தமிழாசியாவின் 31ஆவது சந்திப்பு ஆகஸ்டு 8 ஆம் திகதி நடைபெற்றது. இம்முறை பிரமிள், சம்பத், எம்.வி. வெங்கட்ராம் ஆகியோர் எழுதிய நான்கு கதைகள் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டன. சந்திப்பின் தொடக்கத்தில் பிரமிளின் கவிதைகள் குறித்துப் பேசப்பட்டது. அவர் படிமங்களைப் பயன்படுத்திப் படைப்புகளை உருவாக்கும் கவிஞர். இருத்தலியல் மூலம் ஆன்மீகத்தை அடையும் அவரது படைப்புகள் அடையும் வழிகளை வாசகனால் உணர முடியும் என்று நவீன் கூறி, சந்திப்பைத் தொடங்கி வைத்தார்.

உவமைக்கும் படிமத்திற்கும் என்ன வித்தியாசம் என்ற கேள்வி நவீனால் முன் வைக்கப்பட்டது. உவமை என்பது இரண்டு வேறுபட்ட பொருட்களில் உள்ள ஒற்றுமையை விளக்குவது. ஒன்றை இன்னொன்றோடு ஒப்பிட்டு கூறும் பாங்கு. ‘இது போல் அது’. படிமமென்றால் காட்சி வழியாகக் கருத்தை விளக்குதல். விளக்க முடியாத மன உணர்வை விளக்கக் கூடிய சொற்களின் வழியாக சொல்ல முயல்வது என்று அவரே விளக்கவுரை கொடுத்தார்.
இலையிலிருந்து நழுவி விழுந்தது
ஒரு நீர் துளி
அது பூமியை தொடுவதற்குள்
உறுவாகி மறைந்தது ஒரு பிரபஞ்சம்
பெரிய கிரகங்களின் அசைவுகள் மட்டும் அசைவல்ல. ஒரு நீர் துளியின் அசைவும் கூட பிரபஞ்சத்தின் அசைவு தான் என அக்கவிதையை விளக்கிய நவீன் அதில் படிமம் எவ்வாறு இயங்குகிறது என விளக்கினார். தொடர்ந்து
காலையிலிருந்து என்னுடன் வந்த நிழல்
இரவானவுடன் இருளில் சென்று மறைகிறது
இருள் என்பது பிரமாண்டமான நிழல்தானோ’
நம்முள் உறைந்திருக்கும் இருள் என்பது இத்தணை பிரமாண்டமானதாக இருக்குமோ? என அக்கவிதையில் உள்ள படிமம் குறித்து விளக்கினார். இறுதியாகப் பிரமிளின் புகழ்பெற்ற கவிதை ஒன்றைக் கூறினார்.
சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது
சிறகு என்பது எப்படி ஒரு படிமமாக காட்டப்படுகிறது என நவீனால் விளக்கப்பட்டது.
தனிமையில் இருக்கக் கூடிய ஒருவனின் நிச்சயமற்ற வாழ்க்கை அது எவ்வாறு ஆன்மீகக் கவிதையாக பரிணமிக்கிறது என்பதை மேலும் சில உதாரணங்களோடு விளக்கினார் நவீன்.
ஒரு நதி கடலைத் தேடி செல்கிறது
கடலை அடைந்தவுடன் அது தன் பெயரை இழக்கிறது
ஆனால் கடல் ஒரு போதும் தன் பெயரை இழப்பதில்லை
தனிமையில் இருக்கக் கூடிய ஒருவனின் நிச்சயமற்ற வாழ்க்கை அது எவ்வாறு ஆன்மீகக் கவிதையாக பரிணமிக்கிறது என்பதை இவ்வாறு விளக்கினார் நவீன்.

தொடர்ந்து பிரமிள் எழுதிய நீலம் சிறுகதையை புஷ்பவள்ளி பேசினார். கணினிகளும் இயந்திரங்களும் கலையை மிக எளிதாக உருவாக்கும் காலத்தில், மனிதனின் இடம் என்ன? கலை என்றால் என்ன? என்ற ஆழமான கேள்வியை முன்வைக்கும் கதை. ‘தாரா’ நாவலில் அந்தாரா கதை இறுதியில் கிச்சியிடம் கொடுக்கும் நீலத் தாமரையை சாமிக்கு வைக்கும் போது அந்த கம்பத்திலிருந்த இருள் விலகி ஒளி பிறக்கக் கூடிய இடத்தை பிரமிளின் நீலம் கதையுடன் ஒப்பீடு செய்தார் புஷ்பவள்ளி. மேற்கத்திய பாணியில் தீட்டப்படும் ஓவியங்கள் மேல் தட்டு மக்களின் கவனத்தை மட்டுமே பெறுகிறது. அவன் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிந்துக் கொள்ளாத ஓவியனாக இருக்கிறான் எனும் இடம் முக்கியம் என்பதை அரவின் சுட்டிக் காட்டினார்.
அது நாள் வரை அவர் வரையும் ஓவியங்கள் சந்தை பொருளாக மட்டுமே உள்ளது. அந்த ஓவியன் பஸ்சில் இரண்டு ஸ்டோப் தள்ளி போய் இறங்காமல் இருந்திருந்தால் அதிசயம் நிகழும் வாய்ப்பு நழுவி போயிருக்கும். குளத்தின் அடியில் மறைந்திருக்கும் தாமரை எந்த எதிர்பார்ப்புமின்றி யாருடைய கவனத்துக்காகவும் பூக்காமல் இருப்பது புகழ் சூழ வாழும் ஓவியனுக்கு எதிர் துருவம் என்பதை ரேவினும் இளம்பூரணனும் முன் வைத்தனர். தான் எதை அழகென்று ஓவியன் நினைத்திருந்தானோ அவையனைத்தையும் கம்யூட்டரால் செய்ய முடிகிறது அதை தாண்டி செல்லும் போது அவன் உண்மைக் கலைஞனாகிறான் என்பதை கௌசல்யா கூறினார்.

சிறுவன் என்பது அவனுடைய உள்ளுணர்வு. ஓவியர் காலம், இலக்கு, போட்டி, ஆகியவற்றோடு மேல் தட்டு மக்கள் சிலாகிக்க கூடிய ஒரு ஓவியராக இருக்கிறார். அவருக்குள் இருக்கும் சிறுவன் அந்த ஓட்டத்தை ஒரு கணம் நிறுத்தி வைக்கிறான். சிறுவன் என்பது வேறு யாருமல்ல; அவனுக்குள்ளே இருக்கும் மறக்கப்பட்ட சிறுவனின் மனம்தான். அது தான் யாராலும் பார்க்கப்படாத அடி ஆழத்தில் இருக்கும் நீலத் தாமரையை காட்ட முடிகிறது. ஓவியனுக்குள் இருக்கும் சிறுவன் வெளிபடும் அந்த தருணம் அவனால் கம்யூட்டர் கொடுக்க முடியாதா நுண்ணுணர்வான, பிரமாண்ட படைப்புக்கள் ஓவியனிடமிருந்து வெளிபடலாம். என்பதை ஆசிர் லாவண்யா முன் வைத்தார்.
சல்மாவும் விஜியும் அகத் தேடல் உள்ள ஒரு ஓவியனின் இடம் எவ்வகையில் அவனுடைய அகந்தை அழியும்போது, அகக் கண்கள் திறக்கப்பட்டு அரூபமான கண்டடைதலை நோக்கி திருப்பப்படுகிறது என்பதை கதையின் வேறு திறப்புக்களாகக் கூறினர்.
கலை குறித்து ஆழமாக அறிய பிரமிளை வாசிக்க வேண்டியது அவசியம். தன் காலத்தில் போலி கலைஞர்களை அத்தனை கொதிப்போடு ஒதுக்கியவர் பிரமிள். அவருடைய எழுத்தும் அத்தகையதே. இந்தக் கதையின் ஓவியன் ஒரு போலி கலைஞன் என்ற சந்தேகம் எழுகிறது. அவன் சூழ்ந்து நிற்கும் புகழ் உண்மையான புகழா? அந்தப் புகழ் வெறும் முகப்பூச்சே தவிர வேறொன்றுமில்லை. அனைத்து மாயை அலங்காரங்களையும் புரிந்துகொண்ட ஒரு கலைஞனால் மட்டுமே அதைக் காண முடியும். அலங்காரங்கள் அனைத்தையும் கலைத்து போடும் சிறுவன் ஒருவனால் அதை அடையாளம் காண முடிகிறது. வழக்கமான வாழ்க்கை முறையிலிருந்து அவன் தவறி போகும் போது தான் நுட்பமான இடத்தை ஒரு கலைஞன் கண்டடைகிறான். கட்டமைப்பு என்னும் சிறையை உடைக்கும்போதே அவன் மெய்யான கலைஞனாகிறான் என்ற கூடுதலாக பார்க்க கூடிய இடங்களை முன் வைத்தார் எழுத்தாளர் நவீன்.

பிரமிள் எழுதிய காடன் கண்டது சிறுகதையை பேசிய இளம்பூரணன் கதையில் வரும் பழங்குடிகளின் மொழி புரிந்து கொள்ள சவாலாக இருந்ததாக குறிப்பிட்டார். பிரமிளின் இந்தச் சிறுகதை குறவர் இன மக்களின் வாழ்க்கை முறை, அவர்கள் எதிர்கொள்ளும் புறக்கணிப்பு போன்றவற்றை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. ஒடுக்கு முறை சிக்கலில் மாட்டித் தவிக்கும் பூர்வக் குடிகளின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கும் இந்தச் சிறுகதை குறவர் இன மக்களின் வாழ்க்கை முறை, நிராகரிக்கப்பட்ட வாழ்க்கை முறை, மனிதனுக்குக் கிடைக்கும் குறைந்தப் பட்சம் மரியாதைக் கூட கிடைக்காத வாழ்க்கை முறையை வாழ்ந்து சிதைந்து போகும் குறவர் வாழ்வு என்ற வாசிப்பனுபவத்தை சல்மா பகிர்ந்து கொண்டார்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தை தவறுகள் செய்யாமலே யாரோ செய்தக் குற்றங்களுக்கு பழியேற்கும் சமூகமாக எப்படியெல்லாம் மாற்றப்படுகிறது என்பதை மோகன பிரியா கூறினார்
சொந்த நிலத்திலிருந்து குறவர்கள் எப்படி அண்ணியப்படுத்தப்படுகிறார்கள். அரசியல் பார்வையும் அதிகாரமும் குறவர்களின் வாழ்வை எத்தனை தூரம் சூரையாடியிருக்கிறது என்பதை தன்னுடைய கருத்தாக முன் வைத்தார் அரவின்.
அதிகாரம் படைத்தவர்கள் உருவாக்கும் வாய்ப்புகளும் சலுகைகளும் ஒரு குறிப்பிட்ட குழுவுக்கு மட்டுமே சென்று சேர்வதும், பிறருக்கு முற்றிலும் மறுக்கப்படுவதும் ஆகும். ஒரு சமூகம் புறக்கணிக்கப்படுகிறது என்பதற்கான முதல் அடையாளம் இது. ஆனால் புறக்கணிப்பின் இன்னும் கொடிய வடிவம் இருக்கிறது. தம் கண்முன்னே அநீதி அரங்கேறும்போது அதற்குச் சாட்சியாக இருக்கக்கூட முடியாத நிலை, பார்த்தும் பார்க்காதவர்கனாக கேள்விப்பட்டும் கேள்விப்படாதவர்களாக வாழ வேண்டுமென்று தள்ளப்படும் நிலை. இந்த நுண்ணிய புறக்கணிப்பை வெளிச்சம் போட்டுக் காட்டுவதே இந்தக் கதையை மிகவும் வலுவானதாக ஆக்குகிறது என்பதை நவீன் பதிவு செய்தார்.

மேலும், சலுகைகள் மறுக்கப்படுவது புறக்கணிப்பின் ஒரு படி மட்டுமே. ஆனால் ஒருவன் தன் கண்முன்னே நடக்கும் அநீதிக்குச் சாட்சியாக இருக்க முடியாதபடி செய்யப்படும்போது அது புறக்கணிப்பின் உச்சம். அக்கதை அப்போதுதான் அதன் மிகப்பெரிய ஆழத்தை அடைகிறது என அவர் வழி உணர்த்தப்பட்டது.
அநீதி நிகழும்போது நக்சல்கள் அதை ஆயுதமேந்திப் போர் புரியும் தளமாக மாற்றுகிறார்கள். ஆனால் பிரமிள் போன்ற கலைஞர்களோ, காட்டில் வாழும் பூர்வக்குடி மக்களுக்கு என்ன முக்கியத்துவம் இருக்கிறது என்ற பார்வையைப் புனைவுகளின் வழி முன்வைக்கிறார்கள். இத்தகைய பார்வையே ஒரு கலைஞனை போராளியிடமிருந்தும் வேறுபடுத்திக் காட்டுகிறது என்பதையும் கதையின் வெவ்வேறு திரப்புக்களாக காணலாம் என்பதை சுட்டிக் காட்டினார் நவீன்.
எம்.வி.வெங்கட்ராம் புனைவில் வந்த பைத்தியக்காரப் பிள்ளை கதையை பேசிய பானு சமூகம் ‘பைத்தியக்காரன்’ என்று முத்திரை குத்தி ஒதுக்கி வைக்கும் ஓர் இளைஞனின் வாழ்க்கையையும், சமூகம் உண்மையில் யாருக்குப் பைத்தியம் என்ற கேள்வியையும் முன்வைப்பதையும் குறிப்பிட்டார்.
மற்றப் பிள்ளைகள் அனைவரும் தாயைப் பிரிந்து சிறப்பாக வாழக் கூடிய தருணத்தில் ஒரு பிள்ளை மட்டும் மாட்டிக் கொள்கிறான். அவனையே பைத்தியக்காரன் என்று சமூகம் கூறுகிறது.
இந்தப் பூமி பெண்கள் திடமாகவும் வலுவாகவும் தங்களுக்கான இடத்தை நிலைநிறுத்திக் கொள்ளக் கூடிய நிலம். பைத்தியக்கார பிள்ளை என்று சொல்வது அவனை திருமணம் செய்துக் கொள்ளப்போகும் பெண். இதை அவள் சொல்லக் கூடிய காரணம் அவனின் தாயைப் போலவே இவளும் மனைவியாகி, தாயாகக்கூடிய இடத்திற்கு செல்லும்போது, இன்னும் எத்தனை கொடுமைகளை அவன் கடந்து வர வேண்டியதிருக்கும். ஒரு வேலை திருமணம் நடந்த பிறகு உலக வழக்கங்களில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்கும் திறமையில்லாமல் அவன் தற்கொலை செய்துக் கொண்டால் அவள் வாழ்வு கேள்விகுறியாகும். தன் தாயை சமாளிக்க முடியாதவன் பிற்காலத்தில் குடும்பத்தை எப்படி சமாளிப்பான் என்பதையே அவள் பைத்தியக்கார பிள்ளை என்று கூறுகிறாள் என்ற பார்வையை ஆசிர் லாவண்யா முன் வைத்தார்.

சுய நலமே இல்லாமல் வாழக்கூடிய ஒரு மனிதனிக்கு இந்த சமூகம் கொடுக்கும் பெயர் பைத்தியக்காரன் என்ற பார்வையை சல்மா முன் வைத்தார்.
திருமணமான புதிதில் ஒரு பெண்ணின் வாழ்வு முழுக்க ஆணை சார்ந்து இருக்கிறது. அந்த இடம் கதையில் எந்த இடத்தில் முரண்படுகிறதென்றால் ஓர் ஆணின் இயலாமையில்தான். அங்குதான் பெண் எப்படி இயங்குகிறாள், மூர்க்கமாகிறாள் என்பதை சொல்கிறது. ஆணின் உடல் பலத்தை விட குறைவானதாக இருக்கும் பெண் தன்னுடைய அவயங்களை அது கோரப் பற்களாகவோ அல்லது நகமாகவோ, கடின சொற்களாகவோ இருக்கலாம் அதைக் கொண்டு எப்படி வெளிப்படுகிறாள் எனக் காட்டுகிறது. மேலும் அனைத்து சம்பவங்களும் காரணமும் விளைவும் கொண்டுள்ளன என கதையின் ஆரம்பத்தில் அமைதியாக இருக்கும் தாய் மூர்க்கமாக மாறும் தருணத்தை முன் வைத்து பேசினார் விஜி.
ஆண்கள் மேல் சமுதாயம் வைத்திருக்கும் கட்டமைப்பு உறுதியானவன், அஞ்சாதவன், பலசாளி போன்ற அனைத்து கூறுகளையும் கலைத்துப் போடுவதாக இளம்பூரணன் கூறினார்.
சமூகத்தின் இயக்கமே சுரண்டல், சுய நலம் எவ்வாறு உறவுகளின் ஊடே அமைதியாக இயங்கி வருகிறது என்பதை அரவின் பதிவு செய்தார்.
இரண்டு பரிணாமங்களில் கதை நகர்கிறது. ஒன்று மனைவியாக இருக்கும்போது தாய் யாராக இருந்தால் குடும்பத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கும்போது அவள் யாராக மாறுகிறாள். தலைவி என்பவள் நிர்வாகம் செய்வது மட்டுமல்ல பிறரை ஏவி அல்லது பயன்படுத்தி தன் காரியங்களை சாதித்துக் கொள்ளும் வல்லமையிலும் அவள் தலைமை பண்பு உள்ளது. அது எப்போது பறிபோகக்கூடுமென்றால் இன்னொரு பெண் தன்னுடைய இடத்திற்கு வரும் போதுதான்.
வாட்காவிலிருந்து கங்கை வரை எனும் நூலில் வரக்கூடிய தாய் ஆஜான பாகுவாக இருக்கக் கூடிய தனது மகளை திட்டமிட்டே மலையிலிருந்து தள்ளி விடும் சம்பவத்தைச் சொல்லலாம். இரண்டு தலை முறையாக ஆட்சியின் உச்சத்தில் இருக்கும் தாய் தன் மகள் எந்த காரணம் கொண்டும் தன்னுடைய இடத்திற்கு வரக்கூடாது என்று நினைக்கிறாள். அதே போல் இந்த கதையில் வரும் தாய் என்பவள் தன் மகனிடம் சண்டை போட முடியும் ஆனால் அவளால் வரப் போகும் மறுமகளிடம் சண்டை போட முடியாது என்பதை அறிந்தே இருக்கிறாள். அப்படி பார்க்கையில் ஒரு பெண்ணின் வலிமையை இன்னொரு பெண் அறிந்து வைத்திருப்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உடல் பெருத்து தன் மகனை கிட்டதட்ட ஒரு இயந்திரம் போல் இயக்கி பார்க்கும் தாயின் இடமும் இத்தனை வருடங்களாக உழைத்துக் கொடுக்கும் மகன் ‘நான் யார்’ எனும் கேள்வி வரும் போது தன் இடம் என்ன என்று பார்க்கும்போது அது அவனை இறுதியில் தற்கொலைக்கு இட்டு செல்கிறது. தனக்கான ஒன்று சீர்குலைக்கப்படும்போது, தன் எதிர்காலம் கேள்விக்குறியாகும்போது இருத்தலியலின் சுயம் மீண்டும் கேள்விக்குறியாகிறது என்பதை கதையின் முக்கிய பார்வையாக நவீன் முன் வைத்தார்.
இறுதியாக சம்பத் எழுதிய சாமியார்ஜூவுக்குப்போகிறார்… எனும் சிறுகதை குறித்து ரேவின் பேசினார். இன்னொரு உயிரை தன் உயிராக ஒருவனால் நினைக்க முடியுமா என்பதை கதை கேள்வி எழுப்புவதாக ரேவின் பதிவு செய்தார். உடமையற்ற அன்பு என்பது ஒவ்வொரு உயிரையும் சுதந்திரமாக செயல்பட தூண்டுவது. தானற்று போவது என்பது கதையின் மையம் என்று அரவின் கூறினார். தானற்று போகும்போதுதான் ஒருவன் விடுதலை அடைகிறான். இயல்புக்கும் இறுக்கத்திற்கும் ஊள்ள முரண்பாடு என்பதை ரேவின் கூறினார்.
ஜூ என்பது மனிதன் தனக்குத் தானே அமைத்துக் கொண்ட கூண்டின் பிரதிபலிப்பு. ஜூவுக்குப் போகிறோம் என்று சொல்வது நாம் நம் கூண்டிலிருந்து விலகிச் சென்று, பிறரின் கூண்டைப் பார்த்து வருவதுதான். அங்கே நாம் மிருகங்களைப் பார்க்கிறோம். ஆனால் உண்மையில் நாம் பார்ப்பது நம்மையே. புலி என்பது காமத்தின் குறியீடு. காட்டு வாழ்க்கை, விடுதலை, எல்லையில்லா இயல்பு. மனிதன் அதை கூண்டில் அடைக்கிறான். அதாவது காமத்தை விதிகளால், திருமணத்தால், சமூக நெறிகளால் கட்டுப்படுத்த நினைக்கிறான். புலி தப்பி வருகிறது கூண்டிலிருந்து. காமம் எப்போதும் கட்டுப்பாடுகளை மீறி வரும். அது சுட்டுக் கொள்ளப்படுகிறது. கதையில் வரும் பத்மா ராஜா வீரர்கள் சாகும் வரை சண்டையிடுவதைப் பார்த்து மகிழ்கிறாள். காமத்தின் உச்சத்தில் இரக்கம் என்ற ஒன்று இருக்காது. அங்கே இன்பமும் வலியும் ஒன்றோடொன்று கலந்து விடுகின்றன என்ற பார்வையை ஆசிர் லாவண்யா பதிவு செய்தார்.
இறுதியாக நவீன் பேசினார். கதையின் முக்கியமான மையம் அவன் புலியை பார்ப்பற்கு முன்பும் புலியை பார்த்ததற்குப் பிறகு அவனுள் நடக்கும் மாற்றம். ஜூவில் உள்ள விலங்குகள் செயற்கையாக உருவாக்கப்பட்ட வனத்தை நம்பி வாழக் கூடியதாக இருக்கிறது. அதில் ஒரு விலங்கு மட்டும் விழிப்புணர்வு நிறைந்த விலங்காக இருக்கிறது. அதை பார்க்கும் அவனுக்கு என்ன மாற்றம் ஏற்படுகிறது என்பது கேள்வி. நாம் வாழக் கூடிய இந்த வாழ்க்கையிலிருந்து நாம் எப்போது விடுதலை அடைவோம் என்றால் நாம் சுயமாக அடையும் விழிப்புணர்வின் வழிதான். நம்மை சுற்றி இருக்கக் கூடிய அல்லது நாம் உருவாக்கி வைத்திருக்கக் கூடிய அனைத்து சுக போகங்களும் போலியானது என்பதை உணரும் மனம் அதிலிருந்து விடுதலை கோரி நிற்கிறது. தொடர்ந்து எத்தனை காயங்கள் ஏற்பட்டாலும் சுவரிலிருந்து ஏறி குதிக்க முற்படுகிறது. ஆனால் அது போல் எகிரி குதித்து விடுதலை அடைய துடித்தாலும் நாம் புலியைப் போல சுட்டு சாகடிக்கப்படுவோம். ஏனென்றால் நாம் தாண்டவே முடியாத பழைய சுவர் ஒன்று கதையில் இடம் பெறுகிறது. அந்த பழைய சுவர் எனும் படிமம். அது நம்முடைய ஊழ் வினைகளை குறிக்கிறது. நமக்கு நாமே அமைத்திருக்கும் ஆதி கர்மாவை ஒருவன் வாழ் நாள் முழுக்க தாண்டவே முடியாது. அப்படி பார்க்கும் போது நாம் அடைந்திருக்கும் அந்த விடுதலைக்கு என்ன பொருள் என்ற கேள்வி எழும் போது இந்த ஒட்டு மொத்த வாழ்வும் கேள்விக்குறியாகிறது. நாம் இந்த பிறவியில் மேற்கொள்ளும் அனைத்து நல்ல விஷயங்களும் அங்கே இருக்கும் சிறு கம்பியை போன்றது. ஆனால் நாம் என்ன செய்தாலும் தாண்டவே முடியாத சுவர் ஒன்று இருந்துக் கொண்டே இருக்கிறது. அதுவே நம்மால் உறுவாக்கப்பட்ட ஊழ்.
விடுதலை என்பது அறுத்தல், வெறுத்தல் மற்றும் உதிர்த்தல். இவன் உதிர்த்தலின் வழி விடுதலையை அடையப் பார்க்கிறான். நிலையில்லாத வாழ்வில் ஒருவன் எதை செய்தாலும் புலியைப் போல கொல்லம்படுவான். ஏனென்றால் நாம் எழுப்பி இருக்கும் சுவர் அத்தகையது என்று தன் முதல் பார்வையை முன் வைத்தார் நவீன்.
அவளின் பெயர் பராசக்தியாகவும் அவர்களுக்கு பிறந்த குழந்தை குமரன். குமரனை குழகன் என்றும் பார்க்கலாம். கண்ணனை நாம் அவ்வாறும் அழைக்கும் வழக்கம் உண்டு. கண்ணன் எவ்வாறு ஒரு கனம் கோபியர்களுக்கு இளைஞனாகவும் மற்றொரு கனம் தன் தாயிக்கு குழந்தை வடிவில் காட்சி கொடுக்கிறான். இந்த கதையை சிவசக்தியின் குடும்பமாக பார்த்தால் சக்தி என்பது ஒரு என்ர்ஜி. அது செயல்படக்கூடியது. கதையில் வரும் பெண்ணும் செயல் படுபவளாகவே இருக்கிறாள். சிவம் என்பது செய்லபடாதது. சக்தியால் இயக்கப்படும் சிவம் அடையக்கூடிய இன்னொரு பரிணாமமாகவும் இந்தக் கதையை பார்க்கலாம் என்று நவீன் கூறி சந்திப்பை நிறைவு செய்தார்.
