“இன்டர்நேஷனல் டெர்மினல்?”
ஆஜானுபாகுவாகத் தன் இருக்கையை நிறைத்து அமர்ந்திருந்த அந்த டாக்சி ஓட்டுநர் இதைக் கேட்டவுடன் உடனடியாக எனக்கு அப்பாவின் நினைவு வந்தது. அது ஓட்டுநரின் உருவத்தினாலா? அவர் கேட்ட கேள்வியினாலா? இவ்விரண்டும் எனக்கு உண்டாக்கிய பரபரப்பினாலா? ‘ம்’ என்று மட்டும் சொல்லி அலைபேசியைத் தட்டி மணியைப் பார்த்தேன். தாமதமாகிவிட்டது. இடது பக்கம் சாலை காலியாக இருந்தும், ஓட்டுநர் வலப்பக்கத்திலேயே வண்டிகளின் பின்னால் ஊர்ந்துகொண்டிருந்தார்.
“சற்று சீக்கிரம் செல்ல இயலுமா? விமானத்துக்குத் தாமதமாகிவிட்டது,” என ஆங்கிலத்தில் கூறினேன். ஒன்றும் கூறாமல் தலையாட்டிவரைப் பார்க்க எரிச்சலூட்டியது.
மீண்டும் கைப்பேசியைப் பார்த்தேன். அம்மாவுடன் நாங்கள் இருக்கும் புகைப்படம் பளிச்சென்று தெரிந்தது. முதல் முறை கேன்சர் உறுதிசெய்யப்பட்ட பிறகு பார்க்கச் சென்றபொழுது எடுத்தது. முடிந்தவரை உற்சாகமாகச் சிரித்தபடி இருந்தாள். அப்பொழுதே இன்னும் சில நாட்கள் கூடுதலாகத் தங்கி விட்டு வந்திருக்க வேண்டும். அமெரிக்க அப்பார்ட்மெண்ட் நெருக்கடியில், அம்மாவையும் அப்பாவையும் அழைத்து வைத்துக்கொள்ள இடமோ, சந்தர்ப்பமோ இவ்வளவு நாள் கிடைக்கவில்லை. சமீபத்தில்தான் ஒரு வீட்டை வாங்க முடிந்தது. வாங்கி, குடிபுகுந்து அவர்களிருவரையும் இங்கு அழைத்து வைத்துக்கொள்ள தயாராவதற்குள், இப்படி அடுக்கி வைத்திருந்த அனைத்தையும் திடீரென கலைத்துப்போட்டது போல ஆகிவிட்டது.
இப்படி ஒரு நோய் இருப்பதற்கான எந்தவித அறிகுறிகளும் தென்படவில்லை என்று அம்மா சொல்கிறாள். அவள் தன்னை எப்படிக் கவனித்துக்கொள்வாள் என்பதை நான் அறிவேன். வாராவாரம் அலைபேசியில் பேசும்பொழுதும் எனக்கும் எதுவும் வித்தியாசமாகத் தெரியவில்லை. அலைபேசியில் எதைக் கண்டுபிடித்துவிடமுடியும்? கூடவே இருந்தால் கவனிக்கலாம். அப்பாவுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அவர்தான் கவனித்திருக்க வேண்டும். இவையெல்லாவற்றுக்கும் அப்பாதான் காரணம் என மனம் எண்ணும் இடத்திற்கு வந்துவிட்டிருந்தேன்.
அம்மா அவருக்கு ஒரு சம்பளமில்லா உதவியாளர். இருக்கும் இடத்திலேயே சகலசௌகரியத்தையும் செய்து தரும் நல்ல வேலையாள். அம்மாவும் எல்லாவற்றையும் செய்து அதில் ஒரு சுகம் கண்டுவிட்டாள் போல. இதிலெல்லாம் எனக்கு எந்தவிதமான சிக்கலும் இல்லை என்ற நிலைக்கு வந்திருந்தாலும் இப்போது அம்மாவுக்கு வந்திருக்கும் நோயால் இந்தப் பழைய புகாரெல்லாம் மீண்டும் கோரமாக உருவெடுத்தன. ஒரு சங்கப்பாடலில் தலைவி தன்னைச் சக்கரத்தில் ஒட்டிய சிறுபல்லியாகக் குறிப்பிடுவாள். அது தாழி செய்யும் சக்கரம். நின்ற இடத்திலேயே சுழலும். அப்பா எந்நேரமும் சமமற்ற சாலையில் உருண்டுகொண்டிருப்பார். அம்மா, அந்தச் சக்கரத்தின் அதிர்வு தாங்கியாக இருந்து அடி வாங்கியவள்.

“இங்கு நிறுத்துகிறேன்.” என்று ஓட்டுநர் அழுத்தமான ஆங்கிலத்தில் சொன்னதைக் கேட்டு அவசரமாக இறங்கினேன்.
பன்னாட்டு முனையத்தினுள் வாடகை வாகனங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாதையில் ஊர்ந்து சென்று, இடம் கிடைத்த சந்தில் நுழைத்து நிறுத்தியிருந்தார். ஒன்றும் பேசாமல் எனது பெட்டியை எடுத்துக்கொண்டு சாலையைக் கடந்து விமான நிலையத்தினுள் நுழைந்தேன்.
சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில், பாதுகாப்பு சோதனை முடிந்து, கழட்டிய காலணியை மீண்டும் அணிந்தேன். டெல்லி செல்லும் விமானத்தில் ஏறும்வரை கசப்பொன்று மனதில் உழன்றுக்கொண்டிருந்தது. நான் முதன்முறையாக அமெரிக்காவில் இருந்து ஊர் திரும்பியபோது அப்பா வந்து காத்திருந்தார். ‘வரவேண்டாம்’ என எத்தனை முறை சொல்லியும் கேட்பதாக இல்லை. என்னை அமெரிக்காவில் இருந்தே நேரடியாக அழைத்து வருவதாக நினைத்துக்கொண்டார் போல.
பன்னாட்டு முனையத்தில் காத்திருந்தவர் உள்நாட்டு முனையத்திலிருந்து வெளிவந்தேன் என்றறிந்து அங்கு வந்து என்னைக் கேள்வியால் துளைத்தெடுத்தார். வேறு மாநிலங்களிலிருந்து சென்னை வரும் பொழுது உள்நாட்டு முனையத்திற்கும், வேறு நாட்டிலிருந்து நேரடியாக சென்னை வரும் பொழுது பன்னாட்டு முனையத்திற்கும் வருவது வழக்கம் என்பதை அவரால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. அதற்கு அவர் முயற்சிக்கவும் இல்லை. அவர் மூளை இயங்கும் விதம் அப்படியானது. தான் சொல்வதும் செய்வதுவுமே எப்பொழுதும் அவருக்குப் பிரதானம்.
அன்றும் பெட்டிகள் ஏற்றிவந்த வண்டியைத் தள்ளிக்கொண்டு அந்தப் பக்கம் சென்று டாக்சி பிடிக்கலாம் என்று கூறிக்கொண்டே நடந்தார். நானும் வண்டி பேசிக்கொண்டு வந்திருக்கிறார் என்று நினைத்துக்கொண்டு அவரோடு நடந்துசென்றேன். அரை கிலோமீட்டர் தூரம் நடந்து, பன்னாட்டு முனையத்தினருகில் வந்தவுடன் தன் அலைபேசியை என்னிடம் கொடுத்து,
“இங்கேர்ந்து டாக்சி புக் பண்றையா? கண்ணாடிய கொண்டு வர மறந்துட்டேன்.” என்றார்.
“டாக்சி புக் பண்றதுக்கு எதுக்கு இவ்ளோ தூரம் நடக்கணும்? அங்கேருந்தே பண்ணிருக்கலாமே?”
“இங்கேருந்து நேரா வெளில போய்டலாம். அங்கன்னா முழுக்க சுத்தி வரணும்,” வலது கையை அகலமாக வைத்து ஒரு சுற்று சுற்றினார்.
உள்ளுக்குள் கடும் கோபம் மூள, “ஒண்ணையும் யோசிக்காம வந்துட்டு, இப்படி ஒரு சால்ஜாப்பு”, என்று முணுமுணுத்தவாறே, அலைபேசியை இயக்கி டாக்சியை வரவழைத்தேன்.
அப்பாவின் இதுபோன்ற நடவடிக்கைகள் சாதாரண நாட்களில் எனக்குப் பெரிய கஷ்டமாக இருந்ததில்லை. அவரை அனுசரித்தோ அப்படி முடியாத நேரங்களில் தவிர்த்தோ காரியங்களைச் செய்துகொள்ள முடிந்தது. ஆனால் தற்பொழுது நிலைமையே வேறு. அம்மாவின் கேன்சர் பாதிப்பு எங்களுக்குள் ஒரு பெரிய பதற்றத்தை உண்டுபண்ணியிருந்தது. அமெரிக்காவிலிருந்து இங்கு நடப்பவை அனைத்தையும் நானே முழுமையாகக் கண்காணித்து வழிநடத்த வேண்டியிருந்தது. அதற்கு அப்பா உட்பட அனைவரின் உதவியும் தேவையாயிருந்தது. ஆனால் இப்போதெல்லாம் உதவியைவிட அப்பா ஒத்துழைத்தால் போதும் என நிலைக்குச் சென்றிருந்தேன்.
இரண்டாம்கட்ட மருத்துவ சோதனைகளுக்குப் பின் கேன்சர் உறுதி செய்யப்பட்டிருந்த அந்த நாள் என் நினைவில் நன்கு பதிந்திருந்தது. அம்மாதான் அழைத்து விஷயத்தைச் சொன்னாள். ரொம்பவும் ஜாக்கிரதையாகவும் அதே நேரம் சாதாரணமாகச் சொல்வது போலவும் சொன்னாள். இதற்கு முன்பு, முதற்கட்ட சோதனையில், மருத்துவர் கேன்சராக இருக்கலாமென்று சந்தேகித்ததை அலைபேசியில் ஒற்றை வரியில் அப்பா போட்டு உடைத்துவிட்டார். அப்போது நான் அமெரிக்காவில் புதிதாக வாங்கிய வீட்டு கிரகப்பிரவேசத்தில் அமர்ந்திருந்தேன். நான் அதை வேறு விதமாக நினைக்கவில்லை என்றாலும், நல்லநாளில் அபசகுனம் போல அப்பா அப்படிச் சொல்லிவிட்டாரே என்று அம்மாவுக்கு ஏக வருத்தம். அதனாலேயே இப்பொழுது முந்திக்கொண்டு அவளே அழைத்துவிட்டாள்.
“அதெல்லாம் கவலைப்படாத. அதது நடக்கணும்னா நடந்துதான ஆகணும். சும்மாவா? வயசும் எழுபது கிட்ட ஆறதே! எல்லா ட்ரீட்மெண்டும் பண்ணிக்கறேன். பாப்போம்.” என்றாள். குரல் கம்மியிருந்தது. படியேறி வந்த களைப்பாக இருக்கலாம் என்று நினைத்துக்கொள்வது ஆறுதலாக இருந்தது.
அன்பாக எதைச் சொல்ல நினைத்தாலும் அபத்தமாகப் பட்டது. சகஜமாக ஏதேனும் பேச நினைத்து, “இப்போதான் ஹாஸ்பிட்டல்லருந்து திரும்பி வந்தியா?” என்றேன்.
“ஆமா… இதோ பூட்ட தெறந்துண்டே உனக்கு கோல் பண்ணினேன்”.
“கொஞ்சம் தண்ணி குடிச்சுட்டு பேசேன். அப்பா பக்கத்துல இல்லையா? எங்க இருக்கார்?” என்றேன் சற்று சந்தேகத்துடனேயே.
“வந்துட்டு எங்கயோ கீழ போனா…” சற்று இடைவெளி விட்டு, “தோ வந்துட்டா குடுக்கறேன்…” சற்று தொலைவில் அவள் குரல் கேட்டது,
“இந்தாங்கோ… பாஸ்கர் பேசறான்.”
மனதிற்குள் சில விநாடிகளுக்கு ஓர் ஒவ்வாமை வந்து போனது. நான் எதையோ எதிர்ப்பார்த்து அஞ்சுகிறேனா? சில வினாடிகளில் அப்பா அருகில் வருவது கலவையான ஒலிகள் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது. அலைபேசி கைமாறிய விதம், இழுத்துப் பிடுங்கப்பட்டதைப் போல தோன்றியது. அவரது ஆஜானுபாகுவான உருவத்திற்கு ஏற்ற அழுத்தமான குரல்,
“ஆட்டோக்காரன் மீதி சில்லரைக்கு நடூல ஒரு கிழிஞ்ச பத்து ரூபா நோட்ட வச்சு குடுத்துட்டான்டா. அதான் எங்கயானும் இருக்கானான்னு பாக்க மறுபடி கீழ போனேன். ராஸ்கல் வேகமா ஓடிட்டான்.” அப்பாவின் குரலில் மெல்லிய திணறல்.
“அதிருக்கட்டும். டாக்டர்கிட்ட பேசினேளா? உங்ககிட்ட எதாவது சொன்னாரா?” குரலில் தோன்றிய அலுப்பை மறைக்க முயலாமலேயே கேட்டேன்.
“அதெல்லாம் கவலப்படாதீங்கோ குணப்படுத்திடலாம்னுதான்டா சொல்றா. அந்த லேடி டாக்டர் என்னவோ நல்ல மாதிரியாதான் இருக்கா. சரி பண்ணிடலாம்னுதான் தோன்றது. பாக்கலாம். ஆனா என்னடா இது அவ்ளோ பெருசா இருக்கு இந்த ஆஸ்பிட்டல்? டாக்டர பாத்துட்டு வெளில வந்து, பாத்ரூம தேடி கண்டுபிடிக்கவே பத்து நிமிஷம் ஆய்டுத்து.”
நான் ஊறி வந்த சலிப்பை முடிந்தவரை வெளிக்காட்டாமல் “சரி அம்மாவ பாத்துக்கோங்கோ. நானும் இங்க விசாரிச்சுட்டு அடுத்து என்ன பண்ணலாம்னு பாக்கலாம்,” என்றேன். இங்கே எதை, யாரிடம் விசாரிப்பது என அடுத்த நொடியே தோன்றியபொழுது எங்காவது அமர வேண்டும்போல இருந்தது.
“அதெல்லாம் நீ கவலப்படாத. நா பாத்துக்கறேன். கொழந்தேள் ரெண்டும் தூங்கிடுத்தா?”
“ம். அம்மாவ கொஞ்சம் ஜாக்ரதையா பாத்துக்கோங்கோ. மாத்திர எல்லாம் சரியா குடுத்து சாப்ட சொல்லுங்கோப்பா.”
“நா பாத்துக்கறேண்டா. சனிக்கெழம பேசிக்கலாம். நீயும் போய்த்தூங்கு. நாளைக்கு உனக்கும் ஆபீஸ் இருக்கோல்யோ?”
ஃபோன் கட் ஆகிவிட்டதா அல்லது அவர்தான் வைத்துவிட்டாரா தெரியவில்லை. ஆனால் அது அப்போதைக்குக் கொஞ்சம் நிம்மதியாகக்கூட இருந்தது. அப்பா மீண்டும் அழைக்கமாட்டார். அவருக்குப் பொதுவாக அந்த யோசனையெல்லாம் இருக்காது. அம்மாவின் இந்த நிலைமையை அவரது தினசரி வாழ்வில் விளைவித்த, விளைவித்துக்கொண்டிருக்கிற குழப்பங்களை அவர் எவ்வாறு கையாளப்போகிறாரோ? இந்தக் குழப்பத்தினாலான எதிர்வினைகளையெல்லாம் அம்மா எப்படிச் சமாளிக்கப் போகிறாளோ? இவை இரண்டையும் பார்த்துக்கொண்டு நான்தான் எப்படி நடந்துகொள்ளப் போகிறேன்?
அனாவசியமாக இப்படியெல்லாம் யோசிப்பவன் இல்லை நான். அப்பாவின் கோணல் நடவடிக்கைகளை வருடக்கணக்கில் பார்த்து வந்ததனால் ஏற்பட்ட பதற்றமே இது. அப்பாவை நம்பி இதைச் செய்யலாம் என்ற ஒன்று இல்லை. வீட்டுக்கு கிரைண்டர் வாங்கிய கதையே நினைவுக்கு வருகிறது. நான் கல்லூரியில் சேர்ந்த புதிதில், வீட்டு வேலையைச் சுலபமாக்க அம்மாவும் அப்பாவும் அலசி ஆராய்ந்து ஒரு கிரைண்டரை வாங்குவதற்குத் தேர்வு செய்தனர். நாள் பார்த்து வாங்க முடிவு செய்து, அப்பாவை மட்டும் அனுப்பி வைத்தாள் அம்மா. மூன்று பேர் இருக்கும் வீட்டுக்கு ஒரு லிட்டர் கிரைண்டர் சரியாக இருக்கும் என்று ஒரு வாரமாக அம்மா சொல்லி வந்ததைக் கண்டு கொள்ளாமல், மூன்று லிட்டர் கிரைண்டரோடு திரும்பி வந்தார் அப்பா. கேட்டதற்கு, ஐந்நூறு ரூபாய் தான் அதிகம் என்று கடைக்காரன் சொன்னதாகச் சொன்னார். அம்மாவும் பெரிதாக எதிர்ப்பு தெரிவிக்காததால் அது அப்படியே போயிற்று. எனக்குத்தான் கல்லூரி பருவம் முழுவதும் மாவரைக்கும்பொழுதெல்லாம் கிரைண்டர் கல்லை எடுத்து மாவு வழிக்கும் வேலை வந்து சேர்ந்தது. இப்பொழுதுள்ள நிலைமையிலோ இது போன்ற விவகாரங்களே பெரிதும் பயமுறுத்துகின்றன.
வீடு மாற்றும் பொழுது ஓர் உற்சாகத்தில் தாராளமாக விடுப்பு எடுத்திருந்தேன். இப்பொழுது மீண்டும் விடுப்பு கிடைப்பதில் ஒரு நடைமுறை சிக்கல். வேறு வழியில்லாமல் அப்போதைக்கு ஒரு வாரம் மட்டும் சென்று வந்தேன். தற்பொழுது செல்லும் இந்தப் பயணத்தைச் சற்று நீண்டதாக அமைத்துக்கொண்டேன்.
அப்பாவின் உயரத்திற்கும், உருவத்திற்கும் ஈடு கொடுக்கக்கூடிய உடல்வாகு அம்மாவுக்கு. இப்பொழுதுதான் எப்படி மாறிவிட்டாள்? இரண்டு கீமோ செஷன்கள் முடிந்து ஆளே உருக்குலைந்துவிட்டாள். அப்பாவின் பக்கத்தில் இப்பொழுது நிற்கவைத்துப் பார்த்தால் எப்படி இருக்குமோ? பெரும் மூட்டையொன்று மேலே விழுந்து அழுத்துவது போல தோன்றவே சடாரென்று நிமிர்ந்து அமர்ந்தேன். சூழ்நிலை விளங்க, யாரேனும் கவனிக்கிறார்களா என்று சுற்றிலும் பார்த்தால் அனைவரும் அவரவர் அலைபேசியிலும் முன்னிருக்கையில் பொருத்தப்பட்டிருந்த திரையிலும் மூழ்கியிருந்தனர். சிலர் கண்களை மூடி அரைத்தூக்கத்திலும் இருந்தனர். விசையை அழுத்தி ஒரு காப்பி கேட்டேன். அதை அருந்தாமல் அப்படியே அமர்ந்திருந்தேன்.
***
வாசலை ஒட்டி சாய்வு நாற்காலி முழுவதுமாகப் பரவியிருந்தார் அப்பா. முன்வழுக்கை பிரதானமாகத் தெரிய, தலை அழுந்தியதால் பின்பக்க தலைமயிர் பிரிபிரியாக அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளியே நீட்டிக்கொண்டிருந்தன. அதை இங்கிருந்து பார்க்கும் பொழுது நன்கு உபயோகப்படுத்தப்பட்ட பாத்திரம் துலக்கும் பிரஷ்ஷினை நினைவுபடுத்தியது. நெற்றியில் மூன்று வரி சுருக்கம் பக்கவாட்டில் நீண்டது. நீள்வாக்கில் அவர் இட்டிருந்த சந்தனம் சுருக்கங்களில் தொடர்பை இழந்திருந்தன. புருவங்கள் மேல்நோக்கி வளைந்து, கண்கள் சற்றே சொருகி, வாய் பிளந்து, உற்றுக் கேட்கும்போது சன்னமான குறட்டையொலி எழ உறங்கிக்கொண்டிருந்தார். கன்னச் சதைகள் இருபுறமும் இறங்கி முன்பைவிட மேலும் சற்று வயதாகியிருந்தார். மெல்ல என் பெட்டியைத் தூக்கிக் கொண்டு சத்தமில்லாமல் உள்ளே சென்றேன். அம்மா சமையலறையில் காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் மலர்ந்து எழுந்தாள்.
“வா. எதிர்பாத்துண்டே இருந்தேன்.”
எவ்வளவுதான் தயாராக இருந்தாலும், நேரில் பார்க்கும் பொழுது நோய் உருக்கிய அவளது உருவம் கடும் அதிர்ச்சியை அளிக்கவே செய்தது. இவ்வளவு பெரிய நெற்றியா அம்மாவுக்கு? நன்கு புடைத்து தெரிந்தது. கன்னம் ஒட்டிப்போய், கழுத்து, கை எல்லாம் சதை குறைந்து, பாதியாகச் சுருங்கியிருந்தாள். உடைந்துவிடாமல் சமாளிக்க, கண்களை அறைப்பக்கமாகத் திருப்பி,
“இந்த ரூம்லயே பொட்டியெல்லாம் வெச்சுக்கட்டுமா?” என்று கேட்டபடி உள்ளே நுழைந்தேன். ”என்னடா மூணாம் மனுஷனாட்டம் கேக்கற” என அம்மா சொன்னதைக் காதில் போட்டுக்கொள்ளாமல் குளிக்கச் சென்றேன். சென்னையின் புழுக்கம் அதிகரித்திருந்ததை விமானத்தை விட்டிறங்கியவுடனேயே உணர முடிந்தது. வீட்டிற்குள் நுழையும்பொழுதே உடம்பில் சட்டை முழுவதுமாக ஒட்டியிருந்தது. எனவே, குளியலைத் தேவையான அளவு நீட்டித்தேன். வெளியே வந்த பொழுது, அம்மா காப்பி போட்டு முடித்திருந்தாள்.
“அதில்ல உனக்கு. அது அப்பாவுக்கு சக்கர போடாம. இதுதான் உனக்கு.” ஆவி பறக்க நுரையுடன் மணக்கும் காப்பி டம்ளரை டபராவுடன் நீட்டினாள். வாங்கிக்கொண்டேன்.
“சுடப்போறது. ஆத்திக்கோ.” என்றவள், அப்பாவின் காப்பியை எடுத்து இரண்டு ஆற்று ஆற்றி, கன்னத்தில் வைத்து சூடு பார்த்து எடுத்துக்கொண்டு போனாள். நான் பின் தொடர்ந்தேன். அப்பா எழுந்திருந்தார்.
என்னைப் பார்த்து “வா! உனக்குதான் கதவ தெறந்து வெச்சுண்டு இருந்தேன். கொஞ்சம் அசந்துட்டேன் போலருக்கு… இப்பவெல்லாம் சட்டுனு அழுத்திடறது,” என்றவர், “இன்டர்நேஷனல் டெர்மினல் தானே?” என்று கேட்டார்.
நான் எதுவும் சொல்லாமல் தலையாட்டிவிட்டு, காப்பியை ஊதினேன். அம்மா கொடுத்த காப்பியை அண்ணாந்து நான்கே மடக்குகளில் குடித்துவிட்டு டம்ளரைத் திருப்பிக் கொடுத்தார் அப்பா. நான் இரண்டு வாய் காப்பியை உறிஞ்சிவிட்டு, ஏதோ நினைவுக்கு வந்தவன் போல் அறைக்குத் திரும்பினேன். என் லாப்டாப்பை திறந்து மின்னஞ்சல்களைப் படிக்கத் தொடங்கினேன். அங்கிருந்து வரும் பொழுது என் மேலாளருடன், இந்தியாவிலிருந்து சில வாரங்கள் வேலை செய்வதாக ஒப்பந்தம் செய்துகொண்டு வந்திருந்தேன். மருத்துவமனை செல்வதற்கும், மற்ற சோதனைகளுக்கும் செல்லும் நாட்கள் போக மீதி நாட்களில் இங்கிருந்தே சில வேலைகளை முடித்துக் கொடுப்பதாகத் திட்டம். முடிந்தால் பெங்களூருவில் உள்ள எங்கள் நிறுவனத்தின் கிளை அலுவலகம் கூட போய்வர உத்தேசம். ஒரு சில மின்னஞ்சல்களைப் படித்து அவற்றுக்கான பதில்களை யோசித்து எழுதி அனுப்பிவிட்டு நிமிர்ந்தேன். முக்கால்மணி நேரம் ஆகியிருந்தது.
ஸ்வப்னாவுக்கு வந்து சேர்ந்த தகவலைச் சொல்ல வேண்டும். அவளும் குழந்தைகளும் விழித்திருப்பார்களா என்று யோசித்தேன். அலைபேசியில் அழைத்தால் உடனடியாக அப்பா என்ன கேட்டார், அதற்கு நான் என்ன பதில் சொன்னேன் என்று இடைவெளியின்றி கேட்டுக் கேட்டு, அறிவுரை கூறத் தொடங்கிவிடுவாள். இப்பொழுது அதற்குத் தெம்பில்லை. ஒரு குறுஞ்செய்தி மட்டும் அனுப்பி பிறகு அழைக்கிறேன் என்று சொல்லிவைத்தேன். சோம்பல் முறித்துக்கொண்டே மெல்ல அறையை விட்டு நான் வெளியே வரவும், வீட்டுக்குள் அப்பா நுழையவும் சரியாயிருந்தது. எங்கே போய் வருகிறார் என்று யோசித்தபடி நான் பார்க்கவும்,
“பக்கத்துல கடைக்கு போய் உருளக்கிழங்கு வாங்கிண்டு வந்தேன். வேக வச்ச கறி உனக்கு புடிக்குமேன்னு” என்றார்.
உள்ளுக்குள் கனன்ற கோபத்தைக் காட்டாமல், “இப்போ எதுக்குப்பா இதெல்லாம்? அம்மா வேற ஏற்கனவே ஏதோ சமச்சுட்டா போல இருக்கே. இப்போ இத வேக வெச்சு, உரிச்சு… எதுக்கு?”.
“அதெல்லாம் நேரமாகாதுடா. டக்குனு பண்ணிட சொல்றேன்,”
நான் சொல்வதை அவர் வேறு மாதிரி புரிந்து கொள்வதை நினைத்து எரிச்சல் மூண்டாலும், மேலும் இதை வளர்க்க வேண்டாம் என்று அமைதியாக அறைக்கே திரும்பினேன். சற்று நேரத்தில் சமையலறையில் சத்தம் கேட்டு அங்குச் சென்றால், அப்பா ஒரு பாத்திரத்தில் வேக வைத்த உருளைக்கிழங்கு தொலிகளை அரைகுறையாக உரித்துக்கொண்டிருந்தார்.
நான் அம்மாவிடம் தனியே சென்று, “இப்போ வக்கணையா சாப்டவாம்மா வந்துருக்கேன்? எதுக்கும்மா இப்படி பண்றார்?” என்றேன்.
அவள் அலட்டிக்கொள்ளாமல், “இது புதுசாடா? எப்பவுமே நீ வந்தா பண்றதுதான?”.
“அது சரிம்மா. இப்போ உனக்கு உடம்பு இருக்கற நெலமைல எதுக்கு இந்த வேலைய இழுத்து விட்டுக்கணும்?”.
“ஒரு வேலையும் இல்ல. கெழங்க உரிக்கறது கூட உங்கப்பாதான் பாரு. இதுவரைக்கும் அவர் இதெல்லாம் செஞ்சதே இல்ல. இப்போ அவருக்கு வழக்கமா செய்யறதெல்லாம் செஞ்சுடணும்னு என்னவோ ஒரு ஆசை. முடிஞ்சா பழையபடி அந்தக் காலத்துக்கே போய்டணும்னு கூட ஆசை அவருக்கு.”
அம்மா சொல்வதின் முழு அர்த்தத்தை யோசிக்க இயலாமல், “சரி. பாத்தரத்தலாம் அப்படியே போடு. நா வந்து தேச்சு தறேன். தூக்கம் வராம இருக்க இப்படி எதாவது பண்ணியாகணும்.” என்றேன். கலிபோர்னியாவுக்கும் சென்னைக்கும் இப்பொழுது பதினொன்றரை மணி நேர வித்தியாசம். பகலும் இரவும் இருநாடுகளுக்கும் முற்றிலும் நேரெதிர். எனவே பகல் முழுவதும் உறங்கி இரவு மொத்தமாக விழித்திருக்க நேரிடும். இப்படி ஏதாவது ஒரு வேலையை இழுத்துப்போட்டுச் செய்துகொண்டிருந்தால், முன்னிரவு வரை தாக்குப்பிடிக்கலாம்.
அன்று மதியம் மிச்சமிருந்த பாத்திரங்களையெல்லாம் தேய்த்துக்கொடுக்க சமையலறைக்குச் சென்ற பொழுது, அப்பா கிழங்கு உரித்த பாத்திரத்தை எடுத்தவுடன் கையெங்கும் ஒட்டியது. கோபத்தை வெளிக்காட்டாமல் அதைச் சுத்தம் செய்து கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். அம்மா அறையில் ஓரமாகப் படுத்துக்கொண்டு ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள். மதியங்களில் இப்படி உறங்கக்கூடியவள் அல்ல. இந்தச் சமையல் குளறுபடிகளைச் சமாளிக்க, வெளியிலிருந்து ஏதேனும் வாங்கிக்கொள்ளலாமா என்ற யோசனை வந்தது. அம்மா ஒப்புக்கொள்ளமாட்டாள். மெதுவாகச் சொல்லித்தான் சமாதானப்படுத்த வேண்டும்.
அம்மாவிடம் தனியே பேசும் சந்தர்ப்பம் வரும் பொழுது சொல்லிப்பார்க்க வேண்டும். அம்மா இப்பொழுது முன்பை விட மெதுவாக ஆனால் அதே சமயம் பரபரப்பாக இயங்குவதாகப் பட்டது. காலையில் எழுந்து காபி குடித்தவுடன் சமையலைத் தொடங்கிவிடுவாள். முன்பெல்லாம் சமையலை முடித்த சிறிது நேரத்தில் நேரடியாக இருவரும் உண்டுவிடுவது வழக்கம். ஆனால் இப்பொழுது சமைக்க சற்று அதிக நேரம் எடுப்பதினால், நடுவே அப்பாவுக்கு ஒரு கோதுமைக் கஞ்சி குடிப்பது வழக்கமாகியிருக்கிறது. சமையலுக்கு நடுவே அதைத் தயாரித்துக் கொடுக்க வேண்டிய அதிகப்படி வேலை. வாராவாரம் கஞ்சி மாவு இருப்பைச் சரி பார்த்துக்கொள்ளவேண்டிய அவசியம். அதோடு சேர்த்து, அப்பா நல்லதென்று திடீரென நினைத்துக்கொண்டு வாங்கி வரும் பச்சை ஆப்பிள், அவகாடோ போன்ற பழங்களை அவை அழுகுவதற்கு முன் ஊறுகாய்யோ அல்லது வேறேதும் செய்து வைக்கவேண்டிய தேவைகள். இதையெல்லாம் கவனித்துவிட்டு, அப்பாவிடம் சற்று பொறுமையாக இந்த மாதிரி அதிகப்படி வேலைகள் உருவாகி வருவதை விளக்கினேன். அவரது யோசனையைக் கேட்பது போலத் தொடங்கி அம்மாவின் வேலைப் பளுவைக் குறைக்க வேண்டும் என்பதை அழுத்திச் சொன்னேன். அப்போதைக்குப அவருக்குப் புரிந்தது போலத்தான் தோன்றியது.
மேலும் இரண்டு இரவுகள் பாதி தூக்கமும், பாதி வேலையுமாகக் கழிந்தன. மூன்றாம் நாள் மாலை, அப்பா இரண்டு பைகளில் பொருட்களோடு வந்தார். என்னிடம் பெருமையோடு,
“உப்பு புளி பருப்பெல்லாம் தீரத் தீர வாங்கி வெச்சுடறேன். அப்பப்போ வாங்கிட்டா அப்புறம் அம்மாவுக்கு லிஸ்ட் போட்டு வாங்கி சரி பாக்கற வேலை இல்ல பாரு.” என்றார்.
மனம் தனக்குள் உருவாக்கிக்கொள்ளும் அல்லது உருவாகிவிடும் எதிர்பார்ப்புக்கு மாறாக ஒரு விஷயம் நடந்துவிடும்பொழுது மேலெழும் குழப்பம் இது என்று தோன்றியது. அந்தக் குழப்பத்திற்கான எதிர்வினை அடுத்தடுத்து செய்ய வேண்டிய செயல்களிலெல்லாம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும். இனி தாமதித்தால் மேலும் பல குழப்பங்கள் நேரக்கூடும். சொல்லிவிட வேண்டியதுதான்.
“அப்பா, இதுக்கு மேல அம்மா டெய்லி சமைச்சுண்டிருக்கரது சரியா படல. பேசாம மாசக்கணக்குக்கு யார்கிட்டையாவது வாங்கிக்கலாம்”.
மலங்க மலங்க என்னையே பார்த்துக்கொண்டிருந்தவர், “நானும் முதல்ல யோசிச்சேன். ஆனா அதெல்லாம் நமக்கு சரியா வருமாடா? இந்த நெலமைல அம்மாவுக்கு வெளி சாப்பாடு ஒத்துக்குமா?”.
அவர் செலவுக்கு அஞ்சி இப்படிச் செய்கிறார் என்று எனக்குள் தீர்மானம் செய்திருந்த நிலையில், அவர் இந்த வகையில் யோசித்திருப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் அந்தக் கோணத்தில் யோசிக்கவில்லை என்பதை நினைத்து சிறிது கோபமும் வந்தது. அந்தக் கோபத்தை அவர் மேல் திருப்பினேன்,
“அதெல்லாம் நமக்கு ஏத்த மாதிரி சமைச்சு தர நெறய பேர் இருக்காப்பா. நா பாத்து ஏற்பாடு பண்றேன்.”
என்ன புரிந்ததோ அல்லது எதை யோசித்தாரோ தெரியவில்லை. தலையாட்டிவிட்டு, உள்ளே சென்று பொருட்களையெல்லாம் வைத்தார். பிறகு வெளியே வந்து தனது நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு வாசலையே வேடிக்கை பார்த்தபடி இருந்துவிட்டார். அன்று அப்பாவிடம் அழுத்தமாகப் பேசியது அவரை அதிகமே மாற்றியிருந்தது.
அம்மா சமையலறையில் பொருட்களை அடுக்கிவைக்கும் சத்தம் கேட்டது. அதோடு அந்தப் பிரச்சினை தீர்ந்தது என்று நினைத்துக்கொண்டேன். அன்றைய இரவுக்கு அம்மா சமைத்த வற்றல் குழம்பை அப்பா ஐந்தாறு முறை உள்ளங்கையில் வாங்கி உறிஞ்சினார்.
அழைப்பு மணி சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன். கணிப்பொறியில் வேலை பாதியில் விடப்பட்டிருக்க நான் அருகிலேயே தூங்கியிருக்கிறேன். ஒரு கணம் ஒன்றும் புரியாமல் குழம்பி, பின் எழுந்து கதவைத் திறந்தேன். பக்கத்துக் கடையிலிருந்து வழக்கமாக குடிதண்ணீர் கேன் மாற்றுபவர் வந்திருந்தார். அவர் மாற்றிவிட்டு சென்றபின் கதவை மூடிவிட்டு, கணிப்பொறி முன் மீண்டும் அமர்ந்தேன். மணி பார்த்தால் காலை பதினொன்றரை. அரை மயக்க நிலை. ஒன்றும் அர்த்தப்படவில்லை. வாசலுக்கு வந்தேன். பக்கவாட்டு சாய்வு நாற்காலியில் அப்பா முதல் நாள் நான் பார்த்தது போலவே தூங்கிக்கொண்டிருந்தார். அவருக்கும் என்னைப் போலவே இரவுகளில் தூக்கம் இருப்பதில்லை. நேற்றுகூட, நான் அறையில் படுத்திருந்தவாறு கவனித்திருந்தேன். புரண்டு கொண்டே இருந்தார். சில சமயம் எழுந்து உட்கார்ந்திருந்தார். அப்பொழுதெல்லாம் ருத்திராட்சம் உருட்டும் சப்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது. அந்த அரையிருட்டில் ஒரு பெரிய பஞ்சு பொம்மையைப் படுக்கை நடுவில் வைத்ததுபோல தெரிந்தது. அம்மாவின் நிலைமையை அறிந்த நாள் முதல், அமெரிக்காவிலும்கூட எனக்கு இரவு உறக்கம் கெட்டது. அதுவும் நடு இரவில் விழிப்பு வந்துவிட்டால், பிறகு ஃப்ரீவேயில் இணையும் கார்கள் போல, பலவித எண்ணங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து சேர்ந்து கொண்டேயிருக்கும். ஒருவேளை அப்பாவுக்கும் அப்படித்தானா? அப்பாவுக்கு அம்மாவின் மீது உண்மையில் அன்பென ஒன்று உள்ளதா?
அம்மாவுடன் மருத்துவமனை செல்ல வேண்டிய நாள். அனைவரும் தயாராகும் வேளையில், அப்பா வந்து, ஆட்டோ டிரைவர் முத்துவை அழைக்கவா என்று கேட்க, அடுத்த குழப்பம் தொடங்கியது.
“அவ்ளோ தூரம் ஆட்டோல எப்படிப்பா போறது?”.
“ஆஸ்பத்திரிக்கே இல்லடா, விநாயகர் கோயில் பஸ் ஸ்டாப்புக்கு தான்.”
“பஸ்லயா?”
“ஆமா. நேர ஆஸ்பத்திரி வாசலுக்கே கொண்டுபோய் விட்டுர்றான். நாங்க சாய்பாபா கோவிலுக்கு போறதுக்கு வழக்கமா அந்த பஸ் தான். இங்கேர்ந்து பஸ் ஸ்டாப்புக்கு ஆட்டோ வெச்சா போரும். அதுக்குதான் நா முத்து கிட்ட பேசி வெச்சிருக்கேன். எப்போ வேணா கூப்பிடுங்க சார்ன்னான். நேத்திக்கு சாயந்தரம் போய் சொல்லிட்டு வந்திருக்கேன். அவன் தயாரா தான் இருப்பான்.”
உணர்ச்சியில்லாத குரலில், “வேண்டாம். நா ஓலா இல்ல ரேபிடோ கால் டாக்சி புக் பண்ணிடறேன்.”
அவ்வளவு பெரிய உருவத்திடமிருந்து ஒரு சீற்றத்தை எதிர்பார்த்து சிறிதளவு அச்சம் கூட எழுந்தது. ஆனால் அவர், நிலைமையை அறிந்தோ அறியாமலோ அமைதியானார். மூவரும் கால் டாக்ஸியிலேயே சென்று வந்தோம். அடுத்த சோதனை ஒரு மாத இடைவெளியில். அதற்குள் நான் அமெரிக்கா திரும்பியிருப்பேன். அடுத்த முறையும் வசதியாக சென்றுவர எப்படியாவது ஒரு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். எதிர்பாராத இடைஞ்சல்கள், குழப்பங்கள். யாருக்கும் தன்னளவில் நல்லதன்றி வேறு நோக்கங்கள் இல்லை என்றாலும், அது வெளிப்படும் விதம் புற அழுத்தங்களைத் தாங்கும் அவரவர் சக்திக்கேற்ப மாறுபடுகிறது. இந்த முரண்கள் வேறு வித அழுத்தங்களைத் தோற்றுவித்துவிடுமோ? அதைப்பற்றிக் கவலைப்படும் நிலையில் இன்று நானில்லை. இங்கிருக்கும்வரை எப்படியோ அழுத்திச் சொல்லி சமாளித்துவிடலாம். அமெரிக்கா சென்ற பிறகு திட்டவட்டமாக என்னதான் செய்துவிடமுடியும்?
திட்டமிட்டபடியும் எதுவும் நடந்துவிடுவதில்லை. கத்தாரிலிருந்து சான்பிரான்சிஸ்கோ செல்லும் விமானம் நான்கு மணிநேரம் தாமதமாகப் புறப்படும் என்று தெரிந்தபொழுது அப்படித்தான் தோன்றியது. அமெரிக்கா செல்லும் பொழுதும், அங்கிருந்து வரும் பொழுதும், நடுவில் விமானம் மாறக்கூடிய இடங்களில் எப்படியாவது குறைந்த நேரமே இருக்குமாறு பார்த்துக்கொள்வேன். அதுவும் தனியாகச் செல்லும் பொழுதுகளில் சீக்கிரமாக அடுத்த விமானம் ஏறிவிடவே விரும்புவேன். அப்படித்தான் யோசித்து இப்பொழுதும் ஏற்பாடுகளைச் செய்தேன். அப்படியும் தாமதம். என்னுடன் சென்னையிலிருந்து வந்தவர்களில் சிலர் ஓரமாக கால்களை நீட்டி சாய்ந்து தூங்கத்தொடங்கியிருந்தனர். எனக்கோ தனியறையில் படுத்தாலும், தூக்கம் என்பது அதிர்ஷ்டமிருந்தால்தான்.
சும்மா உட்கார்ந்திருப்பதற்குச் சற்று நடந்து சுற்றி வரலாம் என்று கைப்பையை மாட்டிக்கொண்டு நடக்கத் தொடங்கினேன். சுற்றிலும் கடைகள். வாசனைத் திரவியங்களும், மது பானங்களும் அடுக்கி வைக்கப்பட்ட வரி தீர்வை விலக்கு அளிக்கப்பட்ட கடைகளை வரிசையாகக் கடந்து நடந்து சென்றேன். வாசனைத் திரவியங்களின் நெடி எங்கும் கமழ்ந்து சற்று திகட்டியது. கடைகளில் ஓரிருவர் பொழுது போக்கச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தனர். மெல்ல நடந்தேன். எனக்குப் பின்னாலிருந்து என்னைத் தாண்டியும், எதிரிலிருந்தும் பல்வேறு நாட்டினர் சென்றுகொண்டும் வந்துகொண்டுமிருந்தனர். இளைஞர்கள், இளம்பெண்கள் அலைபேசியை உபயோகித்தபடி, இளம் கணவன் மனைவியர் கடைகளைக் கவனித்தபடியே, சிறு குழந்தையைச் சுமந்தபடியும், தள்ளுவண்டியில் வைத்து தள்ளிக்கொண்டும் இளம் பெற்றோர். வயதானவர்கள் தென்படவேயில்லை.
அவர்களெல்லாம் விமானநிலையத்தோடு நின்று விடுகிறார்களா? இவர்களெல்லாம் அவர்களைப் பார்க்கத் தான் போகிறார்களோ? அம்மாவை அந்நேரம் உடனே பார்க்க வேண்டும் போல் இருந்தது. தலைக்கு மேலே ஒரு அரக்கன் அமர்ந்து என்னைக் கீழே அழுத்துவது போல தோன்றியது. சுற்றியிருந்த அனைவரும் அந்த அரக்கனைப் பார்ப்பது போல் கற்பனை செய்துகொண்டேன். யாரேனும் ஒருவர் என்னை இழுத்துக் காப்பாற்றுவார்களா? தலையை உலுக்கி அந்தச் சிந்தனையை உதறினேன். நிமிர்ந்தால் கண்ணெதிரே அந்த ராட்சசக் கரடி பொம்மை. கத்தார் விமான நிலையத்தின் புகழ்பெற்ற அடையாளச் சின்னம். ஓரிருவர் அதனருகில் சென்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பெரும்பாலானோர் அதைத் தாண்டி வேகமாகச் சென்று கொண்டிருந்தனர். பயணத்தைக் கொண்டாடும் பொருட்டு வடிவமைக்கப்பட்ட சின்னம் அது. காலவெளியில் பின்னோக்கிப் பயணித்துத் தன் வாழ்வின் இனிமையான பருவத்திற்க்குச் செல்லும் விழைவோடு அமர்ந்திருக்கும் அக்கரடி பொம்மையைப் பரிதாபத்துடன் பார்த்தபடியே மெல்ல அதைக் கடந்து நடந்தேன்.
ஊர் திரும்பியபின், வார நாட்களை வேலையிலும், வார இறுதியைத் தொலைபேசியிலும் கழித்துக்கொண்டிருந்தேன். வழக்கம்போல தூக்கமில்லா இரவுகள். மீறி உறக்கம் வந்து அணைத்துக்கொண்ட சில நிமிடங்களுக்குள் கனவில் வந்தது, கத்தார் விமான நிலையத்தில் நான் கண்ட அந்த ராட்சசக் கரடி பொம்மை. அரைகுறை விழிப்புடன் வாரத்தில் மூன்று நாட்கள் அலுவலகம் சென்று வந்துகொண்டிருக்கிறேன். அம்மாவின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகத்தான் இங்கிருந்து கேள்விப்படும் விஷயங்கள் மூலம் தெரிகிறது. அதில் ஒரு சிறு நிம்மதியும் இருக்கத்தான் செய்தது. வாரநாட்களின் மாலையைக் குழந்தைகளின் பல்வகை பயிற்சி வகுப்புகளின் வாசலில் கழித்துக்கொண்டிருந்தேன்.
அப்படிப்பட்ட நேரத்தில், ஒரு நடு இரவில், சோர்வாக இருந்தும், அரை விழிப்பில் மீண்டும் தூங்கிவிட பெரும் முயற்சியெடுத்து தோல்வியடைந்து கொண்டிருந்த பொழுது, அலைபேசியின் மெல்லிய சத்தம். சென்னையிலிருந்து அம்மாவின் எண்ணிலிருந்து. உடம்பு முழுவதும் அப்பிக்கொண்ட பதட்டத்துடன் எழுந்தேன். சற்று நடுக்கத்துடன் காதில் பொருத்திக்கொண்டு,
“ஹ… ஹலோ?”
“பாஸ்கர்…” அம்மாவின் குரல், தழுதழுப்போடு, தயங்கித் தயங்கி எழுந்தது.
“என்ன இந்த நேரத்துல? என்னாச்சு சொல்லும்மா?”
“அப்பா நம்பளலாம் விட்டுட்டு போய்ட்டாடா…”.
“என்ன… எப்படி?”. சரியாக பேச்சு வரவில்லை எனக்கு. தலை சுற்றி மயக்கம் வருவது போலிருந்தது.
“இன்னிக்கு கார்த்தால கொஞ்சம் பிந்திதான் எழுந்துண்டேன். வழக்கமா காபிக்கு எழுப்பறவர் இன்னிக்கு ஒண்ணும் சொல்லலையேன்னு அவசர அவசரமா வந்து பாத்தா, சமையகட்டுல காய் நறுக்கிண்டு ஒக்காந்திருக்கார். அடுப்புல கொழம்பு கொதிக்கறது. என்ன ஓரமா உக்கந்துக்கோன்னு சொல்லிட்டு முக்காமணிநேரம் ஓடியாடி, வேர்க்க விறுவிறுக்க சமைச்சு முடிச்சா. அப்புறமும்கூட கொஞ்சம் படபடப்பாதான் இருந்தா. ராத்திரி சரியா தூங்காம கண்ணெல்லாம் நன்னா இல்ல. ஏதோ வேலைக் களைப்பா இருக்கும்னு நெனச்சேன். சாப்டுட்டு வழக்கம்போல கொஞ்சம் நேரம் ஈசி சேர்ல சாஞ்சு தூங்கிண்டு இருந்தா. அதிகப்படி வேல செஞ்ச சோர்வா இருக்கும்னு நெனச்சு ஏமாந்துட்டேன்டா நான். காப்பி போட்டுண்டு பக்கத்துல போனாதான் என்னவோ தப்பா தெரிஞ்சுது. கீழ, தெருவில முத்து இருந்தான். அவன்தான் டாக்டரை கூப்ட்டுண்டு வந்தான். டாக்டர் பார்த்துட்டு தூக்கத்துலயே உயிர் போய்ருக்குன்னும், போய் முக்கால் மணிநேரமாவது இருக்கும்னும் சொன்னார்.”
ஒன்றுமே சொல்லத் தோன்றவில்லை.
“பாஸ்கர்…”
“என்னம்மா?”
“எங்க கல்யாணம் நிச்சயமான உடனே அப்பாக்கு கும்பகோணத்துக்கு டிரான்ஸ்பர் கெடச்சுடுத்து. அதனால கல்யாணம் முடிஞ்சவொடனே என்னை தனியா கும்பகோணத்துக்கே கூட்டிண்டு போய்ட்டா. ரெண்டு பஸ் மாறி ஒரு முன் ராத்திரி போய் சேர்ந்தோம். புது இடம். உடனே தூக்கம் வராம பின் ராத்திரி தான் தூங்கினேன். கார்த்தால கொஞ்சம் பிந்தி எழுந்து வந்து பாத்தா, இதே மாதிரி தான் இவர் சமையக்கட்டுல சமைச்சிண்டு இருந்தார். வெங்காய வத்தகுழம்பும், எண்ணைக் கத்திரிக்காய் கறியும் பண்ணியிருந்தா.”
“ம்” என்று மட்டுமே என்னால் சொல்ல முடிந்தது.
“இன்னிக்கும் அதையே தான்டா சமைச்சிருக்கா.”
உள்ளம் அதிர்ந்தது. சொற்களைத் திரட்டி “தைரியமா இரு!” என்றேன். இதை அம்மாவிடம் சொன்னேனா எனக்கே சொல்லிக்கொண்டேனா எனத் தெரியவில்லை.
“தைரியமா இருந்துதான ஆகணும். ஹால்ல பெஞ்சு போட்டு படுக்க வெச்சிருக்கு. பாத்தா தூங்கற மாதிரிதான் இருக்கு. ஆனா, அவர் முகத்துல என்னவோ ஒரு திருப்தி தெரியறது. சரி, உன் மாமா கிட்ட சொல்லிருக்கேன். அவன் இப்போ வந்துடுவான். ஐஸ் பாக்ஸுக்கும் சொல்லியாச்சு. நா பாத்துக்கறேன். நீ பத்திரமா வா. என்ன?”
பதில் சொல்லி, அலைபேசியை அணைத்துவிட்டு, சாய்ந்து, கண்களை மூடி உள்ளே குறுக்கும் மறுக்கும் ஓடும் கோணலான தங்கக் கோடுகளைக் கவனித்தபடியே படுத்திருந்தேன். மூடிய கண்களிலிருந்து கண்ணீர் வழிய, ஒரு மெல்லிய எடையின்மையை உணர்ந்தவாறே உறங்கிப்போனேன்.
ஓவியம்: வர்த்தமான்
