மஹி ராமகிருஷ்ணன் ஒரு கவிஞர், எழுத்தாளர், ஆவணப்பட இயக்குநர், கட்டாய இடப்பெயர்வுக்கு ஆளானவர்களுக்கான ஆலோசகராகவும் ஆய்வாளராகவும் செயல்பட்டு வருகிறார். முன்னாள் பத்திரிகையாளரான மஹி, Time இதழ், BBC, Associated Press, Agence France-Presse உள்ளிட்ட அனைத்துலக ஊடக நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். பத்திரிகையாளராகப் பணியாற்றிய மஹி அவர்களின் அனுபவங்களே அவரின் படைப்புலகிற்கு ஆணிவேராக விளங்குகின்றன. மஹி ராமகிருஷ்ணன், தற்போது PEN மலேசியா அமைப்பின் தலைவராகச் செயலாற்றுகிறார். அவரின் படைப்புகள் பெண் அதிகாரத்தின் கூர்முனைகளிலும், அரசியல் எதிர்ப்பிலும், வாழ்வாதாரப் போராட்டத்தின் அழுக்கான உண்மைகளிலும் வாழ்கின்றன. இடம்பெயர்ந்த சமூகத்தினர், பாலியல் வன்முறையிலிருந்து மீண்டு வந்தோர், விளிம்புநிலையைச் சார்ந்த அகதிப் பெண்கள் ஆகியோருடன் இணைந்து பல காலமாகச் செயலாற்றிக் கொண்டிருக்கிறார். இச்சமூகத்தினருடன் மஹி கொண்டிருக்கும் ஆழமான உறவுதான் மஹியின் வாழ்க்கைக்கும் அரசியல் நிலைப்பாடுகளுக்கும் அடித்தளமாக அமைகின்றது. உண்மைகளை ஆவணப்படுத்துவதற்கும் புனைவுகளைக் கற்பனையாக்குவதற்கும் இடையில் மஹியின் படைப்புலகம் பயணிக்கின்றது. இந்த நேர்காணல் மஹியின் ஆளுமை குறித்த ஓர் ஒட்டுமொத்த வடிவத்தை வழங்க முயல்கிறது.
தமிழ் இலக்கியச் சூழலுக்கு உங்களை நீங்கள் எவ்வாறு அறிமுகப்படுத்திக்கொள்வீர்கள்?
மஹி ராமகிருஷ்ணன்: வாழ்நாளின் பெரும்பகுதியை அதிகமான அசௌகரியமான கேள்விகளை எழுப்பக்கூடிய ஒருத்தியாகத்தான் என்னை நான் அறிமுகப்படுத்திக்கொள்வேன். முதலில் ஓர் ஊடகவியலாளராக, பின்னர் மனித உரிமைச் செயற்பாட்டாளராக, இப்போது படிப்படியாகக் கவிதை மற்றும் கதைசொல்லல் வழியாகக் கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருக்கிறேன்.
நான் இலக்கியத்திற்குள் வந்தடைந்ததே சற்று மாறுபட்ட வழியில்தான். புள்ளிவிவரத்திற்குள்ளும் கொள்கைகளுக்குப் பின்னும் மறைந்திருக்கும் துயரங்களையும் வாழ்க்கையின் எதார்த்தங்களையே அனுபவித்திடாத மனிதர்களின் வாழ்க்கையையும் பல ஆண்டுகளாகச் செவிமடுத்தவள் நான். இந்த அனுபவங்கள்தான் என் எழுத்துலகை வடிவமைத்தது. அதிகாரங்கள் மீது எனக்கு ஈர்ப்புண்டு. ஆனால், அதே சமயம் அந்த அதிகாரம் எவ்வாறு நம் உடலை, வீட்டை, உறவை, நினைவுகளை ஆக்கிரமிக்கின்றது என்பதை அறிவதிலும் எனக்கு ஆவலுண்டு.
ஆனால், இவையனைத்திற்கும் முன்பாக, என் பால்யக்காலத்தில் அப்பா எனக்குப் பாரதியை அறிமுகப்படுத்தினார். தூங்குவதற்கு முன் கதைகளைச் சொல்வதற்குப் பதிலாக அப்பா எனக்குப் பாரதியாரின் கவிதைகளை வாசித்துக் காட்டுவார். பிரச்சனைகளை அணுகும் முறையிலும் கேள்விகளைக் கேட்பதோடு மட்டும் நின்றுவிடாமல் அதற்கான விடைகளைக் கோருவதில் நான் காட்டும் அச்சமின்மையும் அந்தத் தாக்கத்தின் வழியாகத்தான் உருவானது.

இதனூடே உங்களைப் பற்றிய அறிமுகத்தை எவ்வாறு வரையறுக்கலாம்.
மஹி ராமகிருஷ்ணன்: நான் ஒரு தமிழ்ப் பெண். தமிழ்நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து வந்தவரின் மகள், மலேசியாவில் வேரூன்றி தனித்துவமான வாழ்வியல் அனுபவத்தைப் பெற்றவள்.
கவிஞராக இருப்பதெப்படி என்று நான் தேடிக் கொண்டிருக்கிறேன். ஆக, தமிழ் இலக்கிய உலகிற்கு என்னை இவ்வாறு அறிமுகப்படுத்திக்கொள்வதுதான் ஏற்புடையதாக இருக்கும். எல்லா வினாக்களுக்கும் விடை தெரிந்தவள் அல்ல நான். மாறாக, பல வினாக்களுடன் இந்த இலக்கிய உலகிற்குள் அடியெடுத்து வைக்கும் ஒருத்தியாகவே என்னை நான் அறிமுகப்படுத்திக்கொள்ள விரும்புகிறேன்.
‘Policy work’ என ஆங்கிலத்தில் அறியப்படும் தொழிலை அதாவது சட்டங்களையும் விதிமுறைகளையும் சமூக நலனுக்காக மேம்படுத்தும் பணியைத்தான் நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். அதே சமயம் அகதிகளைப் பாதுகாக்கும் முறையைக் குறித்தும் கட்டாயப் புலப்பெயர்வு குறித்தும் நீங்கள் கல்வி கற்றுள்ளீர்கள். ஆக, நீங்கள் கற்ற கல்வி நீங்கள் செய்யும் தொழிலில் எப்படிப்பட்ட தாக்கத்தை உண்டாக்கியது?
மஹி ராமகிருஷ்ணன்: நான் கற்ற கல்வி, புலனாய்வு ஊடகத்துறை மற்றும் திரைப்பட இயக்கத்தில் உள்ள நெறிமுறைகளை அறிந்துகொள்ள வழிவகுத்தது. ஊடகவியல் என்னைக் கதைகளை நோக்கி அழைத்துச் சென்றது; கட்டாயப் புலம்பெயர்த்தல் குறித்து நான் கற்ற கல்வி என்னை அக்கதைகளுக்குப் பின் உள்ள கட்டமைப்பைப் புரிந்துகொள்ள வழிவகுத்தது.
அடக்குமுறையிலிருந்து தப்பியொடும் ஒருவரை ஆவணப்படுத்துவது ஒரு விஷயம் என்றால், சர்வதேசப் பாதுகாப்பு முறைமை, அகதிகளை மீண்டும் திருப்பி அனுப்பாமலிருக்கும் சர்வதேச சட்டத்தின் கொள்கையான non-refoulement என்ற கோட்பாட்டை, அரசுகளின் கடப்பாடுகளை, ஒருவருக்குப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கும் அரசியல் தெரிவுகளைப் புரிந்துகொள்வது முற்றிலும் வேறொரு விஷயம்.
பாதுகாப்பு, இறையாண்மை, நிர்வாக நடைமுறைகள் என இவற்றை பற்றியெல்லாம் அரசு பேசலாம். ஆனால்,அச்சொற்களுக்குப் பின் மீண்டும் அடக்குமுறைக்கு ஆளாகுபவர்கள், பிரிந்து செல்லும் குடும்பங்கள், கல்வி வழங்கப்படாமல் கைவிடப்பட்ட பிள்ளைகள், சட்ட அடிப்படையிலான பாதுகாப்பு வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்ட சமூகத்தினர் எனப் பலரின் வாழ்க்கை மறைந்துள்ளன.
ஒரு தனிநபரின் கதைக்கும் கொள்கை ரீதியான நடவடிக்கைகளுக்கும் இடையில் பாலமாக இருந்து செயல்படுவதுதான் இன்று எனது பணி. கருணை முக்கியம்தான் ஆனால் கட்டமைப்பு ரீதியிலான மாற்றங்கள் உருவாகாதபோது கருணை ஈகையாக மாறுகின்றது. ஒரு சமூகம் தொடர்ந்து உயிர் வாழ, எப்படிப்பட்ட உதவிகளையெல்லாம் நாம் வழங்கலாம் என்ற கேள்வியை மட்டும் கேட்டுவிட்டு நின்றுவிடக் கூடாது. அதோடு, ஏன் அவர்களைச் சூழ்ந்துள்ள கட்டமைப்பு அவர்கள் வாழ்வதே சிரமம் எனும் நிலைக்கு தள்ளுகின்றது என்பதையும் ஆராய வேண்டும்.

மனித உரிமைச் செயல்பாடுகள், எழுத்துப் பணி, திரைப்பட தயாரிப்பு எனச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நீங்கள், உங்களின் தினசரி நடைமுறையை எவ்வாறு திட்டமிட்டு நிர்வகிக்கிறீர்கள்?
மஹி ராமகிருஷ்ணன்: உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நான் எனது தினசரி நடைமுறையை மிகச் சிறப்பாக நிர்வகிக்கும் ஒருத்தியல்ல. நேரம் போதாமையால் சிரமப்படுவதுடன் பல பொறுப்புகளால் திணறிப்போவதுமுண்டு.
என் வாழ்க்கையில் நான் செய்யும் செயல்களை ஒவ்வொரு பகுதிகளாகப் பிரித்து வைத்திட முடியாது. மனித உரிமை செயற்பாடுகள் என் வீடு வரை என்னைத் தொடர்ந்து வரும். ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைத் தீர்ப்பதற்காகவோ அல்லது ஒரு துறையை மேம்படுத்துவதற்காகவோ, உருவாக்கப்பட்ட கொள்கைகள், விதிமுறைகள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய அதிகாரப்பூர்வ ஆவணங்களை நினைக்கையில் ஒரு கவிதை வரி என்னை வந்து சேரும்; ஓர் உரையாடலோ ஒரு திரைபடத்தின் தொடக்கமாக மாறும்.
இவையனைத்தும் முக்கியமானவைதான். ஆனால், அவசரமாகச் செய்ய வேண்டியவை அல்ல என்பதைப் புரிந்துகொள்வதில்தான் சவால் உண்டு.
சமூகச் செயல்பாடுகளில் எப்பொழுதுமே நிலையான ஓர் அவசரநிலை நிலவுவதை நாம் உணரலாம். ஆபத்திலிருக்கும் நபரைக் காப்பாற்றுதல், அநீதிகளுக்காகப் போராடுதல், வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டிய செய்திகளை எழுதுதல் ஆகிய பொறுப்புகளால் நிறைந்திருப்பதுதான் சமூகச் செயல்பாடுகள்.
எழுத்துப்பணி முற்றிலும் வேறுபட்டது. அது என்னை ஐயத்தோடு உட்கார வைக்கின்றது. ஒரு கருத்தை உயிர் பெறச் செய்கின்றது. சில சமயங்களில் நான் சொல்ல வருவதை நானே புரிந்துகொள்ளும் வரை ஏதும் செய்யாமலிருக்கச் செய்கிறது.
எல்லா தருணங்களிலும் எல்லோருக்கும் பயனளிக்கும் ஒருத்தியாக என்னால் இருக்க முடியாது என நான் கற்றுக்கொண்டேன். என் பணிகளைத் தாண்டி எனக்கும் ஓர் வாழ்வுண்டு, அந்த வாழ்க்கையை வாழ்வதற்கான உரிமை எனக்குண்டு. நாம் நம்மை வருத்திக்கொண்ட பிறகுதான் ஓய்வெடுக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. எனக்கு என் குடும்பம் முக்கியம். முதலில் நான் ஒரு மகள்; பிறகு துணைவி, அதற்குப் பிறகு தாய்.
உங்கள் மனதிற்கு அமைதியையும் புத்துணர்ச்சியையும் அளிக்கும் அன்றாடப் பழக்கங்கள், சடங்குகள், புத்தகங்கள், பொழுதுபோக்குகள் அல்லது வழக்கமான செயல்பாடுகள் ஏதும் இருந்தால் சொல்லுங்கள்.
மஹி ராமகிருஷ்ணன்: பயனுள்ள ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற கட்டாய எண்ணம் இல்லாமல், வெறுமனே நாம் நாமாக இருப்பதில்தான் மனப்புத்துணர்வு உருவாகின்றது என நான் நினைக்கின்றேன். அநீதிகளுக்கு எதிராகச் செயல்படும் பணியைச் செய்வதனால், ஒவ்வொரு தருணத்திலும் நாம் தொடர்ந்து என்ன செய்ய வேண்டும் என்ற கண்ணோட்டமே நம்முள் படர்ந்திருக்கும்.
கர்நாடக இசையில் ஈடுபடுதல், நடனமாடுதல், வாசித்தல், எழுதுதல் ஆகிய செயல்களின் வழி என்னை நான் மீட்டுக்கொள்கிறேன். நான் இப்பொழுதுதான் கதகளி ஆட கற்கிறேன். நான்கு வயதிலிருந்து பரதம் ஆடுகின்றேன். எனது அனுபவங்களுக்கு அப்பாற்பட்டுள்ள வாழ்க்கையையும் உலகையும் உணர்வதற்கான வாய்ப்பை இலக்கியமும் கலைகளும் எனக்கு வழங்குகின்றன. அதே போல், அனைத்திற்கும் விளக்கமளிக்கவோ தீர்வு சொல்லவோ வேண்டியதில்லை என்பதை கவிதைகள் எனக்கு உணர்த்துகின்றன.
யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லாத அமைதியான தருணங்களை நான் மதிக்கின்றேன். நான் ஏதோவொன்றை வெறுமனே சிந்திப்பதையும், உற்றுக்கவனிப்பதையும் அல்லது ஏதும் செய்யாமல் அமைதியாக இருக்கும் தருணங்களுக்கும் மதிப்பளிக்கின்றேன். ஓய்வெடுப்பதுகூட பலனளிக்கும் மற்றொரு உடற்பயிற்சியாக மாற்றிவிடக் கூடாது என்பதில் நான் கவனமாக இருக்கிறேன்.
உங்களை வடிவமைத்த பெண்கள், வழிகாட்டி அல்லது அரசியல் ஆளுமைகள் குறித்து சொல்ல முடியுமா?
மஹி ராமகிருஷ்ணன்: தங்களின் உலகில், தன்னைத் தானே சுருக்கிக்கொண்டு வாழ மறுக்கும் பெண்களே என்னை அதிகம் கவர்கின்றனர். அவ்வகையில் அப்பெண்களில் முதலில் இருப்பது எனது தாய், கௌரி. அவர் வலிமையான ஒரு பெண். விருட்சக ராசிக்காரரான அவர், உணர்ச்சிகளின் அடிப்படையில் ஒருபோதும் முடிவெடுத்ததில்லை.
அன்பை மையமாகக் கொண்ட எந்தச் செயல்களாக இருந்தாலும் அதை நான் செய்வதற்கு எனக்கு நானே அனுமதி அளித்துக்கொள்ள வேண்டும் என்று அவர் எனக்குச் சொல்லியிருந்தார். ”இந்தச் சமூகம் என்ன சொல்லும்?” ”சொந்தக்காரர்கள் என்ன நினைப்பார்கள்?” ஆகியவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்க கற்றுத் தந்தவர் அவர்.
என்னுடன் நான் கொண்டிருக்கும் உறவுதான் அனைத்து உறவுகளிலும் முக்கியமானது என வழியுணர்த்தினார். ஆனால், என் மகன் பிரதீபன் பிறந்த பிறகு அவர் மென்மையானவராக மாறினார். பின்னர் என் மகள் ஷவிதா பிறந்தாள். இருவரும் அவரது உலகத்தையே ஒளிரச் செய்தார்கள்.
எல்லா வகையிலும் சிறந்திருக்கும் பெண்களைவிட, அதிகாரங்களையும் அந்த அதிகாரங்கள் செயல்படும் முறைகளைப் பற்றி கேள்வி எழுப்பும் பெண்களைக் கண்டாலே எனக்கு வியப்பாக இருக்கும். புரிந்துகொள்ள கடினமாக இருக்கும் ஆளுமையைக் கொண்டுள்ள ஃப்ரிடா காலோ, வர்ஜீனியா வூல்ஃப் ஆகிய பெண்களை எனக்குப் பிடிக்கும். அதேபோல், இந்தியாவின் ஆணாதிக்கம் நிறைந்த கர்நாடக இசை உலகில் தனக்கென ஓர் இடத்தை உருவாக்கி, அமைதியான புரட்சிக்கே ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்த டி.கே. பட்டம்மாளும் என் மனதைக் கவர்ந்தவர்.
தன்னையே அர்ப்பணிக்கும், அன்பைப் பொழியும், பொறுமையாக இருக்கும், மாசற்ற ஒழுக்கத்துடன் வாழும் பெண்களையே நாம் கொண்டாடுகிறோம். ஒரு பெண் கோபப்பட தொடங்கினாலோ, உயர்ந்த இலட்சியங்களைக் கொண்டிருந்தாலோ, பிறருக்குச் சவாலாகத் தோன்றினாலோ அல்லது தனது நிலைப்பாட்டைத் தயக்கமின்றி வெளிப்படுத்தினாலோ, அவளது குணத்தையே நாம் கேள்விக்குள்ளாக்கத் தொடங்குகிறோம். மாறாக, அவளது கோபத்திற்குப் பின் உள்ள காரணத்தைதான் நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டும்.
தான் ஒரு வழிகாட்டி எனச் சொல்லிக் கொள்ளாத மனிதர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை ஊடகவியல் எனக்குச் சொல்லித் தந்தது. இடப்பெயர்வு, வன்முறை, புறக்கணிப்பு ஆகியவற்றை எதிர்கொண்டு வாழ்பவர்கள் பல நேரங்களில், நிறுவனங்களால்கூட புரிந்துகொள்ள இயலாத அரசியல் தெளிவைக் கொண்டிருக்கிறார்கள். அதிகாரத்தின் விளைவுகளை நேரடியாக அனுபவித்திருக்கும் அவர்களால் அதிகாரம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆழமாகப் புரிந்து வைத்துள்ளார்கள்.
அதிகாரம் கொண்டிருப்பவர்கள் மட்டுமே அரசியலை வடிவமைக்க வேண்டுமென்பது இல்லை. சில சமயங்களில், நாம் அதிகாரத்தின் விளைவால் கண்ணுக்கே தெரியாமல் போன மனிதர்களிடமிருந்துதான் அதிகம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.
சமூகச் செயல்பாடுகளில் ஈடுபடும்போது நிலவும் மனச்சோர்வுக்கும் ஓய்வெடுப்பதற்கான உரிமைக்கும் இடையே எவ்வாறு சமநிலையைப் பேணுகிறீர்கள்?
மஹி ராமகிருஷ்ணன்: அதை எப்படிச் சமநிலை செய்ய வேண்டும் என்று நான் இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறேன். சோர்வடைவதை நான் மகத்துவப்படுத்த விரும்பவில்லை. காரணம், நாம் விரும்பி, அக்கறை கொண்டு செய்யும் பணியைத் தொடர்ந்து செய்ய முடியாத அளவிற்குச் சோர்ந்துபோவதில் எந்தவிதமான பெருமையும் இல்லை.
சமூகச் செயல்பாட்டில் ஈடுபடும் ஒருவர் ஓய்வெடுக்க அனுமதிக்கப்படாத நிலை என்பது அபத்தமானது. நாம் ஒருவரின் சிக்கலுக்குப் பதில் கூறுபவராகவோ, ஒருங்கிணைப்பாளராகவோ, அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பவராகவோ இருந்தால், நாமும் ஒரு மனிதன்தான், நமக்கும் உணர்வுண்டு என்பதையே மற்றவர்கள் மறந்துவிடுகின்றனர்.
ஒருமைப்பாடு என்பது நாம் நம்மை மற்றவர்களுக்காக அளவற்று அர்ப்பணித்துக்கொள்வதில்லை என்பதை நான் புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டேன். தங்களின் உடல் நலம், உறவுகள், வாழ்க்கை என அனைத்தையும் அர்ப்பணிக்கும் சிலரை மட்டுமே நம்பியிருக்காமல் கூட்டு மனப்பான்மையோடு செயல்படும் இயக்கம் அல்லது நிறுவனங்கள் நமக்குத் தேவை.
குறிப்பாக, பெண்கள் தங்களுக்குத் தாங்களே முன்னுரிமை கொடுத்துவிட்டால் அதற்காக அவர்கள் குற்றவுணர்வு அடைய இச்சமூகத்தால் பழக்கப்படுத்தப்படுகிறார்கள். பிறருக்காக நாம் என்ன செய்கிறோம் என்பதில்தான் நமக்கான மதிப்பு உள்ளது என்று நமக்குக் கற்பிக்கப்பட்டுள்ளது.
சமூகத்திற்குள் மாற்றத்தைக் கொண்டு வர போராடும் ஒருவர், அச்செயலில் முற்றிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, முழுமையாகத் தன்னை இழந்துவிடக் கூடாது. அவ்வாறு தன்னைத் தானே இழக்கும் நிலையை நான் ஒருபோதும் விரும்பவில்லை. புதியவற்றை அறியும் ஆவலுடனும் ஆக்கத்திறனுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கவே நான் விரும்புகிறேன். ஓய்வெடுப்பது ஒன்றும் நமது போராட்டத்திற்குத் தடையாக விளங்கும் துரோகச் செயல் அல்ல. மாறாக, அந்தப் போராட்டம் நம்மிடம் உள்ள அனைத்தையும் விழுங்கிவிடாமல் தடுக்கும் முறைதான்.
கர்நாடக இசை, கதக் நடனத்தின் வழிதான் நான் எனக்கான வெளியை, நேரத்தை நான் நானாக இருப்பதற்கான அனுமதியைப் பெற்றுக் கொண்டு என்னை மீட்டெடுக்கின்றேன். கண்டிப்பாக இதையெல்லாம் பார்த்து என் அம்மா கௌரி பெருமைபடுவாள்.

நீங்கள் ஊடகவியலாளராகப் பணியாற்றும்போது பலரின் துயரங்களைக் கேட்டுள்ளதாகச் சொல்லியிருந்தீர்கள். அவ்வளவு துயரங்களைக் கேட்ட பின்பு, நடுநிலையாக இருப்பது சாத்தியமற்ற செயல் என நீங்கள் உணர்ந்த தருணம் எது?
மஹி ராமகிருஷ்ணன்: ஆதாரங்களைத் திரட்டுதல், தகவல்களைச் சரிப்பார்த்தல், கடினமான கேள்விகளைக் கேட்டல் ஆகிய முக்கியமான பணிகளை ஊடகவியல் எனக்குக் கற்றுக் கொடுத்தது. ஆனால், மனிதக் கடத்தல் மற்றும் கட்டாய இடப்பெயர்வு தொடர்பான செய்திகளைத் தொடர்ந்து பதிவு செய்துகொண்டிருந்த எனக்கு, அந்த அநீதிகளை ஆவணப்படுத்துவது மட்டும் போதுமானது என்று எண்ணி செயலாற்ற கடினமாக இருந்தது.
கடத்தப்பட்ட, சுரண்டப்பட்ட அல்லது பாதுகாப்பு வழங்கப்படாமல் நிராகரிக்கப்பட்ட ஒருவரைப் பற்றி உங்களால் சிறந்த செய்தி ஒன்றை எழுதிட முடியும். அதைப் பிரசுரம் செய்துவிட்டு அடுத்த பணியைச் செய்ய தொடங்கிவிடலாம். ஆனால், நீங்கள் எழுதிய நபரின் துயரங்கள் தீர்க்கப்படாமலே இருக்கும். அந்தத் துயருக்குக் காரணமான அமைப்புகளும் எந்தவித மாற்றமுமின்றி செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கும்.
சில கடுமையான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டிய சூழல் ஊடகவியல் துறையில் இருக்கின்றது. ஆக, அந்த விதிமுறைகளை மீறி செயல்பட்டால் இச்சிக்கல்களெல்லாம் முடிவுக்கு வந்துவிடுமா என்று கேட்டால், கண்டிப்பாக இல்லை என்றே கூறுவேன். ஊடகவியலின் விதிமுறைகளை மீறுவதினால், இந்தச் சிக்கல்கள் ஏதும் முடிவுக்கு வரப்போவதில்லை. மாறாக, நமக்கு முன்பைவிட இப்பொழுதுதான் இன்னும் துல்லியமான தகவல்களும் நுண்ணாய்வுகளும் தேவைபடுகின்றது. நாம் கூடுதல் பொறுப்புடன் செயல்படுவதும் அவசியமாகின்றது.
ஒரு செய்தி பிரசுரமான பிறகு, என்னை நானே கேள்வி கேட்க தொடங்கினேன். இந்தக் கொள்கைகளின் மாற்றத்திற்காக உழைக்க போவது யார்? யார் இந்த நிறுவனங்களுக்குச் சவால்விடப் போகிறார்கள்? சிலரின் தனிப்பட்ட வாழ்க்கை பலர் அறிய வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்பட்டது. அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துணையாக நிற்கப் போவது யார்?
Beyond Borders Malaysia அமைப்பையும் Refugee Festival-ஐயும் உருவாக்க தூண்டியது எது?
மஹி ராமகிருஷ்ணன்: கதைகளைச் சொல்வதும் சமூக மாற்றத்திற்காகப் பரிந்து பேசுவதும் ஒன்றோடொன்று இணைந்து செயல்பட முடியும் என்ற புரிதலிலிருந்து உருவானதுதான் Beyond Borders Malaysia. Refugee Festival ஓர் உள்ளுணர்வின் வழி உருவானது. துயரங்கள் மற்றும் எல்லைகள் குறித்த விவாதங்களின் வழி மட்டுமே அகதிகள் அறியப்படக் கூடாது. அவர்களிலும் கலைஞர்கள், எழுத்தாளர்கள், இசை கலைஞர்கள், பெற்றோர்கள், பல கனவுகளைச் சுமந்துகொண்டிருப்பவர்களும் உள்ளனர்.
அதேபோன்ற ஓர் உணர்விலிருந்துதான் Refugee Festival உருவானது. அகதிகளைத் துயரங்களின் காட்சிகள் மூலமாகவோ, எல்லைக் கட்டுப்பாடுகள் குறித்த விவாதங்கள் மூலமாகவோ மட்டுமே நாம் அணுகக் கூடாது. அவர்களும் கலைஞர்கள், எழுத்தாளர்கள், இசைக்கலைஞர்கள், பெற்றோர்கள் மற்றும் பல்வேறு கனவுகளையும் எதிர்பார்ப்புகளையும் கொண்ட மனிதர்களே.
ஒன்றின் மீது ஆர்வமோ பற்றோ இல்லாமல் இருந்தால், அது நடுநிலையாக இருப்பதற்குச் சமம் அல்ல. துல்லியத்துடன் தகவல்களை அணுகுவதும் அநீதிகளைக் குறித்த தெளிவான பார்வையும் கொண்டிருப்பதுதான் நடுநிலைமை என நான் நம்புகிறேன்.
கவிதைகள், ஆவணப்படங்கள், கதைகூறல் எவ்வாறு முடக்கமடைந்த கொள்கையையும் (policy deadlocks) மக்களின் அலட்சியத்தையும் உடைத்தெறிகிறது?
மஹி ராமகிருஷ்ணன்: கொள்கைகள் பல்வேறு பிரிவுகளைப் பற்றி பேசுகின்றன. எண்கள், வழக்குகளின் எண்ணிக்கை, அமலாக்கங்கள், தேசியத்தின் நலன், நிர்வாக நடைமுறைகள் என இவற்றை குறித்துப் பேசுகின்றன. இவை அனைத்தும் முக்கியமானவைதான். ஆனால், இவற்றுக்குப் பின் சிலரின் வாழ்க்கை மறைந்துவிடுகின்றது. கதை கூறல், மறைக்கப்பட்ட அந்த வாழ்க்கையை மீண்டும் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கின்றது.
அகதிகள் குறித்த புள்ளிவிவரங்கள் எத்தனை பேர் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர் என்ற தகவலை மட்டுமே நமக்குக் கூறும். ஆனால், கவிதைகள் தங்களின் தாய்நிலத்தை இழந்த ஒருவரின் துயரை நமக்கு உணர்த்திச் செல்லும். நாம் ஒருபோதும் அனுபவித்திட முடியாத ஒருவரின் வாழ்க்கை அனுபவத்தை நமக்குக் காட்டி அதன் வழியாக உலகைப் பார்க்க நமக்கு உதவுவதுதான் ஆவணப்படங்கள்.
செய்திகளில் உள்ள உண்மைத்தன்மை உருவாக்க இயலாத கவனத்தையும் அக்கறையையும் கலைகள் உருவாக்கக் கூடும். கலைகள், இதற்கு முன் நாம் ஏற்றுக்கொண்ட விளக்கங்களை நினைத்து நம்மைச் சங்கடமையச் செய்யும் அல்லது நாம் உருவாக்கியிருக்கும் விழுமியங்களுக்கும் நமது செயலுக்கும் இடையில் உள்ள இடைவெளியை நமக்கு அம்பலப்படுத்திக் காட்டும்.
ஆனால், சமூகத்தில் மாற்றத்தை உருவாக்கும் ஒரு தகவல்தொடர்பு கருவியாக மட்டும் கலைகள் மாறிவிடக் கூடாது.
கொள்கைகளில் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற பரிந்துரையோடு ஒரு கவிதை முற்றுப் பெறக் கூடாது. திரைப்படங்கள் தெளிவான தீர்வை முன்வைக்க வேண்டியதில்லை. கொள்கைகள் மூடி மறைக்கும் விடயங்களைக் குறித்து வினா எழுப்பும் சுதந்திரத்தை என்றுமே கலைகள் கொண்டிருக்கின்றது.
வலிமை மிகுந்த படைப்புகள் மனிதர்களுக்கு எதனைச் சிந்திக்க வேண்டும் என்பதை உணர்த்துவதில்லை. மாறாக, எதையும் கண்டுகொள்ளாமல் கடந்து செல்வதைக் கடினமாக்குகின்றன.
2001ஆம் ஆண்டு நீங்கள் தாய்லாந்தின் தெற்கு பகுதியில் இரகசிய புலனாய்வு ஒன்றினை மேற்கொண்டீர்கள். அதே காலத்தில் உங்கள் வீடும் சூரையாடப்பட்டது. இந்த இரு சம்பவங்களும் அச்சம் மற்றும் தனிநபர் பாதுகாப்பு குறித்த உங்கள் புரிதலை எவ்வாறு மாற்றின?
மஹி ராமகிருஷ்ணன்: அந்தச் சம்பவத்தின் வழிதான் ஊடகவியல் என்பது பாதுக்காப்பான வளையத்துக்குள் இருந்து செயல்படும் அறிவுச்சார் செயல்பாடு மட்டுமல்ல என்பதை நான் உணர்ந்து கொண்டேன். நாம் புலனாய்வு செய்யும் மனிதர்களும் அமைப்புகளும் நாம் செய்யும் புலனாய்வின் விளைவால் அவர்கள் ஏதாவது ஒன்றை இழக்க நேரிடுமென்றால், நாம் செய்யும் புலனாய்வின் தாக்கம் நமது தனிப்பட்ட வாழ்க்கைக்குள்ளும் நுழைந்துவிடுகின்றது.
எந்தவொரு பாதுகாப்பு குறித்த கவலையின்றி நிம்மதியாக இருக்கக்கூடிய இடம்தான் நமது வீடு. அப்படிப்பட்ட உணர்வையளிக்கக்கூடிய வீட்டை சூரையடித்த சம்பவம் என்னை மிகவும் நிலைகுலையச் செய்தது.
ஒரு ஊடகவியலாளராக நான் என்னையும் மீறி சிலவற்றைப் புலனாய்வு செய்கிறேன். ஆனால், அதே சமயம் ஒரு தாயாக நான் என் குழந்தைகளின் பாதுகாப்பைப் பற்றியும் சிந்திக்க வேண்டியிருந்தது. இப்பொழுதுகூட, என்னுடைய 2 பிள்ளைகளும் அன்றைய தினம் வீட்டில் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.
உங்களைச் சார்ந்து சில உயிர்கள் இருந்தால், அச்சமென்பது சிக்கலான ஒன்றாக மாறிவிடும். ஆபத்தை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோமா என்ற கேள்வியைத் தாண்டி நாம் செய்யும் பணியால் யாரெல்லாம் அதன் விளைவுகளைச் சந்திக்கக் கூடும் என்பதைச் சிந்திக்கும் நிலைக்கு ஆளாக நேரிடுகின்றது.
நான் அந்த அனுபவத்தை மிகைப்படுத்தி கூற விரும்பவில்லை. அதே சமயம், துணிவென்பது பயமில்லாம் இருப்பதென்றும் நான் கூற மாட்டேன். சில சமயங்களில் நாம் ஆற்றும் பணியால் நாம் எம்மாதிரியான விளைவுகளைச் சந்திக்க நேரிகும் என்பதனைத் தெளிவாக அறிந்திருந்தும், அப்பணிகளைக் கைவிடாமல் தொடர்ந்து செய்ய முடிவெடுப்பதுதான் துணிவு.
ஆனால், நான் கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கொண்டேன். இந்தச் சம்பவம் நடந்த காலக்கட்டத்தில்தான், நான் குழந்தை கடத்தல் பற்றிய ஆவணப்படம் ஒன்றை முடித்திருந்தேன். அதோடு, புலம்பெயர்ந்தோர்களைக் கடத்தும் சம்பவத்தைப் பற்றிய மற்றொரு செயல்திட்டத்தையும் முன்னாள் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோவுக்காகத் தொடங்கியிருந்தேன். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், அந்தச் சம்பவம் நிகழ்ந்த மாலையில்தான் நான் கடத்தல்காரர் ஒருவரைச் சந்தித்து நேர்காணல் செய்ய ஏற்பாடு செய்திருந்தேன். மீண்டும் அந்த ஆவணப்படத்தை இயக்க எனக்கு ஒரு மாதக் கால அவகாசம் தேவைபட்டது.
அந்த அனுபவத்தின் வழி நான் மற்றொன்றையும் கற்றுக்கொண்டேன். ஊடகவியலாளர்கள் அல்லது சமூகச் செயற்பாட்டாளர்கள் தங்களை நிரூபிக்க ஆபத்துகளுக்குள் சிக்கிக்கொள்ள வேண்டும் என்பதல்ல. கடினமாக பணிகளைச் செய்பவர்களுக்குப் பாதுகாப்பும் ஆதரவும் வழங்கப்பட வேண்டும். தங்களைச் சூழ்ந்துள்ள ஆபத்தைக் குறித்து தெளிவாகச் சிந்தித்து முடிவெடுக்கச் சுதந்திரமும் வழங்கப்பட வேண்டும்.
இருப்பத்தைந்து ஆண்டுகள் கடந்துவிட்டன, ஆனால் இன்னும் பெண் ஊடகவியலாளரையும், திரைப்பட இயக்குநர்களையும், சமூகச் செயற்பாட்டாளர்களையும் பாதுகாக்கும் வழிமுறைகள் இன்னும் அமலுக்கு வரவில்லை.

Bou திரைப்படத்தைத் தயாரித்தப் பின் அதன் வழி நீங்கள் பெற்ற அனுபவம் என்ன? உங்களை நீங்களே மீட்டெடுத்து வந்துள்ளீர்கள். அதில் அகதிச் சமூகத்தினரின் பங்கு என்ன? மீண்டெழும் ஆற்றலைப் பற்றி அவர்கள் உங்களுக்குக் கற்பித்தது என்ன?
மஹி ராமகிருஷ்ணன்: மீண்டெழும் ஆற்றல் என்பது தனிநபரின் வெற்றி என நாம் கருதுவது ஒரு வகையான புரிதலின்மை என்றே நான் நினைக்கிறேன். தன்னைத் தானே மீட்டெடுத்து தொடர்ந்து வாழும் நபர்களை நாம் கொண்டாடுகிறோம். நீ எவ்வளவு வலிமைமிக்கவன் என அவர்களிடமே கூறுகிறோம். ஆனால், ஏன் அவர்களின் வாழ்க்கையில் அத்தகைய துன்பங்கள் நேர்ந்தன? அத்துன்பங்களிலிருந்து அவர்கள் தங்களை எவ்வாறு மீட்டெடுத்தனர்? தன்னைத் தானே மீட்டெடுத்துக்கொள்ளும் முயற்சியில் எவையெல்லாம் அவர்களுக்கு ஆதரவாக விளங்கியது? என்ற கேள்விகளைக் கேட்க தவறிவிடுகிறோம்.
வலிமையைக் குறித்த எனது புரிதலையே கேள்விக்குள்ளாக்கியது Bou திரைப்படத்தின் தயாரிப்பு.
பாலியல் வன்முறை குறித்தும் நான் பணியாற்றிக் கொண்டிருந்தேன். மனதளவில் மிகவும் கடினமான, ஏற்றுக்கொள்ள முடியாத வேதனையான விடயங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அத்தருணத்தில்தான், என்னையும் இக்கதைகள் உணர்வுப்பூர்வமாக பாதிக்கும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை உண்டாகியது.
அந்த ஆவணப்படத்தை இயக்கும் பணியிலிருந்து சிறிது காலம் விலகியிருந்தேன். நான் பெற்ற அனுபவத்தை மனதளவில் புரிந்துகொள்ளவும் அவற்றிலிருந்து மீண்டு வரவும் எனக்கு தனிமையும் காலமும் தேவைப்பட்டது.
14 வயது சிறுமி, தான் 60க்கும் மேற்பட்ட கடத்தல்காரர்களால் கற்பழிக்கப்பட்டதாகக் கூறும் போது எவரால் உணர்ச்சியற்று இருக்க முடியும்.
துயரங்களின் வழியாக மட்டுமே உலகால் அடையாளப்படுத்தப்படும் மனிதர்கள்கூட பிறரிடம் பரிவுடன் நடந்துகொள்ள முடியும், நகைச்சுவையைப் பகிர்ந்துகொள்ள முடியும், துணையாக விளங்க இயலும், வாழ்க்கையைப் பற்றிய புதிய கண்ணோட்டத்தை நமக்கு அளித்திட முடியும் என்பது என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அகதிச் சமூகத்தினர், நான் உதவிக் கொண்டிருக்கும் சமூகம் மட்டுமல்ல. பல முக்கியமான வழிகளில், அவர்களில் பலர் எனக்கு உதவியதுண்டு.
நாளைய தினம் இன்றைய தினத்தைவிடச் சிறப்பாக இருக்கக்கூடும் என்று எனக்குக் கற்றுத் தந்தனர். நம்பிக்கையுடன் இருக்கவும், தொடர்ந்து விடாமுயற்சியுடன் முன்னேறவும் கற்றுக்கொடுத்தார்கள்.
அவர்களின் கதைகளை, இல்லத்தை, உணவை என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள். இவையனைத்திற்கும் நான் என்றுமே நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
என்னுடைய இந்தப் புரிதல், உதவி வழங்குபவர், உதவி பெறுபவர் என நாம் வழக்கமாகப் பிரித்துப் பார்க்கும் அணுகுமுறையையே கேள்விக்குள்ளாக்கியது. ஆழமான காயங்களாலும் துயரங்களாலும் பேரதிர்ச்சியை எதிர்கொண்டு வந்தவர்களால் வலியைத் தவிர வேறெதையும் நமக்கு அளித்திட முடியாது என்று நாமாக முன்முடிவுக்கு வருகிறோம்.
ஆனால், மனிதர்கள் தாங்கள் அனுபவித்த மனப்பாதிப்புகளால் மட்டுமே வரையறுக்கப்படுபவர்கள் அல்ல. அவர்களுக்கென்று தனித்த அறிவும், பெருந்தன்மையும், அரசியல் சார்ந்த சிந்தனைகளும், பிறரிடம் அக்கறை செலுத்தும் பண்பும் இருக்கின்றன. நம்மை நாமே ஆற்றுப்படுத்தி மீண்டெழுவதென்பது ஒருவழிப் பாதையில்லை என்பதை நான் அறிந்து கொண்டேன். சில நேரங்களில், நாம் யாருக்குத் துணையாக நிற்கிறோமோ, அவர்களே நாம் நம்மைக் கண்டடைவதற்கான வழியைக் காட்டும் நபராக மாறிவிடுகின்றனர்.
பாலியல் தொழில் குற்றமற்றது எனக் கருதும் உங்கள் நிலைபாட்டிற்கு எழும் பண்பாட்டு அல்லது மத ரீதியான எதிர்ப்புகளுக்கு நீங்கள் எவ்வாறு பதிலளிக்கிறீர்கள்?
மஹி ராமகிருஷ்ணன்: ஒழுக்கம் சார்ந்து நாம் சில நம்பிக்கைகளை வரையறுத்துள்ளோம். அந்த நம்பிக்கைகளின் அடிப்படையில் பாலியல் தொழில் செய்பவர்களைக் குற்றவாளியாகக் காணாமல், அவர்களுக்கும் பாதுகாப்பு அவசியம், வன்முறைகளிலிருந்து அவர்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஒழுக்கம் சார்ந்த நமது நம்பிக்கைகளையும் அவர்களுக்கு நேரும் வன்முறைகளையும் ஒன்றோடொன்று தொடர்புப்படுத்திப் பார்க்காமல், அதனை வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.
தார்மீக ரீதியில் ஒருவர் செய்யும் செயலை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், உடனடியாக நாம் அவர்களைக் குற்றவாளியாக ஆக்கிவிடுகிறோம். ஆனால், அதிகாரமும் செல்வாக்குமற்ற எளிய மனிதர்கள்தான் இதற்குப் பலியாகின்றனர்.
பாலியல் தொழில் செய்பவர்களைக் குற்றவாளியாக்குவதால் அவர்கள் பாதுகாக்கப்படுகிறார்களா அல்லது மேலும் பல துன்பங்களை எதிர்நோக்குகிறார்களா என நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். அவர்களைக் குற்றவாளியாக்குவதால் முறையான மருத்துவச் சேவையை அவர்களால் பெற இயலுகின்றதா? அவர்களுக்குச் சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்கப்படுகின்றதா? அல்லது அவர்களுக்கு நேரும் கொடுமைகளை அவர்களால் தைரியமாக காவல் அதிகாரிகளிடம் புகார் செய்ய முடிகின்றதா என நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
என் கருத்துடன் முரண்படுபவரிடம் நான் கடினமான விவாதங்களை நடத்த தயாராக இருக்கிறேன். ஆனால், தார்மீக ரீதியான மறுப்பை ஆதாரமாகக் கொண்டு ஒரு கொள்கையை நியாயப்படுத்துவதை நான் எதிர்க்கிறேன்.
மதம் மற்றும் பாரம்பரியமான கலாச்சாரங்கள் அனைத்தும் ஒரே மாதிரியானவை அல்ல. அதே போல அவற்றைப் பின்பற்றி வாழும் மக்களும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல. நாம் வரையறுத்திருக்கும் கொள்கைகளைக் குறித்து நாம் விவாதிக்கலாம். ஆனால், அந்தக் கொள்கைகளால் பாதிப்பைச் சந்திக்கும் மனிதர்களை என்றுமே நாம் அவமதிக்கவோ பாதுகாப்பளிக்காமல் புறக்கணிக்கவோ கூடாது.
என்னைப் பொறுத்தவரையில் நான் முன்வைக்கும் கேள்வி மிக எளிமையானதுதான். இந்தக் கொள்கைகள் பாதிப்புகளைக் குறைக்கின்றதா, உரிமைகளை பாதுகாக்கின்றதா, மக்கள் அதிக பாதுகாப்புடன் வாழ வழிவகுக்கின்றதா? இந்த அளவுகோலின் அடிப்படையில்தான் நாம் ஒரு கொள்கையை மதிப்பிட வேண்டும்.
உங்களுடைய கவிதைகள் ஒதுக்கப்பட்டவர்கள், தாங்கள் வாழும் இடத்தைவிட்டு வெளியேற்றப்பட்ட பெண்கள், வன்முறைக்கு இரையாகி மீண்டெழுந்தவர்களைப் பற்றி பேசுகின்றது. ஏன் இவர்களின் வாழ்க்கையைக் கூற காளியைப் படிமமாக்கினீர்கள்?
மஹி ராமகிருஷ்ணன்: காளி, யாருடைய தேவைக்காகவும் வசதிக்காகவும் தன்னை மாற்றிக்கொள்ளதாவள். என்னை முதலில் கவர்ந்ததே அவளுடைய அந்தக் குணம்தான். உக்கிரமானவள், புரிந்துகொள்ள கடினமானவள், ஆக்கத்திறன் கொண்டவள், எதற்கும் மன்னிப்புக்கோராதவள்.
இந்தச் சமூகம் ஒரு பெண்ணிடம் எதிர்ப்பார்க்கும் குணத்திற்கு முரணானவள். தன்னைச் சுற்றி என்ன நிகழ்ந்தாலும் பெண் பொறுத்துக்கொள்ள வேண்டும் எனக் கூறும் சமூகத்தின் கருத்திற்கும் அடங்கிப்போகாதவள்தான் காளி.
வலுக்கட்டாயமாக தாங்கள் வாழும் இடத்தைவிட்டு வெளியேற்றப்பட்ட, வன்கொடுமைக்கு ஆளான, விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட பெண்களின் வாழ்க்கையை ஆழமாக ஆராய்ந்து கூற எனக்குக் காளி தேவைபட்டாள். அவளைப் படிமமாக்கினேன்.
அதோடு, நான் கூறிய இந்தப் பெண்களின் வாழ்க்கை கதையைக் கூறும் எவராக இருந்தாலும் கண்டிப்பாக அப்பெண்களின் துயரங்களின் வழியே அவர்களின் வாழ்க்கையை விவரிப்பர். இவ்வளவு துயரங்களைக் கடந்த இப்பெண்களிடம் இந்தச் சமூகம் எதிர்பார்க்கக்கூடிய சில விஷயங்கள் மிக அபத்தமானவை. அவர்களைக் காப்பாற்றியவருக்கு அவர்கள் நன்றியுடன் இருக்க வேண்டும், அவ்வளவு சித்தரவதைகளைச் சந்தித்தப் பின்பும் அதையெல்லாம் மன்னிக்கும் குணம் படைத்தவளாக இருக்க வேண்டும், எவரோ ஒருவரால் அவள் கைவிட்டப்பட்டாலும் அவள் மீண்டும் மீண்டெழுபவளாக இருக்க வேண்டும் போன்ற எதிர்பார்ப்புகள் அந்தப் பெண்களின் மீது திணிக்கப்படுகின்றது.
ஆனால், இந்தப் பெண்களுக்குள் புதைந்திருக்கும் கோபத்தைப் பற்றி யார் பேசுவது? அவர்களுக்கு வேண்டியது அனுதாபம் இல்லை; நீதி. அத்தனை துயரங்களைக் கடந்து மீண்டெழுந்து வந்த அவர்களை முன்மாதிரியாக்கிக் கொண்டாடுவதை விரும்பாத அவர்களின் குணத்தைப் பற்றி யார் பேசுவது?
இந்தச் சமூகம் நாகரிகம் என்ற பெயரில் அடக்கி வைக்க விரும்பும் உணர்வுகளைப் பற்றி பேச காளி எனக்கு ஒரு மொழியைக் கொடுத்தாள்.
நான், காளி யாருக்காகவும் எந்தச் சமரசமும் செய்யாமல், தான் எப்படி இருக்கிறாளோ அப்படியே தன்னை வெளிகாட்டிக்கொள்ளும் அவளின் குணத்தை விரும்பினேன்.
பெண்கள் வெண்ணிறத் தோலுடன் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கும் சமூகத்திற்கு எதிராக அவள் கருமையாக இருந்தாள். நான் மாநிறத்தோல் கொண்டவள். என்னுடைய உறவுக்கார பெண்கள், என் மாநிறத்தைக் காரணம்காட்டி, நான் அழகற்றவள் என்ற உணர்வை எனக்குள் விதைத்துச் சென்றனர். அதனால், நான் என்னைக் காளியின் தோற்றத்தோடு அடையாளப்படுத்திக் கொள்ள தொடங்கினேன்.
தங்களின் குடும்பத்தின் வளத்தை வெளிக்காட்டிக்கொள்ளும் வகையில் பெண்களை நகை அணியச் சொல்லும் சூழலுக்கு எதிராக காளி கழுத்தில் நகைகளை அணியாமல், கபால மாலையை அணிந்திருப்பாள். நான் வளரும்போது, ஆண்களின் கவனம் சிதறாமலிருக்க என்னுடைய சுருட்டை முடியைக் கட்டச் சொல்வார்கள். குறிப்பாக கோயிலுக்குச் செல்லும்போது. ஆனால், காளியின் கூந்தலோ கட்டப்படாமலிருக்கும். பெண்கள் என்றும் தங்களின் உடலை ஆடைகளால் முழுமையாக மறைத்துக்கொள்ள வேண்டும் என்பர். ஆனால், காளி அதற்கு எதிராகவே தோற்றமளித்தாள்.
பெண்கள் மென்மையாக இருந்தால்தான் அவர்களுக்கான மதிப்பைப் பெறுகின்றனர். அந்தக் கருத்தை மீறிச் செல்ல வேண்டும் என நினைத்தேன். மென்மையில் வலிமை இருக்கலாம். ஆனால் கோபத்திலும் வலிமை உள்ளது. அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
சில நேரங்களில், நமக்கு கோபம்தான் இங்கு ஏதோ ஒரு தவறு நடந்திருக்கின்றது என்பதை உணர்த்தும்.
என்னுடைய சிறந்த படைப்புகள் அனைத்தும் எனது கோபத்தின் வழி உருவானதுதான். ‘Kali in Conversation’ நூலும் அப்படி உருவான நூல்தான். இப்படிப் புரிந்துகொள்ள கடினமாக இருக்கும் உணர்வுகளை இந்நூலின் வெளிகாட்டினேன். நான் காளியை இங்குத் தெய்வமாக மட்டும் காணவில்லை. பெண்கள் இந்த உலகிற்காகத் தங்களை மாற்றிக்கொள்ளாமல் முன்னேறும்போது அவர்களால் எதையெல்லாம் சாத்தியப்படுத்த முடிகிறது என்ற கேள்வியை எழுப்பிச் செல்லும் ஒருத்தியாக காளியை முன்வைக்கிறேன்.

காளி என்பவள் அழிவின் வடிவம் என்று சொல்லாம். நீங்கள் ஏன் கவிதைக்குள் காளியைப் பெண்ணிய மீட்பின் வடிவமாக கொண்டு வந்தீர்கள்?
மஹி ராமகிருஷ்ணன்: நம்மால் அழிவின் வழி எதையெல்லாம் உருவாக்க முடியும் என்பதை அறிந்துகொள்வதில் எனக்கு ஆர்வமுண்டு. நாம் அழிவை எதிர்மறையான ஒன்றாகவே பார்க்க பழகிவிட்டோம். ஆனால், இச்சமூகத்தில் சில விஷயங்கள் அழிவின் வழியே முழுமையாக உடைத்தெறியப்படும் என்பதை நாம் உணர வேண்டும். பாலினப்பாகுபாடு, அடிப்பணிதல், சமூதாயத்தின் மதிப்பைப் பெற அதற்கேற்றவாறு நடந்துகொள்ளும் குணங்கள் ஆகியவைப் பெண்களைப் பாதிக்கக் கூடிய பழைய சிந்தனைகள். இவை அழிக்கப்பட வேண்டும்.
காளியின் சீற்றம் பெண் விடுதலை பற்றிய வேறொரு பார்வையை எனக்கு வழங்கியது. ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட சமூக அமைப்பே தவறாக இருக்கும் பட்சத்தில், அந்தச் சமூக அமைப்புகளில் பெண்கள் அவர்களுக்கான ஓர் இடத்தைக் பெறுவதென்பது விடுதலை அல்ல என்பதை உணர்ந்தேன். ஒரு பெண் ஆணாதிக்கச் சமூகத்தில் சுதந்திரமாக வாழ்வதற்கான வழியை உருவாக்குவதற்குப் பதிலாக, ஏன் பெண்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் முடிவு ஆண்களின் கைகளில் இருக்கிறது என்பதைக் கேட்பது அவசியம் என உணர்ந்தேன்.
தனது வலிமை மிக்க ஆளுமைக்காக ஒருபோதும் குற்றவுணர்வு கொண்டு மன்னிப்புக் கோரிராத பெண்களும் மிக முக்கியமானவர்கள். நான் அவர்களைப் பற்றியும் சிந்திக்கிறேன். ஒரு சமூகத்தில், பெண்கள் அவர்களின் கோபத்தை வெளிக்காட்டக்கூட சில கட்டுப்பாடுகள் உள்ளன. அவள் சிறிது நேரத்திற்கு மட்டுமே கோபம் கொள்ள வேண்டும், சரியான காரணத்திற்கு மட்டுமே கோபப்பட வேண்டும், அவள் யாருக்கும் தொந்தரவு தராத மாதிரி கோபத்தை வெளிப்படுத்த வேண்டும் போன்ற விதிகளுக்கு உட்பட்டே பெண்கள் கோபப்பட வேண்டும் எனச் சமூகத்தால் வரையறுக்கப்பட்டுள்ளது. ஒரு பெண் அவளின் கோபத்தை வெளிக்காட்டக்கூட மற்றவரின் ஒப்புதல் தேவையாக உள்ளது. பிறர் ஏற்றுக்கொள்ளும்படி அவள் கோபப்பட்டால் மட்டுமே அவளின் கோபம் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகின்றது.
ஆனால், காளி வேறொரு சாத்தியத்தை உருவாக்குகிறாள். காளி, அநீதி நிகழும்போது அதற்கு அடிப்பணிந்து போகாமல் இருப்பதுதான் சரி என நினைவூட்டுகிறாள்.
என்னைப் பொறுத்தவரையில், பெண்ணிய விடுதலை என்பது இன்னொரு அதிகாரத்தை உருவாக்குவது அல்ல. அந்த அதிகாரத்தையும், நாம் விரும்பக்கூடிய பாரம்பரியத்தையும், நாம் மரபாகப் பின்பற்றும் அமைப்புகளையும், நமக்கு நாமே சொல்லிக் கொண்டிருக்கும் கதைகளையும் நோக்கி கேள்விகள் எழுப்புவதுதான் விடுதலை.
கவிதைகள் வடிவ அடிப்படையிலும் உள்ளடக்கம் அடிப்படையிலும் பலவாறு விளக்கப்படுகின்றன. உங்கள் கவிதை நூலில் நீங்கள் கவிதைக்குறிய சொற்களில் கட்டுரையாகவும் எழுதியிருக்கிறீர்கள். உங்கள் புரிதலில் கவிதை என்பது என்ன? அதன் அடிப்படையாக எதை சொல்வீர்கள்?
மஹி ராமகிருஷ்ணன்: கவிதைகள் குறிப்பிட்ட ஒரு வடிவில் மட்டும்தான் எழுதப்பட வேண்டும் என்ற ஒன்றில்லை என நினைக்கிறேன். வரிகளைப் பிரித்தெழுதுதல், எதுகை மோனை, சந்தம், சுருங்கக் கூறுதல் போன்ற கூறுகள் கவிதைகளை உருவாக்கக்கூடும். ஆனால், இவற்றில் ஏதோ ஒரு கூறு இருப்பதனாலே ஒரு படைப்பு கவிதையாகிவிடும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.
என்னைப் பொறுத்தவரை, ஒரு விடயத்தை நாம் பார்க்கும் முறையிலிருந்துதான் கவிதை உருவாகத் தொடங்குகின்றது. ஒரு சாதாரண மொழியால் நம்மால் விரிவாகக் கூற முடியாத ஒன்றைக் கூறுவதே கவிதையாகின்றது. அது ஒரு அனுபவமாகவோ, முரணாகவோ, நம் பார்வைக்கு மட்டும் புலப்படும் உண்மையாகவோகூட இருக்கலாம்.
சில நேரங்களில், நமக்குச் சரியான சொல் தேர்வே தேவையாக அமைகின்றது. சில நேரங்களில் நமது சிந்தனையை மேலும் விரிவாகவும் நேர்மையாகவும் வெளிப்படுத்த உரைநடை வடிவமே ஏற்புடையதாக இருக்கின்றது.
நான் சொல்ல விரும்புவதைக் கவிதை வடிவில் சொல்ல முடியாத நிலை உருவாகும்போது, நான் வலுக்கட்டாயமாக அதைக் கவிதை வடிவில் எழுதி கவிதையைப் போல அதற்கு வடிவம் கொடுக்க விரும்பவில்லை. ஓர் அனுபவத்தை கவிதைக்கென உருவாக்கப்பட்டுள்ள வடிவத்திற்குள் கட்டாயப்படுத்தித் திணிக்காமல், நான் அந்த வடிவத்தில் மாற்றத்தை உண்டாக்கி புதிய முயற்சியொன்ற மேற்கொள்ளவே விரும்புகிறேன்.
கவிதைகள் நாம் அறிந்த ஒன்றை மீண்டும் வேறொரு முறையில் அணுகிப் பார்ப்பதற்கான வாய்ப்பை அளிக்கின்றன. ஒரு சாதாரண வாக்கியத்திற்குள் மறைந்திருக்கும் வன்முறையையும் ஒரு சிறிய செயலுக்குள் ஒளிந்திருக்கும் கனிவையும் கவிதைகள் நமக்கு உணர்த்துகின்றன.
ஒன்றின் மீது கவனம் செலுத்தி நாம் அறிந்த ஒன்றை மீண்டும் புதிய கோணத்தில் பார்க்க தயாராக இருக்கும்போதும் எளிதான விளக்கத்தோடு நின்றுவிடாமல் சொல்ல இயலாதவற்றைச் சொற்களால் வெளிப்படுத்த முயற்சி செய்யும்போதுதான் கவிதையின் அடிப்படை சாரத்தை உணர இயலும்.
நான் கவிதைகளை முழுமையாக வாசித்ததில்லை. அதனால், அதற்கான விதிகளைப் பற்றியும் நான் முழுமையாக அறிந்திருக்கவில்லை. இதுவே எனக்குப் பலமாகிவிட்டது என நினைக்கிறேன். நான் கவிதையின் வடிவங்களைப் பற்றி முழுமையாக அறிந்திருந்தால், கவிதைக்கான விதியை நான் மீறுகின்றேனா என்ற பிரக்ஞை எனக்குள் தோன்றியிருக்கும். அது என் உணர்வுகளை நான் சுதந்திரமாக வெளிபடுத்துவதற்குக் கண்டிப்பாகத் தடையாக வந்திருக்கும். ஆனால், கவிதையின் வடிவத்தைப் பற்றி முழுமையாக அறியாததால், என்னால் சுதந்திரமாகவே என் எண்ணத்தை வெளிபடுத்த முடிந்தது.
காளியைத் தமிழில் பாரதி பாடியிருக்கிறார். பாரதியாரின் காளியும் மஹியின் காளியும் ஒன்றா வேறு வேறா?
மஹி ராமகிருஷ்ணன்: சுப்பிரமணிய பாரதி காளியைப் பற்றி பாடியிருப்பது தமிழ் இலக்கிய, அரசியல் மரபில் மிக முக்கியமான ஒன்றாகும். நான் அந்த மரபை மதிக்கின்றேன். எனது காளி பாரதியின் காளியின் வழி வந்தவள் அல்ல. அதே போல, இருவரும் ஒரே நோக்கத்திற்காகப் படைக்கப்பட்டவர்கள் என்றும் சொல்ல மாட்டேன்.
வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள், காலம் கடந்தும் ஒரு கதாப்பாத்திரத்தைப் பல விதமாக அணுகுவதை நினைத்தாலே வியப்பாக இருக்கு.
இலக்கியத்திலும் புராணங்களிலும் படைக்கப்படும் கதாபாத்திரங்கள் ஒரே சித்திரத்துக்குள் அடங்கிவிடாமல் ஒவ்வொரு தலைமுறையின் சிந்தனைக்கேற்ப மாறுபடுகின்றது. அவர்கள் தங்களின் கேள்விகள், கவலைகள், போராட்டங்களின் வழி அக்கதாப்பாத்திரங்களுக்குப் புதிய வடிவை அளிக்கின்றனர்.
நான் படைத்துள்ள காளி ஓர் அரசியல் அடையாளம் கொண்டவள்.
நான் அதிகாரம், பாலினப் பாகுபாடு, புலப்பெயர்வு, புறக்கணிக்கப்பு ஆகியவற்றை நேரடியாகவே அனுபவித்துள்ளேன். அந்த அனுபவங்களின் வழி உருவானவள்தான் எனது காளி. அதோடு, நான் கேட்ட கதைகளிலிருந்தும், கண்ட அநீதிகளிலிருந்தும் என்னால் புறக்கணிக்க முடியாத கேள்விகளிலிருந்தும் உருபெற்றவள் என்னுடைய காளி.
கால காலமாக நமக்குச் சொல்லப்படும் கதைகளை ஏற்றுக்கொள்ளாமல், அதனை மீண்டும் மீளாய்வு செய்வதில் எனக்கு ஆர்வமுண்டு.
ஆக, இங்குப் பாரதியின் காளியும் என்னுடைய காளியும் ஒன்றா என்ற கேள்வி முக்கியமல்ல. ஒரே காளியுடன் வெவ்வேறு கேள்விகளைக் கேட்டு உரையாட முடிகின்றதா என்பதுதான் முக்கியம்.
‘காளியை’ நீங்கள் உண்மையில் உணர்ந்துள்ளீர்களா? அது உண்மையில் நிகழ்ந்த தருணங்களை விவரிக்க முடியுமா?
மஹி அடுத்த மாதமும் தொடர்ந்து பேசுவார்…
நேர்காணல்/ நிழற்படம்: சாலினி
