மலாயாவின் சுதந்திரத்துக்கு முன்னர், அதாவது 1900 ஆண்டு காலக்கட்டத்தில் ‘சொக்ரா’ என்றழைக்கப்பட்ட சிறார் பாட்டாளித் திட்டத்தை அமல்படுத்தியிருந்தது மலாயா காலனித்துவ ஆட்சி. இத்திட்டம் 1960களில் கூட நடப்பில் இருந்தது. கருப்புத்துரைகள் என்றழைக்கப்பட்ட கிராணிகளாக இருந்த யாழ்பாண தமிழர்கள், தம் காலனித்துவ முதலாளிகளுக்கு விசுவாசத்தை நிரூபிக்க, பாட்டாளிகளை எப்படியெல்லாம் சுரண்டினார்கள் என்பதற்குப் பல சம்பவங்களைச் சொல்லலாம். பின்னாளில், தொடக்கப் பள்ளி வாழ்க்கையை முடித்து இடைநிலைப்பள்ளிக்குச் செல்ல வேண்டிய பிள்ளைகளுக்குச், ‘சொக்ரா’ வேலை வாய்ப்பைக் கொடுத்து பள்ளிக் கல்விக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் தந்திரத்தைக் கையாண்டார்கள் காலனித்துவர்கள். அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் கருப்புத்துரைகள். அக்காலத்தில் உதவியாளர்களாகப் பணியாற்றக் குறைந்த சம்பளத்தில் அமர்த்தப்பட்ட குழந்தை பாட்டாளி முறையைத்தான் ‘சொக்ரா’ என்று அழைத்தார்கள். அது ஒரு ஹிந்தி மொழிச்சொல். இந்தப் பாட்டாளி முறை மிகத்தந்திரமாக அமலுக்குக் கொண்டுவரப்பட்டது. (பாட்டாளி என்ற சொல்லைக் கூலித் தொழிலாளி அல்லது சிறார் தொழிலாளி என்று எழுதியிருக்கலாம், ஆனால் தொழிலாளிக்கும் பாட்டாளிக்கும் பாரிய பொருள் வேறுபாடு உண்டு. தொழிலாளி என்பவர், மூலதனம் போட்டு லாபமும் காண்பவர்கள். ஆனால் பாட்டாளி என்பவன் உழைப்பை நம்பியே பசியைத் தீர்த்துக்கொள்பவன். அவன் மூலதனம் போடவோ, அதிலிருந்து லாபம் சம்பாதிக்கவோ வாய்ப்பில்லை. அவன் சுரண்டப்படுபவனும்கூட என்று மார்க்ஸியம் வரையறுக்கிறது)

உலகச் சந்தையில் ரப்பரின் தேவை அதிகரித்துக்கொண்டிருந்த காலக்கட்டதில் தோட்டக்கூலி வேலைக்குச் சிறார்களை நியமிக்கும் முறை கொண்டுவரப்பட்டது. இவர்களுக்குச் சொற்ப ஊதியம் வழங்கி உற்பத்தியைப் பெருக்கினார்கள். பிள்ளைகள் இடைநிலைப்பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்ற பெற்றோரின் கவனத்தைத் திசைமாற்றும் தந்திரமாக இருந்தது இத்திட்டம். அதே வேளையில் பட்டணத்தில்தான் இடைநிலைப்பள்ளிகள் அமைக்கப்பட்டிருக்கும். 1950-60களில் இடைநிலைப்பள்ளியில் கட்டண முறை நடைமுறையில் இருந்தது. அதுபோக பேருந்துக் கட்டணம், சுயமாக புத்தகம் வாங்கிக்கொள்ள வேண்டிய கட்டாயம் என எல்லாம் சேர்ந்து தோட்டப்பாட்டாளிகளின் சொற்ப வருமானத்துக்கு அக்காலக் கல்வி முறை பெரும் சுமையாக இருந்தது. எனவே பல சிறார்கள் கல்வியைத் தொடர முடியாத சூழலில் கல்வியை ஆரம்பக் கல்வியோடு கைவிட்டார்காள். தங்கள் பிள்ளைகளை இடைநிலைப்பள்ளியில் படிக்க வைத்தே ஆகவேண்டும் என்ற வைராக்கியம் கொண்ட பெற்றோர்களின் எண்ணத்தைக்கூட இந்த ‘சொக்ரா’ திட்டம் இரக்கமே இல்லாமல் தகர்த்தது. பெற்றோரின் கல்விக் கனவுக்குப் பெரும் தடையாக இருந்தது இது. பெற்றோர்களின் மனதை மாற்ற கிராணி, கங்காணிமார்களின் தந்திர பிரச்சாரம் அவர்கள் கனவுகளைப் பெருமளவு சிதைத்தது.
குறைந்த வருமானத்தில் அன்றாட உணவுக்கே அல்லாடும் அவர்களுக்கு ‘சொக்ரா’ திட்டம் குடும்பத்தின் பாரத்தைக் குறைக்கும் என்று நம்பினார்கள். ‘சொக்ரா’ திட்டம், குடும்பச் செலவை ஈடுகட்டும் என்று கருதினார்கள். இந்தத் தந்திரத்தில் முதலாளிமார்களுக்கு ஓர் உள்நோக்கமும் இருந்தது. இத்திட்டம் பின்னாளில் அதே தோட்டத்தில் பெற்றோர் செய்துவந்த வேலையைப் பிள்ளைகளுக்குக் கைமாறவைக்க மறைமுகமாக உதவியது. இதனால் தொடர்ந்து ரப்பர் தோட்டத்தில் வேலை செய்ய ஆட்கள் குறைபாடு உண்டாகாதவாறு பார்த்துக்கொண்டது நிர்வாகம். இப்படித்தான் பல தலைமுறைகளாகப் பெற்றோர்களின் கூலி வேலை அவர்களின் பிள்ளைகளுக்குக் கைமாறிய வண்ணம் இருந்தது. தோட்டப்பாட்டாளிகளின் பிள்ளைகள் படித்து முன்னேறினால் ரப்பர் தோட்ட வேலையை யார் செய்வது என்பதே முதலாளிகளின் கவலை!
தகழி சிவசங்கரப் பிள்ளையின் ‘தோட்டியின் மகன்’ நாவலை வாசித்தபோது, மலாயா தோட்ட முதலாளி வர்க்கம், எளிய தோட்டப் பாட்டாளிகளைச் சுரண்டிப் பெரும் கோட்டிஸ்வரர்களான நினைவுகள் என்னைத் தீண்டியது. இந்நூலைச் சுந்தர ராமசாமி மொழிபெயர்த்திருந்தார். இதுவே சுந்தர ராமசாமியின் முதல் இலக்கிய செயல்பாடு என்று அவரே முன்னுரையில் சொல்கிறார்.
முதலாளிமார்களுக்கும் விளிம்புநிலை மனிதர்களுக்குமான ஏற்றத் தாழ்வு பரிமாணங்களை நாம் அவதானித்தே வருகிறோம். விளிம்பு நிலை மனிதர்கள் முதலாளிமார்களை அதிகாரத்துக்கு அடிபணிய வைப்பது மட்டுமின்றி, அவர்களை அண்டிப்பிழைக்கவேண்டிய கட்டாயத்தையும் உருவாக்கினார்கள். இதனை மையமாகக் கொண்டதுதான், தகழியின் ‘தோட்டியின் மகன்’. இந்நாவல் முடிவை நோக்கி நகரும்போது அது மார்க்ஸியக் கொள்கையை முன்னிறுத்தும் வண்ணமாக எழுதப்பட்டிருந்தது கவனிக்கத்தக்கது.
தகழி சிவசங்கரப் பிள்ளையின் ‘தோட்டியின் மகன்’ நாவல் சொல்லும் வாழ்க்கையும், கிட்டதட்ட மலாயா காலனித்துவர்கள் கையாண்ட பாட்டாளிகளின் சுரண்டப்பட்ட உத்திக்கு ஒப்பானதுதான். ஆனால் இந்நூல் மலாயா ரப்பர் காட்டுச் சமூகம் எதிர்நோக்கிய இன்னல்களைவிட பல மடங்கு கொடியது.
மனித மலத்தை அள்ளும் பணியாளர்களின் உடலில் இருபத்து நான்கு மணி நேரமும் மலவாடை கசிந்துகொண்டே இருக்கும். என்னதான் டெட்டோல் கொண்டு சுத்தமாகக் கழுவி எடுத்தாலும் ‘அவன் மலம் அள்ளுபவன்’ என்று மனதில் ஏற்றிக்கொண்ட வெறும் எண்ணமேகூட, அவன் மீது மலவாடை வீசுவதான படிமத்தை உண்டாக்கிவிடும். அந்த வெறும் உளவியல் பாதிப்பாக இருந்தாலுமேகூட, அதுவே ஒரு விலகலை உண்டுபண்ணிவிடும். இச்சூழலில் மனைவி பக்கத்தில் படுப்பாளா? நண்பர்கள் நெருங்கி உரையாடுவார்களா? அதைவிட முக்கியமாக கடைக்கண்ணிக்குப் போக முடியுமா? தேநீர் கடைக்குப் போய் நாலு பேர் முன்னிலையில் தேநீர் அருந்த முடியுமா? தன் கருத்தை விலகல் மனமில்லாமல் சொல்லிவிட முடியுமா? தோட்டிகள் சமூகப் படிநிலையில் ஆகக் கீழானவர்கள் என்பதால் எந்தச் சமூக மரியாதையும் அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கிடைக்காது. மேல்தட்டு மனிதர்கள் அவர்களைப் பார்க்கக்கூடக் கூசி விலக்கியே வைப்பார்கள்.
நாவலில் வரும் சுடலைமுத்து, அப்பா இசக்கிமுத்து, தோட்டியாவதை விரும்பியிருக்கவே மாட்டார். ஆனால் அது அவருடைய தந்தையிடமிருந்து வலிந்து கையளிக்கப்பட்ட ஒன்றாக இருந்திருக்கும். இந்த நாவவில் முக்கிய பாத்திரமான சுடலைமுத்துவுக்கு அவ்வாறுதான் நேர்ந்தது. தந்தையின் அவலமான வாழ்க்கையை அருகிலிருந்து பார்த்தவனுக்கு அந்தத் தொழிலின் சகித்துக்கொள்ள முடியாத, வெறுப்பு இருக்கத்தான் செய்தது. வெகுசனம், அவர்களைத் தீண்டத் தகாத சமூகமாகப் புறமொதுக்கியதை அவன் அனுபவித்துத்தானே வந்திருக்கிறான். ஆனால் ஒரு தோட்டியின் மகனுக்கு யார் வேறு வேலை தருவார்கள்? அப்படியே தந்தாலும் அவனோடு பணியாற்றுபவர்கள் எப்படி அவன் அருகாமையை விரும்புவார்கள்? தோட்டியின் வாழ்க்கையை எப்படிப் பார்த்தாலும் அது அசூசையான, துர்நாற்றம் வீசக்கூடிய ஒன்றாகத்தான் மதிக்கப்படும். அவர்கள் வாழ்க்கை உறவு எல்லாம் தோட்டி சமூத்தினரோடுதான் உழலவேண்டியிருக்கும். அது ஒரு வட்டம். அந்த வட்டத்துக்குட்பட்டே வாழ்க்கை அமையும். வட்டத்தின் வரையறுக்கப்பட்ட கோட்டுக்கு வெளியே அவர்களுக்கான வாழ்க்கை மறுதலிக்கப்பட்டது. ஆடுகளங்களில் கிழிக்கப்பட்ட கோட்டுக்குள்ளேயே விளையாட வேண்டும் என்ற விதிகளைப்போல, அந்த வரையரையை தாண்டினால் அது விதிமீறல் ஆகிவிடுகிறது. அவர்கள் வாழ்க்கையே அந்த விளையாட்டுகளை ஒத்ததுதான். அவர்களுக்கு அந்தத் தீண்டாமை வலை விரிக்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் வசமாகச் சிக்கிக்கொள்ள வைத்துவிட்டது.
நாவலின் தொடக்க அத்தியாயத்தில் அப்பா இசக்கிமுத்து நோய்வாய்ப்பட, மகன் சுடலைமுத்துவை முனிசிபல் தலைவரிடம் அதே வேலையைக் கெஞ்சிக் கேட்டு வாங்க வலியுறுத்துகிறார். மகன் சுடலைமுத்து அதில் விருப்பமற்று சுணங்க, இசக்கிமுத்து நமக்கு வேறு வேலை கிடைக்க வாய்ப்பே இல்லை, இதிலாவது இணைந்தால் ஒரு வேளை கஞ்சியாவது கிடைக்கும் என்ற வலிய அனுப்பிப் பெறவைத்துவிடுகிறார். நம் இனம் பிறந்ததே இந்த வேலையைச் செய்யத்தான் என்று அவனுக்கு அழுத்தம் திருத்தமாயச் சொல்கிறார். தன் கௌரவம் அதனால் பாதிக்கும் என்று வருந்தினாலும், தன் சந்ததி செய்த வேலையிலிருந்து அவனால் விலகி ஓடித் தப்பிக்க முடியாதபடி சமூக அமைப்பு இறுகிப்போய்க்கிடக்கிறது. வேறு வழியே அவனுக்குப் புலனாகவில்லை!
தன்னால் மலம் அள்ளும் வேலையிலிருந்து தப்பிக்க வாய்ப்பே இல்லை என்று உணரும் கட்டத்தில், குறைந்தபட்சம், அச்சமூகம் காலங்காலமாகச் சுரண்டப்படுவதிலிருந்தாவது விடுபடுவதற்கான முயற்சியில் ஈடுபடுகிறான். ஆனால் அவர்களை ஆளும் அதிகாரக் கட்டமைப்பு, அவ்வளவு எளிதாக ஊடுறுவக் கூடியதாக இருக்கவில்லை.
சுரண்டப்பட்ட மக்கள் எக்காரணத்தைக்கொண்டும் விழித்துக்கொள்ளக்கூடாது என்பதே அதிகார வர்க்கத்தின் திட்டவட்டமான முடிவு. சுடலைமுத்து தோட்டிகள் அநியாயமாக நடத்தப்படுவதைச் சுட்டிக்காட்ட குரல் ஒலிக்கவேண்டுமென்றால் அவர்களுக்கென்று ஓர் அமைப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறான். நகராண்மை தலைவர் அதற்குப் பெரும் தடையாக இருப்பதுமட்டுமின்றி, தோட்டிகளுக்காக சங்கம் அமைப்பது அவசியம்தானா, என்று பொய்யாக நாடகமாடி அவரின் அடிவருடிகளைக் கொண்டே புதிய சங்கத்தை அமைத்து நிர்வகிக்க தொடங்கிவிடுகிறார். இதன் வழி தோட்டிகள் முற்றும்முழுதாக அவர்களின் அதிகாரத்துக் கீழ் வந்துவிடுகிறார்கள். இங்கேயும் சுடலைமுத்துவின் திட்டம் தவிடுபொடியாகிவிடுகிறது.
அவர்கள் தரப்பின் நியாயங்கள் கோரிக்கைளாக எழுப்பப்பட்டால் நகராண்மைக்குப் பெரிய இழப்பீடுகளில் போய் முடியும் என்று முன்யோசித்தே இந்த மாற்றுச் சங்கத்தை நிறுவி, தோட்டிகள் ஆரம்பித்த சங்கத்தைச் செயலிழக்கச் செய்துவிடுகிறார்கள். எனவே தோட்டிகள் முதலாளிகளின் கூடுதல் கட்டளைகளுக்கு அடிபணியவே ண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடுகிறது. அவர்களின் திட்டங்களை முடக்குதல் என்பதுவும் ஒருவகை ஒடுக்குமுறைதான். அதிகார வர்க்கம் தன் சுயநலத்துக்காக எப்படித் தன்னிடம் அடிமைப்பட்டுக்கிடப்பவனை அற்பத்தனமாக நடத்துகிறது என்பதை இந்த நாவல் தொடக்க அத்தியாயங்களிலேயே நிறுவிவிடுகிறது.
சுடலைமுத்துவின் சங்கம் அமைக்கும் திட்டம் முதலாளிகளின் அத்துமீறலால் தோல்விகண்டபோது, அவன் முதலாளிகளின் அடிவருடிகளில் ஒருவனாக மாறிவிடுகிறான். தன் அடுத்த சந்ததியின் வாழ்க்கையையாவது திசைமாற்றிவிட வேண்டும் எனும் அவன் வகுத்த வியூகத்துக்காகவே, தன் சுமரியாதையை இழக்கத் தயாராக இருக்கிறான். பலகாலமாகச் சுயமரியாதையை முதலாளி வர்க்கத்திடம் அடகு வைத்துப் பழகிய சமூகத்தைச் சேர்ந்தவனுக்கு, புதிதாக இழக்க ஒன்றுமில்லையல்லவா? தன் சமூக விழிப்புணர்ச்சி சார்ந்த சிந்தனை, தன் சுய நோக்கத்துக்கு எந்த விதத்திலும் உதவாது என்று முடிவெடுத்து, சுயநலமாக சிந்திக்கத் தொடங்கிவிடுகிறான். அதில் சிறிதளவு வெற்றியையும் எய்துகிறான்.
இப்படியான பல அம்சங்களால் நாவல் செறிவடைந்துகொண்டே போகிறது. அதில் முக்கியமானது நாவலின் மையப் பாத்திரமான சுடலை, சூழலுக்குத் தகுந்தமாதிரி தன்னைத் தகவமைத்துக்கொண்டு அதிலிருந்து தன்னுடய வாழ்க்கையை வளப்படுத்திக் கொண்டே இருப்பதுதான்.
மனிதர்களின் சுபாவங்களை உற்று நோக்கும்போது நமக்குப் பல விடயங்கள் புலனாகும். பெரும்பாலான மனிதர்கள் சந்தர்ப்பவாதிகள் என்பது அதிலொன்று. பாவனைகளால் வாழ்க்கையின் நோக்கங்களை அடைய காயை நகர்த்திக்கொண்டே இருப்பார்கள். சுடலை அந்த உத்தியைக் கையாள்வதாக நாவலில் காட்டப்படுகிறது.
தொடக்கத்தில் காட்டப்படும் சுடலைமுத்து, நாவல் விரிந்து உச்சத்தை நோக்கிய பயணத்தில் அவன் வேறு ஒருவானகவும் வடிவம் எடுக்கிறான். ஆரம்பத்தில் சுடலைமுத்து கக்கூஸ் கழுவி வயிற்றைக் கழுவிக்கொள்ளும் அன்றாடங்காய்ச்சி. அவன் சுயநலப்போக்கு அடுத்தடுத்த நகர்வில் தெரிய வருகிறது. இந்தப் பண்பு மாற்றங்கள் அவன் சூழ்நிலைக் கைதியாக்கப்பட்டத்தைக் காட்டுகிறது. தொடக்கத்தில், வாசகன் தனக்குள் சுடலைமுத்துவை வடிவமைத்த பிம்பம் உடைந்துகொண்டே இருக்கிறது. வாசகனின் எதிர்பார்ப்புகள் வேறொன்றாய் உருமாறி திகைப்பை அளித்துக்கொண்டே நாவலின் சுவாரஸ்யம் மேலோங்குகிறது.
தோட்டியின் உரிமைகளைக் கோர, சங்க அமைக்கப்பட வேண்டுமென்ற தொடக்கக் குரல் அவனுடடையதாக இருந்தது. ஆனால் மறுகணமே தடம் மாறி சங்கம் என்ற பொதுமைக் குரலால், தன் லட்சியம் நிறைவேறப்போவதில்லை என்று முன்யோசனையோடு முடிவெடுக்கிறான். சங்கத்தில் பட்டும் படாததுமாய்ச் செயல்படுகிறான். அதிலிருந்து எப்படியாவது நழுவிக்கொள்ள வியூகம் வகுத்தபடியே இருக்கிறான். சங்கம் உருவானது சுடலையால்தான் என்று தகவல் தெரிந்தவுடன், அவனை ஓவர்சீயர் கேசவப் பிள்ளையும், முனிசிபல் தலைவரும் மிரட்டும்போது, தன் பிழைப்பில் மண் விழுந்துவிடுமே என்று எண்ணி சங்கம் பலவீனமடைய முனிசிபல் தலைவருக்கு ஆதரவாக இருந்து எல்லாச் சில்லுண்டி தந்திரங்களையும் கையாள்கிறான். இந்த அடிவருடித் தனத்தால் அவனிடம் கொஞ்சம் கொஞ்சமாய் பணம் சேருகிறது. பணம் சேரச் சேர அவன் பாதை மாறுகிறான்.
நாவலின் பிற்பகுதியில் அவனின் சுயநலப்பாதை விரிவடைவதைத் தகழி தன் படைப்பில் ஆரவாரமில்லாமல் கையாள்கிறார். அதற்குச் சில எடுத்துக்காட்டுகளைப் பார்க்கலாம்.
அவன் வள்ளியைக் காதலிக்கும்போது இச்சை மயக்கத்தில் என்னென்னவோ உறுதியளிக்கிறான். திருமணமாகி இச்சை தீர்ந்ததும் உறுதியளித்தவற்றை நிறைவேற்றாமல் நழுவுகிறான். அதனால் வள்ளியின் வெறுப்புக்கு ஆளாகிறான். இன்னொரு பெண்ணை விரும்புவது வள்ளி உணர்ந்தவுடன் அவளைச் சமாளித்தே ஏமாற்றுகிறான். ஒரு நல்ல வீட்டை வாங்கி குடிபுகுந்து சேரிக்குச் சற்றுத்தள்ளிப்போய் குடியேறுகிறான். தோட்டிச் சமுகத்தில் தான் சற்று உயர்ந்தவன் என்பதற்கான நகர்வு இது. அவன் தன் சகாக்களுக்கு எதிராகச் செய்த சதிவேலைகளுக்காகத் தகாத முறையில் செயல்பட்டதால் கிடைத்த பணம்தான் அவனுடைய வசதியான வாழக்கைக்குக் காரணம். சேரி மக்களோடு வள்ளி நட்புறவுக் கொள்ளக்கூடாது என்றும் எச்சரிக்கிறான். தாய் தந்தையை இழந்த வள்ளியை அவள் அத்தைதான் வளர்த்து ஆளாக்குகிறாள். தன் பிரிவால் அவள் தனித்து வாழ்வதை விரும்பாத வள்ளி அவளை வீட்டுக்கு அழைத்து வருகிறாள். அந்த அழுக்குக் கிழவியை அவனுக்குப் பிடிக்கவில்லை. எனவே அவளை வெளியேற்ற திட்டமிடுகிறான். நல்லவன் போல நாடகமாடி அவளை அவள் வீட்டுக்கே திரும்ப அனுப்பிவிடுகிறான்.
வைசூரி நோய் அவ்வூரில் பரவி மனிதக்கொல்லியாகிக் கோரத் தாண்டவமாடும்போது பிரார்த்தனைகள் செய்யவும் மருத்துவம் பார்க்கவும், பணவசூலில் ஈடுபடுகிறான் சுடலைமுத்து. ஆனால் அவன் தன் சொந்தப் பாக்கெட்டிலிருந்து ஒரு சல்லிக் காசுகூடக் கொடுக்காததை கவனித்துவிட்ட வள்ளி, அவனின் குணக்கேடைச் சுட்டிக்காட்டுகிறாள். அப்போது அவன் சீற்றமடைகிறான். தன்னை விமர்சிக்கும் அவளை அவள் அத்தை வீட்டுக்கே அனுப்பிவிட திட்டம் வகுக்கிறான். பச்சோந்தியைப்போல் சூழ்நிலைக்ககேற்ப நிறம் மாறிக்கொண்டே இருக்கிறான் சுடலை. தன் கனவுகளை நிறைவேற்றத் துடிக்கும், சுடலையின் குணக்கேட்டை வடிவமைக்க நாவலாசிரியர் கதைப்போக்கை நீரோடையைப்போல நகர்த்துகிறார். கதைப் போக்கில் அந்தப் பாத்திரம் மெல்ல மெல்ல நிறம் மாறிக்கொண்டே இருக்கிறது. சுடலை முத்துவின் இந்தப் பாத்திர வார்ப்பு நாவலின் செறிவை நிர்ணயிக்கிறது.
காலங்காலமாக ஒடுக்கு முறைக்கும் சுரண்டலுக்கும் ஆளான சமூகத்திலிருந்து வந்தவன், அதிகார அமைப்பின் பொருளாதார வலிமைக்கு உடன்போகவும் செய்கிறான். தன் பராரி சமூகத்தின் சொற்ப வருமானத்தில் களவாடி அதனை முதலாளிகளோடு பங்கிட்டுக் கொள்கிறான். ஆக தன் வாழ்க்கை பிற தோட்டிகள் வாழ்க்கைபோல் அல்லாமல் சற்று வசதியானதாக ஆகிக்கொள்ள அவன் முயற்சிகள் ஓரளவு வெற்றியை அடைந்தாலும், அவனுடைய சாதி அடையாளத்தில் ஒரு சிறிய மாறுதலைக்கூட உண்டாக்க முடியாமல் இருப்பது அவனுக்குப் பெருத்த ஏமாற்றமாகவே இருக்கிறது.
இசக்குமுத்துவோடு சுடலைமுத்துவை ஒப்பீட்டு அளவீடுகொண்டு நோக்கும்போது சுடலைமுத்துவை லட்சியவாத நோக்கும்டையவனாகப் படைத்திருக்கிறார் தகழி சிவசங்கரப் பிள்ளை. இசக்கிமுத்துவுக்குத் தோட்டி வேலைதான் தன் ஒரே வாழ்வாதாரம். அதன் பொருட்டு கொத்தடிமையாக வாழ்வது விதிக்கப்பட்டிருக்கிறது என்றும் நம்புகிறார். அதிலிருந்து விலகிவிடமுடியாத மிக இறுக்கமான தளையில் சிக்கிக்கொண்டுவிட்டதாகவும் நினைக்கிறார். ஆனால் சுடலைமுத்து தன் தந்தை செய்த தொழிலைத் தன் அடுத்த தலைமுறை செய்யக்கூடாது என்று திட்டவட்டமாக நம்புகிறான். அதற்காக வள்ளிக்கும் தனக்கும் பிறந்த குழந்தைக்கு மோகன் என்று பெயரிடுகிறான். பேபி என்றும் துணைப்பெயெரிட்டும் அழைக்கிறான். மோகன், பேபி என்ற பெயர்கள் மேல்தட்டு சமூகத்தினர் வைக்கும் பெயர்கள். தன் குழந்தையை அவ்வாறே அழைக்கப்பட வேண்டும் என்றே விரும்புகிறான். அதற்காக அவன் கக்கூஸ் சுத்தம் செய்ய மேல்தட்டு மனிதர்கள் வீடுகளுக்குச் செல்லும்போது அவர்கள் குழந்தையின் பெயரைக் கேட்குமுன்னரே, இவனே வலிந்து மோகன் என்று பெருமை ததும்பச் சொல்கிறான். முனிசிபல் தலைவர் மனைவி இந்தப் பெயரைக் கேட்டவுடன் கேலியாகச் சிரித்துவிடுகிறாள்.
“அப்போ பேபி தோட்டின்னு கூப்பிடலாமா” என்று கேட்கிறாள். அந்தக் கேலிச் சொல்லால் அவன் புண்படுகிறான். ஒரு தீண்டத்தகாதவனுக்குச் சுயமரியாதை இருக்க முடியாது என்ற மேல்வர்கத்தினர் அபிப்பிராயத்தை இங்கே கவனப்படுத்துகிறார் தகழி. ஒரு சமூகத்தைப் பல காலமாகக் கீழ்மையில் வைத்ததுப் பார்க்கும் உயர் சாதி மக்கள் அப்படித்தானே பேசுவார்கள். அந்த மரபின் பாதையில்தானே அவர்கள வந்திருக்கிறார்கள். எனவேதான் குரூரமாகப் பரிகாசம் செய்வது அவர்களுக்கு இயல்பாகிவிட்டது.
அவன் கக்கூஸ் சுத்தம் செய்யப்போகும் வீடெங்கும் இப்படியே கீழ்மை செய்யும் அபிப்பிராயம் எழுகிறது. ஆனால் அவன் அசைந்துகொடுக்கவில்லை. மோகன் என்ற பெயர்தான் பெரிய பதிவியிலுள்ளவர்களுக்குப் பொருத்தமாக அமைவதைக் கண்கூடாய்ப் பார்த்திருக்கிறான். அப்பெயெர் ராசி, தன் மகனை அந்த லட்சியத்தை நோக்கி வளர்த்தெடுக்கும் என்று நம்புகிறான். அது வாசகனுக்கு அபத்தமாகப் பட்டாலும், அதனை அவனின் வியூகமாகவே சொல்லப்படுகிறது.
ஆனால் பிற்போக்குத் தனமுடைய வள்ளிக்கு அவன் குருதிவழி தோட்டிதான், அதில் மாற்றம் வரப்போவதில்லை என்றே வாதாடுகிறாள். அந்தச் சமூகம் பல காலமாய்க் கீழ்மையில் அலைக்கழிவதை அவளே சுடலைமுத்துவைவிடச் சரியாகக் கணித்திருக்கிறாள். அதற்கு எடுத்துக் காட்டாக, நாவலின் ஓரிடத்தில், குழந்தை மலத்தோடு மூத்திரத்தோடும் அலைந்து புரண்டு விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்த்து ஆவேசமடைந்த சுடலை,
“என்னடி இது?” என்கிறான்.
அதற்கு வள்ளி “கொளந்த சில சமயம் அப்படித்தான் கெடக்கும்” என்கிறாள்.
“எங்கொளந்த அப்படிக் கெடக்ககூடாது,” என்கிறான்.
“நீ மட்டும் இப்ப என்ன வேலை செஞ்சிக்கிட்டு இருக்கியாம்? ஒங்கொளந்ததானே?” என்று பதிலுரைக்கும்போதுதான் வள்ளிக்குள் மரபு ரீதியாகப் புதைந்துபோய்விட்ட எண்ணத்தைப் புரிந்துகொள்வதாக அர்த்தப்படுத்திக்கொள்ளலாம்.
பெரிய மனிதர்கள் வீடுகளில் குழந்தை வளர்ப்புக்கு என்னென்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதைப் பார்த்துவிட்டு வருபவன், தன் குழந்தைக்கும் அதே போன்ற உணவையும் விளையாட்டுப் பொருட்களையும் வாங்கிக் கொடுக்கிறான் சுடலை. அவர்களுக்கு ஈடாக மகனை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற அவனின் வைராக்கியம் இங்கே தெளிவாகிறது,
அவனின் லட்சியத்துக்குத் தடை விழுந்துவிடும் என்பதற்காகவே அவனைத் தூக்கிக் கொஞ்சுவதுக்கூட இல்லை. எப்போதுமே அவனிடமிருந்து ஒரு விலகலை நிர்ணயித்துக்கொள்கிறான். தான் ஒரு தோட்டி என்பது அவனுக்குத் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காகவே அந்தக் கறாரான கொள்கையைக் கடைபிடிக்கிறான். அவன் தன் லசியத்தை நோக்கிய பயணத்துக்கு எதிரிடையாய் குறுக்கிடும் எல்லா முட்டுக்கட்டைகளையும் உடைத்தெறிந்துகொண்டே முன் நகர்கிறான்.
தன் அடுத்த சந்ததியாவது இந்த இழிவான தொழிலிலிருந்து விடுதலை பெற்றுவிடவேண்டும் என்ற எண்ணத்தில் முழுமூச்சாக இருக்கிறான். எத்துணை இடர் வந்தாலும் தகர்ந்துவிடக்கூடாது என்றே நம்பிக்கையை வளர்த்துவரும் வேளையில் அவன் கனவு ஓட்டை விழுந்த படகுபோல ஆழத்தை நோக்கித் தள்ளப்படுகிறது. இரண்டாவது, மூன்றாவது அத்தியாயங்களில் வாசகர்களுக்கு நம்பிக்கையூட்டிய தகழியின் வார்த்தைகள் பின்வரும் அத்தியாயங்களில் சரிந்து இறங்குமுகத்தைத் தொடுகிறது.
மோகன் தீண்டாமை இனத்தைச் சேர்ந்தவன், எனவே சமூக அமைப்பில் மேல்தட்டு குழந்தைகளோடு பயில இடம்தர முடியாது என்று பள்ளித் தலைமையாசிரியர் அனுமதியை மறுக்கிறார். சுடலைமுத்து முனிசிபல் தலைவரை அணுகி தீர்வைக் கோருகிறான். அவர் இருபது ரூபாய் லஞ்சம் கொடுத்தால் மோகனைப் பள்ளியில் சேர்க்க முடியும் என்கிறார். மோகனின் பள்ளி வாழ்க்கை தொடங்குகிறது. ஆனால் அவன் தோட்டியின் பிள்ளை என்பதால் மற்றச் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் அவனை ஒதுக்குகிறார்கள். இதுவரை தோட்டி என்றால் என்னவென்றே தெரியாத மோகனுக்கு, மெல்ல மெல்ல அதன் பொருள் அவனுக்குப் புரிபடுகிறது. மோகனுக்குப் பள்ளியில் அவமானம் நேர்ந்ததைத் தாயைப் பெரிதும் பாதிக்க, அவள் தொடுக்கும் கேள்வியால், நாவல் நெகிழ்வைக்கும் இடத்தை வந்தடைகிறது. இங்கே வாசகன் சமநிலை இழக்கிறான்.
“இந்தத் தோட்டியெ மொதன் மொதல்லே உண்டாக்கினவன் யார்” என்ற கேள்வியை வள்ளி கேட்கும்போது, எந்த அளவுக்கு மகனைப் புறக்கணித்தது தாயை முள்போலத் தைத்திருக்கிறது என்று நாமும் உணர்கிறோம். தொடர்ந்து அவள் தொடுக்கும் வினா, வள்ளி அடைந்த பாதிப்பின் உச்சம் என்று சொல்லலாம்.
“தோட்டியே இல்லாத காலம் வருமா?” இந்தப் பிரிவினைத் தொடங்கிய காலத்தையோ, அது இல்லாமல் மறையும் காலத்தையோ யாராலும் சொல்ல முடியுமா? இவை பதில்களற்ற வினாக்களைப் போலவே அவர் தீண்டாமை வாழ்க்கைக்கான தீர்வும் பதில்களற்ற புதிராகவே நிலைக்கிறது.
கணவன் மனைவியிடையே தொடரும் இந்த விவாதம் ஒரு தரிசனத்தில் போய் நிற்கிறது. “தோட்டியின் கொலந்தே படிக்கத் தொடங்கிட்டா, அப்புறமா தோட்டியில்லாம ஆயிடும்னு பயந்துதான்” என்கிறான் சுடலைமுத்து. எளியவனை விழிப்படையவிடாமல், வலியவன் கையாளும் மிக முக்கியமான ஆயுதம் அவனுக்கான கல்விவாய்ப்பைத் திறந்துவிடாமல் இருப்பதே.
ஒரு சமூகத்தை ஒடுக்கி சிந்திக்கவிடாமல் செய்துவிட்டால் அச்சமூகம் அதிகாரத்துக்குக் கட்டுப்படும் சமூகமாகவே இருக்குமே ஒழிய, அச்சமூகத்தின் அடையாள மாற்றங்கள் நிகழ வாய்ப்பே அமையாது. வரலாறு இதனை மெய்ப்பித்துக் கொண்டே இருக்கிறது. இதற்குச் சில எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம்.
1975இல் கம்போடியாவின் கொடுங்கோல் சர்வாதிகாரியாக இருந்த போல்போட், கண் கண்ணாடி அணிந்தவர்களைக் கொன்று தீர்த்தான். அதற்கு அவன் சொன்ன காரணம் கண்ணாடி அணிந்தவன் படித்தவனாய் இருப்பான். எனவே அது தன் தலைமைத்துவத்தை வீழ்த்த காரணமாகிவிடும் என்பதே. ஜெர்மணியின் சர்வாதிகாரி ஹிட்லர் அறிவாளி சமூகமான இஸ்ரேலியர்கள் உயிரோடிருப்பது தனக்கு ஆபத்து என்றே அவர்களை முற்றாக ஒழிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டான்.
நாவலில் மோகன் தூய்மையான உடையணிந்தே பள்ளிக்குச் சென்றாலும் அவன் மீது துர்நாற்றம் வீசுவதாகப் பழி சுமத்துகிறார்கள் பிற மாணவர்கள். இதனை உளவியல் ரீதியாக அணுகிறார் நாவலாசிரியர். மோகன் தோட்டி இனத்தைச் சேர்ந்தவன். தோட்டி என்ற சொல் காலங்காலமாய் அச்சமூகம் ஏந்திவரும் துர்நாற்றத்தை மோகனின் உடலிலும் இயல்பாய் கசியும், என்ற கற்பனையே இதற்குக் காரணம் என்கிறார்.
மோகன் தோட்டி சமூகத்தில் ஒருவனாத்தான் ஆயுள்வரை நீடிக்க முடியுமே ஒழிய அதிலிருந்து முற்றாய் வெளியேறுவது நடக்கவே நடக்காது, என்பதற்கு நாவல் வைக்கும் காரணம் மிக முக்கியமானது.
மோகனுக்கு இன்னொரு தோட்டிப்பெண்தான் மனைவியாக முடியும். அந்த அடையாளம் நிரந்தரமானது, நித்தியமானது என்று தம்பதிகள் இருவருமே ஒரே கருத்தியலுக்கு வந்து சேர்கிறார்கள்.
இந்நாவல் தோட்டி சமூகத்தின் இருப்பின் பொருள் குறித்தும், அவர்களின் வகையறியா தடுமாற்றங்கள் குறித்தும், அந்தத் தடுமாற்றங்களுக்கான வெளிச்சங்கள் மறுக்கப்பட்ட நிலை குறித்தும் ஆழ அகலத்தோடு விசாரணை செய்கிறது.
வாழ்க்கை முழுவதும் அவமானத்தையும், புறக்கணிப்பையும் ஏழ்மையையும் அனுபவித்த ஓருவன் அதிலிருந்து விலகி எஞ்சிய வாழ்க்கையையும், தன் வருங்கால சந்ததியையும் செழுமைப்படுத்திக்கொள்ள அவன் கையாண்ட உத்திதான் இந்த நாவலின் மையக் கதைப்பொருளாக எழுதப்பட்டிருக்கிறது. சமூகத்தின் ஓர் இழிந்த பிரிவினரின் அல்லது முற்றாக ஒதுக்கப்பட்ட சாதியினரின் இழிவுகளுக்குள்ளான முகாந்திரங்களை வாசக சமூகத்துக்கு முன்வைக்கிறது நாவல். தன் சமூகத்தினர் தங்கள் உழைப்பு சுரண்டப்படுகிறது என்று அறிந்திருந்தும் அதிலிருந்து தப்பித்துவிட முடியாத சாதிமைத் தளையில் சிக்கிக்கொண்டுவிட்டது. அதனைக் கூர்மையாக அவதானித்தவன் அந்த முதலாளித்துவ கொத்தடிமையிலிருந்து தான் ஒருவனாவது விடுபடவேண்டும் என்பதற்காக அவன் சதிவேலைகளில் ஈடுபட்டது தவறே இல்லை என்றே என்னைக் கருதவைக்கிறது. இந்தத் தரிசனத்தையே நாவல் முன்னெடுத்ததாக நான் கருதுகிறேன்.
இந்த நாவல் வாழ்க்கையின் போக்கைக் கட்டுப்படுத்துவதோ திசை மாற்றுவதோ அவர்கள் கையில் இல்லை என்பதைக் கறாராக முன்வைப்பது தெரிகிறது. சுடலைமுத்துவின் திட்டங்களும் முயற்சிகளும் நிறைவேற்ற முடியாத ஒரு பெருஞ்சுவரில் போய் முட்டி நிற்கிறது. அதிலும் எளிய மனிதனின் முன்னெடுப்புகளுக்கு எல்லா திசையிலிருந்து தடைகள் கோரமுகம் காட்டி நிற்கும் என்பது சாசுவதம்.
அதற்கு எடுத்துக்காட்டாக இயற்கைப் பேரிடரைக் காட்டுகிறார் தகழி.
அந்த ஊரில் காலரா நோய் பரவி கொத்துக் கொத்தாக மரணம் நிகழ்ந்தபடி இருக்கிறது. வள்ளியும் சுடலைமுத்துவும் காலாரவின் கொடும்பிடிக்கு ஆளாகி மரணமடைய, மோகன் தாய்தந்தையன்றி தெருவில் தூக்கி எறியப்படுகிறான். ஏழைத் தோட்டியின் வம்சத்திலிருந்து வந்த பிள்ளைகள் என்ன கதிக்கு ஆளாவர்களோ அதே நிலைமைக்கு வசதியாக வாழ்ந்த மோகனும் ஆளாகிறான். குப்பையில் கிடக்கும் உணவைப் பொறுக்கி உண்ணும் நிலை அவனுக்கும் நேர்கிறது!
இந்தத் துயரம் நிகழ்வதற்கு ஒரு காரணத்தை மறைமுகமாகக் கற்பிக்கிறார் நாவலாசிரியர். பிச்சாண்டியின் பிள்ளைகள் பிச்சை எடுத்துண்ணும் நிலைமைக்குத் தள்ளியவன் சுடலைமுத்து என்பது வாசகன் நினைவுக்குச் சட்டென்று தோன்றுகிறது. சுடலையின் உற்ற தோழனான பிச்சாண்டி தோட்டிகள் சங்கத்தில் மும்முரமாக இருந்தபோது அதனைத் தகர்க்க, அவன் மீது திருட்டுக்குற்றம் சாட்டி, அவனை ஊரை விட்டே ஓட வைக்கிறான். அதனால் பிச்சாண்டி குடும்பம் தெருவுக்கு வருகிறது. அவர்கள் பிச்சை எடுத்துண்கிறார்கள்.
தன் குடும்ப அடையாளம் மகனிடம் நீட்சி காணக்கூடாது என்று நினைத்தானோ அந்த அடையாளத்தோடே மோகனின் வாழ்க்கை அமைந்துவிடுவது தற்செயல் அல்ல. நீயூட்டனின் மூன்றாம் விதி ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு என்று சொல்கிறது. சுடலைமுத்துவின் மகன் மோகனுக்கு நேர்ந்தது இப்போது தர்க்க ரீதியாகப் புரிந்துகொள்ள முடிகிறது.
சமூகப் படிநிலை அமைப்பில், தோட்டி பிரிவினர் தொடங்கியது எப்படி என்று ஆராய்ந்தால் அதற்குப் பதில் கிடைக்காது. ஆனால் இந்த நாவல் நிகழ்த்தும் பரிணாமத்தைக் கருத்தில்கொண்டால் தோட்டிகள் அவர்கள் போக்கில் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள் என்ற தீர்வுக்கு வர முடியும். சமூக அரசியல் அது தன்னிச்சையாக உருவாவதற்கான ஒரு மரபை ஸ்திரப்படுத்திவிட்டது என்று புரிய வருகிறது.
நாவலின் முடிவோடு என்னால் உடன்பட முடியவில்லை. நாவல் மார்க்ஸிய சித்தாந்தத்தை முன்னெடுத்தாலும், முடிவில் நாடகீயத் தருணங்களால் பலவீனமடைகிறது. இசக்கிமுத்து தனக்கு வாய்க்கப்பட்ட வாழ்க்கையை, அது போகிற போக்கில் ஏற்றுக்கொண்டு ஒரு தோட்டியாக வாழ்க்கையைத் தொடங்கி ஒரு தோட்டியாகவே முடித்துக்கொள்கிறார். அவருக்கு அது சார்ந்து எந்தக் கேள்வியும் இல்லை. ஆனால் அவரின் மகன் அவ்வாறாக இல்லாமல் தனக்குக் கையளிக்கப்பட்ட வாழ்க்கையை மறுதலித்து புதிய வாழ்க்கைக்கான பாதையாக மாற்ற திட்டம் தீட்டுகிறான். ஆனால் அது நிறைவேறாது என்று தெரிந்ததும் கைவிட்டுவிடுகிறான். சுடலைமுத்துவின் மகன் மோகனோ, தன் சமூகம் வெகுகாலமாகச் சுரண்டப்பட்டதை எதிர்த்து, அவர்களை அதிலிருந்து விடுவிக்க, ஒரு புரட்சியாளனாக வெடித்து வெளியே வந்து அந்த இயக்கத்துக்கு முன்னிலை வகித்து வழி நடத்துகிறான். அவன் தன் தாத்தாவையும் தந்தையைப் போலவே கல்வி கற்காதவன். ஆனாலும் புரட்சியில் நாட்டையே கொந்தளிக்கச் செய்கிறான் என்று முடிகிறது. மோகன் லெனினிய புரட்சி சித்தாந்தத்தைக் கையாள்வதாக குறியீட்டுக் காட்டி நாவல் முடிகிறது. ஆனால் இந்தியா போன்ற ஜனநாயக நாட்டுக்கு இந்தப் புரட்சிப் பாய்ச்சல் சரிபட்டுவருமா என்பதில்தான் எனக்கு ஐயம் உண்டு.
தோட்டி சமூகத்தின் சாபக்கேட்டைத் தன் தலைமுறைக்குப் பிறகாவது தீர்வுகண்டுவிட வேண்டும் என்னும் சுடலையின் முயற்சிகளில் திரும்பத் திரும்பத் தோல்வியே அறையும்போது, அவனால் அவனின் சமூகத்தின் தலையெழுத்து மாறப்போவதில்லை என்ற முடிவுக்கு வருகிறோம். தன் முதுகில் சதாசர்வகாலமும் அவன் சுமந்துவரும் பரம்பரை இழிவைத் துறந்துவிடவேண்டும் என்று அவன் முன்னோக்கி ஓட, அவனுக்கு முன்னால் அதே இழிவு இரட்டிப்பாகி இடரவைத்ததை நாவல் நம்பகத்தன்மையோடு முன்வைத்திருக்கிறது.
சாதியப் படிநிலையில் இழிந்த சமூகமாகச் சித்தரிக்கப்பட்டவர்கள், அந்த அடையாளத்தை மாற்ற எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், அந்த முயற்சிகளைத் தோல்வியடையச் செய்யும் சாதியக் கட்டமைப்பும், அது அவர்களுக்கு இழைக்கும் கொடுமைகளும் தொடர்ந்தவாறுதான் இருக்கும் என்பதை நாவல் சொல்லும் தத்துவமாகப் புரிந்துகொள்ளலாம்.
