பல கடல்கள் கடந்து:  உலகப் பெண் படைப்பாளர்களின் பெண்ணிய நோக்கு

‘பல கடல்கள் கடந்து’ என்ற மொழிபெயர்ப்பு நூல் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சமகாலப் பெண் எழுத்தாளர்களின் கதைகளைக் கொண்ட நூலாகும். நரேன் தேர்ந்தெடுத்த இக்கதைகள் எனக்கு அபாரமான வாசிப்புச் சுவையைக் கொடுத்தது. பல கதைகளை வாசித்த பின்னரே, இந்த எட்டு கதைகள், தமிழுக்குப் புதியது என்று முடிவெடுத்து மொழிபெயர்த்திருக்கிறார். அவரின் இந்த மெனக்கெடல் வாசகனுக்கு வாசிப்பின்பத்தையும், பிற நிலப்பரப்பின் மனிதக் காதாபாத்திரங்களிலிருந்து நமக்குப் புதிய அனுபவங்களையும் தருகின்றன. இந்நூலில் உள்ள  எட்டு கதைகளும் இதற்குச் சான்று பகர்கின்றன. நல்ல கதைகளைத் தேடி அலையும் தீரா வேட்கை கொண்ட மனதுக்கு  இக்கதைகள் கண்டிப்பாய் ஏமாற்றம் அளிக்காதவை. எனவே நமக்கு அறிமுகமில்லாத, அவற்றின் பண்பாட்டு அம்சங்களும், கதைக்களமும் நம்மை அக்கதைகளுக்குள்ளே ஈர்த்துக்கொள்கின்றன. கதைகள் நிகழும்  நிலத்திலிருந்து கசியும் மண் வாசனையை நுகரமுடிகிறது என்பது கூடுதல் செய்தி.

2018இல் நியூசிலாந்து சுற்றுலாவின்போது பூனாய்க்காக்கி என்ற கடற்கரை ஊரில் என்னை உறைய வைக்கும் அனுபவம் ஒன்று நடந்தது. அவ்வூரின் கடற்கரை பாறைகள் pancake வடிவத்தில் ‘செதுக்கப்பட்டிருந்தன’. எல்லாப் பாறைகளும் சொல்லிவைத்தாற்போல கைகளால் செதுக்கப்பட்டவைப் போன்ற மிக நேர்த்தியான வடிவத்தில் இருந்தன. ஒரே திசையில், ஒரே வேகத்தில் வீசும் காற்றின் விசையால் அலைகள் பாறைகளை மோதி மோதி உண்டான இயற்கை ‘சிற்பங்கள்’ அவை என்றே பின்னர் வாசித்தபின்பு தெரிந்துகொண்டேன். அப்பாறைகளின் அழகைக் கண்டு வியந்த நான் ஆர்வக் கோளாறினால், பாறை வடிவங்களைப் பற்றி அங்குள்ள படம் பிடித்துக்கொண்டிருந்த வெள்ளையன் ஒருவனைக் கேட்க, அவன் முதுகைத் தொட்டேன். என்னைத் திரும்பிப் பார்த்தவன், முகம் சிவந்து  “take your hand off from me” என்று கோபத்தில் சீறினான். நான் உறைந்து போய் நிலைகுத்தி நின்றுவிட்டேன். என் தொடுதலை அவன் அசூசையாக கருதியிருக்கிறான். உலகம் முழுதும் உள்ள பல நாடுகளில் இந்த நிறப்பிரிகை மனோபாவம்  தாண்டவமாடுவதை இன்றும் காண்கிறோம்.

நரேன் மொழிபெயர்த்த ரஷ்ய நிலக் கதையான ‘மோர்ட்டோவ்யா பின்னல்’ ரஷ்யர்களின் நிறவெறியை உணர்ச்சியோடு சித்தரிக்கின்றது. இக்கதையில் காட்யா என்ற இளம் தாய் ஒரு பரிதாபத்துக்குரிய பாத்திரமாகவே சித்தரிக்கப்படுகிறாள். ஆதிக்க மனோபாவம் உள்ளவர்களிடம் எளிய மக்கள் சிக்கிவிட்டால் அவர்கள்  மீது உற்சாகமாகவே வன்மத்தைக் கக்குவார்கள். அதிலும் ஒரு பெண் அகப்பட்டுக்கொண்டால் அவர்களின் வன்மம் மேலும் ஆணவமடைந்துவிடும்.

இக்கதையில் காட்யாவைக் குழந்தைகளைக் கடத்துபவள் என்று தவறுதலாகப் புரிந்துகொண்ட போலிஸ், அவளைக் காவல் நிலையத்துக்குக் கொண்டுசென்று விசாரிக்கிறான். காட்யா ரஷ்யாவைப் பூர்வீகமாகக் கொண்டவள்தான். ஆனால் அவள் ஒரு ஜிப்சியைப் போலத் தோற்றமுடையவள். ஜிப்சிகளை வெறுப்பவர்கள் ரஷ்யர்கள். எனவே, அவளுடன் இருக்கும் இரண்டு குழந்தைகளும் அவள் கடத்திக்கொண்டுபோகத் திட்டமிட்டிருக்கிறாள் என்றே முடிவுக்கு வந்து, அவளைக் கடுமையான விசாரணைக்கு உட்படுத்துகிறார்கள். இயல்பிலேயே சக மனிதர்கள் மீது, கீழான அபிப்பிராயம் உள்ள கீழான மனிதர்கள் காரணமே இல்லாமல் வெறுப்புணர்ச்சியைக் கக்குவது நடைமுறை உண்மை. எனவே, விசாரணை என்ற பேரில் அவள் இழிவுபடுத்தப்படுகிறாள். ஒரு கட்டத்தில் அவள் குழந்தை பசிக்கிறது என்ற சொல்ல, காட்யா தன் பையில் உள்ள ஆப்பிளை அவளுக்கு எடுத்து நீட்டுகிறாள். அதனை இரக்கமே இல்லாமல் தட்டிவிடுகிறான் போலிஸ். ஒரு கீழான இனப்பெண், எப்படி உயர்ந்த இனமான ரஷ்யக் குழந்தைக்கு அவள் கையால் ஆப்பிளைக் கொடுக்கலாம் என்ற நிறவெறியையே இது பிரதிபலிக்கிறது. அதிகார வர்க்கம் இனபேதத்தை மூர்க்கமாகவே பின்பற்றும்.

மொழியாக்கக் கதைகள் அந்த மூல மொழி கொடுத்த தாக்கத்தை, இன்னொரு மொழிக்கு மொழிபெயர்க்கும்போது  அக்கதையின், பாத்திரத் தன்மையை, கதை நிகழும் நிலத்தை, உணர்வுகளை இம்மி பிசகாமல் கடத்துகிறதா என்பதை வைத்துதான் அந்த மொழிபெயெர்ப்பின் வெற்றி தோல்விகள் நிர்ணயிக்கப்படுகின்றன. கதையின் ஊடாடும் இந்த அம்சங்கள் வாசகனைத்  தன்னிச்சையாக ஈர்த்துக்கொள்ளுமானால் கதைப் பயணித்தில் வாசிப்பின்பத்தை அனுபவிக்க முடியும்.

அதற்கான எடுத்துக்காட்டுகளை ஒரு சில கதைகளிலும் கண்டடைய முடியும் என்றாலும்  லைலா ஹூப்ரெஸா எழுதிய ‘நிலத்திடம் திரும்புதல்’ கதையை பொருத்தமான கதையாகக் கொள்ளலாம். ‘மோர்ட்டாவியா பின்னல்’ கதையைப் போலவே, மூலக் கதை நமக்குக் கொடுத்த பீதியைக் குறைவில்லாமல் கடத்திவிடுகிறது ‘நிலத்திடம் திரும்புதல்’.

நகர நெருக்கடி வாழ்க்கையிலிருந்து ஒரு பாதுகாப்பான ஒதுங்கிய இடத்துக்கு வாழ்வாதாரம் தேடி, ஒரு தாயும் ஒரு பெண் பிள்ளையும் போகிறார்கள்.  மூல மொழியில் இக்கதை உண்டாக்கிய பீதி, தாயன்பு, வாழ்க்கைப் போராட்டம் எல்லாம் இந்த மொழியாக்கக் கதையும் கொண்டிருந்தது.  ஒரு தாயின் வாழ்வாதாரப் போராட்டத்தை அதன் விசை குறையாமல் சொல்லப்பட்டிருக்கிறது. காடுகள் நிறைந்த அந்தப் பகுதியில் அவள்  வேலையில் ஈடுபடும்போது ஏதோ ஒரு மிருகம் அவளைத் தாக்கியதில் அவள் தன் விரல்களைப் பறிகொடுக்கிறாள். நிலத்தில் அவள் எதிர்பார்த்த விளைச்சல் உண்டாகவில்லை, இப்படியாக, தாய் நிலத்தோடும் அதன் சூழலோடும் போராடித் தோற்று நகரத்துக்கே மீண்டும் திரும்பும் நிலையில், மகள் அதே நிலத்தில் இருந்து  வெற்றியடைவதாகக் கதை சொல்கிறது. ஒரு பெண் தோல்வி முகத்தைக் காட்டினாலும், இன்னொருத்தி அதே சூழலை எதிர்த்துப் போராடி வெற்றியடைகிறாள். இரண்டுமே பெண் பாத்திரங்களின் வாழ்க்கை என்றாலும், போராடி வெல்லும் பெண்ணே வாசகன் மனதில் இடம் பிடிக்கிறாள். கதாசிரியர் இரு பெண்களின் மனோநிலையைச் சித்தரிப்பது வாசகனை ஒப்பிட்டு முடிவெடுக்க வைப்பதாக இருக்கலாம். பெண்ணின் முயற்சி இடையிலேயே கைவிடப்படலாகாது என்ற படிப்பினையாகவும் இதனை நான் பார்க்கிறேன்.

விவேக் ஷான்பக் ஆங்கிலத்திலிருந்து கன்னட மொழிக்கு பெயெர்க்கப்பட்ட கதைதான் ‘சிறு பாதத் தடங்கள்’. மூலக் கதையை சுனந்த பிரகாஷ் எழுதியிருக்கிறார்.

அஞ்சக்கா, தன் மருமகளின் தந்தை என்ற அல்ப காரணத்தால் சம்பந்தியை வெறுக்கிறாள். அவர்களுக்கிடையே முன்பகை ஏதும் இருந்ததில்லை. மனைவி வந்ததிலிருந்து மகன் தன் மீது கவனம் செலுத்துவதில்லை என்பதற்காக மகனையும் வெறுக்கிறாள். மருமகளை மாமியார் வெறுக்க காரணமே தேவையில்லை! இந்த மன உளைச்சல்தான் அஞ்சக்காவின் வெறுப்புணர்ச்சிக்குக் காராணம். எனவே  அஞ்சாக்கா சதா நிம்மதியற்றும் மன அமைதியற்றும் புலம்பிக்கொண்டிருக்கிறாள். ஒரு மழைநாளில் அஞ்சாக்கா வீட்டில் ஒதுங்கவேண்டி நேர்கிறது அஞ்சக்காவின் சம்பந்திக்கு. அத்தருணத்தில், அவரின் இயல்பான உரையாடலில் காட்டிய நட்புணர்வாலும், அன்பாலும், அந்நியோன்யத்தாலும். அஞ்சாக்கா இது நாள்வரை அவர் மீது வைத்திருந்த எதிர்மறை அபிப்பிராயம் தகர்கிறது. அவர் பழைய கிராமத்து நினைவுகளை மீட்டெடுக்க மீட்டெடுக்க அவள் மனதை அரித்துக்கொண்டிருந்த வெறுப்புணர்ச்சி இல்லாமல் ஆகிறது. தன் மனதுக்குள் அவரைப் பற்றி ஏற்றியிருந்த அபிப்பிராய்த்துக்கு முற்றிலும் வேறானவராக இருக்கிறார் அவர். அவர் பேசிய சொற்களில்அவள் வெறுப்பை ஆற்றுப்படுத்துகின்ற மந்திரம் இருந்திருக்கின்றது. மாசற்ற மனத்திடமிருந்து இயல்பாகவே இனிய சொற்கள் பிறக்கும். அதுவரை இருளடைந்திருந்த அவள் மனம், அவரின் வெளிப்படைத் தன்மையாலும், பிற மனிதர்களை நிபந்தனையற்று நேசிக்கும் பண்பாலும், அவளுக்குள் வெளிச்சப் பிரவாகம் பாய்கிறது.

இயல்பிலேயே மனித மனம் தூய்மையானது. சிறுவர்களாக இருக்கும்போது இருந்த வெள்ளந்தித்தனம் ஏன் வளர வளர மாசடைகிறது? வளர்ந்த பிறகு பேராசையின் பொருட்டு அது தூய்மைக்கேட்டை அடைகிறது. ஆனால் அதே மனிதன் எப்போது மீண்டும் தூய்மையை அடைகிறான் என்றால் நல்ல சொற்கள் ஆழுள்ளத்தை வருடும்போதுதான். மனித மனம் அத்துணை நுட்பமானது. அதனைப் பாழ்படுத்துவது அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் இவை நான்கும்தான் என்கிறது வள்ளுவம். இந்தக் குற்றங்கள் நீக்கப்படும்போது வாழ்வு இனிமையாகிறது.

காரணமே இல்லாமல் வெறுப்பதும் சபிப்பதும் ஓர் உளவியல் சிக்கல்தான். ஆனால் அந்த அகச்சிக்கலில் இருப்பவரை, நேருக்கு நேர் சந்தித்து கனிவாக  உரையாடுவது ஆறுதலளித்துவிடுகிறது. இந்த உலகை மீண்டும் நேசிக்க சொற்கள் எந்த அளவுக்குத் துணைநிற்கிறது பாருங்கள். அஞ்சாக்கா என்ற  பெண் பாத்திரத்தை ஏன் கதையில் நாயகியாக்க வேண்டும்? பெண்கள் பெரும்பாலும் தனிமையில் இருப்பவர்கள். குறிப்பாக ஆண் துணை இல்லாதவர்களே பெரும் தனிமைக்குள் தள்ளப்படுகிறார்கள். தனிமை மன அழுத்தத்தையும் தேவையற்ற குற்ற உணர்ச்சியையும் அவர்களுக்குள்ளே உண்டாக்கிவிடுகிறது. இதிலிருந்து விடுபட மனித உறவு உதவுகிறது. இவ்வாறான பெண்களின் உளவியல் ரீதியான சிக்கலைத் தீர்க்கும் கதையம்சம் கொண்டதுதான் சுனந்த் பிரகாசின், ‘சிறுபாதத் தடங்கள்’.

இது ஒரு கவித்துவம் மிகுந்த படைப்பு. இந்தக் கவித்துவத்தை வந்தடைய நரேனின் மொழியாளுமையும் புனைவுத் தன்மையும் மூலக்கதையின் உணர்வைக் கடத்த உதவியிருக்கிறது.

‘ஆனி லாமா’ (மாற்றுப்பாலினத்தவர்) கதையை நேப்பாளத்தைச் சேர்ந்த மூனா குருங் எழுதியிருக்கிறார்.

ஒரு பௌத்த மடாலயத்தின் குருவாக இருக்கக்கூடிய, லாமா வாங்சுக்  தான் ஒரு மாற்றுப்பாலினத்தவர்  என்பதை மறைத்தே வருகிறார். ஆனால் அவர் உள்ளுடல் தன் சுயத்தை வெளிக்காட்டிக்கொள்ள ஆசை துளிர்க்கும்போதெல்லாம் அவர் வழக்கமான மறைவிடத்துக்குச் சென்று பெண்ணாடை தரித்து மடாலயத்துக்கு வெளியே போய் பெண்ணாக வாழ்ந்துவிட்டு வருகிறார். ஒருநாள் மடாலயத்தில் ஆங்கிலம் போதிக்கும் பூமா, அவர் ஒரு மறைவிடத்தில் பெண் உடைக்கு மாறும்போது பார்த்துவிடுகிறாள். அதனைத் தன்னிடம் ஆங்கிலம் பயில்பவனான கர்மாவிடம் தெரிவிக்கிறாள். ஒருநாள் கர்மாவுக்கும், பூமாவுக்கும் உள்ள ரகசியத் உறவை லாமா வாங்சுக் பார்த்துவிடுகிறார். தனக்கும் பூமாவுக்குமுள்ள உறவு மேலிடத்துக்குத் தெரிந்தால் தனக்குத் தண்டனை கிடைக்கலாம் என்று முன்கூட்டியே, லாமா வாங்சுக்கின் உண்மை பாலினத்தையும், அவரின் ரகசிய நடவடிக்கைகளையும் மேலிடத்துக்குத் தெரிவிக்கிறான் கர்மா. எனவே, லாமா வாங்சுக் மடாலயத்திலிருந்து வேளியேற்றப்படுகிறார்.

இக்கதையினூடே ஒரு பௌத்த மடாலயம் புனிதமானது என்ற பொதுபுத்தியில் நிலைக்கும் அபிப்பிராயத்தை மறுதலிக்கிறார் மூனா குருங். அங்கே குருவாகவும் மாணவர்களாக இருக்கக்கூடியவர்கள் அந்தரங்கமாகவே பாலியல் செய்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை முன்னிருத்தத் தவறவில்லை அவர்.  

கர்மா தன்னைத் தண்டனையிலிருந்து காப்பாற்றிக்கொள்ள, தன் குருவான வாங்சுக்கைக் காட்டிக் கொடுக்கும் உள்ளரசியலைச் சொல்லவுமே மூனா குருங் ‘ஆனி லாமா’வைத் துணிச்சலோடு கதையாக்கியிருக்கிறார். புனித ஸ்தலங்களில் நிகழும் குற்றச்செயல்களால் அதன் புனிதம் கெட்டுவிடும் என்பதற்காக அவை வெளியே கசியாமல் பார்த்துக்கொள்வார்கள். ஆனால் மூனா குருங் அவ்வாறான குற்றங்களை விமர்சனத்துக்குள்ளாகினால்தான் அது புரையோடாது என்ற எண்ணம்கொண்டவர். அதனால் அவற்றின் ஒழுங்குக்கும் கட்டமைப்புக்கும் பழுது நேராமால் இருக்க எழுத்தை ஒரு ஆயுதமாகக் கையாள்கிறார் என்று புரிந்துகொள்ளலாம்.

‘ஒரு வீராங்கனையின் தனிமை’ கதை ஜப்பானிய எழுத்தாளர் யுகீகோ மோடாயாவின் புனைவு.

ஆணாதிக்க மனோபாவம் பெண்களை ஒரு சிறு வட்டத்துக்குள்ளேயே அடைத்துப் பார்க்க நினைக்கிறது. அவள் உலகத்தைச் சிறிதாக்கி, அவள் அறிவை முடக்கி, அவள் ஆண்களை மிஞ்சிவிடக்கூடாது என்று நினைக்கிறது. பெண் ஆணைவிடக் கீழானவள், உடலாலும் உள்ளத்தாலும் பலவீனமானவள், இயற்கையிலேயே இவ்வாறான கூறுகளோடு படைக்கப்பட்டுள்ளவள் என்ற மரபான கற்பிதத்தை மோதி மிதித்துக் காட்டுகிறது யுகீகோ மோடாவியா எழுதிய ‘ஒரு வீராங்கனையின் தனிமை’ என்கின்ற ஜப்பானியச் சிறுகதை.

நரேன்

திருமணமான கொஞ்ச காலத்துக்குப் பிறகு கணவன்மார்கள் மனைவியின் உடலழகைக் கண்டுகொள்வதில்லை என்ற கதைப்பொருளைப் பேசுகிறது ‘ஒரு வீராங்கனையின் தனிமை’ சிறுகதை. இக்கதை பெரும்பாலான கணவன்மார்கள், மனைவிகள் மீது கொண்டுள்ள சளிப்பைக் கதைக் களமாக்கியிருக்கிறது. ஆனால் அந்தப் புறக்கணிப்பே கதை நாயகியை நம்பிக்கையூட்டி எழுச்சிபெற வைப்பதாக கதைப்பயணம் இருக்கிறது.

கதைசொல்லி தொடக்கத்தில் கணவனின் கவனிப்பின்மையை ஆண்களின் இயல்பாகவே கருதுகிறார். ஆனால் ஒரு சந்தர்ப்பத்தில் இருவருக்குமிடையேயான, சுயத்தைக் கேலிக்குள்ளாக்கும் உரையாடலில் மனைவியின் வாழ்க்கை முறை தலைகீழ் மாற்றம் நிகழ்கிறது.

ஒருநாள், தொலைக்காட்சியில் தோன்றிய குத்துச் சண்டை வீரரைக் காட்டி, “அதாவது இப்படிப்பட்ட ஒரு ஆண் உன்னைக் கவர்ந்து செல்ல நினைச்சா கூட நீ உடன் போக மாட்டேன்னு சொல்றே, அப்படித்தானே?” என்று மனைவியைச் சீண்டுகிறான் கணவன். இது அவளுக்கு எரிச்சலை உண்டுபண்ணுகிறது. உண்மையான தாம்பத்ய உறவை மலினமாக்குகிறார் என்று உணர்கிறாள் மனைவி. கணவனைக் கவரும் வண்ணம் தன் உடற்தோற்றத்தை மாற்றிக்காட்ட கங்கனம் கொள்கிறாள். தன் கட்டழகை மாற்றிக்கொண்டாலாவது, கணவனின் கவனம் தன் மீது திரும்பும் என்று எதிர்பார்க்கிறாள். எனவே அவள் ஒரு உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சிசெய்து தன் உடலமைப்பில் கவர்ச்சியைக் கொண்டுவரும் தீவிர முயற்சியில் இறங்குகிறாள். ஆனால், அவள் அதனைக் கணவனுக்குத் தெரியாமல் ரகசியமாகப் பாதுகாத்து வருகிறாள். ஓரிரு மாதங்களில் அவளின் உடல் திணவேறியிருப்பதை நண்பர்கள், முதலாளிகள், கடை வாடிக்கையாளர்கள் எல்லாருமே பாராட்டுகிறார்கள். ஆனால், கட்டிய கணவன் மட்டும் அந்த மாற்றத்தைக் கவனிக்கவே இல்லை. அவர்களுக்கிடையேயான  படுக்கை உறவு அறவே இல்லாமலானதும் அவன் அவளைக் கவனிக்காமல் இருந்ததற்கு ஒரு காரணம்.

ஒருநாள் தன் கணவன் தன் உடல் தோற்றத்தைக் கவனிக்கிறாரா என்று பரிசோதிக்க தான் முடிவெட்டி அலங்கரித்துக்கொண்டதாக பொய் சொல்கிறாள். அவன், ஆமாம்  முன்னர் உனக்கு எட்டு அங்குலத்துக்கு முடி நீளமாக இருந்தது. இப்போது சற்று குறைந்திருக்கிறது என்று முகமனுக்காகச் சொல்கிறான் கணவன். அவளுக்குக் கணவன் மீது எரிச்சல் உண்டாகி, அழ ஆரம்பித்துவிடுகிறாள். தன்னைக் கணவன் முழுமுற்றாக உதாசீனப்படுத்திய வெறுப்பில் அங்கிருந்து வெளியேறிவிடுகிறாள். தன் கணவனின் மீது உண்டான வெறுப்பில், தன் பயிற்றுநரை அணுகி அவனோடு உடலுறவுக்கு ஆசைப்படுவதைச் சமிக்ஞை மொழியில் காட்டுகிறாள். ஆனால் அவன் அவளின் எதிர்பார்ப்பைப் புரியாதவன் போல பாவனை செய்து சமாளித்துவிடுகிறான். கணவன் மனைவியை அங்கீகரிக்கும் பொறுப்பைக் கைவிடும்போது அவள் இன்னொரு துணையை நாடிச் செல்வது மனித உறவில் இயல்பாக நடக்கும் ஒன்றுதானே!

மனைவி அழுதுகொண்டு கிளம்பிப் போனதை உணர்ந்த கணவன் அவளைப் பின்தொடர்ந்து உடற்பயிற்சி நிலையத்தை அடைகிறான். அவள் அப்போது குறையாடையில் பயிற்சியில் ஈடுபடுவதைப் பார்க்கிறான். அவளின் உடல் தோற்றத்தில் பாரிய மாற்றத்தை அத்தருணத்தில்தான் அறிகிறான். அவள் அழுத காரணம் அவனுக்கு உறைக்கிறது. கட்டிய மனைவியின் திறமையை தான் கவனிக்காத அறியாமை அவனை உணரவைக்கிறது. அவனின் குற்றமனம்தான் அவளோடு சமரசமாகி, அவளைப் புரிந்துகொள்வதில் போய் முடிகிறது.

மனைவிமார்கள் கணவர்களால் புறக்கணிக்கப்படும் மன அழுத்தத்திலிருந்து, இயல்புநிலைக்குத் திரும்ப அவள் கையாளும்  உத்தி, பெண்களுக்கான நேர்மறைச் சிந்தனையை ஊட்டும் கதைதான் ‘ஒரு வீராங்கனையின் தனிமை’.

பெண்களுக்கு அவர்களுக்கு அமைந்த உடல் வாகுதான் அவர்களுக்கான தன்னம்பிக்கையின் மூலதனம்.  கணவன்மார்கள் மனைவிமார்களின் தோற்றத்தைக் கவனிக்காமல் இருப்பது அவர்களை அவமதிப்புக்குள்ளாக்குகிறது. அடிப்படையில் ஆண் பெண் இருவருக்கிடையே உண்டாகும் காதல், உடலிச்சியை அடிநாதமாகக்கொண்டதுதான். ஆனால் தொடக்கத்தில் வெள்ளமென பீறிட்ட காதல், காமம் எல்லாம், இச்சை வடிந்தவுடன் உடல் மீதுள்ள ஆசையும் வற்றிவிடுகிறது. சில காலத்துக்குப் பிறகு, உடலிலிருந்த காதலும் காமமும் நீர்த்துப்போய்விடுகிறது. எல்லாக் காலத்திலேயும் ஆண் துணை ஒரு பெண்ணுக்கு நிரந்தரமாக இருப்பது உசிதமில்லை. பெண்கள் ஆண்துணையற்று வாழப் பழகிக்கொள்ள வேண்டும். எனவே, பெண்கள் தனக்கான சுதந்திரத்தைத் தானே தகவமைத்துக்கொண்டால் கணவன்மார்களின் புறக்கணிப்பு பெரிதாகப் பாதித்துவிடப்போவதில்லை. ஒரு பெண் ஜெயிக்கும் தருணமும் இப்படித்தான் தொடங்கவேண்டும் என்ற நிதர்சனத்தை முன்வைக்கிறது ‘ஒரு வீராங்கனையின் தனிமை’ கதை.

இக்கதையை ஆணை மையப்படுத்தியும் நோக்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது. பெண்களின் திறமையை உதாசீனப்படுத்தும் பண்பாட்டை ஆண்கள் கைவிடவேண்டும் என்பதைக் கதையில் ஊடுபாவாக சொல்லப்படுகிறது. தங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் சுயநலமிக்க ஆண் ஒருபோதும் பெண்களின் வளர்ச்சியை விரும்பாதவனாக இருப்பான். இக்கதை அதனையும் ஓர் அலகாகவே சொல்கிறது. கணவன் மனைவி இருவரின் பலம் என்பது பரஸ்பரமான அன்பைப் பரிமாறுவதிலும், புரிந்துணர்வோடு வாழ்வதிலுமே வலிமையடைகிறது.

முகே இப்லிக்‌ஷே ‘இல்டிஸ்’ ஒரு விதவைத் தாயின் போராட்டத்தை முன்வைக்கிறது.

அந்த விதவைத் தாய் குறைபாடுள்ள தன் மகள் இல்டிஸை வளர்க்க மிகுந்த வாழ்வாதாரப் பிரச்சனைகளைச் எதிர்நோக்கி வருகிறாள். அந்த இக்கட்டான பின்னணியில் அவளுக்கு ஒரு ஆடவனின் நட்பு கிடைக்கிறது. அந்த ஆண்துணையால் அவள் மிகுந்த ஆறுதலளடைகிறாள். இல்டிஸ் அவனைச் சித்தப்பா என்றே உறவு கொண்டாடி அழைக்கிறாள். அந்த ஆணோ விதவைத் தாயை திருமணத்துக்கு வற்புறுத்திக்கொண்டே இருக்கிறான். அவளுக்கு இறந்த கணவரிடமிருந்து வரும் ஓய்வூதியப் பணம் இந்தப் புதிய திருமணத்தால் கிடைக்காமல் போவதை எண்ணி மணத்தைத் தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்கிறாள். அதற்காகக் காத்திருந்து சளிப்படைந்த அவன், அவளை விட்டு நிரந்தரமாக விலகி ஓடுகிறான். அவன் விலகும்போது அவள் ஆசையோடு தைத்துக்கொடுத்த கண்ணாடி வேலைப்பாடுள்ள சட்டையையும் கழட்டிப்போட்டுவிட்டு ஓடுகிறான். அவனின் அந்தச் செய்கை பாம்பு தன் மேல்தோளை உரித்துப்போட்டுவிட்டு ஓடுவதற்கு ஒப்பானது என்று சொல்கிறார் கதை ஆசிரியை. அவனை விரட்டிக்கொண்டு ஓடிய இல்டிஸ் அந்தச் சட்டையைப் போட்டுப்பார்க்கிறாள். அது அவளுக்குப் பொருந்தவில்லை. அதில் பொறுத்தப்பட்டிருக்கும் கண்ணாடி வெறும் போலி அலங்காரம் போலவே, அவனின் உறவும் போலியானது என்று சொல்ல வருகிறது கதை. அவனுக்கு அன்புப்பரிசாக அளிக்கப்பட்ட  சட்டை, இல்ட்ஸுக்குப் பொருந்தாது போலவே, குடும்பத்துக்கு அவன் பொருந்தி வரமாட்டான் என்ற குறியீட்டை வைக்கிறது ‘இல்டிஸ்’ கதை.

இப்புனைவில் அந்த விதவைத் தாயைவிட இல்டிஸ்தான் அதிகம் ஏமாற்றமடைந்திருக்கிறாள். அவள்தான் சித்தப்பா என்று உரிமையோடு அழைத்திருக்கிறாள். அவனின் ‘அன்பால்’ சிறைப்பட்ட அவள், அவன் எங்குப் போனாலும் அவன் பின்னாலேயே தொடர்ந்திருக்கிறாள். அவனிடம் பாசாங்கற்ற அன்பைச் செலுத்தி இருக்கிறாள். அவன் இல்டிஸ் மீது அன்பைச் சொரிந்தது போலித்தனம் என்றே முடிவுக்கு வரலாம். ஏனெனில் இல்டிஸின் தாயின் உடலைப் பெறும் உள்நோக்கத்துடனேயே அவனின் நகர்ச்சி இருந்திருக்கிறது. அது கிடைக்காது என்ற முழுமுற்றான முடிவுக்கு வந்தவன், விலகி ஓடிவிடுகிறான். எனவே, அவனின் காதல் போலியானது என்பது உறுதியாகிவிடுகிறது. இரு பெண்களை (மகளையும் சேர்த்து) ஒரே நேரத்தில் ஏமாற்றித் திரிந்த அவன் சுய ரூபத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார், காதாசிரியர் முகே இப்லிக்‌ஷே.

இதுவரை ஆணின் துணையில்லாமல் இல்டிஸை வளர்த்துவிட்டவளுக்கு இனியும் ஆண் தேவைப்படப்போவதில்லை என்ற விவேகத்தை அளிக்கிறது இல்டிஸ் கதை.  

ஆக்னஸ் ச்சூவ் எழுதிய ‘பல கடல்கள் கடந்து’ கதையில், கதைச்சொல்லி சிங்கப்பூரிலிருந்து ஜெர்மனிக்குப் புலம் பெயர்ந்தவளாக வருகிறாள். அவளுக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதைக் கண்டறியப்படுவதற்கு, முன்னும் பின்னும் மார்பகப் புற்றுநோயால் பாதிப்புற்றவர்கள் நினைவுக்கு வருகிறார்கள். முதலில் மார்பகத்தில் கட்டி போன்று ஒன்றை உணர்கிறாள். அப்போது அவள் தோழி மரியன்னா புற்றுநோயால் ஒரு மார்பகத்தை இழந்தது நினைவுக்கு வருகிறது. தன் பாட்டியும் அதே நோயால் இறந்ததை நினைவுகூர்கிறாள். அது புற்றுதான் என்று உறுதியானபின் அம்மாவை அழைத்துச் சொல்கிறாள். அம்மா அவளுக்குக் கற்பப்பையில் புற்றுநோய் இருந்தாகவும், சிகைச்சைக்குப் பின் குணமாகிப் பிழைத்துவிட்டதாகவும் சொல்லி அவளை ஆற்றுப்படுத்துகிறாள். ஆனால் கதைச்சொல்லியின் நிலை முற்றிலும் வேறானது. கடைசியாக மருத்துவரைப் பார்த்தபோது அவளுக்கு நோய் பரவிவிட்டதாகச் சொன்னதை எல்லாரிடமும் மறைத்துவிடுகிறாள். எனவே, அவள் வாழ்வில் மூவருக்குப் புற்றுநோய்கணடு பிழைத்துவிட்ட நிலையில் கதைச்சொல்லியின் நிலை அதற்கு மாறானதாக இருக்கிறது. கதைச்சொல்லி சொல்லும் ஒவ்வொரு வாக்கியத்தின் துன்பியல் வாசகனையும் தொந்தரவு செய்கிறது.

இந்தக் கதை எந்த நிலத்திலும் நடக்கலாம். ஆனால் சிங்கப்பூரிலிருந்து ஜெர்மனியில் வாழும் அவளுக்குப் புற்றுநோய் கண்டவுடன் சிங்கப்பூருக்குப் போய்விடவேண்டும் என்று தாய்நிலத்து மீதான பற்று அதிகரிக்கிறது. தனக்கு நோய் வந்தவுடன் தாய்நாடு மீதான பற்று அதிகரிப்பதற்கான காரணம் அவளின் கணவன் அவளுடைய மருத்துவ பரிசோதனை நாட்களில் உடனிருக்க முடியாமையே என்று யூகிக்கலாம். அவள் உளவியல் ரீதியாக பாதிப்படைந்த தருணங்களில் அவனின் அருகில் அவன் இருந்ததில்லை.  அவள் பெரும்பாலான சமயங்களில், தனித்தே நோயோடு போராடும்படி ஆகிறது. அதே வேளையில் சிங்கப்பூரில் வாழும் தன் தாயும், தோழி மரியன்னாவும் அவளின் இக்கட்டான நிலையில் ஆறுதலளிக்ககூடியவர்களாக இருப்பார்கள் என்று நம்புகிறாள். உளவியல் ரீதியாகவும் அவளுக்குத் தான் புலம்பெயர்ந்து வாழும் ஜெர்மனியைவிட தாய்நாடு பாதுகாப்பானதாக இருக்கும் என்ற நம்பிக்கையை, அவளுக்குள் விதைப்பதே இந்த இரண்டு பெண்கள்தான் என்று புரிந்துகொள்ள முடிகிறது.

‘இல்டிஸ்’, ‘மோட்டொவியாவின் பின்னல்’, ‘நிலத்திடம் திரும்புதல்’, ‘சுரேய்ஸ்’ ஆகிய கதைகளில் அமானுட சக்தி ஒன்று பெண்களின் பாடுகளுக்கான ஊக்கச் சக்தியாக அல்லது அவை உளவியல் ரீதியான துணையாகக் காட்டப்படுகிறது. பெண்கள் உடலளவில் மட்டுமல்ல, மனதளவிலும் பலவீனமானவர்கள். எனவே தங்கள் நம்பிக்கைகளுக்கு உறுதுணையாகப் யட்சிகளையோ அல்லது தொன்மத் தெய்வங்களையோ வழிபடுகிறார்கள். பொதுவாகவே பெண்கள்  பாதுகாபாப்பின்மை உணர்வு மிகுந்தவர்கள். இது அவர்கள் மரபணுவில் இருந்து நீடிப்பது. அதிலும் ஆண் துணை இல்லாத பெண்களுக்கு இந்தப் பாதுகாப்பின்மை கூடுதல் அச்சத்தைக் கொடுக்கும். ஆகவே அவர்களுக்கான பாதுகாப்பாக தொன்மத் தெய்வங்களைப் பெரிதும் நம்புகிறவர்களாக இருக்கிறார்கள். உலகின் பெரும்பாலான இனங்களுக்குத் தொன்மத் தெய்வங்கள் பெண்கள் வழிபடும் தெய்வங்களாகவே இருப்பது தற்செயல் அல்ல. பெண்ணே பெண்ணுக்குப் பக்கபலமாக இருக்க முடியும், பெண் துயரைச் சக பெண்ணே உணர முடியும் என்ற நம்பிக்கையில் வந்தது. இந்து சமய நம்பிக்கைகளிலும் பெண் தெய்வங்களே அபயம் அளிக்கும் சக்திகளாகப், சம்ஹார தெய்வங்களாகப் பார்க்கிறோம். இந்நூலில் ‘இல்டிஸ்’, ‘மோட்டோவியாவின் பின்னல்’, கதைகளில் தங்களை ஆபத்தின் விளிம்பிலிருந்து மீட்கப்போவது தங்களின் தொன்மத் தெய்வமே என்று உறுதியாக நம்புவதாகக் காட்டப்படுவதிலிருந்து இது புலனாகிறது.

லைல ஹூப்ரேஸா எழுதிய ‘நிலத்திடம் திரும்புதல்’ கதையிலும் ஏதோ அமானுட சக்தி தன்னைப் பாதுக்காக்கிறது என்று நம்புகிறாள் ஒரு பெண். பெருநகர வாழ்வின் பரபரப்பை வெறுத்த தாயுடன் அவள் அங்கு வந்து சேருகிறாள். அவள் நகர வாழ்க்கையை விரும்பியவள். ஆனால் தாயின் பிடிவாத்ததில் தாயோடு புதிய நிலத்தில் வசிக்கப் பழகிக்கொள்கிறாள். காட்டு நரிகளோடும் பிறவகை உயிரினங்களோடும் அவளால் போராடி தன் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்திக்கொள்ள முடியாதபோது அவள் மீண்டும் நகர வாழ்க்கைக்குத் திரும்ப, மகள் நிலத்திலேயே தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடிவெடுகிறாள். தாயும் மகள் வாழ்க்கைக்குமான முரண், கதை தொடக்கத்தில் இருந்தது போலவே முடிவிலும் நேரெதிர் முரண் உருவானது கதையில் வாசிப்புத் திகலை உண்டாக்குகிறது. தொன்மத் தெய்வங்களைத் துணைக்கு வைத்திருக்கும் மேலிரு கதைகளைப் போலவே நிலத்திடமும் ஏதோ அபூர்வ சக்தி இருப்பதை உணர்கிற மகள், நிலத்தைத் தவறாமல் வழிபட்டு வருவது கதையில் காட்டப்படுகிறது. இந்து சமய நம்பிக்கையில் பூமியைப் பூமாதேவியாக  வழிபடுவது ஆதிகாலம்தொட்டு இருந்து வரும் நம்பிக்கை. தன் வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக இருக்கும் நிலத்தைக் கடவுளாக மதித்து வழிபடுகிறாள் அந்தப் பெண்.  தனக்கான பாதுகாப்பைப் பூமிக்கடவுள்  வழங்குவாள் என்ற நம்பிக்கையைக் கொண்டிருக்கிறாள். எனவே நம்பிக்கையே கடவளாக பரிமாணம் காண்கிறது. இக்கதை தொன்மக் கடவுள் நம்பிக்கை எவ்வாறு பிறந்திருக்கக்கூடும் என்பதை நமக்குப் படிமமாக்கி நினைவுறுத்துகிறது..

கமீலா ஷம்சி எழுதிய ‘சுரேய்ஸ்’ கதையும் யட்சி பெண் தெய்வத்தை ஒரு பாத்திரமாகக் கதைக்குள் கொண்டு வருகிறார். தன் வாழ்க்கையில் யதார்த்ததுக்கு எதிரான எதையும் நம்ப மறுக்கிறார் கதைச்சொல்லியின் அப்பா. பாக்கிஸ்தானிலிருந்து இங்கிலாந்துக்குக் குடியேறி பெரும் பணக்காரராகிவிட்ட அவருக்கு, பாகிஸ்தானிய பிற்போக்குவாத்தினை ஒரு பொருட்டாகவே மதிக்காதவர்.

பாகிஸ்தானின் வெள்ளப் பேரிடரைப் பற்றி அறிந்த ஜைனாப், கதைச்சொல்லியின் பெரியப்பாவின் மகள், நிலைமையை அறிய தன் தாய்நாட்டுக்குப் போகிறார்.  வெள்ளத்தில் ஒட்டுமொத்த கிராமமே அழிந்துவிட்ட நிலையில் ஜைனாப் கடைசியாக எஞ்சிய ஒரு அரசமர கிளைத் துண்டு ஒன்றைக் கொண்டு வருகிறாள். அது தனக்குப் பாதுகாப்பளிக்கும் என்ற நம்பிக்கையில், அப்பாவுக்குத் தெரியாமல் அதனைத் தன் வீட்டுத் தோட்டத்தில் நட்டு வைக்கிறாள். பிரிட்டனின் பருவ நிலை மாற்றங்கள், ஒத்து வராததால் அதன் வளர்ச்சி பாக்கிஸ்தானின் வளர்ச்சியைப் போல இயல்பானதாக இல்லை. ஆனாலும் அதன் அடிவேர் வீட்டின் அடித்தளத்தையே அசைக்கும் அளவுக்கு வளர்ந்து ஊடுறுவிடுகிறது. இதனை அறிந்து, கோபமுற்ற கதைச்சொல்லியின் அப்பா அதனை நீக்கும் முயற்சியில் இறங்க அது அவரை ஆட்டுவிக்கத் தொடங்குகிறது. ஆணாதிக்கத்தால் பாதிக்கப்பட்டு இறந்த பெண்கள்தான் சுரேய்ஸாக ஆலமரத்தில் குடியிருப்பார்கள் என்ற தொன்மக் கதை நம்பிக்கை பாக்கிஸ்தானியரிடையே உண்டு. இக்கதையிலும் சுரேய்ஸ் என்ற யட்சி கதையின் மையச் சரடாக இருப்பது கவனிக்கத் தக்கது. இக்கதை ஆண்கள் எவ்வளவு பலவீனமானவர்கள் என்பதைச் சொல்லி அவர்களைக் கேலிக்குள்ளாக்குவதையும் நான் புரிந்துகொள்கிறேன்.

இந்த எட்டு கதைகளிலும் பெண் எங்கேயும் உரக்கக் குரலெழுப்பவில்லை! ஆண் வர்க்கத்திடமிருந்து தங்கள் உரிமைக்காகப் போர்க்கொடி ஏந்தவில்லை. ஆனால் பெண்மை பலவீனமானதல்ல அது போராடி வெல்லக்கூடியது, என்று நிறுவும் கதைகள் உள்ளன. ‘ஒரு வீராங்கனையின் தனிமை’, ‘இல்டிஸ்’, ‘நிலத்திடம் திரும்புதல்’, ‘பல கடல்கள் கடந்து’ கதைகளில் வரும் பெண்கள் ஆண்களை நம்பி ஆகப்போவது ஒன்றுமில்லை என்று பூடகமான செய்தியையே வாசக மனதில் கொண்டை ஊசியைப்போல செருகிவிடுகின்றனர்.

வரும் மொழியிலும் பெறும் மொழியிலும் மொழி ஆளுமை இருப்பது மொழிபெயர்ப்பாளருக்கு இருக்க வேண்டிய முக்கியமான தகுதிகளில் ஒன்று. அதிலும் புனைவு என்று வரும்போது மூல மொழியில் உள்ள புனைவுத் தன்மை மொழிபெயர்க்கப்பட்ட மொழிக்கு மாறும்போது அதே நுணுக்கத்தோடும் கலைநயத்தோடும் வந்து சேர வேண்டும். அப்போதுதான் மூலக் கதையின் ஒத்திசைவோடு, பெறும் மொழொயிலும் இயங்கும். கதையில் உயிர்ப்பும் இருக்கும். நரேனின் பல மொழிபெயர்ப்புக் கதைகளை நான் வாசித்திருக்கிறேன். இந்த இரண்டு அமசங்களும் நிறைவாகவே இருப்பதை உணர்ந்திருக்கிறேன். எனவே, ‘பல கடல்கள் கடந்து’ நூலில் இருக்கும் கதைகள் எவ்வகையிலும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாதவை.

உலகப் பெண் படைப்பாளர்களின் எண்மரின் இந்தக் கதைகள் பெண்ணியத்தை அழுத்தமாக முன்னெடுக்கின்றன. இன்றைக்குப் பெண்ணிய அரசியல் குறித்த புனைவுகள் நிறைய எழுதப்படுகின்றன. உலக இலக்கிய வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது பெண் படைப்பாளர்கள் எழுதி எழுதியே பெண் விடுதலைக்கான முகாந்திரத்துக்கு வித்திட்டனர். ஆணாதிக்கம் வேரூன்றி பெண்களின் உரிமையையும், உழைப்பையும், அறிவையும் புறந்தள்ளி தங்களின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்திவிட்ட சூழலில், பெண்களுக்கு வழங்கப்பட்ட கல்வி அறிவு, பெண்ணடிமைத் தளையை உடைத்து விடுதலைக்கு வித்திட்டிருக்கிறது.

ஒரு சிமிழுக்குள் அடக்க முடியாத அளவில் பல துறைகளில் அவர்களின் கை ஓங்கியே வளர்ந்துவிட்டிருக்கிறது. அதற்கான சான்றாக நரேன் நேர்த்தியான மொழிபெயர்த்த இக்கதைகள் கட்டியம் கூறுகின்றன. இவை புதிய வாசிப்பு அனுபவங்களை வாசகப் பரப்புக்கு உவந்தளித்திருக்கின்றன.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...