வலி

fish-aquarium-11அவள் அம்மோயைப் பார்த்தாள். அம்மோயின் முகம் இருண்டிருந்தது.

“அம்மாவால உங் கையைப் பிடிச்சிட்டு நடக்க ஏலும் அம்மோய்” என்று அவள் தன் வலது கையை நீட்டினாள்.

அந்த சின்ன அறையைப் பாதி நிறைத்திருந்த இருக்கைகளைத் தாண்டி, முழங்கால் மேல் வரை நீளமாக இருந்த சாயம் போன ஊதா நிற நீளச் சட்டையின் ஓரத்தை இடது கையில் பிடித்தபடி ஓரப் பல்லில் வைத்துக் கடிப்பதும் இழுப்பதுமாக இருந்த அம்மோய் சட்டையைக் கீழே விட்டாள். மழைக்கு ஓய்ந்து பறக்கத் தயாராகும் குருவியாக காலை முன்னும் பின்னும் வைத்துத் தத்தினாள். பிறகு இருபுறமும் சட்டையின் நுனியைப் பிடித்து இழுத்துவிட்டவள், சட்டென்று இருக்கைகளில் மோதியபடியே பெரும் வேகத்தில் ஓடி வந்தாள். வேகத்தை நிறுத்த போதுமான இடவசதி இல்லாததால் அவளின் மேல் மோதி நின்றாள். தலையை மேலே தூக்கி பின்புறம் வளைத்து அவளின் முகத்தைப் பார்த்தபடி, நீட்டியபடியே இருந்த அவளின் வலது கையை இறுக்கமாகப் பற்றினாள். அவளின் முகத்தில் தலைக்கு நேரேயிருந்த மின்விளக்கின் ஒளி தாரளமாய் பரவியது. வட்ட முகத்தை மலர்த்தியபடி, அவளின் கைகளுக்குள் தன் சின்னக் கைகளைக் கோத்து வேகமாக ஆட்டினாள் அம்மோய்.

“உங்கள் மகளை வளர்ப்பதற்குத் தேவையான வசதியும் ஆதரவும் உங்களுக்கு இல்லை” என்று இயந்திரம் போல் எழுதப்பட்ட வார்த்தைகளை வாசித்த நீதிபதி, அம்மோயை அவளின் தாத்தா, பாட்டியிடம் நீதிமன்றம் ஒப்படைப்பதாகக் கூறினார்.

அவர்கள் அம்மோய் அருகில் வந்து  “வா அம்மோய் போலாம்” என்றார்கள்.

அவளின் கைகளில் ஆடிக்கொண்டிருந்த அம்மோய்“அம்மாவும் வரட்டும்” என்றாள்.

“நான் வரல்ல நீ கிளம்பு” என்றாள் அவள்.

“நீங்களும் வாங்க” என்று அவளின் முகத்தைப் பார்த்தபடியே பிடித்திருக்க கையை மேலும் இறுக்கி, இழுத்தாள் அம்மோய்.
அவளுக்கு வலித்தது. வலி. விரல்களைப் பிடித்து கையை இழுக்கும் வலி. விரலில் இருந்து முழங்கை தாண்டி உள்ளேறும் வலி. அவள் வியந்தாள். அம்மோயின் தொடுதலை விரல்கள் உணர்கிறது. உள்ளங்கை, கணுக்கை, முன்கை, முழங்கை தாண்டி தோள் வரை இறகின் தடவலாய் ஊர்ந்து மூளைக்குள் உணர்வு பதிகிறது…. உண்மைதானா….

“சொன்னாக் கேளு அம்மோய், அம்மா வரல” பட்டென்று அவள் தன் கையை அம்மோயிடமிருந்து விடுவிக்கும் முயற்சியாகப் பின்னுக்கு இழுத்தாள்.

அம்மோய் கையை விடாமல், பிடியை மேலும் இறுக்கமாக்கி வேகமாக இழுக்க, கை கழன்று விழுந்தது. இழுப்பின் வேகத்தில் அவளின் முழங்கையில் கீறல் ஏற்பட்டு, ரத்தம் கசிந்தது.

இரு கைகளையும் முன்னுக்கு நீட்டி, தன் கைகளைப் பார்த்தபடியே கேவத் தொடங்கிய அம்மோய்க்கு மூச்சடைத்தது.

கீழே விழுந்த விரல்களும் முன்கையும் வலித்தன. அவள் தன் கைகளையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
***
பிறந்த குழந்தையின் கைகளைத் தொட்டுப் பார்க்கும் பேராவலுடன் வலது கை விரல் நுனிகளால் முதலில் இடது கையை தோள் பட்டையிலிருந்து நுனி விரல் வரை தடவினாள். பிறகு இடது கையால் வலது கையை மேலிருந்து நீவி விட்டாள். கைகள். முழுதாக தோளிலில் இருந்து விரல்களை வரை முழுமையான கைகள். அவளது  கோதுமைப்  பழுப்பு நிறத்தில் நரம்புகள் லேசாகப் புடைத்திருக்க ஒன்றே போல் இரண்டு கைகள்.  வலது ; இடது இரண்டையும் நீட்டினாள். தோள் வரை மடக்கினாள். மேலே தூக்கினாள். குனிந்து கால் விரல்களைத் தொட்டாள். கால் விரல்களோடு ஒத்து இருந்த கை விரல்களைப் பார்த்தபடி சில கணங்கள் குனிந்த நிலையேலே நின்றாள்.

இனி இரண்டையும் ஒரே நிலையில் செயல்பட வைக்க வேண்டும். ஒன்றுக்கொன்று ஒத்திசைவோடு இயங்க வைக்க வேண்டும். மீண்டும் தனது இடது கையை வலது கையால் தடவிக் கொடுத்தாள். பிறகு இரண்டையும் முகத்துக்கு நேரே தூக்கிப் பார்த்தாள். பின் ஆசையோடு இரண்டிலும் முத்தமிட்டாள்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடல் மிகவும் சிரமப்பட்டது. கைகள் வலிப்பதாவும் ஒவ்வொரு மயிர்க்காலும் குளரில் விறைத்த ஊசியாய் மாறி நரம்புகளை, தசைகளைத்  தாண்டி உள்ளுக்குள் ஆழமாய் எங்கோ துளைப்பதாகவும் உணர்ந்தாள். தாங்க முடியாத கொடும் வலியிலும் வேதனையிலும் அழத்தோன்றியது, அரற்றத் தோன்றியது, இரு கைகளையும் சுவரில் அடித்து மோதும் ஆத்திரம் வந்தது. வலி நீக்கி மருந்துகள் கொஞ்ச நேரத்துக்கு அவளை மறக்கக்கடிக்கும். பிறகு  திரும்பவும் கைகள் எங்கும் கண்ணுக்குத் தெரியாத ஜந்துக்களின் கொடுக்குகள் கொட்டத் தொடங்கும்.  வலிக்கிறது என்று அவள் துடித்தால், அது நரம்புகள் ஏற்படுத்தும் மாய வலி என்றனர்.  அவளுக்கு உள்ளிருந்து வலித்தது. உதறினாள், வலித்து விட்டாள், முகத்துக்கு நேரே  கைகளை வைத்துக்கொண்டு மணிக்கணக்காக இல்லை இல்லை என்ற மந்திரம்போல் சொன்னாள். ஆனாலும் கடுமையாக வலித்தது. நடு இரவில், காலைப் பொழுதில், மதிய வேளையில், மாலையில் என்று எப்போதும் வலித்தது. அந்த வலி அவளின் மற்ற எல்லா வலிகளையும் இல்லாமல் செய்திருந்தது.
*****
அங் மோ கியோவிலிருந்த அந்த ஓரறை வீட்டின் சூழலுக்குத் தயாராக அவளுக்குக் சிறிது காலம் ஆனது. அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் பெரும்பாலும் அவளைப் போன்று ஏதோ ஒருவகையில் இயலாதவர்கள்தான். வருவாய் குறைந்தவர்கள், முதியவர்கள், ஆதரவற்றவர்கள் போன்றவர்கள்தான் அதிகமாக அந்த அடுக்குமாடியில் குடியிருந்தனர். ஒரு சில வீடுகளில் சீன, இந்திய நாட்டவர்கள் குடியிருந்தனர். அரசாங்கத்திடம் மானியக் கட்டணத்தில் வீட்டை வாடகைக்கு எடுத்தவர்களிடம், அதிக வாடகை கொடுத்து சட்டவிரோதமாக அங்கு தங்கியிருந்தனர்.

வசதியற்றவர்களுக்காகவே இத்தகைய ஓரறை வாடகை வீடுகளை அரசாங்கம் இன்னமும் வைத்திருக்கிறது. வசிக்க இடமில்லாத வருமானமற்றவர்கள், வருமானம் ஈட்டமுடியாத நிலையிலுள்ளவர்கள் மற்றும் புதிய வீட்டுக்காகக் காத்திருக்கும் புதுத் தம்பதியர்களே இத்தகைய வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் வாடகை வீடுகளைப் பெற முடியும். வீடு சிறிதாக இருப்பதால், பெரும்பாலானவர்கள் நடைபாதைப் பகுதியில் சாமான்களை வைத்திருப்பார்கள். ஸ்டூல்கள், அலுமாரிகள், பெரிய பிளாஸ்டிக் பைகள், சைக்கிள்கள் என என்னென்னவோ நிறைந்திருக்கும் அந்த நடைபாதையில் தடுக்காமல் நடக்கப் பழக அவளுக்குச் சில நாட்களானது. பல வீடுகளில் சாமான்கள் அடைந்து கிடைக்கும். எலி, பல்லி, கரப்பான்பூச்சிகளும் அந்த புளோக்கில் அதிகமாக இருப்பதாகவே அவளுக்குப்பட்டது.

அவள் ஐந்தறை வீட்டில் வசித்த காலத்தில் அவளது சாப்பாட்டுக் கடை வருமானத்தில்தான் அவள் குடும்பம் வாழ்ந்தது. அதற்குமுன் அவள் தரை வீட்டில் குடியிருந்தாள். சொந்த மீன் வியாபாரம் செழித்தபோது அவள் வாங்கியது.

அவளின் ‘மீன் ஸ்பெஷல்’ கடையில் வகை வகையாக மீன் சாப்பாடு இருக்கும். மீன் தலைக்கறி, மீன் சம்பால், கட்லெட், பொரியல், புட்டு, குழம்பு இவையெல்லாம் வழமையாக இருப்பவை. இவை தவிர, ஒவ்வொரு நாளும் ஒரு ஸ்பெஷல் அயிட்டம் தயாரிப்பாள். வாழையிலை மீன், வாட்டிய மீன், பேக் செய்த மீன் என்று புதிது புதிதாகச் செய்வாள். அவளின் கைப் பக்குவத்தைக் கொண்டாடாதவர்கள் இல்லை.

ஒவ்வொரு வகை மீனையும் ஒவ்வொரு வகையாக சம்பால் செய்வாள். அதுதான் அவளின் தனித்துவம். மஞ்சப்பொடி மீனுக்குப் பொடி வெங்காயம் நிறையச் சேர்ப்பாள். கொடுவாவாக இருந்தால் தக்காளி அதிகம் சேர்ப்பாள்.  பாட்டி, அம்மா, மாமியார் எல்லாரது மீன் சம்பால்களையும் ஒன்றிணைத்து அவள் உருவாக்கிய சம்பால் மிகப் பிரபலம். அவளது கடையில் மீன் சம்பால்தான் முதலில் முடிந்துபோகும்.

அவள் கடையில் எப்போதும் கூட்டம் நிறைந்தே இருக்கும். ஆனாலும் கடையை விரிவுபடுத்தவோ, அதிக நேரம் திறந்து வைக்கவோ, அவள் விரும்பியதில்லை. ஒருநாளுக்கு இத்தனை பேருக்கு என்று இலக்கு வைத்து  உணவு தயாரிப்பாள். சாப்பாடு காலியானதும் கடையை மூடிவிடுவாள். உதவிக்கு ஐந்து பேரை வைத்திருந்தாள். ஆனாலும் சமைப்பது முதல், ஆர்டர் எடுப்பது, பரிமாறுவது, பில் போடுவது, சுத்தம் செய்வது என எல்லா வேலைகளிலும் அவளது கைகள் பரபரத்துக்கொண்டே இருக்கும்.

கடையில் செய்ய இருக்கும் புதிய சமையலை வீட்டில் சமைத்து முன்னோட்டம் பார்ப்பாள். அவள் வீட்டில் தினமும் மீன் இருக்க வேண்டும். மாமியார், மாமனார், கணவர், மைத்துனன், மைத்துனி, பிள்ளைகள் எல்லாருமே மீன் பட்சினிகள். மீன் இல்லாமல் ஒருவாய்ச் சோறுகூட இறங்காது. ஆனால் அவள் சாப்பிடும்போது பக்கத்தில்கூட மீன் இருக்கக்கூடாது. மீன் சமைத்த கையால் தண்ணீர்கூடக் குடிக்கமாட்டாள். மீன்களைப் பார்ப்பதிலும் சமைப்பதிலுமே அவளுக்கு ஆர்வம். தீபாவளிக்கு வந்த அவளது சூப்பர்வைசர் அவளது மீன்தலைக் கறியில் மயங்கி, முதல் போட்டு கடையை ஆரம்பித்து வைத்தார். அவள் கடை நடத்திய வரையில் அவளது அன்றாட வாடிக்கையாளர்களில் அவரும் ஒருவராக இருந்தார்.

அன்றைக்குத் தீபாவளி. அவன் அவளை வாய்க்கு வந்தபடி திட்டிக்கொண்டிருந்தான். அவள் பதில் பேசவில்லை.  கையில் கிடைத்த சாமான்களையெல்லாம் அவள்மீது வீசினான். அவள் தன்னை அவமானப்படுத்துவதாக அவனது காதலி  ஒப்பாரி வைத்தாள். இருவரும் குடித்திருந்தார்கள்.  அம்மோய் அவளின் கழுத்தைக் கட்டியபடி  அழுதுகொண்டிருந்தாள்.

அவன் தள்ளாடிக்கொண்டே கையில் கூட்டுமாருடன் அவளை நோக்கி வந்தான். அவள் அம்மோயைத் தள்ளிவிட்டாள்.  சுவரோரத்தில் போய் விழுந்த அம்மோய், மீண்டும் சத்தமாக அழுதபடி அவளிடம் ஒடி வந்தாள்.

“எங்கிட்டக்க வராதே” அவள் கத்தினாள்.

பாதிவரை வந்த அம்மோய், வாகனங்களுக்கிடையே நகரத் தெரியாது தவித்து நிற்கும் பூனைக்குட்டியாக உறைந்தாள். அம்மாவின் கோபம் அவளுக்குப் புரியவில்லை. அப்பாவைப் பார்த்ததும் விழிகள் மேலே சொருக, கீழே சரிந்தாள்.

அவன் நெருங்கும்போது, அவள் பின்னுக்கு நகர்ந்தாள். தடுமாறி அவன் கீழே விழுந்தான். ‘ஐயோ என் புருசனைக் கொன்னுட்டாளே‘ என்று கத்தியபடி அவனது காதலி வீட்டுக் கதவைத் திறந்துகொண்டு ஓடினாள்.

பக்கத்து வீட்டுக்காரர்கள் அதற்குள் போலிசில் புகார் கொடுத்துவிட்டிருந்தார்கள். போலிஸ் வந்து விசாரணைகளை முடித்துக் கிளம்பியதுமே, இரவோடு இரவாக அவளின் மாமனாரும் மாமியாரும் அம்மோயைக் கூட்டிக்கொண்டு கிளம்பிவிட்டார்கள்.

நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடந்தபோது, அவளால்  அம்மோயைப் பார்த்துக்கொள்ள முடியாது என்று அவர்கள் வாதிட்டார்கள்.
அவள் நீதிபதியிடம் தன் இருகைகளிலும் வலி இல்லை என்று சொன்னபோது, சுற்றியிருப்பவர்கள் எல்லாரும் தன்னைச் சந்தேகத்துடன் பார்ப்பதாக அவளுக்குத் தோன்றியது. அவளுக்கே தன்மேல் சந்தேகம் ஏற்பட்டது. எப்போது வலி இல்லாமல் போனது என்று யோசித்தாள். நீதி மன்ற அறையின் குளிரை மீறி உடலெங்கும் வெப்பமேறியது. அப்போதுதான் கையை நீட்டி  அம்மோயைக் கூப்பிட்டாள்.
***

சின்ன வயதில் அவளுக்குப் படிப்பதில் பெரிய ஆர்வம் இருக்கவில்லை. அவளது கனவு பெரிய அளவில் மீன் பிடிக்க வேண்டும். அண்ணன்களோடும் அவர்களின் நண்பர்களுடனும் சாங்கியிலும் தீவுப் பகுதிகளிலும் கால்வாய்களிலும் அவள் மீன்பிடித்திருக்கிறாள். பெரிய சுறாக்கள் முதல் சின்ன மஞ்சப்பொடி மீன்கள், குட்டி நெத்திலி என்று என்னென்னவோ மீன்களைப் பிடித்திருக்கிறார்கள். நீரிலிருந்து வெளியே வந்ததும் நீரையும் காற்றையும் தேடித் தவிக்கும் மீன்களை. வலையிலிருந்து அவள் கைகளில் எடுக்கும்போது, உடல்களின் வழுவழுப்பையும் தாண்டி கூர்முள்ளாய் தூக்கிப்போடும் அதுகளின் துடிப்பு அவளின் உடலெங்கும் பாயும். சம்பவங்களைவிட வார்த்தைகளைவிட அவளின் நினைவுப்பகுதியில் துல்லியமாக ஆழப் பதிந்திருப்பது அந்த சிலிர்க்கும் உணர்வுதான். எந்தநேரத்திலும் அவளால் அந்த உணர்வை அதே சில்லிப்போடு உணர முடியும். இப்போதும்கூட. உணர்வுகள் எப்படி உணர்வில்லாமல் வெறும் நினைவாகப் போகும் என்பதுதான் அவளுக்குப் புரியவில்லை. அப்படித்தான் சொல்கிறார்கள். ஆனால் காற்றைத் தடவும் அவள் கைகள் வலிக்கின்றன

மீன் கடை வைப்பதுபற்றி விசாரித்துக்கொண்டிருந்தபோதுதான் அவனைச் சந்தித்தாள். சாங்கி ரோட்டிலிருந்து 10ம் கல்லிலிருந்த சோமப்பா கிராமத்தின் ஈரச்சந்தையில் அவன் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். அவனது முதலாளி லீ கொங் பெரும் பணக்காரன். அவன் பிடோக்கிலும் மீன் கடை வைத்திருந்தான். லீ கொங்கிடம் சின்ன வயதிலிருந்தே வேலை பார்த்ததால் அவனுக்குத் தொழில் நுணுக்கங்கள் தெரிந்திருந்தன. அவன் சொந்தமாகத் தொழில் தொடங்க உதவுவதாக லீ கொங் சொல்லவும் ஓ லெவல் தேர்வு முடிந்த கையோடு அவள் மீன் வியாபாரத்தைத் தொடங்கி விட்டாள். லீ கொங்தான் அவளுக்கு பிடோக்கில் கடை பிடித்துக்கொடுத்தார்.

அவளுக்குக் கைகளாலேயே மீன்களை எடைபோடத் தெரிந்திருந்தது. தரம் பிரித்து, விலை பேசி வாங்குவதிலும் விற்பதிலும் அவள் வெகு விரைவில் தேர்ச்சி பெற்றாள்.

அப்போதெல்லாம் பீச் ரோடு மொத்த விலை மீன் சந்தைக்கு விடிகாலையிலேயே அவள் போய் விடுவாள். அவளிடமிருக்கும் மீன்களை விற்பதுடன், தனக்குத் தேவையான மீன்களையும் அங்கே வாங்குவாள். அவள் கையால் முதல் வியாபாரம் நடந்தால் வியாபாரம் நன்றாக நடக்கும் என வியாபாரிகள் நம்பியதால், போட்டி போட்டு அவளுக்கு மீன் கொடுப்பார்கள்.

வாடிக்கையாளர் என்ன கேட்டாலும் அவள் தேடி வாங்கித் தந்துவிடுவாள். விறால், வாளை, வவ்வால், கெழுத்தி, பாரை, திருக்கை, வஞ்சிரம் கெளிறு, விளை, வேளா, பால் மீன், சாம்பல், சங்கரா, கொடுவா, கொப்பரன், கோலா, கிளி மீன், ஆலா, சூளை, நெத்திலி என்று எந்த வகை மீனாக இருந்தாலும் அவளிடம் கேட்டால் கிடைக்கும் என்ற நம்பிக்கை அந்த வட்டாரவாசிகளுக்கு மட்டுமின்றி, மற்றப் பகுதிவாசிகளிடமும் இருந்தது. அவளின் கைகளை ராசியானது என்று எல்லாருமே சொல்வார்கள். மீன் வாங்குவதற்காகக் காரைப் போட்டுக்கொண்டு தூரத்திலிருந்தெல்லாம் வாடிக்கையாளர்கள் வருவார்கள். அதோடு பலவகையான நண்டு, இறால், நத்தைகள்  என எல்லாமும் அவள் கடையில் கிடைக்கும்.  சனி, ஞாயிறு காலைகளில் அவளுக்கு மூச்சுவிட நேரமிருக்காது. ரொம்பவும் தெரிந்தவர்களுக்கு வீட்டுக்கே போய் மீன்களைக் கொடுப்பாள். மீன் விநியோகத்திற்காகவே உதவி ஆள் ஒருவரையும் வைத்திருந்தாள்.

21 வயதில் ஏறக்குறைய ஒரு லட்சம் வெள்ளி அவளின் வங்கிச் சேமிப்பில் இருந்தது. அவனைக் கல்யாணம் செய்தபோது அவளுக்கு 22 வயது. சாங்கியில் தரை வீடு வாங்கியிருந்தாள்.  ஆனால் அவனால்  சில ஆண்டுகளிலேயே வீடு,  வியாபாரம் எல்லாவற்றையும் இழந்து, பேக்டரியில் வேலைக்குப் போகத் தொடங்கினாள். 1984ல் புதிதாகக் கட்டப்பட்ட லோரோங் ஆசு வீவக பேட்டையில் அவளுக்குப் புது வீடு கிடைத்தது. வீடு வாங்கிய பின்தான் அவள் சாப்பாட்டுக் கடை தொடங்கினாள்.
*****
சமைப்பதற்கு தன் கைகளை அவள் பழக்க வேண்டியிருந்தது. பொம்மையைப் பழக்குவதுபோல் அவளுக்கு அது வேடிக்கையாக இருந்தது. சுவாரஸ்சியமான விளையாட்டாகவும் இருந்தது. அம்மோய்க்கு சொல்லிக் கொடுப்பதுபோல் பொறுமையாக, மென்மையாக குவளையைத் தூக்குவதில் இருந்து சின்னச் சின்ன வேலைகளில் ஆரம்பித்து மெல்ல மெல்ல தன் கைகளை அவள் பழக்கினாள். யாரையாவது எதிர்பார்ப்பதில் நாள்களை நகர்த்துவது அவளுக்குச் சலிப்பேற்படுத்தியது. காணாமல் போய்விட்ட கை வலி திரும்ப வந்தால்கூட பரவாயில்லை போலிருந்தது. வலியுடன் காலத்தைச் செலவிடுவதில் அவள் மகிழ்ச்சி அடையத் தொடங்கிய சில நாட்களில் அந்த வலி மறைந்துவிட்டிருந்தது. மீன்களின் துடிப்பைப் போல அந்த வலியை நினைக்கும்போதெல்லாம் அவளால் மீட்டெடுக்க முடியவில்லை. அதனால் வலியில்லாத வாழ்க்கைக்குப் பழக முடிவு செய்தாள். வீட்டுக்கு அருகில் இருந்த உணவங்காடி கடை ஒன்றில் அவளுக்கு சமையல் உதவியாளர் வேலை கிடைத்தது. அவளது செலவுகளைச் சமாளிக்க அந்த வருமானம் போதுமானதாக இருந்தது. சமூக உதவி பெறுவோர் பட்டியலில் தொடர்ந்து நீடித்து புள்ளிவிவரத்தை ஏற்ற அவள் விரும்பவில்லை. அம்மோய் வந்தால் இன்னும் நிறைய சம்பாதிக்க வேண்டும். தன் கையால் எப்படிச் சம்பாதிப்பது என்று யோசித்த அவள் தனது ஓரறை வீட்டை மீண்டும் நோட்டம்விட்டாள்.

அறையாகவும் ஹாலாகவும் இருந்த இடத்தில் துணி வைப்பதற்கு ஒரு சிறிய அலுமாரியும் ஒற்றைக் கட்டிலும் அடைத்துக்கொண்டிருந்தன. பின்புறம் இருந்த சிறிய சமையல் இடத்தில் இரண்டொரு பாத்திரங்கள். குளியலறை வாசலில் துணி துவைக்கும் இயந்திரம்.

மீன் தொட்டியை எங்கே வைப்பதென்று ஆராய்ந்தாள்.

வெளியில் சென்று சுற்றும் முற்றும் பார்த்தாள். எதுவும் கண்ணில் படவில்லை. கீழே இறங்கி குப்பை கிடங்குக்குப் போனாள். சில நேரங்களில் நல்ல சாமான்களைக்கூடத் தூக்கிப் போட்டிருப்பார்கள். இப்போது அவள் துணி வைத்திருக்கும் அலமாரி கீழேயிருந்து எடுத்து வந்ததுதான்.  அவள் புளோக்கைச் சுத்தம் செய்யும் பங்ளாதேஷியை அவளுக்குத் தெரியும். அவனிடம் கொஞ்சம் பணம் கொடுத்தால், தேவையில்லாத சாமான்களை மேலேயிருந்து அவனே கீழே குப்பைக் கிடங்கில் கொண்டுபோய் போட்டு விடுவான். யாருக்காவது அந்தப் பொருட்கள் தேவையென்றால் கொண்டு வந்து கொடுக்கவும் செய்வான். அவள் போனபோது அவன் குப்பைக் கிடங்கில் வேலை செய்துகொண்டிருந்தான். அவன் அவளுக்கு ஒரு ஸ்டூலை தேடிக்கொடுத்தான். கொஞ்சம் பழசாக இருந்தது.  அவனே அதைத் தூக்கிக் கொண்டுவந்து அவளது வீட்டில் வைத்தான். அதைத் துடைத்துச் சுத்தம்செய்து, சுவரோரமாக வைத்தாள். டிவி வைப்பதற்கு வசதியாக இணைப்புகள் அருகில் இருந்தன. அவளிடம் டிவி இல்லை. அந்த இடத்தில் மீன் தொட்டியை வைத்தால், மின்சார இணைப்புக்கொடுக்க வசதியாக இருக்கும். மேலும் அவள் கட்டிலில் படுத்தபடியே மீன்களைப் பார்க்கலாம்.

அவள் தொட்டி வைப்பதற்கு ஸ்டூலும் இடமும் தயார் செய்த பிறகு வீட்டை மீண்டும் கூட்டித் துடைத்தாள். படுக்கையைத் தட்டி விரித்தாள். சமையலறையில் பாத்திரங்களை நேர்த்தியாக அடுக்கி வைத்தாள். அவள் சாலையிலிருந்து எடுத்துவந்த மணிபிளான்டை ஒரு கண்ணாடிக் குவளையில் வைத்து, தண்ணீர் விட்டு சமையல் மேசை ஓரமாக வைத்தாள். விருந்தாளியை வரவேற்பதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தன் கைகளாலேயே செய்துமுடித்தபோது அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

முதன்முதலில் வாழ்வில் இன்னொருவர் இணைவதுபோன்ற சந்தோஷத்தில்  சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு என்று பாடத் தொடங்கினாள். சிறு வயதில் கேட்ட அந்தப் பாடலின் இசையும் வார்த்தைகளும் அவள் வாயில் தன்னிச்சையாகத் தவழ்ந்தது அவளுக்கே ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. சத்தமாக வாய்விட்டுப் பாடியபடி கைகளை விரித்து ஆடினாள்.

உடல் களைத்ததும் வேறு என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தபடி தனது ஒற்றை அறை வீட்டைச் சுற்றி வந்தாள். கடிகாரத்தை அடிக்கடி பார்த்தாள். ஞாபகம் வந்தவளாக அலுமாரியின் மூலையிலிருந்த ஊதுபத்திப் பெட்டியை எடுத்து இரண்டு பத்திகளை ஏற்றிவைத்தாள். போன மாதம்  வீட்டுக்கு வந்திருந்த  கிறிஸ்தவ மத சேவையாளர்கள் கொடுத்த மெழுகுத்திரியையும் ஏற்றிவைத்தாள். வீட்டை அவளுக்கு மிகவும் பிடித்தது.

அலங்கார மீன் கடைப் பணியாளர் மீன்தொட்டியோடு வந்தபோது கைகள் மரத்துவிட்டிருந்தது அவளுக்கு வருத்தம் ஏற்படுத்தியது. அழுதுவிடாமல் இருக்க தன்னைச் சமாதானம் செய்தபடி தயாராகக் கலக்கி வைத்திருந்த தேத்தண்ணியை இரு குவளைகளில் எடுத்து வந்தாள். அவர் தொட்டியை ஸ்டூலில் வைத்து விட்டு ஒரு குவளையை வாங்கிக்கொண்டார். அவள் தனது தேத்தண்ணியை உறிஞ்சியபடி கட்டிலில் அமர்ந்து அவரை வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள்., அவர் தொட்டிக்குள் முதலில் சிறிது உப்புக் கலந்த தண்ணீரை நிரப்பினார். பிறகு செடிகளையும் கற்களையும் வைத்து அழகுபடுத்தினார். மின்சார இணைப்புக்கொடுத்ததும் அந்தச் சிறிய தொட்டிக்குள் குமிழ் குமிழாகக் காற்று உயிர்பெறத்தொடங்கியது. பின்னர் பைகளில் தண்ணீருடன் இருந்த மீன்களைத் தொட்டிக்குள் மெதுவாகவிட்டார்.

தங்க மீன்கள், வெள்ளை நிற தேவதை மீன்கள், சிறிய நீல மீன்கள், வாள் மீன்கள் எல்லாமாக மொத்தம் 12 மீன்கள்.

அவருக்கு நன்றி சொல்லி அவள் 2 வெள்ளியைக் கொடுத்தபோது, அவளின்  கைகளைப் பார்த்த அவர், பணம் வேண்டாம் என்றதோடு, நேரம் கிடைக்கும்போது தாமே வந்து தொட்டித் தண்ணீரை மாற்றித் தருவதாகச் சொன்னார்.

மீன் தொட்டியைச் சுத்தம் செய்ய அவள் பழகிக்கொண்டாள். வாரம் ஒருமுறை தொட்டியின் பாதி நீரை வெளியேற்றி, புதுத் தண்ணீர் விடுவாள். காலையில் வேலைக்குக் கிளம்பும்முன் சிறு புழுக்களை மீன்களுக்குத் தருவாள். மாலையில் வீடு திரும்பியதும் மீன் உணவு போடுவாள். சில நேரங்களில் அவள் வீடு திரும்பும்போது, மீன்கள் சோர்ந்து படுத்திருக்கும். பகலின் வெய்யில் காரணமாக இருக்கலாம் என நினைத்தாள். சம்பளம் கிடைத்ததும் அவளின் ஒற்றைச் சன்னலுக்குத் திரை வாங்கிமாட்டினாள்.

மறு மாதம் சம்பளம் வாங்கியதும் சிடி பிளேயரோடு சேர்ந்த ரேடியோ வாங்கினாள். தொட்டிக்கு அருகில் வைத்துப் பாட்டுப் போட்டாள். இப்போதெல்லாம் அவள் வேலை முடிந்து வரும்போது, வானொலி அறிவிப்பாளர்களின் பேச்சுகளும் பாட்டுக்களும் வீட்டை  நிறைத்துக்கொண்டிருந்தன.

பெரிதாக வளர்ந்துவிட்டிருந்த மீன்கள் சண்டை போட்டுக்கொண்டே இருந்தன. நீல மீன்களைத் தேவதை மீன்கள் சாப்பிட்டபோது,  மீன்களுக்குப் பாட்டுக் கேட்டு அலுத்துப் போய்விட்டதாக அவளுக்குத் தோன்றியது.

இரண்டு மாதம் கழித்து டிவி வாங்கினாள். இரவில் சீன நாடகம் தொடங்கியதும் எல்லா மீன்களும் ஒரு ஓரத்துக்கு வந்துவிடும். அந்த நாடகத்தின் இசை அவைகளுக்குப் பழக்கமாகிவிட்டிருந்தன. அவள் மீன்களிடம் நாடகத்தின் கதையை விளக்குவாள். நாடகம் முடிந்ததும் அவளது ஐபேட்டை திறந்து மீன்களுடன் கேம் விளையாடுவாள். இல்லாவிட்டால், நகைச்சுவைக் காட்சிகளை யூடியூப்பில் பார்த்துச் சிரிப்பாள். எப்போதாவது புத்தகம் படித்துக்காட்டுவாள். அவள் எல்லா மீன்களையும் அம்மோய் என்றே கூப்பிடுவாள். சில நேரங்களில் ரேடியோ, டிவி எல்லாவற்றையும் அடைத்துவிட்டு மீன்களுடன் விளையாடுவாள்.

ஒருநாள் அவள் வேலை முடிந்து வந்தபோது தொட்டியில் ஒரு மீன்  குறைந்திருந்தது. செத்துப்போய்விட்டதா எனத் தொட்டிக்குள் தேடிப் பார்த்தாள். ம்ஹூம் இல்லை. பக்கத்தில் தேடினாள். பத்து நிமிடங்களுக்குமேல் தேடிய பிறகு, தொட்டியிலிருந்து 3 அடி தள்ளி வீட்டு வாசலில் கிடந்த அந்த வாள் மீனைப் பார்த்தபோது, அவளுக்கு உயிரே போனதுபோல் இருந்தது. மிகுந்த வருத்ததுடன் வலது கையில் எடுத்தபோது, வெட்டுக்கிளியின் இறகடிப்பாக அது துடித்தது.

வலையில் துடிக்கும் மீன்களைப் பிடித்துக் கூடைக்குள் போடும் உணர்வு வலது கை விரல்களில் படர்ந்தபோது அவளது  இரு கைகளுமே நடுங்கின விரல் நுனியிலிருந்து நேரிழையில் மெல்லிய மின்சாரம் பாய்வது போலிருந்தது. அம்மோய் பிடித்தபோது கைகளுக்கு வந்துபோன உணர்வு மீண்டும் இந்தக் கணத்தில். அந்தக் கணத்தை கெட்டியாகப் பிடித்தபடி கைகளைத் தொட்டிக்குள்ளேயே வைத்திருந்தாள். கனத்த கண்ணாடிப் பெட்டி வழியே பார்க்கும்போது நீருக்குள் அவளின் பழுப்பு நிற விரல்கள் நரம்புகளும் தசையும் நிறைந்ததாய் பெருத்துத் தெரிந்தன. மீன்கள் புகுந்தோடும் கைகளில் ரத்தநாளங்கள் புடைத்திருப்பதாகவும் அவளுக்குத் தோன்றியது.

1 comment for “வலி

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...