சரவணதீர்த்தா: தொடக்கத்தில் வெகுஜன இலக்கிய ரசனை கொண்ட உங்களுக்கு, தீவிர இலக்கியம் குறித்த ஆர்வம் எவ்வாறு தொடங்கியது?
விஜயலட்சுமி: எனக்கு எப்போதுமே அதன் பேதம் புரிந்ததில்லை. எனது வாசிப்பும் பொதுவாக ஆய்வுகள் தொடர்பானதுதான். வல்லினம் நண்பர்கள் மூலமாகவே வெகுஜன மற்றும் தீவிர இலக்கியத்தின் பேதம் புரிந்தது. ‘கடக்க முடியாத காலம்’ எனும் ம.நவீனின் நூல் மூலமாக எதை வாசிக்கலாம் என்ற அடிப்படை அறிமுகம் கிடைத்தது.
சரவணதீர்த்தா: தாங்கள் எழுதியுள்ள நூல் குறித்தும் அதன் தனித்தன்மை குறித்தும் கூறுங்கள்?
விஜயலட்சுமி : பொதுவாக நம்மிடம் ஆவணப்படுத்துதல் குறித்து இருக்கும் மெத்தனப் போக்கானது அறிவுத்துறை சார்ந்த உருவாக்கங்களைப் பாதுகாப்பதிலும், பொதுப் பயன்பாட்டுக்குக் கொண்டு செல்வதிலும்கூட விரவி இருப்பது குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் இந்நூல் பதிப்புச் சட்டங்கள், படைப்பாளர்களின் உரிமைகள், படைப்புகளைப் பொதுப் பயன்பாட்டுக்குப் பகிர்தல் என, பல அம்சங்களை விரிவாகப் பேசுகிறது.
சரவணதீர்த்தா : இந்நூல் சமூகத்தில் எந்தத் தரப்புக்குப் பயன்படும் என நினைக்கிறீர்கள்?
விஜயலட்சுமி : இந்நூல் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள், பல்கலைக் கழக மாணவர்கள் என ஆய்வுத்துறையில் இயங்குபவர்கள், நூலாசிரியர்கள், பதிப்புத் துறையைச் சார்ந்தவர்கள் ஆகியோர்களுக்காக எழுதப்பட்டது. இந்நூலில் உள்ள அனைத்து அம்சங்களும் இத்துறை சார்ந்தவர்கள் நிச்சயம் கேள்விப்பட்டவையாகத்தான் இருக்கும். ஆனால் அது குறித்து முழுமையான அல்லது தேவையான விபரங்களை அனைவரும் அறிந்து வைத்துள்ளனரா என்பது கேள்விக்குறியே. படைப்புத் துறை, பதிப்புத் துறைகளில் இயங்குபவர்களுக்கும் கூட இந்நூல் நிச்சயம் வழிகாட்டியாக இருக்கும்.
சரவணதீர்த்தா : பதிப்புரிமை ISBN போன்ற விடயங்களில் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்கு எவ்வகையான விழிப்புணர்வு உள்ளது?
விஜயலட்சுமி : மிக நீண்டகாலமாக எழுதிவரும் எழுத்தாளர்களுக்குக்கூடப் பெருமளவு ISBN குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றது. ISBN என்பதை வெறும் பதிவு எண்களாக மட்டும் கருதும் போக்கும், அதனை எடுப்பது சிரமமானதாகவும், எவ்வகையிலும் லாபமற்றதாகவும் கருதும் போக்கு இருப்பதைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இது பல நேரங்களில் பதிப்பகத்தினரின் அறியாமையாகவும் இருப்பதுதான் ஆச்சரியத்துக்குரியது. ISBN போலவே copyright மற்றும் royalty குறித்த புரிதல்களும்கூடத் தமிழ் எழுத்தாளர்களிடம் குறைவாக இருப்பதைக் குறிப்பிட வேண்டும். ஆக, இவற்றின் தேவை குறித்து விரிவாகவே இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது.
சரவணதீர்த்தா : புனைவு எழுத்தில் உங்கள் நாட்டம் எத்தகையது?
விஜயலட்சுமி : புனைவுகளை வாசிப்பதோடு என் நாட்டம் நிறைவடைவதில்லை. புனைவு குறித்தான விமர்சனங்கள், விவாதங்கள் ஆகியவற்றில் மிக ஆர்வத்துடன் ஈடுபடுகிறேன்.
சரவணதீர்த்தா : நூலகராக நீங்கள் காணும் மலேசிய நூல்கள் மற்றும் இதழ்களில் உள்ள தேக்கம் குறித்துக் கூறுங்கள்?
விஜயலட்சுமி : மலேசியாவில் வெளியிடப்படும் பெரும்பாலான நூல்கள் தொடர்ந்து ஒரே வகை சார்ந்தவையாக இருப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, கவிதைகள், சிறுகதைகள் போன்ற புனைவுகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் கடும் உழைப்பைக் கோரும் ஆய்வுகளுக்கு வழங்கப்படுவதில்லை. விரிவான சமகால மலேசிய வாழ்வைச் சொல்லும் நாவல்களும் குறைவாக இருப்பதைக் காணலாம். சீனர்கள் போல உடனடியான சமூகச் சிக்கல் குறித்த எதிர்வினைகள், புனைவாகவோ அல்புனைவாகவோ இங்கு நூலாவதில்லை. இதழியல் துறையில் தமிழகப் பாணியைப் பேணுவதும், காப்பியடிப்பதுமாக மலேசிய இதழ்கள் மலேசியத் தன்மையற்று நிற்பது கவனிக்க வேண்டியது. மேலும், மாணவர்களுக்கான இதழ்கள் மற்றும் ஆய்விதழ் முயற்சிகளும் இந்நாட்டில் தேக்கமடைந்தே இருக்கிறது. இருக்கும் ஓரிரு மாணவர் இதழ்களும் பதிப்புரிமைச் சட்டத்தைப்பற்றித் துளியும் கவலையில்லாமல் தமிழகத்து நூல்களிலிருந்து காப்பியடிக்கின்றன. அவ்வகையில், கடந்த ஆண்டு தொடங்கி பலதுறை சார்ந்த தலைப்புகளில் பறை ஆய்விதழும் யாழ் மாணவர் இதழும் மலேசியச் சூழலில் பலரது கவனத்தை ஈர்த்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சரவணதீர்த்தா : வல்லினத்தில் உங்கள் ஈடுபாடு எத்தகையது?
விஜயலட்சுமி : வல்லினத்தின் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருந்து வருகிறேன். வல்லினம் புனைவு, அல்புனைவு, ஆய்விதழ், மாற்றுக்கல்வி முறை என, தனது வெளியைக் காலத்தின் தேவைக்கேற்ப நீட்டித்துக் கொண்டிருப்பதால் சேர்ந்தியங்குவது உற்சாகமூட்டுவதாக உள்ளது.
சரவணதீர்த்தா : உங்களின் இந்நூல் எவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்தும் என நம்புகிறீர்கள்?
விஜயலட்சுமி : பதிப்புத் துறை, ஆய்வுத் துறை சார்ந்த ஆக்கங்கள் முறையாக உருவாவது, பேணப்படுவது, பரப்பப்படுவது குறித்த ஓரளவு தெளிவையும் தேடலையும் இந்நூல் உருவாக்குமென நம்புகிறேன்.
சரவணதீர்த்தா : நூலகர், யாழ் நிறுவனத்தின் நிர்வாகி, எழுத்தாளர் என உங்கள் ஆளுமை விரிவாகி வருகிறது. உங்கள் அடுத்தடுத்த திட்டங்கள் என்ன?
விஜயலட்சுமி : வல்லினத்துடன் இணைந்து ஆவண மையத்தை உருவாக்கும் எண்ணம் உள்ளது. அதில் மலேசிய, சிங்கப்பூர் நூல்களையும் இன்ன பிற ஆவணங்களையும் சேகரிக்கும் எண்ணம் உண்டு.
மிக அருமையான கலந்துரையாடல் பேட்டி வாயிலாக.. நூல் வைத்திருப்பவர்கள் அதன் பயன்பாட்டை உணர்ந்து ஆசிரியர் குறிப்பிட்டு அழுத்தம் தந்துள்ளவைகளை நினைவில் கொள்ளலாம்.