ஊரைவிட்டு வெகுதூரம் தள்ளியிருக்கும் அரசமரத்தடியில், தனியே அமைந்திருக்கும் பிள்ளையார் கோவிலிலிருந்து தொடங்குகிறது மலைப்பாதை. ‘கோவில்’ என்று சொல்வது உயர்வுநவிற்சி. நாலடிக்கு நாலடி இருக்கும் மூன்றடி உயரப் பீடம். கூரையோ விளக்கோ இல்லாமல் தன்னந்தனியே அமர்ந்திருக்கும் பிள்ளையார். இடுப்புத்துணிகூடக் கிடையாது, பாவம்.
ஆனால், கீர்த்திக்குக் குறைவேயில்லை போல. பீடத்தின் மேலும், சுற்றிலும், நாணயங்கள் இறைந்து கிடந்தன. போகிற போக்கில் வண்டியோட்டிகள் வீசிச்செல்கிறவையாம். காரை நிறுத்தி இறங்கிய ராமசுப்பு, பீடத்தைவிடச் சற்று உயரமான தூண்மீது பதித்த பித்தளை உண்டியலில் காசு போட்டுவிட்டுக் கைகூப்பிக் கண்மூடி நின்றுவிட்டு வந்தான்.
ஏகப்பட்ட கொண்டைஊசி வளைவுகள் கொண்ட பாதையில், இடர் எதையும் சந்திக்காமல், மூன்றாண்டுகளாக மலையேறி இறங்குகிறவன். ‘இந்தப் பிள்ளையாரின் ஆசியால்தான்’ என்றான். மலைப்பாதையின் குறுக்கே யானைத் தடம் போகிறது; அல்லது, யானைத் தடத்தின் குறுக்கே மலைப்பாதை.

“ஒருதபா, என்னமோ மனசுக்குப் படுதேன்னு திரும்பிப் பாக்குறன். ஒத்தெக் கொம்பன். பாதைக்கி ஏற வேகமா வருது. கண்ணுக்குக் கண்ணு பாத்துச்சு. அம்புட்டுத்தான், அப்பளம் மாதிரி நொறுங்கப்போறோம்ன்னே நெனைச்சன். இந்தா ஒம் பக்கத்துலெ ஒக்காந்து காரோட்டுறன்!”
கிட்டத்தட்டச் செங்குத்தாக மேலேறும் பாதையைவிட்டுப் பார்வையை விலக்காமல் சிரித்தான்.
மலையின் தோள்பட்டையில் இருக்கும் எஸ்டேட்டில் பொறுப்பாளராக இருக்கிறான். எஸ்டேட் முன்னாள் அமைச்சரின் சொத்து என்பார்கள். எந்த அமைச்சர் என்பதுபற்றிப் பல்வேறு வதந்திகளும் யூகங்களும் உண்டு. சுப்புவும் நானும் அதைப்பற்றியெல்லாம் பேசிக்கொண்டதே கிடையாது. அவனவனுக்கு இருக்கும் பிரச்சினைகளில், இதையெல்லாம் பகிர்ந்துகொள்ள நேரம் ஏது. அவசியம்தான் ஏது.
என்னுடைய துறை அதிகபட்ச அழுத்தம் தரக்கூடியது. ஒவ்வொரு காலாண்டு முடிவிலும் உயர் அதிகாரிகள் அனைவருமே மிகப் பெரும் மனச்சோர்வுக்கு ஆளாவோம்; இத்தனைக்கும், விற்பனை இலக்கை எட்டியிருப்போம். ஆனால், அடுத்த காலாண்டுக்கு ஐந்து சதவீதம் உயர்வான இலக்கை நிர்ணயிக்கும் மேல்மட்ட நிர்வாகம். ஆக, வருடத்துக்கு இருபது சதவீதம். சம்பள உயர்வு மூன்று முதல் நான்கு சதவீதம் தருவார்கள் – மூன்று கட்ட விவாதங்கள், மன்றாடல்களுக்குப் பிறகு…
வேலையைவிட்டு ஓடிவிடமாட்டோமா என்று ஏக்கமாக இருக்கும். முடியாது. வீட்டுக்கு, வெளிநாட்டுக் காருக்கு, நாலைந்து கடனட்டைகளுக்கு மாதத்தவணை யார் கட்டுவது? இவை அத்தனைக்கும் நிகராக, குழந்தைகள் இருவரின் பள்ளிக்கட்டணம். பன்னாட்டுப் பள்ளியில் படிக்கவைப்பதென்றால் சும்மாவா?
நல்லவேளை, போன ஆண்டு ரிவ்யூ மீட்டிங்கில், வெளிநாட்டவரான உதவித் தலைவர், முக்கியமான ஆலோசனையை முன்வைத்தார். வருடத்தில் பத்து நாட்கள் அதிகாரிகள் அனைவருக்கும் கட்டாய விடுமுறை தரவேண்டும். ஆமாம், நிறுவனம் பலவந்தப்படுத்தி ஓய்வெடுக்கச் சொன்னால்தான் நாங்கள் எடுப்போம்… திரும்பிப் போகும்போது மலைபோலக் குவிந்து காத்திருக்கும் வேலைகள் வேறு விஷயம்.
“ஒடனே பொறப்புட்டு வான்னு நீ சொன்னது ரொம்ப நல்லதாப் போச்சுடா சுப்பு. பாரு, கிட்டத்தட்ட ஒரு மணிநேரந்தான் மலையேறியிருக்கோம். பத்துப் பதினஞ்சு நாளா இந்தப் பாதையிலேயே இருக்கிற மாதிரி இருக்கு… நேரமே ரொம்ப சாவகாசமா நகர்ற மாதிரி…”
“ஆமா, பின்னே? ஆளுகளையே பாக்க முடியாதுல்லே. ஆனா, வந்து போறவங்களுக்குத்தாண்டா அப்பிடித் தோணும். என்னைய மாதிரி இங்கயே கிடக்குறவங்களுக்கு எப்படா எறங்கி ஓடுவோம்ன்னுதான் இருக்கும்!”
“நல்ல காத்து; பசேல்ன்னு கண்ணு நெரம்புது; ஒரு சத்தம் கிடையாது. இதெல்லாம் எங்களுக்கு ஆயுசுக்கும் வாய்க்காத சொகம் இல்லையாடா!”
“இரு இரு, சாயங்காலம் ஸ்காட்ச்செத் தொறந்துட்டா இன்னும் சொகமா இருக்கும்!”
மறுபடியும் சிரித்தான்.
மலையின் காது மடலையொட்டித் தனியே நின்ற கட்டடம் பார்வையை ஈர்த்தது. வெளிர்மஞ்சள் நிறத்தில், காலைச் சூரியனை நோக்கி நிற்கும் கனசதுர சூரியகாந்திபோலத் தெரிந்தது.
“அதென்னடா, அங்கெபோயி ஒரு கட்டடம்?”
“வெள்ளெக்காரச் சாமியார் ஒர்த்தருது.”
“ஆசிரமமா!”
“அதெல்லாம் இல்லடா. அந்தாளு மட்டும் தனியா இருக்காரு. காசுக்காரப் பார்ட்டி.”
“அட!”
“வாரத்துக்கு ஒருதபா தானே ஜீப்பெடுத்துக்கிட்டு கீளெ எறங்கிப்போயி வேணுங்கிற ஜாமாங்யளெ வாங்கிக்கிட்டுத் திரும்புவாரு.”
“ஒனக்குப் பளக்கம் உண்டா?”
“அடப் போடா. மனுசன் ஓயாமெப் பேசிக்கிட்டே இருப்பாரு. காது மூக்கு கண்ணுன்னு எதுமே இல்லாமெ மூஞ்சி முளுக்க வாய்ன்ற மாதிரி! ஜீப் ஓட்டும்போது கூட வாய்விட்டுப் பேசிக்கிட்டே இருப்பாருன்னாப் பாரேன்…!“
சிரித்தான்.
எஸ்டேட்டின் விருந்தினர் மாளிகைக்கு வந்து சேர்ந்திருந்தோம். மாளிகை என்று பெயரேயொழிய, கொஞ்சம் பெரிய வீடு; அவ்வளவுதான். ஆனால், நவீன யுகத்தின் வசதிகள் அத்தனையும் உண்டு. அப்படிச் சொல்லித்தான் இங்கே வரவழைத்திருக்கிறான் ராமசுப்பு… காரைவிட்டு இறங்கும்போது,
“…வேணுமுன்னா ஒரு நா ஒன்னெக் கூட்டிட்டுப் போறேன். ஆனா, வாசலோடெ திரும்பீருவேன். பெறகு நீ கூப்புடுறப்ப வந்து கூட்டிக்கிட்டு வாரேன். எங்கே, நீயே அஞ்சு நிமிசத்துக்கு மேலெ அந்தாளோட இருந்துக்கிற மாட்டே! He is a real talking machine!!”
என்றபடி, தடுக்கத் தடுக்க, என் பெட்டியைத் தானே சுமந்து உள்ளே கொண்டுபோனான்.
அழைப்பு மணியை அழுத்துமுன் ஒரு கணம் தயங்கினேன். உள்ளே யாரோ உரத்துப் பேசும் சப்தம். துறவி, தனியாய் வசிக்கிறார் என்றல்லவா சுப்பு சொன்னான்? வாசலில் தொங்கிய காற்றுக் கிண்கிணி (wind chimesஸை இணையம் இப்படித்தான் சொல்கிறது. எனக்குச் சிரிப்பு வரவைத்த மொழிபெயர்ப்பு!) உரத்துக் கிணுகிணுத்தது.
அழுத்திவிட்டுக் காத்திருந்தேன். வழிதவறியதோ என்னை என்னவென்று கருதியதோ, பருத்த கருங்குளவியொன்று ரீங்கரித்தபடி என் தலையைச் சுற்றிவரத் தொடங்கியது. மெல்ல எனக்குள் அச்சம் எழுந்தது. நல்லவேளை, பேச்சொலி நெருங்கி வந்துவிட்டது. கதவு அகலமாய்த் திறந்து, பறங்கிப் பழம் போன்ற, சிவந்த முகம் எட்டிப் பார்த்தது.
“நான் ஏதும் உதவ வேண்டுமா?”
என்று ஆங்கிலத்தில் கேட்டார் கிழவர். என்னை யாரென்றே விசாரிக்ககவில்லையே!
உள்ளே வருமாறு தலையசைத்தார். முன்னறையில் யாராவது இருக்கிறார்களோ என்று அனிச்சையாய்த் துழாவினேன். ஒருவேளை வேறு அறைகளில் இருப்பார்களோ? இரண்டு நிலைவாசல்கள் தென்பட்டன. சமையலறைக்கு ஒன்று என்பது தெரிந்தது. மற்றது, படுக்கையறைக்கு என்று அனுமானித்துக்கொண்டேன்.
இரண்டு வாசல்களுக்கும் இடைப்பட்ட சுவரில், ஆளுயர புத்தர் ஓவியம். அபாரமான சாந்தம் கூடி, தியானத்தில் கண்கள் மூடிய முகம் மட்டும்… பெரியவர் காவி வஸ்திரத்தை வித்தியாசமாக உடுத்தியிருந்தது அப்போதுதான் கவனத்தில் பட்டது. ஆமாம், இடுப்புத்துணியே மேலேறி, ஒருபக்க மார்பை மறைத்துப் போர்த்தியிருந்தது. சுப்பு சொன்னபோது, இந்துச் சாமியார் என்றல்லவா நினைத்தேன்…
தொடர்ந்து பேசிக்கொண்டே உள்ளே திரும்பினார். புரியாத மொழி. நிச்சயம் ஆங்கிலமில்லை. சட்டென்று ஆங்கிலத்துக்கு மாறி, எதிரிலிருந்த பிரம்பு நாற்காலியில் அமரச் சொன்னார். நான் உட்காரும்போதும், பழைய மாதிரியே, விடாமல் பேசிக்கொண்டிருந்தார். வல்லின ஒலி நிரம்பிய வறண்ட மொழி; அல்லது எனக்கு அப்படிப் பட்டது. மீண்டும் ஆங்கிலத்தில் கேட்டார்:
“எதற்காக வந்தீர்கள்?”
‘You’ என்று மையமாய்த்தான் சொன்னார். நான்தான் பன்மையில் மொழிபெயர்த்துக்கொண்டேன்!…
“சும்மா பார்த்துப் போகலாம் என்றுதான்.”
“தனியாய் வசிக்கும் ஒற்றை ஆளிடம் பார்ப்பதற்கு என்ன இருக்கிறது!?… அமருங்கள்.”
என்றார்.
கரகரத்த குரல். ஏற்ற இறக்கமும் இல்லை; நான் பதில் சொல்வதற்கு இடைவெளியும் இல்லை. முகத்தில் சிறு மலர்ச்சியாவது இருந்திருக்கலாம்… மறுபடியும் பழைய மொழிக்குத் திரும்பிவிட்டார். மடைதிறந்து பாயும் ஓட்டம் ஓயக் காத்திருந்தேன். ம்ஹும். சங்கிலிபோலத் தொடர்ந்த வாக்கியங்களை நானாக அறுத்தால்தான் உண்டு போல!… இல்லை, அவரே அறுத்தார்:
“தேநீர் அருந்துவோமா?”
அனிச்சையாய்த் தலையசைத்தேன்.
பேசிக்கொண்டே உள்ளே போனார். நான் அமர்ந்திருந்த கோணத்திலிருந்து அவருடைய நடமாட்டத்தை முழுசாகப் பார்க்க முடிந்தது. குளிர்பதனப் பெட்டியிலிருந்து பால் எடுத்து மின் அடுப்பில் தேநீர் தயாரித்தார். ஒவ்வொரு அசைவும் விசையோடு இருந்தது. சருகுபோல இருந்தார் மனிதர்.
பார்வை எட்டும் அளவுக்கு வீட்டைத் துழாவிக்கொண்டே இருந்தது மனம். துறவியின் வசிப்பிடம் என்பதற்கான தடயங்களே அற்ற வீடு. சுப்பு சொன்ன மாத்திரத்தில் எனக்குள் உதித்திருந்த பிம்பத்தை எண்ணி உள்ளூரச் சிரித்துக்கொண்டேன்.
அவரானால், அவ்வளவு நேரமும் பேசிக்கொண்டே இருந்தார். ஒரு சொல்லும் புரியாத மொழி; அவரது நடையைப்போலவே பேச்சும் சீராக ஒரே வேகத்தில் நகர்வது ஆச்சரியமளித்தது. ஆனால், இரண்டாம் நபரே இல்லாத இடத்தில் ஏன் இவ்வளவு உரத்துப் பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். ஒருவேளை, சித்தம் பிறழ்ந்தவரோ? தேநீருக்கு சம்மதித்திருக்க வேண்டாமோ…
தூய வெண்ணிறத் தேநீர்க் கேத்தலும், இரண்டு கோப்பைகளும் கொண்ட தட்டை ஏந்திக்கொண்டு, பேசியபடியே திரும்பினார். இரண்டு கோப்பைகளிலும் தேநீரை வார்த்தபடி ஆங்கிலத்துக்கு மாறினார்:
“என்ன இது, ஓயாமல் இப்படிப் பேசிக்கொண்டே இருக்கிறானே என்று தோன்றுகிறதில்லையா?”
அட, தெரிந்தேதான் செய்கிறாரா!… ஆமோதிப்போ மறுப்போ தென்படாதபடி, ‘ஆகட்டும்’ என்று தலையசைத்தேன். கவனிக்காதவர்போலத் தொடர்ந்தார்:
“…மனத்தை முழுக்கக் காலி செய்வதற்கு இது ஒரு முதன்மை சாதனம். எந்த குருவும் சொல்லித் தரவில்லை; நானாகவே கண்டுபிடித்துக்கொண்டது. தவிர, காத்திருக்கும் நேரம் முழுக்க உங்களுக்குள் சிந்தனை ஓடிக்கொண்டே இருக்கவில்லை? ஆமாம், எல்லாருமே அவரவருக்குள் பேசிக்கொண்டேதான் இருக்கிறார்கள். என்ன, வெளியில் சிந்தாமல் காத்துக்கொள்கிறார்கள். பலன்? மொழியும் அதன் அர்த்தங்களும் எதிரொலிகளும் நிரம்பித் தேங்கி மனம் அசாதாரணமாய்க் கனத்துவிடுகிறது!.. பழங்குட்டைபோல துர்வாடை வீசுகிறது…”
ஒரே வாக்கியத்தில் மீண்டும் துறவியாய்த் தென்பட்டார். ஒரு மிடறு தேநீர் அருந்தினார். கையில் பிடித்திருந்த கோப்பையை உயர்த்தினேன். அபார மணம். ருசியும் பிரமாதம். என்னிடம் பேசுவதில் விழுந்த சிறு இடைவெளியில், இயல்பான வேகத்தில் நாலைந்து வாக்கியங்கள் அவருடைய பிரத்தியேக மொழியில் ஓடின.
“…சந்திக்க வருகிறவர்களிடம் ஆங்கிலத்தில் பேசுவேன். என்னோடு பேசிக்கொள்வது, எல்லாரையும்போலவே, தாய்மொழியில்தான்…”.
‘புரியவில்லையே’ என்பதுபோலப் புருவத்தை உயர்த்தினேன்.
“…ஃப்ளெமிஷ்.. ஆமாம், நான் பிறந்தது பெல்ஜியத்தின் ப்ரூஹ நகரிலிருந்து…”
அப்படித்தான் என் காதில் ஒலித்தது, அந்தப் பெயர்…
“…20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கடலோரச் சிறு கிராமத்தில்…. இருபத்தைந்தாவது வயதில் இங்கே வந்து குடியமர்ந்தேன். அரைநூற்றாண்டு தாண்டிவிட்டது…!”
ஏயப்பா! எழுபத்தைந்து என்று சொல்லவே முடியாது. அறுபது வயது என்று மதிக்கலாம். மேலும், மனிதர் வெளிப்படையாய்ப் புன்னகைக்கவில்லையே தவிர, பேச்சில் வெளித்தெரியாத மென்னகை ஓடத்தான் செய்கிறதோ என்று நானாகக் கேட்டுக்கொண்டேன். ஒருவேளை, கூடுதல் சித்தசுவாதீனம் உள்ளவரோ!… திடீரென்று, நான் எதிர்பார்த்திராத வாக்கியத்தை உதிர்த்தார்:
“…சித்தார்த்த கௌதமனை புத்தனாகும் பாதையில் செலுத்தியது மூன்று சம்பவங்கள் இல்லையா? எனக்கு நாலு தேவைப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டாயிரத்து ஐநூறு வருடங்கள் ஓடிவிட்டதே!”
நான் நினைத்தது சரிதான்! தொடர்ந்து அவர் பேசுவதைக் கேட்கும் தைரியமும், ஆர்வமும் உடனடியாக எனக்குள் ஊறின.
நான் எதுவுமே கேட்காதபோதும், நேர்காணல் மாதிரியோ, சிற்றுரை மாதிரியோ, பொழிந்துகொண்டே இருந்தார். இடையில் எனக்குள் ஓரிரு வாக்கியங்கள் ஊறிய சந்தர்ப்பங்களில் அவருடைய பேச்சைத் தவற விட்டிருக்கவும் கூடும். ஆனாலும், தொடர்ச்சி அறுபடாமல் பேசிக்கொண்டே போனார்.
“…முதல் மூன்றும் பிறர் சம்பந்தப்பட்டது. ஒன்று நான் மட்டுமே இருந்து அறிந்தது! இப்போதைய வாழ்க்கையிலும், நாலு சம்பவங்களையும் திரும்பத் திரும்ப நிகழ்த்தி, வெவ்வேறு கோணங்களில் பேசிக்கொள்வேன். அவ்வப்போது புதிதாய் ஏதாவது தென்படும்! அப்புறம் இருக்கவே இருக்கவே இருக்கிறது – அன்றாடத்தின் வேளைகள் என் பிரக்ஞைக்குள் கொண்டுவந்து கொட்டுகிற சகலமும்…”
ஜன்னல் வழியே அவர் வெறித்த திக்கில் நானும் பார்த்தேன். மலைச்சரிவில் கம்பளம்போல விரிந்திருந்த பசுமை பார்வையையும் மனத்தையம் பூரணமாக நிறைத்தது. உள்நுழைந்து வெளியேறும் இளங்காற்றில் பச்சைவாசனை நிரம்பியிருந்ததாக உணர்ந்தேன். வீட்டுக்குள் மண்டிய நிசப்தத்தை அடிக்கோடிடும் விதமாக ஏதோவொரு பறவை அதட்டும் குரல் உரத்துக் கேட்டது.
“உங்களுக்கு ஆட்சேபம் இல்லையென்றால், எனக்கு அந்தச் சம்பவங்களைச் சொல்லலாமா!”
“கண்டிப்பாய்ச் சொல்கிறேன். என்னைத் தேடி வருகிறவர்களே அபூர்வம். நான் பேசுவதை சாவகாசமாய் அமர்ந்து கேட்கிறவர்கள் இன்னும் அபூர்வம். தானே ஆசையாய் வேண்டுகிறவர்கள் அநேகமாய் இல்லவே இல்லை!…”
வெளியில் வெறித்தபடி சொந்த மொழி வாக்கியங்கள் ஓரிரண்டு. தொடர்ந்து பேசும்போது குரல் சற்று மிருதுவாகியிருப்பதைக் கவனித்தேன்.
“…அப்புறம், யார் கண்டது, எனக்கு நாலு தேவைப்பட்டது. உங்களுக்கு, இது ஒன்றேகூடப் போதுமாய் இருக்கலாமே!”
யாருமே இதைப் புன்னகையோடுதானே சொல்லியிருப்பார்கள்? பெரியவரின் முகமும் குரலும் எப்போதும்போல வறண்டிருந்தன…!
“…லூக்காஸின் கதையை முதலில் சொல்கிறேன். சம்பவங்களை அவை நடந்த கிரமத்திலேயே சொல்வதுதான் சரியாக இருக்கும்.
கல்லூரிக்கால நண்பன் லூக்காஸுக்கு ஒரு பெண்ணுடன் ஆத்மார்த்தமான காதல் இருந்தது, அதாவது இவனுக்கு மட்டும்! பின்னர் பலதடவை எனக்குத் தோன்றியிருக்கிறது – காதல் என்பது ஆன்மா மட்டுமே சம்பந்தப்பட்டது இல்லையோ என்று. லூக்காஸுக்கும் அப்படியே தோன்றியிருக்க வேண்டும்; காதலி நிராகரித்தவுடன், காதலின் முறிவை உடலில் உணர முற்பட்டிருக்கிறான்.
நெடுங்காலச் சீக்காளியான தாயாரின் மாத்திரை சீசாவை எடுத்து மொத்த மாத்திரைகளையும் ஒரே மூச்சில் விழுங்கிவிட்டான். அத்தனையும் தூக்க மாத்திரைகள். நல்லவேளை, மிகவும் யதேச்சையாக, அடுத்த பத்தாவது நிமிடத்தில் குடும்ப மருத்துவர் வந்துசேர்ந்தார்: நோயாளியின் வாராந்தர ஆய்வுக்காக வருகிறவர்.
இடைப்பட்ட நேரத்தில், லூக்காஸின் மனம் புரண்டிருந்தது. காரிலிருந்து மருத்துவர் இறங்குவதை ஜன்னல்வழியே பார்த்தவுடன், ‘டாக்டர்’ என்று உரத்துக் கூவியிருக்கிறான். ஆமாம், தான் எடுத்த முடிவு தவறானது என்று மறுமுடிவு எடுத்திருந்தான்!
அவசரமாய் உள்ளே வந்தவரிடம் அவசர அவசரமாய் விவரித்திருக்கிறான். ‘காப்பாற்றுங்கள் டாக்டர்’ என்று மன்றாடியிருக்கிறான். டாக்டர் கெட்டிக்காரர். உடனடியாய் சிகிச்சையைத் தொடங்கி, லூக்காஸை மீட்டெடுத்துவிட்டார்.
இதில், எனக்கென்ன பிரச்சினை என்று தோன்றுகிறதில்லையா?! என் பிரிய நண்பன் தற்கொலைக்கு முயன்றதோ, தற்செயலாக அல்லது தெய்வாதீனமாக அதிலிருந்து மீண்டதோ எனக்குப் பிரச்சினையில்லை; தகவல் தெரிந்து அதே பெண் அவனிடம் வந்து மனமுருகி நின்றதும் காதலை ஏற்றுக்கொண்டதும்கூடப் பிரச்சினையில்லை.
அடுத்த மூன்றே மாதங்களில் இருவருக்குள்ளும் இன்னும் உக்கிரமாகக் கசப்பு மீண்டது. இந்த முறை மிகவும் கவனமாக, தூக்கு மாட்டிக்கொண்டு அவன் இறந்தபோதுதான் நான் ஆடிப்போனேன். தனிமனித வாழ்வில் திரும்பத் திரும்ப நடக்கும் விஷயங்கள்தாம் எத்தனையெத்தனை?
டாக்டரை கெட்டிக்காரர் என்று நினைத்திருந்தேனே, தற்கொலைக்கு முயன்றவனுக்கு உளவியல் ஆலோசனையைப் பரிந்துரைக்காத அவரது அசட்டுத்தனத்தை என்ன சொல்ல? தனக்காக உயிர்விடத் துணிந்தவனைவிட, அவன் காதலைவிட, தங்களுக்குள் வந்த சச்சரவைப் பெரிதாக நினைத்த அந்தப் பெண்ணின் மன அமைப்புதான் என்ன? அவனுடைய இறுதிச் சடங்குக்குக் கறுப்பு உடையணிந்து வந்து, ஒரு சொட்டுக்கூடக் கண்ணீரின்றித் தலைகுனிந்து அவள் நின்ற தோற்றம்தான் என்ன? ஒருமுறை தோற்ற அதே காதலில் சிக்கி இன்னொரு முறையும் தோற்ற லூக்காஸின் வாழ்க்கைப் பார்வைதான் என்ன? இரண்டாம் முறை தோற்றுவிடாது அவன் என்று தீர்மானமாய் நம்பியதன் அர்த்தம்தான் என்ன?
இத்தனை கேள்விகளும் அன்றே எழுந்தவை அல்ல. கடந்த ஐம்பது ஆண்டுகளில், என்னுடன் நானே உரையாடியதில் மின்னி, நான் தொகுத்து வைத்துக்கொண்டவை. ஆனாலும், மரணத்தைப் பற்றிய கவனம் எனக்குள் தீவிரமாக எழுந்ததற்கு லூக்காஸ்தான் காரணம்.
போனவாரம் ஒரு கேள்வி உதித்தது. மரணம்தான் சகலத்துக்கும் உண்மையான தீர்வு என்றால், இத்தனை பிரச்சினைகளில் மூழ்கிக் கிடக்கும் மனிதகுலம், கூட்டுத் தற்கொலைக்கு முயலாதிருப்பதன் காரணம் என்ன!”
உலர்ந்துவிட்ட தேநீர்க்கோப்பைகளை எடுத்துக்கொண்டு சமையலறை நோக்கிப் போனார். குழாயிலிருந்து தண்ணீர் கொட்டும் ஓசையைத் தாண்டி அவருடைய பேச்சுக்குரல் கேட்டது. ஒரு சொல்லும் புரியாத, அவரது தாய்மொழியேதான்…
திரும்பி வந்தபோது, அவருடைய ஆங்கிலப் பொழிவு சற்று வேகமெடுத்துவிட்டதோ என்று தோன்றியது. ஆனால், அவர் விவரிக்கும் விதம் எனக்குள் தூண்டிய ஆவலின் காரணமாய் நானாகவேகூட அப்படி உணர்ந்திருக்கலாம்…
“…ஆனால், ஆற அமர யோசித்தபோது இன்னொன்றும் தோன்றியது. இக்கட்டில் சிக்கும் பெரும்பாலார் மரணம்தான் தீர்வு என்று நம்புவார்கள் போல. கோழைகள் ஜாக்கிரதையாகத் தப்பிவிட, தீரர்கள் களத்தில் இறங்கிவிடுவார்களோ என்னவோ! அதிதீரர்கள் விஷயமே வேறு; அவர்கள் தமது மரணத்தைவிட, எதிராளியின் மரணத்தைத் தீர்வாகக் கருதுவார்கள்!!
ஆர்த்தர் விவகாரத்தில் இதைத் தெரிந்துகொள்ள வாய்த்தது எனக்கு. லூக்காஸ் கல்லூரித் தோழன் என்றால் இவன் பள்ளித்தோழன். இளம் வயதில் தகப்பனை இழந்தவன். மறுமணம் செய்துகொண்ட தாயும், வளர்ப்புத் தந்தையும் அவனை வதைத்தார்கள் என்பது ஊருக்கே தெரியும். சிறிய ஊர்தானே.
பாலர் வகுப்பிலிருந்தே ஒன்றாக அமர்ந்திருப்போம். ஆர்த்தர் சிரித்தோ, எங்களுடன் விளையாடியோ நான் பார்த்ததேயில்லை. அதற்காக, எங்கள் நட்பில் எந்தக் குறையும் இருந்ததில்லை. உண்மையில் அவனுடைய முகத்தில் இருந்தது நிரந்தரத் துக்கம் என்பதே என் பால்யவயதுக்குப் புரியவில்லை; வாலிபனான பிறகும்தான். அவனுடைய முகபாவத்துக்கும் சுபாவத்துக்கும் இயல்பாகப் பழகிவிட்டிருந்தேன்…
பின்னாட்களில், குறிப்பாக, இங்கே வந்துசேர்ந்து தனிமையைத் தின்று வாழத் தொடங்கியபிறகு, கடந்த காலத்தின் ஒவ்வொரு கணத்தையும் ஆராய்ச்சிபூர்வமாக என்னுடனே விவாதித்து அறியத் தொடங்கியபிறகு, உறைத்தது – அவன் முகத்தில் இருந்தது வயதுக்கு மீறிய துக்கம்.
குழப்பமாகச் சுற்றிவருகிறேன் அல்லவா. நண்பர்களைப் பற்றிப் பேசும்போது அதிஜாக்கிரதையாய்ப் பேச வேண்டியிருக்கிறது. அவர்களை உங்களுக்குத் தெரியாது என்றாலுமென்ன, எனக்குள் அவர்களுடைய பிம்பங்கள் இருந்தவாறேதானே இருக்கின்றன; என்னுடனான உரையாடலில் பல சமயம் அவர்களும் பங்குபெறுகிறார்கள் என்பது முக்கியமில்லையா. அவர்களுக்கு நியாயமாக நடந்துகொள்வதும் என் பொறுப்புத்தானே. இன்னொரு சந்தர்ப்பத்தில், ‘என்ன, என்னைப் பற்றி அப்படிச் சொல்லிவிட்டாய்?’ என்று கேட்கமாட்டார்களா? உயிரோடிருப்பவர்களிடம் மட்டும்தான் உரையாட முடியும் என்பது எவ்வளவு பாமரத்தனமான நம்பிக்கை. நீங்களும் இதை ஒத்துக்கொள்வீர்கள்தானே?…
விடுங்கள், ஆர்த்தர் பற்றிய எண்ணம் எழும்போதெல்லாம், நீதிமன்றக் கூண்டில் அவன் நின்ற காட்சிதான் மனக்கண்ணில் எழும். முதன்முறையாக அவன் முகத்தில் புன்னகையைப் பார்க்கக் கிடைத்த சந்தர்ப்பம் அது. அப்போது அந்த முகம் யாருடையதோபோலத் தென்பட்டது எனக்கு.
மரணதண்டனை விதிக்கப்பட்ட பிறகு, வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தின் வாய்மொழி அனுமதியைப் பெற்று, அவனைச் சில நிமிடங்கள் சந்திக்க முடிந்தது. எனக்கு மட்டும்தான் அனுமதி, நான் மட்டும்தானே கோரினேன்…
ஆர்த்தர் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கவேறு செய்தான். எனக்கானால் ஆச்சரியம் தாங்கவில்லை. என் முகபாவனையிலிருந்து புரிந்துகொண்டான் போல…. தானாகவே சொன்னான்:
“எப்படியோ, என் அம்மாவின் புருஷனைக் கொன்ற நிறைவுடன்தானே இந்த உலகைவிட்டுப் போகிறேன்? வாழும் காலத்திலேயே பரிபூரண திருப்தி வாய்ப்பது சாமானிய விஷயமா!…”
ஐயோ, அவனுடைய முகத்தில்தான் எவ்வளவு மலர்ச்சி!… இன்னொன்றும் சொன்னான்:
“…தீர்ப்பைக் கேட்டுக்கொண்டிருந்த என் அம்மாவின் முகத்தில் துளிக்கூட வருத்தமில்லை பார்த்தாயா? யார் கண்டது, இரு மடங்கு விடுதலை என்று உணர்ந்திருக்கக் கூடும் அவள்…”
இந்தக் கடைசி வாக்கியத்தை நிஜமாகவே ஆர்த்தர் சொன்னானா, அரை நூற்றாண்டு காலத்தில், ஏதோவொரு சந்தர்ப்பத்தில் எனக்குள்ளேயே உதித்த வாக்கியமா என்றெல்லாம் உறுதிசெய்து கொள்வதற்கில்லை. எப்படியோ, அதன் சாரம் மெய்யானது…
ஆக, ஊரைவிட்டு வெளியேற வலுவான சாக்கு கிடைத்துவிட்டது. அடுத்தடுத்து இரண்டு நண்பர்கள். ஆனால், நான் கௌதமன் போலில்லை. பெற்றோர் உற்றாரிடம் சொல்லிக்கொண்டுதான் கோப்பன்ஹேகன் நோக்கிப் புறப்பட்டேன். செல்லுமிடமெல்லாம் அவர்களுடனான தொடர்பு அறுபட்டுவிடாமல் பார்த்துக்கொண்டேன்.
எல்லாருக்குமே நிம்மதி. ஏனெனில், உலகெங்கும் முளைவிட்டிருந்த ஹிப்பி இயக்கத்தில் இணைந்து, நீக்கப்படாத அழுக்கு, திருத்தப்படாத தலைமுடி, எந்நேரமும் போதையின் கசப்புமணம் என்று உள்ளும்புறமும் ஒரேவிதமாக, சகித்துக்கொள்ளவியலாத ஆளாக மாறியிருந்தேன். எதை வேண்டுமானாலும் உடைப்பேன், யாருடைய மனத்தை வேண்டுமானாலும்தான்!
இருங்கள், நீங்கள் கழிவறை பயன்படுத்த வேண்டுமா? வேண்டாமென்றால் சரி. நான் போய்விட்டு வந்துவிடுகிறேன்…”
எழுந்து போனார். பேச்சில் சேர்ந்த உணர்ச்சியின் மிகுதியால் அல்ல; நிஜமாகவே இயற்கை உபாதையால்தான் போகிறார். இல்லாவிட்டால் இவ்வளவு நிதானமான, இயல்பான நடை வாய்க்காது… எதைவைத்து இப்படியெல்லாம் முடிவுசெய்கிறேன்? அவருடைய செயல்களுக்கு நான் ஏன் அர்த்தம் ஏற்றிப் பார்க்கவேண்டும்?
முதன்முதலாக, எனக்குள் ஊறும் சொற்களையும் அவை கோத்துக்கொள்ளும் விதத்தையும் கவனிக்கத் தொடங்கினேன். ஐயோ, என்னவொரு வேகம்! மெல்லிய பீதி உயர்ந்தது எனக்குள்… நல்லவேளை, சீக்கிரமே திரும்பிவிட்டார்…
“….கோப்பன்ஹேகனிலும் அதிகநாள் வசிக்கவில்லை; ஹிப்பியாக இருந்துகொண்டு ஒரு இடத்தில் நிலைப்பட முடியுமா!
ஒரு குழுவுடன் புறப்பட்டு வேறிடம் பெயர்ந்தேன். இடத்தின் பெயரைச் சொல்லாமலிருப்பதுதான் சரி. அங்கே நடந்த விஷயங்கள் அப்படி. முதலில் பெட்டியுடன் அறிமுகம் கிடைத்தது. பேரழகி. திரைப்படக் கதாநாயகி ஆவதற்கு முயன்றுகொண்டிருந்த துணைநடிகை. என்னை ஒரு பத்திரிகை அதிபருக்கு அறிமுகப்படுத்தினாள். மொழி வல்லமையைப் பரிசோதித்துவிட்டு, வேலைக்கு அமர்த்திக்கொண்டார். கொஞ்சகாலம் செய்தியாளனாகப் பணிபுரிந்தேன். சில தொழில்களில் நிலவும் கீழ்மைகள் உலகளாவியவை – சில மனோபாவங்கள் போலவே.
திரைத்துறையிலும் சரி, பத்திரிகைத்துறையிலும் சரி, வாய்ப்புத்தேடி வரும் அபலைகளை மோசமாகப் பயன்படுத்திக்கொள்வது சகஜமாக இருந்த காலகட்டம். சம்மதத்தோடு பல சமயங்களிலும், வல்லுறவாகச் சில சந்தர்ப்பங்களிலும் நடந்துகொண்டிருப்பது பெட்டிக்கும் தெரியும். அவளே தன் அனுபவங்களைச் சொல்லியிருக்கிறாள் – கடும் போதையில் இருக்கும்போது மட்டும்.
நிலவறையொன்றில், நண்பர் குழாத்தின் மத்தியில், புகைமூட்டத்தில் இருவருமே அமிழ்ந்திருந்தபோது, அண்மையில் கேள்விப்பட்ட சம்பவம் பற்றிக் கேட்டேன். என் முதலாளி ஈடுபட்ட சம்பவம். நகைச்சுவைத் துணுக்குபோல அதை எதிர்கொண்டாள். மனம்விட்டுச் சிரிக்கவேறு செய்தாள்.
சுயபச்சாதாபம் இல்லாவிட்டால் பரவாயில்லை, பலவந்தமாகப் பயன்படுத்தப்படும் பிறரைப் பற்றி அவளுக்குப் பச்சாதாபம் இல்லையா. ‘எதற்கு?’ என்று பதிலுக்குக் கேட்டாள். ‘வாய்ப்புகளுக்காகத்தானே சகித்துக்கொள்கிறார்கள்?’ என்றாள். ‘வாய்ப்புக் கிடைத்தபின் சவுக்கு எங்களிடம் வந்துவிடுமே!’
“இருந்தாலும், ஒரு சக பெண்ணாக உன் மனத்தில் சங்கடம் இருக்காதா?” “இப்படியெல்லாம் யோசிக்கிற நீயும் ஒரு ஹிப்பியா?!…”
என்று அவமானப்படுத்தினாள். அவளுடைய இறுதிவாக்கியம்தான் அறையைவிட்டும், அவளுடைய தொடர்பைவிட்டும் என்னை வெளியேற வைத்தது. கலங்காத குரலில் மேலும் சொன்னாள் பெட்டி:
“…நான் பட்ட வேதனையை மற்றவரும் படட்டுமே. அதனால் என்ன!”
முதன்முறையாக எனக்குள் மெல்லிய அலுப்பு துளிர்விட்டது. ஏற்ற இறக்கமில்லாத குரலில் அவர் விவரித்தது ஒரு காரணம் – பிறருடைய வாக்கியங்களையும் தம்முடைய தொனிக்கு மாற்றிச் சொல்கிறார் என்று பட்டது. எனக்கு உபரி சிரமம் – வறண்ட குரலில் அவர் விவரிப்பதை, உணர்ச்சியேற்றிப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அப்படியானால், அவருடைய குரலை அல்லாமல், அதன் எதிரொலியைத்தான் கேட்கிறேனோ என்று சந்தேகம் தட்டியது.
சரி புறப்பட்டு விடலாம் என்று அவசர எண்ணம் எழுந்தது. இல்லை, நாலு விஷயங்கள் என்றுதானே சொன்னார். இன்னும் ஒன்றே ஒன்றுதான். இதோ முடிந்துவிடப் போகிறது. இத்தனைநேரம் பொறுமையாய் அமர்ந்து ஈட்டியிருந்த நற்பெயரைக் கெடுத்துக்கொள்வானேன்? இவரிடம் ஈட்டிய நற்பெயரால் எனக்கு என்ன பிரயோசனம்? ஆனாலும், அசட்டுத்தனமாய்ப் பேசும் மேலதிகாரிகள் எத்தனைபேரை சகித்துக்கொண்டிருக்கிறேன். பார்க்கப்போனால், அவர்கள் பேசப்பேச எனக்குப் பொறுப்பும் பணிச்சுமையும் அதிகரிக்கவல்லவா செய்யும்? இவர் கூறும் விஷயங்கள் சுவாரசியமாய்த்தானே இருக்கின்றன….
என் முகத்தில் தோன்றிய மாறுபாட்டைக் கவனித்திருப்பாரோ என்னவோ. நான் எதிரில் இருக்கும்போதும், தன்னுடைய மொழியில் உரத்துப் பேசிக்கொண்டே இருந்தார். பார்வையை மட்டும் என் முகத்தில் பதித்திருந்தார். ஒரு கணம் எனக்குத் திகைப்பாக இருந்தது.
இப்போதும் முகபாவம் மாறியிருக்க வேண்டும். அல்லது, அப்படி அவர் உணர்ந்திருக்க வேண்டும்… வாய் திறந்தார்.
“…புதிதாக அறிமுகமான ஹிப்பி நண்பனுடன் புறப்பட்டு இந்தியா வந்துவிட்டேன். இருவருமாக கோவா போனோம். அவன் கித்தார் எடுத்துவந்திருந்தான். பகல் முழுக்கக் குடிப்போம். ட்ரம்ஸ் இல்லாத ஆஸிட் ராக் இசைப்பான். உபரி போதை அது. சாயங்காலங்களில் காஸினோவுக்குப் போவோம். அன்றைக்கு எடுத்துப்போன பணம் தீரும்வரை தோற்றுவிட்டு, தங்குமிடம் திரும்புவோம்.
கடைசியாகப் போன தினத்தில், என்னிடம் மிச்சமிருந்த பணத்தைப் பற்றி அவனிடம் சொன்னேன்:
“இதில் ஜெயித்தால் நாளை வருவோம். தோற்றால், நாளைக்குக் குடிப்பதற்குக்கூடப் பணம் கிடையாது…”
மறுநாள் விடிந்த காலை புத்தம் புதிதாய் இருந்தது. அறையில் நான் மட்டும் இருந்தேன். சகபயணி காணாமல் போயிருந்தான். தன்னுடைய முதுகுப்பை, கித்தார், ஆகியவற்றை மட்டுமில்லை, என்னுடைய பொருட்களையும் எடுத்துப் போயிருந்தான். நண்பனல்லவா! விசித்திரமான விஷயம், என் பாஸ்போர்ட்டும் அவனோடு போய்விட்டது. ஹிப்பித்தனமாக முடிவெடுத்து நான் அணிந்திருந்த காவியுடை மட்டுமே மிச்சம்.
ஆனால், பிரபஞ்சம் சகலத்தையும் உன்னிப்பாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது நண்பரே. மனத்தளவில்கூடத் தனக்குத் தீங்கிழைக்காதவனை ஒருபோதும் தண்டிப்பதில்லை அது. இதைப் பொதுவான அவதானமாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை; என் அனுபவத்தில் நான் வந்தடைந்த உண்மை. உங்களுக்கு வேறுவிதமாக நடந்திருக்கவும் கூடும்…
எதற்குச் சொல்கிறேன், அன்று சாயங்காலமே ஒரு அயல்நாட்டுத் தந்தி கிடைத்தது – என் தகப்பனார் இறந்துவிட்டார். ‘அவர் உன் பெயருக்கு எழுதிய சொத்துகளை என்ன செய்யலாம்?’ என்று கேட்டது.
விற்றுப் பணமாக்கி அனுப்பச் சொல்லி மறு தந்தி அனுப்பினேன். ‘இடைக்கால உதவியாக ஏதாவது அனுப்பினாலும் உத்தமம்’ என்றும் குறிப்பிட்டிருந்தேன்.
நல்லவேளை, இடையில் அறிமுகமாகியிருந்த விடுதி நிர்வாகி, பணம் வரும்வரை தங்கியிருக்க சம்மதித்தான். பார்க்கப்போனால், என் வாழ்க்கையில் கிடைத்த முதல் நண்பன் என்று அவனைத்தான் சொல்ல வேண்டும். மறுவாரம் அவனிடம் விடைபெற்றுக் கிளம்பிய மாத்திரத்தில், பிரபஞ்சத்தின் கருணையில் இன்னொரு துளியை ருசிக்கக் கிடைத்தது.
ரயில்வே நிலையத்தில் என்னைப் பிடித்து விசாரித்த காவலர், மேலதிகாரியிடம் அழைத்துப் போனார். பாஸ்போர்ட், விசா என எதுவுமே இல்லாத அயல்நாட்டுப் பிரஜை; புதிதாய்க் கிடைத்த பணத்தில் முட்டமுட்டக் கஞ்சா புகைத்திருந்தவன். அதிகாரி நினைத்திருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்திருக்க முடியும். விசாரணையின்போது நான் உதிர்த்த ஜென் தத்துவங்களில் மயங்கிவிட்டார் போல. அல்லது, காவியுடையைப் பார்த்து ஏமாந்தாரோ.
போக விட்டுவிட்டார்…
ஃப்ளமிஷ் மொழி படுவேகமாகப் பாய்வது மிரளவைத்தது. ஏனோ, இனி என்னிடம் எதுவும் பேசமாட்டார் என்று தோன்றியது. அல்லது, கிளம்புவதற்கு நானாக வரித்துக்கொண்ட காரணமாகவும் இருக்கலாம்.
எழுந்து நின்றேன். என்னைக் கண்ணுக்குக் கண் பார்க்காமல் தன்போக்கில் பேசிக்கொண்டிருந்தார். ஓசையெழுப்பாமல் நகர்ந்து வாசலுக்கு வந்தேன். செல்பேசியில் ராமசுப்புவை அழைத்தேன்…
அப்படியானால், அவர் துறவியில்லையா? ராமசுப்புவிடம் முதலில் அதைத்தான் சொல்லவேண்டும். அவரைச் சந்திப்பதற்கு முன்னால் எனக்குள் இருந்த சித்திரம் மட்டுமில்லை, சிந்தைத் தெளிவும் முற்றாக அகன்றுவிட்ட மாதிரி உணர்ந்தேன். அவ்வளவு நேரமும் அவர் விவரித்தவை எனக்குள் முழுசாக ஒலிக்கத் தொடங்கின; காட்சிகளாகப் பாதியும் புரிந்த வார்த்தைகளாக மீதியும்… புரியாத ஒலியின் பிரவாகம் வேறு.
இப்போதும் ஒரு கருவண்டு. இந்தப் பகுதியில் அவை நிறைய இருக்கும்போல. முன்பு வந்த அதே வண்டுதானா இது என்று ஒரு கணம் குழம்பினேன். எப்படி உறுதிப்படுத்திக் கொள்வது! எதற்காக!!
ஆனால், இப்போது கிர்ரென்று அது எழுப்பும் ரீங்காரத்தின்மீது கவனம் குவிந்தது. ஓயாத வண்டொலி எந்த அர்த்தத்தையும் தரவில்லைதான்; ஆனால், அது தனக்குத்தானே பேசிக்கொள்கிறது என்ற எண்ணத்தைத் தவிர்க்கவும் முடியவில்லை…
*
ஓவியம்: வர்த்தமான்
