பள்ளி முடிந்து கோவில் வழியாக நானும் முட்டைக் கண்ணனும் வீடு திரும்பினோம். அவனை முட்டைக் கண்ணன் என்று அழைத்தால் தாக்கச் செல்வான். என்னிடம் மட்டும் கோபிக்க மாட்டான். என் மேல் அவனுக்குத் தனி அன்பிருந்தது.
கோவிலுக்குப் பக்கத்தில் தகரத்தால் செய்யப்பட்டிருந்த கொட்டகை ஒன்றில் எங்கள் தோட்டத்து தேரைப் பூட்டி வைத்திருந்தார்கள். நானும் முட்டைக் கண்ணனும் தேர் கொட்டகையின் அருகில் சென்றோம். கொட்டகையின் தகரத்தில் ஆங்காங்கே இருந்த ஓட்டையில் பெரிய ஓட்டையாக தேடிக் கண்டுப்பிடித்தோம். “இந்த ஓட்டை ஒனக்கு; அந்த ஓட்டை எனக்கு” என்றான் முட்டைக் கண்ணன். இடதுக் கண்ணை மூடி, வலதுக் கண்ணால் பார்த்தோம். தேர் உள்ளே நிர்வாணமாக இருந்தது. “இதுக்காகத்தான் இந்த இரும்புக் கோட்டைக்குள்ள பூட்டி வச்சிருக்காங்க,” என்று முட்டைக் கண்ணன் சொல்லிச் சிரித்தான்.
நான் தேரைக் கவனமாகப் பார்த்தேன். என் மனதில் உருவாகியிருந்த குட்டித் தேரைச் செய்ய என்னென்ன பொருட்கள் தேவை என அந்தப் பெரிய தேரைப் பார்த்து மனதில் குறித்துக்கொண்டேன்.
“டேய் அங்க என்னாட பண்ணிட்டு இருக்கீங்க?” பின்னாலிருந்து முரட்டுத்தனமான குரல் ஒன்றைக் கேட்ட அதிர்ச்சியில் திரும்பினோம். ராக் அண்ணன் எங்களை நோக்கி முறைத்து பார்த்தப்படி “இங்க வாங்கடா” என்றார். நாங்கள் இருவரும் ஓடி விட்டோம்.
ராக் அண்ணன் மல்யுத்த வீரன் டுவெயின் ஜான்சன் தி ராக்கின் தீவிர ரசிகர். தி ராக் மாதிரி கட்டுடல் வைக்க ஆசைப்பட்டதால் தினமும் உடும்புப் பிரட்டல், காட்டுப் பன்றிப் பிரட்டல், கோழிப் பிரட்டல், வாத்து பிரட்டல், ஆட்டு பிரட்டல் என அனைத்தையும் கல்லுக் கடையில் தின்றுப் பார்த்தார். ஆனால் அவரின் குடிப்பழக்கம் கட்டுடலின் வளர்ச்சியைத் தடைச் செய்து விட்டது.
ஆனாலும் மனம் தளராமல் தன்னம்பிக்கையுடன் முகத்தில் தி ராக் மாதிரி சைபன் வைத்து கொண்டார். மொட்டைக் கை சட்டையும் தொடைப் பகுதியில் கிழிந்திருக்கும் நீல நிற ஜீன்ஸையும்தான் எப்போதும் அணிந்திருப்பார். யாரிடம் பேசினாலும் தனது ஒட்டிப் போயிருக்கும் நெஞ்சை முன்னுக்குத் தள்ளிக்கொண்டு சண்டைக்கு அழைக்கும் தொனியிலே பேசுவார். அடிக்கடி அவர் ‘இஃப் யூ சிமேல், தி ராக் இஸ் கூக்கிங்க்’ என்ற தி ராக்கின் கவர்மொழியைச் சொல்லிக் கத்துவார். ஆனால் எங்களுக்கு அவர் உச்சரிக்கும் தொனி நாய் ஊளை இடுவது போலவே கேட்கும். தன்னை தி ராக் என்றே அனைவரையும் அழைக்க சொன்னார். காலப்போக்கில் எங்கள் யூ.பி தோட்டத்து வாசிகளும் அவரை ‘ராக்’ என்றே அழைத்தார்கள். கையில் புதிதாக போஸ்டர் ஒன்றை சுருட்டி வைத்திருந்த அவரிடமிருந்து தப்பி ஓடியபோது முட்டைக் கண்ணன் கேட்டான், “அந்தப் போஸ்டருல என்னடா இருக்கு?”
***
தொழிற்சாலைகளை எங்களின் தோட்டத்துக்கு அருகில் நிர்மாணிக்கத் தொடங்கிய காலகட்டம் அது. தொழிற்சாலைகளை உருவாக்கப் பயன்படுத்திய பொருட்களில் மீந்திருக்கும் கட்டைகள், பலகைகள், இரும்புகள், கம்பிகள் எனப் பலவித பாகங்கள் அங்கே குப்பைகளாகக் குவிந்து கிடந்தன.
நானும் முட்டைக் கண்ணனும் மினி சைக்கிளில் அங்குதான் சென்றோம். அவனை என் பின்னால் உட்கார வைத்து கொஞ்ச தூரம் மிதித்தேன். என் இடுப்பைப் பிடித்து கொண்டே அமர்ந்திருப்பான். பிறகு அவனும் ஆசைக்குக் கொஞ்ச நேரம் சைக்கிளை மிதித்தான். சைக்கிளை அவன் மிதிக்கும் போது அவனைப் போல நான் பின்னால் அமர்ந்து கொண்டு அவனின் இடுப்பைப் பிடித்துக் கொண்டிருக்க மாட்டேன். கால் பிடியில் ஊன்றி நின்றுக் கொண்டே, அவனின் தோள் பட்டையில் கைவைத்தப்படி சைக்கிளில் பயணிப்பேன். அந்த நேரத்தில் முகத்தில் காற்று உரச, முகம் மழை நீர் பட்டது போல குளிர்ச்சியாக இருக்கும். முட்டைக் கண்ணனுக்கு நின்றபடியே சைக்கிள் பயணிக்கும் தைரியம் கைகூடவில்லை. அவன் பயந்த சுபாவம் உடையவன். செல்லும் வழியில் அவன் அப்பாவையோ, சித்தப்பாவையோ பார்த்து விட்டால் நடுங்கி சைக்கிளை அப்படியே கீழே போட்டுவிட்டு ஓடி ஒளிந்து விடுவான்.
குப்பை குவியலைப் பார்த்ததும் பரவசமாக இருந்தது. என் மனதில் உருவாகியிருந்த குட்டித் தேர் செய்ய தேவையான கட்டைகள், பலகைகள் மற்றும் கம்பிகளைப் பொறுக்கினேன். எல்லாவற்றையும் சேர்த்து முட்டைக் கண்ணன் மூட்டைக் கட்டினான். சைக்கிளின் முன் வக்குளில் பாதியும் என் கையில் மீதியுமாக சுமந்துகொண்டேன். மினி சைக்கிளை அலசியப்படி அவன் மிதிக்க நான் பின்னால் அடக்காக உட்கார்ந்து பலகைகளை இறுக்கப் பிடித்துக்கொண்டேன்.
நாங்கள் இருவரும் அன்றே மாலையில் என் வீட்டின் முன்புறமுள்ள வேப்பமரத்தின் கீழ் தேர் செய்யத் தொடங்கினோம்.
தேரை உருவாக்க கொண்டு வந்த பொருட்களை ஒரு புறம் அடுக்கி வைத்தோம். தேர் செய்ய பயன்படும் சிறியதும் பெரியதுமாக ஆணிகள், சுத்தியல், கை இரம்பம், மணல் துகள்கள் கொண்ட காகிதம் போன்றவற்றை மறுபுறம் வரிசைப்படுத்தினோம். சுத்தியல் மற்றும் கை இரம்பம் என் தாத்தா எனக்காக விட்டு சென்றவை எனப் பாட்டி சொல்வார். என் அப்பாவுக்கு அதன் மேல் நாட்டமில்லை. நான் பிறந்த இரண்டு மாதத்திலேயே என் தாத்தா இறந்து விட்டார். அவர் எனக்குப் போட்ட தங்கச் சங்கிலியை அணிவதைக் காட்டிலும் அவரின் கை இரம்பத்தையும் சுத்தியலையும் நான் அதிகமாக நேசித்தேன்.
என் தாத்தா ஒரு தச்சுத் தொழிலாளி. துண்டு துண்டாக இருக்கும் மரங்களை வெட்டி, செதுக்கி, இணைத்து நாற்காலி, மேசை, ஜன்னல், கதவு, அலமாரி, கட்டில் போன்றவற்றைச் செய்வதில் திறமை பெற்றிருந்தார். சீதனமாகப் பெண் விட்டார் மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பும் கட்டில் கூட அவர் செய்து கொடுத்திருக்கிறார். அந்தக் காலத்தில் என் தாத்தா செய்து கொடுக்கும் கட்டில், சீதனமாக பெற்ற வீட்டுக்காரர்கள் எல்லோரும் அதன் உறுதியைப் புகழ்வார்களாம். எங்கள் யு.பி தோட்டதில் ஶ்ரீ ருத்ர வீரமுத்து மகா மாரியம்மன் ஆலயத்தின் தேர் செய்யும் பணி தொடங்கியபோது, என் தாத்தாவின் திறமையைக் கோவில் நிர்வாகிகள் பயன்படுத்திக் கொண்டனர். அதன் சக்கரத்தை என் தாத்தாதான் தன் இளம் வயதிலேயே வடிவமைத்து, உருவாக்கியும் கொடுத்ததாக என் பாட்டி அடிக்கடி சொல்லிப் பெருமைப்படுவார். அந்தத் தேர் செய்த பிறகுதான் என் பாட்டியை மணமுடித்து இருக்கிறார். எல்லா பாட்டியும் பேய்க் கதை, நரிக் கதை எனப் பேரப் பிள்ளைகளுக்குச் சொல்லி வளர்ப்பார்கள். ஆனால் என் பாட்டி எனக்குத் தினமும் என் தாத்தாவின் தச்சு வேலை கதையைப் மட்டும் தான் சொல்லி தூங்க வைப்பார். என் தாத்தாவின் தச்சு மரபணு என் பாட்டியின் கதைகள் வழியாக எனக்குள் கடத்தப்பட்டிருக்கலாம். அதனால்தான் குட்டித் தேர் செய்யும் ஆசை என்னுள்ளே துளிர் விட்டிருந்தது.
தேர் எனும் வார்த்தை எனக்குப் பாட்டியிடம் இருந்து ஒட்டிக்கொண்டது. எல்லோரும் ‘இரத ஊர்வலத்துக்குப் போகலாம்’, ‘இரதம் பார்க்க போகலாம்’ என்பார்கள். என் பாட்டி மட்டும் அதை தேர் என்பார். அவரிடமிருந்து நானும் தேர் என்றே குறிப்பிடக் கற்றுக் கொண்டேன். முட்டைக் கண்ணனும் என்னைத் தொடர்ந்து தேர் என்றே குறிப்பிடத் தொடங்கினான்.
என் தச்சன் தாத்தாவை மனதில் நினைத்து உருள் கட்டையைத் தொட்டு கும்பிட்டேன். கையில் எடுத்து முத்தமிட்டேன். முட்டைக் கண்ணன் என்னை ஆச்சரியமாகப் பார்த்தான். அதன் பிறகு தேர் செய்யத் தொடங்கினேன். முட்டைக் கண்ணன் எனக்கு உதவினான்.
ஐம்பது சென்டி மீட்டர் அளவில் நீண்ட உருள் வடிவக் கட்டையை நான்கு துண்டுகளாக கை இரம்பத்தால் அறுத்தேன். மணல் துகள்கள் கொண்ட காகிதத்தைக் கொண்டு அந்த உருள் கட்டைகளை நன்றாக இருவரும் மாறி மாறித் தேய்தோம். கட்டைகள் வழவழப்பாக மாறி விட்டன. இருபத்தைந்துக்கு இருபத்தைந்து சென்டி மீட்டர் என அளவுகோல் கொண்டு பலகையில் கோடு போட்டோம். ஒரே பரப்பளவில் எங்களுக்கு இரண்டு பலகைகள் தேவைப்பட்டன. ஒரே பரப்பளவில் பலகையைக் கைரம்பத்தால் அறுத்து முடித்த போது இருட்டிவிட்டது. இன்றோடு இது போதும். நாளை தொடரலாம் என இருவரும் கட்டைகளை என் வீட்டின் பின் புறம் மறைத்து வைத்தோம்.
ஒவ்வொரு நாளும் எங்கள் பணிகள் தொடர்ந்தன. பள்ளி முடிந்ததுமே வேலையைத் தொடங்கினோம். ஒவ்வொரு உருள் கட்டைகளையும், பலகையின் ஒவ்வொரு ஓரத்தில் வைத்து இரண்டு சென்டி மீட்டர் ஆணியை மூன்று மூன்றாக அடித்தோம். அது சவாலான வேலைதான். முட்டைக் கண்ணன் பலகையையும் உருள் கட்டையையும் ஒன்றாக இறுக்கிப் பிடித்து கொண்டான். நான் மெதுமெதுவாக ஆணியை அடித்தேன். அவன் பிடியைத் தளர்த்தியிருந்தால் அந்தப் பலகை உடைந்திருக்கும். நான் சுத்தியலைச் சரியாக பிடித்திருக்காவிட்டாலோ என் கவனம் சிதறி இருந்தாலோ அவன் கையில் ஆணி இறங்கி இருக்கும். நிற்க வைத்து அளவும், அழகும் பார்த்தோம். கோணல் ஏதும் இல்லாமல் ஒரு கூடாரம் போல கம்பீரமாக நின்றது தேரின் உடல். இன்னும் சக்கரமாக கால்கள் வைக்க வேண்டும். மேல் பகுதியில் கோபுரமாகத் தலை வைக்க வேண்டும். தேரில் ஒரு மனித உருவம் ஒளிந்திருப்பது தேர் செய்யத் தொடங்கி மூன்றாம் நாள்தான் எனக்குத் தெரிந்தது.
பால் மாவு டின்னின் மூடியை வைத்து சக்கரம் செய்யலாம் என முட்டைக் கண்ணன் பரிந்துரைத்தான். நல்ல திட்டம்தான். ஆனால், டின் மூடி நுனிப் பகுதி கூராக இருக்கும். தேர் பாய்மரக் கப்பல் போல காற்றுக்கு இசைந்து நகர வாய்ப்புண்டு. டின் பகுதியை ஒரு சென்டி மீட்டர் தடிமனாக அளந்து வெட்டினால் சக்கரம் போல உறுதியாக நிற்கும். டின்னின் உள்பகுதியில் சிமென்ட்டை கொண்டு நிரப்பினால் சக்கரம் காலத்துக்கும் தாங்கும். ஒரே அளவிலான டின்னை தேட வேண்டும். இல்லாவிட்டால் தேர் குடை சாய்ந்து விடும். ஒரு வாரமாக ஒவ்வொரு குப்பைத் தொட்டியாகத் தேடினோம். நாங்கள் தேர் செய்ய உதிரிப் பாகங்கள் தேடும் வழியில் எப்படியாவது ராக் அண்ணன் எதிரே வந்து நிற்பார். வேலை வெட்டி என்று போனால் தானே. நாய் சாப் பீர் பாட்டிலை ஏந்தியிருந்தக் கையில் கொஞ்ச நாளாக போஸ்டர் ஒன்றை வைத்திருந்தார்.
நான்கு பால் மாவு டின்கள் கிடைத்து விட்டன. டின்னின் கீழ் பகுதியில் அளந்து கோடு போட்டோம். கத்தியைச் சொருகி மெது மெதுவாக வெட்டினேன். முட்டைக் கண்ணன் வழக்கம் போல கவனமாக பிடித்துக் கொண்டான். டின் சக்கரமாக உருவாகி விட்டப் பிறகு நடுவில் புள்ளி வைத்தேன். நான் வைத்த புள்ளியின் வழியாக கொடை ஆணியால் ஓட்டைப் போட்டேன். தொழிற்சாலைகள் கட்டுமானப் பணிகள் நடக்கும் இடத்தில் இந்தோனேசியாக்காரன் ஒருவன் சிமெண்ட்டைக் குழப்பிக் கொண்டிருப்பான். ஒரு ரிங்கிட் கொடுத்தால் ஒரு சிவப்பு பிளாஸ்டிக் பை நிறைய குழப்பிய சிமெண்ட்டை திருட்டுத் தனமாகக் கொடுப்பான். தோட்டத்து மக்கள் அவனிடம் சிமெண்ட் வாங்கி வந்து வீட்டிலுள்ள ஓட்டைகளை மூடுவார்கள். அவனிடம் நாங்கள் சிமெண்ட் கேட்டதும் கொடுத்தான். எங்களிடம் பணம் வாங்க மறுத்து விட்டான்.
டின் சக்கரத்தில் சிமெண்ட் நன்றாக காய்ந்தப் பின், தேரின் கீழ்ப் பகுதியில் பதமாக குடை ஆணியை இறக்கினேன். முட்டைக் கண்ணன் தேரின் உடலைப் படுக்க வைத்துப் பிடித்துக் கொண்டான். நான்கு சக்கரமும் எந்த வித கோளாறும் செய்யாமல் சரியாகப் பொருந்தி விட்டன. குடை ஆணி அச்சாணியானது. சக்கரம் தேரின் உள்பகுதியில் போய் உரசாமல் இருக்க இடையில் கம்பி வைத்துக் கட்டினேன். முட்டைக் கண்ணனை நோக்கித் தேரைத் தள்ளினேன். அவனும் என்னை நோக்கித் தள்ளினான். தேர் நன்றாக உருண்டு சென்று வந்தது.
எல்லாமே என் தச்சன் தாத்தாவின் ஆசீர்வாதம். உடலுக்குக் கால்கள் பொருத்தி விட்டோம். தலை தான் பெரிய சவாலாக இருக்கப் போவதாகத் தோன்றியது.
தேர் கோபுரத்தைத் தனியாக செய்த பிறகுதான் பொறுத்த வேண்டும். என் பாடநூலில் எகிப்து நாட்டின் பிரமிடு படம் ஒன்றைப் பார்த்திருக்கிறேன். அந்த மாதிரி பெரிய பலகைகளைக் கீழிருந்து, சிறியப் பலகைகளாகக் குறைத்துக் கொண்டே மேல் நோக்கிப் போக வேண்டும். அவ்வாறு செய்தால் தேர் கோபுரம் மேல் நோக்கி கூராக சுருங்கியபடி காட்சி அளிக்கும். எங்கள் தோட்டத்து கோவில் தேரின் கோபுரம் கொட்டாங்குச்சி மாதிரியான அமைப்பைக் கொண்டிருக்கும். அதே மாதிரி கோபுரம் செய்ய மூங்கிலைக் கூடை மாதிரி வளைத்துப் பின்ன வேண்டும். சிறிய வகையான மூங்கிலை இனித் தேடத் தொடங்க வேண்டும் என முடிவெடுத்துக்கொண்டேன்.
என் முன்னே முட்டைக் கண்ணன் வந்து நின்றான். கொட்டாங்குச்சி ஒன்றை எடுத்து காட்டினான். தேரின் தலைப் பகுதியில் கொட்டாங்குச்சியைக் கவிழ்த்து விடலாம். கொட்டாங்குச்சியின் உச்சியில் ஆணி அடித்து ஓட்டைப் போட்டு விடலாம். அருங்கம் புல்லை அதன் மேல் சொருகி விடலாம். பார்ப்பதற்கு நம் ஊர் தேர் மாதிரியே இருக்கும் என்றான். ஆனால் அந்தக் கொட்டாங்குச்சியை நன்றாக மஞ்சள் நீர் ஊற்றி கழுவ வேண்டும் என இழுத்தான்.
“ஏன்டா முட்ட…” என்றேன்.
“அதுலதான் அந்தப் பொடியனுங்க கம்பத்து கோழி முட்டையப் பொரிச்சிருக்கானுங்க… கருகிப் போச்சுன்னு தூக்கிப் போட்டானுங்க…”
தீட்டுப்பட்டக் கொட்டாங்குச்சியை மஞ்சள் நீர் ஊற்றிக் கழுவினோம். தீட்டுக் கழிக்க மஞ்சள் நீரில் இரவு முழுவதுமாக ஊறவும் வைத்தோம்.
இருபத்தைந்துக்கு இருபத்தைந்து தேரின் மேல் பகுதி என்பதால், அதற்கு மேல் இருபதுக்கு இருபது சென்டி மீட்டர் அளவிலும், அதற்கு மேல் பதினைந்துக்குப் பதினைந்து என்ற அளவிலும், அதற்கு மேலே பத்துக்கு பத்து சென்டி மீட்டர் அளவிலும் கொஞ்சம் பருமனானப் பலகையை வெட்டி ஒட்ட வேண்டும். கட்டைகளை ஒட்டவைக்கும் பிரத்தியேகமானப் பசை தேவைப்படும். உச்சியில் கொட்டாங்குச்சியை வைக்க வேண்டும். கொட்டாங்குச்சியின் நான்கு பக்கத்திலும் சிறிய வகை ஆணியை அடித்து ஆடாமால் இருக்க செய்து விடலாம். அந்தச் சிறிய ஆணியின் மேல் பகுதியில் காகிதப் பூக்கள் மாலையைக் கொண்டு அலங்கரிக்கலாம். ஆணியின் மேல் பகுதியும் மறைந்து விடும். மனதில் கணக்குப் போட்டுப் பார்த்தேன்.
***
பொதுவாகவே திருவிழா காலங்களில் மதியம்தான் தேர் சுங்கை பட்டாணி நகரை வலம் வரப் புறப்படும். ஶ்ரீ சித்தி விநாயகர் கோவிலுக்குச் சென்ற பிறகே, ஶ்ரீ சுப்பிரமணிய தேவஸ்தானம் நோக்கிச் செல்லும்.
சைனா டவுன் என நாங்கள் அழைக்கும் பெக்கான் லாமா பகுதியின் சாலையில் தேர் செல்லும் வழி நெடுக கடை வைத்திருக்கும் சீனர்கள் அர்ச்சனை செய்யத் தட்டைச் சுமந்துகொண்டு குடும்பத்தோடு நிற்பார்கள். சிலர் சாலையோரத்தில் காரை நிறுத்தி விட்டு தேரைத் தரிசிக்க காத்திருப்பார்கள். யார் எங்கு அர்ச்சனை செய்ய தட்டோடு நின்றாலும் தேர் நின்று ஆசிர்வதித்து செல்லும். சீனப் பள்ளி மாணவர்களைச் சுமந்து செல்லும் பேருந்து ஊர்வலத்தின் எதிரே வரும். சீன மாணவர்கள் பேருந்தின் வெளியே கைக்கூப்பி அவர்கள் பாணியில் இரண்டு கைவிரல்களையும் ஒன்றோடு ஒன்றாக இணைத்து ஆட்டி ஆட்டி வணங்குவார்கள். தேருக்கு அவர்கள் தரும் மரியாதை என்னைப் பரவசப்படுத்தும். என் குட்டித் தேருக்கும் மரியாதை தருவார்களா என்றொரு ஆசை தோன்றும். ஆனால் முட்டைக் கண்ணன் வேறு ஓர் ஆசையை என்னிடம் பகிர்ந்திருக்கிறான்.

குட்டித் தேர் வேலை முடிந்த பின், அவனின் அப்பாவிடம் காட்டி, நாங்கள் இருவரும் வளர்ந்த பிறகு தேரை அலங்காரம் செய்யும் வேலையை எங்களிடமே கொடுத்து விடும்படி கேட்க போவதாகச் சொல்லியிருந்தான்.
திருவிழா தொடங்கும்போது என் பாட்டி தேரின் பின்புறப் பகுதியைத் தள்ளியப் படியே ஊர்வலம் முடிவுறும் வரை போய் வருவார். தாத்தா செய்த சக்கரம் என்பதால், ஒருமுறை நானும் உரிமை எடுத்து கொண்டு, ஊர்வலத்தின் போது சக்கரத்தின் அச்சாணியின் முன் கொஞ்சம் நீண்டுள்ள இரும்புக் கம்பியைப் பிடித்தப்படி தேரைத் தள்ளினேன். பின்னாலிருந்து டைனசோர் குரலில் “டேய் எடுடா கைய…” என ஒருவன் கத்தினான். திரும்பிப் பார்த்தேன். ஜென் செட்டை சுமந்து வந்த லாரி ஓட்டுனர். அவர் தலையைக் கண்ணாடிக்கு வெளியே நீட்டி, “கையி போணுமாடா…” என்றார். நானும் கையை எடுத்து விட்டு தேருக்கு முன் சென்றேன். அந்தப் பகுதி முழுவதும் என் உயிர் நண்பன் முட்டைக் கண்ணன் ஆக்கிரமிப்பின் கீழ் இயங்கியது. முட்டைக் கண்ணனின் அப்பாவின் பெயர் முனியாண்டி. எல்லோரும் டிராக்டர் டிரைவர் என்றே அழைப்பார்கள்.
குலுங்கும் டிராக்டரின் இயந்திரப் பகுதியின் மேல் முட்டைக் கண்ணன் மினுக்கும் ஜிப்பா சட்டையில் கம்பீரமாக குழுங்கியப்படி அமர்ந்திருப்பான். என்னைப் பார்த்து “டேய் குமாரு… இருடா நானும் வரேன்…” என்று கையசைப்பான்.
பக்தர்கள் தேரில் அர்ச்சனை செய்ய தாம்பூல தட்டில், ஒரு சீப்பு வாழைப்பழம், வீட்டு சாமி விளக்கு, முழுத் தேங்காய், பாக்கு வெற்றிலையும் அதன் மேல் தட்சணைப் பணமும் பூ மாலையும் அடுக்கப்பட்டிருக்கும். தேருக்கு முன்னே வெட்டுக் கத்தியுடன் ஓடும் தாத்தா ஒவ்வொரு அர்ச்சனை தட்டிலிருக்கும் முழுத் தேங்காயை ஒரே வெட்டில் பாதியாக உடைத்து வைப்பார். குடுமியை விசிறி விடுவார். வெற்றிலை பாக்கோடு சேர்ந்திருக்கும் தட்சணையை எடுத்து தோள் பையில் போட்டு விடுவார். ஒரு வெள்ளி இருபத்து ஐந்து காசு பெரும்பாலும் இருக்கும். பணக்கார குடும்பங்கள் மட்டுமே பச்சை, சிவப்பில் தட்சணை வைப்பார்கள். தாம்பூலத் தட்டைத் தேரில் அமர்ந்திருக்கும் பூசாரியிடம் கொடுத்து அர்ச்சனை செய்த பிறகு, கைக்குழந்தைகளைப் பெற்றோர்கள் தேரின் மேலிருக்கும் பூசாரியிடம் தூக்கிக் கொடுப்பார்கள். பூசாரியும் இரு கைகளில் ஏந்தி, தேரில் அமர்ந்திருக்கும் அம்மன் முகத்தின் அருகில் காட்டி விட்டு, திருநீறும் பூசிவிட்டு கீழே கொடுப்பார். இந்தக் குழந்தை ஆசிப் பெறும் சடங்கின் போது கடும் போட்டியோடு தள்ளு முள்ளும் நடக்கும். முட்டைக் கண்ணனின் அப்பா “கொஞ்சம் பொறுமையாதான் வாங்களேண்டா…” எனக் கத்தியப் பிறகு அனைவரும் வரிசையாக குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு வருவார்கள். மீண்டும் வரிசை களைந்து தள்ளு முள்ளு தொடரும்.
மூட்டை முழுவதும் தேங்காய்கள் அடுக்கப்படிருக்கும். தேர் நிற்கும் போதும் மூட்டையிலிருந்து தேங்காயை என்னுடன் போட்டி போட்டு உடைக்கும் போதும் மட்டுமே முட்டைக் கண்ணன் கீழே இறங்குவான். தேர் கிளம்பும் சத்தத்தைக் கேட்டவுடனே எகிறிக் குதித்து நொடிப்பொழுதில் டிராக்டர் இஞ்சின் மேல் அமர்ந்திருப்பான்.
“அடுத்த யு.பி கோயில் டிராக்டர் வாரிசு நீதாண்டா…”
“போடா வெண்ணெ…! எனக்கு அந்த ஓட்ட டிராக்டரே வேணாம்…” என்பான்.
வருடத்திற்கு ஒருமுறை தீமிதி திருவிழாவில் வலம் வரும் தேர் ஏன் அன்றாடம் வலம் வரக் கூடாது என என்னுள்ளே ஒரு கேள்வி உருவானது. நாமே ஒரு குட்டித் தேரை உருவாக்க வேண்டும் என முட்டைக் கண்ணனிடம் பேச்சு வாக்கில் சொன்னேன். “செய்யலாம் நானும் ஒதவுறேன்” என பதில் கூறினான் முட்டைக் கண்ணன். இருவரின் குடும்பப் பின்னணியும் கோயில் தேரோடு தொடர்புடையதால் வேலைகளை உடனே தொடங்கி விட்டோம்.
***
நாங்கள் தேர் செய்ததைப் பார்த்து விட்ட பொடிப்பையன்கள் அந்தத் தேரைப் பார்க்க ஆவலாக இருக்கிறார்கள்.
“எப்பண்ண ரதம் ரடியாகும்…” என என்னை எங்குப் பார்த்தாலும் கேட்டனர். அவர்கள் கேட்க கேட்க நாங்கள் வேப்ப மரத்தின் கீழ் தேர் செய்வதைப் படிப் படியாக குறைத்தோம். என் வீட்டுப் பின்புறம், முட்டைக் கண்ணன் வீட்டுப் பின்புறம் என இடம் மாற்றி மாற்றிச் செய்யத் தொடங்கினோம். தேர் தயாரானப் பிறகு அந்தப் பொடியன்களை எல்லாம் அழைத்துதான் திறப்பு விழா செய்ய வேண்டும் என நானும் முட்டைக் கண்ணனும் பேசிக் கொண்டோம்.
“பெரியத் தேர் போலவே மின் விளக்குகளால் அலங்கரித்தால் நன்றாக இருக்கும்” என்றேன்.
“மெந்தோல் பல்பு ஒண்ணு கோபுரத்துலே குத்தி வைக்காலம்னு நினைச்சேன். நீயே அத சொல்லிட்ட…” என்றான்.
“அப்படியே கலர் கலர் எல்.இ.டி லைட்டிங் கோபுரத்த சுத்தி போட்டா நெருப்பா இருக்கும். நாலஞ்சு பேட்டரி வாங்கணும்” என்றேன்.
அவன் சட்டைப்பயிலிருந்து கேசரித் துண்டு மாதிரி ஒன்றை எடுத்து என்னிடம் நீட்டீனான்.
“என்னாடா பேட்டரி கேசரி மாதிரி இருக்கு…” என்றேன்.
“ஆமாடா. இது கேசரி பேட்டரி தான். நக்கிப் பாரு இனிக்கும்…” என்றான்.
நானும் அந்தப் பேட்டரியின் மேல் பகுதியை நாவால் தீண்டினேன். உச்சி மண்டை வரை சுருக்கக்கென்று வலி ஏறியது. ஊசியால் நுனி நாக்கைக் குத்தியது போன்ற வலித்தது.
“உன்னையே லேசதாண்டா தொடச் சொன்னென். நீ ஏன்டா, நக்கன…. இது பவர் பேட்டரிடா. தேர்ல எல்லா பல்பையும் இது ஒன்னா எரிய வைக்கும்.” என்று முட்டைக் கண் பிதுங்க சிரித்தான்.
எல். இ. டி விளக்குகளைப் பொருத்த தொடங்கினோம். சீனக் கடையில் தூக்கி எரிந்த கோத்தா அட்டை ஒன்றை எடுத்து வந்திருந்தேன். பென்சிலில் புள்ளிகள் வைத்தப்படியே ‘ஓம் சக்தி’ என எழுதி ஓட்டைப் போட்டேன். அந்த ஒவ்வொரு ஓட்டையிலும் சிவப்பு வர்ண எல்.இ.டி பல்புகளை நுழைத்தேன். பின் புறத்திலுள்ள அலுமினியக் கம்பியைச் சூட்டிணைப்பு செய்து இணைத்தேன். ‘ஓம் சக்தி’ அழகாக மின்னியது.
தீமிதி பத்திரிகையிலிருந்த அம்மன் படத்தை முட்டைக் கண்ணன் வெட்டி எடுத்து வந்தான். அதை பாலிஃபோமில் ஒட்டினோம். பிறகு பாலிஃபோமை அம்மன் படத்தின் ஓரத்திலேயே கத்தரித்தோம். புகைப்படம் சிலையாக மாறிவிட்டது. நாங்கள் இருவரும் ஒன்றாக மகிழ்ந்தோம். அன்றைய நாளில் தேரை வீட்டிற்கு எடுத்து செல்லும் முறை முட்டைக் கண்ணனுடையது.
தேருக்கு இன்னும் தலை ஒட்டாமல் இருந்தது. அந்த நுட்பம் இன்னும் கைவராமல் போகவே மீண்டும் கொட்டகையில் அடைக்கப்பட்டுள்ள தேரைப் பார்க்கும் எண்ணம் எழுந்தது. நான் தனியாக கோயில் வளாகம் சென்றபோது ரோக் அண்ணன் அருகில் இருந்த சிமெண்டு தரையில் போதையில் தூங்கிக்கொண்டிருந்தார். அவர் கையில் அந்த போஸ்டர் இருந்தது.
ஒரு ரிங்கிட் கொடுத்தால் மட்டுமே அந்த போஸ்டரை திறந்து காட்டுவார் என பரவலாக அறியப்பட்டிருந்தது. ஆனால் தொடக்கூடாது. தொட்டுப் பார்க்க மேலும் ஒரு ரிங்கிட். அந்த போஸ்டரை வைத்தே அவரின் அன்றாட உணவுத் தேவையைப் பூர்த்தி செய்தார். முன்பெல்லாம் கால்வாய் சுத்தம் செய்யவும், புல் வெட்டவும் அவரை அழைப்பார்கள். ஒரு ரிங்கிட் கொடுத்தால், மேலோட்டமாக கால்வாயின் அருகிலிருந்தே சுத்தம் செய்வார். இரண்டு ரிங்கிட் கொடுத்தால், கால்வாயில் இறங்கி தூர் வாருவது போலவே சுத்தம் செய்வார். மற்ற நேரம் கல்லுக் கடையே கதி என்றிருப்பார். உருள் கட்டையைப் போல அந்த போஸ்டர் கிடைத்தப் பின் கால்வாய் சுத்தம் செய்ய யார் அழைத்தாலும் வருவதில்லை.
நானும் முட்டைக் கண்ணனும் குட்டித் தேர் செய்ய காட்டுப் பகுதியில் அலையும் போது கல்லுக் கடைப் பக்கமாக எட்டிப் பார்த்திருக்கிறோம். நான்கைந்து பேர் கொண்ட வரிசையில் நின்றிருப்பார்கள். சற்றுத் தள்ளிப் பெரிய அரச மரம் ஒன்றிருக்கும். ஒருவர் முடிந்து ஒருவராக அழைப்பார். சுருட்டி இருக்கும் அந்த போஸ்டரைத் திறந்து காட்டுவார். நாங்கள் மறைந்திருக்கும் இடத்திலிருந்து பார்த்தால், போஸ்டரை உற்றுப் பார்க்கும் நபர்களின் கண்கள் நொடிப்பொழுதில் முட்டையாக விரிவடையும். போஸ்டரை அந்த அண்ணன் மீண்டும் சுருட்டியதும் அவர்களின் கண்கள் சுருங்கி விடும்.
“நீ குடுத்து வச்சவன் டா. போஸ்டரை பார்க்காமயே உன்னோட கண்ணு முட்டையா இருக்கு….” என்பேன்.
“உன்னைய நல்லா கேட்பண்டா…” என்பான்.
இவ்வாறான நாட்களில் ஒரு நாள் நாங்கள் காட்டுக்குள் போவதைப் பார்த்த ராக் அண்ணன் அழைத்தார். கல்லுக் கடையில் போதையில் நண்பர்களோடு அமர்ந்திருந்தார். ராக் அண்ணனின் கைப்பிடியில் அந்த போஸ்டர் ஓய்வாக சுருண்டு இருந்தது.
“டேய் இங்க வாங்கடா…” என்று திருடனை மிரட்டும் தொனியில் எங்களை மீண்டும் அழைத்தார். ஒவ்வொரு அடியாக அளந்து வைத்துக் கொண்டே அவர் அருகில் சென்றோம். அருகில் செல்லச் செல்ல வீசிய துர் நாற்றத்தால் குமட்டல் ஏற்பட்டது. ஆனால் ராக் அண்ணன் பொரித்த மீனைப் பிய்த்துப் பிய்த்து வாயில் தினித்து சுவைத்துக் கொண்டிருந்தார்.
“நீ டிரைவர் முனியாண்டி மவன்தானே…?”
முட்டைக் கண்ணன் பயத்தில் நடுங்கினான். அவனைப் பார்த்ததும் எனக்கும் பயம் ஒட்டிக் கொண்டது.
“நான் ஒன்னு கேட்பேன். நீங்க சரியா சொல்லிட்டிங்கனா, உன் சித்தப்பாக்கிட்ட உன்னைய இங்க பார்த்ததா சொல்ல மாட்டேன்… இல்லாட்டினா…”
முட்டைக் கண்ணன் திக்கித் திணறியப்படி, “சொ….சொ…சொல்லுங்க அங்கிள்” என்றான். என் பார்வை அவரின் கைப்பிடியிலிருந்த போஸ்டரில் என்ன படம் இருக்கும் என்றே போனது. தி ராக் படம் தான் அந்தச் சுவற்றில் ஒட்டியுள்ளாரே. இதை மட்டும் சுருட்டி வைத்து ஏன் பணம் கொடுத்தால் திறந்து காட்டுகிறார். பலக் கேள்விகள் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தன.
“மீனுக்குக் குஞ்சி இருக்கா… இல்லையா…” என்று கேட்டார் ராக் அண்ணன். கூட இருந்தவர்கள் அனைவரும் சிரித்தார்கள்.
“கண்ணாடி குஞ்சு மீன் தெரியும்… ஆனா…” முட்டைக் கண்ணன் இழுத்தான்.
“இருக்கா இல்லையாடா…” ராக் அண்ணனின் பார்வை என்னை நோக்கியது.
“நாளைக்கு எங்க டீச்சர் கிட்ட கேட்டு சொல்றோம் அங்கிள்…. டூஷனுக்கு மணியாச்சு…” என்றேன்.
“நாளைக்கு வந்து சொல்லலைனா நானே வந்து உங்க டீச்சர் கிட்ட கேட்பேன்… இப்ப நீங்க ஓடுங்க…” என்றார்.
நான் அந்த போஸ்டரை எடுத்து கொண்டு ஓடி விட்டேன். அதைக் குழித் தோண்டி புதைத்தும் வைத்து விட்டேன். முட்டைக் கண்ணனைத் தேர் கோபுரம் செய்ய எனக்கொரு கட்டைக் கிடைத்ததாக கூறி அழைத்து வந்தேன். அவனும் ஆர்வமாக வந்தான். அந்த போஸ்டரை எனக்குத் தனியே பிரித்து பார்க்க துணிவில்லையா, அல்லது அவனோடு சேர்ந்து பார்க்க வேண்டும் என்ற நட்பின் ஆழமா எனத் தெரியவில்லை. இந்த போஸ்டரை முட்டைக் கண்ணன் பார்த்தால், அவன் கண்கள் மேலும் பெரிதாகுமோ என்றொரு ஆர்வம் எனக்கிருந்தது.
காட்டுக்குள் சென்றோம். நான் வைத்த எக்ஸ் அடையாளத்தின் கீழ் குழியைத் தோண்டினேன். முட்டைக் கண்ணன் ஆச்சரியமாகப் பார்த்தான். குப்பைப் பையில் சுருட்டி வைத்திருந்த போஸ்டரை வெளியே எடுத்தேன். ‘திறந்திடு சீசே’ என்று குனிந்தப்படி அவனிடம் நீட்டினேன். அவனும் சிரித்து கொண்டே பெற்றுக் கொண்டான். இருவரும் ஆர்வமானோம். அவன் சேர்ந்தே திறக்கலாம் என்றான். திறக்கும் போது நெஞ்சு அதிகமாக அதிர்ந்தது.
முட்டைக் கண்ணன் அலறினான். எனக்கும் முதுகில் பலத்த அடி. திரும்பிப் பார்த்தோம். அந்த ராக் அண்ணன் போஸ்டரை எங்களிடமிருந்து பிடுங்கினார். அவர் அருகில் முட்டைக் கண்ணனின் சித்தப்பாவும் முறைத்து கொண்டு எங்களைத் தாக்கவந்தார்.
“இவன் தான் அங்கிள்… எடுத்து வந்து, என்னையெ கூப்டு வந்தான்…” திக்கித் திணறிய என் வாய் பொய் சொன்னது. முட்டைக் கண்ணன் என்னைத் திகைப்புடன் பார்த்தான். அவன் ஒன்றும் பேசவில்லை. ஆனால் கண்களில் கண்ணீர் வடிவதைப் பார்த்தேன்.
முட்டைக் கண்ணனின் சட்டையப் பிடித்து இழுத்துக் கொண்டே அவனது சித்தப்பா சென்றார். முட்டைக் கண்ணனின் கண்கள் இரண்டும் அன்றுதான் சுருங்கி இருந்ததைப் பார்த்தேன். என்னை நோக்கியப்படியே எந்த உணர்ச்சிகளையும் காட்டாமலே ‘பௌஸ்’ பட்டன் தட்டப்பட்ட வீடியோ படம் போலவே அவன் என் முன்னிருந்து சுருங்கி மறைந்தான்.
நான் வீடு சென்று சேரும் முன்பே, போஸ்டர் கதை வீடு சென்று சேர்ந்துவிட்டது. என் வீட்டில் என்னை மிரட்டி, “இனி அவன் கூட உன்னையப் பார்த்தேன்…” அப்பா மருள் வராமலேயே, நாக்கை நீட்டீ சுருட்டியப்படி சொன்னார். குட்டித் தேர் முட்டைக் கண்ணனிடம் உள்ளது. அதை மீண்டும் எப்படிப் பார்ப்பது என்பதை விட, அவனை எப்படியெல்லாம் அடிப்பார் அவன் அப்பா டிரைவர் முனியாண்டி என்ற எண்ணமே நோகடித்தது. அவனோடு சேர்த்து தேரையும் உடைத்து விடுவாரோ எனப் பதைத்தது.
மறுநாள், என்னிடம் அடிக்கடி ‘தேர் எப்பண்ண சியாப் ஆகும்’ என ஆர்வ கோளாறினால் நச்சரிக்கும் பொடிப் பையனைப் பிடித்தேன். அப்படியே தூக்கிக் கொண்டு மறைவான இடத்திற்குச் சென்றேன். அவன் முட்டைக் கண்ணனின் பக்கத்து வீட்டுக்காரன்.
“ராத்திரியெல்லாம், முட்டை அண்ணே கத்திக் கத்தியும், தேம்பித் தேம்பியும் அழுவும் சத்தம் தான் கேட்டுச்சு. எங்க அப்பா அந்தத் திருட்டுக் கண்ணக் கூட சேர வேணாம்னு சொன்னாங்க. சேந்தையா, அவனைப் போல உன்னையும் தலைகீழக் கட்டித் தொங்க விட்டு, காஞ்ச மோளகா கொழுத்தி விட்டுறுவேன்னாங்க,” அவன் சொல்லி முடிக்கும் போது என்னை அறியாமால் கண்களில் கண்ணீர் வடிந்தது.
காலம் செல்லச் செல்ல நான் அனைத்தையும் மறந்து விட்டிருந்தேன். முட்டைக் கண்ணன் மலாக்காவில் இருக்கும் அவனது மாமா வீட்டுக்கு அனுப்பப்பட்டான். எனக்கு சிங்கப்பூரில் வேலையும் கிடைத்து விட்டது. ஆயினும் யு.பி தோட்டம் பற்றி உறவினர்களிடம் விசாரிப்பேன்.
எனக்குப் பெண் குழந்தைப் பிறந்த சமயம்தான் திருவிழாவுக்குச் செல்ல பல ஆண்டுகளுக்குப் பின் முடிவெடுத்தேன். குழந்தையை அம்மன் முன் போடுவதாக என் அம்மா வேண்டிக் கொண்டார்களாம். அந்தத் தோட்டத்து அம்மன் கொடுத்த குழந்தைதான் எனக்குப் பிறந்தக் குழந்தை என்றார். வழக்கம் போல வியாழக்கிழமையே தேர் ஊர்வலம். ஆனால் முன்பு போல சாலையில் எல்லா இடத்திலும் தீபாராதனைத் தட்டை வைத்து அர்ச்சனை செய்ய முடியாதாம். தோட்டத்தில் மக்கள் எல்லோரும் வெளியேறி விட்டதால் அந்தப் பக்கம் தேர் செல்லாதாம். குழந்தைகளைத் தேரில் வாங்கி காட்டும் சடங்குப் பாதுகாப்பைக் காரணமாகக் காட்டி கடைப்பிடிக்கத் தடை விதித்து விட்டார்களாம்.
பல வர்ணங்களில் மின் விளக்குகள் மின்னிய அதே பிரம்மாண்டமானப் பழையத் தேரை நோக்கினேன். தேரை ஓட்டுவது என் நண்பன் முட்டைக் கண்ணனாக இருக்க வேண்டும் என்றே வேண்டினேன். ஆனால் வேறு யாரோ ஓட்டினார். என் மகளைக் காட்டி அர்ச்சனை செய்ய முடியாதது பெரும் ஏமாற்றமாக இருந்தது. பெருஞ்சோர்வில் காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டபோதுதான் முட்டைக் கண்ணன் வீடு தெரிந்தது.
வீடு அப்படியே இருந்தது. முன் வாசல் கதவு மட்டும் இல்லை. உள்ளே நுழைந்து பார்த்தேன். பதற்றம் தொற்றியது. பழைய வாசம். மனைவி “புள்ளைய அங்கெல்லாம் தூக்கிப்போக வேணாம்” என எச்சரித்தாள். நான் கேட்கவில்லை.
கொஞ்சம் சாமான்களை அப்படியே விட்டு போயிருக்கிறார்கள். அலமாரி, நாற்காலி, மேசை எல்லாம் தலைகீழாகக் கிடந்ததன. என் உள்ளுணர்வு எதையோ சொல்ல கால்கள் ஓர் அறை நோக்கிச் சென்றது. அதன் மூலையில் அட்டைப் பெட்டி ஒன்றிருந்தது. மனம் நடுங்கியது. திறந்து பார்த்தேன். தூசு பறந்தது.
“புள்ளைக்கு ஒத்துக்காது” என மனைவி பிள்ளையை ஓடிவந்து வாங்கிக்கொண்டாள். பெட்டியைத் தூக்கினேன். தூசியும் ஒட்டடையுமாக சூழ்ந்திருந்தது. எட்டுக் கால் பூச்சிகள் ஆங்காங்கே ஓடின. பெட்டியைத் தரையில் வைத்தேன். என் கால்சட்டையில் ஒட்டடையும், தூசும் நூல் ஒட்டியது போல ஒட்டிக்கொண்டன. தும்பிக் கொண்டே என் கைக்குட்டையால் துடைத்தேன்.
“பைத்தியமா ஒனக்கு,” மனைவி கடிந்தாள்.
பெட்டியைப் பிரித்தேன். தேர் வெளிப்பட்டது.
எல்.இ.டி’யில் நான் செய்த ‘ஓம் சக்தி’ எழுத்துகள் கொட்டிப் போன பற்கள் போல இருந்தன. நான் பாதியில் விட்டுச்சென்ற தேரில் கொட்டாங்குச்சி கோபுரம் பெருத்தபட்டிருந்தது. குழந்தையை மனைவியின் கையிலிருந்து வாங்கி அந்தத் தேரின் அருகில் நீட்டிக்காட்டினேன்.
மனைவி பதறினாள். மகள் சிரித்தாள். முட்டைக் கண்ணன் என்னை மன்னித்து விட்டிருப்பான் என எண்ணிக் கொண்டேன்.
