1
“எனக்க காசா தா லேய்,” என்று முத்துவின் காக்கிச்சட்டையை இழுத்துப் பிடித்துக் கசக்கியபடி கத்திக் கொண்டிருந்த தாமஸ்ஸை மற்ற சக ஆட்டோக்காரர்கள் அமைதிப்படுத்த போராடிக்கொண்டிருந்தனர்.
சண்டை ஓய்வதாகத் தெரியவில்லை. நீண்ட நேரம் பேருந்தும் வராததால் தயங்கிக் கொண்டே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவர்களின் அருகே வந்த ராணி,
“ண்ணே…! ஆட்டோ வருங்களா?” என்று சற்று குரலை உயர்த்திக் கேட்டாள். தாமஸ்ஸின் பிடியில் இருந்த முத்துவிற்குத்தான் அடுத்த சவாரி. தாமஸ்ஸின் கையைப் பிடித்த முத்து, ராணியைக் காட்டி,
“அண்ணே, இந்த சவாரிய நீ எடுத்துக்கோ. நான் குடுக்க வேண்டிய அம்பது ரூவாய களுச்சுக்கோ. என்னய வுடுண்ணே, சண்ட வேணாம்.” என்றான்.
முத்துவின் சட்டைப் பிடியிலிருந்து தாமஸ்ஸின் கை தளர்ந்ததும் மற்ற ஆட்டோக்காரர்கள் நகர்ந்து காற்றுக்கு வழி விட்டனர்.
“கொஞ்சங் கூட எறக்கம் இல்லாம வெறும் அம்பது ரூவா காசுக்கு எஞ் சட்டைய புடுச்சுட்டல்லண்ணே?!” முத்து ஆதங்கம் அடங்காது கேட்டான்.
தாமஸ் தள்ளாடியபடி முத்துவைப் பார்த்து, “வ்ஓ… கருண… கருண காட்டச் சொல்லுதயோ, கருண…” என்று சிலுவை தொங்கிய டாலரோடு சேர்த்து தன் மார்பைத் தட்டிக் காட்டி, “எனக்கு எவம்பல கருண காட்டியது? செல்லு… செல்லு லேய்… எவம்பல எனக்குக் கருண காட்டியது? செல்ல்ல்ல்லு” என்றார் பல்லைக் கடித்தபடி.

“ஏன்டா அவனே கம்முன்னு போறான். சண்டைக்கு மறுக்கா இழுக்குற!” என்று முத்துவை அடக்கிய மற்ற ஆட்டோக்காரர்கள், “ஏய் விடுப்பா விடுப்பா சவாரி நிக்குது பாரு போ போ,” என்று தாமஸ்ஸை அனுப்பி வைத்தனர்.
சற்று தள்ளாடியபடி நடந்து வந்து நிதானித்து ராணியின் முன் வந்து நின்றார் தாமஸ்.
“எங்க போவண்ணும்?”
மதுவாடை லேசாக அடித்தது. தாமஸ்ஸைத் தாண்டி இடமும் வளமும் எட்டிப் பார்த்தாள் ராணி. மற்ற ஆட்டோக்காரர்கள் இருந்த இடமே தெரியவில்லை. தாமஸ்ஸை விட்டு இரண்டு அடி பின் நகர்ந்தவள்,
“கவுருமெண்ட்டு பள்ளியோடத்துக்குண்ணே,” என்றாள்.
“நூத்தி இருவது ரூபா…”
“ண்ணே… ஒரு அம்பது ரூவாய்க்கு….”
மெலிந்த கீற்று போல நின்றிருந்த ராணியைக் கண்டார். “சரி” என்று சொல்ல வாய் திறக்கும் முன் தாமஸ்ஸின் கைப்பேசி அலறியது. எடுத்து யாரென்று பார்த்த மாத்திரத்தில் தாமஸ்ஸின் சிவந்த விழிகள் மேலும் சிவப்பேறியது. அழைப்பைத் துண்டித்துவிட்டு ராணியைப் பார்த்து,
“எம்பது ரூவா… அதுக்கும் மேல ஒரு பைசா கொறைக்க ஒக்காது கேட்டியா, கேறு வண்டியில்ல.” என்று அழுத்தமாகக் கத்திவிட்டு ஆட்டோவில் ஏறினார்.
ராணிக்கு அதற்கு மேல் பேரம் பேச கால அவகாசம் இல்லாததால் தலையை ஆட்டிக் கொண்டு ஆட்டோவில் ஏறி அமர்ந்து கொண்டாள். ‘டுட்… டுட்… டுட்…’என ஆட்டோ திணறியது. ஆட்டோவின் உட்புறத்தை அண்ணாந்து பார்த்தாள் ராணி. ஆங்காங்கு யேசுவின் படம் தாங்கிய ஸ்டிக்கர்களும், மேரி மாதாவின் ஸ்டிக்கர்களும் ஒட்டப் பட்டிருந்தன. அனைத்துப் படங்களும் வண்ணம் தோய்ந்து ஆங்காங்குக் கிழிந்திருந்தன. விவிலிய வசனங்கள் தாங்கிய ஸ்டிக்கர்களில் சில வார்த்தைகள் சுரண்டி எடுக்கப்பட்டது போலத் தென்பட்டன.
‘டப… டப… டப…’ என ஆட்டோ புறப்பட்டது. சில்லென்ற காற்று அவளது முகத்தில் படர்ந்தது. கண்களை மூடி மூச்சை நன்றாக இழுத்தாள். அக்காற்றைக் கொண்டு அவளது உடலை ஆசுவாசப் படுத்திக்கொள்ள முயன்றாள். மனம் விடவில்லை.
வள்ளியைப் பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு டவுன் பஸ்ஸில் ஏறி எப்போதும் போல வேலைக்கு வந்துவிட்டாள்.
“முப்பாத்தாக்கா ஒரு பின்னூக்கு இருந்தா குடேன், செருப்பு அந்து போச்சு,” குதிகால் பகுதி தேய்ந்து ஓட்டை கண்ட செருப்பைக் கையில் எடுத்து அதன் அடிப்பகுதியைக் காட்டி நின்றாள் ராணி.
“நேத்திதானடீ ஒரு ஊக்க வாங்கிக் குத்தின?” மார்பிற்குள் கைவிட்டு மஞ்சள் கயிற்றை எடுத்துப் பார்த்தாள். அதில் ஊக்கு இல்லை. பிறகு ரவுக்கையின் ஓட்டைகளில் மாட்டியிருந்த பின்னூசிகளில் ஒன்றைக் கழற்றிக் கொடுத்தாள்.
“என்ன அங்க… கதையடிச்சிட்டு இருக்கீங்களா?” தனது புல்லட்டில் இருந்து இறங்கியபடி மேஸ்திரி சத்தம் போட்டார்.
மோட்டார் சத்தத்திற்கும், சுத்தியல் இரும்பில் மோதும் சத்தங்களுக்கும் இடையே மேஸ்திரியின் கணீர் குரல் வந்து வேலை ஆட்களின் செவிகளில் அறைந்தது.
“இல்லீங்க சார்!” என்று குரலை நீட்டிக் கூறியபடி பத்துப்பதினைந்து செங்கற்கள் அடுக்கப்பட்ட சட்டியைத் தலைமேல் ஏற்றிக் கொண்டு கட்டிடத்தின் மேலே செல்லும் படிகளில் ஏறத் துவங்கினார்கள்.
சிமெண்ட்டு பூச்சில் வெள்ளை பூத்திருந்த கால்களில் செருப்பை அவசரமாக மாட்டிக் கொண்டு எழுந்தாள் ராணி.
“யக்கோவ், வா சீக்கொரம் காலையிலயே அந்த மனுசன் வாயில வுல வேணாம்,”
“போ போ மின்னாடி, நான் வந்துட்டுதான இருக்கறேன்,”
அந்த நேரம் பார்த்து ராணியின் மார்பிற்குள் இருந்து நோக்கியா 1100 அலறியது. இரண்டு கைகளும் செங்கற்கள் கொண்ட சட்டியைத் தாங்கிக் கொண்டிருந்தன. இரண்டில் ஒன்றை விட்டாலும் நிலை தடுமாறிக் கீழே விழுந்து மேலே போக வேண்டியதுதான். மேல் தளத்திற்கு வந்து சேர்வதற்குள் சுமார் பத்து பன்னிரண்டு அழைப்புகள் வந்து விட்டன.
“யாருடி உனக்கு இத்தன தடவ போனு அடிக்குறது?”
“ம்… எம் புருசன்” தலையில் இருந்த சட்டியை இறக்கிக் கொண்டே சொன்னாள்.
“சொர்கத்துலேந்து கூப்புடுறானாக்கும்,”
“ம்க்கும்” என்று சடைந்து கொண்டு தன் மார்பிலிருந்து நோக்கியா ஃபோனை மீட்டெடுத்தாள் ராணி.
சட்டென மாறிய அவளது முகத்தைக் கண்டு,
“யாரு புள்ள?” பதட்டமாகக் கேட்டாள் முப்பாத்தாள்.
“யக்கா… பாப்பா ஸ்கூல்ல இருந்து கூப்பிட்டிருக்காங்க”
“பேந்த பேந்த முளுச்சிட்டு நின்னா ஆச்சா? திரும்ப போன் அடிச்சு என்னான்னு கேளு புள்ள.”
“போனுல காசு இல்லக்கா,”
“இந்தா என் போனு, பேசிட்டு வா, போ”
வழிந்த வியர்வையை முந்தானையில் துடைத்துக்கொண்டே மேஸ்திரியின் பார்வையில் படாமல் ஒதுங்கி நின்று பேசிவிட்டுத் திரும்பி வந்தாள்.
“மவளுக்கு என்னா?”
“மறுக்கா மயங்கி வுழுந்துட்டா,”
“சரி சரி நீ கெளம்பு. அந்த மண்ணு லாரி ஓரமா மறஞ்சு அப்படியே போயிடு பஸ்ஸ்டாப்புக்கு.”
“யக்கா மேஸ்திரீ,”
“அடியே அதுக்குத்தான நழுவிப் போகச் சொல்றேன். கூறுகெட்டவளாட்டம் கேள்வி கேக்குற. இத்தன பேருல தெரியாது புள்ள. கேட்டா சமாளிச்சுக்குறேன். போன வாரம் ஞாயித்துக்கெளமயும் சேத்தி வேல வாங்கீட்டு கூலி குடுத்தானா ஒழுங்கா. போ நான் பாத்துக்குறேன்,”
சும்மாடை இறக்கிக் கொண்டு, “சரிக்கா,” என்றாள்.
“பஸ்ஸூக்குக் காசு இருக்குதா?”
“இருக்குது இருக்குது. இருபது ரூபா வச்சிருக்கறேன்” நெஞ்சைத் தடவிக்கொண்டே கூறினாள்.
“இல்ல இல்ல, பஸ்ஸூல போவாத. வெகு நேரமாவும்.” தனது பர்ஸ்ஸில் இருந்த நூறு ரூபாயை எடுத்து ராணியிடம் நீட்டினாள்.
“இந்தா ஆட்டோ புடிச்சு வேவமா போ,”
“சனிக்கெளம வார காசுல குடுத்துடறங்க்கா.”
“ஆமா இந்த நூறு ரூவா காசுலதான் நான் மாளிக கட்டுறது தவுறுது. ஆஸ்பத்திரி செலவுக்கு காசு இருக்குதா?”
“தாலிய வித்த காசு வூட்டுல இருக்குது. அத எடுத்துட்டுப் போறேன்,”
மேஸ்திரியின் கண்ணில் படாமல் அங்கிருந்து நகர்ந்தாள் ராணி. செருப்பின் ஓட்டை வழியாகக் குத்திய கற்கள் குதிகால்களைக் கீழே பதிக்க விடாததால் நெருப்புக் கோழியைப் போல ஓடலானாள்.
2
வேகத்தடையில் சட்டென ஏறிய ஆட்டோ, ராணியை ஒரு கணம் இருக்கையில் இருந்து எழச் செய்தது. சுதாரித்துக் கொண்டு கம்பியை இறுகப் பிடித்துக் கொண்டாள். தாமஸ்ஸின் செல்ஃபோன் அலறியது. பாக்கெட்டில் இருந்து எடுத்துப் பார்த்தார். தன் மனைவியின் பெயரைப் பார்த்ததும் முகத்தைச் சுழித்துக் கொண்டு அழைப்பைத் துண்டித்துவிட்டு கைப்பேசியை பாக்கெட்டில் போட்டுக் கொண்டார்.
குடிபோதையில் மூடியக் கண்களைத் தேய்த்துக் கொண்டு ராணியிடம் பேச்சுக் கொடுத்தார் தாமஸ்.
“என்னவாக்கும் கத? இந்நேரத்துக்கு ஸ்கூலுக்குப் போறவ?”
“எம்பொண்ணுக்கு மேலுக்கு முடியலண்ணே”
“ஒடம்புக்கு சொகம் இல்லாத்த பிள்ளய ஸ்கூலுக்கு அனுப்புனவாளுக்கும் நீ?”
“யாருண்ணே பாப்பா வூட்டுல இருந்தா. நானும் பாட்டுக்கு வந்துடறேன். ஒரு நாள் வூட்டுல இருன்னுதான் சொன்னேன். எம் பேச்சக் கேக்காம அடங்கட்டி பள்ளியோடத்துக்கு போச்சு.”
“ஏன் நீ வீட்டுள்ள இருந்து பாக்குததுதானே. உனக்க ஆம்பள எங்க போனவன்?”
“அது இருந்தா நான் ஏன்ணே இப்புடி அவுதிப் படுறேன். அது டிபீல செத்து போயீ நாலு வருஷம் ஆச்சு.”
கண்ணாடியின் வழியாக அவளது முகத்தைப் பார்த்தார் தாமஸ்.
“ஓ… மவளுக்கு என்னவாக்கும் உடம்புக்கு? காய்ச்சலா?”
“அது என்னாண்ணே தெரியலண்ணே. ரெண்டு மூணு நாளு நல்லா இருக்குறா. அஞ்சாம் மைக்காந்நாளு மயங்கி வுழுந்துர்றா. ஆறு மாசமா இதே கததான். ரத்த டெஸ்ட்டு எடுத்தாங்க பெரிய ஆஸ்பத்திரில. சத்து ஏதோ கொறவா இருக்குதுன்னு மாத்தர மருந்து எளுதி குடுத்தாங்க. வாரக் காசு வந்து அத வாங்கித் தாரதுக்குள்ளயும் மூணு தடவ மயங்கி உழுந்துட்டா.”
வழிந்த கண்ணீர் காற்றில் பறந்தது.
“பொறவு மாத்தர வாங்கி குடுத்தவளா? இல்லியா?”
“குடுத்தேன் குடுத்தேன். அப்புடியுஞ் சரி ஆவல. இந்தத் தொண்டைக்குளியில துடிக்குமுள்ள இந்த நேரு கொறவலில.”
“ஆமா…”
“அது விடாம வெகு நேரம் படபடன்னு துடிக்குது மவளுக்கு நிக்காம. அதுக்குப் பேரென்னமோ சொன்னாங்க பல்பேசனோ என்னமோ.”
ஆண்டவரே என்று சொல்ல வந்து பாதியில் நிறுத்திக் கொண்டு, “அய்யய்யோ பெறவு?” என்று கேட்டார்.
“உனக்குத் தெரியுமாண்ணே அது என்னன்னு?”
“இல்லல்ல, எனக்கு தெரியாது பாத்துக்க. நீ சொல்லுதத பாத்தா ஏதோ வல்லிய நோயா இருக்கும்போலியேன்னு அய்யய்யோன்னு சென்னேன்.”
“ஹும்…” பெருமூச்சோடு தொடர்ந்தாள்.
“ரெண்டு நாளு பள்ளிக்கூடத்துக்கு லீவு போட்டுட்டு வூட்டுல இருக்க வப்பேன். கொஞ்ச நேரொம் நெஞ்சப் புடுச்சுட்டு ஏதோ மாதிரி இருக்குதுன்னு சொல்லுவா, அப்பறஞ் சரி ஆயிருவா. சேரி நல்லாத்தான இருக்கறான்னு பள்ளியோடத்துக்கு அனுப்பி வச்சா, ரெண்டு நாளு நல்லா இருக்குறா, மூணாந் நாளு போனு வரும் மயங்கி உழுந்துட்டான்னு. பள்ளியோடத்து வாத்தியாரம்மா என்னய ஏதோ ராட்சசியாட்டம் பாக்குறாங்க. எம்புள்ளய நானே கொடும படுத்துற மாதிரி. ஆஸ்பத்திரில சொல்ற நோயிப் பேரெல்லாம் எனக்கு வெளங்கினாத்தான நான் வாத்தியாரம்மாட்ட சொல்ல முடியும். சொல்லுங்க.”
அலைபாய்ந்த காற்றில் ராணியின் வியர்வை நெடி கலந்து வந்தது.
“நீ எங்க வேல செய்யுத?” மூக்கைத் துடைத்துக்கொண்டே தாமஸ் கேட்டார்.
“சித்தாள் வேலைக்குப் போறண்ணே. அடிக்கடி லீவு போட்டா மேஸ்திரி மானாவாரியா திட்டுவாரு. நானும் பாடுபடப் போவலயின்னா வூட்டுல கஞ்சிக்கும் வளி இல்ல, மாத்தரைக்கும் வளி இல்ல.” என்று சொல்ல சொல்ல வீட்டில் வைத்திருக்கும் பணம் நினைவிற்கு வந்தது.
“அண்ணே, அந்த பஸ்ஸ்டாப்பு சந்துலதான் என் வூடு. ஒரு ரெண்டு நிமிஷம் நிறுத்துனீங்கன்னா ஓடிப் போயி ஆஸ்பத்திரி செலவுக்கு வச்சிருக்குற காச எடுத்துட்டு வந்துருவேன்.”
பதில் சொல்லும் முன்னர் மனைவியின் அழைப்பு வந்தது தாமஸ்ஸின் கைப்பேசியில். இரத்தம் சூடாகிறது அவரது கண்களில் தெரிந்தது.
“நீ பள்ளிக்கூடம் வரைக்குமல்லா சவாரி பேசுனது? பத்து ரூவா சேத்தி தரண்ணும்மாக்கும். ஓடு வேகம் வா” என்று கத்திக் கொண்டே ஆட்டோவை ஓரமாக நிறுத்தினார்.
பீடியைப் பற்ற வைத்தபடியே அவள் சென்ற திசையில் பார்வையை ஓடவிட்டார் தாமஸ். வரிசைகட்டி நின்ற குடிசைகளில் ஒன்றினுள் அவள் நுழைவது கண்டார். அத்தனை குடிசைக்கும் ஒரு தண்ணீர் பைப்பும், ஒரு பெட்டிக் கடையும், ஒரு காற்றுக்குத் தாங்காமல் இடிந்து விழும் நிலையில் ஒரு கழிப்பறையும் இருந்தது.
‘இதுல எப்புடி இத்தற மக்களும் கக்கூஸ்ஸூக்கு போக ஒக்கும்?’ என்று தாமஸ் எண்ணும்போது, எல்லாவற்றிற்கும் பின்னால் நின்றிருந்த கருவேல முற்காடு நிமிர்ந்து நின்று கையசைத்தது.
“கெளம்பலாம்ண்ணே.” கையில் ஒரு மஞ்சள் பையோடு வந்து நின்றாள் ராணி.
பீடியைக் காலில் நசுக்கிவிட்டு ஆட்டோவை முடுக்கினார்.
கண்ணாடியின் வழியாக ராணியைப் பார்த்தார். காற்றில் பறந்துவிடுவாளோ என்று ஆட்டோவின் வேகத்தை சற்றுக் குறைத்துக்கொண்டார். சதைப்பிடிப்பே இல்லாமல் ஆங்காங்கே எலும்புகள் துருத்திக்கொண்டு நின்றன. மார்பென்று ஒரு பகுதி இருக்கும் மேடே தெரியவில்லை மாராப்பில்.
ஒளியே இல்லாத பெரிய கண்கள் அவளுக்கு.
‘சந்தோசமா இருந்திருந்தா ரொம்ப அழகா இருந்திருப்பா’ என்று நினைத்துக்கொண்டார் தாமஸ்.
அரசுப் பள்ளி வளாகத்திற்குள் ஆட்டோவை நிறுத்தினார். போதை சற்று குறைந்து இருந்தது…
“ண்ணே புள்ளய கூட்டியாந்துற்றேன். செரால்டு ஆஸுபத்திரீல யெறக்கி வுட்டுடுறீங்களா?”
“என்ன வெளயாடுறவளா நீ? பேசுன எடத்த விட்டு அங்கன யெறக்கி விடு இங்கன யெறக்கி விடுன்னு எனக்க உயிர வாங்குத?”
“ண்ணே… நூறு ரூபாயா குடுத்துறண்ணே…”
“சரிப் போ போ… வேகம் வா” என்றவன் வாய்க்குள் எதையோ முணகினான்.
‘சரி’ என்று தலையாட்டிவிட்டு வகுப்பறையை நோக்கி ஓடினாள்.
வகுப்பறையின் வெளியே இருந்த பென்ஞ்சில் ராணியின் மகள் வள்ளி அமர்ந்திருந்தாள். அருகே அவளது உடன் படிக்கும் சக மாணவி துணைக்கு அமர்ந்திருந்தாள். ராணியைக் கண்டதும் அவள் எழுந்து உள்ளே சென்று வகுப்பாசிரியையை அழைத்து வந்தாள். வந்த வேகத்தில் ஆசிரியை ராணியின் மீது வார்த்தைகளை வீசத் துவங்கினாள்.
“ஏம்மா, கொஞ்சமாவது அக்கறையோடதான் பெத்த புள்ளையப் பாத்துக்குறீங்களா? ஆறு மாசமா இந்தப் புள்ள மயங்கி மயங்கி உளுவுது. என்னதான் செய்யுறீங்க? உடம்பு சரி இல்லாத புள்ளைய ஸ்கூலுக்கு எதுக்கு அனுப்புறீங்க? நல்ல டாக்டர்கிட்ட காமிக்காம?”
வாடி வதங்கி இருந்த தன் மகளையே பார்த்தபடி நின்றிருந்தாள் ராணி. ஆசிரியைக்குப் பதில் கூற அவளிடம் தெம்பும் இல்லை, என்ன சொல்வதென்றும் தெரியவில்லை.
“வர்றங்க டீச்சர்” என்று வள்ளியைக் கூட்டிக்கொண்டு விடை பெற்றாள்.
ராணி தனது மகளோடு வருவதைக் கண்ட தாமஸ் பீடியைக் காலில் நசுக்கினார்.
வள்ளியின் உடம்போடு ஏதோ இயந்திரம் பொருத்தி இருப்பது கண்டார். அதைத் தாங்கிக்கொண்டு மெதுவாக வள்ளி ஆட்டோவில் ஏறினாள். அவள் நகர்ந்து கொடுத்த இடத்தில் ராணி ஏறி அமர்ந்துகொண்டாள். இருவரும் சேர்ந்து அமர இருக்கையில் கால் பங்கு இடம் போதுமானதாக இருந்தது.
“போலாங்கண்ணா.”
பிரக்ஞை அற்று வள்ளியையே பார்த்து நின்றிருந்ததை உணர்ந்து சுதாரித்துக்கொண்டு, “அதென்னவாக்கும் மகளுக்க ஒடம்புல்ல?மிஸினு ?” என்று கேட்டார்.
“அது திடீர்னு நெஞ்சு துடுப்பு அதிகமாகி டொம்மு டொம்முன்னு சத்தம் நமக்கே கேக்க ஆரம்பிச்சுடுச்சுண்ணே. அதுவும் எப்பவானாலும் தான். எந்நேரமும் இல்ல. அந்த மாதிரி துடிக்கும்போது இதயத்துடிப்பு டெஸ்ட்டு எடுக்கச் சொன்னாங்க டாக்டரு சாரு.”
“ஆஸ்பத்திரியில்லயே அட்மிட் செய்து செக்கப் பண்ணுததுதானா?”
“அதான் எப்ப வருதுன்னே தெரிலயே. ஒரு வாரம் செக்குப் பண்றதுக்கு ஒடம்பெல்லாம் டியூப ஒட்டி வுட்டு, தோ இந்த மிஷினுக்குள்ள போகுதுண்ணே. இந்த டியூபு வளி இந்த மிஸினுக்குள்ள பதிவாயிடுமாமா. இன்னிக்கு சாயங்காலம் வரச் சொல்லி இருந்தாங்க. அதுக்குள்ள மயங்கி உளுந்தங்காட்டியும் இப்பியே போக வேண்டியதாயிடுச்சு. இத ஒடம்புல கட்டிட்டு ஒரே அவஸ்த மவளுக்கு. ஒண்ணுக்கும் போவ முடியாம, ரெண்டுக்கும் போவ முடியாம, ஒழுங்கா பாயில படுக்க முடியாம. ஏந்தான் எம்மவளுக்கு இந்த வேதனையோ…” வழிந்த கண்ணீரை முந்தானையில் துடைத்துக்கொண்டாள்.
“ஜெரால்டு ஆஸ்பத்திரீயில்ல காட்ட காசு நெறைய வேணும்முல்லா?”
“அந்த டாக்டரு பெரிய ஆஸ்பத்திரிக்கும் வருவாருண்ணே. தோ இந்த மிஸினு பெரிய ஆஸ்பத்திரில எல்லாம் இல்லயாம். செரால்டு ஆஸ்பத்திரிலதான் இருக்கும்னு எளுதி குடுத்தாங்க. பாதி காசு குடுத்தா போதுமுன்னு எறக்கம் காட்டுனாரு மனுசன். அந்தப் பாதி காசுக்கே நான் காலம் முழுக்க கல்லு சொமந்தாலும் பத்தாது. இது அப்பஞ் செத்த காசு எல்ஐசில கொஞ்சங் குடுத்தாங்க. தாலிய வித்துப் போட்டேன். புருஷன மண்ணு தின்னு நாலு வருசமாச்சு. தாலிய வச்சுக்கிட்டு என்ன செய்ய, எம்புள்ளய காப்பாத்தினா பத்தாதா?”
கைப்பேசியில் அழைப்பு வந்தது. ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தவர் அதன் அருகே இருந்த இரும்புப் பெட்டியைத் திறந்தார். அதில் இருந்த மதுபாட்டிலைத் திறந்து குடித்துவிட்டு கைப்பேசியில் வந்த அழைப்பிற்குப் பதில் அளித்து ஸ்பீக்கரை ஆன் செய்துவிட்டு ஆட்டோவை முறுக்கினார்.
“ஊருக்கு எப்ப வார?”
“….”
“லைன்னுல்ல இருக்குறவனா இல்லியா?”
“செல்லு செல்லு”
“என்னால்ல எனக்கத் தம்பி வீட்டுல்ல இருக்க முடியல்ல கேட்டியா? எத்தற நாளைக்கு இங்கன நான் ஒழுஞ்சு இருந்து சாவுதது?”
“ஆமாட்டி நான் இங்க சொகமாட்டு ஊரச் சுத்துறவன்னுல்லா?”
“நீ இருக்குத எடத்தச் செல்லு, என்னயுங் கொண்டு போ” அழத் துவங்கியவள் தாமஸ்ஸின் மனைவி என ராணி புரிந்து கொண்டாள்.
“இங்கன அழுது அழுதாக்கும் என்னய நீ ஊரில்லிருந்து வெரட்டியது. மேலும் போனில்ல அழுது அழுது என்னயுங் கொண்டு சவக் குளியில்ல தள்ளிட்டு நிம்மதியாட்டு இருடி” என்று தாமஸ் கத்தும் பொழுது வள்ளிக்கு இதயம் படபடக்க ஆரம்பித்தது. பயந்து ராணியிடம் ஒடுங்கி அமர்ந்து கொண்டாள்.
“அப்போ நானாக்கும் எனக்க மவனக் கொன்னது, இல்லியா?”
“……”
“உனக்கப் பரம்பரயுக்க வியாதியல்லா எனக்க மவனக் கொன்னது”
“……”
“எப்போ வார?”
“ஆபரேசன் செலவுக்கு வாங்கினக் கடன அடைக்காண்டாமா? வெறுங் கையோட வந்தா என்னக் கொல்லுயதுக்கு நிக்கானுவலே…” குளறியபடி பதில் சொன்னார் தாமஸ்.
“குடுச்சியோ?”
“….”
“சொல்லுலேய்”
“ஆமாட்டி குடுச்சேன்…” தாமஸ் அடிவயிற்றில் இருந்து கத்தினார். “குடிக்கல்லியினா நான் மனுசனா ஆயுடுறேனே… வய்யி போன…” என்று சீறிவிட்டுக் கைப்பேசியைத் துண்டிக்கும் பொழுது, வள்ளிக்குப் பதட்டம் அதிகரித்து, உடல் நடுக்கம் காண ஆரம்பித்தது… ராணி அவளது இதயத்தைத் தொட்டுப் பார்த்த பொழுது கனீர் கனீரென அவளது கரங்களில் மோதியது. நெற்றியில் கை வைத்த பொழுதுதான் வள்ளிக்குக் காய்ச்சல் அடிப்பதையே உணர்ந்தாள் ராணி.
“அய்யோ படிக்காத முண்ட நானு, மவளுக்குக் காச்ச அடிக்குறது கூட எனக்குத் தெரியலியே!” என்று தன் தலையில் அடித்துக்கொண்டு, “அண்ணே கொஞ்சம் வெரசா போங்க. புள்ளைக்கு வலிப்பு வாராப்புல இருக்குது” என்று பதறினாள்.
“எதுக்காக்கும் இங்கன சலம்புத. உசுரு போகனுமெங்கில் போவும்… லட்சம் கொடுத்தவனாக்கும் எனக்க மவனக் காப்பாத்த. கடனாக்கும் மிஞ்சியது. எனக்க புள்ள உசுரு….”
“ண்ணே!” கோபமும் ஆற்றாமையும் கண்ணீராக வழிந்தது ராணிக்கு.
ஜெரால்டு மருத்துவமனையின் அருகில் வரும் பொழுது வள்ளிக்குக் கண்கள் இரண்டும் மேலே செருகிக் கொண்டன. மருத்துவமனையின் கேட்டில் இடிப்பது போல வண்டியை நிறுத்தினார் தாமஸ். வண்டி நின்றதும் “கடவுளே எம் புள்ளயையும் கொண்டு போயிடாத,” என்று முறையிட்டுக் கொண்டே வள்ளியைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குள் ஓடினாள் ராணி.
“ஏட்டி… எனக்க நூறு ரூபாயத் தராம ஓடுறவளா?!” என்று கத்திக்கொண்டே பின்தொடர முயற்சித்த தாமஸ்ஸை வாட்ச்மேன் உள்ளே நுழையவிடாமல் தடுத்து நிறுத்தினார்.
3.
ஆஸ்பத்திரியை கண்ட மாயத்தில் ராணிக்குத் தலை சுற்றுவது போல இருந்தது. தானாகத் திறந்த கதவைத் தாண்டி வள்ளியைத் தூக்கிக் கொண்டு ஓடினாள். சூழ்ந்திருந்த குளிர்காற்றின் மண்டலத்துக்குள் நுழைகையில் ராணிக்குக் குப்பென்று வியர்த்தது…
இதயக் கோளாறுகளோடு ஏகப்பட்ட சின்னக் குழந்தைகள் அவரவர் பெற்றோர் மடியில் அமர்ந்திருந்தனர். உள்ளே செல்லப் பயந்து மனம் பின்னுக்குத் தள்ள உடல் முன்னுக்கு இழுத்துச் சென்றது.
பெரும்பாலும் ஆங்கில உரையாடல்களை நிகழ்த்திக்கொண்டிருந்த உடல்கள் எல்லாம் ராணியையும் வள்ளியையும் வேற்று கிரகவாசிகள் போலப் பார்த்தனர். மகளைத் தூக்கிக் கொண்டு ரிசப்ஷனை அடைந்தாள்.
“பெரிய டாக்டரு எப்ப வருவாங்க மேடம்? புள்ளைக்குக் காச்சல் அடிக்குது,”
கம்ப்யூட்டர் திரையிலிருந்து தன் விழிகளை நகர்த்திய ரிசப்ஷனிஸ்ட், தனது பார்வையை ராணியின் மீது மேலும் கீழும் நகர்த்தி, ஓரக்கண்ணால் வள்ளியையும் அளந்துவிட்டு, ஃபோனை எடுத்து ஆங்கிலத்தில் ஏதோ பேசினாள். பேசி முடித்துவிட்டு தன் கண்களை கம்ப்யூட்டர் திரையில் ஒட்டிக்கொண்டாள்.
அங்கேயே நிற்பதா, இல்லை நகர்ந்து போவதா என்று புரியாமல், வாய் திறந்து கேட்கவும் தைரியம் வராமல் தயங்கினாள் ராணி.
“ஏம்மா… ஏம்மா ஏய்… உன்னத்தான்.”
குரல் வந்த திசையில் திரும்பினாள். நர்ஸ் கிரேஸைக் கண்டு சற்றே இறுக்கம் தளர்ந்தது. வள்ளியைக் கூட்டிக்கொண்டு அருகில் சென்றாள்.
“என் பின்னால வாங்க.”
மகளை அள்ளிக்கொண்டு கிரேஸின் பின்னால் ஓடினாள்.
“அம்மா, வலிக்குது மா… மெதுவா போ.”
“சாமி சாமி, கொஞ்சம் தாங்கிக்கோ. நர்சம்மா போயிருவாங்க. சித்தப் பொறுத்துக்க கண்ணு.”
கிரேஸ் சென்ற அறைக்குள் ஒரு வழியாக மூச்சிரைக்க வந்து சேர்ந்தாள் ராணி.
“மவளுக்கு மேலு காயுதுங்கம்மா… கண்ணு ரெண்டும் மேல சொருகீட்டுப் போவுதுங்க,”
எந்தச் சலனமும் இல்லாமல் தெர்மாமீட்டரை எடுத்து வள்ளியைச் சோதித்துவிட்டு காய்ச்சல் மாத்திரை ஒன்றை விழுங்கக் கொடுத்தாள் கிரேஸ்.
“கொஞ்ச நேரத்துல காச்சல் சரியாயிடும்… மேல் துணியக் களட்டி விட்டுட்டு இங்க படுக்க வைம்மா.”
சட்டையைக் கழற்றியதும் உடம்பில் ஏதோ கொடிகள் தொங்குவது போல இருந்தாள் வள்ளி. அதைக் கண்டதும் ராணிக்கு நெஞ்சு அடைத்துக்கொண்டு அழுகை முட்டியது.
தூக்கி அமர வைக்க முயன்ற ராணியைத் தடுத்தாள் வள்ளி.
“அம்மா, நீ தூக்காத. வலிக்குது. நானே ஏறிக்குறேன்.”
தளர்ந்த உடலோடு மெதுவாக ஏறிக் கட்டிலில் படுத்துக்கொண்டாள். வெடுக்கென்று மிஷினை எடுத்த கிரேஸ் முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்தாள். ராணி கிரேஸையே பார்த்துக்கொண்டிருந்தாள். கிரேஸின் புருவம் சுருங்கும் பொழுது நெஞ்சை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள் ராணி. மிஷினை கீழே வைத்துவிட்டு கிரேஸ் விட்ட பெருமூச்சில், நெஞ்சோடு சேர்த்து அடிவயிற்றையும் பிடித்துக்கொண்டவள்,
“ஒண்ணும் பயப்படுற மாதிரி இல்லீங்களே?” என்று கேட்டாள்.
“கொஞ்சம் சீரியஸ்தான். ஆபரேஷன் பண்ண வேண்டி இருக்கும்.”
சலனமே இல்லாமல் பதில் சொன்னாள் கிரேஸ்.
“அய்யோ…” பொங்கி வந்த அழுகையை அடுத்த வார்த்தைகளில் பொசுக்கினாள் கிரேஸ்.
“ஷ்ஷ்ஷ்… டாக்டர் இப்போ வருவாங்க. எல்லாம் அவரு சொல்லுவாரு. சும்மா இங்க ஒப்பாரி வைக்கக்கூடாது.” என்று ராணியை அடக்கிவிட்டு, வள்ளியின் பக்கம் திரும்பியவள், எந்த முன்னறிவிப்பும் இன்றி செடியை வேரோடு பிடுங்குவது போல வள்ளியின் மீது ஒட்டியிருந்த ஒயர்களைப் பிடுங்கி எடுக்க,
“அய்யோ… அம்ம்ம்மா…!” என்று வள்ளி வாய்விட்டுக் கதறியே விட்டாள்.
“அம்மா… கொஞ்சம் பார்த்து மெதுவா எடுங்க…” என்று கிரேஸைப் பார்த்துக் கண்ணீர் வழியக் கதறினாள் ராணி.
ராணியை முறைத்த கிரேஸ், “சட்டையப் போட்டுட்டு கூட்டிட்டு போங்க. டாக்டர் வந்ததும் கூப்பிடுறேன்.”
“டாக்டர் எப்போ வருவாங்க மேடோம்?”
“ம்ம்ம்… வரும்போது வருவாங்க.”
அடுத்த கேள்வியைக் கேட்க பயந்து வள்ளியை அழைத்துக்கொண்டு ரிசப்ஷனுக்கு சென்றாள் ராணி.
ஓரமாகப் போடப்பட்டிருந்த நீண்ட பெஞ்சில் அமர்ந்துகொண்டார்கள் இருவரும். வாடிய செடிபோல ராணியின் மடியில் சரிந்தாள் வள்ளி. வள்ளியைப் பார்க்கவே பயமாக இருந்தது ராணிக்கு. சிந்தையில் தன் கணவனைப் புதைத்த நாள் வந்து வந்து மேலும் பயம் காட்டியது. மஞ்சள் பையில் இருக்கும் பணம் ஆபரேஷன் செலவிற்குப் போதுமானதாக இருக்குமா என்றும் மேலும் பணம் தேவைப்பட்டால் எப்படிப் பணம் திரட்டுவது என்றும் பல மாதிரியான எண்ண அலைகளில் அடித்துச் செல்லப்பட்டாள்.
ராணிக்குச் செய்வதறியாது கண்ணீர் மட்டுமே வந்தது. அனிச்சையாக அவளது கைகள் வள்ளியின் இதயத்தைத் தொட்டுத் தொட்டுப் பார்த்துத் துடிப்பு இருக்கிறதா என்று சோதித்தது.
வள்ளி அனத்தும் சத்தம் பயத்தையும், அதே சமயம் ஆறுதலையும் ஒரு சேர அளித்தது.
“பெரிய டாக்டர் அகர் வந்தாச்சு,” என்று எங்கிருந்தோ குரல் கேட்கவும் அனைத்து ஒலிகளும் ஒரு கணம் ஸ்தம்பித்தன. ரிஷப்ஷனில் அமர்ந்திருந்த பெண் பணிவாக எழுந்து நின்று கொண்டாள். மிகுந்த பவ்யத்தோடு கிரேஸ் ஓடி வந்தாள்.
தானியங்கிக் கதவு திறந்தது. வெண்ணிற மேல் சட்டையும் சாம்பல் நிற காற்சட்டையும் அணிந்து, ஆறரை அடி உயரத்தோடும் தடிமனான உடல் கட்டோடும் ஆஜானுபாகுவான உருவத்தோடு உள்ளே வந்தார் டாக்டர்.
“வேர் இஸ் த ஃபைல்” என்று கனீர் எனக் கேட்டுக் கொண்டே அவர் நடக்க,
“சார்” என்று கிரேஸ் அவரது கையில் ஃபைலைக் கொடுத்தாள். பிறகு ராணியின் அருகில் சென்று,
“ஏம்மா உம் மகளக் கூட்டிட்டு வா,” என்று கூறிவிட்டு டாக்டரின் பின்னால் கிரேஸ் ஓடினாள்.
வள்ளியை அள்ளி எடுத்துக்கொண்டு ராணி ஓட்டமும் நடையுமாகப் பின் தொடர்ந்தாள்.
டாக்டரின் அறையை நெருங்கும் பொழுதே அவர் போடும் சத்தம் வெளியே கேட்டது.
“என்ன வேலப் பாக்குறீங்க, செகண்ட் வார்ட் பேஷண்ட்டோட ப்ளட் ரிப்போர்ட் எங்க? முப்பதி ஆறாவது வார்ட் பேஷண்ட்டுக்கு சி.டி ஸ்கேன் எடுக்கச் சொன்னது என்னாச்சு?” என்று அடுக்கிக் கொண்டே போனார்.
ராணி மெதுவாக உள்ளே நுழைந்தாள். டாக்டரின் கோபம் அவளுக்கு அச்சூழலை இன்னும் பதற்றமாக்கியது.
“எப்புடி இருக்கா பொண்ணு?” என்று அவர் கேட்டதும்,
“அய்யா! எம்மகளக் காப்பாத்திக் குடுங்கய்யா. தகப்பன் இல்லாத புள்ளைங்கய்யா. எங்களுக்கு நீங்கதான் சாமி. எம்மகளக் காப்பாத்துங்க.” என்று அலறி அழுதாள்.
“உஷ்ஷ்ஷ்” என்று ராணியை அடக்க முயன்ற கிரேஸ்ஸை முறைத்த டாக்டர்,
“என்ன ஆச்சு? எதுக்குமா இப்புடி அழுவுற?” என்று ராணியைக் கேட்டார். அவர் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. தன்னை ஏதோ இயந்திரம்போல பார்ப்பதாகத் தோன்றியது அவளுக்கு.
“டாக்டர் அய்யா, நர்சம்மா ஏதேதோ சொல்றாங்க அந்த மிஷினப் பாத்துப்போட்டு. ஆபரேசன்னு எல்லாம் சொல்றாங்க. எனக்கு பயமா இருக்குதுங்க… ஒத்தப் புள்ள அய்யா எனக்கு. கொண்டவனும் மண்ணுக்குப் போயிட்டான்.”
கிரேஸின் பக்கம் திரும்பிய டாக்டர்,
“குடுத்த வேலை எல்லாம் கரெக்ட்டா செஞ்சாச்சு இன்னும் டாக்டர் வேல தான் பாக்கி இல்லியா? உங்கள யாரு ரிப்போர்ட்டப் பத்தியெல்லாம் பேஷன்டோட பேரண்ட்ஸ்கிட்ட பேசச் சொல்றது? நீங்களா இங்க டாக்டர்?”
“சாரி சார்.”
“இது கடைசி வார்னிங். இனி இப்புடி நடந்தா வேலைய விட்டு அனுப்பிடுவேன் பாத்துக்குங்க. ரிபோர்ட் எங்க?” என்று அவர் குரல் உயர்ந்ததும் கை நடுங்கிய படி வள்ளியின் ரிப்போர்டைகொடுத்தாள் கிரேஸ்.
இரண்டு நிமிடங்களில் அதைப் படித்துவிட்டு, “இதயத் துடிப்பு அதிகமா இருந்ததாலதான் அந்த மிஷின வச்சு செக் பண்ணச் சொன்னோம். ஹோல்டர்மீட்டர்ல கொஞ்சம் முன்னப் பின்ன பதிவாகியிருக்கு ஆனா அதிகமா இல்ல. ஒன்னும் பயப்படத் தேவையில்ல. வைட்டமின் குறைபாடும், உம் பொண்ணுக்கு பதினோரு வயசு ஆகுதுல்ல, வயசுக்கு வர்ற நேரத்துல இதுமாதிரி ஆங்சைட்டி வரும்.”
“என்னதுங்க டாக்டர் வரும்?”
“அது… சில பொம்பளப் புள்ளைங்களுக்கு இதயம் பலமா துடிக்கும் பயத்துல. ஒரு விதப் படபடப்பு. ஒண்ணும் பயப்படத் தேவையில்லன்னு சொல்றேன். உம் மகளுக்குச் சரி ஆயிடும்.” அவன் கண்கள் இன்னும் ரிப்போட்டில் இருந்து அகலாமல் இருந்தது. இடையில் இன்னுமொரு நர்ஸை அழைத்து ஆங்கிலத்தில் ஏதோ திட்டி அனுப்பினார்.
ராணிக்கு மேலும் கீழும் மூச்சு வாங்கியது. அவரிடம் மேற்கொண்டு பேசத் தயக்கமாக இருந்தது.
“அய்யா… ஆறு மாசமா நான் செத்துச் செத்து வாழ்ந்தேனுங்க. நீங்க சொன்ன வார்த்தயே போதுமுங்க.”
கை எடுத்துக் கும்பிட்டவளை அவர் பார்க்கவே இல்லை.
“அழுதெல்லாம் புண்ணியமில்ல. நல்ல சத்தான சாப்பாடாக் குடு. மொதல்ல நீ நல்லா சாப்பிடு. நீ தெடகாத்தரமா இருந்தாதான உம் மகளப் பாத்துக்க முடியும்.”
அவள் பதில் சொல்லத் தெரியாமல் மீண்டும் கையெடுத்தபோது மணியை அழுத்தி யாரையோ அழைத்தார்.
“இந்தா… இத வாங்கிக்கோ…” என்று ஐந்நூறு ரூபாயை ராணியின் கையில் திணித்தபோது வெள்ளை நிற உடையில் வந்த பணியாளனிடம் ஏதோ கேட்டு அவன் பதில் சொல்வதற்குள் திட்டத் தொடங்கினார்.
ராணிக்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை. அங்கு அதற்கு மேல் இருப்பதா கூடாதா எனக் குழம்பியிருந்தபோது கிரேஸ் அவளை அறைக்கு வெளியே அழைத்தாள். அறையின் வாசல் வரை வந்தபோதும் டாக்டர் பணியாளரைத் திட்டிக்கொண்டிருப்பது தெரிந்தது.
கிரேஸ் கூறிய வழக்கங்களை முடித்துக்கொண்டு வள்ளியுடன் ஆஸ்பத்திரியின் குளிர் காற்றை விட்டு வெளியே வந்தவுடன்தான் நல்ல காற்றைச் சுவாசிப்பது போலவே உணர்ந்தாள். கண்களை ஒரு கணம் மூடி நிம்மதியாக மூச்சை இழுத்துவிட்டவள், வள்ளியைக் கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டு நடந்தாள். வள்ளி இப்போது பேசுவதும் சில சமயம் சிரிப்பதும் கூட அவளுக்குத் தெம்பாக இருந்தது.
சிதைந்த இயேசுவின் படம் ஒட்டியிருந்த ஆட்டோவின் பின்புறம் கண்ணில் பட்டது. அருகே ஓடிச் சென்று எட்டிப் பார்த்தாள். பயணிகளின் இருக்கையில் உடலைக் குறுக்கிக் கைகளை இதயத்தோடு கட்டிக்கொண்டு படுத்திருந்தார் தாமஸ். குறட்டை ஒளியோடு மதுவின் வாடையும் வந்தது.
ஆட்டோ வாடகைக்காக முப்பாத்தாக்கா கொடுத்த நூறு ரூபாயை எடுத்தாள். அதை மஞ்சள் பைக்குள் வைத்து அந்தப் பையை ஓட்டுனர் இருக்கையின் அருகில் இருந்த பெட்டியில் மதுபாட்டிலுக்கு அருகில் வைத்து, பெட்டியை மூடிவிட்டுப் பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்தாள்.
