என்னை நாயென்று கூப்பிடுங்கள்

renuga-coverமலேசிய நவீன இலக்கிய உலகில் கவனத்திற்குரிய கவிஞர் ரேணுகா. மனதிற்கு உவப்பான பல கவிதைகளை எழுதியிருக்கிறார். அதிகப்படியாக கவிதைகளை அரசியல் சார்ந்து; சமூக சூழல் சார்ந்து எழுதியிருக்கிறார். பொதுவாகக் கவிஞர்கள், எழுத்தாளர்கள், அரசியல் சார்ந்த நிகழ்வுகளை வெளிப்படையாகவும் நேரிடையாகவும் படைப்புகளில் எழுதுவதற்குத் தயங்குகிற சூழலில் ரேணுகா துணிந்து எழுதியிருக்கிறார். வெளிப்படையாகவும் எழுதியிருக்கிறார்.

“என்னை நாயென்று கூப்பிடுங்கள்” கவிதைத் தொகுப்பில் மெச்சத்தகுந்த பல கவிதைகளை ரேணுகா எழுதியிருந்தாலும் இந்தியர்களை, குறிப்பாகத் தமிழர்களைப் பறையர்கள் என்று கல்வி புலத்திற்காக பதிப்பிக்கப்பட்ட இண்டர்லோக் நாவலில் குறிப்பிடப்பட்டதற்கு எதிராக நடந்த போராட்டம், போராட்டம் நடந்த பிறகு நடந்த நிகழ்வுகள் குறித்து தெளிவான அரசியலை முன் வைக்கும் கவிதையை ரேணுகா எழுதியிருப்பது அவரது அரசியல் தெளிவைக் காட்டுகிறது. குறிப்பாக, என்னை நாயென்று கூப்பிடுங்கள் என்ற கவிதை.

என்னை நாயென்று கூப்பிடுங்கள்

வருத்தமில்லை

கடிக்க மாட்டேன், குரைக்க மாட்டேன்

தெருநாய் என்று மட்டும் சொல்லாதீர்கள்

இந்தக்கவிதை முன்னிறுத்தும் உணர்வுகளை, அரசியலை மிகுந்த வலியோடுதான் உணர முடியும். மலேசியச் சமூகத்தையும், அதனுடைய இயங்கியல் போக்கையும் புரிந்துகொள்வது என்பது ஒருவகையில் எளிது; மற்றொரு வகையில் சிரமம். மலேசியச் சமூகம் என்பது பல சமூகத்தினருடைய வாழ்வியலைக் கொண்டது. அதில் ஒன்று இந்தியர்களுக்கான, குறிப்பாகத் தமிழர்களுக்கான வாழ்வியல் நெறிமுறைகள். மலேசிய சமூக வாழ்வில் தமிழர்கள் குறித்த மதிப்பு என்பது போற்றத்தகுந்ததாக ஒருபோதும் இருந்ததில்லை. தமிழர்களுக்குள்ளேயும் மனவேறுபாடுகள் உள்ளன. குறிப்பாக, சாதிசார்ந்த பெருமிதம். தமிழர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் சாதி சார்ந்த பெருமிதங்கள் இருக்கின்றன. தமிழர்களுடைய இழிகுணங்களில் இது முதன்மையானது.

“மலேசியாவிற்குக் கூலிகளாகத்தான் கொண்டு வரப்பட்டோம். ஆனால், நாங்கள் பறையர்கள் அல்ல. பறையர்கள் வேறு; நாங்கள் வேறு” என்ற அறிவிப்பும் பிரகடனமும் பெருமிதமும் எத்தகைய மனப்போக்கைக் காட்டுகிறது என்பதையும் ரேணுகா தனது கவிதைகளின் வழியே கேட்கிறார். மிக முக்கியமான கேள்வி. தமிழர்களுடைய அடிமனதில் படிந்திருக்கிற கசடை வெளிச்சம்போட்டு காட்டுகிற கேள்வி.

ரேணுகாவின் அரசியல் கவிதைகள் மலேசிய அரசியலைக் காட்டமாக விமர்சிப்பவை. அதுவும் மலேசியாவில் நடக்கும் இடைத்தேர்தல் காலங்களில் அரசியல் கட்சியினர் செய்யும் அத்தனை இழித்தனங்களையும்; அளிக்கும் வாக்குறுதிகளையும் பெரிய பட்டியலாக பட்டியலிட்டுள்ளார். அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் மாறப் போகின்றனவா? இல்லை அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை நம்பும் மக்களுடைய மனப்போக்குதான் மாறப்போகின்றதா?

நம்புவது மக்களின் இயல்பு; மக்களின் நம்பிக்கைகளை ஏமாற்றுவது அரசியல்வாதிகளின் இயல்பு. இதுதானே காலங்காலமாக நடந்து வரும் சமூக நீதி; சமூக அறம்.

பரதேசிகள் படிக்கும் பள்ளிக்கூடத்திற்கு

மின்சார வசதியைக் கொடுக்கும்

சாலைகளைச் செப்பனிட்டுத் தரும்

கொட்டகைவாசியான உங்கள் கூரைகள் இனி ஒழுகாது

ரேணுகா  ஒரு கவிஞனாக, கலைஞனாக, சமூக அக்கறையுள்ளவனாக என்ன செய்ய முடியுமோ அதைச் செய்திருக்கிறார் இந்தக் கவிதையில். கவிதைகள் என்றாலே சுயபுலம்பல், கண்ணீர் என்ற நிலையை மாற்றியிருக்கிறார் ரேணுகா.

கவிதைகள் கண்ணீரை மட்டுமே பேசுபவை அல்ல. சமூக நிகழ்வுகளை, அரசியல் நடவடிக்கைகளை எந்த அளவிற்குக் காத்திரமாகவும், வேகமாகவும் ரேணுகா பேசுகிறாரோ, அதே அளவிற்குத்தான் அன்பின் இழப்பையும் பேசுகிறார். “இருள் தின்ற புடைத்திருந்த பனிக்குட பொழுதுகள்” கவிதை நம்மை நமக்குள்ளேயே பயணிக்க வைக்கிறது. அம்மாவைப் பற்றி எவ்வளவு எழுதினாலும் அலுக்காத மனம் ரேணுகாவிற்கு. அம்மாவை எதனோடு ஒப்பிடலாம்? எதனோடும் ஒப்பிட முடியாத பேருரு அம்மா. அரசியலைப்பற்றிப் பேசும்போது வேகம் கொண்டு எழுகிற வார்த்தைகள், அம்மாவைப்பற்றியும் இழப்பு பற்றியும் பேசும்போது கவிதையின் தன்மை வேறொரு உருவத்திற்கு மாறிவிடுகின்றது.

இந்த மாற்றம், நல்ல கவிஞனுக்கான அடையாளம், நல்ல கவிதைக்காக அடையாளம். ரேணுகாவின் கவிதைகள் தனிமனித துயரங்களோடு சமூகத்தின் துயரத்தையும் பேசுகிறது. எந்தெந்த விசயங்கள் எல்லாம், சமூகத்தைப் பாதிக்கிறதோ அதெல்லாம்தான் ரேணுகாவின் கவிதைகளாக இருக்கின்றன.

அதே சமயம், மெல்லிய வருடலாய் காதலையும் சேர்த்தே பேசுகிறது ரேணுகாவின் கவிதைகள். மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன் உன் மௌனத்தை என்பதாகட்டும் அல்லது உன் எல்லா சாரத்தின் எச்சங்களுடன் என்பதாகட்டும் தீராக் கவித்துவத்துடன் வெளிப்பட்டு விடுகின்றன கவிதைக்காக வார்த்தைகள். தனிமையில் எப்போதும் தன்னைத் தேடிக்கொண்டே இருக்கும் கவிஞன் மீண்டும் மீண்டும் கரைந்து கொண்டே இருக்கின்றான் தன் தனிமைக்குள்.

“என்னை நாயென்று கூப்பிடுங்கள்” கவிதைத் தொகுப்பில் இருபத்தியேழு கவிதைகள் இருக்கின்றன. ஒவ்வொரு கவிதையும் படிக்கும்படியாக, சகிக்கும்படியாக, மனதை நெகிழச்செய்யும் படியாகவும், கோபம் கொள்ளச்செய்யும் விதமாகவும் இருக்கிறது. ஒரு படைப்பின் மதிப்பு அது எந்த அளவுக்கு சமூகம் சார்ந்து பேசுகிறது என்பதைப் பொறுத்து ஏற்படுகிறது. அந்த மதிப்பினை இத்தொகுப்பு தன்னுள் கொண்டுள்ளது.

 

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...