ஜாங் யி மாவ்வின் மூன்று படங்கள் –  கலை, வண்ணம், வரலாறு

இயக்குநர் சஞ்சய் குமார் அவரின் நேர்காணல்களில் தவறாமல் ‘ரெட் சொர்கம்’ படத்தைக் குறிப்பிடுவார். சிறுவயதில் தான் கண்ட அப்படத்தில் இடம்பெற்ற சோளக்கொல்லைக்குள் நிகழும் காதல் காட்சித்தான் மலேசியத் தமிழர்களின் இரப்பர் தோட்ட வாழ்க்கையைப் படமாக்க வேண்டுமென்ற எண்ணத்தைத் தனக்குள் விதைத்தது எனப் பல நேர்காணல்களில் குறிப்பிட்டுருக்கிறார். அவருடைய பரிந்துரையின் வாயிலாகத்தான் ‘ரெட் சொர்கம்’ படத்தின் இயக்குநர் ஜாங் யி மாவை அறிந்தேன்.

ஜாங் யி மாவ்

இயக்குநர் ஜாங் யி மாவ் (Zhang Yi Mao) சீனாவின் ஐந்தாம் தலைமுறை இயக்குநர்களில் மிக முக்கியமானவராகக் கருதப்படுகின்றார். 1960களில் சீன பண்பாட்டில் ஊடுருவியுள்ள பழமைவாத நிலவுடைமைச் சிந்தனைகளைக் களைந்து நவீன சோசிலிச சிந்தனையை உருவாக்க கம்யூனிச அரசால் கலாச்சாரப் புரட்சி தொடங்கப்பட்டது. நவீன சீன வரலாற்றில் கலாச்சாரப் புரட்சி மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. அரச அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களிடையே கட்டாய மாற்றங்களைச் செய்ய முனைந்த புரட்சியாக நினைவுக்கூரப்படுகின்றது. அந்தக் காலப்பகுதியில்தான் மாணவராக இருந்த ஜாங் யி மாவ் கல்வியை விட்டு அரசக் கட்டளையின்படி தோட்டத்தில் கட்டாய தொழிலாளியாக மூன்றாண்டுகள் பணியாற்றினார். அப்பொழுதே, கலை மற்றும் ஓவியத்தில் அவருக்கு ஆர்வம் இருந்தது. ரத்தத் தானம் செய்வதன் வழி கிடைக்கும் பணத்தைக் கொண்டு தன்னுடைய முதல் காமிராவை வாங்கினார். 1970களின் பிற்பகுதியில் சீன அதிபர் மாவோவுக்குப் பின்னரான காலக்கட்டம் புத்தொளி காலக்கட்டம் எனச் சொல்லப்படுகிறது. அந்தக் காலப்பகுதியில் சீனாவில் வரலாறு, பொருளாதாரம், கலை ஆகியவற்றில் புதிய சிந்தனைகள் வரவேற்கப்பட்டன. புகழ்பெற்ற பெய்ஜிங் திரை அகாடமியில் பயின்ற இயக்குநர்கள் புதிய அலை இயக்குநர்களாக எழுந்து வருகின்றனர். அந்தக் காலப்பகுதியில் நவீனச் சீனத் திரைப்படத்துறையில் எழுந்து வந்த இயக்குநர்களே ஐந்தாம் தலைமுறை இயக்குநர்கள் எனச் சொல்லப்பட்டனர். அந்தக் காலப்பகுதியில்தான் ஜாங் யி மாவ் பெய்ஜிங் திரை அகாடமியில் மாணவராகச் சேர்ந்து ஒளிப்பதிவு துறையில் பயிற்சி பெறுகிறார். 1987இல் தன்னுடைய முதல் படமான ‘ரெட் சொர்கம்’ தொடங்கி 2020 வரையில் பதின்மூன்று திரைப்படங்களை ஜாங் யி மாவ் இயக்கியிருக்கிறார். உலகளவில் திரைப்படங்களுக்காக வழங்கப்படும் உயரிய விருதுகளான தங்கக் கரடி (Golden Bear) உள்ளிட்ட பல முக்கிய விருதுகளை வென்றிருக்கிறார். இவருடைய திரைப்படங்கள் சீனாவின் அரசியல், பண்பாட்டுக் களங்களின் இயல்பான முகத்தை உலக அரங்கில் முன்வைப்பவையாகக் கருதப்படுகின்றன.

இயக்குநர் சஞ்சய் குமார் பரிந்துரைத்த ஜாங் யி மாவ் இயக்கிய ‘ரெட் சொர்கம்’ (Red Sorghum), ‘டூ லீவ்’ (To Live), ‘சிவப்பு வண்ண விளக்கை ஏற்று’ (Raise Red Lantern) ஆகிய மூன்று படங்களைப் பார்த்தேன். மூன்றுமே நாவல்களிலிருந்து படமாக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் அவற்றின் பொது இயல்பு. அடுத்ததாக, மூன்றுமே சீனாவின் நீண்ட பண்பாட்டு வரலாற்றின் வெவ்வேறு பகுதிகளைச் சொல்லக்கூடியவை. ஒருவகையில் வரலாற்றை முன்வைப்பதன் வாயிலாக அதன் வெவ்வேறு பகுதிகளைக் கேள்வியெழுப்பக்கூடியவை. அதனைத் தன் தேர்ந்த கலையால் ஜாங் யி மாவ் சாத்தியப்படுத்தியிருக்கிறார்.

ஒரு திரைப்படக் காட்சியில் உடனே பார்வையாளனின் கவனத்தை ஈர்ப்பது ஒளியும் வண்ணமும்தான். ஒரே வண்ணம் வெவ்வேறு காட்சிகளில் கொள்ளும் நுட்பமான உணர்வு வெளிப்பாடுகளைத் தன்னுடைய முதல் படமான ‘ரெட் சொர்கத்திலே’ ஜாங் யி மாவ் நிகழ்த்தியிருப்பார். ‘ரெட் சொர்கம்’ (Red Sorghum) திரைப்படம் 1987இல் வெளிவந்தது. ‘ரெட் சொர்கம்’ என்ற பெயரிலே வெளியான நாவலைத்தான் ஜாங் யி மாவ் படமாக்கினார். 1937-1945ஆம் காலப்பகுதியில் சீனாவின் கிழக்குப் பகுதியில் இருக்கும் செஞ்சோளக் கொல்லைப் பகுதியில் படத்தின் களம் நிகழ்கிறது. மூன்று தலைமுறைக்கு முன்பு தன் பாட்டிக்கு நிகழ்ந்த கதையைக் கதைசொல்லிச் சொல்வதாகப் படம் தொடங்குகிறது. வயது முதிர்ந்த தொழுநோய் பீடித்த கொல்லை உரிமையாளருக்கு ஜியு யெர் எனும் இளம் பெண் மணம் புரிய அனுப்பப்படுகிறாள். வறுமை, பெற்றோர் கட்டாயத்தின் காரணமாகவே அத்திருமணத்திற்கு உடன்படுகிறாள். அவளை மணமகன் வீட்டுக்கு அழைத்துச் செல்லும் பல்லக்குத் தூக்கிகள் தங்கள் முதலாளியின் நோயையும் அவளது அழகையும் சொல்லிக் கேலி செய்து பாடுகின்றனர். வழியில் அவர்களைக் கொள்ளையன் ஆயுதம் காட்டி மிரட்டுகின்றான். தன்னுடைய வாழ்வை இழந்துவிட்டதாய் எண்ணும் ஜியு யெர் எவ்வித மறுப்புமின்றி கொள்ளையனுடன் செல்கிறாள். பல்லக்குத் தூக்கிகளின் தலைவனான ஜியாங் வென் அவளது கையறு நிலையை உணர்கிறான். கொள்ளையனை வீழ்த்தி முதலாளியிடம் அவளைச் சேர்ப்பிக்கின்றான். அவ்வூரின் பண்பாட்டு வழக்கப்படி திருமணமான மூன்றாவது நாள் பிறந்த வீட்டுக்குச் செல்கின்ற ஜியு யெரை அவளது தந்தை கடிந்து கொள்கிறார். தங்களின் போக்குவரத்துக்காகக் கழுதையைக் கூட வழங்கியிருக்கும் முதலாளியின் கருணைக்கு இணங்கி அவள் அங்கேயே இருக்கவேண்டுமென அறிவுரைகள் கூறுகிறார். வீட்டுக்குச் செல்லும் வழியிலே ஜியாங் வென் அவளைக் கடத்தி செஞ்சோள கொல்லைக்கு அழைத்துச் செல்கிறான். அங்குச் செஞ்சோளக் கொல்லையில் படரும் சூரிய ஒளியின் பின்னணியில் அவளுடன் உறவு கொள்கிறான் ஜியாங் வென்.

பெற்றோர் வீட்டிலிருந்து ஊருக்குத் திரும்பும்போது வயதான தன்னுடைய கணவன் இறந்த செய்தியை ஜியு யெர் அறிகின்றாள். அந்தத் திடிர் மரணச் செய்தியால் செஞ்சோளக் கொல்லைக்கும் சாராய ஆலைக்கும் அவளே உரிமையாளராகிறாள். தொழிலாளர்களில் ஒருவனான ஜியாங் வென்னைத் தன்னுடையத் துணையாகக் கொள்கிறாள். அந்தக் கொல்லையில் பணியாற்றும் தொழிலாளர்களுடன் இணைந்து ஒரே குடும்பமாக வாழத் தொடங்குகிறாள். அவர்களின் வாழ்வு ஜப்பானிய வீரர்களின் படையெடுப்பால் சிதைந்து போகிறது. சீனாவுக்குள் படையெடுத்து வரும் ஜப்பானிய வீரர்கள் செஞ்சோளக் கொல்லையை நாசப்படுத்துகின்றனர். அவர்களுக்கு அடிப்பணிய மறுப்பவர்களுக்குக் கடுமையான தண்டனைகளை வழங்குகின்றனர். அவர்களை எதிர்ப்பதற்காக ஜியு யெர் தொழிலாளர்களை ஒன்று திரட்டுகிறாள். ஜப்பானிய வீரர்களுடனான அவர்களின் மோதல் கடுமையான சேதத்தை விளைவிக்கிறது. அந்தச் செஞ்சோள கொல்லைப் பகுதியின் வாழ்வே மொத்தமாய்ச் சிதைந்து போகிறது.

சிதைந்து போன வாழ்வைத் தனக்குள் மீட்டெடுத்துக் கொள்ளும் சமூகத்தின் கதையாடலாகவே ‘ரெட் சொர்கம்’ படம் மாறுகிறது. அப்படிச் சிதைந்து போன மொத்த வாழ்வையும் சிவப்பு நிறக் காட்சி ஓவியங்களாலே ஜாங் யி மாவ் வரைந்திருக்கிறார். அந்த அளவு படம் முழுவதும் வாழ்வின் பல பகுதிகளைச் சிவப்பு வண்ண ஒளியால் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கட்டாய மணம் புரியவைக்கப்படும் ஜியு யெர் சிவப்பு உடையணிந்து பல்லக்கில் வறண்ட நிலமும் கொல்லையின் செம்மை ஒளியும் படர குழப்பமும் வெறுமையும் சூழ்ந்திருக்கிறாள். அவளின் மனத்தை ஜியாங் வென்னால் ஊடுருவி அறிய முடிகிறது. அவளைச் சொந்தமாக்கிக் கொண்டு செஞ்சோளக் கொல்லைக்குள் உறவு கொள்கிறான். காதலின் மயக்கத்தில் அவள் மீது படரும் செம்மையொளி அந்த வாழ்வுடன் அவளுக்கு உருவாகும் பிணைப்பாகத் தெரிகிறது. முரட்டுக் குணமிக்க ஜியாங் வென், கட்டாயத் திருமணம் புரிவதால் ஆன்மா மரித்துப் போனவளாக மாறியிருக்கும் ஜியு யெரைத் தன்வசப்படுத்துகிறான். கொள்ளையனால் கடத்தப்பட்டப்போதும் கட்டாய மணம் புரிந்தப்போதும் அவனால் அதனை வெளியில் நின்று மற்றவர்களைப் போல வேடிக்கை பார்க்கமுடிவதில்லை. அவளின் மனம் அடையும் நிர்க்கதி நிலையை அவனால் உணர முடிகிறது. ஆனால், அவனுடைய வெளிப்பாடு என்பது முரட்டுத்தனமானதாகவே இருக்கிறது. அந்த முரட்டுத்தனத்தை வன்முறையோடு பொருத்திப் பார்க்க முடியவில்லை. படம் காட்டும் புழுதியும் வறண்ட நிலப்பரப்பும் கொண்ட மக்களின் இயல்பான மனநிலையாகவே அதனைக் காண முடிகிறது. அந்த மனநிலை பொருந்திய தனித்துவமானவனாகவே ஜியாங் வென் காட்டப்படுகிறான். கொள்ளையனால் பணையக் கைதியாகத் தடுத்துவைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு வரும் ஜியு யெருக்கு ஆலைத் தொழிலாளர்கள் தாங்கள் காய்ச்சிய சோளச் சாராயத்தைத் தந்து மகிழ்கின்றனர். ஆனால், கொள்ளையர்களை எதிர்த்து அவளை விடுவிக்க துணிவற்றுத் தானே தப்பி வந்தவளைக் கொண்டாடும் மக்களை ஜியாங் வென் கடிந்து கொள்கிறான். அவர்கள் காய்ச்சி வைத்திருக்கும் சாராயச் சாடிகளில் சிறுநீரைக் கழிக்கின்றான். சிறுநீரும் சாராயமும் நொதித்துத் தரமான சாராயம் உருவாகுவதாகக் காட்சி அமைக்கப்படுகின்றது. பழங்குடி தன்மை மாறாத அந்த வாழ்க்கையின் ஜீவனாகவே ஜியாங் வென் அமைகின்றான். அவர்கள் வாழ்க்கை முறையின் ஆதாரமான வறட்டுத்தனத்தைக் கொண்டு வாழ்வை நிகர் செய்கின்றான். அவன் காய்ச்சுகின்ற அந்தச் சாராயத்துக்குச் சிவப்பு ஷிபாலி என அவர்கள் வாழும் ஊரின் பெயரே சூட்டப்படுகிறது. வாழ்வு வளப்படுகிறது. அந்த வாழ்வுக்குள்தான் ஜப்பானியர்களின் படையெடுப்பு நிகழ்கிறது. இந்தப் பின்பாதியில் படத்தில் காட்டப்படும் மொத்த சிவப்பு ஒளியும் சிதைவையும் அழிவையும் காட்டுவதாக மாறுகிறது. வெடி, ரத்தம், அழிவு என ஜப்பானியருடனான போர் பலரின் உயிரையும் காவு வாங்கி வாழ்வைச் சிதைத்துப் போடுகிறது. அங்கு வாழும் மக்களைத் திரட்டி ஜப்பானியர்களுக்கு எதிராகப் போராடத் துணிந்த ஜியு யெர் குண்டு வெடிப்பால் இறந்து போகின்றாள். அழிவின் விளிம்பில் சூரிய ஒளியை மறைக்கும் கிரகணத்தின் செவ்வொளி அப்பகுதியெங்கும் படர்கிறது. அந்தக் காட்சியில் அவர்கள் வாழ்வின் ஆன்மீகச் சாரமான மறுபிறப்பை நோக்கி தென்மேற்குத் திசைக்குத் தாயை ஏகச் சொல்லி அவளுடைய மகன் ஒப்பாரிப்பாடலைப் பாடுகிறான். சிதைவிலிருந்து மீளும் ஆன்மீகத்தின் ஒளியும் சிவப்பாக மாறுவதிலிருந்து படம் நிறைவுறுகிறது. ஒரே விதமான ஒளியும் வண்ணமும் காட்சிகளில் உருமாறி மனிதர்களின் ஆன்மீகத்தை நோக்கிப் பயணிப்பதை முதல் படத்திலே ஜாங் யி மாவ்வால் கடத்த முடிந்தது.

ஜாங் யி மாவ்வின் ‘சிவப்பு வண்ண விளக்கை ஏற்று’ (Raise the red lantern) திரைப்படம் 1991இல் வெளிவந்தது. 1990இல் வெளிவந்த ‘மனைவிகளும் வைப்பாட்டிகளும்’ எனும் நாவலைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டது. 1920 களின் காலப்பகுதியில் படம் நிகழ்கிறது. சென் குடும்பத்து நிலக்கிழாரின் அரண்மனையில் இருக்கும் அந்தப்புரத்துக்குள் நான்காவது மனைவியாக 19 வயதே ஆன சோகிலியான் வந்து சேர்கிறாள். வறுமையான குடும்பச் சூழல் கருதி பல்கலைக்கழகப் படிப்பைப் பாதியிலே விட்டுவிட்டு நான்காவது மனைவியாக வளர்ப்புத்தாயின் கட்டாயத்தால் வந்து சேருகிறாள். அந்தக் குடும்பத்துக்கெனச் சில தனித்த வழக்கங்கள் இருக்கின்றன. கிழாரின்  ஒவ்வொரு மனைவிக்கும் தனித்த அந்தப்புர வீடுகள் இருக்கின்றன. அவருக்குப் பிடித்த மனைவியின் வீட்டைச் சுற்றிலும் இரவில் சிவப்பு விளக்குகள் ஏற்றப்பட்டுத் தொங்கவிடப்படுகின்றன. அவர் தெரிவு செய்யும் பெண்ணுக்குச் சிறப்புக் கால் பாத ஒற்றடத்தைச் சேடிப் பெண் வழங்குகிறாள். மறுநாள் அவளுக்கு விருப்பமான உணவே மேசையில் பிரதானமாக இருக்கிறது. அது ஒருவகையில் அதிகார நிலையாகவே கருதப்படுகிறது. அந்த அதிகாரத்தைத் தக்கவைக்கவும் தட்டிப்பறிக்கவும் எஞ்சிய மூன்று மனைவிகளுக்குள் மறைமுகமான மோதல்களும் காய்நகர்த்தல்களும் நடந்து வருகின்றன. முதலில் இந்த அதிகார மோதலை அறிந்து கொள்ள முடியாதவளாகவே சோகிலியான் இருக்கிறாள். ஒப்பரா பாடகியான மூன்றாவது மனைவி தன்னுடைய கலையாலும் இரண்டாவது மனைவி தன்னுடைய நயவஞ்சகமான பேச்சுகளாலும் அவளை ஏமாற்றுகின்றனர். அவர்களின் இரையில் விழுந்து கணவனுடனான தன்னுடைய முறையைப் பறிகொடுக்கிறாள். அதைப் போல அவளுக்கான பணிப்பெண்ணாக வந்து சேரும் யான் யேர்க்கும் அவள் மீது உள்ளூர ஆழமான வெறுப்பு இருக்கிறது. முன்னரே யான் யேர் முதலாளியின் நான்காவது ஆசைநாயகியாக விருப்பம் கொண்டிருக்கிறாள். ஆனால், சோகிலியானின் திருமணம் தன்னுடைய ஆசைக்கு ஏற்பட்ட தடை என எண்ணுகிறாள். அதனாலே அவளைப் பற்றிய செய்திகளை மற்ற மனைவிகளுக்குச் சொல்கிறாள். அங்கு நிகழும் அதிகார மோதலில் தன்னுடைய இடத்தைத் தக்கவைக்கமுடியாமல் சோகிலியான் தடுமாறுகிறாள். அதிகாரத்தைத் தக்கவைக்க முந்தைய மனைவிகள் நடத்தும் நைச்சியமான நாடகம் அவளுக்கு ஏனோ பழக மறுக்கிறது. அவள் தன்னுடைய கோபம், வஞ்சத்தை நேரடியாகக் காட்டுகிறாள். இரண்டவது மனைவியின் மீதான கோபத்தை மறைக்க முடியாமல் அவளது காதை வெட்டிவிடுகிறாள். அதைப் போல உள்ளுக்குள் தன்னை ஒரு அரசியாகக் கற்பனை செய்து தன் சிற்றறைக்குள் சிவப்பு விளக்குகளைத் தொங்கவிட்டிருக்கும் பணிப்பெண்ணை எல்லார் முன்னிலையிலும் அவமானப்படுத்துகிறாள். யான் யேர்க்கு முன்னரே எல்லா விளக்குகளையும் எரிக்கின்றாள். அந்த அவமானத்தின் துயர் தாளாது பனியில் விழுந்து கிடந்து உடல் நலிந்து யான் யேர் சாகிறாள். அதைப் போல மூன்றாவது மனைவிக்கும் அவளது இரகசியக் காதலனுடனான உறவைப் போதையில் அம்பலப்படுத்துகிறாள். அதனால், காதலனுடன் கையும் களவுமாய் பிடிபடுகின்ற மூன்றாவது மனைவிக்கு மரணத்தண்டனை வழங்கப்படுகின்றது. அரண்மனைக்கு மேல் இருந்த ரகசிய அறையில் மூன்றாவது மனைவிக்கு அளிக்கப்பட்ட மரணத்தண்டனையைப் பார்த்து குற்ற உணர்ச்சி தாளாமல் மனநிலை பாதிக்கப்படுபவளாக மாறுகின்றாள்.

பெண்களுக்கு எதிராகக் கைகொள்ளப்பட்டிருக்கும் பண்பாட்டு வரலாற்றை விமர்சிக்கக் கூடியதாகவே இப்படம் அமைகிறது. தன் மீது சுமத்தப்படும் அதிகாரத்தைக் கைபற்றும் ஆடலையும் குரூரத்தையும் தாள முடியாமல் மனப்பிறழ்வை அடையும் சோகிலியானின் மூலம் பண்பாட்டையும் வரலாற்றையும் படம் விசாரம் செய்கிறது. படத்தில் அதிகாரத்தின் குறியீடாக ஒளிரும் சிவப்பு வண்ண விளக்குகளுக்கு நடுவில் அதிலிருந்து திமிறும் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியின் குறியீடாக அரண்மனையின் தண்டனை அறையின் இருள் காட்டப்படுகிறது. சிவப்பு விளக்கின் வெளிச்சத்தை வாங்கமுடியாதவள் இருளை ஏற்று அகத்தில் பிறழ்வைப் பூசிக்கொள்கிறாள்.  அதிகாரப்போட்டியும் வன்முறையும் நிறைந்த சீழ் பிடித்த அரண்மனை சூழலைப் பழகமுடியாததுதான் அவளை மனப்பிறழ்வுக்கு ஆளாக்குகிறது.

அரண்மனையில் இருக்கும் எளிய அதிகாரத்தை அடையும் ஆடலில் இருந்து விலகுவதற்கான மீட்பாக கலை அமைந்துவிடக்கூடும் என நிலக்கிழாரான சென் அறிந்தே வைத்திருக்கிறார். அதனாலே, சோகிலியான் பெட்டியில் மறைத்து வைத்திருந்த குழலை அவளறியாமல் எடுத்து எரிக்கின்றான். இதற்கு நடுவில் புல்லாங்குழலின் இசையும் ஒப்பரா இசையும் சாவொலியைப் போல அவலகீதமாகப் படத்தில் ஒலிக்கிறது. அந்த மொத்த சூழலிலும் பெண்ணின் இடத்தை அறிந்தவன் முதல் மனைவியின் மகனான ஃபெய் பு தான். அவன் மேற்கல்வியையும் குழலிசைக்கவும் கற்றிருக்கிறான். அவனுடைய குழலிசையைச் சோகிலியானும் விரும்பி கேட்கிறாள். ஆனால் அவனுடைய கலை, நடக்கும் அநீதிகளுக்கு எதிர்வினையாற்றாமல் மூடிக்கொள்வதாகவே இருக்கிறது. தான் விரும்புகின்ற பெண்ணை ஏற்றுக்கொள்ளும் துணிவுகூட அவனுக்கு இருப்பதில்லை. அவனை ஆசையோடு விரும்பிய காதலி அளித்த பரிசைச் சோகிலியானுக்குத் தருகிறான். ஒரு பெண்ணின் காதலை ஏற்றுக்கொள்ளும் துணிவு கூட அவனிடமில்லை என சோகிலியான் அவனைத் தூற்றுகிறாள். அவனுடைய மனநிலைக்குப் பின்னால் இருப்பது, அதிகாரத்தின் செளகரியத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்க எண்ணாத மனநிலைத்தான். ஆக, அதிகாரம் கலையையும் ஒருவகையில் சிறைப்படுத்தியிருக்கும் சூழலில்தான் சோகிலியான் இருக்கிறாள். அவள் மீட்பாக எண்ணும் எல்லாமே தனக்கு எதிராக இருப்பதைக் கண்டவுடன் வேறுவழியின்றி தன் மனவதைக்கான தீர்வாக மனப்பிறழ்வைத் தானே தேடி வரவழைத்துக்கொள்கிறாள்.

இந்த மூன்று படங்களுள் ‘டூ லீவ் (To Live)’ (1994) எனும் படமே தலைச்சிறந்ததாக இருக்கின்றது. இப்படம் 1993இல் யு ஹுவா எனும் எழுத்தாளர் எழுதி படத்தின் பெயரிலே வெளிவந்த நாவலொன்றைத் தழுவி எடுக்கப்பட்டது. 1940களிள் தொடங்கி 1970கள் வரையிலான காலக்கட்டத்தில் சீனாவில் வாழும் ஒரு குடும்பம் மூன்று தலைமுறைகளுக்குள் அடையும் மாற்றங்களைத்தான் இப்படம் பேசுகிறது. சீனாவின் வரலாற்றைப் பொறுத்தவரைக்கும் படம் முன்வைக்கும் காலக்கட்டம் மிக முக்கியமானது. 1940களின் பிற்பகுதியில்தான் சீனாவில் இரண்டாவது புரட்சி தொடங்கி முழுநாட்டையும் கம்யூனிஸ்டு ராணுவம் கைபற்றுகிறது. அந்தக் காலப்பகுதியில் சூ ஃ கூய் எனும் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் தன்னுடைய சூதாட்டப் பித்தால் குடும்பச் சொத்தை மொத்தமாய் இழந்துவிடுகிறான். அவனுடைய சூதாட்ட மோகத்தால் வெறுப்புற்ற மனைவியும் அவனைக் கைவிடுகிறாள். சொத்தை இழந்த வேதனை தாளாமல் தந்தையும் மரணமடைகிறார். வறுமையால் நலிவுற்றுக் கைவிடப்பட்டு தன் தாயுடன் நடுத்தெருவுக்குத் தள்ளப்படுகிறான். அங்கிருந்து வாழ்தலுக்கான அவனது போராட்டம் தொடங்குகிறது. அவனுடைய வாழ்தலுக்கான போராட்டத்தில் தனிமனித வாழ்க்கை நெருக்கடிகளுடன் நாட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கும் அரசியல் மாற்றங்களும் இணைந்து கொள்கின்றன. முப்பதாண்டு கால இடைவெளியில் வாழ்வில் நிகழும் தொடர் நெருக்கடிகளில் இருந்து மீண்டெழுந்து கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தின் வாழ்வைப் படம் காட்டத் தொடங்குகிறது. முப்பதாண்டு கால வாழ்க்கைக்குள் நாட்டின் உருமாற்றமும் சிறிது சிறிதாகக் காட்டப்படத் தொடங்குகின்றது.

சொத்துகளை இழந்து கூலி வேலை செய்யத் தொடங்கும் கணவனுடன் மீண்டும் வாழ மனைவி இணங்குகிறாள். தொழில் தொடங்கி வாழ்வை வளப்படுத்திக் கொள்ள அவன் சொத்துகளைப் பறிகொடுத்தவனிடம் கடன் கேட்டு நிற்கின்றான் ஃ கூய். கடனுக்குப் பதிலாகத் தான் பயன்படுத்திய தோல்பாவைப் பொம்மைகளைத் தந்து கூத்து நடத்திப் பிழைத்துக் கொள்ள அறிவுறுத்துகிறான் லாங் கேர். ஃ கூய்யும் அதனைக் கொண்டு ஊர்தோறும் கூத்துகளை நடத்தத் தொடங்குகிறான். சிதறிப்போன வாழ்வைச் சிறிது சிறிதாக மீட்டெடுத்துக் கொள்கிறான்.

அதன் பிறகான அவனுடைய வாழ்வில் இழப்புகளும் துன்பங்களும் அடுத்தடுத்து நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அந்த அடுக்கடுக்கான துன்பங்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து வாழ்வதற்கான நம்பிக்கை மட்டும் அவர்களுக்குள் முடங்கிபோவதில்லை. போர் நடந்து கொண்டிருக்கும் ஊரில் தோல்பாவை கூத்தை நடத்தும் ஃ கூய்யைச் சீன இராணுவம் கைது செய்கிறது. போரின் முடிவில், இராணுவத்தைச் சீன கம்யூனிஸ்டு படைகள் முழுமையாக வீழ்த்துகின்றன. அவர்களும் ஃ கூய்யைக் கைது செய்கின்றனர். போர்க்களத்தில் இரவும் பகலும் போராடிக் கொண்டிருக்கும் வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காய் அவனது தோல்பாவைக் கூத்துக் கலை பயன்படுகிறது. உயிராபத்துத் தருணத்தைக் கலை தடுத்து நிறுத்திவிடுகிறது. அங்கிருந்து விடுதலை பெற்று மீள்பவனுக்கு அம்மா இறந்த அதிர்ச்சிச் செய்தியும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மகள் ஊமையாகிப் போன செய்தியும் சொல்லப்படுகிறது. இதற்குப் பின்னணியில் மொத்த நாடுமே அரச சோசலிசத்தை நோக்கி நகர்கிறது.

சீனக் கம்யூனிஸ்டு அரசாங்கம் மேற்கொள்கின்ற (Great Leap Movement) பெரும்பாய்ச்சல் இயக்கத்துக்காக ஒவ்வொரு கிராமமும் போர் தளவாடங்களைத் தயாரிக்க இரும்பு தானம் செய்ய கோரப்படுகிறது. ஃ கூய்யும் அவனுடைய மனைவி ஜியா சென்னும் கூட தங்களிடமிருக்கும் இரும்பு பொருட்களைத் தானம் செய்கின்றனர். கூத்தின் மூலம் வீரர்களுக்கு உற்சாகம் அளிக்கலாம் என்ற காரணத்துக்காக அவனிடமிருக்கும் இரும்புகளிலான தோல்பாவை பொம்மைகள் மட்டும் தப்புகின்றன. மற்றப்படி, மக்கள் தாங்கள் சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள் தொடங்கி மிதிவண்டி வரையில் எல்லாவற்றையும் அரசுக்குத் தானமாக வழங்குகின்றனர். சமையல் செய்வதற்கான பாத்திரங்கள் முதலாக எல்லாவற்றையும் அரசுக்கு மக்கள் தானமாகத் தருகின்றனர். சமைப்பதற்கான தளவாடங்கள் கூட இல்லாத மக்களுக்குப் பொது சமையலறை தொடங்கப்பட்டு இலவச உணவு வழங்கப்படுகிறது. தானமளிக்கப்பட்ட இரும்பு பொருட்களை உலையில் உருக்கிக் கொண்டிருக்கும் போதே ஃ கூய்யின் மகன் கம்யூனிஸ்டு தலைவர் சென்ற வாகனம் மோதி சுவர் சரிந்து இறந்த செய்தி வந்தடைகின்றது. அவனைக் கொன்றது தன்னுடன் தோல்பாவை கூத்தை நடத்திக் கொண்டிருந்தவனும் இப்பொழுது கம்யூனிஸ்டு தலைவராக மாறிய சுன் செங்தான் எனத் தெரிய வருகின்றது. துக்கம் விசாரிக்க வரும் சுன் செங்கை தங்களிடமிருந்து பறிக்கப்பட்ட ஒர் உயிருக்கான பொறுப்பாளி என ஃ கூய்யும் ஜியா சென்னும் தூற்றி அனுப்புகின்றனர்.

நாட்டில் நடந்து முடிந்திருக்கும் புரட்சி இன்னொரு பரிணாமத்தை எடுக்கின்றது. புரட்சியின் வாயிலாக அசைக்க முடியாத அதிகாரம் உருவாகி நிலைத்துவிடுகிறது. அந்தப் புரட்சியைச் சாத்தியப்படுத்திய தலைவர்கள், தொண்டர்களுள் துரோகிகள், விசுவாசிகள் என அடையாளங் காணப்படுகிறது. தங்கள் மொத்த வாழ்வையும் புரட்சிக்காக ஈகம் செய்தவர்களை அரசு ஒரே நாளில் துரோகிகள் என முத்திரை குத்துகிறது. அப்படித்தான், ஃ கூய்யின் மகனைக் கொன்ற சுன் செங்கும் அரசப் பயங்கரவாதியாகின்றான். அரசின் குற்றச்சாட்டுக்குப் பயந்து தற்கொலை செய்யப்போகும் சுன் செங்கை தங்களிடமிருந்து பெற்ற ஒர் உயிர்க்கடனுக்காக வாழ்ந்து தான் தொலைக்க வேண்டுமென ஜியா சென் சாபம் கலந்த கட்டளையொன்றை இட்டு அனுப்பி வைக்கிறாள்.

அதே காலப்பகுதியில் நாடு முழுமையும் அரசுக்கு எதிரானவர்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டு பேராசிரியர்கள், மருத்துவர்கள் ஆகியோரும் தண்டைக்குள்ளாகின்றனர். கம்யூனிஸ்டு தலைவரை மணந்து கொள்கின்ற ஃ கூய்யின் மகள் பேற்றுக்காலத்துக்காய் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள். தேர்ந்த மருத்துவர்கள் இல்லாததால் ரத்தப்போக்கு அதிகமாகி அவள் இறந்து போகின்றாள். அவள் பிரசவித்து விட்டுப் போன மகனுடன் ஃ கூய்யும் ஜியா சென்னும் பேசிக்கொள்ளும் காட்சியுடன் படம் நிறைவுறுகிறது. தங்கள் பேரனுக்கு வாங்கி தரும் கோழிக்குஞ்சுகள் வாத்துகளாகவும் வாத்துகள் ஆடாகவும் ஆடுகள் மாடுகளாகவும் மாறி வாழ்வு வளப்படத்தான் போகிறது என்ற கதையைச் சொல்லி படம் முடிகிறது. இந்தப் படத்தின் உள்ளூறையாகச் சீனாவில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்கள் மீதான விமர்சனமே இருக்கிறது. வாழ்வில் சூழும் நெருக்கடிகள் பன்வகைப்பட்டதைப் போல மீட்புக்கான வழிகளும் ஆயிரம் கரங்கள் கொண்டு மீட்டெடுக்கத்தான் செய்கின்றன.  இத்தன்மைத்தான் ஜங் யி மாவ்வை ஒரு மகத்தான இயக்குநராக மாற்றுகிறது. வாழ்தலின் பாடுகளை அடுக்கி அரசியல் விமர்சனங்களை முன்வைப்பதோடில்லாமல் அதன் வழியே தன்னைத் தொடர்ந்து திரட்டிக் கொண்டே இருக்கும் எளிய மனிதர்களின் பார்வையை இயக்குநர் படத்தில் காட்டுகிறார்.

அதே சமயம், சீனாவில் நிகழ்ந்த புரட்சியின் கோரமுகத்தைப் படம் காட்டுகிறது. தோல்பாவைப் பொம்மைகள் பிடிகளில் ஒட்டியிருக்கும் இரும்பு திருகாணிகளைக் கூட ஆயுத உற்பத்திக்காக களவாடக் காத்திருக்கிறது அரச அதிகாரம். நாட்டின் பொருளாதாரம் சற்றே மேம்பட்ட பின்னர் பழைமையையும் கம்யுனிஸத்துக்கு எதிரானது எனத் தோல்பாவைப் பொம்மைகளை எரிக்கக் கட்டாயப்படுத்துகிறது. கலை, அறிவு மட்டுமின்றி மனிதர்களையும் புரட்சி என்ற பெயரில் உருவாகும் அதிகாரம் ஐயப்படுகிறது. அவர்களையும் பாகுபடுத்தி அழித்தொழிக்கிறது.  அதிகாரத்தின் கோரமுகத்தையும் படம் காட்டுகிறது. சோகிலியானின் மகளின் பிரசவம் நடத்த அழைத்து வரப்படும் பேராசிரியர் வோங் மூன்று நாட்களாய் எந்த உணவும் தரப்படாமல் பட்டினியாக இருக்கின்றார். இறுதியாய் வேகவைக்கப்பட்ட ஏழு பன்களைக் கண்டதும் அவற்றை ஒருசேர உண்டு தொண்டையில் சிக்கி இறந்து போகின்றார். அதனாலே, ஃ கூய்யின் மகளுக்கு முறையான பிரசவ சிகிச்சை கிடைக்காமல் இறந்தும் போகின்றாள். அதை நினைவுப்படுத்தும் விதமாய் ஃ கூய்யின் பேரனுக்கு வெந்த பன் என்ற பெயர் சூட்டப்படுகிறது. ஒரு அவலத்தை அடையாளமாக்கிக் கொண்டு அடுத்த காலக்கட்டத்தை நோக்கி மனிதர்கள் நகர்ந்து போகும் சாட்சியம் படத்தில் அழுத்தமாய்ப் பதிகிறது. அரச அதிகாரம், பொருளாதாரத் தன்னிறைவு என இன்று உருவாகியிருக்கும் சீனா எனும் வல்லரசின் பின்னணியில் ஒளிந்திருக்கும் எளிய மனிதர்களின் ஆன்மபலத்தைக் காட்டுகின்றன.

அதிகாரமும் வாழ்வும்

ஜாங் யி மாவ்வின் மூன்று படங்களுமே வெவ்வேறு வகையான அதிகாரங்களைக் கேள்வியெழுப்பக் கூடியவை. வெளிநாட்டுப் படையெடுப்பு மட்டுமின்றி அரச அதிகாரம், பண்பாடு வழியே உருவாகித் தேங்கியிருக்கும் அதிகாரம் எல்லாமே எளியவர்களை ஒடுக்குவதன் கோரமுகத்தைக் காட்டுகின்றன. மக்களிடமிருக்கும் பலத்தாலும் கலையாலும் தங்களுக்கு எதிராகத் திரும்புவர் என்ற அச்சம் அதிகார வர்க்கத்துக்கு இருப்பதைக் காட்டுகிறது. ‘ரெட் சொர்கம்’ திரைப்படத்தில், ஜப்பானியப் படையினர் உள்ளூரில் இருக்கும் சண்டியர்களின் உடலையே வகிர்ந்தெடுக்கின்றனர். அவர்கள் தங்களுக்கு எதிராகக் கலகம் செய்யக்கூடும் என்ற அச்சம் ஜப்பானியர்களுக்கு இருக்கிறது. அதைப் போல, ‘சிவப்பு விளக்குகளை ஏற்று’ திரைப்படத்தில் குழலிசைக்கும் ஒப்பரா இசைக்கும் அஞ்சுபவரகாவே அரண்மனைக்குள் சகல அதிகாரமும் பொருந்திய நிலக்கிழார் இருக்கிறார். ‘டூ லிவ்’ திரைப்படத்தில் தோல்பாவைக் கூத்துப் பொம்மைகளை எரித்துவிடவே அதிகாரம் முயல்கிறது. ஆனால், அதிகாரத்தின் அடக்குமுறைக்குக் கீழ் மக்கள் தங்கள் ஆன்மபலத்தை இழக்காமல் இருப்பதைக் காட்டுவதுதான் ஜாங் யி மாவ் திரைப்படங்களின் தனித்துவம் எனலாம். எல்லா அடக்குமுறைகளுக்கும் சிதைவுக்குப் பிறகும் ‘ரெட் சொர்கம்’ திரைப்படத்தில் ஒர் எளிய முன்னோர் வழிப்பாட்டுக்குரிய நாட்டுப்புறப்பாடலின் வழி அடுத்தக்கட்ட வாழ்க்கைக்கு நகர்வதற்குச் சிறுவன் வழிகாட்டுகிறான். ‘டூ லிவ்’ திரைப்படத்திலும் அடுக்கடுக்கான இழப்புகளுக்கு மத்தியிலும் ஒர் எளிய குடும்பத்தால் வளமான வாழ்வொன்றைப் பற்றிய கற்பனையை உருவாக்கிக் கொள்ள முடிகின்றது. ஜாங் யி மாவ்வால் தன்னுடைய கலையால் அதிகாரத்தைக் கேள்வியெழுப்பவதோடு என்றென்றைக்கும் முன்னகர்ந்து கொண்டிருக்கும் மானுடத்தின் நம்பிக்கையையும் காட்சிப்படுத்த முடிந்திருக்கிறது.

வண்ணங்களில் ஒளிபெறும் மனித மனம்

தொடக்கக் காலத்தில், வண்ணங்களில் திரைப்படங்கள் தயாரிக்கும் தொழிற்நுட்பம் கொண்டுவரப்பட்டதும் திரைப்படங்களின் கலை நேர்த்தியை அவை குலைத்துவிடும் என்ற அச்சக்குரல் எழுந்தது. அதற்கு, வண்ணங்கள் பார்வையாளரின் கவனத்தைச் சிதைத்து திரைப்படங்களின் அடிப்படைய அழகியலான கதை, காட்சிகள் ஆகியவற்றிலிருந்து விலக்கும் என்ற காரணம் சொல்லப்பட்டது. அப்படியாக, காட்சிகளில் பலவண்ணக் கலவைகளைக் கொண்டு பார்வையாளர்களின் கவனத்தை மட்டுமே ஈர்க்கும் திரைப்படங்களும் இன்றளவும் வந்து கொண்டேத்தான் இருக்கின்றன. திரைப்படம் எனும் வெகுஜனக்கலையில் அவையும் ஒரங்கம். ஆனால், மெய்யான கலையின் வழி தான் கண்டடைந்த ஒர் உண்மையைக் கலைஞன் முன்வைக்கின்றான். அப்படியாக, ஜாங் யி மாவ் தன்னுடைய படங்களில் காட்டும் ஒளியமைப்பின் வாயிலாக ஆன்மீகம் எனும் இடத்தைத் தொட்டுக் காட்டுகிறார். ‘ரெட் சொர்கம்’ திரைப்படத்தில் ஒரு வாழ்க்கைக்குள் மாறிக்கொண்டிருக்கும் காட்சிகளின் பின்னணியாக வந்து கொண்டிருக்கும் செவ்வொளி நிறைவு காட்சியில் சிதைவிலிருந்து மீளும் இடத்தில் ஒர் ஆன்மீக எழுச்சியைத் தருவதாக மாறுகிறது. ‘சிவப்பு விளக்கை ஏற்று’ திரைப்படத்தில் படாடோபமான அதிகாரத்தின் குறியீடாகச் சிவப்பு வண்ண விளக்குகள் காட்டப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஆனால், அந்த விளக்குக்கு அடியில் இருக்கும் வன்முறையை ஒரு கணமே படத்தில் காட்டப்படும் அரண்மனையின் இருள் அறை சொல்லிவிடுகிறது. அந்த இருளைக் கண்டவுடன் சிவப்பு விளக்குக்குப் பழக மறுக்கும் மையப்பாத்திரத்துக்கு மனப்பிறழ்வு ஏற்படுகிறது. ஒர் பண்பாட்டில் இருக்கும் வன்முறையையும் மனித மனத்தையும் ஜாங் யி மாவ் துலக்கிக் காட்டுகிறார்

இடம்பெறவேண்டிய காணொளி இணைப்புகள்

https://www.youtube.com/watch?v=iG9ptDlJbfA –Red Sorghum

https://www.youtube.com/watch?v=tLYJzEtmavg – Raise the red lantern

https://www.youtube.com/watch?v=sWYA8Hpm7fI – To live

ரெட் சொர்கம்
டூ லிவ்
சிவப்பு வண்ண விளக்குகளை ஏற்று
ஜாங் யி மாவ்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...