தீவிரமாக செய்யப்படும் எந்த ஒரு செயலும் ஆன்மீக அனுபவத்திற்கு மிக அணுக்கமான ஒன்றாகவே இருக்க முடியும். இதில் முதன்மையானது பயணம் அல்லது ஆன்மீக நோக்கம் கொண்ட யாத்திரைகளைக் குறிப்பிடலாம். இவ்வகை யாத்திரைகளின் நோக்கம் ஒன்றே. அது ‘சுத்திகரிப்பு’ எனும் ஆழமான செயல். உடலாலோ உள்ளத்தாலோ அல்ல, மேலும் உள்ளே சென்று நிகழும் ‘சித்த சுத்தி’ என்கிறது யோகமரபு.

‘சித்தம்’ என்பதை Totality of the Mind எனலாம். அதாவது, நம் தனிப்பட்ட மனம், கூட்டு மனம், சமூகம் நமக்குள் விட்டுச்சென்ற மனம் என அனைத்து அடுக்குகளின் தொகுப்பே இந்தச் ‘சித்தம்’. இந்தத் தளத்தில் ஏதேனும் நேர்நிலை நிகழாமல் ஒருவர் முழுமை என்பதை உணரவோ நிறைவு என்பதை அனுபவிக்கவோ சாத்தியமே இல்லை.
‘சித்தம்’ எனும் இந்தத் தளத்திற்குச் செல்வதற்கே உலகின் அனைத்து மத குறியீடுகளும் சடங்கு சம்பிரதாயங்களும் ஏற்பாடாகி உள்ளன.
நாற்பது வயதுவரை இதிலெல்லாம் பெரிதாக நமக்கு ஈடுபாடு வருவதில்லை. அல்லது மேலோட்டமான ஒரு சடங்காக செய்துவிட்டு நகர்கிறோம். மத்திய வயதைத் தாண்டும்போது ஒரு பிடிமானமாக ஆன்மீகமான ஏதோ ஒன்று நமக்குத் தேவையாகிறது. ஆகவே, இனி ஆன்மிகம் இல்லாத ஒன்றில் ஈடுபடுவதில்லை, அல்லது ஈடுபடும் அனைத்திலும் ஆன்மீகமான ஒன்றைக் கண்டுக்கொள்தல் தேவையாகிறது.
இந்த யாத்திரையும் அப்படியான நண்பர்கள் சேர்ந்து திட்டமிட்ட ஒன்று தான். எந்தச் சூழலையும் கலகலப்பாக மாற்றக்கூடிய சென்னை வக்கீல் நண்பர் செந்தில் முன்னெடுக்க, நான், திருமலை எனும் கணிப்பொறி நிபுணர், சிவா மற்றும் சந்திரசேகர் எனும் தொழிலதிபர்கள் ஆகியோர் சேர்ந்து கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் பயணம் மேற்கொண்டோம்.
இந்தக் கைலாய யாத்திரையை ஒருங்கிணைக்கும் பல்வேறு சுற்றுலா நிறுவனங்கள் இந்தியாவிலும் நேபாளத்திலும் இதை ஒரு சிறந்த தொழிலாக செய்து வருகின்றனர். மூன்று நாடுகளின் தலையீடும் இருப்பதால் அவர்களுக்கும் நிச்சயமாகவே இது சாதாரண சுற்றலா ஏற்பாடாக இருக்காது என்பது தெரிகிறது.
இந்தப் பதினைந்து நாட்களில் கைலாயத்தின் மையப்பகுதியில் நான்கைந்து நாட்கள் தான் இருப்போம். மீதமிருக்கும் நாட்கள் எல்லாமே, நம்மைச் சிறிது சிறிதாக அந்த அதீதமான சூழலுக்குத் தயார்படுத்தும் முயற்சிகள்தான்.
நாம் எந்த நிறுவனத்தின் மூலம் சென்றாலும் எல்லா செலவுகளையும் சேர்த்து, ஒரு நபருக்கு இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் வரை நிச்சயமாக தேவைப்படும். மேலும் எதிர்பாராத விதமாக உடல் நிலை மற்றும் அவசரத்தேவைகளுக்கு ஒரு ஐம்பதாயிரம் தேவைப்படலாம். ஆக, இது சற்று செலவிடக்கூடிய பயணம் தான்.
சென்னை போன்ற ஒரு நகரத்திலிருந்து முதல் நாள் நேபாளம் சென்று தங்குதல் ஒரு நல்ல யுக்தி. உடலும் மனமும் அந்தக் குளிருக்கு சற்று பழகத்தொடங்குகிறது. காட்மாண்டு நம் கல்கத்தா போல குறுகலான சந்துகளும் வாகன நெரிசலும் மிக்க நகரம். ஊரெங்கும் சிலந்தி வலையால் பின்னப்பட்டதுபோல பல்வேறு கேபிள் வயர்கள் குறுக்கும் நெடுக்குமாக ஊரையே கட்டி வைத்தது போல தொங்கிக்கொண்டிருந்தன. மக்களிடம் இப்போதுதான் கையில் கொஞ்சம் காசு புழங்க தொடங்கி இருக்கிறது என்பதால் எங்குப் பார்த்தாலும் யுவதிகள் அடர்சிவப்பு உதட்டு சாயத்துடன் மொபைல் போன் முன்னால் நின்று ஆடிப்பாடி ‘ரீல்ஸ்’ போட்டுக்கொண்டிருந்தனர். ஊரின் அத்தனை அழுக்கையும் கூச்சலையும் குழப்பத்தையும் மனிஷா கொய்ராலாவுக்காக மன்னித்துவிட்டு, பசுபதி நாதர் ஆலய தரிசனம் முடித்து விடுதி வந்து சேர்ந்தோம்.
இந்த இடத்தில்தான் சுற்றுலா ஏஜெண்டுகள் செய்யும் சில ஏமாற்று வேலைகளும் நிகழ வாய்ப்புள்ளது. அதாவது சீன அரசு இன்னும் விசா வழங்கவில்லை என்றும் மேலும் இரண்டு மூன்று நாட்கள் நேபாளத்தில் தங்க வேண்டி இருக்கும் என்றும் சொல்வார்கள். அதன் மூலம் அவர்களுக்கு மேலும் இரண்டு நாட்களுக்கான விடுதி வாடகை, சாப்பாட்டு செலவு போன்ற விஷயங்களில் கூடுதல் வருமானம் கிடைக்க வழி தேடுகின்றனர். எங்கள் குழு வக்கீல் செந்தில், தன் ‘நீதிமன்ற’ குரலில் உரக்கப்பேசி, எங்கள் குழுவின் 28 பேருக்கும் நியாயம் வழங்கினார்.

இரண்டு நாட்கள் நேபாளத்தில் தங்கிவிட்டு கைலாயம் நோக்கி பேருந்து பயணம். ஒரு பேருந்து மட்டுமே செல்லக்கூடிய மலைச்சரிவு பாதைகள் வழியாக இருநூறு மைல் தூரத்தைப் பத்து மணி நேரத்தில் கடந்து நேபாளத்தின் சீன எல்லைக்கு அருகில் இரவு தங்கினோம். இந்தச் சூழலில் நம் உடல் மேலும் சற்று குளிருக்குப் பழக்கமாகிறது.
மறுநாள் திபெத்திய-சீன எல்லையில்தான் விசா, பாதுகாப்பு, கண்காணிப்பு என எல்லாவகையிலும் கெடுபிடி தொடங்கியது. ஹிந்தி, சீனம், ஆங்கிலம் தெரிந்த சுற்றுலா வழிகாட்டி இல்லையெனில் இந்தப் பகுதியில் யாராக இருந்தாலும் சமாளிக்க முடியாது. ஒருவகையில் சுற்றுலா வழிகாட்டி தங்கள் தொழில் நேர்த்தியை வெளிப்படுத்தும் இடமும் இதுதான். சீன அதிகாரிகளுக்கும் நேபாள எல்லைப்படை அதிகாரிகளுக்கும் புரியும் வகையில் நல்ல நட்பைப் பேணுகிறார்கள். அது அவர்களின் தொழில் தர்மமும் கூட.
நேபாள எல்லை வரை கழிப்பறை வசதி நம் இந்தியா போல சற்றேனும் சுத்தமாகவும் பெண்களுக்கு வசதியாகவும் இருக்கிறது. விசா கெடுபிடிகள் முடிந்து சீன எல்லைக்குள் நுழைந்துவிட்டால், அடுத்த முன்னூறு மைல் தொலைவிற்குச் சரியான கழிப்பறை வசதிகள் கிடையாது. திறந்த வெளியில்தான் ‘அனைத்தும்’. பெட்ரோல் பங்குகளின் கழிப்பறைகள் மிகவும் அருவருப்பானவை. ஒரு குவளை தண்ணீர் கூட இல்லாமல்தான் சமாளிக்க வேண்டும். இதற்கு நேர் மாறாக சீனாவின் தங்கும் விடுதிகள் அனைத்திலும் மிக மிக சுத்தமான நவீனமான தானியங்கி கழிப்பறைகள் உள்ளன. தொலைவியக்கியைக் கொண்டு இயக்கும் அளவிற்கு நவீனமானவை. கைலாய யாத்திரை செல்லும் நம்மூர் பெண்கள் இந்த இரண்டு நேர் எதிர் அனுபவங்களுக்கும் தங்களை மனதளவில் தயாரித்துக்கொண்டு செல்வது நலம்.
இந்தப் பயணம் முழுவதும் பல்வேறு நிலக்காட்சிகளை நடந்தும் பேருந்தில் கடந்தும் அனுபவித்தோம். ஐரோப்பிய, அமெரிக்க படங்களில் வரும் நிலக்காட்சி அனுபவங்களுக்குச் சற்றும் குறையாத நிலப்பகுதி இது. திபெத்திய பனிப்பாலை மற்றும் இமாலய மலைப்பகுதிகளைக் கடக்கும் பொழுது நாம் அடைவது ஒருவித விட்டேத்தி அல்லது வறண்ட மனநிலைதான், காரணம் என்ன என்பதை உள்ளே துழாவிக்கொண்டேயிருந்தேன். இறுதியில் ஒன்றை கண்டுகொண்டேன். அது, பனி பொழியும் இந்தப் பாலை நிலத்தில் ‘பச்சை’ என ‘பசுமை’ என நம் கணுக்கால் அளவேனும் வளர்ந்த ஒரு செடியைக்கூட நாங்கள் பார்க்கவில்லை. நம் கண்ணை நிறைத்து மனம் செல்லும் தூரம் வரை நமக்குக் காட்சிப்படுவதெல்லாம் கரடுமுரடான பாறைமலைகளும் குவித்து வைக்கப்பட்ட பனிப்பாறைகளும்தான். அந்தப் பளீர் வெண்மைக்கு நம் கண்ணும் மனமும் பழக முதல் இரண்டு நாட்கள் ஆகிறது. பின்னர் மனம் ஒடுங்கி ரசனை மனநிலை மறைந்து, அவதானிப்பும் மனவோட்டம் இல்லாத நிலையும் உண்டாகிறது.

நமக்குத்தான் இந்த ஊசலாட்டம். ‘யாக்’ எனும் பனிமலை காளைகள், மலை முயல்கள், மான்கள் எல்லாம் எல்லா நேரமும் வெறும் தரையில் எதையோ மேய்ந்து கொண்டே இருக்கின்றன. நிச்சயமாகவே தரையின் மண்ணைத் தின்னும் அளவிற்கு அறிவிலி மிருகங்கள் அல்ல அவை. காய்ந்த வைக்கோல் நிறத்தில் விரற்கடை உயரமுள்ள புற்களைத்தான் அவை ஆர்வத்துடன் மேய்கின்றன என்பதை ஒரு ‘யாக்’கின் அருகில் சென்று கண்டோம். ‘அரைப்புல்லும் அன்னமே’, ‘அன்னமே பிரம்மம்’ என அது கண் சொருகி மேய்ந்தும் அருகிலே இருந்த சதுப்பு நிலத்தில் நீரருந்தியும் திளைத்துக்கொண்டிருந்தது.
டார்சென் எனும் பகுதியில் இரவு தங்க வைத்தனர். கடல் மட்டத்திலிருந்து 4600 மீட்டர் உயரம் என்பதால் Diamax-எனும் மாத்திரை போட்டுகொண்டுதான் தூங்க வேண்டியுள்ளது. இரவில் குளிரும் மூச்சு திணறலும் அனைவருக்கும் மிக சாதாரணமாக வருகிறது. ஆகவே ‘மாத்திரை வேண்டாம்; என் உடல் எதையும் தாங்கும்’ என வீர வசனம் பேசுபவர்கள் அடுத்த நாள் நிச்சயமாகவே மூச்சுத்திணறலுக்கு உள்ளாகின்றனர். எனவே கைடு சொல்லும் அடிப்படை விதிகளைக் கடைபிடிப்பது நல்லது. அதே போல உடை விஷயத்திலும் சற்று செலவு செய்து குளிர் -10 வரை தாங்கக்கூடிய உடைகளைக் கொண்டு செல்ல வேண்டும். கைலாய சுற்று வட்டப்பாதை நடை பயணமான ‘பரிக்ரமா’ தொடங்கும் முன்னமே இவ்வளவு ஏற்பாடுகள் தேவையாகவுள்ளது.
நம்மவர்கள் ‘எல்லாம் பகவான் மேல பாரத்த போட்டு போவோம், அவன் பார்த்துக்குவான்’ என வருகின்றனர். சாதாரணமாகச் சுங்குடி புடவையையும் காவி வேட்டியை மடித்து கட்டிக்கொண்டும் வந்து இறங்குகின்றனர். அரைமணி நேரத்தில் குளிர் வாட்டத்தொடங்கி விடுகிறது. அதன் பின்னர்தான் ஆக்சிஜன் சிலிண்டர், மலையேற்றம் செய்ய ஊன்றுதடி, கையுறை எனத் தேடுகின்றனர். நம்மூர் மதிப்பில் எல்லாமே ஐந்து முதல் ஆறு மடங்கு அதிக விலை கொடுத்து வாங்கவேண்டி வருகிறது. பாவம்.
டார்ச்சேன் பகுதியின் குளிரும் மிகக்குறைந்த அளவு ஆக்சிஜனும் உயரமும் மேற்கொண்டு செல்ல வேண்டிய பயணத்தை முழுவதுமாகவே முடக்கி விடுகிறது. இங்கேயே விடுதியில் படுத்துக்கொண்டு 50 மைல் தொலைவில் தெரியும் கைலாய மலையைத் தரிசித்து விட்டு திரும்புகின்றனர். திரும்ப ஊருக்கு வந்து கைலாய யாத்திரை போய்வந்தோம் எனச் சொல்லிக்கொள்ளலாம். இது முழுமையான அனுபவமல்ல. அடுத்த மூன்று நாட்கள் புனித நடைபயணம்தான் இதன் உச்சம்.
நாங்கள் ஐவரும் இலக்கிய வாசகர்கள் என்பதால், அடுத்தடுத்து தீவிரமான உரையாடல் நிகழ்ந்த வண்ணம் இருந்தது. முக்கியமாக இது போன்ற யாத்திரையின் ஐந்து முக்கிய அம்சங்கள் இடம் பெற வேண்டும் எனச் சொல்லியிருந்தேன்.
- தரிசனம் – அகக்கண்ணாலும் புறக்கண்ணாலும் முழுவதுமாக அந்தச் சூழலைக் காணுதல்
- தியானம் – ஒவ்வொரு வாய்ப்பின் போதும் கண்ணால் கண்ட காட்சியைத் தியானித்தல்.
- சங்கல்பம் – பயணத்தின் நோக்கம் என சங்கல்பம் ஒன்றை வைத்துக்கொள்ளுதல்.
- ஸ்வாத்யாயம் – எனக்கான கல்வியை, ஞானத்தை இந்தப் பயணத்தில் அடைதல்.
- மந்திரம் – மனதில் எல்லா நேரமும் மந்திர உச்சாடனம் என ஒரு சொல் ஓடிக்கொண்டே இருத்தல்.
செந்தில், தன் யோக பயிற்சிகளின் மூலம் அடைந்த அனுபவங்களை நண்பர்களுடன் பேசிக்கொண்டே வந்தார். அங்கிருந்து மரபார்ந்த யோகம் என்பது எப்படி ஒரு வாழ்நாள் செயலாக இருக்க முடியும் என்றும், யோக சாதகன் எதுவாக மாறுகிறான் என்றும் பேசினோம். யோகம் ஆன்மீக அனுபவங்களைப் பற்றியோ அமானுஷ்ய சித்திகளைப் பற்றியோ ஆரம்ப சாதகனிடம் பேசுவதில்லை. மாறாக சுய ஆளுமை, தன்னை மேலும் அணுகி தெரிந்து கொள்தல், நிறைவான மனநிலை போன்ற மனிதனின் அடிப்படை தேவைகளை முன்வைக்கிறது. அதற்கு வேத வேதாந்த கருத்துக்களைத் துணைக்கு அழைத்துக்கொள்கிறது. உதாரணமாக. ஒரு மனிதன் செய்தே ஆகவேண்டிய ஐந்து கடமைகளை ‘பஞ்ச மஹா யக்ஞம்’ எனச் சொல்கிறது. இதை வைத்து ஒரு சிறிய உரை ஆற்றினேன்.
பனிமலைகளின் அடியில் ஒரு திபெத்திய – சீன கிராமத்தில் அந்த மாலை நேரத்தில் அனைவரும் இது சார்ந்து பேசி சிந்தித்து மகிழ்ந்து, அவரவர் அறைகளுக்குச் சென்று உறங்கினோம்.
இந்த நாட்களில் திபெத்திய சீனத்தில் சுற்றிக்கொண்டிருக்கையில், ஒப்புநோக்க சீன உணவு விடுதிகளை விட திபெத்திய உணவு விடுதிகளில் சைவ உணவு உண்பவர்களுக்குத் தேவையானவற்றைச் சமைத்து தருகின்றனர். முக்கியமாக திபெத்திய சூப் மற்றும் கிடைக்கும் காய்களைக் கொண்டு செய்யப்படும் உணவுவகைகள் சுவை கூடியவை. சீன உணவு விடுதிகளை விட விலையும் குறைவு. இங்கிருக்கும் ஒரே சவால் மொழிதான். ஹிந்தி தெரிந்திருந்தால் திபெத்திய உணவு விடுதிகளில் வேலை செய்யும் நேபாள-திபெத்தியர்களிடம் பேசி நல்ல உணவுகளைப் பெற முடியும். நம்மவர்கள் எப்படியும் இட்லியும் தோசையும்தான் தேடுவார்கள் என்பதால், அங்கும் ஒரு இந்திய உணவு விடுதி உண்டு. வேட்டி சட்டை, மடிசார் புடவை சகிதமாக இருபது முப்பது பேர் இட்லி ஆர்டர் செய்துவிட்டு, கிச்சனை எட்டி பார்த்து காத்திருந்தனர்.
நாங்கள் திபெத்தின் முக்கியமான சைவ உணவுகள் பலவற்றை இந்நாட்களில் ருசித்துப் பார்த்தோம். சூப் மற்றும் சாலட் வகைகளில் அவர்களை மிஞ்சவே முடியாது எனும் அளவிற்கு ருசி. மற்றபடி அசைவ உணவு பிரியர்களுக்கு ஊரெங்கும் விடுதிகள்தான். இந்த முறை வித்தியாசமான உணவு வகைகள் சிலவற்றை பார்த்தோம். அவை முழுதாக அவித்து, சுட்டு ஆளுயர கம்பியில் கட்டி தொங்கவிடப்பட்டிருக்கும் முழு வெண்பன்றிகள். நம் துணிக்கடைகளில் வாசலில் நிற்கவைத்திருக்கும் பொம்மைபோல நின்றன. அடுத்தது ரோட்டோர கடைகளில் கிடைக்கும் வாத்துக்கால், வாத்துநாக்கு போன்ற உணவுகள். இந்த இரண்டு எல்லை கிராமங்களிலும் அங்காடித்தெருக்களில் மலைக்கிராம மக்கள் ரோட்டோர கடை விரித்துள்ளனர். கல்மணிகளில் துளையிட்டு நரம்பில் கோர்த்து விதவிதமான மணிமாலைகள், மரவேலைப்பாடுகள் செய்த வீட்டு உபயோகப்பொருட்கள், யாக் ரோமத்தில் செய்யப்பட்ட ஆடைகள் என ஒரு சந்தை நம் கண்முன்னே உயிர்ப்புடன் இயங்குகிறது. பேரம் பேசி வாங்க முடியும் என்பது பெண்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சி.

முதலில் மானசரோவர் ஏரிக்குச் சென்றோம். மாந்தாதா எனும் பனிமலையின் தெற்கு பகுதி உருகி வழிந்து மாபெரும் ஏரியாக, தூய கடலென காட்சியளித்தது. நம்மவர்கள் மட்டுமே அதிகமாக வழிபடும் பகுதி இது. முன்னோருக்கான நீர்க்கடன் முதல், தியானம், வழிபாடு என ஒவ்வொருவரும் ஒருவகை உன்னத மனநிலையில் அமர்ந்திருப்பதைக் காண முடிகிறது. நாங்கள் ‘வெண்முரசு’ நாவலின் ‘கிராதம்’ நூலை வாசிப்பது என முடிவு செய்திருந்தோம். நண்பர் சந்திரசேகர் சரளமாகவும் நல்ல குரலிலும் சில அத்தியாயங்களை வாசிக்க, நாங்கள் சுற்றி அமர்ந்து மனக்கண்ணால் அந்தக் காட்சியைத் தியானித்துக்கொண்டிருந்தோம். அர்ஜுனன் பாசுபதம் பெற கைலாயம் செல்லும் பயணத்தைக் கூறும் நூல் அது. கைலாய பரிக்ரமத்தை ஒரு நல்ல வாசிப்புடன் தொடங்கினோம். அடுத்ததாக ‘யமத்துவார்’ எனும் பகுதியில் கொண்டு நம்மை இறக்கி விடுகிறார்கள், அதுவே 4700 மீட்டர் உயரத்தில் உள்ளது. இது தான் பரிக்ரமா தொடங்கும் புள்ளி. மூன்று அல்லது ஐந்து நாட்களில் இதே இடத்தில் முடிகிறது யாத்திரை.
அதுவரை ‘ஊர் சுற்றி’ அல்லது ‘புனிதயாத்திரை’ எனும் மனநிலையில் இருந்தவர்களுக்கு ஒருவித ஓர்மை கைகூடுகிறது. நடைப்பயணத்திற்குத் தேவையான ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து எடுத்து சேர்ந்தபின், யமத்துவார் பகுதியின் முதல் கைலாய மலை தரிசனம் என்பது கண்ணும் மனமும் நிறைந்து ஒரு கைகூப்பலுடன் வேண்டுதல் எழுந்தது. அந்த வெண்பனி முடியை எத்தனை முறை படங்களில் காட்சிகளாகக் கண்டிருப்போம். அது அனைத்திலிருந்தும் முற்றிலும் வேறான ஒன்று அங்கு நின்றிருக்கும் அனுபவம். முதலில் நாம் உணர்வது கண்ணைப் பறிக்கும் வெளீர் நிற பனிப்பாதைகளுக்கு நடுவே பார்க்கும் தூரத்திலும் எட்டாத தூரத்திலும் என இருவகையாகக் காட்சி தரும் கைலாயம் எனும் பனிக்குன்று. அது நம் கண்களைக் கூசச்செய்வதோ, சுருங்கச்செய்வதோ இல்லை. மாறாக நம்மால் அந்தக் குன்றை நோக்கி ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் முழு ஈர்ப்புடன் பார்க்க முடிகிறது. காலை 9 மணிக்கு வெள்ளித்தகடு என மின்னும் கைலாயம், மதியம் இரண்டு மணிக்கு வைரமென ஒளிவிடுகிறது. நாம் அணிந்திருக்கும் கண்ணாடியைக் கழற்றிவிட்டு தரையைப் பார்த்தால் வெண்பனியால் கண் மங்கிவிடும் அளவிற்குக் கூசுகிறது. அப்படியே தலையைத் தூக்கி வைரமென மின்னிக்கொண்டிருக்கும் கைலாயமோ கனிந்து உருகிக்கொண்டிருக்கிறது நமக்காக. அங்கு மாலை என்பதே நமது இரவு எட்டு மணிதான் என்பதால், இரவு எட்டு முதல் ஒன்பது மணி என்பது கைலாயத்தின் வைர மினுமினுப்பு மறைந்து பொன் வேயப்பட்டது.
நமது சிதம்பரம் கோயிலுக்கு 21600 தகடுகளால் பொன் வேயப்பட்டது, கைலாயத்தின் காலை-மாலை தரிசனத்தை மையமாக வைத்தே நிகழ்த்தப்பட்டுள்ளது.
முதல் நாள் நடையில் அனைவரிடமும் ஒரு துள்ளலும், சந்தோஷமும், நிறைந்து காணப்பட்டது. 12 கிலோமீட்டர் தூரத்தை மாலை 5 மணிக்குள் கடந்து விட்டோம். இந்த நடையின்போது எப்படித் திரும்பினாலும் கைலாய மலை காட்டியளித்துக்கொண்டே இருந்தது. இந்தப் பகுதியில் இருந்துதான் திபெத்தியர்களின் ‘கைலாஷ் கோரா’ எனப்படும் அவர்களுடைய பரிக்ரமா தொடங்குகிறது. உண்மையில் நாங்கள் செல்லும் யாத்திரை எத்தனை சொகுசாகவும், வசதியாகவும், பாதுகாப்பாகவும் ஏற்பாடு செய்து கொள்கிறோம் என்றும் திபேத்தியர்கள் அந்தச் சூழலில் வளர்ந்ததால், மிகச்சிறிய அளவிலான ஏற்பாட்டில் முழு யாத்திரையையும் செய்து முடிக்கின்றனர் என்றும் புரிந்துகொள்ள முடிந்தது. முக்கியமாக மூன்று அல்லது ஐந்து அடிகள் நடந்தபின் முழுதுடல் தரைபட விழுந்து நமஸ்காரம் செய்து எழுந்து மீண்டும் ஐந்து அடிகளுக்குப் பின் விழுந்து வணங்கி இப்படியே ஒருவாரம் முதல் 10 நாட்களில் இந்த 52 கி.மீ. யாத்திரையை முடிக்கின்றனர்.

நம்மவர்களுக்குக் கைலாயம் என்பது சிவனேதான். அல்லது சிவகுடும்பம் வாழும் மலை; அவன் வீடு. திபெத்தியர்களுக்குக் கைலாயம் என்பது சக்ரசம்வரரின் இருப்பிடம். டெம்சோக் எனும் தெய்வம் அவரின் சக்தியாக இருப்பவள் வஜ்ரவராஹி இந்த இணை தெய்வங்கள் ஞானமும், ஆனந்தமும் அருளவல்லவை. காங்க் ரின்போச்சே (விலைமதிப்பற்ற பனிமலை) எனும் இந்தப் புனித மலையைச் சுற்றுவதன் மூலம், இம்மைக்கும் மறுமைக்கும் நற்பயன்கள் கிடைப்பதாகவும் பாவவினைகள் அனைத்தும் நீங்குவதாகவும் நம்புகின்றனர்.
நாம் சிலநேரங்களில் பிறரின் நலனுக்காக வேண்டிக்கிக்கொள்வது போல, திபெத்தியர்கள் தங்களுடைய ‘கோரா பரிக்ரமா’வின் போது, இந்த யாத்திரைக்கு வரமுடியாதவர்கள், தனது குடும்பத்தினர், வருவதாக நேர்த்திக்கடன் வைத்திருந்து அதை முடிக்காமல் உலகை நீத்தவர்கள், அனைத்திற்கும் மேலாக தங்கள் ஆசிரியர் அல்லது குருவின் படத்தை முதுகில் கட்டி வைத்துக்கொண்டு யாத்திரைச் செய்கின்றனர். அவர்களும் பரிக்ரமாவில் கலந்து கொண்டதாக மனதளவில் நம்புகின்றனர்.
முதல் நாள் காலையில் உற்சாகமாக தொடங்கிய பயணம் உயரம் செல்லச்செல்ல மெதுவாகவும் நிதானமாகவும் உடலை எடைமிக்க ஒன்றாகவும் மாற்றிவிடுகிறது. உணவு உண்ணக்கூட தோன்றுவதில்லை. ஆனால் அனைவரின் உள்ளமும் ஒரு உன்மத்த நிலையில் பேச்சும் ஆரவாரமும் குறைந்து ஒரு மோன நிலைக்குச் சென்றிருந்தது. மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவு மிகவும் குறைந்து விடுவதால் கோர்வையாக எதையும் சிந்திக்கவோ தொடர்ந்து பேசவோ யாருக்கும் தோன்றவில்லை. 5000 மீட்டர் உயரமும் ஒரு காரணம். ஒருவழியாக தூங்க முயற்சி செய்துகொண்டே இருந்தோம். ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை ஆக்சிஜன் அளவு குறைந்து விழிப்பு தட்டியது. நள்ளிரவில் குளிர் -10 வரை சென்றதும் தூக்கமின்மைக்கு ஒரு காரணம் எனினும் சோர்வாகவோ களைப்பாகவோ உணரவில்லை. ஒருவித சுகமான செயலின்மை.
நம் உடலில் ஆக்சிஜன் அளவு 70-90 எனும் அளவிற்குக் குறைந்து விடுகிறது. 60 அளவிற்குக் கீழே சென்று விட்டால், அவர்களை மலையேற அனுமதிப்பதில்லை.
இந்த 12 கி.மீ யாத்திரை முடிந்த இரவு மீண்டும் ஒருமுறை நமது சுற்றுலா வழிகாட்டி வந்து எங்களுடன் உரையாடினார். தொடர முடியாதவர்கள் இங்கிருந்து இப்படியே திரும்பி கீழே இருக்கும் விடுதிக்குச் சென்று விடலாம் என்றார். தான் வாகனம் ஏற்பாடு செய்வதாகக் கூறினார். மேற்கொண்டு நடந்தால் அங்குத் தன்னால் வாகன வசதிகள் செய்ய முடியாது என மெல்லிய எச்சரிக்கையாகவும் அடுத்த நாள் பயணத்திற்கு எங்களைத் தயார்ப்படுத்தவும் செய்தார். 28 பேராக கிளம்பிய நாங்கள் முதல் நாள் பரிக்ரமா முடிவில் 14 பேர்களாக எஞ்சினோம். இரண்டாம் நாள் பயணம்தான் வாழ்வின் ஆகச்சிறந்த மலையேற்ற பயணம் என அனைவரும் உணர்ந்தோம். 5600மீட்டர் உயரத்தில் இருக்கும் டோல்மா லா எனும் பகுதி தான் பரிக்ரமாவின் அரைவட்ட முடிவு அங்கிருந்து இனி கீழ் நோக்கி இறங்க வேண்டியதுதான். இந்த உச்சியில் கைலாயம் தொட்டுவிடும் தூரத்தில் அருகிலென ‘சிவ ஸ்பரிசம்’ கிடைக்கிறது. திபெத்தியர்கள் பல்வேறு வண்ணக்கொடிகளைக் கட்டி தங்கள் நேர்த்திக்கடனை முடிக்கின்றனர். நம்மவர்கள் கைலாய நாதனைக் கண்டும் திகைத்தும் விம்மியும் அமர்ந்திருக்கின்றனர்.
நாங்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி ஒரு யந்திர பூஜையும், ப்ராண பிரதிஷ்டை எனும் ஒரு வழிபாட்டு முறையும் மிக விரிவாக செய்து முடித்தோம்.
இந்த இரண்டாம் நாள் நடை என்பதன் சவால்கள் பற்றி எவ்வளவு பேசினாலும் தீராது. நாங்கள் சென்றது மே மாதம் என்பதால், நடைபாதை முழுவதிலும் ஒருசில பகுதிகளை மட்டுமே பனிக்கட்டியால் மூடிய பாதையைக் கடக்க வேண்டியிருந்தது. ஜூன் மாதம் பாதை முழுவதும் மூடப்பட்டு, பயணம் வந்தவர்கள் அனைவரும் கீழேயே நின்றுவிட்டனர் என்கிற செய்தி வந்தது. நாங்கள் காலையில் நடக்க தொடங்கிய சில மணி நேரத்திலேயே வெயில் எழத்தொடங்கி மீண்டும் ஒருமுறை பொன்னார் மேனியனைத் தரிசிக்க முடிந்தது. இதை ஏன் இவ்வளவு சிலாகிக்கிறோம் என யோசித்தேன். உண்மையில் அங்கிருந்து பார்க்கும் பொழுதுதான் தெரிகிறது, கைலாய மலைக்குன்றைச் சுற்றி இருபது, முப்பது மலை குன்றுகள் இருந்தும், அவற்றின் மீதும் சூரிய கிரணங்கள் பொழிந்தும் கைலாயம் ஒன்று மட்டுமே பொன் வேயப்பட்டது போல மின்னுகிறது. மிக அருகில் இருக்கும் குன்று கூட சூரியனை வெள்ளை போர்வை என்றே அணிந்து கொள்கிறது. வெளீர் வெண்மையும் சாம்பல் நிறமும் மட்டுமே கண்ணை நிறைத்துக்கொண்டிருக்கும் இந்த நிலத்தில் ஒரு மலை பொன்னொளி கொள்வது நம்மை மலரச்செய்கிறது.
அன்று இரவும் மலை தங்கல்தான். சோர்ந்தும் களைத்தும் இருந்தாலும் இரண்டு நாள் பரிக்ரமா முடிந்த நிறைவு மனதில் இனிமையாக இருந்தது.
நாங்கள் ஐவரும் யோக பயிற்சிகள் முறையாக செய்பவர்கள் என்பதால், ஒவ்வொரு நாளும் மீண்டும் நடையைத் தொடங்கவும் மீண்டெழவும் சுலபமாக இருந்தது. உடன் பயணித்த பெங்களூர் தம்பதி கோபி- முத்துமாரி, உடல் ஒத்துழைக்க மறுத்தாலும் மன உறுதி கொண்டு பரிக்ரமாவை பூர்த்தி செய்தது சிறப்பு.
இந்தப் பதினைந்து நாட்களில் நாங்கள் உணவருந்திய விடுதிகள், கூடாரங்கள், திறந்தவெளிகள் என எல்லா இடத்திலும் ஏதாவது ஒரு தீவிர உரையாடல் நிகழ்ந்த வண்ணமே இருந்தது. நான்தான் யோக மாணவன். மற்ற நால்வரும் தேர்ந்த வேதாந்திகள். ஆகவே வெற்று அரட்டைகள் ஏதும் இல்லாமல் சிரிப்பும், கைதட்டல்களும், கேலி கிண்டலும் நிறைந்த யோக-வேதாந்த சபையாக மாறியது. கென் வில்பர், ஓஷோ, சத்குரு, குரு நித்யா என பெரும் ஞானியரின் ஆன்மீக பார்வைகளும் சத்யானந்த சரஸ்வதி, சிவானந்தர், நடராஜ குரு, அரவிந்தர் என யோகியரின் தரிசனங்களும் பேசி மகிழ முடிந்தது.
மாஸ்டர் வியாஸபிரசாத் அடிக்கடி குறிப்பிடும், நாராயண குரு மரபின் அடிப்படை தரிசனம் பற்றி பேசினோம். Vertical parameter vs horizontal parameter எனும் குறியீடு பற்றி நண்பர்கள் அனைவரும் விவாதித்தோம். யோகம் என்பது காலையில் ஒருமணி நேரம் செய்யக்கூடிய பயிற்சிகள் அல்ல, அதன் மற்ற அம்சங்களான கர்ம யோகம், பக்தி யோகம், ஞான யோகம் பற்றியும் விரிவாகப் பேச முடிந்தது.
அன்றாடத்தில் இருந்துகொண்டே ஒவ்வொரு நாளும் சிறு சிறு துளிகள் என உன்னதமான ஆன்மீகமான ஒன்றை சேகரித்துக்கொண்டே செல்லுதல் குறித்து பேசினோம். புனித சிலுவையில் ஒரு கிடைமட்ட கோடு என்பது நம் அன்றாடம், அதை சுமந்தபடியே மேல்நோக்கிய கோட்டிலும் ஒவ்வொரு நாளும் ஒரு தப்படி தூரம் நகர்தல் குறித்து கலந்துரையாடினோம். இதை நாங்கள் ஒரு உணவு மேசையில் கலந்துரையாடும் போது, அங்கிருந்த நூடுல்ஸ் குச்சிகளும். பல்குத்த பயன்படும் குச்சிகளையும் கருவிகளாக கொண்டு குறியீடுகளை வரைந்து பேசி மகிழ்ந்தோம். குறியீடுகளும் சடங்குகளும் நம் ஆழுள்ளத்தில் ஏற்படுத்தும் மாற்றங்கள். அவற்றை பயன்படுத்தும் முறைகள், அதற்கான இடங்கள் என பலவற்றையும் நவீன அறிவியலின் துணையையும் கொண்டு புரிந்து கொள்ள முயன்றோம்.
எஸ். ராவின் சமீபத்திய கதையான ‘நடைத்துணை’ பற்றியும் உலக சிறுகதைகள், ஜெயமோகனின் கதைகள் மற்றும் சாருநிவேதிதாவின் ‘தீராக்காதலி’ பற்றியும் ‘வெண்முரசு’ பற்றியும் ஒவ்வொரு சிறு இடைவெளியிலும் பேசிக்கொண்டே இருந்தோம்.
நமக்குக் குன்றிருக்கும் இடமெல்லாம் நம் குமரன் குடியிருப்பான் என்பது போல, திபெத்தியர்கள் ஒவ்வொரு சிறு குன்றின் உச்சியிலும் புத்த மடாலயங்களோ சிறிய கோயிலையே ஏற்படுத்தியுள்ளனர், கால்நடையாக ஒரு குன்று கோயிலுக்குச் சென்றோம், அங்கிருந்து வான் நோக்கி எதை சொன்னாலும் அது நம் வாழ்வில் நடந்து விடும் எனும் படியான உணர்வை உண்டாக்குகிறது, வான்நோக்கி நின்றிருக்கும் போதி சத்துவர்களுக்கும், புத்தர்களுக்கும், தங்களால் முடிந்த காணிக்கை என ‘யாக்’ (ரிஷபத்தின்) கொம்புகளை படைக்கின்றனர். அங்கு நின்றிருக்கையில் தைத்திரிய உபநிஷ மந்திரமான ‘யஸ்சந்தஸாம் ரிஷபோ விஸ்வரூபஃ’ எனும் வரிகள் உள்ளே ஓடியது. இதில் ரிஷபம் என்பது வல்லமையை, தலைமை பண்பை, வீரியத்தை, முதன்மையைக் குறிக்கிறது,
இங்கு நின்று ரிஷப கொம்புகளின் குவியல்களைக் காண்கையில், எந்த வல்லமையும் வீரியமும், வான்நோக்கி காணிக்கை என வந்தாக வேண்டும். எனப்படுகிறது. அதுவே ரிதம். அதுவே சத்தியம் என்கிறது உபநிஷத்.
மூன்றாம் நாள் மலையிறக்கம் மொத்தமே மூன்று நான்கு மணி நேர நடைதான் என்பதால் அனைவரும் ஆசுவாசமாக உணர்ந்தோம்.

தொடங்கிய இடத்திற்கு அருகில் வந்துசேர, நம்மை விடுதிக்கு அழைத்துச் செல்ல வாகனம் வருகிறது. இரண்டாம் நாள் இருந்த இறுக்கம் அனைத்தும் நீங்கி பரிக்ரமா முடித்தவர்கள் அனைவரின் முகத்திலும் வெண்பனி சிரிப்பு. வரமுடியாமல் விடுதியிலேயே தங்கியவர்கள், மிகுந்த உற்சாகத்துடன் சால்வைப் போர்த்தி சிவநாமம் சொல்லி வரவேற்று பரிக்ரமா எனும் புனித யாத்திரையை முடித்து வைத்தனர்.
நாங்கள் அனைவரும் உணர்ந்த ஒன்று, வாய்ப்பும் வசதியும் இருக்கும் பட்சத்தில் ஒருவர் நிச்சயமாக சென்று தன்னைச் சிவனில் கரைத்துக்கொள்ள மாபெரும் வாய்ப்பு உள்ள புனித பயணம் இது. வந்தவுடன் நண்பர்கள் கேட்டது ஏதேனும் அமானுஷ்யமான அனுபவங்களை அடைந்தீர்களா? பார்த்தீர்களா? என்பது தான். நிச்சயமாகவே ‘ஆம்!’ என்று தான் சொல்வேன். அது மிகவும் அகவயமானது. எங்களை வாழ்நாள் எல்லாம் வழிநடத்த உடனிருப்பது. இனி எப்போதும் எங்கள் சித்தத்தில் தங்கி இருப்பது. அது ‘சிவம்’ என உள்ளே எப்போதும் இருக்கும். வழிநடத்தும்; இதை விட பெரும் அதிசயத்தை, அமானுஷ்யத்தை நாங்கள் எதிர்பார்க்கவும் இல்லை.
திபெத்திய பெளத்தத்தைப் பொருத்தவரை கைலாஷ் என்பது இந்தப் பிரபஞ்சத்தின் மைய அச்சு. அந்த மலை மனித வாழ்வையும் தெய்வங்களின் வாழ்வையும் ஒன்றென இணைக்கும் புள்ளி. அதை தொட்டு மீண்டவர், புனிதமும், ஞானமும் மிக்கவராக மாறுகிறார். இம்மைக்கும் மறுமைக்கும் தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறார்.
அந்த மைய அச்சில் சில மணி நேரங்களாவது எங்களையும் சுழல வைத்த இறையருளுக்கு நன்றி. மேலும் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் நண்பர்களை அழைத்து சென்று மைய அச்சில் சுழல விடவே விரும்புவேன்.
