2022 ஆம் ஆண்டு தமிழ்விக்கி தளத்துக்காக சபா மற்றும் சரவாக் மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடி இனங்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதும் வாய்ப்பு அமைந்தது. அவர்களில் பல இனத்தவர்களுக்கு முறையான தகவல்கள் விக்கிப்பீடியா பக்கத்தில் கூட இல்லை. காலனிய ஆய்வாளர்கள் எழுதிய ஆய்வேடுகளிலும் குறிப்புகளிலும் கிடைத்த தகவல்களை ஒட்டியே கட்டுரைகளை எழுதினேன். அறிமுகக் கட்டுரை என்ற வகையைத் தாண்டி அவை முழுமையானவை இல்லை என்பது எழுதும் போதே தெரிந்தது. அதே போல தீபகற்ப மலேசியாவில் வாழும் பூர்வக்குடி இனத்தவரைப் பற்றியும் அவர்களின் வாய்மொழிக் கதைகளைத் திரட்டி எழுத வேண்டுமென்ற எண்ணமும் எழுந்தது. அதற்காக முன்னரே அவர்கள் குறித்து எழுதப்பட்ட சில நூல்களை ஆங்கிலத்தில் வாசித்தேன். அதில் டாக்டர் லிம் பூ லியாட் எழுதிய orang asli animal tales (1981) எனும் நூல் தனித்துவமானது. 1981 ஆம் ஆண்டு வெளிவந்த இந்நூலில் பல்வேறு பூர்வக்குடி மக்களிடமிருந்துக் கேட்டறிந்து சரிபார்க்கப்பட்ட 23 விலங்குகளின் கதைகள் தொகுக்கப்பட்டிருந்தன. அதன் பின்னர், மேலும் 9 கதைகள் இணைக்கப்பட்டு 2010 ஆம் ஆண்டு பூர்வக்குடி விவகாரங்களுக்கான மையத்தால் (Centre for Orang Asli Concerns) மறுபதிப்பு கண்டது.

விலங்கியலாளரான டாக்டர் லிம் பூ லியாட் இளவயதிலே நிறைய வகை விலங்குகளைத் தேடி அட்டவணைப்படுத்துவதில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். பின்னர், கேரி தீவில் ஆராய்ச்சிக் கூடம் நிறுவிய சமயத்தில் அங்கு வாழும் மா மேரி இன மக்களுடன் நெருங்கி பழகும் வாய்ப்பைப் பெற்றார். பின்னாளில், மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தில் (Institute for Medical Research) பணியாற்றும் போதும் எலிகளிடமிருந்து மக்களுக்குப் பரவிய டைஃபஸ் (Typhus) நோயைக் குறித்து ஆராய்ந்தார். அந்த ஆராய்ச்சியின் போதுதான் பூர்வக்குடி மக்களுக்கு அந்நோய் தொற்றாதிருந்ததைக் கண்டுகொண்டார். அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றார். அவர்களிடமிருந்தே காட்டுயிர்களைப் பற்றிய தொன்மமும் விநோதமும் நிறைந்த பல கதைகளைக் கேட்டறிந்தார். தாவரங்கள், விலங்குகளின் சேகரிப்பாளர்கள் என்பதைத் தாண்டி காடுகளிலிருந்து பெறும் அன்றாட அனுபவங்களிலிருந்து இயற்கை வரலாற்றுக்குப் பெரும் கொடை செய்பவர்கள் எனப் பூர்வகுடிகளை டாக்டர் லிம் மதிப்பிட்டார். அவர்கள் வழி பெறப்பட்ட விலங்குகளின் கதைகளைப் புத்தகமாகத் தொகுத்தார். அந்தக் கதைகள் யாவும் காட்டின் சக உயிர்களாக விலங்குகளைக் கண்ட அவர்களின் பண்பாட்டறிவும் இயற்கையைப் பற்றிய புரிதலையும் காட்டக்கூடியவை.

குழந்தைகளுக்குச் சொல்லப்படுகின்ற வடிவில் எளிமையானவையாக உள்ள அக்கதைகள் மலேசியப் பழங்குடிகளின் பண்பாட்டின் ஒருபகுதி. அதனைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தும் முயற்சியே இத்தொடர்.
மூஞ்சூறு (House Shrew/ Cencurut Rumah)
காட்டுயிர்களிலே சிறியவையாக இருந்ததனால் பெரிய விலங்குகளுக்கான எளிய இரைகளாக மூஞ்சூறுகளே விளங்கின. எதிரிகளால் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டும் கருணையே இல்லாமல் வேட்டையாடப்பட்டும் வந்தன. மூஞ்சூறுகளே எப்பொழுதும் பலி விலங்குகிளாயின. அதனாலே, மூஞ்சூறுகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே சென்றது. ஒரு கட்டத்தில், முழுமையாக அழிந்து போகும் அபாயத்தையும் எதிர்நோக்கின.

மூஞ்சுறுகளின் தலைவனை அதன் தோல் நிறத்தைக் கொண்டு உங்களால் எளிதில் அடையாளம் கண்டுவிடமுடியும். மற்ற மூஞ்சூறுகளின் தோல் நிறம் கறுப்பாக இருக்கும். அதற்கு மாறாக, அதன் தலைவனது தோல் மட்டும் சாம்பல் நிறத்தில் காட்சியளிக்கும். வனத்தின் நீதியை நன்கு அறிந்த புத்திசாலித்தலைவன்தான் அது. தங்கள் இனத்தைச் சூழ்ந்து கொண்டிருக்கும் சிக்கலைக் களைய உடனடியாக எதையாவது செய்ய வேண்டும் என எண்ணி எஞ்சிய மூஞ்சூறுகளுடன் உடனடியாக ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்தது.
எல்லா மூஞ்சுறுகளும் கூடியதும், ”எனதருமை நண்பர்களே” எனச் சன்னமும் தெளிவும் நிரம்பிய குரலுடன் உரையைத் தொடங்கியது. நம்முடைய சந்ததியே அழிந்து விடுமளவு பெரும் சிக்கலை நாம் எதிர்கொண்டிருக்கிறோம். அளவிலும் சரி ஆற்றலிலும் சரி நம்முடைய எதிரிகளுடன் இணை நின்று நம்மால் வெல்ல முடியாது என்பது நிச்சயம். ஆகவே, பிழைத்திருப்பதற்கு எதாவது நம்பிக்கை உண்டென்றால் அது நிச்சயமாக நம்முடைய வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வதாகத்தான் இருக்கும் ’’ என்றது.
‘’மன்னிக்கவும், மாற்றம் என்பது குறித்து நமக்கு என்ன தெரியும்” என அழுது கொண்டே கூட்டத்திலிருந்த மூஞ்சூறு ஒன்று கேட்டது. ”ஆம். தலைமுறைதோறும் இப்படியாகத்தான் வாழ்ந்து வருகிறோம். நமக்கு வேறு வழிகளும் தெரியாதே,” என மற்றவையும் ஆமோதித்தன.
அவற்றின் குரலை அனுதாபம் நிரம்பிய பார்வையுடன் தலைவன் மூஞ்சூறு பார்த்தது. ஒரு காலத்தில் புஷ்டியாகவும் பருத்தும் கிடந்த மூஞ்சூறுகள் இளைத்தும் எலும்புகள் துருத்தியும் கிடந்தன. அவற்றின் தோல் அதன் பளபளப்பை இழந்து போய் காணப்பட்டது. மயிரிழையில் தப்பிய அவற்றின் உயிர் போராட்டங்களின் தடயங்களாய்த் தோலில் தழும்புகள் தெரிந்தன. மறைந்தும் பயந்தும் வாழ்ந்து வருவதன் அடையாளமாய்ச் சில மூஞ்சூறுகளின் முக நரம்புகளில் நடுக்கம் தெரிந்தது.
அடுத்ததாய், மூஞ்சூறு கூட்டத்தலைவன் அதிர்ச்சியான செய்தியைச் சொல்லத் தொடங்கியது. ‘’முதலாவதாக” எனத் தொடங்கி ‘’உணவுக்காக நம்மால் பெரிய விலங்குகளுடன் சண்டையிடமுடியாது என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். அதனால், நம்முடைய உணவுகளை மாற்றியமைக்க வேண்டும். இன்று தொடங்கி இறைச்சி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். அதற்கு மாறாக புழு, பூச்சி மற்றும் தாவரங்களை மட்டுமே உண்ண வேண்டும்.’’
கூட்டத்திலிருந்து அவநம்பிக்கை குரல்கள் எழத் தொடங்கின. நினைவு தெரிந்த நாள் முதலாக, இறைச்சிகளை உண்ணும் இனமாகவே அவை இருந்து வருகின்றன. ஆகவே, தாவரங்களையும் பூச்சிகளையும் உண்பதை யாராலும் எண்ணிப் பார்க்கக் கூட முடியவில்லை.
இடையூறுகளுக்கு அஞ்சி நிறுத்தாமல் ‘’இரண்டாவதாக” எனத் தலைவன் தொடர்ந்தது. ‘’பெரிய விலங்குகள் வேட்டையாடுவதிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள வேண்டும். அந்த நிலையை அடைய அவை நம்மை அணுகுவதற்குக் கூட இருமுறை யோசிக்குமளவு நாம் முடிந்தளவு தூர்நாற்றம் கொண்டவையாக மாற வேண்டும். ஆகவே, இன்று தொடங்கி ஒவ்வொரு முறையும் உண்டு முடித்த பின்னர் துர்நாற்றமும் கடும் நெடியும் வீசும் தாவரத்தில் நம் உடலைத் தேய்த்துக் கொள்ள வேண்டும். ‘’
அதிர்ச்சியடைந்த கூட்டத்திலிருந்து இரண்டாவது அலையாகக் குரல்கள் எழுந்தன. ஆனாலும், தலைவன் தன் கட்டளைகளைத் தொடர்ந்து கொண்டிருந்தது. ‘’மூன்றாவதாக, நாம் ஒருபோதும் தரையில் உறங்க கூடாது. பலவீனமான சூழலில் இருக்கும் போது எதிரிகள் நம்மை அணுகுவதை அனுமதிக்கக்கூடாது. மாறாக, தரைக்குக் கீழே பெரிய வளையைத் தோண்டி அதற்குள் உறங்கவும் ஒய்வெடுக்கவும் வேண்டும்.’’
”நண்பர்களே, இவைதாம் நம்முடைய இனத்தைக் காக்கும் மூன்று செயற்திட்டங்கள்,’’ எனத் தன்னுடைய உரையை முடித்துக் கொண்டது.
கூட்டத்தில் குசுகுசுப்புகளாகக் கேட்டுக்கொண்டிருந்த அவநம்பிக்கையின் ஒலி மெல்ல தீவிரமடைந்து எதிர்ப்புக்குரல்களாக மாறின. மூஞ்சுறுகளின் தலைவன் தன்னுடைய மூக்கை விடைத்துக் கொண்டு தன்னை எதிர்க்கும் மூஞ்சூறுகளை ஒவ்வொன்றாகப் பார்த்தது. பயம், ஐயம் மற்றும் அவநம்பிக்கை ஆகியவை அவற்றின் முகங்களில் நன்கு தெரிந்தன. ஆனாலும், மூஞ்சூறுகளின் தலைவன் மிடுக்குடன் நின்று கொண்டிருந்தது. அவை எழுப்பிய ஐயங்களுக்கும் கேள்விகளுக்கும் மிகுந்த நிதானமான குரலில் பதிலளித்தது.
கடைசியாக, தங்களுடைய தலைவனின் திட்டங்களை முயன்று பார்க்க மூஞ்சூறுகள் முன்வந்தன. முதலில் அந்த மாற்றங்கள் எதனையும் மூஞ்சுறுகள் விரும்பவில்லை. காலப்போக்கில் உருவாகி வந்த வழக்கங்களை மாற்றுவதொன்றும் எளிமையாகவும் இருக்கவில்லை. ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக உணவு அனைவருக்கும் போதுமானதாகவும் சிலசமயங்களில் அதிகமானதாகவும் கிடைக்கத் தொடங்கியது. உணவை மழைக்காலத்துக்காய்ச் சேமிக்கவும் முடிந்தது.
மெல்ல, புதிய உணவு பழக்கங்களுடன் அவற்றால் தகவமைத்துக் கொள்ள முடிந்தது. மூஞ்சூறுகள் நலமுடையவயாகவும் பலம் மிக்கவையாகவும் மாறத்தொடங்கின. அதைப் போல பாதுகாப்பான வளையில் நிறைய ஆரோக்கியமான குட்டிகளை ஈனவும் முடிந்தது. அழுகிய வெங்காயங்களிலிருந்து வீசுவதைப் போன்ற கடும் நெடி அவற்றின் உடலிலிருந்து வீசத் தொடங்கியதால் பெரிய விலங்குகளிடமிருந்து தப்ப முடிந்தது. அதனாலே, அவற்றின் எண்ணிக்கையும் பெருகத் தொடங்கியது.
ஒருகாலத்தில் தன்னுடைய கூட்டத்தாராலே சந்தேகத்துடன் பார்க்கப்பட்ட தலைமை மூஞ்சுறு இப்பொழுது தங்களது இன நலனுக்காகத் தூரநோக்குச் சிந்தனையுடனும் ஞானத்துடனும் செயற்பட்ட சிறந்த தலைவன் எனப் போற்றப்பட்டது. மனிதர்களுக்கு மட்டுமே தரப்படும் உயர் மரியாதையைக் கடவுளுக்கு நிகராகப் போற்றப்பட்ட தங்கள் தலைவனுக்கு மூஞ்சுறுகள் வழங்கின. அடுத்த பிறவியில் தங்களுடைய தலைவன் அதிகமான உணவும் குறைவான எதிரிகளும் கொண்ட அரசருக்குரிய இடத்தில் பிறக்க வேண்டும் எனக் கடவுளை வேண்டி கொண்டன.
அவர்களின் வேண்டுதலுக்குத் தக்க பலன் கிடைத்தது. அடுத்த பிறவியில், மூஞ்சூறுகள் மனித நடமாட்டம் மிக்க பகுதியில் குறைந்த எதிரிகளும் நிறைவான உணவும் கொண்ட இடங்களில் மட்டுமே வாழத் தொடங்கின. இரண்டு சில்லறைக் காசுகளை உரசும் போது எழும் ஒலியைப் போன்று அவற்றின் குரலும் உயர் அளவு கொண்டதாக மாறியது. அதனால், நகரவாசிகள் பலரும் குறிப்பாகச் சீனர்கள் மூஞ்சூறுகளை ‘’செல்வ எலி” என்று அழைத்தனர். சிலசமயங்களில் அதிர்ஷ்டத்தின் குறியீடென்று அவற்றைத் தங்கள் வீடுகளுக்கு வரவேற்கவும் செய்தனர்.
நிலவெலி (Moonrat/ Tikus Bulan)
முன்னொரு காலத்தில் விலங்குகளின் அரசன் எனப் போற்றப்படுகின்ற புலி காட்டின் அரசனாக இருக்கவில்லை. மாறாக, காண்பதற்கே விநோதமாகவும் அழகற்றும் இருக்கும் நிலவெலியே விலங்குகளுக்கெல்லாம் அரசனாக விளங்கியது. நிலவெலிக்குப் பன்றியைப் போன்ற நீண்ட மூக்கும் வாத்தைப் போன்ற தட்டையான பாதங்களும் பின்பகுதியில் நேர்த்தியற்ற கரடு முரடான மயிரும் இருந்தது. உண்மையிலே அது விலங்குகளின் அரசனாக இருக்க மிக விசித்திரமான தேர்வுத்தான்.

தன்னுடைய ஆட்சியில் மிகத் திமிராகவும் கர்வமாகவும் நிலவெலி நடந்து கொண்டது. சிறிது சர்வாதிகாரத் தோரணையோடு நடந்து கொண்டது என்றும் நீங்கள் விளங்கி கொள்ளலாம்.
ஒரு நாள், அது உலகைக் காண வேண்டுமென முடிவெடுத்தது. அதற்குத் தனக்கு ஒரு படகு தேவைப்படும் என எண்ணியது. அதனால், தன்னுடைய குடிகள் அனைவரையும் திரட்டி, பெரிய மரமொன்றை வெட்டிப் படகு செய்யப் பணித்தது. அதுவும் சிறிய படகாக இல்லை. தன்னைப் போன்று உருவம் படைத்த பெருஞ்சிலையைக் கொள்ளுமளவுக்கான படகொன்றைச் செய்யச் சொன்னது.
விலங்குகளும் அரசனைக் கொள்ளுமளவுக்கான பெரிய படகொன்றைக் கட்டின. ஆனால், அந்தப் படகு நிலவெலிக்குக் கொஞ்சமும் நிறைவளிக்கவில்லை. அதனை ஒரு முறை பார்த்துவிட்டு ”இது மிகப் பெரியதாக இருக்கிறது” எனக் கத்தியது. ‘’ஆகவே, எனக்கு சிறியதாக ஒன்றைக் கட்டுங்கள்” எனக் கட்டளையிட்டது. அதன்படியே விலங்குகளும் சிறிய படகைக் கட்டின. அவ்வாறே கட்டப்பட்ட சிறிய படகும் அதற்கு நிறைவளிக்கவில்லை. ‘’இதுவும் இன்னும் பெரியதாகத்தான இருக்கிறது” என முனகியது.
இப்படியாக அரசப்படகைச் சுருக்குவதும் நிராகரிப்பதுமான சுழற்சி கடைசி மரத்துண்டு எஞ்சும் வரை தொடர்ந்தது. கடைசித் துண்டை எடுத்து தன் பல்லைக் குத்தியது எலி. கோபமும் சோர்வும் அடைந்த அதன் குடிகள், அரசனின் குரூரமும் காரணமுமற்ற செயல்களுக்குத் தக்க விளக்கத்தைக் கோரின.
ஆனாலும், நிலவெலி தன்னுடைய பல்லைக் குத்துவதைத் தொடர்ந்து கொண்டிருந்தது. தன்னுடைய பல் கறைகள் அகன்றதை எண்ணி நிறைவடைந்த பின்னரே, அலட்சியமான தொனியில் ”வேலைகளின்றி அதிகச் சுதந்திரத்துடன் இருந்தால் நீங்கள் எல்லாம் எனக்கெதிராகக் கலகம் கூட செய்வீர்கள்” எனச் சொன்னது.
படகுகளைச் செய்த அந்தப் பாவப்பட்ட குடிகளால் அதனைப் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. அந்த முட்டாள் அரசனின் கற்பனைக்கும் விருப்பத்துக்கும் அவர்களின் உழைப்பும் நேரமும் அதிகமாகவே வீணாகியிருந்தது. அவர்களின் காரண அறிவையும் பொறுமையையும் நிலவெலி அதிகமாகவே சோதித்திருந்தது. அதனால், அவை நிலவெலிக்கு எதிராகத் திரும்பின.
அவற்றின் எதிர்ப்பு நடவடிக்கை மிகச் சுமூகமாக நடந்தேறியது. கலகக்கார விலங்குகள் நிலவெலியின் கழுத்துப் பின்புறத்தையும் வாலையும் நான்கு கால்களையும் பிடித்துக் கொண்டன. அதன் மீது தங்கள் துர்நாற்றத் தடத்தைப் பதிக்கும் அளவு அதன் முகம் மற்றும் உடல் முழுதும் வாந்தியெடுத்து ஏப்பம் விட்டன. பிறிதொரு பகலில் வெளியே எங்கும் அதனைக் காண நேர்ந்தால் அதனை அடித்துவிடுவோம் என மிரட்டித் துரத்தின.
அதிலிருந்து இருளில் மட்டுமே நிலவெலி நடமாடத் தொடங்கியது. இருந்த போதும், நிலவெலி மகிழ்ச்சியுற்றாலோ அல்லது மிரண்டலோ அதன் உடலிலிருந்து வெளிவரும் வாடை ஆட்டின் உடலில் அடிக்கும் வீச்சத்திற்கு நிகரானது. அந்த வாடையைக் கொண்டு அதன் இருப்பிடத்தை நீங்கள் ஊகித்துவிடலாம்.
பன்றி எலி (Pen Tailed Tree Shrew /Tikus Babi)
முன்னொரு காலத்தில் குரங்கு கூட்டத் தலைவனொருவனுக்குப் பன்றி எலி என அழைக்கப்பட்ட மகள் இருந்தது. அதன் செல்லப் பெயருக்கேற்றவாறே குரங்கு கூட்டத்திலே மிக விசித்திரமானதாக இருந்தது. மற்ற குரங்குகளைக் காட்டிலும் அளவில் மிகச் சிறியதாக இருந்தது. அதன் வெண்மையான வால்முனை பகுதி சிறகுகளால் போர்த்தப்பட்டிருப்பதைப் போன்றிருந்தது. ஆனாலும், தோற்ற விசித்திரங்களையும் தாண்டி மகிழ்ச்சி, அழகு, அறிவாற்றலின் காரணமாய் பெற்றோர்கள் பன்றி எலியை மிகவும் நேசித்தனர். அவள் விரும்பிய பொருட்களையும் விலைமதிப்பு வாய்ந்த பரிசுகள் அத்தனையும் வாங்கி தந்தனர். அதனாலே மற்ற குரங்குகளைக் காட்டிலும் தானே பெரியவன் எனும் எண்ணத்திலும் கர்வமுடையதாகவும் பன்றி எலி வளர்ந்து வந்தது.

அந்தக் குரங்கு கூட்டத்துக்கு நல்வினை பயன் மற்றும் காலத்தின் துணை இருந்திருக்கவேண்டும். அவற்றுக்கு எப்பொழுதுமே தேவைக்கு அதிகமான உணவும் மற்ற விலங்குகளுடன் சுமூகமான உறவும் நிம்மதியுமான வாழ்க்கை வாய்த்தது. ஒருநாள் கூட்டத்தில் ஆண் குரங்களிடையே தங்கள் பெண் இணைகள் குறித்த வாக்குவாதம் முற்றியது. மொத்தமாக அந்தக் கூட்டத்தில் தலைவனையும் சேர்த்து நான்கு ஆண் குரங்குகளும் பன்றி எலியுடன் சேர்த்து ஏழு பெண் குரங்குகளும் இருந்தன. அவற்றின் மரபு படி தலைவன் நான்கு பெண் இணைகள் கொண்ட அந்தப்புரத்தை அமைத்துக் கொண்டது. ஆண்மை வீரியம் மிக்க மற்ற மூன்று குரங்குகளுக்கும் தத்தம் இணையே எஞ்சின. அது அவற்றுக்குப் போதுமானதாக இல்லை. ஆகவே, அந்தக் கூட்டத்திலே அறிவாற்றல் மிக்கவளாக இருந்த பன்றி எலியைச் சந்தித்து ஆண் குரங்குகள் ஆலோசனை கேட்டன. ஆண் குரங்குகளில் எதுவுமே தன்னை இணை சேர அழைக்கவில்லை எனக் கடுங்கோபத்தில் பன்றி எலி இருந்தது. அதற்காகவே, அவர்களைப் பழி தீர்க்க பன்றி எலி வஞ்சம் வளர்த்திருந்தது. இந்தச் சோகத்தைத் தீர்க்க ஒரு வழி மட்டும் இருப்பதாக அனுதாபம் காட்டும் தோரணையில் பன்றி எலி அவர்களிடம் சொன்னது. மற்ற கூட்டத்தவரிடையே முயன்று பார்த்தால் நிச்சயமாக கன்னிக் குரங்குகளைக் கவரமுடியுமென ஆலோசனை தந்தது. பன்றி எலியின் ஆலோசனையை முட்டாள்தனமாய் ஆண் குரங்குகள் ஏற்றுக்கொண்டன. கூட்டத்தில் ஒரே ஆணாக தங்களுடைய தலைவனை மட்டுமே தனியே விட்டுவிட்டு தங்களுடைய காதல் வாய்ப்புகளை மற்ற இடங்களில் தேடப்புறப்பட்டன. அந்த மூன்று குரங்குகளும் காடுகளில் அலைந்து திரிந்தன. மற்ற குரங்கு கூட்டங்களைக் காணும்தோறும் நின்று தங்களுடைய இனிய காதல் பாடல்களை மற்ற பெண் குரங்களுக்கு உணர்ச்சி ததும்பப் பாடிக் காட்டின.
இதனிடையே, தங்களையும் தங்கள் குடும்பத்தையும் தனியே தவிக்கவிட்டுப் போன ஆண் இணைகளை எண்ணி மந்திகள் மருகிக் கொண்டிருந்தன. அவை, நேரே தலைவனிடம் சென்று பிள்ளைகள் மீது அக்கறை கொண்டிருந்த தங்கள் கணவர்களை எவ்வாறு தலைவனின் மகள் காதல் வாய்ப்புகளைத் தேடி அலைபவர்களாக மாற்றினாள் என்பது குறித்து முறையிட்டனர். தன்னுடைய சொந்த மகள்தான் இந்தச் சிக்கல்களுக்கு எல்லாம் காரணம் என்பதை அறிந்த தலைவன் வியப்படைந்தான். ஏமாற்றமடைந்த தலைவன் இத்தகைய பெருஞ்சிக்கலை மகள் ஏற்படுத்தியதற்கான காரணம் அறியாது வியப்புற்றான். தன்னுடைய மகளின் மீது அன்பு கொண்டிருந்தாலும், மற்ற தந்தையர்களைப் போலவே சில சமயங்களில் தன்னுடைய மகளின் செய்கைகளுக்கான காரணத்தை அறியாமல் இருந்தார்.
இது குறித்து தன்னுடைய மகளிடம் பின்னர் பேசிக்கொள்ளலாம் என எண்ணினார். இருந்தபோதிலும் உருவாகியிருக்கும் சிக்கலைக் களையும் பொறுப்பு அவரிடமிருந்தது. தங்களுடைய வழிகளைப் பார்த்துச் சென்றுவிட்ட குரங்குகளை உடனடியாகச் சந்திக்க ஆணையிட்டார். அவை எண்ணியதற்கு மாறான சம்பவங்களை எதிர்கொள்ள நேரிட்டது. மற்ற இனக்குரங்கு அவற்றை ஐயத்துடனும் சந்தேகக் கண் கொண்டுமே பார்த்தன. அத்துடன், ஊடுருவல்காரர்கள் என விரட்டவும் செய்தன. தனிமைப்படுத்தப்பட்டும் ஏக்கத்துடனும் அலைந்த குரங்குகள் கூட்டத்துடன் மீண்டும் சேர்வதற்கான தலைவனின் அழைப்பைக் கேட்டு நிம்மதியடைந்தன. குடும்பங்களை தவிக்கவிட்டுப் போனதற்காக மன்னிப்பு கோரின. அவற்றின் வருகையை முன்னிட்டு குடும்பங்களுடனான மாபெரும் மறு இணைவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அந்தக் கொண்டாட்டங்களுக்கு இடையில் பன்றி எலி வெளியேறியதை யாரும் கவனிக்கவில்லை. தன்னுடைய வஞ்சகமான திட்டம் தோல்வியடைந்ததைக் கண்டு மற்றவர்கள் தன்னை எள்ளி நகையாடவும் பகடி செய்யவும் கூடும் என்ற எண்ணத்தை அதனால் பொறுக்க முடியவில்லை. அவர்களைக் காட்டிலும் தான் பெரியவன் எனும் எண்ணம் அதற்கு இருந்தாலும் தன்னுடைய குற்றவுணர்வும் அவமான உணர்வையும் எண்ணி கூட்டத்தை விட்டு வெளியேறுவதைத் தவிர அதற்கு வேறு வழிகள் தெரிந்திருக்கவில்லை. தன்னுடைய தோள்பட்டையைத் திருப்பி கடைசியாக ஒருமுறை பார்த்துவிட்டு இனித் திரும்பப்போவதில்லை என்ற முடிவுடன் கூட்டத்தை விட்டு பன்றி எலி வெளியேறியது.
அன்றிலிருந்து, மற்ற குரங்குகள் ஓய்வெடுக்கும் சாயங்காலப் பொழுதில் மட்டுமே தான் மறைந்திருக்கும் மரப்பொந்திலிருந்து உணவு தேட வெளியேறும். இன்று வரை தான் தவறிழைத்தக் கூட்டத்தினரைத் தவிர்ப்பதற்காக இரவில் மட்டுமே பன்றி எலி உணவருந்துகிறாள்.
மரமூஞ்சூறு (Stump Tailed Shrew / Tikus Babi)
ஆதியில் மரமூஞ்சூற்றின் வால் அதன் தலையிலிருந்து உடல் வரையிலான நீளத்தை விட ஒன்றரை மடங்கு நீளம் கொண்டதாக இருந்தது. நிலவெலியின் ராஜ்ஜியத்தில் ஆலோசகராக மரமூஞ்சுறு இருந்தது. தன்னுடைய ஆடம்பரமான ஆசைகளையும் விருப்பங்களையும் நிறைவு செய்யும் உதவாக்கரை செயல்களைக் குடிகள் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை மரமூஞ்சுறு கொண்டிருந்தது. அப்படியாகக் குடிகள் செய்து முடித்தப் பணியை வெறும் கேளிக்கைக்காக மீண்டும் கலைத்துப் போடவோ அல்லது மறுபடியும் செய்யவோ பணித்தது. அதன் இரக்கமற்ற திமிர்த்தனமான நடவடிக்கைகள் குடிகளைக் கொதித்தெழச் செய்தது. தாங்கள் மோசமாக நடத்தப்படுவதை மரமூஞ்சூற்றிடம் குடிகள் முறையிட்டன. தங்களை இன்னும் இரக்கத்துடன் நடத்துமாறு மரமூஞ்சுற்றிடம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொண்டன.

ஆனால், மரமூஞ்சூறும் மறைநோக்கமும் சூழ்ச்சி எண்ணமும் கொண்டிருப்பதை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு நிலவெலியை வீழ்த்தி தான் அரசு பட்டம் அடைய முடியுமென மரமூஞ்சூறு நம்பியது. ஆகவே, நிலவெலிக்கு முடிவெடுப்பதிலும் கட்டுப்பாடுகளை விதிப்பதிலும் ஆலோசனை செய்வதை விடுத்து எரியும் நெருப்பில் எண்ணெய்யை வார்ப்பதைப் போல ஒரு நடவடிக்கையைச் செய்தது. அதாவது, நிலவெலியை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கான சூழ்ச்சி நடப்பதாக பொய்த்தகவல் பரப்பி தவறாக வழிநடத்தத் தொடங்கியது. குடிகளின் மனக்கசப்பை இன்னுமே மோசமாக்க வேண்டும் என்று திட்டமிட்டு, குடிகளின் புரட்சி எண்ணத்தை மடைமாற்ற படகொன்றைக் கட்ட ஆணையிடுமாறு நிலவெலியை கேட்டுக்கொண்டது. அதன் திட்டம் எதிர்பார்த்த பலனைத் தந்தது. குடிகளின் புரட்சியால் நிலவெலியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. கடைசியாக, ஆட்சியைத் தன்னுடையதாக்கிக் கொள்ள வாய்ப்பை எதிர்பார்த்த மரமூஞ்சூறு மகிழ்ச்சியுடன் வந்தது. ஆனால், நல்வினைப்பயனாக சீக்கிரமே அதன் சூழ்ச்சி எண்ணம் வெளிச்சத்துக்கு வந்தது. காட்டிலிருந்த எல்லா விலங்குகளுக்கும் பொல்லாத மூஞ்சூறு எவ்வாறு தங்களை எல்லாம் முட்டாள் ஆக்கியது என்பதைக் குறித்துக் குறுகிய நேரத்தில் தெரிந்து கொண்டன. காட்டில் அது எங்காவது தென்பட்டால் உடனடியாக மரணத்தண்டனை விதிக்கப்படும் எனும் எச்சரிக்கையுடன் மூஞ்சூறுவைக் காட்டிலிருந்து அப்புறப்படுத்தின.
அதன் சூழ்ச்சியை அறிந்து கொண்ட விலங்குகளிலே நிலவெலியே அதிகமும் ஆத்திரம் கொண்டது. இந்தப் பொல்லாத ஏமாற்றுக்காரனால் தான் உயர்பதவியை இழந்துவிட்டதை எண்ணி மிகுந்த கோபம் கொண்டது. மூஞ்சூறுவை ஒழிக்கும் வரையில் தான் ஓயப்போவதில்லை எனச் சூளுரைத்தது. பல நாட்கள் தேடுதலுக்குப் பின் மூஞ்சூறுவை ஓடையொன்றின் அருகே கண்டது. அங்கேயே அப்பொழுதே அதனைக் கொல்ல வேண்டுமென, சிற்றம் கொண்டு காளையைப் போல சீறியது. ஆனால், இரு கற்பாறைகளுக்கு இடையிலிருந்த பிளவில் மரமூஞ்சுறு தவழ்ந்து சென்றது. இருப்பினும், அதன் உடலை மறைக்குமளவு மட்டுமே பிளவு இருந்தது. அதன் நீண்ட வால் பிளவுக்கு வெளியே தெரிந்தது. அதன் மறைவிடத்தை அடைய முடியவில்லையென்றாலும் ஆத்திரமுடன் இருந்த நிலவெலி வெளியில் நீண்டிருந்த அதன் வாலை மிகுந்த மிகுந்த மகிழ்ச்சியுடன் கத்தரித்து விட்டது. பிளவுக்குள் மூஞ்சூறு வலியால் துடிக்கும் சத்தத்தைக் கேட்டு நிறைவடைந்தது. அந்த நாள் தொடங்கி, மரமுஞ்சூறுவின் வால் முனை மட்டும் கொண்டதாகக் காணப்பட்டது. அதனால், அதன் பெயர் மொட்டை வால் முஞ்சூறு என்றும் அறியப்பட்டது.
