எழுத்தாளர் ரமா சுரேஷ் சிங்கப்பூரைச் சேர்ந்த எழுத்தாளர். நாவல், சிறுகதைகள் ஆகியவற்றை எழுதியிருக்கிறார். ‘மாயா’ இலக்கிய வட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்து சிங்கப்பூர் புனைவுகள் குறித்து உரையாடல்களை முன்னெடுத்து வருகின்றார். இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு உட்லண்ட்ஸ் ஸ்டிரீட் 81, 2017 ஆம் ஆண்டு வெளிவந்தது. இவருடைய முதல் நாவலான அம்பரம் 2021 ஆம் ஆண்டு வெளிவந்து பரவலான வாசகக் கவனத்தைப் பெற்றது. சிங்கப்பூர் கலை மன்றம் வழங்கும் தமிழ்ச்சிறுகதைப் பிரிவுக்கான தங்கமுனை விருதை ரகசியம் எனும் சிறுகதைக்காக 2017 ஆம் ஆண்டு பெற்றார். ரமாவின் இரண்டாம் நாவலான ஆகூழ் 2026 ஆம் ஆண்டு வெளிவந்திருக்கிறது. காலனிய மலாயா, சிங்கப்பூர் பகுதிகளில் நடந்த இடதுசாரி போராட்ட வரலாற்றுடன் தமிழ்நாட்டில் தொடங்கிய இடதுசாரி எழுச்சியையும் இணைக்கும் பின்னணியைக் கொண்டதாக நாவல் விளங்குகிறது. அந்த நாவல் வெளியீட்டை ஒட்டியும் அவருடைய இலக்கியப் பயணம் குறித்தும் அறிந்து கொள்ள நேர்காணல் ஒன்றை மேற்கொண்டோம்.
உங்களுடைய எழுத்துப் பயணம் எங்கிருந்து தொடங்கியது?
ரமா சுரேஷ்: எனது எழுத்துப் பயணம் கதைசொல்லியாகத்தான் தொடங்கியது. சிறுவயது முதலே தாத்தா, சித்திகளிடம் கதைகள் கேட்டு வளர்ந்தவள் நான். அதனால், இயல்பாகவே கதை சொல்லும் ஆர்வமும் கற்பனையும் என்னுள் வளரத் தொடங்கின. பட்டயப் படிப்பு (Diploma) படித்துக்கொண்டிருந்தபோது, விளையாட்டாக ஐந்தாறு குறுநாவல்கள் எழுதி, அவற்றைத் தோழிகளுக்குப் பிறந்தநாள் பரிசாகக் கொடுத்திருக்கிறேன். ஆனால், முறையாக எழுதத் தொடங்கியது சிங்கப்பூர் வந்த பிறகுதான். மகள்கள் பிறந்த பிறகு நான் வேலைக்குச் செல்லவில்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், அந்தக் காலகட்டத்தில் எல்லாப் பெண்களுக்கும் ஏற்படக்கூடிய பிரசவத்திற்குப் பிந்தைய மனஅழுத்தத்தில், சுரேஷை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவேன்! அவன்தான் என்னை சிங்கப்பூர் நூலகத்திற்கும், சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்திற்கும் அழைத்துச் சென்றான். “உன்கிட்ட இருக்கிற திறமையை வளர்த்துக்கோ. மற்ற பிரச்சினைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமல் போய்விடும்” என்றான். நான் எழுதிய அத்தனை குறுநாவல்களையும் படித்தவன் என்பதால், என் எழுத்தின் மீதும், என்னுடைய திறமையின் மீதும் அவனுக்கு அத்தனை நம்பிக்கை. அந்த நம்பிக்கையும், தொடர்ந்து எழுத வேண்டும் என்ற என்னுடைய உள்ளார்ந்த விருப்பமும் சேர்ந்து, என்னை எழுத்துலகுக்குள் அழைத்து வந்தன.

பொதுவாக ஒரு நிலம் ஒரு படைப்பாளி உருவாக காரணமாக இருக்கும் என்பார்கள். சிங்கப்பூர் உங்களை எழுத்தாளராக்கியது என்கிறீர்கள். சிங்கை போன்ற ஒரு பரபரப்பான பொருளியல் சார்ந்த நகரம் எழுத்தாளரை உருவாக்கும் நிலச்சூழலைக் கொண்டுள்ளதா?
ரமா சுரேஷ்: பரபரப்பான, பொருளாதாரத்தை மையமாகக் கொண்ட ஒரு நகரத்திலிருந்து ஒரு படைப்பாளர் உருவாகுவது சவாலான ஒன்றாக நான் கருதவில்லை. மாறாக, ஒரு படைப்பாளியை உருவாக்குவது அவன் இருக்கும் சூழலைவிட, அந்தச் சூழலுக்குள் அவன் எதைப் பார்க்கிறான் என்பதுதான் என்று நினைக்கிறேன். ஒருமுறை எழுத்தாளர் சாரு என்னிடம், “நீ ஒரு நாளைக்கு எத்தனை பக்கம் படிப்பாய், எத்தனை பக்கம் எழுதுவாய்?” என்று கேட்டார். அதற்கு என்னிடம் இன்றுவரை தெளிவான பதில் இல்லை. அப்போது அவர் சொன்ன ஒரு விஷயம் என்னை மிகவும் பாதித்தது.
“இன்றைய சூழலில் எழுத்தாளர் ஜெயமோகன் மிகவும் பிஸியான எழுத்தாளர். ஆனால் அவர் தனது எழுத்துக்கும் வாசிப்புக்கும் கொடுக்கும் முக்கியத்துவம்தான் அவருக்கான தனித்துவத்தை உருவாக்குகிறது” என்றார். அதன்பிறகு அவரை பற்றியும் சொன்னார். “இப்போதும் நான் படிப்பதற்காகவும் எழுதுவதற்காகவும் அதிகாலையிலேயே எழுந்துவிடுகிறேன். அதுதான் நான் என் எழுத்துக்குக் கொடுக்கும் மரியாதை.” மேலும், தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும், அவர்கள் தொடர்ந்து படிக்கிறார்கள், எழுதுகிறார்கள் என்றால், அவர்களை ஏதோ ஒன்று தொந்தரவு செய்கிறது, அதனால்தான் அதன்பின்னால் அவர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள் என்றார். அந்த வார்த்தைகள் எனக்கு முக்கியமானவை. ஏனென்றால் எந்த நிலமும் வெறுமையானது அல்ல. சிங்கப்பூர் போன்ற பரபரப்பான நகரமும் தனக்கே உரித்தான, தனித்துவம் நிறைந்த ஆயிரக்கணக்கான கதைகளைத் தன்னுள் சுமந்துகொண்டுதான் சுழல்கிறது. அவற்றைக் காண்பதற்கான மனம்தான் நமக்குத் தேவை.
நிலம் தனது கதைகளை எப்போதும் சொல்லிக்கொண்டிருக்கிறது. ஆனால் அவற்றைக் கேட்பதற்கு நாம் ஆயிரம் காரணங்களைச் சொல்லி விலகிக்கொண்டிருக்கிறோம். எனவே, கலைமனம் என்பது எந்தச் சூழலிலும் தன்னைச் சுற்றியிருப்பவற்றிலிருந்து விலகாமல், தொடர்ந்து அவற்றைப் பார்த்துக்கொண்டிருப்பது என்று நினைக்கிறேன். சிங்கப்பூர் என்னை எழுத்தாளனாக்கியது என்றால், அது இங்குள்ள அமைதியாலோ அல்லது தனிமையாலோ மட்டும் அல்ல. மாறாக, இந்த நகரத்தின் வேகம், மனிதர்களின் இடப்பெயர்வு, பல்வேறு கலாச்சாரங்களின் சந்திப்பு, அன்றாட வாழ்க்கையின் முரண்பாடுகள் இவை அனைத்தையும் தொடர்ந்து கவனிக்க வைத்ததால்தான்.
உங்களுடைய இரண்டு நாவல்களுமே வரலாற்றுப் பின்னணியைக் கொண்டவை. உங்களுடைய வரலாற்றார்வத்தைப் பற்றி சொல்லுங்கள்?
ரமா சுரேஷ்: ‘வரலாற்று ஆர்வம்’ என்ற சொல் எனக்குக் கொஞ்சம் கனமான வார்த்தையாகத் தோன்றுகிறது. என்னை ஒரு வரலாற்று ஆர்வலராகக் காட்டிக்கொள்ள நான் பொய் சொல்ல விரும்பவில்லை. என்னுடைய கதைகள் அமைந்த காலம் அத்தகையது. களமும் காலமும் என்னை வரலாற்றுக்குள் இழுத்துச் சென்றுவிட்டன. அதன்பிறகுதான் வரலாற்றைப் படிக்கத் தொடங்கினேன். பள்ளிப் பருவத்திலும், இலக்கியம் படிக்கத் தொடங்கிய பிறகும் இரண்டாம் உலகப்போரைப் பற்றிப் படித்திருக்கிறேன். ஆனால், அதில் சிங்கப்பூரின் சூழலைப் பற்றி இவ்வளவு விரிவாக நான் படித்ததில்லை. என்னுடைய கதைக்காகச் சிங்கப்பூரின் வரலாற்றையும், அதன் புவியியல் மாற்றங்களையும் படிக்கப் படிக்க எனக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஏற்பட்டது. வரலாற்றைப் புத்தகங்களுக்குள்ளும் ஆவணங்களுக்குள்ளும் மட்டும் தேடாமல், மக்களின் வாய்மொழியிலும் தேடத் தொடங்கியபோது, மீண்டும் கதைகளைக் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்த அனுபவம் என்னுடைய கதை மொழியை இன்னும் இயல்பாக வளர்த்தெடுத்தது. இந்தியா, சிங்கப்பூர், (பர்மா) மியான்மர் போன்ற சில நாடுகளின் வரலாற்றை நான் படித்தும் கேட்டும் தெரிந்துகொண்டது ஒரு சிறு துளிதான். அந்தச் சிறு துளியை வைத்துக்கொண்டு என்னை ஒரு வரலாற்று ஆர்வலர் என்று சொல்லிக்கொள்ள முடியாது. ‘ஆகூழ்’ நூல் வெளியீட்டு விழாவின்போது ஸ்டாலின் ராஜாங்கம் அவர்கள் என்னிடம் சொன்ன ஒரு கருத்து எனக்கு மிகவும் முக்கியமானது. “ரமா, உங்கள் நாவலின் முதல் நாற்பது பக்கங்களைப் படித்தபோது நீங்கள் ஒரு வரலாற்று ஆய்வாளர் என்று தோன்றியது. ஆனால், மீதி முன்னூறு பக்கங்களைப் படித்தபோது நீங்கள் ஒரு கதைசொல்லி என்பது தெளிவாகத் தெரிகிறது” என்றார். அவர் சொன்ன அந்தப் பாராட்டு எனக்கு மிகப்பெரிய ஒன்று. ஏனென்றால், வரலாற்றைத் தேடிச் சென்றாலும், இறுதியில் நான் ஒரு வரலாற்றாசிரியராக அல்ல, ஒரு கதைசொல்லியாகத்தான் இருக்க விரும்புகிறேன்.
புலம்பெயர் வாழ்க்கை உங்களின் புனைவுக்குள் எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது?
ரமா சுரேஷ்: ஆரம்பக்காலத்தில், இந்த மண்ணுக்கான சில வார்த்தைகளை வைத்துக்கொண்டு புனைவுகளை எழுதினேன். ஆனால், அது மட்டுமே ஒரு மண்ணின் கதையாகிவிடாது என்பதை எழுத்தாளர் லஷ்மி சரவணக்குமார், என்னுடைய சிறுகதைகளைப் படித்துவிட்டு சொன்னார். அதன்பிறகு, இங்கிருக்கும் மக்களையும், அவர்களின் வாழ்க்கையையும், சுற்றுச்சூழலையும் உற்றுக் கவனிக்க ஆரம்பித்தேன். மக்களுடன் பேசிப் பழகத் தொடங்கினேன். அப்படித்தான் இந்த மண்ணை உள்வாங்கி என் கதைகளை எழுத ஆரம்பித்தேன். மக்களுடன் பேசிப் பழக ஆரம்பித்த அந்தக் காலத்தில்தான் அம்பரம் நாவலுக்கான கருவையும் கண்டடைந்தேன். அந்த நாவல் ஒரு பரந்த களத்தைக் கொண்டது. அதுவரை மிகக் குறுகிய வட்டத்திற்குள் சிறுகதைகளை எழுதிக்கொண்டிருந்த எனக்கு, அந்தப் பரந்த களம், காலம், ஒரு நாட்டின் கலாச்சாரம், மதம், மக்கள் என எல்லாமே மிகப்பெரிய சவாலாக அமைந்தன. அந்தச் சவாலை எதிர்கொண்டபோதுதான், என்னுடைய எழுத்தின் எல்லைகள் எவ்வளவு என்பதை உணர்ந்தேன். அதைவிட முக்கியமாக, என்னை நான் கண்டடைந்த தருணமும் அங்குதான். புலம்பெயர் வாழ்க்கை எனக்கு ஒரு புதிய மண்ணை மட்டும் கொடுக்கவில்லை; அந்த மண்ணைப் பார்த்துக்கொண்டே என்னைப் புரிந்துகொள்வதற்கான ஒரு புதிய பார்வையையும் கொடுத்தது.
அம்பரம் குறித்த விமர்சனங்கள் எவ்வாறு அமைந்தன?
ரமா சுரேஷ்: முதல் புத்தகப் பிரதியை எழுத்தாளர் அழகுநிலாவிடம் கொடுத்துவிட்டு, அன்று இரவு முழுவதும் பரிட்சை ரிசல்ட்டுக்காகக் காத்திருக்கும் பிள்ளையைப்போல காத்துக்கிடந்தேன். நிலா நானூறு பக்கங்களை ஒரே இரவு, பகலுக்குள் படித்துவிடக்கூடிய அளவுக்கு வேகமாக வாசிக்கக்கூடியவர். மறுநாள் மாலை அவர் என்னைத் தொலைபேசியில் அழைத்து, “உன்னைய அப்படியே இறுக்கிக் கட்டிப்பிடிச்சுக்கணும் போல இருக்கு” என்று சொன்னார். அந்த வார்த்தைகளைக் கேட்டதும் என் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டுது. ஏனென்றால், அச்சுக்குச் செல்லும் வரையிலும் அம்பரத்தை யாரும் முழுமையாக வாசித்து கருத்துச் சொல்லவில்லை. அது எனக்குக் கவலையைவிட ஒருவித பயத்தையே கொடுத்திருந்தது. எத்தகைய விமர்சனமாக இருந்தாலும் அதை எதிர்கொள்ளும் மனநிலையில் நான் இருந்தேன். ஆனால், மூன்று வருடங்களாக நான் செய்த உழைப்பு முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுவிட்டால், அந்தச் சூழலை எப்படி எதிர்கொள்வது என்ற பயம் இருந்தது. நிலாவின் அந்த வார்த்தைகள் எனக்கு மிகப்பெரிய தைரியத்தைக் கொடுத்தன. அந்தத் தைரியத்தில்தான் மலேசிய எழுத்தாளர் ம. நவீனை வெளியீட்டு விழாவிற்கு அழைத்தேன். அதன்பிறகு குறிப்பிடத்தக்க பல எழுத்தாளர்கள் அம்பரத்தைப் பற்றி எழுதிய கட்டுரைகள் எனக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமைந்தன. அம்பரத்திற்கு வெளிவந்த விமர்சனங்கள் அனைத்துமே அந்தப் படைப்பை அதன் தன்மையோடு அணுகி, மிக நேர்த்தியாக எழுதப்பட்டவை என்று நான் நினைக்கிறேன். அந்த விமர்சனங்கள் இலக்கியச் சூழலில் எனக்கான ஓர் அடையாளத்தைத் தேடித் தந்தன. அதைவிட முக்கியமாக, நான் எதிர்பார்க்காத புதிய வாசக நண்பர்களை அம்பரம் எனக்குக் கொடுத்தது. ஒரு எழுத்தாளனின் மிகப்பெரிய சந்தோஷம் என்ன தெரியுமா? நாம் சில பகுதிகளை, சில வரிகளை எழுதும்போது, நம்மை அறியாமலேயே ஒரு வாசகனின் கைகளைப் பற்றிக்கொண்டு, “இந்த வரிகள் உனக்கானது” என்று சொல்வோம். ஆனால், அதே வரிகளை ஒரு வாசகன் வாசித்து, அதைக் கோடிட்டு நமக்குக் காட்டும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடு எதுவுமே இல்லை. அந்தத் தருணங்கள்தான் ஒரு எழுத்தாளனாக அம்பரம் எனக்குக் கொடுத்த மிகப்பெரிய பரிசு.

தொடர்ந்து இரண்டு நாவல்களை எழுதியிருக்கிறீர்கள். நாவல்களை எழுதுவதன் காரணம் என்ன?
ரமா சுரேஷ்: இந்தக் கேள்வி எனக்கு வியப்பளிக்கிறது. நான் தொடர்ந்து எழுதவில்லை என்றால்தானே அதற்கான காரணத்தைச் சொல்ல முடியும்! அதைவிடுத்து ஏன் எழுதுகிறேன் என்று கேட்பது வித்தியாசமான கேள்வி. நான் ஒரு கதைசொல்லி. அதனால் எனக்கு ஒரு முழு வாழ்க்கையைச் சொல்லித்தீர்க்கத்தான் பிடித்திருக்கிறது. ஒரு சிறுகதைக்குள் சொல்லிவிட முடியாத பல விஷயங்களை நாவல் வழியாக விரிவாகச் சொல்ல முடிகிறது. ஒரு மனிதனின் வாழ்க்கை, அவனைச் சுற்றியிருக்கும் மனிதர்கள், அவர்களுக்கிடையிலான உறவுகள், ஒரு காலம், ஒரு நிலம் என எல்லாவற்றையும் விரிவாகப் பேசுவதற்கான இடத்தை நாவல் எனக்குக் கொடுக்கிறது. அதிலும் முக்கியமாக, நாவல் எழுதும்போது எனக்கு ஒரு பெரிய சுதந்திரம் கிடைக்கிறது. கதாபாத்திரங்களுடன் நீண்ட காலம் பயணிக்கவும், அவர்களின் வாழ்க்கைக்குள் ஆழமாகச் செல்லவும், நான் நினைத்ததைவிடப் பெரிய உலகத்தை உருவாக்கிப் பார்க்கவும் அந்தச் சுதந்திரம் உதவுகிறது. எனவே, நாவல் எழுதுவதற்கு நான் தனியாக ஒரு காரணத்தைத் தேடுவதில்லை. கதை என்னை அழைத்துச் செல்லும் இடத்திற்குச் செல்வதற்கான சுதந்திரம்தான் நாவலை எழுதுவதற்கான காரணமாக இருக்கிறது.
முதல் நாவலுக்கு வந்த விமர்சனம் இரண்டாம் நாவலுக்கு ஏதேனும் பயனாக அமைந்ததா?
ரமா சுரேஷ்: என் எழுத்துப் பயணத்தில் மிக முக்கியமாக நான் இருவருக்கு நன்றி சொல்லியாக வேண்டும். எழுத்தாளர் பாலுமணிமாறன், என் ஆரம்பக்கட்டச் சிறுகதைகளை வாசித்து ஊக்கமும் விமர்சனமும் கொடுத்து, தொடர்ந்து எழுதுவதற்கு என்னைத் தட்டிக்கொடுத்து வளர்த்தவர். அதேபோல, எழுத்தாளர் லஷ்மி சரவணகுமார் என் கதைகளை வாசித்துவிட்டு, அடிக்காத குறையாக, ஒரே கதையை மீண்டும் மீண்டும் வேறு கோணங்களில் எழுதிப் பார்க்க என்னைப் பழக்கப்படுத்தியவர். அம்பரம் நாவலைப் பற்றி அவர் என்னிடம் பெரிதாக எதுவும் பேசவில்லை. ஆனால் ஆகூழை வாசித்துவிட்டு, “ஒரு எழுத்தாளராக இந்த நாவலுக்குள் நீ பல இடங்களில் ஜெயித்திருக்க” என்று சொன்னபோது, நான் ஒரு சிறு பிள்ளையைப்போல குதித்தேன். என் சிறுகதைகளுக்கும் முதல் நாவலான அம்பரத்திற்கும் வந்த அத்தனை விமர்சனங்களையும் கோபமில்லாமலும், அதே நேரத்தில் பெருமிதம் கொள்ளாமலும் கவனிக்க எனக்கு கொஞ்ச காலம் தேவைப்பட்டது. அதனால், அந்த விமர்சனங்கள் அனைத்துமே இரண்டாவது நாவலை எழுதும்போது எனக்குள் ஏதோ ஒரு விதத்தில் வேலை செய்துகொண்டிருந்தன. ஆனால், அம்பரம் நாவலுக்குக் கிடைத்த மிக முக்கியமான விமர்சனங்களில் ஒன்று, படைப்பை முடித்த பிறகு கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டும் என்பதுதான். அந்த விமர்சனத்தை மட்டும் என்னால் முழுமையாகக் கடைப்பிடிக்க முடியவில்லை. படைப்பை முடித்த பிறகு அதிலிருந்து என்னால் உடனடியாக விடுபட முடிவதில்லை. ஒரு படைப்பை எழுதிக்கொண்டிருக்கும்போது அது கொடுக்கும் மன அழுத்தம் அதிகமாகிவிடுகிறது. அதை எப்படியாவது அச்சுக்கு அனுப்பிவிட்டால் போதும், அந்த எழுத்தாளன் மனநிலையிலிருந்து நான் விடுதலை அடைந்துவிடலாம் என்ற மனநிலைக்கு சென்றுவிடுகிறேன். அதனால், அம்பரத்தில் நடந்த அதே தவறு ஆகூழிலும் நிகழ்ந்திருக்கிறது என்று இப்போது நினைக்கிறேன். விமர்சனங்கள் நமக்கு வழிகாட்டலாம் ஆனால் ஒரு எழுத்தாளனாக நம்முடைய சில பலவீனங்களை மாற்றிக்கொள்வதற்கு இன்னும் அதிகமான சுயக்கட்டுப்பாடும் அவசியமாகிறது. அந்தப் பயிற்சி எனக்குள் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
சிங்கப்பூரின் சமகால இலக்கியச் சூழலைப் பற்றிய பார்வை என்னவாக இருக்கிறது?
ரமா சுரேஷ்: நான் எழுத வந்த காலத்தில் என்னுடன் நிறைய நண்பர்கள் எழுதினார்கள். ஒரு குழுவாகச் செயல்பட்டோம். அந்தக் காலகட்டத்தில் நிறைய சிறுகதைகள் வெளிவந்தன. அவை அனைத்தும் தரமான சிறுகதைகள் என்று சொல்வதைவிட, நாங்கள் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தோம் என்பதே சிங்கப்பூர் இலக்கியச் சூழலில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கியது. குறிப்பாகப் பெண் எழுத்தாளர்கள் அந்தச் சூழலை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினார்கள். அது எங்களுக்கு அப்போது பெருமையாக இருந்தது. ஆனால், அந்தக் காலத்தில் எழுதிக்கொண்டிருந்த பலர் இன்று எழுதுவதில்லை என்பது கவலையான ஒன்று. அதைவிட முக்கியமாக, எழுத்தாளர்களுக்கிடையே அவர்களுடைய படைப்புகள் குறித்த உரையாடல் முற்றிலுமாகக் குறைந்துவிட்டது. இன்று சிங்கப்பூரில் வெளிவரும் ஒவ்வொரு படைப்பையும் உலக இலக்கியத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பது ஒருவகையில் மகிழ்ச்சியாக இருந்தாலும், அது சரியான அணுகுமுறைதானா என்ற கேள்வியும் எனக்குள் இருக்கிறது. எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் சிங்கப்பூர் வந்தபோது ஒரு முக்கியமான கருத்தை முன்வைத்தார். “சிங்கப்பூர் படைப்புகளை முதலில் வகைமைப்படுத்துங்கள், பிறகு தீவிர விமர்சனத்துடன் பட்டியலிடுங்கள்” என்றார். அதற்கான முயற்சியை முன்னெடுக்க முதலில் ஒரு குழுமனப்பான்மை உருவாக வேண்டும். அதற்கு வெளிப்படையான நட்புணர்வுடன் கூடிய உரையாடல்கள் தொடங்க வேண்டும். ஒருவருடைய படைப்பைப் பற்றி இன்னொருவர் பேசுவதும், பாராட்டுவதும் மட்டுமல்ல. அந்தப் படைப்பின் குறைகளையும் சுட்டிக்காட்டும் ஆரோக்கியமான விமர்சனச் சூழல் உருவாக வேண்டும். முதலிடத்தை நோக்கிப் பயணிப்பதைவிட, விமர்சனத்தை எதிர்கொள்ளப் பழகிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் ஒரு இலக்கியச் சூழல் உண்மையாக வளர முடியும். இப்போது இது நாவல்களின் காலம் என்று நான் நினைக்கிறேன். இன்னும் நிறைய நாவல்கள் சிங்கப்பூரிலிருந்து வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். அந்த நாவல்கள் வழியாக சிங்கப்பூரின் பல்வேறு வாழ்க்கைகளும், மனிதர்களும், அனுபவங்களும் இன்னும் விரிவாகப் பதிவாக வேண்டும்.
புனைவுக்குள் வரலாற்றை கையாள்வது குறித்த பார்வையைக் குறிப்பிடுங்கள்.
ரமா சுரேஷ்: ஆகூழ் நாவல் ஆம்பலாப்பட்டு மற்றும் சிங்கப்பூரில் வெளியீடு கண்டது. இரண்டு இடங்களிலும் நடைபெற்ற வெளியீட்டு நிகழ்வுகளில் பேசிய பேச்சாளர்கள், வரலாற்று நாவல்களை எழுத்தாளர்கள் இருவகையான முறைகளில் கையாளுகின்றனர் என்பதை அடிக்கோடிட்டுக் குறிப்பிட்டனர். ஒன்று, அரசர்கள், ஆட்சியாளர்கள் போன்றவர்களின் வரலாற்றைப் புனைவாக்குவது. மற்றொன்று, வரலாற்றில் அதிகம் பதிவு செய்யப்படாத சாமானிய மனிதர்களின் வாழ்க்கையையும் வாழ்வியலையும் வரலாறாகப் புனைவாக்குவது. இதில் இரண்டாவது அணுகுமுறையே மிகவும் முக்கியமானதாக நான் கருதுகிறேன். ஏனெனில் வரலாறு என்பது அரசர்கள் மற்றும் ஆட்சியாளர்களின் செயல்பாடுகளை மட்டுமே கொண்டது அல்ல. ஒரு குறிப்பிட்ட காலத்தில் வாழ்ந்த சாதாரண மக்களின் வாழ்க்கை, அவர்களின் உழைப்பு, உறவுகள், பண்பாடு, நம்பிக்கைகள், துயரங்கள், மகிழ்ச்சிகள் போன்றவையும் அந்தக் காலத்தின் வரலாற்றை அறிந்துகொள்வதற்கு முக்கியமான ஆதாரங்களாக அமைகின்றன. ஆனால் இத்தகைய சாமானிய மக்களின் வாழ்க்கை வரலாற்றுப் பதிவுகளில் பெரும்பாலும் இடம்பெறாமல் போகிறது. நாம் கேட்டு அறிந்த, பார்த்துப் பழகிய அல்லது நம்மைச் சுற்றி வாழ்ந்த மனிதர்களைப் புனைவின் வழியாகக் கதைமாந்தர்களாக உருவாக்கும்போது, அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமல்லாமல், அவர்கள் வாழ்ந்த காலத்தின் சமூகச் சூழலும் பதிவு செய்யப்படுகிறது. அந்த வகையில், வரலாற்றையும் புனைவையும் இணைப்பதற்கு எழுத்தாளருக்கு வரலாறு மிக முக்கியமான அடித்தளமாக அமைகிறது. புனைவு வரலாற்றை வெறும் தகவல்களாகக் கூறாமல், மனிதர்களின் உணர்வுகளோடும் அனுபவங்களோடும் இணைத்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கிறது. எனவே, புனைவுக்குள் வரலாற்றைக் கையாள்வது என்பது கடந்த கால நிகழ்வுகளை மட்டும் மீட்டுருவாக்குவது அல்ல, அந்தக் காலத்தில் வாழ்ந்த சாமானிய மக்களின் குரல்களையும் வாழ்க்கையையும் மீட்டெடுப்பதாகும். இதன் மூலம் வரலாறு மக்களுக்கு நெருக்கமானதாகவும் உயிரோட்டமுள்ளதாகவும் மாறுகிறது. ஆகூழ் போன்ற நாவல்கள் இத்தகைய அணுகுமுறையின் வழியாக, வரலாற்றில் மறைந்து போகக்கூடிய மனிதர்களையும் அவர்களின் வாழ்வியலையும் நினைவில் நிலைநிறுத்துகின்றன.

இடதுசாரி போராட்ட வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது ஆகூழ் நாவல். அந்த நாவலின் பின்னணியைப் பற்றி குறிப்பிடுங்கள்.
ரமா சுரேஷ்: ஆகூழ் நாவல் எங்கள் கிராமத்தின் வரலாற்றுப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டது. 1930-களிலேயே ஜமீன்தாரி முறைக்கு எதிராகத் தன்னெழுச்சியாகப் போராடிய கிராமமாக அது இருந்தது. ஏற்கனவே அதிகாரத்தையும் சுரண்டலையும் எதிர்த்து போராடிய மனநிலை அந்த மக்களிடம் இருந்ததால், பின்னாளில் இடதுசாரிச் சிந்தனைகள் அந்தக் கிராமத்திற்குள் பரவி வேரூன்றியது ஆச்சரியப்படத்தக்க ஒன்றல்ல. ஆனால், இந்தியாவின் ஏன் உலகின் கடைகோடியில் இருந்ததாகக் கருதக்கூடிய ஒரு கிராமத்தின் மீது பிரிட்டிஷ் அரசு எதற்காக ‘சிவப்பு புள்ளி’ வைத்தது என்ற கேள்வி முக்கியமானதாகிறது. அதேபோல், இந்திய அரசு துப்பாக்கி ஏந்திய நூற்றுக்கணக்கான மலபார் காவலர்களை ஆண்டுக்கணக்கில் அந்தக் கிராமத்திற்குள் ஏன் நிறுத்தியது என்ற கேள்விக்கான விடையே ஆகூழ் நாவலின் வரலாற்றுப் பின்னணியாக அமைகிறது. இந்த நாவலை எழுதத் திட்டமிடும் வரை மலாயாவும் சிங்கப்பூரும் நாவலின் முக்கியக் களமாக அமையும் என்று நான் நினைக்கவில்லை. நாவலுக்கான ‘ட்ரீ பிளான்’ அமைக்கத் தொடங்கியபோதுதான், இரணியன் நேரடியாகவும் கணபதி மறைமுகமாகவும் ஆம்பலாப்பட்டுடன் எவ்வாறு தொடர்புபட்டிருந்தார்கள் என்பது எனக்குப் புரியத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக, வாழ்வாதாரத்தைத் தேடி மலாயா மற்றும் சிங்கப்பூருக்குச் சென்ற இடதுசாரிகள், குறிப்பாகத் தமிழர்கள், அங்கு எவ்வாறு வாழ்ந்தார்கள், என்னென்ன போராட்டங்களை எதிர்கொண்டார்கள், தங்களுடைய சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் எவ்வாறு முன்னெடுத்தார்கள் என்பதையும் இந்த நாவலின் வழியாகச் சொல்லியிருக்கிறேன். எனவே, ஆகூழ் நாவலின் பின்னணி என்பது ஒரு குறிப்பிட்ட கிராமத்தின் வரலாற்றை மட்டும் கொண்டதல்ல. ஜமீன்தாரி எதிர்ப்பு, இடதுசாரி இயக்கத்தின் வளர்ச்சி, பிரிட்டிஷ் மற்றும் இந்திய அரசுகளின் அடக்குமுறை, மலாயா – சிங்கப்பூர் பகுதிகளில் தமிழர்களின் வாழ்வியல் மற்றும் இடதுசாரி இயக்கங்களுடனான தொடர்பு ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான வரலாற்றுப் பின்னணியைக் கொண்டதாகும்.
ஆகூழ் நாவல் பேசும் வரலாற்றுக்களம் விரிவானது. அது புனைவில் சரியாக இடம்பெற மேற்கொண்ட முயற்சிகளைக் குறிப்பிடுங்கள்.
ரமா சுரேஷ்: ஆகூழ் நாவலை எழுத முற்பட்டபோது, எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தியிடம் ஆலோசனை பெற்றேன். அவர் மீண்டும் மீண்டும் ஒரு முக்கியமான கருத்தை வலியுறுத்தினார். ஊரின் பெயரையும், கதைமாந்தர்களின் பெயர்களையும் மாற்றாமல் எழுதினால், நடந்தவற்றை அப்படியே எழுத வேண்டிய கட்டாயம் ஏற்படும்! அதனால் ஒரு எழுத்தாளராக என்னால் சுதந்திரமாகப் புனைய முடியாது என்றும், நடந்ததை அப்படியே எழுதுவது எழுத்தாளனின் வேலை அல்ல என்றும் அவர் கூறினார். அவருடைய கருத்தை நான் முழுமையாகப் புரிந்துகொண்டிருந்தாலும், ஆகூழ் நாவலின் போக்கு அதற்கு என்னை அனுமதிக்கவில்லை. நாவல் எழுதத் தொடங்கியபோது, “எழுதுவது மட்டுமே உன்னுடைய வேலை” என்பதுபோல் அதன் கதைமாந்தர்கள் தானாகவே என்னை வழிநடத்திச் சென்றார்கள். எனவே, உண்மையான வரலாற்றையும் புனைவையும் ஒன்றோடொன்று இணைத்துக்கொண்டு நாவலை உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஜமீன்தார்களின் அடக்குமுறை, இடதுசாரிகளின் போராட்டம் போன்றவை ஏற்கனவே பல திரைப்படங்களிலும் கதைகளிலும் இடம்பெற்றுள்ளன. அப்படியிருக்கும்போது, எனது நாவலில் புதிதாக எதைச் சொல்ல வேண்டும் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. அந்தக் கேள்விக்குக் கிடைத்த பதில்தான் ஒட்டுமொத்த கிராமத்தின் சித்திரத்தைப் புனைவுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற முடிவு. எங்கள் கிராமம் என்பது ஜமீன்தாரி அடக்குமுறையையும் இடதுசாரிப் போராட்டத்தையும் மட்டுமே கொண்டதல்ல. அந்தக் கிராமத்தின் தனித்துவமான வாழ்வியலும், ஆளுமை நிறைந்த பெண்களும், குளங்களும், நியாயத்திற்காகப் போராடிய குரல்களும், பல்வேறு வகையான மண் வாசனைகளும், மக்களின் உறவுகளும், அன்றாட வாழ்க்கை முறைகளும் எனப் பல்வேறு கூறுகள் அதனுள் இருந்தன. இவை அனைத்தையும் பதிவு செய்வதன் மூலம் ஒரு போராட்ட வரலாற்றை மட்டும் கூறாமல், ஒரு முழுமையான கிராமத்தின் சமூக, பண்பாட்டு மற்றும் வாழ்வியல் வரலாற்றை புனைவுக்குள் கொண்டுவர முயன்றேன். இதன் மூலம் ஆகூழ் நாவல் ஒரு குறிப்பிட்ட அரசியல் போராட்டத்தின் வரலாற்றை மட்டும் பேசாமல், அந்தப் போராட்டம் உருவான மண்ணையும், அந்த மண்ணில் வாழ்ந்த மக்களையும், அவர்களின் வாழ்வியலையும் இணைத்துச் சித்திரிக்கிறது. இவ்வாறு ஒரு கிராமத்தின் ஒட்டுமொத்த சித்திரத்தை உருவாக்கியதன் வழியாக, அந்தக் கிராமத்திற்கும் அதன் மக்களுக்கும் உலக வரலாற்றுக்குள் தங்களுக்கான இடத்தைப் பிடித்துக்கொடுக்க முயன்றுள்ளேன்.

உங்களுடைய இலக்கியப்பயணத்தின் எதிர்காலத்திட்டத்தைப் பற்றி பகிர்ந்துகொள்ளுங்கள்.
ரமா சுரேஷ்: கடந்த ஆண்டு மாயா இலக்கிய வட்டத்தின் மூலம், சிங்கப்பூரில் 2025ஆம் ஆண்டு வரை வெளியான நாவல்கள் குறித்து விமர்சனமும் கலந்துரையாடலும் நடத்தினோம். அந்தக் கலந்துரையாடல்களின் அடிப்படையில், சிங்கப்பூரின் சிறந்த நாவல்கள் குறித்த ஒரு பட்டியலைத் தொகுத்து வெளியிட வேண்டும் என்பது எனது அடுத்த கட்டத் திட்டமாக இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, சிங்கப்பூர் சிறுகதைகள் குறித்தும் ஒரு விவாதத்தைத் தொடங்க விரும்புகிறேன். சிறுகதைகள் தொடர்பான வாசிப்பு, விமர்சனம், கலந்துரையாடல் ஆகியவற்றை முன்னெடுப்பது என் இலக்கியப் பயணத்தில் ஒரு முக்கியமான பகுதியாக இருக்கும். மேலும், நானும் சிறுகதைகள் எழுதி சில ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே, மீண்டும் சிறுகதை எழுதுவதில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. வாசிப்பு, விமர்சனம், கலந்துரையாடல் ஆகியவற்றுடன் எனது சொந்த படைப்புப் பயணத்தையும் இணைத்துக்கொள்வதே அடுத்த ஆண்டுக்கான எனது முக்கிய இலக்கியத் திட்டமாகும்.
பொதுவாகவே மறக்கப்பட்ட அல்லது அதிகமும் தெரியப்படாத வரலாறு, ஆளுமைகள் ஆகியவை குறித்து படைப்புகளில் இடம்பெற்றால் அவை கவனம் பெறுவது இயல்பு. ஆகூழ் நாவலுக்கான வரலாற்றுக்களம் உடனடியாக வாசகக்கவனத்தைப் பெறுகின்ற வகையிலே அதன் வரலாற்றுப் பின்னணி அமைந்திருக்கிறது. அதைத்தாண்டி ஒருபுனைவாக நீங்கள் அதில் அடைந்தது என்ன?
ரமா சுரேஷ்: எனது இரண்டு நாவல்களுக்கும் வரலாற்றுப் பின்னணி இருக்கிறது. ஆனால் அந்த வரலாற்றைச் சுவாரஸ்யமான பின்னணியாகப் பயன்படுத்தி வாசகர்களைக் கவர வேண்டும் என்பதற்காக நான் அவற்றை எழுதவில்லை. அந்த வரலாற்றின் வழியாக ஒரு மிகப்பெரிய வாழ்க்கையைப் பார்த்திருக்கிறேன், அதைச் சொல்லியிருக்கிறேன். “அதைத் தாண்டி ஒரு புனைவாக நீங்கள் என்ன அடைந்தீர்கள்?” என்ற கேள்வி எனக்குச் சற்று சங்கடமாக இருக்கிறது. ஏனென்றால், ஒரு படைப்பை எழுதும்போது அதில் என்ன அடையப்போகிறேன் என்று இலக்கு வைத்துக்கொண்டு நான் எழுதுவதில்லை. என்னை பாதிக்காத எந்த விஷயத்தையும் நான் எழுதுவதில்லை. வாசகர்களின் கவனத்தைப் பெறுவதற்காக மூன்று வருடங்கள் அலைந்து திரிந்து, நானூறு பக்க நாவலை எழுத வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. எந்தப் படைப்பாளனுக்கும் அப்படி ஒரு அவசியம் இருக்கக் கூடாது என்றுதான் நினைக்கிறேன். ஒரு படைப்பு முதலில் எழுத்தாளனுக்குள் ஒரு அவசியமாக இருக்க வேண்டும். பிறகு அது வாசகனிடம் செல்ல வேண்டும். ஒரு புனைவுக்குள் எழுத்தாளன் என்ன கண்டடைந்தான் என்று எழுத்தாளனிடம் கேட்டுப் பெறுவதைவிட, அந்தப் புனைவுக்குள் வாசகன் என்ன கண்டடைகிறான் என்பதுதான் முக்கியம். நான் என்ன கண்டடைந்தேனோ அதை ஒரு படைப்பாகக் கொடுத்துவிட்டேன். அதில் நான் முழுமையான வெற்றியை அடைந்திருக்கிறேன் என்ற திருப்தி எனக்கு இருக்கிறது. அது வெற்றியா தோல்வியா என்பதை நான் தீர்மானிக்க வேண்டியதில்லை. அதை வாசகர்கள் தீர்மானிக்கட்டும்.
நேர்காணல்: அரவின் குமார்
