இடைவெளி

கைப்பேசியிலிருந்து “சலாம் சாப்!”  என்ற அலியின் குரல் எழுந்து வரும் பொழுதே தண்டவாளத்தில் இரண்டு இரயில்கள் எதிரெதிரே வருவது போல் அடுத்த முனையில் காரியாலய அலைபேசி ஒலித்தது.

“மிஸ்டர்!  உங்களைச் சந்திப்பதற்காக மஹுமூத் என்பவர் வந்திருக்கின்றார், அலி என்பவர் அனுப்பி வைத்ததாகக் கூறுகின்றார்,”

வரவேற்பறையிலிருந்த பெண் கூறினாள்.  சட்டென்று அவன்  குழம்பிப் போய் “கொஞ்சம் அமரச் சொல்லுங்கள்,”  அவசரமாகக் கூறித் தொலைபேசியைத் துண்டித்ததும் அடுத்த பக்கம் இருந்த அலி எல்லாவற்றினையும் கேட்டுக் கொண்டு இருந்ததுபோல் உடனே தாவி, “சாப் அந்த ஆளுதான் நமக்கு கிடைத்த புது கேஸ். உடனே வழக்கு போடணும். நாளை மறுதினம் வீசா முடியிதாம். அவரது மனைவிதான் அகதிக் கோரிக்கைக்கு முக்கிய புள்ளி. என்னுடைய நண்பர் ஒருவர் மூலம் இப்பதான் என்னை போனில் அழைத்தார். விளக்கமாக நான் உரையாடவில்லை. உடனே அனுப்பிவிட்டேன். நம்பிக்கையான பார்ட்டி. என்ன ஏது என்று கேட்டுப் பாருங்கள். நான் ஒரு கஸ்டமருடன் பிரயாணத்தில் இருக்கேன்,” 

அலி, அவனை மேற்கொண்டு பேச விடாமல் தடுத்தது போல் ஒரே இழுப்பில் கூறி விட்டு மறைந்தான். ஒரு கணம் என்ன செய்வது எனத் தெரியாமல் விழித்தான். அலியின் மீது கோபமும் ஆற்றாமையும் பொங்கியெழுந்தது.  “ஷிட்!” அவனையும் அறியாமல் கையடக்கத் தொலைபேசியை மேசையில் எறிந்தான். அது எந்த வித தடங்கலுமின்றி மேசையிலிருந்த கோப்புகளின் மேல் சென்று விழுந்தது. 

மத்திய லண்டனில் வழக்கறிஞராகப் பணியாற்றும் அவனுக்கு அலியைப் போன்றதொரு வழக்குத்தரகர் இருப்பது துரதிரதிஷ்டம்தான். ஏனெனில் அலியின் செயல்பாடுகள் எல்லாம் தந்திரமானவை. லாஹூரின் ஷாரியா நீதிமன்றங்களின் வளாகங்களில் வழக்குகளைப் பதிவு செய்ய வருபவர்களை எட்டிப்பிடித்து சட்டத்தரணிகளிடம் ஒப்படைக்கும் அடிமட்டத் தரகர்களைப் போன்ற அவனது புத்தியை மாற்றவே முடியாது. 

அலி எடுத்துக் கொண்டு வரும் வாடிக்கையாளர்களின் பிரச்சனைகளில் தலையும் இருக்காது, வாலும் இருக்காது. எல்லாவற்றினையும் அவனே உருமாற்ற வேண்டும். அதற்கிடையில் அலியிற்கான கொடுப்பனவை மட்டும் ஆறாமல் கொடுத்துவிட வேண்டும். தன்னுடைய முட்டாள்தனத்தை உணர்ந்து தன்னைத் தானே திட்டிக் கொண்டான்

ஆனால் அலியின் சில்லறைத்தனமான தரக வேலைகளைப் பொறுப்பேற்பதைத் தவிர அவனுக்கும் வேறு வழியில்லை.  அலி இல்லாவிட்டால் வாடிக்கையாளர் இல்லை என்ற நிலை. அஜ்மல் என்ற பெயர் வெறும் எழுத்துக்களாக இந்நிறுவனத்தில் தள்ளாடிக் கொண்டிருக்கின்றது. உள்ளே ஹினா என்ற ராணித் தேனி. அவளின் கட்டளைகளை நிறைவேற்றும் ஒரு சாதாரண ஊழியனைப் போல அவன் இருந்தான். ‘எல்லாம் என் தலையெழுத்து,’ தனக்குத்தானே முணு முணுத்துக் கொண்டு வரவேற்பறையிற்கு போன் செய்தான்.

“ஹலோ” என பளிச்சென இருந்தது அந்தப் பெண்ணின்  குரல். 

“அலி அனுப்பி வைத்த அந்த வாடிக்கையாளரை உள்ளே வரச் சொல்லுங்கள்” கூறி விட்டு மேசையில் பரப்பியிருந்த கோப்புக்களை அவசரமாக அடுக்கினான். 

அறையின் கதவு திறந்திருந்தது. உள்ளே வருவதற்குத் தயங்கியவாறு இருவர் வெளியே நிற்பதை உணர்ந்தவன் “வாருங்கள்” என்று அமைதியாகக் கூறினான். 

“ஸலாம் சாப்! நான் மஹூமூத், அலி…”

கூரிய சிவந்த முகம். கண்கள் வரண்டு முகம் சோர்வுற்றிருந்தது. தலை மயிரிலும் தாடையிலும் ஆங்காங்கே நரை படர்ந்திருந்தது. ஐம்பது வயதை நெருங்கிய தோற்றம். களைப்பும் சோர்வும் அவர் முகத்தில் தாண்டவமாடியது. 

“ம்… உட்காருங்கள்…”

“இவர் எனது மனைவி…” 

மஹ்மூத் கூறிய பொழுதுதான் அவளைக் கூர்ந்து நோக்கினான்.

மின்னல் வெட்டியதுபோலொரு உணர்வு. கண்களை அங்குமிங்குமாகச் சுழற்றி மீண்டும் அவன் பார்வை அவள் முகத்தைத் துழாவியது. கிட்டத்தட்ட இருபது வருடங்கள், அவனைப் போதையேற்றிய அவளது கண்புருவங்கள், உதடுகளின் துடி துடிப்பு, காது மடல்கள் இத்தியாதிகள் அப்படியே அப்படியே இன்றும்.   அவள் முகத்திலும் ஆச்சரியம் மலர அவளேதான் என்பது அவனை மேலும் கொந்தளிக்கச் செய்தது.

இவள் எப்படி இங்கே? அதுவும் இவருடைய மனைவி… அவனுடைய உடல் எடை   வற்றி அவனது முகத்தில் இருந்த கடுமையும் உறுதியும் ஒரு கணத்தில் அற்றுப் போயின. ஆனால் தன்னைத் தனக்குத் தானே அபகரித்துக் கொண்டவன் போல் அவர்களிடையே இருந்த மௌனத்தைக் கலைக்க முயன்றான். 

“ஆ… நல்லது. அலி எல்லாவற்றையும் போனில் கூறினார்,” அவன் பதிலளித்தான்.

“ஆம் சாப், ஆனால்… இவர் உங்களிடம் மேற்கொண்டு பேச தயங்குகிறார்,” மஹ்மூத் அவளைப் பார்த்து தயக்கத்துடன் சொற்களை இழுத்தார்.

ஏன் என்னிடம் பேசுவதற்கு என்ன பிரச்சனை என்பது போல் முகத்தை வைத்துக்கொண்டான்.

“இவருக்கு ஏற்பட்ட சம்பவம் சிக்கலானது. யாராவது ஒரு பெண் கூட இருந்தால் நல்லது. உங்களுடைய மனைவியுடன் நேரடியாக கதைத்தால் உதவியாக இருக்கும் என அலி ஆலோசனை சொன்னார்.”

மஹூமூத் அவளையும் அவனையும் மாறி மாறிப்  பார்த்து  அப்பாவித்தனமாகக்  கூறினார். அவள் அதற்கு பதில் கூற முடியாதவள் போல் தன் பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள். 

அதனைக் கேட்டதும் அவனுடைய முகத்தில் எரிச்சலும் ஏமாற்றமும் வெளிப்படையாகத் தெரிந்தது. ‘அப்படியென்றால் அலி எதற்கு என்னைச் சந்திக்க வைத்தான். உண்மையிலேயே அலி என்னை மேலும் மேலும் கோமாளியாக மாற்றி வைத்திருக்கின்றானே!  இவர்களை இப்படியே இடை நடுவில் விடவும் முடியாது… அல்லாஹ்வே! நான் இப்பொழுது என்ன செய்யலாம்?’

அவர்களிடையே அமைதி  விரிந்து கொண்டே சென்றது.

“ம்… கொஞ்சம் பொறுங்கள். நான் ஹினாவை அழைக்கிறேன்,” அவன் மௌனத்திற்கும் சங்கடத்திற்கும் இடம் கொடுக்க விரும்பாதவன் போல் அவசரமாக தொலைபேசியை எடுத்து ஹினாவின் அறை இலக்கத்திற்கு அழைத்தான்.  

ஹினா தனது அறையில் கொஞ்சம் ஓய்வாக இருக்கின்றாள் என்பதே அவனுக்கு மிகப் பெரிய ஆறுதலாக இருந்தது. ஹினாவின் அறைக்கதவினை அவனேதான் தட்டினான். வாருங்கள் உள்ளேயிருந்த ஹினாவின் உற்சாகக் குரல். அவன் முன்னால் செல்ல மஹூமூதும் அவளும் பின்னால் நின்றார்கள்.

“ஹலோ!”  ஹினா அவளது தோரணையில் கனிவாக வரவேற்றாள்.

“இவர்களை அலி அனுப்பி வைத்தார். உங்களிடம் தான் பேச வேண்டுமாம்”

“ஓஹ் அப்படியா நல்லது,”  ஹினாவின் தன்னம்பிக்கை நிறைந்த ஒரு சொல்லே மஹ்மூதைப் புன்னகைக்க வைத்ததை அவன் கவனித்தான். இது தான் ஹினாவிற்கும் அவனுக்கும் உள்ள மிகப் பெரிய இடைவெளி.

வாடிக்கையாளர்கள் முன் அவள் தன்  கவனத்தினைக் கோரி அதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ரஞ்சகமாக இருப்பது. அதனால்தான் அவனிடம் திரண்டிருக்கும் அறிவுபூர்வமான அணுகுமுறையை ஹினாவிடம் உள்ளது போல் உணர்வுபூர்வமான உரைகல்லால் அவனால் தீட்டிப் பார்க்கவே முடியாது என்பதைப் பல இடங்களில் சந்தித்திருக்கின்றான். உண்மையில் அலி ஆழமானவன்தான். என்னை விட ஹினாவை நன்றாகவே புரிந்து வைத்திருக்கின்றான். இனியும் இங்கே நிற்பதில் பலனில்லை. 

“சரி நான் வருகிறேன்,” அவன் பாதிக்கப்படாமல் இயல்பாக இருப்பதாகக் காட்டி  விடைபெற முயல்கையில் “ஒரு நிமிடம் இந்தக் கோப்பை கொஞ்சம் சரி பார்க்க முடியுமா?”

ஹினாவின் கட்டளைக் குரல் அவனை மீண்டும் திரும்பிப் பார்க்க வைத்தது. கோப்பை ஹினாவிடமிருந்து பெற்றுக் கொண்டு அவசரமாகத்   திரும்பிச் சென்றான். 

அறைக்கு வந்ததும் அவனது படபடப்பு குறைவதற்குச் சில நொடிகள் பிடித்தன. அவனால் நிலை கொள்ள முடியவில்லை. மனம் மஹுமூதையும் அவளையும் சுற்றியே இருந்தது.  துடிப்பும் பிரகாசமும் நிறைந்த அவளது குரல், பார்வை, உடல் அசைவுகள் என அவனுக்குள் ஓயாமல் அலைபாய்ந்த இருபது வருடங்களுக்கு முந்திய வாழ்க்கை ஒரு வழக்கு குறிப்புப் போல் அவன் முன்னால் ஓடிக்கொண்டிருந்தது.

லாஹூரிலிருந்து  தாயா சுலைமானுடன் சுனாரி வாளாவிற்கு வந்திருந்த அவனுக்கு அந்தக் கிராமத்தில் ஒரேயொரு பாடசாலை மட்டும்தான் உள்ளது அதுவும் ஆண்கள் மட்டும்தான் அந்தப் பாடசாலையில் படிப்பதற்கு அனுமதி உண்டு என்பதை அவள் எல்லோர் முன்னிலையிலும் போட்டு உடைத்ததைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தான். அவள் பேசுவதை நிறுத்துவதற்குப் பல பேர் எத்தனித்தும் முடியவில்லை. 

“பெண்களும் படிக்க உதவி செய்யுங்கள் சாப்!” தாயா சுலைமானை நோக்கி மன்றாடினாள். அவ்வளவு ஆண்கள் மத்தியில் அவள் மட்டும் ஒரு பெண். ம்… இவளுக்கு எவ்வளவு தைரியம்? அவளுடைய துணிச்சலும் சவாலும் அவனை ஈர்த்தன.  இப்படியொருத்தி மட்டும் லாகூரில் என்னுடைய சட்டக் கல்லூரியில் படித்தால் எப்படி இருக்கும். அவன் கற்பனை செய்து பார்த்தான்.  தாயா சுலைமான் அந்தப் பாடசாலைக்குக் கட்டடங்கள் கட்டி அபிவிருத்தி உதவிகளைச் செய்து வருகின்றார். அன்றைய கூட்டத்தின் முடிவில் அவளது கோரிக்கைக்கு ஓர் அர்த்தம் கிடைத்தது. தாயா சுலைமான் பெண்களையும் இணைக்குமாறு ஆணையிட்டார். சுனாரி வாளாவில் அவர் தங்கியிருக்கும் ஒரு வாரத்தில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெறும் எனத் தீர்மானிக்கப்பட்டது. 

தாயா சுலைமானும் அவனும் தங்கியிருந்த வீட்டருகில்தான் அவள் வீடும் இருந்தது. முதலாம் நாள் அன்றே கண்கள் மூலமே இருவரும் பேசிக் கொண்டார்கள். அவள் பார்வையில் அவனைத் தூண்டும் ஏதோவொன்று இருப்பதாகத் தோன்றியது. அவளே நினைவாக ஒவ்வொரு கணமும் கடந்து சென்றது.  சோள வயல்கள், கிழங்குச் சேனை என அவள் கால் தடம் பதிக்கும் இடத்திற்கெல்லாம் அவனும் பின் தொடர்ந்தான்.

ஏழாம் நாள் அவன் தாயாவுடன் லாகூர் திரும்ப ஆயத்தமானான். இருந்த ஒன்று இல்லாமல் போகிறது என்ற ஏக்கமற்ற ஏதோவொரு இன்பம் புலப்படத்தொடங்கியது. அவளும் அந்த இயற்கையைப் புரிந்து கொண்டவள்போல் ஏற்றுக் கொண்டாள். இருவரும் அவர்களது உணர்வுகளை, பரவசங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. எங்கேயோ ஓரிடத்தில் மறைவாக உயிரோடு வைத்திருக்க விரும்பியவர்கள் போல் விடை பெற்றார்கள்.  

சில வருடங்கள் அவளது நினைவுகள் பெருமிதம் பொங்க அவன் மீது ஒரு படிகம்போல் பளிச்சிட்டது. அவளும் அவனும் சங்கமிக்கும் கனவுகள், ஏக்கங்கள், கற்பனைகள் ஆட்கொண்டன. திரும்பவும் சுனாரி வாளாவிற்குச் செல்லும் யோசனை அவனை எட்டிப் பார்த்தது. ஆனால் அவளை நினைப்பதன் அர்த்தம் உடல் சார்ந்தது அல்ல. அவளை அண்மித்தால் அந்தக் காதலில் இருந்த சுருதி இழந்து விடும் போல் தோன்றியது. ஆகையால் விலகிக் கொண்டான்.  நாட்கள் கரைய அவன் வாழ்க்கை எங்கேயெல்லாமோ சென்று வந்தது. எத்தனையோ பெண்களின் பார்வைகளை அவன் சந்தித்தான். அவற்றில் சிலவற்றின் மீது அவனுக்குத் திளைப்பும் ஏற்பட்டது.  இடைப்பட்ட நிலையில் அவளின் சலனங்கள்.  அதிலிருந்த பெருமிதம்.  எல்லாம் விசித்திரமான கனவுகள் போல் அவனுக்குள் புதிராகத் தோன்றித் தோன்றி மறைந்தன.

அவனது சிந்தனைச் சரடு முட்டி மோதி வருகையில் மஹூமூதும் அவளும் காரியாலயத்திலிருந்து வெளியேறிச் செல்வது அறையின் கண்ணாடி ஜன்னலின் ஊடாக அவனது பார்வையில் விழுந்தது. ‘அவள் என்னிடம் எதுவும் பேசாமல் செல்கிறாளே? வேறு எதையாவது சொல்லி ஒப்புக்காவது சில வார்த்தைகள் பேச முடியாதா? இல்லை அவள் பயந்திருக்கலாம், அப்படியென்றால் நான் மட்டும் என்ன? ஊமையாய் இருந்து விட்டேனே?   என்னைப் பற்றி என்ன நினைத்திருப்பாளோ? நான் எதுவும் பேசாமல் அவளைத் தவிர்த்தது சரியா?’  அவன் மனம் மீண்டும் அலை பாய்ந்தது. ஆனால் அவளும் அவனும் ஒரு பொழுதும் பரஸ்பரம் பரிமாறி மனம் விட்டு பேசியவர்கள் கிடையாது. சொற்களை நேசம் என்ற சுவரின் எல்லையாக உணர்ந்தார்கள். அவர்கள் தங்களது காதலில் திளைத்ததே நிர்மலமான அமைதியின் தாகத்தில் தான். 

“ஹினா கோப்பை சரி பார்த்து விட்டேன். இந்த வழக்கை பரிஸ்டர் படேல் பார்ப்பது நல்லது.  அவர் தான் சாமர்த்தியமாக காய் நகர்த்துவார்.”

தன்னைத் தானே மீட்டுக்கொள்ள முயன்றவன்போல் உடனே ஹினாவிற்குத் தொலைபேசியில் அழைத்துப் பேசத் தொடங்கினான். ஆனால் அவனால் அவளது பிரச்சனை பற்றி  தொடாமல் இருக்க முடியவில்லை. 

“அது சரி இப்பொழுது வந்து போன மஹூமூத், என்ன நடந்தது?” 

உண்மையில் அவன் ஹினாவை நெருங்க நினைத்ததே அதற்காகத்தான் 

“ம்ம்… அது மிகவும் சிக்கலான விடயம். அந்தப் பெண்ணுக்கு லாஹூர் போலீசாரின் அச்சுறுத்தல். போலீஸாருக்கும் இன்னும் ஒரு அடிப்படைவாதக் குழுவிற்கும் தொடர்பு. நிச்சயம் இந்தப் பெண் திரும்பிப் போக முடியாது. போனால் அவ்வளவுதான். நமது லாஹூர் போலீஸ், சும்மா இல்ல” ஹினா வெறுப்புடன் கூறினாள். 

அவன் திகில் கலந்த வியப்புடன் “ஓஹ் அப்படி என்ன அச்சுறுத்தல்?”

“அந்தப் பெண்ணின் நண்பி போலீஸார் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பொழுது  பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளாள்.  தடுப்புக்காவலிலிருந்து வெளியே விடப்படும் பொழுது யாரிடமும் சொல்லக் கூடாது என கொலை அச்சுறுத்தல் செய்திருக்கின்றார்கள். ஆனால் இந்தப் பெண்ணுக்கு நல்ல துணிச்சல். லாஹூரில் உள்ள பெண்கள் உரிமை தொடர்பில் பணியாற்றும் தொண்டு நிறுவனத்திற்கு இவளது நண்பியை அழைத்துச் சென்று அந்த நிறுவனத்தின் மூலம் போலீஸிற்கு எதிராக முறைப்பாடு செய்திருக்கின்றார்கள். குறிப்பிட்ட சந்தேக நபர்களைக் கைது செய்தாலும் வழமையைப் போல் எப்படியோ வெளியில் வந்து விட்டார்கள்.”

ஹினா சோர்வுடன் அமைதியானாள்.

அவன் அந்தக் கதையின் விறுவிறுப்பை விட்டு நகர விரும்பவில்லை “பின்னர் என்ன?”

“பின்னர் என்ன, போலீஸ் இந்தப் பெண்ணையும் அவளது நண்பியையும் தேடி வலை விரித்து விட்டார்கள். எப்படியோ அந்தத் தொண்டு நிறுவனம் நல்ல நேரத்தில் ஏதோவொரு மகாநாடு இருப்பதாக இவளை லண்டனிற்கும் அவளது நண்பியை அமெரிக்காவிற்கும் வீசாவை தயார் செய்து அனுப்பி விட்டார்கள். சரி எனக்கு அவசரமா குரோய்டன் போகணும். பாதுகாப்புத் திணைக்களத்தில் வேலையிருக்கு,”

 ஹினா கிளம்பத் தயாரானாள். “ம்ம்… ஒரு நிமிடம்,” அவன் மறித்தான்.

 “என்ன?”

“அவர்கள் லாஹூரில் எந்தப் பக்கம்?”

“நிச்சயமாக உன்னுடைய ஊர் இல்ல. சுனாரி வாளா, ஏதோவொரு கிராமமாம் கேள்விப்பட்டிருக்கிறாயா?”

“ஆமாம், எனக்குத் தெரியும்.”

 ஹினாவின் காதில் விழுந்ததா? இல்லையா என்ற தெரியவில்லை அவள் முந்திக் கொண்டு போனை வைத்தாள்.

உடற்பயிற்சி நிலையத்திற்கு வந்ததிலிருந்து ஹினாவின் குரல் அவனை முற்றுகையிட்டுக் கொண்டேயிருந்தது. அவனது இரு கரங்களும் பாரத்தைத் தூக்கி  உடலை ஒரு நிலைப்படுத்த முயன்றாலும்   வியாஸ நதியை மனம் எட்டிப் பிடித்துக் கொண்டது. 

“சுனாரி வாளாவின் எல்லையில் ஒரு காவலனைப்போல் பாய்ந்து ஓடுகின்ற இந்த நதி மட்டும் இல்லையென்றால் விவசாயம் எண்ணியும் பார்க்க முடியாது. அவ்வளவு அழகும் மதிப்பும் இந்த நதிக்கு உண்டு.”

தாயாவும் அவனும் வியாஸ நதியின் கரையில் நீந்தி கைகள் நீரை அளைந்து விளையாடுகையில் தாயா சுலைமான் கூறினார்.

அவன் கைகளை வளைத்து நீரை மொண்டு தலையை நீருக்குள் அமிழ்த்தி நீர்ப்பரப்பினை அடைகையில் திடீரென அவளது முகம் ரோகு மீனைப் போல் அவனது எதிர்த்திசையில் நீரில் சஞ்சரித்தது. அவன் மருட்சியில் விலகிச் செல்ல அவள் நீருக்குள் நீந்தி மறு பக்க கரையை அடைந்தாள். பின்னர் ஒவ்வொரு அந்திப் பொழுதிலும் அவனும் அவளும் வியாஸ நதி எனும் திரையின் வழியே விட்டில் பூச்சிகளின் ஒளியில் ஒருவரையொருவர் பார்த்திருந்தார்கள்.

இப்படித் தனது நினைவுகளைத் தடவிக் கொண்டு மனதிற்குள் போராடுவதை விட ஹினாவுடன் பகிர்ந்து கொள்வது சரியென்று அவனுக்குத் தோன்றியது. அதன் மூலம் அவனுக்கு ஏற்பட்டுள்ள அதிர்வுகளின் மீது ஹினாவின் எல்லையற்ற அன்பு வடிகாலாக மாறலாம் என்ற நம்பிக்கை துளிர்த்தது. ஹினாவின் வழித் தோன்றல் லாஹூரின் மண்ணில் ஊன்றியிருந்தாலும் அவளது குணவியல்புகள், பழக்கவழக்கங்கள் எல்லாமே கலாச்சார எல்லைக்கு அப்பாற்பட்டவையாக விசாலமாக இருந்தன. அவளுக்கென்று ஒரு சொந்த முகம் இருந்தது.

ஆரம்பத்தில் அவனுக்கும் ஹினாவுடன் நிக்காஹ் நிச்சயிக்க பெற்றோர்கள் முயன்ற பொழுது லண்டனில் பிறந்து வளர்ந்தவள் என்ற ஹினாவின் பிம்பம் அவனைப் பீதி கொள்ள வைத்தது. அவன் வேண்டாம் என்று அடம்பிடிக்க சரி, எதற்கும் முதலில் ஹினாவுடன் பேசிப்பார், பின்னர் முடிவெடுக்கலாம் என்று ஆலோசனை கூறினார்கள். அவனை ஹினா சந்தித்த முதல் நாளே ஹினாவிற்கு லண்டனில் இருந்த ஆண்களின் நட்புகள் அதில் ஒருவனை மனதார காதலித்தமை பின்னர் எதிர்கால குடும்ப வாழ்க்கைக்கு அந்தக் காதலன் ஒத்துவர மாட்டான் என அவனுடைய நட்பைத் துண்டித்தமை என ஹினா வெளிப்படைத்தன்மையுடன் தன்னை அறிமுகம் செய்துகொண்டாள். ஹினாவின் அப்பழுக்கற்ற உள்மனக் கண்ணாடியின் விஸ்தாரத்தினை நினைத்து ஆச்சரியமடைந்தான். உடனே எந்த மறுப்புமின்றி ஹினாவைக் கரம்பிடித்தான். ஆனால் படையெடுப்பு மூலம் உலகையே கொடுங்கோல் ஆட்சி செய்தவொரு நாட்டில் பிறந்தவள் கிரீடம் இல்லாத குடும்ப வாழ்க்கையை விரும்பமாட்டாள் என்ற தன்னுணர்வை அவன் மறந்து விட்டான்.

கடந்த காலங்களில் சுனாரி வாளாவின் ரகசியத்தை அவன் ஹினாவிடம் உரையாடவில்லை. அவன் விரும்பவில்லை என்பதைக் காட்டிலும் அந்தச் சந்தர்ப்பத்தில் அவனுடைய காதலுக்கு அவ்வளவு பெரிய உலகம் இருப்பதாக அல்லது அந்தக் காதலின் சுவடுகள் எதுவும் பின்னால் கண்ணுக்குத் தெரிவதாக அவனுக்குப் புலப்படவில்லை. ஆகவே அதைப் பற்றி ஹினாவிடம் கூறுவது அவனுக்கு வியர்த்தமாகத் தோன்றியது. ஆனால் இப்பொழுது அவனின் உந்து சக்தியாக ஹினா இருந்தாலும் இவ்வளவு வருடங்கள் கழித்து பகிர்ந்துகொள்ளும் பொழுது ஹினா அவனை எப்படிப் புரிந்துகொள்வாள் என்ற பயம்  அவனைப் பக்கத்தில் இருந்து கவனித்துக் கொண்டிருந்தது.  எனவே அவனுக்கும் ஹினாவிற்குமிடையில் மிகவும் ஆத்மார்த்தமான, சகஜமானதொரு தருணம் கனிந்து வர வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டான்.

பராமரிப்பு நிலையத்திலிருந்து குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீட்டை நோக்கிப் புறப்படுகையில் குழந்தைகளின் ஆரவாரம் அவனுக்குத் தந்தை எனும் உற்சாகத்தினை ஏற்படுத்தியது. குழந்தைகளின் கேள்விகளாலும் அவர்களது சுட்டித்தனங்களாலும் மனம் பசுமையாய் மாறியது.  பொதுவாக அவன் வேலையிலிருந்து வீட்டிற்கு வந்தாலும் ஹினாவின் மீது படிந்திருக்கும் தொழில் சார் கோபதாபங்கள், உரசல்கள் கரைவதற்குக் கொஞ்ச நேரம் செல்லும். அமைதி கவிழ்ந்த முகத்துடன் தனியாக மனதிற்குள் புழுங்கிய படி ‘இவள் என்ன பெரிய ஆளா? இவளுக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும் போலும்.’  தன்னைத் தானே ஒதுக்கிக் கொண்டு எங்கேயாவது ஓர் மூலையில் புத்தகம் வாசிக்கும் சாட்டில் அமர்ந்திருப்பான். தன்னுடைய அறப்போரில் எத்தகைய நியாயமும் இல்லை என்ற சுலோகம் படிப்படியாக அவனது மூளைக்குள் சென்று மினுங்கும் தருணத்தில் அவனாகவே பச்சைக் கொடியுடன் வீட்டில் நடமாடுவான். எதிர்மறையாக ஹினா வீட்டின் கதவினைத் திறக்கையில் தன்னை அப்பழுக்கற்ற ஒரு குழந்தையைப் போல் மாற்றிக்கொள்வாள்.

“ஹாய்” என்ற அவளது குரலில் மீண்டும் விடிந்து விட்டது, எழுந்திருங்கள் என்பது போல் ஒரு மனம் ஒரு துள்ளு துள்ளும். அவனது முகத்தில் சலனம் ஒட்டி உறவாடுவதை அவள் கண்டுபிடித்தாலும் அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பது போல் வெறிகொண்டு காதலிப்பாள். அந்தந்த நேரத்தில் எழும் அன்பினை எந்தவித நிபந்தனையுமின்றி அவனுக்கும் குழந்தைகளுக்கும் அள்ளி வழங்கும் லாவகம் அவளுடையது. வேலைத்தளத்தில் கட்டளை மூலம் ஆட்சி செய்வது  வீட்டில் காதல் மூலம் தன்னுடைய செயல்களில் கவனம் கோருவது என்ற கொள்கை அடிப்படையில் அவள் காய் நகர்த்துவாள்.

வீட்டில் ஹினா வந்திருக்கவில்லை. அவசர அவசரமாக சமைக்கத் தொடங்கினான். ஹினாவிற்குப் பிடித்த பாயா, ஹலீம், சப்பாத்தி எல்லாம் சமையலறை வாசனையில் ஒன்றுடனொன்று போட்டி போட்டன. இந்த ஆர்ப்பாட்டமெல்லாம் உண்மையில் எதற்காக? தன்னுடைய காதலின் சுயநலத்திற்காகவா? அல்லது… அவன் தன்னைத் தானே சுய பரிசோதனை செய்து பார்த்தான். இல்லை ஒரு சில கணங்களுக்குள் அவன் புது ஆளாகவே மாறிவிட்டான். ஹினா என்பவள் ராணியாகவே இருக்கட்டுமே, அரசிகள் மீது அரண்மனைக் காவலர்களுக்குக் காதல் முகிழ்வது இயற்கைதானே? ஹினா வீட்டின் கதவினைத் திறக்கும் பொழுது வழமையாக அவள் அவனைக் கட்டியணைப்பதற்கு முன்னர் அவனே முந்திக் கொண்டு ஹினாவை முத்தமிட்டான்.

அந்தப் பெண்ணின் அகதி வழக்கு என்ன நடந்தது என்பதை ஹினாவிடம் அறிவதற்கு ஏதாவது வழி உள்ளதா என அவன் சில நாட்களாக யோசித்துக் கொண்டிருந்தான். ஹினா எந்த வித பிடியும் கொடுக்காதவள் போல் தன் பாட்டில் வேலையில் மும்முரமாக இருந்தாள்.

“என்னுடைய அறைக்கு கொஞ்சம் வருகிறீர்களா? ஒரு சில வழக்குகள் சம்பந்தம்மாக உதவி தேவை.” ஹினா அவனை அழைத்தாள்.

 ஹினாவின் அழைப்பு அவனுக்கு எரிச்சலை உண்டாக்கியது, ‘இவள் எதற்கு என்னை வரச் சொல்ல வேண்டும், அவளுடைய வேலையில் எனக்கு என்ன பங்கு… அவளுக்கு நான் உதவியாளர் போல நடத்துகிறாள்…’   உள்ளே குமைந்து கொண்டிருந்தது.  

“ஹாய், வாருங்கள்” ஹினாவின் உல்லாசமான வரவேற்பில் அவன் எந்தவித பதிலுமின்றி வந்தமர்ந்தான்.  “உங்களது நேரத்தை வீணடிப்பதற்கு மன்னிக்கவும்.   எனக்கு இந்த சுனாரி வாளா பெண்ணின் வழக்கிற்காக சில ஆலோசனைகள் தேவை. கொஞ்சம் உதவுங்களேன். உங்களுக்கு சுனாரி வாளாவைப் பற்றி தெரியும் என்று சொன்னீர்களே?” 

ஹினாவின் சொற்கள் சென்றடைய முன்னமே அவன் குதூகலத்தில் புல்லரித்துப் போனான். “அப்படியா?  ஆமாம் எனக்கு சுனாரி வாளாவைப் பற்றி கொஞ்சம் தெரியும், இப்பொழுது என்ன உதவி வேண்டும்?”

விபரங்களை அள்ளி அள்ளி வீசினான். இடையில் ஹினா தனக்கு லாஹூர் சிரேஷ்ட போலீஸ் அதிகாரியிடம் தகவல் எடுப்பது சம்பந்தமாக எதுவும் தெரியாதவள் போல் விழிக்க இது கூட உனக்குத் தெரியாதா என்ற அவனின் கர்வம் ஹினாவின் அறிவைச் சீண்டிப்பார்த்தது. உண்மையில் அவன் இப்பொழுது அரசனைப் போல் வழிகாட்ட ஹினா அமைச்சராக பணிந்து நின்றாள். ஆனால் அந்த நேரத்தில் அவனுக்கும் சுனாரி வாளாவிற்கும் உள்ள மறுபக்கத்தைத் திறப்பதில் கொஞ்சம் தயக்கம் ஏற்பட்டது. இப்பொழுது இந்த விடயத்தைப் பற்றி கதையை எடுத்தால் வழக்கு சம்பந்தமான ஹினாவின் அணுகுமுறையை நீர்த்துப் போகச் செய்யும். ஆகவே வழக்கின் முடிவுகள் வரட்டும் என்று அவனுக்குத் தோன்றியது.

அன்றைய நாள் காலையிலே அந்தப் பெண்ணுக்கு அகதி வீஸா ஏற்றுக் கொள்ளப்பட்ட செய்தியால் ஹினா வெற்றிக் களிப்பில் திளைத்திருந்தாள். காலையில் எழுந்ததிலிருந்து காரியாலயத்திற்குக் கிளம்பி காரில் செல்லும் வழியெல்லாம் ஹினா இந்த வழக்கின் வெற்றியால் எப்படி எப்படியெல்லாம் தனது பெயர் பேசப்படுகின்றது, யார் யாரெல்லாம் தன்னைப் பற்றி புகழப்போகிறார்கள் என்று பட்டியலிட்டுக் கொண்டிருந்தாள். 

இந்த நேரம் தான் தனக்குப் புதுக் காற்று வீசுவதாக நினைத்த அவன் ஹினா நான் உன்னிடம் ஒரு விடயம் பேச வேண்டும் என்று சமிக்ஞை காட்ட முயன்றான்…

“சுனாரி வாளாவின் அந்தப் பெண்… “

“ஆமாம் அவளுக்கென்ன”

“அவளை எனக்குத் தெரியும்” ஹினா அவனது சொற்களின் தீவிரத் தன்மையை உணராதவள் போல் அவனைச் சுமாராகப் பார்த்து சிரித்தாள்.

“உங்களுக்கு நிச்சயம் அவளைத்தெரியாமலிருக்க வாய்ப்பில்லை, ஏனெனில் அவள் நல்லதொரு சுறுசுறுப்பான பெண் உரிமைப் போராளி,”

அதனைக் கேட்டதும் அவனது முகத்தில் இருந்த குதூகலம் திடீரென வற்றிப் போனது. இதயம் வெடிக்கும் போல் பதட்டம் அதிகரித்தது. எப்படியாவது விளக்கி விட வேண்டும் என அவன் எண்ணிக் கொண்டு தனது சக்தியெல்லாம் ஒன்று திரட்டி அடுத்த சொற்றோடரை யோசிக்க முன்னே ஹினா ஊக்கம் பெற்று “அந்தப் பெண் சுனாரி வாளாவின் புவியிலை பிரமாதமாக விபரித்தாள். எனக்கு அந்தக் கிராமத்தைப் பார்க்க வேண்டும் போல் இருக்கு. வியாஸ நதி மிகவும் அழகான நதியாம்” ஹினா வேறு பாதையில் செல்லத் தொடங்கினாள், 

“நாங்க ரெண்டு பேரும் அடுத்த கோடை விடுமுறைக்கு ஹினாரி வாளா போகணும். அந்தப் பெண் சொன்ன வியாஸ நதியில் நீந்த வேண்டும். நம்மளுடைய அடுத்த தேனிலவு அங்கதான். ஐ லவ் யூ”

ஹினா அவனது கன்னத்தைக் கிள்ளியவாறே முத்தாய்ப்பு வைத்து விட்டாள்.     

அவன் செய்வதறியாது கொஞ்சம் நடிப்பு மேலிட ஹினாவைப் பார்த்து தலையசைத்தான்.  இனி மேல் ஒரு பொழுதும் அவனால் தனது காதலின் கதையை இந்த ராணித் தேனியிடம் பகிரவே முடியாது. எனக்கும் அந்தப் பெண்ணுக்கும சம்பந்தமேயில்லை. அவனது கடந்த கால நேசத்தினையும் ஹினாவின் எதிர்பார்ப்பினையும் பிரிக்கும் கோடு எவ்வளவு மெல்லியது என நினைத்துப் பார்த்தான்.  ஹினா அவளது வெற்றிக் களிப்பில் உட்கார்ந்திருக்க வெல்லவே முடியாத தனது கதையிலிருந்த தீர்ப்பின் தோல்வியால் மௌனமாக காரை ஓட்டத் தொடங்கினான்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...