காமராஜரின் வாழ்க்கையில் நடைபெற்ற ஒருசில நிகழ்ச்சிகளை மட்டும் தொகுத்து எழுதப்பட்ட ஒரு புத்தகத்தைச் சமீபத்தில் படித்து முடித்தேன். அதில் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சியைப்பற்றிய விவரணை என் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது. ஒருநாள் காமராஜரின் வீட்டு வாசலில் அவரைச் சந்திப்பதற்காக ஒருவர் வந்து நிற்கிறார். அவர் அணிந்திருந்த அழுக்கேறிக் கசங்கிய ஆடையின் தோற்றத்தைப் பார்த்ததும் காமராஜரின் உதவியாளர் அவரைத் திருப்பியனுப்ப முயற்சி செய்கிறார். வந்தவரோ தலைவரை ஒரேயொரு நிமிடம் சந்தித்துப் பேசுவதற்கு அனுமதிக்க வேண்டுமென்று கெஞ்சுகிறார். அவருடைய கெஞ்சுதலைப் பொருட்படுத்தாத உதவியாளர் அவரை அங்கிருந்து அனுப்பிவைப்பதிலேயே குறியாக இருக்கிறார். அவர்களிடையில் நிகழும் உரையாடலின் சத்தத்தைக் கேட்டு காமராஜரே வெளியே வந்து பார்வையாளரை வீட்டுக்குள் அழைத்துச் செல்கிறார்.
அந்த நடுவயதுக்காரர் தன் மகள் கல்லூரியில் படிப்பதாகவும், அந்த ஆண்டுக்குரிய கல்விக்கட்டணம் கட்டுவதற்குத் தேவையான பதினாறு ரூபாய் தன்னிடம் இல்லையென்றும், பண உதவி செய்யவேண்டுமென்றும் கைகுவித்து கண்ணீர் மல்கக் கேட்டுக்கொள்கிறார். என்ன கல்லூரி, என்ன படிப்பு என்று விசாரித்த காமராஜர் அவருக்குத் தேவையான பணத்தைக் கொடுத்து அனுப்பிவிடுகிறார். அவருடைய உதவியாளருக்கு அது சிறிதும் பிடிக்கவில்லை. அந்தப் பார்வையாளரின் வார்த்தைகள் எல்லாம் நடிப்பு என்றும் பணத்தைப் பெற்றுச் செல்வதற்காக மேற்கொண்ட தந்திரம் என்றும் முணுமுணுத்தபடி இருக்கிறார். அவர் சொற்கள் காதிலேயே விழவில்லை என்பதுபோல எந்தப் பதிலும் சொல்லாமல் உள்ளே சென்றுவிடுகிறார் காமராஜர்.

ஒரு வாரம் கழித்து அதேபோன்ற ஒரு காலை நேரத்தில் அந்த அழுக்குச்சட்டைக்காரர் மறுபடியும் காமராஜரின் வீட்டு வாசலில் வந்து நிற்கிறார். ஒருமுறை கொடுத்துப் பழகியதால் அவர் மீண்டும் பணம் கேட்டு வந்திருப்பதாகச் சொல்கிறார் உதவியாளர். காமராஜர் அமைதியாக அவரை உள்ளே அழைத்து உரையாடுகிறார். காமராஜர் கொடுத்த பணத்தை எடுத்துச் சென்று கல்லூரியில் கட்டணத்தைச் செலுத்திவிட்டதாகவும் கட்டணம் பதினாலு ரூபாய் மட்டுமே என்றும் பதினாலு என்று மகள் சொன்னதைப் பதினாறு எனத் தவறாகப் புரிந்துகொண்டதால் கூடுதலாகப் பணம் வாங்கிக்கொண்டு சென்றுவிட்டதாகவும் மிச்சமிருக்கும் இரண்டு ரூபாயைத் திருப்பிக் கொடுப்பதற்காக வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துவிட்டு சட்டைப்பையிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுக்கிறார். காமராஜர் அந்த இரண்டு ரூபாயை வாங்கிக்கொள்ளாமல் அவரையே வைத்துக்கொள்ளும்படி சொல்லி அனுப்பிவைக்கிறார். முன்முடிவு சார்ந்து சிறிது நேரத்துக்கு முன்னால் தான் சொன்ன சொற்களை நினைத்து சங்கடத்துடன் நிற்கிறார் உதவியாளர்.
இந்தச் சம்பவத்தை ஒட்டியே நீண்ட நேரம் யோசனையில் மூழ்கியிருந்தேன். இதில் மூன்று புதிர்கள் உள்ளன. ஓர் உதவிக்காக வாசலில் வந்து நிற்பவரை, இரக்கத்தைத் தூண்டி பணம் பறித்துச் செல்ல வந்திருப்பவராக நினைக்கத்தூண்டிய அம்சம் எது என்பது முதல் புதிர். ஒருவருடைய உருவத்தோற்றத்துக்கு அப்பால் பார்வை வழியாகவே உள்ளத்தை ஊடுருவிச் சென்று பார்க்கத் தூண்டும் அம்சம் எது என்பது இரண்டாவது புதிர். உதவிக்காகப் பெற்றுவந்த பணத்தில் மிச்சமிருக்கும் தொகையைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணத்துக்கு அடிப்படையான அம்சம் எது என்பது மூன்றாவது புதிர்.
காலம் காலமாக நீடித்துவரும் இந்த மூன்று புதிர்களுக்குமே நேரிடையான, நிரந்தரமான பதில் இந்த வாழ்க்கையில் இல்லை. ஒவ்வொருவரும் அவரவர் அனுபவம் சார்ந்தும் உள்ளுணர்வு சார்ந்தும் கண்டடையும் பதில்கள் மதிப்பீட்டுக்கு அப்பாற்பட்டவை. அது மானுடப்புதிர். எழுத்தாளர் விட்டல்ராவ் எழுதியிருக்கும் சிறுகதைகள் வெவ்வேறு வழியாக அத்தகு மானுடப்புதிர்களைச் சுற்றிச்சுற்றி வருகின்றன. அவருடைய பெரும்பாலான கதை மையங்களில் அத்தகு தருணங்கள் மீண்டும் மீண்டும் இடம்பெறுகின்றன. ஏன் ஏன் என்கிற கேள்விகள் தொக்கி நிற்கின்றன. அதை ஒரு குறையாக நினைக்கத் தேவையில்லை. வாழ்வனுபவங்கள் வழியாக அவர் கண்டறிந்த மாபெரும் உண்மை அது.
விட்டல்ராவ் எழுதிய சிறுகதைப்பட்டியலில் ‘கழுகுகள்’ முக்கியமான ஒரு சிறுகதை. ஒரு வட்டாரத்தில் இரண்டு குழுவினர் வெவ்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து வசிக்கிறார்கள். ஆனால் அவர்களிடையில் இணக்கமான உறவு இல்லை. எப்போதும் பிணக்குதான். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ஒரு குழுவினர் இன்னொரு குழுவினரை வம்புக்கிழுத்து, அடித்துத் துன்புறுத்துகிறார்கள். தம் மீதான அச்சத்தை நிலைநிறுத்தினால்தான் இம்மண்ணில் உறுதியாக வாழ முடியும் என்னும் பிழையான எண்ணம் அவர்களை வழிநடத்துகிறது.
ஏரியின் ஒரு புறத்தில் ஒரு குழுவினரும் இன்னொரு புறத்தில் மற்றொரு குழுவினரும் தனித்தனியே வசிக்கிறார்கள். கடைத்தெரு, சினிமா அரங்கம், மயானம் ஆகிய பொது இடங்கள் இரு குழுவினருக்குமானதாக உள்ளன. அற்பமான ஒரு காரணத்துக்குக்கூட இத்தகு பொது இடங்களில் இரு குழுவினரும் வன்முறையில் இறங்கி அடித்துக்கொள்கிறார்கள். ஒருமுறை சினிமா அரங்கில் இரு குழுவினருக்கும் மோதல் ஏற்பட்டுவிடுகிறது. காயங்களுடன் தப்பியோடிய ஆட்கள் தம் தலைமையிடம் சொல்லி, பழிக்குப் பழி வாங்கவேண்டும் என்று துடிக்கிறார்கள்.
மாங்காளி என்பவன் ஒரு குழுவை வழிநடத்துபவன். ஒருநாள் தற்செயலாக அந்த ஊருக்குப் புதிதாக வந்திருக்கும் காவல்நிலையத்தில் நடைபெறும் காட்சி அவனுக்குப் புதிய அனுபவமாக இருக்கிறது. அவர்கள் குற்றவாளியை அடித்துத் துவைத்து உண்மையை வரவழைப்பது விசித்திரமாக இருக்கிறது. ஒரு தனிமனிதன் தவறிழைத்தவன் என்கிற காரணத்துக்காக இன்னொருவனை அடிப்பது பகையை வளர்க்கும் சூழலில், காவலதிகாரிகள் அதே தவறிழைத்தவனை அடிக்கும்போது அது உண்மையையும் நியாயத்தையும் நிறுவுவதற்குரிய நடவடிக்கையாக மாறுவதை அவன் மனம் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறது.
ஒருமுறை தன் குழுவைச் சேர்ந்த ஒருவன் எதிர்க்குழுவால் கத்திக்குத்துப் பட்டதை ஒட்டி, அனைவரும் பதில் தாக்குதல் நிகழ்த்தவேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்த சமயத்தில் மாங்காளி அடிபட்டவனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று புகார் கொடுத்துவிட்டுத் திரும்புகிறான். அந்தக் குழு அடிக்க நினைத்த ஆட்களை விசாரிக்கும் பொறுப்பைக் காவலர்கள் மேற்கொள்ளவேண்டிய நிலை ஏற்படுகிறது. அடிபட்டவனையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தேவையான மருத்துவத்தையும் அவர்களே அளிக்கிறார்கள். அவனுடைய கூட்டாளிகளுக்கு அது பிடிக்கவில்லை. ஆயினும் தலைவன் பேச்சை அவர்களால் மீறிச் செல்லவும் முடியவில்லை.
இன்னொரு நாள் ஏரிப்பகுதியில் வாழும் குழுவினரிடையில் ஒருவன் இறந்துவிடுகிறான். மாற்றுக்குழுவினர் வசிக்கும் பகுதி வழியாகத்தான் மயானத்துக்குச் செல்ல வேண்டும் என்கிற நிலையில் ஏதேனும் பிரச்சினை உருவாகலாம் என நினைத்து நல்லடக்கம் செய்யாமலேயே அக்குழுவினர் இறந்த உடலை வீட்டுக்குள்ளேயே இரண்டு நாட்களுக்கு வைத்திருக்கிறார்கள். அக்குழுவினரைத் திருப்பி அடிக்க அதுதான் சரியான தருணம் என்று மாங்காளியை உசுப்பேற்றுகிறார்கள் அவன் குழுவினர்.
மூன்றாவது நாள் அவர்கள் காவல்துறையின் பாதுகாப்பைக் கோரிப் பெறுகிறார்கள். அதற்குப் பிறகே காவல்துறையினரின் பாதுகாப்போடு இறுதி ஊர்வலம் நிகழ்கிறது. எதிர்த்தாக்குதல் நிகழ்த்த அந்தத் தருணத்தைப் பயன்படுத்த மாங்காளிக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள் அவன் குழுவினர். அவன் எல்லோரையும் அழைத்துச் சென்று சாராயம் வாங்கிக் கொடுக்கிறான். ஒரு மோதலுக்காக தம்மை மாங்காளி தயார்ப்படுத்துவதாக அனைவரும் நினைத்து மகிழ்கிறார்கள். ஆனால் சவ ஊர்வலம் அவர்கள் வசிப்பிடத்தைக் கடக்கும் சமயத்தில் இறந்தவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக பாடையின் முன்னால் நின்று ஆட்டம் போடுகிறான் மாங்காளி. போதையில் எதுவும் புரியாத மற்ற குழுவினரும் அவன் வழியிலேயே ஆட்டம் போடுகிறார்கள். அதுதான் இறந்தவருக்கு அளிக்கும் கெளரவம் என அவர்கள் நினைக்கிறார்கள். ஒருவழியாக ஊர்வலம் அந்தப் பகுதியைக் கடந்து மயானத்துக்குச் செல்கிறது.
மாங்காளியின் மனமாற்றத்திற்கான காரணத்தை விட்டல்ராவ் எங்கும் வெளிப்படையாகப் பதிவு செய்யவில்லை. அது மாபெரும் புதிர். ஆனால் அடிதடி வாழ்விலிருந்து ஜனநாயக வாழ்க்கைக்குள் அவன் வருவதைச் சாதாரணத்தகவல் வழியாகக் கோடிட்டுக் காட்டுகிறார். எப்போதும் அடிதடி, கத்திக்குத்து, கலவரம், கடையடைப்பு என இருந்த சூழல் ஒரு நல்லிணக்க வாழ்க்கைக்குத் திரும்புவதற்கான முதல் கட்டமாக அமையும் தருணத்தை மட்டுமே விட்டல்ராவ் தன் சிறுகதையில் சித்தரிக்கிறார். அவனைப் பின்பற்றி அந்தக் குழுவினரின் மனநிலையில் மாற்றம் வந்துவிடுமா, அந்தக் குழு மாறினாலும் அடுத்த குழுவினர் அதை ஒரு நல்ல தொடக்கமாக எடுத்துக்கொள்வார்களா அல்லது தொடைநடுங்கிகள் என நினைத்து கேவலமாகப் பேசுவார்களா என்பதெல்லாம் விடை தெரியாத புதிர்களே. ரத்தச்சுவைக்காக ஏங்கி வானத்தில் வட்டமிடும் கழுகுகளை எளிய குருவிகளாகவும் கோழிகளாகவும் மாற்றுவது எந்த அளவுக்குச் சாத்தியம் என்பதும் ஒரு புதிரே.
சமூகப்பின்னணியில் ‘கழுகுகள்’ கதையை எழுதிய விட்டல்ராவ் குடும்பப்பின்னணியில் ‘இராணுவப்பெட்டி’ என்றொரு சிறுகதையை எழுதியிருக்கிறார். ஒரு குடும்பத்தின் அப்பா முதல் உலகப்போர் நடைபெற்ற காலத்தில் இராணுவச்சிப்பாயாக வேலை செய்தவர். பிறகு இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவருக்குச் சொந்த ஊரிலேயே அரசு வேலை கிடைக்கிறது. அரசு வேலை என்பதாலேயே அடிக்கடி இடமாறுதல் ஏற்படுகிறது. போகிற இடங்களிலெல்லாம் கஷ்டப்பட்டு வாடகைக்கு வீடு பிடித்து வாழ்கிறார்கள்.
ஒரு வாடகை வீட்டிலிருந்து அடுத்த வாடகை வீட்டுக்குச் செல்லவேண்டிய நேரத்தில், வீட்டுக்குச் சொந்தக்காரருக்குக் கொடுக்கவேண்டிய தொகையை அந்த அப்பாவால் முழுமையாக அளிக்கமுடியவில்லை. அதனால் சொந்தக்காரரின் சந்தேகத்தைத் தீர்ப்பதற்காக, அடகுப்பொருட்களைப்போல சமையல் சாமான்களையும் இராணுவத்திலிருந்து திரும்பும்போது கொண்டுவந்த இராணுவப்பெட்டியையும் அந்த வீட்டிலேயே விட்டுவிட்டுச் செல்கிறார். அப்போது அவருடைய மகனுக்கு ஏழு வயது. அப்பாவின் இடமாற்றல் காரணமாக அந்தக் குடும்பம் அடிக்கடி ஊரூராகச் சென்றுகொண்டே இருக்கிறார்கள். பணிநிறைவுக்குப் பிறகு அவர் அப்பா மறைந்தும் போய்விடுகிறார். சிறுவனாக இருந்த மகன் வாலிபனாக வளர்ந்துவிடுகிறான்.

பழைய வாடகை வீட்டில் விட்டுவிட்டு வந்த பொருட்கள் மீட்கப்படாமலேயே உள்ளன. அதைப் பற்றி அந்த அம்மா அடிக்கடி குறிப்பிட்டுக்கொண்டே இருக்கிறாள். ஒருநாள் பாக்கித்தொகையைக் கொடுத்துவிட்டு பொருட்களை எடுத்துவருமாறு பழைய ஊருக்கு மகனை அனுப்பிவைக்கிறாள் அம்மா. பணத்தோடு அந்த ஊருக்குச் செல்லும் சகோதரர்களால் அந்த வீட்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை. யார் யாரிடமோ உதவி பெற்று, ஒருவழியாக எப்படியோ கண்டுபிடித்துச் சென்றபோது அந்த வீடு மூன்று கை மாறியிருப்பது தெரிகிறது.
நீண்ட நேர அலைச்சலுக்குப் பிறகு சரியான நபருடைய வீட்டைக் கண்டுபிடிக்கிறார்கள் அவர்கள். பாக்கிப்பணத்தைக் கொடுக்கிறார்கள். சமையல் சாமான்கள் எல்லாம் எங்கெங்கோ போய்விட்டன, இதுமட்டும்தான் இருக்கிறது என இராணுவப்பெட்டியை மட்டும் கொண்டுவந்து கொடுக்கிறார்கள் அந்த வீட்டினர். பழைய கால ஏல் பூட்டினால் பூட்டப்பட்ட அப்பெட்டியைக் கொண்டுவந்து அம்மாவிடம் கொடுக்கிறார்கள் சகோதரர்கள்.
பெட்டி திரும்பக் கிடைத்துவிட்டாலும் அம்மா பெட்டியைத் திறந்து பார்க்க விரும்பவில்லை. “என்னமோ பழைய ரசீது, கடிதம்தான் இருக்கும். இப்ப அதெல்லாம் எதுக்கு?” என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டு பெட்டியைப் பாதுகாப்பாக இறவாணத்தில் வைத்துவிடுகிறார். வீட்டுக்குள் பெட்டி இருக்கும் சங்கதியையே அனைவரும் மறந்துவிடுகிறார்கள். சிறிது காலத்துக்குப் பிறகு அம்மா இறந்துவிடுகிறாள். அந்த வாலிபனுக்கும் திருமணம் நடந்துவிடுகிறது. ஏதோ ஒரு சிக்கலான நேரத்தில்தான் எல்லோருக்கும் பெட்டியின் நினைவு வருகிறது. பூட்டு திறக்கும் தொழிலாளியை அழைத்துவந்து இராணுவப்பெட்டியின் பூட்டைத் திறக்கிறார்கள்.
பெட்டிக்குள் ஒரு பழைய கணக்கு நோட்டும் டைரிகளும் அரைகுறை நிர்வாணக் கோலத்தில் ஒரு பெண்ணின் படமும் மட்டுமே இருக்கின்றன. படத்துக்குப் பின்னால் கோவா ஏப்ரல் 1918 என்ற குறிப்பு அப்பாவின் கிறுக்கலான கையெழுத்தில் காணப்படுகிறது. வேறு எதுவும் இல்லை. பெட்டியைத் திறக்கும்போது நினைத்திருந்தது வேறு, பெட்டியைத் திறந்ததும் தோன்றுவது வேறாக இருக்கிறது. இந்தப் பெண் சார்ந்த செய்தி அம்மாவுக்கு ஒருவேளை தெரிந்திருக்குமோ என்கிற கேள்வியோடு சிறுகதை முடிகிறது.
அந்தக் குடும்பம் அறிந்தவரையில் அவர் நல்ல அப்பா என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் அவருடைய பெட்டியில் அவருடைய கையெழுத்துடன் ஒரு பெண்ணின் அரைகுறை நிர்வாணப்படம் இருப்பதன் பின்னணி என்ன என்பது ஒரு புதிர். அதைப்பற்றி அம்மாவுக்குத் தெரிந்திருந்தும் அவள் ஏன் அமைதியாக இருந்தாள் என்பது இரண்டாவது புதிர். இப்படிப்பட்ட தகவல்கள்தான் இப்பெட்டிக்குள் இருக்கும் என்பது அவளுக்கு முன்பே தெரிந்திருந்ததால், அப்பெட்டியைத் திரும்பி வாங்கிவருவதில் அவள் ஏன் ஆர்வம் காட்டினாள் என்பது மூன்றாவது புதிர். திரும்பக் கிடைத்த பெட்டியைத் திறக்கவே விடாமல் அவள் ஏன் ஒரு தடையாக இருந்தாள் என்பது நான்காவது புதிர். ஒருவேளை இராணுவப்பெட்டியின் இருப்பை தன் கணவனின் மானசிகமான இருப்பாக அவள் மனம் கருதியிருக்குமோ என்பது ஐந்தாவது புதிர். இத்தகு புதிர்கள் நிறைந்த குடும்பங்கள் எப்போதும் இருந்துகொண்டே இருக்கின்றன என்பதால், இச்சிறுகதையை எல்லாக் காலத்துக்கும் உரியதாகச் சொல்லலாம்.
‘பேராசிரியர் தக்கியின் ஆடு’ இன்னொரு முக்கியமான சிறுகதை. கும்பகோணம் மேலக்காவேரியைச் சேர்ந்த பேராசிரியர் தக்கி இடமாற்றல் பெற்று சென்னைக்கு வருகிறார். அவருடைய சகோதரருக்குச் சொந்தமான மீர்சாகிப்பேட்டை வீட்டில் மாடிப்பகுதியில் குடும்பத்துடன் வசிக்கத் தொடங்குகிறார். உருது பேசுகிற முஸ்லிம்கள் அதிக அளவில் வாழ்கிற அப்பகுதியில் தமிழ் பேசும் முஸ்லிமாக அவர் இருக்கிறார். அவரோடு பிறர் ஒட்டியும் ஒட்டாமலும் இருப்பதற்கு அது ஒரு முக்கியமான காரணம்.
அவருடைய மகளுடைய உடல்நலம் சீரடையத் தினமும் ஆட்டுப்பால் கொடுத்தால் நல்லது என நண்பர் சொன்னதால் அவர் ஆட்டுப்பாலுக்கு அலைகிறார். எருமைப்பால் ஊற்றும் பால்காரரே ஆட்டுப்பாலையும் எடுத்துவந்து கொடுப்பதாகச் சொல்லி அந்தப் பிரச்சினையைத் தீர்த்துவைக்கிறார். பேராசிரியருடன் ஒரு நம்பகத்தன்மையை உருவாக்கிக்கொண்ட பிறகு ஒரு பால்மாடு வாங்குவதற்காகப் பால்காரர் அவரிடம் ஆயிரம் ரூபாய் கடன் கேட்கிறார். பேராசிரியரும் அவர் கேட்ட தொகையைக் கொடுக்கிறார். ஆனால் பால்காரரால் குறிப்பிட்ட கெடுவுக்குள் பணத்தைக் கொடுக்க முடியவில்லை. அதற்குப் பதிலாக அவர் பால் கறக்கும் அந்த ஆட்டையே அவரிடம் ஒப்படைக்கிறார். மாடியில் அவர் வீட்டு வாசலோரமாகவே கட்டிப்போட்டு அந்த ஆட்டை வளர்க்கிறார் பேராசிரியர்.
பகல் வேளையில் அந்த ஆடு மாடியைவிட்டு இறங்கிவந்து தெருவில் அலைந்து மேயத் தொடங்குகிறது. மேய்ந்துமுடிந்ததும் தானாகவே படியேறிச் சென்று கதவோரமாக ஒண்டிக்கொள்கிறது. கொழுத்திருக்கும் ஆட்டைப் பார்க்கும் அனைவரும் அந்த ஆட்டைப்பற்றிய விவரங்களையும் அதை வளர்க்கும் பேராசிரியரைப்பற்றிய தகவலையும் மெல்ல மெல்ல விசாரித்துத் தெரிந்துகொள்கிறார்கள். பேராசிரியரைக் கேட்டு விசாரித்தபடி வருபவர்களிடம் ”இந்தத் தெருவில் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிபவர் ஒருவரும் இல்லையே” என அதுவரை கைவிரித்த தெருக்காரர்கள் அனைவருக்கும் குறுகிய காலத்திலேயே தெரிந்த முகமாகிவிட்டார் பேராசிரியர். இப்போது அவரைத் தெரியாதவர்களே அத்தெருவில் இல்லை. தமிழ் பேசும் ஒரு முஸ்லிமை உருது பேசும் முஸ்லிம்கள் தம்மவராக ஏற்றுக்கொள்கிறார்கள்.
வழக்கமாக மாலை வேளையிலேயே வீட்டுக்குத் திரும்பி வந்துவிடக்கூடிய ஆடு ஒருநாள் இருட்டிய பிறகும் கூட வரவில்லை. எங்கே போயிருக்கும் என எதையெதையோ நினைத்துக் குழப்பத்தில் மூழ்கியிருந்த அவரிடம் அடுத்தநாள் காலையில் எதிர்பாராதவிதமாக ஒரு லாரியில் சிக்கி ஆடு இறந்துவிட்ட தகவலைப் பால்காரர் தெரிவிக்கிறார்.
கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியராக இருந்தபோதும் அவரோடு நெருங்கிப் பழக முடியாதவர்களாக அந்த வட்டாரத்து மனிதர்கள் ஏன் இருந்தார்கள் என்பது புரிந்துகொள்ளமுடியாத புதிராக இருக்கிறது. மதமா, அந்தஸ்தா, வாழ்க்கை நிலையா எது பேராசிரியரை அணுகவிடாமல் அவர்களைத் தடுத்தது என்கிற கேள்விக்கு விடையே இல்லை. விபத்தில் ஆடு பலியானதாக பால்காரர் சொல்லும் செய்தி உண்மைதானா என்பது முக்கியமான கேள்வி. ஒருவேளை விபத்துச்செய்தி உண்மையானதாக இருந்திருப்பின் அச்செய்தியைப் பால்காரர் உடனடியாகப் பேராசிரியருக்குத் தெரிவிக்காதது ஏன் என்பது இன்னொரு கேள்வி. இறந்துபோன அந்த ஆட்டை வீட்டுக்கு எடுத்துச் சென்று சமைத்துச் சாப்பிட்டுவிட்டதாக அவரே சொல்லும் விதமும் மேன்மேலும் கேள்விகளை உருவாக்குவதாகவே உள்ளது. எந்தக் கேள்விக்கும் விடை இல்லை. எல்லாமே புதிர்களாக உள்ளன.
‘அச்சம்மா’ இன்னொரு முக்கியமான சிறுகதை. இக்கதையில் இடம்பெற்றிருக்கும் அச்சம்மா தெய்வபக்தி நிறைந்தவள். ஒவ்வொரு வியாழக்கிழமையிலும் வீட்டிலிருந்து அம்மன் கோவில் வரைக்கும் பம்பையொலிக்கு இசைவாகச் சாமியாடியபடி அவள் செல்வாள். ஊர்க்காரர்கள் அவளுக்குப் பின்னாலேயே நடந்து வருவார்கள். கோவிலை அடைந்த பிறகு பக்தர்களுக்குக் குறி சொல்வாள். அவள் தலையில் வளரத் தொடங்கிய சடைத்திருகை தெய்வ ஆற்றலின் அடையாளமாக அனைவரும் கருதத் தொடங்குகிறார்கள்.
அவள்மீது இயல்பாகவே ஒரு தெய்வப்பிம்பம் படிந்துவிடுகிறது. அவளை மணந்துகொள்ளும் முறை இருந்தும் திருமணத்தில் ஆர்வமற்று, ஒரு பக்தனைப்போல அவளுக்கு எல்லா விதங்களிலும் சேவை செய்பவனாக இருக்கிறான் மாதய்யன். அதே சமயத்தில் அவளை ஒரு மூலதனமாகப் பயன்படுத்திக்கொண்டு தேவையான அளவுக்குச் செல்வமீட்டித் தனக்கென சொந்தமான ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவும் ரகசியமாகத் திட்டமிடுகிறான். அதற்கு இசைவாகத் திருமணம் செய்துகொள்ள ஒரு பெண்ணையும் தேடத் தொடங்குகிறான். ரயில்வேக்குச் சொந்தமான இடத்தில் ஒரு மேடையை எழுப்பி அதைக் குறிசொல்லும் மேடையாக வடிவமைக்கிறான். அதற்கு அருகிலேயே எதிர்காலத்தில் குடும்பத்துடன் வசிக்கத் தோதாக ஒரு குடிசையையும் கட்டிக்கொள்கிறான். அதே சமயத்தில், நீண்ட காலம் வெளியூரிலேயே காலம் கழித்துவிட்டு கிராமத்துக்குத் திரும்பியிருக்கும் ஜாலப்பா அவளைப் பார்த்த கணத்திலிருந்தே, அவள் மீது ஆசையை வளர்த்துக்கொள்கிறான். அவளுக்கும் அவன் மீது ஈடுபாடு பிறக்கிறது.
ரயில்வே துறையினர் திட்டமிட்டிருந்த அகலப்பாதை வேலை திடீரெனத் தொடங்கப்பட்டதும் ரயில்வேக்குச் சொந்தமான நிலத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்த குடிசைப்பகுதிகளை அப்புறப்படுத்தும் வேலை தொடங்குகிறது. மக்கள் அனைவரும் வாழ்வதற்கு வேறு இடம் தேடிச் செல்கிறார்கள். மாதய்யன் உருவாக்கிய மேடையும் குடிசையும் எந்த நேரத்திலும் இடிக்கப்படலாம் என்கிற நிலையில் அவனுடைய திருமணக்கனவும் சிதைந்துபோகிறது. தெய்வாம்சம் கொண்டவளாகக் கருதப்பட்ட அச்சம்மா ஜாலப்பாவோடு சேர்ந்து ஒருநாள் அதிகாலை வேளையில் கிராமத்தைவிட்டு வெளியேறுகிறாள்.
அனைவரையும்போல தானும் ஓர் எளிய பெண் என நினைக்காமல் தன்னிடம் தெய்வாம்சம் நிறைந்திருப்பதாக அச்சம்மா உண்மையிலேயே நினைத்திருந்தாளா என்பது முதல் புதிர். அப்படி நினைத்துக்கொள்வதற்கு என்ன காரணம் என்பது புரியாத இரண்டாவது புதிர். மற்றவர்கள் போல ஏதோ ஒரு வேலையைச் செய்து பொருளீட்டும் வழியைத் தேடிக்கொள்ளாமல் அச்சம்மாவை மூலதனமாக்கிப் பொருளீட்டி தன் வாழ்க்கையை வளப்படுத்திக்கொள்ள நினைக்கும் மாதய்யனின் சுயநலத்துக்கு என்ன காரணம் என்பது மூன்றாவது புதிர். தனக்குப் பொருத்தமானவனாக ஒருவனைத் தேடி அடையும் வரை தன் வாழ்க்கைக்கு ஒரு பாதுகாப்புக்கவசமாக மட்டுமே அச்சம்மா மாதய்யாவைப் பயன்படுத்திக்கொண்டாளா என்பது நான்காவது புதிர். ஓரிருமுறை பார்த்ததையும் பேசியதையும் தவிர ஜாலப்பாவைப்பற்றி எதுவுமே தெரியாத நிலையில் அவனோடு இல்வாழ்க்கையைத் தொடங்கும் முடிவை அச்சம்மா ஏன் எடுத்தாள் என்பது ஐந்தாவது புதிர். இப்படி ஒருவரை ஒருவர் பயன்படுத்திக்கொள்வதையே உலகில் உள்ள அனைவரும் வாழும் வகையென எடுத்துக்கொண்டால், வாழ்க்கையின் உண்மையான பொருள்தான் என்ன என்பது எல்லாப் புதிர்களுக்கும் மேலான பெரும் புதிர்.
’விரிசல்’ என்ற கதையும் விட்டல்ராவின் சிறந்த கதைகளில் ஒன்று. முதல் வாசிப்பில் அது ஓவிய உலகம் சார்ந்த ஒன்றாகத் தோன்றினாலும் வாசிப்பின் முடிவில் என்றென்றும் தீராத மானுட உறவின் சிக்கலை முன்வைக்கும் கதையாக மலர்ந்திருக்கிறது. ஐந்து இளம் ஓவியர்கள் இணைந்து ஓர் ஓவியக்கண்காட்சியை நடத்துகிறார்கள். அவர்கள் தீட்டிய விதவிதமான ஓவியங்கள் அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. பல பார்வையாளர்கள் அரங்குக்குள் வருகிறார்கள். ஓவியங்களைப் பார்க்கிறார்கள். பிறகு சென்றுவிடுகிறார்கள். கண்காட்சி தொடங்கி நான்கு நாட்களான பிறகும் ஓர் ஓவியம் கூட விற்பனையாகவில்லை. அது இளம் ஓவியர்களைச் சோர்வடைய வைக்கிறது.
வெளிநாட்டுப் பார்வையாளர்களை அவர்கள் விரும்பி எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் கலைரசனை மிக்கவர்கள் என்றும் அவர்கள் தமக்குப் பிடித்த ஓவியங்களை விலைகொடுத்து வாங்கத் தயங்கமாட்டார்கள் என்றும் நினைத்துக்கொள்கிறார்கள்.
கண்காட்சி தொடங்கிய ஐந்தாவது நாளில் அயல்நாட்டைச் சேர்ந்த ஹிப்பிகளின் தோற்றத்தைக் கொண்ட ஓர் இளைஞனும் இளம்பெண்ணும் அரங்குக்கு வருகிறார்கள். படங்களையெல்லாம் சுற்றிப் பார்க்கிறார்கள். அவற்றின் நடுவில் இருந்த ஓர் ஒட்டோவியம் அனைவரையும் கவர்கிறது. பங்களாதேஷ் புயலால் விளைந்த சேதம் என அனைத்தையும் ஒருசேரச் சுட்டும் வகையில் வெவ்வேறு படங்களைக் கத்தரித்து நெருக்கமாக ஒட்டி உருவாக்கப்பட்ட ஓவியம் அது. எல்லாத் திசைகளிலிருந்தும் பிகாசோ அவற்றையெல்லாம் பார்ப்பதாக அவருடைய கண்கள் எல்லாத் திசைகளிலும் வெட்டி ஒட்டப்பட்டிருந்தன.
அந்தப் படத்தை அவர்கள் வாங்க விரும்புகிறார்கள். குறிப்பாக அந்தப் பெண்ணுக்கு அந்தப் படம் மிகவும் பிடித்துவிடுகிறது. அதை வாங்கிக்கொள்ள அவள் விரும்புகிறாள். ஆனால் அதற்குப் போதுமான பணமில்லை. அந்த இடத்தைவிட்டுச் செல்ல மனமின்றி வெளியேறுகிறாள். அதற்குள் பகல் உணவு இடைவேளை நேரம் நெருங்கிவிட்டது. எல்லோரும் வெளியேறிவிட அந்த அரங்கத்தைப் பொறுப்பாகப் பார்த்துக்கொண்டிருந்த ஓவியனும் வெளியேறிவிடுகிறான்.
மாலைவரைக்கும் அந்த ஹிப்பி ஜோடி அரங்கத்துக்குள் வருவதும் போவதுமாகவே இருக்கின்றனர். கண்காட்சிக் கூடத்துக்கு அருகில் இருந்த நூலகக் கட்டடத்தில் அந்த இளம்பெண் நுழைவதை அந்த ஓவியன் பார்க்கிறான். சிறிது நேரத்துக்குப் பிறகு அந்தப் பெண் கோபத்துடன் வெளியேறி விறுவிறுவென நடந்து சென்றுவிடுகிறாள். அவள் சென்ற தோற்றம் பார்ப்பதற்குப் பாவமாக இருந்ததால் அந்த ஓவியன் நூலகரின் அறைக்குச் சென்று உரையாடுகிறான். சண்டையிட்டுவிட்டுச் சென்ற அந்த இளம்பெண் அவருடைய மகள்தான் என்றும் படிப்பதற்காக வெளிநாட்டுக்குச் சென்றவள் படிப்பைத் துறந்து அந்தப் பையனோடு சேர்ந்து சுற்றிக்கொண்டு இருப்பதாகவும் ஒட்டோவியத்தை வாங்குவதற்குத் தேவையான பணத்தைக் கொடுக்கும்படி கேட்டுத் தொந்தரவு கொடுத்ததாகவும் அவள் சொல்லும் காரணம் பொய்யென்று தெரிந்தாலும் வேறு வழியின்றி பணம் கொடுத்து அனுப்பியதாகவும் சொல்லிப் புலம்புகிறார் நூலக அதிகாரி. வருத்தம் தெரிவித்துவிட்டு அவருடைய அறையைவிட்டு வெளியே வருகிறான் ஓவியன்.
இந்தச் சித்தரிப்பில் எது விரிசல் என்னும் கேள்வியை ஒட்டி ஆய்வு செய்வது சுவாரசியமாக இருக்கும். சொந்தப் பணத்தைச் செலவழித்து பொருட்களை வாங்கி பல நாட்கள் பாடுபட்டு வரைந்த ஓவியங்களில் ஒன்று கூட விற்பனையாகவில்லை என்பதை முன்னிட்டு அந்த இளம் ஓவியர்களின் நம்பிக்கையில் முதல் விரிசல் விழுகிறது. ஒரு கலைஞனின் நம்பிக்கையில் ஏற்படும் விரிசல் ஒருபோதும் நல்லதற்கில்லை. அடுத்து படிப்பதற்காக ஆசையோடும் நம்பிக்கையோடும் வெளிநாட்டுக்கு அனுப்பிய மகள் படிப்பைத் துறந்து கல்லூரியைவிட்டு வெளியேறி யாரோ முகம்தெரியாத ஒரு ஹிப்பி இளைஞனோடு சேர்ந்து சுற்றுவதைப் பார்க்கும் தந்தையின் மனத்தில் உருவாகும் விரிசல். அதையடுத்து, ஓவியம் வாங்குவதற்காக அப்பாவிடம் சண்டை போட்டு பணத்தைப் பெற்றுக்கொண்ட மகள் ஓவியத்தை வாங்காமல் கூடத்தைவிட்டு வெளியேறியதை, தன் ஓவியம் விற்பனையாகிவிடும் எனப் பெரிதும் எதிர்பார்ப்போடு காத்திருந்த ஓவியனே நேருக்கு நேர் பார்க்கும்போது, அவனுடைய நெஞ்சில் விழும் விரிசல். துரதிருஷ்டவசமாக, எந்த விரிசலையும் ஒருவராலும் சரிப்படுத்திவிட முடியாது. வெவ்வேறு நாடுகளில் நடைபெற்ற சேதங்களை அடையாளப்படுத்தும் ஓவியம், இன்னொரு கோணத்தில் மானுட உறவுகளிலும் நம்பிக்கைகளிலும் உருவாகும் ஆழமான சேதங்களின் அடையாளமாகவும் தோற்றமளிப்பதை உணரமுடிகிறது.
விரிசலுக்குப் பிறகு அந்த இளம் ஓவியர்கள் அனைவரும் எத்தகு முடிவை எடுக்கப் போகிறார்கள் என்பது புரிந்துகொள்ள முடியாத புதிர். அவர்களுடைய வாழ்க்கைப்பயணம் அதுவரை அவர்கள் சென்ற திசையிலேயே தொடர்ந்து பயணம் செய்யப் போகிறதா அல்லது திசைமாறப் போகிறதா என்பதும் கணிக்கமுடியாத புதிர். மேலோட்டமான பார்வைக்கு, விட்டல்ராவின் சிறுகதை ஓர் ஏமாற்றத்தைச் சித்தரிப்பதுபோலத் தோற்றமளித்தாலும் வாழ்க்கையைப் புரட்டிப்போடும் ஒரு முக்கியமான தருணத்தை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.
கடந்த ஐம்பதாண்டுகளாக எழுத்துலகில் தொடர்ந்து இயங்கிவரும் விட்டல்ராவ் ஏறத்தாழ நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை வெவ்வேறு இதழ்களில் எழுதியிருக்கிறார். அவருடைய ஒவ்வொரு சிறுகதையைப் படிக்கும்போதும் அவர் சுட்டிக்காட்டி நிறுத்தும் புதிரை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது. அதைக் கண்டுணரும்போது, அத்தருணத்தை அவ்வளவு எளிதாக என்னால் கடந்துசெல்ல முடிந்ததில்லை. நீண்ட நேரம் அசைபோட வைத்துவிடுகிறது. ஒவ்வொரு முறையும் அப்புதிருக்கான விடைகளை என் கற்பனையில் வெவ்வேறுவிதமாக அடுக்கிப் பார்ப்பேன். ஆனால் அவ்விடை தொகுப்புக்கு அப்பாற்பட்ட ஒன்றாகவே அந்த மானுடப்புதிர் விளங்குகிறது.
2026க்கான விஷ்ணுபுரம் விருது எழுத்தாளர் விட்டல் ராவ் அவர்களுக்கு வழங்கப்படுவதை ஒட்டி இச்சிறப்புக் கட்டுரை இடம்பெறுகிறது.
