ராணி

கைகளைப் பின்னால் மடக்கி, சிவப்பு நிற பாடிகான் ரக உடையின் ஜிப்பை சர்ரென இழுத்த மியாவின் முதுகைப் பார்த்தவுடன் முகத்தை வலப்புறமாகத் திருப்பிக்கொண்டேன். அறையின் விளக்கை மங்கச்செய்தால்­ தேவலாம்போல இருந்தது. வலப்புறம் இருந்த கண்ணாடியில் ‘போடி கிளிட்டரால்’ மினுங்கும் அவள் உடல் அசைவுகள் அமானுஷ்ய நடனம்போல தெரிந்தது. இடுப்பின் மெல்லிய சரிவு, பிட்டத்தின் அடர்ந்த வளைவாக மாறும் துல்லியமான எல்லையில், ஸ்பேட் ராணியைக் கருநீல நிறத்தில் கையகலத்திற்குப் பச்சைக்குத்தியிருந்தாள். அகந்தை கொந்தளித்த ஸ்பேட் ராணியின் முகத்தைச் சற்று முன்னர் இன்னும் நெருக்கமாகவே காட்சி அரங்கில் பார்த்தேன். மானுடப் பதற்றங்களை எள்ளி நகையாடும் தீரா அலட்சியம் உறைந்த பார்வை. காமத்தின் பேரிரைச்சல் மிகுந்திருந்த அந்த அரங்கில் மியாவும் அப்படித்தான் முகத்தை வைத்திருந்தாள்.

ஒளியலைகள் படிந்த உடல் கிளிட்டரால் மிளிர, அரைக்கண்ணும் விளிம்புதட்டின் சிரிப்புமாக அவள் அரங்கை எதிர்கொண்ட அத்தருணத்தைக் கற்பனையில் நிகழ்த்திப் பார்க்க முயன்றேன். முழு நிர்வாணப் பெண்ணால் ஆரவாரமிக்க ஓர் அரங்கை அசாதாரணமாகக் கையாள முடிந்ததே பெரும் பிரமிப்பாக இருந்தது.

கண்ணாடியில் அவள் உடலின் இடப்பகுதி மட்டும் கண நேரம் தோன்றி மறைந்தது.

“நீ செய்த சாகசங்களுக்குப் பின்னால், ஏதாவது ஏமாற்று வேலை உண்டா?” அந்நேரத்து மௌனத்தை உடைக்க விரும்பினேன். நிசப்தத்தின் ஒளி அதிக பிரகாசமாகி உருத்தியது. துண்டை உதறும் சத்தம், உயர எழுவதற்கு முன்னர் பருந்து இறக்கைகளில் வெளிபடுத்தும் வீச்சுபோல ஒலித்தது.

“விரும்பினால், நீயும் என்னுடன் இணைந்து குளிக்கலாம். ஆனால் ஆர்வம் தாங்காமல் இப்போதே கட்டிப்பிடித்தால் உன் உடலில் ஒட்டிக்கொள்ளும் மினுமினுப்புக்கு நான் பொறுப்பாக மாட்டேன்.” என என் கேள்விக்குச் சம்பந்தமே இல்லாத பதில் கூறிச் சிரித்தாள்.

வெண்ணிற துண்டைச் சுற்றியிருந்தவளைத் திரும்பிப் பார்த்தேன். அதுவே ஒரு கவர்ச்சியான உடைபோல அவள் உடலில் படிந்து வசீகரித்தது. இழைசு ஒன்றை உருவி, அதில் ஏதோ திரவத்தைத் தொட்டு, கழுத்தில் ஒத்தி எடுத்துக்கொண்டிருந்தாள்.

பொதுவாகவே தாய்லாந்து பெண்களின் குரல் மூக்கில் இருந்து வெளிபட்டு, வண்டின் முரல்போல அந்நியமாக ஒலிப்பதைக் கேட்டிருக்கிறேன். சரவணனுடன் பினாங்கில் உள்ள சூலியா தெருவில் சுற்றும்போதெல்லாம் தங்கள் மதுக்கூடத்தின் சிறப்புகளை விளம்பரப்படுத்த தாய்லாந்து பெண்கள் இடைவிடாது முரல்வார்கள். மியா ஏற்ற லயத்துடன் துல்லியமான உச்சரிப்பில் ஆங்கிலத்தில் பேசுவதைக் கேட்க இனிமையாக இருந்தது.

“கண்ணாடியில் நான் கூடுதல் கவர்ச்சியாகத் தெரிந்தேன் அல்லவா?” என்றபோது அவளை மீண்டும் திரும்பிப் பார்த்தேன். இன்னும் எதையோ காதோரங்களில் துடைத்துக்கொண்டிருந்தாள். செழித்த உடலைத் தாங்கி நிற்கும் கால்களின் தின்மை வசீகரித்தது. என் உடலில் நிகழும் மாற்றத்தை உணர்ந்தபோது விரல்களால் தாளமிடத் தொடங்கினேன். நான் ரகசியமாகப் பார்த்ததை அவள் அறிந்திருக்கிறாள் என்பதே கூச்சமடைய வைத்தது.  

“கண்ணாடிக்கு அந்த மகிமை உண்டு. அது நாம் அறிந்தவற்றை நமக்கே புதுமையாகக் காட்டும். நாளை மதியம் வரை என்னுடன் நீ இருக்கலாம். அதுவரை உன் உடலில் தெம்பிருந்தால், ஐந்து பக்கமும் கண்ணாடியால் சூழப்பட்ட அறைக்கு உன்னை அழைத்துச் செல்வேன்,” எனக் கண் அடித்தாள்.  

என்ன சொல்வதென யோசிப்பதற்குள் “ஐந்து பக்கம் என்றால் மேல் புறமும் கண்ணாடி இருக்கும். அசையும் நம் நிர்வாண உடலைக் கீழிருந்தபடி மேலே பார்க்க வினோதமாக இருக்கும். உன் உடல் உனக்கே பிடிக்கும்,” என மீண்டும் கண்ணடித்தாள்.

நான் அவளிடம் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டேன்.

“எப்படி உன்னால் அரங்கில் அப்படியான சாகசங்கங்களைச் செய்ய முடிந்தது? அதில் ஏதேனும் தந்திரம் உண்டா?”

இந்தக் கேள்வியை அவளிடம் இதோடு நான்காவது முறை கேட்டிருப்பேன். உண்மையில் அவள் செய்த சாகசத்தில் ஈர்க்கப்பட்டுதான் என் உறுதியைத் தளர்த்திக்கொண்டேன். பணம் கேட்டால் சரவணன் தவறாக எண்ண மாட்டான் என என்னை நானே சமாதானம் செய்துகொண்டேன். இன்னும் சொல்லப்போனால் அவனுக்கு அதில் சந்தோசம்கூட இருந்திருக்கலாம். இப்படியெல்லாம் நினைப்பது சமாதானத்தைக் கொடுத்தது. காமத்தின் உணவு கூச்சமாகத்தான் இருக்கக்கூடும்.

சரவணன் அழைத்துதான் நான் கெராபி செல்ல ஆர்வம் கொண்டேன். அவன் மாமா பஸ் நிறுவனம் வைத்துள்ளார். மாதம் தோறும் தாய்லாந்துக்குக் குழுப்பயணம் ஏற்பாடு செய்வார். பெரும்பாலும் ஆண்கள்தான் அதில் இணைவார்கள். அபூர்வமாக இளம் காதல் ஜோடிகள் வருவார்கள் என சரவணன் கூறியுள்ளான். சரவணன்தான் அவருக்கு உதவியாளன். பயணம் முடிந்த மறுநாள் பள்ளிக்கு வரும்போது கைகளில் எப்படியும் இருநூறு, முந்நூறு ரிங்கிட் வைத்திருப்பான். வகுப்பில் தூங்கித் தூங்கி விழுவான். அந்த வாரம் முழுக்க நான் விரும்பியதையெல்லாம் வாங்கி தின்னக்கொடுப்பான். அவன் விரும்பிய மதுவைக் குடிக்க நானும் உடனிருப்பேன். கர்னி டிரைவ், பத்து ஃபிரிங்கி, லங்காவி என எங்கெங்கோ கூட்டிச் செல்வான்.

அவன் அவ்வாறு கூட்டிச் செல்ல இரண்டு காரணங்கள் இருந்தன. முதலாவது, தான் சொல்லும் தாய்லாந்து கதைகளைச் ­­சுணங்காமல் செவிமடுக்க அவனுக்கு ஒருவன் தேவையாக இருந்தான். பலமுறை கேட்ட கதையாக இருந்தாலும் நான் சலிப்பைக் காட்டாமல் ஆர்வமாகவே செவிமடுப்பேன். கற்பனையில் துல்லியமாக நிகழ்த்திப் பார்ப்பதால் அவன் சொல்லும் தாய்லாந்து களியாட்டக் கதைகள் எனக்குப் புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.

“தாய்லாந்துனாலே மூனு ரோடுதான்டா. புக்கெட்டுனா பங்களா ரோடு, பட்டாயான்னா வாக்கிங் ரோடு, கெராபின்னா அவ் நாங் ரோடு. இத ஞாபகம் வச்சிக்கிட்டாலே போதும் எல்லா சொர்க்கத்தையும் பாக்கலாம்,” என்பான்.

சில சமயம் அவன் சொல்லும் தாய்லாந்து கதைகளில் அவன் கற்பனையைக் கலக்கிறானோ எனச் சந்தேகமாக இருக்கும். அதெப்படி பெரும் கூட்டத்தின் முன் புணர்ச்சியை நிகழ்த்திக் காட்டுவார்கள், அதெப்படி நிர்வாணமாக அத்தனை பேர் முன்னிலையில் ஆடுவார்கள், அதெப்படி உடலில் இத்தனை சாகசம் செய்வார்கள் என எனக்குள் கேட்டுக்கொள்வேனே தவிர சரவணனிடம் சந்தேகத்தின் சாயலைக் கொஞ்சமும் காட்டியதில்லை. விதவிதமான உணவுகளையும் மதுவையும்­ வாங்கித் தருபவனை ஒருபோதும் நான் சங்கடப்படுத்த முயன்றதில்லை.

“அங்க போனதும் எங்க மாமா கூட்டாளிங்களோட டொக்கு போட போயிருவாரு… அதுக்கு அப்புறம் நம்ம ஆட்சிதான். எல்லா சந்துலயும் பூந்து வருவேன். தாய்லாந்துல யாரும் யாரையும் ஏமாத்த மாட்டாய்ங்க. எல்லாருமே எஞ்சாய் மூட்ல இருப்பாய்ங்க. தாய்லாந்துங்கிறது சொர்க்கம்டா,” என்றான் ஒருமுறை.

“சூலியா லேன் மாதிரியா?”

“பத்து பதினஞ்சி சூலியா லேனுக்கு சமம்டா,” என்றான்.

அவன் சொல்வழியாக நான் அபாரமான ஒளி பிரகாசிக்கும் நகரம் ஒன்றைக் கற்பனையில் உருவாக்கிக்கொள்வேன்.

“எங்க பூந்தாலும் சரக்குங்க… எல்லா எடத்துலயும் ஆட்டம் பாட்டந்தான்,” அவன் சொல்லும்போதே ஆடுவான். போதை அதிகமாகிப்போனால் தாய்லாந்து பெண்களிடம் அவன் நிகழ்த்திய சாகசக் கதைகளைச் சொல்லத் தொடங்குவான். அவன் சொல்வதுபோலெல்லாம் ஹல்கினால் கூட செய்ய முடியாது எனத் தோன்றும். பெண்கள் விஷயத்தில் அத்தனை பராக்கிரமாசாலியாகத் தன்னை உருவகிப்பான்.

“ஒன்னோட மாமாவுக்கு நீ எங்கெல்லாம் போறன்னு தெரியுமா?” என்றேன் ஒருமுறை.

“அவரு போறதுந்தான் எனக்கு தெரியும்… அதுக்கு என்னா…” என்றான் அலட்சியமாக. அந்த அலட்சியத்துடன்தான் பணத்தையும் செலவு செய்வான்.

இவ்வளவு செய்யும் சரவணனுக்கு நான் செய்யும் பிரதிபலன் என்பது கேளிக்கை விளையாட்டுகளில் வென்றுக்கொடுப்பதுதான். இயல்பாகவே எனக்கு எதையும் குறிபார்த்து வீசும் திறன் இருந்தது. பினாங்கில் உள்ள களியாட்ட தெருக்களில் அதுபோன்ற கேளிக்கைகளுக்குப் பஞ்சமில்லை. தூரமாக இருக்கும் குடை ஆணியில் வளையங்களைப் போடுவது, விளையாட்டு துப்பாக்கியில் பரிசுப் பொருளுக்கான பொம்மை மனிதனைச் சுடுவது, சிறிய பந்துகளைச் சரியான எண் கொண்ட துவாரங்களில் உருட்டுவது என எல்லாவற்றிலும் எளிதாக வென்றுவிடுவேன். அவன் ஆசை பட்ட பைனாகுளார், காமிரா, ஹெட்ஃபோன், ப்ளூடூத் ஸ்பீக்கர், மினி ட்ரோன், பவர் பேங்க் என எதையெதையோ வென்று கொடுத்திருக்கிறேன்.

பெரும்பாலும் என் முதல் முயற்சிகள் தோல்வியில் முடியும். சில முறை கைப் பழகியப்பின்னர் அதில் உள்ள நுணுக்கத்தை அறிந்துகொள்வேன். எந்த லாவகத்தில் எவ்வளவு வேகமாக வீச வேண்டுமென கைக்குள் ஒரு மாயக்கட்டளை புகுந்திருக்கும். அதன்பின்னர், என் மூளையைக் கையிடமிருந்து முழுமையாக விடுவித்துவிட்டால் ஏதோ ஒரு வளையமோ பந்தோ குறி தப்பாமல் பரிசை எடுத்துவரும்.

நான் வெல்லும் ஒவ்வொருமுறையும் சரவணன் குதியாட்டம் போடுவான். தனக்குத் தேவையில்லாத பொருட்களைப் பேருந்தில் வரும் பயணிகளிடம் மலிவு விலையில் விற்றுத் தீர்ப்பான். அவனுக்குப் பணம் தேடுவதில் அலாதி சுகம் இருந்தது. என்னை உடன் வைத்திருக்க அதுதான் இரண்டாவது காரணம். அவன் தருவதை மட்டும் பெற்றுக்கொண்டு எதன் மீதும் கூடுதல் ஆசைப்படாமல் லாபமும் சம்பாதித்துக் கொடுக்கும் ஒருவனை யார்தான் விரும்ப மாட்டார்கள். எனவே சரவணன் எனக்குத் தன் அந்தரங்க கதைகளையெல்லாம் உற்சாகம்பொங்க கூறுவான். அந்தக் கதைகள் என் உடலை முறுக்கியெடுக்கும்.

சரவணன் சொல்வதையெல்லாம் செவிமடுத்துவிட்டு வீட்டுக்குச் செல்லும்போது யதார்த்தம் முகத்தில் வந்து அறையும். அம்மாவின் பரபரப்பும் வீட்டில் படிந்துகிடக்கும் பழமையும் மனதில் பிரகாசித்த தாய்லாந்தின் ஒளியின்மீது சாம்பலைப் பூசும்.

“எவ்வளோ நேரம் காத்திருக்கிறது…” என்றுதான் பேச்சையே தொடங்குவாள் அம்மா. அவள் எப்போதும் எனக்காக ஏதாவதொன்றுக்குக் காத்துக்கொண்டே இருப்பாள். பெரும்பாலும் அவள் போகும் வீட்டு வேலைக்கு என்னை மோட்டாரில் ஏற்றிப்போகச் சொல்வாள். என் விருப்பத்தைக் கேட்காமல் வாளியுடன் வந்து நிற்பாள்.

பள்ளியில் படித்தவரை அம்மா என்னை இதற்கெல்லாம் தொந்தரவு செய்ததில்லை. படிவம் ஐந்து சோதனை முடிவு வந்தபின்னர் ஒருவருடம் பொறுத்துப் பார்த்தாள். தமிழில் மட்டும் ‘ஏ’ எடுத்திருந்தேன். தேர்ச்சியடையாத மலாய், கணித பாடங்களை மட்டுமாவது மீண்டும் தேர்வெழுதும்படி பலமுறை கேட்டும் மறுத்துவிட்டேன். அதன்பின்னர்தான் அவள் என்னிடம் வேறு முகத்தைக் காட்டத் தொடங்கினாள். மறுவருடமே  கிட்டத்தட்ட அம்மாவுக்குச் சிறப்பு வாகன ஓட்டியாகவே மாறியிருந்தேன். ஏதாவது மறுத்தால் அவள் பேசும் வார்த்தைகள் காதுகளை அழுகிப்போக வைத்தன. பலவீட்டு மலத்தைப் பார்த்துப் பார்த்து அப்படி மாறிப்போனாளா தெரியவில்லை. இரவுவரை  அவள் முனகும் முனகலில் தண்டச்சோறு சாப்பிடுவதுபோல முதலில் ­நிம்மதிபோகும் பின்னர் உறக்கம்போகும்.

எஸ்.பி.எம் தேர்வில் சரவணன் என்னைவிட மோசமான புள்ளிகள் எடுத்திருந்தான்.  அதைப்பற்றியெல்லாம் அவனுக்கு எந்தக் கவலையும் இருக்கவில்லை. “மாமாவுக்கு என்னா புள்ளையா குட்டியா… அவருக்கு அப்புறம் எனக்குதாண்டா எல்லாம். என்னா ‘இதுக்கு’ நா பாஸ் ஆகணும்?” என ரிசல்டை கையில் ஆட்டிக்கொண்டே பேசினான். அம்மா என்னை வெலுத்தெடுத்த கதையையெல்லாம் நான் எனக்குள்ளேயே விழுங்கிக்கொண்டேன்.

பொதுவாகவே சரவணனிடம் நான் என்னைப் பற்றி எதையும் பகிர்வதில்லை. அவனிடம் பலரும் விலகியிருக்க விஷம்போல வெளிபடும் அவனது பரிகாசப் பேச்சு ஒரு காரணம். யார் என்ன ஜாதி என அவன் தெரிந்து வைத்திருந்தான். யார் வீட்டில் என்ன கார் பயன்படுத்துகிறார்கள் என்பது தொடங்கி, குடும்பத்தில் என்னென்ன வேலை செய்கிறார்கள் என்பதுவரை அறிவான். தன்னைப் பற்றிய சிறப்புகளைச் சொல்லும்போது அடுத்தவர் குறித்த பரிகாசமும் இயல்பாக அவன் சொல்லில் வந்து விழும். என் வறுமையை அவன் அறிவது நட்புக்குள் இளக்காரத்தை உருவாக்கும் எனத் தோன்றியதால் என் சிரமம் எதையும் அவனிடம் பகிர்ந்ததில்லை.

அப்பா இறந்த பின்னர் அம்மா மர ஆலையில் வேலை செய்கிறார் என்று மட்டுமே அவன் அறிந்து வைத்திருந்தான். நானும் மேற்கொண்டு எதுவும் சொல்லவில்லை.

அம்மா மர ஆலையில்தான் வேலை செய்தாள். அப்பா இறந்த பின்னர்தான் அவள் தன் வாழ்நாளில் முதன்முறையாக வேலைக்குச் செல்லத் தொடங்கினாள். மாலை ஐந்து மணிக்குத் தூசி படிந்த கூந்தலோடு வேலை முடிந்து திரும்பியவுடன் அவசரமாகக் குளித்துவிட்டு சீனர்களின் வீடுகளுக்கு வேலை செய்ய ஓடுவாள். கழிப்பறைகளைக் கழுவுவது, துணிகளை மடித்து அடுக்குவது, வீடு முழுக்க மோப் போடுவது என ஒவ்வொரு வீட்டுக்கும் வேலைகள் மாறுபடும். வாரம் முழுவதும் இதுபோன்ற பணிகள் ஒவ்வொரு வீட்டிலும் மாறி மாறி விழும். எல்லாம் முடி­ந்து இரவு வந்து குளித்துவிட்டு மறுநாளுக்கான சமையலை முடித்துவிட்டே படுப்பாள். அவள் விடும் குறட்டை சத்தம் என் அறை வரை கேட்கும். மறுநாள் எத்தனை மணிக்கு எழுவாள் எனத் தெரியாது. நான் கண்விழிக்கும்போது மேசையில் பசியாறை இருக்கும்.

சனி, ஞாயிறுகளில் சரவணன் அழைக்கும் இடங்களுக்குச் செல்ல முடியாமல் போக அம்மாவைப் பினாங்கு வரை வீட்டு வேலைக்காக ஏற்றிச் சென்று வர வேண்டும் என்பதுதான் காரணம் என்பதையும் அவனிடம் மறைத்து வைத்தேன்.

அம்மா வீட்டு வேலைகளுக்குப் போவது எனக்குச் சுத்தமாகப் பிடிப்பதில்லை. அடுத்தவர்கள் சேமித்து வைத்த கழிவுகளை அகற்றுவதையும் அவர்கள் களைத்துப்போட்டவைகளை நேர்செய்வதையும் நினைக்கும்போதே அவமானமாக இருந்தது. அம்மா எவ்வளவு உடல் நலமில்லாமல் தவித்தாலும் மர ஆலையின் தூசியில் வேலை செய்த சோர்விருந்தாலும் வார இறுதியில் பினாங்கு செல்ல வேண்டும் எனப் பிடித்தப் பிடிவாதமாக இருப்பாள். ஒருவாரம் தவறினாலும் தன் இடத்தை வேறொருவர் எடுத்துக்கொள்வார்கள் எனப் பதறுவாள். அவளோடு சேர்ந்து அலைவது எனக்குக் கடும் சோர்வைக் கொடுத்தது.

“ஒருவாரமாச்சும் ஒடம்புக்கு ரெஸ்ட்டு கொடும்மா…” என்றேன் ஒருமுறை. அதை அவளுக்காகவும் சேர்த்து சொல்வதைப்போல சொல்லி வைத்தேன்.

“நீ வந்து பாக்கணும். வெள்ளக்காரன் ஊட்டு கக்கூசுலகூட ஒக்காந்து சாப்புடலாம். பெருசா வேல இருக்காது. கொஞ்சம் தேச்சி உட்டாலே மேச நாக்காளிங்க பளபளன்னும். சீன ஜாதிங்களாட்டம் இல்ல… கணக்குப்பாக்காம காசு கொடுப்பான் வெள்ளக்காரன்,” என்றாள்.

அம்மா இப்படி ஏதாவது பேசினால் நான் மௌனமாகிவிடுவேன். அவள் கையை ஆட்டி பேசும்விதமே கடும் எரிச்சலைக் கொடுக்கும். அப்பா இருந்தவரை அப்படியில்லை. இரண்டு ஆண்டுகளில் மொத்தமாக மாறியிருந்தாள். கருமை ஏறிய முகமும் வெற்றிலை கரை படிந்த வாயும் நிரந்தரமாகிவிட்ட வியர்வை வீச்சமும் என்னை அவளிடமிருந்து எப்போதும் அந்நியப்படுத்தியது. சரவணன் எப்போதுமே அவளைப் பார்த்துவிடக்கூடாது என எண்ணிக்கொள்வேன். ஆனால் அவள் எது குறித்தும் கவலையில்லாமல் விளக்கமாற்றைத் தட்டிக்கொண்டு மிடுக்காகவே நடந்து செல்வாள். அம்மா வேலை செய்யும் வீடுகளில் என் முகத்தை ஒருபோதும் காட்டியதில்லை. அங்கிருந்து எடுத்து வரும் மிச்சப்பட்ட உணவுகளை ஒருமுறைகூட வாயில் வைத்ததில்லை. அவர்கள் கருணையுடன் கொடுக்கும் பழைய உடைகளைத் தொட்டுக்கூட பார்த்ததில்லை.

அம்மா வெளியே வரும்வரை எங்காவது மரத்தடியில் மோட்டாரில் சாய்ந்து அமர்ந்தபடிக் காத்திருப்பேன். எந்த உதவிக்கும் என்னைக் கூப்பிடாதவரை நிம்மதி என நினைத்துக்கொள்வேன். அம்மா நடந்து வருவதைத் தூரத்தில் இருந்தே தெரிந்துகொள்ளலாம், பூமி அதிர அடிவைப்பாள். வந்தவுடன் துப்புறவு பணிக்கான பொருட்களை மோட்டார் சைக்கிளின் கூடையில் ஏற்றுவாள். பின்னால் ஏறி எதையோ சாதித்தவள்போல அமர்பவளின் உடலில் இருந்து வீசும் வியர்வையின் துர்வாடை காற்றில் எதிர்திசையை வென்றுச் சூழக்கூடியது.

அம்மா யாருக்கும் கட்டுப்படுபவள் அல்ல. நான்காண்டுக்கு முன் அப்பா இறந்தப்பின் அவள் மூர்க்கம் அதிகரித்திருந்தது. ஒருமுறை இனி வீட்டு வேலைக்கெல்லாம் ஏற்றிப்போக மாட்டேன் எனச் சொல்லவும் “போடா பொண்ணப்பயலே” என பொருட்களைத் தூக்கிக்கொண்டு பஸ் ஏற சென்றுவிட்டாள். பேருந்தில் என் நண்பர்கள் யாரேனும் பார்த்துத் தொலைத்துவிட்டால் வேறுரோதனையே வேண்டாம். அவளைச் சமாதானப்படுத்தி முடிக்க என் நாக்கு ஓய்ந்துவிட்டது. காதுகள் சவமாகியிருந்தன. அப்படிப்பட்டவளிடம் வரும் வாரம் சனி, ஞாயிறு வீட்டில் இருக்க மாட்டேன் எனச் சொல்வதற்கே பெரும் போராட்டமாகிப்போனது.

“யேன்… தொர எங்க புழுத்த போவணும்?” என்றாள் இளக்காரமாக.

“வேல தேட போறேன்,” என்றேன்.

“ஓ… பரவால ரெண்டு வருஷமா இல்லாத பொறுப்பு இப்ப வந்திருச்சி புள்ளைக்கு,” என்றாள் கிண்டலாக.

“இண்டர்வியூவுக்கு சிங்கப்பூர் போகணும்,”

“ஏன்டா அவ்வளோ தூரம்?”

“கூட்டாளி வேல பாத்து கொடுக்குறான்,”

“ஒழைக்க வேண்டிய வயசுல ஒழைக்கணுந்தான். உன்னைய நீ பாத்துக்கிட்டா போதும்… எனக்கு மர கேலாங் இருக்கு. அங்கயும் வேல போச்சினா வாளியும் வெளக்கமாரும் இருக்கு… நீ போடப்போற சோத்த நம்பி நா இல்ல!”

அதையெல்லாம் பொறுத்துக்கொண்டுதான் “காசு வேணும்…” என்றேன். வேலை சிங்கப்பூரில் எனக் கூறி தாய்லாந்துக்குச் செல்ல பாஸ்போர்ட்டை தயார் செய்து முடிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.

அதற்குள்ளாகவே அம்மா வேலைக்குப் போகும் வீடுகளில் சிங்கப்பூரில் என்னென்ன வேலை வாய்ப்புகளெல்லாம் உள்ளன எனக் கேட்டுத் தெரிந்துகொண்டு என்னிடம் ஒப்புவித்தபடி இருந்தாள். நான் ஆங்கில மொழியில் தேர்ச்சி அடைந்துள்ளதால் சிங்கப்பூரில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது என்பது தொடங்கி, என்னென்ன நிறுவனங்களில் முயற்சிக்கலாம் என்பது வரை பட்டியலிட்டாள்.

அம்மாவின் இந்தத் திறன்தான் என்னை அச்சம் கொள்ள வைப்பது. சுத்தமாகப் படிப்பு இல்லாவிட்டாலும் எல்லாவற்றையும் மிக இலகுவாகக் கிரகித்துவிடுவாள். சில சமயம் அவள் கொச்சை வாயில் இருந்து ஆங்கில வார்த்தைகள் கூட வரும். இல்லாவிட்டால் அப்பா விட்டுச்சென்ற அத்தனை கடனையும் ஒரே வருடத்தில் எப்படிக் கட்டி முடித்திருக்க முடியும்? எனவே நான் தாய்லாந்து செல்வது அம்மாவுக்குத் தெரியக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தேன். சிறிய துருப்பு கிடைத்தாலும் எல்லாவற்றையும் தோண்டி துருகி விடுவாள்.

பாஸ்போர்ட் கைக்கு வந்த பின்னர்தான் சரவணனிடம் நான் வருவதை உறுதிப்படுத்தினேன். “தெறிக்க உடுறோம் மச்சோ!” எனத் தோளைப்பிடித்து உலுக்கினான்.  

நான் அறிமுகமான நாளில் இருந்தே சரவணன் எனக்கு இப்படியொரு வாய்ப்பை வழங்கியபடியே இருந்தான். அவன் மாமாவின் பேருந்தில் உதவியாளன் எனும் பெயரில் ஏறிக்கொள்ள வேண்டியதுதான். வாடிக்கையாளர்களை அழைத்துச் செல்லும் பேருந்து ஓட்டுநருக்குத் தங்கும் விடுதியில் அறை ஒன்று இலவசமாகக் கிடைக்கும். அதில் தங்கிக்கொள்ளலாம். அவன் மாமா அறை பக்கம் விடியும்வரை வர மாட்டார் எனத் தலையில் அடித்து சத்தியம் செய்தான்.

பயண செலவையும் தங்கும் செலவையும் பற்றிய கவலை இல்லாவிட்டாலும் பாஸ்போர்ட் எடுக்க வேண்டும் என்பதே பெரும் அவதியாக இருந்ததால் அவ்வாய்ப்பைத் தள்ளி போட்டபடி இருந்தேன்.

தாய்லாந்தில் அத்தனை செலவும் தன்னுடையது என சரவணன் சொல்லியிருந்தாலும் எனக்கு அதில் உடன்பாடில்லாமல் இருந்தது. கையில் கொஞ்சம் காசிருந்தால் எனக்கானவற்றை நிறைவேற்றிக்கொள்ளலாம் என நினைத்தேன். அவன் முதலாளி போலவும் நான் அவனுக்கு அடிபணிந்தவன்போலவும் இருப்பதில் எனக்கு அவ்வளவு விருப்பம் இல்லாமல் இருந்தது. பேருந்தில் ஏறியபோது கையில் இருநூறு ரிங்கிட்டுடன் வந்திருக்கிறேன் எனத் தெரிந்தபோது நக்கலாகச் சிரித்தான். விரல்களைச் சூப்பிக்காட்டி “இதுக்குக்கூட பத்தாது,” என்றான்.

கோபத்தை அடக்கிக்கொண்டு, என்னால் இதற்குள் என் செலவுகளைப் பார்த்துக்கொள்ள முடியும் என்றபோது மீண்டும் சிரித்தான். பயணத்தின்போது “காச பத்தி கவல படாத மச்சோ… ஒனக்கும் சேத்துதான் நா எடுத்து வந்திருக்கேன்,” என்றவனிடம் “இல்லடா நானே பாத்துக்குவேன்,” எனச் சொல்லிவிட்டேன். அந்த உறுதியெல்லாம் மியாவைப் பார்த்தவுடன் உடைந்து நொறுங்கியது.

பேருந்து ஓட்டுநர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறை சுமாராகவே இருந்தது. சரவணனின் மாமா அதிகம் பேசாதவராக இருந்தார். அவரது துணிப்பையை மட்டும் அறையில் வைத்துவிட்டு உடல் முழுவதும் வாசனைத்திரவியத்தைக் கொட்டிக்கொண்டு வெளியேறினார். அவர் போன பிறகும் அதன் மணம் அறையைச் சுற்றிக் கொண்டிருந்தது.

“இதுக்கு மேல நம்ம ஆட்சிதான்,” என்ற சரவணன் பரபரவென அவ் நாங் தெருவைச் சுற்ற தயாரானான். எனக்குள்ளும் உற்சாகம் தொற்றிக்கொண்டது.

அவ் நாங் தெருவை நெருங்கும் முன்னரே இசையின் இரைச்சல் வந்தடைந்தது. அதுவே ஒருவித கொண்டாட்ட மனநிலைக்கு இட்டுச் சென்றது. சரவணன் மெல்ல தலையசைக்கத் தொடங்கி பின்னர் நடையையே நடனம்போல மாற்றிக்கொண்டான்.

அவ் நாங் வீதி மனித உடல்களாலும் விளக்கொளிகளாலும் ததும்பி வழிந்துகொண்டிருந்தது. கட்டடங்களில் மின்திரைகள் நிமிடத்திற்கொரு விளம்பரத்தை ஒளிபரப்பின. தெருவின் இருபக்கமும் ஏராளமான மதுபான விடுதிகளும் டிஸ்கோ கிளப்புகளும் இருளும் ஒளியும் கலந்த பரவசத்தைப் பரப்பின. அதன் வாயிலில் கவர்ச்சியான உடையில் நின்றுக்கொண்டிருந்த பெண்கள், எங்களை உள்ளே வருமாறு இன்முகத்துடன் வரவேற்றபடி இருந்தனர். சிலர் ஓடிவந்து தோளில் கைவைத்தபோது நெளிந்தேன். முகத்தில் அரையும் திரவியங்களின் வாசனை. உடம்புப்பிடி நிலையங்கள் பஞ்சமில்லாமல் பரவிகிடந்தன. அரைமார்பு தெரிய அதில் பணிபுரியும் பெண்கள் ‘உள்ளே வா அன்பே’ எனச் சிணுங்கினர்.

சரவணன் எதையும் பொருட்படுத்தாமல் அவன் துள்ளல் நடையிலேயே தெருவைக் கடந்தபடி இருந்தான். ஆங்காங்கே நின்று இது நல்லா இருக்கும் எனத் தெருவோர உணவுகளை வாங்கிக்கொடுத்தான். ‘பேட் தாய்’ எனும் நூடுல்ஸ் எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. புளிப்பு, இனிப்பு, உவர்ப்பு, காரமென எல்லாம் கலந்திருந்திருந்தது. ‘சாம் டாம்’ எனும் காரசாரமான பப்பாளி சாலட்டை கொஞ்சம் வாயில் வைத்தேன். ‘பனானா நட்டேலா’ ரொட்டியை இரண்டு முறை வாங்கிச் சாப்பிட்டேன். உணவு உள்ளே இறங்கியதும் ஊர் எனக்கு நெருக்கமானது. அதன் பின்னர் என் நடையிலும் துள்ளல் இணைந்திருந்தது.

தெருவின் இருபக்கமும் பார்க்க ஏராளமான காட்சிகள் இருந்தன. ‘மூய் தாய்’ குத்துச்சண்டை போட்டி ஒன்று பெரும் ஆரவாரத்துடன் நிகழ்ந்துகொண்டிருந்தது. கஞ்சா இலைகளின் படம் அச்சாகியிருந்த கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. சரவணன் அப்படி ஒரு கடையில் சிகரெட் வாங்கி இழுத்தான். எனக்கு சிகரெட் இழுத்து பழக்கமில்லை என்பதால் வேடிக்கை மட்டும் பார்த்தேன். அந்தப் புகையின் கசந்த வாடையை முகந்தறிந்த பின்னர்தான் அவ் நாங் தெருவே இனிப்பும் மந்தகாரமும் கலந்த கஞ்சா புகையால் நிறைந்திருப்பதை உணர்ந்தேன். சரவணன் கூடுதல் மகிழ்ச்சிக்குள் நுழைந்தான். அவனுக்குள் இணைந்து நடக்கும்போது நானும் செயற்கையான போதையை வரவழைத்துக்கொண்டேன்.

தெருவின் உட்புறம் செல்லச் செல்ல இருபக்கமும் பெண்கள் பிரதானமாக இருந்தனர். கறுப்பு நிற கதவுகளால் மூடப்பட்ட கிளப்புகளின் வெளிப்புறம் கம்பியைப் பிடித்துக்கொண்டு சுழலும் பெண்களின் படங்கள் ஒட்டப்பட்டிருந்தன. இடையிடையே கவர்ச்சியான குளியல் உடைகளும் யானை சித்திரங்கள் பொறிக்கப்பட்ட கால்சட்டைகளும் கைவினைப் பொருட்களும் பாலியல் வஸ்துகளும் தெருவில் இறைத்து விற்கப்பட்டன.

சுற்றிச் சூழ்ந்திருந்த இரைச்சல்களுக்கு நடுவில் சரவணன் கேட்டான், “அதெல்லாம் பாத்து ஆச வருதா?”

“நல்லா இருக்குமாடா?” ஆர்வமாகக் கேட்டேன். பணத்தை அவசியமற்ற இடங்களில் இறைக்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்.

“ஒடம்புல ஒன்னுமே இல்லாம ஆடுவாளுங்க,” எனப் புருவத்தை இருமுறை உயர்த்தினான்.

“பாக்கலாண்டா” என்றேன்.

“அவசர படாத… எல்லாத்துலயும் பூந்து பாத்துருக்கேன். எங்க காசு புடுங்குவாயிங்க… எங்க ஷோ செம்மையா இருக்குமுன்னு எனக்குத் தெரியும்,” என கழுத்தைச் சாய்த்து இமைகளை மடக்கினான்.

கிட்டத்தட்ட அவ் நாங்ஙின் அத்தனை மூலை முடுக்குகளிலும் நுழைந்து வந்தப் பின்னர் சரவணன் ஒரு படிக்கட்டில் ஏறினான். அதன் வாசலில் ‘Thai Girls Show’ என எழுதப்பட்டிருந்தது. “தாய் கெர்ள்ஸ் ஷோவதான் டைகர் ஷோன்னு நம்ம ஆளுங்க சொல்றாயிங்க,” எனக் கூறி சிரித்தவன் முகப்பில் பணம் செலுத்தச் சென்றான். “எனக்கு நா காசு கட்டிக்கிறேன்,” என்றபோது ‘உன் இஷ்டம்’ என்பதுபோல கைகளை விரித்தான்.

மலேசியப் பணத்தில் நூற்று பத்து ரிங்கிட் செலவானது. உள்ளே நுழைந்தபோது  ஏற்கனவே கூட்டம் நிறைந்திருந்தது. வெண்பட்டு நிறத்தில் ஆங்காங்குத் திரைச்சீலைகள் தொங்கின. அரங்கில் மூலைக்கு ஒன்றாக உருளை இரும்புத்தூண்கள் ஊன்றப்பட்டிருந்தன. கைப்பேசியை ஒருபோதும் வெளியே எடுக்கக் கூடாது என்றும் நிழற்படம் பிடிக்கக் கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுக்கொண்டே இருந்தது. ஆங்காங்கு முரட்டுத்தனமான ஆடவர்கள் கூட்டத்தை முறைத்தபடி நின்றுக்கொண்டிருந்தனர்.

அரங்கின் ஒளி மங்கவும் மேடை மேலும் பிரகாசமானது. சிவப்பு நிறத்தில் உள்ளாடை மட்டும் அணிந்திருந்த தாய்லாந்து அறிவிப்பாளன் ஒருவன் மேடைக்கு வந்து மைக்கில் உற்சாகத்துடன் முழங்கினான். உறுதியான உடல்காரன். அவனது ஆங்கிலம் துண்டுத்துண்டாகக் காதில் விழ, அதை சேர்த்துக்கோர்த்து ஒருவாரு சொல்வதை ஊகித்துக்கொண்டேன். அவன் அகன்றதும் மேடையில் ஐந்து பெண்கள் மேலாடையின்றி தோன்றினர். சரவணன் உற்சாகமாகக் கைத்தட்டினான். நான் கொஞ்சம் தடுமாறித்தான் போனேன். எந்த முன் தயாரிப்பும் இல்லாமல் இருக்கும்போது மாமிசம் குவிந்த பிரியாணியை முகத்துக்கு நேரே வைத்த நீட்டினால் ஏற்படும் ஒவ்வாமை முதலில் எதிர்க்கொண்டது. அப்படிப் பளீர் என அரைநிர்வாணமாகத் தோன்றும் உடல்களை எதிர்க்கொள்வதில் கொஞ்சம் சங்கடம் இருந்தது. செலுத்திய பணத்திற்குள் உள்ளடக்கி வழங்கப்பட்ட டக்கிலாவை ஒரு ஷாட் பருகினேன். சரவணன் அதற்கான பயிற்சியை முன்னரே வழங்கியுள்ளான்.

ஒரு சிட்டிகை உப்பை விரல்களில் பிடித்துக்கொண்டு மற்றுமொரு கையில் எலுமிச்சையை நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். முதலில் உப்பைக் கொஞ்சம் நக்கிக்கொண்டு ஒரே மூச்சில் டக்கிலாவை குடிக்க வேண்டும். அடுத்த நொடியே எலுமிச்சை துண்டைக் கடிக்க வேண்டும். எத்தனை முறை சொல்லிக்கொடுத்தும் எனக்கு அந்த நுணுக்கம் கைவந்ததில்லை. எழுமிச்சையைக் கடித்து, உப்பை நக்கி, டக்கிலாவை வாயில் ஊற்றிக்கொள்வேன். சில சமயம் டக்கிலாவைக் குடித்துவிட்டு உப்பை நக்குவேன். சரவணனுக்கு இந்தக் குழப்பமெல்லாம் இல்லை. அவன் இந்த வழிமுறையை ஒரு நடனம் போல நிகழ்த்துவான்.

அன்றும் அப்படித்தான் தடுமாறினேன். கிளாஸின் முனையில் தடவப்பட்டிருந்த உப்பை உள்வாங்காமல் கப்பென பருகினேன். அந்தச் சூழலில் எரிச்சலான போதைக்குள் புகுந்துகொள்வது தேவையாக இருந்தது.

ஐந்து பெண்களும் நெடுநேரமாக தங்கள் அங்கங்களைத் தாங்களே தடவிக்கொண்டு ஆங்காங்கு ஊன்றி வைக்கப்பட்டிருந்த உருளை இரும்பைப் பிடித்தபடிச் சுழன்று கொண்டிருந்தனர். இசையின் தீவிரம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ஒருத்தி அந்த உலோகக் கம்பியை இறுக்கப்பற்றி இசையின் கனமான அதிர்விற்கேற்ப இடுப்பை எட்டு வடிவத்தில் சுழற்றத் தொடங்கினாள். உடலின் ஒவ்வொரு வளைவிலும் மின் விளக்குகளின் வெளிச்சம் மின்னலென பளபளத்தது. அவள் மெதுவாகக் கீழே சரிந்து, தரை தொடக் குனிந்து, பின் தலைமுடியைப் பின்னோக்கி வீசி நிமிர்ந்தபோது அரங்கம் கைத்தட்டியது. தொடர்ந்து சிவப்பு நிற உள்ளாடை அணிந்தவன் ஒவ்வொரு அறிவிப்பாகச் செய்ய அதற்கேற்ப அப்பெண்களில் ஒவ்வொருத்தியும் நடனமாடத் தொடங்கினாள். ‘இன்வெர்ஷன்’ என்றவுடன் கம்பியில் தலைகீழாகத் தொங்கினாள் ஒருத்தி. ‘ஹிப் சர்க்கல்’ என்றவுடன் ஒருத்தி இடுப்பை எட்டு வடிவில் சுழற்றினாள். ‘டுவர்க்கிங்’ என்றவுடன் பிட்டத்தை அதிரவிட்டாள் ஒருத்தி, ‘ஆர்ச்சிங்’ என்றதும் இன்னொருத்தி முதுகைப் பின்னோக்கி வளைத்து மார்புப் பகுதியை உயர்த்திக்காட்டினாள். இப்படி ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு அசைவுகள் செய்துகொண்டிருக்கும்போது நான் கிட்டத்தட்ட கூச்சத்தைத் துறந்திருந்தேன். என் உடலில் காமம் எழுவதற்கான எந்த அறிகுறியும் இல்லாததே வியப்பாக இருந்தது.

கிட்டத்தட்ட அந்த இடமே குதூகலத்தாலும் உற்சாகத்தாலும் பொங்கிக்கொண்டிருந்தபோது உள்ளாடைகாரன் ஓர் அறிவிப்பு செய்தான். “இனிதான் எங்கள் பெண்ணின் அசாதாரண சாகசக் காட்சிகளைப் பார்க்கப் போகிறீர்கள். இதுபோன்ற சாகசத்தை வேறு எங்குமே பார்க்க முடியாது. இந்த கெராபி தீவில் எங்குமே காண முடியாத சாகசம், ஆம்! எங்கள் குழுவின் ராணி அவள். இதோ அரங்கில் நுழைகிறாள் மியா!” என்றவுடன் சிவப்பு நிற துணியைச் சுற்றிக்கொண்டு ஒரு பெண் உள்ளே நுழைந்தாள். அரங்கில் உள்ளவர்களை அத்தனை கர்வமாகப் பார்த்தவள் சட்டென தன் சிவப்பு நிற துணியைப் பறக்கவிட்டாள். அந்நேரத்தில் அறிவிப்பாளன் சரியாக அவளை ‘எங்கள் ராணி மியா’ என அறிமுகம் செய்தான். அவள் முழு நிர்வாணமாக இருப்பதைப் பார்த்து அரங்கம் அதிர்ந்து கைத்தட்டியது. அப்போதுதான் கவனித்தேன். அங்கிருந்த ஒருத்தியும் அவள் உடல் வடிவுக்கும் அழகுக்கும் நிகராக இல்லை. மின் விளக்குகள், சூரியன் வந்ததும் மலுங்கியதுபோன்ற காட்சி மாற்றம். அல்லது அப்படியானவர்களைத் தேர்ந்தெடுத்து நிறுத்தினார்களா என்றும் தெரியவில்லை.

அசாதாரண ஓவியனின் விரல்கள் உன்மத்த நிலையொன்றில் கீறிச்சென்ற கோடுகள்போல அவள் உடல் வளைவுகளில் அத்தனைக் கச்சிதம் தெரிந்தது. அவ்வளவுதான் என்பதுபோல மார்பும் பிட்டமும் அளவாகப் பொருந்தியிருந்தன. இளஞ்சிவப்பு நீர் மொட்டுகள். அதே வண்ணத்தில் உதடுகள்.

ஐந்து பெண்களும் பணிவாக அவளைச் சுற்றிக்கொண்டு நின்றனர். இப்போது ஒவ்வொரு பெண்ணின் கையிலும் ஒவ்வொரு பொருட்கள் இருந்தன. முதல் பெண் ஒரு நீல வண்ண பலூனை உயர்த்திப் பிடித்தாள். மியாவிடம் ஒரு சிறிய ஊதுகுழல் கொடுக்கப்பட்டது. அதை பிடித்துக்கொண்டு வளைந்து நெளிந்து நடனமாடியவள் அதனுள் அம்பு போன்ற ஒன்றை நுழைத்தாள். மந்தகாசச் சிரிப்புடன் அதன் ஒரு முனையைத் தன் யோனியில் வைத்தாள். அடுத்த நொடி அந்தக் குழலில் இருந்து அம்பு புறப்பட்டு மிகச்சரியாக பலூனைத் தாக்கி உடைத்தது. அரங்கம் ‘வாவ்’ எனக் கைத்தட்டியது. ஆங்கிலேய இளைஞர்கள் சிலர் உற்சாகம் மிகுதியால் எழுந்து நின்றனர். மற்றுமொரு பெண் ஒரு குச்சியைத் தன் கையில் பிடித்திருக்க மியா தன் மார்ப்புக் காம்பில் சிறிய வளையம் ஒன்றை மாட்டினாள். மூச்சை இழுத்து நளினமாகச் சுழன்ற அவள், மேலுடலை ஓர் உலுக்கு உலுக்கவும் வளையம் மிகச்சரியாக அந்தக் குச்சியினுள் சென்று விழுந்தது. மீண்டும்  ‘ஊ’ சத்தம்.

மியா அரங்கில் உள்ள யாரையும் கவனித்துப் பார்க்கவில்லை. ஒவ்வொரு சாகசத்திற்கும் இடையிலும் தன்னுடலைக் கொண்டாடி நடனமாடினாள். அந்த நடனத்தின் இடைவெளியில் அடுத்த பெண்ணிடம் சென்றாள். அப்படி மூன்றாவது பெண்ணை நோக்கித் திரும்பியபோதுதான் அவளது இடுப்பில் குத்தியிருந்த பச்சையைக் கவனித்தேன். “ஸ்பேட் ராணி,” என்றேன் ­.

சரவணன் அவள் உடல் நளினத்தை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தான். நான் அவனைக் கூர்ந்து பார்த்தபோது “முதுகு யாருக்காச்சும் இவ்வளோ அழகா இருக்காடா… எத்தனையோ வாட்டி இவள இப்படி பாத்துட்டேன்… சலிக்கல” என்றான்.

நான் மீண்டும் ‘ஸ்பேட் ராணி’ என்றேன்.

சீட்டுக்கட்டில் இருக்கும் ஸ்பேட் ராணி எனக்கு ஈர்ப்பானவள். ஒரு கட்டில் இருக்கும் நான்கு ராணிகளில், அவள்கையில் மட்டுமே செங்கோல் இருக்கும்.சீட்டாட்டப் பிரியர்களே கருநிறமான இந்த ராணி கிடைத்தால் அச்சத்தில் தடுமாறுவதைப் பார்த்திருக்கிறேன். சீட்டாட்டத்தில் அவள் உள்ளே நுழையும்போது எதிராளிகளின் திட்டங்கள் முழுமையாக மாறிவிடும்.மியாவின் இடுப்பில் ராணி கருநீல வண்ணத்தில் சங்கமித்திருந்தாள். கருநீல கிரீடத்துடன் பக்கவாட்டில் பார்த்தபடி இருந்தாள். வலது பக்க மேல் மூலையிலும் இடது பக்க கீழ் மூலையிலும் ஸ்பேட்ஸ். மியாவின் அசைவில் ஸ்பேட் ராணி அரங்கத்தினரை அலட்சியமாகப் பார்ப்பதுபோல இருந்தது.

“எவனுக்கும் கட்டுப்பட மாட்டேன். என்னோட ஆளுமைக்குக் கட்டுப்பட்ட ஆண் மட்டும் படுக்க வரலாங்கிறா. என்னடா பாக்குற… ஒவ்வொரு டாட்டுவுக்கும் ஒரு அர்த்தம் இருக்கு… எங்க குத்தியிருக்காளுங்கன்றத பொருத்து,” சரவணன் கிசுகிசுத்துக்கொண்டிருக்கும்போதே “ஓ…” வெனசத்தம் கேட்டது.

விழி உயர்த்தி அவளை மீண்டும் பார்த்தேன். சிவப்பு நிற வைனை வாயிலிருந்து கொப்பளிக்க கொப்பளிக்க நான்கைந்து கிளாஸ்களில் சிந்திக்கொண்டிருந்தாள். “வைன மொதல்ல அது வழியா ஊத்துனாடா…” என சரவணன் என்னை வியப்புடன் நோக்கினான். ஊற்றப்பட்ட வைன் கிளாஸூகளை விலை கொடுத்து வாங்கிப் பருக இளைஞர் கூட்டம் முந்தியது. சிவப்பு உள்ளாடைகாரன் ஏலம்போல ஒன்றை நிகழ்த்தி அதிகத் தொகை கொடுத்த நால்வருக்கு வழங்கினான்.

எனக்குத் தலையே சுற்றியது. இதுவெல்லாம் எப்படிச் சாத்தியம் எனக் குழம்பினேன். அப்போதுதான் சிவப்பு உள்ளாடைகாரன் ஓர் அறிவிப்பு செய்தான். “இப்போது நீங்களும் சாகசத்தில் ஈடுபடலாம். சாகசத்தில் வெல்பவர்களுடன் மியா ஒரு முழுநாளைக்கழிப்பாள்,” என்றவுடன் ஆண்கள் உற்சாகமாகக் கைத்தட்டினர். ஆங்கில இளைஞர் குழு “யெஸ் யெஸ் யெஸ்” எனக் கூச்சலிட்டது.

மியா மீண்டும் நடனமாடினாள். எப்படி உடலை மடக்கினாள் தான் கவர்ச்சியாகத் தெரிவோம் என அவளுக்குத் தெரிந்திருந்தது. ஆட்டத்தினூடே தரையில் அமர்ந்து மல்லாக்கப்படுத்துக்கொண்டாள். அப்போதும் அவள் கவர்ச்சியாகத்தான் தெரிந்தாள்.

சிவப்பு உள்ளாடைக்காரன் அவளது தொப்புளில் நீண்ட கழி ஒன்றை வைக்க, அவள் அதை வலதுக்கையில் பிடித்துக்கொண்டாள். இப்போது அரங்கில் உள்ளவர்களில் யார் வேண்டுமானாலும் பணம் கொடுத்து வளையம் ஒன்று வாங்கலாம். அதை சரியாக அந்தக் குச்சியினுள் வீச வேண்டும், ஒருவர் எத்தனை வளையம் வேண்டுமானாலும் வாங்கலாம். எத்தனை முறை வேண்டுமானாலும் வீசலாம். ஆனால் ஒரு வளையத்தின் விலை மலேசிய மதிப்புக்கு முன்னூறு ரிங்கிட்.

விலையைக் கேட்டதும் நான் வாயைப் பிளந்தேன். ஆனால் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சரவணன், “இதுக்குதான் உன்னைய இங்க கூட்டி வந்தேன், என்னோட எத்தனையோ முன்னூறு போச்சி… இப்ப நீ எனக்காக வளையம் போடுற… மியாவ நான் மடியில போடுறேன்,” என்றான்.

நான் கொஞ்ச நேரம் அவனைப் பார்த்து தயங்கிவிட்டு, “எனக்கும் ஒரு வளையம் வேணும்…” என்றபோது அவன் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. இரண்டு வளையங்கள் வாங்கினான். அதை கைகளில் சிறிது நேரம் சுழற்றிக்கொண்டிருந்தவன் “மொத போடுறது ஒன்னோட வளையம்… அடுத்தது என்னது… ஒகெவா?” என்றான். எனக்கு அவன் எண்ணம் புரிந்தது. மௌனமாகத் தலையசைத்தேன்.

நாங்கள் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் ஆண்கள் பலரும் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் நின்று வளையங்களை வீசி ஏமாற்றத்தில் தத்தம் கைகளையும் தலையையும் தங்கள் நண்பர்களின் முதுகையும் குத்தியபடி இருந்தனர். ஆங்கிலேயர்கள் கணக்கில்லாத வளையங்களை வாங்கி கைகளில் வளையல்போல மாட்டிக்கொண்டு முயன்றனர். யாரும் யாரையும் அவசரப்படுத்தவில்லை. என் முறை வந்தது. சரவணன் மீண்டும் சொன்னான். “நல்லா கேட்டுக்க… மொதல்ல போடுறது ஒன்னோடது”

நான் நிதானமாக அவளைக் கவனித்தேன். மியா அசையாமல் அப்படியே குச்சியைப் பிடித்திருந்தாள். ஆழ்ந்த நித்திரையிலோ தியானத்திலோ இருப்பதுபோல கண்களை மூடியிருந்தாள். முகத்தில் சலனமில்லை. கால்கள் இரண்டும் ஒட்டிக்கிடக்க தொடைகள் திரண்டு மிளிர்ந்தன. தூய பாதங்கள். எனக்கு எந்தக் கூச்சலும் கேட்கவில்லை. நானும் ஸ்பெட் ராணியும் மட்டும் அங்கிருப்பதாக ஒரு நிதானம். அப்போது நான் வீசியது திருவடி தொண்டன் ஒருவன் மகாராணியை நோக்கி பூஜித்த ஒற்றை மலர் மட்டுமே. அடுத்த நொடி ஆரவாரம் அவ்விடத்தையே பிளந்தது.

“போட்டி முடிந்தது. பல மாதங்களுக்குஅப் பிறகு ஒருவன் சரியாக வளையத்தை வீசியிருக்கிறான். எங்கள் ராணியை அடைந்துள்ள ­அதிஷ்டசாலி,”

நான் மிச்சமிருந்த மற்றுமொரு வளையத்தைச் சரவணனிடம் தயங்கியபடி நீட்டியபோது அவன் பார்வையில் எரிச்சல் இருந்தது. அதை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்த முயன்றான். மியா தன் சிவப்பு துணியை ஒரு பட்டாடைப் போல போத்திக்கொண்டாள். என்னை நோக்கி கைகளை நீட்டவும் இறங்கிச்சென்று மென்மையாகப் பற்றினேன். வெண்பட்டுத் திரைக்குப் பின்னால் என்னை அழைத்துச் சென்று அரங்கின் கூச்சலில் இருந்து விடுவித்தாள்.

அப்போதுதான் முதன்முறையாக அவளிடம் கேட்டேன், “நீ செய்த சாகசத்தின் தந்திரம் என்ன?”

மியா தன்னுடல் முழுவதையும் விசேஷ திரவம் ஒன்றைத் தொட்டு துடைத்து முடித்திருந்தாள். நிதானமாக என்னருகில் வந்து ஒளிராத உடல் கொண்டவளாக நின்றாள். “இப்போது நீ விரும்பினால் என்னுடன் வந்து குளியறையில் இணையலாம்,” என்றாள். சட்டென பார்க்க யாரோபோல தெரிந்தாள்.

என் மனதில் தீராத கேள்விகள் மோதிக்கொண்டிருந்தன. அதன் முடிச்சுகளை அவிழ்க்காவிட்டால் அவள் உடல் ஒரு வினோத தந்திரமாகவே எனக்குத் தோன்றுமென தயங்கினேன். தந்திரத்தை நான் எப்படிக் கையாள்வது? அதன் மர்மங்கள் உடையும்வரை அவள் மகாராணியாகவும் நான் அடிமையாகவும் மட்டுமே கூட முடியுமெனத் தோன்றித்தடுத்தது.

நான் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டேன்.

அவள் நிதானமாக என் பக்கத்தில் அமர்ந்தாள். கனிவாக என்னைப் பார்ப்பதுபோல இருந்தது.

“என் உடலில் எந்த ஆச்சரியமும் இல்லை. அல்லது எல்லா பெண்களின் உடலும் ஆச்சரியமானதுதான். அவர்களால் மட்டுமே அன்பின் பொருட்டு இவ்வுடலை என்னவாகவும் மாற்ற முடிகிறது,” என்றாள்.

எனக்கு அந்நிமிடம் உடலில் ஒரு பதற்றம் தொற்றிக்கொண்டது. அவளைக் கூர்ந்து பார்த்தேன். மையும் உதட்டுச்சாயமும் மினுமினுப்பும் இல்லாமல் இப்போது அவள் எனக்குச் சாதாரண பெண்ணாகவே தெரிந்தாள். பினாங்கில் சாலையோரம் நின்றபடி “என் கடைக்கு வா இளைஞனே” எனக் கெஞ்சும் சாதாரணப் பெண்.

அவளிடம் பின்னர் குளிப்பதாகக் கூறினேன். சிரித்தாள். எழுந்து நின்று என் முன் துண்டை அவிழ்ந்து வீசினாள். நான் தலையைக் குனிந்துகொண்டேன். அதே நிதானத்துடன் குளியலறைக்குச் சென்றவளை வலப்புறக் கண்ணாடியில் பார்த்தேன். ஸ்பேட் ராணி கருமை நிறத்தில் தெரிந்தாள். அவள் கையில் இருந்தது செங்கோலில்லை எனத் தோன்றியபோது  ஓடிச்சென்று அறைக்கதவைத் திறந்தேன். பெருங்கூச்சல் பருப்பொருளாகிச் சூழ்ந்தது.

2 comments for “ராணி”

  1. அனு
    November 1, 2026 at 9:14 am

    இந்தக் கதையில் என்னை மிகவும் சிந்திக்க வைத்த அம்சம், ஒரு தாயின் தியாகத்தையும் அவள் தன் பிள்ளையின் மீது கொண்டிருக்கும் அளவற்ற அன்பையும் இளைஞன் உணர்ந்து கொள்ளும் தருணம்தான்.

    தன் குடும்பத்தையும் மகனின் எதிர்காலத்தையும் காப்பாற்றுவதற்காக ஒரு தாய் பல கடினமான வேலைகளைச் செய்கிறாள். மற்றவர்களின் வீடுகளில் வேலை செய்து, உடல் முழுவதும் வியர்வையுடனும் தலைமுடியில் தூசியுடனும் வீடு திரும்புகிறாள். ஆனால், இதைப் புரிந்துகொள்ளாத அந்த இளைஞன் தன் தாயின் வேலையை அவமானமாகக் கருதி மற்றவர்கள் முன்னிலையில் அவளால் தனக்கு அவமானம் ஏற்படுவதாக நினைக்கிறான்.

    ஆனால், கதையில் மியா என்ற நிர்வாணப் பெண்ணிடம் அவன் கேட்கும் ஒரு கேள்வியும், அதற்கு அவள் அளிக்கும் பதிலும் அவனுடைய சிந்தனையையே மாற்றிவிடுகின்றன. ஒரு தாய் தன் பிள்ளைக்காக எத்தகைய தியாகங்களையும் செய்யத் தயாராக இருப்பாள் என்பதை அந்தத் தருணத்தில் அவன் மெல்ல உணர்கிறான் என்று நினைக்கிறேன். தன் தாய் செய்யும் வேலை அவனுக்கு அவமானமாகத் தோன்றினாலும், அவள் அதைச் செய்வது அவன் மீதுள்ள அன்பினாலும், அவனுடைய வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்ற எண்ணத்தினாலும்தான் என்பதைப் அறிந்து வருகிறான்.

    மேலும், மியா ஏன் அத்தகைய தொழிலைச் செய்கிறாள் என்பதற்குப் பின்னாலும் அவளுடைய மகன் மீதான அன்பும் தியாகமுமே காரணமாக இருக்கிறது. தன் மகனின் தேவைகளைப் பூர்த்தி செய்து, அவனுக்குச் சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே, வேறு வழியின்றி அவள் அந்தத் தொழிலைச் செய்கிறாள். தன் வாழ்க்கையையும் கஷ்டங்களையும் பொருட்படுத்தாமல், மகனின் நலனுக்காக அவள் எதையும் செய்யத் தயாராக இருக்கிறாள். இதுவே அவளை ஒரு ராணியாக உயர்த்துகிறது

  2. November 1, 2026 at 10:11 am

    மியாவையும் கதைசொல்லியின் தாயையும் வெவ்வேறு கதைமாந்தர்களாகப் பார்க்க முடியவில்லை. இருவர் செய்யும் பணியும் சமூகக் கண்களுக்கு இழிவானதுதான்.ஆனால் இருவருமே எந்தக் கூச்சத்தையும் காட்டாமல் செய்கிறார்கள். குடும்பத்தைக் காப்பாற்றக்கூடிய கடமையைத் தனித்து வாழும் தாய் சுமக்கவேண்டி நேரும்போது அதனைக் கூச்சமில்லாமல் இறுமாப்போடு செய்து அதற்கொரு கம்பீரத்தைக் கொடுக்கிறாள். அதே கண்கொண்டே மியாவின் பணியையும் நோக்கவேண்டும். அவள் உடலை விற்பவள் என்று ஒரு கோணத்தில் பார்த்தால் அது நியாயமாகாது. அவள் மானுட காமத்தையும் துய்க்கும் பெண்ணாக வருகிறாள். அதனையும் அதிகார தோரணையோடும் சவால்விடும் துணிவோடும் முன்னெடுக்கிறாள். காமம் பணிந்துபோகும் குணமுடையதல்ல துணிந்து நிற்கும் திராணியைக் கொடுப்பது. இரு பெண்களின் இந்தத் துணிவே பெண்ணியத்தின் இயல்பான ஒன்றாக ஆக்குகிறார் கதாசிரியர். நாம் பொதுமைப்படுத்தும் மாசை கதாசிரியர் நமக்கு வேறொன்றாகக் காட்டும்போது கதை வலிமையடைகிறது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...