அ. ரெங்கசாமிக்கு மா. சண்முகசிவா கடிதம்…

rengasamyஅன்புக்கும் மதிப்பிற்கும் உரிய ஐயா அவர்களுக்கு…

வணக்கம்.

தாங்கள் தங்களுடைய தந்தை மலாயா வந்தது குறித்தும் அது தொட்டு தொடரும் உங்களுடைய வாழ்க்கை அனுபவங்கள் குறித்தும் நூல் ஒன்று எழுதி வருவது அறிந்து மகிழ்ந்தேன்.

தங்களின் நினைவுச்சின்னம், இமயத் தியாகம், லங்காட் நதிக்கரை, முதலான நாவல்கள் எல்லாமே புனைவாக மட்டுமல்லாது அன்றைய காலத்தின் வரலாற்று பதிவுகளாகவும் இருப்பதால், இந்நூல் புனைவு அன்றி சுய வரலாறாக இருக்குமெனில் நீங்கள் சொல்லாமல் விட்டதையெல்லாம் சொல்ல இந்நூல் இடம் அமைத்து நிறைவு செய்யும் என நம்புகிறேன்.

எனது தந்தை தனது 14ஆவது வயதில்தான் சிவகங்கையில் இருந்து பினாங்கிற்கு தன் மாமாவின் மளிகைக்கடைக்கு கணக்கெழுதிக் கொடுக்க காற்றும் மழையுமாக கடல் சீறிக்கொண்டிருந்த ஒரு நாளில் நாகப்பட்டினத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் படகில் பயணித்து வந்து ஏறியிருக்கின்றார். வழியெல்லாம் வாந்தியும் மயக்கமுமாகப் பயணித்த அந்த பாலகனின் துயரம் பற்றி அவர் அடிக்கடி நினைவுக்கூர்வதுண்டு.

காற்றோடு கடல் புணரும் புயல் காலமொன்றில் மலாயாவுக்கான கப்பல் புறப்பாடு காலத்தாமதமானதால் புதுச்சேரியில் தன் அண்ணனோடு அவரது சினேகிதரான கவிஞர் பாரதிதாசன் வீட்டில் சில காலம் தங்கியிருந்ததையும் நினைவு கூர்வார். அப்பா, இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்தது, புலவர் சுவாமி இராமதாசருடன் அலோஸ்டாரில் நடந்த மதக் கலவரத்தில் மாண்ட துப்புறவு தொழிலாளியின் குடும்பத்தைப் பராமரித்தது, தேசிய உணர்வால் ஜெய்ஹிந்த் ஸ்டோர் ஆரம்பித்தது, மலாயாவில் முதன் முறையாக மிளகாய் மசாலா தூள் அரைத்து 555 சிகரெட் டப்பியில் அடைத்து 1940களில் நாடு முழுவதும் விற்று செல்வந்தர் ஆனது வரையில் தொடர்ந்த அவரது வெற்றி குறித்து எழுத ஏராளம் இருக்கிறது. அதன் பின்னரான தனது தொழில் முறை கூட்டாளிகளிடம் ஏமாற்றமடைந்ததும் அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட மனஸ்தாபத்தால் கோபத்தின் உச்சத்தில் எல்லாவற்றையும் எழுதிக்கொடுத்துவிட்டு குடும்பத்துடன் தமிழகத்துக்குப் ‘புலம் பெயர்ந்ததும்’ அவருக்கும் எங்களுக்குமான வாழ்வின் திருப்புமுனை பற்றி நான் மனதுக்குள் எழுதிக்கொண்டிருக்கும் கதைகள் நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றில் உதைத்துக்கொண்டு தன் இருப்பை நினைவு படுத்துக்கொண்டிருக்கும் சிசுவை போல் என்னை நினைவுபடுத்திக்கொண்டுதானிருக்கின்றது

அங்கே, நெடுவயல் இறங்கி, நீர் பாய்ச்சி வேளாண்மை செய்யத் தெரிந்தவருக்கு உள்ளூரின் சாதி அரசியல் அரசியல் செய்யத்தெரியாமல் போனதால், தன்னிடம் வேலை பார்த்த தாழ்த்தப்பட்ட இளைஞர் தாழைமடையானை பஞ்சாயத்துத் தலைவராக்கியதால் சாதிக்காரர்களின் பகைமையைத் தேடிக்கொண்டதும் அதனால் விவசாயம் விட்டு வணிகம் தேடி மலேசியாவுக்கு மீண்டும் கப்பல் ஏறியதும்…. எழுதவேண்டும் எல்லாவற்றையும் எழுத வேண்டும் என்றுதான் தோன்றுகிறது.

வாழ்ந்து கடந்த வருடங்களையும் அனுபவங்களையும் வார்த்தைகளாக்கி விட்டுச்செல்ல வேண்டுமென வெகு சிலருக்குத்தான் தோன்றுகிறது. நிகழ்வுகளையும் நிகழ்ச்சிகளையும் தொகுத்து தந்துவிடாமல் அதில் அந்தக் காலத்து மனிதர்கள், அவர்களின் மனம் இயங்கிய விதங்கள், எதிர்கொண்ட வாழ்வியல் சிக்கல்கள், தங்களை மீட்டெடுத்துக்கொண்ட வெற்றிகள், முடியாமல் போனதால் அடைந்த தோல்விகள், வாழ்வை முன்னகர்த்த செய்துகொண்ட எத்தனங்கள், சமரசங்கள் என்று ஒரு சுயவரலாறு நூல் தரும் மீள்பார்வை வாழ்வை மீள் உருவாக்கம் செய்துகொள்ள உதவுமாயின் அதன் நோக்கம் நிறைவேறியதாகும்.

இவற்றைப் பதிவு செய்ய, வரலாற்றோடு கூடிய ஒரு தத்துவப் பார்வையும் தேவைப்படுகிறது. நேற்றைய கதையின் சாராம்சம் இன்றைய வாழ்வின் ‘புரிதலுக்கு’ தேவைப்படுகிறது. இன்றைய வாழ்வின் பதிவுகளும் நாளைய புரிதலுக்கான வழியை ஏற்படுத்திக் கொடுக்கிறது. அனுபவங்களின் தொகுப்பிலிருந்து கிடைக்கும் ஞானம், வாழ்விற்கு அர்த்தங்களைக் கற்பித்து அது உருண்டோடிக்கொண்டிருக்கும் வாழ்வின் சக்கரங்களுக்கு உந்துவிசையாக அமையுமாயின் வேறென்ன வேண்டும்.

நேற்றைய மனிதர்களை விடுங்கள், இன்றைய மனிதர்களைப் பார்த்து, பேசி, பழகி, விலகி தெரிந்துகொள்ள வேண்டியதுதான் எவ்வளவு இருக்கிறது. முடிகிறதா? போதுமானதா இந்த வாழ்க்கை? தெரிந்ததெல்லாம் புரிந்ததாகிவிடுமா என்ன? புரிதலுக்கான முயற்சியாகத்தானே இருக்கின்றன எல்லாமே. பேசிப் பார்ப்பது, எழுதிப் பார்ப்பது எல்லாமே அந்தப் புரிதலை எட்டித்தொட்டுவிட எத்தனிக்கும் ஒரு முயற்சிதானே. அவரவர் முயற்சிகளை எட்ட நின்று பார்ப்பதே போதுமானதாக இருக்கின்றது இப்போதைக்கு.

எழுதுங்கள். நிறைய எழுதுங்கள். நீங்கள் எழுதிய ஒவ்வொரு வரியும் எழுதப்படாத; எழுத வேண்டிய பல வரிகளை இழுத்துக்கொண்டு வரும். உங்களை வாழ்த்த எனக்கு வயது போதாது. இருப்பினும் வாழ்த்துகிறேன். இறை வாழ்த்து சொல்லி இறைவனை வாழ்த்துகிறோம் இல்லையா அதுபோல வாழ்த்துகிறேன்.

அன்புடன்,

மா. சண்முக சிவா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *