மனித இனத்தின் பண்பாடுகளும் நாகரீகங்களும் இதர அனைத்தும்கூட மனிதனுடைய தேடல் வெட்கையிலிருந்தே உருவாகியிருக்கின்றன. புதியதாக ஒன்றை உருவாக்குவதாயினும் அல்லது ஒன்றின் மெய்த்தன்மையை கண்டடைவதாயினும்; அறியாத ஒன்றிலிருந்து அறிந்த ஒன்றை நோக்கி நகர்த்துவதே அறிவின் தேடலாக அறியப்படுகின்றது. இதன் பரிணாம வளர்ச்சியாக ‘ஆய்வு’ எனும் சொல்லை கொள்ளலாம்.
அறிவைத் தேடுதலே ஆய்வாகின்றது. ஒன்றை அறிய அறிய அறியாமையின் வெளி விரிந்துகொண்டே செல்கின்றது. தேடுதலுக்கான தளம் விரிவடைந்துகொண்டே போவதால்தான் ஆய்வு என்பது தொடர்ச்சியான செயல்முறையாக கருதப்படுகின்றது. ஆய்வு என்பது புதிய அறிவைத் திரட்டுவதற்குரிய ஒழுங்கமைந்த செயல்முறையாக முன்னெடுக்கப்படுகின்றன. ஆய்வென்ற கல்வி முறையானது அறிந்ததிலிருந்து அறியாததை நோக்கிச் செல்லும் இயக்கவிசையாக செயல்படுகின்றது. ஆய்வின் வழியாகவே கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன. புத்தாக்கங்கள் முன்வைக்கப்படுகின்றன (சபா. ஜெயராசா, 2006).
The Oxford English Dictionary (2002) ஆய்வு என்பதற்கு,
‘the systematic investigation into and study of materials and sources in order to establish facts and reach new conclusions’
என்பதாகப் பொருள் தருகின்றது. புதிய உண்மைகளையும், புதிய முடிவுகளைக் கண்டடையும் பொருட்டு ஆய்வு பொருட்களையும், ஆதாரங்களையும் முறையான விசாரணைக்கு உட்படுத்துவதே ஆய்வு என்பதாக புரிந்துக் கொள்ளும் பொதுப்படையான விளக்கமாக இதனைக் கொள்ளலாம். ஆனால், ஆய்வுகள் துறைகள் சார்ந்தும், வயது வரம்புகள் சார்ந்தும், அதன் தேவைகள் சார்ந்தும் வேறுபடுகின்றன.
தமிழ்ச்சூழலில் தமிழ் மொழிக்கும், தமிழ் இலக்கிய ஆய்வுக்கும் வீரமாமுனிவர், ஜி. யு. போப், வின்ஸ்லோ, பெர்ச்சிவல், கால்டுவெல் போன்ற ஐரோப்பியர் வருகை மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. அதுவரையில் உரையாசிரியர்களை மொழி, இலக்கிய ஆய்வாளர்களாக ஏற்று வந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகளையும் ஆய்வு நெறிமுறைகளையும் கவனத்தில் கொண்டு தமிழில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படத் தொடங்கின. இதன் நெடிய வரலாற்றை பல திறனாய்வியல் நூல்களில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
அறிவியல் ஆய்வும் இலக்கிய ஆய்வும்
அறிவியலின் ஆய்வுகள் நேரடியாகவும், வெளிப்படையாகவும், மனித வாழ்வோடு நேரடி தொடர்பு உடையதாகவும் இருக்கின்றது. மருத்துவம், போக்குவரத்து, விவசாயம், கால்நடை, விண்வெளி என அறிவியலின் ஆய்வுகளும் கண்டுபிடிப்புகளும் மனித மேம்பாட்டை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படுபவை. அவற்றின் முடிவுகளும் கண்டுபிடிப்புகளும் எளிய மனிதர்களுக்கும் கண்ணெதிரே மாற்றங்களையும் அதிசயங்களையும் நிகழ்த்தக்கூடியதாக இருக்கின்றன. உதாரணமாக, அறிவியலின் பல்வேறு ஆய்வு கண்டுபிடிப்புகள் மனித வாழ்வில் பல்வேறு மாற்றங்களையும், மனித செயல்பாடுகளை இலகுவாக்கியும் வைத்திருக்கின்றது. அறிவியல் கண்டுபிடிப்புகள் தொழில்நுட்பங்களாகி, இன்று அத்தொழில்நுட்பங்களைக் கொண்டு பல ஆய்வுகள் முன்னெடுக்கப்படுக்கொண்டே இருக்கின்றன.
மாறாக, இலக்கிய ஆய்வுகள் பட்டியலிட்டு சொல்லும் வண்ணம் சான்றுகளையும், நேரடிப் பயன்களையும் தரக்கூடியவை அல்ல. இலக்கிய ஆய்வின் நோக்கமும் அப்படியாக அமைவதில்லை. இலக்கிய உருவாக்கமும்கூட அத்தகைய பண்பிலானது அல்ல. இலக்கியத் தோற்றத்தின் நோக்கங்களை ஆராய்ந்தவர்கள் தொடக்கத்தில் –இலக்கியம் என்பது உலக வாழ்வின் அறநெறிகளை பின்பற்றி ஒழுகவும், மனிதனை சான்றோனாக வாழ வழிகாட்டவும், மனித நேயம் போன்றவற்றை நிலைகொள்ளச் செய்ய உருவானதாகக் கூறினர். ஆனால் தற்போது இலக்கியம் ஒன்றை கண்டவாறு காட்டுவதாக இல்லாமல் உணர்த்துவதாக பரிணமித்து உணர்வுக்கும் அனுபவத்துக்கும் வழிகோலுவதாக இருக்கின்றது. அறிவியலைப்போல் இலக்கியத்தில் முடிந்துவிட்ட முடிவென்றும், கண்டுபிடிப்பென்றும் இருப்பதில்லை.
படித்துவிட்டேன், கற்றுவிட்டேன், பலமுறை ஓதிவிட்டேன். இன்னும் என்ன புதுப்பொருள் தோன்றப் போகிறது என்று இந்த நூலை மூடி வைக்கிறோம். ஆனால் மறுமுறையும் திறந்து படிக்கும்போது புதுமை தோன்றுகிறது (லியோ டால்ஸ்டாய், 1961).
ஆக, வாசிப்பனுபவமும், நுட்பமும் இலக்கியங்களை பலவாறான புரிதல்களுக்கு இட்டுச் செல்லக்கூடியவை. ஆக, இலக்கியங்களைத் ஆய்வு செய்தல் என்பது மனிதனின் வாழ்தலையும், அவனது காலத்தையும், உணர்வுகளையும், விழுமியங்களையும், அபத்தங்களையும், கொஞ்சம் மேல் சென்று படைப்பாளியையும் அவனது தார்மீகங்களையும்; தொடர்ந்து படைப்பின் தன்மைகளையும் உட்கூறுகளையும் ஆய்வதாக இருக்கின்றது.
அறிவியல் ஆய்வுகள் தரும் உடனடி பயன்விளைவுகளைப் போல அல்லாமல் இலக்கிய ஆய்வானது பயன்நுகர்வை கூட்டக்கூடியதாக விளங்குகின்றது. இவ்விருவகை ஆய்வுகளும் ஒரு தராசில் வைத்து அளவிடக்கூடாத வெவ்வேறு உயர்துறைகளாக இருக்கின்றன. இதனை ஓரளவு புரிந்து கொள்வதன்மூலம் இலக்கிய ஆய்வுகள் தேவையையும், அவசியத்தையும் அதன் இன்றியமையா தன்மையையும் உணர முடியும்.
மலேசியச் சூழலில் தமிழ் இலக்கிய ஆய்வுகள்
இந்நாட்டில் தமிழ் இலக்கியம் சார்ந்த மேதைமைமிக்க ஆய்வுகள் (scholarly research) கல்வியாளர்களின் முக்கியச் செயல்பாடுகளில் ஒன்றாகவும், இளநிலை பட்டக்கல்வியை முடித்து முதுநிலை பட்டக்கல்வியைத் தொடர்பவர்களுக்கானதாகவும் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் தற்போதைய கல்விச் சூழலில் ஆராய்ச்சிகள், ஆக்கப்பூர்வமான திட்டங்கள் (projects) என ஆய்வுகள் இளநிலை பட்டக்கல்வியை மேற்கொள்பவர்களும் கண்டிப்பாக நிறைவு செய்ய வேண்டிய ஒன்றாக உருமாறிவிட்டிருக்கின்றது. இவ்வகை ஆய்வுகள் முழுக்க விரிவுரையாளர்களின் வழிகாட்டுதலின்கீழ் இளநிலை பட்டக்கல்வி மாணவர்கள் தாங்கள் விரும்பும் குறிப்பிட்ட துறையில் மிக ஆழமாக செல்ல அடித்தளமிடுவது அவசியமாகும். உண்மை நிலையில் இவ்வகை ஆய்வின் அடைவு அல்லது ஆய்வின் தேவை குறித்து அதிக சிரத்தை எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. இதுவரை யாரும் மேற்கொள்ளாத தலைப்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதே இதன் அதிகபட்ச கெடுபிடியாக இருக்கின்றது. அப்படியானால் இவ்வகை ஆய்வின் தேவைதான் என்ன?
இளங்கலைப் பட்டக்கல்வி ஆய்வு நிலை இப்படியாக இருக்கிறதென்றால் தமிழ் இலக்கியத் துறைகளில் முதுகலை ஆய்வு மேற்கொள்பவர்களிடம் ‘எதற்காக இலக்கியத் துறை சார்ந்து ஆய்வு செய்கிறீர்கள்?’ என்று கேட்டால் மிகத் திட்டவட்டமாக சில பதில்கள் கிடைக்கின்றன. குறிப்பாக அவை தங்களது கல்வி, பொருளாதாரம் ஆகிய இரு அம்சங்களை முன்னிலைபடுத்தியிருப்பவையாக இருக்கின்றன. தவிர, தங்களின் அறிவுத் தேடலுக்காகவும் அல்லது துறைசார் அறிவினை மேம்படுத்திக் கொள்வதற்காகவும் சிலர் ஆய்வுகளை மேற்கொள்வது அவ்வப்போது நடக்கும் அதிசயமாக மாறிவிட்டிருக்கின்றது. பல்கலைக்கழகங்களின் பெருக்கம், தமிழ்மொழியில் மேற்கல்வித் தொடர்வதற்கான வாய்ப்புகள், அரசாங்க, தனியார் நிறுவனங்கள் வழங்கும் நிதியுதவி என மேலும் பல்வேறு காரணங்களினாலும் தமிழ் மொழி, இலக்கியம் சார்ந்த ஆய்வுகள் அதிகமாக இந்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வகையில் தமிழாய்வு சூழலில் தோராயமாக 70 விழுக்காட்டு ஆய்வுகள் இலக்கியம் பற்றியதாக இருப்பது இவ்விடம் குறிப்பிடத் தக்கது.
அவ்வகையில் இவ்வாய்வுகள் ஒரே பாணியுடையவாகவும், ஒரே அமைப்பு உடையனவாகவும், ஒன்றை’ போல செய்வன’வாகவும் (நகல் எடுப்பவனவாகவும்), சொற்களின்மீது நடக்கும் அறுவை சிகிச்சையாகவும் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும். புறக்காரணங்கள் பல இருந்தாலும் தற்போதைய கல்வியாளர்களிடம் ஆய்வு மனப்பான்மை பெருகியுள்ளதையும் மறுப்பதற்கில்லை. தொடக்க கால ஆய்வுகளைப் போல் அல்லாமல், மலேசியப் படைப்பாளர்களையும், மலேசிய படைப்புகளையும் ஆய்வுகுட்படுத்தும் போக்கு பரவலாகவே காணப்படுகின்றது. ஆனால் இவ்வாய்வுகளின் அடைவு என்னவாக இருக்கின்றது என்பது கேள்விக்குறியே.
1 comment for “ஆய்வுகள்”