சாம்பலாகி சுடர்ந்தெழும் நாரிகள்

மிக விரைவில் வல்லினம் பதிப்பில் வெளிவரவுள்ள மஹி ராமகிருஷ்ணனின் கவிதை நூல் தமிழ் மொழியாக்கம் ஒரு பகுதி. 

காளியின் மகள்கள்

ஒரு சேர காற்றில் மிதந்து வந்து கொண்டிருந்தது இடிக்கப்பட்ட வேம்பு இலையின் சுகந்தமும் வெடிமருந்தின் மணமும். பாட்டிகள் மண்ணில் மண்டியிட்டு ஒரு பெரும் புரட்சியையே விழுதாக அரைத்துக் கொண்டிருப்பது போல அவை தோன்றச் செய்தது.  முன்பு, மருந்துகளைத் தயாரிக்க உதவிய பாட்டிகளின் உரலும் உலக்கையும் இப்பொழுது தோட்டா உறைகளை இடித்து தாயத்துகளாக மாற்றிக் கொண்டிருக்கின்றது. மூத்தகிழவிகளுக்கு நினைவுண்டு. கோயில்களில் முடக்கப்படுவதற்கு முன், காளி காட்டாறாக இந்தக் கிராமங்களில் அலைந்து திரிந்து கொண்டிருந்தாள். அப்போது தகரக் கூரைகளின் மீது பொழியும் மழையின் சப்தத்தைப் போல அவளின் கபால மாலை கலகலத்துக் கொண்டிருந்தது.  

நகரத்தில், வாகன நிறுத்துமிடத்தில் கணக்கு வழக்கு நூல்களை எரித்துக் கொண்டிருக்கிறாள் வங்கியில் பணிபுரியும் பெண் ஒருத்தி; அவள் முதுகோடு ஒட்டிக் கொண்டிருக்கிறது அவளது பட்டாடை. அதோ அங்குப் பற்றியெறிந்து கொண்டிருக்கும் தீப்பிழம்புகள் இத்தனை ஆண்டுகளாக நிலுவையில் கிடந்த ஊதிய பாக்கிகளைக் கரும் பனியாக மாற்றிக் கொண்டிருக்கிறது. பொசுங்கும் குங்குமத்தின் கடும் நெடியை ஒத்த வாசனையை எழுப்பும் இந்தப் புரட்சி, அந்த பெருநிருவனத்தின் கூட்ட அறைகளிலும் எரியத்தொடங்குகிறது. நாரிகள் இப்பொழுது பளபளக்கும் மேஜைகளின் மீது வெறுங்கால்களோடு வேரூன்றி நிற்கின்றனர். அவர்களின் மெட்டிகள் வெளிதேசத்திலிருந்து வந்திறங்கிய சீமைத்தேக்கு மேஜையின் மேல் ஆழமான பிறை வடிவ கீறலைப் பதியவைக்கின்றன. அது பாட்டிமார்கள் தங்கள் கண்ணாடி வளையல்களை மோதி உடைக்கும் போது எழும் சத்தத்தை ஒத்த ஓசையெழுப்புகிறது. துக்கத்தினாலின்றி, உடைபட்ட கண்ணாடி துண்டுகளால் சட்டமன்ற சுவர்களில் புதிய கல்வெட்டுகளைச் செதுக்கின்றவை அவை.

மருத்துவச்சிகளின் ஒரு கரம் பேறுகாலம் பார்க்கிறது மற்றொரு கரம் கையேடுகளை வழங்குகிறது. தொப்புள்கொடி அறுக்கப்படுவதில்லை; அது கயிறுபோல பின்னப்படுகின்றது. இருபதைத் தொடாத நாரிகளோ செந்நிற குங்குமத்தைப் பூசிக்கொள்கின்றனர், ஆனால், நெற்றி வகிட்டில் அல்ல; கன்னங்களில், யுத்தக்கோலமாய் அதை அப்பிக் கொள்கின்றனர்.

மாண்டவர்கள் நம்மோடுதான் நடைபோட்டுக் கொண்டிருக்கின்றனர். மின்தடையின்போது ஒளிர்ந்து அணையும் தெருவிளக்குகளுக்கிடையில் அவர்களை நீங்கள் காணலாம். கால்களில் கற்களைக் கட்டி நீரில் மூழ்கடிக்கப்பட்ட முப்பாட்டிகள் இப்பொழுது அவர்களின் வம்சாவளியினரின் பின் மிதந்து வருகின்றனர்; ஊழல் பணத்தின் வழித்தடங்களைக் கிசுகிசுக்கின்றனர். பாகற்காயும் புளியும் கலந்த சுவையுடன் வெளிப்படுகின்றது அவர்களின் வன்மம்

நள்ளிரவில், அடுப்பங்கரையில் நாரிகள் சுடும் ரொட்டிகளில் எரிக்கப்பட்ட வரதட்சனை ஒப்பந்தங்களின் சாம்பல் கலந்திருக்கிறது.  முதல் ரொட்டியை மெல்லும்பொழுதே உங்கள் பல்லீற்றீல் உண்மைகள் குருதியாக கசிந்துவிடும்: உயிரோடு சாம்பலாக்கப்பட்ட ஒவ்வொரு மகள்களையும், ஆண் புதல்வனைப் பெற்றெடுக்க தாமதமானதால் வலுக்கட்டாயமாக கீறித் திறக்கப்பட்ட ஒவ்வொரு கருப்பைகளையும், ஆண்களின் கையெழுத்தில் எழுத்தப்பட்ட ஒவ்வொரு ‘தற்கொலை’ குறிப்புகளையும் நாங்கள் நினைவில் வைத்துள்ளோம். இதோ புரட்சி நீதியோடும் கொஞ்சம் கூடுதலான வன்மத்தோடும் சேர்த்து பரிமாறப்படும்.

அவள், எவரும் எதிர்பாராத தருணங்களில் தோன்றிடுவாள் – கைப்பற்றப்பட்ட ஒளிபரப்புகளின் இரைச்சலுக்கிடையே, காளியின் உருவம் திரையில் சில்லுகளாக சிதைந்து தோன்றுகின்றது. பளபளக்கும் அதிகாரியின் காலணியில் துப்புரவாளர் ‘தற்செயலாக’ சிந்திய மாதவிடாய் குருதியின் வளைந்து நெளியும் பளபளப்பிலும் அவள் உருவம் தெரிகின்றது.

நாங்கள் மனு அளித்தோம். அதை நச்சரிப்பு என்கிறீர்கள்.

நாங்கள் போராடினோம்.  அதை மாதவிடாய் முன்புக்கு வரக்கூடிய நோய்க்குறி என்கிறீர்கள்.

அதனால் இனி, இறைவிகள் பல முகங்களை அணிந்துகொள்ளப்போகிறார்கள் – உண்மையைக் கசியும் மருந்தை மதுவில் கலந்து பரிமாறும் மதுக்கூடப் பெண்ணாக; தன் கட்டைவிரலைச் சுழற்றியபடி மொத்த சாதியமைப்பையும் முறியடிக்கும் தலீத்திய பாட்டியாக; ‘கோட்பாடு’ என்று பெயரிடப்பட்ட புரட்சிப் பிரகடனத்தைப் புத்தகப்பையில் சுமந்து செல்லும் மாணவியாக.

நாங்கள் காளியின் மகள்கள்… அக்கினிச்சுடரின் மகள்கள். எங்களைப் புனித நீரால் மூழ்கடிக்க நினைக்கின்றீர்கள்.

எங்களின் புரட்சி மிட்டாய் பெட்டிக்குள் மறைந்திருக்கும் கத்தி; ஆசிர்வாதத்தில் புதைந்திருக்கும் சாபம்: அதிகாரத்தின் மண்டபத்தில் செந்நிறம் பூசப்பட்ட கைம்பெண்ணின் வெள்ளைச் சேலை.

நீங்கள் எங்களுக்குச் சங்கிலிகளைத் தந்தீர்கள்.  நாங்கள் அதை பாலமாக்கிவிட்டோம். இப்பொழுது, பாலத்தை நாங்கள் கடப்பதைப் பாருங்கள்.

தமிழில்: சாலினி

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...