எழுத்தாளர் ம. நவீன் எழுதிய ‘வேப்டியான்’ சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கதையும் மாறுபட்ட உலகத்தின் விளிம்பில் கால்பதிக்கச் செய்து அதன் ஆழத்தை எட்டிப்பிடிக்கத் தூண்டுகிறது. ஒவ்வொரு கதையையும் ஒருமுறைக்கு இருமுறை வாசித்திட்ட பிறகே சில முக்கிய இடங்களை அடையாளம் கண்டும் கதை நகர்த்தலின் மையத்தைத் தொட்டும் புதிய அனுபவங்களை உருவாக்கி அதனூடே பயணிக்க முடிந்தது.
‘வேப்டியான்’ தொகுப்பில் இடம்பெற்ற ‘நகம்’ எனும் சிறுகதை அதிகாரத்தின் உச்சம் உடலோடு பிணைந்திட்ட சிறு சினையிலும் வெளிப்படும் என்பதனை உணர்த்தும் விதமாக எழுதப்பட்டிருக்கிறது. இக்கதையில் மையப்புள்ளியாகக் காட்டப்படும் வளர்மதி தனது ஊசலாடும் வாழ்வாதாரத்திலும் நகங்களைப் பராமரிப்பதில் அளவுகடந்த கவனம் கொள்கிறாள். அதனை அலங்கரிப்பதிலும் பாதுகாப்பதிலும் உள்ள தீவிரமானது பெற்ற தாய்வழியாகக் கடத்தப்பட்டிருந்தாலும் அவள் உளவியலோடு பொதிந்து கிடக்கும் அதிகார எழுச்சியின் சித்தரிப்பாகவே இருக்கின்றது என்பதனைக் கதையின் இறுதி பகுதியில் கணிக்க முடிந்தது. கதையில் இடம்பெறும் சீனப் பேரரசின் சாம்பிராஜியம் ஒரு பெண்ணால் (பேரரசியால்) முடிவு காண்கிறது. ஆட்சியின் முடிவை அறிவிக்கும் தருணம் நகம் என்பது அதிகாரத்தின் குறியீடு என்று சுட்டியும் தங்க நகக்கவசத்தை அணிந்திட்ட இறுதி ராணி என்பதாகக் கூறியும் அதனைக் கழற்றி எறிகிறாள். அச்செயலை ஏற்றுக்கொள்ள முடியாமல் கூத்தில் குடியிருந்த யாவரும் மீண்டும் அந்த நகக்கவசத்தைக் கண்டறிந்து ராணிக்கு அணிவிப்பதில் தீவிரம் காட்டுகின்றனர். இச்சூழலில்லை நன்றாக உற்றுநோக்கினால் வளர்மதியினால் தனக்குத் தெரியாத மொழியினை உள்வாங்கி கொள்ள முடிகிறது. எந்த மொழியானாலும் இனமானாலும் காலமானலும் ஏதோ ஓர் குறியீடு உளவியலோடு கட்டமைக்கப்படும்போது ஒரே மாதிரியான உணர்வெழுச்சியையே ஏற்படுத்திச் செல்கிறது. இது அதிகாரத்தோடு தொடர்புடைய நகங்களுக்கும் பொருந்தும். வளர்மதி கனவில் கண்ட உருவமும் கூத்தில் கண்ட ராணியும் இதற்கான முக்கிய சான்றுகளே.

இக்கதையில் இன்னொரு முக்கியப் பாத்திரமாக வலம் வரும் கப்பளாவும் அதனை முன்பே உணர்ந்திருக்கிறான். அவளின் நகங்கள் எங்கோ அவனைச் சீண்டியிருக்க வேண்டும். அதனை உடைத்தெறிய சிந்தனையை அலசவிடும்போது தன்னுடன் பிணைக்கப்பட்ட ஏதோ ஒரு கயிற்றை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு ஆட்டுவிக்கிறான். அப்படியாக வீட்டு வாடகையைக் காரணங்காட்டி மலவாளியை எடுத்துச்செல்லும் அருவருப்பான வேலையைச் செய்ய சொல்கிறான். அதற்கான கையுறைகளையும் அவனே தருகிறான். வளர்மதி அதனை அணியும் தருணம் கையுறை கிழிவதனை அழுத்தமாகப் பிடித்துக்கொண்டு நகத்தை வெட்ட தூண்டுகிறான். மனம் நோக பேசுகிறான். வளர்மதிக்குள் அவள் நகம் ஏதோ ஓர் பேரெழுச்சியை மறைமுகமாக ஏற்படுத்தி வைத்திருப்பதே அவளது பலம் என்று அறிந்தவன் இப்படியான செயலைச் செய்திருக்கிறான் என்பதாகவும் இறுதியில் சீனக்கூத்தின் கதையைக் கண்டு முடிந்தவன் மனமாற்றம் நிகழ்ந்தவனாகத் தங்க நகக்கவசத்தை எடுத்து வந்து அவள் கையில் சூட்டுவது வளர்மதியின் அதிகார பேரெழுச்சியை மீட்டெடுத்து அவளிடமே ஒப்படைப்பதாக ஊகிக்க முடிகிறது.
இத்தொகுப்பின் இரண்டாவது கதையாக ‘வைரம்’ மின்னுகிறது. அதிகாரத்தின் மாறுபட்ட கோணத்தில் புனையப்பட்ட இக்கதை ஒரு மனிதன் தன்னை ஏற்றமாகக் கருதியும் பிறர் இயலாமையைத் தாழ்வாக உருவகித்தும் சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் காரணங்காட்டிப் பயன்படுத்திக் கொள்ளும் போக்கை அம்பலமாக்குகிறது. குமரசாமியிடம் இருக்கும் ஆயுதமே அவனின் கல்விதான். கல்வியில் அவன் காணும் உயர்வை அதிகார கிரீடமாகச் சூட்டிக்கொள்கிறான். லட்சுமணன் தொடங்கி அவனிடம் பிரத்தியேக வகுப்புப் பயிலும் அனைவரையும் தனக்கான பணிவிடைகளைச் செய்ய ஏவுகிறான். தனக்கான மரியாதையையும் கேட்டுப் பெறுகிறான். கல்விக்கு அப்பாற்பட்ட சூழலில் தனது பலவீனத்தை உணர்ந்தவன் அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் தன்னிடம் இருக்கும் பலத்தைப் பயன்படுத்தி மற்றவர்களைத் தாழ்த்துகிறான். தன்னை மீறிய ஒன்று பிறருக்குப் பலமாக அமைந்துவிடக் கூடாது என்பது அவனின் உளக்கூண்டில் அழுத்தமாய்ப் பதிக்கப்பட்டிருக்கிறது. தன்னோடு மிஞ்சியிருந்த ஒரே நண்பனான குமரசாமியும் தனக்குக் கீழே இருக்க வேண்டும் என்பதாக நினைத்தவன் ஒரு கோலி குண்டில் தனது சாமார்த்தியத்தை அழகாகப் பயன்படுத்துகிறான். கோலி குண்டு வைரமாகும் என்பதாகக் கூறி மண்ணுக்கடியில் அதனை ஆழமாகப் புதைப்பதாகக் குமரசாமியின் எண்ணங்களையும் மறைமுகமாக தகர்த்தெறிகிறான். வருடங்கள் கடந்தும் அவன் எண்ணத்தில் மாற்றமில்லை. மீண்டும் ஒருமுறை ஏற்றத்தாழ்வின் உச்சத்தைத் தொடுவதனை அவர்களின் சந்திப்பில் காண முடிகிறது. மண்ணுக்குக் கீழே புதைந்து கிடக்கும் கறுப்பு நிற கோலி குண்டும் மண்ணுக்கு மேலே நிமிர்ந்து நிற்கும் அரசமரமும் மனித மனப்பிறழ்வில் தேங்கிகடக்கும் பாசியின் வீரியத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது.
மூன்றாவது சிறுகதை ‘அப்சரா’. கலைத்துவம் மொத்தமாகச் சங்கமிக்கும் கதையாக இது இருக்கிறது. கலை என்பது ஒன்றைக் கண்ணால் காண்பது மட்டுமல்ல. அதனைக் கடந்தும் காணவியலாத பார்வைக்கு இட்டுச்செல்வதே காலத்தால் அழிக்கவியலாத கலையின் தனிச்சிறப்பு என்பதனை எழுத்தாளர் ம.நவீன் தமிழாசியா சிறுகதை கலந்துரையாடல்களின் போது கூறியது இன்னும் நினைவில் ததும்பி நிற்கிறது. புராண கதைகளை உள்வாங்கியும் அதன் நிகர் காட்சியைக் காணும்போதும் முழுமையாக அவ்வுலகில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டால் மட்டுமே கலையழகின் முழுமையை உய்த்துணர முடியும் என்பதனை நிறுவும் வகையில் இக்கதை வடிக்கப்பட்டிருக்கிறது. அப்படியாக அங்கோர் வாட்டில் காணப்படும் தனிச் சிறப்பு மிக்க அப்சராக்களின் வாழ்வியலோடு இணைந்து இயங்க இக்கதை உந்துதளிக்கிறது. சிற்பங்களை வருணிப்பதோடு நின்றுவிடாமல் அவற்றோடு இணைந்திட்ட புராணங்களை நிதர்சனத்தோடு பொருத்தி பயணிக்கும்போது மரியா கொண்ட அனுபவத்தை ஷாமாவிற்கும் அளிக்க முயற்சிக்கிறாள். அவற்றில் கண்ட வெற்றி இறுதியில் அபிராமியையும் கலையை உயிர்ப்பித்துக் காணச்செய்ய வழிகொள்ளுவதாய் அமைந்திருக்கிறது.
அடுத்ததாக, ‘அகநக’ அதோடு ‘மிருகம்’ எனும் இரு சிறுகதைகளின் அலசலை ஒன்றாக முன்வைக்கிறேன். இரண்டுமே பிராணிகளின் உளவியலைப் பாய் விரித்துக் காட்டும் கதைகளாகவே அமைந்திருக்கின்றன. மிருகங்கள் அல்லது பிராணிகளின் இயல்பியலோடு மனித மனம் எல்லா வேளைகளிலும் ஒத்துப்போவதில்லை. அப்படியாக ஏற்றுக்கொண்டு அவற்றின் உலகில் நம்மை உட்புகுத்தி வாழ முயற்சித்தாலும் ஏதோ ஒரு நிர்பந்தத்தின் பெயரின் அந்தக் கட்டுக்குள்ளிருந்து அறுபட்டு மனிதனைப் போல சிந்தித்துச் செயலாற்ற வைக்கிறது. எல்லா நேரங்களிலும் மிருகங்களின் உளவியலை மனிதன் ஏற்றுக்கொண்டு பக்குவமாய் நடந்திட முடிவதில்லை. ஆனால், அவை ஒவ்வொரு சூழலிலும் கள்ளமற்ற இயல்பியலால் மனித வாழ்வில் ஏதோ ஒன்றை ஆழமாக உணர்த்தியும் கொடுத்தும் செல்கிறது. ‘அகநக’ எனும் சிறுகதையில் முதியவரின் இறப்பிற்கு முன்பாக அவர் சிரித்ததும், ‘மிருகம்’ என்கிற கதையில் இடம்பெறும் போப்பியைக் கதைச்சொல்லி துறக்கும் பொருட்டு வெளிப்படும் வேதனையும் இக்கூற்றுக்கான பலமான சான்றாகுகிறது.
‘அலையறியாதது’ எனும் கதையைப் படித்தபோது எனக்கு நான் பள்ளியில் சந்தித்த ஒரு மாணவியின் நினைவே அலையென்றாகச் சிந்தையை உரசிச் செல்கிறது. உருவத்தைக் கடந்த ஓர் அக ஏக்கம் பொதிந்து கிடக்கும் உயிர் தனக்குச் சிறிதாக அன்பைத் தூவிடும் உள்ளத்தைக் கண்டால் எச்சூழலையும் மீறிய அவ்வுறவைப் பற்றிக்கொண்டு பயணிக்க எத்தனிக்கும். அந்த உறவுக்காக எதனையும் செய்யத் துணிந்துவிடும். கதைச்சொல்லியின் மீது சண்முகப்பிரியா கொண்டிருந்த அன்பை இதற்குச் சான்றாகக் குறிப்பிடலாம். இதனைக் கடந்து எத்தனையோ அக விமர்சனங்களை முன்வைக்க இக்கதை தூண்டுகிறது. கதைச்சொல்லி, சண்முகப்பிரியா, அவள் அம்மா அதோடு சுப்பிரமணியம் சார் என எல்லோரையும் குறிப்பிடலாம். இறுதி பகுதியில் சண்முகப்பிரியாவின் அம்மா கூறும் ‘ஆனா…’ எனும் சொல் முழுக்கதையின் துயரத்தை ஒருசேர கடத்திச் செல்கிறது. அகத்தைக் கடந்த ஏதோ ஒன்று ஒருவர் மீது இன்னொருவர் செலுத்தக்கூடிய செயல்பாட்டினையோ உணர்வு வெளிப்பாட்டினையோ அதிகாரத்தையோ தீர்மானித்துச் செல்கிறது. அதன்படி இக்கதை புனையப்பட்டிருக்கிறது.
‘கீலாக்காரன்’ எனும் சிறுகதை ஒவ்வொரு சூழலிலும் ஏதோ ஓர் மனிதன் அவன் தேவை பொருட்டுப் பணயம் வைக்கப்படுகிறான்; பயன்படுத்தப்படுகிறான். சொல்லாத வலிகளுக்கும் விரும்பாத அடையாளத்திற்கும் பலியாகிறான். கதையில் வரும் சீதாராமனைச் சுருக்கமாக இக்கட்டமைப்புக்குள் நிலைநிறுத்தி வைத்துவிடலாம். பசி எனும் வலியைப் போக்கும் பொருட்டுக் கட்டாயப்படுத்தப்படும் இன்னொரு மறைமுகமான பசி குறித்த வலியை வசமாக்கிக் கொண்டு துன்புறும் கொடுஞ்சூழலை இக்கதைச் சித்தரிக்கிறது. சீதாராமனை என் நெருங்கிய உறவாக நினைத்திடும் வேளையில் உள்ளம் பதைபதைக்கிறது. ஒருவரின் இயலாமையையோ அடிப்படைத் தேவையையோ சந்தர்ப்ப சூழ்நிலைகளில் வரம்பு மீறிய அத்துமீறலுக்கு உள்ளாக்குவது சரியா? இந்தக் கேள்வியை நுட்பமாக என் மனதில் இக்கதை பதிவிட்டுச் சென்றிருக்கிறது.
இறுதியாக, ‘வேப்டியான்’. வேம்படியான் மருவி தன் பேத்தி மூலமாக வேப்டியான் என்றாக வந்திருக்கிறது என்பதைக் கதையின் தொடக்கத்திலே அறிய முடிந்தது. கதையின் அதோடு தொகுப்பின் பெயருக்கான அர்த்தம் இக்கதையை வாசிக்கும் பொழுதே புரிந்தது. பேய் கதை கேட்ட பேத்தி என்றாகி பேத்தியே இல்லை என்றாக கதையின் இறுதியில் உணர்ந்தபோதுதான் பகீரென்றது. பிளக்காயன், அவன் வீட்டில் இருந்த மனம்பிறழ்ந்த சிறுவனின் ஆத்மா, இறுதி நொடியில் பிளக்காயனைச் சந்தித்து அவரை அழைத்தபோது அவர் விழித்துப் பார்த்தது அதன் பின்பாகத் தந்தையின் மூலம் அவரின் இறப்பை உணர்ந்தது போக காரணத்தோடோ காரணமின்றியோ தொடர்ச்சியாகத் தாக்கப்படும் கதைச்சொல்லியின் மனநிலை என்றாக ஏராளமான பார்வைக்கு இக்கதை இட்டுச் செல்கிறது.
இச்சிறுகதைத் தொகுப்பின் பெரும் பலமாக இரு விடயங்களை உணர்கிறேன். முதலாவதாகப் புராணங்களையோ வரலாற்றுப் பின்னணியையோ ஏதோ ஒரு காலத்தில் கூறப்பட்ட கட்டுக்கதை அல்லது உண்மையையோ கதைப்போக்கோடும் கற்பனையோடும் தொடர்ந்து இழுத்துச் சென்று சுவையூட்டுவதும் சிந்திக்க வைக்கும் வகையில் கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. இரண்டாவதாக, ஒவ்வொரு கதையின் நிறைவும் பெரும் திருப்பமாகவே அமைந்திருக்கின்றது. கதையோடு இயைந்து அல்லது ஆழமாக உற்றுநோக்கினால் எனது பார்வையைக் கடந்து இன்னும் பல விமர்சனங்களை முன்வைக்க இயலும்.
