மலேசியப் பாட்டிகள் சொன்ன கதைகள்

ஓவியனின் காளை

மலேசியத் தோட்டம் ஒன்றில் ஓவியன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அந்தத் தோட்டத்தில் தன்னை ஓவியத்தில் மிஞ்ச ஆளில்லை என்ற ஆணவத்தில் இருந்தான். ஓவியம் வரையும் போட்டிகளிலும் கலந்து கொண்டு முதல் பரிசைத் தட்டிச் செல்வான்.  உண்மையில் அவன் திறமையான ஓவியனாகவே திகழ்ந்தான்.  இந்தத் திறமை எல்லாம் பிறவிலேயே கிடைக்கப்பெற்றதாகும் என்று அவ்வூர் மக்கள் நினைத்துக் கொள்வார்கள்.

அந்தத் தோட்டத்தில் புதிதாக பள்ளி ஒன்றை நிறுவும்போது, பள்ளியின் பெயரைப் பெரிதாகச் சுவற்றில் எழுத வேண்டியிருந்தது. பள்ளி நியமித்த ஓவியனால் அதை முறையாகச் செய்ய முடியவில்லை. ஓரெழுத்து எழுதவே சோர்ந்து போனான்.

அந்தப் பக்கமாக ஓவியன் வந்தான். அனைத்தையும் கவனித்தான். தானாகவே சென்று பள்ளியின் பெயர் முழுவதையும் சுவற்றில் எழுதி முடித்தான். ஊரே கூடி நின்று வேடிக்கை பார்த்தது. எழுத்துக்குப் பக்கத்தில் தனது திறனைக் காட்டும் வண்ணம் இரண்டு காளை மாடுகள் சண்டை இடுவது போல ஓவியம் ஒன்றை வரைந்தான்.  அந்த ஓவியத்தை ஊர் மக்கள் அனைவரும் பார்த்து புகழ ஆசைப்பட்டான்.

மக்களும் அதைப் பார்த்து வியந்து பாராட்டினர். நிஜமாகவே காளை மாடுகள் சண்டைப் போடுவது போலவே இருப்பதாகப் புகழ்ந்தார்கள். ஓவியன் வான் நோக்கிப் பறந்தான். தன் திறன் குறித்து ஆணவம் கொண்டான். அவனைப் புகழ்ந்தவர்களைத் தனது அடிமைகள் போல பார்த்தான். ‘இந்த ஊரிலே, ஏன் இந்த உலகத்திலேயே என்னை மிஞ்சும் ஓவியன் இல்லை’ என மார்த்தட்டினான்.

அவர்களின் மத்தியில் மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் முன் வந்தான். அவன் அத்தோட்டப்பள்ளி கட்டி முடிக்கப்பட்டதும் அதில் இணைந்து பயில ஆர்வமாக இருந்தான். எனவே ஒவ்வொரு நாளும் பள்ளியின் அழகை இரசித்தபடி இருப்பான். அவன் ஓவியன் அருகில் சென்று “உங்கள் ஓவியத்தில் பிழை உள்ளது” என்றான். ஓவியன் கோபம் அடைந்தான்.

“மாடு மேய்க்கும் உனக்கு, என் ஓவியத்தைக் குறைச் சொல்ல தகுதியில்லை. மாட்டையாவது ஒழுங்காக மேய்த்துக் கொண்டுப் போ. என் ஓவியத்தைப் பற்றி யார் பேச வேண்டும் என்று தகுதி வேண்டாமா…?” என்று அந்தச் சிறுவனை ஊர் மக்கள் முன் திட்டித் தீர்த்தான். ஓவியன் அந்த மாதிரி உணர்ச்சி வசப்பட்டதை ஊர் மக்கள் முதன் முறையாகப் பார்த்தார்கள்.

“நான் மாடு மேய்ப்பவன்தான். அதனால்தான் உங்கள் ஓவியத்தில் குறையுள்ளதாகச் சொல்கிறேன். நீங்கள் மாடுகள் சண்டை போடுவதை என்றாவது பார்த்துள்ளீர்களா? சண்டைப் போடும் மாட்டின் வால் மேல் நோக்கியப்படி விறைத்துக் கொண்டிருக்கும். ஆனால் உங்கள் ஓவியத்தில் மாட்டின் வால் உணர்ச்சியற்று, ஓர் இறந்தப் பாம்பின் உடலைப் போல கீழ் நோக்கித் தொங்கியப்படியுள்ளது. உங்கள் ஓவியத்தில் கோபத்தோடு சண்டை போடும் இரண்டு காளை மாட்டின் முகத் தோற்றத்திற்கும் அதன் உணர்ச்சியற்ற வாலுக்கும் சம்மந்தம் இல்லை.” என்றான்.

ஓவியன் தான் வரைந்த சண்டையிடும் காளை மாட்டு ஓவியத்தின் வால் பகுதியைத் தலைக் குனிந்து கூர்ந்து நோக்கினான். அவன் தலை நிமிரவேவில்லை.

வீடு பூட்டிய காளியம்மன்

ராஜன் அந்த மந்திரவாதியின் வீட்டின் முன் காத்திருந்தான். அவன் கொண்டு வந்திருந்த நீண்ட தலை முடியைச் சுருட்டி தன் கைப்பிடியில் மறைத்து வைத்திருந்தான். சக்தியுள்ள மந்திரவாதி என்று நண்பன் சொல்லி அனுப்பி இருந்தான். செய்வினை வைப்பதில் கில்லாடி. வசியம் செய்வதில் பெரிய சாமர்த்தியசாளியாம். அவர் வீட்டினுள் வைத்திருக்கும் சுடுகாட்டு காளியின் சிலை முன் உட்கார்ந்து எல்லா சித்து வேலைகளையும் முடித்து விடுவார். ஆரம்பத்தில் நோய் நொடிகளை மட்டுமே குணப்படுத்தியவர் காலப்போக்கில் யார் என்ன சொன்னாலும் செய்து கொடுத்து அனுப்பினார்.

அதில் ஒன்றுதான் விருப்பம் இல்லாதப் பெண்களை வசியம் செய்ய இவர் கொடுக்கும் மை. அந்த மை எந்தப் பெண்ணையும் ஒருவன் வலையில் விழ வைத்துவிடும். ஆண்கள் அந்த மையை வாங்க வரிசையில் நின்றார்கள். ஆனால் ராஜனுக்கு மட்டும் அந்த மை வேலை செய்யவில்லை. அவனைப் புறக்கணித்தப் பெண்ணை மந்திரவாதி கொடுத்த மையைக் கொண்டும் வசியம் செய்ய முடியவில்லை. மீண்டும் மீண்டும் மையை மாற்றி மாற்றி மந்திரித்து கொடுத்து அனுப்பினார். ஏமாற்றத்தால் மீண்டும் மீண்டும் அவரைக் காண வந்தான். பயப்பக்தியுடன் பணிந்து குனிந்து வந்தவன், நெஞ்சை நிமிர்த்தி ‘நீயெல்லாம் ஒரு மந்திரவாதியாடா’ என்று காறித் துப்பினான்.

தன்மானம் கொண்ட அவரால் அவன் துப்பியதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தான் வணங்கும் சுடுகாட்டுக் காளி சிலையின் முன் தியானத்தில் அமர்ந்தார். மனதில் குரல் ஒன்று ஒலித்தது.

“என்னை விட பெரிய சக்தியை அந்தப் பெண் வைத்திருக்கிறாள். அவளை வசியம் செய்ய மை மட்டும் போதாது. அவளின் தலை முடியைக் கொண்டு வரச் சொல். இவனின் தலை முடியையும் பிடுங்கி அவள் முடியோடு இணைத்துக் கட்டி விடு. அவர்களின் முடியை மையில் சேர்த்து வைத்து விடு. அதன் பின் அந்த மையைப் பூசிக் கொண்டு அவள் முன் போய் நிற்கச் சொல். எல்லாம் நலம்” மந்திரவாதி கண்களைத் திறந்து வணங்கினார்.

அவர் கேட்டதால் பெண்ணின் தலை முடியோடு ராஜன் காத்துக் கொண்டிருக்கிறான். கதவுத் திறந்ததும் உள்ளே சென்றான். மந்திரவாதியிடம் தலை முடியை அலட்சியமாகக் கொடுத்தான். இவனின் தலை முடியைப் பிடுங்கினார். ஐயோ எனக் கத்தினான்.

மந்திரவாதியிடம் மையைப் பெற்றுக் கொண்டு அவநம்பிக்கையில் சென்றான். கொஞ்சம் தூரம் நடந்தவன் மீண்டும் மந்திரவாதியின் வீடு நோக்கித் திரும்பி நடந்தான். மந்திரவாதியின் வீட்டு வளைவில் நின்றவன் அதிர்ச்சி அடைந்தான். கதவு தானாக திறந்தது. உள்ளிருந்து சுடுகாட்டு காளி வெளியே வந்தாள். திரும்பிக் கதவை சாத்தியதும் பூட்டுப் போட்டாள். தொடர்ந்து நடந்தாள்.

ராஜன் குழப்பத்தில் தரையில் அமர்ந்தான். இந்தக் காளிதான் அவள் வீட்டை நோக்கியும் செல்கிறாளா? அவளும் இதே காளியிடம்தான், தன்னைப் பாதுகாக்க வேண்டிக் கொள்கிறாளா? அல்லது இந்த மந்திரவாதியின் செயல் பிடிக்காமல் வீட்டைப் பூட்டிக் கிளம்பி விட்டாளா?

ராஜன் மந்திரவாதி கொடுத்த மையைத் தூக்கி மந்திரவாதியின் வீட்டு ஓட்டின் மேல் எறிந்தான். அதன் பிறகு அந்த மந்திரவாதி செய்த எந்தச் சித்து விளையாட்டும் யாருக்கும் பலிக்கவில்லை என்று ஊர் மக்கள் பேசிக் கொண்டார்கள். கொஞ்ச நாளில் அந்த மந்திரவாதியும் ஊரை விட்டு கிளம்பி விட்டான். அந்த வீட்டை ஊர் மக்கள் கோவிலாக மாற்றி விட்டார்கள். சுடுகாட்டுக் காளியம்மன் கோவில் எனப் பெயரும் வைத்து விட்டார்கள். ஆனால் ராஜன் மட்டும் ‘வீடு பூட்டிய காளியம்மன் கோவில்’ என்றே அழைத்தான்.

ஐயா சாமி

யாரும் எதிர்பாராத அந்த இரவில் சலங்கை ஒலி கேட்டது. தொடர்ந்து குதிரைக் குளம்படி சத்தம் கேட்டது. தோட்டத்தில் வசித்த அனைவரும் வீட்டுக்குள் சென்று கதவடைத்து கொண்டார்கள். ராமுவை அவன் அம்மா திரும்பிப் படுக்க சொன்னார். சலங்கை சத்தம் கேட்கும் நாள்களில் வாசல் கதவு நோக்கி படுக்க அவனின் அம்மா அனுமதிப்பதில்லை. பயந்து விடுவான் என எச்சரிக்கையாக இருந்தாள். அம்மாவின் பேச்சை அவனும் மீறாமல் இருந்தான்.

“ஐயா சாமிதானே அம்மா. ஏன் நாம் அவரைப் பார்க்கக் கூடாது.” என்று ஒரு நாள் சலங்கை சத்தமும், குதிரைக் குளம்படி சத்தமும் நின்ற பிறகு அம்மாவிடம் கேட்டான்.

“அவர் தான் நம் குலதெய்வம்” என்றார்.

“குலதெய்வம் என்றால் என்ன அம்மா” ராமு கேட்டான்.

“குலம் காக்கும் கடவுளை நாம் குலதெய்வம் என்போம். நம் முன்னோர்களிடமிருந்து வாழையடி வாழையாக நாம் வணங்கும் தெய்வம். தமிழகத்தில் உன் தாத்தா பாட்டியெல்லாம் வணங்கிய தெய்வம்” என்றார்.

“நம்மை காக்கும் ஐயாவை ஏன் நாம் அவரின் முன்னே சென்று நின்று நேரடியாக வணங்கி வரம் கேட்கக் கூடாது.” எனத் தொடர்ந்து கேள்விகளைக் கேட்டான் ராமு.

“அவர் காவலுக்குப் போகிறார். அவர் காரியத்தில் கண்ணாக இருப்பவர். அவரின் சலங்கை ஒலியையும், குதிரைக் குளம்படி சத்தமும் கேட்டால் பேய் பிசாசுகள் எல்லாம் இந்த ஊரை விட்டு ஓடிவிடும். நமக்கு அவரை வழிப்பட கோவில் மட்டும் தான் கொடுக்கப்பட்ட இடம். அங்கு மட்டுமே அவரிடம் நாம் வரத்தைக் கேட்க முடியும்.”

“ஏன் அம்மா அப்படி?” என்றான்.

“மன்னர் போர் வீரனாகப் போருக்குக் கிளம்புவது போல. அந்த நேரத்தில் மக்கள் அவரை நிறுத்தி தங்கள் பிரச்சினைகளைச் சொல்ல இயலுமா? மன்னர் கேட்பாரா? மன்னர் தான் மக்களுக்காக நேரத்தையும் சபையையும் மக்கள் குரல் கேட்க ஒதுக்கியுள்ளாரே. அந்த நேரத்தை விட்டு அவர் மக்களைக் காக்க போருக்குச் செல்லும்போது நாம் தடுத்து நிறுத்தி குறைகளைச் சொன்னால் அந்த மன்னருக்குக் கோபம்தானே வரும். எல்லாவற்றிற்கும் நேரம் காலம் இருக்கிறது.”

ராமு அமைதியாக இருந்தான்.

“யாருடைய நேரத்தையும் நாம் நம் சுயநலம் கருதி எடுத்து கொள்ளக் கூடாது. அவர்கள் நமக்காக ஒதுக்கிய நேரத்தையும் நாம் பயன்படுத்த தவறவும் கூடாது. கடந்த மாதம் ஐயா சாமிக்குப் பொங்கல் வைத்தபோது பூஜைக்கு ஒரு நேரமும், பந்திக்கு மற்றொரு நேரமும் ஒதுக்கினோம்தானே. அதுதான் இயற்கை விதி. தானே படைத்தாலும், இறைவனும் தான் படைத்த இயற்கை விதிக்குக் கட்டுப்பட்டவன் தான்.” அம்மா சொல்லி முடித்தார்.

ராமுவும் ஏதோ புரிந்து விட்டது போல தலையாட்டிவிட்டு, “ஐயா சாமி எங்கிருந்து காவல் காக்கத் தொடங்குவார்?” என்றான்.

“அவர் வீடான கோவிலிலிருந்து குதிரையில் ஏறிப் புறப்பட்டு, நம் தோட்டத்து எல்லை நோக்கி குதிரையைச் செலுத்துவார். கடமை தவறாத ஐயா நம் தோட்டத்தில் உள்ள எல்லா வீட்டு வாசலையும் கடந்து விட்டு, ஊரையே வட்டமடித்து விட்டு தான் மீண்டும் கோவிலுக்குள் செல்வார். சலங்கை ஒலி கேட்காத வீடே இல்லை நம் ஊரில்.”

“அவர் எப்போது, எந்த நாளில் ஊர் காவலுக்குக் குதிரையில் ஏறுவார் என்று நாம் எவ்வாறு கண்டுக் கொள்வது” எனக் கேட்டான் ராமு.

“அது மட்டும் யாருக்கும் தெரியாத ரகசியம். ஐயா சாமிக்கே கூட அவர் எந்த இரவில் புறப்படுவார் என்று தெரியாது. திடீரெனக் குதிரையில் ஏறி ஊருக்குள் வந்து விடுவார். நேரம் காலம் எல்லாம் குறித்து வைத்து அவர் வெளிவர தொடங்கினார் என வைத்து கொள்வோம், அந்த நேரத்தில் பேய்கள் உஷாராகி விடும். சொல்லாமல் காவலுக்கு அவர் திடீரெனப் புறப்பட்டு போகும் வரை தான் நமக்குப் பாதுகாப்பு.” என்று அம்மா சொல்லி முடிக்கும்போது ராமு அவர் மடியிலே தூங்கி விட்டிருந்தான்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...