நிலவுக்கு ஒரு நியூக்ளியர் முத்தம்

1

“வாழ்க்கைல எப்பவுமே நாம எடுக்குற சின்ன முடிவுக தான் பெரிய விஷயங்களா பாத்து நம்மள கொண்டு போகும்” என என் அப்பா அன்று சொன்னபோது, வீட்டு முற்றத்தில் விரிக்கபட்ட பாயில் அவரின் கையில் தலைவைத்து படுத்து நான் நிலவைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இன்று 33 ஆண்டுகள் கழித்து விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் அணு உலையின் கண்ணாடி ஜன்னல் வழியாக நிலவைப் பார்க்கும்போது அவர் சொன்ன அதே வார்த்தைகள் என் நினைவில் வருகிறது. உலகின் முதல் விண்வெளி அணு உலையான இது இன்றோடு தனது ஓராண்டு சோதனை ஓட்டத்தை முடிக்கிறது. நாளை முதல் உயர் ஆபத்து கதிரியக்க கழிவாக மாறிவிடும் இந்த அணு உலையை நிலவில் பத்திரமாக இறக்குவது மட்டுமே இப்போது எஞ்சியிருக்கும் ஒரே வேலை.

2036ஆம் ஆண்டு நிகழ்ந்த உலகின் மிகப்பெரிய அணு உலை பேரழிவு உலகையே புரட்டிப் போட்டது. 2011-ல் ஏற்பட்ட ஃபுக்குஷிமா விபத்தைவிட பல மடங்கு பேரழிவை ஏற்படுத்திய அந்தச் சம்பவம், அணுசக்தி மீதான மனிதகுலத்தின் பயத்தை உண்மையாக்கியது. அதன் விளைவாக, புதிய அணு உலைகள் கட்டுவதற்கு உலக நாடுகளால் உருவாக்கபட்ட அணுசக்தி கூட்டமைப்பு தடை விதித்தது. ஆனால் வேகமாக அதிகரித்து வந்த உலகின் மின்சாரத் தேவையைப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களால் மட்டும் பூர்த்திச் செய்ய முடியவில்லை. தொழில்துறைப் புரட்சிக்குப் பிறகு இடையறாது வளர்ந்து வந்த மனித நாகரிகம், முதன்முறையாக ஆற்றல் நெருக்கடியால் தனது எதிர்காலம் குறித்த அச்சத்தை எதிர்கொண்டது. பல புதிய ஆற்றல் தொழில்நுட்பங்கள் சோதிக்கப்பட்டும் எதிர்பார்த்த வெற்றியை அளிக்கவில்லை. அத்தகைய தேக்கநிலையில், எலெனா கம்பிகளற்ற மின்சாரப் பரிமாற்றத்தைச் சாத்தியப்படுத்தி உலகையே திரும்பிப் பார்க்க வைத்தாள். அதைத்தொடர்ந்து, அவளது தந்தையின் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு விண்வெளி அணு உலைத் திட்டத்தை உருவாக்கியது. பல ஆண்டுகால ஆராய்ச்சி மற்றும் சோதனைகளின் விளைவாக உருவான அந்த முயற்சியின் வெற்றிதான் உலகின் முதல் விண்வெளி அணு உலை. இன்று மின்சாரம் உலக நாடுகள் பங்கிட்டுக் கொள்ளும் பொதுச் சொத்து. ஆனால் அணுக் கழிவுகளை எங்கே நிரந்தரமாகப் பாதுகாப்பது என்ற கேள்விக்கு மனிதகுலம் நிலவில்தான் பதிலைக் கண்டது. இன்று நிலவு பூமியின் துணைக்கோள் மட்டுமல்ல; மனிதகுலத்தின் ஆபத்தான கழிவுகளைப் பாதுகாக்கும் ஒரு விண்வெளிக் கிடங்கு.

நான் இந்த விண்வெளி அணு உலையின் பொறியாளனாக பணியாற்றுகிறேன். சவாலான பணி என்று சொல்வதற்கு இல்லை. இங்குத் தயாரிக்கப்படும் மின்சாரத்தை நுண்ணலைக் கதிர்களாக மாற்றி பூமிக்கு அனுப்பும் போது ஏற்படும் சில தொழில்நுட்ப கோளாறுகளைச் சரி செய்வது, அணு உலையின் தடையில்லா இயக்கத்தை உறுதி செய்வது என சிறு சிறு வேலைகள் தான். மற்றபடி மொத்த அணு உலையும் செயற்கை நுண்ணறிவுகளின் கட்டுபாட்டில் தான் இயங்குகிறது.

ஆனால் இந்த அணு உலையின் முதன்மையான சவால் இங்குச் சூழ்ந்திருக்கும் வெறுமை. நான் நிலவைப் பல விதமான கோணங்களில், பல்வேறு பொழுதுகளில் பார்த்திருக்கிறேன். சில நேரங்களில் நிலவு அபூர்வமான ஒன்றாகத் தெரிந்தாலும் உண்மையில் அது சுவாரஸ்யமே இல்லாதது. பூமியில் இருந்து பார்ப்பது போல இல்லை, விண்வெளியில் நிலவு பெரிதாக, மேடு பள்ளங்களோடு ஒரு கைவிடபட்ட பாறை போல காட்சியளிக்கிறது. ஒருவேளை ஓராண்டாக அருகில் பார்த்து நிலவு எனக்குப் பழகிப் போய் விட்டதால் கூட இப்படித் தோன்றலாம். ஆனால் என் எதிர்காலம் கரடுமுரடான இந்த நிலவில் தான் இருக்கிறது. எல்லாமே இந்த அணு உலையின் சோதனை ஓட்ட வெற்றியிலேயே உள்ளது.  

ஆனால் எலெனாவிற்கு எப்போதுமே நிலவு ஒரு ஆய்வு பொருள் தான். இளஞ்சிவப்பு கலந்த கருநிற கூந்தலும், பூனைக் கண்களும் அவளை ஒரு மாடல் போல காட்டினாலும் அவள் மிகச் சிறந்த விஞ்ஞானி. கண்ணாடி அணிந்து கொண்டு நிலவை அவள் கூர்ந்து பார்க்கும் போது, “யாருக்கேனும் விற்றுவிட சிந்திக்கிறாளா?” என்றே எனக்குத் தோன்றும். நான் அவளிடம் இதைக் கேட்டிருக்கிறேன், “How can I sell the moon?” என ஹங்கேரி உச்சரிப்பில் சீரியஸாக கேட்டுவிட்டு, நான் கேலி செய்வதைப் புரிந்து கொண்டு சிரித்தாள்.

எங்கே சென்றாள் எனத் தெரியவில்லை. எதேனும் பேனலுக்கு முன் நின்று சிக்னல் சரியாக வருகிறதா என்பதைதான் பார்த்துக் கொண்டிருப்பாள். எல்லாம் சரியாக வேலை செய்கிறதா எனச் சரியாக சோதனையிடுவதுதான் அவளின் முழுநேரப் பணி. அவளின் துருதுருப்பையும், எப்போதும் எதையோ தேடுவது போன்ற ஆர்வமான கண்களையும் நினைக்கும் போது சிரிப்பு வருகிறது. மெதுவாகப் புன்னகைத்துக் கொண்டேன்.

கண்ணாடி ஜன்னலில் தெரிந்த நிலவு மெதுவாக மறைந்து வெளியே வெறும்  இருளாக இருந்தது. அணு உலையினுள் பல்வேறு உபகரணங்களில் இருந்து வரும் கீ.. கீ.. ஒலிகளைக் கேட்டவாறே நான் இருளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஜன்னல் கண்ணாடியில் என் முகம் பிரதிபலிக்க மனம் அமைதியாக எங்கோ ஆழத்தில் கிடந்தது. நான் மட்டும் தனியாக இந்த இருளுக்குள் தொலைந்து போவது போன்ற ஒரு தனிமையுணர்வு கலந்த சோகம் எனக்குள் உருவானது. நான் கண்களை மூடினேன். ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன் ‘மனம் நாம் காணும் காட்சிகளை உணர்வாக பிரதிபலிக்கும்’. நாம் செயலின்றி அமர்ந்தாலும் மனம் நம்மை விடுவதில்லை எப்போதும் துரத்திக் கொண்டே இருக்கிறது. விளையாட்டுக் குழந்தை போல எதையாவது எடுத்துக் கொண்டு எப்போதும் நம் முன்னால் வந்து நிற்கிறது. ஆனால் இப்போது இந்தத் தனிமையுணர்வு அவசியமற்றது. காரணமே இல்லாமல் என்னைத் துக்கத்தில் ஆழ்த்துகிறது. செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன என்ற எண்ணத்தில் நான் கண்களைத் திறந்த போது கண்ணாடி ஜன்னலில் ஒரு கடலலைப் போல பூமி  மெல்ல எழுந்தது. அதன் நீல நிறம் என் கண்களில் நிறைந்து ஒரு நொடியில் மனம் ஆரவாரமானது. என் தனிமையுணர்வு விலகியது. இது ஒன்றே நான் திரும்பிச் செல்ல எனக்காக இருக்கும் ஒரே உலகம். பூமியின் அழகான காட்சியில் என் மனம் பொங்கி பொங்கி வார்த்தைகளே இல்லாமல் ஆக எனக்கு வீட்டு நியாபகம் வந்தது. மனைவி, மகன், அப்பா… அவர்களிடம் பேச எழுந்து நடந்து என் அறைக்குச் சென்றேன்.

நான் அறையினுள் நுழைந்து கணினியை ஆன் செய்து என் மனைவிக்கு வீடியோ அழைப்பை இணைத்து விட்டு கணினி திரை முன் அமர்ந்தேன். அழைப்பு  ஏறக்கப்பட்டதும், “அப்பா ஃபோன் பண்ணிருக்கு” என்ற என் மகனின் குரல் தான் முதலில் கேட்டது. சிரிப்பும், விளையாட்டும், ஆர்வமும் அல்லாமல் வேறு எதுவும் அறியாத நான்கு வயது குழந்தை அவன். நான் உற்சாகமானேன். ஓடி வந்து அவன் அம்மாவின் மடியில் ஏறி அமர்ந்ததும், “அப்பா… நிலால பாட்டிய பாத்தியா?” என்ற அவன் கேள்வியில் நான் சற்று குழம்பி, “பாட்டியா? எந்த பாட்டி?” எனக் கேட்டேன். என் முகத்தில் சிரிப்பு இருந்தது.

“தாத்தா தான் சொல்லுச்சு, நிலால பாட்டி இருக்காங்கனு.” எனக்கு புரிந்து விட்டது. நான் சிரித்துக் கொண்டே, “அப்படியா சொன்னாங்க… நிலால என்ன பண்றாங்களாம்?”

அவன் சற்று யோசித்து சட்டென நினைவில் வர, “ஆ… வட சுடுறாங்களாம்” என்றான். நான் சத்தமாக சிரித்து விட்டேன். அவனைக் கட்டி அணைத்து கொஞ்ச வேண்டும் போல இருந்தது.

“ஆமா கள்ளப் பயலே… வட சுடுறாங்க… வரும்போது பிள்ளைக்கு வாங்கிட்டு வரேன்”

“ஆ… சரி”. கிளுகிளுப்பாகச் சிரித்தான்.

நான் என் மனைவியைப் பார்த்து பேச நினைக்கும் போது, “அப்பா!!! அப்பா!!!” என அழைத்த அவன் குரலில் கொஞ்சலான ஒரு ஏக்கம் இருந்தது.

“சொல்லு மோனே, என்னம்மா?”

அவன் குறை சொல்லும் முக பாவத்துடன், “தாத்தா உம்மா வேண்டானு சொல்லுச்சு” என்றான்.

நான் இது என்ன கதை என்பது போல என் மனைவியைப் பார்த்தேன். அவள், “மாமா கத சொல்லி முடிச்சதும் இவன் முத்தம் குடுக்க போனான். அவங்க வேண்டானு முகத்த விலக்கிட்டாங்க” என்றதும், “அவங்களும் எனக்கு தரல” என்ற அவன் குரலில் புகார் இருந்தது.

“அய்யோ.. தாத்தா பிள்ளைக்கு உம்மா தரலியா! அப்பா தரேன்” என்று சொல்லி வீடியோ திரையின் அருகில் என் முகத்தைக் கொண்டு சென்றேன். அவன் வெட்கப்பட்டு சிரித்து, “எனக்கு வேண்டாம்” எனச் சொல்லிவிட்டு திரும்பி அம்மாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டான்.

“கள்ளப் பயலே.. திரும்பு… அப்ப உனக்கு உம்மா வேண்டாமா?” எனக் கொஞ்சலாக கேட்க, அவன் தலையாட்டிய போது மொத்த உடம்புமே வேண்டாமென ஆடியது.

நான் என் மனைவியிடம், “உனக்கு தான் அப்பாவ பத்தி தெரியுமே, அவங்க அப்படி தான்” என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டு, “நம்ம கல்யாணத்துல உன் அம்மா அப்பா உனக்கு மாறி மாறி முத்தம் தந்தப்ப கூட இவரு என் பக்கத்துல கல்லு மாதிரி தானே நின்னாரு” எனச் சொல்லி சிரித்துக் கொண்டே, “நல்லா இருக்கங்களா?” என்று கேட்ட என் குரலில் மரியாதை இருந்தது.

“நல்லா இருக்காங்க… நீங்க எப்ப வருவீங்க?”

“தெரியல… நாளைக்கு ஒரு வேல இருக்கு… அது முடிஞ்ச பிறகு தான் தெரியும்”

“ஓ”

“”எப்படியும் ஒரு வாரம் ஆகும்னு நினைக்கிறேன்” என்று சொன்ன போது என் கையில் கட்டியிருந்த அழைப்புப் பட்டை ஒளிர்ந்தது.

“சரி… பிள்ளைய பாத்துக்க… நீயும் ஒழுங்கா சாப்டு… லவ் யு” என்று சொல்லி பதிலுக்காகக் காத்திராமல் அழைப்பைத் துண்டித்து விட்டு எலெனா அறையை நோக்கிச் சென்றேன்.

2

நான் எலெனா அறையில் நுழைந்த போது கணிணியில் ஏதோ செய்து கொண்டிருந்தவள் என்னைத் திரும்பிப் பார்த்து, “கம், கம்” எனச் சொல்லி விட்டு மீண்டும் வேலையைத் தொடர்ந்தாள். நான் அந்தச் சிறிய அறையில் இடப்பட்டிருந்த சிறிய நாற்காலியில் அமர்ந்தேன். அவள் என்னைப் பார்க்காமலே, “மிஸ்டர் கோவாக்ஸ் இப்போது வீடியோ அழைப்பில் வருவார். அதனால் தான் உன்னையும் அழைத்தேன்” என்றாள்.

நான் எதுவும் சொல்லவில்லை. மிஸ்டர் கோவாக்ஸ் தான் அவளின் தந்தை. உலக நாடுகளின் கூட்டு முயற்சியான இந்த விண்வெளி அணு உலை திட்டத்தை வடிவமைத்து செயல்படுத்தியவரும் அவர் தான். நிலவில் அணு உலையை இறக்குவதற்கான இறுதிகட்ட வழிமுறைகளைப் பற்றி உறுதி செய்ய அழைப்பாரா இருக்கும் என நினைத்துக் கொண்டேன். அவள் எதுவும் பேசாமல் வெறுமனே கணினி திரையைப் பார்த்துக் கொண்டிருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் மிஸ்டர் கோவக்ஸ் அவளை “மை டியர் லிட்டில் ஸ்பேரோ” என்று தான் அழைப்பார். அதை முதலில் கேட்டபோது என் வீட்டில் கூடு கட்டியிருந்த குருவி ஞாபகம் தான் வந்தது. அவளும் குருவி போலவே வேகமானவள், சுறுசுறுப்பானவள், எப்போதும் வேலையைப் பற்றி பேசிக் கொண்டிருப்பவள். இப்போது அவளின் அமைதி எனக்குப் புதிதாக இருந்தது. நான், “எலெனா” என அழைத்தேன்.

அவள் என்ன என்பது போல திரும்பிப் பார்த்தாள்.

“பதட்டமாக இருக்கிறாயா?”

“தெரியவில்லை.. ஆனால் ஏதோ வித்தியாசமாக உணர்கிறேன்” என்றவள் சிறிது இடைவெளி விட்டு “மில்டன், நாம் ஈவாவை பிரிய போகிறோம்” என்றாள். அவள் குரலில் ஏக்கம் இருந்தது. நடக்க போவதை நம்ப முடியாதவள் போல இருந்தாள். அது எதனால் என எனக்குப் புரிந்தாலும் நான் காட்டி கொள்ள விரும்பவில்லை. பிரிவின் சோகத்தை அந்த நேரத்தின் பரபரப்பினால் கடந்து செல்வதே சிறந்தது என்பதை என் அனுபவத்தில் நான் உணர்ந்திருக்கிறேன். நான் அவளைச் சகஜமாக்க நினைத்து, “அப்படியென்றால் பூமிக்கே கொண்டு போய்விடலாமா?” என்றேன்.

அவள் சலித்துக் கொண்டு, “அது எப்படி? 2050ஆம் ஆண்டின் அணுசக்தி ஒப்பந்தம் அதை அனுமதிக்காதே” என்றவள் நான் சிரிப்பதைப் பார்த்து, “கேலி பண்றியா?” எனக் கோபமானாலும் சற்று நிதானித்து, “எல்லாமே உனக்கு ஜோக் தான்” என்றாள்.

“அப்படி இல்ல… நீ ஏன் வருத்தபடுறேனு தான் புரியல… இது ஒரு அணு உலை தானே”

“யெஸ்.. எனக்கு தெரியும். ஆனா ஈவா என் கனவு. என் கூடவே வளர்ந்தவ. இப்ப திடீர்னு நாளைல இருந்து அவ இல்லைனு வரும் போது அடுத்து என்னனு ஒண்ணுமே தெரியல… எதோ வாழ்க்கையே முடியுற மாதிரி இருக்கு…”

“ம்ம்… புரியுது. ஆனா நீயே சொல்லுவியே, இங்க முடிவுனு எதுவும் கிடையாது எல்லாமே ஏதோ ஒன்னோட தொடக்கம் தான்னு”

அவள் எதோ சொல்ல வந்த போது மிஸ்டர் கோவாக்ஸிட‌ம் இருந்து அழைப்பு வந்தது.

“ஹலோ… மை டியர்… எப்படி இருக்க?”  மிஸ்டர் கோவக்ஸ் மிகவும் உற்சாகமாக பேசினார்.

“ஆல் ஓகே டாட்… எல்லாமே திட்டப்படி தான் செல்கிறது” என்ற எலெனாவின் சோர்வைக் கவனித்து, “எலெனா, இது நமக்கு மிகப்பெரிய வெற்றி… இத நாம் கொண்டாடணும்… இந்த நேரத்துல உணர்ச்சிவசப்படுறது நல்லதில்ல” என்றார்.

எலெனா அமைதியாக இருந்தாள்.

அவர், “மில்டன் எங்க?” எனக் கேட்க, நான், “இங்க இருக்கேன் சார்” எனக் கணினி காமிராவின் முன்னால் சென்றேன். அவர், “மில்டன், நீ ஒரு இந்தியன்னு எனக்கு தெரியும். ஒவ்வொரு முறையும் சார் சொல்லி அத நீ நிரூபிக்க வேண்டாம்” என்று சொல்லி சிரித்தார். நான் சற்று கூச்சமாக உணர்ந்தாலும் சமாளித்துக் கொண்டேன். அவர் தொடர்ந்து பேசினார்.

“இந்த வெற்றில உன் பங்கு ரொம்ப பெரியது. நீ என் டீம்ல சேர்ந்தது பெரிய அதிர்ஷ்டமா நினைக்கிறேன். நம்ம இனிமே சேர்ந்தே தான் பயணிப்போம்னு நம்புகிறேன்” என்றார்.

நான் “நன்றி மிஸ்டர் கோவக்ஸ்” எனப் பணிவாகச் சொன்னேன்.

“ஓகே எலெனா,.. வேலைய பத்தி பேசலாமா?” என அவர் கேட்டதும் அவள்  உற்சாகமானாள். வேலை அவளை எல்லாவற்றிலும் இருந்து விடுவித்து விடும். நான் சிரித்துக் கொண்டேன்.

மிஸ்டர் கோவக்ஸ் “உங்களுக்கே தெரியும்… நாம் அணு உலையை மட்டும் தான் நிலவுக்கு அனுப்ப போகிறோம். சுற்றுபாதை அமைப்பும், மின்சார பரிமாற்ற அமைப்பும் ஸ்பேஸ்ல தான் சுற்றிக்கொண்டிருக்கப் போகிறது” என்றதும் என் பொறியியல் மூளை விழித்துக் கொண்டது. அவர் தொடர்ந்தார்.

“மூன்று கட்டங்களாக சோதனை நடக்க வேண்டும். முதல் கட்ட சோதனையில் சுற்றுபாதை அமைப்பு மில்டனின் பொறுப்பு. அணு உலை தொகுதியை எலெனா நீ சோதனை செய்யணும்” எனச் சொல்லி விட்டு அவர் “AURA” என அழைத்ததும், விண்வெளி மையத்தின் செயற்கை நுண்ணறிவு “எஸ் மிஸ்டர் கோவக்ஸ்” எனப் பதிலளித்தது. அவர், “மின்சாரம் பரிமாற்ற அமைப்பு உன் பொறுப்பு” எ‌ன்றா‌ர். அது, “ஓகே மிஸ்டர் கோவக்ஸ்” என்றது. ஒரு ஆண்டாக அதன் குரலைக் கேட்டு கேட்டு AURA ஒரு மனித இருப்பு போலவே என் மனதில் மாறிவிட்டது. எங்கோ ஒளிந்திருந்து பதில் சொல்லும் குழந்தை போல என்ற எண்ணம் வந்ததும் நான் என் மகனை நினத்துக் கொண்டேன்.

“இது போலவே இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டத்துல மாட்யூல மாற்றி சோதனை பண்ணணும். அப்ப எல்லாமே மூன்று முறை சோதனையிடப்படும். எந்த ஷார்ட்கட்ஸும் வேண்டாம், எதையும் யூகத்துக்கு விடாம எல்லாத்தையும் வெரிஃபை பண்ணணும்” என்றார்.

நாங்கள் ” ஓகே” என்றோம். AURA மட்டும் “டாஸ்க் அக்சப்ட்டட்” என்றது.

“வேற எதுவும் கேள்வி இருக்கா?” எனக் கேட்டவர், “எஸ்… மறந்துட்டேன்… அன்டாக்கிங் UTC 18:30 கு தொடங்கணும். அதனால UTC 18:00 கு மொத்த ஸ்பேஸ் ஸ்டேஷனும் பூமியின் கட்டுபாட்டில் வரணும். ரிப்போர்ட்ஸ்ல எதுவும் மிஸ்மேட்ச் ஆகக் கூடாது, அப்ப தான் நம்மளால கவுண்ட்டவுன் ஸ்டார்ட் பண்ண முடியும்” என்றார். நான் நேரத்தைப் பார்த்தேன் UTC 14:00 என இருந்தது. நான்கு மணிநேரம். ஒரு ஷெட்யூல்கு ஒரு மணிநேரம் வைத்து 3 மணி நேரம் மீதி ஒரு மணி நேரம் நாங்கள் பூமிக்குத் திரும்ப தயாராக எனப் புரிந்தது.

எலெனா “ஓகே மிஸ்டர் கோவக்ஸ்” என்றாள். அவர் என்னைப் பார்க்க நான் பெருவிரலை உயர்த்திக் காட்டி தலையாட்டினேன்.

அவர் நிறைவுடன் “வேறு எதுவும் கேள்வி இருக்கா? எனக் கேட்க,  நங்கள் “இல்லை” என்று சொன்னோம். AURA வையும் சேர்த்து தான்.

அவர், “அப்ப சரி, நம் உலகில் சந்திக்கலாம்”  என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தார்.

3

அடுத்த மூன்று மணி நேரமும் எப்படிப் போனதென்றே எனக்குத் தெரியவில்லை. இடையிடையே AURA சொல்லும் எதேனும் தகவல்கள் மட்டும் என் காதில் விழுந்து கொண்டிருந்தது. சுற்றுபாதை அமைப்பில் சிக்கலான தொழில்நுட்பம் எதுவும் இல்லையென்றாலும் தொலை தொடர்பு சாதனங்களும் வழிகாட்டிக் கருவிகளும் அணு உலையை நிலவில் இறக்க மிக முக்கியமானவை என்பதால் அவற்றில் அதிகமாக கவனம் செலுத்தினேன். சோதனை முடிவுகள் திருப்திகரமாக வந்த பிறகு தரவுகளை AURA விடம் பூமிக்கு அனுப்ப பதிவேற்றி விட்டு அணு உலையைச் சோதனையிட சென்றேன்.

செல்லும் வழியிலேயே அணு உலையைச் சோதனை செய்து எலெனா பதிவேற்றிய தரவுகளைப் பார்த்துக் கொண்டே சென்றேன். அணு உலை முழுவது‌ம் கதிரியக்க பாதுகாப்பு செய்யப்பட்டு இருந்தாலும், குளிரூட்டி அமைப்பில் இருந்த தண்ணீரையே இறுதி பாதுகாப்பு அடுக்காக அணு உலையின் மையத்தில் சுழற்சியில்லாமல் அடைத்து வைத்திருந்தோம். நான் கதிரியக்க பாதுகாப்பு உடைகளை அணிந்து கொண்டு அணு உலையின் கணினி அமைப்பு முன் நின்று சோதனைகளைச் செய்த போது AURA வின் ஒரு பகுதி என்னுடன் இருந்தது. என் சோதனை முடிவுகளை எலெனாவின் சோதனை தரவுகளோடு ஒப்பிட்டு AURA விடம் பதிவேற்றி கொண்டிருந்தேன். எலெனா எப்போதும் சொல்வது போல இங்கு எதற்கும் முடிவே இல்லை என்பது உண்மை தான். ஏனெனில் இந்த அணு உலையின் அடுத்த தொடக்கம் ஏற்கனவே பூமியில் உருவாகிவிட்டது. இதை நிலவில் ஈராக்கிய மறு வாரமே புதிய அணு உலை விண்வெளி மையத்துடன் இணைக்கப்பட்டு பணியைத் தொடங்கி விடும்.  ஆனால் இந்த விண்வெளி அணு உலை சோதனை திட்டத்தின் இறுதி மதிப்பீட்டு ஆய்வு கூட்டத்தில் மிஸ்டர் கோவக்ஸ் உலக நாடுகளின் அணுசக்தி கூட்டமைப்பில் பேசிய உரை இன்னும் என் நினைவில் இருக்கிறது.

அன்று அவர் எந்தப் பதட்டமும் இல்லாமல் அமைதியாக இருந்தார். சிலை போல ஒரு சிறு புன்னகை அவர் முகத்தில் நிலையாக இரு‌ந்தது. அவர் அருகில் இருந்த எலெனா மிகவும் தன்னம்பிக்கையுடன் இருந்தாள். முகக்கண்ணாடியைக் கழற்றி துடைத்துக் கொண்டே எதேச்சையாக திரும்பியவளைப் பார்த்து நான் புன்னகைத்த போது, அவள் மறு புன்னகை செய்யாமல் உடனே கண்களை விலக்கிக் கொண்டது என்னைத் துணுக்குற செய்தது. அவள் மீண்டும் கண்ணாடியை அணிந்தவாறே மிஸ்டர் கோவக்ஸிடம் ஏதோ சொன்னாள். அவர் அவளின் கருத்தைச் சம்மதிப்பது போல மெல்ல தலையை ஆட்டினார். சிறிது நேரம் கழித்து எலெனா என்னை நோக்கித் திரும்பி புன்னகைத்தாள். இப்போது நான் மறு புன்னகை செய்யவில்லை. அவள் என்ன என்பது போல கைகளைக் காட்டி, புருவங்களை உயர்த்தினாள். நான் ஒன்றுமில்லை எனக் கண்களை மூடி, தலையை அசைத்தேன். ஏமாற்றத்துடன் வாடிய அவள் முகத்தில் கண்ணாடி வில்லையின் வழியே பெரிதாக தெரிந்த இரு கண்களையும் பார்த்த போது தான் எனக்கு உறைத்தது அவளுக்குத் தூர பார்வை இல்லையென, நான் சிரித்து விட்டேன். அவளும் சிரித்தாள். ஆனால் ஏனென்று எனக்குத் தெரியவில்லை.

இந்த விண்வெளி அணு உலை திட்டம் ஏற்று கொள்ள பட்டால் தான் எனக்கு இங்குத் தொடர்ந்து வேலை. ஆனால் நான் பெரிதாக எதையும் யோசிக்கவில்லை. வாழ்வில் இதுவரையில் நான் இப்படி தான்… ஒரு மீனவருக்கு மகனாகப் பிறந்த நான் இப்படியொரு திட்டத்தில் பங்கு பெறுவேன் என நினைக்கவேயில்லை. என் கடமைகளைச் சரியாக செய்தேன். அதுவும் என் தந்தைக்காக தானே அன்றி எனக்காக இல்லை. என் மூன்று வயதில் அம்மாவை இழந்த பிறகு அவர் தான் எனக்கு எல்லாமுமாக இருந்தார். அவர் மனம் புண்படும்படி நடக்கக் கூடாது என்பதைத் தவிர என் வாழ்வில் எனக்கென பெரிய திட்டங்கள் எதுவும் இல்லை. ஆங்கிலத்தில் சொல்வார்களே, ‘Just Flow with The Life’ என்று அது போல தான் வாழ்க்கையின் ஓட்டத்தில் இங்கு வந்து சேர்ந்திருக்கிறேன். எனவே நடப்பது எதுவானாலும் நடக்கட்டும் என்ற எண்ணமே எனக்குள் இருந்தது.

உலக நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில் அணுசக்தி கூட்டமைப்பின் தலைவர் விண்வெளி அணு உலை பற்றி சிறு முன்னுரையை அளித்துவிட்டு மிஸ்டர் கோவக்ஸை பேச அழைத்தார். மிஸ்டர் கோவக்ஸ் யாருக்கும் முகமன் சொல்லவில்லை. நேரடியாக பேசத் தொடங்கினார்.

“மதிப்பிற்குரிய உலக நாடுகளின் பிரதிநிதிகளே, இன்று நாங்கள் ஒரு அணு உலையைப் பற்றி பேச வரவில்லை. மனித குலத்தின் அடுத்த ஆற்றல் யுகத்தைப் பற்றி பேச வந்திருக்கிறோம். இதுவரை நாம், நமது தேவைகள் அனைத்தையும் பூமியிலிருந்தே பெற்றோம். அதன் விலையாக காடுகளையும், நதிகளையும், வளங்களையும் இழந்தோம். இனி நாம் இந்தப் பூமியிலிருந்து பெற எதுவும் இல்லை. இப்போது எஞ்சியிருக்கும் சிறு இயற்கையையும் நாம் காப்பாற்றியாக வேண்டும். இந்தத் திட்டம் அதற்கான ஒரு தொடக்கமாக அமையும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். இந்தத் திட்டத்தின் மூலம் நமக்குத் தேவையான ஆற்றலைப் பூமிக்கு வெளியே விண்வெளியில் உருவாக்கி, பூமியை இயற்கைக்கே திருப்பி கொடுக்க முடியும். அதுவே நாம் வாழும் நம் பூமிக்குச் செய்யும் நன்றிக் கடனாக இருக்க முடியும். எனவே தான் இந்த விண்வெளி அணு உலை திட்டத்தை நாங்கள் முன்வைக்கிறோம்.” அரங்கு முழுவதும் நிரம்பிய அமைதியில் அவர் குரல் விண்ணிலிருந்து பொழிவது போல முழங்கியது.

“அறிவார்ந்த பெருமக்களே, சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன், நிக்கோலஸ் டெஸ்லா கம்பிகள் இல்லாமல் மின்சாரத்தை உலகம் முழுவதும் அனுப்ப முடியும் என நம்பினார். அதற்காக கனவு கண்டார். ஆனால் அவரது கனவு அந்தக் காலத்தின் தொழில்நுட்பத்தை விட பெரியதாக இருந்தது. இன்று அந்தக் கனவை டாக்டர் எலெனா தலைமையிலான குழு நடைமுறையில் சாத்தியப்படுத்தியுள்ளது.

பூமியில் பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட கம்பிகளற்ற மின்சார பரிமாற்ற சோதனைகளின் வெற்றிக்குப் பிறகுதான் அணுசக்தி கூட்டமைப்பு இந்த இறுதி மதிப்பீட்டு ஆய்வு கூட்டத்தைக் கூட்டியுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் எல்லோருமே மனித குலம் புதிய யுகத்தில் அடியெடுத்து வைப்பதற்குச் சாட்சிகளாக இருக்க போகிறீர்கள். இனி பூமி அல்ல, விண்வெளி தான் நம் ஆற்றல் உற்பத்தி மையம். இந்த விண்வெளி அணு உலையின் பயன்களை நான் சொல்லி தான் நீங்கள் அறிய வேண்டும் என்பதில்லை. கடந்த நூற்றாண்டுகளில் நம் முன் இருந்த பெரிய சவால் தூய ஆற்றலை உற்பத்தி செய்வது எப்படி என்பது தான். சூரிய, காற்று, கடலலை போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களால் நாம் தூய ஆற்றலை உற்பத்திச் செய்தோம் ஆனால் அவற்றால் பூமியின் மின்சார தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியவில்லை. இந்தத் திட்டம் வெற்றியடைந்தால் நம் உலகின் மொத்த மின்சார தேவைகளையும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்களின் துணையோடு தீர்க்க முடியும். அதுமட்டுமில்லாமல் நம் பூமி மாசுபடுவதையும் தடுக்க முடியும். எனவே தான் இந்தத் திட்டத்திற்காக உங்கள் ஆதரவைக் கோருகிறோம்.” எ‌ன்றா‌ர்.

மிஸ்டர் கோவக்ஸ் பேசி முடித்ததும், ஆங்காங்கே சில குரல்கள் கேட்டன. ஒருவரை ஒருவர் திரும்பிப் பார்த்துப் பேசிக் கொண்டனர். அவர் அமைதியாக, “உங்களுக்கு எந்தக் கேள்விகள் இருந்தாலும் என்னிடம் கேட்கலாம்” எ‌ன்றா‌ர்.

ஜப்பான் நாட்டின் பிரதிநிதி எழுந்து, “டாக்டர் கோவக்ஸ், இந்தத் திட்டத்தை நம் மின்சார தேவைக்கான தீர்வு என்கிறீர்கள். ஆனால் இது உண்மையில் ஒரு நிரந்தர தீர்வு போல எனக்குத் தெரியவில்லை. நாம் பிரச்சனையைப் பூமியில் இருந்து விண்வெளிக்கு மாற்றுவது போலவே உள்ளது” எனக் கேட்டார்.

மிஸ்டர் கோவக்ஸ் அமைதியாக, “நம்மிடம் இப்போது இருக்கும் வாய்ப்புகள் மற்றும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நம்மால் என்ன தீர்வைச்  செய்ய முடியுமோ அதை தான் இந்தத் திட்டம் முன்வைக்கிறது. உண்மையில் இது ஒரு நிரந்தர தீர்வா எனக் கேட்டால், தெரியவில்லை என்பது தான் என் பதில். ஆனால் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி முன்னேறியிருக்காவிட்டால் மனித இனம் இன்னும் குகைகளில் தான் வாழ்ந்திருக்கும்” என்று புன்னகையோடு சொன்னார்.

“சரி. உங்கள் திட்ட அறிக்கைகளையும் தொழில்நுட்ப ஆவணங்களையும் நாங்கள் முழுமையாக ஆய்வு செய்தோம். அவை திருப்திகரமாகவே உள்ளன. ஆனால் அவற்றில் இடம்பெற்றுள்ள செயல்திட்டங்கள், அவசரகால மாற்று செயல்திட்டங்கள் அனைத்தும் கணிக்கப்பட்ட சூழ்நிலைகளுக்கானவை. அப்படியானால் கணிக்க முடியாத ஒரு சூழ்நிலை உருவானால் என்ன செய்வீர்கள் என்ற கேள்வி எழுகிறதல்லவா? அப்படி இருக்கும் போது  இந்தத் திட்டம் வெற்றி பெறும் என எதன் அடிப்படையில் நம்புவது?” எனக் கேட்டார். இந்தக் கேள்விக்காகத்தான் மிஸ்டர் கோவக்ஸ் காத்திருந்தார். அவருக்குத் தெரியும் சூழ்நிலைகளின் சாத்தியக்கூறுகள்  மில்லியன் கணக்கிலானவை. நாம் அறிந்த சூழ்நிலைகளைக் கொண்டு விண்வெளியைக் கணிக்க முடியாது. அது மனிதனால் இயல்வது அல்ல. ஆனாலும் மிஸ்டர் கோவக்ஸ் திறமையாக சமாளித்தார்.

“இந்தத் திட்டத்தில் தோல்விக்கான வாய்ப்பே இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் எந்த நம்பிக்கையின் அடிப்படையில் விண்வெளியில் ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்களை இயக்குகிறோமோ, எந்த நம்பிக்கையில் சூரிய மண்டலத்தின் எல்லைகளைத் தாண்டி ஆய்வுக் கலங்களை அனுப்புகிறோமோ, அதே நம்பிக்கையின் அடிப்படையில்தான் இந்தத் திட்டத்தையும் உங்கள் முன் கொண்டு வந்திருக்கிறோம். நாம் அறிந்தவற்றால் மட்டுமல்ல, அறியாதவற்றை எதிர்கொள்ளும் தைரியமும் தான் நம்மை இத்தனை காலமும் வழிநடத்தியுள்ளது என்பதை மறந்து விடாதீர்கள். எங்களிடம் அறியாதவற்றை எதிர்கொள்ளும் தைரியம் உள்ள ஒரு குழு இருக்கிறது. அந்தக் குழு இந்தத் திட்டத்தை நிச்சயமாக வெற்றி பெற வைக்கும்”. மிஸ்டர் கோவக்ஸ் திடமாக சொன்னார். அந்த உறுதி எனக்குக் கொஞ்சம் வியப்பாக தான் இருந்தது.  ஜப்பான் நாட்டின் பிரதிநிதி ஆமோதிப்பது போல தலையசைத்து விட்டு அமர்ந்தார்.

ஆஸ்திரியா நாட்டின் பிரதிநிதி எழுந்து, “மிஸ்டர் கோவக்ஸ் நிலவில் அணு கழிவுகளைக் கொட்டுவதால் நிலவுக்குப் பாதிப்பு எதுவும் ஏற்படாது என உங்கள் அறிக்கையில் உள்ளது. அது ஏற்றுக்கொள்ள கூடியதே. ஆனால் அதற்கான பயண செலவு அதிகம் அல்லவா?” எனக் கேட்டார்.

“ஆம்… அதிகம் தான்… ஆனால் 100 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே செய்யபடும் பயணத்திற்கு அது அதிகம் இல்லை அல்லவா?”

அவர், “ஆம்” எ‌ன்றா‌ர் குழப்பமாக

“இந்த ஒருவருட சோதனை ஓட்டம் வெற்றியடைந்தால் அடுத்த தலைமுறை விண்வெளி அணு உலைகளை நூறு ஆண்டுகள் தொடர்ந்து விண்வெளியில் இயங்கும் வகையில் வடிவமைக்க வேண்டும் என்பதே என் எண்ணம்.” என்ற போது அரங்கு முழுவதும் ஒரு வியப்பொலி எழுந்தது.

4

அணு உலையின் அனைத்து சோதனை முடிவுகளும் சரியாக இருந்தன. அவற்றை AURA-வில் பதிவேற்றி, பூமியில் இருந்த கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பிய பிறகு, அணு உலையை விண்வெளி மையத்திலிருந்து பிரிக்கும் நடவடிக்கையைத் தொடங்கினோம். அணு உலையும் விண்வெளி மையமும் இணைந்திருந்த பகுதியில் உள்ள இரு காற்றடைப்பு கதவுகளையும் மூடி, அணு உலையை முழுமையான தானியங்கி நிலைக்கு மாற்றினோம்.

நிலவின் சுற்றுப்பாதையை அடைவதற்கான இயக்க வரிசை, தேவையான திசைத் திருத்தங்கள், இறுதியில் நிலவில் தரையிறங்கும் வரை மேற்கொள்ள வேண்டிய அனைத்து செயல்முறைகளும் ஏற்கனவே நிரலிடப்பட்டுப் பதிவேற்றப்பட்டிருந்தன. பிணைப்பு நீக்கும் கட்டுப்பாட்டைப் பூமியில் இருந்த குழுவிடம் ஒப்படைத்துவிட்டு, நாங்கள் பூமிக்குத் திரும்பும் விண்கலத்தில் சென்று அமர்ந்தோம்.

நாங்கள் ஆணைகளைக் கொடுக்க கொடுக்க AURA தான் எல்லாவற்றையும் செயல்படுத்தியது. அணு உலை பிரிந்தவுடன் எங்கள் பணி முடிந்துவிடும். அதன்பிறகு நிலவை நோக்கிய அதன் முழுப் பயணமும், தரையிறக்கமும், பூமியில் இருந்த கட்டுப்பாட்டு மையத்தின் கண்காணிப்பிலேயே நடைபெறும்.    

எல்லாம் எந்தவித பிழைகளும் இல்லாமல் முடிந்ததில் நான் மிக ஆசுவாசமாக உணர்ந்தேன். எலெனா கணினியில் நிலவை நோக்கிய அணு உலையின் பாதையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அது எங்கள் வேலையே இல்லை என்றாலும் அணு உலை நிலவில் சென்று இறங்கும் வரை அவள் உறங்கமாட்டாள். ஆனால் நான் அப்படியல்ல. ஒரு வருட பிரிவுக்குப் பிறகு ஊருக்குச் செல்கிறேன். இந்த அணு உலை, விண்வெளி மையம் எல்லாவற்றையும் மூளையில் இருந்து தூக்கி வீசிவிட்டு இரண்டு மூன்று மாதங்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக செலவிட வேண்டும். என் மனம் நாய்க்குட்டியைப் போல என்னை விட்டுவிட்டு வேகமாகப் பூமியை நோக்கி ஓடி என்னிடம் திரும்பி வந்து நின்றது. பின் மீண்டும் ஓடி திரும்பி வந்து என் பொறுமையைச் சோதிக்க, பிணைப்பு நீக்கம் எப்போது நடைபெறும் என எதிர்பார்த்து நான் நேரத்தைப் பார்த்தேன். UTC 18:18 எனக் காட்டியது. எலெனா இன்னும் கணிணியில் எதோ தரவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். நாங்கள் இருந்த விண்கலத்தின் ஜன்னல் வழியே ரியாக்டர் கோரும் நிலவும் இருளின் பின்னணியில் தெரிந்தன. AURA பிணைப்பு நீக்க கட்டளைகளை ஒவ்வொன்றாகச் சொல்ல தொடங்கியதும் பிணைப்பு நீக்க செயல்முறை தொடங்கப்பட்டு இணைப்பு பூட்டுகள் விடுவிக்கப்பட்டதும் அணு உலை மெதுவாக விண்வெளி மையத்திலிருந்து விலகத் தொடங்கியது. அதன் சிறிய அசைவு ஜன்னல் வழியே தெளிவாகத் தெரிந்தது. பின் அணு உலை தானியங்கி இயக்க நிலைக்கு மாற்றப்பட்டு அதன் பாதையில் விடப்பட்டதும் விண்வெளி மையத்திலிருந்து பிரிந்து நிலவை நோக்கி அமைதியாக நகரத் தொடங்கியது. எனக்கு அது ஒரு ஏவுகணை போல தெரிந்தது. அப்படியானால் மனித இனம் நிலவை நோக்கி போர் தொடுக்கிறதா? என்ற குழந்தைத் தனமான என் சிந்தனையை எண்ணி நான் புன்னகைத்த போது, AURA “Reactor core destined for Lunar Disposal Zone” என்றது.

நான், “கடைசில நிலாவையும் குப்பை கொட்டுற இடமா மாத்திடோம்ல” என சொல்ல, எலெனா “என்ன” என்பது போல நிமிர்ந்து பார்த்தாள். சற்று நேரம் யோசித்தவள் நான் எதை சொல்கிறேன் எனப் புரிந்தவுடன் அவளும் புன்னகைத்து, “ஆம்.. தவிர்க்க முடியாத சேதாரம்” எனச் சொல்லி சிரிக்க நானும் அவளுடன் சேர்ந்து சிரித்தேன்.

5

விண்வெளியில் இருந்து பூமிக்கு வந்த பிறகு மருத்துவ சோதனைகள் எல்லாம் முடிந்து நான் ஊருக்கு வந்தேன். எப்போதும் கடலலைகளின் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும் சிறிய மீனவ கிராமம். கடல் காற்றுடன் தென்னை மரங்கள் சூழ ஒரு அழகிய வீடு. அதனுள் ஓயாமல் ஒலிக்கும் என் மகனின் சிரிப்பு. என் மனைவியின் காதல். என் தந்தையின் இருப்பு. என் தனிமையின் உறைவிடமான புத்தக அறை. எங்கெங்குச் சென்று வந்தாலும் இங்கு தான் என் வாழ்க்கை உயிர் பெறுவது போல உணர்கிறேன்.

ஒரு மாலை நேரத்தில் மகனைக் கூட்டிக்கொண்டு கடற்கரைக்குச் சென்றேன். விண்வெளியில் இருந்து நான் பார்த்த நீலம் இங்குக் கடலாக என் முன்னே விரிந்து கிடந்தது. நான் சிறுவனாக இருந்த போது பார்த்தது போல இல்லை. கட்டு மரங்கள், வலைகள் என எதும் இல்லாமல் கடற்கரை வெறிச்சோடி இருந்தது. நாங்கள் ஒரு காலத்தில் மீனவர்களாக இருந்தோம் என்பதற்கு ஒரே சாட்சியாக இந்தக் கடல் மட்டுமே இப்போது உள்ளது. என் மகன் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தான். கிழ‌க்கு வானின் நீலப் பின்னணியில் நிலவு மெல்லிய தீற்றலாக தெரிந்தது. இன்று தான் அணு உலை நிலவில் இறங்கும் நாள். உடனே எலெனா நினைவும் வந்தது. உற்சாகமான பெண். அவளை அழைத்து பேச வேண்டும் என நினைத்து மகனுடன் வீட்டுக்கு வந்தேன். எலெனாவிடம் பேசிய போது இன்று இரவு 8 மணியளவில் நிலவில் அணு உலை இறங்கும் எனச் சொன்னாள். எனக்கு அது முக்கியமே இல்லை. நான் அழைத்தது அவளின் நலம் விசாரிக்க தான். ஆனால் அவளுக்கு அது பெரிய விஷயமில்லை. வேலையில் இருந்தாலே அவள் நலமாக தான் இருப்பாள் எனப் புரிந்து கொண்டேன்.

அழைப்பைத் துண்டித்து விட்டு அறையிலிருந்து வெளியே வந்த போது என் மகன், “அப்பா.. மாடிக்கு போலாம்… மாடிக்கு போலாம்…” எனக் கத்திக் கொண்டே கீழ் தளத்தில் இருந்து வேகமாக படியேறி வந்தான். அவனைத் தூக்கி கொண்டு வீட்டு மாடிக்குச் சென்றேன். என்னென்னவோ கதைகள் சொன்னான். எதேதோ விளையாட்டுகள். என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும் நானும் அவனுடன் பேசி விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது என் அப்பா மாடியில் வந்தார்.

அவரைப் பார்த்ததும் என் மகன், “தாத்தா” என ஓடிச் சென்று அவர் கைகளைப் பிடித்து, “நீங்களும் வாங்க… விளையாடலாம்” என அழைத்தான். அவர் சிரித்துக் கொண்டே, “தாத்தாக்கு விளையாடுற வயசு எல்லாம் தாண்டியாச்சு மக்கா” எனச் சொல்லி அவனை அணைத்து மடியில் வைத்துக் கொண்டு என் அருகில் அமர்ந்தார். அவர் மடியில் தலையும் என் மடியில் காலுமாக எங்கள் இருவருக்கும் இடையே பாலம் போல அவன் படுத்திருந்தான்.

“போன வேல எல்லாம் நல்லபடியா முடிஞ்சதா?”

நான், “ஆமா… நல்ல படியா முடிஞ்சது” என்றேன். அப்பாக்களிடம் பேசும் போது எழும் தயக்கம் என் குரலில் இருந்தது.

“எவ்ளோ நாள் ஊர்ல இருப்ப?” எப்போதும் போல உணர்ச்சியில்லா அதே குரலில் கேட்டார்.

“சரியா தெரியல… இன்னிக்கு தான் அணு உலை நிலால இறங்குதுனு எலெனா சொன்னா… அவ வர சொல்லி கூப்டா எப்ப வேணும்னாலும் போற மாதிரி தான் இருக்கும்”

அவர் முகம் சுருக்கி, “ஏன்? அத வானத்துலே விட முடியாதா?”

இந்தக் கேள்விக்கு நான் சொல்லும் பதிலை அவரால் புரிந்து கொள்ள முடியுமா என்ற சந்தேகமே எனக்கு இல்லை. ஏனெனில் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு அவருக்கு வாசிக்கும் பழக்கம் உண்டு. என் வாசிக்கும் பழக்கமே அவரிடம் இருந்து வந்தது தான்.

நான், “இல்ல… பூமியிலோ, விண்வெளியிலோ அணு கழிவைக் கொட்டக்கூடாதுன்னு தடை பண்ணாங்களே… உங்களுக்கு ஞாபகம் இல்லியா” எனக் கேட்க அவர் யோசித்துக் கொண்டே, “ஞாபகம் இருக்கு… ஆனா விண்வெளில விட்டா என்ன பிரச்சனை?”

“விண்வெளில வேற நிறைய செயற்கைகோள்களும், விண்வெளி மையங்களும் இருக்குல. இப்ப இல்லனாலும் எதிர்காலத்துல இந்த கதிர்வீச்சுனால பிரச்சனை வரக்கூடாது பாருங்க, அதான் நிலால கொட்டுறோம்” என்று சொல்லிவிட்டு, “நான் கூட எலெனா கிட்ட சொன்னேன், கடைசில நிலாவையும் குப்ப கொட்டுற இடமா மாத்திட்டோம்னு.” என்னை அறியாமலே சிரித்து விட்டேன்.

“நிலால… எப்படி? போய் இடிச்சா வெடிக்காதா?” அவரிடம் ஒருவித தவிப்பு உருவானது.

“இல்லப்பா… இடிக்காது… மெதுவா தான் இறக்குவாங்க… எப்படி சொல்லி உங்களுக்கு புரிய வைக்க?” என நான் சொன்ன போது எங்கள் மடியில் படுத்திருந்த என் மகன், “உம்மா குடுக்குற மாதிரியா அப்பா”  என்று கேட்டான். நான், “ஆமா டா செல்லம்” என அவனைத் தூக்கி கன்னங்களில் முத்தம் கொடுத்தேன்.

“உம்மா குடுக்குற மாதிரி…” என முனங்கிய பின் என் அப்பா அமைதியாக இருந்தார். எந்த உணர்ச்சியையும் காட்டாத அவர் முகத்தில் அடர்த்தியான புருவங்களுக்குக் கீழே இருந்த குழி விழுந்த கண்கள் வெறும் நிழலாகத் தெரிந்தன. என் கழுத்தைக் கட்டிக் கொண்டு என் இரு கன்னங்களிலும் மாறி மாறி முத்தம் தந்து விட்டு, “தாத்தா யாருக்கும் உம்மா குடுக்காது” என்று என் மகன் சொன்ன போதும் அவரிடம் எந்த அசைவும் இல்லை. அர்த்தமின்மையின் வெறுமை அவர் முகத்தில் நிறைந்திருந்தது. நான் எதையோ தவறாக உணரவே என் மகனை மனைவியிடம் அனுப்பிவிட்டு, “அப்பா, என்னாச்சு?” எனக் கேட்டேன்.

“உன் அம்மா எப்படி இறந்தானு உனக்கு தெரியாதுல?”

இந்தக் கேள்வியை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. சிறுவயதில் எத்தனையோ முறை கேட்டு அவரிடம் இருந்து பதில் வராமல் எனக்குச் சலித்துப் போன கேள்வி இது. இப்போது திடீரென கேட்டால் நான் என்ன சொல்வது? கடலில் விழுந்து இறந்தார்கள் என உறவினர்கள் பேசி கேட்ட ஞாபகம் இருந்தாலும் “இல்லை” என்று தான் சொன்னேன்.

“உனக்கு அப்போ மூணு வயசு” அவரின் இடதுபக்க உருவம் மட்டும் இருளில் தெரிய ஒரு சிலை போல பேசினார்.

“அப்போ எல்லாம் நம்ம ஊரு சனம் தெக்க தான் உறங்கும். அப்படியே விடிய நேரத்துல தொழிலுக்கு போறவங்க போன பிறகு மத்தவங்க வீட்டுக்கு வருவாவு. அன்னிக்கு நானும் உன் அம்மயும் தூங்காம நம்ம வள்ளத்துல இருந்து நெறைய நேரம் பேசிட்டே இருந்தோம். அன்னிக்கு முழு நெலவு கடலுக்கு மேல வெட்டமா கைய நீட்டுனா தொட்டுடலாம் போல அவ்ளோ கிட்டத்துல இருந்துச்சு. டிசம்பர் மாச வாட காத்து குளிருல என் தோள்ல சாஞ்சு இருந்த உன் அம்ம சொன்னா, “நிலா வெளிச்சத்துல கடலு வெள்ளி பாத்திரம் போல மின்னுதுனு”. அந்த நேரம் எனக்கு அது எப்படி தோணுச்சுனு தெரியல “இந்த நிலா வெளிச்சத்துல உனக்கு முத்தம் தர ஆசையா இருக்குனு சொன்னேன்” அவ என் தோள்ல இருந்து எழும்பி என் முகத்த பாத்து, “அப்படினா நிலா கிட்ட என்னை கூட்டிட்டு போங்கனு சொன்னா”… முதல்ல அவ சொன்னது எனக்கு புரியல, ஆனா புரிஞ்ச உடனே, “நிஜமாவா? நீ பயப்பட மாட்டியேனு?” கேட்டேன். அவ “நீங்க இருக்கும் போது எனக்கென்ன பயம்னு சொல்லி சிரிச்சப்போ” என்ற போது அவர் குரல் ஒரு கணம் நின்று பின் தொடர்ந்தது.

“நாங்க வள்ளத்த கடல்ல இறக்கி நிலாவ பாத்து போனோம். உன் அம்ம அணியத்துல நின்னு நிலாவ பாத்து கைய நீட்டி, “நான் நிலாவ தொடணும், ஸ்பீடா போங்கனு” ஒரு குழந்த மாதிரி துள்ளுனா. என் புத்திக்கு அந்த நேரம் எதுவுமே தட்டுபடல. கடலுக்க சேலு, வள்ளத்துக்க ஸ்பீடு ஒண்ணையும் நான் கணிக்கல. நேரா நிலால இடிக்க போற மாதிரி வள்ளத்த பறக்க வச்சேன். வீசின காத்துல உன் அம்மக்க தலமுடி அவுந்து பறக்க அவ சிரிப்பு மட்டும் தான் எனக்கு கேட்டுட்டு இருந்துச்சு. ஒரு செகண்ட்ல அணியத்துல நின்ன உன் அம்ம தடுமாறி கடல்ல விழுந்தா, அவ மேல வள்ளம் ஏறிப் போன பிறகு தான் நடந்தது என்னனு எனக்கு புரிஞ்சது. அன்னிக்கு நான் எடுத்த அந்த சின்ன முடிவு உன் அம்மயோட சாவுல என்னை கொண்டு நிறுத்திச்சு”. அவர் என்னை நோக்கி திரும்பி, “உனக்கு எப்படியோ தெரியாது, ஆனா எனக்கு எப்பவும் இந்த நிலவ பாத்தா உன் அம்ம நியாபகம் தான் வரும்” என்று சொல்லி விட்டு என் தோளில் கைவைத்து “சரி வா… போய் சாப்டலாம்” எனக் கீழிறங்கி சென்றார்.

நான் அப்படியே அமர்ந்திருந்தேன். என் இதயம் துடிக்கும் ஓசை காதில் கேட்கும் அளவுக்கு என் மனம் அமைதியாக இருந்தது. “சாப்ட வாங்க” என் மனைவியின் குரல் கீழிருந்து கேட்கவே, எழும்பி செல்வதற்காக நிமிர்ந்த போது வானில் துணி மறைவிலிருந்து எட்டிப் பார்க்கும் குழந்தை போல பிறை நிலா ஒளிர்ந்து கொண்டிருந்தது.

12 comments for “நிலவுக்கு ஒரு நியூக்ளியர் முத்தம்”

  1. Thoufeeq AM
    September 1, 2026 at 2:28 am

    Really beautiful

    Since the story was sci-fi,
    I was expecting disaster like some nuclear explosion in moon ,
    As the name says nuclear kiss ,
    Man looks for negativity🥴,

    But the story doesn’t go in my expected way🙄

    From the sanga kaalam ,
    Moon is used metaphorically in love, here also used in a different way for the expression of love, which is not a physical one

    Also the love thread between 3 generations , father to son, is captured beautifully

    Gives an opening to electricity transport in future ,
    All the inventions are someones dream. Also the energy requirements in future has been captured in a niche.

    It’s My point of understanding,
    Different perspectives are welcome to understand the plot and message behind 💐

    The author, Being brought up near sea, with background in electrical engineering, love for the space , all been instilled in the story, like sugar in the water.

    Kudos Rotricks

    Publishing in Vallinam
    Where they have their own regulations
    And one of the few journals indicated monthly in jeyamohan.in is a feather on your cap

    • Rotricks Theesmas
      September 3, 2026 at 10:40 am

      Thankyou Bro 😊

  2. September 3, 2026 at 12:35 am

    Very detailed. When the story started, my first doubt was transmission. You touched that later, though it was unconvincing, scifis need not convince anything 😂

    The parable of soft landing to a kiss was so good.

    Ending is open, of course it’s the writer’s prerogative. But leaving the result open after raising so many questions doesn’t suit well with me.

    • Rotricks Theesmas
      September 3, 2026 at 10:42 am

      I deliberately avoided the technical details because the story is not really about sci-fi. I just wanted to stay focused on the plot. Still, I somehow tried to give some justification for the technical aspects, and I believe that worked.

      Yes, you’re right. A person like you would definitely ask questions about the transmission 😄 But if I had tried to explain that part in detail, the story would have easily turned into a குறுநாவல்.

      I like to leave gaps in my stories and raise questions as well. But I prefer to leave those gaps for the readers to fill and let them find their own answers.

      Thank you so much for the detailed review and for your continued support. ❤️

  3. Jaseela Naufal
    September 3, 2026 at 7:54 pm

    டியர் ரோட்ரிக்ஸ்!
    தலைப்பே அசத்தலா இருக்கு. அந்த தலைப்பிற்கான காரணத்தை தெரிஞ்சுக்கும்போது மன நெகிழ்ச்சியை தருகிறது.
    ஒரு அறிவியல் புனைவு எழுதும்போது , தொழில் நுட்ப வார்த்தைகள் வாசகர்களுக்கு புரியும்படியாக எழுதுவது ஒரு சவால்தான்.அதை நீங்க அழகாக விவரிச்சிருக்கீங்க.
    காதல்,நிலா,முத்தம்…இந்த மூன்றையும் அழகாக கதைக்குள் கொண்டு வந்து இருக்கிறீர்கள்.
    நான் நிறைய எழுதி spoil பண்ண விரும்பல. மக்களே எல்லாரும் நிச்சயம் வாசிங்க!
    We are so proud of you Rotricks bro!. My hearty wishes.💐✨

    • Rotricks Theesmas
      September 15, 2026 at 12:34 pm

      Thankyou 🥰

  4. சாதிக் பாஷா
    September 3, 2026 at 8:34 pm

    மிக அருமை ரோட்றிக்ஸ். ஒரு நீண்ட விஞ்ஞான கதையின் கடைசி வரியில் முத்தாய்ப்பாய் ஒரு மணித உணர்வு. எதிர்ப்பார்க்கவே இல்லை. மிக சிறப்பு. நுனுக்கங்களும் விவரனைகளும் மிக மிக சிறப்பு

    • Rotricks Theesmas
      September 15, 2026 at 12:35 pm

      நன்றி அண்ணா ❤️

  5. Punniavan Govindasamy
    September 4, 2026 at 1:29 am

    ஓர் அறிவியல் புனைவில் தொடங்கி மனிதக் காதலில் வந்து முடியும் கதை. இரண்டுமே சம அளவில் இயங்கியதோடல்லாமல், கதைக்குரிய புதிர்த்தன்மையைக் கைவிடாமல் நகர்ந்து சென்று உச்சத்தைத் தொட்டிருக்கிறது. அறிவியலிலிருந்து யதார்த்ததை மிக அநாயாசமாகத் தொட்டிருக்கிறது.

    • Rotricks Theesmas
      September 15, 2026 at 12:36 pm

      மிக்க நன்றி ☺️

  6. shankar mahadevan
    September 4, 2026 at 5:49 pm

    சின்ன முடிவுகள்…பெரிய விஷயங்களை நோக்கி நகர்த்தும்…அருமையான தொடக்கம். பூமியில் இருந்து நிலவைப் பார்த்த பிரயாத்தில் இருந்து அருகில் இருந்து நிலவைப் பார்க்கும் பெரிய விஷயம்.
    காலத்தின் கட்டாயமாய் அணு உலைப் பேரழிவிற்குப் பிறகு மீண்டும் அணு உலை. அழகாய் தெரியும் நிலவில், பாட்டி வடை சுடும் நிலவில் கழிவுகள். மனது வலிக்கத் தொடங்கியது. எதையோ இழந்துக் கொண்டிருக்கிறோமோ என்ற வலி. AI இன் தாக்கம். சுவாரஸ்யமில்லா அபூர்வம் – நல்ல சொல் பயன்பாடு.
    எலெனாவின் அறிமுகம் அழகு..அந்த hungary சிரிப்பை கண் முன் கொண்டுவந்த விதம் அருமை. எழுத்தாளரின் புன்னகையின் பொழுது நம் உதடுகளிலும்…
    நிலவின் அருகில் உணரும் தனிமை..தூரத்தில் தெரியும் பூமியைக் கண்டு ஆர்ப்பரிக்கும் அதே மனது. குடும்ப நினைவு. தொழில்நுட்ப வளர்ச்சியை கோடிட்டு காட்டும் video call.. உரையாடல் – நிதர்சனம் . அமைதியான குருவி – நல்லதொரு எதிர்மறை. ஈவா என்ற பெயர் வைக்கக் காரணம்? அதன் பொருள் Life என்பதாலா ? அடுத்த வரியில் வாழ்கை முடியற மாதிரி இருக்கு என படிக்கும் பொழுது…
    முடிவு – தொடக்கம் ஏனோ கவியரசின் வாழையடி வாழை ஒன்று ஜனனம். அது வந்த பின்பு தாய் விழுந்து மரணம் என்ற வரிகள் மனதில் ஓடியதை தவிர்க்க முடியவில்லை.
    கோவ்கஸ் உடனான அந்த call — official . Aura – அருமையான பெயர். வாசனை என்ற பொருள் படும் அந்த வார்த்தை. எல்லா இடங்களிலும் வாசனை இருக்கும்..ஏதோ ஒரு வாசனை. அது போல, AI இல்லாத இடமே இருக்கப் போவதில்லை எனும் விதமாய் நான் புரிந்து கொண்டேன்.
    வேலைப் பார்க்கும் பொழுது பழைய நினைவுகளை அசை போட அதில் கோவ்கஸ் இன் தன்னபிக்கை..convincing speech .. எழுத்தாளரின் அறிவித்த திறன் ஆகியவற்றை தம்பட்டம் அடிக்காமல் சொன்ன விதம் அருமை.
    குப்பைக் கூடமாகும் நிலா..
    பூமியில் இறங்கும் வரை ஏதாவது nadakkumo, எல்லாம் நல்ல படியா நடக்கணும் என்ற பதட்டம் ஆசிரியரின் அறிவியல் தகவல்களை அசட்டை செய்தது. என்ன அறிவியல் தகவல்கள் என்பதற்க்காக மீண்டும் படித்தேன். முழுமையாய் விளங்கவில்லை.
    கடைசியில் நடந்த தந்தையுடனான உரையாடல் மனதை கசக்கியது. அன்னிக்கு எடுத்த சின்ன முடிவு.. அணு உலை அழிவிற்கும் வழிவகுக்கும்..பயன் பாட்டை ஒட்டியது. ஏனோ இந்த தாக்கம். முடிவில் தொட்ட அந்த மனிதம் – காதல் – நிலவு..
    அருமை.

    • Rotricks Theesmas
      September 15, 2026 at 12:36 pm

      மிக்க நன்றி அண்ணா ❤️

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...