அரை நூற்றாண்டிற்கும் மேலாக ஒரு தொழிற்சங்கவாதியாக, சமூக செயற்பாட்டாளராக, கட்டுரையாளராக, செய்தியாளராக, களப் போராளியான ஜீவி காத்தையா கடந்த 2005 ஆண்டு வரையில் வாரத்தில் ஐந்து நாட்களில் நாளொன்றுக்கு 10,000 மீட்டர் தூரத்தை 28லிருந்து 30 நிமிடங்களுக்குள் ஓடி முடிக்கும் பயிற்சியில் திளைத்திருந்தவர். இப்போது இவர் தமது 76 ஆவது அகவை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார்!
இவர் மூன்று முறை மலேசிய நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் போட்டியிட்டவர் என்பது பலருக்குத் தெரியாத செய்தி.
முதலாளிகள் அரசியல் கட்சிகளின் வழி நாடாளுமன்றத்தை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலையை மாற்றி அதனைத் தொழிலாளர்களின் கோட்டையாக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் ஆளுங்கட்சி வேட்பாளரும் தொழிலாளர் அமைச்சருமான வி. மாணிக்கவாசகத்தை எதிர்த்து களமிறங்கிய இவரை, தொழிலாளர்களில் பலர் ஆதரித்தனர். ஆனால், பல தொழிற்சங்கங்களும் மலேசிய தொழிற்சங்க காங்கிரசும் (எம்டியுசி) இவரை ஆதரிக்க மறுத்துவிட்டன.
நாட்டின் மூத்த தொழிற்சங்கவாதிகளில் ஒருவராக அறியப்படும் இவரது கள அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக ஒரு மாலைப் பொழுதில் அவரைச் சந்தித்தோம்.
உங்களின் பின்புலம் பற்றி சொல்லுங்கள்.
ஜீவி: மலேசியாவின் நிலக்கரிச் சுரங்க நகரான பத்து ஆராங்கில் 1938ஆம் ஆண்டு பிறந்தேன். தொடக்கக் கல்வியைப் பத்து ஆராங் தமிழ் மற்றும் ஆங்கிலப்பள்ளிகளிலும் அதன் பின் கோலாலம்பூர் மகாத்மா காந்தி உயர்நிலைப்பள்ளியிலும் தொடர்ந்தேன். அதன் பின்னர் பக்கிங்ஹாம், வாரிக் மற்றும் லண்டன் ஆகிய பல்கலைக்கழங்களில் எனது உயர்கல்விக்கான படிப்பையும் ஆய்வையும் மேற்கொண்டேன்.
எந்தத் துறை சார்ந்து உங்கள் கல்வி இருந்தது?
ஜீவி: சட்டம், தொழிலாளர் சமூகவியல் மற்றும் பிரிட்டிஷ் காலனித்துவ தொழிலாளர் கொள்கை 1930-1957 ஆகியவற்றில் கவனம் செலுத்தினேன். பிரிட்டிஷ் முதலாளிகளுக்காக பிரிட்டிஷ் காலனித்துவ அரசும் பிரிட்டிஷ் தொழிற்சங்கக் காங்கிரசும் பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்ட நாடுகளின் தொழிற்சங்கங்களையும் அவற்றின் தலைவர்களையும் தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்வதற்காக அவர்கள் மேற்கொண்ட படுபாதக நடவடிக்கைகளை அவர்களுடைய ஆவணங்களிலிருந்து கண்டுகொள்ள முடிந்தது.
மலாயாவின் பி.பி. நாராயணனுக்கு பிரிட்டிஷ் காலனித்துவ அரசு அளித்த ஆதரவும் அதேவேளையில் பிரிட்டிஷ் (தென் அமெரிக்கா) கயானாவின் டாக்டர் ஜெடி ஜெகனுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும் காண முடிந்தது. ஆனால், பிரிட்டிஷ்ஷாரின் எதிர்ப்புகளை எல்லாம் முறியடித்து ஜெகன் கயானாவின் பிரதமர் ஆனார். கம்யூனிசவாதி என்று குற்றம் சாட்டி அவருக்கு எதிராக பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க அரசுகள் பெரும் கிளர்ச்சியைத் தூண்டிவிட்டு அவரை பிரதமர் பதவியிலிருந்தும் அகற்றினர். விடுவாரா, ஜெகன்! மீண்டும் பிரதமர் ஆனார். அதன் பின்னர் அதிபரானார்.
எந்த வயதில், எந்த அடிப்படையில் பொதுவாழ்க்கையில் நீங்கள் ஈடுபட்டீர்கள்?
ஜீவி: பொதுவாழ்க்கையில் நானாக ஈடுபட்டேன் என்பதைவிட தள்ளிவிடப்பட்டேன் என்றே சொல்லலாம். எனக்கு 6 வயது இருக்கும். அந்த வயதிலேயே தினந்தோறும் காலை 7 மணிக்கெல்லாம் எனது தாய் மாமா வே. இராமசாமியின் முன்னால் நான் நிற்க வேண்டும். என் வீட்டிற்குப் பக்கத்தில்தான் அவரது வீடும் இருந்தது. அவரது அறையில் இருந்த மேஜையில் ஒரு படம் இருந்தது. அப்போது அது யார் என்று தெரியாவிட்டாலும் பின்னர் அது பகத் சிங்கின் படம் என்று தெரிந்துகொண்டேன். அப்படத்தைப் பார்த்துக் கொண்டே எனக்கு மந்திரம் ஓதுவார். அது வின்ஸ்டன் சர்ச்சிலைக் கொலை செய்ய வேண்டும் என்பதாகும். அந்த ஓதல் 4 வருடங்களுக்கு நடந்தது.
அந்தக் காலகட்டத்தில் பத்து ஆராங்கில் மே தினம் (மே 1) பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. அதற்கு என் மாமா என்னை அழைத்துச் செல்வார். நான் 15 வயதிற்குள் பத்து ஆராங் நிலக்கரி தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் தயாரிக்கும் செய்திகளை, அறிக்கைகளை மொழிபெயர்க்கும் பணியைச் செய்யத் தொடங்கினேன்.
அன்றைய காலகட்டத்தில் பத்து ஆராங்கில் சுபாஸ் சந்திரபோஸின் இந்திய தேசிய இராணுவம் (INA) மிகப் பெரிய இயக்கமாக இருந்தது. எண்ணிக்கையில் இந்தியர்கள், சீனர்களுக்கு அடுத்த நிலையில் அங்கு இருந்தாலும் அன்றைய இந்தியர்கள் கடுமையானவர்கள். பத்து ஆராங்கில் அவர்கள் எதை நினைத்தாலும் செய்யக்கூடிய கடும் சித்தமும் வல்லமையும் அவர்களுக்கு இருந்தது.
அந்த சூழ்நிலையில்தான் நான் போராட்ட வழிக்கு வந்தேன் என்பதைவிட அந்த மாதிரியான போராட்டம் வாழ்க்கையாகவே இருந்தது என்று கூறுவதே சரியாகும். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான அரசியல், தொழிற்சங்க சித்தாந்தம் என்பதுதான் அந்நகர்வாசிகளின் பேச்சும் மூச்சுமாக இருந்தது. அதில் நானும் ஐக்கியமாகி விட்டேன்.
பத்து ஆராங்கில் தொழிற்சங்க நிகழ்ச்சிகள் நிறைய நடக்கும். எப்போதும் அதில் கலந்துகொள்வதுண்டு. மஇகாவும் அங்கு இருந்தது. வழக்கறிஞர் ஆர். ரமணி அங்கு வருவார். அன்றைய சிறப்பான சட்ட வல்லுனர்களில் அவரும் ஒருவர் என்பதோடு பெடரல் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். தமிழக காங்கிரஸ் தலைவர் கு. காமராஜ்கூட வந்திருக்கிறார். காமராஜ் அங்கு வந்தபோது அவரை விரட்டி அடித்து விட்டார்கள்.
காமராஜரை விரட்டி அடித்து விட்டார்களா? ஏன்?
ஜீவி: காமராஜ் வந்தார். பேசினார். அங்கு பிச்சை என்று ஒருவர் இருந்தார். அவர் திமுககாரர். அவரோடு ஏற்பட்ட ஒரு விவாதத்தில் காமராஜ் துண்டைத் தூக்கி தோளில் போட்டுக்கொண்டு போய்விட்டார். பின் நாங்கள் எல்லாம் அவரது உரையைக் கேட்பதற்காக பஸ்சில் ரவாங் சென்றோம். பெரிய கூட்டம் கூடியிருந்தது. ஆனால், பத்து ஆராங்கிலிருந்து வந்திருக்கிறோம் என்பதால் எங்களை உள்ளே விடவில்லை. வெளியே நின்று கொண்டுதான் அவரது உரையைக் கேட்டோம்.
பத்து ஆராங்கில் தொழிற்சங்க ஈடுபாட்டால்தான் வாழ்க்கை முறையாக இருந்தது என்று கூறினால் அது மிகையாகாது. அதன் தாக்கத்திலிருந்து தப்பவே முடியாது. நான் அகில மலாயா தொழிற்சங்க சம்மேளத்தின் (PMFTU) தலைவர் எஸ். ஏ. கணபதியை கூட அங்கு பார்த்திருக்கிறேன். என் மாமா வீட்டிற்கு வருவார். ஆனால், நான் அவரிடம் பேசியதில்லை. ஏனெனில், அப்போதெல்லாம் அவரைச் சுற்றி ஒரு பெரும் கூட்டம் இருக்கும். அவரது பக்கத்தில்கூட போக முடியாது. என் மாமா வே. இராமசாமி, கணபதி தொழிற்சங்க இயக்கத்திற்குத் தலைவராக இருந்தபோது பிஎம்எப்டியுவின் 4 உப தலைவர்களுள் ஒருவராக இருந்தார். கணபதி தூக்கிலிடப்பட்ட ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் இராமசாமியை பிரிட்டிஷ் இராணுவம் சுட்டுக் கொன்றது. ஜோன் பிரேசியர் என்ற பிரிட்டிஷ் தொழிற்சங்கவாதியை மலாயாவின் தொழிற்சங்க இயக்கத்தை அரசாங்கக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டனர். பத்து ஆராங் சுரங்கத் தொழிலாளர் சங்கத்திற்கும் அதேகதிதான். பி.கே.ஆர் குருப் என்பவரை அதன் தலைவராக்கிவிட்டனர்.
பத்து ஆராங்கில்தான் 1936-1937களில் மிகப் பெரிய வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. 7 நாள் கம்யூனிச ஆட்சி நடந்த வரலாறும் பத்து ஆராங்கிற்கு இருக்கிறது. மார்ச் 27, 1937இல் பிரிட்டிஷ் காலனித்துவ அரசு இராணுவத்தைப் பயன்படுத்தி பத்து ஆராங்கை மீண்டும் கைப்பற்றியது.
இப்போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய சான் ஹான் மற்றும் சியு தோங் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு புடு சிறையில் எட்டு மாதங்களுக்கு சிறை வைக்கப்பட்டு பின்னர் சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
அன்றைய தொழிற்சங்க இயக்கத்திற்கும் – இப்போது இயங்கிக்கொண்டிருக்கிற தொழிங்சங்க இயக்கத்திற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?
ஜீவி: அன்றைய தொழிற்சங்க இயக்கத்தின் தலைவர்கள் தூக்குமேடையில் தொங்கத் தயாராக இருந்தார்கள். இன்று இருக்கின்ற தொழிற்சங்க இயக்கத்தின் தலைவர்கள் டத்தோ, தான்ஸ்ரீ பட்டம் வாங்குவதற்காக தொங்கிக்கொண்டிருக்கிறார்கள். அன்றைய தலைவர்களின் போராட்டம் என்பது உண்மையான, நேர்மையான போராட்டமாக அமைந்திருந்தது.
இப்போது இந்நாட்டில் தொழிற்சங்கங்கள் பெயரளவில்தான் இருக்கின்றன. இந்நாட்டில் காணப்படும் ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சுரண்டப்பட்டு, சீரழிக்கப்படுவது பற்றி என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள் என்ற கேள்விக்கு ஐநாவின் அனைத்துலக தொழிலாளர் மன்றத்திடம் (ILO) புகார் செய்யப்போவதாக எம்டியுசியின் தலைமைச் செயலாளர் என்னிடம் ஈராண்டுகளுக்கு முன்பு கூறினார். நீங்கள் புகார் செய்தவுடன் ஐஎல்ஓ கோலாலம்பூருக்கு ஒரு படையை அனுப்பி பிரதமரை கைது செய்யப் போகிறதா என்று நான் கேட்டதற்கு, வேறு என்ன செய்ய முடியும் என்று அவர் பரிதாபமாகப் பதில் அளித்தார்.
ஆனால், 1937-லேயே அப்போது சீனாவிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் வந்த ஒப்பந்த தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போராட்டம் பத்து ஆராங்கில் ஒப்பந்தக் கூலிகளாக பணிபுரிந்த தொழிலாளர்களின் தலைவிதியை மாற்றி அமைத்தது. அன்று நடந்தது போராட்டம். 1948 ஆம் ஆண்டிற்குப் பிறகு 1950 ஆம் ஆண்டில் பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்டு பி.பி நாராயணனின் தலைமையத்துவத்தில் தொடங்கி இன்று காலிட் அதன் தலைமையில் இயங்கி வரும் எம்டியுசி நடத்துவது போராட்டமல்ல. அது பித்தலாட்டம்.
இன்று இங்கிருக்கின்ற இளைய தலைமுறைக்குத் தொழிற்சங்கம் என்றால் என்ன? தொழிற்சங்க போராட்டம் என்றால் என்ன என்று கேட்டால் அது குறித்து அவர்களுக்குத் தெரியாது. அன்றைய தொழிற்சங்கம் எப்படி இயங்கியது? நீங்கள் எப்படி செயல்பட்டீர்கள்? தொழிற்சங்கத்தின் அடிப்படை வேலைகள் என்ன? அடிப்படைத் தேவை என்ன என்பது குறித்து சொல்லுங்கள்.
ஜீவி: தொழிற்சங்கம் தொழிலாளர்களின் உரிமைப் போராட்டத்தின் அரண். தொழிற்சங்கப் போராட்டம் என்பது தொழிலாளர்களுக்குக் கூடுதல் சம்பளம் வாங்கிக்கொடுப்பது மட்டுமல்ல. தொழிலாளர்களின் அனைத்து உரிமைகளையும் அது உள்ளடக்கியுள்ளது. வேலை வாய்ப்புகள், வேலை, குடும்பம், பள்ளிக்கூடம், உலக அமைதி மற்றும் நேர்மையான மக்களாட்சி ஆகிய அனைத்திலும் தொழிற்சங்களுக்கு ஈடுபாடு உண்டு. அது மட்டுமின்றி இன, மத மற்றும் பால் பாகுபாடுகள் அற்ற ஓர் உலகத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் தொழிற்சங்க இயக்கத்தின் கடப்பாடு.
இன்றைய இளைஞர்களுக்கு தொழிற்சங்க இயக்கத்தைப் பற்றி எவரும் எதையும் போதிப்பதில்லை. இனவெறி, மத வெறி, பெண்களை வன்முறைக்கு உட்படுத்தி அவர்களை தூக்கிலிட்டு வேடிக்கை பார்ப்பதோடு அதெல்லாம் சகஜம்தானே என்பதை எல்லாம் இளைஞர்களின் மண்டையில் புகுத்துவதில் மக்களும் தலைவர்களும் தீவிரம் காட்டுகின்றனர். எனக்குத் தெரிந்த வரையில் கடந்த இருபது ஆண்டுகளில் உயர்மட்ட நிலையிலுள்ள வழக்கறிஞர்கள், பொருளாதார அறிஞர்கள், வரலாற்று ஆசிரியர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், தொழில் நிபுணர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்ற எவரும் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க இயக்கத்தின் அவசியம் பற்றிப் பேசியதை நான் கேட்டதே இல்லை. இதற்கு விலக்காக லிம் கிட் சியாங் போன்ற ஓரிருவர் இருக்கின்றனர்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் தங்களுக்கு தொழிற்சங்கம் தேவையில்லை என்று கருதுபவர்கள். ஆனால், தொழிற்சங்கப் போராட்டங்களால் பெற்ற 8 மணி நேர வேலை, ஓய்வு நாள்கள் போன்ற உரிமைகளை அவர்கள் வேண்டாமென்று கூறியதில்லை, அனுபவிக்கத் தவறியதில்லை. தொழிற்சங்கங்களில் பதவியில் இருக்கும் தலைவர்களே இப்போதெல்லாம் தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள், சித்தாந்தங்கள் பற்றி 1940 லிருந்து 1970கள் வரையில் நடத்தப்பட்ட பயிற்சிகள் போன்ற எதனையும் மேற்கொள்வதில்லை.
நிலைமை இப்படி இருக்கையில் இளைஞர்கள், இளவயது தொழிலாளர்கள் என்ன செய்ய முடியும்.?
ஜீவி: எட்டு மாதங்களுக்கு முன்பு, தூக்கிலிடப்பட்ட எஸ். ஏ. கணபதியின் உறவினர்களைச் சேர்ந்த ஒரு குடும்பத்தைக் கண்டு பிடித்து ஒரு நேர்காணல் செய்யப்பட்டது. அக்குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் கணபதியைப் பற்றியும் அவரது போராட்டத்தைப் பற்றியும் தெரிந்து வைத்திருந்தார். அடுத்தவர் கணபதியின் போராட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறார். அடுத்தவரை நாங்கள் எதுவும் கேட்கவில்லை. அவர் இருபது வயதுள்ள நல்ல வேலையில் இருக்கும் பெண். அவர் எங்களைக் கேட்டார்: யார் இந்த கணபதி? அவருக்கும் எங்களுக்கும் என்ன தொடர்பு? ஏன் இப்படி விசாரிக்கிறீர்கள்?
எஸ். ஏ. கணபதிக்கு அந்த பெண் பேத்தி முறையாம். அது அவருக்குத் தெரியாது. அவருக்கு எட்டு மணி நேர வேலை. ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாள். இப்படி பல சலுகைகள் போன்றவற்றை நிர்வாகம் கொடுப்பதாக அவர் கூறினார். இவற்றை எல்லாம் அவர் கேட்காமலே நிர்வாகம் கொடுப்பதாகக் கூறினார். அவருக்கு அவ்வளவுதான் தெரியும். இதன் பின்னணியை விளக்கி அவர் அனுபவிக்கும் உரிமைகளுக்காக போராடிய கணபதி போன்றவர்கள் கொல்லப்பட்டனர் என்று நாங்கள் கூறியதைக் கேட்ட அப்பெண் தலைகுனிந்து “இதெல்லாம் எங்களுக்குத் தெரியாதே” என்று குரல் தழுதழுக்கக் கூறினார்.
மனித வாழ்க்கையைப் பெருமளவில் சீர்படுத்தியது தொழிற்சங்கம் என்று ஒப்புக்கொள்ளப்படுகிறது. ஆனால், அது வளர்ச்சியடையக்கூடாது என்பதில் தீவிரமாக இருப்பவர்கள் தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சிக் கொழுத்துப் போயிருப்பவர்களும் அவர்களின் கையாட்களான அரசியல்வாதிகளும்தான்.
தொழிலாளர்கள்தான் நாட்டின் செல்வத்தை உருவாக்குகின்றனர். அவர்களின் உழைப்பு இல்லை என்றால் செல்வம் இல்லை. தொழிலாளர்கள் நாட்டின் சொத்து என்று வாய்கூசாமல் அரசியல்வாதிகள் கூறுகிறார்கள். ஆனால், அந்த சொத்தைக் காப்பாற்ற முனையும் தொழிற்சங்கத்தை அடியோடு ஒழிக்க சட்டம் வரைபவர்களும் இந்த அரசியல்வாதிகள்தான்.
தங்களுடைய உழைப்பு எப்படி கொள்ளையடிக்கப்படுகிறது? கொள்ளையடிப்பவர்கள் யார்? இந்தக் கொள்ளையர்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்கான ஆயுதம் என்ன? இது போன்றவற்றை இளைஞர்களுக்கு போதிக்க வேண்டும். ஒவ்வொரு தொழிலாளியும் தொழிற்சங்க உறுப்பினராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சோரம் போகும் தொழிற்சங்க தலைவர்களை ஒழித்துக்கட்ட இளைஞர்களுக்கு போதிக்க வேண்டும். இப்படி ஏராளமான கருத்துகளை அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டும்.
உங்களின் தனிப்பட்ட தொழிற்சங்க ஈடுபாடு எவ்வாறானது?
ஜீவி: இடைநிலைப்பள்ளிப் படிப்பு முடிந்ததும் சொக்பின் (Socfin Co. Bhd) தலைமையகத்தில் வேலைக்கு சேர்ந்தேன். சொக்பின் தோட்டத் தொழில் சார்ந்து இருந்தாலும் அது ஒரு தோட்டம் (estate) அல்ல. அந்நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் தொழிற்சங்கத்தில் சேர்வதற்குப் பெரும் முயற்சி செய்துள்ளனர். அங்கிருந்த ஒருவர் என்னிடம் சொன்னார், “நான் இந்தியாவில் விடுமுறையில் இருக்கும்போது இங்கு ஒரு தொழிற்சங்கம் நிறுவ வேண்டும் என்று நினைத்தேன். இங்கு வந்தவுடனே எனக்கு வேலை போய்விட்டது என்றார்.” அதே மாதிரி யாரெல்லாம் தொழிற்சங்கம் தொடங்க வேண்டும் என நினைக்கிறார்களோ அவர்களுக்கு வேலை போய்விடும். அது எப்படி நிர்வாகத்திற்குத் தெரிய வருகிறது என்பது அவர்களுக்கே தெரியாது.
ஆனால், நாங்கள் 1964-இல் ஒரு தொழிற்சங்கத்தை இங்கு தோற்றுவித்தோம். அதை அகில மலாயா தோட்டச் சிப்பந்திகள் சங்கத்தின் (AMESU) பங்சார் கிளையாகப் பதிவு செய்தோம். பத்து ஆராங்கிற்கு பிறகு தொழிற்சங்கத்தில் மீண்டும் ஈடுபட்டது இங்குதான். நான் அக்கிளையின் செயற்குழு உறுப்பினராக இருந்தேன்.
பங்சார் கிளையின் தொடக்கக் கூட்டம் ஜூன் 1964இல் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் எங்களை வரவேற்றுப் பேசிய அகில மலாயா தோட்டச் சிப்பந்திகள் சங்கத்தின் தலைமைச் செயலாளர் டி.பி.டி. நாயர் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அவர் தோட்ட நிர்வாகங்களின் தேவைகள், அதிகாரங்கள் பற்றியும் சங்க உறுப்பினர்கள் எப்படி நயமாக நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றியும் பேசினார்.
1927ஆம் ஆண்டில் உருவாகத் தொடங்கிய இச்சங்கத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர்களில் ஒருவரான வி.எம்.என். மேனன் அன்றைய பெடரல் சட்டமன்றத்தின் நியமன உறுப்பினராகவும் போஸ்ட் மற்றும் டெலிகம்ஸ் ஆகியவற்றுக்கான ‘மெம்பர்’ (அமைச்சர்) ஆகவும் இருந்தவர். எம்டியுசி உருவாக்கக் குழுவின் செயலாளாராகவும் இருந்தார். பிரிட்டிஷாருக்கு ஆற்றிய சேவைக்காக பிரிட்டிஷ் அரசாங்கம் அவருக்கு Order of the British Empire (OBE) பதக்கம் அளித்து கௌரவித்திருந்தது. நன்றி மறவாத வி.எம்.என். மேனன் 1948ஆம் ஆண்டில் இடதுசாரி தொழிற்சங்கங்களை ஒழித்துக்கட்டுவதற்கான சட்ட மசோதாவை பெடரல் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இவர் வழி வந்த டி.பி.டி நாயரின் உரையால் சினமுற்றிருந்த என்னைப் பக்கத்து நாற்காலியில் அமர்ந்திருந்த ஆர். இராமசாமி என் தோள்பட்டையைப் பிடித்து உலுக்கி “காத்தையா, இவனை நாம் முடிக்க வேண்டும்” என்று என்னிடம் தமிழில் கூறினார். “சரி” என்றேன்.
அகில மலாயா தோட்டச் சிப்பந்திகள் சங்கத்தின் தலைமைத்துவத்தை ஒழித்துக்கட்டுவதற்காக அன்று தொடங்கிய போராட்டம் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் மார்ச் 1971இல் முடிவுக்கு வந்தது. நாயரின் கூட்டத்தினரில் நாங்கள் ஏற்றுக்கொண்ட இருவரைத் தவிர மற்ற அனைவரும் தூக்கி எறியப்பட்டனர். அடுத்த 12 ஆண்டுகளில் அச்சங்கம் தலைகீழாக மாற்றம் கண்டது. வேலைநிறுத்தம் என்றால் என்ன என்ற அனுபவமே இல்லாத, தோட்டத் தொழிலாளர்களால் ஏளனம் செய்யப்பட்ட, அச்சங்கத்திற்கு “வேலைநிறுத்த சங்கம்” என்ற பெயரும் சூட்டப்பட்டது.
நூற்றுக்கணக்கான வழக்குகளுக்கு வேலைநிறுத்தம், தொழிலாளர் அமைச்சு, தொழில் நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் ஆகியவற்றின் மூலம் தீர்வு கண்டோம்.
சங்கத்தில் உயர்கல்வி கற்ற பணியாளர்களைப் பணிக்கு அமர்த்தினோம். டி.பி சேவியர் போன்ற மிகச் சிறந்த வழக்கறிஞர்கள் சங்கத்தின் வழக்குகளை நடத்தினர். தொழிற்சங்க வகுப்புகள், உறுப்பினர்களுடன் மாதந்தோறும் கலந்துரையாடல்கள் போன்றவை தவறாமல் நடத்தப்பட்டன.
இதுபோன்ற செயல்திட்டங்களால் சங்கத்தின் மீதான உறுப்பினர்களின் நம்பிக்கை வளர்ந்தது. தோட்ட நிர்வாகிகளைக் கண்டு நடுங்கிய உறுப்பினர்கள் சங்கத்தின் டி-சட்டையை பகிரங்கமாக அணிந்து வேலை செய்யும் இடத்திற்கே சென்றனர்.
வெறும் 500க்கும் சற்று கூடுதலாக இருந்த சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை 5,000க்கு மேல் கூடியது. மாதம் மூன்று வெள்ளி சந்தா கட்ட மறுத்தவர்கள் மாதம் 10 வெள்ளி கட்டினர்.
1971இல் கடன்கார சங்கமாக இருந்த அகில மலாயா சிப்பந்திகள் சங்கம் 1982இல் நாட்டின் எட்டாவது நிதிவளம் படைத்த சங்கமாக உருமாற்றம் கண்டது.
அகில மலாயா தோட்டச் சிப்பந்திகள் சங்கத்தின் போராட்டம் எம்டியுசியிலும் தொடர்ந்தது. எனக்கு வெற்றியும் தோல்வியும் மாறி மாறிக் கிடைத்தன. தோல்விகளே அதிகம். எம்டியுசியின் தலைவர் பதவிக்கான போட்டியில் பி.பி. நாராயணனைத் தோற்கடிக்க எனக்கு 28 வாக்குகள்தான் தேவைப்பட்டது. வி. டேவிட்டிடம் 90 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றேன்.
தோல்விகளுக்கிடையில் பெரும் வெற்றியும் பெற்றுள்ளேன். 1982ஆம் ஆண்டில் எம்டியுசியின் துணைத் தலைமைச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டேன்.
இந்த நாட்டில் ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்க வேண்டும் என்ற திட்டம் எவ்வாறு ஏற்பட்டது?
ஜீவி: பிரிட்டன், ஐரோப்பா, இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்துதான் தொழிற்சங்க வித்து உருவானது. இங்கு நாமாகவே அதை உருவாக்கினோம் என்றெல்லாம் சொல்ல முடியாது. அவர்களுடைய வரலாறுதான் நமக்கு முன்னுதாரணமாக இருந்தது. எல்லா உரிமைகளும் எல்லாருக்கும் உரியவை என்று மேலோட்டமாகக் கூறப்பட்டாலும் ஆளும் கட்சியினர், ஆள்பவர்கள், முதலாளிகள் இன்று வரையில் அந்த உரிமைகளை மேலே கூறப்பட்டுள்ள நாடுகளிலும்கூட ஏற்றுக்கொள்வதில்லை.
நமது நாட்டில் தொழிற்சங்க இயக்கம் ஒரு கொள்ளைக்கார இயக்கம் போல் கருதப்படுகிறது. மலாய்க்காரர்களுக்கு அது தேவையற்றது என்பது மகாதிர் போன்ற மண்டைகளின் கருத்தாகும்.
இந்நாட்டில் தொழிற்சங்கச் சித்தாந்தம் பரவுவதற்கு மூலகாரணமாக இருந்தவர்கள் இங்கு வந்த சீனர்கள்தான். அதன் பின்னர் இந்தோனீசியர்கள் மற்றும் இந்திய சுதந்திரப் போராட்டவாதிகள் ஆகியோரும் அடங்குவர்.
இன்றைக்கு, இந்த நாட்டிலும்கூட தொழிற்சங்கம் என்றால் என்ன என்ற கேள்வி வந்துவிட்டது. ஏனென்றால் பேசுவதெல்லாம் இனம், மதம் தொட்டுதான். இப்போது தொழிற்சங்கத்தில்கூட இன, மதவாதங்கள் வளர்ச்சி கண்டு வருகின்றன. ஏனென்றால் தொழிலாளர்களைப் பிரிக்க வேண்டும். எந்தெந்த காரணங்களைக்கொண்டு தொழிலாளர்களைப் பிரிக்கலாமோ அவ்வளவும் இந்த நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.
சீனாவிலிருந்து வந்த தொழிலாளர்களுக்குச் சீன தொழிற்சங்க ஈடுபாடும் இந்தியாவிலிருந்து வந்த இந்திய தொழிலாளர்களுக்கு இந்திய சுதந்திர ஈடுபாடும் போராட்ட உணர்வை ஏற்படுத்தின. தோட்டங்களிலும் ஈயச் சுரங்கங்களிலுமே தொழிற்சங்கங்கள் பெருமளவில் தோற்றுவிக்கப்பட்டன. அந்த அடிப்படையில் அந்த காலகட்டத்தில் வந்தவர்தான் எஸ்.எ.கணபதி. அவர்களுக்கெல்லாம் போராட்டம் ஒன்றுதான் இலக்கு. போராட்டம் ஒன்றின் மூலம்தான் நமது உரிமைகளை நிலைநிறுத்த முடியும் என்பதை அவர் உணர்ந்திருந்திருந்தார்.
மலேசியப் பொருளாதாரத்தையே சிதைத்து அழிக்கக்கூடிய நிலையில் இருந்தது அவர்களின் போராட்டம். இந்தியர்கள் சீனர்கள் இருவருமே போராடினர். ஆனால், எப்போதும் சீனர்களுக்கு சம்பளத்தைக் கொஞ்சம் அதிகரிப்பார்கள். இந்தியர்களுக்குக் கொஞ்சம் குறைத்துக் கொடுப்பார்கள். இரண்டு தரப்பும் ஒன்றுபட்டுவிடக் கூடாது என்பதில் முதலாளிமார்கள் தெளிவாய் இருந்தார்கள். அதே மாதிரி ஒவ்வொரு வகையிலும் வேறுபாடுகளை உருவாக்கிக்கொண்டே இருந்தார்கள். அதை எதிர்த்து போராட்டத்தில் இறங்குவதற்கும் சீனர்கள், இந்தியர்கள் மற்றும் மலாய்க்காரர்கள் ஆகியோர் ஒன்றுபட இந்த கம்யூனிச தத்துவம் வழிகாட்டியாக இருந்தது.
இவையெல்லாம் எந்த காலகட்டத்தில் நடந்தது?
ஜீவி: 1920களிலேயே இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1930-ஆம் ஆண்டு ஏப்ரல் மத்தியில் மலாயா கம்யூனிசக் கட்சி உருவானது. அதே காலகட்டத்தில் மலேயன் ஜெனரல் லேபர் யூனியன், பேன்மலேயன் ஜெனரல் லேபர் யூனியன் மற்றும் பேன்மலேயன் பெடரேசன் ஆப் டிரேட் யூனியன் ஆகியவை தோற்றுவிக்கப்பட்டன. இறுதியில் பிரிட்டிஷ்ஷாரால் உருவாக்கப்பட்டதுதான் மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ்.
1930-இல் மலேசிய கம்யூனிச கட்சி உருவானது. ஹோ சீ மின் அதற்கு வந்திருந்தார். அப்படியே வளர்ந்து வளர்ந்து கடும் போராட்டங்களுக்கிடையில் கம்யூனிசக் கட்சி வேரூன்றத் தொடங்கியது. இந்தியர்கள் தோட்டத்தில் நடத்திய போராட்டங்களால் பிரிட்டிஷ் பேரரசிற்குப் பேரிழப்பு. ரப்பரை வைத்துதான் அவர்கள் பிழைத்துக்கொண்டிருந்தார்கள்.
பிரிட்டிஷ் அரசின் இரண்டாம் உலகப் போருக்கான பணம் முழுவதும் ஈயச்சுரங்கம் மற்றும் ரப்பர் தந்த வருமானத்தில் இருந்துதான் போனது. பிரிட்டிஷ்ஷார் மலாயாவைத் தங்கள் பிடிக்குள் வைத்திருக்க வேண்டும் என்றால் தொழிற்சங்கத்தை ஒழித்தே ஆக வேண்டும் என்ற நிலை உருவானது. அந்தளவிற்கு அன்றைய தொழிற்சங்கப் போராட்டம் வலுவாக இருந்தது.
எந்த மாதிரியான போராட்டங்கள் நடந்தன?
ஜீவி: முழுமையான வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடந்தன. வேலைநிறுத்தத்தின்போது யாருமே வேலைக்குப் போக மாட்டார்கள். அந்த அளவிற்கு அன்றைய போராட்டங்களுக்கு மதிப்பிருந்தது. நாடு தழுவிய அளவில் ‘ஹர்த்தால்’ என்ற கதவடைப்புப் போராட்டமும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. தோட்டங்களில் அதிகமான வேலைநிறுத்தங்கள் நடைபெற்றன. மலாயாவை பிரிட்டன் இழக்கக்கூடும் என்ற ஐயத்தை ஏற்படுத்தும் அளவிற்கு வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடந்துள்ளன.
எந்தெந்த காரணங்களை முன்வைத்து வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடந்தன?
ஜீவி: தொழிலாளர்களின் உரிமைகள், முறையான சம்பள கோரிக்கை, சம்பள உயர்வு கோரிக்கை,, நல்ல வீடுகள், குடிக்கக்கூடாது என தொழிலாளர் தொடர்புடைய அனைத்து விசயங்களுக்காகவும் போராட்டங்கள் நடந்தன. அதிலும் எஸ்.எ.கணபதி தெளிவாக ஒன்றைச் சொல்வார்: “அரசமைப்புக்காக போராடுவதும் தொழிலாளர்களின் உரிமையை மேம்படுத்துவதற்குதான்.” ஏனென்றால் மக்கள் தகுந்த அரசியலமைப்பைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அவர்கள் உரிமைகளை அதில் எழுதிக்கொள்ளலாம். அது இல்லை என்றால் ஒன்றுமே எழுத முடியாதே. அதனால் அரசியல் மாற்றத்தையும் அவர் கோரினார். வேறுப்பட்ட அரசியல் இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை இந்திய தொழிலாளர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.
இந்தியர்கள் என்றால் தொழிலாளர்கள்தான். உயர்மட்ட இந்தியர்களும் அன்று இருந்தார்கள். ஆனால், அவர்களுக்கு இதெல்லாம் ஒத்து வராது. அவர்கள் எல்லாம் பிரிட்டிஷ் பேரரசைக் காப்பாற்றுவதற்கு நன்கொடை வசூலித்துக்கொடுத்தவர்கள். ஆனால், அவர்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள் இந்த சாதாரண இந்தியர்கள்.
அவர்களை இன்னும் அதிக விழிப்படைய வைத்தது இந்திய தேசிய இராணுவமும் நேதாஜியும்தான். அன்றைய தொழிற்சங்க இயக்கம் மிக விழிப்பாய் இருந்தது. அன்றைய நிலையில் மலேசிய முழுமைக்குமான மொத்த தொழிலாளர் எண்ணிக்கையில் 66.6 விழுக்காட்டு தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்தார்கள். அது பிபி நாராயணனின் தலைமைத்துவ காலத்தில் 10 விழுக்காட்டிற்கு குறைந்து இன்றைக்கு மலேசிய முழுமைக்குமான மொத்த தொழிலாளர் எண்ணிக்கையில் 6.5 விழுக்காடு தொழிலாளர்கள் மட்டும்தான் தொழிற்சங்கத்தில் உள்ளனர். இதுதான் மிக முக்கியமான வித்தியாசம். இந்த 66.6 விழுக்காட்டினால் அதிர்ச்சி அடைந்த பிரிட்டிஷ்ஷார், குறிப்பாக தோட்டத் துறையில் இருந்த முதலாளிமார்கள், ஒரு மனிதனை ஒழித்தே (put him off) ஆக வேண்டும் என முடிவெடுத்தனர். அவர்தான் எஸ்.ஏ.கணபதி. அவர்கள் நினைத்தபடி அதைச் செயல்படுத்தியும் விட்டார்கள். அவசரகாலச் சட்டத்தை அமல்படுத்தி அவரைக் கைது செய்து கொன்றும் விட்டார்கள்.
எஸ்.ஏ. கணபதி கைது செய்யப்பட்ட அந்த காலகட்டம் எவ்வாறு இருந்தது?
ஜீவி: அவர் கைது செய்யப்பட்டபோது வெளிப்படையான எதிர்ப்பு எதுவுமில்லை. ஏனென்றால் அப்போது அவசரகாலச் சட்டம் அமலில் இருந்தது. எந்தவொரு கூட்டத்தையும் நகர்வையும் நடத்த முடியாத காலகட்டம் அது. பகிரங்கமாக வெளியே திரிந்தவர்கள் எல்லாம் காட்டுக்குள் போக வேண்டிய சூழல் உருவானது. ஒன்று காட்டுக்குப்போக வேண்டும் இல்லையேல் கொல்லப்பட வேண்டும் என்ற இக்கட்டான சூழல் உருவானது. ரவாங் வாட்டர்பால் தோட்டத்தில்தான் கணபதியைக் கைது செய்தார்கள். அவர் யாரோ ஒரு சிலரால் காட்டிக்கொடுக்கப்பட்டுதான் பிடிபட்டார். அவர் ஆயுதம் வைத்திருந்தார். ஆறு சுற்று துப்பாக்கி குண்டுகள் வைத்திருந்தார் என்று அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
மார்ச் 1, 1949இல் கைது செய்யப்பட்டு மே 4, 1949இல் அவர் தூக்கிலிடப்பட்டார். எல்லாம் மிக விரைவாக மிக அவசரமாக நடந்தது. குற்றச்சாட்டுகள் எல்லாம் நிரூபிக்கப்பட்டன, அவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டார் என்ற அடிப்படையில் தீர்ப்பளிக்கப்பட்டு அவர் தூக்கிலிடப்பட்டார்.
நீங்கள் கணபதியை எப்படி பார்த்தீர்கள்? அவர் எப்படிப்பட்ட ஆளுமையுடையவர்?
ஜீவி: அவரைப்பற்றி மேலோட்டமாக மட்டுமே சொல்ல முடியும். முழு உண்மையான தகவல்கள் எதுவுமே இதுவரை கிடைக்கப்பெறவில்லை. பல மிக முக்கியமான ஆவணங்கள் இன்னும் கைக்கு வரவில்லை.
ஒருமுறை நான் சிங் பெங்கை நேர்காணல் செய்யச் சென்றபோது, என்னிடம் அவரிடம் மெதுவாக பேசும்படியும் சிக்கலான கேள்விகளைக் கேட்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்கள். நானும் சின்பெங்கும் அருகருகே அமர்ந்திருந்தோம். மற்றவர்கள் கேமாராக்களைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தனர். நான் மெதுவாக அவர் அருகில் குனிந்து கணபதி என்று சொல்லி முடிப்பதற்கு முன்பதாக “கணபதி, என் நண்பர், என் நண்பர்” என்று அதிக உணர்ச்சி வசப்பட்டுக்கூறினார். ஏன் இப்படி நடக்கும் என முன்கூட்டியே சொல்லவில்லை என கேமராக்காரர்கள் கோபித்துக்கொண்டார்கள். இதை ஏன் சொல்கிறேன் என்றால் அந்தளவிற்கு கணபதி மேல் அவருக்கு ஈடுபாடு இருந்துள்ளது. எப்படி அந்தளவிற்கு கணபதி உயர்ந்தார்? இன்றிருக்கின்ற புத்தகங்களைப் பார்த்தால் கணபதி சிங்கப்பூரில் இருந்தார், வளர்ந்தார், இங்கு வந்தார், தொழிற்சங்க தலைவரானார், கைது செய்யப்பட்டார். நீதிமன்ற விசாரணை முடிந்ததும் தூக்கிலிடப்பட்டார் என்று மட்டுமே இருக்கிறது.
நான் இது குறித்த மேலதிக ஆய்வுக்காக அவரது கிராமத்திற்குப் போயிருந்தேன். அவர் பிறந்த திகதியைக் கூட இதுவரை யாராலும் தெளிவாக உறுதிப்படுத்த முடியவில்லை. மூத்த ஆய்வாளர்களில் ஒருவரான இராஜேஸ்வரி அம்பலவாணர், அவர் 22ஆம் வயதிலேயே அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவராகிவிட்டார் எனக் கூறியுள்ளார். அவர் கொல்லப்பட்டது குறித்து ஐக்கிய நாடுகள் சபை நடத்திய விசாரணையில் பிரிட்டிஷ் அரசு அவருக்கு 32 வயது எனக் கூறியுள்ளது. இதெல்லாம் தவறு.
அவர் 1921-இல் பிறந்தவர் என்றும், 9 ஆவது வயதில் சிங்கப்பூர் வந்து 19 ஆவது வயதில் சிங்கப்பூரில் இருந்த சாதி வெறியை ஒழித்து விட்டார் என்றெல்லாம் சொல்கிறார்கள். இதெல்லாம் கட்டுக்கதை. அவர் சிங்கப்பூரில் காலடி எடுத்து வைத்தது தொடங்கி அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவராகும் வரை என்ன செய்தார்? அவரைப்பற்றி ஆதாரமில்லாமல் இப்படி நிறைய கதைகள் உலவிக் கொண்டிருக்கின்றன.
நாங்கள் தேடுவது சான்றுகள். அவரோடு இருந்த சுதர்மன், அவர் மிக அமைதியானவர். தீவிர போராட்ட குணம் நிறைந்தவர் என்கிறார். சான்றுகள் கிடைத்த பிறகுதான் இதையெல்லாம் உறுதிப்படுத்த முடியும்.
அவரது தம்பியைச் சந்தித்தபோது கணபதி ஆயுதம் வைத்திருக்கவில்லை என அவர் சொன்னார். தூக்கிலிடப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக அவர் கணபதியைச் சந்தித்தபோது கணபதி இவ்வாறு கூறியதாக அவர் சொன்னார். ஆனால், நீதிமன்றத்தில் கணபதி ஆயுதம் வைத்திருந்ததை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆயுதம் ஏதும் வைத்திருக்கவில்லை என்று கூறிவந்த கணபதி ஆயுதம் வைத்திருந்ததாக ஏன் ஒப்புக்கொள்ள வேண்டும்? இதில் மிகப் பெரிய சூழ்ச்சி இருக்கிறது என்பது என் கணிப்பு. இந்த முரண்படுகின்ற கேள்விகளுக்குத்தான் நாங்கள் பதில்களைத் தேடிக்கொண்டிருக்கிறோம்.
சுதர்மன் கூறியதில் இருந்து, சிங் பெங்கின் எதிர்வினையிலிருந்து கணபதி தீவிரமானவர் எனத் தெரிகிறது. தொழிலாளர்களின் மீது மிகுந்த அக்கறை கொண்டவராக இருந்திருக்கிறார். 1940-களிலேயே தொழிலாளர்களுக்கு சமூகக் காப்புறுதி வேண்டுமெனக் கூறியுள்ளார்.
ஊழியர் சேமநிதி வாரியம் (EPF) தொழிலாளர்களின் பணம். இதன் ஒவ்வொரு காசும் தொழிலாளர்களின் பணம். இவர்கள் அதை வைத்து எதை எதையோ செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், தொழிலாளர்களுக்கு ஒன்றும் செய்வதில்லை. நான் ஊழியர் சேமநிதியை சமூகக் காப்புறுதி நிதியாக மாற்றக் கோரி லிம் கிட் சியாங்கிடம் பேசினேன். இதனை ஆதரித்த அவர் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து இது குறித்து விவாதிக்க ஆலோசனை கூறினார். மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் விவாதிக்க ஒப்புக்கொண்டது.
1995-இல் நான் மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸை விட்டு வெளியேறிய பிறகு அவர்கள் அதை கைவிட்டு விட்டார்கள். இன்று வரை யாரும் அது குறித்துப் பேசவில்லை. பணம் போடுபவர்களும் கேட்பதில்லை. நம் பணத்தை எடுத்துதான் அரசாங்கம் முதலீடு செய்கிறது. ஆனால், நமக்கு ஒன்றும் கிடைப்பதில்லை. ஊழியர் சேமநிதி வாரியத்தில் மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் தொழிலாளர்களின் பிரதிநிதியாக இன்றுவரை இருந்து வருகிறது.
இன்று இருக்கின்ற தொழிற்சங்கத்தைப் பற்றி சொல்லுங்கள். யார் அதில் இருக்கிறார்கள்? அவர்கள் எம்மாதிரியான வேலைகளைச் செய்யாமல் இருக்கிறார்கள்?
ஜீவி: இன்றைய தொழிற்சங்கவாதிகள் எந்த வேலையையும் தொழிற்சங்கத்திற்கும் தொழிலாளர்களுக்கும் ஆற்ற வேண்டிய கடமை உணர்வோடு செய்வதில்லை. தொழிற்சங்கப் பெயரைச் சொல்லி அம்னோ இளைஞர் அணியிடம் நிதி பெற்று CCTV கேமரா பொறுத்தியதுதான் அவர்களின் மிகப்பெரிய பணி. 1950 களிலேயே வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ற ஊதியம் (Living wage) தரப்பட வேண்டும் என மலேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸின் முதல் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அவர்கள் இன்னமும் குறைந்தபட்ச சம்பளம் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்படியானால், 1950ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் கதி என்னவாகும்? அவர்கள் எதற்காகப் போராடுகிறார்கள் என்பது தெரியவில்லை.
இவ்வருடம் பெட்டாலிங் ஜெயாவில் எம்டியுசியின் ஏற்பாட்டில் நடைபெற்ற மே தின நிகழ்ச்சிக்கு என்னை அழைத்திருந்தார்கள். சென்றிருந்தேன். அங்கு கூடியிருந்த தொழிற்சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. நான் தலைமை ஏற்றிருந்து அகில மலாயா தோட்டச் சிப்பந்திகள் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர்கூட அங்கு இல்லை. என்னுடன் அக்காலத்தில் இருந்தவர்கள் சிலரை அங்கு சந்தித்தேன். அவர்கள் ஒன்றை ஏகமனதாக என்னிடம் கூறினர். “காத்தையா, நாம் அப்போது பிபியையும், டேவிட்டையும், ஸைடியையும், நரேந்திரனையும் மற்றும் பல தலைவர்களையும் எவ்வளவு கடுமையாக குறைகூறினோம். ஆனால், இன்றுள்ள தலைவர்களைவிட அவர்கள் எவ்வளவோ மேல். இல்லையா?” என்றனர். “ஆம்”, என்று பதில் அளித்தேன்.
எம்டியுசியில் அங்கம் பெற்றுள்ள தொழிற்சங்கங்கள் அவற்றின் உறுப்பினர்களை ஊக்கப்படுத்தி தொழிற்சங்க நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடச் செய்ய வேண்டும். ஒவ்வொரு தொழிலாளரையும் தொழிற்சங்கத்தில் சேர்க்க வேண்டும். எம்டியுசி தொழிற்சங்க தலைவர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் தொழிற்சங்க சகோதர தத்துவத்தை ஊட்ட வேண்டும். அவர்களுக்காகப் போராட எந்த நிலையிலும் தயாராக இருக்க வேண்டும். எம்டியுசியில் தொழிலாளர்களை எழுச்சி பெற வைக்கும் தலைவர்கள் உருவாக வேண்டும். இல்லையேல், நாங்கள் எம்டியுசியைப் பற்றி எங்கள் காலத்தில் ஏளனம் செய்தது போல அது தொடர்ந்து “Empty You See” ஆகத்தான் இருக்கும். முதலாளி வர்க்கத்திற்கும் அரசாங்கத்திற்கு அதைவிட வேறு என்ன வேண்டும்?
நான் முடிவெடுக்கும் நிலையில் இருந்தால், 1964ஆம் ஆண்டிலிருந்து 1982ஆம் ஆண்டு வரையில் அகில மலாயா தோட்டச் சிப்பந்திகள் சங்கத்தில் நான் ஆடிய ஆட்டத்தை மீண்டும் ஆடுவேன்.
நாடு தழுவிய அளவில் சோம்பிக் கிடந்த சங்கத்தின் கிளைகளை வலுப்படுத்தியதுபோல் எம்டியுசியின் உறுப்பினர் சங்கங்களைத் தட்டி எழுப்பி தொழிலாளர்களை சங்க உறுப்பினர்களாக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன். முதல் கட்டமாக, நாட்டின் மொத்தத் தொழிலாளர்களில் 50 விழுக்காட்டினரை சங்க உறுப்பினர்களாக்கும் நடவடிக்கை எடுக்கப்படும். நாடு முழுவதும் தொழிற்சங்க கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படும். உறுப்பினர்களுக்கும் கிளைத் தலைவர்களுக்கும் தொழிற்சங்க பயிற்சிகள் இடைவிடாது நடத்தப்படும். தொழிலாளர்களை எதிர்கொள்ளும் பிரச்சினைகளை உடனடியாகக் கவனித்து நிவாரணம் காண்பதற்கான வழிமுறைகள் அமல்படுத்தப்படும். தொழிற்சங்கம் தனக்காக போராடும் என்ற நம்பிக்கையைத் தொழிலாளர்களின் உள்ளத்தில் பதித்துவிட வேண்டும்.
சம்பள உயர்வு போராட்டத்திற்கு உறுப்பினர்களையும் சங்கங்களின் தலைவர்களையும் தயார்படுத்த வேண்டும். போராட்டத்திற்கு தயாராகும் தொழிற்சங்கங்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க எம்டியுசியும் தயாராக இருக்க வேண்டும். தொழிலாளர்கள் தொழிற்சங்க உறுப்பினர்கள் ஆகும் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரிக்க வேண்டும்.
தொழிற்சங்க இயக்கத்தின் வெற்றியும் தோல்வியும் உறுப்பினர்களின் எண்ணிக்கையிலும் கடமை உணர்வுடைய தலைவர்களின் அர்ப்பணிப்பிலும் அடங்கியுள்ளது. முதலாளிகள் மற்றும் அரசாங்கம் ஆகியவற்றின் எதிர்ப்புகளையும் சூழ்ச்சிகளையும் எதிர்கொண்டு அவற்றை கையாளும் திறனை தலைவர் பெற வேண்டும்.
தொழிற்சங்கங்களை துண்டாடி அதன் வழி அவற்றை பலவீனப்படுத்துவது ஆட்சியிலிருப்பவர்கள் தொழிற்சங்கங்களுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் ஒன்றாகும். இதற்கு எதிர்மாறாக ஒரு நாட்டிற்கு ஒரே தொழிற்சங்கம் என்ற திட்டத்தை அமலாக்கம் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்வது எனது பெரும் திட்டமாக இருக்கும். இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளால் தொழிற்சங்க இயக்கத்தை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியும்.
நேர்காணல்: பூங்குழலி வீரன் / ம.நவீன்
தொடரும்…