வென்றவன் அரசன்; தோற்றவன் பயங்கரவாதி!

இரண்டாம் பாகம்

IMG_5629இன்றைய நிலையில் பிபி நாராயணனை பற்றி மிகையாக சிலர் சொல்கிறார்கள்? அவர் எம்மாதிரியான வாழ்க்கை வாழ்ந்தார்? சிலர் அந்த காலத்தில் பிபி நாராயணன் போன்றவர்கள் மிக ஆடம்பரமாக வாழ்க்கை வாழ்ந்தார்கள்? அவர்கள் தோட்ட மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று சொல்கிறார்கள். இன்னொரு சாரார் நாராயணன் தோட்ட மக்களுக்காகவே வாழ்ந்தார் எனச் சொல்கிறார்கள்? உங்கள் பார்வை எப்படி?

ஜீவி: வாழ்க்கையை எப்படி வாழ்கிறோம் என்பது ஒரு பொருட்டல்ல. அதை வைத்து என்ன செய்கிறோம் என்பதுதான் பொருட்படுத்தப்பட வேண்டிய ஒன்று. கடும் தீவிரமான நடவடிக்கைகள் எங்களது பாணியாக இருந்தது. தொழிலாளர்கள் அவர்களது உழைப்பின் பயனை முழுமையாகப் பெற வேண்டும் என்பது எங்களைப் போன்றவர்களின் நிலைப்பாடு. ஆனால், பிபி நாராயணனை பொறுத்த வரையில் கிடைத்தது போதும் என்பது அவரின் நிலைப்பாடு. “Half a loaf is better than none”, என்று பிபி அவரது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

தோட்டச் சிப்பந்திகள் சங்கம் 1974ஆம் ஆண்டு ஏப்ரல் 1 இல் அதன் 47 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக நாடு தழுவிய அளவில் ஒரு வேலைநிறுத்தத்தை நடத்தியது. சற்றும் எதிர்பாராத வகையில் அது வெற்றி பெற்றதுடன் அச்சங்கம் மேற்கொள்ளும் வேலைநிறுத்தத்தால் முதலாளிகளுக்கு ஏற்படும் கடும் விளைவுகளை நன்கு வெளிப்படுத்தியது.

தோட்ட முதலாளிகளின் சங்கமான மாபாவுடன் சம்பளப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சிப்பந்திகள் சங்கம் அதன் முன்மொழிதல்களை தாக்கல் செய்தது. அதனை விமர்சித்த பிபி அவை முன்மொழிதல்கள் அல்ல. அது ஒரு புத்தகம் என்று கிண்டல் செய்தார். பாதி ரொட்டித் துண்டு போதும் என்ற கொள்கையுடன் முதலாளிகளின் நலன்களுக்கு மிரட்டலாக இருக்க மாட்டார் என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட பின்னர்தானே பிரிட்டிஷ் காலனித்துவ அரசும் முதலாளிகளும் பிபியை எம்டியுசியின் தலைவர் பதவிக்கு பொறுக்கி எடுத்தனர். அந்த வழியில் வந்தவரிடமிருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

பிரிட்டிஷ் மலாயாவின் காலனித்துவ அரசுக்குத் தொழிற்சங்க ஆலோசகரான ஜோன் பிரேசியர் வளர்த்துவிட்ட பிபியை போன்ற தொழிற்சங்கவாதிகளுக்குத் தொழிலாளர்களின் ஆதரவு கிடையாது. அவர்கள் அரசாங்க ஆதரவை நம்பி இருந்தனர் என்று ஜோன் பிரேசியரே எழுதியுள்ளார். மேலும், தமது வளர்ப்புகளான எம்டியுசி தலைவர்களின் திறைமையின் மீது அதிருப்தி தெரிவித்த பிரேசியர் அவரின் பரம வைரியான அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம் (கணபதியின் தலைமையில் இயங்கிய பிஎம்எப்டியு) எவ்வளவு சிறப்பாக செயல்பட்டது என்பதைப் பற்றியும் அவர் எழுதியுள்ளார். இந்நாட்டில் தொழிலாளர்களுக்காக உண்மையாக உழைத்தவர்கள் கம்யூனிஸ்ட்கள் என்று முத்திரை குத்தப்பட்டனர் என்றும் அவர் கூறியுள்ளார். பிபியை மதிப்பீடு செய்ய இதற்கு மேல் என்ன வேண்டும்?

முதலாளிகளும் காலனித்துவ அரசும் எதிர்பார்த்தவாறு பிபி அவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் சாதகமாக நடந்து கொண்டுள்ளார். எடுத்துக்காட்டாக ஒன்றை மட்டும் கூறினால் போதும். பிபி நாராயணன் மூன்று முறை தோட்டத் தொழிலாளர்களின் சம்பள வெட்டுக்கு ஒப்புக்கொண்டுள்ளார். அன்றைய  Singapore Standard  நாளிதழ், இந்த மாதிரி சம்பள வெட்டுக்கு ஒத்துக்கொண்டு போனால் கம்யூனிசம் திரும்ப வரும் என தலையங்கம் எழுதியிருந்தது.

பிபி நாராயணன் ஒரு பச்சைத் துரோகி என்று நான் வாரிக் பல்கலைக்கழகத்தில் தாக்கல் செய்த ஓர் ஆய்வுக்கட்டுரையில் கூறியிருந்தேன். நீண்ட விவாதத்திற்குப் பின்னர் அது ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பிரிட்டிஷ் தொழிற்சங்க காங்கிரஸ்சில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ள பிபி நாராயணன் லண்டனுக்கு வந்திருந்தபோது நானும் அங்கிருந்தேன். அப்போது அவர் ஒரு பச்சைத் துரோகி என்று நான் எழுதியிருப்பது பற்றி அவரிடம் நேரடியாகவே சொன்னேன். “நீ அப்படி நினைக்கிறாயா?” என்று கேட்டார். நான் உடனே, “நான் நினைக்கவில்லை; நீர் அப்படிப்பட்டவர் என்று நான் கூறுகிறேன்”, என்றேன். வழக்கம் போல் சிரித்துக்கொண்டே, “வா, தேநீர் அருந்துவோம்” என்று என்னை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.

பிபியை போற்றுவோரும் தூற்றுவோரும் இருந்தனர். அவரிடமிருந்து ஆதாயம் அடைந்தவர்கள் அவரைப் போற்றினர். மற்றவர்கள் தூற்றினர். எனக்கு அவர் யார், யாருக்காக அவர் இயங்கினார் என்பது தெரியும். ஆகவே, அவரை கடைசி வரையில் எதிர்த்தேன்.

இப்போது இருக்கின்ற தொழிற்சங்கத்தில் தமிழர்களின் பிரச்சினையைப்  பேசுவதற்கு யாராவது இருக்கிறார்களா?

ஜீவி: பொதுவாக இன, மொழி, சமய பிரிவினைக்களுக்காகத் தொழிற்சங்கங்கள் போராடுவதில்லை. தொழிலாளர் உலகம் என்பதே தொழிற்சங்கங்களின் இலட்சியம். ஆனால், பாதிக்கப்பட்ட ஒருவருக்காக, ஒரு சமூகத்திற்காக, ஒரு நாட்டிற்காகப் போராட வேண்டிய கடப்பாடு தொழிற்சங்கங்களுக்கு உண்டு என்பது எனது ஆழ்ந்த கருத்து. கணபதிக்கு எதிரான தீர்ப்பைக் கண்டித்து வெளிநாட்டுத் தொழிற்சங்கங்கள் குரல் எழுப்பின. வியட்னாம் போருக்கு எதிராகத் தொழிற்சங்கங்கள் முழக்கமிட்டன. வங்காள தேசப் போரின்போது நானே எம்டியுசியின் பொதுக்குழுவின் கூட்டத்தில் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தேன். பாலஸ்தீன மக்களுக்காகப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் சிறிலங்கா தமிழர்கள் பிரச்சினைகள் மீது  மலேசியத் தொழிற்சங்கங்கள் மற்றும் எம்டியுசி ஈடுபாடு காட்டியிருக்க வேண்டும். தனிப்பட்ட தொழிலாளர்கள் அப்பிரச்சினையை அவர்களுடைய தொழிற்சங்கங்களில் எழுப்பியிருக்க வேண்டும். அப்படி ஏதும் நடக்கவில்லை.

இது குறித்து நான் எம்டியுசி தலைவர் ஒருவருடன் பேசியபோது அவர் கூறினார்: “காத்தையா, நீ எம்டியுசியில் இருந்தபோது நிலைமை வேறு. இப்போது இன, மத போக்கு வளர்ந்து வருகிறது. நிலைமையைப் புரிந்துகொள்”, என்றார்.

இந்நிலைப்பாடு கோலாலம்பூரில் சிறிலங்கா பிரச்சினை மீது நடத்தப்பட்ட ஒரு சிறு கூட்டத்தை கலைப்பதற்கு போலீஸ் நடவடிக்கையில் இறங்கியது. அது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகு அன்றைய வெளியுறவு அமைச்சர் ஜாப்பாரிடம் கேட்டதற்கு அவர், “பாலஸ்தீனம் ஓகே, சிறிலங்கா நாட் ஓகே” என்று கூறியதை பிரதிபலிக்கிறது.

தொழிற்சங்கங்கள் இதுபோன்ற குறுகிய நோக்கங்களை விட்டு விலகவேண்டும். அது தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் தலைவர்கள் ஆகியோரின் கையில் இருக்கிறது.

இன்னும் நீங்கள் தொழிற்சங்கத்தில் இருக்கிறீர்களா?

ஜீவி: நான் சட்டபடி தொழிற்சங்கத்தில் இருக்க முடியாது. தொழிற்சங்கத்திற்கு வெளியே தொழிற்சங்கவாதியாகத்தான் இருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை தொழிற்சங்க இயக்கம் என்றால் அது இனம், மதம், மொழி ஆகிய அனைத்துப் பிரிவினை சக்திகளுக்கும் அப்பாற்பட்டது. நாம் அனைவரும் அகில உலகத்தையும் சேர்ந்த தொழிலாளர் இனம். உலகின் எந்த மூலையில் தொழிலாளர் போராட்டம் நடந்தாலும் அதற்கு ஆதரவு அளிக்க வேண்டியது நமது கடமையாகும்.

இந்நாட்டில் வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய தொழிலாளர்களுக்கு அவர்களின் உரிமையைக் கோருகிற வகையில் தொழிற்சங்கம் இல்லையென்றால், அவர்கள் எப்படித் தங்கள் உரிமையை நிலைநிறுத்துவார்கள்?

ஜீவி: கொலை, கொள்ளை என இப்படித்தான் நிலைநிறுத்துவார்கள். அந்தமாதிரி அவர்கள் செய்வதை நான் ஆதரிக்கிறேன். ஏழைகளைக் கொள்ளையடிக்க வேண்டாம். கொள்ளையடித்து வசதியாக இருப்பவர்களைக் கவனித்துக்கொள்ளுங்கள் என்று நான் கூறுவதுண்டு. நமது முன்னாள் சட்டத்துறை அமைச்சர் நஸ்ரி வீட்டில் ரிம90,000 மதிப்புள்ள பொருள்கள் திருட்டுப் போய்விட்டது. அதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதெல்லாம் வழக்கமானதுதான் என்று சர்வசாதாரணமாக் கூறினார். இப்படிப்பட்டவர்களைத்தான் திருடர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

அனைத்துலகத் தொழிலாளர் மன்றம் ஏற்றுக்கொண்டுள்ள ஒப்பந்தப்படி ஒரு வெளிநாட்டுத் தொழிலாளரை வந்து வேலைக்கு அமர்த்தினால் அந்த தொழிலாளிக்கு, உள்நாட்டில் உள்ள தொழிலாளிக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளையும் பாதுகாப்பையும் கொடுக்க வேண்டும். ஆனால், இங்கு அது அமல்படுத்தப்படவில்லை. இங்கு அந்நியத் தொழிலாளர்கள் பெருமளவில்  சுரண்டப்படுகிறார்கள். ஆனால்,  அதைக் கடுமையாக எதிர்த்துப் போராட  எம்டியுசியோ, தேசிய தோட்டத் தொழிலாளர்கள் சங்கமோ, அனைத்துலகத் தொழிலாளர் மன்றமோ இன்னும் தீவிரமாக முன்வரவில்லை. அந்நியத் தொழிலாளர்கள் கொள்ளையடிக்கிறார்கள் என்று அலறுகிறோம். நாம் அவர்களின் வயிற்றில் அடித்தால் அவர்கள் இப்படித்தான் திருப்பி அடிப்பார்கள்.

மலாயாப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பொருளாதாரப் பேராசிரியர் அரிப் முகமட் 1993 ஆண்டு எம்டியுசியில் ஆற்றிய உரையில் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வருகையால் நாடு எவ்வாறு சீரழியப் போகிறது என்பதைப் பட்டியலிட்டார். இதற்கான பரிகாரம் உடனடியாகக் காணப்படுவதற்கு எம்டியுசியும் அரசாங்கமும் வழி காண வேண்டும் என்றார். வெளிநாட்டு தொழிலாளர்களைக்கொண்டு வந்து அவர்களைக் கொள்ளையடிக்கிறார்கள். அவர்கள் நம்மைக் கொள்ளையடிக்கிறார்கள். இந்த இரண்டையும் தவிர இந்த விவரகாரத்திற்கு எந்த முடிவும் இதுவரையில் காணப்படவில்லை.

ஒருவர் பசியால் வாடும் போது இன்னொருவர் புசித்து நிம்மதியாக வாழவே முடியாது. வாழவும் விடக் கூடாது என்பது எனது வாதம். இதனை வலியுறுத்துகிறது ஐநாவின் அனைத்துலக தொழிலாளர் மன்றம் (ILO) 1919 ஆம் ஆண்டில் விடுத்த பிலடெல்பியா பிரகடனம்:

“Poverty anywhere is a threat to prosperity everywhere.” இந்தப் பிரகடனம் ஒரு தீர்ப்பு போன்றதாகும். அத்தீர்ப்பின் பலனை நாம் இப்போது அனுபவிக்கத் தொடங்கியுள்ளோம்.

இதைத் தவிர்த்து, இந்நாட்டில் அவர்களுக்கு ஓர் இயக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு எவ்வாறு உள்ளது?

ஜீவி: ஒன்றுமே இல்லை. உள்நாட்டு தொழிலாளர்களுக்கே பாதுகாப்பு இல்லை. எந்த அமைப்பையும் விடமாட்டார்கள். இதில் சம்பந்தப்பட்டிருப்பவர்கள் உயர்மட்டத் திருடர்கள். சிலர் பேசுவார்கள். ஆனால், யாரும் உதவமாட்டார்கள். அரசியல் திண்மையும் உலகத் தொழிலாளர் இனம் ஒன்றுபட்டு எரிமலை போல் சீற வேண்டும்.

இதை எதிர்த்து இந்நாட்டில் உள்ள இயக்கங்கள் யாராவது போராட்டம் நடத்தியுள்ளனரா?

ஜீவி: அப்படி இதுவரை யாரும் எதையும் செய்தது கிடையாது. அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. காலஞ்சென்ற ஐரின் பெர்னாண்டஸ் இவ்விவகாரத்தில் தீவிரமாக இருந்தார். இவ்விவகாரத்தில் முழுக் கவனம் செலுத்த வேண்டிய அமைப்பு தொழிற்சங்க காங்கிரஸ். அவர்களே ஒழுங்காக எதையும் செய்யவில்லை. மற்றவர்கள் சமுதாய அடிப்படையில் எதையாவது செய்யலாம். ஆனால், யாருமே முன்வருவதில்லை.

இன்று இருக்கின்ற சோசலிசக் கட்சி மீது உங்களுக்கு ஏதும் விமர்சனங்கள் இருக்கிறதா?

ஜீவி: மலேசிய சோசலிசக் கட்சி என்ற ஒன்று மட்டும்தான்  மக்களின், குறிப்பாக ஏழை மக்களின்,  அடிப்படை பிரச்சினைகளில் இன, மத, மொழி வேறுபாடின்றி கவனம் செலுத்துகிறது. சோசலிச சமுதாயத்தை உருவாக்க அக்கட்சி எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஏழை மக்கள், இளைஞர்கள், குறிப்பாக பெண்கள், மனதார முன்வர வேண்டும்.

டாக்டர் ஜெயக்குமார், டாக்டர் நசீர், சரஸ்வதி மற்றும் போலீஸ் நிலையங்களின் சிறப்பு விருந்தினராக அடிக்கடி இழுத்துச் செல்லப்படும் அருட்செல்வன் போன்றோரால் நாடும் நாட்டு மக்களும் நலன் பெறுவர் என்று நான் நம்புகிறேன்.

அக்கட்சியின் தலைவர்களும் உறுப்பினர்களும் அமைதியாக நடந்து செல்கின்றனர். இன்றைய வேகத்திற்கு ஏற்ப அவர்கள் ஓட வேண்டும். தொழிற்சங்க இயக்கம் புத்துயிர் பெற அவர்களின் ஈடுபாடு அவசியம். இக்கட்சியில் மட்டுமே இறைத் தூதர்களின் போதனைகள் பின்பற்றப்படுகின்றன.

வீரசேனன் என்ற பெயரில் ஒருவர் இதே காலகட்டத்தில் இருந்துள்ளதாக படித்துள்ளோம்? அவர் யார்?

ஜீவி: அவர் சிங்கப்பூர் தொழிற்சங்க சம்மேளத்தின் தலைவராக இருந்தவர் கணபதிக்கு அடுத்தவர். கணபதி கைது செய்யப்பட்ட பின்னர் அவர் பிஎம்எப்டியுவின் தலைவரானார். அவரும் பிரிட்டிஷ் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அந்தோணி, மார்க்சின் அப்பா, எப்படி இவர்களோடு இணைந்தார்?

ஜீவி: அந்தோணி,  தொழிற்சங்கத்தில் தீவிரமாக இருந்த பத்து ஆராங்காரர். கணபதியின் நெருங்கிய ஆதரவாளரும்கூட. இவர் எனது மாமா இராமசாமிக்கும் நெருக்கமானவர். அவரையும் கைது செய்ய பிரிட்டிஷ்ஷார் முனையும்போது அவர் பிரிட்டிஷ் பிடியிலிருந்து தப்பி இந்தியாவுக்குச் சென்றுவிட்டார். ஆனால், அவரை பிடித்து நாடு கடத்தியதாக அன்றைய அரசாங்கம் கூறிக்கொண்டது.

சின் பெங்கை நேர்க்காணல் செய்த அனுபவம், அவர் என்ன சொன்னார்?

ஜீவி: அது ஒரு பெரிய விசயம் அல்லவா? அது ஒரு குறுகிய நேர்காணல்தான். அவரை ஏன் இந்நாட்டிற்குள் வர அனுமதிக்கவில்லை என்று கேட்டேன். நான் மலாய்க்காரன் இல்லை. அதனால் விடவில்லை என்றார். நான் சொன்னேன். நீங்கள் வந்தால் அரசியல் மாற்றம் ஏற்படும் அதனால்தான் விடவில்லை என்றேன். அதை ஆமோதித்தார். அவருக்கு எல்லா நினைவுகளும் இருந்தன. மிகத் தெளிவாகப் பேசினார். தன்னுடைய பெற்றோரின் கல்லறைக்குப் போய் மரியாதை செய்ய வேண்டும் என்ற தீவிர எண்ணம் அவருக்கு இருந்தது. இங்கு வருவது அவரது உரிமை. அனுமதி கொடுப்பார்கள் என பெரிதும் எதிர்ப்பார்த்தார். அனுமதி கிடைக்கவில்லை. ஆகவே, இரகசிய பாதை வழியாக நாட்டிற்குள் நுழையப் போவதாக கூறினார். என்ன நடந்தாலும் பரவாயில்லை என்றார். உங்களுக்கு இரகசிய பாதைகள் எல்லாம் தெரியும். ஆனால், நீங்கள் பகிரங்கமாக நாட்டின் எல்லையைத் தாண்டி நாட்டிற்குள் வர வேண்டும் என்றேன். உங்களுக்கு மகாத்மா காந்தியைத் தெரியுமா என்று கேட்டேன். நன்றாகத் தெரியும் என்றார். அவர் பிரிட்டிஷ் இந்திய வைஸ்ராய்க்கு முன்கூட்டியே அறிவித்து விட்டுதான் அந்நாட்டின் சட்டத்தை பகிரங்கமாக மீறுவதை கொள்கையாகக்கொண்டிருந்தார்.  அவ்வாறே, நீங்களும் மலேசிய அரசாங்கத்திற்கு அறிவித்துவிட்டுதான் பகிரங்கமாக எல்லையைக் கடக்க வேண்டும் என்று கூறினேன். இது ஒரு நல்ல ஆலோசனை. நன்றி. மிக்க நன்றி. நான் அது குறித்து கண்டிப்பாகச் சிந்திப்பேன் என்ற மகிழ்ச்சி பொங்கக் கூறினார்.  ஆனால், அதற்கு காலம் இடம் தரவில்லை.
.
சின் பெங் மீது அவ்வளவு வெறுப்பு ஏற்பட என்ன காரணம்?

ஜப்பானியர்களை விரட்டி அடிக்க அவர் உதவியபோது பிரிட்டிஷ் அவருக்குத் தங்கப் பதக்கம் அளித்து பாராட்டியது. OBE பதக்கம் அளிக்கப் போவதாக பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. சின் பெங் லண்டனில் நடந்த பிரிட்டிஷ் வெற்றி பேரணியில் பங்கேற்றார்.

பின்னர்,  மலாயாவுக்கு சுதந்திரம் வேண்டும் என்ற கோரிக்கையை சின் பெங் முன்வைத்ததும் அவர் எதிரியாகிவிட்டார். அவரது மலாயா கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்தனர். வேறு வழி இன்றி சின் பெங்கும் அவரது ஆதரவாளர்களும் வனவாசம் மேற்கொண்டனர். சின் பெங் ஒரு பயங்கரவாதி என்ற முத்திரையைக் குத்தினார்கள். அவருடைய தலைக்கு விலையும் நிர்ணயித்தார்கள். ஆனால், சின் பெங்கும் அவரது கூட்டத்தினரும் பிரிட்டிஷ்ஷார் கொடுத்த ஆயுதங்களைக்கொண்டு ஜப்பானியர்களையும் அவர்களது ஆதரவாளர்களையும் கொன்றபோது அவர்கள் பயங்கரவாதிகள் என்று குற்றம் சாட்டப்படவில்லை.

ஆட்சியில் இருப்பவர்கள் தங்களுக்குப் பிடிக்காதவர்களை, எதிர்ப்பவர்களை பயங்கரவாதிகள் என்று அறிவிப்பது ஒன்றும் புதிதல்ல.

தென்ஆப்ரிக்காவில் பிரிட்டிஷ்ஷாருக்கு உதவியதற்காக மகாத்மா காந்திக்கு தங்கப் பதக்கமும் பட்டமும் அளித்து கௌரவித்தனர். இந்தியாவை விட்டு வெளியேறு என்று பிரிட்டனுக்கு எதிராக மாகாத்மா காந்தி போராட்டத்தை தொடங்கியதும் மகாத்மா காந்தியை ஒரு பயங்கரவாதி என்று பிரிட்டிஷ் பேரரசு பிரகடனம் செய்தது! அவர் வழக்கறிஞர் தொழில் புரிவதற்கான சான்றிதழை முடக்கினார்கள். அந்த “அரை நிர்வாண பக்கிரி” என்ன ஆயுதம் வைத்திருந்தார்? யாரைக் கொன்றார்? ஆனால், பிரிட்டிஷ்ஷாருக்கு சின் பெங்கும் மகாத்மா காந்தியும் பயங்கரவாதிகள். அவர்கள் செய்த குற்றம் என்ன? வெள்ளையனே, வெளியேறு என்று கூறியதுதான்.

காட்டிற்குள் விரட்டப்பட்ட சின் பெங்கையும் அவரது ஆதரவாளர்களையும் கொன்று ஒழிப்பதற்காக பிரிட்டிஷ் காமன்வெல்த் நாடுகளின் படைகளின் பல்லாயிரம்  வீரர்களையும், விமானங்களையும், குண்டுகளையும் கொண்டு 12 ஆண்டுகளுக்கு தாக்கினார்கள். பதிலுக்கு சின் பெங்கின் படையினரும் தாக்கினர். தன்னைக் கொல்ல வருபவனிடம் கொன்று விட்டு போ என்றா சொல்வார்கள். கொல்ல வந்த படையினரையும் அவர்களைக் காட்டிக்கொடுத்தவர்களையும், காட்டிக்கொடுக்க முயன்றவர்களையும் சின் பெங் படையினர் கொன்றனர். இது என்ன உலக வரலாற்றில் நடந்த முதல் கொலையா?

அமெரிக்காவில் குடியேறிய வெள்ளையர்கள் அங்கு வாழ்ந்த 10 மில்லியன் சிவப்பு இந்தியர்களைக் கொன்று அவர்களுடைய நாட்டை கைப்பற்றிக்கொண்டனர். வியட்நாமில் அமெரிக்க இராணுவம் என்ன பட்டாசு கொளுத்தி விளையாடியதா? அங்கு அமெரிக்க அரசு நடத்திய படுகொலைகளுக்கு எதிராக அந்நாட்டு மக்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பஞ்சாப் ஜாலியன்வாலா படுகொலை ஒரு பயங்கரவாத செயல். பிரிட்டிஷ் பேரரசு ஆண்ட நாடுகளில் நடந்த படுகொலைகள், அடித்த கொள்ளைகளுக்கு முன்பு சின் பெங் நடத்தியது ஒரு சிறு விளையாட்டுதான்.  ஆனாலும், கொலை கொலைதான், கொள்ளை கொள்ளைதான்.  ஆனால், இது தனிப்பட்ட விரோதம் சம்பந்தப்பட்ட கொலையோ, கொள்ளையோ அல்ல. இது நாட்டை பிடிப்பதற்கான போர். இது போன்ற போரில், “All is fair in love and war.” ஏன் சிங் பெங்கை மட்டும் பயங்கரவாதியாகச் சித்தரிக்க வேண்டும்?

சீன வரலாற்று நிபுணரான கல்விமான் வாங் கங்வு ஆஸ்ட்ரேலியன் நேசனல் யூனிவர்சிட்டியில் சிங் பெங்குடன் நடந்த ஒரு கலந்துரையாடலின்போது சிங் பெங்கைப் பார்த்து கூறினார்: சீன வரலாற்று பாரம்பரியப்படி “வெற்றி பெற்றவன் அரசனாகிறான்; தோற்றவன் பயங்கரவாதி எனப்படுகிறான்” என்று பலத்த சிரிப்பொலிக்கிடையில் கூறினார். சின் பெங் நாட்டை பிடித்திருந்தால், பிரிட்டன் அவரை அங்கீகரிக்கும் முதல் நாடாக இருந்திருக்கும்.

நவீன கால உலகின் படுபயங்கர பயங்கரவாதி என்று வர்ணிக்கப்பட்டவர் மாவ் ஸே டோங். அவர் சீனக் குடியரசின் தலைவரானதும் எல்லா நாடுகளையும், இந்தியாவையும்கூட, முந்திக்கொண்டு அவரது அரசாங்கத்தை அங்கீகரித்த முதல் நாடு உலகத்தையே கொள்ளையடித்த பிரிட்டன்தான்.

ஏன், நமது நாடுகூட சீனா விவகாரத்தில் வீராப்பு காட்டியது. சீனாவை ஐக்கிய நாட்டு மன்றத்தில் உறுப்பினராக்குவதற்காக இந்தியா ஒவ்வொரு ஆண்டும் செப்டெம்பர் மாதத்தில் கூடும் ஐநா பொதுச்சபை கூட்டத்தில் ஒரு முன்மொழிதலை தாக்கல் செய்யும். ஒரு கூட்டத்தில் மலாயாவின் வெளியுறவு அமைச்சர் டாக்டர் இஸ்மாயில் அப்துல் ரஹ்மான் சீனாவை ஐநாவின் உறுப்பினராக்கக் கோரும் இந்தியாவின் முன்மொழிதலை எதிர்த்தார். கம்யூனிஸ்ட்களுடன் நாங்கள் 12 ஆண்டுகள் போர் புரிந்துள்ளோம் என்று காரணம் கூறினார். அதற்கு பதில் அளித்த இந்திய பிரதிநிதி வி.கே. கிருஷ்ண மேனன் அப்போரை நடத்தியது மலாயா அரசாங்கமல்ல, பிரிட்டிஷ் அரசாங்கம் என்று சுட்டிக்காட்டினார். அவ்வாறே, கொழுப்பும் திமிறும் பிடித்த அமெரிக்க அன்றைய துணை அதிபர் ரிச்சர்ட் நிக்சன், ஓர் உலக வரைபடத்தை கிருஷ்ண மேனனிடம் காட்டி இதில் சீனாவை காணோமே, காட்டுங்கள் என்றாராம். குருடனுக்கு எதைக்காட்டி என்ன பிரயோசனம் என்றாராம் கிருஷ்ண மேனன்.

இறுதியில், இந்தியா வென்றது. சீனா ஐநாவில் உறுப்பியம் பெற்றது. பிறகு எதிர்த்தவர்கள் சீனாவுக்கு, மாவ்வுக்கு காவடி எடுத்தனர்.

நிக்சன் சீனாவுக்குச் சென்று மாவ்வின் கையைப் பற்றி நின்றார். மலாயாவின் பிரதமர் அப்துல் ரசாக் பெய்ஜிங்கிற்கு காவடி எடுத்தார். மாவ்வின் கையைக் குலுக்கி சிரித்த முகத்துடன் போஸ் கொடுத்து படம் எடுத்துக்கொண்டார். அந்தப் படத்தை மலாயாவின் மூலைமுடுக்கெல்லாம் ஒட்டி தாம் சீனாவின் மாவ்வுடன் அவ்வளவு நெருக்கமாக இருப்பதாகக் காட்டிக்கொண்டார். சீனர்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது அவரின் நோக்கம்.

இப்போது புதியதோர் வன்முறையை கண்டுபிடித்துள்ளனர். மலேசிய சோசலிசக் கட்சியின் கைமுட்டி சின்னம் வன்முறையைத் தூண்டுவதாக இருக்கிறதாம்! அக்கட்சி வெற்றி பெற்றுவிட்டால், கைமுட்டி கட்டி அணைப்பதற்கான அன்பான சின்னம் என்பார்கள். ஆகவே, பயங்கரவாதம் என்பது ஒரு சந்தர்ப்பவாத ஆயுதம். அதை வெற்றி பெற்றவர்கள் தோற்றவர்களுக்கு எதிராக வேண்டிய அளவிற்குப் பயன்படுத்துகின்றனர்.

மனித உலக வரலாற்றில் அனைத்துத் தகுதிகளும் இருந்தும் சகமனிதர்களின் இரத்தத்தைச் சிந்த வைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காத, உத்தரவிடாத மாபெரும் தலைவர்கள் மூவர் மட்டுமே: புத்தர், ஏசுநாதர், மகாத்மா காந்தி.

மற்ற அனைத்து மன்னர்களும், அதிபர்களும், பிரதமர்களும், முப்படைத் தலைவர்களும் ஏதாவது ஒரு வகையில் இரத்தம் சிந்தியவர்களே. மொத்தத்தில், அவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளே!

கம்யூனிச தத்துவம் முக்கியமானதுதான். ஆனால், நிறையப் பேருக்கு கம்யூனிசம் என்றால் பயம் வருவதற்குக் காரணம் அவர்கள் மலேசியாவைத் தங்கள் பிடிக்குள் வைத்திருந்த காலகட்டத்தில் அதிகமான கொடுமைகள் செய்தார்கள் என்பதாகத்தான் இருக்கிறது.  அது எந்தளவிற்கு உண்மை?

ஜீவி: அவர்கள் காட்டிக்கொடுத்தவர்களைத்தான் பழி தீர்த்தார்கள். நீ காட்டிக்கொடுத்தால் நான் சும்மா இருக்க முடியுமா? பழிக்குப் பழி. இதைத்தானே எல்லாரும் செய்கிறார்கள். ஆனால், இப்போது இருக்கிற ஆட்சியாளர்கள் நிரந்தரமாக ஆட்சியில் இருக்க இந்த பயங்கரவாத கதையைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

பத்தாங்காலியில் 25 அப்பாவி சீனர்களை பிரிட்டிஷ் இராணுவத்தினர் படுகொலை செய்தனர். இதை என்னவென்று கூறுவது? பஞ்சாப் ஜாலியன்வாலா படுகொலைக்குக் காரணமான இரு ஆங்கிலேயரையும் பிரிட்டிஷ் அரசு தூக்கிலிடவில்லை. ஆனால், அவர்களை லண்டனில் 20 ஆண்டுகளுக்கு தேடி இறுதியில் ஒருவனை சுட்டுக்கொன்ற உதாம் சிங் தூக்கிலிடப்பட்டார். உதாம் சிங் பயங்கரவாதியா?  அந்தமான் தீவில் இருக்கும் சிறைச்சாலையில் இந்திய சுதந்திரத்திற்காகப் போராடிய வங்காளத்து சிங்கங்கள் தோலுரித்துக் கொல்லப்பட்ட காட்சிகளைக் காணும்போது பிணம்கூட துள்ளி எழுந்து பயங்கரவாதியாக மாறும். உண்மை தெரியாததால் பயப்படுகிறோம்.

மலேசிய தலைவர்களுள் உங்களைக் கவர்ந்தவர் யார்?

ஜீவி: மலேசிய தலைவர்கள்! ஒருவருமில்லை.

உலகத் தலைவர்களின் உங்களுக்குப் பிடித்தமானவர்?

ஜீவி: ஜவஹர்லால் நேரு. இன்று வரை என்னை வழி நடத்திச்செல்லும் எனது முதல் வழிகாட்டி அவர்.  அவரைப் பற்றி நான் கூறுவதைவிட, கவிஞர் கண்ணதாசன் கூறியிருப்பதை முன்வைக்கிறேன். “போதி மரத்து புத்தன் போய் விட்டான் என்றிருந்தோம். போனவன் பாதி வழியில் பண்டிதனாக திரும்பி வந்தான்.”

துன் சம்பந்தன் பற்றி…

ஜீவி: தனிப்பட்ட முறையில் அவர் நல்லவர். மக்களிடம் கொள்ளையடிக்காத தூய்மையான தலைவர். அரசியல் தலைவர் மற்றும் சுபாஸ் சந்திரபோஸின்பால் ஈடுபாடு கொண்டவர் என்ற முறையில் குடிமக்களாகிய இந்தியர்களின் உரிமைகளை நிலைநாட்ட அவர் தவறிவிட்டார்.  கூட்டுறவுச் சங்கத் தலைவர் செய்ய வேண்டிய தோட்டம் வாங்கும் வேலையை அவர் செய்துள்ளார்.

லண்டனுக்கு சென்ற மெர்தேக்கா குழுவில் இந்தியர் யாருக்கும் துங்கு இடமளிக்கவில்லை. கே. எல். தேவாசர் துங்குடன் நடத்திய கடும் விவாத்திற்குப் பின்னர்தான் இந்தியர் ஒருவரை சேர்த்துக்கொள்ள அவர் சம்மதித்தார். அதிலும்கூட கலந்துகொள்ள இவர் முதலில் மறுத்துவிட்டார்.

அரசியல் மரத்திலேறி உரிமைப் பழம் பறிப்பதைச் செய்யாமல் மரத்தின் கீழே நின்றுகொண்டு “துங்கு சரணம், தந்தை துங்கு சரணம், துங்கு சரணம்” என்று மந்திரம் ஓதினார். பழம் இன்றும் கனியவில்லை.

நீங்கள் தேர்தலில் போட்டியிட்டிருக்கிறீர்கள் என கேள்விப்பட்டிருக்கிறோம்? அதைப்பற்றி…

ஜீவி: 3 முறை போட்டியிட்டிருக்கிறேன். நாடாளுமன்றம் தொழிலாளர்களின் கோட்டையாக இருக்க வேண்டும். அரசாங்கம் தொழிலாளர்களின் அரசாங்கமாக இருக்க வேண்டும் வேண்டும் என்பதற்காக அரசியலில் இறங்கினேன். அதற்குப் பெரிய தடைகள் இருந்தன. எல்லா தடைகளையும் தகர்த்து 1974-ஆம் ஆண்டு வி. மாணிக்கவாசகத்தை எதிர்த்து போர்ட் கிள்ளான் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டேன். 1978 மற்றும் 1982-ஆம் ஆண்டுகளில் பத்மாவை எதிர்த்து போர்ட் டிக்சனில் போட்டியிட்டேன். மூன்று தேர்தலிலும் நான் தோல்வி அடைந்தேன். ஆனால், தொழிற்சங்கத் தலைவராக தேர்தலில் போட்டியிடுகிற எனது உரிமையை நிலைநிறுத்திக்கொண்டேன்.

கம்யூனிச இயக்கம் இந்நாட்டைப் பொறுத்தவரை ஒரு பயங்கரவாத இயக்கம். நீங்கள் எப்படி கம்யூனிச இயக்கத்தால் ஈர்க்கப்பட்டீர்கள்?

ஜீவி: நான் கம்யூனிச இயக்கத்தால் ஈர்க்கப்படவில்லை. அதன் தத்துவங்களால் ஈர்க்கப்பட்டேன்.

என்னைப் பொறுத்தவரையில், ஒரு குடிமகனிடமிருந்து அவனால் கொடுக்க இயன்றதைப் பெற்றுக்கொண்டு அவனுக்கு தேவையானவற்றை கொடு என்று மார்க்ஸ் கூறியிருப்பது கம்யூனிச தத்துவத்தின் சாரம் என்றால், அதனை முதன்முதலில் அமல்படுத்திய கிருஷ்ணாதான் உலகின் முதல் கம்யூனிஸ்ட் என்று கூறலாம்.  கிருஷ்ணா செய்ததை மார்க்ஸ் அப்படியே தத்துவமாக்கியுள்ளார்.

நெற்றி வியர்வை காய்வதற்கு முன்பு தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டும் என்று முகமது நபி கூறுகிறார். இதன் அடிப்படையில் தொழிலாளர்களின் ஊதியத்தை அன்றாடம் கொடுக்க வேண்டும் என்று நான் கோரியதுண்டு. எனது சங்க உறுப்பினர்களுக்கு மாத முடிவில் சம்பளம் கொடுக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும். அவர்களின் மாதச் சம்பளத்தை நாள் அடிப்படையில் வேலை முடிந்தவுடன் கொடுக்க வேண்டும் என்ற எனது கோரிக்கையைக் கேட்டு பிபி நாராயணன் அரண்டு போனார். மாபா அது சாத்தியப்படாது என்றது. தொழிலாளர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைவர் நீதிபதி ஹருன் ஹசிம் வாரச் சம்பளத் திட்டத்தை அறிமுகப்படுத்தலாம் என்றார். மற்றவர்கள் விற்கும் பொருள்களுக்கான விலையை உடனே தர வேண்டும். தொழிலாளியின் உழைப்பை வாங்கும் முதலாளிகள் ஒரு மாதத்திற்குப் பின்னர் அதற்கான விலையைத் தருகின்றனர். ஏன்? இது இன்னொரு சுரண்டலாகும்.

ஏசுநாதர் உணவை (ரொட்டியை) பகிர்ந்துகொள்ளுங்கள் என்றார். இது ஒரு சோசலிச தத்துவம். அதனால்தான், ஏசுநாதர் உலகின் முதலாவது சோசலிஸ்ட் என்று இந்தோனீசியாவின் முன்னாள் அதிபர் சுகார்ணோ கூறினார்.

இவர்களுக்கெல்லாம் முன்னதாக, 5000 ஆண்டுகளுக்கு முன்பு, கிருஷ்ணா பகவத்கீதையில் இப்படி கூறியிருப்பதாக மகாத்மா காந்தி கூறுகிறார்: “He who eats without labour eats sin, is verily a thief.” உழைக்காமல் உண்பவர்கள் யார்?

இந்தியாவின் மூதறிஞரான இராஜாஜி பகவத்கீதை ஒரு சோசலிச கோட்பாடு என்று கூறுகிறார்.

“வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
குடி உயர கோல் உயரும்.”

இது ஒரு நிறைவான சோசலிசத் தத்துவம் ஆகும். ஆனால், இங்கே கோல் உயர்ந்த பிறகுதான் குடியை உயர வைக்கலாமா  என்பது குறித்து  யோசிக்கலாமா என்ற எண்ணம்கூட வருவது கடினம்.  கம்யூனிச தத்துவம் என்பதை லெனின், மாவ், மார்க்ஸ் போன்றவர்கள் சொல்லித்தான் நமக்கு தெரிய வேண்டும் என்பதில்லை. இவை நம் வாழ்வோடு தொடர்புடையவை.

இயன்றதைக் கொடுத்து தேவையானவற்றை பெற்று நாம் அனைவரும் வாழ வேண்டும். நீங்கள் வாழாமல் நான் வாழ முடியாது. வாழவும் விடக்கூடாது என்பதுதான் எப்போதும் எனது தத்துவம். எந்த இனம், எந்த மொழி எவர் என்றெல்லாம் எனக்குப் பாரபட்சம் கிடையாது. மனிதனைப்போல் மரம் செடி கொடிகள், மிருகங்கள் எல்லாம் வாழ வேண்டும். பாக்டீரியாவும் வாழ்ந்தாக வேண்டும். இல்லையெனில் இறந்த பிறகு நம் உடல் எப்படி அழிய முடியும்? நாம் உயிரினம். ஆயிரக்கணக்கான உயிரினங்களில் நாமும் ஓர் அங்கம். அவ்வளவே.

————————————————

முதல் பாகம் – அக்டோபர் 2014 இதழில்…

நேர்காணல்: பூங்குழலி வீரன் / ம.நவீன்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...