எழுப்பிய துர்நாற்றமும், என் முகத்தின் அசுத்தமும் பிடிக்காமல் எவரேனும் என்னை எட்டி உதைத்துத் தள்ளினாலோ நிம்மதியாக இருக்கும் என்கிற விழைவு மட்டுமே என்னுள் உயிர்ப்புடன் எஞ்சியிருந்தது. வதை ஒன்றை வேண்டிப்பெறும் அளவிற்கு என் வாழ்வு அத்தனை துயர் மிகுந்தது அல்ல. என் சிக்கலெல்லாம் சலிப்புதான். போதைச் சரடைப் பற்றிக்கொண்டு அதளத்தை அளந்ததற்கும், எந்தவித திட்டங்களும் இல்லாமல் அந்தந்த நிமிடத்துக் கிளர்ச்சிக்காக பணத்தையும் மானத்தையும் இறைத்ததற்கு இந்தச் சலிப்பே காரணம்.
அம்மாவும் அப்பாவும் விபத்தில் காலமாவதற்கு முன்பே எனக்கென்று ஒரு வீடும், வங்கியில் ஓரளவுக்கு வைப்புத்தொகையும் வைத்துவிட்டுச் சென்றிருந்தார்கள். நான் செய்வதற்கென்று எதுவும் எஞ்சியிருக்கவில்லை. அவர்கள் இருந்தபோதே எந்தவித வேலையிலும் நெடுநாட்கள் நீடிக்காமல் நழுவிய வண்ணமே இருந்தேன். பொறுப்பற்ற அந்தப் போக்கிற்கு அந்தந்த வேளையில் தோன்றும் பல அசட்டு லட்சியங்களைக் காரணமாகச் சொன்னேன். பொருளாதார தேவை அல்லது நெருக்கடி என்று எதுவும் இல்லாததால் எனது அந்த சவடால் பேச்சுக்களை அவர்களும் ஏற்றுக்கொண்டு சொக்கிப்போயிருந்தனர்.
குலதெய்வம் கோவிலுக்குச் சென்றவர்கள் விபத்தில் சிக்கி நசுங்கிச் செத்துவிட்ட செய்தியைக் கேட்டபோது அதிர்ச்சியில் நான் அந்த இடத்திலேயே மயங்கிச் சரிந்திருந்தேன். முழுமையிழந்திருந்த அவர்களது உடல் பாகங்களைக் கொண்டு இறுதிச் சடங்குகளைச் செய்தபோது ஏறக்குறைய நான் பித்துப் பிடித்தவனைப்போல் இருந்ததாக உற்றார் பலர் பேசிக் கேட்டிருக்கிறேன். அந்த நிகழ்வுகள் எவையும் என் நினைவில் பதியவில்லை.
ஆனால் வெறிச்சோடி கிடந்த வீட்டில் தொடர்ச்சியாக, தங்குதடையின்றி எழுபத்தியிரண்டு மணிநேரம் உறங்கி விழித்தபோது வாழ்வில் என்றும் உணர்ந்திராத விடுதலையை, குறுகுறுப்பை உணர்ந்தேன். மூன்று நபர்களுக்கு என்று விசாலமாக, அவரவர் புழங்கவும், பணியாற்றவும், கூடியமர்ந்து இளைப்பாறவும், தனிமையில் தியானிக்கவும் என பார்த்துப் பார்த்துக் கட்டமைக்கப் பட்டிருந்த அந்த வீடு என் ஒருவனுக்கென்று ஆனபோது அதன் விஸ்தீரணம் எனக்குள் ஒருவிதச் செருக்கை புகுத்தியது.
சிகரெட் ஒன்றை எடுத்து நடுவீட்டில் அமர்ந்தபடி பற்றவைத்து, ஆழமாக புகையை உள்ளிழுத்து, சாம்பலைப் பளபளக்கும் அந்த வெள்ளைத் தரையில் திமிருடன் தட்டியபோது ஒருநொடி உச்சக்குரலில் சிரித்தேவிட்டேன். அச்சிரிப்பின் ஒலி எதிரொலியாக என்னை வந்தடைந்தபோது தேகம் கூசியது. எச்சில் கசந்தது. அந்த இரவு முழுக்க அம்மா மற்றும் அப்பா சம்பந்தப்பட்ட நினைவுகளை அதீத உழைப்பைச் செலுத்தி அகழ்ந்தெடுத்து, விழிகளைப் பிழிந்து பிழிந்து அழுதேன்.
பெற்றோரின் சாவினால் கிட்டிய சுதந்திரம் தந்த கிளர்ச்சியும், களிப்பும் முழுதாக வற்றிப்போவதற்கு அத்தனை காலம் பிடிக்கவில்லை. முதல் சில மாதங்களுக்கு மிகைப்படுத்தப்பட்ட பொறுப்புணர்ச்சியை வெளிக்காட்டுபவனாக இருந்தேன். அனைவரையும் திடுக்கிடச் செய்யும் திட்டங்கள் பலவற்றை வகுத்தேன். எதிர்ப்படும் அனைவரிடமும் அதனை ஒரு சொற்பொழிவாளனின் உக்கிரத்துடன் விவரித்து அவர்கள் அசந்துபோவதைக் கண்டு பூரிப்படைந்தேன்.
எனது வசதியையும், தனிமையையும் பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டு என்னை அணுகிய போதைக்கு அடிமையான பால்ய நண்பன் ஒருவனைக் கறாராக மறுத்தது மட்டுமல்லாமல், “வாழ்வில் முன்னேற வேண்டும் என்கிற உத்தேசம் இருந்தால் சொல், எனது லட்சிய பயணத்தில் உன்னையும் இணைத்துக் கொள்கிறேன்” என்று தோள்மேல் கைவைத்து திடமாகச் சொல்லி அனுப்பினேன். மறக்காமல் இந்தச் சம்பவத்தையும் காண்போர் அனைவரின் காதிலும் போட்டுவைத்தேன்.
ஆனால் எந்தத் திட்டத்தையும் முழுமூச்சுடன் தீவிரமாக என்னால் செயல்படுத்திவிட முடியாது என்பதை விரைவில் புரிந்துகொண்டேன். இரண்டடி முன்சென்றதுமே அத்திட்டத்தை நிஜமாக்குவதற்குத் தேவையான பொறுமையும், சகிப்புத்தன்மையும், தொலைநோக்குப் பார்வையும் என்னிடம் இல்லை என்பதையும், இவை எதுவும் இல்லாமல் அக்களத்தினுள் கால் பதித்தால், வசமான அவமானங்களும், வலுத்தக் கசையடிகளும் மட்டுமே அறுவடையென எஞ்சும் என்பதையும் புரிந்துகொண்டு அதனை முற்றாகக் கைவிட்டேன்.
பின்னர் அந்தத் திட்டத்தைச் செயலாக்க விழைந்து தோற்றவர்களின் கதைகளைக் கொத்துக்கொத்தாகத் திரட்டிச் சேகரித்து சான்றோர் அனைவரிடமும் அதனை விரிவுபடுத்தி விளக்கி, இதுபோன்ற படுகுழிகளைத் துவக்கநிலையிலேயே நுகர்ந்தறிந்ததற்கு எனது சமயோசிதம் மட்டும் காரணமல்ல என்றும், மறைந்த எனது தாய் தந்தையரின் நல்லாசியே என்னைக் காக்கும் முழுமுதல் ஒளி என்றும் பிரகடனம் செய்தேன். “அடடே!”, “ஆமாமா!”, “எந்தச் சந்தேகமும் இல்ல!”, “நீ கெட்டிக்காரன்” என்றெல்லாம் அவர்கள் சொல்லும்போது நிறைவாக இருந்தாலும், அவற்றுக்குப் பின்னால் எள்ளலும், அசிரத்தையுமே ஒளிந்திருக்கிறதோ என்கிற சந்தேகமும் எழாமலில்லை.
பின்னர் சில காலம் எளிய திட்டங்களில் திளைத்தேன். எளிமையே வாழ்வின் உயர்ந்த பண்பு என்றும், உச்சங்கள் நாடி அலையும் மனித மனங்கள் அனைத்தும் இறுதியில் தஞ்சம் புகுவது எளிமையிடம்தான் என்றும் பேசத் துவங்கினேன். “நமக்கு இது போதாதா?”, “வசதி, சௌகரியம் எல்லாம் பாத்தாச்சு, இனிமேல் இது போதும்”, “பொன் செய்யும் மருந்து இதுதான்னு சும்மாவா சொல்லிவச்சுட்டு போயிருக்காங்க?” போன்ற கிழட்டுத் தத்துவங்கள் என் நாவில் சரளமாக பிறந்தெழத் துவங்கின. சுற்றத்தாரின் பார்வையில் நான் ஒரு கோமாளியாக உருவெடுக்க ஆரம்பித்துவிட்டேன் என்று எனக்கு உறைத்தது அப்போதுதான். உடனடியாக என்னை நானே தனிமைப்படுத்திக்கொள்ளத் துவங்கினேன். இரண்டு முக்கியமான மணவிழாக்களும், ஒரே ஒரு துக்கவீடும் மட்டுமே குடும்ப நிகழ்வு என்று நான் அதன் பிறகு கலந்துகொண்டது.
சொந்த ஊரில் இருக்க பிடிக்காமல் இங்கே வந்த சில நாட்களிலேயே சலிப்பு எனும் பெரும் பூதம் என்னை முழுதாக ஆக்கிரமித்துக்கொண்டது. என்னை விரும்புவதற்கும், வெறுப்பதற்கும், துச்சப்படுத்துவதற்கும், புறக்கணிப்பதற்கும் எவரும் இல்லாத வாழ்க்கை என்னைக் கொஞ்சம் கொஞ்சமாகச் செதுக்கி பிறிதொருவனாக மாற்றிக்கொண்டிருந்தது. எந்தவித அர்த்தமும் இல்லாத வெற்றுத் தலையசைப்புகளும், முகமன்களும் என்னை மேலும் மேலும் ஆழத்தினுள் தள்ளின. ஏதோ ஒரு குழுவுடன் பொருந்திப்போக நினைத்த எனது அத்தனை முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன.
ஈடுபட்ட அனைத்து கேளிக்கை நடவடிக்கைகளும் ஏதோ விதத்தில் எனது பொறுப்பின்மையை, ஊதாரித்தனத்தைப் பிரதிபலிக்கும் பிரம்மாண்ட ஆடியாகவே இருந்தது. கிரிக்கெட் விளையாட்டு, சீட்டாட்டம், வாரக்கடைசி மது, சினிமா என எதைச் செய்தாலும் அதனுடன் மனம் ஒன்றிப்போக மறுத்தது. “நான் பொறுப்பில்லாமல், ஊதாரித்தனமாக கிரிக்கெட் விளையாடுபவன் அல்ல!”, “குடிப்பவன் அல்ல!”, “சூதாடுபவன் அல்ல!” என்று இல்லாத எவருக்கோ நிரூபணம் செய்ய மனம் உந்திக்கொண்டே இருந்தது. தனிமையில் வீட்டின் நான்கு சுவர்களுக்குள் முடங்கிக் கிடக்கும்போது மட்டுமே நான் என்னைச் சற்றேனும் மரியாதைக்குரியவனாக உணர்ந்தேன். ஆகையால் அதுவே எனது நிதர்சனம் என்றாகி போனது.
சலிப்பு என்னை அங்குலம் அங்குலமாக விழுங்க விழுங்க எனது நடத்தையில் பல்வேறு மாற்றங்கள் ஊடுருவத் தொடங்கின. அதில் முதன்மையாக சுத்தத்தைக் கடைப்பிடிப்பதில் ஒருவித சுணக்கம் எட்டிப்பார்க்கத் துவங்கியது. எந்தவித ஒழுங்கும் ஒவ்வாமை தர ஆரம்பித்தது. சீராய் தொகுக்கப்பட்ட, அல்லது அதீத ஒழுங்குடன் இருக்கும் ஏதேனும் அல்லது எவரையேனும் கண்டால் ஒருவித எரிச்சல் குபுகுபுவென எழுந்துவந்தது. நிதானம் எனும் சொல்லையே வெறுப்பவனாக மாறினேன். வண்டியைக் கண்மூடித்தனமாக ஓட்டினேன். மரணத்தை நூலிழையில் தவிர்த்த தருணங்கள் என்னை அதீத கிளர்ச்சிக்குள்ளாக்கின.
ஓர் இரவில், கையில் சிகரெட்டுடன் எந்தவித இலக்குமில்லாமல் பேட்டை சாலையில் நடந்துகொண்டிருந்தபோது தற்செயலாக எதிர்ப்பட்ட கல்லூரி தோழன் ஒருவன், குவாட்டர் மதுவும், ஏழெட்டு புரோட்டாக்களும் வாங்கித்தந்து, ஆற்றங்கரை அழைத்துச் சென்று அவனது கவலைகளைப் புலம்ப ஆரம்பித்தான். பங்குச்சந்தையில் பணத்தை இழந்ததாகச் சொல்லி அழுதுகொண்டிருந்தவனிடம் அசட்டு வேதாந்தங்கள் பேசி மேலும் சோர்வுக்குள்ளாக்கினேன். பின்னர், “இந்தா, இதை வச்சுக்க” என்று ஒரு அரசனின் தோரணையில் எனது வங்கிக் கணக்கில் இருந்த ஐம்பதாயிரத்தில் நாற்பதாயிரத்தை அவன் கைக்கு மாற்றினேன். வெகு விரைவாகவே அதனை இரட்டிப்பாக்கி என்வசம் அவன் ஒப்படைத்தபோது திடீரென என் வாழ்வுக்கு ஒரு பொருளும் பாதையும் அமைந்துவிட்டதைப்போல் இருந்தது.
அதனைத் தொடர்ந்து பல நாட்களுக்கு அசராமல் செய்த பகற்கனவுகளின் விளைவாக, ஊரில் இருந்த நிலம் ஒன்றை விற்று, அந்தப் பணத்தை மொத்தமாக அவனிடம் கொடுத்தேன். அந்தப் பணம் பஸ்பமாய் போனது. மீண்டெழுவதற்கான வேகம் இரண்டொரு வாரங்கள் என்னை அங்கும் இங்கும் அலைக்கழித்தது. வட்டிக்குப் பணம் வாங்கியது அப்போதுதான்.
இம்முறை நண்பனை நம்பாமல் நானே சுயமாக முதலீடு செய்தேன். அந்தப் பணமும் வீணாய் போனதை அறிந்த அன்று எதற்கென்றே தெரியாமல் வ.உ.சி மைதானத்தின் நடுவே நின்றுகொண்டு மனப்பிறழ்வுக்கு உள்ளானவனைப்போல கலகலவென சிரித்தேன். அருகே தனது காதலியுடன் நடந்துகொண்டிருந்தவன் என்னை முறைத்துப் பார்த்தபோது, “என்னல!” என்று நாக்கை மடித்துக் காட்டினேன். மறுகணம் மனதை அவமானம் பிடுங்கித் தின்னத் துவங்கியது. அங்கிருந்து ஒரே ஓட்டமாக ஓடி வீட்டிற்கு வந்து முகத்தில் நீரை அடித்துக் கழுவிவிட்டு, வாயினுள் நீரூற்றி கோரமாக ஓசையெழுப்பியபடி கொப்பளித்துவிட்டு, கழிவறைக் கண்ணாடியில் முகம் பார்த்தபோது பின்னால் கூடத்தில் தரையில் ஒரு பாய்போல் வீற்றிருந்தது அந்த நிழல்.
அன்று வரை தன்னந்தனியாக அங்கே அமர்ந்து மது அருந்தும்போது, பரண் மேலும், கூரை இடுக்குகளிலும், ஜன்னலின் கீழ்ப்பகுதியிலும் அவ்வப்போது தோற்றமளித்து மறையும் நிழல் அன்று தெளிவாக இருக்கும்போதே உருப்பெற்றிருந்தது. கட்டுக்கடங்காத ஆங்காரத்தில் ஆடியில் தெரிந்த என் பிம்பத்தின் மீதே காரித் துப்பினேன். மறுநாள் விழித்துக் கொண்டபோது என்னுள் ஒருவித வெறுமை கூடியிருந்தது. அனைத்தின் மீதும் ஆர்வமும் பற்றும் இழந்து ஒருவித நடைபிணத்தைப்போல் உணர்ந்தேன். முகம் வெளிறி பிரேதக்களைப் பெற்றிருந்தது.
ஒரே நாள். விழித்ததில் துவங்கி, இரவில் சிந்தனைச் சவுக்கினால் அறைந்து அறைந்து களைப்புற்று கண்ணயர்வது வரை, எந்தவித பிசிறு மாற்றமுமில்லாமல் ஒரே நாளை பலநூறு முறை வாழ்ந்து கடப்பதே அதன் பிறகு வாடிக்கையாகியது. சலிப்பு எனும் ஜந்து என்னை மொத்தமாக உட்கொண்டு, மென்று, விழுங்கி, செரித்துக்கொண்டிருந்தது. ஏற்ற இறக்கங்கள் ஏதுமற்று நகர்ந்துகொண்டிருந்த அந்த யதார்த்தத்திற்கு புறம்பாக ஏதேனும் ஒரு நிகழ்வு நடந்துவிட்டால், அது விபரீதமாகவே இருந்தாலும், உள்ளம் சில நாட்களுக்கு அதனை ஒத்த ஒன்றை வெறிபிடித்ததைப்போல் நாடுவதை உணர்ந்தேன்.
ஒருமுறை வண்ணார்பேட்டை பைபாஸில், சாலை நடுவே போடப்பட்டிருந்த தடுப்பில் மோதி விழுந்து கால்கள் இரண்டிலும் ஆழமாக சிராய்ப்புகள் உண்டாயின. மற்றொரு முறை சேவியர்ஸ் காலனி அருகே கார்காரன் ஒருவன் பின்னே நோக்காமல் கதவைத் திறந்ததில் வண்டியில் வந்த நான் மோதி விழுந்து நெஞ்சிலும், கைகளிலும் காயங்கள் ஏற்பட்டன. அதனைத் தொடர்ந்து சில வாரங்களுக்கு எனக்கு விபத்து நேர்ந்த பகுதிகளுக்குத் தொடர்ச்சியாக சென்றவண்ணம் இருந்தேன். அந்த இடத்தில் அசுர வேகத்தில் வாகனத்தைச் செலுத்தி பல வசவுகளைப் பெற்றுக்கொண்டேன்.
தண்டல்காரன் என்னைச் சரமாரியாக உதைத்துத் தள்ளிய குப்பைக் கிடங்கிற்கும் அதைப்போலத்தான் மீண்டும் மீண்டும் சென்றேன். எந்தவித உணர்வெழுச்சிக்கும் இடமளிக்காமல் வாழ்க்கை வெகுநாட்களுக்கு என்னை அலைக்கழித்துவிட்ட விரக்தி முற்றிப்போய் இருந்தபோதுதான் அருவருப்பே உருவாய் அருகே நின்று உமிழ்நீர் வடித்துக்கொண்டிருந்த நாயை அதன் கழுத்துப் பகுதியில் ஓங்கி மிதித்தேன். வீல் என்று வீறிட்ட நாய் அடுத்த சில நிமிடங்களில் அப்படியே சுருண்டுகொண்டது.
அன்றைய இரவெல்லாம் ஏதோ உச்சியிலிருந்து விழுவதைப்போல கால்கள் இரண்டும் பரபரத்தவண்ணம் இருந்தன. மூன்று நாட்கள் கழித்து, அடர்மழை பொழிந்துகொண்டிருந்த நள்ளிரவொன்றில் அதே குப்பைத்தொட்டி அருகே சென்றபோது அங்கே தனது உடன்பிறந்தோரின் பிணங்களுக்கு மத்தியில் குளிரில் நடுங்கியபடி அமர்ந்திருந்த வெள்ளச்சியை ஏதோ நினைப்பில் தூக்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். சிறிய பிளாஸ்டிக் தட்டில் நான் ஊற்றிய கெட்டுப்போன பாலை ஆசையுடன் உண்டுவிட்டு நடுவீட்டில் குந்தி அமர்ந்து அது மூத்திரம் பெய்தபோது எந்தவித காரணமுமில்லாமல் எனது விழிகள் இரண்டும் கலங்கிப்போயின.
பாளையம்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து திருச்செந்தூருக்கு நான் வண்டி ஏறியது அதற்கு மறுநாள்தான். ரயிலில் நல்ல கூட்டம். இருக்கை தேடிச் செல்ல மனமில்லாமல் கழிவறையை ஒட்டியே அமர்ந்துகொண்டேன். ஊரில் அன்று காலை ஏதோ பரபரப்பான சம்பவம் நிகழ்ந்திருக்க வேண்டும். அருகில் என்னை நசுக்கியபடி அமர்திருந்த தடித்த மனிதர் தன்னருகே இருந்தவரிடம் அதனை விவரித்துப் பேசிக்கொண்டிருந்தார். என் கவனம் அவர்கள் பக்கம் செல்லவேயில்லை. செய்துங்கநல்லூர் ஸ்டேஷனில், சற்றே பெருத்திருந்த அடிவயிற்றுடன் வண்டியினுள் ஏறி, கூட்டத்தை வகுந்துகொண்டு செல்ல மனமில்லாமல் என் அருகேயே அமர்ந்துகொண்ட அந்தப் பெண் என்னை முழுமையாகக் கவர்ந்திருந்தாள்.
ஸ்ரீவைகுண்டம் வருவதற்கு முன்பாகவே நான் எனது கையை அவளது முலையின் மீது பதித்திருந்தேன். அவள் அதனைப் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. வெளியே கண்ணுக்கெட்டும் தொலைவுவரை படர்ந்திருந்த வயல்வெளிகளின் மேல் விழிகளை நட்டுவைத்து அமர்ந்திருந்தாள். துணிச்சல் பெருகியதால், அந்த நெருக்கடியான சூழலைப் பயன்படுத்தி நான் அவளை ஏதேதோ செய்ய ஆரம்பித்திருந்தேன். அப்போதே அச்சொற்கள் என் காதில் விழுந்தன.
“அவன் பதினஞ்சு வயசு இருக்கும்போதே அவன் அம்மாவ வெட்டிட்டு ஜெயிலுக்கு போனவன்”
அதை உச்சரித்த அந்தத் தடித்த மனிதரை நோக்கி நான் திரும்பவில்லை. அந்தப் பெண்ணின் முலைகளில் இருந்து கையையும் எடுக்கவில்லை. ஆனால் அந்த வார்த்தைகளைக் கேட்ட மறுநொடியே அவர்கள் எவரைப் பற்றி பேசுகிறார்கள் என்று எனக்குப் புரிந்திருந்தது. மட்டுமல்லாமல் அவர்கள் அப்போதுவரை பேசியவை அனைத்தும் என்னையும் அறியாமல் எனக்குள் புகுந்துவிட்டிருப்பதை நான் அப்போதே உணர்ந்தேன். அக்கணம் அதனைப் பெரிதாக பொருட்படுத்தி எண்ணியிருக்கவில்லை நான்.
திருச்செந்தூரில் இறங்கிய அந்தப் பெண்ணைக் கோவில் வரை பின்தொடர்ந்து சென்றேன். வரிசையில் அவளுக்குப் பின்னேயே நின்றுகொண்டு புட்டத்தை உரசிக்கொண்டே முருகனை வணங்கினேன். பின்னர் திரும்பும்போது ரயிலில் அவள் அருகேயே அமர்ந்துகொண்டேன். ஆள் நடமாட்டம் குறையும்போதெல்லாம் துணிச்சலுடன் அவளைத் தீண்டியபடியே வந்தேன். செய்துங்கநல்லூரில் அவள் இறங்கியபோது நானும் அவளுடனே இறங்கினேன். வெறிச்சோடிக் கிடந்த நடைமேடையில் ஓரத்தில் இருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்துகொண்டவள் தனது வயிற்றைப் பற்றிக்கொண்டு கண்ணீர் வடிக்க ஆரம்பித்தாள்.
அழுதுவடியும் அந்த முகத்தைக் காண மனமில்லாமல் அப்படியே கடந்துவிடவே எண்ணினேன். பிறகு ஏதோ நினைப்பில் அவள் அருகே அமர்ந்துகொண்டு, “இங்கதான் வீடா?” என்று கேட்டேன். என் குரலில் தென்பட்ட நஞ்சை, சூழ்ச்சியை நானே செவிமடுத்தபோது என் உடல் கூசி அதிரத் துவங்கியது. மன்னிப்பு கேட்க வாயெடுத்தேன். வார்த்தைகள் எழுந்துவர மறுத்தன. நீண்ட நேர அமைதிக்குப் பின்பு பணம் ஏதும் வேண்டுமா என்று அடிக்குரலில் வினவினேன். அவள் சற்றும் தயங்காமல், “முடிஞ்சா குடுங்க” என்று சொன்னாள். என்னிடம் சல்லிக்காசு இல்லை என்பதை வெளிப்படுத்த முடியாத நான் அப்போது அங்கே வந்து நின்ற ரயிலில் ஏறிக்கொண்டு ஊர் வந்து சேர்ந்தேன்.
வீட்டை அடைந்ததும் அந்தப் பெண்ணின் முகம் விந்தையூட்டும் விதமாக எனது மனதை விட்டு நீங்கியிருந்தது. கந்தலாகிப் போயிருந்த அவளது உள்ளாடையினுள், கணிசமான சதைப்பற்றுடன் இருந்த முலைகளின் நினைவைக்கூட என்னால் மீட்டெடுக்க முடியவில்லை. வந்ததும் வராததுமாக வீட்டைப் பூட்டிவிட்டு தெருக்கோடியில் இருந்த டீக்கடைக்குச் சென்று அன்றைய மாலை முரசை வாங்கிப் புரட்டினேன்.
ரஹ்மத் நகர் சாலையில் தலைத் துண்டிக்கப்பட்டுக் கிடந்த ரத்னவேலின் புகைப்படம் பேப்பரின் முகப்பு பக்கத்தின் முக்கால் பங்கை ஆக்கிரமித்திருந்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன் அதே இடத்தில் வைத்து மாற்றுச்சாதிகாரனைச் சரமாரியாக வெட்டி வீசியதற்காக பழிதீர்க்கப்பட்டிருந்தான் அவன். நடந்தேறிய கோர சம்பவத்தை அருகிலிருந்து பார்த்தவரின் துல்லியத்துடனும், செறிவுடனும் எழுதப்பட்டிருந்த அந்தச் செய்தித்துணுக்கை வாசிக்க வாசிக்க அகவெளியில் மளிகைக்கடை நாடாரின் மாயப்புன்னகை மிளிர ஆரம்பித்தது.
“ரத்னவேலு இருக்காம்லா… அவன் வீடு மிந்தி நீ இப்ப இருக்கல்லா? அந்த அபார்ட்மெண்ட்… அங்கனதான் இருந்துச்சு… சின்னதா குளம், அது கிட்ட வீடு… பெரிய சோலை… அதுல ஒரு பங்க வளச்சு போட்டு, வேலி கட்டி, தோப்பு கணக்கா அமைச்சு, மத்தியில அம்சமா ஒரு கூரை வீடு…” என்று சலிக்காமல் அந்தக் கதையை எத்தனையோ நூறாவது முறையாக அவர் சொல்ல ஆரம்பிக்கும்போது கலங்கி, பூளை கூடியிருக்கும் அவரது விழிகள் தொலைவில் ஒரு புள்ளியில் நிலைக்கொள்ளும்.
“ஒண்ணுத்துக்கும் ஆவமாட்டான் அவன்… இன்னைக்கு முறுக்கிட்டு தெரியுதான்லா… அன்னிக்கு வத்தலு கணக்கா இக்கிணிக்கூண்டு இருப்பான்… எங்க முன்ன பம்மி நிப்பான், பொடித் தாயிலி… அவன் அம்ம இருக்கால்லா? ஒண்ணாம் நம்பர் டிக்கட் பாத்துக்க… வட்டிக்காரி… வசூல் பண்ணனும்னா எந்த எல்லைக்கும் போவா குந்தாணி… வாங்கின துட்ட தாராம டிமிக்கி குடுக்கறவன் வீட்டுல ஏதாச்சு விசேசம் வாரப்ப, ரவிக்கைய கிழிச்சுட்டு, போய் நின்னு அலங்கோல படுத்திருவா… மானங்கெட்டவ” என்று சொல்லும் அவர் ரத்னவேலின் அம்மாவைப் பற்றி பல நாராசமான செய்திகளைக் கூசாமல் பகிர்ந்துகொள்வார்.
பள்ளிக்கூடத்தில் தனக்குப் பாடம் நடத்தும் வாத்தியார்கள் இருவருடன் தனது அம்மா கூடிக்கொண்டிருப்பதைக் கண்டுவிட்டு தன்னிடம் அழுது புலம்பி ஆத்திரப்பட்டு, அவளை எப்பாடுபட்டாவது கொலை செய்யவேண்டும் என்று வீராப்புடன் கூப்பாடு போட்டுக்கொண்டிருந்த ரத்னவேலிடம் நீட்டமான வெட்டுக்கத்தி ஒன்றை விளையாட்டுத்தனமாக குடுத்து, “இந்தா, போய் வெட்டு” என்று அவனைக் கேலியாக உசுப்பியதைப் பற்றிச் சொல்லும்போது அவரிடம் தென்பட்ட நடுக்கத்திற்கும், அதுபோன்ற சமயங்களில் அவர் முகத்தில் உதிக்கும் நுண்ணிய துடிப்பிற்கும், அன்று ரத்னவேல் நிஜமாகவே அந்தக் கத்தியைக் கொண்டு தனது அம்மாவைக் குத்திக் கொன்றுவிட்டதே காரணம் என்று எனக்கு அப்போதே விளங்கியது.

அந்த இரவெல்லாம் நாடாரைப் பற்றியே எண்ணிக்கொண்டிருந்தேன். எழுபது வயதுவரை ஆரோக்கியமாக, செல்வாக்குடன் வாழ்ந்த மனிதன் திடீரென ஆற்றுப்பாலத்தில் இருந்து குதித்ததுச் சாக முடிவெடுத்தது ஏன்? அந்த இறுதி முடிவுக்கும், ஒருபோதும் அவரது நினைவைவிட்டு அகன்றிராத ரத்னவேலுவின் அம்மாவின் கொலைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்று தோன்றியது. அந்த நிமிடம் வரை அவரது மறைவைப் பற்றியோ, அதற்கான காரணம் குறித்தோ சற்றும் எண்ணியிருக்காதது எனக்கே ஆச்சரியமாக இருந்தது.
இறப்பதற்குச் சரியாக ஒன்னரை ஆண்டுகளுக்கு முன்பு, ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளாக கவனித்து வந்த மளிகைக்கடையைக் கவனித்துக்கொள்ள ஆள் அமர்த்திவிட்டு, தபாலாபீஸ் அருகே சற்றே விஸ்தீரணமான பாத்திரக்கடை ஒன்றைத் திறந்தார் நாடார். அந்த வயதில் அத்தகையதோர் முயற்சி அவசியமற்றது என்றும், பெரிதாய் மக்கள் நடமாட்டம் இல்லாத சாலையைக் குறுக்காக வெட்டிச்செல்லும் மிகக்குறுகிய சந்தினுள் அத்தனை பொருட்செலவுடன் ஒரு வியாபாரத்தைத் தொடங்குவது பொருளாதார ரீதியாக கிட்டத்தட்ட தற்கொலைக்குச் சமமானது என்றும் பலபேர் விமர்சித்தபோதிலும் அவர் செவிகொடுக்கவில்லை. திடீரென வேற்று மதத்துப் பெண்ணுடன் வீடேறி வந்த மகன் சொத்தில் தனது பங்கை உடனடியாக பங்கிடுமாறு சண்டைபோட்ட பிறகு ஒரேடியாக வாடிப்போயிருந்த மனிதர் அந்தக் கடையின் திறப்பன்றே சற்றே தெளிச்சியுடன் காட்சி தந்தார்.
ஆனால் சில வாரங்கள் கழித்து யதேச்சையாக அவர் கடைக்குள் சென்றுவிட்டு, பொருட்களை வேவுபார்த்துவிட்டு அவரிடம் இயல்பாக பேசிக்கொண்டிருந்தபோது, மிகவும் தற்செயலாக வாங்குவதைபோல் எனது கையிலிருந்த பையை வாங்கி, ஏதேனும் பொருளைத் திருட்டுத்தனமாக எடுத்து வைத்திருக்கிறேனா என்று சோதனையிட்டபோது எனக்குச் சுருக்கென்றிருந்தது. உயர்வாக எண்ணியிருந்த மனிதரிடம் வெளிப்பட்ட அந்தச் சிறுமையை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அவரிடம் அதன் பிறகு இயல்பாக சிரித்துப்பேச முடியவில்லை. நான் சலனமுற்றதை எப்படியோ உணர்ந்துவிட்டவர் எவ்வித தொடர்புமில்லாமல் எனது அப்பாவைப் பற்றிய மேலோட்டமான கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார். அவரிடம் பேசிப் பழகிய அத்தனை நாட்களில் இந்த விஷயத்தை பற்றியெல்லாம் என்னிடம் கேட்டதேயில்லை. ஆர்வம் இல்லாமல் பதில் சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு உடனடியாக அகன்றிருந்தேன் நான்.
அதன் பிறகு அந்தப் பக்கம் தலைவைத்துப் படுப்பதைக்கூட தவிர்த்து வந்தேன். நாடாருக்கு நெடுங்காலமாகவே குறிச்சி பக்கத்தில் ஒரு துடுப்பு இருந்ததென்றும், இவரை அத்தனை தசாப்தங்களாக கட்டுக்குள் வைத்திருந்தவள் ஒழுக்கத்திற்குப் பெயர்போனவள் அல்ல என்றும், சமீபத்தில் நோயுற்று அவள் காலமாகியிருந்தாலும், அவளுக்கு மகளென பிறந்தது தாய்க்கு எந்தவிதத்திலும் சளைத்தவள் அல்ல என்றும், ஏற்கனவே தனது பரம்பரை சொத்துக்களில் பாதிக்கு மேலாக அந்த இங்கிதமற்ற பெண்ணின் புடவைத் தலைப்பின் நுனிமுடிச்சுனுள் புதைந்துவிட்டதால் இனியும் பொறுமை காப்பது ஆகப்பெரும் மடத்தனம் என்று தோன்றியதன் விளைவாகவே, நாடாரின் மனைவியின் ஆசியுடன், சொத்தில் தனக்கான பங்கைப் பிரித்துக் கேட்க அவரது மகன், தனது காதலியுடன் கைகோர்த்துக்கொண்டு நாடாரின் வீட்டை முற்றுகையிட்டான் என்பதைப்போன்ற தகவல்கள் பல காற்றில் மிதந்து வந்து காதைத் தொட்டபோதிலும் அதனை நான் பெரிதாக கருத்தில் கொண்டிருக்கவில்லை. அவர் இறந்த அன்று மரியாதை நிமித்தமாக துக்கம் விசாரிக்கச் சென்றதுடன் என் நினைவைவிட்டே முழுதாக விலகியிருந்தார் நாடார்.
எண்ணி எண்ணி ஒரு கட்டத்தில் உள்ளம் சிடுக்குகள் நிரம்பியதாக மாறிப்போனது. அதன் போக்கை மாற்றியமைக்காவிட்டால் உறக்கம் சாத்தியப்படாது என்று தோன்றியது. கண்களை மூடி வலக்கரத்தை இடைக்கு கீழே கொண்டு சென்று அந்த செய்துங்கநல்லூர்காரியை நினைவினில் மீட்டெடுக்க முயன்றேன். முகம் மறந்துவிட்டிருந்தாலும் உடலை உச்சமடையச் செய்ய போதுமான அளவிற்குப் படிமங்களும் கற்பனைகளும் எஞ்சியிருந்தன.
விளக்குகளை அணைத்துவிட்டு படுத்தபோது சித்தம் என்றுமில்லாத அளவிற்கு விழிப்புடன் இருந்தது. சிகரெட் ஒன்றைப் பற்றவைத்துக்கொண்டு மனதை அதன் போக்கில் விட்டபோது நாடாரின் நினைவுகளிலிருந்து ஒரு சரடும், செய்துங்கநல்லூர்காரியை வேட்கையுடன் தீண்டியபோது கிட்டிய அனுபவத்திலிருந்து ஒரு சரடும் தனித்தனியாக நீண்டு, ஒருகட்டத்தில் பிணைந்து, முடிச்சாக உருமாறியது.
சிகரெட் புகையை நெஞ்சு முழுக்க நிரப்பி, மூச்சை இழுத்துப்பிடித்தபோது உடல் முழுக்க ஒருவித விரைவும் வலியும் பரவியது. பலமாக நான்கைந்து முறை இருமினேன். நெடுநாட்கள் கழித்து அப்பாவை நினைத்துக்கொண்டேன். அவரை ஆரோக்கியமான நிலையில், திடத்துடன், ஒரு ஆண்மகனுக்கு உரித்தான கம்பீரத்துடன் நான் கண்ட நினைவேயில்லை. எக்கணமும் ஏதேனும் ஒரு உபாதையுடன் மருந்துகள், வேண்டுதல்கள் மற்றும் ஓய்வின் துணைகொண்டு போரிட்டபடியே வாழ்வைக் கழித்தார் அவர்.
ஆனால் தூய்மையான உள்ளம் கொண்டவர். இற்றுப்போன பேழையினுள் பதிக்கப்பட்டிருந்த வைரம் அவரது ஆன்மா. காதல் கணவனால் துரத்தப்பட்டு, நடுச்சாலையில், எட்டு வயது மகனுடன் நிர்கதியாய் நின்ற அம்மாவுக்கு ஒரு குடும்பத்தையும், குடும்பத்தலைவி என்கிற அந்தஸ்தையும் வழங்கினார். அதிகாரமோ, அகங்காரமோ, மேட்டிமையோ அறவே தென்படாத அவரது விழிகளும், அலாதியான கதகதப்பை வழங்கும் அவரது குளிர்ந்த கைகளும் என்னை முழுமையாக அரவணைத்தன. எங்கிருந்தோ பிடுங்கப்பட்டு அந்த இடத்தில் நட்டுவைக்கப்பட்ட கன்றாக நான் ஒருபோதும் உணர்ந்திராமல் இருக்க அவை பெரிதாய் உதவின.
அவருடனான நாட்களை இதழோரப் புன்னகையுடன் நினைவுகூர்ந்தபடி அடுத்த சிகரெட்டை பற்றவைக்கச் சென்றபோது திடீரென எனது உடல் அப்படியே உறைந்து போவதை உணர்ந்தேன். ஆங்காங்கே அவ்வப்போது தோற்றமளித்து மறைந்துபோகும் அந்த நிழலுக்கு எனது தசைகளைச் செயலிழக்கச் செய்யும் ஆற்றலிருப்பது எனக்கு அப்போது புரிந்தது. நான்கைந்து நிமிடங்களுக்கு என்னால் மெல்லிய அசைவைக்கூட ஏற்படுத்த முடிந்திருக்கவில்லை. உப்பரிகையில் போடப்பட்டிருந்த மின்விளக்கை வட்டமிட்டுக் கொண்டிருந்த ஈசல்களில் சில எனது முகத்தை உரசி ஊறலெடுக்கச் செய்தபோதுகூட நான் சிலைபோலவே நின்றிருந்தேன். சுவாசம் மட்டும் கணத்திற்குக் கணம் வேகமெடுத்தபடியே இருந்தது.
பின்னர் அது மெதுவாக நிலையானதும், முறுக்கிக்கொண்டிருந்த கைவிரல்கள் ஒன்றின் பின் ஒன்றாக விடுபட்டு நரம்புகள் இலகுவாகின. ஆழமாய் மூச்செறிந்தபடி வீட்டினுள் வந்தபோது தந்தையின் மேல் என்றும் கவிந்திராத ஒரு விலகல் உணர்ச்சி வந்திருந்தது. சற்றுமுன் எண்ணி நெகிழ்ந்தவற்றை என்னால் அதே அளவு எழுச்சியுடன் எண்ணிப்பார்க்க இயலவில்லை. நீர் அருந்திவிட்டு படுக்கையில் அமர்ந்தபோது காய்ச்சல் வந்ததைப்போல் உடல் அதிர்ந்துகொண்டிருந்தது. “என்ன எழவு… எழவு… ச்ச! மயிறு… மயிறு!” என்று எதையோ முனங்கியபடி படுத்துக்கொண்ட இரண்டாவது நிமிடம் எப்படியோ உறங்கிவிட்டிருந்தேன்.
மறுநாள் விழித்துக்கொண்டபோது படுக்கையிலேயே சிறுநீர் கழித்திருப்பதைக் கவனித்தேன். ஈர லுங்கியைக் கழற்றி வீசிவிட்டுப் பார்த்தபோது உள்ளாடை நெடுக விந்து தெளித்திருந்தது. அக்கணம் அதிதுல்லியத்துடன் அந்தச் செய்துங்கநல்லூர் பெண்ணின் முகம் என்னுள் மீண்டது. மறுகணம் இனம்விளங்காத பதைப்பில் என் உடல் சில்லிட்டுப்போனது.
விறுவிறுவென கிளம்பி கையிலிருந்த சில்லறைக் காசுகளை எடுத்துக்கொண்டு ரயிலேறி செய்துங்கநல்லூரில் இறங்கினேன். முந்தைய தினம் நாங்கள் அமர்ந்திருந்த அதே நடைமேடையில், அதே பெஞ்சில் அமர்ந்திருந்தாள் அவள். ஸ்டேஷனுக்கு வெளியே இருந்த கடையில் ஐந்து புரோட்டாக்களும், ஒரு முட்டைப் பொரியலும் வாங்கிவந்து அவள் எதிரே வைத்து பரிமாறினேன். வெறிபிடித்த மிருகத்தைப்போல் அதனை உண்டு முடித்தாள் அவள்.
அந்த ஒரு மாதத்திற்குள் எனது வாழ்வில் அநேக மாற்றங்கள் நடந்தேறிவிட்டிருந்தன. வண்டி, ஊரில் இருந்த சிறிய நிலம், அம்மாவின் நகை என எஞ்சியிருந்தவை அனைத்தையும் விற்று கடன்களை அடைத்து, அந்தப் பெண்ணை இங்கே அழைத்துவந்து வி.எம்.சத்திரத்தில் சிறிய அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கவைத்தேன். இரண்டொரு வாரங்களில் அரசு மருத்துவமனை அருகே இருந்த சிறிய மெஸ்ஸில் அவளுக்குப் பாத்திரம் கழுவும் வேலையும் ஏற்பாடுசெய்து கொடுத்திருந்தேன். வயிறு பெருத்து, பணி செய்யமுடியாத, எக்கணமும் வலி வந்துவிடக்கூடிய நிலையை அவள் எட்டியதுமே அவளைத் திருச்செந்தூர் அழைத்துச் சென்று கழுத்தில் தாலி அணிவித்து எனது வீட்டிலேயே வைத்துக்கொண்டேன். ஓரிரு மாதங்களில் சுகப்பிரசவத்தில் ஒரு ஆண் பிள்ளையை ஈன்றெடுத்தாள் அவள்.
ஏன் எதற்கு என்று ஆராயாமல் எதனாலோ விரட்டப்படுவதைப்போல் இத்தனை நாட்களாக அவளையும் அவளது குழந்தையையும் ஓரளவுக்கேனும் பாதுகாப்பாய் வாழவைப்பதற்கு அயராமல் உழைத்துக் கொண்டிருக்கிறேன். பகுதிநேர ஓட்டுநர், சின்னதாய் பழக்கம் இருக்கும் கடைகளில் லோடு இறக்குதல், உழவர் சந்தை அருகே புதிதாக எழுப்பப்பட்டிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் இரவுநேர காவலர் என சிறு சிறு வேலைகள் செய்து மாதச்செலவை ஒப்பேற்றிக்கொண்டிருக்கிறேன்.
இத்தனை நாட்களில் நான் அவளை ஒருமுறைகூட உரிமையுடனும் ஆசையுடனும் தீண்டியதேயில்லை. என்ன காரணத்தினாலோ, ரயிலில் அத்தனை நெருக்கடியில் கடும் இச்சையுடன் அவளை அணுக முடிந்த என்னால் வீட்டினுள் அதை நிகழ்த்தவே முடியவில்லை. அவள் பெற்றெடுத்த குழந்தையின் மீதும் எந்தவித இணக்கத்தையும் என்னால் உணரமுடியவில்லை. அத்தோல்வியை நிகர்செய்யவே இப்படி உழவுமாட்டைப்போல் உழைத்துத் தள்ளுகிறேனோ என்று அவ்வப்போது தோன்றும்.
ரயிலில் தன்னைத் தகாத முறையில் தீண்டிய பொறுக்கியே தனது கணவன் என்கிற நினைப்பு அவளிடமும் இருப்பதாக தெரியவில்லை. “என்ன கல்யாணம் கட்டிக்கரையா?” போன்ற மாபெரும் வினாக்களில் துவங்கி, “மாவு திரிக்க இருபது ரூபா போதுமா?” போன்ற எளிய விசாரிப்புகள் வரை எதையும் அவள் மறுத்ததேயில்லை. பெரிதாக பேசவும் மாட்டாள். காலையில் சமைக்கும்போது ரேடியோவில் கேட்கும் பாடலை எவ்வித சங்கோஜமும் இன்றி சத்தமாக பாடுவாள். வேலைகள் இல்லாதபோது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களை ஒன்றுவிடாமல் பார்ப்பாள். நான் வீட்டிலிருக்கும்போது எனது அறையிலேயே அமர்ந்திருப்பாள். ஏதேனும் ஒன்றைக் கேட்டால் மட்டுமே ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளில் பதில் சொல்வாள். நான் ஏதாவது மகிழ்ச்சியான செய்தியைச் சொன்னால், “ஓ!” என்று சொல்லி அழகாகச் சிரிப்பாள். ஏதேனும் விரக்தியாக பகிர்ந்துகொண்டால், “விடுங்க… ஏதாவது அமையும்” என்பதைத்தாண்டி எதுவும் சொல்லமாட்டாள்.
அவ்வப்போது பூவோ, புத்தாடையோ வாங்கிவந்து அளிக்கும்போது பெரிதான உற்சாகமோ, அதே வேளையில் குரூரமான பற்றின்மையோ இல்லாமல், மிகச்சாதாரணமாக அதனைப் பெற்றுக்கொண்டு லேசாக புன்னகை செய்வாள். அதுபோன்ற தருணங்களிலெல்லாம் எனக்குள் இனம்புரியாதோர் அச்சம் பரவும். முதல் கணவன் தீக்குளித்து இறந்ததை நேரில் கண்டதால் உண்டான தற்காலிக பித்துநிலையிலேயே அன்று அவள் ரயிலில் ஏறினாளோ என்கிற வினா எழுந்துவந்து என் தொண்டையை இறுக்கும்.
சமீப காலமாகவே அந்தக் கரிய போர்வைபோன்ற நிழல் எனது வீட்டில் நிரந்தரமான இடம் ஒன்றைப் பிடித்துவிட்டது. ஒருமுறை எனது மனைவி ஏதோ ஒரு வீட்டின் வாசலில் அரை நிர்வாணமாக நின்றபடி அரக்கியைப்போல சிரித்துக்கொண்டிருப்பதைச் சொப்பனமாய் கண்டு திகைத்து விழித்த நான், பகுத்தறிவுவாதியாக இருந்தபோதிலும், இந்த வீட்டையும் எனது வாழ்வையும் ரத்னவேலுவின் அம்மாவின் ஆவிதான் சூழ்ந்திருக்கிறதோ என்று தீவிரமாகவே சந்தேகப்பட்டேன். நான் பகுதிநேர ஓட்டுநராக வேலைசெய்து கொண்டிருந்த ஆபீசில் இருந்த ஆடிட்டர் ஒருவர் விந்தையாக ஒலித்த சமஸ்க்ருத சொல் ஒன்றை உச்சரித்து, அந்த வேள்வியை வீட்டினுள் நிறைவேற்றச் சொன்னார். மிகத்தீவிரமான உள்விவாதங்களுக்குப் பிறகு அத்திட்டத்தைக் கைவிட தீர்மானித்திருந்தேன்.
ஓரிரு மாதங்களில் அந்த நிழலுடன் ஒருவித உடன்படிக்கையில் இறங்கி, அதனுடன் வாழவே பழகிவிட்டிருந்தேன். இருந்தும், மிகவும் அரிதான சில வேளைகளில் அந்த நிழல் அதன் முழு ஆக்கிரோஷத்தோடும் என்மேல் படிவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. ஏற்கனவே குறிப்பிட்டதுபோல அதுபோன்ற நேரங்களில் எனது மனைவி மற்றும் மகனின் மீது கட்டுக்கடங்காத ஒவ்வாமையும், கசப்பும் எழும். மனதினுள் திபுதிபுவென கொதித்துக் குமிழியிடும் அந்தக் காழ்ப்பின் ஒருதுளி வெளிகசிந்தால் கூட மிகக்குரூரமான ஒரு விபரீதம் நடந்துவிடும் என்பதை எனது உள்ளுணர்வு எச்சரித்த வண்ணம் இருக்கும்.
இன்று வரை அப்படியொரு கசிவு நிகழ்ந்துவிடாமல் தவிர்த்தபடியே வந்திருக்கிறேன். ஆனால் இன்று காலை வழக்கமான புன்முறுவலுடன் எனக்குச் சாப்பாடு விளம்ப வந்தவளின் முகத்தைக் கண்டபோது, அவள்மேல் வீசிய ஒருவித நறுமணத்தை முகர்ந்தபோது அந்தக் கசப்பு ஒரே ஒருகணம் கொலைவெறியென அவதரிப்பதை உணர்ந்தேன். அடுத்த நிமிடமே அவளைக் குழந்தையை எடுத்துக்கொண்டு கோவிலுக்குச் செல்ல ஆணையிட்டேன்.
கைகள் இரண்டையும் தலைக்குப்பின்னால் வைத்துக்கொண்டு பூட்டியிருந்த கதவையே சில நொடிகளுக்கு வெறித்தபடி படுத்திருந்தேன். ஒருகணம் கூரையிலும், மறுகணம் அறையின் மூலையிலும், திடீரென உச்சந்தலை அருகே மெல்லிய ஊசிக் குத்தலாகவும், நெஞ்சின் மேல் ஒருவித அழுத்தமாகவும் நிழல் அதன் விளையாட்டைக் காட்டிக்கொண்டிருந்தது. அதனை நேருக்கு நேராக எதிர்கொள்ள முயலும்தோறும் மனம் இத்தனை வெறுமையடைவது எதனால் என்று என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. எந்நேரமும் அறையின் கதவைத் திறந்துகொண்டு மனைவி குழந்தையுடன் வந்துவிடலாம் எனும் எண்ணமே என்னை விரக்தியுறச் செய்தது.
நிழலின் இருத்தலால் எனது உடம்பில் குடியேறும் ஒருவித குளிர்ச்சியை, இறுக்கத்தை, குபுகுபுவென பொங்கும் வியர்வையைக் காணும்தோறும் வழக்கமாக வெள்ளச்சி என்ன செய்வாளோ அதையே இன்றும் செய்துகொண்டிருந்தாள். வலது தொடை அருகே முன்னங்கால்களை மடக்கி படுத்துக்கொண்டு, சொக்கிப் போயிருப்பதைப்போல் பாதி மூடிய இமைகளுடன், உப்புக்கரிக்கும் எனது புறங்கையைத் தீவிரமாக நக்கிக்கொண்டிருந்தது.
ஒரே ஒரு கணம் எனது சுவாசம் வேகமடைந்தது. சட்டென பார்வையை அந்த நிழலிலிருந்து அகற்றி வெள்ளச்சியை நோக்கினேன். வெள்ளச்சியும் நக்குவதை நிறுத்திவிட்டு எனது விழிகளைக் கனிவுடன் நோக்கியது. அதன் பிறப்பையும், உடன்பிறந்தாரின் உயிரற்ற உடல்கள் சூழ்ந்திருக்க அந்தக் கொட்டும் மழையில் கேட்பாரின்றி மரணத்தை எதிர்நோக்கி நின்றிருந்த அதன் அவலநிலையையும் நினைவுபடுத்திப் பார்த்தபோது அக்கணமே உணர்வதைப்போன்ற பிரம்மிப்புடன் அந்த உண்மை என்னைச் சுளீரென அறைந்தது.
நடுங்கும் குரலில் “உன் அம்மாவ கொன்னவன் நான்!” என்று அதனிடம் அறிவித்தேன். வெள்ளச்சி தலையை மட்டும் ஒருபக்கமாக திருப்பியது. இதழ்களில் அதே புன்னகை. விழிகளில் அதே கனிவு. “உன் அம்மாவ மிதிச்சே கொன்னவன் நான்… தெரியுமா!” அதைச் சொல்லும்போது என்னையும் அறியாமல் என் பற்கள் அனைத்தும் கிட்டித்துக்கொண்டன. முழங்கையில் மயிர்கூச்செரிய வயிற்றினுள் ஏதோ புரளுவதைப்போல் இருந்தது. செய்வதறியாமல் விரல்கள் ஒவ்வொன்றையும் மடக்கி, கையை முஷ்டியாக்கி அதனை அச்சுறுத்துவதைபோல் இருமுறை அசைத்தேன். உச்சக்குரலில் “உன் அம்மாவ கொன்னேன்! நான் தான் கொன்னேன்! ஆமா!” என்று மீண்டும் ஒருமுறை அறிவித்தேன்.
வெள்ளச்சி, “உம்” என்று சிணுங்கியது. பின்னர் சடாரென எழுந்துகொண்டு கால்களை நீட்டி சோம்பல் முறித்து, வாலை வேகமாக ஆட்டியபடி என்னுடன் விளையாட வந்தது. உச்சுக்கொட்டியபடி அதனை விலக்கிவிட்டு அந்த நிழலை நாடியபோது கூடத்தின் மூலையில் சுவரோடு சுவராக அது சாய்ந்து நிற்பதைக் கண்டேன். விரல்களை அழுத்தி மடக்கியிருந்ததால் இடுக்குகளில் உருவான வியர்வைப் பிசுபிசுப்பை நக்கத் துவங்கியது வெள்ளச்சி. ஏனோ என் இதழ்கள் இரண்டும் அதிர்ந்து கண்கள் ஈரம்பெற்றன.
இமைகளை ஒருதரம் மூடித்திருந்தபோது அந்த நிழல் இருந்த இடத்தில் தடித்த பெண் ஒருத்தி அரை நிர்வாணமாக, கொழுத்த தனது முலைகளைக் காண்பித்தபடி நின்றுகொண்டிருந்தாள். அவள் விழிகளை என் விழிகள் சந்தித்தபோது அவள் மிகவும் நாராசமான ஓசை ஒன்றை எழுப்பிவிட்டுச் சிரித்தாள். பெருத்து உருண்டிருந்த அவளது முலைகளின் அடிப்பகுதியில் இருந்து வரிவரியாய் இறங்கிய வியர்வை பானைபோன்ற அவளது தொந்தி வழியாக இறங்கி கரிய தொப்புளினுள் தஞ்சம் அடைந்தன.
மீண்டுமொருமுறை கண்ணிமைத்து விழித்தபோது தரையில் கிடத்தப்பட்டிருந்த ஒரு பெண்ணின் தொடைகளுக்கு இடையே முகம் பதித்து, ஒரு ஒநாயைப்போல முகர்ந்துகொண்டிருந்தார் மளிகைக்கடை நாடார். குத்திப் பிடுங்கியதும் மீண்டும் இமைகளை மூடிக்கொண்டேன். கண்களைத் திறக்கவே அச்சமாக இருந்தது. நிகழப்போகும் எதையோ உணர்ந்துவிட்டதைப்போல கால்கள் இரண்டும் படபடத்தன.
குழந்தையின் கிறுக்கல்களை ஒத்த அட்சரங்கள். முழுமைபெறாத வார்த்தைகள். பொருளில்லா உதிரி வார்த்தைகள் மெல்ல எழுந்து, ஒன்றுடன் ஒன்று இணைந்து உதிரி வாக்கியமாக உருமாறி செவிகளுக்குள் ஒரு பெண்ணின் அழுகுறளாக ஒலித்தது. அது என்னைப் பெற்றவளின் ஓலம். உச்சகட்ட போதையில் அவளது கழுத்தில் ஓங்கி மிதித்துவிட்டு, மறுநாளே பெரிய புண்ணியவானைப்போல காவியுடை தரித்து வந்த சந்தேகப் பெயர்வழியான என் அப்பா, எங்களை வீட்டைவிட்டு துரத்தியடித்த முதல் நாள் இரவில் எழுதப்படிக்கத் தெரியாத அம்மா, அவள் ஒப்புவிக்க என்னை எழுதச் சொன்ன தற்கொலை கடிதத்தின் வரிகள் அவை. அச்சொற்களின் அர்த்தத்தையும் ஆழத்தையும் அழுத்தத்தையும் புரிந்துகொள்ளும் அகவையை எட்டியபோது நான் என் வளர்ப்பு அப்பாவின் கரங்களுக்குள் குஞ்சுப்பறவையைப்போல பத்திரமாக முடங்கியிருந்தேன்.
கைகளை நக்கிக்கொண்டிருந்த வெள்ளச்சி திடீரென எதற்கோ சிணுங்கியது. கண்திறந்து பார்த்தபோது அதன் பார்வைக் கூடத்தின் மூலையை வெறிச்சிட்டபடி இருந்தது. நான் எனது முகத்தை மெதுவாகத் திருப்பினேன். அங்கே அந்த நிழற்போர்வையில் என் அம்மா படுத்திருந்தாள். அவளது மெல்லிய கழுத்தின் மீது ஒரு ஆணின் மயிரடர்ந்த கால் ஊன்றியிருந்தது. அந்த நபரின் முகத்தை என்னால் காணமுடியவில்லை. மீண்டும் வெள்ளச்சி பக்கம் திரும்பி, பலவீனமான குரலில், “உன் அம்மா… நான்தான் கொன்னேன்” என்று சொன்னேன். வெள்ளச்சி வெள்ளந்தியாக இளித்தது. வாலை வேகமாக அசைத்தது.
இனம்புரியாத எழுச்சியில் இருகரங்களால் அதனை அள்ளியெடுத்து மார்போடு அணைத்துக்கொண்டபோது என் கண்களிலிருந்து நீர் தாரைதாரையாக வழியத் துவங்கியது. அப்படியே, அந்த நிலையிலேயே எத்தனை நிமிடங்கள் அமர்ந்திருந்தேன் என்று தெரியவில்லை. கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்த மனைவி என்னை இரண்டொரு நொடிகளுக்கு உற்றுப் பார்த்தாள். பிறகு ஓசையெழுப்பி வெள்ளச்சியை அருகே அழைத்து அதற்கு உணவு புகட்டினாள். உறங்கிவிட்டிருந்த குழந்தையைத் தொட்டில்கட்டி போட்டுவிட்டு என் அருகே படுக்கையில் வந்து அமர்ந்தாள்.
என்னால் அவள் முகத்தை எதிர்கொள்ளவே முடியவில்லை. இரண்டொரு பெருமூச்சுகளுக்குப் பிறகு தனது ஆடையைத் தளர்த்திக்கொண்டவள் என்னை அப்படியே கீழே சரித்து, இதழ்களில் இதழ் பதித்து என்னுடன் கூடத் துவங்கினாள். மூச்சுமுட்ட, வெற்றுடம்பெங்கிலும் வியர்வைப் பூத்து வழிய புரண்டு படுத்தபோது நாங்கள் இருவரும் எதற்கென்றே தெரியாமல் வாய்விட்டு அழுதுகொண்டிருந்தோம். திறந்துகிடந்த ஜன்னலின் வழி உள்ளே நுழைந்த அந்திநேரத்து பொன்னொளி எங்கள் தேகங்களை மிளிரச்செய்திருந்தது.
அந்த இரவில் அவளுடன் எண்ணற்ற முறை கூடினேன். தன்னிலை மறந்து, பின் நிதர்சனம் உணர நேரிடும்போதெல்லாம் கதறியழுதேன். இடையில் எத்தனையோ முறை, “அம்மா! அம்மா!” என்று முணுமுணுத்தபடியே இருந்தேன். உச்சந்தலையில் மோதிச் சிதறிய அவளது மூச்சுக்காற்று மாயச்சரடு ஒன்றாய் மாறி என்னை மேலெழுப்புவதைபோல் இருந்தது. மயிர்கற்றைகள் சுருண்டிருந்த அவளது அக்குளில் இருந்து எழுந்த வியர்வை மணமும், மென்கழுத்து வளைவின் உப்புச்சுவையும் இறகென என்னை நீவ அப்படியே உறங்கிபோயிருந்தேன்.
மறுநாள் விழிப்புற்றபோது அறை புதுப்பொலிவுடன் காட்சி தந்தது. சுற்றம் பிசிறற்ற மௌனத்தில் அமிழ்ந்திருந்தது. சுழன்று வீசிய மெல்லியக் காற்றில் வாசற்கதவு திறந்துகொள்ளும் சன்னமான கீச்சொலியைக் கேட்டு ஒருவித துரிதத்துடன் எழுந்தமர்ந்து பின்புறம் பார்த்தேன். கூடத்தின் மறுகோடியில் கனமிழந்து வெறுமைச் சூடி நின்ற தொட்டில் மெதுவாக அசைந்தது.
