பறக்கும் லெமூர்
காட்டில் இருந்த வெவ்வேறு பறக்கும் வகை அணில்களுக்கான இரை தேடும் களம் பொதுவானதாகவே இருந்து வந்தது. இதனால் எல்லை உரிமை குறித்து முடிவற்ற சிக்கல்கள் நிகழ்ந்து கொண்டே இருந்தன. ஆனாலும், அவற்றின் நடுவே இராஜதந்திரமும் மதிநுட்பமும் நிறைந்திருந்த அந்நியரொருவரின் ஆலோசனைகளால் பல சிக்கல்களைத் தீர்த்து வைக்க முடிந்தது. அந்த அந்நியரைப் பறக்கும் லெமூர் என்று அவை அழைத்தன. அவை தங்கள் நம்பிக்கையால் பறக்கும் லெமூரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தன.

ஒரு நாள், தங்களின் எல்லா சிக்கல்களையும் ஒரேடியாகத் தீர்த்துக் கொள்வதென பறக்கும் அணில்கள் முடிவெடுத்தன. அவற்றின் எண்ணத்தைப் பறக்கும் லெமூர் ஆதரித்தது. ஆனாலும், அதற்கு முன்பதாகக் காட்டில் எந்த வகையான பழங்கள், இலைகள், மரங்கள் ஆகியவை இருக்கின்றன என்பதைக் குறித்த கணக்கெடுப்பு செய்ய வேண்டும் எனப் பரிந்துரைத்தது.
அந்தப் பணியைச் செய்வதற்குத் தன்னையே வழிமொழிந்தது லெமூர். கணக்கெடுப்புத் தடையின்றி நடைபெற்று முடியும் வரையில் பறக்கும் அணில்கள் வேறு இடத்திலிருந்து உணவைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு காட்டில் தான் விரும்பிய இடங்களில் தூங்கவும் விளையாடவும் உண்ணவும் செய்தது. காட்டில் இருந்த எண்ணற்ற தேர்வுகளால் திக்குமுக்காடிப் போய், பழ மரங்களின் மென்மையான தளிர்களையும் மற்றும் அழகிய மலர்களையும் தின்னத் தொடங்கியது. அதன் விளைவால் எந்த மரத்திலும் பழங்கள் காய்க்காமல் போனது.
ஓராண்டு காத்திருப்புக்குப் பின்னரும் பறக்கும் லெமூரிடமிருந்து எவ்விதத் தகவலும் வராததால் பறக்கும் அணில்கள் பொறுமையிழந்தன. கணக்கெடுப்புக்குப் பிறகு முடிவை அறிவிப்பதாகச் சொன்ன வாக்குறுதியை எண்ணிக் கூச்சலிட்டன. கடைசியாக, தான் நடத்திய கணக்கெடுப்பின் முடிவுகளை அறிவிக்க பறக்கும் லெமூர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்தது.
அந்தச் சந்திப்பின்போது, கணக்கெடுப்பு நடந்து முடியும் வரையில் உணவு பற்றாக்குறை என எந்தப் புகாரையும் தான் பெறவில்லை. ஆகவே, மற்ற இடங்களில் போதுமான உணவு இருக்கிறது என்ற முடிவுக்கு வருவதாகக் குறிப்பிட்டது.
ஓராண்டு முழுவதும் தளிர்கள் மற்றும் பூக்களின் இனிமையான மகரந்தத் தேனை அருந்தி மகிழ்ந்த பறக்கும் லெமூர் மிக கர்வியாக மாறியிருந்தது. தனக்களிக்கப்பட்ட காட்டின் அரிய வரத்தை ‘நான் ஏன் தங்களுக்குள்ளே சண்டையிட்டுக்கொள்ளும் கலகக்கார பறக்கும் அணில்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்’ எனத் தன்னைத்தானே கேட்டுக் கொண்டது. அவர்களின் தோட்டத்தைச் சொந்தமாக்கிக்கொள்ள எண்ணியது. அதை அவர்களிடம் சொல்லவும் செய்தது.
அதனைக் கேட்ட பறக்கும் அணில்கள் ஆத்திரமடைந்தன.
தங்களுக்கு இடையில் இருந்த பேதங்களை எல்லாம் மறந்து ஒன்று கூடி பறக்கும் லெமூரை முற்றுகையிட்டன. பறக்கும் லெமூரைப் பிடித்து அதன் வாலைக் கத்தரித்து விட்டுத் துரத்தின.
அன்று தொடங்கி பறக்கும் அணில்களுக்குப் பயந்து பறக்கும் லெமூர் தன்னுடைய வாலை முழுமையாகச் சுருட்டிக் கொண்டு இரவில் மட்டுமே அலையத் தொடங்கியது.
பழ வெளவால்
இந்தப் பகுதிகளில் பழ வெளவால் அல்லது கெலுவாங் (Keluang) என்றழைக்கப்படும் விலங்கு வரலாற்றுக்கு முந்தைய காலக்கட்டத்தில் ராட்சத வகை ` முள்ளந்தண்டு விலங்காக இருந்தது என்ற தொன்மம் இருக்கிறது. தங்கள் ஆற்றல் வாய்ந்த உகிர்களால் மனிதர்களைக் குறிப்பாக சிறார் உடல் சுவையைப் பெரிதும் விரும்பி வேட்டையாடின. செங்குத்தான சுண்ணாம்பு மலையின் உச்சியிலிருக்கும் குகைகளில் அவை வாழ்ந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. அவை, ஒன்றிரண்டு சிறுவர்களை (சமயங்களில் பெரியவர்களை) விழுங்கவும் ஓய்வெடுப்பதற்காகவும் அங்கு வருவதுண்டு. அந்த ராட்சத பறவை தன் இறக்கைகளை விரித்துப் பறக்கும்போது அதன் நீண்ட கோரமான நிழல் பூமியைத் தொடுவதுண்டு. அவ்வாறு பறந்து செல்லும்போது அதனிடமிருந்து வெளிப்படும் அகோரமான அச்சுறுத்தும் ஒலி துணிச்சல்காரர்களைக் கூட கதிகலங்க வைத்துவிடும். அதன் கூர் உகிர்கள் மற்றும் அதி ஆற்றல் முன்னால் காட்டில் வாழும் மக்கள் கூட தற்காத்துக் கொள்ளமுடியாமல் தவித்தார்கள். அதனை எதிர்க்கும் வழிவகை அறியாத மக்கள் அதன் பேரோலத்தைக் கேட்டுக் காடுகளில் பரவிகிடக்கும் சிறிய குகைகளில் ஒளிந்து கொள்வதைத் தவிர வேறு வழிகள் தெரியாமல் தவித்தார்கள். அப்படி இருந்தும் பல இளஞ்சிறுவர்களை அந்த ராட்சத விலங்கிடம் பறிகொடுக்க வேண்டியிருந்தது.

ஆகவே, காட்டுமக்கள் எந்நேரமும் பெரும்பயத்துடனே காலத்தைக் கழித்தனர். வேட்டையாடவும் உணவுகளைச் சேகரிக்கவும் கூட குகைகளிலிருந்து வெளிவர மக்கள் அஞ்சினர். அந்தக் கொடூர விலங்கிடமிருந்து தப்பித்துக் கொள்ள, அஞ்சி ஓடி ஒளிந்து கொள்ளும் தங்கள் பாடுகளுக்கு முடிவே இல்லை என்பதைக் குடித்தலைவர்கள் உணர்ந்தனர். ஆகவே, அதன் தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்கான வழிகளை விவாதிக்க வெவ்வேறு குடிகளின் தலைவர்கள் கூடினர். அவர்களுள், மருத்துவ அறிவும் ஞானமும் பொருந்திய சக்திவாய்ந்த மூத்த வைத்தியரும் அடங்குவார். அவர்கள் கூடி முடிவெடுத்த திட்டத்தை இறுதியாக உறுதி செய்தது அவர்தான் என்பது எந்தவகையிலும் ஆச்சரியப்படுத்தவில்லை. தன்னுடைய திட்டத்தைச் செயற்படுத்த மாயவித்தைகளில் தேர்ச்சி கொண்ட நான்கு குடித்தலைவர்களைத் தன்னுடன் ராட்சதனின் குகைக்கு வருமாறு அழைத்தார்.
ஓர் அமாவாசை இரவில், காட்டு வழியில் பாதுகாப்புப் போர்வையுடன் பெரியவரும் நான்கு குடித்தலைவர்களும் குகையை நோக்கிய கடினமான பயணத்தைத் தொடங்கினர். மங்கிய வெளிச்சமும் சிறிய அரவமும் கூட தங்களின் வருகையை ராட்சதனுக்கு அறிவித்துவிடும் எனும் அச்சத்தால் தங்கள் நினைவுகளையும் உள்ளுணர்வுகளையும் மட்டுமே துணையாகக் கொண்டு அந்த இருள் போத்திய பாதையில் ஒலியெழாமல் விரைந்து நடந்தனர். மறைவான பள்ளத்தாக்குகள் மற்றும் ரகசிய பாதைகளின் வழியாக நடந்து சென்ற ஐவரும் அந்த ராட்சதனின் குகையின் உயர்ந்த சுண்ணாம்பு மலையின் அடிவாரத்தை அடைந்தனர். அதி தரவு துல்லியத்துடனும் விவரணையுடனும் வழிவழியாகச் சொல்லப்பட்டு வரும் ஒராங் அஸ்லி கதைகள் கூட மற்ற கர்ணபரம்பரை கதைகளைப் போல சில விவரணைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாய்த் தவறவிடத்தான் செய்கின்றன. அப்படியான ஒன்றாகத்தான், அந்தக் கரிய இருளில் ஏறிவிடவே சாத்தியமில்லாத செங்குத்தான மலையில் எவ்வாறு அந்த ஐவரும் ஏறினர் என்பது குறித்து எந்தக் கதையிலும் சரியாக விளக்கப்படவில்லை.
அந்தச் சம்பவம் குறித்து இரண்டு கதைகள் சொல்லப்படுகின்றன. முதலாவதாக, பாறைகள் விழுந்து மறைந்த ரகசிய பாதையை அவர்கள் அறிந்திருந்தனர். இரண்டாவதாக, அத்தகைய உயரத்தை அடைவதற்கான அதிமானுட ஆற்றலை வழங்கும் ஒருவித ரசத்தை அவர்கள் அருந்தினர் என்பதாகும். எப்படி இருப்பினும், அந்த உயரத்தை அவர்கள் பாதுகாப்புடன் அடைந்தனர். அந்தச் சிறிய குகைக்கு அருகிலே ராட்சத விலங்கின் தங்குமிடத்தைக் கண்டனர். அவர்கள் அங்கே ஒருமாதக் காலமாக ரகசியமாய்த் தங்கியிருந்து பறவையின் பழக்க வழக்கங்களைக் கண்டறிய அதன் ஒவ்வொரு நடவடிக்கையையும் நிதானமாக அவதானித்து வந்தனர். மறைவிடத்திலிருந்து வெளியேறி தங்கள் பாதுகாப்பைப் பணையம் வைக்காமல் கொண்டு வந்திருந்த சொற்ப உணவையே பங்கிட்டு உண்டனர். புகையின் வழியாக தங்கள் இருப்பை ராட்சத வௌவால் அறிந்து கொள்ளும் என்ற அச்சத்தில் நெருப்பைக் கூட பற்ற வைக்க முடியாமல் இருந்தனர்.
ஒரு மாத அவதானிப்புக்கும் காத்திருப்புக்கும் பின் ராட்சத வௌவாலின் நடத்தைகளை அறிந்து கொண்டதில் நிறைவடைந்தனர். அதிகாலையில் குகைக்குத் திரும்பி மதியம் வரை ராட்சத வௌவால் தூங்குவதை உறுதி செய்து கொண்டனர். தூங்கி எழுந்ததுமே மலையுச்சியில் இருக்கும் சுண்ணாம்பு குளமொன்றில் நீரருந்தி தன்னுடைய தாகத்தைத் தணித்துக் கொண்டது.
கடைசியாக, அவர்கள் செயற்படவேண்டிய நேரமும் வந்தது. காலையில், ராட்சத வௌவால் இன்னுமே உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும்போது ஐவரும் பதுங்கி ஊர்ந்து குகைக்குச் சென்றனர். குகைக்குள் விழுந்த உதயச் சூரியனின் சன்னமான வெளிச்சக் கீற்றுகளின் வழி ராட்சத வௌவாலின் கரிய நிழல்தடத்தை மட்டுமே அவர்களால் காண முடிந்தது. குகையின் மேற்புறச் சுண்ணாம்பு பாறை முனையிலிருந்து வெளவால்களைப் போலவே ராட்சத வௌவால் தொங்கிக் கொண்டிருந்தது. அதன் தலை மட்டுமே குகையின் தரையைத் தொடுமளவு பெரிதாக இருந்தது. உறங்கும் ராட்சத வௌவாலைச் சுற்றி வட்டமாக நின்று அதன் மீது தங்களின் ஆற்றல்வாய்ந்த மந்திரங்களையும் சொற்களையும் உச்சாடனம் செய்தனர். ஆனாலும், எதுவும் அதனைத் தூண்டிவிடக்கூடிய சிறிய விளைவைக் கூட ஏற்படுத்த போதுமான ஆற்றலைக் கொண்டிருக்கவில்லை. அவற்றைக் கொண்டு அதன் ஆழ்ந்த உறக்கத்தைக் கூட கலைக்க முடியவில்லை. நிதானத்துடன் அதனைச் சில மணி நேரங்களுக்குத் தொடர்ந்தனர். அவர்களின் ஆற்றல் தீரவே தளர்ச்சியால் ஒருவர் பின் ஒன்றாகக் குடித்தலைவர்கள் மயங்கி விழுந்தனர். கடைசியாக அந்தப் பெரியவர் மட்டுமே எஞ்சினார். முதலில், அந்த ராட்சத வௌவாலின் நெஞ்சில் நீண்ட கூர்மையான அம்பைப் பாய்ச்ச வேண்டும் என்பதே அவர்களின் எண்ணமாக இருந்தது. இவ்வளவு தூரம் வந்தபிறகு, பின்வாங்கும் எண்ணமின்றி பெரியவர் தொடர்ந்து முயன்று கொண்டிருந்தார். அந்தக் கனமான அம்பைக் கையில் எடுத்தார். இரு கைகளால் அதனைப் பற்றியவாறே மெல்ல ராட்சதனை நெருங்கினார்.
அப்பொழுதுதான் ராட்சத வௌவாலின் உடலில் அசைவெழுந்தது. அதன் அச்சம் நிரம்பிய கண்களைத் திறந்து குகையின் தரை முழுதும் பரவி கிடக்கும் மனித உடல்களைப் (சிலர் அசைந்து கொண்டிருந்தனர்) பார்த்துவிட்டுப் பெரியவரை நோக்கியது. தன் வாழ்நாள் முழுவதும் மாயவித்தைகளாலும் ஆலோசனைகளாலும் பலருக்கு உதவி செய்த பெரியவரின் மனதில் அந்தச் சில நொடிகளில் எந்த மாதிரியான எண்ணங்கள் நிகழ்ந்திருக்கும் என்பதை நம்மால் ஊகிக்க மட்டுமே முடியும். அவரின் நீண்ட வாழ்வில் அத்தகைய முக்கியமான ஒரு நிகழ்ச்சியையும் அவர் கண்டிருந்ததில்லை. அவர்களின் குடிகள் மற்றும் காட்டின் ஒவ்வொரு ஜீவராசியின் விதியும் அந்த நிகழ்கணத்தில் அடங்கியிருந்தது. தன்னுடைய உடலில் எஞ்சிய இறுதி ஆற்றலையும் திரட்டிக் கொண்டு கையிலிருந்த அம்பால் ராட்சத வௌவாலின் நெஞ்சைத் துளைத்தார் பெரியவர். காடுகள் முழுவதும் எதிரொலிக்கும் அளவு பேரோலமாக இருந்தது ராட்சதப் பறவையிலிருந்து எழுந்த ஒலி.
தன்னுடைய மரணத் துடிப்பிலும் கூட தன்னுடைய உகிர்களால் பெரியவரைக் கொத்தி எறிந்தது. அதன் இதயத்தில் ஏற்பட்ட காயத்திலிருந்து வழிந்த ரத்தம் அதன் நெஞ்சு, கழுத்து முகம் முழுவதும் வழிந்து பெரியவரை நனைத்துக் கொண்டிருந்தது. அதன் ரத்தததை நோக்கி கிழவர் தன்னுடைய இறுதி ஆசையை வெளிப்படுத்தினார். ராட்சத வௌவாலும் பெரியவரும் ஒரே இடத்தில் மரணமடைந்தனர். அந்தக் கிழவரின் கடைசி ஆசையின் காரணமாய், ராட்சத பறவை இன்று நாம் அறிந்திருக்கும் வெளவாலை விட சற்றே பெரிய அபாயமற்ற பழம் உண்ணும் பறவையாக மறுபிறவி எடுத்தது. உணவை வேட்டையாடுவதற்குத் தேவையான அளவே சற்றே பெரியதாக பழ வெளவால் விளங்குகிறது.
தேவாங்கு
இப்பொழுது இருப்பதைப் போல தேவாங்கு முன்பொரு காலத்தில் கூச்ச சுபாவத்துடனும் தனிமைப்படுத்திக் கொண்டும் இருந்ததில்லை. அதற்கு முரணாக, விலங்குகள் ராஜ்ஜியத்தில் மிக முக்கியமானதும் மதிப்பு வாய்ந்ததுமாக விளங்கியது. அந்தக் காலக்கட்டத்தில் போமோக்களின் அரசனாக, தலைச்சிறந்த வைத்தியனாக மிக ஆற்றல்வாய்ந்ததாக மக்கள் அதைக் கொண்டாடினார்கள். ஆனால், அரசர், அமைச்சர்களைத் தவிர்த்து மற்றவர்கள் அதன் சேவையைப் பெறுவதற்கு அனுமதிக்கப்படவில்லை.

பல்லாண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த எதிர்பாரா நிகழ்வே அதற்கு ஏற்பட்ட பெருமாற்றத்துக்கான காரணம். ஒரு கொடூரமான குற்றத்தைப் புரிந்ததாக குற்றம்சாட்டப்பட்டுத் தண்டனையளிக்கப்பட்டதே காட்டுயிர் சமூகத்திலிருந்து அது தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டதற்கான காரணம்.
இவற்றுக்கான காரணமான அந்த நாளில் ஓடையில் குளிக்கும்போது நூலிழையில் உயிர் பிழைத்த மன்னரின் அழகிய மகள் மருத்துவச் சோதனையொன்றுக்குத் தேவாங்கிடம் வந்திருந்தாள். ஆழமான ஓடையொன்றில் குளித்துக் கொண்டிருக்கும்போது இளவரசியின் இடதுபக்கத் தொடை மரத்துப் போயிருந்தது. அத்துடன், அவளுக்கு ஏற்பட்ட வயிற்று வலி நிலைமையை இன்னும் மோசமாக்கியது.
இவ்விரண்டும் ஒரே சமயத்தில் நடைபெற்றது. அவளுடைய விசுவாசமும் அக்கறையும் நிறைந்த பணியாட்கள் சமயோசிதமாகச் சிந்தித்து விரைவாக நீந்தி அவளைக் கரைக்கு இழுத்து வராமலிருந்தால் அவள் மூழ்கி இறந்திருக்கக்கூடும்.
இளவரசிக்கு ஏற்பட்ட காயங்களைச் சோதித்து சிகிச்சை அளிப்பதற்காக அரச வைத்தியரான தேவாங்கு உடனடியாக அரண்மனைக்கு வரவழைக்கப்பட்டது. காலந்தாழ்த்தாமல், தேவாங்கு உடனடியாகத் தன்னுடைய சோதனையைத் தொடங்கியது. மொத்த அரசக்குடும்பமே மிகுந்த கவலையுடன் பார்த்துக் கொண்டிருக்க சந்நதம் கொண்டதைப் போல இளவரசியைச் சோதித்துக் கொண்டிருந்தது.
இளவரசியின் தொடையைப் பரிசோதிக்கும்போது, அதன் கைகள் தொடக்கூடாத அங்கங்களை எல்லாம் அனிச்சையாகத் தொட்டுச் சென்றது. அதனைக் கண்ட இளவரசி அதிர்ச்சியுற்று சட்டென எழுந்தமர்ந்து அதன் முகத்தில் ஓங்கி அறைந்தாள். இதைக் கண்டு சினமுற்ற மன்னர், அமைச்சர்கள் தடுத்திருக்காவிட்டால் உருவிய வாளால் அரச வைத்தியனின் நெஞ்சை நோக்கிப் பாய்ச்சிக் கொன்றிருப்பார். ஆனாலும் மன்னரின் கோபத்தை யாராலும் கட்டுப்படுத்தமுடியவில்லை. மரியாதையற்ற தேவாங்கின் கண்கள் பிடுங்கப்பட்டு வன ராஜ்ஜியத்திலிருந்தே நிரந்தரமாகத் துரத்தியடிக்கப்படவேண்டும் எனக் கோபத்தில் சூளுரைத்தார். ஆனால், வன ராஜ்ஜியத்திற்குப் பல சேவைகளைப் புரிந்திருக்கும் அரச வைத்தியன் மீது கொண்ட மரியாதையால் மன்னரின் கட்டளையை அமைச்சர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருந்தபோதிலும், மன்னரின் கட்டளைகளைப் புறக்கணிக்கவும் முடியவில்லை. ஆகவே, மன்னரின் கோபத்தைத் தணிக்கும் பொருட்டு தேவாங்கின் பார்வையைப் பறிப்பதைப் போன்ற நாடகமொன்றை அரங்கேற்றினர். அதன்படி, பலவகையான மூலிகைக் கலவைகளிலான தடிமனான படிவமொன்றால் அதனுடைய கண்களை மூடினர். அதனைக் காண்பதற்குத் தேவாங்கின் கண்கள் பிடுங்கப்பட்டதைப் போலவே இருந்தது. தன் மகளை மானப்பங்கப்படுத்திய விலங்கின் அருகில் செல்வதைக் கூட தவிர்த்து தூரத்திலிருந்து பார்த்த மன்னரின் கண்களுக்கும் அவ்வாறே தெரிந்திருக்க வேண்டும். தூரத்திலிருந்தே கண்ணோட்டமிட்டு ஏற்புக்கு அடையாளமாகத் தலையசைத்தார்.
ஆகவே, ‘கண்கள்’ பறிக்கப்பட்டு பதவியும் இழந்த தேவாங்கு நாடு கடத்தப்பட்டது. அதனுடைய அவமானத்துக்குரிய கடந்த காலத்தை நினைவுபடுத்தும் வகையில் கண்களைச் சுற்றி ஒட்டப்பட்டிருந்த தடிமனான மூலிகைக் கலவை கழன்றப்போதிலும் கண்களைச் சுற்றிலும் கருவளையங்கள் அப்படியே இருந்தன. ஒரு காலத்தின் அதனை மிகுந்த மரியாதையுடன் நடத்திய விலங்குகளைத் தற்செயலாகவேனும் கண்டபோது ஏற்பட்ட சங்கடத்தினால், எவற்றையும் சந்திப்பதில்லை எனும் முடிவையெடுத்தது. இன்று வரையில் இரவில் மட்டுமே துணிவுடன் வெளியே வரக்கூடிய கூச்சமிகுந்த விலங்காக தேவாங்கு விளங்குகிறது. ஆந்தை மற்றும் கரடி ஆகியவற்றின் வார்ப்புருவைக் கொண்டிருக்கும் விநோத தோற்றம் கொண்ட தேவாங்கின் மீது பழங்குடி மக்களுக்கு ஆழ்ந்த மரியாதையும் ஈர்ப்பும் இருக்கிறது. தேவாங்கின் மயிர் என்பது மாந்திரீகம் மற்றும் மாயவித்தைகள் செய்வதற்கான முக்கியமான பொருள் என அவர்கள் நம்புகின்றனர்.
ஒவ்வொரு முறை தேவாங்கைப் பிடிக்கும்போதும் அதன் தலை மேல் இருக்கும் மயிர் முழுமையாக நீக்கப்படுவதை பழங்குடி மக்கள் உறுதி செய்கின்றனர். அந்தப் பலவீனமான விலங்கின் முடியில் அப்படி என்ன சொல்ல முடியாத ஆற்றல் மறைந்திருக்கிறது என்பது பழங்குடி மக்கள் மட்டுமே அறிந்த ரகசியம்.
சியாமாங் குரங்கு
வெவ்வேறு இனக்குழுவைச் சேர்ந்தவையாக இருந்தாலும் குரங்குகளும் கிப்பன்களும் பல்லாண்டுகளாக ஒன்றாகவே வாழ்ந்து வந்தன.
உயரமான மலைத் தொடர்களுக்கு இடையில் மறைவாக அமைந்திருந்த செழிப்பான பள்ளத்தாக்குத்தான் அவற்றின் வாழ்விடமாக இருந்தது. ஊற்று நீரின் பெருக்கத்தால் நிலம் செழித்து மரங்களைத் தொடுகின்ற அளவு தாழ்வாக இருந்த மேகங்களின் கொடையால் சிறிய ஆறுகளும் நீரோடைகளும் நிறைந்திருந்த பகுதியில் உணவு எப்பொழுதுமே மிகுதியாகவே இருந்தது.

ஆனாலும், இருவேறு குழுக்களிடையே அவ்வப்போது எழும் சிறு சிறு சிக்கல்கள் இல்லாமல் வனராஜ்ஜிய வாழ்க்கை முழுமை அடைவதில்லை. பெரும்பாலும், சிறிய காரணங்களுக்காகத் தோன்றும் இச்சிக்கல்கள் பின்னர் பலவகையான ஆணவமோதல்களால் பெரிதாகி மற்ற குழுக்களின் மீதான ஆளுகை எண்ணத்தால் வளர்பவையாக இருந்தன. குரங்குகளைக் காட்டிலும் தாங்கள்தான் பெரியவர்கள் என்ற எண்ணம் கொண்டிருந்த கிப்பன்கள் காடுகள் தங்களுக்குரியவை என நம்பின. அதைப் போல வால்கள் அற்ற கிப்பன்களுக்குச் சமூகத்தில் எந்த மதிப்பும் இல்லை எனக் குரங்குகள் எண்ணின. அவற்றைக் காண்பதற்கு மனிதர்களைப் போன்றோ குரங்குகளைப் போன்றோ இல்லை. அதனால், கிப்பன்களைத் தங்கள் பிரதேசத்திலிருந்து துரத்தியடிக்க குரங்குகள் முயன்றன.
இந்த விவகாரம் தொட்டு கடுமையான வாக்குவாதம் எழுந்தபோது, அதனைத் தீர்த்து வைப்பதற்காக இரு இனக்குழுக்களுக்கும் பொது தலைவரான சியாமாங் குரங்கை அழைத்தனர். கிப்பன்களைப் போலவே வாலில்லா குரங்காக இருந்தாலும் சியாமாங் எந்த இனத்தையும் சேர்ந்தது இல்லை என்பதை இங்குக் குறிப்பிடவேண்டும். மற்றவையைக் காட்டிலும் பெரிதாக இருப்பதாலும் மிக முக்கியமாக ஆழ்ந்த ஞானமுடையதாக இருப்பதாலும் அவ்விரண்டு குழுவையும் நிர்வகிக்கும் பொறுப்பு சியாமாங்குக்கு வழங்கப்பட்டது.
பல மணி நேர விவாதம் மற்றும் சிந்தனைக்குப் பிறகும், ஆழ்ந்த அறிவுடைய சியாமாங்கால் கூட யாராலும் காரணத்தை நினைவு கூர முடியாத அளவு பல காலமாக நீடித்து வரும் அந்தச் சிக்கலுக்கு ஏற்புடைய தீர்வைத் தர முடியவில்லை. இரண்டு குழுவினரும் வெவ்வேறு வழிகளில் பயணிப்பதைத் தவிர சிக்கலுக்கு வேறு தீர்வில்லை என சியாமாங் கருதியது. ஏதேனும் தீர்க்கவே முடியாத சூழல் எழும் நிலையில் மட்டுமே வாழ்விடத்துக்குத் திரும்புவது என்ற முடிவையும் எடுத்தனர். அந்த முடிவை மதித்து இரு குழுவினரும் புதிய வாழ்விடங்களைத் தேடுவதற்காகப் புறப்பட்டுச் சென்றனர்.
அந்தப் பெரும்புலப்பெயர்வு நடந்து முடிந்த சில நாட்களுக்குள்ளாக அந்நிலத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது. குரங்குகள், கிப்பன்கள் உட்பட அந்நிலத்தின் வாசிகள் அனைத்துமே கடும் பஞ்சத்தாலும் பட்டினியாலும் வாடத் தொடங்கின. மழை பொய்த்துப் போய் பல மாதங்களாகிய சூழலில் மேகங்களற்ற வானிலிருந்து கடுமையான வெப்பக்கதிர்கள் பூமியை ஊடுருவிக் கொண்டிருந்தன. நிலத்தடி நீரையே முழுமையாக நம்பிக் கொண்டிருந்த மரங்கள் தங்களிடம் எஞ்சியிருக்கும் சொற்ப ஆற்றலையும் சேமிப்பதற்காய் இலைகளை உதிர்த்துக் கொண்டிருந்தன. அவற்றால் சிறு பழத்தைக் கூட காய்க்க வைத்துத் தர முடியவில்லை. வெகு விரைவிலே, பழைய வாழ்விடத்துக்குத் திரும்புவதற்கான அனுமதியை சியாமாங் அளித்துவிட்டது எனும் முடிவு புலம்பெயர்ந்த குடிகளிடம் பரவத் தொடங்கியது.
தங்களுடைய தலைவன் இன்னொருமுறை தலையிட்டு பழைய வாழ்விடத்துக்கே திரும்பச் செய்துவிட்டது என இரு குடிகளுமே மிக்க மகிழ்ச்சியடைந்தன. பூமித்தாயின் மடியிலிருந்து இன்னுமே தூய நீர் வழிந்து கொண்டிருக்கும்; அள்ளக் குறையாத பழங்கள் பேரளவில் சேமிக்கப்பட்டிருக்கும்; மரக்கிளைகளில் கொத்துக் கொத்தாய் இலைகள் தொங்கும் எனக் கனவு கண்டன.
வாழிடம் திரும்புதல் என்பது மகிழ்ச்சிக்குரிய நிகழ்வு. தங்களுக்கிடையிலான மன வேற்றுமைகளைச் சற்று நேரத்துக்கு ஒதுக்கித் தள்ளிவிட்டுத் தங்களுக்கு அருளப்பட்டிருக்கும் அந்த வனசொர்கத்தை எண்ணி இருதரப்புமே மகிழ்ந்தன. அந்தக் கொண்டாட்டத் தருணத்தின் இடையே யார் கண்ணிலும் படாதவாறு குறும்புக்கார குட்டிக்குரங்கொன்று தாயின் பிடியிலிருந்து நழுவி மறைவான மரச்செறிவிலிருந்து தாவிச் சென்றது. விதிவசத்தால் சமயங்களில் இரையும் வேட்டைவிலங்குகளும் நேர்கொள்ள நேரிடுகிறது. அப்படியாக, அவ்வழியே சென்று கொண்டிருந்த புலியின் கண்களுக்கு விளையாடிக்கொண்டிருந்த குரங்கு தட்டுப்படவே சட்டெனக் கவ்விக் கொண்டு சென்றது.
இந்தத் துர் சம்பவத்தின் மொத்த பழியையும் சியாமாங் குரங்கே சுமக்க வேண்டியதாக இருந்தது. தங்களை வாழ்விடத்துக்குத் திரும்ப சொல்லியிருக்காவிட்டால் இந்தத் துர் நிகழ்வே நடந்திருக்காது என இருகுடியினருமே ஒப்புக்கொண்டனர்.
அந்தப் பிஞ்சின் இழப்புக்குப் பழி வாங்கியே தீருவது என்ற முடிவெடுக்கப்பட்டது. அந்தப் புலியை வேட்டையாடும் முழுபொறுப்பையும் சியாமாங்கே ஏற்றுக்கொள்ள வேண்டுமென முடிவெடுத்தன. ஆனாலும், வயது முதிர்ந்த சியாமாங்குக்குக் குடும்பத்தைப் பராமரிக்கும் பொறுப்பும் இருந்தமையால் அதனுடைய இளைய மகனே அப்பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றன.
புலியின் ஆற்றல் முன்னால் ஒருபோதும் தன்னுடைய மகனால் ஈடுகொடுக்க முடியாது என்பதை உணர்ந்த சியாமாங் கடும் மனச்சோர்வுக்குள்ளானது. பெற்றோரிடமிருந்து அரிதாகவே பிரிந்து செல்லும் அளவு மிக நெருக்கமான பிணைப்பை உடையது சியாமாங்கின் குடும்பம். இருந்தப்போதிலும், சியாமாங் நம்பிக்கையை ஒருபோதும் விட்டுக்கொடுக்காமல் இருந்தது.
ஒரு நாள் காலையில் தன்னுடைய மகனுக்குப் பிரியாவிடை தரும் நேரம் வந்தது. அவனுக்கு ஆறுதலும் அறிவுரையும் அளிக்கும் வகையில் மூத்த சியாமாங் சில சொற்களைச் சொன்னது. அவன் திரும்பி வரும் வரையில் தான் காத்திருப்பதாக உறுதிக் கூறி ஒருபோதும் திரும்ப பார்ப்போம் என்ற நம்பிக்கையைக் கைவிடாதிருக்க வேண்டும் எனச் சொன்னது. “நீ திரும்பி வரும் நாள் வரை ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் நான் உனக்காகக் காத்திருப்பதை நீ அறியும் வகையில் உன்னை அழைத்துக் கொண்டிருப்பேன்’’ என்றது.
அந்த நாள் தொடங்கி சியாமாங் தன் மகனை அழைப்பதை நிறுத்தவில்லை. நாளடைவில் காட்டின் தொலைத்தூரங்களிலும் அதன் குரல் எதிரொலிக்கும் படி அதன் தொண்டைப்பகுதியில் குரல்வளை பெரிதானது. சியாமாங்கின் மனதை உருக்கும் அழுகையொலி இன்றளவும் கேட்டுக்கொண்டிருக்கிறது.
