ஆகூழ்: வரலாற்றுக்குள் சிக்கிக்கொண்ட கலை

வரலாறு எப்பொழுதுமே தன்னியல்பாக உருவாவதில்லை. கண்ணுக்குத் தெரிந்த அமைப்பு மாற்றங்கள், வரலாற்றுக் காரணங்கள், நிகழ்வுகள் தொடங்கி அறியப்படாத நுண்கண்ணிகளான மனித உணர்வுகள், உளவியல் எனப் பலவற்றுடன் தொடர்புடையதாகவே வரலாறு இருந்து வந்திருக்கின்றது. வரலாற்றாய்வாளர்கள் ஒருவகையில் வரலாற்றைத் தர்க்கப்படுத்திக் கொண்டிருக்கையில் புனைவாசிரியன் அதற்குள் அறியப்படாத வெளிகளை நோக்கிப் பயணிக்கிறான். அந்தப் பயணத்தை வெறும் தகவல்களின் துணைகொண்டு மட்டும் நிகழ்த்த முடிவதில்லை. அதற்குள் மனித வாழ்வின் வெவ்வேறு வண்ணங்களைக் கண்டறியும் அறச்சார்பும் துணிவும் சேரும் போதுதான் அதன் முழுமை கூடுகிறது. அப்படியாக இடதுசாரிப் போராட்ட வரலாற்றுப் பின்னணியின் வெவ்வேறு கண்ணிகளை இணைக்கும் முயற்சியாகத்தான் சிங்கப்பூர் எழுத்தாளர் ரமா சுரேஷின் இரண்டாவது நாவலான ‘ஆகூழ்’ நாவல் அமைந்திருக்கிறது.

‘ஆகூழ்’ நாவல் சிங்கப்பூரில் தொடங்குகிறது. இளவயது மலாயா கணபதி பிழைப்பு தேடி தன் மாமாவுடன் கப்பலில் சிங்கப்பூருக்குப் பயணம் செய்வதிலிருந்து நாவல் தொடங்குகிறது. அந்தப் பயணத்தில் சிங்கப்பூருக்கு வரும் ஈ.வெ.ரா பெரியாரை இளம் கணபதி கண்டு பேசுகிறான். அங்கிருந்து மலாயா கணபதி ஒரு தொழிற்சங்கவாதியாகவும் போராளியாகும் சுருக்க வரலாறு நாவலின் முற்பகுதியில் சொல்லப்படுகிறது. அதன் பிறகு, கணபதியினுடைய பாசறையில் பட்டை தீட்டப்படும் இளைஞர்களில் ஒருவனான வெங்கடாசலம் எனப்படும் இரணியன் காட்டப்படுகிறான். இரணியனும் கணபதி மற்றும் வீரசேனனுடன் இணைந்து தொழிலாளர் உரிமைக்காகப் போராடுகிறான். அங்கிருந்து நாவல் 1947க்குப் பிந்தைய காலக்கட்டத்தில் பயணிக்கத் தொடங்குகிறது. மலாயா தொழிலாளர் வரலாற்றின் இன்னொரு சுருக்க வரலாறு தரப்படுகிறது. இரணியன் தமிழ்நாட்டின் ஆம்பலாப்பட்டு கிராமத்துக்குச் செல்வதும் அங்கு தொடங்கும் இன்னொரு போராட்டத்துக்கான காரணங்களையும் நாவல் சொல்லத் தொடங்குகிறது. ஆம்பலாப்பட்டு கிராமத்தைச் சுற்றிலும் இருந்த வேளாண் நிலங்கள் மதுக்கூர் ஜமினுக்கு உரிமையானவையாக இருக்கின்றன. காவிரி ஆற்றுப்பாசனம் ஊருக்கு வந்ததும் ஆங்கிலேயர்களும் ஜமிந்தாரும் நிலங்களில் இருந்து ராயத்து வரி என்ற பெயரில் அளவுக்கதிகமான தானியங்களை அள்ளிச் செல்கின்றனர். அதனை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நிகழ்த்துகின்றனர். அந்தப் போராட்டத்தை முன்னிட்டு ஊரில் விவசாய சங்கம் அமைக்கப்படுகிறது. இடதுசாரி தோழர்கள் நிலத்தை எல்லாருக்குமானதாக ஆக்கும் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். அந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக அரசு வன்முறையை மக்கள் மீது கட்டவிழ்த்து விடுகிறது. அரசுக்குப் போராளிகளைப் பற்றி தகவல் கொடுத்த சாம்பசிவ ஐயரை மிரட்டுவதற்காய் அவருடைய வீட்டைப் போராளிகள் சூறையாடுகின்றனர். அந்தக் குற்றச்சாட்டின் காரணமாக அரசு மலபார் சிறப்பு காவல் பிரிவை ஊருக்குள் அனுப்பி வைக்கிறது.

அவர்களிடமிருந்து தப்புவதற்காக இரணியனும் அவனுடைய தோழர்களும் காட்டில் பதுங்குகின்றனர். அப்படிப் பதுங்குகின்ற இளைஞர்களில் முக்கியமானவனாக காசிநாதன் காட்டப்படுகிறான். காசிநாதனிலிருந்து நாவல் ஒரு குடும்ப மற்றும் சமூக வரலாற்றுப் பின்னணிக்குத் தாவுகிறது. காசிநாதன் சேர்ந்த மணிபூண்டார் எனும் சாதி உட்பிரிவின் தொன்மத்திலிருந்து தொடங்கி நான்கு தலைமுறை வரலாற்றை இன்னொரு கண்ணியாகச் சொல்லத் தொடங்குகிறது. காசிநாதனின் தந்தை வழிபாட்டியான மாரியம்மா (மணியமூட்டு அப்பாயி) அத்தையான நாவம்மாவும் ஊரையும் போராளிகளையும் காப்பவர்களாகக் காட்டப்படுகின்றனர். ஆண்களின் போராட்டமாகவே காட்டப்பட்டதில் பெண்களின் பங்கு என்னவாக இருந்தது என்பது இன்னொரு சரடாக இணைகிறது. அந்தப் போராட்டம் இரணியனின் சுட்டுக்கொல்லப்பட்டுப் போராளிகள் கைது செய்யப்பட்டுச் சிறைவாசம் அனுபவிப்பதில் முடிவடைகிறது. அதன் பிறகு, நாவல் ஆம்பலாப்பட்டின் சமகாலச் சூழலில் அதன் இடதுசாரி வரலாற்றுப் பெருமை எனும் சுமையைத் தக்கவைக்க முடியாமல் திண்டாடும் சூழலுடன் நெடியப் போராட்டம் விட்டுச் சென்ற தடத்தையும் சொல்லி நிறைவடைகிறது.

புனைவும் வரலாறும்

‘ஆகூழ்’ நாவல் பயணிக்கும் தடம் என்பது பல பட்டைகளால் ஆனது. சிங்கப்பூர், மலாயாவின் தொழிற்சங்க வரலாறு, ஆம்பலாப்பட்டு இடதுசாரி போராட்ட வரலாறு, மணிபூண்டார் பிரிவுடன் தொடங்கி காசிநாதனின் குடும்பப்பின்னணியுடன் சேரும் வரலாறு என அடுத்தடுத்துச் சேரும் பல வரலாற்றுக் கண்ணிகளால் ஆனது. இந்த அடுக்கடுக்கான வரலாற்றிலிருந்து நாவாலசிரியர் கட்டமைக்கும் சித்திரம் குறித்த கேள்வி எழுகிறது. வரலாற்றுச் சம்பவங்கள், தகவல்கள் ஆகியவற்றிலிருந்து வரலாற்று உணர்வு அல்லது பிரக்ஞையை நாவலாசிரியர் தனித்த கண்டடைவாக முன்வைக்கிறார். அப்படியான வரலாற்றுணர்வு ‘ஆகுழ்’ நாவலில் நிகழவில்லை. நாவல் பேசும் வரலாற்றுக் களங்கள் தாவித்தாவி செல்கின்றன. சிங்கப்பூரில் கணபதி, தொழிற்சங்க வரலாற்றிலிருந்து தொடங்கி தமிழ்நாட்டுக்குத் தாவுகிறது. அங்கிருந்து வாட்டாக்குடி, இரணியன் வரலாறு தொடங்கி முடிகிறது. அதிலிருந்து காசிநாதன் வழியாக மணியமூட்டு அப்பாயியின் குடும்ப வரலாற்றைச் சொல்கிறது. இந்த வரலாறு ஒவ்வொன்றும் தனித்தனியாகப் பிரிந்தே காணப்படுகின்றது.

 நாவல் பேசும் வரலாற்றுக் களங்களில் தன்னளவில் முழுமையாக விளங்குவது காசிநாதனின் குடும்ப வரலாறே. ஆம்பலாப்பட்டு கிராமம் உருவாகி வந்த தொன்மத்திலிருந்து தொடங்கி காசிநாதனின் முன்னோர் கொலைப்பழியின் காரணமாய் ஆம்பலாப்பட்டுக்குப் புலம்பெயர்ந்து வாழத் தொடங்குகின்றனர். அங்கிருந்து நிலத்தில் மெல்ல காலூன்றி ஊர் நிலங்களைக் கையகப்படுத்துகின்றனர். காசிநாதனின் தந்தை திருமேனியின் காலத்தில் ஊரையே தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவரும்படி நிலவுடைமையை விரிவாக்குகிறான். புலம்பெயர்ந்து வந்த நிலத்தில் உடைமையைப் பெருக்கி அதிகாரவர்க்கமாக மாறும் வரலாறு நாவலில் பதிவாகின்றது. அங்கிருந்து நாவல் சுவாரசியமான வரலாற்று முரணொன்றை முன்வைக்கிறது. நான்காவது தலைமுறையைச் சேர்ந்த காசிநாதன் தன்னுடைய முன்னோர் வழியிலிருந்து விலகி இடதுசாரி போராட்டத்துக்குள் ஈடுபடுகிறார். அதிலிருந்து, முன்னோர்கள் சேர்த்த நிலங்கள் ஒவ்வொன்றையும் நிலமற்றவர்களுக்கும் உறவினர்களுக்கும் கையளிக்கிறார். இறுதியாக, அவரிடம் எஞ்சுவது என்ன என்ற கேள்வி எழுகிறது. அந்தப் பகுதியை, இடதுசாரி போராட்ட வரலாறு சமகாலத்தில் ஆம்பலாப்பட்டில் வெறும் அடையாளமாக மட்டும் எஞ்சுவதன் அபத்தத்தைச் சொல்லி நாவல் கடந்து போகிறது. இவ்வாறாக, நாவல் பேசும் வரலாற்றுக் களங்கள் முழுமை கூடாமல் போயிருக்கிறது.

வரலாற்றுப் புனைவு எப்பொழுதுமே கற்பனைக்கும் புனைவுக்கும் இடம் தரக்கூடியது. ரமாவும் மலாயா கணபதி மற்றும் இரணியனின் வரலாற்றின் சில மங்கலான பக்கங்களில் புனைவு சுதந்திரத்தை எடுத்துக் கொள்கிறார். கணபதிக்கும் இரணியனுக்கும் சிங்கப்பூரில் இருந்ததாகச் சொல்லபப்டும் காதலிகளும் காதல் கதைகளும் அத்தகையவை. வரலாற்று மனிதர்கள் என்பதாலே அவர்கள் ஒருவகையான இறுக்கத்தோடு படைக்கப்படாமல் காதல் ஆகிய உணர்வுகள் கொண்டவர்களாகப் படைக்கப்பட்டிருப்பது ஒரு நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆனாலும், காதல் மொழிகள் என்பதைத் தாண்டி இன்னுமே விரிவு காண வேண்டிய பகுதிகளாகவே அவற்றைக் காண முடிகின்றது.

வரலாறும் நம்பகமும்

‘ஆகூழ்’ நாவல் பயணிக்கும் காலக்கோடு என்பது வெளிப்படையானது. மலாயாவில் நிகழ்ந்த முதலாவது பெரியார் வருகை, மலாயா கணபதியின் காலம், வாட்டாக்குடி கலகம், இரணியன் வரலாறு என எல்லாவற்றையும் தெளிவான காலக்கோட்டுடன் பொருத்திப் பார்க்க முடியும். அந்தக் காலக்கோட்டில் நிகழ்ந்த சில பிசகுகளை நாவலில் காண முடிந்தது. உதாரணத்துக்கு, இளவயது கணபதி சிங்கப்பூருக்கான கப்பல் பயணத்தில் பெரியாரைச் சந்தித்து உரையாடும் காட்சியைக் குறிப்பிடலாம். முதலாவது பெரியாரின் மலாயா வருகை 1929-ஆம் ஆண்டு நிகழ்கிறது. அந்தக் காலக்கட்டத்தில் கணபதி வாலிப வயதை அடைந்திருப்பார் என்றே அவரின் பிறப்பு குறித்து கிடைக்கும் சான்றுகளின் வழி அனுமானிக்க முடிகிறது. ஆனால், அதற்கு மாறாக நாவல் கணபதியைப் பால்யப்பருவத்தினனாக உருவகிக்கிறது. அடுத்ததாக, நாவல் நிகழும் வெவ்வேறு களங்களுக்கு வலு சேர்ப்பது அதில் புழங்கும் மொழியே. இந்த நாவல் மூன்று மொழிகளைக் கையாள்கிறது. முதலாவதாக, மலாயா மற்றும் சிங்கப்பூரில் கைகொள்ளப்படும் மொழி. அடுத்ததாய், ஆம்பலாப்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கைகொள்ளப்படும் வட்டார வழக்கு. இறுதியாக, நாவல் பேசும் கம்யூனிச சித்தாந்ததைப் பேசும் எழுத்து வழக்கு மொழி. இதில், மலாயா, சிங்கப்பூரில் 1940களில் கையாளப்பட்டதாய்ச் சொல்லப்படும் மொழிநடை என்பது சற்று அந்நியமானதாகவே இருக்கிறது. ஆனால், புனைவாசிரியராக ரமாவின் தேர்ச்சி வெளிப்படுவது ஆம்பலாப்பட்டு வட்டார நடையில்தான். அந்த நடையின் மீது கொண்ட பரிட்சயத்தால் மட்டும் அவருக்கு அது சாத்தியப்பட்டிருக்கவில்லை. அந்த மொழியைக் கொண்டு அவர் நிகழ்த்தும் சில சித்திரங்கள் அபாரமானவையாக இருக்கின்றன. உதாரணத்துக்கு, சாம்பசிவ ஐயரின் வீட்டுக்கு மிரட்ட செல்கின்ற இரணியன் மற்றும் அவனது கூட்டாளிகள் தங்களுக்குள் உரையாடிக் கொள்கின்ற இடத்தைக் குறிப்பிடலாம். அந்த வீட்டுக்குள் நுழையும் பயணத்தை முன்னின்று வழிநடத்தும் வாஸ்தா ஐயாவின் துணிச்சல், வீட்டுப் பெண்களைப் பார்த்ததும் அடையும் நிதானம், ஐயர் மனைவியின் எகத்தாளப் பேச்சைக் கேட்டதும் ஏற்படும் பயத்துடன் கூடிய ஆவேசம் ஆகியவைச் சிறப்பாகக் காட்டப்பட்டிருக்கிறது. அப்படியாக, அந்தச் சில அசாதாரணத் தருணங்களில் அம்மொழி என்னவாக வெளிப்படுகிறது என்பதை ரமா சிறப்பாகக் காட்டியிருக்கிறார். அடுத்ததாக, நாவல் பேசும் கம்யூனிச சித்தாந்த உரையாடல்கள் எல்லாமே வெறும் மேற்கோள்களாக நின்றுவிடுகின்றன. அவற்றை இருவர் ஒர் உரையாடலில் பேசிக்கொண்டாலும் அதற்கான நம்பகம் முழுமையாகக் கைகூடவில்லை.

மொழியைப் போலவே, மலாயா மற்றும் சிங்கப்பூரின் தொழிற்சங்கப் போராட்டங்களும் பல இடங்களில் வெறும் தகவல்களாகவே கடந்து செல்லப்படுகின்றன. உதாரணத்துக்கு, பக்கம் 246 இல் சுங்கை சிப்புட் பகுதியில் நடந்த கம்யூனிச கிளர்ச்சியை // இப்ப நீங்க சொல்லும் பிரச்சன சுங்கே சிப்புட்ங்கிற இடத்துல…..பிரச்சன// என உரையாடலில் சொல்லப்படுகிறது. இதைப் போலத்தான் கணபதியின் தொழிற்சங்கப் போராட்டங்களும் சொல்லப்படுகின்றன. இவ்வாறாக அனுபவங்களாகாமல் தகவல்களாகவே நின்றுவிடுகின்ற சித்திரிப்புகள் அதிகமும் மலாயா மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்தவையாகவே இருக்கின்றன.

வாசக இடைவெளியை அபகரிக்கும் ஆசிரியரின் குரல்

‘ஆகூழ்’ நாவலின் பல பகுதிகள் ஆசிரியரின் நேரடிக்குரலாகவே ஒலிக்கிறது. நாவலின் இறுதிப்பகுதியில் இடதுசாரிப் போராட்டம் காசிநாதனுக்குள் எஞ்சவைத்தது என்ன என்ற கேள்வியை நோக்கி நாவல் நகர்கிறது. தன்னுடைய இளமைக்காலத்தை இடதுசாரிப் போராட்டத்துக்காய் அர்பணித்தவராக காசிநாதன் சித்திரிக்கப்படுகிறார். அத்துடன், தன்னுடைய முன்னோர்கள் கட்டி எழுப்பிய மிகப் பரந்த நிலவுடைமையை எல்லாருக்கும் விட்டுக்கொடுத்து எளிமையான வாழ்க்கைக்குள் வாழ்கிறார். அந்தச் சூழலில், வாழ்வின் அந்திமத்தில் இடதுசாரி சித்தாந்த பிணைப்பு அவருக்குள் விட்டுச் சென்றது என்ன என்ற கேள்வியெழுவது இயல்பானதாகவே இருக்கின்றது. அந்தக் கேள்விக்கான பதிலாக வருமிடமெல்லாம் ஆசிரியரின் நேரடிக் குரலே ஒலிக்கிறது. காசிநாதனின் நெடிய வாழ்வை அனுபவமாக்கி அதன் வழி வாசகனே சென்று தொடும் இடத்தை ஆசிரியர் தன்னுடைய நேரடி குரலால் இட்டு நிரப்பிவிடுகிறார்

பெண்களின் வார்ப்பு

‘ஆகூழ்’ நாவல் ஆம்பலாப்பட்டு கிராமத்தில் நடந்த இடதுசாரி போராட்டத்தையே மையப் பின்னணியாகக் கொண்டது. அந்தப் போராட்டத்தை முன்னெடுத்த இரணியன் மற்றும் அவரது தோழர்கள்தான் நாவலின் பாத்திரங்கள். அவர்களது போராட்டத்தின் பின்னணியிலிருந்த பெண்களை நாவல் பேசுகிறது. எப்பொழுதுமே வரலாற்றில் ஏதேனும் பங்களித்த மனிதர்களையே புனைவுகள் முன்னிலைப்படுத்தும். அதிலிருந்து வெளியேறி எளிய மனிதர்களைக் கதைமாந்தர்களாக்கிய நாவல்களும் இருக்கின்றன. ஆனால், இந்த நாவல், அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற பெண்களைப் பற்றி பேசுகிறது. ‘ஆகூழ்’ நாவலின் மிகமுக்கியமான சிறப்பாக அதனையே குறிப்பிட முடியும். அந்தப் பெண்களின் பாத்திர வார்ப்பும் சித்திரிப்பும் ‘ஆகூழ்’ நாவலின் முதன்மைப் பலம். குறிப்பாக மாரியம்மா அல்லது மணியமூட்டு அப்பாயி மற்றும் நாவம்மா பாத்திரம். இடதுசாரி போராட்டத்தின் மையமென்பது தொழிலாளர் அல்லது ஒடுக்கப்பட்ட மக்களுக்கானதாக இருக்கின்றது. ஆம்பலப்பட்டு கிராமம் என்பது குறிப்பிட்ட சமூகத்தவர் அதிகம் வாழும் கிராமம் என்பதைக் காண முடிகின்றது. ஊரின் மணியக்குடும்பத்தில் வரும் இந்த இரண்டு பெண்களுக்கும் அந்தச் சாதியப்பிடிப்பு இருக்கிறது. அதனைப் பல இடங்களில் காணமுடிகிறது. ஆனால், இடதுசாரி போராட்டம் அல்லது நிலமீட்பு போராட்டம் என்பது அடிப்படையில் அவர்களின் எண்ணங்களுக்கு அவர்கள் பழகிவந்த சமூகப்பழக்க வழக்கங்களுக்கு மாறானது. அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளும் இடத்துக்கு எப்படி வருகின்றனர் என்பது சுவாரசியமான கேள்வி. அந்தச் சுவாரசியமான கேள்வியைத்தான் ‘ஆகூழ்’ நாவல் சரியாக அணுகியிருக்கிறது.

மணியமூட்டு அப்பாயியோ அல்லது நாவம்மாவோ திருமணம் புரியும் போது அதிகாரம் செய்ய வேண்டும் என்ற வேட்கையிலே திருமணம் செய்கின்றனர். ஆனால், அவர்கள் வாழ்வில் நிகழ்ந்துவிடுகின்ற ஒரு சம்பவம் அவர்களை எல்லாருக்குமானதாகப் பங்கு போடச் செய்கின்றது. அங்கிருந்து அவர்கள் விரியத் தொடங்குகின்றனர். அந்த விரிதல் போராட்டத்தில் பங்குபெற்ற பேரன் காசிநாதனை நோக்கியும் நகர்கிறது. அவனுக்காக இன்னும் கொஞ்சம் தங்களை விட்டுக்கொடுக்கத் தயாராகின்றனர். அங்கிருந்துதான் ஒரு மானுடத்துக்கான போராட்டத்தில் இரண்டு பெண்கள் பின்னணியாகின்றனர். காலங்காலமாக இருந்துவரும் சமூக அமைப்பை எளிதில் உடைத்து மீற முடியாது. ஆனாலும், அதற்குள் ஏற்படும் சிறு உடைவுகளின் வழி உள்நுழையும் ஒரு இலட்சியத்தை நாவல் சரியாகவே காட்டியிருக்கிறது. இடதுசாரிப் போராட்டம், உலக வரலாறு என எந்த மேலதிகச் சுமையுமில்லாமல் தங்கள் குடும்பத்து ஆண்களுக்காக வரும் இடர்களைத் தாங்கி நிற்கும் பெண்களின் இயல்பான தாய்மையுணர்வை எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும் இடத்துக்குச் செல்வது நிச்சயமாய் நாவலின் தரிசனமாகவே சொல்லப்பட வேண்டும்.

‘ஆகூழ்’ நாவலில் வார்க்கப்பட்டிருக்கும் மணியமூட்டு அப்பாயி பாத்திரம் மிக வலிமையானது. அண்மைய நாவல்களில் மிக வலிமையான பெண் பாத்திரமாக மணியமூட்டு அப்பாயியின் பாத்திரம் அமைந்திருக்கிறது. நிலவுடைமைச் சாதியைச் சேர்ந்த குடும்பத்தில் பிறக்கும் மணியமூட்டு அப்பாயி நான்கு தலைமுறைகளைக் கட்டிக்காக்கும் ஆகிருதி கொண்டவளாக இருக்கின்றாள். ஆனால், பேரனான காசிநாதன் தலையெடுக்கவும் கொஞ்சம் கொஞ்சமாய் அவளின் இறுக்கம் தளரத் தொடங்குகிறது. பேரனுடன் இருக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சீனி எனும் இளைஞனின் அருகிருப்பு அவளுக்கு முதலில் ஒருவித அசூயை உணர்வை ஏற்படுத்துகிறது. ஆனால், காவல் துறைக்கு அஞ்சி காட்டில் பேரனுடன் பதுங்கி இருக்கும் சீனிக்கும் சேர்த்தே உணவிடத் துணிகிறாள். காவல் துறையினர் ஊருக்குள் போராளிகளைத் தேடி பல வீடுகளைச் சூறையாடிச் செல்கின்றனர். அந்தச் சூறையாடலில் மொத்த குடும்பமே முடங்கிப் போக உடனே தன்னை அப்பாயி மீட்டுக் கொண்டு குடும்பத்துக்கும் ஆறுதல் சொல்கிறாள். ஒரு சிதைவிலிருந்து அவள் மீளும் சித்திரம் சிறப்பாக இருக்கிறது.

அதைப் போல இந்தப் போராட்ட வரலாற்றை நீக்கிப் பார்த்தாலும் மிக நுட்பமான உளவியல் தருணங்களைக் கொண்டதாகவே நாவம்மா மற்றும் மணியமூட்டு அப்பாயியின் பாத்திரங்கள் அமைந்திருக்கின்றன. அக்காள் அமுர்தத்தின் இரண்டாவது கணவனான மலையப்பன் ஊர் பெண்களுடன் உறவு வைத்திருக்கும் இன்பவாசியாகவே நாவலில் இருக்கிறான். அவனே, நாவம்மாவையும் பலமுறை வேடிக்கையாகச் சீண்டுகிறான். முரட்டுக் குணம் கொண்ட நாவம்மாவுக்கும் மாமாவின் மீதான மெல்லிய ஈர்ப்பு இருக்கிறது. ஆனாலும், மாணிக்கத்தைத் திருமணம் செய்து கொண்ட பின்னர் அவனுடன் நல்லமுறையில் குடும்பம் நடத்துகிறாள். அவர்களுக்கு இடையிலான உறவில் எந்தக் குறையும் சொல்ல  முடியாத அளவு இருவரும் நெருக்கமான வாழ்வையே வாழ்கின்றனர். ஆனால், அமுர்தம் இறந்தபிறகு நாவம்மாவைத் தனக்குத் திருமணம் புரிந்துவைக்க வேண்டும். இல்லையென்றால், அமுர்தத்துக்கு இறுதிசடங்கு செய்யப்போவதில்லை என மலையப்பன் ஊரார் முன்னால் அறிவிக்கிறான். அந்த இடத்தில், தன்னுடைய மனைவியிடமே முடிவை விட்டுவிடுவதாய் மாணிக்கம் சொல்லிவிடுகிறான். தன்னுடைய அக்காவின் மூன்று குழந்தைகளுக்காய் மலையப்பனைக் கணவனாக ஏற்றுக்கொண்டு அவனுடன் வாழ்க்கை நடத்துகிறாள் நாவம்மா. தன்னுடைய முடிவுக்கே கணவன் விட்டுவிடுவதைக் குறையாகச் சொல்லித் தாலியை அவன் காலடியில் வைத்து வீடடைகிறாள். இந்தத் தருணம், ஒரு பெண்ணின் உளவியல் ஆழத்தைக் காட்டும் ஆழமான தருணம். ஆனால், அதனை ஆசிரியர் ஏனோ ஒரு தியாக வரலாற்றைச் சொல்வதைப் போல பின்னாளில் அக்காவுக்கும் குழந்தைகளுக்குமாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொலைத்தவள் என்றே சொல்லிவிட்டுச் செல்கிறார்.

ஐயரை மிரட்ட வீட்டுக்குள் செல்லும் ஆண்கள் ஐயரின் இரண்டாவது மனைவி திலகாவைப் பார்க்கின்றனர். முரட்டு ஆண்கள் பலர் வீட்டுக்குள் வந்து வீடு முழுமையும் தானியக்குதிர், பொருட்கள் எல்லாவற்றையும் சூறையாடுகின்றனர். அவர்கள் மீது துளி அச்சம் கூட இல்லாமல் ஊஞ்சலின் மீதமர்ந்து சவடாலாக வாஸ்தா ஐயாவிடம் பேசுகிறாள். அவளின் பேச்சும் அச்சமில்லாப் பார்வையும் சேர்ந்து அவர்களைச் சீண்டுகிறது. அவளது தாலியை அறுத்துவிட்டுச் செல்கின்றனர். அந்த ஒரு செயல்தான் பின்னாளில் அவர்கள் சிறைபடுவதற்கான காரணமாக இருக்கின்றது. சிறையில் கூட அவளின் பார்வையிலிருந்த ஆணவத்தைச் சொல்லிச் செயலை நியாயப்படுத்தவும் முடியாமல் குற்றவுணர்வும் கொள்ளமுடியாமல் வாஸ்தா ஐயர் அல்லாடுகிறார்.

ரமா சுரேஷ் எடுத்துக் கொண்டிருக்கின்ற களமும் கேள்வியும் மிக முக்கியமானது. சிங்கப்பூரில் தொடங்கும் இடதுசாரிப் போராட்டம் ஆம்பலாப்பட்டு எனும் கிராமத்துக்குள் ஊடுருவுகிறது. அங்கு நான்கு தலைமுறைகளாக நிலவுடைமைச் சமூகமாக இருந்த குடும்பத்தின் வழித்தோன்றலான காசிநாதனை வேறொரு விடுதலை நோக்கிச் செலுத்துகிறது. அந்த விடுதலையின் பெறுமதி என்ன என்பது நாவல் முன்வைக்க விரும்புகின்ற கேள்வியாக இருக்கின்றது. ஆனால், அதற்குள் பேசப்படும் வரலாற்றுக் களங்கள் தொட்டு சம்பவங்கள் ஆகியவற்றை இணைத்து வரலாற்றுப் பிரக்ஞையை நாவலால் உருவாகவில்லை. ஆம்பலாப்பட்டு எனும் கிராமமும் அதன் மனிதர்களையும் நாவலாசிரியர் ரமாவால் மிகச் சிறப்பாக உருவாக்கிக் காட்ட முடிந்திருக்கிறது. அவர்களின் வாழ்க்கையை மாபெரும் வரலாற்றுக் கண்ணியுடன் இணைக்க ரமா முயன்றிருக்கிறார். அந்த முயற்சியில் கலைரீதியிலான குறைபாடுகள் காணப்பட்டாலும் நேர்மையாகவே அமைந்திருக்கிறது என்றே மதிப்பீட வேண்டியிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...