இலக்கிய வடிவங்களில் மிக அடர்த்தியான கவித்துவமும் அழகியலும் படிமங்களும் கொண்டது கவிதை. அதிர்ஷ்டவசமாகவோ அல்லது துரதிர்ஷ்டவசமாகவோ அதன் வாசகப் பரப்பு மிகச்சிறிய எண்ணிக்கையிலானது. ஏன் இந்த முரண்? ஏனெனில் கவிதை அகவயப் பொருள். மௌனத்தின் மொழி. அது அவன் காயத்தை ஆற்றும் மருந்து. அவன் காதலை அவனே திரும்பச் சொல்லிக்கொள்ளும் பரவசப் பதிவு. அவன் ஆற்றாமையை ஆற்றுப்படுத்தும் உளவியல். அவனே அதற்கு வாசகன். எனவே சராசரி வாசகனால் படைப்பாளனின் அந்தரங்க வாழ்க்கைக்குள் நுழைய முடியாது. அது இருண்மை வடிவத்தில் இருப்பதாக விலகிக்கொள்கிறான். எனவே வாசகர் தரிசனம் பிற இலக்கிய வடிவங்களுக்குக் கிடைப்பதுபோல நவீன கவிதைகளுக்குக் கிடைப்பதில்லை.
சிவா பெரியண்ணன் இதற்கு விதி விலக்கல்ல. வாசக வெளிக்கு வராமல் அவருடைய பல கவிதைகள் அவருடைய டைரியில் உயிர்ப்போடு இயங்கிக் கொண்டிருக்கலாம் என்பதை நான் வாசித்த கவிதைகளிலிருந்த நுண்ணுணர்விலிருந்து உத்தேசித்துக் கொள்கிறேன்.
சிவாவின் அங்கதம் சற்றுக் கூர்மையானது. அவருடைய இனவாத அரசியல் பேசும் கவிதைகளில் அது மேலோங்கித் தொனிக்கிறது. பதினெட்டாம் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் மேற்கத்திய நாடுகளில் சமூக, தனிமனித விடுதலை ஏக்கம் வந்தபிறகு நவீன இலக்கியம் பிறக்கிறது. நவீனத்துவத்துக்கு இன்னொரு பொருள் பகுத்தறிவு. மரபிலிருந்தும், மதத்திலிருந்தும் தன்னை விடுவித்துக்கொண்ட ஒரு தவளைத் தாவல் நவீனத்துவம், அது அதிகாரத்தை நோக்கியும் கலகம் செய்கிறது. அதனை அடியொற்றி நவீன கவிஞர்கள் நவீன சிந்தனையை ஆயுதமாக ஏந்துகிறார்கள். சிவாவிடமும் அந்தச் சீற்றம் இருப்பதில் வியப்பேதும் இல்லை. எல்லா வகையிலும் பின்தங்கிக் கிடப்பதற்குக் காரணமாக இருந்த நடப்பு அரசை நோக்கிப் பாய்கிறது அவர் கவிதைகள். பிற இனத்தின் பொருளாதார சமூகவியல் முன்னேற்றம், தான் சார்ந்த சமூகத்துக்கும் வாய்க்காதது குறித்த கோபத்தை அவர் தன் கவிதைகளில் நிறுவுகிறார்.
என்னை நாயென்று கூப்பிடுங்கள்
வருத்தப்படமாட்டேன்
கடிக்கமாட்டேன்
தெரு நாய் என்று மட்டும் சொல்லாதீர்கள்.
‘என்னை நாயென்று கூப்பிடுங்கள்’ என்ற முதல் கவிதையின் முத்தாய்ப்பு வரி இது.
நம்மிடையே உயர் சாதி நாய்கள் இருக்கின்றன. நாம் அவற்றைத் தேர்வு செய்து நம்மைப் பிரதிநிதிக்க நாற்காலி செய்து தருகிறோம். அவற்றுக்கு எலும்புத் துண்டுகள் போட்டால் எஜமானனுக்கு வாலாட்டிச் சேவகம் செய்யுமே தவிர சமூக முன்னேற்றத்துக்கான குரைத்தல் அவற்றிடமிருந்து கேட்காது. இதில் மிகக்கவனமாக ஒரு கேலிப்பொருளை செருகி விட்டிருக்கிறார். உயர் சாதி நாய்களும் நாயினம் தானே! உங்கள் எஜமானர்களுக்கு நீங்களும் நாய்தான் என்ற செய்திதான் அது.
‘இடைத்தேர்தல்’ கவிதையின் இறுதி மூன்று திட்டங்கள் அசாத்திய அங்கதம் கொண்டவை.
நாம் வாழும் தொகுதியில் உள்ள குறைகள் நீக்கப்பட வேண்டுமானால் அவர் கொடுத்துள்ள மூன்று திட்டங்கள் நடைபெறவேண்டும்.
உயிர் பிரிதலுக்கான வேண்டுதல்கள் முன்வைக்கலாம்
கோயில்களில் மசூதிகளில் தேவாலயங்களில்
ஏதாவதொரு தெய்வம் தூங்காதிருக்கவேண்டும்
பொதுதேர்தலின் வழி நம் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறோம். ஆனால் அப்பிரதிநிதிகளால் நம் குறைகள் தீர்க்கப்படுவதில்லை என்பது காலங்காலமாய் நிரூபணமான ஒன்று. ஆதலால் சிவா இடைத்தேர்தல் வேண்டுமென்கிறார். அதற்கான சிவாவின் வேண்டுதல்கள்தான் மேலுள்ள வரிகள். இதில் ஏதாவதொரு தெய்வம் தூங்காதிருக்கவேண்டும் என்பதில் உள்ள அங்கதம் நீட்சேவின் புகழ்பெற்ற வரிகளை நினைவுபடுத்துகிறது .’கடவுள் இறந்துவிட்டார்” என்ற வரிதான் அது. கடவுள் தூங்காதிருந்தாலும் நல்லது; ஒன்றும் நடந்துவிடப் போவதில்லைதான்.
எனவே அடுத்த ஆலோசனை ஒன்றைக் கூறுகிறார்.
இரண்டு,
நம்மில் ஒருவனைத் தேர்வு செய்து
கோட்சே வாக்கி விடலாம்
துப்பாக்கிதான் என்றில்லை.
கோட்சே என்ற வார்த்தைப் பிரயோகமே போதுமான குறியீட்டுப் பொருளைக் கொடுக்கிறது. துப்பாக்கிதான் என்றில்லை என்ற வரி கோட்சே என்ற சொல்லின் பொருளுக்கு வலிந்து அர்த்தம் கூறுவதாக உள்ளது. வாசகனின் பங்களிப்புக்கு இவ்வரி பங்கம் விளைவிக்கிறது. சொல்லப்படாதவற்றிலிருந்துதான் கவிதைப் பொருள் விரிகிறதல்லவா?
நம் தேவையை நிறைவு செய்யாத, பொருட்படுத்தாத பிரதிநிதி எதற்கு? சாகட்டும்.
முதலாவது சுலபமானது
நீங்கள் காத்திருக்கத் தயாராக இருந்தால்
இரண்டாவது கொஞ்சம் கடினம்
ஆனால் உடனடி தெய்வம் கண் திறக்கும்.
பிரதிநிதி செத்தொழிந்தால் இடைத்தேர்தல் வரும். இடைத்தேர்தலில் அட்சய பாத்திரம் மாதிரி. குறைவில்லாது கொடுக்கும். எனவே இடைத்தேர்தல் குறைந்த காலகட்டத்தில் சமூக மேம்பாட்டுக்கு நிறைவாகச் செய்யும். எனவே செத்தொழிவது ஒன்றே மக்கள் நலச் சாத்தியங்களை உண்டாக்கும்.
அரசியல் நையாண்டி சார்ந்த கவிதைகளில் நான் மிகவும் நேசித்தது இன்னும் ஒன்றுண்டு,
ஆள்காட்டிவிரல் நிமிர்த்தி
நாம் ஒன்று என்கிறோம்
வேறு வேறாக இருப்பினும்
நடுவிரலையும் உபயோகிக்கலாம்
விரல் ஒன்றுதான்.
நடுவிரலைக் காட்டுவதென்பது மிகக்கூர்மையான விமர்சனம். நீட்டப்பட்ட இரண்டு விரலுமே ஒன்று என்ற சொல்லைக் குறிப்பிடவில்லை. நடுவிரல் கொச்சையான பொருளைக் கொடுக்கின்றது. ‘ஒரே மலேசியா’ கொள்கையில் வார்த்தை அலங்காரமாக மட்டும் பயன்படுத்தி ஏன் பாசாங்கு செய்கிறாய். பொய் சொல்கிறாய். அதற்கு நடுவிரல் காட்டிவிட்டுப் போ. திட்டங்களில் என்னதான் புதுமையைக் கொண்டுவந்தாலும் அவை வெறும் கண்துடைப்பு மட்டுமே. கொள்கையை வார்த்தையளவில் வைத்துக் கொண்டு, கொடுப்பதில் மட்டும் குறைபாடு காட்டும் அரசை நோக்கிய அறச்சீற்றம் இது. எல்லாவகையிலும் ஓரங்கட்டப்பட்டு விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட சமூகத்தின் எதிர் அரசியல் குரலாகப் பதிவாகிறது மேற்சொன்ன கவிதைகள்.
‘வீடு திரும்புதல்’ கவிதையில் நம் இனத்தை பொதுவுடமைச் சிந்தனையாளர்கள் என்ற வரியை நேசித்தேன். காலங்காலமாய் நமக்கு கைவிரிக்கப்பட்டே வந்திருக்கிறது. பிற இனத்தின் முன்னேற்றத்தை ஒப்பீட்டளவில் நோக்கும்போது நாம் அதலபாதாளத்தில் இருக்கிறோம். பெருநாட்காலங்களில் வீடும் நிலமும் சொந்தமாக உள்ளவர்களுக்கு வீடு திரும்புதலில் மகிழ்ச்சி இருக்கிறது. ஆனால் நாம் வாழ்ந்த தோட்டமும் வீடும் நமக்குச் சொந்தமானதல்ல. நாம் நம்மைப் பொதுவுடமைச் சமூகம் என்று சொல்லிக்கொண்டால் அடிப்படை வசதியில் நாம் திருப்தி அடைந்து விடலாம் என்ற அங்கத்ததை அவர் கையாள்கிறார்.
அதற்கு வீடு திரும்புதல் என்ற கருப்பொருள், நம் பொருளாதாரப் பின்னடைவை மிகக் குறுகிய பாடுபொருளில் பொருத்திப் பார்ப்பதாகத் தெரிகிறது.
சிவா பெரியண்ணின் கவிதைகள் நான் வாசிக்கப் போகிறேன் என்ற முன் அபிப்பிராயதோடு உள்ளே நுழைவது சற்று அபத்தமான அனுபத்தை கொடுத்தது. அவர் கொடுத்த தலைப்புகள், அதன் உள் விவகாரம் எல்லாமே பெண்ணின் அகமன வெளிப்பாடாக இருக்கவே ,யாருடைய நூலைப் படித்துக்கொண்டிருக்கிறேன் என்று சந்தேகம் எழுந்தது, மீண்டும் நூலின் அட்டைக்குத் திரும்புகிறேன். ரேணுகா என்ற படைப்பாளினியாக, அவர் நிறம் மாறியிருப்பதை பிரக்ஞைப்படுத்திக் கொண்ட பிறகு, கவிதைகள் என்னை அசைக்கத் துவங்கின, ஒரு ஆண் தன்னைப் பெண்ணாகப் பாவித்துக்கொண்டு எழுதுவது எளிதல்ல. சறுக்கும் நீர்வீழ்ச்சியில் எதிர்கொண்டு ஏறுவதற்குச் சமமானது. ஆனாலும் வாழ்நாளில் பாதி அம்மா, தங்கை, அத்தையோடும், பிற்பாதி காதலியோடும், மனைவியோடும் கழித்த அனுபவம் மட்டுமே பெண்ணை உள்வாங்கிவிட்ட முழுமை கிடைத்து விடாது. பெண்ணாகவே இருந்து பெண்ணின் அக புற உலகை அவதானித்தால் மட்டுமே அதன் உட்சிக்கல்களை, உடற் சிக்கல்களை நிறைவாய் எழுதமுடியும். சிவா அதிலிருந்து சற்று விலகி பாதுகாப்பான நிலையிலிருந்தே பெண்ணியம் பேசுகிறார். ஆனால் ஓர் ஆண், பெண் குரலில் பேசும்போது, இயல்பான ஆண் குரல் இடைவெட்டி நுழைவது போல, ஆணின் குரலும் சில கவிதைகளில் உரத்து ஒலிப்பதைக் கேட்க முடிகிறது. அப்போது அவர் போட்ட பெண்வேடம் கலைந்தும் போகிறது. இதிலிருந்து ஒரு தெளிவை நான் அடைகிறேன். கவிதையில் சொல்லவரும் பிரச்னையைவிட, சொல்லப்படும் விதம் கவிதை வடிவத்தில் எவ்வளவு செறிவாக நிகழ்த்தப்படுகிறது என்பதே முக்கியம் என்பதை.
‘சிவப்பில் பயணிப்பவள்’ என்ற கவிதையில் சாலை சமிக்ஞை விளக்கின் சமிக்ஞைகளை மரபான பெண்ணின் குறியீடாகப் பயன்படுத்துகிறார். பெருவிரல் நீட்டிக் கட்டளையிடும் அதிகாரத்தின் குரலாக அதை உருவகப்படுத்திப் பார்க்கிறார். சிவப்பும் மஞ்சளும் பச்சையும் குறிக்கும் நில்! கவனி! போ! எனும் கட்டளைக்கு அடிபணிய மாட்டேன். என் மனமிடும் கட்டளைக்கு மட்டுமே நான் செயல்படுவேன். அதுவே எனக்கு உவப்பானது. அதுவே நான் கோரும் விடுதலை. எனக்கான சமிக்ஞை வண்ணத்தை நானே நிர்ணயித்துக் கொள்வேன், நீங்கள் போட்ட சிவப்புக் கோட்டைத் தாண்டிச்செல்வேன் என்ற கலகக்குரல் பெண்ணிய விடுதலையை அழுத்தமாக முன்வைக்கிறது.
‘சிலரோடு என் தனிமைகள்’ என்ற கவிதையைப் பலமுறைப் படித்தும் புரியாமல் அவரைக் கேட்டேன். இது என் அகமன உளைச்சல். யாருக்கும் புரியாது என்றார். என் கண் முன்னால் நடந்த நண்பர்களின் கோர விபத்து மரணங்களை அச்சுபிசகாமல் என் உள்மனம் பதிவு செய்து வைத்துக்கொண்டது. நான் தனிமையில் இருக்கும்போது வண்டு குடைவதுபோல குடைந்து அல்லலுறச் செய்கிறது என்றார். அதனை வடிகாலுக்காக எழுதப்பட்டது என்று எடுத்துக்கொண்டேன். படைப்பிலக்கிய வகைகளில் கவிதைக்கு மட்டும் தனித்தன்மை உண்டு. அது படைப்பாளனின் அகமாகவே உள்ளது. அக்கவிஞனை அது தனிப்பட்ட முறையில் அறிய முயலுகிறது. அதனால்தான் நவீன கவிதைகளில் கவிஞனின் வாக்குமூலம் என்ன என்று தேடித் தொலையக்கூடாது என்கிறார்கள். எனக்குத் தெரிந்து நிறையக் கவிஞர்கள் கவிதைகளை எழுதி தனக்கே தனக்கென பத்திரப்படுத்தி வைத்துக்கொள்வார்கள். அவர்கள் அகத்தோடு அவை பேச உதவும் என்பதற்காக. அது ஆற்றுப்படுத்தும் மருந்தாக இருப்பதற்காக. பிரம்மராஜன் சொல்வார் ‘மௌனத்திற்கும் பேச்சிற்கும், பேசப்பட முடியாதவற்றுக்கும் இடையில் ஊடாடுவது கவிதை’ என்று.
மூன்று முகங்களில் வளியற்ற வெளிகளில்
மீண்டும் மீண்டும்
கரைந்து கொண்டேயிருக்கின்றன
என் தனிமைகள்
என முடியும் அக்கவிதைகள் மூவரின் ரத்த வாடை நாசி புகும் உணர்வு ஏற்படுத்துகிறது.
அனைத்தும் பொருந்திய
முழுமையான பெண் என்கிறீர்கள்
உங்களிடம் சொல்ல பதில் இல்லை
கேள்வியொன்று இருக்கிறது என்னிடம்
யிங் யாங் தெரியுமா உங்களுக்கு
பாதியாய் இருக்கிறேன் முழு நான்
எங்ஙனம் பொருந்துவது முழுமைப் பெண்ணோடு
உங்கள் முழுமைப் பெண்ணொடு
என்னை நானே உணர்வதெதுவோ
என் மீதியையும் கோருகிறது
கண் முன்னே தொலைந்திருக்கிறாள்
என் பாதிப்பெண்
இவள் நீங்கள் எதிர்பார்க்கும் எல்லாப் பண்பிலும் முழுமையானவள் என்று கூறி ஒரு பெண்ணை ஆணிடம் பரிந்துரைக்கிறார்கள். யிங் யாங்ஙின் தத்துவப்படி ஒரு மனிதன் பாதியளவுதான் நிறைந்திருக்கிறான். அவன் முழுமையடைய இன்னொரு பாதி அவனுக்கு வெளியே இருக்கிறது. இதன் காரணத்தால் ஒரு முழுமையான பெண் இவள் என்பது சாத்தியமில்லை. அவர் நிராகரிக்கிறார்.
சிவா எழுதிய முன்னுரையில் நான் கவிஞனல்ல ஆனால் நல்ல காதலன் என்கிறார். ஆனால் என்றைக்குமே நல்ல காதலனாக இருந்ததில்லை. நல்ல காதல் கைகூடி காதலி மனைவியாகி விடுகின்றாள். என் காதலிகள் இன்னும் காதலிகளாகவே இருக்கின்றார்கள்.
எல்லாக் காதலர்களும் காதலிக்கும் தருணத்தில் கவிஞர்களாக வாழ்ந்திருக்கிறார்கள். காதல் பரவச நிலையில் கவிதை வரவில்லையென்றால் அது காதல் அல்ல! சிவாவின் தத்துவத்துக்கு முரணானது இது. நல்ல காதல் கைகூடி மனைவியாவது துரதிர்ஷ்டம்தான். காதல் மனைவியை/ காதல் கணவனைக் காதலிப்பது அரிதாகிவிடுவது வாழ்வின் நிஜம். அவர் காதலிகள் இன்னும் காதலிகளாகவே இருக்கிறார்கள் என்ற அவரின் ஒப்புதல் வாக்குமூலத்தை நிறுவும் கவிதை சிலவும் இதில் இருக்கின்றன.
நிகழ்த்தொடர், மௌனத்தை மொழிபெயர்ப்பவள், மௌனம் தின்னும் பொழுதுகள், நேற்றிருந்தவள், கரைதலும் பறத்தலும், நேற்றில் வாழ்பவள், மோனத்தவம், இழந்த காதல் போன்ற கவிதைகள் சிவா காதலிகளோடு வாழும் தருணங்களைக் கட்டியம் கூறுகின்றன.
சம்பிரதாயமான
நலம் விசாரிப்புக்குப் பிறகு
செவியறியா மொழியை
கண்களால் உதிர்த்துவிட்டுப் போனாய்
இங்கங்கெனாதபடி
உடலுயிர் ஆன்மாவை
வியாபித்துக் கொண்டது
உன் திரு மௌனம்
……………….
……………….
மொழி பெயர்த்துக் கொண்டிருக்கிறேன் உன் மௌனத்தை.
ஒரு காதலியல்ல, பல காதலிகள் இருப்பது கவிதையின் வளர்ச்சிக்கு நல்லது. சிவாவின் காதல் தோல்விக் கவிதைகளில் கனமான சோகம் வழிந்தோடுகிறது. முன்னாள் காதலியை எதிர்ப்பாராமல் சந்தித்துக் கொள்கிறார். ஒரு சம்பிரதாயமான நலம் விசாரிப்புக்குப் பிறகு ஒரு கனத்த மௌனம் நிலவுகிறது. இந்த மௌனம்தான் அவர்கள் அகமொழி. அதுதான் நிஜமொழி. இருவரின் மௌனமும் டெலிபதி ஊடாக உரையாடிவிட்டுச் செல்கிறது. இந்தச் சலனமற்ற மொழி எதுவரை நீடிக்கிறதென்றால் அவளைச் சந்தித்த பிறகான பொழுதுகளிலும். எதேசையான சந்திப்பு தந்த வலி கொடுமையானது.
‘என்னைப் புதைத்த இடம்’ எனும் இன்னொரு கவிதை கிட்டதட்ட, மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன் உன் மௌனத்தைக் கவிதையின் சாயல் விழுகிறது.
‘மௌனத்தைத் தின்னும்’ பொழுதுகள் கவிதையில் தன் காதல்கள் ரயில் தண்டவாளம், நதியின் இரு கரைகள் இரு நேர்க்கோட்டில் ஓடுமே ஒழிய இணைய வாய்ப்பற்றது எனும் தத்துவ தரிசனம் சற்றுப் பழையது.
‘மோனத் தவம்’ கவிதை வழி காதல் என்பது உடல் சுகத்தை வேண்டி நிற்கும் ஒரு பூர்வாங்க ஏற்பாடு என்ற நிதர்சனம் முன்வைக்கப்படுகிறது. சிக்மண்ட் பிராய்டும் இதைத்தான் சொல்கிறார்.
‘அழிவதும் ஆவதும்’, இன்னமும், மழைக்கணங்கள் கவிதைகள் அம்மாவிடமிருந்து வேலை நிமித்தமாய் பிரிந்திருக்கும் தருணங்களில் உணரப்படும் அன்பின் இழப்பைச் சொல்லிச்செல்கிறது.
‘மழைக் கணங்கள்’ அடர்த்தியான கவித்துவம் பொழியும் கவிதை. கோடை காலம். மழை தொடர்ந்து பொய்த்துப்போகிறது. பொய்த்துப்போகும் தருணங்களில்தான் மழையின் நினைவு மலர்ந்துகொண்டே இருக்கும். நமக்கு உடல் இருப்பதை நோய் கண்ட பிறகே உணர்வது போல, மழைக் காலங்களில் மழையை உணர்வதில்லை. கோடை கொளுத்தும் பொழுதுகளில் மழையின் ஈரம் தொட்டுச் செல்லும். ஆனால் சிவாவுக்கு மழையின் நினைவு வரவில்லை, மழையில் நனைந்து வீட்டுக்குள் நுழையும் சிவாவை அம்மா தலை துவட்டிவிடும் நினைவே மீண்டும் மீண்டும் வருகிறது. அம்மா என்ற ஆளுமையின் பிம்பத்தை மட்டுமே தரிசிக்கிறேன் இங்கே. இத்தொகுப்பின் மிகச் சிறந்த கவிதை மழைக் கணங்கள்.
‘இன்னமும்’ என்ற கவிதை, தாயுடன் இருந்தபோது ஏழ்மையும் உவப்பானதாக இருந்தது. அம்மா இல்லாத, நடுத்தர வாழ்வுக்கான பாய்ச்சல் நிகழ்ந்தபோது, இருப்பிடவசதியும் நல்ல உணவும் கூட சுவை குன்றியதாக உணர்கிறார்.
‘கோழி மேய்ப்பவன் கதை’ என்றொரு கவிதையைப் பற்றிச் சொல்லவேண்டும். நாகேஷ் நோய்வாய்ப்பட்டிருந்த தருணத்தில் வைரமுத்து அவரை நலம் விசாரிக்கச் செல்கிறார். தனக்கு நோய் வந்ததற்குக் காரணம் முட்டாள்களோடு இணைந்து பணியாற்றியதால் என்று சொல்கிறார். முட்டாள்களோடு பணியாற்றினால் ஆயுள் குறைந்துவிடும் தெரியுமா? என்கிறார் வைரமுத்துவிடம். இதனைச் சாதாரண வாக்கியமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. சிவாவின் கோழி மேய்ப்பவன், மேலதிகாரியின் முட்டாள்தனமான கட்டளைக்கு மட்டுமே அடிபணிய நேர்கிறது, அறிவாளிகளின் ஆலோசனைக்கு இடமற்றுப் போகும் அவலம் நேர்கிறது என்கிறார். இந்தச் சூழலை அரசாங்கத்தில் வேலை செய்பவர்கள் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறோம். கட்டளை இடும் அதிகாரம் உள்ளவர்கள் அறிவாளிகள் போலப் பாசாங்கு செய்வதே பெரும்பாலும் நிகழ்கிறது. தனக்குக்கீழ் பணிபுரிபவர்களிடம் ஆலோசனை கேட்பது சுய பலவீனத்தைக் காட்டிவிடும் அல்லவா?
மலேசியாவில் நில அமைப்பு வெகுவாக மாற்றம் கண்டு வருகிறது. இந்த மாற்றங்கள் தோட்டப்புறங்களை, அதற்கே உரித்தான மரபுகளை அழித்த வண்ணம் உள்ளது. சிவா தான் பிறந்து வளர்ந்த ஊருக்கு வருகை தரும் தருணத்தில் இதனை அவதானிக்கிறார். காலம் அரித்துக் கடத்திவிட்ட இந்த மாறுதல்கள் அவர் பிறந்து வளர்ந்த மண்ணையே அந்நியமாக்குகிறது. இந்த அனுபவத்தை ஒரு நிலப்பகுதியின் திவசம் என்று விளிக்கிறார். பழையன கழிதல் எவ்வாறு இயல்போ புதியன புகுதலும் அவ்வாறே. தான் வாழ்ந்த ஊர் அதன் விழுமியங்கள் அதன் மரபுகள், மனிதம் இவற்றின் அழிவை நாஸ்டால்ஜியா என்ற பழைய அனுபவத்தை மீட்டுருவாக்கம் செய்து பார்த்ததை அவர் திவசம் என்று பொருந்தி போகிறதுதான்.
முடிவு
சிவாவின் கவிதைகள் யதார்த்த சிறுகதையைப் போல அதன் முடிவை நோக்கியே பயணிக்கின்றன. அதாவது படிமங்களுக்கு அல்லது வாசகப் பங்களிப்புக்கு இடைவெளி தராமல் எல்லாவற்றையும் அவரே சொல்லிவிடுகிறார். மலேசிய அரசியல் தில்லுமுல்லைப் பாடுபொருளாகக் கொண்ட கவிதைகளில் இது தெளிவாகத் தெரிகிறது.
நேரடியான மொழிப்பயன்பாடு கவிதைகளின் படிமச் சிந்தனையை வளர்த்தெடுக்கவில்லை. வாசகனை இரண்டாம் வாசிப்புச் சிரமத்துக்கு உள்ளாக்காத கவிதை நடை சிவாவினுடையது. ஒரு வகையில் இது தேவைதான். வாசகனிடம் விழிப்புணர்வு அரசியலை எளிதில் உண்டாக்க இவை உதவுகின்றன.
சிவாவின் கவிதைகளில் பன்முகப் புரிதலுக்கான வாசல்கள் திறக்கவில்லை. ஒற்றைப் புரிதல்தான் பெரும்பாலான கவிதைகளில் காணக்கிடைக்கின்றன. பொதுவாகவே நவீன கவிதைகளில் படைப்பாளனின் பாடுபொருளைத் தாண்டி வாசகன் விரிந்து பயணிக்கவேண்டும் என்ற சித்தாந்தமும் உண்டு. அவரின் லட்சியவாத நோக்குதான் இந்த பன்முகப்புரிதலுக்குத் தடைவிதிக்கின்றன என்று எண்ணுகிறேன்.
படைப்பிலக்கிய வகைமைகளில் சிவாவுக்குக் நவீனக் கவிதைகள் உவப்பானதாக இருக்கிறது. அவர் அதில் மேலும் கவனம் செலுத்தினால் நமக்கு நல்ல கவிதைகள் கிடைக்கும்.