லீகாட்: பருவக் கோளாறின் கொந்தளிப்பு

ஒரு முழுமையான வாழ்க்கையைச் சொல்வதுதான் நாவல் என்கிறார்கள் சான்றோர்கள். ஆனால் சிதறிக் கிடக்கும் வாழ்க்கையிலிருந்து நாவலை உருவாக்குவது எளிதானதல்ல. அது கைதேர்ந்தவர்களின் திறன்களால் மட்டுமே கூடிவருவது. தரையில் கொட்டிய தானியங்களைப்போல  விரவிக்கிடக்கிறது வாழ்க்கை. அதனைப் பொறுமையாகப் பிரித்து எடுத்து உணவாகச் சமைப்பதற்கு ஒப்பானதுதான் நாவல். அதுவே ஒரு கட்டமைப்புக்குள் அடங்கும்போதுதான் கலையாகிறது. அந்த ஒருங்கமைவுக்குள் கூடிவராமல் போனால் அது சிதறிய வாழ்க்கையாகவே இருக்குமே ஒழிய நாவல் என்ற அமைப்புக்குள் வடிவம் பெறாது. ஒரு பறவை எங்கிருந்தோ காய்ந்த கீற்றுகளையும் சருகுகளையும் தன் அலகால் பொறுக்கி எடுத்துக்கொண்டு வந்து ஒரு கூட்டை கட்டுகிறது. ஒரு முழுமையான கூண்டு உருவாவதற்கு அவற்றில் எவை தேவையோ அவற்றை மட்டுமே அது பயன்படுத்துகிறது. நாவலும் அப்படித்தான். சிதறிய உபரிகளிலான ஒரு குருவிக் கூண்டைப் போல, ஒரு முழுமையான வடிவம் கொண்டது. ‘லீகாட்’ நாவல் அந்த முழுமையை அடைவதில் சிக்கலில்லாமல் பயணித்துக்கொண்டு போய் ஒரு புள்ளியில் நிற்கிறது. புள்ளி என்பதை முற்றுப்புள்ளி என்று வரையறுக்க மாட்டேன்.

பாத்திர முரண்களும் அவை இடைவிடாது மோதிக்கொள்வதும் நாவலை உயிர்ப்புடையதாக ஆக்கிக் காட்டுகிறது.

நாவலின் தொடக்கம் முதற்கொண்டே பாத்திரங்களின் மோதல்களால் கதை ஒரு பந்தயக் குதிரையைப் போல பாய்ந்துகொண்டு ஓடத் துவங்குகிறது. தொடக்கத்தில் அவனுடைய தாய்மாமனான ஜாலாம்பாருவுக்கு ஒத்தே வராத முரண்கள் நம் கவனத்தைக் கவ்விக்கொள்கிறது.

விச்சுவுக்கும் தீபனை நக்கல் செய்யும்போது உண்டாகும் உரசல்களும், தீபனுக்கும் கனகாவுக்குமான அறிவுநிலையின் ஏற்றத் தாழ்வுகளும் நாவலை மேலும் ரசனைக்கு உட்படுத்துகிறது. பெண்பிள்ளைகள் ஆண்பிள்ளைகளைவிட விரைவாகவே பருவம் எய்திவிடுவதால் அவர்களுடைய உடல் முதிர்ச்சியும்  உள முதிர்ச்சியும் சமநிலையில் வளர்ச்சி காண்கின்றன. ஆனால் இதில் இரண்டிலும் பின்தங்கிவிடுபவர்கள் ஆண் பிள்ளைகள்தான். பெண்களின் உடல் வளர்ச்சி அவர்களின் இச்சைக்கான தேவையின் தூண்டலாகிவிடுகிறது. சம வயதுள்ள ஆணாக இருந்தாலும் செயலிலும் பேச்சிலும் பெண்கள் காட்டும் முதிர்ச்சிக்கு ஈடாக முடிவதில்லை. கனகா நீலப்படங்கள் பற்றி பேச்செடுத்து தீபனைக் கிளர்ச்சியுற வைக்க முயற்சி செய்யும்போதெல்லாம் அவன் அந்த வாலிபத் தகுதியை எட்டிப்பிடிக்க முடியாமல் பின்தங்கியே  இருக்கிறான். கனகாவின் அறிவு நிலையும் தீபனின் அறியாமையும் மோதிக்கொள்ளும் காட்சிகள் நமக்கு அந்த இடைவெளியை நிரப்பிக்கொள்ள வைக்கிறது. வாசகனும் நாவலின் ஒரு பாத்திரமாக்கப்பட வேண்டும் என்ற உத்தி வாசக பங்கேற்பை உறுப்படுத்துகிறது.

வாழ்க்கையைப் புரிந்துகொள்ள ஒருவனுக்கு அவனின் அனுபவங்களே சிறந்த பள்ளிக்கூடமாக இருக்க முடியும். தீபனின் வாழ்க்கை அதற்கான நல்ல எடுத்துக்காட்டு. துல்லிதமாக விவரிக்கும் காட்சிகளால் அதனை மெய்ப்பிக்கிறார் நாவலாசிரியர்.

தன் பதின் வயதைத் தாண்டும்வரை தீபன் மிக வெள்ளந்தியான இளைஞராக இருக்கிறார். கனகா தன் பாலுணர்ச்சி தூண்டலில் தீபனை நோக்கி வரும்போது அந்த நகர்வைப் புரிந்துகொள்ளாதவனாக இருக்கிறான். தன் பருவ வயதின் தேவையை அறிந்துகொள்ளாதவனாக, ஆணுறையை பலூனென  நினைத்து ஊதி விளையாடும்போது அவன் வெள்ளந்தி மனிதனாகவே காட்டப்படுகிறான். ஆனால் நகர வாழ்க்கை அவன் அறியாமையைப் போக்கும் குருகுலமாக அமைகிறது. கவிக்கோ அப்துல் ரகுமான் தன் முனைவர் படிப்பை முடித்தவுடன், நிருபர்கள் இனி என்ன படிக்கப் போகிறீர்கள்? என்று கேட்கிறார்கள். இனிமேல்தான் வாழ்க்கையையே படிக்கப்போகிறேன் என்று அனுபவக்கல்வி கற்கப்போவதைச் சொல்கிறார். வாழ்க்கை அவ்வளவுஆழமானது, அகலமானது. ஆழமும் அகலமும் மட்டுமல்ல அதன் ஆழத்தில் அழுக்கும் நிறைந்திருக்கிறது. அந்தப் புதிரான வாழ்க்கைக்குள் நுழைந்து அல்லல்பட, தீபனின் பருவக் கிளர்ச்சியின் தூண்டல் வழிவகுத்துவிடுகிறது. பெண் வெற்றுடலை மறைந்து பார்த்த அவனுக்கு வாழ்க்கையைத் திறந்து பார்ப்பதற்கான பாலபாடமாக அடி எடுத்துக் கொடுக்கிறது நாவல்.

நாவலின் புதிர்த் தன்மைகள் நம் கவனத்தைச் சிதற வைக்காமல் ஒரு புள்ளியில் நிலைநிறுத்துகிறது.

முதல் அத்தியாயத்தில் தீபனைப் பினாங்குக்குக் கடத்திக்கொண்டு போகும்போது ஓரிடத்தில் மின்னல்போன்று தெறித்து ஒளிர்ந்த இடத்தில் ‘அவள் அங்குதான் இருப்பாள்’ என்ற வாக்கியம் அவள் கனகாவாக இருப்பாளோ என்ற யூகம் வாசகனிடத்தில் உரசிச் செல்கிறது. தொடர்ந்து வளர்ந்து நீளும் அத்தியாங்களில் கனகாவுடனான அவனின் அணுக்கமும் நனவோடையாக நிகழும்போது அவளின் நிழலுருவமும் நமக்கு சிறு சிறு தீற்றலாகத் தெரியத் தொடங்குகிறது. சில அத்தியாயங்களில் அவளின் காதல் விளையாட்டுக்கூட பினாங்கில் இருப்பவள் கண்டிப்பாய் அவள்தான் என்ற ஒரு உறுதிபாட்டை நிறுவுகிறது. முதல் அத்தியாயத்தில் ஒரு கொம்தார் அருகே காத்திருப்பவளாகத் தொட்டுக்காட்டப்படும் ‘அவள்’ வெகுதூரம் பயணித்துவிட்ட வாசகனுக்கு, 12வது அத்தியாயத்தில் மீண்டும் ஒருமுறை சிறு புள்ளி அளவில் தொட்டுக் காட்டுகிறார். இந்தச் சொல்லின் கண்ணாமூச்சி விளையாட்டு நிலைகொள்ளும்போது கதைக்குள் வாசகன் ஆழமாகப் புதைந்துவிடுகிறான்.  நாவலாசிரியர் கனாகாவின் காதல் சொற்கள் கொண்டு ஆடும் சிலம்பத்தில் தீபன் வசமாக ஈர்க்கப்பட்டுவிடுகிறான். பள்ளிக் காலத்தின் பருவக் கோளாறைப் பற்றிய விவரணையில், நாமும் கனகாவை நேசிக்கத் தொடங்கிவிடுகிறோம். அதனால்தான் ‘அவள்’ என்று சுட்டப்படும் சொல்லின் காந்தம் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. ஆனால், அந்த ‘அவள்’ அவளல்ல என்பது நாவல் முக்கால்வாசிக்கு வந்தவுடன் புலனாகிறது. அந்தத் திருப்பம் இன்னொரு திருப்பத்தில் போய் நிற்கும்போது அதிர்வைத் தருகிறது. பருவ வயதில் குமுறிக்கொண்டிருக்கும் வேள்வித் தீயின் தேவைகளுக்குத் தீபன்  வடிகால் தேடிச்சென்றபோது, எதிர்கொண்ட வேறொரு திசைமாறிய பெண்தான் அவள் என்று, வாசிக்கும்போது உண்டான அதிர்ச்சி, நீட்சி கண்டு நீண்டுகொண்டே போகிறது.

முதல் அத்தியாயத்தில் நிர்வாணமான பெண் உடலை மறைந்து பார்க்கும் தீபனின் செயல் அவனுக்கு நெருக்கமான சிலருக்குத் தெரிந்துவிடும்போது, அவனுக்கு நேரும் அவமானம் வாசகனையும் கூச வைக்கிறது. குறிப்பாக அவனைப் பெற்ற தாயே அவனைத் தூக்கி எறிந்து விடுகிறாள். அவனை அடியோடு வெறுத்து, உடனே தன்னைவிட்டு விலகிச் சென்று விடுவதை வலியுறுத்துகிறாள். சாரதாவின் கணவன் அவனைக் கண்கொண்டு பார்க்க விருப்பமில்லமால் கண்டபடி திட்டுகிறார். சுற்றியுள்ளவர்கள் அனைவரும் அவன் மீது உமிழ்வதாக கூனிக் குறுகிப் போகிறான். குடும்பத்தில் ஆண் துணையற்ற நிலையில் தீபன் மட்டுமே தனக்குத் துணை என்ற தாயின் நம்பிக்கையை  அவன் குழிதோண்டி புதைத்துவிட்டதான கீழ்மையில் தள்ளப்படுகிறான்.  பெற்ற தாயே அவனை வீட்டிலிருந்து விரட்டும்போது இந்த உலகமே அவனை ஒரு செத்து நாறும் பூனையாகப் பார்ப்பதாகவும், அவனின் அந்தச் கேடுகெட்ட செய்கை நீக்கவியலாக் கறையாக நிலைத்துவிட்டதான  படிமம் நாவல் எழுத்து உருவாக்கி விடுகிறது.

நாவலில் காட்சிமொழியாக்கப்படும் சம்பவங்கள் சக மனிதன் வாழ்க்கையில் தன் கடந்து வந்தவையாகத்தான் இருக்கும். பெரும்பாலான நாவல்களில் இந்த அனுபவப் பகிர்வுகளை நாமும் அனுபவித்திருப்போம். ஆனால் ஒரு தேர்ந்த நாவலாசிரியர் தன் புனைவாற்றலால் அவற்றுக்குப் புதிய முலாம் பூசும்போது அதன் அழகியல் மெருகேறிவிடுகிறது. அந்தச் சொற்களுக்கு இலக்கிய மதிப்பு கூடிவிடுகிறது. அது ரசனைக்குரியதாக்கிப் பரிமாறுகிறது.

எடுத்துக்காட்டுக்கு ஒரிடத்தைச் சொல்லலாம். கட்டுரை நீளமாகிவிடக்கூடாது என்பதற்காகவே ஒற்றை எடுத்துக்காட்டு மட்டும் கொடுக்கிறேன். இந்த ஒரு நுணுக்கம் ஒரு பானை சோற்றுக்கான ஒரு பதமாவதைப் பார்க்கிறேன். ஒன்பதாம் அத்தியாயத்தில் தீபனின் சக வகுப்பு மாணவனான விக்கி தீபனைச் சீண்டுகிறான். கனகா அந்த ஆண்டு பள்ளிக்கு வராத ஏமாற்றத்தில் துவண்டு போன தீபனை வம்புக்கிழுக்கிறான். அது போதாதென்று மாணவி வனிதா விக்கியோடு சேர்ந்துகொண்டு தீபனை மட்டம் தட்டுகிறாள். ஒரு பெண் மாணவியும் சேர்ந்துகொண்டு கேலிச் செய்யுபோது தீபன்  சீற்றமடைகிறான்.

அந்தக் காட்சியை இப்படி எழுதுகிறார் ம.நவீன்.

‘கனகாவை அப்படிச் சொன்னதும் என் உடலில் இயல்பான முறுக்கு ஒன்று எழுந்தது. ஒருவனைத் தாக்கும் முன்னர் எனக்குள் என்ன மாற்றம் நிகழ்கிறது என அப்போதுதான் கவனித்தேன். அந்த முறுக்கு நானாக உருவாக்கிக்கொண்டதல்ல. அந்த வேட்டை மிருகம் தானாக விழித்துக்கொண்டது. நெருப்புச் சுட்டால் கை விடுக்கென துடிப்பதுபோல, அக்குளில் விரல் வைத்தால் உடல் படக்கென எழுவதுபோல, கூர்மை தீண்டினால் கால்கள் சடக்கென உதறுவதுபோல இயல்பான நிலைமாற்றம். தலை வரை கிறு கிறுவென ஏதோ ஏறியது. ரத்தமாக இருக்கலாம். எந்தக் குழப்பமும் இல்லை.’ என்று எழுதுகிறார்.

நாவல் நெடுக்க நிகழும் தீபனின் குணமாற்றம் சராசரி மனிதர்களுக்கு இருக்கக்கூடிய இயல்பான ஒன்றுதான். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வெவ்வேறான மனிதர்களுடன்தான் நாம் பழக நேரிடுகிறது. அதனை ஒரு நாவலின் ஊடாகத்தான் சாதித்துக் காட்டமுடியும். நாவலை ஒரு முழுமையான வாழ்க்கைச் சித்திரம் என்று சொல்வது இதனால்தான். தீபன் லீகாட் நெடுக்க கவனம் குவிக்கிறான். வளரும் பருவத்தில் அவன் அம்மாவுக்கு உதவுபவனாக, இடைநிலைப்பள்ளியின்  யாரோடும் சேராதவனாக, கனகாவின் வரவால் காதலில் விழுந்தவானாக, கனாகா இல்லாமல் தவிக்கும்போது சீண்டப்பட்ட தருணங்களில் வெகுண்டெழுந்தவனாக, பருவக் கிளர்ச்சி முறுக்கேறியதால் பெண்ணின் நிர்வாணத்தைப் பார்த்துவிட்டு தன்மானம் பறிபோனவனாக, கடையில் வேலை செய்யும்போது வாழ்க்கையை மெல்ல மெல்ல கற்றுக்கொண்டவனாக, மாறனின் ஊக்குவிப்பால் கரும்பைத் திருடி விற்கும் சாகசக்காரனாக, காமத்தைத் துயக்க ஒரு சிறுமியின் நகையை கொள்ளையடிக்கத் துணைபோனவனாக, பள்ளிக் காலத்தில் சீண்டப்பட்ட பாதிப்பில், கடைச் சிப்பந்தி விச்சுவை சீண்டும் பக்குவத்தை அடைந்தவனாக, கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் உணவு பரிமாற தாமதமாகும் போது கண்டபடி திட்டுக்களை வாங்கி அதற்குப் பழி வாங்க உணவுத் தட்டில் எச்சிலை உமிழ்ந்த இழிவான பண்புடையவனாக, விச்சுவின் ஒவ்வாத நடவடிக்கைகளால் எரிச்சல் கொண்டவனாக, நிஷாவின் உடல் மீது கொண்ட விரகதாபம் ரத்னா அண்டி மீது தீர்த்துக்கொள்பவனாக,  அவனின் பாத்திரம் பல்வேறு பண்பு மாற்றங்களை எதிர்கொள்கிறது. வாழும் சூழலால் இந்த மடைமாற்றங்கள் நிகழ்ந்தாலும் அதனை ஒரே கதையில் கொண்டுவரும்போது ஒரு பாத்திரம் எப்படி எல்லாம் சூழலுக்கேற்ப தன்னைத் தகவமத்துக் கொள்கிறது, எப்படியெல்லாம் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்கிறது, எப்படியெல்லாம் சூழலுக்கேற்ப பச்சோந்தியைப் போல் நிறம் மாறிக்கொள்கிறது என்பதை புனைந்து செல்லும்போது, மையப்பாத்திரத்தின் முழுமையான வாழ்க்கை சித்திரம் உருவாகிவிடுகிறது. எல்லா மனிதர்களும் எல்லா நேரத்தில் ஒரே பண்புநலன்களைக் கொண்டவர்களாக இருப்பது சாத்தியமே இல்லை. அதை குறிப்பாக தீபனிடம் துல்லியமாக அடையாளம் காண முடிகிறது. புனிதனாக கருதப்படும் ஒருவன் ஏதோ காரணத்தால் புனிதம் கெடுவதும், சண்டியர்கள், குற்றவாளிகள் ஏதோ ஒரு தருணத்தில் புனிதராகிவிடுவதையும் நாம் நடைமுறை வாழ்க்கையில் அவதானிக்கிறோம். (புதுமைப்பித்தனின் ‘சங்குத் தேவனின் தர்மம்’ கதையை வாசித்துப் பார்க்கலாம்).

ஜாலாம்பார், நாவலின் மையச்சரடோடு  இணையும் இன்னொரு நல்ல வார்ப்பு. கலவையான குணத்தை அவரிடமும் பார்க்க முடிகிறது.  ஒற்றைக் குணத்தோடு வாழ்நாள் முழுவதும் இருப்பது சாத்தியத்துக்கு அப்பாற்பட்டது. அப்படியே அவன் வாழ்நாள் முழுதும் நான் புனிதன் என்று காட்டிக்கொள்பவனாக இருப்பானாயின் அவன் பாவனை மனிதனாகிறான். சக மனிதர்களிடமிருந்து மதிப்பைப் பெற நடிப்பவனாகிறான். அவனை முழுமைபெற்ற மனிதன் என்று சொல்வது அபத்தமாகிவிடும். அவன் மூளை ஊனம் உடையவன் என்று வேண்டுமானால் வகுத்துக்கொள்ளலாம்.

நாவலில் தீபனின் தாய் மாமானாக வரும் ஜாலாம்பார், தன்னைச் சுற்றி வாழும் சமூக மனிதர்களுக்குச் செய்யும் உதவியால் அவன் லாக் அப்பில் பல முறை அடைக்கப்படுவதும் , பின்னாளில் விச்சு ஒரு கொடுமைக்கார முதலாளியிடம்  சிக்கி தடுமாறும்போது கைகொடுத்து உதவுவதும், தன் கடை பணியாளின் பிள்ளைக்கு விநோத நோய் கண்டபோது மனமிரங்குவதும், தீபனைக் கரை ஏற்றுவதில் அக்கரை செலுத்துபவனாகக் காட்டப்படுவதும், விச்சு ஊருக்குத் திரும்பும்போது அவன் அவருடனிருந்து உழைப்பைக் கொடுத்ததை நன்றியோடு நினைத்துக் கண்ணீர் வடிப்பதுமாக முழுமைபெற்ற பாத்திரமாக வருகிறார். தன் மாமாவால் உதவாக்கரை என்று பேரெடுத்தவன் பின்னாளில் பிறர் துயருணர்ந்து உதவுபவனாகக் காட்டுப்படுவது இயல்பிலேயே அவன் கருணை மனம் கொண்டவன் என்பதைச் சித்தரித்துவிடுகிறது.

விச்சுவைக் கூட ஒரு முழுமைபெற்ற பாத்திரமாக காட்டுகிறது ‘லீகாட்’. அவன் பீரைத் திருடிக் குடிப்பவனாக, தீபனை அடியோடு வெறுப்பவனாக, கோபத்தில் ஜாலம்பாரைத் திட்டுபவனாகக் காட்டப்பட்டலும், அவனே பெண் சிப்பந்தி மகளின் மருத்துவத்துக்குத் தன் சொற்ப ஊதியத்திலிருந்து பண உதவி செய்வதாகக் காட்டப்படுவதும், தீபனின் மாமா கடனில் தவிக்கும்போது பீர் திருடிய பணம் என்ற பெயரில் உதவுவதும், அவன் முற்றிலுமாக பிழைக்க வந்த சந்தர்ப்பவாதியல்ல என்பதை நிரூபிக்கிறது.

நாவல் நிகழும் காலத்தில் நடக்கும் சம்பவங்கள் சரியாக வந்திருக்கிறது. 1982 தொடங்கி 2000 வரை  நாவல் நிகழும் காலக்கட்டமாக எடுத்துக்கொள்ளலாம். 2000த்தில்தான் லூனாஸ் சட்டமன்ற உறுப்பினர் சுட்டுக் கொல்லப்படுகிறார். இளைஞர்கள் முடியை நீலமாக வளர்த்து பின்னால் வாலைத் தொங்கவிட்டுக் கட்டிக்கொள்வது அக்காலத் தோற்ற நாகரிகம். தி கீஸின் ‘அக்கா மக அக்கா மக’ பாடல் பிரபலமானவர்கள் முடியை அவ்வாறே வளர்த்துக்கொண்டார்கள். யோகி பி, த டோன், லோக் அப் பாடகர்கள் அப்போது கிளப்பிய அலைகளில்தான் அக்காலக்கட்ட இளைஞர்கள் மந்திரித்துவிட்டதுபோல மயங்கிக் கிடந்தார்கள். தீபன் படிக்கும் பருவத்தில் காட்டப்படும் லூனாஸ் எண்பது தொண்ணூறுகளின் லூனாஸ். மாச்சோ என்ற சொல் பரவலாகப் பயன்பட்டது அப்போதுதான். ஆனால், ‘மொக்க பிகர்’ என்ற சொல் பிரயோகம் தமிழ்ச்சினிமாவிலிருந்து வந்தது. அது அக்காலத்தின் பயன்பாட்டில் இல்லை என்பது என் யூகம்.

காட்சிப்படுத்தும் திறன் புனைவிலக்கியங்களின் முக்கியமான அலகுகளில் ஒன்று. நுணுக்க விவரணைகள் மிகையாகவும் இல்லாமல், அங்கவீனமுடையதாகவும் இல்லாமல், யதார்த்தமாக இருந்தால் அவற்றின் நம்பகத்தன்மை கூடிவரும். ‘லீகாட்’ நாவலில் பல இடங்களில் வரும் விவரணைகள் ரசிக்க வைக்கின்றன. காட்டாக 19வது அத்தியாயத்தில் தீபன் மீ பிரட்டும் கலையில் கைதேர்ந்துவிட்டதாகக் காட்சிப்படுத்தப்படுகிறது. சிவாஜி கணேசன், கமல் ஹாசன் போன்ற பிரசித்திபெற்ற கலைஞர்கள் தான் நடிக்கும் பாத்திரத்தின் நிஜ மனிதர்களைக் கொண்டுவந்து நிகழ்த்திக்காட்டச்சொல்லித், தங்கள் நடிப்பை மெருகேற்றிக்கொள்வார்களாம். ஆகையால் அது நடிப்பாக இல்லாமல், உண்மை மனிதர்களின் இயல்பான மெய்ப்பாடுகளாக பிரதிபலிக்கும் யதார்த்தம் சினிமாவிலும் வந்துவிடும். நாவலாசிரியருக்கும் மீ பிரட்டும் வித்தையைக் கடையில் வேலை செய்தே கற்றிருப்பார் என்றே தோணுகிறது. ‘மீ பதத்தில் வந்திருக்கிறதா என்பதைச் சோதிக்க கண்களும் மூக்குமே பிரதானம்’ என்று சொல்லுமிடம் இதனை உறுதி செய்கிறது.

மீ பிரட்டுவோரிடம் பரவலாக காணப்படும் இயல்பான செய்கை சில குறிப்பிடப்படவில்லை. சீனச் சட்டியை அடிக்கொருதரம் சட்டுவத்தால் தட்டுவதும், பிரட்டும் போது சூடு சம அளவில்  பரவ சட்டியை வெவ்வேறு திசைக்குத் திருப்பிக்கொண்டே இருப்பார்கள். தீப்பொறி பறக்க விசிறியாலோ காற்றாடியாலோ காற்றின் விசையைக் கூட்டி நெருப்பை கனன்றெரிய வைப்பார்கள்.

இந்த அத்தியாயத்தில் சமையற்கலை தொடர்பான பல நுண்விவரனைகள் கவர்கின்றன.

தீபன் தன் பதின் வயதைத் தொட்டு எப்படி வளர்ந்து ஆளாகிறான் என்பதும் கவனப்பட வைக்கிறது. பதின் வயதில் உண்டான உடற் கிளர்ச்சியைப் புரிந்து கொள்ளாமல் தடுமாறும் இடத்திலிருந்து,  அவன் முன்னேறுகிறான். கனகா வீசிக்கொண்டிருந்த காதல் வலையில் புரிந்துகொள்ளத் திணறுபவனாக இருந்து, பின்னர் கலைவாணியைத் தேடிப்போய் தொந்தரவு செய்பவனாக முன்னேறுகிறான். பணத்தின் மதிப்பை மாறனிடமிருந்தே கற்றுக்கொண்டு, மாமா தினக்கூலி பத்து பத்து வெள்ளியாகக் கொடுக்கும் போது அதனை செலவு செய்யவும் கற்றுத் தேறுகிறான். கனகா உடல் தேவைக்காக அவனிடம் சங்கேத மொழியில் பேசியதைப் புரிந்துகொள்ளாதவன், பினாங்கில் அண்டி ரத்னாவிடம் படுத்து எழுகிறான். இவை சாதாரணமாக எல்லா பதின் வயதினருக்கும்  அனுபவத்தால் உண்டாகும் முதிர்ச்சிதான். இந்த நடைமுறையை ஒழுங்கு குலையாமல்  நாவலில் வைக்கும்போது நாம் இளம் பருவத்தில் கடந்து வந்த அனுபவங்கள் நீட்சியாக கண்முன் விரிகிறது. இதனை நாம் வளரும்போதோ,  வளர்ந்துவிட்ட பிறகோ நினைத்து வியப்படைவதில்லை அல்லது பெரிதாகக் கருதுவதில்லை. அதனை மிகச் சாதாரணமான சம்பவங்களாகவே கடந்து போய்விடுகிறோம். ஆனால் ஒரு நல்ல நாவலாசிரியர் அதன் பரிணாமத்தைப் புனைவின்வழி அடிக்கோட்டிட்டுக் காட்டும்போது அவை அசாதாரண காட்சிளாக விரிகின்றன. அதுமட்டுமல்ல அவை நமக்குள் முடங்கிப்போய்விட்ட கடந்த கால வாழ்க்கையை ஒரு கலையாக மாற்றிக் காட்டி நம்மை நாமே திரும்பிப் பார்த்துக்கொள்ளும் nostalagic  தருணங்களாக மீண்டெழுகின்றன.

தீபன் தவறு செய்துவிட்ட பிறகு ஊரே அவனைக் காறி உமிழ, கறுப்பன் மட்டும் தீபனிடம் இரக்கம் காட்டும் ஒரே ஜீவனாக இருந்து அவனைப் பினாங்குக்கு வழி அனுப்பி வைக்கிறது.  மீண்டும் லூனாசுக்கே திரும்பும் தருணத்தில், அவனை வாலாட்டி வரவேற்கும் நண்பனாகவும் கறுப்பனைக் காட்டுவது, அவன் தவறை அது மன்னித்து அவனை வரவேற்பதாகப் புரிந்துகொள்ளலாம். தீபனைத் தம்பி என்று விளிப்பதிலிருந்தே சாரதா அக்காள் அவன் செய்த பிழை பருவக் கோளாறினால்தான் உண்டானதே எனப் புரியவைக்கிறாள். நாவலில் அது மிக நெகிழ்ச்சியான தருணம். உன்னை மன்னித்துவிட்டேன் என்பதற்கு ஈடான சொல்லாகத்தான் தம்பி என்ற சொல்லைப் பயன்படுத்துகிறாள். அவனைப் பெற்ற தாயும் அவனை மன்னித்து அரவணைத்துக்கொள்வதன்றி வேறு எதையும் செய்துவிட முடியாத கையறு நிலையில்தானே இருக்கிறாள்.

எனக்கு ஒரே ஒரு கேள்விதான் உண்டு இந்த நாவலில்.

மகன் மன்னிக்க முடியாத தவறிழைத்தவன்தான். ஆனால் தீபனின் தாய்க்கு ஆண் துணை யாருமே இல்லாமல் தனிமையில் வாழ்கிறாள். அவள் தீபனுக்காக ஏங்கும் தாய்மை உணர்வு ஒரு கட்டத்தில்கூட எழவில்லை. தன் தம்பியிடம் அடைக்களமாகியிருக்கிறான் எனவே பாதுகாப்பாக இருப்பான் என்று அதற்குக் காரணம் கற்பித்தாலும், பேச்சாயி அவனை ஒரு கணம்கூட நினைக்காமல் இருப்பதுதான் உறுத்துகிறது.

2000த்தில் சுட்டுக்கொள்ளப்பட்ட ஜோ பெர்னாண்டஸ் லூனாஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். நாடாளுமன்ற உறுப்பினர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நாவலை இப்படித் தொகுத்துக்கொள்கிறேன். பதின்ம வயது தொடங்கும் போது ஒர் விடலைப் பையனுக்கு உண்டாகும் உடற்கூறு மாற்றங்கள் அவனை அலைக்கழித்துக்கொண்டே இருக்கிறது. பதின்மூன்று, பதினான்கு வயதில் உடல் செய்யும் தொந்தரவை அடக்கி கட்டுக்குள் கொண்டுவருவது முடியாத செயல். அறிவியல் உடற்கூறை விடலைப் பருவத்தின் இயல்பு என்கிறது. இந்த உடல் இச்சைக்கு எவ்வாறாயினும்  வடிகால் தேடியாக வேண்டும். வயது கூடக் கூட பெண் உடல் மீதான எதிர்பாலினத்தின் கிளர்ச்சி பிசாசுத் தனமானது. அதற்கான கடிவாளம் பெண்ணுடலை அனுபவிப்பதில் மட்டுமே சாத்தியமாகும். மாறன் போன்றவர்களே தீபன் போன்ற இளசுகளின் தேவைகளுக்கான வழிகாட்டியாக அமைந்துவிடுவது தற்செயல் அல்ல. ஏனெனில் அப்படி அமைவதை உடலிச்சையின் விசையின் முன்னேற்பாடு. அந்த வகை நட்பை முழுமனதோடு ஆராதிக்கிறான் தீபன். தன் இருப்பு குறித்த தேடலே தீபனை நாவல் முழுவதும் விரட்டுகிறது. இந்த நாவலை எவ்வளவு கவனமாக வாசித்தாலும், இதிலுள்ள பாலியல் சார்ந்த சம்பவங்கள்,  சராசரி வாசகனுக்குப் பெரும் அதிர்ச்சியைத் தரக்கூடும். ஆனால் நாவலின் உட்பொருளைப் புரிந்துகொண்டு வாசிப்பவர்களுக்கு, வாழ்க்கையை உள்நோக்கி அவதானிப்பவர்களுக்கு, இதன் கலையமைதி அரவணைத்துக்கொள்ளும். அவர்களே இதனை ஒரு அற்புதமான கலைப்படைப்பாகவே மதிப்பிடுவார்கள்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...