“மலாய் இலக்கியத்தின் ஆணி வேரே அரசியல் விழிப்புணர்வுதான்” அ.பாண்டியன்

அ.பாண்டியன்

அ.பாண்டியன்

கேள்வி : உங்களின் இலக்கிய ஆர்வம் எப்போதிருந்து தொடங்கியது?

அ.பாண்டியன் : தனித்து, இலக்கிய ஆர்வம் என்று கூற முடியாது. ஆனால் வாசிக்கும் ஆர்வம் பதின்ம வயதில் துளிர்த்தது. அந்த வயதில் கிடைக்கும் எல்லாவகைக்  கதைகள் கட்டுரைகள்  போன்றவற்றை வாசிக்கத் துவங்கினேன். என்  தந்தை அப்போது திராவிடக் கழக அபிமானியாக இருந்தார். வீட்டில் நிறைய திராவிடக் கழகப் பரப்புரை நூல்களும் பெரியாரின்  பார்ப்பன எதிர்ப்பு நூல்களும் இருக்கும். அதோடு இங்கார்சல், ரூசோ, கார்ல் மார்க்ஸ், போன்ற ஐரோப்பிய மாற்றுச் சிந்தனையாளர்களைப் பற்றிய எளிய நூல்களும் இருந்தன. போதாதற்கு வீட்டில் வாங்கப்படும் வார, மாத, நாளிதழ்கள், போன்றவையோடு அம்புலிமாமா, பொம்மை வீடு போன்ற சிறுவர் கதை நூல்களையும் வாங்குவார். எனக்கும் என் அண்ணனுக்கும் தங்கைக்கும் வாசிக்கப் போதுமான நூல்கள் வீட்டில் இருந்தன. பிறகு மு.வ,  அகிலன், நா.பார்த்தசாரதி, ஜெயகாந்தன், வண்ணநிலவன்,  தி.ஜானகிராமன் என்று எனது இலக்கிய வாசிப்பை நானே மெல்ல விரிவுபடுத்திக் கொண்டேன்.

கேள்வி : புனைவுகள் அல்புனைவுகள் இவை இரண்டில் உங்களுக்கு நெருக்கமான வடிவம் எது?

அ.பாண்டியன் : புனைவுகள்தான். நான் முதலில் எழுதியது சில கவிதைகள்தான். அதன் பின் சிறுகதைகள். ஆனால் கட்டுரைகள் எழுதுவது என்பது இன்றைய நிலையில் தவிர்க்க முடியாத செயல்பாடாகி விட்டது. ஆனால் அவற்றிலும் இலக்கியம் சார்ந்த கட்டுரைகளைத்தான் அதிகம் எழுதுகிறேன். இலக்கிய விமர்சனக் கட்டுரைகள்  அதிகம் எழுதியிருப்பேன் என்று நினைக்கிறேன்.

கேள்வி : மலாய் இலக்கியத்தில் உங்களுக்கு ஆர்வம் ஏற்படக் காரணம் என்ன?

அ.பாண்டியன் : வாசிப்புப் பழக்கம் தந்த உந்துதல்தான். நான் நான்காம், ஐந்தாம் படிவம் படிக்கும்போது மேலிட்ட இலக்கிய  ஆர்வம் காரணமாக நான் என் வாசிப்பைப் பெரிய அளவில் விரிவுபடுத்தத் தொடங்கினேன். அப்போது உலக இலக்கியங்களைத் தமிழில் வாசிப்பது சிரமமான வேலை. காரணம் இணைய வசதிகள் அற்ற காலம் அது. ஆகவே எனக்கு மலாய்  மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட  ஐரோப்பிய, தென் அமெரிக்க, ஜப்பானிய நூல்கள் பொது நூலகங்களில் கிடைத்தன. அவற்றோடு, தீவிர  கலை இலக்கிய சிந்தனைகளை ஓரளவு தொட்டுப்பேசும் டேவான் புடாயா, டேவான் சாஸ்தெரா போன்ற  மலாய் இதழ்களும் பல திறப்புகளைக் கொடுத்தன. அதன் வழியே மலாய் இலக்கியங்களை, குறிப்பாக சிறுகதைகளையும் நாவல்களையும் வாசிக்கத் துவங்கினேன்.

கேள்வி : தமிழக இலக்கியத்தின் வீச்சோடு மலாய் இலக்கியத்தை ஒப்பிட இயலுமா?

அ.பாண்டியன் : அது இயலாது என்றே கருதுகிறேன். மலாய் சமூகம் எதிர்கொள்ளும்  சமூக பிரச்சனைகளுக்கும் தமிழக மக்களின் சமூகப் பிரச்சனைகளுக்கும் அதிக வேறுபாடு உள்ளது. பொருளாதார  ஏற்றத்தாழ்வு இரண்டு நிலைகளிலும் ஒத்து இருந்தாலும் அரசியல், சமய அணுகு முறைகள் முற்றிலும் வேறுபடுகின்றன. சமய சார்பான கருத்துகளைத்தான் மலாய் இலக்கியம் அதிகம் உள்வாங்கி உள்ளது. ஆனால் தமிழகத்தின் நிலை சமய கருத்துகளையும் முரண்களையும் பொதுவில் பேச அனுமதிக்கிறது.

கேள்வி : வல்லினத்திலும் பறையிலும் உங்களின் விரிவான ஆய்வுக்கட்டுரைகள் வந்துள்ளன. பொதுப் புத்திக்கு எதிரானவை குறித்து உங்களை எழுதத் தூண்டியது எது?

அ.பாண்டியன் : பொதுப் புத்திக்கு எதிரானது என்று பிரித்து சிந்திக்க முடியாது. எனது அறிவிற்கும் அனுபவத்திற்கும் சரியானது அல்லது உண்மையான நிலை என்று கருதுவன பற்றி மேலும் மேலும் சிந்தித்தும் வாசித்தும் ஒரு முடிவிற்கு வர வேண்டியுள்ளது. அதையே கட்டுரையாக எழுதுகிறேன்.  அண்மையில் எழுதிய தமிழ் தேசியம் குறித்த எனது பார்வையும் அவ்வாறுதான் அமைகிறது. திராவிடக் கருத்தியல் மலேசியத் தமிழர்களிடையே வேர்பிடிக்க முடியாது தோல்வி கண்டுவிட்ட நிலையில்,  அதற்கான எதிர்ப்பு அரசியலாக ‘தமிழ் தேசியத்தை ‘ பரப்பும் சிலரின் முயற்சி எனக்கு வியப்பாக இருந்ததால் அது பற்றிய எனது கருத்துகளை விரிவாக எழுதினேன்.

கேள்வி : வல்லினத்தோடு உங்கள் செயல்பாடு எவ்வாறானது?

அ.பாண்டியன் : உண்மையில் நான்  ஒரு சோம்பேறி. எதை எதையோ எழுதத் திட்டமிட்டு, பின் என் மெத்தனப் போக்கினால் எதையும் உருப்படியாகச் செய்யாமல் காலம் தள்ளிக் கொண்டிருப்பேன். ஆனால் வல்லினம் என்னும் துடிப்பான இலக்கிய ஆர்வம் மிக்க நண்பர்களுடன் இருக்கும்போது என் சமாளிப்புகள் செல்லுபடியாவதில்லை. என்னைத் தொடர்ந்து துரத்தி எழுத வைத்து விடுகிறார்கள். ஆகவே  வல்லினம் எனக்கு உந்துதலாகவும் நான் தொடர்ந்து எழுத, ஊக்கியாகவும் இருக்கிறது.

கேள்வி : மலாய் இலக்கியவாதிகளில் தாங்கள் யாரை முக்கியமாக கருதுகின்றீர்கள்?

அ.பாண்டியன் : பலர் இருக்கிறார்கள். எனக்கு ஷாஹானூம் அஹ்மாட், ஏ. சாமாட் சைட், மற்றும் ஓஸ்மான் கிளாந்தான் போன்றவர்களைப் பிடிக்கும்.

கேள்வி : மலாய் இலக்கியவாதிகளின் அரசியல் விழிப்புணர்வு எவ்வகையானது?

அ.பாண்டியன் : மலாய் இலக்கியத்தின் ஆணி வேரே அரசியல் விழிப்புணர்வுதான். ஆங்கில ஆட்சிக்காலத்தில் பாக் சாக்கோ போன்றவர்கள் பிரிட்டீஷாரை எதிர்ப்பதற்கென்றே  இலக்கியம் படைத்தவர்கள். தொடர்ந்து  ஜப்பானிய ஆட்சி, கம்பூனிஸ்ட் பயங்கரவாதம் போன்ற பல்வேறு அரசியல் நெருக்குதல்களை மலாய் இலக்கியவாதிகள்  மிக வெளிப்படையாகத் தொட்டுப் பேசியுள்ளனர்.  சுதந்திரத்திற்குப் பின்பான நிலையில் நாட்டு முன்னேற்றம், தேசிய ஒருமைப்பாடு போன்ற நிலைகளில் அதிகம் கவனம் செலுத்தியுள்ளனர். ஷாஹானூன் போன்ற படைப்பாளர்கள்  அரசியல் விமர்சன நாவல்களை எழுதிப் பெரும் சர்ச்சைகளில் சிக்கியுள்ளனர். ஆயினும் ஆட்சியாளர்களைத் துதிபாடுவதும் அரசியலில், குறுகிய பார்வையோடு தேசிய ஜனநாயக அரசியலை நோக்குவதும் அல்லது இஸ்லாமிய அரசாக ஒன்றைக் கற்பனை செய்து அதை இங்கு ஆதரிப்பதும் சில இலக்கியவாதிகளுக்கு மிகவும் பிடித்தமான இலக்கியப் பணியாக இருக்கிறது.

கேள்வி : உங்களின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கூறுங்கள்?

அ.பாண்டியன் : ஒரு சிறுகதைத் தொகுப்பும்  பின்னர் ஒரு நாவலும் வெளியிடும் எண்ணம் உள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...