வாழ்தலின் பயன் – இகிரு திரையிடல் அனுபவம்

உலகின் முக்கியமான சினிமாக்களைக் கண்டு உரையாடும் பேசும் படம் சந்திப்பின் நான்காவது நிகழ்ச்சி 22 ஆகஸ்டு 2026 அன்று மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இம்முறை சந்திப்புக்கான படமாக ஜப்பானிய இயக்குநர் அகிரா குரோசாவாவின் (Akira Kurosawa) ‘இகிரு’ (Ikiru) திரைப்படம் திரையிடப்பட்டது.

உலக சினிமா வரலாற்றில் மிக முக்கியமான இயக்குநராக அகிரா குரோசாவா மதிப்பிடப்படுகிறார். ரஷோமோன் (1950), செவன் சமுராய் (1954) ஆகியவை அகிராவின் முக்கிய ஆக்கங்களாகக் கருதப்படுகின்றன. 1952 ஆம் ஆண்டு அகிரா இயக்கிய படம்தான் இகிரு. இகிரு என்ற ஜப்பானிய சொல் வாழ்தல் எனும் பொருளைக் கொண்டதாகும்.

இந்தப் படத்தின் திரையிடலுக்குப் பின்னர் பேசிய அரவின் இகிரு படம் ஒரு நேர்க்கோட்டு கதையாகவே பயணிப்பதாகக் கூறினார். இதற்கு முன்னர் தான் பார்த்த அகிராவின் ‘ரஷோமோன்’ படம் பல்வேறு மனிதர்களின் பார்வையின் வழி ஒரு நிகழ்வை அணுகுவதாக இருக்கும். ஒரு சம்பவத்தை வெவ்வேறு மனிதர்களின் பார்வையின் வழி அணுகப்படுவதைப் போன்றே காட்சியமைப்பும் கதையும் அமைக்கப்பட்டிருக்கும். அதன் வழி ஒர் உண்மையைக் கண்டடைவதைப் போன்று படம் அமைந்திருக்கும். அதைப் போல அகிராவின் செவன் சமூராய் திரைப்படமும் காட்சியமைப்பு மற்றும் கதையமைப்பு ஆகியவற்றால் தேர்ந்த படமாக இருக்கும். அதிலிருந்து ஒப்பீட இகிரு படம் ஒரு நேர்கோட்டுக் கதையின் வாயிலாக வாழ்தலின் பொருள் என்ன என்ற கேள்வியை எழுப்புவதாகக் கூறினார்.

அதன் பிறகு பேசிய சண்முகா, ‘இகிரு’ படம் அலுவலக ஆவண வேலைகள் எவ்வாறு ஒரு மனிதன் தான் ஆற்றவேண்டிய பணிகளிலிருந்து விலக்கி தேவையற்ற பணிகளில் மூழ்கச் செய்கிறது என்பது குறித்து காட்டியதாகச் சொன்னார். முப்பது ஆண்டுகளாக நகராட்சிக் கழகப் பணிகளில் தன்னை மூழ்கடித்துக் கொண்டு வாழ்க்கையைத் தொலைத்துவிட்டவனைப் பற்றியதாக படம் அமைந்ததாகக் குறிப்பிட்டார். மரணம் அணுகிவிட்டதென உணரும் தருணமே வாழ்க்கையின் பொருளைத் தேடச் செய்கிறது. அந்தச் சமயத்தில் உடன் பணியாற்றும் உயிரோட்டமான தோயோ எனம் இளம்பெண்ணின் பார்வையில் ஒரு முயல் பொம்மைக்குச் சாவி கொடுத்து துள்ளி ஓடச் செய்வது கூட வாழ்க்கையின் பொருளாக இருக்கமுடியுமென்ற பார்வையே அவனைக் கவர்கிறது. அதிலிருந்தே தான் ஆற்றவேண்டிய பணி குறித்த தெளிவு அவனுக்கு ஏற்படுகிறது. அப்படி வாழ்வின் பொருளை அறிந்துகொள்ளும் உணவகக் காட்சியின் பின்னணியில் பிறந்த நாள் வாழ்த்து பாடல் ஒலிக்கிறது. அந்த இடத்தில் அவனுடைய மறுபிறப்பு நிகழ்வதைப் போன்று காட்சி அமைந்ததாகக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய விஜயலட்சுமி, ‘இகிரு’ படத்தில் தான் சொல்லவேண்டியவற்றை அகிரா நேரடியாகவே குறிப்பிட்டுவிட்டது தனக்கு வியப்பை ஏற்படுத்தியதாகச் சொன்னார். ஒரு வேளை, ‘இகிரு’ படம் உருவகிக்கும் அலுவலகச் சூழல் இன்றைக்குப் பரவலாகியிருப்பதால் தனக்கு அந்தப் படம் எல்லா உணர்வுகளையும் நேரடியாகக் கடத்திவிடுவதைப் போன்ற உணர்வைத் தந்திருக்கலாம் என்றார். அத்தோடு அந்தக் காலக்கட்டத்தில் அதனை நேரடியாக உணர்த்தவேண்டிய தேவை இருந்திருக்கலாம் என்றார்.

இந்தக் காலக்கட்டத்தில் பார்க்கவேண்டிய படமாக ‘இகிரு’ படத்தைக் குறிப்பிட்டார். இந்தப் படம் நிகழும் 1950 காலக்கட்டத்தையும் தற்காலத்தையும் ஒப்பீடும் போது மனித வாழ்வு இன்னுமே இயந்திரமயமானதாக மாறியிருக்கிறது. அதைப் போல, அதிகாரத்துவத்தின் செயற்பாடுகள் இன்னுமே கடினமானதாக மாறியிருக்கிறது. அத்தோடு அதிகாரப் படிநிலை மனிதர்களை எளிதாக அலைகழிக்கக் கூடியதாகவும் மாறியிருக்கிறது. அவ்வாறு சுமை நிறைந்த அதிகாரத்துவத்தின் பொறுப்புகளிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள மனிதர்கள் தேடும் வழி என்பது வேலைகளை மற்றவர் பார்வைக்கு ஒதுக்கித் தள்ளுவதாகவே இருக்கின்றது. அதுவே அதிகாரப் படிநிலை இயங்கும் வழியாகவும் மாறியிருக்கிறது. அதனைத் தங்களின் பொறுப்பு என யாரும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்ற போதிலும் எல்லாருமே ஏதோ ஒரு பணியில் மூழ்கி நெருக்கடிச் சூழலிலே இருக்கின்றனர். இதுதான் அலுவல் பணிகளின் யதார்த்தச் சூழலாக இன்றளவும் இருக்கின்றது. அதற்கு, நவீன கால வாழ்வின் நெருக்கடிச் சூழலும் ஒரு காரணமாக அமைகின்றது. இந்தச் சூழலை மிக தொடக்கக் காலத்திலே அகிரா சரியாகவும் சிறப்பகாவும் காட்டியிருப்பதாகச் சொன்னார்.

அத்தோடு அதிகார அடுக்கில் ஒரு குறிப்பிட்ட வேலைக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள யாரும் முன்வருவதில்லை. ஆனால், அந்தப் பணியைச் செய்து முடித்த பிறகு கிடைக்கப்பெறும் அங்கீகாரத்துக்காக எல்லாருமே முன்வருகிறார்கள். அப்படியான சூழலில் அந்தப் பணியைச் சாத்தியப்படுத்தியவருக்கு ஏமாற்றம் உருவாவது இயல்பு. ஆனால், அத்தகைய ஏமாற்றம் கூட தேவையில்லை. அதனைக் கடமை என எண்ணிச் செய்யாமல் ஒரு கண்டடைவாக எண்ணிச் செய்தால் ஏமாற்றமடைய வேண்டிய அவசியம் இல்லை. அதனைத்தான் படத்தின் இறுதியில் மையக் கதைமாந்தர் நிறைவுணர்வுடன் ஊஞ்சலில் ஆடும் போது அடைகிறான் எனப் புரிந்துகொண்டதாகக் குறிப்பிட்டார். படத்தின் இறுதியில் பூங்கா எழுவதற்குக் காரணமாக இருந்த வத்தானாபேவுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படவேண்டும் என சகப்பணியாளர் ஆதங்கம் அடைகிறார். அந்த ஆதங்கம் என்பது வாழ்க்கையின் பொருள் குறித்து அவர் அடைந்த கண்டடைவாகவே காணமுடிந்ததாகக் குறிப்பிட்டார். இந்தப் படத்தைப் பார்க்கும் போது தனக்கு மெல்லிய அலைகழிப்பு இருந்ததாகக் குறிப்பிட்டார். மரணம் விரைவில் சம்பவிக்கப்போகிறதென அறிந்தவுடன் ஒரு மனிதன் அடையும் உணர்வுகளைப் படம் காட்டியதாகக் குறிப்பிட்டார். முதலாவதாக, ஒட்டுமொத்த இன்பங்களை துய்த்துவிடவேண்டும் என மையக் கதைமாந்தர் எண்ணுகிறான். சூது, மது, பெண்கள் என வாழ்வின் இன்பங்களாகக் கருதப்படுகின்ற எல்லாமே அவனுக்குள் விரைவிலே சலிப்பை ஏற்படுத்துகிறது. அவற்றை எந்தவகையிலும் அவனால் வாழ்வுக்கான பொருளாக எண்ணமுடியவில்லை. அடுத்ததாக, ஒர் இளம்பெண்ணிடம் பழகுகிறான். அந்தப் பெண்ணுடன் பழகும் பொழுது அவனுக்கு இன்பம் தருகிறது. அவளுடைய உயிரோட்டத்தால் கவரப்படுகின்றவன், உயிரோட்டத்துக்கான காரணத்தை வினவுகிறான். அதற்கு அவள் கூறும் விளக்கம் சுவாரசியமானது. வாழ்க்கைக்கான பொருள் எனப் பெரிதாக எதனையும் கூறிவிடமுடியவில்லை. நாமே உருவகிப்பதுதான் வாழ்வுக்கான பொருளாகின்றது. அதன் காரணமாகத்தான் முயல் பொம்மையைத் துள்ளி ஓடச் செய்கிறாள். அந்தப் பொம்மையின் துள்ளல் ஜப்பானின் எல்லா குழந்தைகளையும் தொடும் உணர்வைத் தனக்கு தருவதாகக் கூறுகிறாள். அவளின் பதில் சாதரணமானதாகத்தான் இருக்கிறது. அந்த எளிய பதில்தான் வத்தானாபேவை தனக்கான பதிலைத் தேடச் செய்கிறது. அந்தக் காட்சிக்கு முன்பதாக அலுவலகத்தில் தனக்குக் கீழ் வேலை செய்யும் அந்த இளம்பெண்ணின் மீதான கரிசனத்தால் வத்தானாபே காலுறைகளை வாங்கி தருவார்; விலை உயர்ந்த உணவகங்களுக்கு அழைத்துச் சென்று உணவுகள் வாங்கி தருவார். வத்தானாபே தேடும் வாழ்க்கை நிறைவு என்பது அப்படி கூட சித்தித்திருக்கலாம். ஆனால், அதையும் தாண்டி நகராட்சிப் பூங்காவைக் கட்டி தருவதன் வழி தனக்கான நிறைவை வத்தானாபே தேடிக் கொள்கிறார். அவளுக்கான உதவி என்பது எளியதாக இருக்கலாம். ஆனால், நகராட்சி பூங்கா கட்டுமானம் என்பது அடைய சற்றே சிரமமானது. அதனையே தன் வாழ்க்கைக்கான பொருளாகக் காண்கிறார். அதனைச் செய்து முடிப்பதன் வழி தன் வாழ்க்கைக்கான பூரணத்துவத்தைக் கண்டடைகிறார். அதனை அகிராவின் தனித்த பார்வையாக தான் கண்டதாக விஜயலட்சுமி குறிப்பிட்டார். மேலும், இகிரு படம் மிக யதார்த்தப்பாணியில் அமைந்திருந்தது. இசை, கேளிக்கைக் காட்சிகள், தெரிந்த முகங்கள் எதுவுமே இல்லாமல் வாழ்க்கைப்பார்வை ஒன்றை இகிரு படம் தனக்குள் கடத்தியிருப்பதாகக் கூறி தன் பார்வையை நிறைவு செய்தார்.

அடுத்துப் பேசிய அபிராமி, இத்தகைய ஆழமான படங்களைக் கண்டபிறகு ஒரிரு நாட்களுக்காவது அது குறித்து சிந்திப்பதே தன்னுடைய வழக்கமென்றார். அப்படி நன்கு சிந்தனையில் ஊறியப்பின்னர்தான் படத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளமுடியுமென்றார். இந்தப் படக் காட்சிகளில் ஒரு முரண்பாடு இருப்பதைத் தொடக்கம் முதலே உணர்ந்ததாகக் குறிப்பிட்டார். படத்தின் தொடக்கத்தில் நகராட்சி பொது விவகாரத் துறை தலைவராகப் பணியாற்றும் வத்தானாபே கோப்புகளை முறையாக பார்க்காத அலட்சியக் குணம் கொண்டவரைப் போல காட்டப்படுகிறார். ஆனால், பின்னர் வாழ்க்கையின் முடிவு நெருங்கிவிட்டது என அறிந்து கொள்ளும் போது அவருடைய நடவடிக்கைகள் மாற்றமடைகின்றன. தனக்கு புற்றுநோய் இருப்பதைத் தெரிந்து கொண்டதும் வீட்டுக்கு வந்து மகனும் மருமகளும் சொத்தைப் பெற்றுக்கொள்வது குறித்து பேசுவதைக் கேட்கிறார். அதன் பிறகு வங்கி சேமிப்பில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு இன்பங்களை நாடிச் செல்கிறார். அந்தப் பயணத்தில் மகனுக்காகத் தான் வாழ்வில் செய்து கொண்ட தியாகங்களை நினைந்து கொள்கிறார். தன்னுடைய மொத்த வாழ்க்கையும் மகனுக்கானது என்ற பார்வையை வலிந்து உருவாக்க நினைக்கிறார். அதனை தோயோவிடம் கூறும் போதும் அவள் தன் அம்மாவும் இப்படித்தான் கூறுவாள் என அலுத்துக் கொள்கிறாள். அப்பொழுதுதான் அவர் கூறுவதன் அபத்தம் புரிபடுகிறது. தன்னுடைய வாழ்க்கை தனக்கானதாக இருந்ததில்லை என்ற உண்மையைப் புரிந்து கொள்கிறார். அப்பொழுதுதான் மரணத்துக்கு முன்னர் மகிழ்ச்சி அடையவேண்டுமென்ற உணர்வை ஆழமாக அடைகிறார். தோயோ தனக்கு பிடித்தமான செயல்களைச் செய்வதன் மூலம் நிறைவடைவதாகக் கூறுகிறாள். அங்கிருந்துதான் பூங்கா எழுப்பவேண்டும் என்ற எண்ணத்தை அடைகிறார். ஒருவேளை அவருக்கு மரணம் நெருங்காதிருந்தால் அப்படியான செயலைக் கூட செய்திருக்கமாட்டார். முதலில் மரணத்தின் மீதான பயமாகத்தான் படம் தொடங்குகிறது. அதன்பிறகு எதனையும் ஆற்றாமலும் மகிழ்ச்சியடையாமலும் இறக்கக்கூடாதென்பதாக மாறுகிறது. அங்கிருந்து நிறைவுணர்வு நோக்கியதாக மாறுகிறது என்பதாகப் படத்தைப் புரிந்து கொண்டதாக அபிராமி குறிப்பிட்டார். படத்தின் இறுதி காட்சியில் வத்தானாபேவின் இறப்புச் சடங்கின் போது அவருடன் பணியாற்றிய சக பணியாளர்கள் அவரைக் குறித்துப் பேசிக்கொள்கின்ற நீண்ட உரையாடல் காட்சி அமைந்திருக்கும். பொதுவாகவே, இறந்தவர்கள் குறித்து தவறாகப் பேசக்கூடாதென்பது பொது வழக்கமாகப் பேணப்படுவதுண்டு. ஏனென்றால், மாண்டவர்களால் தங்களைத் தற்காத்துப் பேசமுடியாதெனச் சொல்லப்படுவதுண்டு. இந்தப் படத்திலும், இறப்புக்குப் பின் வத்தானாபேவின் மீதான குறைகூறலாகத்தான் உரையாடல் தொடங்குகிறது. ஆனால், மெல்ல மெல்ல அந்த உரையாடலின் போக்கே மாறிவிடுகிறது. அவர்கள் எல்லோரும் சேர்ந்து அவரைப் பற்றிய உண்மையைக் கண்டடைவதாக மாறுகிறது. அந்தக் காட்சி தன்னைக் கவர்ந்ததை அபிராமி குறிப்பிட்டார்.

அடுத்துப் பேசிய அரவின் குமார், வத்தானபேவுக்கு எழக்கூடிய அடிப்படையான கேள்வி என்பது வாழ்தல் எதன் பொருட்டு என்கிற கேள்வியாகும் என்றார். முதலில் தன்னுடைய வாழ்வு மகனுக்கானது என்ற பதிலைக் கண்டடைகிறார். அதன் வழி வத்தானாபே அடைவது ஒருவகையான தன்னிரக்க மனநிலையைத்தான். ஆனால், மகன் தன்னுடைய சொத்தின் மீது குறியாக இருப்பதை அறிந்து கொண்டபிறகு தான் செய்த அலுவலகப் பணிகள், மகனுக்கான தியாகம் எல்லாம் பொருளற்றுப் போவதை உணர்கிறார். அதன் பிறகு, ஒர் எழுத்தாளனுடன் இணைந்து போகங்களில் திளைக்கிறார். ஆனால், இன்பத்தின் உச்சம் அவருக்கு அளிப்பதென்பதும் சலிப்பாகத்தான் இருக்கிறது. அதன் பிறகு, அவருடன் இணைந்து பணியாற்றும் தோயோவின் இளமையும் துருதுருப்பிலும் தனக்கான மகிழ்ச்சியைத் தேடிக்கொள்ள புறப்படுகிறார். அவளுடனான அனுபவங்கள்தான் தனக்கான தனித்த மகிழ்ச்சியைத் தேட அவரை உந்துகிறது. இதுகாறும், பூங்கா எழுப்பும் மனுக்களை அலைகழித்த மக்களுக்கு நன்மை செய்வவதே தனக்கான நிறைவாக இருக்கும் என்பதை உணர்கிறார். அந்தச் செயல் கண்டடைவுக்குப் பின்னர் வத்தானாபே இன்னொருவராக மாறுகிறார். அந்தப் பணியின் போதும் அவரும் மற்ற அதிகாரிகளால் அலைகழிக்கப்படுகிறார். ஆனாலும், அந்த அலைகழிப்பு அவரைச் சோர்வடையச் செய்யவில்லை. மாறாக மற்றவரை வெறுப்பதற்கு கூட தனக்கு அவகாசம் இல்லை என்ற உரையாடலைச் சொல்கிறார். இதற்கு மாறாக, வத்தானாபேவின் செயலைக் கண்டு வியந்து நிற்கும் மற்றொரு பணியாளர் கடைசியில் தன்னிடம் முறையிடப்படும் குறைகளை நிறைவு செய்ய இயலாமல் கோப்புகளுக்குள் முகம் புதைத்துக் கொள்வதைப் போன்ற காட்சி ஒன்று இடம்பெற்றிருக்கும். ஒருவகையில், மரணம் என்பது அதுவரையில் வத்தானபே பேணி வந்த எல்லா கட்டுப்பாடுகளையும் உதறி நிறைவை நோக்கிச் செலுத்துகிறது. ஆனால், இன்னும் இந்த வாழ்க்கைக்குள் தான் வாழவேண்டும் என்கிற சூழல் கண்முன்னால் தெரிகின்றபோது அதனுடன் சமரசம் செய்து கொண்டு வாழ்வதைத் தவிர வேறுவழிகள் இல்லாமல் போவதாகவே மற்றொரு அதிகாரியின்  காட்சி அமைகிறது.

கடைசியாக, வாழ்தலின் பயன் என்ற கேள்விக்கான பொருளையே வத்தானாபே கண்டைகிறார். மற்றவருக்குப் பயன்படும்படியான செயலை எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் ஆற்றிவிட்டு வாழ்தலின் கடமையைப் பிறரின் மீது சுமத்தாமல் வத்தானாபே இறந்து போகின்றார். படத்தின் தொடக்கத்தில், வாழ்தலின் பொருள் பற்ற கேள்வி எழும் போது அதனை எதன் மீது சுமத்துவது என்ற கேள்வியை வத்தானாபே அடைகிறார். அதனைத் தன்னுடைய மகன் மீதுதான் சுமத்துகிறார். அப்படி வாழ்தலின் சுமையை எதன் மீதும் சுமத்திவிடமுடியாது. பின்னர், அப்படித்தான் மற்றவற்றின் மீதும் அந்தச் சுமையை இறக்கி ஆசுவாசம் தேட முயன்று தோல்வியடைகிறார். இறுதியாகத்தான், மற்றவர்களுக்குப் பயன் தரும் செயலைச் செய்து வாழ்ந்து நிறைவுறுவதே வாழ்தலின் பயனாக இருக்குமெனக் கண்டடைகிறார். அப்படி எல்லா சுமைகளையும் இழந்தபின் அடையும் நிறைவுடனே மரணத்தை வத்தானாபே எதிர்கொள்கிறார்.

தொடர்து பேசிய, அபிராமி இந்தப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் பல நுணுக்கமான உணர்வுகளால் அமைந்திருப்பதைக் குறிப்பிட்டார். படத்தின் தொடக்கம் முதலே பூங்கா எழுப்ப வேண்டும் என்ற மனுவை அதிகாரிகள் எவ்வாறு பந்தாடுகின்றனர் என்பது காட்டப்பட்டிருக்கும். நகராட்சியின் பணிச்சூழல், அதிகாரிகளின் போக்குகள் ஆகியவற்றால் ஏறக்குறைய அசாத்தியம் என்றே அப்பணி கருதப்படும். ஆனால், அதனை செய்து முடிப்பதற்கான ஆற்றலை வத்தானாபே எங்கிருந்து பெற்றுக் கொண்டார் என்பதை அவருடன் பணியாற்றிய சக பணியாளர்கள் கடைசியாகத் தங்களுக்குள் விவாதித்துக் கொள்வர். ஒருவழியில் அது வாழ்தலின் பொறுப்பைச் சொல்லக்கூடியதாகப் புரிந்து கொள்ளலாம்.  மேலும், பொதுவாகவே வாழ்க்கையைப் பிள்ளைகளின் மீது சுமத்தும் ஆசியர்களின் மனநிலையை இந்தப் படத்திலும் காணமுடிந்ததாகக் குறிப்பிட்டார்.

அடுத்துப் பேசிய, அரவின், பூங்கா கட்டுமானத்தின் போதுதான் வத்தானாபேவால், மேலிருக்கும் ஆகாயத்தைக் கூட ரசிக்கமுடிவதாகக் காட்சி அமைந்திருக்கும். கோப்புகள் சூழ அமர்ந்திருந்து வாழ்க்கையை இழந்தவராகத்தான் வத்தானபே இருந்திருப்பார். ஆனால், தனக்கான தனியான பணியைக் கண்டடைந்து செய்கின்ற போதுதான் அவரால் சுற்றி உள்ளவற்றை ரசிக்கமுடிகிறது. அதைப் போல, மது விடுதியில் வாழ்க்கை சுருக்கமானது எனப் பொருள்படும்படியான பாடல் ஒன்றைக் கேட்டு வத்தானாபே தன்னுடைய இறப்பின் அண்மையை உணர்ந்து அழுகிறார். ஆனால், அதே பாடலை இறப்பின் சில நிமிடங்களுக்கு முன்னால் மகிழ்ச்சியாகப் பாடுகின்றார். அது வாழ்தலின் பயனைக் கண்டடைந்த நிறைவின் வெளிப்பாடாக படத்தில் இடம்பெறுகிறது.  ஒரு வகையில் தன்னறத்தின் கண்டடைவாகவும் அதனைக் காணமுடிவதாக அரவின் தன்னுடைய பார்வையை நிறைவு செய்தார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...