“என்னையடுத்து வேறோரு வாசகனுக்காக சில புத்தகங்களை முன்னமே நான் வாங்கி வைத்திருக்கிறேன்.” – தயாஜி

தயாஜி

தயாஜி

கேள்வி : சிறுகதை, கவிதை, தொடர்கதை என எழுதிக்கொண்டிருந்த நீங்கள், உங்களின் முதல் நூலாகப் பத்திகளின் தொகுப்பை வெளியிடக்காரணம் என்ன?

தயாஜி : மிகச்சரியாக நான் சொல்லவந்ததை எந்த வடிவத்தில் சொல்ல முடியுமோ, என் சக வாசகனுடன் என்னால் சுலபமாக பேச முடியுமோ அந்த வடிவில்தான் என் முதல் நூல் வரவேண்டும் என நினைக்கிறேன். பத்திகள் மூலம் என்னை அடையாளம் காட்ட நான் ஆசைப்படுகிறேன். நம் நாட்டு தமிழ்ச்சூழலில் பத்திகள் எழுதுவது குறைவு. முதன்முதலாக, பத்திகள் தொகுப்பு நூலாக வந்தது ம.நவீன் எழுதிய ‘கடக்க முடியாத காலம்’, அதனைத் தொடர்ந்து யோகியின் ‘துடைக்கப்படாத ரத்தக்கறைகள்’ தொகுப்பைச் சொல்லலாம்.

கேள்வி :  இந்நூல் குறித்து கொஞ்சம் கூறுங்கள்.

தயாஜி : தொடர்ந்து ஐந்தாண்டுகள் வல்லினம் இணைய இதழில் எழுதிய எனது பத்திகளின் தொகுப்புதான் இந்தப் புத்தகம். ஒருவேளை புத்தகத்தில் உள்ளதை இணையத்திலேயே படித்துக் கொள்ளலாம் என நினைத்துக் கொண்டால், அது சாத்தியமில்லை. ஐந்தாண்டுகளில் எழுதிய 60 பத்திகளுக்குள் தேர்ந்தெடுத்ததைச் செறிவு செய்த பிறகே புத்தகமாக்குகிறோம். சில சமயம் நமது கருத்து காலத்தைத் தாண்டி நிற்பதில்லை. எழுதப்பட்ட காலத்தில் சிலாகிக்கப்பட்ட பத்திகள் இப்போது நீர்த்துப் போயுள்ளதைப் பார்க்கையில் அப்போதைக்கான மிகை உணர்ச்சி மட்டுமே அதில் இருந்தததாக உணர்கிறேன். இது தோல்வி என்றாலும் அதனைப் புரிந்து ஏற்றுக்கொள்ளும் மனநிலையில்தான் இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. தேர்ந்தெடுந்த பத்திகளைச் செம்மைப்படுத்த வல்லினம் ஆசிரியர் ம.நவீன் பெரிதும் உதவினார். எழுதுகிறவருக்கு இணையாக அதனை செறிவாக்குகிறவர் உழைக்க வேண்டியுள்ளதை உணர்ந்தேன். ஒரு கருத்தை இன்னும் எவ்வளவு துல்லியமாக்கலாம்; எதனை இக்கருத்துடன் இணைத்தால் எளிமையாகும் என்பது போன்ற விபரங்களை, பத்திகளைச் செறிவாக்கும் போது கற்றுக்கொண்டேன்.

மனிதர்களை எனக்கு அவ்வளவு பிடிக்கும். ஒவ்வொரு மனிதரிடம் பழகுவது எனக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கும். என்னைப் பொருத்தவரை, என்னுடைய உலகம் என் வீட்டு வாசலைத் தாண்டியே இருக்கிறது. அந்த இயல்புடையவன் என்பதால்தான் நான் கலையைத் தேர்ந்தெடுக்கும்படி ஆனது. என் வயது நண்பர்களைவிட, என் வயதுக்கு மீறிய நண்பர்கள்தான் எனது பட்டியலில் அதிகம். பி.எம்.டபள்யு-க்களில் போகின்றவர்களைவிட சாலையோரத்தில் சோர்ந்துபோய் நடந்து போகிறவர்கள்தான் எனக்கு நெருக்கமானவர்களாகத் தெரிந்தார்கள். என்னால் மிகவும் சகஜமாக அவர்களுடன் பழக முடிந்தது. அவர்களுக்காகப் பேசுவதும் அவர்களிடம் பேசுவதும்தான் கலையின் வெளிப்பாடாக இருக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.

ஐந்தாண்டுகள் மின்னல் பண்பலையில் அறிவிப்பாளராகப் பணியாற்றினேன். அப்போது எனது தொடர்புகள் இன்னும்  அதிகமானது. போதைப் பித்தர்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள், சிவப்பு விளக்குப் பெண்கள், கொலைக் குற்றவாளிகள் என சமூகக் கட்டமைப்பால் ஒதுக்கப்பட்டவர்களுடன் உரையாடும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டேன். அவர்களின் வாழ்வு குறித்துப் பதிவு செய்யவே வானொலியில் ’கண்ணாடித்துண்டுகள்’ என்ற நிகழ்ச்சியைத் தயாரித்து ஒலிபரப்பினேன். அதற்காக என்மீது காவல்துறையில் புகார்கூடக் கொடுத்தார்கள். இருப்பினும் சரியான நோக்கமும் தெளிவான விளக்கமும் இருந்ததாலும், வானொலி நிர்வாகத்தின் துணையிருந்ததாலும் அதனைச் சமாளிக்க முடிந்தது. அரசாங்க வானொலிக்கு என சில வரையறைகளும் விதிமுறைகளும் உண்டு. அதற்கேற்றவாறு சிலவற்றைக் குறைத்தும் சிலவற்றைச் சொல்லாமலும் விட்டோம். பின்னர் அதனை எழுதும் சூழலை உருவாக்கி மீண்டும் அந்த அனுபவத்தைப் பெற்று எழுதிய பத்திகள் இந்நூலில் உள்ளன.

நாம் வாழும் சமூகத்தில் இருட்டான பகுதிகளைப் பார்க்காமல் கண்களை மூடிக்கொள்வது போல பாசாங்கு செய்வதால் நிலமை ஒரு போதும் மாறப்போவதில்லை. அதற்கான காரணத்தைக் கண்டறிவதும் அதனோடு விவாதிப்பதும் அதைப் பதிவு செய்வதுமே எழுத்தாளனின் பணி.

கேள்வி :  ஓர் எழுத்தாளராக உங்களுக்கு உவப்பான வடிவம் எது?

தயாஜி : எனக்கு உவப்பான வடிவம் எதுவென்று என்னால் கூறிவிட முடியாது. ஏனெனில் சிறுகதை என நினைத்து எழுத ஆரம்பித்து கவிதையில் முடிந்துள்ளன. கவிதை என நினைத்து ஆரம்பித்தவை சிறுகதையில் முடிந்துள்ளன. நகைச்சுவைத் துணுக்காக நினைத்தவை பத்திகளாக வளர்ந்துள்ளன. இப்படி, வடிவங்களை முன்னமே முடிவு செய்து எழுதும் வழக்கத்தின் மீது எனக்கு நூறு சதவிகிதம் நம்பிக்கை இல்லை. ஏதோ ஒன்றுதான் முன்முடிவுக்கு ஏற்றார்போல அமைகிறது.

கேள்வி : துடிப்பான இளம் எழுத்தாளர்கள் பலர் வல்லினத்தில் இணைந்து பயணிக்கின்றனர். நீங்கள் வல்லினத்துடன் இணைந்து செயல்பட காரணம் என்ன?

தயாஜி : இளம் எழுத்தாளர் பழம் எழுத்தாளர் என்கிற பேதமெல்லாம் வல்லினத்தில் இல்லை. இது ஓர் இயக்கமோ நிறுவனமோ அல்ல; ஒரு குழு அவ்வளவே. அதிலும் வயதை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. அ.பாண்டியன், சந்துரு, சரவண தீர்த்தா, ஸ்ரீதர்ரங்கராஜ் போன்றவர்கள் நடுத்தர வயதுள்ளவர்கள் என்றாலும் அவர்களின் சிந்தனையாற்றல் தற்போதைய இளம் சமூகத்தைவிட துடிப்பாக இருக்கிறது. எழுதுகிறவர்கள் மட்டுமின்றி, மாற்றுச்சிந்தனையின் தேவை உணர்ந்தவர்கள் அனைவருமே வல்லினத்தில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். சமீபத்தில் எண்பது வயதை நெருங்கும் ஒருவர் என்னை அழைத்திருந்தார். அம்மாத வல்லின இணையப் பக்கத்தில் வந்திருக்கும் கட்டுரைகள் நன்றாக இருப்பதைக் குறித்துப் பேசினார். தொடர்ந்து, வல்லினம் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளுக்குத் தவறாது கலந்துகொள்ளப் போவதாகவும் கூறினார். வல்லினம் வயது பேதங்களுக்கு அப்பால் சென்று நாட்களாகிவிட்டது.

என்னிடம் சில கேள்விகளும் சில குழப்பங்களும் இருக்கின்றன. நான் வாழ்ந்துக் கொண்டிருக்கும் சமூகம் எனக்கு ஒரு விதத்தில் அச்சமூட்டுவதாக இருக்கிறது. அதிகாரத்தின் கால்கள் எப்போது வேண்டுமானாலும் சாமான்யனின் தலையை அழுத்தலாம். ஊடகங்கள் நினைத்தால், ஒன்றை சாகும்வரை நம்பவைக்கலாம். பத்திரிகைகள் நடப்புச் சூழலை மறைத்துவிடலாம். இப்படி என்னை சுற்றிலும் நடந்துக் கொண்டிருக்கும் குழப்பங்களுக்குக் கேட்கவேண்டிய கேள்விகளிலிருந்து என் குரல் ஒரு எல்லையைத் தாண்டி செல்லவில்லை. காரணம் என்னமோ எளிமையானதுதான். ஆடையற்றவன் ஊரில் ஆடையணிந்தவன் பைத்தியம். அப்படி, ஒற்றை மனிதனாகக் குரலெழுப்பி, விரக்திக்குட்பட்டு ஊமையானவர்களின் எண்ணிக்கை எனக்கும் நன்றாகவே தெரியும். ‘அட போப்பா நம்ம சொன்னா எவன் கேட்கறான், பட்டாதான் திருந்துவானுங்க நம்ம செத்த பிறகுதான் அன்னிக்கே சொன்னாரேன்னு வருந்துவானுங்க..’ இப்படி நானும் விரக்தியிலேயே மடிந்து போக விரும்பவில்லை. என்னுடைய கேள்விகளுக்கு அறிவு சார்ந்த பதில்கள் போதவில்லை. என் குழப்பங்களுக்கு என் படிப்பறிவில் இருந்தும் என் அனுபவங்களில் இருந்தும் தெளிவு சரியாக அமையவில்லை. குழு என்பதன் பலம் அப்போதுதான் புரிந்தது. வெவ்வேறு துறை சார்த்தவர்கள். வெவ்வேறு அனுபவங்கள் கொண்டவர்கள். அவர்களின் வெவ்வேறான பார்வை. ஆனாலும் அவர்கள் நேர்மையும் மாற்றுசிந்தனையும் என்னை அவர்களுடன் இணைக்க வழிவகுத்தது.

கேள்வி : உங்கள் நூல் தமிழகப் பதிப்பகத்துடன் இணைந்து உருவாகியுள்ளதாக அறிகிறோம். ஏன் இந்த முயற்சி?

தயாஜி : இதுபோன்ற முயற்சிகள் முக்கியமானவை. எத்தனை நாள்தான் தமிழகத்தில் இருந்து இலக்கியங்களை இறக்குமதி மட்டும் செய்வது. ஏற்றுமதிகளைச் செய்ய வேண்டாமா? நம் நாட்டிலும் கலைஞர்கள் இருக்கிறார்கள். இங்கும் படைப்பாளர்கள் இருக்கிறார்கள் என்பதனை நாம்தான் வெளிக்கொணர வேண்டும். ஒரு சமயத்தில் அம்மாவின் கைபிடித்து நடந்த நாம், பின் நமக்கான நடையைக் கண்டறிந்து  நடந்துகாட்டுவது போலத்தான். ஒரு சமயத்தில் நமக்கு தமிழகத்தில் இருந்து இறக்குமதிகள் தேவையாக இருந்தன. இப்போது நாம் நமக்கான நடையைக் கற்றுக்கொண்டு விட்டோம். நாம் நடந்து காட்டவேண்டும். உடனே தமிழகத்தையோ அங்கிருக்கும் படைப்பாளர்களையோ குறைத்துப் பேசுவதாகப் பொருள் கொள்ளக்கூடாது. தமிழகப் பதிப்பகத்துடன் இணைந்து, புத்தகம் வெளியிடப்படுவதால், தமிழகத்தில் இருக்கும் வாசகர்களுக்கும் நமது புத்தகம் சென்று சேர்வதற்கான சூழல் அமைகிறது. இப்பகிர்வு இப்போது அவசியம் எனக் கருதுகிறேன். இந்த இணைவால் வல்லினம் பதிப்பக நூல்கள் அங்கு நடைபெறும் புத்தகக் கண்காட்சிகளிலும் இடம்பெறும். பரந்த வாசகப் பரப்பை அடைவதற்கான வல்லினத்தின் முயற்சி இது.

கேள்வி : தொடர்ந்து எவ்வகையான ஆக்கங்களைத் தர ஆர்வம் கொண்டுள்ளீர்கள்?

தயாஜி : புத்தகம் வெளியீடு செய்வது எனது நீண்ட நாளைய கனவு. காந்தி சொன்னதாகச் சொல்லுவார்கள். இவ்வுலகில் நிலைத்து நிற்க வேண்டுமானால், மூன்று காரியங்களைச் செய்ய வேண்டும். ஒன்று, வீடு கட்டிவைப்பது. இரண்டு, வாரிசுகளை உருவாக்கிவிடுவது. மூன்று, புத்தகம் எழுதுவது. முதல் இரண்டின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை.  அவ்வப்போது செத்துவிடுவோமா என்ற பயம் இருந்தாலும், நான் சாகாமல் இருக்கவே விரும்புகிறேன். அதற்கும் சேர்த்துதான் எழுதுகிறேன். என்னிடம் சொல்லவேண்டிய கதைகள் ஏராளமாக உள்ளன. இம்முறை நாவல் ஒன்றை முயற்சிக்கலாம் என ஆசை உள்ளது. அதனுடன் இங்குள்ள திரைப்படங்களுக்குக் கதை வசனம், பாடல் எழுதுவதும் அவ்வப்போது நடந்து கொண்டிருக்கிறது.

கேள்வி : இன்று உங்கள் வாசிப்பு எவ்வகையில் உள்ளது. அதன் பரிணாமம் குறித்துக் கொஞ்சம் சொல்லுங்கள்?

தயாஜி : ஆச்சர்யமாக உள்ளது. எப்படியெல்லாம் கதைகள் சொல்லப்படுகின்றன. எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள். எதையெல்லாம் சகித்து, சக மனிதனால் மிதிபட்டு வாழவேண்டியுள்ளது என்பதை தெரிந்துக்கொள்ள முதல் படியாக இருப்பது வாசிப்புதான். தொடக்கத்தில் என் தனிமையின் சுவாரஷ்யத்துக்காகப் படிக்கத்தொடங்கியவன் இன்று என் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகவே வாசிப்பை ஏற்றுக்கொண்டேன். நல்ல புத்தகமாக படுவதை உடனே வாங்கி வைத்துவிடுவது பழக்கமாகிவிட்டது. என்னால் வாசித்து முடிக்கமுடியாமல் போகலாம். என்னையடுத்து வேறோரு வாசகனுக்காகவாவது சில புத்தகங்களை முன்னமே நான் வாங்கி வைத்திருக்கிறேன்.

கேள்வி : அறிவிப்பாளர் தயாஜி; எழுத்தாளர் தயாஜி யார் உங்களுக்குப் பிடித்தவர்?

தயாஜி : இன்னும் நினைவு இருக்கிறது. ஒருமுறை இப்படி எழுதியிருந்தேன். ’அறிவிப்பு பணத்திற்கு; எழுத்து மனத்திற்கு’; உடனே விசாரிக்கப்பட்டேன். தொழில் என்பது வேறு. விருப்பம் என்பது வேறு. அறிவிப்புத் துறை எனக்குப் பிடித்தமான துறையாக இருந்தாலும் அப்போதைக்கு எனக்கு வாழ்வாதாரமாக இருந்தது அறிவிப்பு ஒன்றுதான். அதன் மூலம்தான் வருவாய் வந்தது. இப்படி நினைத்துப் பார்க்கிறேன். அறிவிப்பாளர் தயாஜியை எல்லோருக்கும் பிடிக்கும். எழுத்தாளர் தயாஜியை பலருக்கும் பிடிப்பதில்லை. அறிவிப்பாளர் சமூகம் விரும்புவதைப் பேசுபவர். எழுத்தாளர் தான் விரும்புவதைப் பேசுபவர்.

கேள்வி : செயல்பாட்டு ரீதியில் உங்கள் அடுத்தடுத்த முயற்சிகள் என்ன?

தயாஜி :’யாழ்’ பதிப்பகத்தின் மூலம் மாணவ சமூகத்துடனான தொடர்பை ஏற்படுத்தியுள்ளோம். இப்போதைய சூழலில், தமிழ்ப்பள்ளி மாணவர்களிடம் இருந்துதான் எதையும் ஆரம்பிக்க வேண்டியுள்ளது. அவர்கள்தான் நாளை வாசகர்களாக எழுத்தாளர்களாக சிந்தனையாளர்களாக இச்சமூகத்தில் வெளிவரப்போகிறார்கள். அவர்களை கவனிக்கவேண்டும். அவர்களுடன் உரையாட வேண்டும், அவர்களைத் தொடர்ந்து தமிழ்ச்சூழலைப் புரிந்துக்கொள்ள வைக்கவேண்டும். வல்லினத்தின் இணை நிறுவனமாக ‘யாழ் பதிப்பகம்’ தொடங்கப்பட்டுள்ளது. அது வல்லினத்தின், மாணவர்களுக்கான முயற்சி.. அதில் நானும் ஒருவனாக இணைந்து என் பங்குக்குச் செய்யவேண்டியதை செய்வதையே எனது செயல்பாடாக நினைக்கிறேன். மிக விரைவில் அதன் புதிய திட்டங்களை அறிவிப்பேன்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...