அதே மேஜையில்

குளிரே ஒரு போர்வையினைப் போல நகரத்தைப் போத்தியிருந்த டிசம்பர் மாதச் சனிக்கிழமை, சன்னலை மூடியிருந்த விரிப்புகள் காலை எட்டரை மணிக்கு எப்போதும் போலக் காற்றில் விலக (எதேச்சையாக நிகழ்கிறதா, இல்லை, ஒவ்வொரு முறையும் விலகி, வெளிச்சம் கண்களை உறுத்தும்போது எட்டரையென்று எண்ணிக்கொள்கிறேனா!) விழித்தேன். கண்கள் அழுத்தமான விசையொன்றால் மூடியிருந்ததைப் போலத் திறக்க மறுக்க, கூடவே கால்கள் இரவு முழுக்க ஒரே நிலையில் கிடந்ததால் வலித்தன. தலையணையின் அடியில் வலதுகை மடிக்கப்பட்ட நிலையில், வெகுநேரம் அழுத்தப்பட்டிருக்க, மரத்துப்போய் இன்னொன்றாய் கிடந்தது. பசியின் குமட்டல் வயிற்றில் எழுந்தது. ஆனாலும் எழுந்திருக்கத் தோன்றாமல் படுக்கையிலேயே கிடந்தேன்.

ஸ்ரீஜாவும் சிவனேஷும் நாகர்கோவிலுக்குக் கிளம்பிப்போனபோது மகிழ்ச்சியாகவே உணர்ந்தேன். ஸ்ரீஜா அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட பன்னாட்டு வங்கியொன்றில் பணிபுரிவதால், அவளுக்கு நீண்ட கிறிஸ்துமஸ் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அதனால் எனக்கும் ஒரு வருடமாக ஏங்கிய தனிமை கிடைத்தது. அடுத்தடுத்த நாட்கள் என்னென்ன செய்ய வேண்டும் எனவும் பெரும் பட்டியலிட்டிருந்தேன். அவர்களை இரயில் ஏற்றி விடச் செல்கையில், சிவனேஷ் கார்மெலாரம் இரயில் நிலையத்தில்,

“டேடி, ஊர்ல ஃபிரைடு மோமோஸ் கிடைக்குமா?” ஏங்கும் குரலில் கேட்க,

“எட்டி, ஊர்ல எதாச்சும் மாலுல கிடைக்கான்னு ஒங்க அண்ணன கேட்டுப்பாரு, அவன்தான் லீவு நாளு கெடச்சா போதும். எங்கன்னாலும், காருல, நடக்கதுல, எல்லாத்தையும் ஸ்டேட்டஸ் வச்சு உயிர எடுக்கான், கக்கூஸ்ல மட்டும் வைக்கல்ல,” எனச் சொல்லவும்,

முறைத்தபடியே, “இப்போ எதுக்கு அவன இழுக்கீங்க, பிடிச்சமாதிரி வாழுகான். ரெண்டு பேரும் சம்பாதிக்கோம். காரு வாங்கலாம். ஆனா, ஓட்ட தெரியாது. கேட்டா, காரு இப்போ எதுக்குன்னு ஒரு கிளாஸ். பைசாவ சேத்து வைக்க வேண்டாம்ன்னு சொல்லல. ஆனா, கொஞ்சம் அத வச்சு சந்தோஷமாச்சும் வாழணும். இந்த வருஷம் காரு வாங்கணும். அப்புறம் ஒரு ஃபாரின் டிரிப் போறோம். பைசா செலவழிக்க கை வரலைண்ணா. நானே முழுச் செலவ பாத்துக்கேன். ஆம்பளன்னு சொல்ல ஒருமாரி இல்லையா?” அவள் சொல்லவும், பதில் பேசப் போனேன்.

சைகையாலே நிப்பாட்டினாள். “இங்க பாருங்க. சின்னதுலேயே கஷ்டப்பட்டுட்டேன். எம்பிள்ள தான் எல்லாம். அப்படின்னு டயலாக்லாம் வேணாம். ஒங்க அப்பாவும் அம்மாவும் நெய்த்தாபீஸ்ல வேலைப் பாத்தாங்க. நான் அப்படியில்லையே! நா என்ன காச தண்ணியா செலவளிக்கேன்னா! பிடிச்ச மாதிரி வாழணும். எப்போ திருந்துவீங்களோ! பழைய ஜட்டி.”

அவளுடைய இறுதி ஆயுதம் என்னைப் பழைய ஜட்டி என்று விளிப்பது. என்னுடைய முகமும், சிவனேஷின் முகமும் ஒரே அச்சில் வெவ்வேறு அளவில் ஒன்றையொன்று பார்த்துக்கொண்டன. இரயிலில் எதிரே இருந்தவர்கள் தமிழ்க் குடும்பம் என்று நினைக்கிறேன், வாயின் ஓரத்தில் இழிவான புன்னகை வழிந்தது.

என்னை விட அதிகம் சம்பாதிக்கிறாள்! கடுப்பில் வீட்டிற்கு வரும் வழியிலேயே பட்வைசர் மேக்னம் பியரை அருந்திவிட்டு, உணவருந்திவிட்டும் வந்தேன். ஏனோ யாருமில்லாமல் தனித்திருக்க, 65 இன்ச் தொலைக்காட்சிப் பெட்டியில் பிடித்த திரைப்படங்களை, நடிகைகளை, ஃபோர்னோகிராஃபியை (நடுச்சாமங்களில், சில நேரங்களில் பகலிலும்) பார்ப்பதும், வேலையும் பியரும் எனத் திட்டமிட்டபடி நகர்ந்தன.

ஸ்ரீஜா பெங்களூருவிற்குத் திரும்ப வேண்டுமெனத் திட்டமிட்டதற்கு முந்தின நாள், “ஏங்க, அப்பா மண்டல பூஜை முடிஞ்சு கிளம்பச் சொல்லுகாரு, ஒரு மூணு நாளுதான். லீவும் இருக்கு. என்ன பண்ண! ஒங்களுக்கு லீவு இல்லையே,” வேண்டுமென்றே சொன்னாள். பின்னர் அழைக்கும்போதெல்லாம் சிவனேஷ் மட்டும் பேசுவான். அவளது அலைபேசியில் வாட்ஸ்அப்பின் ஸ்டேட்டஸ்கள் இரயில் பெட்டியின் நீளம் அதிகரித்தபடியே இருந்தன. வரவில்லை எனச் சொல்லியபின், இயல்பாய்க் கழிந்த நாட்கள் வெறுமையானது. திட்டமிட்ட நாட்களை அனுபவித்துவிட்டேன்.

ஊருக்குச் செல்லலாம். ஆனால் ஸ்ரீஜா ஏன் அப்போதே வரத் தோன்றவில்லை என்று சண்டை போடுவாள். போகாவிட்டாலும் சண்டை போடுவதைத் தவிர்க்க முடியாது. தலை வலிக்க, ஃபிரிட்ஜில் ஏற்கெனவே காய்ச்சியிருந்த பாலைத் தேநீருக்காகச் சருவத்தில் ஊற்றித் தேயிலையையும் போட்டுக் காத்துக்கொண்டிருக்கும்போது அலுவலக நண்பர் அழைத்தார்,

“பாஸு, ஒங்களோட டே ஷிப்ட் நான் எடுக்கிறேன். ஈவ்னிங் நீங்க ஷிப்ட் கவர் பண்ண முடியுமா? ஒரு பெர்சனல் எமர்ஜென்ஸி, ஈவ்னிங் வெளிய போகணும்,” என்றார்.

எல்லா நேரமும் ஒன்றுதான் என்று தோன்றவே, “சரி ஜீ, எனக்கு ஓகேதான். காலைல நீங்க கவர் பண்ணுங்க, சாயந்திரம் நான் பாத்துக்குறேன்,” என்றேன்.

பலவிதங்களில் நன்றிகளைக் கூறி அழைப்பைத் துண்டித்தார். ஏகப்பட்ட சர்வர்கள் ரீபூட் செய்யப்பட வேண்டும், பொதுவாக அவ்வேலையை ஹாங்காங் நேரப்படி இரவு பத்து மணிக்கு மேல் தொடங்குவார்கள். வேலை அதிகமாக இருக்கும். இடைவேளையும் அடிக்கடி எடுக்க முடியாது. அலுவலகத்தில் எந்நேரமும் வேலையைக் கொடுத்தால் செய்வதற்கென ஒருவன் இருப்பான், இங்கே அப்படியொருவனாக நான் இருக்கவே தலையில் அடித்துக்கொண்டேன், “சரியான மரமண்ட சுன்னிடா நீ, முடியாதுன்னு சொல்றதே இல்ல,” முனகினேன். சருவத்தில் தேயிலையும் பாலும் ஒன்றாகிப் புஸ்ஸென்று பொங்கி கேஸ் அடுப்பின் பர்னரில் சிந்த நிதானமானேன்.

அழுக்குத் துணிகளைத் துவைத்தும், மதியத்திற்குச் சமைத்தும், மணி பன்னிரண்டைக் கடக்கவில்லை. நான்கு மணிக்குத்தான் ஷிப்ட். பிடிஎம் லேஅவுட்டிலுள்ள கங்கோத்திரி பாருக்குச் செல்ல முடிவெடுத்தேன். ஒரு பியர் சாப்பிடலாம், பிறகு இரண்டு மணி நேர உறக்கம், சொல்லியபடியே சடசடவென உடைகளை மாற்றி அவசரமாக எங்கோ செல்பவன்போல வீட்டை விட்டுக் கிளம்பவும், தங்கியிருந்த அடுக்கக உரிமையாளரின் நாய் வாசலில் நின்றது. நிச்சயமாகத் தெரியும், அது கடிக்காது, ஆனால் அதே நேரத்தில் குரைக்கவும் மறக்காது. வாசற்கதவை நெருங்கவும் காத்துக் கொண்டிருப்பவன்போல நின்றது. என் உயரத்தில் பாதி வரையிலும் வளர்ந்திருந்தது. பார்த்ததும் குரைத்தது. தயங்கி நிற்கவே வீட்டின் உரிமையாளர், “ஏன் பயப்படுற, நாய கண்ணுக்கு நேரா பாத்தாதான் அது கொரைக்கும். நம்ம நாயி அதிலயும் கொரைக்கும், கடிக்காது, கொழந்த மாதிரி. கண்டுக்காம போப்பா,” கன்னடத்தில் சொல்ல, குரைக்கையில் உடல் உதறினாலும், சிரித்துக்கொண்டே நடந்தேன்.

கங்கோத்திரி பார் இப்பகுதியில் வழி சொல்ல உபயோகப்படும் அளவிற்குப் பிரசித்தியானது. கூட்டம் அதிகம் தென்பட்டது. வழக்கம்போல, கடைவாசலில் அதே நபர் குடித்த மதுவால் மட்டையாகிக் கிடந்தார். அருகே ஒரு காலில்லாத, உடல் முழுவதும் சிறுசிறு புண்களோடு அமர்ந்திருந்தவர், யாசகம் கேட்டார். சிவனேஷ் இருந்திருந்தால், என்னை நிறுத்தி பத்து ரூபாய் கொடுத்திருப்பான். அவரைத் தவிர்த்து பட்வைசர் மேக்னம் ஒன்றை வாங்கிக்கொண்டு இருக்கை ஏதாவது இருக்கிறதா என அலைய, கடைசியில் ஓர் இளைஞன் மட்டுமே அமர்ந்திருந்த மேஜையில் ஒருபக்கம் காலியாக இருந்தது. மேஜையில் இரண்டு பியர்கள் இன்னும் திறக்கப்படாமலிருந்தன. கூடவே பொரித்த சிக்கனும் அவித்த வேர்க்கடலையும் இருக்க, எதிரேயிருந்த நாற்காலியில் அமர்ந்தேன். கையில் அலைபேசியில் எதையோ நோண்டியபடி தலையைச் சொறிந்தபடி அமர்ந்திருந்தான்.

அவனைக் கண்டதும் அங்கே அமர வேண்டாமென உள்ளுணர்வு சொல்லியும், கேளாமல் அமர்ந்திருந்தேன். சுற்றியிருந்தவர்களில் தமிழர்களும் கன்னடர்களும் அதிகம் தென்பட்டார்கள். பியரைத் திறந்து கொஞ்சம் குடிக்கவும், எதிரேயிருந்தவன் ஒன்றைத் திறந்து ஒரே மடக்கில் பாதி முடித்தான். அவனைக் கவனிப்பதை உணர்ந்தவன், மெல்லச் சிரித்தான். நானும் சிரிக்கவும், “பய்யாவ அடிக்கடி பாக்கிறேன்,” என்றான்.

மதுக்கடைகளில் இருப்பவர்கள் எப்பொழுதும் ஒரே உருவமாகத் தோன்றுவதுண்டு. வெளிறிய சட்டை, கால்சாராய், கலைந்த தலைமுடி, ரப்பை இறங்கிய கண்கள், பீடியோ சிகரெட்டோ உதட்டில் பட்டு வெண்மை படர்ந்த உதடுகள் அல்லது பாக்கோ போயிலையோ ஈறில் ஒதுக்கி இரத்தச் சிவப்பான உதடுகளின் இணைக்கோடுகள். இவன் யார்? முன்னேயிருந்த தட்டைத் தள்ளி “எடுத்துக்கோங்க” என்றான். தயங்கவே, மீண்டும் தட்டை நகர்த்திக் கண்களால் புன்னகைத்தான். ஒரு துண்டை வாயில் போட்டு மென்றபடியே, “வெளிய விக்கிற சிக்கன் அதிகம் சாப்பிட மாட்டேன். என்ன எண்ணெயோ?” எனச் சொல்லவும், எதுவும் சொல்லாமல் வெறித்தான்.

ட்ரவுஸர் பாக்கெட்டில் இருந்த அலைபேசி கதறவுமே தெரியும், ஸ்ரீஜாதான். அதைக் கையில் எடுத்ததும் என்ன பேச வேண்டும் என்று யோசிக்கவும், “வீடா,” என்றான். முகம் என்ன காட்டிக்கொடுத்ததோ! உடனே உதடுகளைக் குவித்து அருகிலிருந்தவர்களையும் சைகையால் அமைதியாக இருக்கச் சொல்லிக் கண்ணடித்தான்.

“ஹலோ, எங்க இருக்க, என்ன பண்றீங்க?”

“வீட்டுலதான். இப்போதான் சமைச்சேன்.” குரல் நடுங்கியது.

“பொய் சொல்லாதீங்க. எங்க, வீடியோ கால்ல வாங்க, பையன் பாக்கணுமாம்.”

“ஏய், கக்கூஸுல இருக்கேன்டி. கூப்பிடுறேன்.”

“பொய் சொல்றீங்க. இந்த வாட்டி நீங்க ஊருக்கு வந்துதான் கூட்டிட்டு போணும். அப்பா உங்கக்கிட்ட பேசணுமாம். எல்லாத்தையும் சொல்லிட்டேன். கேக்க ஆள் இல்லன்னுதான எல்லாத்தையும் பண்ணுகீங்க.”

“நிம்மதியா கக்கூஸ்கூடப் போக முடியல,” வெறுப்பில் சொல்வதுபோல அழைப்பைத் துண்டித்தேன்.

எதிரே இருந்தவன் அமைதியாகத் தலையைக் குனிந்தபடி இருந்தான். அவன் முன்னேயிருந்த ஒரு பியர் பாட்டிலின் அடியில் மட்டும் கொஞ்சம் மிச்சம் இருந்தது. இன்னொன்று திறக்கப்படாமல் இருந்தது.

“இங்கயும் நிம்மதியில்ல பாத்தீங்களா பய்யா. என்னையும் வாழ்க்கையே தூக்கிப்போட்டு ஓக்குது!” எனச் சொல்லியபடிச் சிரித்தான். நானும், “உன்ன மட்டும் இல்ல, எல்லாரையும்தான்.” என்றேன். சிரித்துக்கொண்டே மிச்சம் இருந்த பியரை ஒரே மூச்சில் குடித்தான்.

“ஆமா, சில பேர மட்டும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா டைம் எடுத்துச் செய்யுது. என்ன பாருங்க. ஆசைப்பட்ட எதுவும் என்னோட வாழ்க்கையில நடக்கிறது இல்ல. ஒருத்தன் முட்டாள் மாதிரி தெரிஞ்சா வச்சு செய்வாங்க, இல்லையா?” என்றான்.

ஏற்கெனவே இருந்த பிரச்சனைகள் மீண்டும் குமைய ஆரம்பித்தன. பேச்சு கொடுக்கத் தோன்றவே, “கல்யாணம் ஆயிடுச்சா? இவ்ளோ சலிச்சிக்கிற!” என்றேன்.

“கல்லியாணம் பண்ணினாதான் பிரச்சனை வருமா? எனக்கு அப்படிலாம் எதுவும் நடக்கலையே! ஆனாலும் எல்லாமே பொய் பொய்யா தோணுதே…”

“தம்பி. தம்பின்னு கூப்பிடலாமா?”

“உனக்கே முடியெல்லாம் வெளுத்தெடுச்சு. தம்பின்னே கூப்பிடு பய்யா.”

சுர்ரென்று ஏறியது, இருப்பினும் மெதுவாக, “சரிதான். என்னோட பிரச்சனையெல்லாம் சொன்னா உனக்கு சிரிப்பு சிரிப்பா வரும்,” என்றேன்.

“எல்லாருக்கும் இன்னொருத்தரோட பிரச்சினைய கேட்டா சிரிப்புதான் வரும். ஆனா?” சிரித்தான்.

அவன் வெளிப்படையாகப் பேசவே, பிடித்துப் போனது. “சொல்லு” என்றேன்.

“நம்ம குண்டி அரிக்கும்போது சொரிவோம். இன்னொருத்தன் பாத்துட்டு என்னடா இது மயிருன்னு… ச்சீ, சொல்லிட்டுப் போவான். அவன் குண்டி அரிச்சா என்ன பண்ணுவான்! அத நாம பாத்தா அவனோட மூஞ்சி எங்க போவும். சில நேரம், சில பேர் வருவாங்க, நம்ம பிரச்சனையெல்லாம் கேப்பாங்க. ஏதோ ஒரு நிமிஷத்துல நாம அவங்ககிட்ட உதவி கேப்போம்னு தெரிஞ்சா போதும், சூத்த மூடிட்டுப் போயிடுவாங்க,” வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு, அடுத்த பியரின் மூடியைப் பற்களால் கடித்துத் திறந்தான்.

“கொஞ்சம் மெதுவா.”

“என்ன செய்ய, வாழ்க்க என்ன போட்டு ஓக்குது.”

“எப்பா! ஓத்தது போதும்.” சிரித்தேன்.

பியரைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்தபடியே, இதற்கு மேல் அவன் என்ன பேசினாலும் பதில் பேசக் கூடாது என்கிற மனநிலையிலேயே இருந்தேன். அவன் மீண்டும் அலைபேசியிலேயே மூழ்கினான். நொடிக்கொருமுறை பார்த்துச் சிரித்தான்.

சட்டென்று, “உன்கிட்ட உதவி ஒன்னும் கேக்கலையே, ஏன் உன்னோட சூத்து மூடிட்டு!” என்றான்.

“இல்ல தம்பி. ஏதோ கஷ்டத்துல இருக்கிறபோல, அதான் உன்ன கொஞ்சம் ஃபிரீயா விடலாம்னு பேசல.” சமாளித்தேன்.

“பேசணும், குடிச்சா பேசாம வேற எப்போ எல்லாத்தையும் பேசப் போறேன்!”

அவன் முன்னே இருந்த பியர்கள் இரண்டும் வெவ்வேறு பிராண்டில் இருந்தன. அதைக் கவனிப்பதை உணர்ந்தவன், “வீடு, அம்மா, அக்கா அப்படி இப்படின்னு இத்தன வருஷமா எனக்குப் பிடிச்ச எதையும் நான் செஞ்சிக்கிட்டதே இல்ல. இப்போவாச்சும் செய்யிறேன். பட்வைசரும், கார்ல்ஸ்பெர்க்கும் என்னோட ரொம்ப நாள் ஆச. இன்னக்கி குடிச்சு அதையும் தீத்துக்கப் போறேன்.” பலமாகச் சிரித்தான்.

“என்னப்பா, இதுல என்ன இருக்கு? ஏன், நாளைக்கும் இதையே வாங்கிக் குடி.”

பதிலளிக்காமல் அலைபேசியில் மூழ்கினான்.

பாதி பியர் குடித்ததுமே மனமெல்லாம் ஸ்ரீஜாவிடமே முட்டி மோதியது. இந்தத் திருமணமும் குழந்தையும் இன்னும் பலவீனமானவனாக மாற்றிவிட்டன. அலுவலகமும் குனிந்து நடப்பதாலேயே அதிகம் வேலை வாங்குகிறது. மொத்தத்தில் ஒரு இளிச்சவாயன்! வீட்டிற்கு ஒரே செல்ல மகள், அவள் அப்பாவும் நாகர்கோவிலில் பலசரக்குக் கடை வைத்திருக்கிறார். ஆள் ஒரு மாதிரி அமைதியானவர்தான், அவள் அம்மாவுக்குத்தான் என்னைக் கண்டாலே பிடிப்பதில்லை.

எதிரே இருந்தவன் அடுத்த பியரைக் குடிக்க ஆரம்பித்தான். மெல்ல நோட்டமிட்டவன், “என்ன?” எனக் கேட்கும்போதே தொனி வேறு மாதிரி இருந்தது.

“ஒன்னுமில்ல. சும்மாதான்.”

“எல்லாமே பொய். ச்சும்… எங்க அம்மா ஒரு ஃபிராடு. அப்பான்னு, நான் பொறந்ததுக்கு அப்புறம் ஒருத்தன் வந்தான். அக்கா பாவம்தான். நானும் அவளும் சின்னதுலயே வேலை பாத்தோம். அவளுக்குப் பதினாறு வயசுலயே லவ். அவன் ஒரு பொறம்போக்கு. வயித்துல ஒன்னும், கையில ஒன்னும் கொடுத்த பொறவுதான் தெரியும், அவனுக்கு ஏற்கெனவே ஒரு கல்யாணம் ஆயி எட்டு வயசுல ஒரு பையன் இருக்கான். இப்போ ரெண்டு வீட்டுக்கும் போறான், வாறான். அவனுக்குலாம் எல்லாம் கெடைக்குது. எங்க அம்மா இப்ப இன்னொருத்தன அப்பான்னு கூப்பிடச் சொல்லுது. ஆனா நான்…” விசும்பினான்.

என்ன பதில் சொல்ல! மௌனமாகவே இருந்தேன்.

“நீ போட்டிருக்கல்ல, பனியன், ஷார்ட்ஸ், ஷூ இந்த மாதிரிலாம் உடுத்த ஆசைதான். நீ கைல வச்சிருக்கியே ஃபோன், ஐபோன்தான? மாசம் சரியா ஒன்னாம் தேதி சம்பளம் வரணும். படிக்கலதான். ஆனா, ஒழுங்கா வேலைக்குப் போனேன். கைல கெடைக்கத பெருசா செலவும் பண்ண மாட்டேன். நீ பாத்திருக்கியா? கட்டிடம் கட்டும்போது காங்கிரீட் போடுவாங்கல்ல. அந்த வேலை, கையும் காலும் சிமெண்ட்ல நின்னு வெந்து போகும். நைட் ரெண்டு நைன்டி போனாதான் தூக்கம் வரும். என்ன பண்ணி எதுக்கு?” நிறுத்தினான். அவனுடைய உள்ளங்கையைக் கவனித்தேன், வெண்தேமல் படர்ந்திருந்தது.

“அப்புறம், எங்க ஏரியாலதான் ஒரு பொண்ண லவ் பண்ணேன். இவன் இளிச்சவாயன்னு அவளுக்கும் தெரிஞ்சி போச்சு. அடுத்த மாசம் அவளுக்கு கல்லியாணம். என் மொதலாளி, எனக்கு எண்ணூறு ரூவா கொடுக்கான். எனக்கப்புறம் வந்தவனுக்குலாம் ஆயிரம் ரூவா சம்பளம். லவ்டேகபால்.”

மீண்டும் அலைபேசி ஒலிக்க, அவனைப் பார்க்கவும், தலையை ஆட்டி அமைதியானான். ஸ்ரீஜாவின் அப்பா.

பவ்யமாக எழுந்து நின்று அழைப்பை எடுத்தேன்.

“மக்கா. பிள்ள ஊருக்கு வந்திருக்கா. நீ என்னைக்கு வார?”

“நான் நியூஇயருக்கு முந்தின நாள் கிளம்பி வாரேன் மாமா. வேற, ஸ்ரீஜா ஏதாச்சும் சொன்னாளா…” நீட்டி முழக்கவும், புரிந்தவர்போல,

“சொன்னா… எம்பிள்ளதான? தெரியும் அவ லட்சணம். அவ அம்மைக்க கொணம் அது. என்ன செய்ய? நீங்க எதுவும் காட்டிக்க வேண்டாம். பேசிக்கலாம். யாரோ ஒருத்தர் பொறுத்தா போதும். என்ன நான் சொல்லது. ஒங்கள தப்பு சொல்ல மாட்டேன். அவ நெனச்ச மாதிரியே நடக்கட்டும். நீங்க ஊருக்கு வந்து கூட்டிட்டுப் போங்க. சவம், அவங்க அம்ம என்ன படுத்தாத பாடா! எதாச்சும் வேலையா இருப்பீங்க. ஒன்னும் இல்ல, பிள்ள பேசத மனசுக்குள்ள எடுத்துட்டு ஒன்னும் கொழப்பிக்க வேண்டாம். எல்லாம் சரியாவும்.”

மனம் கொஞ்சம் இலகுவானது. ‘அப்பாடா!’ பெருமூச்சை இழுக்கவும் எதிரே இருந்தவன் பார்த்துக்கொண்டிருந்தான்.

“எனக்கு மட்டும் ஏன் இப்படி?” சட்டென்று தலையில் அடித்துக்கொண்டவன், மேஜையில் ஓங்கிக் குத்தினான். அருகே இருந்தவர்கள் என்னையும் அவனோடு இணைத்துப் பார்க்கவும் உள்ளுக்குள் பதறியது.

“ஏய், என்ன பண்ணுற?” மெல்லக் கேட்கவும்,

“எங்க அம்மாவ கொல்லணும். அவ அரிப்புக்கு என்னய பெத்துப் போட்டுட்டு. என்னால எவனையும் ஏமாத்த முடியல. பொய் சொல்ல முடியல. ஒருத்தன நம்பினா, அவன் என்னைய ஏமாத்துகான்னு தெரிஞ்சும் திரும்பி அவனுக்ககிட்டயே போறேன். எல்லாரும் நல்லவன்தான். எல்லாம் அவனுக்க நேரம் இல்லையா. நாம இப்படி இருந்தா அவங்க என்ன பண்ணுவாங்க. நாமெல்லாம் இந்த ஒலகத்துல பொறக்கவே கூடாது, இல்ல பொறந்தவுடன செத்திரணும்.” இரண்டு பியர்களையும் குடித்துவிட்டான். மெல்லத் தள்ளாடி எழுந்தவன், எதுவும் சொல்லிக்கொள்ளாமல் வெளியே சென்றான். மாமா பேசிய மகிழ்ச்சியில் மிச்சமிருந்த பியரை அருந்த ஆரம்பித்தேன், கண்ணாடி வழியே வெளியே பார்க்கையில், அவன் யாரிடமோ அலைபேசியில் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது.

இடையிடையே தேம்பி அழுதான். கண்களெல்லாம் சிவந்து, முகம் வெளுத்துப் போயிருந்தது. யாரிடம் பேசுகிறான்? அம்மாவிடமா? காதலியிடமா? அக்காவிடமா? இல்லை, முதலாளியிடமா? இறைஞ்சுகிறான். மெல்ல பியரைப் பருகியபடி கவனித்துக்கொண்டிருந்தேன். அதே மேஜையில் அவன் வாங்கியிருந்த பொரித்த சிக்கனும் அவித்த வேர்க்கடலையும் மிச்சமிருக்க, அருகில் யாருமில்லாததால் ஒரு துண்டு சிக்கனை வாயில் போட்டேன். எதிரே இன்னொரு வயதான நபர் வந்தமர்ந்தார். மேஜையில் இருந்த தட்டுகளை அவரை நோக்கித் தள்ளிவிட்டேன். தலையசைத்தார். மிச்சமிருந்த பியரை வேகமாக அருந்தி வீட்டிற்குச் சென்றேன். நினைத்த மாதிரியே இரண்டு மணி நேரம் உறங்கியெழுந்து, வேலையைப் பார்க்க ஆரம்பித்தேன். இரவானதும் பசிக்க, மதியம் அருந்திய பியரும் வேலையும் சேர்ந்து தலையை அழுத்த, அடுத்து இன்னொன்று குடிக்கலாம் என்றெண்ணி, அரை மணி நேரத்தில் உணவும் வாங்கி வந்துவிடலாம் எனக் கருதி ‘BRB’ ஸ்டேட்டஸ் வைத்து, மீண்டும் கங்கோத்திரிக்கு வேகமாக நடந்தேன். மழையும் தூறியது. வாசலில் கிடந்தவர் மழைச்சாரல் பட்டும் அதே நிலையிலேயே கிடந்தார். பியரை வாங்கி மேஜையில் அமராமல் நின்றபடியே, காலையில் அமர்ந்த மேஜையைக் கவனித்தேன். அவன் அங்குதான் அமர்ந்திருந்தான். சட்டென்று விழிப்படைந்து அவன் கண்ணில் படாதவாறு ஒளிந்து நின்றேன்.

காலையில் இருந்ததைவிட மிதமிஞ்சிய போதையில் இருப்பதுபோலத் தெரிந்தான். தலை ஒரே இடத்தில் நிற்கவேயில்லை. உடலும் அங்குமிங்கும் தள்ளாடியபடி இருந்தது; அலைபேசியில் எதையோ நோண்டியபடி இருந்தான். இப்போது அவன் முன்னே இருந்தது ராயல் சேலஞ்ச் அரை போத்தல். பாதி மிச்சமிருக்க வாயில் எதையோ முனகியபடி இருந்தான். மாலையிலிருந்து கடை அடைக்கும்வரையிலும், மென்மையான சங்கீதமுள்ள பாடல்கள் ஒலிப்பது வழக்கம்.

ஏனோ அவனை அருகே சென்று நோட்டமிட வேண்டும் என்று தோன்ற, மெதுவாகச் சென்றேன். அலைபேசியில் வெவ்வேறு புகைப்படங்களைப் பார்த்தபடி இருந்தான். பழைய கன்னடப் பாடல் ஒலிக்கவும், திடீரென்று எழுந்து பாடல் வரிகளைப் பாடினான். சுற்றியிருந்தவர்கள் அவனைக் கண்டு சிரிக்கவும், இன்னும் உற்சாகமாகிக் கை கால்களை அசைத்தான். இசையின் தொனியிலேயே அதுவொரு சோகப் பாடல் எனப் புரிந்தது. பரிதாபமாக இருந்தது. காலையில் இருந்தே அவனுடைய நடவடிக்கைகளைக் கவனித்ததில், தவறான முடிவொன்றை எடுத்துவிடுவானோ எனப் பயந்தேன். அப்படியிருந்தாலும், நான் என்ன செய்ய முடியும்? ஏற்கெனவே இருபது நிமிடங்கள் கடந்துவிட்டன. நீண்ட நேரம் அங்கேயே நிற்காமல் வீட்டிற்குத் திரும்பினேன்.

அடுத்த நாளும் கண்ணில் வெளிச்சம் படவே விழித்தேன். வழக்கமான வேலைகள்; பன்னிரண்டு மணிக்கு மேல் என்ன செய்ய; ஸ்ரீஜாவும் சிவனேஷும் வீட்டிலில்லை. ஞாயிற்றுக்கிழமை, விடுமுறை வேறு. காலை உணவருந்தாமலேயே, கங்கோத்திரிக்குக் கால்களை விட்டேன். சாம்பல் வானம், சாரலென மழைத்தூறலும் பொழிந்தபடி இருந்தது. அருகே செல்லும்போதே கடையின் முன்னே சிறு கூட்டம் கூடியிருந்தது. நேற்றிருந்த அதே யாசகர், இன்னொரு மரத்தடியில் அமர்ந்திருந்தார். பத்து ரூபாயைப் போடலாம் என்றெண்ணி அருகே சென்றேன். அவர் என்னைக் கவனிக்காமல் இருக்கவே, கொடுக்காமல் திரும்பினேன்.

முன்னால் செல்லச் செல்ல காவலர்கள் சிலர் இடையிடையே நிற்பதும் தெரிந்தது. அவனாகத்தான் இருக்கும், நிச்சயமாக அவனேதான். தற்கொலையா? இல்லை, குடித்தே இறந்துவிட்டானா?

கீழே ஒரு உடல் ஸ்ட்ரெச்சரில் வெள்ளைத் துணி மூடப்பட்டுக் கிடப்பது தெரிந்தது. அந்த உடலையும் தாண்டி சிலர் மதுக்கடைக்குள் நுழைந்துகொண்டிருந்தார்கள். ஞாயிற்றுக்கிழமையல்லவா! கடைக்குள் சிரிப்பு சத்தம் வழக்கத்தைவிட அதிகமாக ஒலித்தது. பார் ஓனர் காவல்துறையினரிடம் பேசிக் கொண்டிருந்தார்.

அலைபேசி ஒலித்தது. அலைபேசியை எடுக்கத் தோன்றவில்லை. யார் அங்கே கிடப்பது என்பதிலேயே மனம் மையம் கொண்டிருந்தது. என்னவெல்லாமோ சிந்திக்க ஆரம்பித்தேன். நினைத்திருந்தால் ஆறுதல் வார்த்தைகள் சொல்லி, காப்பாற்றி இருக்கலாமே! இறப்பில் எனக்கும் பங்குண்டு. அலைபேசி மறுபடியும் ஒலிக்கவும் ஏற்றேன்,

“அப்பா… அம்மா இன்னைக்கே டிக்கெட் போட்டாச்சே, நாங்க நாளைக்கு வாரோமே. ஐ, ஜாலி!” சிவனேஷ் பேசினான்.

“சரிப்பா… அப்பா வெளிய இருக்கேன். வீட்டுக்குப் போனதும் பேசுறேன்…” சொல்லவும், “நா இல்லைல்லா… அதான் அப்பா ஜாலியா இருக்காரு போல…” அவள் குரல் கேட்டது.

“அப்பா, அம்மா லவுட் ஸ்பீக்கருல போட்டிருக்கு…”

“சரி சரி… ஒரு நிமிஷம்… நான் கூப்புறேன்…”

“சொல்லத கேளுங்க. நீங்க இங்க வாராதுக்கு, அப்பாவே அங்க வந்து பேசுகேன்னு சொன்னதுனால வாரேன்.” அவள் சொல்லவும்.

“சரி வந்து பேசுவோம்.” அழைப்பைத் துண்டித்தேன்.

மனம் பதறியது. நேற்று அவன் யாரிடமெல்லாம் பேசினான் என சிசிடிவி போட்டுப் பார்த்தால், நானும் உடன் இருப்பேன். ஏதாவது அவனிடம் பேசியிருக்கலாமே! ஓர் இறப்பு என் முன்னே நிகழ்ந்துவிட்டது. உள்ளங்கால்கள் வியர்த்தன. கனமாக உணர்ந்தேன். பாருக்குள் செல்லலாமா? வேண்டாம். அதோ தெரிகின்றதே, அதே மேஜையில்தானே இருந்தான். ஒருவேளை அது நானாகவும் இருந்திருக்கலாம். என்னனமோ தோன்றியது.

பாவம்.

 நேற்று என்னோடு மேஜையைப் பகிர்ந்த வயதானவர் கடந்துபோனார். என்னைக் கண்டதும் தலையசைத்தார்.

“ஒன்னு உள்ள போங்க, இல்ல வெளிய வாங்க.” பின்னால் இருந்து இன்னொருவர் இடிக்கவும் திரும்பினேன்.

அதிர்ச்சியாகி அவனையும் கீழே கிடந்த உடலையும் மாறி மாறிப் பார்க்க,

“டெய்லி ஒருத்தன் இங்க தூங்குவான்லா. அவன்தான் மொத்தமா தூங்கிட்டான். நல்லவேளை உன்ன நேத்தைக்குப் பாத்தேன் பய்யா. பாரு, நீயெல்லாம் எவ்ளோ சம்பாதிக்கிற. எப்புடி டிரெஸ் போடுற, ஜம்முன்னு இருக்க. கைல டக்கர் ஃபோனு. உனக்கே அவ்ளோ பிரச்சனை? நானெல்லாம் பிளாட்பாரம். சாவுலாம்னுதான் வந்தேன். எப்பா, ஒரு ஃபோனு பேசதுக்கே எப்படி பயப்படுக. காலெல்லாம் நடுங்கி. திரும்பியும் அவங்க கிட்ட தானே போயாகணும். ச்செய் என்ன வாழ்க்கை பய்யா.”

பேயறைந்த முகம் என்னுடைய முகத்தைப் போலத்தான் இருக்கும்.

“உள்ள வா… நேத்து இருந்த மேஜை ஃப்ரீயா இருக்கு. இன்னைக்கு என்னோட ட்ரீட். நீயொரு வாழும் புத்தர் பய்யா.” கையைப் பிடித்திழுத்து அதே மேஜையை நோக்கிச் சென்றான்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...