சாம்பசிவம் – ஞானாமிர்தம்: மலேசிய, இலங்கைத்தமிழ்ச் சமூகத்தின்வரலாற்றுப்பதிவு

மலேசியாவில் நூறாண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த நாவல், ‘சாம்பசிவ ஞானாமிர்தம் அல்லது நன்னெறிக் களஞ்சியம் ஓர் இனிய கற்பனா சரிதம்’. கோலாலம்பூரின் லாஸர் அண்ட் சன்ஸ் அச்சகத்தில் அச்சிடப்பட்டு 1927ஆம் ஆண்டு வெளிவந்த இந்நாவல், மலேசிய தமிழ் இலக்கியத்தின் முன்னோடி இலக்கியங்களில் ஒன்று.

நூலாசிரியரின் அருணாசலம் நாகலிங்கத்தின் (1901-1979) 125வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது பிள்ளைகள் நா. குஞ்சிதபாதம், நா. பாலக்கிருஷ்ணன் ஆகியோர் இந்நூலை, மறுபதிப்பாக 2026ஆம் ஆண்டு இலங்கை, யாழ்ப்பாணத்தில் வெளியிட்டுள்ளனர்.

இந்நாவல் குறித்து தமிழ் நேசனில் 28.3.1928 அன்று வெளிவந்த விமர்சனம், ‘மனத்தை உயர்த்தும் நூல் என்றும் நவீன கதைகளில் சிலவற்றை உயர்தர நாவலென்று ஆங்கிலேயர் வகுத்துப் போற்றுவதுண்டு. அத்தகைய நாவல்களில் இந்நூல் ஒன்று’ எனக் குறிப்பிடுகிறது.

மலேசியாவின் முதல் நாவலாகக் கருதப்படும் க.வெங்கடரத்தினத்தின் ‘கருணாசாகரன் அல்லது காதலின் மாட்சி’ 1917ல் வெளிவந்த 10 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட இந்நாவலின் கதைக்களம், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, தமிழ்நாடு என விரிகிறது.

அன்றைய யாழ்ப்பாணத் தமிழ் மக்களின் நவீனத்துவத்தையும் பாரம்பரியச் சிந்தனைகளையும் ஒருசேர விவாதிக்கும் கதையோட்டம்.

யாழ்ப்பாணம் நல்லூரில் வசிக்கும் ஏழைப் தம்பதியான பொன்னம்பலம்-அம்பிகைக்குக் கும்பகோணம் மகாமகத் தீர்த்த யாத்திரைக்குப் பின் சாம்பசிவம் பிறக்கிறான். சிறுவயதிலேயே தந்தையை இழந்துவிட, மாமா கனகேந்திரம்பிள்ளையின் வீட்டில் தாயுடன் அடைக்கலமாகிறான்.  அங்கு அடிமை போல் நடத்தப்பட்டுகிறான். பள்ளிப்படிப்பு மறுக்கப்படுகிறது. அதனால் 12 வயதில் கப்பலில் மலாயாவுக்குப் புறப்படுகிறான். அந்தப் பயணத்துக்கு ஏற்பாடு செய்யும் கல்யாணத் தரகர், மலாயாவில் நல்ல வேலையிலிருப்பவர்களுக்கு இலங்கையில் பெண் தேடித் தருபவராக இருக்கிறார்.

கோலாலம்பூரில் சபாபதிப்பிள்ளை என்பவரின் ஆதரவில் வளர்ந்து, படித்து ஆசிரியராகிறான். நேர்மை, உண்மையுடன் வாழும் சாம்சிவம் ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறந்து விளங்குகிறான். சமூக சேவகனாகத் திகழ்கிறான். சைவநெறியிலும் பற்றோடு இருக்கிறான். சபாபதிப்பிள்ளையின் மகள் ஞானாமிர்தம், சாம்பசிவத்தின் நற்குணங்களாலும் சமய அறிவாலும் ஈர்க்கப்பட்டு  அவனைக் காதலிக்கிறாள். பல திருப்பங்களுக்குப் பின்னர் அவனை மணமுடிக்கிறாள்.  இதற்கிடையே, சாம்பசிவத்தின் மாமா மகன் ஆனந்தராசா சென்னையில் போதை, விலைமாதர் சேர்க்கையால் பணத்தை வீணடித்துச் சீரழிகிறான். மகள் அன்னமலர் போலி நாகரிக மயக்கத்தில் மூழ்குகிறாள்.  தாய்நாட்டுக்காக உழைக்க சாம்சிவம் யாழ்ப்பாணம் திரும்புகிறான்.

ஆங்கிலமோகம், சாதி, வரதட்சணை, குழந்தைத் திருமணம், விதவைத் திருமணம், குடிப்பழக்கம், லஞ்ச ஊழல், போன்ற அன்றைய சமூகப் பிரச்சினைகளை அலசும் இந்த நாவல், தமிழ்க் கல்வி பெண்கள் கல்வி, அச்சு ஊடகம், பொது சமூக அமைப்புகள், கூட்டுரிமைச் சங்க இயக்கங்கள், விவசாய மேம்பாட்டு, தொழில்துறை போன்றவற்றின் முக்கியத்துவம் பற்றியும் அறிவுறுத்துகிறது. உலக அறிவையும் சமூக விழிப்புணர்வையும் வளர்க்க பத்திரிகை வாசிக்க வேண்டும் என்கிறது.

வெளிநாடு செல்வோர் தாய்நாட்டுடன் உறவு வைத்திருக்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.

17 அத்தியாயங்களில், சமூகச் சிந்தனை அறநெறிகள், சைவ சமயக் கருத்துகளை மையமாகக்கொண்டு, நேரடி அறிவுரைகளுடன் எழுதப்பட்ட  சமூகக் கதை என்றாலும் கதைப்போக்கிலேயே  கருத்துகள் இடம்பெறுவதால் உறுத்தலாக இல்லை.

“மாமா நான் தமிழை வெறுக்கிறேன்,” என்று ஒரு குழந்தை சொல்கிறது.

இன்னொரு இடத்தில், ஆங்கிலேயப் பள்ளிகளில் பிள்ளைகளைப் படிக்கவைப்பதாக ஒரு மாதுகூற, பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்குத்தான் அனுப்ப வேண்டும் இன்னோரு மாது பதிலுரைக்கிறார்.

அதேபோல், சீதனம், பொருத்தமற்ற திருமணம், தரகர்களின் ஏமாற்றுவேலை போன்ற விஷயங்களை விசாலாட்சி என்ற சிறுபெண்ணின் கதை சொல்கிறது. மலாயாவில் வாழ்ந்த 50 வயதுக்கும் மேற்பட்ட, ஏழு பிள்ளைகளுக்குத் தந்தையான ஒருவர் மனைவி இறந்தபின் மறுமணம் செய்ய விரும்புகிறார். தரகர் யாழ்ப்பாணத்திலிருந்து ஏழைப் பெண்ணான 15 வயது விசாலாட்சியை அவரது பெற்றோரை பணத்தாசை காட்டி மயக்கி அழைத்து வருகிறார். அந்தத் திருமணத்தை ஏற்றுக்கொள்ள முடியாத அப்பெண் தீயிட்டு தற்கொலை செய்துகொள்கிறார்.  

அருணாசலம் நாகலிங்கம்

நூற்றாண்டுக்கு முற்பட்ட மொழிநடை, எழுத்துத் தமிழ். பழைய தமிழ் எழுத்து முறையிலே அச்சிடப்பட்டுள்ளது. என்றபோதும், பெரும்பாலும் உரையாடல்களாக கதை அமைந்திருப்பதும் அன்றைய மக்களின் சிந்தனை, பேச்சுகள் வாசிப்பை சுவாரஸ்யமாக்குகின்றன. திருக்குறள், தேவாரம், ஒளவையார் பாடல்கள், விவேகசிந்தாமணி போன்ற அறநூல் மேற்கோள்கள் கதையோட்டத்தோடு இயல்பாக இணைக்கப்பட்டுள்ளன. 

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மலாயா ஈழத் தமிழர்களின் வாழ்க்கை நிலையை பதிவு செய்த முன்னோடி நாவல்களில் ஒன்றான இந்நாவல், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா வாழ்க்கையூடாக, இந்த நாடுகளுக்கிடையே இருந்த பண்பாட்டுத் தொடர்புகளையும் சிந்தனைப் பரிமாற்றங்களையும் விளக்குகிறது.

வட்டிக்குப் பணம் கொடுக்கும் செட்டியார்கள், மாட்டு வண்டிப் பயணம், திருமணங்கள், பிரசங்கங்கள், பெண்கள், ஆண்களின் பேச்சு வழக்குகள் என்று மலாயாவில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கைச் சித்திரிப்பின் மூலம், அக்காலகட்டத்து மக்களின் எண்ணப்போக்கு, நம்பிக்கைகள், இலக்குகளை நாவல் விவரிக்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மலேசிய, சிங்கப்பூரில் வாழ்ந்த இலங்கைத் தமிழர்களிடம்  பெரியார், தனித்தமிழ் ஆர்வலர்களின் தாக்கத்தினால் ஏற்பட்ட தமிழியச் சிந்தைனைகளும் ஆறுமுக நாவலர் பரப்பிய சைவ சமய சிந்தினையும் ஒன்றுகலந்திருந்திருந்ததை இந்த நாவல் வழி காணலாம்.

அதேபோல், மலாயா இந்திய, தமிழ் மக்கள் காந்தி, நேத்தாஜி இருவரையுமே தலைவர்களாக கொண்டாடிப் போற்றியிருக்கின்றனர். அதில் ஒர் இயைபை மலாயாவில் வாழ்ந்த மக்கள் அடைந்திருக்கின்றனர்.

பயிர்த்தொழில், உள்ளூர் உற்பத்தி போன்ற தற்சார்புப் பொருளியல் உள்ளிட்ட காந்திய கருத்துகளைப் பண்டைய தமிழ் இலக்கிய மேற்கோள்களுடன் ஆசிரியர் அழுத்தமாகப் பதிவுசெய்துள்ளார்.  மேலைநாட்டு நாகரிகப் போக்கைப் பின்பற்றிய படித்த, மேட்டுக்குடி மக்களை, பண்பாட்டு அடிமைத்தனம் எனக் கடுமையாக விமர்சிக்கிறார்.

மலேசிய, ஈழத்து இலக்கிய வரலாறுகளையும், அந்நாடுகளில் புலம்பெயர் சமூகத்தால் ஏற்பட்ட பண்பாட்டுப் பரிமாற்றங்களையும் புரிந்துகொள்ள இந்நாவல் பெரிதும் உதவும்.

பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்த சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வாழ்ந்தவர்களுக்கு நாடுகள் குறித்த வேறுபாடு இருக்கவில்லை. ஒரு நாட்டில் வாழும் மக்கள் ஓர் ஊரிலிருந்து மற்றோர் ஊருக்குப் போவது போலவே ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்குச் சென்றுள்ளனர். நீண்ட கால கப்பல் பயணங்கள் சிரமமானதாக இருந்தபோதும், ஒரே ஆட்சியின் கீழ் இருந்ததால் விசா போன்ற கட்டுப்பாடுகள் இல்லாதது பயணங்களை எளிதாக்கியிருப்பதை இந்நாவல் வழி அறியமுடிகிறது.

இந்த நாவலை ஒருவகையில் எழுத்தாளரின் கதை என்றே சொல்லலாம். நாவலின் நாயகனான சாம்பசிவத்தின் வாழ்க்கையை ஒத்ததாகவே நாகலிங்கத்தின் வரலாறும் உள்ளது.

தொடக்ககாலத்தில் மலேசியாவில் தமிழ் மொழி, கல்வி, முற்போக்குச் சிந்தனை, சமயப் பற்றின் தேவையை உணர்த்தி, சமூக முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட, படித்த மேல்தட்டு மக்களில்  நாகலிங்கமும் ஒருவர்.

***

நூலாசிரியர் நாகலிங்கம்

இலங்கையின் புகழ்பெற்ற தமிழ் இலக்கிய இதழான ‘மல்லிகை’ 1975ல் கௌரவித்த பெரும் ஆளுமை திரு நாகலிங்கம்.

யாழ்ப்பாணம், காரைநகரில் 1901ஆம் ஆண்டு பிறந்த அவர், காரைநகர் அமெரிக்க மிசன் தமிழ், ஆங்கிலப் பள்ளியிலும், பின்னர் காரைநகர் இந்துக் கல்லூரியிலும் கல்வி பயின்றவர். 19வது வயதில் மலேசியா சென்று, தைப்பிங் ஏழாம் எட்வர்டு அரசர் பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தார். பின்னர் திறைசேரியில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார்.

கோலபிலா தமிழ்ப் பள்ளி உருவாக்கம், கோலபிலா கந்தசுவாமி கோவிலைச் சீரமைப்பு என மலேசியாவில் கல்வி, சமூகம், சமயத் தொண்டுகளில் அயராது ஈடுபட்டவர்.

மொழி அறிஞர், ஆர்வலருமான அவர், தமிழ்க் கல்வியை ஊக்குவித்துடன், பத்திரிகைகளில் எழுதுவது, நாடகங்களில் நடிப்பது என்று மொழித் துறையில் பங்காற்றி இருக்கிறார். தாம் பத்திரிகைகளில் எழுதிய சில கருத்துகள், நாவலில் இடம்பெற்றிருப்பதாக அவர் தம் முன்னுரையில் குறிப்பி்ட்டுள்ளார்.

காந்தியவாதியாக இருந்த திரு நாகலிங்கம் , மலாயாவில் கதர் ஆடை இயக்கத்தை முன்னெடுத்தவர்களில் ஒருவர். சிங்கப்பூரில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அமைத்த இந்திய அரசிலும் பங்காற்றியிருக்கும் அவர், நேதாஜியின் உரைகளைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

இரண்டாம் உலகப் போரின்போது திறைசேரி மருத்துவமனையில் பணிபுரிந்தார். காந்தி, சுபாஷ் சந்திரபோஸ் ஆதரவாளராகச் செயல்பட்டதால் போருக்குப்  பின்னர் மீண்டும் பிரிட்டிஷ் நிர்வாகத்தில் செயல்பட விரும்பாமல், 1947ல் சொந்த ஊரான காரைநகருக்குத் திரும்பிவிட்டார்.

மலாயா ஓய்வூதியத்தில்  யாழ்ப்பாணத்தில் சமூக சேவைகளில் தொடர்ந்து ஈடுபட்டார். இலங்கையில் ஆலயங்களில் ‘அனைவருக்கும் வழிபாட்டுரிமை’ போராட்டங்களில் பங்கெடுத்தவர் .

சாம்பசிவ ஞானாமிர்தம் அல்லது நன்னெறிக் களஞ்சியம் ஓர் இனிய கற்பனா சரிதம் நாகலிங்கத்தின் முதல் நாவல்.

1,000 பிரதிகள் அச்சிடப்பட்ட நாவலின் விற்பனைப் பணம், காரைநகர் மருதடிப் பிள்ளையார் கோயில் குளத்தைச் சீரமைக்கப் பயன்படுத்தப்பட்டது.  கோயில் என்பதற்கு அப்பால், அக்குளத்தின் ஊர்ப்பயன்பாடு, நீர்ப்பயன்பாடு, கால்நடைகளின் பயன்பாடு என்பன அவர் சிந்தனையில் முன்னின்றதை முன்னுரையில் அறிந்துகொள்ளலாம்.

சீரமைப்புக்கு ஆகும் 10,000 ரூபாயைத் திரட்ட கோரிக்கை வைக்கிறார். அன்றைய நாளில் 1,000 அச்சடிக்க 800 வெள்ளி (ரிங்கிட் )செலவாகி இருப்பது என்பது செய்தி. அன்றைக்கு அது பெரும் பணம். பலருக்கு ஆண்டு வருமானம்கூட அவ்வளவு இருக்காது.

நெகரி சிம்பிலான் மாநில மன்னரான சர் முகமது ஷா 100 வெள்ளி அவருக்கு முதல் கொடையை அளித்துள்ளார். சீனர்களும் அபிமானிகளும் நன்கொடை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.  நிதியளித்தோரின் பெயர், முகவரி, தொகை முதலிய விவரங்கள் தமிழ்ப் பத்திரிகளை வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

படங்களுடன் வெளியான முதலாவது ஈழத்தமிழ் நாவல் என்ற தனிச்சிறப்பைப் பெற்ற இந்நூலுக்கு, ஈழத்தின் முக்கிய நாவலாசிரியரும் இந்துசாதனப் பத்திரிகையாசிரியருமான (உலகம் பலவிதம்) ம. வே. திருஞானசம்பந்தப்பிள்ளை; யாழ்ப்பாண வரலாற்று ஆய்வாளர் செ. இராசநாயக முதலியார், பின்னாளில் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியரான  ரா. பி. சேதுப்பிள்ளை போன்ற அன்றைய தமிழ் அறிஞர்கள் முன்னுரை வழங்கியுள்ளனர்.

அக்காலகட்டத்தின் இளையர்களை பலரப் போலவே லட்சியவாதியாக வாழ்ந்த நாகலிங்கம், மலேசிய சமூகத்தில் நன்கு அறியப்பட்டவராக இருந்துள்ளார். பல நிலைகளிலும் தொடர்புவைத்திருந்தவராக, தாக்கம் ஏற்படுத்தக்கூடியவராக அவர் வாழ்ந்துள்ளார் என்பதை அவரின் முன்னுரை வழி புரிந்துகொள்ள முடிகிறது. நாவலின் இரண்டாம் பாகத்தை வெளியிட எண்ணியிருப்பதாக நூலில் கூறியுள்ளார். ஆனால் அது வெளிவரவில்லை.

நாவலின் நோக்கத்தை விரிவாக விளக்கும் இந்த அறிக்கை கோலாலம்பூர் ஆர்ட் பிரிண்டிங் வொர்க் எனும் அச்சகத்தில் 1925ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது. அறிக்கையைப் பலருக்கும் விநியோகித்து, நன்கொடைக்கு முன்கூட்டியே பதிவு செய்துள்ளதை அறிக்கையிலிருந்து அறிய முடிகிறது. மூன்று, நான்கு மாதங்களில் நூல் அச்சேறும் என்று இதில் ஆசிரியர் கூறிள்ளார். நூல் அச்சிடும் செலவுக்கான தொகையைச் சேர்க்கவோ அல்லது வேறு சிரமங்களையோ அவர் எதிர்கொண்டிருக்கலாம். ஈராண்டுகள் கழித்து 1927ஆம் ஆண்டு நூல் வெளிவந்தது.


அறிக்கையில் உள்ள குறிப்பு

பல நூறு ஆண்டுகளுக்கு கட்டப்பட்ட காரை தீவு பிள்ளையார் குளம் அன்றாடம் பலர் குளிக்கவும், ஆடுமாடுகள் நீர் அருந்தவும் நீர் ஆதாரமாக இருக்கிறது. அக்குளத்தின் வடக்கிலுள்ள கற்சுவரும் படிகளும் இடிந்துள்ளன. மற்றப் பக்கங்கள் வெறும் தரையாக இருப்பதால் மழைக்காலத்தில் மலம், சலம், குப்பை முதலிய அழுக்குகள் குளத்தில் அடைவதால் நீர் மாசு பட்டுள்ளது. அதில் குளிப்போர் சொறி, சிரங்கு, காய்ச்சல் போன்ற நோய்களுக்கு ஆளாகி உயிரிழக்கவும் நேரிடுகிறது என்று குளத்தின் நிலையை விவரிக்கும் அவர், இக்குளத்தைச் சீர்படுத்துவது நாம் செய்ய வேண்டிய கடமை என்கிறார்.

“கோவில்கள், மடங்கள், கிணறுகள், கேணிகள் முதலியன கட்டுவதைப் பர்க்கிலும், பழுதடைந்திருக்கும் புண்ணிய பொதுக் கட்டடங்களைத் திருந்தி வைப்பதே மிக மேலான தர்மமென்பது உங்கள் எல்லிருக்கும்சொல்லாமலே விளங்கும்,” என்கிறார்.

குளம் கட்டப் பொருள் சேகரிக்கும்வண்ணம்  “சாம்பசிவம்-ஞானாமிர்தம்” என்ற நூலை எழுதிவருவதாகவும், நூலில் “பெண் கல்வி, கற்பு, தமிழ்க்கல்வியின் பெருமை, இல்லறமாட்சி, விக்கிரகங்களின் உள் ரகசியம், ஆலயவழிபாட்டின் நோக்கம், ஈயாதலோபிகளின் பணம் அழியும்விதம், வேளாண்மையின்பெருமை இன்னும் இன்னோரோன்ன விடயங்களும் அடங்கியிருக்கின்றன” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நூலை அச்சிட்டு ஒய்வொருவருக்கும் ஒவ்வொரு புத்தகம் கொடுத்து அதன் மூலமாகப்  பொருளுதவியைப்பெற்று குளத்தைக்கட்டி மனம் துணிந்தும் விட்டதாகக் கூறியுள்ளார். 

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...