பூட்டியிருந்த அலமாரியை ஏக்கமாகப் பார்த்த என்னிடம் பாட்டி சொன்னாள், ”எப்புடித்தான் உங்கப்பன் உன்னை தனியா அனுப்பிச்சானோ!” ரங்கநாயகி பாட்டி என் அப்பாவின் அம்மா. 96 வயதை நெருங்குகிறாள். எனக்கு வயதானால் அவளைப்போலத்தான் இருப்பேன் என அப்பா அடிக்கடி கூறுவார்.
“நான் வந்ததிலிருந்து இத நூறு வாட்டி கேட்டுட்டே. இன்னிக்கு கெழம்பும்போதும் கேக்குற,” என்றேன். திடீரென ஏதோ நினைவுக்கு வந்து பாஸ்போர்ட்டை கைப்பையில் இருக்கிறதா எனப் பார்த்துக்கொண்டேன்; லாஸ் ஏஞ்செல்ஸ்க்குப் போகும் ஏர் டிக்கெட்டை போனில் ஒருதரம் சரிபார்த்துக்கொண்டேன். இன்னும் பெட்டியில் எடுத்து வைக்க வேண்டியது பாட்டியின் கல்யாணப் பட்டு மட்டும்தான். அதைக் கொடுக்க மூன்று வாரமாக இழுத்தடித்தவள் இப்போது அலமாரி சாவியை வைத்த இடம் தெரியவில்லை என்கிறாள்.

“இல்லடி, அவன் இங்க ஸ்கூலுக்குப் போறப்பவே, அவன் தங்கச்சிய தனியா எங்கயும் விடமாட்டான். தங்கச்சிகூட ஒண்ணாப் படிக்கணும்னு ஒரு வருஷம் பெயிலானவன்டி அவன். தங்கச்சிக்கே அப்படின்னா, பெத்த மகள எப்படி தனியா விட்டான்னு எனக்கு ஆச்சரியமா இருக்கு.“ என்றாள்.
பாட்டி சொல்வதைக் காதில் வாங்கிக்கொண்டாலும் மனம் உள்ளுக்குள் ஏதோ அரற்றிக்கொண்டிருந்தது. பாட்டி வீட்டை விட்டுப் பிரியும்போதெல்லாம் அப்படி நிகழ்வதுண்டு. அந்த வீடு எனக்கு அவ்வளவு பிடிக்கும். மேலும் புடவை கைக்கு வருமா என்ற எதிர்ப்பார்ப்பு படபடப்பாக்கியது.
என் பாட்டி தாத்தா வீடு மிகப்பெரியது. இப்பொழுது பாட்டி, சித்தப்பாவின் குடும்பம், தாத்தாவின் சினேகிதர் ஒருவர், என்று இருக்கிறார்கள்.
வீட்டிற்கு முன்னால் இருக்கும் மூன்று பெரிய படிகளில் ஏறியதும் வலப்புறமும் இடப்புறமும் இரு பெரும் திண்ணைகள். அவற்றில் குதித்துத்தான் ஏறமுடியும் என முதல் பார்வையில் தோன்ற வைக்கும். வலப்புறத் திண்ணையில்தான் ஒரு நாற்காலியும் மேசையும் போட்டு என் சின்னத் தாத்தா போஸ்ட் ஆபிஸ் வைத்திருந்தாராம். இடப்புறத் திண்ணையில் எப்பொழுதும் ஒரு பாய் விரித்துப்போடப்பட்டிருக்கும். காலை ஆறு மணியிலிருந்து மாலை மங்கும் வரை யாராவது தாத்தாவைப் பார்க்க வந்துகொண்டே இருப்பார்களாம். அங்கு அமர்ந்து தாத்தா சொல்லும் நியாயத்தைக் கேட்பார்களாம். பாட்டிக்கும் வீட்டில் மற்ற பெண்களுக்கும் காப்பி போட்டு மாளாதாம். இதில் வேளை தவறாமல் சாப்பாடும் கண்டிப்பாகப் போடுவார்கள். அப்பொழுது தோசை இட்லியெல்லாம் இல்லை. கம்பு, சோளம் என்று குத்திப்போட்டு கிண்டிவைத்த களி எப்போதும் இருக்குமாம். மோர் ஊற்றி உப்புப் போட்டுக் கொடுத்தால் வயிறார சாப்பிடுவார்களாம்.
திண்ணையைத் தாண்டி ஒரு பெரும் சிமெண்ட் காரை மட்டும் பூசிய தளம். மிளகாய் வத்தல், பயிறு வகைகள், கிழங்கு என்று எப்பொழுதும் ஏதாவது காய்ந்து கொண்டிருக்கும். வலப்புறத்திண்ணை வளைந்து இன்னொரு திசையில் தொடரும். ட-வை திருப்பிப்போட்டதுபோல என்று அப்பா முன்பொருமுறை காட்சிப்படுத்தியுள்ளார். அந்த உயரத்திண்ணையில் படியேறினால், வடப்புறமும் இடப்புறமாக மூன்று மூன்று அறைகள். அறைகளின் சன்னல்கள் ஒரடிக்கு ஒரடி என மிகச் சிறியதாக இருக்கும். கடைசியில் இருக்கும் நீண்ட அறைக்கு மட்டும் இரண்டு ஓரடிக்கு ஓரடி சன்னல்கள். அங்கேதான் அப்பாவின் பெயரும் சித்தப்பாவின் பெயரும் பொறிக்கப்பட்ட பெரிய காட்ரேஜ் ஸ்டீல் பீரோ ஒன்று இருக்கும். அதில்தான் கல்யாணப் புடவை இருப்பதாகச் சொன்னார் பாட்டி.
பாட்டி வீட்டின் சுவர்கள் ஒன்றரை அடி அகலம். இப்பொழுதும் அதன் கெட்டித்தனம் தெரிகிறது. அப்பா அனுப்பும் வெளி நாட்டுக் காசில், பராமரிப்பு செய்து செய்து வீட்டின் கம்பீரம் மாறாமல் இருக்கிறது என்று சித்தப்பா சொல்வார். விவசாயம் செய்வதெல்லாம் பழம் பெருமைக்குத்தான் என்பார் சித்தப்பா. “பாட்டியிருக்கிறவரைக்கும், அவங்கள ஏமாத்தறதுக்காவது செய்யணும்” என்று அவர் இல்லாதபொழுது கிசுகிசுப்பார். பாட்டிக்குப் பாம்புக்காது.
வெற்றிடம் தாண்டி நேராகச் சென்றால், இன்னொரு நீண்ட ஹால். ஓட்டுக்கூரை வேயப்பட்டது. அதற்கு அப்புறமும் திண்ணை. இன்னும் உள்ளே போனால்தான், எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும் அடுப்பு உள்ள சமையற்கூடம். சமையலறைக்கு முன்னால் உள்ள ஹாலில் இடப்புறம் ஒரு கதவு, வலப்புறம் ஒரு கதவு இருக்கும். இடப்புறக் கதவைத் திறந்து போனால், பாட்டியின் பாஷையில் பொடக்காளி. வலப்புறம் கதவின் வழி சென்றால், ஆண்கள் புழங்கும் கை கால் கழுவும் இடம். இப்பொழுது ஸிங்க் வைத்து மாடர்ன் ஆகிவிட்டது. பாட்டி சொன்ன பொடக்காளியில், அப்பா சித்தப்பா கட்டிக்கொண்டு வந்த டவுன் பெண்பிள்ளைகள் குளிக்கப் பிடிக்க கட்டியமைக்கப்பட்ட டாய்லெட்டுகள். அமெரிக்கப் பேரக்குழந்தைகளுக்கென ஒரு டாய்லெட்டு மேலும் ஒருமுறை புதுப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த வீட்டில் இருப்பதே சுகம். என் சித்தப்பா எம்.சி.ஏ படித்திருந்தாலும், அம்மா அப்பாவை நான் இங்கு இருந்து பார்த்துக்கிறேன் என்று அண்ணனை (என் அப்பாவை) மட்டும் வெளி நாடு அனுப்பிவிட்டார். சித்தப்பாவின் கணினி அறிவு வீட்டில் அமைத்திருக்கும் நெட்வொர்க் செட்டப்பில் தெரியும். என் போன், மூன்று வருடத்திற்கு முன் வந்தபொழுது சேமித்த பாஸ்வார்டை உள்வாங்கி wifi-ல் நுழைந்திட வழி செய்யும். Netflix, Amazon எல்லாம் உண்டு. என் சித்தப்பா பையன் பத்தாம் வகுப்பில் இருக்கிறான். வீடியோ கேமில் தோழனாக சேர்த்துக்கொள்ளலாம். ஆனால், எனக்குப் பாட்டி சொல்லும் கதைகளில்தான் ஆர்வம். இப்போது அமெரிக்கா புறப்படும் நேரத்திலும் அவளுடன் கதை கேட்கத்தான் அமர்ந்திருந்தேன். ஆனால் அதில் இணைய முடியாமல் தடுத்தது அவளது இன்னும் கைக்கு வராத அவள் கல்யாண பட்டு.
என் வருங்காலக் கணவன் ஜேஸன் பவல் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அவளது கல்யாணப் பட்டுச் சேலையை வாங்கிக்கொண்டு செல்லவேண்டும் என்பது இந்தப் பயணத்தின் அதி முக்கிய நோக்கங்களில் ஒன்று. என் ஆசையைச் சொன்னவுடன் பாட்டி அன்போடு அணைத்துக்கொண்டாள். “நாளைக்கு பொரட்டாசி மாசம் பொறக்குது. கல்யாண பொடவங்கறது மகாலட்சுமியாட்டம். மகாளய பட்சத்துல அத கைமாத்த கூடாது. இன்னும் பதினஞ்சி நாளு கழிச்சி மகாளய அமாவாச… அதுக்கப்புறமா எடுத்துத்தறேன்,” என்றாள்.
எனக்கு அந்தச் சடங்கு குறித்தெல்லாம் எந்தவிதமான அபிப்பராயமும் இல்லை. ஆனால் நான் புறப்படுவது பதினேழாவது நாள் என்பதால் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. இப்பொழுது கிளம்பும் நாளன்று அவள் சேலை வைத்திருக்கும் அலமாரியின் சாவியை வைத்த இடம் எங்கு எனத் தெரியவில்லை எனச் சொல்லுகிறாள். சாவி கிடைக்காத பட்சத்தில், அலமாரியைத் திறப்பதற்கென்று, சித்தப்பா ஒருவரை வரச்சொல்லியிருக்கிறேன் என்று வேறு சொல்கிறார். சாலையில் சென்று அவர் வருகிறாரா எனப் பார்த்தேன். சாலை வெறித்திருந்தது. அப்படியே திண்ணையில் அமர்ந்தேன்.
முன்பு சொன்னதுபோல அந்த இடப்புறத்திண்ணையில் இப்பொழுதும் பாய்தான் விரிக்கப்பட்டிருக்கும். அப்பா, அந்தப் பாரம்பரியத்தை மாற்றவேண்டாம் என்று தன் தம்பியிடம் சொல்லி வைத்துள்ளார். பாட்டியுடன் அங்கேதான் அமர்ந்து கதை கேட்பது எனக்கு விருப்பமானது. பெரும்பாலான சமயங்களில் பாட்டி காலை தொங்கவிட்டுத்தான் உட்கார்ந்து கொள்வாள். நீ காலை நீட்டி பாட்டியில்லை என்று அவளைக் கிண்டல் செய்வேன்.
வந்த இரண்டாவது நாள் காலை டிபன் ஆகியதும், நான் தலையணையை எடுத்து மடியில் வைத்து வயிற்றை அமுக்கிக்கொண்டு அமர்ந்து, நான் இத்தாலிக்கு நண்பர்களுடன் பயணம் சென்றபொழுது எடுத்த பாட்டிக்குக் காண்பித்துக் கொண்டிருந்தேன். போட்டோவில் என் தோளில் பெண்களுடன் பையன்களும் கைப்போட்டிருப்பதைப் பார்த்தவள் ஏதாவது கேட்பாள் என்று பார்த்தேன். ஒன்றும் கேட்கவில்லை. நாகரீகமான பாட்டியா அல்லது பையன் எது பெண் எது என்று இனம் காணமுடியவில்லையா போட்டோக்களை எனத் தெரியவில்லை.
“என்ன சாமி, எல்லாரும் முக்காடு போட்டிருக்கீங்க?” என்று நாங்கள் மழையங்கி அணிந்திருந்த புகைப்படங்களைப் பார்த்துக் கேட்டாள்.
“அன்றைக்கு ஒரே மழை பாட்டி, இதப் போட்டுக்கிட்டா, நம்ம ட்ரெஸ்ஸெல்லாம் நனையாது!” என்றேன்.
“இது என்ன ஒரே வெள்ளம் வந்த காடாட்டம் இருக்கு!”
“வெனிஸ், தீவுகளால் ஆனது பாட்டி. தீவுனா, சுத்தி தண்ணி. நடுவால நிலம்” என்றேன்.
“ஹீம்… என்னமோ சாமி! வெள்ளம் வந்து இந்த வீடுகள்ளாம் இடியாம இருந்தா சரி. நடு ராத்திரில திடீர்னு வெள்ளம் வந்துச்சுன்னா, பெண்டு பிள்ளைகள் எல்லாம் எங்க போகும்? ”
“அதெல்லாம் ஒன்ணும் ஆகாது, பாட்டி! நல்ல அஸ்திவாரம் போட்டுக் கட்டியிருக்காங்க. ஐநூறு அறுநூறு வருஷங்களுக்கு முன்ன கட்டுன கட்டடங்களெல்லாம் இருக்கு! ”
‘பியாட்சா நவோனா’ படம் வந்ததும் அவள் கண்கள் அதில் நிலைகுத்தி நின்றன. நீர்த்துளிகள் அவள் கண்ணத்தில் உருண்டன.
“என்னாச்சு பாட்டி?” என்றேன்.
“உங்க தாத்தா, நம்ம ஊர்ல இருக்கிற மந்தைல போய் உட்கார்ந்துட்டு அரட்டை அடிச்சுட்டு, வீட்டுக்கு ராத்திரி பன்னெண்டு ஒரு மணியானாலும் வீட்டுக்கு வரமாட்டாரு. நான்தான் கொட்டக் கொட்ட முழிச்சுக்கிட்டு இருக்கனும். எங்க அம்மா, என்னையக் கேட்டது நேத்துத்தான் நடந்த மாதிரி இருக்குது கண்ணு. நீயே ஒரு ஆளாகி கல்யாணத்துக்கு வந்து நிக்கிற. ஆனா பேசின பேச்செல்லாம் அப்படியே புதுசா இருக்கு,” பாட்டி கொஞ்ச நேரம் திண்ணையில் இருந்து பார்த்தால் தெரியும் வானத்தைப் பார்த்து எதையோ யோசித்தபடி இருந்தாள். பின்னர் அவளாகப் பேசினாள்.
“உச்சி மண்ட காய்ற வெய்யிலிலும், உழுதுக்கிட்டிருக்கிற எங்க அய்யனுக்கு காப்பி வேணும். காய்ஞ்ச தென்னை மட்டையைப் போட்டு அடுப்பை பத்த வைச்சு, அதுல குண்டாவ ஏத்தி, மூணு டம்ளரு தண்ணி ஊத்துனேன். முக்காலில உட்காந்து, ஊது குழல வைச்சு ஊதுனேன். பின்னாடி என் சடை, கரு நாகமாட்டம் நீண்டு தரையை தொட்டு, சுருண்டு கிடக்கு. எங்க அய்யனுக்கு எங்கழுத்துல எப்பவும் ஒரு தங்கச் செயின் இருக்கணும்.” பாட்டி தன் கழுத்தைத் தடவிக்கொண்டார்.
“திண்ணைல உட்கார்ந்து பார்த்தா அடுப்படி தெரியும். அங்க உட்கார்ந்து என் கழுத்தையும், சடையையும் மாறி மாறிப் பார்த்த எங்கம்மா கெங்காயி, ‘இந்த மனசன் நெருப்பில தண்ணி ஊத்தனமாதிரி இருக்குற கேசவனுக்கு உன்னைக் கொடுக்கலாம்னு சொல்றாரு, ரங்காயி! இந்தக் கூறுகெட்ட மனுசன்கிட்ட, இவங்க ரெண்டுபேரும் கட்டிக்கிட்டா, டிஎம்கே மாதிரியில்லா இருக்கும்னு பலவாட்டி சொல்லிப்பார்த்துட்டேன். கலரா சோறு போடும், அவர்கிட்ட இருக்கிற நிலம்தானடி சோறுபோடும்னு சொல்றாரு.” என்று பாட்டி தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தாள்.
“அது என்ன பாட்டி நெருப்புல தண்ணி ஊத்துறது?” என்றேன்
“நெருப்புல தண்ணி ஊத்துனா என்ன ஆகும்னு யோசிச்சுப்பாரு!” பாட்டி சிரித்தாள்.
“உங்கம்மாக்கு என்ன பதில் சொன்னீங்க?”
“ஏம்மா, இதெல்லாம் எங்கிட்ட கேட்டுக்கிட்டு. நல்லது கெட்டது என்னன்னு உனக்கும் அய்யனுக்கும் தெரியாததா. நான் என்ன சொல்லப் போறேன். நீங்க எடுக்கற முடிவுதான்னு சொன்னேன். எங்கம்மா, அதுக்கும், கேசவன் குடும்பம் பெருங்குடும்பம். காலைல காப்பிக்குப் பத்தவைக்கிற அடுப்பு, ராத்திரி பத்துவரைக்கும் அணையாது. போறவங்க வர்ரவங்களுக்கு காப்பித் தண்ணி கொடுக்கப் பின்கட்டுக்கும் திண்ணைக்கும் நடந்தே பொம்பளைங்க காலுங்க தேஞ்சிரும் கண்ணு அப்படின்னுச்சு”
“அப்பா, நீங்க வேலைக்கெல்லாம் சலைச்ச ஆளில்லனு சொல்லுவாரு,” என்றேன்.
“ஆமா, தங்கம். நாலு பேருக்குக் காப்பியும் சாப்பாடும் நாள் பூரா கொடுக்கிறது எவ்வளவு பெரிய புண்ணியம்னு சொன்னதுக்கு, நீயும் உங்க அப்பனாட்டதான இருப்ப. வேலைக்கெல்லாம் சலைக்கிறவ இல்ல நீ. விதி அப்படித்தான் இருக்கறப்ப யாரால மாத்தமுடியும்னு சொல்லுச்சு எங்கம்மா”
“உங்களுக்கு சம்மதம்னு தெரிஞ்சப்புறம், உங்களை முறையா பெண் பார்க்க வந்தாங்களா?”
“எங்க காலத்திலயெல்லாம், வீட்டுக்கு வந்து பார்த்துட்டு, பொண்ணப் பிடிச்சிருக்கு பிடிக்கலங்கற வழக்கம் எல்லாம் இல்லை. எங்கம்மா என்னையக் கேட்ட மாதிரி கூட கேட்க மாட்டாக. அந்த விஷயத்தில எங்க அய்யனும் அம்மாவும் கொஞ்சம் பரவால்ல. ரெண்டு வீட்டுலையும் சம்மதம்ன்னு தெரிஞ்சிக்கிட்ட அப்புறம், உப்பு மாத்தறதுனு ஒரு முறை இருக்கும். நல்ல நாளு, நேரம் எல்லாம் பாத்து, ரெண்டு வீட்டுக்காரங்களும் ஊருக்குள்ள இருக்கிற பௌதியம்மன் கோயிலுக்குப் போய், ரெண்டு அண்டா நிறைய உப்புப் போட்டு, அதில வெற்றிலை பாக்கு, பழம் எல்லாம் வைச்சு, அம்மனைக் கும்பிட்டுட்டு, மாப்பிள்ளை வீட்டு அண்டாவ பெண் வீட்டுக்காரங்க வாங்கிப்பாங்க. பெண் வீட்டுக்காரங்க அண்டாவை மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வாங்கிக்குவாங்க. அதுக்கு அப்புறம் அப்படியே பக்கத்து டவுனுக்குப் போய் பொண்ணுக்கு முகூர்த்தப் பட்டுச் சேலையும், ரவிக்கையும், மாப்பிள்ளைக்கு பட்டு வேட்டியும், துண்டும் வாங்கி வருவாங்க. உப்பு மாத்தி, பொண்ணு மாப்பிள்ளைக்கு ஜவுளி எடுத்தாச்சுன்னா பாதிக் கல்யாணம் நடந்த மாதிரி.”
“அந்த உப்பு மாத்தற அன்னைக்கு எடுத்துதான உங்க மூகூர்த்தப் பட்டுச் சேலை?” நான் சொன்னதும் பாட்டியின் முகத்தில் வெட்கமும் புன்னகையும் அரும்போடின.
“பொதுவா பக்கத்து டவுனுலதான ஜவுளி எடுப்பாங்க. உங்க தாத்தா, பொண்ணுக்கு உருப்படியா நல்ல பட்டுச் சேலை எடுக்கனும்னா இங்கிருந்து எண்பது மைல் தூரத்தில இருக்கிற கோயம்புத்தூர் போகணும்னு சொல்லியிருக்காரு. அங்க நடராஜா சில்க்ஸ்ங்கிற கடை ஜவுளிக்குப் பேர் போனது. அந்தக் கடைக்குப் போனா… இவரு, ஒரு சிகப்புக் கலர் பட்டுச் சேலையை காமிச்சு அதை எடுக்கனும்கிறாரு. கூடப் போயிருந்த தாயாதி உறவுக்காரங்கெல்லாம், நம்ம மஞ்சள் இல்லை பச்சை கலர்லதான் மூகூர்த்தப் பட்டு எடுக்குற வழக்கம்னு சொல்லியிருக்காங்க. அவளுக்கு சிகப்புதான் எடுப்பா இருக்கும்னு அதை எடுத்தே ஆகணும்னு இவரு ஒத்தக் கால்ல நின்னுருக்காரு. நம்ம குடும்பத்திலேயே முதன் முதல்ல டவுன்ல போய் படிச்சவங்கற பிரியத்தால தாத்தாவோட அப்பாவுக்கே அவரு சொல்றத தட்ட முடியல. அது ஒண்ணுதான் அவரு எனக்குப் பிரியமா வாங்கி கொடுத்த சேலை. அப்புறம் எல்லாம் கூட்டத்தோட கூட்டமா எனக்கும் சேலை வரும், ரவிக்கை வரும். நாளான நாளுல, நான் சமைச்சதை நல்லா இருக்குனுகூட அந்த மனுசன் சொன்னதில்ல. கோவத்துல, கையில என்ன இருக்குதுனு கூட பார்க்காம என் மேல எரிவாரு. பிரியமா எனக்கு மூகூர்த்தப் பட்டுச் சேலையை எடுத்தாருங்கறத நினைச்சே உன் தாத்தனோட நான் காலம் தள்ளுனேன்.”
“சேல எப்புடி இருந்துச்சி” என்றேன் ஆவலாக.
“அது செவப்பில்லடி… சாயுங்கால நேரத்துல சூரியன் மலையடிவாரம் மறையும்போது வானம் ஒரு மாதிரி ரத்தமும் மஞ்சளுமாக கலந்து எரியுமே… அத அள்ளிவச்சி சுருட்டி நெசவு பண்ணியிருக்கான். மழைக்கால ஈர மண்ணுல ஊர்ந்துபோவுமே தம்பலப்பூச்சி… அந்த பூச்சியோட ஒடம்புல இருக்குற மின்னுற மர்மமான செவப்புல குஞ்சம். உடம்புல சுத்துனப்போ தணல எடுத்து உடுத்திக்கிட்ட மாதிரி ஒரு சொலிப்பு. கல்யாணத்துல என்னை அந்த சேலைல பார்த்தவங்க எல்லாம், அம்மனை நேர்ல பார்த்த மாதிரி இருக்குனு பேசிக்கிட்டாங்க.”
எனக்கு அந்த நிமிடமே அந்தச் சேலையைப் பார்க்க வேண்டும்போல இருந்தது. திடீரென அது ஓர் ஆடை எனும் எண்ணம் கடந்து ஏதோ தெய்வீகத்தன்மை படிந்ததைப்போல இருந்தது. அதை அப்போதே அந்த நிமிடமே பார்க்க வேண்டுமென விரும்பினேன்.
“கொஞ்சம் பொறுடி. இன்னும் செத்த நாளுதான… நல்ல நாளல எடுத்து காட்டுறேன்” என என் ஆசையைச் சமாதானப்படுத்தினாள்.
அன்று இரவெல்லாம் பாட்டியைப் பற்றியும் அந்தப் புடவையைப் பற்றியுமே எண்ணங்களாக எழுந்தன. கோவில்கள், முருகன் வள்ளியைக் கண்ட இடம், ஒரு தோட்டத்தின் நடுவே தனியே நிற்கும் கல் என்று சென்று பார்ப்பதுடன், பாட்டியிடமே அதிகம் பேச விரும்பினேன். அவளிடம் பேசும்போதெல்லாம் புடவையை நெருங்கிவிட்டதாக ஓர் உணர்வு. இதோ கைக்கு வந்துவிடும் என்பது போன்ற ஒரு மகிழ்ச்சி.
“அப்ப, கல்யாணத்துக்கு முன்னாடி, நீங்க தாத்தவை பார்க்கவே இல்லையா?” என்று இரண்டாவது வாரத்தில் ஒரு நாள் கேட்டேன்.
“ஊர்லயே அய்யன் தோட்டத்துலதான் காயடிக்காத காளை இருக்கும். பசு காராட்டுக்கு அலைஞ்சுச்சுன்னா, காளை சேர்க்கிறதுக்கு மாட்டைக் கொண்டு வருவாங்க. ஒருக்க, அவங்க மாட்டை அய்யன் தோட்டத்துக்கு இணைசேர பிடிச்சிக்கிட்டு வந்தாரு. அப்ப, பார்த்திருக்கேன். பனமாரமாட்டம் நெடு நெடுனு இருந்தாரு. எங்க அய்யனெல்லாம் குடுமி வைச்சுருப்பாரு. இவரு கிராப் வெட்டியிருந்தாரு. அப்படி எதேச்சையா பார்த்ததுதான்.” என்றாள் பாட்டி.
பின்னர் எதையோ உணர்ந்து கொண்டவளாக
“வடக்கால பேரப்பன் தோட்டத்துல அந்த மாதிரி காளை இருக்கு. உங்க சித்தப்பன்கிட்ட சொல்லு, அவன் கூட்டிக்கிட்டுப் போவான்” என வேறு எதையோ பேச ஆரம்பித்தாள்.
“பழகாத ஆளு. அவரோட எப்படிக் குடும்பம் நடத்துறதுனு கவலைப் படலயா?”
“அதையெல்லாம் எங்க தங்கம் யோசிச்சோம். பெத்த அப்பன் ஆத்தா சொன்னா எதுக்கும் சரினு தலையாட்டுவோம். போற இடத்துல பிறந்தவீட்டுப் பேரை காப்பாத்தனும்னு, முளைச்சு மூணு இலை விடாத மூணு வயசுல இருந்து சொல்லி சொல்லி வளத்துவாங்க. அதுதான் எங்களுக்கு வேதவாக்கு“
“உங்க கல்யாணம் வீட்டுலதான் நடந்துச்சுன்னு அப்பா சொல்லியிருக்காரு” என்றேன் ஒரு மாலையில். அப்போது அந்தி சாய்ந்துக்கொண்டிருந்தது. அடிவானம் சிவப்பும் மஞ்சளுமாக கலந்திருந்தது. பாட்டியின் கல்யாண சேலை அந்த நிறமாக இருக்குமா என யோசித்துக்கொண்டேன்.
“அப்பெல்லாம், பொண்ணு வீட்டுலதான் கல்யாணம் நடக்கணும்கிறது முறை. எங்க அய்யன் தோட்டத்து சாலைல ஒரு வெளித்திண்ணை, தென்னம்படல வைச்சு அடைச்ச ஒரு சமையல் அறை, சாமான் செட்டெல்லாம் போட்டு வைக்க இன்னொரு அறை. அதுக்குத்தான் கதவு இருக்கும். “
“சாலைன்னா?”
“வீடு. வீட்டுக்கு முன்னாடி எவ்வளவு பெரிய பந்தல போடுவோமோ அவ்வளவு விமர்சையா நடக்குதுனு அர்த்தம். எங்கய்யனுக்கு நான் ஒத்தைப் பொண்ணுங்கறதால, நல்ல பெரிய பந்தலா போட்டு, மைக் செட்டெல்லாம் வைச்சு ஏற்பாடு பண்ணுனாரு.” என்ற பாட்டி, பந்தல்னா என்னன்னு இவ கேட்கிறதுக்கு முன்னாடியே சொல்லிரு என்றாள் சித்தியிடம்.
“உலக்கை பார்த்திருக்கிறயல்ல, அந்தத் தடிமனுக்கு உள்ள வெட்டிக் காய்ஞ்ச மரத்தை பந்தக்காலுனு சொல்லுவோம். பக்கவாட்டுலயும், நீள அகலத்துக்கு ஏற்ப சில பந்தக்கால்களை நடுச்சென்ட்ரலிலும், மண்ணில் குழுதோண்டி நடுவாங்க. அப்புறம் அதுகளையெல்லாம் இணைக்கிற மாதிரி, ரெண்டு மூணு விரல் தடிமன்ல இருக்கிற மரக்குச்சிகளை குறுக்கும் நெடுக்குமா போட்டு, தென்ன மஞ்சக் கயிறப் போட்டுக் கட்டிடுவாங்க, பார்த்தம்னா சதுரம் சதுரமா தெரியும். இப்பெல்லாம் கீற்றுனு ஒண்ணு இருக்கு. பாட்டி காலத்துல, அப்படியே தெண்ணை மட்டைகளை போட்டு மூடிட, காத்துல பறக்காம இருக்க தென்னமஞ்சி கயிறு போட்டுக் கட்டிடுவாங்க, செவரு இல்லாத கூரை மட்டும் போட்டுட்டா அதுதான் பந்தல்னு வைச்சுக்க. யூட்யூப்ல உரிமைக்குரல் படம் இருந்தா பாரு. அதுல, லதா கீற்றை எடுத்துக் கொடுக்க எம்ஜியாரு வீட்டைப் பிரிக்க படல் கட்டுவாரு.”
“எவ்வளவு உயரமா பந்தலை ஏத்துனாலும், மாப்பிள்ளை இன்னும் உயரம் அவருக்குத் தலை இடிக்கும். ஏத்துங்க ஏத்துங்கனு சொல்லிக்கிட்டே இருந்தாரு எங்க அய்யன்.” என்றாள் பாட்டி.
“விருந்தாளிகள் எல்லாம் எப்ப வர ஆரம்பிப்பாங்க.”
“அய்யனோட பிறந்த சனம், அம்மாவோட பிறந்த சனமெல்லாம், மூணு நாளைக்கு முன்னாடியே வந்து கல்யாணம் முடிஞ்சு மூணு நாலு நாளுக் கழிச்சுதான் போவாங்க. அப்படி வர்ரவங்கல்லாம்தான் சேர்ந்துதான் இந்தப் பந்தலையே போடுவாங்க.” என்றாள்.
“பந்தல் போடறதுக்குனு தனி ஆளுங்க இருக்க மாட்டாங்களா?”
“இருப்பாங்கதான். ஆனா எல்லாருக்கும் எல்லா வேலையும் தெரியும். நாங்க இருந்த சாலைய யாரு கட்டுனதுங்கற. எங்க அய்யனோட அய்யனும் அவங்க அம்மா ரெண்டு பேரும் மண்ணெடுத்து, கூரைபோட்டுக் கட்டுனது.” என்றாள் பாட்டி.
“ஆறு ஏழு நாளைக்கு, விருந்தாளிகளுக்கெல்லாம் சாப்பாடு?”
“முகூர்த்த நாளைக்கு ஒரு நா முன்னாடி பின்னாடிதான் கொஞ்சம் விசேஷமா சமைப்போம். மற்ற நாளெல்லாம் என்ன இருக்குதோ முடியுதோ அதை செய்வோம். ஒரு பொல்லாப்பும் இருக்காது.”
“ராத்திரியானா, பந்தலுக்கு அடிலதான் தூங்குவாங்களா?”
“ஆமா, கல்யாணத்துக்கு வர்ரவங்க உட்கார்ரதுக்கு, ஊரு வீட்டுகள்ள இருக்க பெஞ்சுகள எடுத்துட்டு வந்து போட்டு இருப்போம். அதுல படுத்துக்கிறவங்களும் இருப்பாங்க. திண்ணைல பாய விரிச்சு வரிசையா தூங்குவாங்க. ராத்தங்கலுக்கு மட்டும் அவங்க அவங்க சொந்தக்காரங்க வீட்டுக்கோ, தெரிஞ்சவங்க வீட்டுக்கோ போய்டுவாங்க.” என்றாள் பாட்டி.
“ஜேஸன் எனக்குப் புரபோஸ் செஞ்சதுக்கு அப்புறம், மேரேஜுக்கு ஹால் புக் பண்றதுக்கே ஒரு வருஷம் காத்திருந்தோம். நீங்க என்னடான்னா வீட்டில இருக்கிற மரம் மட்டைகளை வைச்சு பந்தல போட்டுட்டு ஹாலை ரெடி பண்ணிடிரீங்க” என்றேன்.
“புரபோஸ்னா?” என்றாள் பாட்டி
“ஜேஸன், என் முன்னாடி மண்டிபோட்டு, என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறாயானு கேட்டான். நான் சரின்னு சொன்னதுக்கு அப்புறம், இதோ இந்த மோதிரத்தை என் கையில போட்டான்.” என்றேன்.
“பார்த்தா கல்லு மோதிரம் மாதிரி தெரியலையே, வைரமா?”
“ஆமா பாட்டி.”
“எங்க அய்யன், வைரம் வாங்கனும்னா ஒருத்தரு ராசிக்கு சேருமா சேராதானு பார்த்துத்தான் வாங்கணுமுன்னு சொல்வாரு. நீங்கெல்லாம் அதை எங்க பார்க்கப் போறீங்க!”
“என்னைக் கேட்டையல்ல தாத்தாவை எப்படிப் பார்த்தேனு. நீ, சேசனை எங்க பிடிச்சே?”
“சேசன் இல்ல பாட்டி ஜேஸன்,”
“அதான்… சொல்லு”
“ஆறாம் கிலாஸிலிருந்து, மேத் சைன்ஸ் கிளாசுனு அவனும் நானும் ஒண்ணாதான் உட்காந்திருப்போம். அம்மா எனக்குத் தேங்காய் எண்ணெய தலைக்குத் தேய்ச்சு, வலிச்சு சீவி சடை பின்னி ஸ்கூலுக்கு அனுப்பிவிடும். ஸ்கூல்ல பசங்க கிண்டல் பண்ணிக்கிட்டே இருப்பாங்க. ஜடையை எடுத்து சேர் காலில கட்டற பசங்கெல்லாம் இருந்தாங்க. ஜேஸன்தான் எனக்காக அவங்ககிட்ட எல்லாம் சண்டை போடுவான். அவனுக்கு மேத், சயின்ஸ் ரெண்டும் ஸ்கூல்ல சொல்லிக்கொடுக்கிறத வைச்சு மட்டும் புரியாது. நான் அவனுக்குப் புரியறமாதிரி சொல்லிக்கொடுப்பேன். அவங்க வீடும் நம்ம வீடும் பக்கத்து பக்கத்துல. அவங்க அம்மாவால, அவனை ஸ்கூல்ல கொண்டுபோக விடமுடியலேனா, அம்மாதான் எங்க ரெண்டு பேரையும் கொண்டுபோய் விடுவாங்க. ரெண்டு அம்மாவுமே நல்லா பழகிட்டாங்க.”
“உங்கப்பங்காரன் நீ சேசனோட சினேகிதமா இருக்கறத பார்த்துட்டு, புஸ்புஸ்ஸுனு ஆகியிருந்திருப்பானே?” பாட்டி சிரிக்க அவள் கண்கள் இருந்த இடம் தெரியவில்லை.
“அப்பாவும் அம்மாவும் அவங்களைப்போல, அவங்களோட அமெரிக்கா வந்த, அவங்களோட படிச்ச ப்ரெண்ட்ஸ், அவங்க குழந்தைங்க, அவங்க பண்ணின காதல்னு பார்த்துப் பார்த்து நமக்கும் இப்படியொரு நாள் வரும் என்று தயாராகிட்டாங்கன்னு நினைக்கிறேன். ஜேசனும் வீட்டிற்கு வரவும் போகவும் இருப்பான். அவன் வீட்டுக்கு வர்ரான்னா, உன் மருகப்பையன் வர்ரான்னானு, அப்பா அம்மாகிட்ட கேட்பாரு.”
வெளியில் கார் ஒன்று வரும் சத்தம் கேட்டது.
“சித்தப்பா வந்துட்டாரு போல இருக்கு.” என்றேன்.
“இல்லை. இது ரைஸ் மில்காரங்க காரு. சித்தப்பா மெஸ்ஸேஜ் போடாம டவுனிலிருந்து கிளம்பவே மாட்டாரு. அவருகிட்ட இருந்து ஒரு மெஸ்ஸேஜும் இல்ல. சசிக்குமார் படம் ரீலிஸ் ஆகியிருக்கில்ல. சினிமாக்குப் போயிருப்பாரு.” என்றாள் சித்தி.
“ஏ சாமி, உங்கப்பனும் இப்படித்தான் அங்க படம் பார்ப்பானா?”
“இல்ல பாட்டி. அப்பா தியேட்டருக்கெல்லாம் போகமாட்டாரு. டிவியே போதும் அவருக்கு. டிவி-லிருந்து அப்பாவை நகர்த்தி அம்மா வேலை வாங்கிறத பார்க்கிறதுக்கே நீ அமெரிக்கா வரணும்.”
“காலேஜுல படிக்கறப்ப ரஜினி பேனும்மா அவன். பொள்ளாச்சில சூட்டிங்குக்கு அவரு வந்திருக்காருன்னு, சூட்டீங் முடியறவரைக்கும் அங்கேயே டேரா போட்டவனும்மா, உங்கப்பன்.”
“அப்பா எனக்கு இதை சொன்ன ஞாபகம் இல்லையே!” என்றேன்.
“அவன் பண்ணுன குரும்பையெல்லாம், எப்படிச் சொல்வான்?”
“பாட்டி , உங்களைத் தவிர வேறு யாராவது அந்த சேலையை இதுவரை கட்டியிருக்காங்களா?”
“ஒருக்கா சித்தி அவ சினேகிதி கல்யாணத்துக்குப் போறேன். உங்க கல்யாண பட்டுச் சேலைய கட்டிக்கிடட்டுமானு கேட்டா. நம்ம வீட்டுக் கல்யாணத்தில கட்டலாம். உறம்பரைக இல்லாத வீட்டுக் கல்யாணத்துல எதுக்குனு சொல்லிட்டேன்.” என்று புன்னகைத்தாள்.
இப்படித்தான் ஒவ்வொரு நாளும் எங்கள் கதைகள் தொடர்ந்தன. ஒவ்வொரு முறை பேசும்போதும் நான் கல்யாண புடவையில் பேச்சை கொண்டு வந்து நிறுத்துவேன். அப்படியென்றால், பாட்டிக்கு அப்புறம் அந்தச் சேலையை நான்தான் கட்டவிருக்கிறேன் என்று நினைத்துப் பார்த்தாலே இன்பமாக இருந்தது. அம்மன் ஒருவள் கட்டிய சேலை என்னைத் தழுவி ஆசிர்வதிக்கும் என எண்ணி உடல் சிலிர்த்தது.
“சேசனுக்கு, நீ கல்யாணத்துல என்னோட பட்டுச்சேலைதான் கட்டுனும்னு யோஜனை எப்படி வந்துச்சு.” பாட்டியே ஒருமுறை சேலையைப் பற்றி பேச்செடுத்தாள்.
“நாங்க சனி ஞாயிறுல மாலிபு வெங்கடஜாலபதி கோயிலுக்குப் போவோம். கோயிலுக்குப் போறப்ப அம்மா என்னை சேலை கட்டணும்னு கண்டிப்பா சொல்வாங்க. சில நாள் ஜேசனும் எங்களோட வருவான். அவனுக்கு என்னை சேலைல பார்க்கிறதுக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. அப்புறம் கல்யாணப் பேச்சு வந்தப்புறம், நம்ம முறைப்படிதான் கல்யாணம் பண்ணனும்னு நான் சொன்னேன். அவன் அவங்களோட ஒரு வழக்கத்தை நம்ம கல்யாணத்துல கடைப்பிடிக்கலாமானு கேட்டான். அவங்க கல்யாணத்துல பொண்ணு அவளோடு அம்மா கல்யாணத்து கவனு, பாட்டி கல்யாணத்து கவனு அப்படித்தான் போடுவாங்க. அப்படி பார்த்தா, நீ, உங்க அம்மா அல்லது பாட்டி கல்யாணத்துப் புடவை கட்டணும்னு சொன்னான். எனக்கு என்னவோ உன் கல்யாணப் புடவையை கட்டணும்னு தோணுச்சு. நீ அந்த பொடவைய பத்தி சொன்னப்பிறகு எனக்கு இப்பவே கட்டிப்பாக்க ஆசையா இருக்கு.” என்றேன். பாட்டி ஏதோபோல சித்தியைப் பார்த்தாள். ”ஜேசனுக்கு, உப்பு மாத்தற முறை, கல்யாண ஜவுளி எடுக்கற கதையெல்லாம் நேற்றே வாட்ஸப்புல அனுப்பிட்டேன். அதையெல்லாம் கேட்டுட்டு அவனும் குஷியாயிட்டான்” என்றபோது பாட்டி உற்சாகமாகச் சிரித்தார். அவளை மேலும் உற்சாகப்படுத்த விரும்பினேன்.
“நான் சேலை கட்டறது மட்டும் இல்ல! ஜேசன், பட்டு வேஷ்டி பட்டு சட்டை போடறேனு இருக்கான். அவன் நினைச்சுப் போட்ட திட்டத்துல சின்னதா எது மாறானாலும், கல்யாணத் தேதியவே மாத்திடுவான். நீயும் தாத்தாவும் கல்யாணம் பண்ணி ஐம்பது வருஷம் ஒண்ணா வாழ்ந்திருக்கீங்க. உங்க சேலையை நான் கட்டுனா அதுவே ஒரு ஆசிர்வாதம்னெல்லாம் அவன் சொல்லியிருக்கான்” என்றேன்.
“இந்த மாதிரி நம்பிக்கையெல்லாம் சேசன் கிட்ட இருக்கா? நம்பவே முடியலையே?”
“பரம்பரை பரம்பரையா ஒரு பொருளைப் பாதுகாக்கிறதுங்கிறது, அது ராசிங்கிறதெல்லாம் அவங்ககிட்டேயும் இருக்கு.”
“இது போதுமே எனக்கு சேசன பிடிக்கிறதுக்கு.” என்றாள் பாட்டி.
“அவன் நம்மளைப் பத்தி படிச்சு படிச்சு நிறைய தெரிஞ்சு வைச்சுருக்கான். பத்தாதுக்கு, இன்ஸ்டா ரீல்ஸ் வேற பாக்குறான். கையை காலை எங்கையாவது இடிச்சுக்கிட்டா, அய்யோ முருகானுதான் சொல்லுவான்.”
“அய்யோ கிருஷ்ணானு சொன்னா இன்னும் கொஞ்சம் நல்லாருக்கும். பரவால, கிருஷ்ணனோட மருமகப்பிள்ளை பேரத்தான சொல்றாரு.”
“நீ சேசன் வீட்டுக்குப் போயிருக்கயா?”
“நம்ம வீட்டுக்கு அவனைத் தீபாவளிக்குக் கூப்பிடுவோம். அவங்க அப்பா அம்மா, தேங்க்ஸ் கிவிங், கிறிஸ்துமஸ்னு என்னைக் கூப்பிடுவாங்க. அந்தப் பண்டிகை காலங்கள்தான் குடும்பத்தில இருக்கிறவங்க வேற எங்க இருந்தாலும் பெற்றவங்க இருக்கிற இடத்துக்கு வந்திடுவாங்க. தேங்க்ஸ் கிவிங்க்ஸ் ராத்திரி சாப்பாடை குடும்பமா உட்கார்ந்து சாப்பிடனும்னு அவங்க முக்கியமா நினைப்பாங்க. ஜேசனோட அப்பாதான், தேங்க்ஸ் கிவிங்கிக்குனு ஸ்பேஸலா செய்ற வான்கோழி கறியைச் சமைப்பாரு. முழுக்கோழியை அப்படியே சமைப்பாங்க. அதை அறுத்து எல்லாருக்கும் பரிமாறுறதும் அவங்க அப்பாதான். நான் குடும்பமும் குடித்தனமுமா வாழறப்ப, ஜேசன் அதைச் செய்வான்.” என்றேன்.
மதிய உணவிற்கு வீடு வந்திருந்த கவின், “அக்கா, எங்களுக்கு லஞ்ச் இன்ட்ரவெல் ரெண்டு மணி நேரம். வா, வீடியோ கேம் விளையடலாம்.” என்றான். ஜேசனை பாட்டிக்கு என் சொற்கள் வழியாகப் பிடித்திருந்ததில் மகிழ்ச்சியாக இருந்தது. கவினுடன் கேமில் மோதி நான் வென்றதெல்லாம் அந்த மகிழ்ச்சியின் விளைவுதான்.
மகாளய அமாவாசை வந்தபோது சித்தியும் எங்களுடன் திண்ணையில் அமர்ந்திருந்தாள். முழுமையான இருளில் மஞ்சள் நிற சாலை விளக்குகள் ஒருவித கிளர்ச்சியைக் கொடுத்தன.
“கல்யாணம் ஆகி ஆறு வருஷம் கழிச்சுத்தான் உங்க அப்பா பிறந்தாரு தெரியுமா…” என்றாள் சித்தி.
நான் புரியாமல் பார்த்தேன்.
“ஊருக்கே ஞாயம் சொல்ற உங்க தாத்தாவுக்கு, எல்லாம் தெரியும்னு நினைச்சேன்.” என்று நிறுத்தினாள் பாட்டி.
“நான் கட்டிக்கிட்டு வந்த இந்த வீடு ஊருக்குள்ள. எங்க அய்யன் வீடு ஒரு மைல் தூரத்துல இருக்கிற தோட்டத்துல. கடை கண்ணிக்கு வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு வாங்க ஊருக்குள்ள வர்ர எங்கம்மா, அப்படியே என்னைப் பார்க்க வரும். தலைக்குக் குளிச்சிட்டியானு கேட்கும். குளிச்சிட்டம்மானு சொன்னா, மாப்பிள்ளை உன்னை நல்லாத்தான வைச்சுக்கராருனு கேட்கும். ஆமா, நேத்துக்கூட டவுனுக்குப் போனவரு ஒண்ணுக்கு ரெண்டா சேலை எடுத்துட்டு வந்தாரும்பேன். நான் என்ன கேட்கிறேனு தெரிஞ்சும், இந்த சிறுக்கி விட்டுக் கொடுக்காம இருக்கானு எங்க நாத்தனாருகிட்ட பொலம்பீட்டுப் போகும்.” நினைவுகளைத் தொடர்ந்தாள் பாட்டி.
“அந்தப்படிக்கு இடதுபுறமா இருக்கிற திண்ணையிலதான், ஒரு கட்டிலப் போட்டு, ஜமுக்காளம் விரிச்சு, தலையணையை தட்டிப்போட்டு, உங்க தாத்தா தூங்குவாரம். கல்யாணமாகி புதுப்பெண்ணா வந்த பாட்டி அந்த ரெண்டு ஜன்னல் ரூம்ல படுத்துக்குமாம்.” என்றாள் சித்தி.
“கேசவன் இந்தக் கட்டிலவிட்டு எந்திரிச்சத்தான, வீட்டுல கிருஷ்ண வருவான்னு, அடுப்படில மட்டும் பேசுவோம். புகுந்தவீட்டு ஞாயத்தை பிறந்துவீட்டுல சொல்லக்கூடாதுனு எனக்கும், பிறந்துவீட்டு ஞாயத்தை புகுந்தவீட்டுல சொல்லக்கூடாதுனு என் நாத்தனாமாருக்கும் வைராக்கியம். பெண்டுக ரகசியம் பெண்டுகளோட.” என்றாள் பாட்டி.
“இவங்களாட்டம் புருஷன் பொஞ்சாதி யாருமில்லேனு ஊரே பேசுவாங்களாம். ஜோடியா நிக்க வைச்சுப்பார்த்தா அப்படித்தான இருந்திருக்கும். தாத்தாகிட்ட எதைக் கேட்டாலும், ரங்காயிகிட்ட ஒரு வார்த்தை கேட்டுச் சொல்றேன்னு வேறு சொல்வாராம். யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இல்ல. நல்லாத்தான போய்க்கிட்டுருக்குனு நினைப்பாங்கலாம்.” என்று அடுக்கினாள் சித்தி.
“ஆள் நடமாட்டத்தை வைச்சே எல்லாம் கணிக்கற இந்தத் தங்கராசு அண்ணன், தாத்தாகிட்ட பேசிப் பார்த்தாரு. கல்யாணம்னாலே ரொம்ப சடைஞ்ச தாத்தாவை பேசி சம்மதிக்க வைச்சதே இந்த அண்ணன்தான். அவருக்கே பேசி இந்த சங்கடத்தை தீர்க்க முடியல. தங்கைச்சி மாதிரி இருக்கிற எங்கிட்ட என்ன கேட்கிறது எப்படி சொல்றதுனு இந்த அண்ணனுக்குத் தெரியல. அன்னைக்கு என்ன மூகூர்த்தமோ, நீ அஞ்சாங்கிலாஸ் வரைக்கும் படிச்சிருக்கதான தாயினு, ஒரு நாள் கேட்டுட்டு, ஒரு நோட்டு எடுத்து, ஒரு நாட்டுக் கதைய சரசரன்னு எழுதுனாரு. இதைப் படிச்சுப் புரிஞ்சு நடந்துக்கோ தாயினாரு.” என்றாள் பாட்டி.
“அப்படி என்ன கதை எழுதுனாரு?” என்றேன் ஆவலாக. பாட்டியும் சித்தியும் சிரித்தார்கள்.
இப்போதுமே அந்தச் சிரிப்பு மாறாமல்தான் வழியனுப்ப வெளியே வந்தார்கள்.
அமாவாசை முடிந்தவுடன் நேற்று முதல் வேளையாகப் பாட்டியிடம் கேட்டது அவள் கல்யாண சேலையைத்தான். அப்போதுதான் பாட்டி இரும்பு அலமாரியின் சாவியைத் தேடத்தொடங்கினாள். கிட்டத்தட்ட சித்தியும் பாட்டியும் வீட்டையே துடைத்து எடுத்து சாவியைக் காணவில்லை என உறுதிப்படுத்தினர். எனக்குப் பெரும் ஏமாற்றமாக இருந்தது.
“நான் உங்க சித்தப்பாகிட்ட சொல்லி அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கிறேன். இப்ப அதவிட அந்த கதையுள்ள நோட்டுதான் முக்கியம்.” என்ற பாட்டி அதை என் கையில் திணித்தாள்.
நான் அதை வாங்கிக்கொண்டேன். காரில் ஏறியபோது பாட்டியும் சித்தியும் ஒருவரை ஒருவர் கண்களால் பார்த்து நிறைவு கொள்வதாகத் தோன்றியது. ஒரு தெய்வ அருள் இரும்பு அலமாரிக்குள்ளிருந்து என்னை ஆசிர்வதிப்பதாய் எண்ணிக் கொண்டேன்.

எழுத்தாளரும் விமர்சகருமான திரு. ஆஸ்டின் சௌந்தரின் ‘சிவப்பு’ என்ற இந்தச் சிறுகதை, ஒரு குடும்பத்தின் மூன்று தலைமுறைப் பெண்களின் உளவியலை மிகத் துல்லியமாக ஆராய்ந்துள்ளது. கிராமியச் சூழலின் வறட்சியும் உறவுகளின் மேலோட்டமான அன்பும் நவீன உலகின் இயந்திரத்தனமும் இக்கதையில் நேர்த்தியாகக் கலக்கப்பட்டுள்ளன. பெண்களின் ஒடுக்கப்பட்ட வாழ்வியலையும் அவர்கள் எஞ்சியிருக்கும் அன்பை எப்படிக் காப்பாற்றிக் கொள்கிறார்கள் என்பதையும் இக்கதை ஆழமாகப் பதிவுசெய்துள்ளது. தனிமனித வாழ்வியலின் நிதர்சனங்களை எந்தவிதப் பூச்சுமின்றி முகத்தில் அறைவது போலச் சொல்லும் இச்சிறுகதை, சமகாலத் தமிழ் இலக்கியத்தில் ஒரு மைல்கல்லாகும்.
– முனைவர் ப. சரவணன், மதுரை, இந்தியா.