அபயஸ்தம்

வீட்டின் நடுவே கூரையிலிருந்து கசிந்த துளிகள் கீழே வைக்கப்பட்டிருந்த அலுமினியப் பாத்திரத்தில் விழுந்தன. ஒவ்வொரு துளிக்குப் பிறகும் வீடு சிறிது நேரம் அமைதியாகி, அடுத்த துளியில் மீண்டும் ஒலித்தது.

அந்த மங்கிய வெளிச்சத்துக்குக் கீழே பிரம்புப் பாயில் வயிற்றைக் கவிழ்த்துப் படுத்தபடி, உடைந்த பின்சக்கரமுள்ள பச்சை லாரியை அவன் முன்னும் பின்னும் தள்ளிக்கொண்டிருந்தான். சமையலறைக்கும் வரவேற்பறைக்கும் இடையே பாட்டி நடமாடிக்கொண்டிருந்தார். அவர்  பேசுவது அவனைச் சீண்டாத வேறொரு பிரதேசத்தில் நிகழ்வதாய் உணர்ந்தான். ‘உம்’ கொட்ட வேண்டிய அவசியமெதுவும் இல்லாமல் இருந்தது. மோகன் அண்ணன் அவனருகே குந்தினான்.

“உனக்கு ஒண்ணு காட்டவா?”

லாரி நின்றது.

சட்டை பையிலிருந்து முதலில் இரண்டு கருப்பு உணர்கொம்புகள் வெளிப்பட்டன. பிறகு தலை. அதன் பின்னால் ஒன்றையொன்று பிடித்துக்கொண்டு வந்த சிறிய உடற்பாகங்கள். முழுவதும் வெளியே வந்தபோது, மோகன் அண்ணனின் உள்ளங்கையைத் தாண்டி இருபுறமும் அதன் கொடுக்குகள் தொங்கின.

“பூரான்.”

தலையின் இருபுறமும் கண்கள். உடலின் ஒவ்வொரு இணைப்புக்குக் கீழும் கருங்கால்கள் அடர்ந்து முளைத்திருந்தன. அவற்றின் நுனிகளில் ஒட்டியிருந்த தூசி, அது ஏற்கெனவே எங்கெல்லாமோ ஊர்ந்துவிட்டு வந்ததுபோல் காட்டியது. பொம்மை என்று தெரிந்ததும் அவன் சிரித்தான். மோகன் அண்ணன் அதன் வயிற்றுக்குக் கீழிருந்த விசையை அழுத்தினான். கண்கள் திறந்து ஒளிர்ந்தன. எல்லாக் கால்களும் ஒரே நேரத்தில் பாயைப் பிறாண்டின. சிறிய இயந்திர உறுமலுடன் அவனை நோக்கி நகர்ந்தது. பாயின் ஓரம் தடுக்கவும், உடலை வளைத்து, மறுபடியும் அவன் பக்கம் திரும்பியது.

“ஓடு,” என்றான் மோகன் அண்ணன்.

எழுவதற்கு இரண்டு கைகளையும் ஊன்ற வேண்டும். முழங்கால்களை மடக்க வேண்டும். நான்கு வயதான அவனுக்கு இலகுவாக உடல் வளைந்தது. ஆனால் எழுந்திருக்க வேண்டுமென்று நினைத்ததும், முதலில் எதை அசைக்க வேண்டும் என்பது மறந்துபோனது.

“பிடிக்க வருது!”

அப்போதுதான் தொண்டைக்குள் கல்லாகக் கிடந்த பயம் உடைந்து குரலாக வெளியேறியது. பாயில் கால் சிக்கித் தடுமாறியபடி ஓடி, சமையலறை வாசலில் நின்ற பாட்டியின் புடவைக்குள் முகத்தைப் புதைத்துக்கொண்டான். அவள் இடுப்பைச் சுற்றிப் பிடித்திருந்த அவனுடைய கைகள் நடுங்கின.

“என்னாச்சு?” என்று பாட்டி கேட்டாள். அவன் காற்சட்டை ஈரமாகியிருப்பதை உணர்ந்தபோது முதுகைத்தட்டிச் சாந்தப்படுத்தினாள்.

அவன் திரும்பிப் பார்த்தான். சுவரில் மோதிய பொம்மை, திரும்பத் தெரியாமல் அதே இடத்தில் கால்களை அடித்துக்கொண்டிருந்தது.

“போதும், மோகன்.”

“விளையாட்டுக்குத்தானே, பாட்டி.”

“அவனுக்கு விளையாட்டுன்னு தெரியுமா?”

அவள் சிரிக்கவில்லை.

பின்புற அறையில் அவனைப் படுக்கையில் உட்காரவைத்து முகத்தில் நீர் ஒற்றித் துடைத்தாள். ஓரத்தில் நின்ற இரும்பு அலமாரியின் அடியில் இருள் பூசிக்கிடந்தது.

“அது பொம்மை,” என்றாள்.

அவன் தலையசைத்தான்.

“பயந்துட்டியா?”

இல்லை என்று தலையசைத்துவிட்டு, அலமாரியின் கீழே பார்த்தான்.

“அது என்னைப் பார்த்துச்சு.”

“பொம்மைக்கு எப்படிடா பார்க்கத் தெரியும்?”

“கண்ணுல லைட்டு இருந்துச்சு.”

பாட்டி அவனுடைய ஈரமான தலைமுடியைப் பின்னால் ஒதுக்கினாள்.

“லைட்டு இருந்தா பார்க்குமா?”

பார்க்காத ஒன்றின் கண்களில் எப்படி வெளிச்சம் இருக்கும்? அன்றிரவு சாப்பாட்டு மேசைக்குக் கீழும் குளியலறை வாளிக்குப் பின்னாலும் பார்த்தான். படுக்கைக்குச் செல்லும்போது பாட்டியின் கால்களுடன் தன் கால்களைச் சேர்த்து நடந்தான். வீட்டிலிருந்த ஒவ்வொரு பொருளுக்கும் அடியில் அதற்கே உரிய சிறிதளவு இருள் இருந்தது. சாலையில் சென்ற வாகனங்களின் வெளிச்சம் ஜன்னல் கம்பிகளைத் தாண்டிச் சுவரில் நகர்ந்தது. வெள்ளை வெளிச்சத்தை அவன் பார்த்தான்.

“பாட்டி.”

“என்னடா ராசா?”

“அது கட்டில்ல ஏறுமா?”

“ஏறாது டா.”

“எப்படித் தெரியும்?”

பாட்டி எதுவும் பேசாமல் அந்தப் பூரானைத் தேடி எடுத்தாள். அதிலிருந்து உயிர்பெற்ற சத்தம் வந்தது. அவன் கால்களை மடக்கி போர்வைக்குள் புகுத்திக்கொண்டான். அதன் வயிற்றிலிருந்த சிறிய மூடியைத் திறந்தாள் பாட்டி. உள்ளே இருந்த மின்கலத்தை வெளியே எடுத்தாள். கண்கள் அணைந்தன. கால்கள் விரிந்த நிலையிலேயே நின்றன. உடற்பாகங்கள் ஒன்றின்மேல் ஒன்று சோர்ந்தன.

“இப்ப ஓடாது,” என்றாள்.

“ஏன்?”

“அதோட எல்லா பவரும் இந்த பேட்டரிக்குள்ளதான் இருக்கு. இது இருந்தா மட்டும்தான் அதுக்கு சக்தி வரும்” என்றாள்.

அவன் அந்த மின்கலத்தை வியப்புடன் பார்த்தான். சிவப்பு நிறத்தில் சிறியதாகச் சப்பாத்தி உருட்டும் கட்டைபோல இருந்தது.

“இது இருந்தா பவர் கெடைக்குமா பாட்டி” என்றான்.

பாட்டி ஒன்றும் சொல்லாமல் அந்த மின்கலத்தை அவனுடைய உள்ளங்கையில் வைத்தாள். அவள் கையை எடுத்த பிறகும் அவனுடைய விரல்கள் திறக்கவில்லை. அதைப் பச்சை லாரியின் உடைந்த பின்பகுதிக்குள் அவன் மறைத்தான்.

மறுநாள் மோகன் அண்ணன் பூரானை எடுத்துக்கொண்டு புறப்பட்டான். அவனுடைய தோளுக்கு மேலாக அதன் தலை தொங்கியது. கால்கள் ஆடவில்லை; கண்கள் திறக்கவில்லை. அதன் சக்தி முழுமையாகப் பச்சை லாரிக்குள் இருந்தது.

அன்றைய மாலையில், பெரிய அசுர மிருகம் ஒருவனை நோக்கிப் பாய்ந்தது. அவன் ஓடவில்லை. ஏதோ வினோத சொற்களைச் சொல்லியபடி கைகளை உடலுக்கு முன்னால் கொண்டு வந்தான். ஒளி அவனை ஒரு கணம் மறைத்து விலகியபோது, அவன் கவசமும் முகமூடியும் அணிந்த வேறொரு உருவமாக மாறியிருந்தான். தொலைக்காட்சியை அணைக்காமல் பாட்டியிடம் ஓடிச்சென்று அவனால் எப்படி அவ்வாறு மாற முடிகிறது என்று கேட்டான். “எல்லாம் சக்தி இருந்தா முடியும்” என்றாள் பாட்டி.

“ஏதோ சொல்றானே…”

“அது ஜப்பான் பாச… அத சொன்னா அவனுக்கு சக்தி கெடைக்கும்” என்றாள்.

இரவில் அவன் பச்சை லாரியின் உடைந்த பின்பகுதியிலிருந்து மின்கலத்தை எடுத்து உள்ளங்கையில் மூடிக்கொண்டான். திரையில் கண்டதைப் போல கேட்ட ஒலிகளை வாய்க்குள் மீட்டபடி கைகளை நகர்த்திப் பார்த்தான். அது சரியான உச்சரிப்பா என அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் கிட்டத்தட்ட அந்த ஒலியைக் கொண்டு வந்தான். சத்தம் பாட்டியை எழுப்பிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான். அவன் உடலில் எந்த மாற்றமும் இல்லை. குளிர்ந்திருந்த மின்கலம் மட்டும் மெதுவாக அவன் கைச்சூட்டை வாங்கியது.

***

அவன் பாலர்ப்பள்ளிச் சீருடை அணியத் தொடங்கியிருந்தபோது, தொலைக்காட்சியில் வந்த வீரனும் மாறியிருந்தான். புதிய வீரனுடைய பெயர் கூகா. ஞாயிற்றுக்கிழமை காலைகளில் அவன் தொலைக்காட்சியின் முன் அமர்ந்ததும் வீட்டின் மற்ற ஓசைகள் விலகிவிடும். சமையலறையில் பாட்டி கரண்டியைத் தட்டுவது, வாசலில் காய்கறிக்காரன் கூவுவது, அடுத்த வீட்டுக் குழந்தை அழுவது என எதுவும் கூகா கால்களை நிலத்தில் பதித்ததும் அவனை எட்டாது.

அந்த அசைவுகளை அவன் மனப்பாடம் செய்திருந்தான். கூகா எதிரி நெருங்கியபோது ஓடுவதில்லை. கால்களை நிலத்தில் பதித்து, கைகளை ஒரு குறிப்பிட்ட ஒழுங்கில் நகர்த்துவான். அப்போது ஜப்பான் மொழியில் ஏதோ சொல்வான். கைகள் இடுப்பருகே சேர்ந்தபோது அவனுடைய உடலிலிருந்து வெளிச்சம் எழும். அவனும் கண்ணாடிக்கு முன்னாலும் குளியலறைக் கதவில் விழுந்த தன் நிழலுக்கு முன்னாலும் அந்த அசைவுகளைச் செய்து பார்த்தான். ஒரு கை தவறான இடத்துக்குச் சென்றுவிட்டால் ஆரம்பத்திலிருந்து மீண்டும் செய்வான். உருமாற்றத்தின் நடுவே நேரும் சிறிய தவறு, அவனை வேறு எதுவாகவோ மாற்றிவிடக்கூடும். கூகாவின் உச்சரிப்பு மட்டும் அவன் வாயில் வேறொன்றாக வந்து விழுந்தது.

பச்சை லாரிக்குள் மறைத்து வைத்திருந்த மின்கலத்தின் நிறம் இரண்டு ஆண்டுகளில் மங்கி, ஒரு முனையில் வெண்பொடி பூத்திருந்தது. கூகாவாக மாறும்போது மட்டும் அதை அவன் உள்ளங்கைக்குள் மூடிக்கொள்வான்.

பாலர்ப்பள்ளியில் எல்லாருக்கும் கூகாவைத் தெரிந்திருந்தது. ஒருவன் இரவில் மட்டும் தன்னால் கூகாவாக மாற முடியுமெனச் சத்தியம் செய்தான். அதிரா மட்டும், “எனக்குக் ‘கூகாவை’ தெரியாது,” என்றாள். அதனால்கூட அவளை அவனுக்குப் பிடித்திருக்கலாம். ஆனால் கொஞ்சநாளில் அவளைப் பிடிக்காமல் போனது.

ஆண்டு விளையாட்டு நாளன்று பாலர்ப்பள்ளி மைதானத்தைச் சுற்றி முக்கோணக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. முந்தைய இரவு பெய்த மழை புல் நுனிகளில் நின்றது. நீலத் தார்ப்பாய்க்குக் கீழே பெற்றோர்கள் பிளாஸ்டிக் நாற்காலிகளில் அமர்ந்திருந்தார்கள்.

வேலிக்கு அப்பால் ஷெல் நிலையத்தின் சின்னம் உயரத்தில் நின்றது. கூட்டத்தில் பாட்டியைத் தேடினான். மூன்றாவது வரிசையில் அவள் இருந்தாள். அவன் பார்த்ததும் கையை உயர்த்தினாள். கழுத்திலிருந்த மெல்லிய சங்கிலி ஒரு கணம் வெய்யிலைப் பிடித்தது. அதிராவின் தலைமுடி இருபுறமும் கட்டப்பட்டு மஞ்சள் நாடாக்கள் போடப்பட்டிருந்தன. அவளுடைய விளையாட்டு எண்ணை அவள் அம்மா நேராக்க முயன்றபோது, சிரித்தபடி விலகி ஓடினாள்.

“அதிரா, ஓடாதே!” என்று அவள் அம்மா அழைத்தார். நின்ற பிறகும் அவளுடைய கால்கள் அதே இடத்தில் மேலும் இரண்டு அடிகள் ஓடின.

அவர்களுடைய போட்டிக்கு “டிரெஸ்-அப் ரேஸ்” என்று பெயர். குழந்தைகள் இருவர் இருவராக ஓடினார்கள். மற்றவர்களின் சுற்றுகள் முடிந்த பிறகு, கடைசிச் சுற்றுக்கு அவனும் அதிராவும் அழைக்கப்பட்டனர். மைதானத்தின் மறுமுனையில் இரண்டு நாற்காலிகள். ஒவ்வொன்றின் மீதும் பெரியவர்களின் நீளக்கைச் சட்டை, தளர்வான கால்சட்டை, தொப்பி. விசில் ஒலித்ததும் ஓடிச் சென்று அவற்றை அணிந்து, நாற்காலியைச் சுற்றி முடிவுக்கோட்டைத் தொட வேண்டும். மற்ற குழந்தைகள் அந்த ஆடைகளைப் பார்த்துச் சிரித்தார்கள். மைதானத்தைக் கடந்து சென்று, இன்னோர் உடலை அணிந்து, புதிய உருவத்தில் திரும்பிவர வேண்டும்.

“நான் ஜெயிப்பேன்,” என்றாள் அதிரா.

“நான் மாறுவேன்,” என்றான்.

“என்ன?”

ஆசிரியர் அவர்களை முன்னால் பார்க்கச் சொன்னார். அவன் கால்சட்டை பைக்குள் கையை விட்டான். மின்கலம் இருந்தது. விசில் ஒலித்தது.

அதிரா ஓடினாள். அவன் இரண்டு அடிகள் எடுத்து வைத்ததும் வலது கையை மார்புக்கு முன்னால் கொண்டுவந்தான். இடது கையை நீட்டியபோது உடல் திரும்பியது. ஈரமான புல்லில் கால் வழுக்கி, சமாளித்து நிமிர்ந்தபோது அவள் முன்னால் சென்றுவிட்டிருந்தாள். நாற்காலியை அடைந்து சட்டையை எடுத்தான். முதல் கை சரியான வழியில் சென்றது. இரண்டாவது கை அதன் உள்ளே எங்கோ தொலைந்தது. தலையை நுழைக்க வேண்டிய இடத்திலிருந்து கை வெளியே வந்தது. ஒரு கணம் உலகம் சட்டைக்குள் இருண்டது.

துணியை முகத்திலிருந்து விலக்கித் தலையை வெளியே கொண்டுவந்தபோது, அதிரா கால்சட்டையை மார்புவரை இழுத்துப் பிடித்தபடி தொப்பியை அணிந்துகொண்டிருந்தாள். அவள் சிரித்தாள். கூட்டமும் சிரித்தது. அந்தச் சிரிப்பு அவளை இன்னும் வேகமாக்கியது. அவன் கால்சட்டைக்குள் கால்களை நுழைத்தான். இரண்டும் ஒரே துளைக்குள் சென்றன. எழ முயன்றபோது முழங்கால்கள் ஒன்றோடொன்று கட்டப்பட்டன. ஒற்றைக் காலுள்ளவனைப்போல் துள்ளியபடி மற்றொரு துளையைத் தேடினான். அதற்குள் அதிரா நாற்காலியைச் சுற்றிவிட்டாள்.

தொப்பியை விட்டுவிட்டு ஓட முயன்றான். சட்டையின் ஒரு கை வெறுமையாகத் தொங்கியது. பெரிய கால்சட்டையை இரு கைகளாலும் இடுப்பில் பிடித்துக்கொண்டான். முதல் அடியிலேயே அது கணுக்கால்வரை இறங்கியது. அவன் விழுந்தான். ஈரமண்ணின் வாசனை முகத்தில் அறைந்தது. தரைக்கு அருகிலிருந்து நாற்காலிகளின் கால்களும் பெரியவர்களின் செருப்புகளும் தெரிந்தன. முடிவுக்கோட்டில் ஆரவாரம் எழுந்தது. விழுந்த இடத்திலிருந்தே கோட்டைத் தொட்டுவிட முடியுமா என்று கையை நீட்டினான். அதுவோ எல்லைக்கு அப்பால் இருந்தது.

அதிரா அங்கே நின்றிருந்தாள். பெரிய தொப்பி அவளுடைய ஒரு கண்ணை மறைத்தது. ஆசிரியர் கொடுத்த சிவப்பு நாடாவை உயர்த்திப் பிடித்திருந்தாள். அவன் எழவில்லை. சிறிது நேரத்தில் அந்த நாடா அவனருகே வந்தது.

“ரெண்டு காலும் ஒரே இடத்துல போட்டிருக்கே,” என்றாள் அதிரா.

அவள் சிரிக்கவில்லை. குந்தி, கால்சட்டையின் மற்றொரு துளையைத் திறந்து காட்டினாள்.

“இந்தக் காலை இங்கே போடு.”

அவன் அவள் காட்டியபடி செய்தான்.

“இப்ப எழுந்திரு.”

அவள் கையை நீட்டினாள். அதைப் பிடிக்காமல் அவன் தனியாக எழ முயன்றான். கால்சட்டை மறுபடியும் கீழே இறங்கியது. அதிரா எதுவும் சொல்லாமல் அதன் இடுப்பைப் பிடித்துத் தூக்கினாள்.

சுற்றியிருந்தவர்கள் கைதட்டினார்கள். சிரிப்பைவிட அந்தக் கைதட்டல் அவனை அதிகமாகக் குனிய வைத்தது. அதிரா வெற்றிநாடாவை வாயில் கவ்விக்கொண்டு, சட்டைக்குள் தொலைந்திருந்த அவனுடைய மணிக்கட்டைப் பிடித்தாள். சரியான வழியில் இழுத்து கையை வெளியே கொண்டுவந்தாள்.

“வா. முடிச்சிடலாம்.”

“நீ ஜெயிச்சிட்ட.”

“நீ இன்னும் போகல.”

அவன் கால்சட்டையைப் பிடித்துக்கொண்டு ஓடினான். நாற்காலியைச் சுற்றி முடிவுக்கோட்டைத் தொட்டான். மீண்டும் கைதட்டல் எழுந்தது. பாட்டி எழுந்து நின்று கைதட்டிக்கொண்டிருந்தாள். அவன் அவளைப் பார்க்கவில்லை. ஆசிரியர் அவனுடைய தலையைத் தடவி, “குட் ட்ரை,” என்றார். வெற்றி பெறாத குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும், வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாத பரிசு அது.

ஆடைகளைக் கழற்றியபோது மின்கலம் பையிலிருந்து விழுந்து ஈரப்புல்லில் உருண்டது. அதிராவின் காலருகே நின்றது. அவள் எடுத்தாள்.

“பேட்டரியா?”

அவன் கையை நீட்டினான்.

“என்னோடது.”

அவள் கொடுத்துவிட்டு அதைப் பார்த்தாள்.

“பழசு. வேலை செய்யாது.”

“செய்யும்.”

“எதுல?”

அவன் உள்ளங்கையை மூடிக்கொண்டான்.

“அதிரா, இங்கே வா!” என்று அவளுடைய அம்மா அழைத்தார்.

அதிரா ஓடினாள். பாதியில் திரும்பி வெற்றிநாடாவை அசைத்தாள்.

“அடுத்த முறை நீ ஜெயிப்பாய்!” என்று அதிரா அழைத்தாள்.

ஆபத்து இல்லாத இடத்தில் உருமாற்றம் நிகழாது என்று அவன் முடிவு செய்தது அன்றுதான்.

***

சல்மா டீச்சர் விலங்குகளின் பெயர்களைச் சொல்ல, குழந்தைகள் அவற்றின் குரல்களை எழுப்பினார்கள்.

“மாடு!”

அதிராவின் குரல் மற்றவர்களைவிட நீளமாகச் சென்றது. குழந்தைகள் சிரித்தார்கள்.

அவனும் சிரித்தான். வயிற்றுக்குள் ஏதோ ஒரு படி இறங்கியது. இரண்டு கால்களையும் சேர்த்துக்கொண்டான். பாடல் முடிந்ததும் போகலாம்.

“யானை!”

எல்லாரும் கைகளைத் தும்பிக்கையாக நீட்டினார்கள். அவனும் நீட்டினான். பாடல் முடிந்ததும் சல்மா டீச்சர் ஓவியப் புத்தகங்களை வழங்கினார். நாற்காலியில் அமர்ந்தால் வயிறு அமைதியாகிவிடும் என்று நினைத்தான். அமர்ந்ததும் உடனே எழுந்தான். நாற்காலியின் கால்கள் தரையில் உரசி ஓசையெழுப்பின. வகுப்பின் முகங்கள் அவனை நோக்கித் திரும்பின.

“என்ன?” என்று சல்மா டீச்சர் கேட்டார்.

அருகில் சென்று காதில் சொல்ல நினைத்தான். கையில் புத்தகங்கள் இருந்ததால் அவர் குனியவில்லை.

“டாய்லெட்.”

“போக வேண்டியதுதானே. அதுக்கு ஏன் நிக்கிற?”

வராந்தாவில் அவன் நடந்தான். ஓடினால் உடல் உடைந்துவிடும். மெதுவாக நடந்தால் தாமதமாகிவிடும். கழிப்பறை வாசலை அடைவதற்குள் உடல் காத்திருப்பை நிறுத்திவிட்டது.

குழந்தைகளுக்கான கழிப்பறையில் இரண்டு அறைகள் இருந்தன. ஒன்றுக்குத் தாழ்ப்பாள் இல்லை. மற்றதன் தரையில் நீர் தேங்கியிருந்தது. வாளிக்குள் இறந்த கொசுக்கள் மிதந்தன. மூலையில் நனைந்த காகிதம் சாம்பல் நிறச் சதையாக ஒட்டியிருந்தது.

நீர் தேங்கிய அறைக்குள் சென்று கதவை இழுத்தான். தாழ்ப்பாள் பொருந்தவில்லை. ஒரு முழங்காலால் கதவைத் தாங்கிக்கொண்டு கால்சட்டையை இறக்கினான். ஈரமும் மலமும் சேர்ந்த ஜட்டி பிட்டங்களிலும் தொடைகளிலும் ஒட்டியிருந்தது. யாரோ அழுகிய பழச்சதையை அவனுடைய ஆடைக்குள் அழுத்திவைத்ததுபோல் இருந்தது.

“டீச்சர்,” என்று அழைத்தான்.

வராந்தாவுக்கு அப்பால் குழந்தைகள் பாடிக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு வரியின் முடிவிலும் கைகள் தட்டப்பட்டன.

“டீச்சர்.”

இம்முறை சற்றுச் சத்தமாக அழைத்தான். கதவின் கீழிருந்த வெளிச்சத்தை இரண்டு கால்கள் கடந்தன.

“டீச்சர்!”

அவை நிற்கவில்லை. இன்னும் உரக்க அழைத்தால் யாராவது வரலாம். வந்தவர் அவனை எப்படிப் பார்ப்பார். ஒருவரை வரவழைத்துவிட்டு, அவர் வருவதற்குள் மறைந்துவிட முடியுமா என்று யோசித்தான். அவனுக்கு உதவி வேண்டும். ஆனால், யாரும் அவனைப் பார்க்கக்கூடாது. இரண்டும் ஒன்றாகக் கிடைக்கும் வரை காத்திருந்தான்.

யாரும் வரவில்லை.

ஜட்டியை மெதுவாகக் கழற்றினான். ஒரு காலில் சிக்கியபோது சமநிலை தவறிச் சுவரில் கையை வைத்தான். ஈரம் விரல்களில் ஒட்டியது. அந்தக் கையை எங்கே வைப்பது என்று தெரியாமல் காற்றிலேயே வைத்திருந்தான்.

குழாயைத் திறந்தான். முதலில் அது இருமியது. பிறகு மெலிந்த நீர் வந்தது. கைப்பிடி உடைந்த குவளையால் தன்னைச் சுத்தப்படுத்த முயன்றான். முதல் குவளை சட்டையை நனைத்தது. அடுத்தது கால்சட்டைக்குள் சென்றது. எந்தக் கையால் எதைத் தொட வேண்டும், தொட்ட கையைப் பிறகு எதனால் கழுவ வேண்டும் என்ற வரிசை குழம்பியது.

ஈரமான கைகளை உடலிலிருந்து விலக்கி நின்றான். வலது கை மார்புக்கு வந்தது. இடது கை அதைக் கடந்தது. இரண்டும் இடுப்பருகே சேர்ந்தன.

வெளிச்சம் வரவில்லை.

குழாயிலிருந்து நீர் விழுந்துகொண்டிருந்தது. அருகிலிருந்த நீலச் சோப்பு பல குழந்தைகளின் கைகளால் நடுவில் குழிந்து மெலிந்திருந்தது. அவன் தேய்த்தபோது இரண்டாக உடைந்தது. ஒரு துண்டு தரைநீரில் விழுந்து சாம்பல் நிறமாக மறைந்தது. மீதியால் விரல்களையும் நகங்களையும் தேய்த்தான்.

தரையில் கிடந்த ஜட்டியைப் பார்த்தான். பையில் வைத்தால் புத்தகங்களுடன் இருக்க வேண்டும். அங்கேயே விட்டால் யாராவது வகுப்புக்கு எடுத்துவந்து, எல்லாரிடமும் யாருடையது என்று கேட்பார்கள். பீங்கானின் அடியில் கருமையான துளை திறந்திருந்தது. ஜட்டியை இரண்டு விரல்களால் எடுத்துத் துளைக்குள் போட்டான். முழுவதும் மறையவில்லை. ஒரு விளிம்பு வெளியே கிடந்தது. குவளையால் நீர் ஊற்றினான். துணி சற்றுச் சுழன்று மீண்டும் நின்றது.

மறுபடியும் ஊற்றினான். ஈரத்துணி தன்னைத்தானே முறுக்கிக்கொண்டு கருமைக்குள் மெதுவாக இறங்கியது. கடைசி விளிம்பு மட்டும் துளையின் வாயைப் பிடித்திருந்தது. வாளியைத் தூக்கி மீதமிருந்த நீர் முழுவதையும் கொட்டினான். ஜட்டி மறைந்தது. அது திரும்பி வருகிறதா என்று சில கணங்கள் காத்திருந்தான். துளை மட்டும் திறந்திருந்தது. நடந்ததையும் அதனுடன் அனுப்புவதுபோல் இன்னொரு குவளை நீரை ஊற்றினான்.

ஈரமான கால்சட்டையை அணிந்தான். ஜட்டி இல்லாததால் துணிக்கும் ஆண்குறிக்கும் நடுவே எதுவும் இல்லை. ஒவ்வோர் அடியிலும் நடுத்தையல் அங்கே வந்து தொட்டது. அவன் இடுப்பருகே துணியை ஒரு கையால் விலக்கிப் பிடித்துக்கொண்டான். கை எடுத்ததும் ஏற்கெனவே நனைந்திருந்த இடத்தை ஈரம் மீண்டும் நனைத்தது. சட்டையை எவ்வளவு கீழே இழுத்தாலும் மறைக்க வேண்டிய இடம்வரை நீளவில்லை.

வராந்தாவில் யாருமில்லை. இருந்தும் இரண்டு கைகளையும் தொடைகளுக்கு முன்னால் வைத்துக்கொண்டு நடந்தான். சாதாரணமாக நடக்க முயன்றான்; அவன் மறைக்க நினைத்ததை நடையே அறிவித்தது. வகுப்பறை வாசலில் நின்றதும் சல்மா டீச்சர் ஒருமுறை பார்த்தார்.

“ஏன் இவ்வளவு நேரம்?”

“தண்ணி வரல.”

“இப்ப வந்துச்சா?”

“வந்துச்சு.”

“போய் உட்கார்.”

அவர் அடுத்த புத்தகத்தைத் திறந்தார்.

நாற்காலியில் அமர்ந்தபோது அதன் குளிர் ஈரத்தைக் கடந்து உடலுக்குள் வந்தது. அதிரா பச்சை நிறத்தில் ஒரு பூனை வரைந்திருந்தாள். அதன் வால் பக்கத்தின் எல்லையைத் தொட்டது.

“உன் பேன்ட் ஏன் ஈரமா இருக்கு?” என்று மெதுவாகக் கேட்டாள்.

“தண்ணி பட்டுச்சு.”

“டாய்லெட்ல?”

“குழாய் உடைஞ்சிடுச்சு.”

அவள் வேறெதுவும் கேட்கவில்லை. தனது பச்சை பென்சிலை அவனுடைய மேசையில் வைத்தாள்.

“புலி வரை.”

அவன் புத்தகத்தில் ஒரு வட்டம் வரைந்தான். அதற்குக் கால்கள் சேர்க்க நினைத்தான். பென்சிலின் முனை கீழே இறங்கவில்லை. வட்டத்தை அப்படியே விட்டான்.

மாலை பாட்டி குளிக்க வைத்தபோதுதான் உள்ளாடை இல்லாததைக் கவனித்தாள்.

“ஜட்டி எங்கே?”

“தொலைஞ்சிடுச்சு.”

“எங்கே?”

“டாய்லெட்ல.”

“எப்படித் தொலையும்?”

பாட்டி அவனுடைய முகத்தைச் சில கணங்கள் பார்த்தாள். தலைமீது தண்ணீர் ஊற்றினாள். சோப்பால் முதுகைத் தேய்த்தாள். கால்களுக்கு நடுவே கழுவியபோது அவன் அவளுடைய தோளைப் பிடித்துக்கொண்டான். காலையிலிருந்து முதன்முறையாக, அவனுடைய உடலை என்ன செய்வது என்று தெரிந்த கைகள் அதைத் தொட்டன.

“அடுத்த தடவை முன்னாடியே சொல்லணும்,” என்றாள். “கடைசி வரைக்கும் அடக்கக்கூடாது.”

“டீச்சரைக் கூப்பிட்டேன்.”

“வரலையா?”

அவன் தலையசைத்தான். பாட்டி கழுத்துக்குப் பின்னால் தேங்கியிருந்த சோப்பு நுரையைத் தண்ணீரால் கழுவினாள்.

“எல்லாத்துக்கும் டீச்சர் வந்து நிற்க முடியுமா?”

அவள் கோபமாகச் சொல்லவில்லை.

அன்றிரவு தொலைக்காட்சியில் புகை நிரம்பிய கட்டடத்துக்குள் கூகா நுழைந்தான். இருளில் ஒரு குழந்தை இருமிக்கொண்டிருந்தது. அது கூப்பிடவில்லை. இருந்த இடத்திலிருந்து எழவும் முடியவில்லை. கூகா சரியான கதவைத் திறந்து, குழந்தையைத் தூக்கிக்கொண்டு வெளியே வந்தான்.

அவன் பழைய மின்கலத்தை உள்ளங்கையில் மூடிக்கொண்டான்.

***

கைக்குழந்தையாக இருந்தபோது அவன் தாமரையைக் கடிக்க முயன்றதாகப் பாட்டி சொல்லியிருக்கிறாள். காதுகளில் தோடுகளும் நெற்றியில் பொட்டும் இருப்பதுபோல, கழுத்தில் அந்தச் சங்கிலி தொங்கும். அவள் குனிந்து அவனுடைய சட்டை பொத்தானைப் போடும்போது தாமரைப் பதக்கம் முன்னால் அசைந்தாடும். அவளுடைய உடலில் இருந்த ஒன்றை ஒருகாலத்தில் வாய்க்குள் வைத்திருந்தான் என்ற செய்தி அவனுக்குப் பிடித்திருந்தது.

பாலர்ப்பள்ளியிலிருந்து அழைத்துச் செல்ல வரும் நாட்களில் பாட்டியின் முகத்திற்கு முன்பே வெயிலில் அசையும் அந்தத் தாமரையைப் பார்த்துவிடுவான். அன்றும் அது முதலில் வந்தது. பாட்டி இரும்புக் கதவுக்கு வெளியே நின்றிருந்தாள். ஒரு கையால் நெற்றிக்கு நிழல் செய்திருந்தாள்; மற்றொரு கையில் மடித்த குடை. அவனுடைய பெயர் அழைக்கப்பட்டதும் பையை வாங்கிக்கொண்டாள்.

“இன்னைக்கு என்ன வரைஞ்சே?”

“புலி.”

“என்ன கலர்?”

“பச்சை.”

“பச்சை புலியா?”

“அந்தப் பென்சில்தான் இருந்துச்சு.”

“அப்ப புலி என்ன பண்ணும்?”

“அதையே போட்டுக்கும்.”

பாட்டி சிரித்தாள்.

வானத்தின் ஒரு பக்கம் கறுத்திருந்தது. அதற்கு முன் வீட்டை அடைய ஷெல் நிலையத்தின் வழியாகத் திரும்பினார்கள். பம்புகளருகே மோட்டார் சைக்கிள்கள் வந்து நின்றன; பெட்ரோல் நிரம்பியதும் வந்த சத்தத்தையே எடுத்துக்கொண்டு மீண்டும் புறப்பட்டன. தரையில் சிந்திய எரிபொருள் வெயிலில் மெல்லிய வானவில்களாகப் பிரிந்தது. அவன் அவற்றை மிதிக்காமல் நடந்தான். காசாளர் அறையின் கதவு திறந்தபோது குளிர்ந்த காற்று அவன் முழங்கால்வரை வந்து தொட்டது. கதவு மூடியதும் வெயில் அந்த இடத்தை மீண்டும் எடுத்துக்கொண்டது.

நிலையத்தின் பின்னால் புதர்களுக்கிடையே ஒரு குளம் இருந்தது. சாலையிலிருந்து நீரின் ஒரு துண்டு மட்டுமே தெரிந்தது. அதில் ஒரு வட்டம் தோன்றியது. அவன் நடையை மெதுவாக்கினான்.

“அங்கே என்ன?”

“எங்கே?”

“தண்ணில.”

பாட்டி திரும்பிப் பார்க்கவில்லை.

“மீனா இருக்கும். வா, மழை வரும்.”

அவன் பின்னால் பார்த்துக்கொண்டே நடந்தான். வட்டம் மறைந்திருந்தது. நீருக்குள் சென்றது தெரியவில்லை; அது இருந்த இடம் மட்டும் அசைந்துகொண்டிருந்தது.

ஷெல் நிலையத்தைத் தாண்டியதும் தாமான் வீடுகளுக்குள் செல்லும் சாலை குறுகியது. ஒரே முகத்தைத் திரும்பத் திரும்ப அணிந்ததுபோல் தொடர்வீடுகள் வரிசையாக நின்றிருந்தன. வாசல்களுக்கும் சாலைக்கும் நடுவே மூடியில்லாத வடிகால் ஓடியது. ஒவ்வொரு வீட்டுக்கும் செல்லும் சிமெந்துப் பலகை அதன் மேல் சிறிய பாலமாகக் கிடந்தது.

பாட்டி சாலைப் பக்கத்துக்கு மாறி, அவனைத் தனக்கும் வடிகாலுக்கும் நடுவே நடக்க வைத்தாள். அவனுடைய தோளைப் பிடித்தாள்.

“ரோட்டு பக்கம் வராதே.”

ஒரு மோட்டார் சைக்கிளின் சத்தம் பின்னாலிருந்து நெருங்கியது. அதில் இருவர் இருந்தார்கள். அவர்களைக் கடக்கும்போது பின்னால் அமர்ந்திருந்தவன் திரும்பிப் பார்த்தான். தலைக்கவசத்தின் கருப்புக் கண்ணாடிக்குள் முகம் இல்லை. வண்டி முன்னால் சென்று வளைவில் மறைந்தது.

“என்ன வேகமா போறாங்க,” என்றாள் பாட்டி.

அவள் தோளிலிருந்த கையை எடுத்தாள். தாமரை அசைந்து மீண்டும் மார்பின் நடுவே வந்து நின்றது.

சில அடிகளுக்குப் பிறகு அதே சத்தம் முன்னாலிருந்து வந்தது. வளைவில் மறைந்த வண்டி எப்படி அவர்களுக்கு எதிரே வந்தது என்பதை அவன் புரிந்துகொள்வதற்குள் அது நெருங்கிவிட்டது. இம்முறை வேகம் குறைந்திருந்தது.

“ஒதுங்கு,” என்றாள் பாட்டி.

அவன் அவளோடு நெருங்கி நடந்தான். வண்டி அவர்களைக் கடந்த கணத்தில் பின்னால் இருந்தவன் வலது கையை நீட்டினான். கை பாட்டியின் தோளைக் கடந்து சென்றது. விரல்கள் சங்கிலிக்குள் நுழைந்தன.

மிகச் சிறிய ஓசை ஒன்று எழுந்தது. அது உலோகம் அறுந்த ஓசை மட்டும் அல்ல; பாட்டியின் தொண்டையிலிருந்து பறிக்கப்பட்ட மூச்சும் அதனுடன் இருந்தது. அவளுடைய உடல் முன்னால் இழுக்கப்பட்டது. ஒரு செருப்பு வழுக்கியது. சங்கிலி உடனே அறுந்துவிடாமல் கழுத்தைச் சுற்றி இறுக்கியது. பிறகு அறுந்தது.

தாமரை ஒரு கணம் காற்றில் திரும்பி வெயிலைப் பிடித்தது. அடுத்த கணம் அந்த மனிதனின் முஷ்டிக்குள் மறைந்தது. மோட்டார் சைக்கிள் வேகமெடுத்தது. எண்ணெய் படிந்த சங்கிலியின் இணைப்புகள் பின்சக்கரத்தின் பற்களுக்குள் ஒன்றன்பின் ஒன்றாக நுழைந்து மறுபுறம் வெளிவந்தன. பின்விளக்கு ஒருமுறை மின்னியது.

அவனுடைய கால்கள் நின்றன.

ஓடலாம். வண்டியின் எண்ணைப் பார்க்கலாம். குறைந்தபட்சம் கத்தலாம். ஏதாவது ஒன்றை முதலில் செய்தால் மற்றவைத் தொடர்ந்து வந்துவிடும். பைக்குள் இருந்த மின்கலம் தொடையை அழுத்தியது. கையை உள்ளே விட்டால் அதைத் தொட்டுவிடலாம்.

ஆனால் தோளுக்குக் கீழே கைகள் இல்லாததுபோல் இருந்தது.

வாயைத் திறந்தான். காற்று மட்டும் உள்ளே வந்தது.

வண்டி வளைவை அடைந்தது. பின்விளக்கு மறுபடியும் தோன்றி அணைந்தது. இம்முறை அது திரும்பி வரவில்லை.

பாட்டி சாலையோரத்தில் அமர்ந்திருந்தாள். எப்போது கீழே சென்றாள் என்பதை அவன் பார்க்கவில்லை. ஒரு கையால் கழுத்தைப் பிடித்திருந்தாள். விரல்களுக்கு நடுவே ரத்தம் மெதுவாக எழுந்தது.

“ஐயோ!” என்று கத்தினாள்.

அவனுடைய கால்கள் இன்னும் நகரவில்லை.

“பாட்டி,” என்றான்.

அவள் அவனைப் பார்த்தாள். முதலில் முகத்தை; பிறகு கைகளையும் கால்களையும்.

“உனக்கு ஒண்ணும் இல்லையே?”

சங்கிலி அவளுடையது. அறுந்த தோல் அவளுடையது. கீழே விழுந்தவளும் அவள்தான். இருந்தும் அவனுடைய உடலில் எதுவும் குறையவில்லையா என்று பார்த்தாள்.

அவன் முதல் அடியை மறந்தவனைப்போல் தடுமாறி, பிறகு அவளிடம் ஓடினான். கழுத்தைத் தொட கையை நீட்டினான். ரத்தத்தைப் பார்த்ததும் இழுத்துக்கொண்டான்.

வீட்டு வாசல்களிலிருந்து ஆட்கள் வந்தார்கள். ஷெல் நிலையத்திலிருந்து மஞ்சள் சட்டை அணிந்த ஒருவர் ஓடி வந்தார். யாரோ அவரை ரஹீம் என்று அழைத்தார்கள். அவர் பாட்டிக்குத் தண்ணீர் கொடுத்துவிட்டு வண்டி சென்ற திசையைப் பார்த்தார்.

“வண்டி எண்ணை யாராவது பார்த்தீங்களா?” என்று ரஹீம் கேட்டார்.

பாட்டி மூச்சைச் சரிசெய்ய முயன்றாள்.

“ரெண்டு பேர்… கருப்பு மோட்டார்…”

ரஹீம் அவனிடம் குனிந்தார்.

“தம்பி, நீ பார்த்தியா?”

அவன் தலையசைத்தான்.

“வண்டி என்ன நிறம்?”

“சிவப்பு.”

“மோட்டார் சைக்கிள் சிவப்பா?”

வண்டியின் நிறம் அவனுக்கு நினைவில்லை. பின்விளக்கு மட்டும் நினைவில் இருந்தது.

“லைட்டு,” என்றான்.

ரஹீம் சில கணங்கள் அவனுடைய முகத்தைப் பார்த்தார்.

“பையன் பயந்துபோயிருக்கான்,” என்றார்.

ஒரு முதியவர் அவனருகே வந்தார்.

“பக்கத்திலேயே நின்னியே. ஏன் கத்தல?”

பாட்டி உடனே சொன்னாள்:

“அவன் சின்னப் பையன்தானே.”

கேள்விகள் நின்றன.

போலீசார் வந்தபோது மழை தொடங்கியிருந்தது. பாட்டியின் பெயர், முகவரி, சங்கிலியின் எடை, தாமரைப் பதக்கம் எல்லாவற்றையும் குறிப்பேட்டில் எழுதினார்கள். திருடன் அணிந்திருந்த சட்டையின் நிறத்தை ஒரு போலீஸ்காரர் கேட்டார்.

“மஞ்சள்,” என்றான் அவன்.

ரஹீம் மஞ்சள் சட்டையில் அவனருகே நின்றிருந்தார். போலீஸ்காரர் ரஹீமைப் பார்த்துவிட்டு கேள்வியை மீண்டும் கேட்டார். அவன் பேசவில்லை.

“பரவாயில்லை. இன்னும் அதிர்ச்சி தெளியவில்லை,” என்றார் போலீஸ்காரர்.

வீட்டுக்குத் திரும்பும்போது பாட்டி குடையைப் பிடித்திருந்த கையால் அவனுடைய கையையும் பற்றிக்கொண்டாள். அவளுடைய பிடி வழக்கத்தைவிடத் தளர்வாக இருந்தது. கழுத்தில் சங்கிலி இருந்த இடம் வெறுமையாக மழையில் நனைந்தது.

அன்றிரவு வீட்டுக்கு வந்த ஒவ்வொருவரிடமும் பாட்டி நடந்ததைச் சொன்னாள். ஒவ்வொரு முறையும் மோட்டார் சைக்கிள் திரும்பி வந்தது; கை நீண்டது; சங்கிலி அறுந்தது. அவன் அங்கே நின்றிருந்ததை மட்டும் அவள் சொல்லவில்லை.

“பையனும் இருந்தானே?” என்று யாராவது கேட்டால்,

“அவன் சின்னப் பையன். அவனுக்கு என்ன தெரியும்?” என்றாள்.

ஒவ்வொரு முறையும் அதே வாக்கியம் வந்தது. நாற்காலியில் அமர்ந்திருந்த அவனுடைய கால்கள் தரையை எட்டவில்லை.

எல்லாரும் சென்றபின் பாட்டி கண்ணாடிக்கு முன் அமர்ந்து கழுத்தில் மருந்து தடவினாள். பொட்டையும் தோடுகளையும் அகற்றியிருந்தாள். சங்கிலி இருந்த இடத்தில் தோல் வெளிறியிருந்தது; அறுந்த இடத்தில் புதிய காயம் மெல்லத் திறந்திருந்தது.

“வலிக்குதா?” என்று கேட்டான்.

“கொஞ்சம்.”

“சங்கிலி திரும்பக் கிடைக்குமா?”

கண்ணாடிக்குள் அவனைப் பார்த்தாள்.

“தெரியல.”

“போலீஸ் பிடிப்பாங்களா?”

“பார்ப்போம்.”

அவன் பையிலிருந்து மின்கலத்தை எடுத்தான். வியர்வையால் ஈரமாகியிருந்தது.

“அதை இன்னும் ஏன் எடுத்துட்டு அலையுற?” என்று பாட்டி கேட்டாள். “கசிஞ்சிருக்கு. தூக்கிப் போடு.”

அவன் உள்ளங்கையை மூடிக்கொண்டான்.

பாட்டி உறங்கிய பிறகு கண்ணாடிக்கு முன் நின்றான். கால்களைப் பதித்தான். வலது கையை மார்புக்கு முன்னால் கொண்டுவந்தான். இடது கையை நகர்த்தி, இரண்டையும் இடுப்பருகே சேர்த்தான். எல்லா அசைவுகளும் சரியாக வந்தன.

மறுபடியும் செய்தான்.

இம்முறை இன்னும் வேகமாக.

கண்ணாடிக்குள் மெல்லிய கைகளும் கலைந்த தலைமுடியும் ஒரு முஷ்டிக்குள் பழைய மின்கலமும் கொண்ட அதே சிறுவன் நின்றிருந்தான்.

தொலைக்காட்சியில் எதிரிகள் வீரன் உருமாறி முடிக்கும்வரை காத்திருப்பார்கள். சாலையில் வந்தவர்கள் காத்திருக்கவில்லை.

கைகளைவிட முதலில் ஒரு சொல் நகர வேண்டும். அதைச் சொன்னதும் கால்கள் திரும்பிவிட வேண்டும்; உடல் தன்னைவிட வேகமாக எழ வேண்டும்.

***

சனிக்கிழமை மாலைகளில் வசந்தி அக்காவின் வீட்டில் பஜனை வகுப்பு நடக்கும். வரவேற்பறை நாற்காலிகள் சுவரோரம் ஒதுக்கப்பட்டு, நடுவில் பாய்கள் விரிக்கப்படும். முன்சுவரில் காவி உடையணிந்த சத்திய சாய்பாபாவின் படம். அதற்குக் கீழே விபூதிக் கிண்ணம், வெள்ளி விளக்கு, ஊதுபத்திகள். மின்விசிறி ஓடும்போது பாபாவின் கழுத்திலிருந்த மல்லிகை மாலையின் கீழ்முனை அசையும். படத்தில் மற்ற அனைத்தும் அசையாமல் இருக்கும்.

பாட்டிதான் அவனை முதலில் அங்கு அழைத்துச் சென்றாள்.

“நல்ல பாட்டு சொல்லித் தருவாங்க. சும்மா டிவியே பார்த்துக்கிட்டு இருக்காதே.”

அவனுக்குப் பாடுவதில் விருப்பமில்லை. வசந்தி அக்கா சொன்ன வரியை எல்லாரும் ஒரே குரலில் திருப்பிச் சொல்வதைக் கவனித்தான். ஹார்மோனியம் முதலில் மூச்சை இழுத்து அவருடைய குரலை உள்ளே வாங்கிக்கொள்ளும்; அடுத்த அழுத்தத்தில் குழந்தைகளின் குரலோடு சேர்த்து வெளியே விடும். பாடல்களிலிருந்த பல சொற்களின் பொருள் அவனுக்குத் தெரியவில்லை. பெரியவர்கள் அவற்றைச் சொல்லும்போது கண்களை மூடிக்கொண்டார்கள்.

வசந்தி அக்காவின் மகன் கார்த்திக்குக்கு ஒன்பது வயது. எல்லாப் பாடல்களும் அவனுக்குத் தெரியும்; மற்றவர்கள் செய்த தவறுகளும் தெரியும். வசந்தி அக்கா கண்களை மூடிய பிறகுதான் அவற்றைத் திருத்துவான். முதல் நாளிலேயே சிறுவனுடைய கால்சட்டை பை புடைத்திருப்பதை அவன் கவனித்தான்.

“என்ன வச்சிருக்க?”

“ஒண்ணுமில்ல.”

கார்த்திக் இரண்டு விரல்களால் பையை வெளியிலிருந்து அழுத்தினான். உள்ளிருந்த மின்கலம் தொடையில் உருண்டது.

“பேட்டரியா?”

சிறுவன் அவனுடைய கையைத் தட்டிவிட்டான்.

“தொடாதே.”

“பஜனைக்குப் பேட்டரி கொண்டு வந்திருக்கான்.”

அருகிலிருந்தவர்கள் சிரித்தார்கள். வசந்தி அக்கா திரும்பியதும் கார்த்திக் கண்களை மூடிக்கொண்டான். அவனும் மூடினான். அந்த இருளுக்குள் கார்த்திக்கின் இரண்டு விரல்கள் மட்டும் தொடர்ந்து அசைந்தன.

பாபாவின் படத்தில் உயர்ந்திருந்த கையை அவன் ஒவ்வொரு வாரமும் பார்த்தான். உள்ளங்கை வெளிப்புறமாக இருந்தது. வருகிறவனை நிறுத்துவதுபோலவும், பயந்து நிற்பவனை அருகில் அழைப்பதுபோலவும் அதே கை இருந்தது.

ஒருநாள் பஜனை முடிந்ததும் வசந்தி அக்கா படத்தைச் சுட்டிக்காட்டினார்.

“பாபா ஏன் இப்படி கை வச்சிருக்கார்னு தெரியுமா?”

“ஆசீர்வாதம்,” என்றான் கார்த்திக்.

“ஆமாம். இன்னொரு பொருளும் இருக்கு.”

அவர் படத்தின் அருகே நின்று வலது கையை அதேபோல் உயர்த்தினார்.

“இதுக்கு அபய ஹஸ்தம் என்று பெயர்.”

அவர் இரண்டு சொற்களாகச் சொன்னார். அவன் காதில் அவற்றுக்கு நடுவிலிருந்த இடைவெளி மூடிக்கொண்டது.

அபயஸ்தம்.

“அபயம் என்றால் பயமில்லாத நிலை,” என்றார் வசந்தி அக்கா. “இந்தக் கை என்ன சொல்லுது?”

அவரே பதில் சொன்னார்.

“பயப்படாதே. நான் இருக்கிறேன்.”

அவனுடைய முதுகு நிமிர்ந்தது. அது ஒரு கையின் பெயராகத் தெரியவில்லை. சொல்லி முடித்ததும் நிகழ வேண்டிய காரியம்போல் இருந்தது. பயம் வந்தால் முதலில் சொல்லைச் சொல்ல வேண்டும். பிறகு கையை உயர்த்த வேண்டும். கை உயர்ந்ததும் எதிரிலிருப்பது நிற்க வேண்டும்.

அதை வாய்க்குள் மெதுவாகச் சொல்லிப் பார்த்தான். ஒவ்வொரு ஒலியும் தனித்தனியாக இருந்தது. வேகமாகச் சொன்னபோது நடுவிலிருந்த மூச்சு மறைந்து, சொல் ஒன்றாகிவிட்டது.

“என்ன முணுமுணுக்கிற?” என்று கார்த்திக் கேட்டான்.

அவன் அந்தச் சொல்லைக் கூறினான்.

கார்த்திக் சிரித்தான்.

“தப்பு. நடுவுல ‘ஹ’ வரும். அபய ஹஸ்தம்.”

அவன் மறுபடியும் தன் சொல்லையே சொன்னான். கார்த்திக் வாயைத் திறந்து ‘ஹ’ என்ற ஒலியை அவனுடைய முகத்தில் ஊதினான். அருகிலிருந்த சிறுவனும் அவ்வாறே செய்தான். அவர்கள் ஊதிய ‘ஹ’ அவன் முகத்தைத் தொட்டபோது, மூச்சுக்குள் இருந்த எச்சிலின் நுண் ஈரம் மேலுதட்டருகே குளிர்ந்தது.

வசந்தி அக்கா வெண்ணிற விரலால் ஒவ்வொரு குழந்தையின் நெற்றியிலும் விபூதியைத் தொட்டு, சாம்பல் நிறச் சிறு பிறைகளை விட்டுச் சென்றாள். கார்த்திக்கின் உயர்ந்த கை அவன் முகத்துக்கு முன் ஈரக்காற்றைத் தள்ளியது.

வீட்டிற்குச் சென்றதும் கண்ணாடிக்கு முன் நின்றான்.

“அபயஸ்தம்.”

வலது கையை உயர்த்தினான். கண்ணாடிக்குள் இருந்த சிறுவனும் உயர்த்தினான். எதிரே இருந்தவன் உடனே அசைவதை நிறுத்திவிட்டான்.

அதன்பிறகு தெருவில் நாய் குரைத்தபோதும், பாலர்ப்பள்ளிக் கழிப்பறை வாசலைக் கடந்தபோதும் அந்தச் சொல்லைக் கூறினான். இரண்டு முறையும் கால்கள் நின்றுவிடாமல் அவன் கடந்துவிட்டான்.

ஒரு சனிக்கிழமை பஜனை முடிந்து குழந்தைகள் பிரசாதத்துக்காக எழுந்தபோது கார்த்திக் அவனுடைய கால்சட்டை பைக்குள் கையை விட்டான். மின்கலத்தை எடுத்து அதன் முனையில் பூத்திருந்த வெண்பொடியை நகத்தால் சுரண்டினான்.

“கொடு,” என்றான் சிறுவன்.

“இது செத்துப் போச்சு.”

“கொடு.”

கார்த்திக் அதைத் தலைக்கு மேலே தூக்கினான். அவன் குதிக்கவில்லை.

“வீரன் இல்லையா நீ? எடு.”

“கொடு.”

“முதல்ல சரியா சொல்லு. அபய ஹஸ்தம்.”

“அபயஸ்தம்.”

“‘ஹ’ சொன்னா தர்றேன்.”

கார்த்திக் மின்கலத்தை முதுகுக்குப் பின்னால் மறைத்தான். பிறகு பாபாவின் படத்தைப் பார்த்து வலது கையை உயர்த்தினான். அதே உள்ளங்கையைச் சிறுவனின் முகத்திற்கு நேராக வைத்தான்.

“பயப்படாதே,” என்றான். “நான் இருக்கேன்.”

கார்த்திக்கின் உள்ளங்கை அவனுடைய முகத்திற்கு முன் நின்றது. சொல் முதலில் வந்ததா, கை முதலில் நகர்ந்ததா என்று அவனுக்குப் பிறகு நினைவில்லை.

“அபயஸ்தம்.”

அவனுடைய உள்ளங்கை கார்த்திக்கின் கன்னத்தில் விழுந்தது.

அறை முழுவதும் அமைதியானது. மின்விசிறி மட்டும் எதுவும் நடக்காததுபோல் சுற்றிக்கொண்டிருந்தது. கார்த்திக்கின் முகம் அடிபட்ட பக்கமாகத் திரும்பியிருந்தது. கன்னத்தில் நான்கு வெளிறிய கோடுகள் தோன்றி மெதுவாக நிறம் பெற்றன.

மின்கலம் பாயில் விழுந்து உருண்டது.

சிறுவன் தனது கையைப் பார்த்தான். அது நடுங்கவில்லை.

கார்த்திக்கின் முகத்தில் அழுகைக்கு முன் வியப்பு வந்தது. அடிபட்ட கன்னத்தைத் தொட்டபடி அவன் சிறுவனுடைய கையைப் பார்த்தான்.

“அம்மா!”

சிறுவன் மின்கலத்தை எடுத்துக்கொண்டு ஓடினான். வாசலில் குவிந்திருந்த செருப்புகளில் தன்னுடையதைத் தேடவில்லை. இரண்டு நீலச் செருப்புகளை மாட்டிக்கொண்டான். ஒன்று காலைக் கடித்தது; மற்றொன்று ஒவ்வோர் அடியிலும் கழன்றது. மைதானத்தைக் கடக்கும்போது சிறிய செருப்பு விழுந்தது. அதை எடுக்காமல் மற்றொன்றையும் உதறிவிட்டு வெறுங்காலுடன் ஓடினான்.

குறுக்குவழியிலிருந்த மூடியில்லாத வடிகாலைத் தாண்டிக் குதித்தபோது பின்கால் ஓரத்திலிருந்த வளைந்த கம்பியில் சிக்கியது. உடல் முன்னால் சென்றது; கால்சட்டை மட்டும் ஒரு கணம் பின்னால் தங்கியது.

துணி கிழிந்த ஓசை அவனைத் தொடர்ந்து வந்தது. கீழே விழாமல் கைகளை ஊன்றிச் சமாளித்தான். பின்னால் தொட்டுப் பார்த்தபோது தையல் இடுப்புக்குக் கீழிருந்து தொடைவரைத் திறந்திருந்தது. நீல ஜட்டி வெளியே தெரிந்தது.

ஒரு கையில் மின்கலம். இன்னொரு கையால் கிழிந்த துணியைச் சேர்த்துப் பிடித்தான். அப்படியே நடக்க முடியாமல் மின்கலத்தை வாயில் கவ்விக்கொண்டு, இரண்டு கைகளாலும் கால்சட்டையைப் பின்னால் மூடிக்கொண்டான். வெண்பொடியின் உவர்ப்பு நாக்கில் பட்டது. ஒவ்வோர் அடியிலும் காற்று கிழிந்த இடத்துக்குள் நுழைந்தது.

வீட்டின் பின்வாசல் வழியாகச் சென்று குளியலறையில் கால்சட்டையைக் கழற்றினான். வாளிக்குப் பின்னால் மறைத்துவிட்டு வேறொன்றை அணிந்தான். மின்கலத்தைப் பச்சை லாரிக்குள் வைத்தான்.

பிறகு கண்ணாடிக்கு முன் நின்றான்.

கார்த்திக்கின் கன்னம் இன்னும் தன் உள்ளங்கையில் இருப்பதுபோல் கை சூடாக இருந்தது. விரல்களின் அடியில் மெல்லிய நிறமாற்றம். சாய்பாபாவின் உயர்ந்த உள்ளங்கையில் அப்படியான நிறம் இல்லை.

“அபயஸ்தம்,” என்றான்.

கண்ணாடிக்குள் இருந்த சிறுவன் அசையவில்லை.

அன்றிரவு வசந்தி அக்கா வீட்டிற்கு வந்தார். கார்த்திக்கின் கன்னம் வீங்கியிருப்பதாகப் பாட்டியிடம் சொன்னார்.

“எதுக்கு அடிச்சே?” என்று பாட்டி கேட்டாள்.

“என்னோட பேட்டரியைக் கொடுக்கல.”

“அதுக்காக அடிப்பியா? வசந்தி அக்காவைக் கூப்பிட்டிருக்க வேண்டியதுதானே?”

மறுநாள் அழுக்குத் துணிகளை எடுக்கும்போது, வாளிக்குப் பின்னால் சுருட்டித் திணிக்கப்பட்டிருந்த கால்சட்டையைப் பாட்டி கண்டுபிடித்தாள்.

“இதை ஏன் இங்க மறைச்சு வச்சிருக்க?”

அவள் விரல்களுக்கு நடுவே கிழிந்த தையல் அகன்று கிடந்தது. அவன் அதிலிருந்து கண்களை எடுக்கவில்லை.

“எப்படி கிழிஞ்சது?”

“ஓடும்போது.”

“எதுக்கு ஓடினே?”

கிழிந்த விளிம்புகளுக்கு நடுவே தொங்கிய நூலை அவன் ஆட்காட்டி விரலில் சுற்றி, மீண்டும் அவிழ்த்தான்.

பாட்டி அவனைச் சில கணங்கள் பார்த்தாள். பிறகு கால்சட்டையை எடுத்துக்கொண்டு சென்றாள். கிழிந்த இடத்தில் இரட்டை தையல் போட்டாள். மீண்டும் அதை அணிந்தபோது முதுகுக்குக் கீழே ஒரு கடினமான கோடு ஒவ்வோர் அடியிலும் உடலை இழுத்தது.

அன்று மாலை குளியலறைக்குள் சென்றான். வாளியை அவன் காலால் சிறிது நகர்த்தியபோது, அதன் பின்னால் பூரான் ஒன்று சுருண்டிருந்தது. வாளியின் அடிப்பக்கம் அதைத் தொட்டதும் அது நீண்டு வெளியேறியது. அதற்கும் அவனுடைய வெற்றுக்காலுக்கும் நடுவே இரண்டு தரைக்கற்கள் மட்டுமே இருந்தன. அவனுடைய கால்விரல்கள் தன்னிச்சையாக மடங்கின.

அவன் கால்சட்டை பைக்குள் கையை விட்டான். மின்கலத்தை இடது உள்ளங்கையில் மூடிக்கொண்டு, ‘அபயஸ்தம்’ என்றான். வலது கையை மார்புக்கு முன்னால் கொண்டுவந்தான். இடது கையை நீட்டுவதற்குள் பூரான் முதல் தரைக்கல்லைக் கடந்திருந்தது.

இடது கை அதன் இடத்தை அடையவில்லை. வலது கை வாசலருகே கிடந்த பாட்டியின் ரப்பர் செருப்பைப் பிடித்திருந்தது. முதல் அடியில் பூரானின் உடல் சுருண்டது. கால்கள் மட்டும் தரையைப் பிறாண்டின. இரண்டாவது அடியில் அவையும் நின்றன.

செருப்பை வலது கையில் பிடித்தபடி இடது கையைத் திறந்தான். மின்கலத்தின் முனையிலிருந்த வெண்பொடி அவனுடைய உள்ளங்கையில் ஒட்டியிருந்தது. பாட்டியின் காலடி நெருங்கியதும் விரல்களை மீண்டும் மூடிக்கொண்டான்.

“என்ன சத்தம்?” என்று கேட்டபடி பாட்டி வந்தாள். அவளுடைய பார்வைச் செத்த பூரானிலிருந்து அவன் வலது கையிலிருந்த செருப்புக்குச் சென்றது.

“நீயா அடிச்சே?”

ஆமென்று தலையசைத்தான். செருப்பு வலது கையில் இருந்தது; மின்கலம் இருந்த இடது கை மட்டும் மூடியிருந்தது.

***

சங்கிலி பறிக்கப்பட்டதிலிருந்து பாட்டி ஷெல் நிலையம் வழியாகச் செல்வதைத் தவிர்த்திருந்தாள். சந்தைக்குள் புகுந்து, மீன் கடைகளைக் கடந்து சுற்றுவழியில் அவனை அழைத்துச் சென்றாள். ஒருநாள் அவனே கேட்டான்:

“ஷெல் வழியா போகலாமா?”

பாட்டி அவனைப் பார்த்தாள்.

“ஏன்?”

“சும்மா.”

“பயம் இல்லையா?”

“இல்ல.”

சொல்லும்போது கால்சட்டை பைக்குள் இருந்த மின்கலத்தைப் பிடித்துக்கொண்டான்.

ஷெல் நிலையத்துக்குப் பின்னால், நிரப்ப மறந்த பள்ளம்போல் குளம் கிடந்தது. மழைக்காலத்தில் சுற்றியிருந்த புற்களை விழுங்கிப் பெரிதாகும்; வெயிலில் சுருங்கி, கரைகளில் உலர்ந்த சேற்றைப் பழைய உடல்போல விட்டுவிடும். உடைந்த செங்கற்கள், பாதி புதைந்த டயர், பிளாஸ்டிக் கோப்பைகள் அதன் எல்லையைச் சொல்லிக்கொண்டிருந்தன.

சில நாட்களுக்குப் பிறகு அவன் தனியாக அங்கே செல்ல அனுமதி கேட்டான். பாட்டி வாசலில் மிளகாய்களைப் பாயில் பரப்பிக்கொண்டிருந்தாள்.

“எந்த மீன்?”

“ஷெல் கொளத்து மீன்.”

அவள் கையை நிறுத்தி அவனைப் பார்த்தாள். பிறகு வீட்டுக்குள் இருந்த கடிகாரத்தைப் பார்த்தாள்.

“ரோட்டுப் பக்கம் போகாதே.”

“மாட்டேன்.”

“குளத்துக்குள்ள இறங்காதே.”

“மாட்டேன்.”

“இருட்டுறதுக்குள்ள வந்துடு.”

அவன் சட்டை பைக்குள் காலையில் மீந்த ஜாம் ரொட்டியின் ஓரங்களை வைத்திருந்தான். குளத்தருகே நின்றபோது உள்ளே என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. நீர் வானத்தை வைத்திருந்தது. வெள்ளை மேகமும் ஷெல் சின்னத்தின் நிறங்களும் மேற்பரப்பில் அசைந்தன.

குனிந்து, நீரிடம் மெதுவாகச் சொன்னான்:

“அபயஸ்தம்.”

பாசியின் கீழிருந்து ஒரு குமிழ் மேலேறி உடைந்தது.

சட்டை பையிலிருந்து ரொட்டியை எடுத்தான். ஜாம் காய்ந்து நடுவில் கருமையாக ஒட்டியிருந்தது. சிறு துண்டாகப் பிய்த்து நீரில் வீசினான். ரொட்டி முதலில் தனியாக மிதந்தது. பிறகு அதன் கீழே ஒரு கருமை அசைந்தது. அதைத் தொடர்ந்து இன்னொன்று. நீருக்குள் கிடந்த இருள் சிறு உடல்களாகப் பிரிந்து மேலே வந்தது. பல வாய்கள் ஒரே நேரத்தில் திறந்தன.

ரொட்டி மறைந்தது.

இன்னொரு துண்டை எறிந்தான். இம்முறை அது நீரைத் தொடுவதற்கு முன்பே மீன்கள் திரண்டன. மேற்பரப்பின் அமைதி சிறிய உதடுகளால் பல இடங்களில் கிழிக்கப்பட்டது.

“தள்ளாதீங்க,” என்றான்.

அவை இன்னும் நெருங்கின.

“வரிசையா வாங்க.”

மூன்றாவது துண்டு விழுந்த இடத்தில் ஒன்றின் முதுகின்மேல் இன்னொன்று ஏறுவதுபோல் மோதின. அவன் கையை உயர்த்தினான்.

“நான் சொல்றது கேட்கலையா?”

மீன்கள் வாய்களைத் திறந்தன.

கூட்டத்தின் ஓரத்தில் ஒரு கரிய மீன் இருந்தது. மற்றவற்றைவிட மெதுவாக வந்தது. அதன் மேல் துடுப்பின் பாதி கிழிந்திருந்தது. நீந்தும்போது அந்தக் கிழிவு உடலுடன் ஒட்டாமல், பழைய கொடியின் நுனிபோல் தனியாகத் துடித்தது. மற்ற மீன்கள் ரொட்டியைப் பிடித்தபோது அது அவற்றின் அடியில் மறைந்தது.

அவன் மிகச் சிறிய துண்டொன்றைக் கூட்டத்திலிருந்து விலகி அதன் பக்கம் வீசினான். கரிய மீன் திரும்பி வந்தது. துண்டை விழுங்கிவிட்டு அங்கேயே நின்றது. வாய் ஒருமுறை திறந்து மூடியது.

அது கீழே இறங்கியது. மற்றவை மறைந்த பிறகும் அதன் நிழல் மட்டும் சில கணங்கள் நீருக்குள் அசைந்தது.

அன்றிலிருந்து அதுவே தளபதி.

அடுத்த நாட்களில் ரொட்டி ஓரங்கள், உடைந்த மேரி பிஸ்கட்டுகள், பாட்டி கவனிக்காதபோது காகிதத்தில் மடித்த சோற்றுப் பருக்கைகள் எனக் கிடைத்ததை எடுத்துச் சென்றான். அவனுடைய காலடி கரையிலிருந்த உலர்ந்த இலைகளை நசுக்கியதும் மீன்கள் மேலே வரத் தொடங்கின.

அவன் அவற்றுக்கு நிலைகளைப் பிரித்தான்.

கிழிந்த துடுப்பு—தளபதி.

அதன் அருகே நீந்திய இரண்டு பெரிய மீன்கள்—காவலர்கள்.

மேற்பரப்பைத் தொடாமல் கீழே காத்திருந்த சிறியவை—புதிய வீரர்கள்.

வலப்பக்கம் போகச் சொல்லிவிட்டு அங்கே ரொட்டியை எறிந்தான். அவை சென்றன. நிற்கச் சொன்னான்; உணவு தீர்ந்ததும் நின்றன. மறையச் சொன்னான்; அவனுடைய நிழல் நீர்மேல் விழுந்ததும் கீழே இறங்கின.

சில நாட்களில் உணவு முடிந்த பிறகும் உடைந்த செங்கல்லின்மேல் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான்.

“அவன் பாட்டியைக் கீழே தள்ளப் போனான்.”

மீன்கள் நீருக்கடியில் சுற்றின.

“நான் நினைச்சிருந்தா பிடிச்சிருப்பேன்.”

கிழிந்த துடுப்பு மேலே வந்தது.

“அப்போ எனக்கு வார்த்தை தெரியாது.”

மின்கலத்தை எடுத்துக் காட்டினான்.

“இப்ப தெரியும்.”

ஒருநாள் அதிராவைப் பற்றிச் சொல்லிவிட்டு, “உங்களை அவளுக்குக் காட்டுவேன்,” என்றான்.

அந்த நாள் அவன் எதிர்பார்த்ததைவிட விரைவாக வந்தது.

மாலை நேரம். ஷெல் நிலையத்தில் ஒரு லாரிக்கு எரிபொருள் நிரப்பப்பட்டுக்கொண்டிருந்தது. அதன் இயந்திர அதிர்வு நீருக்குள் இறங்கியதுபோல் மேற்பரப்பு நுண்ணிய வட்டங்களாக நடுங்கியது. அவன் சோற்றுப் பருக்கைகளைப் போட்டுக்கொண்டிருந்தபோது சாலையிலிருந்து சிறு மணிச்சத்தம் கேட்டது.

இளஞ்சிவப்பு மிதிவண்டியில் அதிரா வந்தாள். கைப்பிடிகளில் கட்டப்பட்டிருந்த பிளாஸ்டிக் நாடாக்கள் சக்கரங்களின் வேகத்தில் பின்னால் பறந்தன. பின்சக்கரத்தருகே எண்ணெய் பூசிய சங்கிலி இரும்புப் பற்களை ஒவ்வொன்றாகப் பிடித்துவிட்டு ஒவ்வொன்றாக விடுவித்தது.

அதிராவின் அம்மா பின்னால் நடந்துவந்தார். இருக்கையைப் பிடிக்காமல், தேவைப்பட்டால் பிடித்துவிடத் தயாராக ஒரு கையை நீட்டியிருந்தார்.

“மெதுவாகப் போ, அதிரா,” என்றார் அம்மா.

அதிரா அவனைப் பார்த்ததும் மிதியை நிறுத்தினாள். வண்டி ஒரு பக்கம் சாய்ந்தது. உடனே காலைத் தரையில் ஊன்றினாள்.

“நீ இங்கே என்ன பண்றே?”

அவன் கையிலிருந்த காகிதத்தை மடித்தான்.

“ஒண்ணுமில்ல.”

அவள் குளத்தை எட்டிப் பார்த்தாள். மீதமிருந்த பருக்கைகளுக்காக மீன்கள் மேற்பரப்பில் திரண்டிருந்தன.

“அட, இவ்வளவு மீன்களா!” என்றாள் அதிரா.

அதிராவின் அம்மா அருகே வந்தார்.

“ரொம்ப அருகில் போகாதே, அதிரா. தண்ணீர் அழுக்கா இருக்கு,” என்றார்.

அதிரா மிதிவண்டியை நேராக்கினாள்.

“நான் சைக்கிள் ஓட்டக் கத்துக்கிட்டேன். நாளைக்கு தனியா ஓட்டிக் காட்டுறேன்.”

“இங்கே வருவியா?”

“வரலாம்.”

“எத்தனை மணிக்கு?”

அவள் தோளை உயர்த்தினாள்.

“அம்மா கூட்டிட்டு வந்தா.”

அவர்கள் சென்ற பிறகும் மணிச்சத்தம் சிறிது தூரம் கேட்டது. பின்னர் வாகனங்களின் இரைச்சலில் கரைந்தது.

அவன் குளத்தருகே குந்தி மீதமிருந்த பருக்கைகளை ஒவ்வொன்றாகப் போட்டான்.

“நாளைக்கு அவ வருவா. நான் கை காட்டினதும் எல்லாரும் ஒரே நேரத்துல வரணும்.”

கிழிந்த துடுப்பு மற்றவற்றின் நடுவே தோன்றி மறைந்தது.

“முதல்ல நீ. அப்புறம் பெரியவங்க. கடைசியா சின்னவங்க.”

உணவு தீர்ந்ததும் மீன்கள் ஒவ்வொன்றாகக் கீழே இறங்கின. நீர் மறுபடியும் வானத்தை மூடிக்கொண்டது. கிழிந்த துடுப்பு மட்டும் கரையருகே இன்னொரு கணம் நின்றது.

அவன் அதனிடம் மிக மெதுவாகச் சொன்னான்:

“அவளுக்கு முன்னாடி என்னை அவமானப்படுத்தாதீங்க.”

மீன் வாலை அசைத்தது. சிறிய வட்டம் ஒன்று நீரில் தோன்றி அவனுடைய முகத்தைத் தொட்டுப் பெரிதானது.

அடுத்த நாள் அதிரா வருவதற்கு முன்பே அவன் படையைத் தயார்படுத்தினான். வழக்கத்தைவிட அதிகமான ரொட்டித்துண்டுகள் இருந்தன. பாட்டி அவற்றைப் பழைய செய்தித்தாளில் சுற்றிக் கொடுத்திருந்தாள். துண்டுகளைப் பிரித்தான்—தளபதிக்கு ஒன்று, காவலர்களுக்கு இரண்டு, மீதம் சிறிய வீரர்களுக்கு.

“இன்னைக்குச் சண்டை போடக்கூடாது.”

ஒரு மீன் மட்டும் மேலே வந்து வாயைத் திறந்தது.

“அவள் வந்த பிறகுதான்.”

அது மறைந்தது. கிழிந்த துடுப்புடைய மீன் கரையை நெருங்கியதும் அதற்கு மட்டும் ஒரு துண்டைப் போட்டான்.

“அவள் வந்ததும் முதல்ல நீ வரணும்.”

மற்ற மீன்கள் பொட்டலத்தின் நிழலுக்குக் கீழே திரண்டன.

சைக்கிள் மணியின் ஒலி கேட்டது.

அதிரா சாலையோரத்தில் நின்றிருந்தாள். அவளுடைய அம்மா மிதிவண்டியின் இருக்கையைப் பிடித்திருந்தார்.

“பிரேக்கை அழுத்து,” என்றார் அம்மா.

அதிரா பிரேக்கை அழுத்தினாள். வண்டி திடீரென நின்றதால் அவளுடைய உடல் மட்டும் சிறிது முன்னால் சென்றது. உடனே காலைத் தரையில் ஊன்றி நிமிர்ந்தாள்.

“நான் விழலையே,” என்றாள் அதிரா.

 “கைப்பேசிக்கு முன்பண அட்டை வாங்கிக்கொண்டு வருகிறேன். இங்கேயே இரு. குளத்தருகே போகாதே. மிதிவண்டியில் ஏறாதே,” என்றார்.

அதிரா தலையசைத்தாள். அம்மா கடைக்குள் சென்றதும் ஒருமுறை திரும்பிப் பார்த்தார். அதிரா கைப்பிடியைப் பிடித்தபடி அங்கேயே நின்றிருந்தாள். கண்ணாடிக்கு அப்பால் அம்மா காசாளர் வரிசையில் நின்றதும், அவள் அவனைப் பார்த்தாள்.

இருக்கையில் அமரவில்லை. மிதிவண்டியை இரு கால்களுக்கும் நடுவே வைத்துக்கொண்டு, தரையைத் தள்ளி மிதிவண்டியை மெதுவாக அவனருகே கொண்டுவந்தாள்.

“நான் வந்துட்டேன்.”

“இறங்கு,” என்றான்.

“எதுக்கு?”

“மீன் பயப்படும்.”

அதிரா மிதிவண்டியைப் பழைய டயரருகே சாய்த்துவிட்டு கரையை நெருங்கினாள். நீரைக் குனிந்து பார்த்தாள்.

“எங்கே மீன்?”

“காத்திரு.”

“ஒண்ணுமே இல்லையே.”

அவன் பொட்டலத்திலிருந்து ஒரு ரொட்டித்துண்டைப் பிய்த்து வலது உள்ளங்கையில் நசுக்கிக்கொண்டான். பொட்டலத்தை இடது கையால் முதுகுக்குப் பின்னால் மறைத்துவிட்டு, கால்களைத் தரையில் பதித்து வலது கையை உயர்த்தினான்.

“அபயஸ்தம்.”

விரல்களைச் சிறிது தளர்த்தினான். உள்ளே நசுங்கியிருந்த ரொட்டித்துகள் நீர்மேல் உதிர்ந்தன.

முதலில் ஒரு வாய் திறந்தது. அதைச் சுற்றி இன்னும் சில. சில கணங்களில் கரையோர நீர், முதுகுகளாலும் வால்களாலும் கிழிக்கப்பட்டது. ரொட்டிக்காக அவை ஒன்றின்மேல் ஒன்று மோதின.

“அட!” என்றாள் அதிரா. “நிறைய இருக்கு!”

அவன் உயர்த்திய கையை உடனே இறக்கவில்லை.

“என்னோட படை.”

அவள் சிரித்தாள்.

“அவங்களுக்கு உன்னைத் தெரியுமா?”

“தெரியும்.”

கிழிந்த துடுப்புடைய மீனைத் தேடி, அதற்காக வைத்திருந்த துண்டை வீசினான்.

“அதுதான் தளபதி.”

“எது?”

“அந்தக் கறுப்பு மீன். முதுகுல கிழிஞ்சிருக்கு பாரு.”

மீன் உடலைத் திருப்பியபோது கிழிந்த துடுப்பின் ஓரம் ஒரு கணம் நீருக்கு மேலே தெரிந்தது.

“பாவம்,” என்றாள் அதிரா. “அதுக்குக் காயமா?”

“போர்ல பட்டது.”

“எந்தப் போர்?”

அவன் கிழிந்த துடுப்பை மீண்டும் தேடினான். கரிய முதுகு நீருக்குள் மறைந்திருந்தது.

“நானும் சாப்பாடு போடவா?”

பொட்டலத்தை இறுகப் பிடித்தான். பிறகு மிகச் சிறிய துண்டை மட்டும் அவளுக்குக் கொடுத்தான்.

அதிரா அதை நீரில் போட்டாள். எல்லா மீன்களும் அவள் எறிந்த இடத்துக்கு ஓடின.

தளபதியும்.

“பாரு,” என்றாள். “என்கிட்டயும் வருது.”

“நான் சொன்னதால.”

“ரொட்டி இல்லாம கூப்பிடு.”

“முடியும்.”

அதிரா சிறிது நேரம் அவனைப் பார்த்தாள். பிறகு அவனைப் போலவே வலது கையை உயர்த்தினாள்.

“அபயஸ்தம்.”

ஒரு பெரிய மீன் மேலே வந்து நீரை அடித்தது. சில துளிகள் அவளுடைய கன்னத்தில் பட்டன. அவள் சிரித்தாள்.

“எனக்கும் கேட்குதே,” என்றாள்.

“அப்படிச் சொல்லாதே,” என்றான்.

“ஏன்?”

“அது என்னோடது.”

“வார்த்தை எப்படி உன்னோடது?”

அவன் பொட்டலத்தை இறுகப் பிடித்தான். காகிதத்துக்குள் ரொட்டி நசுங்கியது. நசுங்கிய பொட்டலத்தை இடது கால்சட்டை பைக்குள் திணித்தான்.

அதிரா மிதிவண்டியை நோக்கித் திரும்பினாள்.

“இப்ப நான் ஓட்டிக் காட்டுறேன்.”

“வேண்டாம். உன் அம்மா சொன்னாங்க.”

“கொஞ்ச தூரம்தான்.”

அதிரா குளத்துக்கும் நிலையத்தின் பின்சுவருக்கும் இடையே சென்ற குறுகிய தார்ப்பாதையைக் காட்டினாள்.

“விழுந்துடுவ.”

“எனக்கு ஓட்டத் தெரியும்.”

அவள் ஒரு காலை மிதியில் வைத்து, மற்றொரு காலால் தாரைத் தள்ளினாள். முதல் சில மிதிகளில் கைப்பிடி இருபுறமும் அசைந்தது. வேகம் கூடியதும் முன்சக்கரம் பாதையின் நடுவில் நேரானது.

“பாரு!” என்று திரும்பிப் பார்த்தாள்.

“முன்னாடி பாரு.”

வலது காலணியின் அவிழ்ந்திருந்த நாடா மிதியின் அச்சைச் சுற்றிக்கொண்டது. அவள் இன்னொரு முறை மிதித்தபோது நாடா இறுகியது; பற்சக்கரத்தின் பற்கள் அதனோடு கால்சட்டையின் கீழ் ஓரத்தையும் கவ்விக்கொண்டன.

மிதி பாதி வட்டத்தில் நின்றது. மிதிவண்டி நின்ற இடத்தில் அவளுடைய உடல் நிற்கவில்லை. வலது முழங்கால் தாரில் மோதியது. மிதிவண்டியின் ஃப்ரேம் அவளுடைய காலின்மேல் சாய்ந்தது. காற்றில் உயர்ந்திருந்த பின்சக்கரம் இரண்டு முறை சுழன்று நின்றது.

“என் காலை எடு!” என்று அதிரா கதறினாள்.

அவன் கால்சட்டைப் பைக்குள் கையை விட்டு மின்கலத்தைப் பிடித்தான்.

“அபயஸ்தம்.”

இந்த முறை அவனுடைய கால்கள் நகர்ந்தன. அவன் ஓடினான்.

மிதிவண்டி ஃப்ரேமைப் பிடித்து மேலே தூக்க முயன்றான். பின்புறம் மட்டும் உயர்ந்தது; முன்புறம் அவளுடைய கணுக்காலின்மேல் மேலும் அழுந்தியது.

“அசையாதே,” என்றான்.

“வலிக்குது.”

அவன் ஃப்ரேமை விட்டுவிட்டு, அவளுடைய வலது காலணியை இரு கைகளாலும் பிடித்தான்.

“நான் இருக்கேன்.”

அவன் காலணியை இழுத்தான்.

“நிறுத்து!” என்று அவள் அலறினாள்.

“இப்ப வந்துடும்.”

காலணியை இன்னொரு முறை இழுத்தான்.

“என் காலை விடு!”

கால்சட்டையின் ஓரம் சங்கிலிக்குள் சுருண்டிருந்தது. காலணியை மேலே இழுத்தபோது கணுக்காலில் உரசிய தோல் தெரிந்தது. இரண்டு இடங்களில் ரத்தம் சிறு மணிகளாகத் திரண்டு நின்றது.

“என்னைத் தொடாதே!”

அவள் அவனுடைய கையைத் தள்ளினாள். அவன் மீண்டும் பிடித்தான்.

எரிபொருள் நிலையத்தின் கடையிலிருந்து ரஹீம் கத்தரிக்கோலுடன் ஓடிவந்தார். அதிராவின் அம்மா அவருக்குப் பின்னால் வந்தார்.

“தம்பி, விலகு! அவள் கால் சங்கிலியில் சிக்கியிருக்கிறது,” என்றார் ரஹீம்.

“வராதே! நானே எடுக்கிறேன்.”

“விலகு. நான் உதவுகிறேன்.”

ரஹீம் அவனுடைய மணிக்கட்டுகளைப் பிடித்து அதிராவின் காலிலிருந்து பிரித்தார். அவனைப் பக்கமாக நகர்த்தியபோது அவன் தடுமாறி இரு முழங்கால்களிலும் விழுந்தான். பையிலிருந்த மின்கலம் தாரில் நழுவி, கீழே சாய்ந்திருந்த மிதிவண்டியின் சங்கிலியைத் தொட்டு நின்றது.

அதிராவின் அம்மா அவளருகே மண்டியிட்டு, அவளுடைய தோள்களைத் தன்னிடம் சாய்த்துக்கொண்டார். ரஹீம் ஒரு கையால் மிதிவண்டி ஃப்ரேமை அசையாமல் பிடித்தார். மற்றொரு கையால் கத்தரிக்கோலின் நுனியைக் காலணிக்கும் இறுகிய நாடாவுக்கும் நடுவே நுழைத்து வெட்டினார். பற்சக்கரத்தில் மடங்கியிருந்த கால்சட்டையின் ஓரத்தையும் வெட்டினார்.

“இப்ப மெதுவா கால வெளியே எடு,” என்றார் ரஹீம்.

அதிரா குதிகாலைத் தாரில் ஊன்றி, காலை மெதுவாகப் பின்னால் இழுத்துக்கொண்டாள். அவளுடைய அம்மா அவளைத் தன்னோடு அணைத்துக்கொண்டார்.

அவன் உள்ளங்கைகளைத் தாரில் ஊன்றி எழுந்தான். அதிராவின் கால் விடுபட்டிருப்பதைப் பார்த்ததும் அவளை நோக்கி ஓரடி வைத்தான்.

அதிரா காயமுற்ற காலை உடலோடு மடக்கிக்கொண்டு, அம்மாவின் இடுப்பை இறுகப் பற்றினாள். அவள் முகத்தை அம்மாவின் உடலுக்குப் பின்னால் ஒதுக்கினாள்; பார்வை மட்டும் அவனுடைய கைகளிலிருந்து விலகவில்லை.

அவன் கைகளை உடலருகே இழுத்துக்கொண்டான்.

“அந்தக் காலை ஊன்றாதே. கிளினிக்குப் போகலாம்,” என்றார் ரஹீம்.

அதிராவின் அம்மா அவளுடைய ஒரு கையைத் தன் தோள்மீது போட்டுக்கொண்டு, காயமுற்ற கால் தரையைத் தொடாதபடி கடையை நோக்கி நடத்திச் சென்றார். அதிரா திரும்பிப் பார்க்கவில்லை.

ரஹீம் மிதிவண்டியைத் தூக்கிச் சுவரோரமாக நிறுத்தினார். தாரில் கிடந்த மின்கலம் தெரிந்தது. வெள்ளி உடலின் ஒருபுறம் சங்கிலி எண்ணெய் கருமையாக ஒட்டியிருந்தது.

அவன் அதைப் பார்த்துவிட்டு குளக்கரைக்குச் சென்றான். முன்பு ரொட்டி வீசிய இடத்தில் நீர் அசைவின்றிக் கிடந்தது.

அவன் வலது கையை உயர்த்தினான்.

“அபயஸ்தம்.”

கையின் நிழல் நீர்மேல் நீண்டது. அதன் கீழே எந்த வாயும் திறக்கவில்லை.

இடது கால்சட்டை பைக்குள் செய்தித்தாளின் ஓரம் உறுத்தியது. ரொட்டிப் பொட்டலம் தட்டையாக நசுங்கி, அதன் மடிப்பு ஒன்று கிழிந்திருந்தது. அதை விரித்தபோது மிகச் சிறிய ரொட்டித் துகள்கள் அவனுடைய விரல்களிலிருந்து நீரில் உதிர்ந்தன.

ஒரு சிறிய மீன் ஆழத்திலிருந்து மேலே வந்து முதல்  துகளை விழுங்கியது. மேலும் சில உடல்கள் அதைத் தொடர்ந்து வந்தன. அவை உயர்த்தப்பட்டிருந்த கையின் நிழலைக் கடந்து, ரொட்டித் துகள்கள் விழுந்த இடங்களில் கூடின.

கிழிந்த துடுப்புடைய கரிய மீனும் அவற்றுக்கிடையே மேலே வந்தது. மிதந்துகொண்டிருந்த கடைசித் துகளை நெருங்கியது.

“தளபதி,” என்றான்.

அது திரும்பவில்லை. துகளை விழுங்கியதும் அதன் கிழிந்த துடுப்பு நீரை ஒருமுறை அடித்தது. கரிய உடல் ஆழத்தில் மறைந்தது.

அவன் உயர்த்தியிருந்த கையை இறக்கினான். செய்தித்தாளை உள்ளங்கைக்குள் சுருட்டிக்கொண்டு கரையிலிருந்து திரும்பினான்.

மின்கலம் இன்னும் தாரில் கிடந்தது. அதன் அருகே ஒரு கணம் நின்றுவிட்டு அவன் நடந்தான்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...