அ. முத்துலிங்கத்தின் சிறுகதைகள்

“ஃப்ராங்க் ம்கோர்ட் (Frank McCourt) என்ற பிரபலமான அமெரிக்க எழுத்தாளரிடம் நான் கேட்டிருக்கிறேன். ‘நீங்கள் எப்படி எளிமையாக, அதே சமயம் நுட்பமாக புதிய பார்வையில் எழுதுகிறீர்கள்?’ என்று. அவர் சொன்னார் ‘நான் ஒரு கதை சொல்லி. எப்படி கதை சொன்னால் அது வாசகர்களுக்கு போய்ச் சேரும் என்ற நுட்பத்தை தெரிந்து வைத்திருக்கிறேன்.’ என தனது பேட்டியில் அ. முத்துலிங்கம் குறிபட்டதுண்டு.

ஒரு எழுத்தாளருக்கும் ஒரு கதைசொல்லிக்கும் இடையில் உண்மையில் எவ்வளவு பெரிய வித்தியாசம் இருக்க முடியும்? ஒரு கதைசொல்லி நிகழ்வுகளை, காட்சி அமைப்புகளை, கதாபாத்திரங்கள் எங்கு சென்றார்கள், என்ன செய்தார்கள், என்ன நடந்தது என்பவற்றைச் சுவாரஸ்யமாகச் சொல்லலாம். ஒரு எழுத்தாளனும் அதைத் தாண்டி, அதன் பின்னால் மறைந்திருக்கும் மனித மனதைத் தேடுகிறார். கதாபாத்திரத்தின் செயல்கள் மட்டுமல்லாமல், அந்தச் செயலுக்குப் பின்னால் இருக்கும் தயக்கத்தையும், ஆசையையும், பயத்தையும், முரண்பாட்டையும், மனநிலையையும் காட்டுகிறார். மனித உளவியலுக்குள் நுழையும் ஒரு வாய்ப்பை வாசகனுக்கு தருகிறார்.

அ. முத்துலிங்கம் கூறுவது போல, இலக்கியம் என்பது உண்மையை நோக்கிய ஒரு பயணம். வாழ்க்கையில் அவ்வப்போது ஏற்படும் சிக்கல்களை விவாதித்து முன்னேறுவது தீவிர இலக்கியத்தின் குணம். ஆனால் அந்த உண்மையை எழுத்தாளர் வாசகனின் கையில் நேரடியாகத் திணித்துவிட்டால், வாசகர்களுக்கான இடம் சுருங்கிவிடுகிறது.

அதற்கு மாறாக, நல்ல கதைசொல்லி ஒரு புதிய கதவைத் திறந்து வைக்கிறார். தனது கருத்துக்களை நேரடியாகச் சொல்லாமல், கதையின் வழியாக சில காட்சிகளையும், சில முரண்பாடுகளையும், சில மனிதர்களையும் நம் முன் நிறுத்துகிறார். நுட்பமான காட்சி அமைப்புகளாலும், கதைக்குள் சொல்லப்படாத இடைவெளிகளாலும் வாசகனை அந்தக் கதைக்குள் அழைத்துச் செல்கிறார். அந்த இடத்தில்தான் இலக்கியத்தின் அழகு தொடங்குகிறது.

அப்படித்தான் அ. முத்துலிங்கமும் எழுதுகிறார் என்று தோன்றுகிறது. அவர் ஒரு கருத்தை வாசகனுக்கு நேரடியாகப் போதிப்பதில்லை; மாறாக, மிக இயல்பான சம்பவங்களையும், எளிய மனிதர்களையும், நுட்பமான அவதானிப்புகளையும் முன்வைத்து, அதன் பின்னால் இருக்கும் பெரிய வாழ்க்கை உண்மைகளை வாசகனே கண்டடையச் செய்கிறார். வாசகர்கள் கதையிலிருந்து என்ன தரிசனத்தைப் பெற வேண்டும் என்பதை அவர் தீர்மானிப்பதில்லை. மாறாக, அந்தத் தரிசனத்தை வாசகரே தனக்கான அனுபவமாக உருவாக்கிக்கொள்ளும் அளவிற்கு, ஒரு வெற்றிடத்தையும், ஒரு சுதந்திரமான இடத்தையும் கதை வாசகர்களுக்கு விட்டுச் செல்கிறது. அந்த இடைவெளியில்தான் அ. முத்துலிங்கத்தின் எழுத்தின் தனித்துவம்.

தனிச்சிறப்பு வாய்ந்த அ.முத்துலிங்கம் சிறுகதைகள் குறித்து ஜூலை 18 ஆம் திகதி தமிழாசியா சந்திப்பில் உரையாடினோம்.

முதலாவதாகப் பேசப்பட்ட கதை ‘ரி’. அ. முத்துலிங்கத்தின் இச்சிறுகதை, பத்து வயது சிறுவனுக்கும் வத்ஸலாவுக்கும் இடையிலான உறவையும், வத்ஸலாவின் வாழ்க்கையில் முக்கியத்துவம் பெறும் ராமு என்ற ரிஷபத்தையும் மையமாகக் கொண்டது. பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு மத்தியிலும் மனிதர்களுக்கிடையேயான அன்பு எவ்வாறு நிலைத்திருக்கிறது என்பதையும், அந்த அன்பு காலப்போக்கில் எவ்வாறு மாற்றமடைகிறது என்பதையும் கதை வெளிப்படுத்துகிறது.

கௌசல்யாவின் பார்வையில், ‘ரி’ என்பது அன்பையும் சங்கீதத்தையும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்தும் சிறுகதை. ஆரம்பத்தில் சிறுவனிடம் வத்ஸலாவைப் பற்றிய ஆக்கிரமிப்பு கலந்த உரிமை உணர்வு காணப்படுகிறது. ஆனால், வத்ஸலாவின் துயரத்தையும் ராமுவின் மீதான அவளுடைய ஆழமான அன்பையும் புரிந்துகொள்ளத் தொடங்கியபோது, அந்த ஆக்கிரமிப்பு கலந்த அன்பு தூய்மையானதும் புனிதமானதுமான பாசமாக மாறுகிறது என்பதை சிலர் பதிவு செய்தனர். இந்த உணர்வு மாற்றத்தின் வழியாக மனித உணர்வுகளும் வாழ்க்கையும் நிலையற்றவை என்பதை கதை உணர்த்துகிறது என்றார் சல்மா.

கலந்துரையாடலில் நவீன் எழுப்பிய கேள்வி, வத்ஸலாவைப் பொறுத்தவரை அந்த மாடு உண்மையில் என்னவாக இருக்கிறது? என்பதாகும். அவளுக்கு அது வெறும் மாடு அல்ல; சிவனுடன் தொடர்புடைய தெய்வீகமான ரிஷபத்தின் பிரதிநிதி. எனவே, அது மீண்டும் கிடைக்காதது அவளுக்கு ஏற்படுத்தும் சோகம் மிகவும் ஆழமானது. அதேபோல், “ரி” இல்லாத சங்கீதமும் அதன் குறைவுக்குள்ளேயே ஒரு முழுமையை உருவாக்குகிறது. வத்ஸலாவுக்கு அந்த மாடு வழங்கும் முழுமை, ஒரு தனிப்பட்ட பொருளின் முழுமையைத் தாண்டி, ஒரு பிரபஞ்சத்தின் முழுமையாகவே பார்க்கப்படலாம்.

அடுத்ததாக நாங்கள் கலந்துரையாடிய கதை ‘கறுப்பு அணில்’. அபிராமியின் பார்வையில், இது கவனிப்பிற்காக ஏங்கும் ஒரு மனிதனின் கதை. புலம்பெயர்ந்த வாழ்க்கையில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் அதிகார வர்க்கத்தின் அலட்சியமும், மனிதனை எவ்வளவு ஆழமான தனிமைக்குள் தள்ளுகின்றன என்பதை லோகிதாசனின் வாழ்க்கையின் வழியாக கதை நம்முன் வைக்கிறது. புலம்பெயர்ந்த நாட்டில் பொருளாதார ரீதியாகக் கீழ்த்தட்டில் இருக்கும் மனிதர்கள், “ஒருநாள் எல்லாம் மாறிவிடும்” என்ற ஒரு அசட்டு நம்பிக்கையுடன் வாழப் பழகிக்கொள்கிறார்கள். அதேவேளை, மகிழ்ச்சிக்காகக் காத்திருக்காமல், தங்களைத் தாங்களே ஆற்றிக்கொள்ளவும் கற்றுக்கொள்கிறார்கள்.

கதையில் வரும் குப்பைப் பைகளைத் திறந்து பார்க்கும் காட்சி இதற்கு முக்கியமான குறியீடாக அமைகிறது. மற்றவர்களுக்கு வெறும் குப்பையாகத் தெரியும் பொருட்களுக்குள்ளும் லோகிதாசன் ஏதோ ஒரு அர்த்தத்தையும் தன்னுடைய தன்மையையும் தேடுகிறான். ரேவின் கூறியதுபோல், பிறர் துச்சமாகக் கருதி தூக்கி எறியும் ஒரு பொருள் தனக்கு என்னவாக மாறக்கூடும் என்று அவன் சிந்திக்கிறான். நிராகரிக்கப்பட்ட பொருட்களுக்குள்ளேயே தன்னுடைய தன்மையையும் மதிப்பையும் தேடிக்கொண்டிருக்கும் அந்தக் காட்சி, தான் கவனிக்கப்பட வேண்டும் என்ற லோகிதாசனின் ஆழமான ஏக்கத்தை இன்னும் அழுத்தமாக உணர்த்துகிறது என்று நவீன் விளக்கினார்.

கவனிக்கப்பட வேண்டும், ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும், யாரோ ஒருவருடைய உலகத்தில் தானும் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை மனித ஏக்கத்தைப் பற்றிய கதையாகவும் இதை வாசிக்க முடிகிறது. கதையை வாசித்து முடித்த பிறகும், லோகிதாசனின் அந்தச் சிறிய எதிர்பார்ப்புகள் மனதில் தொடர்ந்து நகர்ந்துகொண்டே இருக்கின்றன.

அடுத்ததாக நாங்கள் கலந்துரையாடிய கதை ‘கொழுத்தாடு பிடிப்பேன்’. ஒரு பார்வையில் எழுதப்பட்ட கதையாக இருப்பதால், சுதாகர் கூறியதுபோல், சண்முகலிங்கம் நடந்தவற்றை இயல்பாகவே தனக்குச் சாதகமாகச் சொல்லியிருக்கலாம். கதை முழுவதும் அவன் குடிவரவு அதிகாரிக்கு அளிக்கும் வாக்குமூலமாக அமைந்திருப்பதால், அவன் உண்மையில் நிரபராதியா, அல்லது தன்னை நிரபராதியாகக் காட்டுவதற்காக ஒரு கதையை உருவாக்குகிறானா என்ற கேள்வி ஆரம்பத்திலிருந்தே எழுகிறது.

கதையில் வரும் பத்து வயது குழந்தையின் பாத்திரமும் மிகவும் சுவாரஸ்யமானது. அவள் தன் வயதைக் கடந்த பல விஷயங்களைப் புரிந்துகொள்ளும் அளவுக்குக் கூர்மையானவளாகவும், பெரியவர்களின் உலகையும் அவர்களுக்கிடையேயான உறவுகளையும் நுணுக்கமாக அவதானிக்கும் குழந்தையாகவும் தெரிகிறாள். மோகனா குறிப்பிட்டதுபோல், புலம்பெயர்ந்த சூழலில் குழந்தை வளர்ப்பில் ஏற்படும் தடுமாற்றங்களையும் இக்கதை சுட்டிக்காட்டுகிறது. அதேவேளை, ஒரு பத்து வயது குழந்தை ஒரு தருணத்தில் தன் வயதுக்கு மாறான ஒரு குமரித் தன்மையை வெளிப்படுத்துவது ஏன் என்ற கேள்வியையும் கதை எழுப்புகிறது.

அந்தக் குழந்தை உண்மையில் தன் வயதிலேயே இருக்கும் ஒரு குழந்தையா, அல்லது பெரியவர்களின் உலகமும் சூழலும் அவளை அவளுடைய வயதைவிட முன்கூட்டியே வளர்த்துவிட்டதா என்ற கேள்வியும் இங்கு முக்கியமானதாகிறது. நவீன் முன்வைத்ததுபோல், “தன் குழந்தை அல்ல” என்பதை நிரூபித்துக்கொள்வதற்காகவே, தன்னை ஒரு பத்து வயது குழந்தை என்பதை மறக்கடிக்கும் அளவுக்கு அவள் சில செயல்களைச் செய்திருக்கிறாளா? என்ற இன்னொரு வாசிப்பிற்கும் கதை இடமளிக்கிறது. இதனால், இறுதியில் அந்தக் குழந்தை நடந்த சம்பவத்தை எவ்வாறு புரிந்துகொண்டாள் என்பதும் நமக்குத் தெளிவாகச் சொல்லப்படுவதில்லை.

அதேபோல், பானு முன்வைத்ததுபோல், சண்முகலிங்கம் சேர்த்து வைத்திருந்த பணத்தைப் பறிப்பதற்காகவே இந்த முழுச் சூழ்ச்சியும் திட்டமிடப்பட்டிருக்கலாம் என்ற சாத்தியமும் இருக்கிறது. ஆனால் இதுவும் கதைக்குள் உறுதியான உண்மையாக நிறுவப்படவில்லை. மாறாக, சண்முகலிங்கம் கூறும் விளக்கங்களில் ஒன்றாகவே அது நம்முன் நிற்கிறது. இதுவே கதையின் உண்மை எது, புனைவு எது என்பதை வாசகரைத் தொடர்ந்து சந்தேகிக்க வைக்கிறது.

அடுத்ததாக நாங்கள் கலந்துரையாடிய கதை ‘ஒட்டகம்’. ஒரு பெண்ணின் வாழ்க்கைச் சூழலை மைமூனின் வழியாகக் கதை நம்முன் வைக்கிறது. அவளுடைய வாழ்க்கையில் தண்ணீர் என்பது வெறும் தேவையாக இல்லை; அவளுடைய அன்றாட வாழ்க்கையையே தீர்மானிக்கும் ஒரு பெரிய சுமையாக இருக்கிறது. தினமும் நீண்ட தூரம் நடந்து தண்ணீர் சுமந்து வரும் அவளுக்கு, அந்த வாழ்க்கையிலிருந்து விடுபடுவதற்கான ஒரு வழியாகவே திருமணம் கூடத் தோன்றுகிறது. பக்கத்து ஊரில் தண்ணீர் கிடைக்கிறது என்பதற்காகவே அவள் அந்தத் திருமணத்தை ஏற்றுக்கொள்கிறாள்.

அதனால்தான் ஒட்டகம் என்ற உருவகம் மிகவும் பொருத்தமாகத் தோன்றுகிறது. ஒட்டகம் கடுமையான வறட்சியையும் தண்ணீரற்ற சூழலையும் தாங்கிக்கொண்டு வாழ்வது போல, பெண்களும் இந்தச் சமூகத்தில் தொடர்ந்து சுமைகளைச் சுமந்துகொண்டே இருக்கிறார்கள். நீர்வளங்கள் அற்ற நிலப்பரப்பில் அந்தச் சுமை இன்னும் அதிகமாகிறது. ஆனால் அவர்களுடைய உழைப்பும் தியாகமும் பெரும்பாலும் இயல்பான ஒன்றாகவே கருதப்படுகிறது.

லாவண்யா கூறியதுபோல், ஆதிக்கத்தின் கீழ் வாழும் பெண்களின் கதையாகவும் ‘ஒட்டகம்’ பார்க்கப்படலாம். சிந்தித்துக் கேள்வி கேட்க முடியாத நிலைக்குள் அவர்கள் வாழப் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். மைமூன் நடந்து செல்லும் வழியில், ஒரு தாயும் குழந்தையும் இறந்த நிலையில் கிடப்பதும், மரத்தின் கீழ் குழந்தையின் எலும்புத் துண்டுகள் காணப்படுவதும், வறட்சி பெண்களின் வாழ்க்கையை எந்த அளவுக்குப் பாதித்திருக்கிறது என்பதை மிகவும் அழுத்தமாக வெளிப்படுத்துகிறது.

அதேபோல், பத்து குட்டிகளை ஈன்றுவிட்டு ஓய்ந்து கிடக்கும் ஒட்டகத்தின் காட்சியும் முக்கியமான குறியீடாக அமைகிறது. பெண்கள் சமூகத்தில் வெறும் பிள்ளைகளைப் பெற்றெடுத்து சுமந்து செல்ல வேண்டியவர்களாக எந்த அளவுக்குத் தள்ளப்படுகிறார்கள் என்பதை அந்தக் காட்சி உணர்த்துகிறது. வறட்சியின் போது ஒட்டகம் தண்ணீரைச் சேமித்து வைத்துக்கொள்வது போல, மைமூனும் தண்ணீரைச் சேகரித்து வைத்துக்கொண்டு தனது வாழ்க்கையை நகர்த்துகிறாள். இதன் மூலம் தண்ணீர் என்பது வெறும் இயற்கை வளமாக இல்லாமல், பெண்ணின் வாழ்க்கையையும் அவளுடைய தேர்வுகளையும் தீர்மானிக்கும் ஒரு அதிகாரமாக மாறுகிறது.

இங்கே முக்கியமாகத் தோன்றுவது, ஒரு பெண்ணுக்கு முன்னால் இருக்கும் வாய்ப்புகள் எவ்வளவு குறுகியதாக இருந்தாலும், அந்தச் சிறிய வெளிக்குள் கூட அவள் தன் வாழ்க்கையைப் பற்றி ஒரு முடிவை எடுக்கிறாள் என்பதுதான். அந்த முடிவு முழுமையான சுதந்திரத்தின் வெளிப்பாடாக இல்லாமல் இருக்கலாம்; ஆனால் தனக்குக் கிடைத்த சூழ்நிலைக்குள் தன்னால் தேர்ந்தெடுக்க முடிந்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் ஒரு சுயநினைவு அதில் இருக்கிறது. அரவின் கூறியதுபோல், சமூகம் பெண்களை எவ்வளவு சுயநலமாக நடத்துகிறது என்பதைச் சுற்றியுள்ள வாழ்க்கையின் வழியாக மைமூன் பார்க்கிறாள். இதைப் பார்த்தபின், தனக்குக் கிடைக்கக்கூடிய குறைவான பாதகம் இதுவாக இருக்கலாம் என்று எண்ணி, மூன்றாவது தாரமாகச் செல்ல அவள் முடிவு செய்கிறாள்.

ஒரு பெண்ணின் அன்றாட சுமையைப் புரிந்துகொள்ளும்போது, அவளுக்குப் பின்னால் இருக்கும் முழு சமூகச் சூழலும் நமக்குத் தெரிய வருகிறது. குறிப்பாக, தண்ணீருக்காக அவள் செலவிடும் உழைப்பும் நேரமும், அவளுடைய வாழ்க்கைத் தேர்வுகளையே தீர்மானிக்கும் அளவுக்கு தண்ணீர் ஒரு அதிகாரமாக மாறியிருப்பதை உணர்த்துகிறது.

இக்கதைகள் வழியாக அ. முத்துலிங்கத்தை அணுகும்போது, அவருடைய எழுத்தின் பின்னால் இருக்கும் ஒரு முக்கியமான நம்பிக்கை தெளிவாகத் தெரிகிறது. இலக்கியம் முதலில் வாசகரைச் சென்றடைய வேண்டும் என்பதே அது. ஒரு கோட்பாட்டை மனதில் வைத்துக்கொண்டு எழுதுவதில்லை என்றும், கதை வாசகரை உள்ளே இழுத்து, கதை முடிந்த பிறகும் அவனுடைய சிந்தனை அந்தக் கதையின் பாதையில் தொடர்ந்து செல்ல வேண்டும் என்றும் அவர் ஒரு நேர்காணலில் குறிப்பிடுகிறார்.

கடினமான ஒரு செய்தியையும் எளிமையான மொழியின் வழியாக வாசகரிடம் கொண்டு சேர்ப்பது அவரது எழுத்தின் தன்மை. அதே நேரத்தில், தீவிரமான விஷயங்களைக் கூட ஒரு இலகுவான நடையிலும் நுட்பமான நகைச்சுவையிலும் சொல்ல முடிவது முத்துலிங்கத்தின் இன்னொரு தனிச்சிறப்பு. அவருடைய எழுத்தைப் பற்றி பேசும்போது, அவர் கதைகளைக் காட்டிலும் அவற்றை வாசிக்கும் மனிதனுக்கே அதிக இடம் கொடுக்கிறார் என்று தோன்றுகிறது. ஒரு படைப்பை எந்த வகைக்குள் அடக்க வேண்டும் என்பதைக்கூட வாசகரின் கடமை என்று அவர் சொல்கிறார். அதனால்தான் அவரது கதைகளுக்கு ஒரே ஒரு முடிவை நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஒரே கதையை வெவ்வேறு வாசகர்கள் வெவ்வேறு விதமாகப் புரிந்துகொள்ள முடியும்.

நாம் கலந்துரையாடிய ஒவ்வொரு கதையும் இதற்குச் சாட்சியாகவே இருந்தது. ஒவ்வொரு கதையும் வெவ்வேறு உலகத்தை நமக்குத் திறந்து வைத்தது. ஆனால் அவை எதுவுமே தன்னுடைய அர்த்தத்தை நம்மீது திணிக்கவில்லை.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...